/

மார்க் ராத்கோ – உணர்வுகளின் ஆலாபனை : சியாம்

நீலம் மேல் பச்சை (பூமி பச்சையும் வெண்மையும்) ,1956

மார்க் ராத்கோவின்(Mark Rothko) வண்ணப்புல ஓவியங்களை முதலில் எதிர்கொள்ளும் ஒரு பார்வையாளர் குழம்புவார்.வெறும் வண்ணங்கள் மட்டும் தான் அதில் உள்ளன. நிலக்காட்சியோ நுணுக்கமான விவரனையோ நேர்த்தியான உருவங்களோ அந்த ஓவியங்களில் இல்லை. திரை முழுக்க வெறும் செவ்வக கட்டங்களும் வண்ணங்களும் தான். அவை பல லட்சம் டாலர்களுக்கு விற்கப்படும் செய்தி பார்வையாளரிடம் மேலும் குறுகுறுப்பை ஏற்படுத்தும். “இதற்கா?” என்று வியப்பார். மார்க் ராத்கோ மட்டுமின்றி எந்த நவீன ஓவியமும் இந்த உணர்ச்சியை உருவாக்கக்கூடும். ஆனால் எந்த கலைப்படைப்பும் அதற்குரிய கருத்துச் சூழலுடன் பொருத்தி அறியும்போதே பொருள் அளிக்கும். ராத்கோவை தன் கலை முகாம்களில் அறிமுகப்படுத்தும்போது, புகைப்படக் கலைஞர் ஏ.வி.மணிகண்டன் “மொழுமொழுப்பான ஒரு கல்லை லிங்கம் என்று புரிந்துகொள்ள முடியுமேயானால், உருவமற்ற ராத்கோவின் வண்ணப்புலத்தினையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்” என்கிறார். 

ருஷ்யாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க ஓவியர் மார்க் ராத்கோ நவீனத்துவ காலத்தை சேர்ந்தவர். நவீனத்துவம் என்பது வெவ்வேறு சிந்தனாமுறைகளின் வீழ்ச்சி உணரப்பட்ட காலகட்டம் ஆகும். அறிவொளிக்காலத்தில் அறிவியல் புதிய மதமாகி, கடவுளின் இறப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு உலகப்போர்களோ அறிவியல் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தின. அறிவியல் என்பது ஒரு புதுவகை நிர்ணயவாதமானது. மனிதன் கைவிடப்பட்டு தவித்தான். அவன் இருத்தலிய துயருக்கு உள்ளானான். இந்த துயரிலிருந்தே ராத்கோவை புரிந்துகொள்ள முயல வேண்டியுள்ளது.

ராத்கோ பிற்காலத்திலேயே அவருடைய புகழ்பெற்ற, உருவங்கள் இல்லாத, வண்ணப்புல (Color field) ஓவியங்களை வரைகிறார். ஆரம்பத்தில் அவர் உருவச் சித்திரங்களும் வரைந்துள்ளார்.  1940 வரையிலான ராத்கோவின் பிரதிநிதித்துவ அல்லது உருவ ஓவியங்கள் நேரடியாக மனித நிலையை வெளிப்படுத்தக்கூடியவை. அவருடைய ஆரம்பகால ஆக்கங்கள் எட்மண்ட் மங்கின்(Edvard Munch) ஓவியங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன. ஓவியத்தில் வெளி மூச்சுமுட்டச் செய்யும் அளவிற்கு மிகக் குறுகியதாகவும் அதே நேரத்தில் அந்த நெரிசலை உருவாக்கும் கட்டடங்கள் நெடுதுயர்ந்தும் இருக்கின்றன. மிகச் சிறிய இடத்தில் அடைக்கப்பட்ட மனிதர்களை சித்தரிக்கின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் கதை மாந்தர்களை போல. நிலவறைக் கற்பனை (Underground fantasy) ஓவியத்தில் உள்ளவர்கள் தங்களது தலை விதானத்தில் இடிக்கும் அளவிற்கு நீண்டிருக்கிறார்கள்.

