வேலை முடிந்து மாலை நசீரா, வீடு திரும்புகையில் குளிர் எலும்புகள் தாண்டி சில்லிட்டது. பனிக் காற்று அவளது கோட்டின் மடிப்புகளுக்குள் நழுவி கழுத்து தொட்டது. லெஸ்டரில் ஒக்டோபர் குளிராகத்தான் இருக்கும். ஆனால் இன்று மாலை அது இன்னும் ஒரு படி அதிகரித்திருப்பது போல உணர்ந்தாள். அவளைச் சுற்றி விரிந்திருக்கிற உலகம், கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்றின் மீது அவளது கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதை உணர்ந்தாள். களைப்பினாலிருக்கலாம் என்று கூறி அந்த உணர்வை உதறித்தள்ளினாள்.நாள் முழுதும் ஓட்டம், முதுகு புதிதாய் ஒன்று வாங்கிப்போடவேண்டும்போல அயர்ச்சியாக இருந்தது. பள்ளிக் கூடத்தில் ஒரு மிக நீண்ட நாள்.அன்று பிள்ளைகள் வழமைக்கு அதிகமாக அமைதியற்றவர்களாக இருந்தது போலவும் ஆசிரியர்களின் வேலைப்பளு திடீரென அதிகரித்தது போலவும் இருந்தது.
அவளுடைய தெரு அன்று காலை அவள் விட்டுச் சென்றது போலவே இருந்தது. மாடி வீடுகளின் வரிசைகள் குவிந்திருந்த விதம் பழைய குடும்பமொன்றை ஞாபகப்படுத்தியது. வீடுகளின் சோபையிழந்த முகங்கள் பின்னணியிலிருந்த செக்கர் வானத்தால் அழகாகியிருந்தன. கடைசித் தொங்கலில் அவள் வீடு. ஒரு காலத்தில் அவளால் கவனமாகப் பராமரிக்கப்பட்டத் தோட்டத்தின் குறுகிய பகுதியைத் தவிர வீட்டைப் பற்றி விசேடமாகக் கவனமீர்க்கிற ஒன்றும் இல்லை. அதுவும் இம்ரான் சென்ற பின்னர் தோட்டத்தில் ஆளுயரத்துக்குக் களைகள் வளர்ந்து விட்டன. பறவை தீவனக் கூடுகள் காலியாகத் தொங்குகின்றன.
அட, என்ன ஆச்சரியம். இன்று தீவனக் கூடுகள் நிரப்பப்பட்டிருக்கிறன.
நசீரா நம்ப முடியாது கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள். பல மாதங்களாக அலட்சியமாகத் தொங்கிக் கொண்டிருந்த பறவைத் தீவனக் கூடுகள், காற்றில் லேசாக அசைந்து விதைகளை கீழே தரையில் கொட்டின. அவள் கை வீட்டுக் கதவுப் பிடியில் தயங்கியது. அது எந்த எதிர்ப்பும் இல்லாமல் திறந்துகொண்டது. ஒரு மந்தமான அமைதியின்மை அவள் முதுகுத்தண்டில் ஏறியது. கடைசியாக அவள் அந்த தீவனக் கூடுகளை நிரப்பிய போது அங்கு இம்ரானும் இருந்தான்.வாழ்க்கை சில்லு சில்லுகளாக உடைந்துவிட முன்னான பொழுதது. ஆனால் அவள் கைவிட்ட வாழ்க்கையை யாரோ ஒருவர் திருப்பி ஒட்டி அழகூட்ட முயற்சிப்பதுபோல யாரோ இந்தத் தானியங்களை நிரப்பியிருக்கிறார்கள்.
வழமையான நிசப்தத்தை எதிர்பார்த்து அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.ஆனால் வீடு வேறொன்றால் நிரம்பியிருந்தது.
மூக்கைத் துளைக்கிற கறி வாசனைஅவளை முதலில் தாக்கியது. அடுப்பில் ஏதோ ஆக்கப்பட்டிருக்கிறது. வெறும் பாணும் ஸ்ரோபரி ஜாமும் சாப்பிட்ட வயிறு கடமுடவென்றது.