நிலவறை கற்பனை

உலக யுத்தங்களும் தொடர்ந்து வந்த நிலையின்மையும் சில ஓவியர்களை உருவங்களை (figures) கைவிடச் செய்கிறது. தங்கள் காலத்து துயரையும் சிதைவையும் உருவங்களால் வெளிப்படுத்த முடியாது என்ற நம்பிக்கை அவ்வோவியர்கள் மத்தியில் உருவாகிறது.  நியுயார்க்கில், பெரிதும் போரில் புலம்பெயர்ந்த கலைஞர்களால் ஓர் இயக்கமாக அச்சிந்தனை முன்னெடுக்கப்படுகிறது. பல்வேறு உட்பிரிவுகளோடு , அருவ மனவெளிப்பாட்டுவாதம் (Abstract Expressionism) என்ற வகைப்பாடு உருவாகிறது. உருவங்களை வரைவதைக்காட்டிலும் மனித ஆழ்மனதினுள் ஊடுருவதற்கான உலகளாவிய கருப்பொருள்களை வரைய அவர்கள் முற்பட்டார்கள். ராத்கோ, “உருவங்கள் எனது நோக்கங்களுக்கு பயன்படாது என்பதை விருப்பமின்மையுடன் கண்டடைந்தேன். ஆனால் ஒரு காலம் வந்தது. அப்போது எங்களில் யாராலும் உருவங்களை சிதைக்காமல் பயன்படுத்தமுடியவில்லை.” என்கிறார்.

தான் முதலில் நம்பிய உருவங்களை கைவிட்டு ராத்கோ, மெல்ல தொன்மத்தை வெளிப்பாட்டு வடிவமாக்கிக் கொள்கிறார். தொன்மத்தை மீட்டெடுப்பது என்பது ஒரே சமயத்தில் அறிவியல் மனித வாழ்வுக்கு அளிக்கத் தவறிய அர்த்தத்தை வழங்குவதாகவும், பகுத்தறிவுடன் அல்லாமல் ஆழ்மனதுடனும் உணர்வுகளுடனும் தொடர்புறுத்துவதாகவும் இருக்கிறது. தொன்மங்களும் படிமங்களும் உணர்வுகளுடன் மிக அணுக்கமாக உறவுகொள்வதை கண்டடையும் ராத்கோ, “தொன்மங்கள் மனிதனின் புராதானமான அச்சங்களின், தூண்டுதல்களின் குறியீடுகள்.” என்கிறார்.  கிரேக்க தொன்மங்களை வைத்தும் அவர் ஓவியங்கள் வரைந்துள்ளார்.

ஆழமான உலகளாவிய உண்மைகள் அடைவதே ராத்கோவின் முயற்சியாக இருக்கிறது. “இஃபஜெனியாவின் பலி” (Sacrifice of Iphigenia) ஓவியத்தை, பலியுடன் பல ஆயிரம் ஆண்டு பந்தம் கொண்ட ஒரு தமிழ் ஆழ்மனதினால் எளிதாக உணர முடியும். இந்த ஓவியத்தில் பலியின் கதையை சொல்வதைக் காட்டிலும் அதன் தூய உணர்ச்சி நிலையையே ராத்கோ எட்ட நினைப்பதாக படுகிறது. துளி செம்பு கலக்காத பொன்னை செய்யும் ஒரு ரஸவாதியின் அலைக்கழிப்பு அவரிடம் குடிகொண்டிருக்க வேண்டும். தொடக்கத்திலிருந்தே, உணர்வுகளுடன் உரையாடும் ஆகச் சிறந்த வடிவத்தின் தேடலில் இருக்கும் ராத்கோவுக்கு தொன்மங்களும் பிற்பாடு உதிர்க்க வேண்டிய எடையாக தோன்றியிருக்கலாம். தொன்மத்திலிருந்து அவர் வண்ணப் புலம் நோக்கி செல்கிறார்.