அவள் சமைத்துச் சாப்பிட்டே பல நாட்களாகி இருந்தன. தனக்குத்தானே சமைப்பதென்பது போல பெருங்கஷ்டம் வேறில்லை.
ஊரில் செய்கிற அம்புள் தியல் என்கிற மீன் தீயலின் பசி தூண்டும் செழுமையான வாசம் காற்றை நிரப்பியது. மெதுவாக மண் சட்டியைத் திறந்து பார்க்கிறாள்.
மீன் துண்டுகள், காய்ந்த கொரக்காப் புளி, கருமிளகு சிவப்பு மிளகாய் உறைக்கிற கலவை அளவாக வெந்து கருத்திருந்தன. அது இலங்கையின் கரையோரக் கிராமங்களின் சுவை மிக்க உணவுகளில் ஒன்று. மிகக் கவனத்துடனும் நேர்த்தியுடனும் சமைக்கப்பட்டிருக்கும் பாங்கு நசீராவுக்கு அவள் உம்மாவை நினைவூட்டியது.
அவள் உறைந்து நின்றாள். இதை சமைத்தது யார்? மிகவும் நெருக்கமான இந்த வாசனை இப்போதோ அவளுக்கு ஆக்கிரமிப்பாகத் தெரிந்தது. அது அவளுடைய மறக்க நினைக்கிற கடந்த காலத்தின் ஒரு பகுதியையும் வீட்டைப் பற்றிய நினைகளையும் கிளறி விட்டது.
முன்னறை அழகாக இருந்தது. காலையில் அரக்கப்பரக்கச் சென்றபோது அவள் கலைத்துப் போட்ட எல்லாமே நேர்த்தியாக அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக அலமாரியில் ஒட்டியிருக்கிற தூசி துடைக்கப்பட்டிருந்தது.
அவள் கண்கள் சாப்பாட்டு மேசை நோக்கிச் சென்றது. சின்ன வட்ட வடிமான நால்வர் உட்காரக் கூடிய மர மேசையில் ஒரு பொர்ஸலீன் தட்டில் ஆவி பறக்கிற சுருட்டாப்பங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. தேங்காயைச் கருப்பட்டியில் சுண்டி மெல்லிய அப்பத்தில் சுற்றுகிற சுருட்டாப்பம் அவளுக்கு மிகப்பிடிக்கும். அதற்கு பக்கத்தில் கவனமாக பாதியாக மடித்த ஒரு தாள்.
‘கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள், சாப்பிட்டுவிட்டு ஒய்வெடுங்கள்’ கோணலான கையெழுத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
நசீராவின் இதயம் படபடவென்று பறக்கத்துடிக்கும் புறாக்குஞ்சுபோலத் துடித்தது. அவள் விரல்கள் நடுங்கின. அவள் வீட்டுக்கு வந்தது யார்? என்ன மாதிரியான ஆள்?- அவளுடைய இடத்திற்குள் அத்து மீறி நுழைந்து, இருந்ததை விடவும் சுத்தமாய்க் கூட்டிப் பெருக்கி அவளுடைய பொருட்களை ஒழுங்குபடுத்தி ஒரு துண்டில் எழுதியும் வைக்க என்ன தைரியம் வேண்டும்?
மீண்டும் சமையலறைக்கு வந்தாள்.
வழமையாக அலங்கோலமாக இருக்கிற சமையலறை பளிச்சென்று இருந்தது
அன்று காலை அவள் நடு வீட்டில் விட்டுச் சென்ற பழங்கள், காய்கறிகள்,மளிகைப் பொருட்கள் பைகளில் இல்லை. அவை ப்ரிஜ்ஜில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சிங்கில் இருந்த பாத்திரங்கள் கழுவித் துடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவள் குசினி மேடையில் சாய்ந்தபோது அவள் கால்கள் தள்ளாடின. அடுப்பு சமையலின் கதகதப்பான வெப்பத்தை இன்னும் தக்க வைத்திருந்தது.
நசீரா மெதுவாக திரும்பினாள். அவள் கண்கள் அறை முழுவதும் வருடித் திரும்பின. எதுவும் களவு போகவில்லை. இம்ரான் அவளை விட்டு சென்ற நாளிலிருந்து, அவள் எந்த அளவுக்கு பராமரித்து வைத்திருந்தாலும், வீடு ஒருபோதும் இவ்வளவு சுத்தமாக இருந்ததில்லை. அவள் தலையை பிய்த்துக் கொண்டாள். இது திருட்டும் அல்ல. அதை விட மோசமான வேறு ஏதோ. ஒருவேளை, இதைச் செய்த ஆளுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டும். அவள் கவனிக்காதவற்றைக் கவனிக்க, எந்தப் பொருளை எந்த இடத்தில் வைப்பதென்பதையும் தெளிவாகத் தெரிந்த ஒரு ஜீவன்.
அவளது புத்தக ராக்கையில் இருந்த பித்தளை யானை கொஞ்சம் வலப்புறமாக நகர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அவளுக்குஅது ஜன்னல் வழியே கசிகிற இலையுதிர் காலத்தின் வெளிச்சத்தைப் பிடிக்க போதுமாயிருந்தது. அவளுக்கு வித்தியாசமான கலைப் பொருட்கள் பிடிக்கும். இந்தப் பித்தளை யானை ஆஸிர் அவளுக்குத்திருமணப் பரிசாகக் கொடுத்தது. ஆஸிரின் வீடு கொழும்பில் அவள் வீட்டுக்கு எதிர் வீடு. எதுவும் அதிகம் பேசிக் கொள்ளாமலே இருவருக்குமிடையில் மென்மையான ஸ்நேகம் துளிர்த்திருந்தது. அவள் திருமண வயதை நெருங்கியதும் அந்தப் பழக்கத்தை வெறும் புன்னகைகளோடு மட்டும் நிப்பாட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. இம்ரானின் வீட்டார் சம்பந்தம் பேசி வந்தவுடனே வீட்டில் சரியென்று சொல்லி விட்டார்கள். அவளுக்கும் பெரிதாக எதிர்ப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. நெடு நெடுவென்ற உயரமும் அமைதியான தோற்றமும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தின. கடைசிவரை அந்த அமைதியை அவன் கலைக்கவில்லை. அவன் மனத்தில் என்ன இருக்கிறது என்பது அவளுக்கு இப்போதுவரை புரியாத புதிர். மேசையில் இருந்த கண்ணாடி ஜாடியில் மஞ்சள் நிறத்தில் பெயர் தெரியாத புதிய பூக்கள். அவளுடைய பார்வை வெளியே எடுக்கப் பட்டிருந்த அவளுடைய பெற்றோரின் புகைப்படத்தில் விழுந்தது. அவள் பல மாதங்களாகப் பார்க்காத அந்தப் படத்தில் அவர்கள் கொழும்பில் உள்ள தங்கள் பழைய வீட்டிற்கு வெளியே நின்று சிரித்துக் கொண்டிருந்தனர். உம்மாவின் நைலக்ஸ் புடவை காற்றில் அலையடிக்க வாப்பாவின் கை அவள் தோளில் பாதுகாப்பாக இருந்தது.
கொழும்பில் அவர்களது தெமடகொட வீட்டின் நினைவு அவளில் அப்படியே படர்ந்தது. சாம்பிராணி வாசனைகள், பொங்கும் பூம்புனல், தூதருவோ சிங்கள தொடர் நாடகம், காலையில் காகம் கரைவது, முன்னறிவிப்பின்றி திடுமென்று வந்து செல்கிற உறவினர்கள், அண்டை வீட்டு ஆஸிரின் ஸ்நேகம்,, ஸ்கூல் பஸ், முடிவில்லாத ஓட்டம். வாழ்க்கை நிரம்பியிருந்தது, வீடு எப்போதும் கலகலவென்று ஆன்மாவோடு இருக்கும். இங்கே இம்ரான் வெளியேறியதிலிருந்து அவளுடைய வாழ்க்கை நிரம்பவும் அமைதியாகிவிட்டது. அமைதி, தனிமை, அவன் வேறொருத்தியோடு சென்றது மட்டுமல்லாது அவளுக்கு நிரப்ப முடியாத வெறுமையை விட்டுச் சென்றிருந்தான்.