இஃபஜெனியாவின் பலி

நீட்ஷே, டி.எஸ்.எலியட் போன்றவர்களின் தீவிர வாசகரான ராத்கோ மொசார்டின் ரசிகர். மொசார்ட்டின் மினிமலிச அழகியல் ராத்கோ மீது செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. மொசார்ட் தன் கண்ணீரின் ஊடாக சிரிப்பதனால் அவரை பிடித்திருப்பதாக ராத்கோ சொல்கிறார். கருத்துக்கு பிரதிநிதியாகும் உருவம் அக்கருத்தால் உணர்வுகளை சென்று தொடுகிறது. தொன்ம ஓவியங்கள் படிமங்களின் மூலம் கருத்தாக்கம் இல்லாமலேயே உணர்வை தொட்டுவிடுகின்றன. ஆனால், எதையும் பிரதிநிதித்துவம் செய்யாத இசை நேரடியாக உணர்வுகளுடன் உறவாடுவதுடன் படிமங்களை விரித்தெடுப்பதாகவும் இருக்கிறது. படிமங்களால் உருவாக்கப்படாது, படிமங்களை உருவாக்குவதாக உள்ளது. மொசார்டின் இசையையோ மோகனத்தின் ஆலாபனையையோ நாம் படிமங்களாகவே வெளிப்படுத்துவோம்; “நடுக்கடலில் தன்னந்தனியாக மிதப்பது போல” என்று. ஒரு நல்ல இசை ஒரு நல்ல ரசிகரை ஒரு நல்ல ஓவியரைப் போல படிமத்தை உருவாக்கச் செய்கிறது. ராத்கோ அந்த இசையை ஓவியத்தில் அடைய எத்தனிக்கிறார். “இசை மற்றும் கவிதையின் உணர்வாழத்திற்கு ஓவியத்தை உயர்த்துவதற்காக, நான் ஓவியனானேன்” என்பது அவருடைய வாசகம். இசையின் தூய உணர்ச்சிகரத்தை, நிறத்தின் தூய வடிவால் அவர் வெளிப்படுத்தியதே வண்ணப்புல ஓவியமாகிறது.      

நிறங்களின் தன்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ராத்கோ, வண்ணப்புல ஓவியங்கள் வரைவதில்லை. “நீங்கள் [என் ஓவியங்களில்] நிறங்களின் தொடர்புகளால் மட்டுமே பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தை தவற விடுகிறீர்கள்.” என்கிறார். ராத்கோவின் ஓவியங்களை எதிர்கொள்பவர்கள் உடைந்து அழுவது வாடிக்கை. வரையும்போது தான் அடைந்த ஆன்மீக அனுபவத்தை ஓவியங்களுக்கு முன் நிற்பவர்களும் அடைவதே அவர்களை உடைந்து அழச் செய்கிறது என்று ராத்கோ நம்பினார். வண்ணப்புல ஓவியங்கள் அளவில் மிகப் பெரியவை. அவ்வளவு பெரிய ஓவியங்களை பதினெட்டு அங்குலம் இடைவெளிவிட்டு அவற்றின் முன் நின்று கவனிக்க வேண்டும் என்று ராத்கோ பரிந்துரைக்கிறார். காட்சிக்கூடத்தில் தனது ஓவியங்களை முடிந்த வரை தரைமட்டத்தில் வைக்கவே வலியுறுத்துகிறார். ராத்கோ உத்தேசிப்பது, புற உலகை ரத்து செய்து ஒட்டுமொத்தமாக ஒருவரை தனது ஓவியத்தால் நிரப்புவதை.