இங்கிலாத்துக்கு முதன் முதல் வந்த காலத்தை அவள் நினைவுகூர்ந்தாள். லெஸ்டரில் அந்த நாட்களில் குதூகலம் கலந்திருந்தது. தன்னுடைய சின்னக் குருவிக் கூட்டை அமைக்க அவ்வளவு ஆசையாய் சிலுப்பல்களைப் பொறுக்கினாள். சின்ன மின்மினிகளால் அலங்கரித்தாள். அப்போதும் இம்ரான் தொலைவில்தான் இருந்தான். ஆனால் அவள் அதை கண்டுகொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அங்கிருந்த சிறிய பள்ளிவாயல் சமூகம் அவளுக்கு ஒரு சிறு இருப்புக்கான உணர்வை வழங்கியது. அங்குள்ள பெண்கள் இரக்கமாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் நீந்திக் கடக்க முடியாத ஒர் இடைவெளியை வைத்திருந்தார்கள். ஊர்வம்புக்கான ஆர்வத்தை கண்ணியமாக வெளிப்படுத்தினார்கள். எப்போதும் கிசுகிசுக்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. அவளுக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்ற கேள்விகள். அவர்களது வாழ்க்கை சிரிப்பு சத்தங்களாலும் சிறு குழந்தைகளின் மழலைக் குரல்களாலும் நிரம்பிருக்கிறபோது அவளது திருமண வாழ்வு ஏன் அமைதியாகவும், அர்த்தமின்றியும் இருக்கிறது என்பதான மறைமுக விசாரிப்புக்கள்.
இம்ரான் அவளை விட்டுச் சென்றதும் கிசுகிசுக்கள் அதிகமாகின. பள்ளிவாயலில் பெண்கள் இவளிடம் நேரடியாக ஒன்றும் கேட்டதில்லை, ஆனால் நசீரா அவர்களின் கண்களில் பரிதாபத்தையும் சமூகத் தீர்ப்பையும் கண்டாள். அவளைப் பொறுத்தளவில் ஒதுங்கிப் பின்வாங்குவது எளிதாக இருந்தது. அவளை ஒருபோதும் புரிந்து கொள்ளாத ஒரு சமூகத்துடன் பொருந்த முயற்சிப்பது முட்டாள்தனம்.
புரியாததோடு எதுவும் பொருந்தவுமில்லை.
எல்லாவற்றையும் விட அவளுக்கு நிம்மதி தேவைப்பட்டது.
அவள் மீண்டும் குறிப்பைப் பார்த்தாள்.
‘கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்’ என்ற வார்த்தைகளை விரல்கள் தன்னிச்சையாகத் தடவின.
நிரம்ப எளிமையாகச் சொல்லி விட்டாயிற்று.
அது எவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த பின்பும், யாரால் இப்படி ஒரு செய்தியை அனுப்பத் துணிய முடியும்?அல்லது தெரிந்தேதான் செய்கிறார்களா?
பள்ளிவாசலில் தெரிந்த யாராலுமா? பக்கத்து வீட்டுக்காரனா? அவள் வழக்கமாகப் பேசும் சிலரை நினைத்துப் பார்த்தாள். இப்படி யாரால் முடியும் நசீராவின் மண்டை காய்ந்துவிட்டது.
அவள் நெஞ்சில் ஒர் இனந்தெரியாத பயம் மிக மெதுவாகப் படிவதை உணர்ந்தாள்.
அவள் வீட்டிற்குள் நுழைந்தவன், மிகவும் கவனமாகவும் கச்சிதமாகவும் இருந்திருக்க வேண்டும்.
எதுவும் உடைக்கப்படவில்லை. இடம் மாற்றப்படவும் இல்லை.
இது ஒரு புதுவகையான அத்து மீறல். அதில் ஒரு சுகமும் இருந்தது.
அவன் திரும்பவும் வருவானா என்ற எண்ணம் கிளர்ந்தது.
அவன் மீண்டும் வர வேண்டும் என்று அவள் விரும்புகிறாளா?
அவன் அந்த வீடு முழுக்க நிரம்பியிருந்தான். அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
நாட்கள் நகர்ந்தன. அவள் மீளவில்லை.
நசீராவால் தான் யாரோலோ கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வை
விட்டு நகர முடியவில்லை. வீடு மிகவும் அமைதியாகவிருந்தது. மிக
அதீதமான நேர்த்தியாகவும் இருந்தது., சரியாகச் சொல்ல முடியவில்லை,
வீடு எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவும் இருந்தது.
அவள் பின்னால் திரும்பி இல்லாத சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள். இன்னுமே சமையலறைச் சுவரில் துடைப்பமும் வாளியும் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அவளை விட அக்கறையாக வேறு யாரோ அவள் வீட்டைக் கவனித்துக்கொண்டதை அது அவளுக்கு நினைவூட்டியது.
பொலிஸில் சின்னதாக ஒரு கம்பளைண்ட் கொடுத்தாள்.
விசாரிக்க வந்திருந்த போலீஸ் அதிகாரி மரியாதையாக நடந்து கொண்டார். ஆனால் அது வேலைக்காகவில்லை. ‘இது ஒரு திருட்டு அல்ல’ என்று அவர் முகத்தைச் சுருக்கி, நேர்த்தியான அறைகளைச் சுற்றிப் பார்த்தார். ‘எதுவும் திருடு போகவில்லையே’ நசீரா தலையசைத்தாள். அவள் மனம் வேறு எங்கோ இருந்தது.
ஆனால் வீட்டில் முக்கியமான எதையோ காணவில்லை.
அது அவள்தான்.
ஒரு செம்மஞ்சள் இலையுதிர் மாலை. நசீரா ஜன்னல் அருகே நின்று, பகலின் கடைசி வெளிச்சம் மெல்ல நழுவுவதைப் பார்த்தாள். இப்போது நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட தோட்டம் குறைந்த ஒளியில் மிக செப்பமாகத்தெரிந்தது. தீவனம் கூடுகளில் இன்னும் நிரம்பியிருந்தது. தானியங்கள் பறவைகளால் தீண்டப்படவில்லை.
புத்தக ராக்கையை கைகளை நிரடி பித்தளை யானையின் விளிம்பைக் கண்டுபிடித்தாள். அந்த பித்தளை யானை அவ்வளவு பெரியதல்ல. அது இப்போது கையில் கனத்தது.அவளது பாரம் நகர்ந்து இடம் மாறியது.
அவள் அதை அது இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்துவிட்டு திரும்பினாள்.
வீடு இருந்தது. ஆனால் அது முன்னரைப்போல் இருக்கவில்லை. அவளும் முன்பிருந்தவள் அல்ல.
அந்த மடிக்கப்பட்ட தாளைப் பிரித்தாள். ‘‘கவலைப்படாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள்’ இன்னுமே அது அவளுக்குப் புரியவில்லை.
அல்லது புரிவது போலவும் இருக்கிறது.
இரவு மெல்லிதாக கவிழ்கிற போது அவள் அந்தத்தாளை மீண்டும் மேசையில் வைத்தாள். அது விட்டுச் சென்ற வெறுமையில் மனத்தில் இனம் புரியாத வலி படர்வதை உணர்ந்தாள்.
000
ஷமீலா யூசுப் அலி
‘ஷமீலா யூசுப் அலி’ தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறார். கவிதைகள், ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவர். FemAsia இணைய இதழின் ஆசிரியர்.
The Body is Matter.
The Mind is Non-Matter.
The Matter is seen.
Non Matter is not seen.
So, to understand something which cannot be seen requires the Patience which can be cultivated through Our Faculties.
The Mind operates through Body to perform certain functions which result in Actions and Counter Actions.
So , we need to Focus on Our Actions by activating Our Faculties at Will.
This is called Will Power.
The Will Power gains Momentum via Mindfulness.
Being in Mindfulness stage brings Eternal Peace.
By Soothing the Soul , We can heal the wounds by Forgetting the Situation leave alone Forgiving which is the duty of Almighty.