சட்டகங்கள் இல்லாத ஓவியங்கள் எந்த வரம்பும் இன்றி நம்மை மொத்தமாக உள் இழுத்துக்கொள்கின்றன. ராத்கோவை பற்றியக் காணொளியில் ஒரு காட்சிசாலை காப்பாளர், “காட்சிசாலையின் பிறப் பகுதிகளை பார்த்து உரையாடிக் கொண்டே வருபவர்கள், ராத்கோவின் பகுதிக்குள் நுழைகையில் மௌனமாகி விடுகின்றனர்” என்கிறார். ஒருவகையில் நவீன காலகட்ட கலை வரலாறையோ இருத்தலியல் தத்துவத்தையோ அங்கு விவாதிப்பதுக்கூட எந்த அளவு பொருத்தமானது என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. தன் காலகட்டத்தின் அழுத்தத்தால் ஒரு அசல் வெளிப்பாட்டை கண்டடையும் கலைஞன் தன் காலத்தின் எல்லா சிக்கல்களுக்கும் அப்பால் சென்றுவிடுகிறான். ஒரு பிரபஞ்ச உண்மையை வரைந்துவிடுகிறான். இறுதியில் ராத்கோவின் ஓவியம் தன்னை மட்டுமே சுட்டுகிறது. மலர்கள் மலர்களையே சுட்டுவது போல. அதன் முழுமுதல் தன்மையின், தூய நிலையின் முன்னே நாம் மௌனமாகி விடுகிறோம். காப்பாளர் குறிப்பிடும் அந்த மௌனம் பிராத்தனை நடந்து கொண்டிருக்கும் ஒரு தேவாலயத்திற்குள் நுழைகையில் குடிகொள்ளும் மௌனம். அது தூய நிறம்.  அது பிரார்த்தனை. அது தியானம்.

நியுயார்க்கின் அப்போதைய, போருக்கு பிந்தைய புது அலை ஓவியங்கள் பற்றி குறிப்பிடும்போது, ஓவியம் அளவுக்கே, ஓவியத்தை வரையும் செயல்பாடு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. மற்றொரு மனவெளிப்பாட்டு ஓவியரான ஜாக்ஸன் பொலாக் கலங்களை ஏந்தி வண்ணத்தை தெறிக்கவிடும் சன்னத நடனத்தின் காணொளி மிகப் பிரபலமானது. ராத்கோ ஒரு ஓவியத்தை வரைவது தியானத்தில் அமைவது போன்ற ஒன்று. பல நாட்கள் எடுத்து கொண்டு ஒரு வண்ணப்புல ஓவியத்தை அவர் வரைந்திருக்கிறார். பாதி வரைந்த ஓவியத்திற்கு முன் ஓயாமல் சிகரெட் வலித்துக்கொண்டு நெடுநேரம் அமர்ந்திருக்கும் ராத்கோவையே அவரது நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். புகைச் சுருள்களுக்கு நடுவே உறைந்திருக்கும் ராத்கோவின் மௌனத்தையும் உணர்வுகளையுமே நாம் அவரது ஓவியங்களுக்கு முன் ஏந்திக்கொள்கிறோம்.

ராத்கோவின் ஆலயம்

ராத்கோ தனது இறுதிக்காலத்தில் ஹூஸ்டனில் உள்ள ஒரு ஆலயத்திற்காக ஓவியங்கள் வரைகிறார். அவ்வாலயத்தின் வடிவமைப்பை ராத்கோவே பரிந்துரைக்கிறார். ராத்கோவின் ஆலயம் என்றே அது அழைக்கப்பட்டது. அவ்வாலயத்திற்காக அவர் வரைந்தது 11×15 அடி அளவுள்ள கறுப்பு ஓவியங்கள். உள் நுழைபவரை எல்லா திசைகளிலிருந்தும் அவ்வோவியங்கள் நோக்குகின்றன. ராத்கோவின் ஓவியத்தில் நாமே பேசுபொருள் என படுகிறது. அவ்வாலயத்தில் கறுப்பு ஓவியங்கள் மூலம் அவர் நம்மைச் சுற்றி ஆடிகளையே அமைத்திருக்கிறார். அவற்றில் பார்வையாளர்கள் காண்பது தத்தம் பிரதிபலிப்புகளையே. அதுவே எல்லோரையும் அழ வைக்கிறது போல. அவர் எதை உருவங்களின் மூலம் படிமங்களின் மூலம் வெளிப்படுத்த முயன்றாரோ அதையே வண்ணப்புல ஓவியங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார். அவர் வெளிப்படுத்த உத்தேசிப்பது நம்மையே. நம் தூய இருப்பினையே. அத்தனை பெரிய ஓவியங்கள் மூலம் அவர் ஒரு சிம்பனியை நம் முன் நிகழ்த்திக்காட்டுகிறார். கேட்பவரின் தன்னிலையை அடையாளம் காட்டும் இசை. அதை அழித்து தன்னுள் ஒன்றிணைத்து கொள்ளும் இசை. வாசித்த பின்பு நம்முடையதாகவே மாறி வேர் விடும் ஒரு கவிதை வரி போல ராத்கோவின் ஓவியம் நம் இருப்பெனவே மாறுகின்றன.       

கர்நாடக சங்கீதத்தின் ராகம்-தானம்-பல்லவி உடன் ராத்கோவின் கலையை ஒப்பிடமுடிகிறது. ராகம், அந்த ராகத்தின் ஸ்வரங்களால் மட்டும் அமைகிறது. அந்த ராகத்தின் உணர்வு வேறெந்தக் கட்டுப்பாடுமின்றி வெளிப்படுகிறது. ராகம் ராகமாகவே நிகழ்தல். தானம் தன்னில் சந்தமுறைமையை சேர்த்துக்கொள்கிறது, அதனாலேயே கட்டுப்படுத்தவும்படுகிறது. பின்பு, பல்லவி அதனுடன் மொழியை இணைத்துக்கொள்கிறது. ராத்கோ பல்லவி-தானம்-ராகம் நிகழ்த்திக்காட்டுகிறார் என்றே ஒரு புன்னகையுடன் நினைத்துக்கொள்கிறேன். அவர் சொல்வது போலவே அவர் வரைய உத்தேசிப்பது சிக்கலான உணர்வின் எளிமையான வெளிப்பாட்டை. நகுமோமுவின் ஏக்கம் அதற்கு முன் பாடப்படும் ஆலாபனையிலும் கசிகிறது. ராத்கோ ஓவியத்தில் அதையே செய்கிறார், உணர்வுகளின் ஆலாபனையை. 1970ல் தன் 66ம் வயதில் கை நரம்பை அறுத்து தற்கொலை செய்துகொண்ட ராத்கோ அந்த ஆலாபனையை அந்தர மௌனத்தில் நிறுத்தினார்.

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

1 Comment

  1. இந்தக் கட்டுரை ​​ ராத்கோவின் வாழ்க்கை பின்னணி, காலகட்டம், தத்துவார்த்த நோக்கு ஆகியவற்றை வாசகர்களுக்கு கொடுத்து அவரது ஓவியங்களை புரிந்துகொள்ள உதவுகின்றது.
    ராத்கோவின் ஆரம்பகால உருவ ஓவியங்களில் தொடங்கி, தொன்மங்கள், பின் வண்ணப்புல ஓவியங்கள் என அவரது கலை பயணத்தை படிப்படியாக முன் வைக்கின்றது
    மொழிநடை கலை விமர்சனத்திற்கு ஏற்ற தரத்துடன், அதே நேரம் சாதாரண வாசகர்களுக்கும் புரியும்படியும் உள்ளது.கர்நாடக இசையுடன் ராத்கோவின் கலையை ஒப்பிட்டு விளக்கியது சிறப்பு. “ராகம்-தாளம்-பல்லவி” உடன் ஒப்பிட்டு விளக்குவது மரபார்ந்த வாசகர்களுக்கு ராத்கோவின் கலையை நெருக்கமாக்கும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.