ஒரு வானமும் ஒரு மரமும் மிச்சமிருக்கும் வரை மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றாதிருக்க வேண்டுமென ஒலிக்கும் கவிஞனின் குரலே ஆதி பார்த்திபன். ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் அதன் நுண்மைகள் பற்றிய வரிகளும் கீற்றுகளிடையே நிலவெனத் தோன்றிக் கொண்டேயிருப்பவை. வாழ்வை போரின் ஓவியத்துணியில் வரைந்து பார்த்தவை.
போர் உச்ச கட்ட உணர்ச்சிகளின் கொல்லன் துருத்தி போன்றது. ஊதுந்தோறும் பல்லாயிரம் தீப்பொறித் துளிகளெனச் சீறியெழுபவை. தீ பொன்னின் நிறமென ஆவது போல அக்காலக் கவிதைகள் எழுந்தன. இன்றுள்ள நிலமையில் போர் எனும் திரைச்சீலை காலவெளியிலிருந்து நைந்து கொண்டிருக்கிறது. புதிய காற்றுகளின் விரைவில் அது தயங்கித் தயங்கித் தொங்கிக் கொண்டிருக்கிறது. சமூக வெளியில் போரின் பாத்திரம் வரையறுக்கப்பட்டு பின்னால் நகர்ந்த பின்னர் புதிய தலைமுறை அதில் ஒரு சிறு தொடுகையுடன் வருங்காலத்தின் மீது கிளையை நீட்டும் மலரென நிற்கத் துணிகிறது.
ஈழத்திற்கு இலக்கியம் அரசியல் கலை தத்துவம் ஆன்மீகம் எல்லாமே அரசியல்மயத்திலிருந்தே முன்வைக்கப்படுவதாகவும் அது உயர்ந்ததாகவும் கடந்த காலத்தில் உண்டாக்கப்பட்டிருந்த மைய உரையாடலை தகர்த்து நம் முன்னோடிகளில் ஒரு சிலரேனும் அதன் பிறகோணங்களை எழுதி விவாதித்து இற்றையை அளித்திருக்கின்றனர். மு. தளையசிங்கத்தின் ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி நூலில் இறுதியாக அவர் சுட்டுவது முக்கியமானது. நம் கட்சிப் பற்றுகளுக்கு அப்பால் நாம் சிருஷ்டிப்பது மெய்யாகவே கலையா என்பதே காலத்தால் அளவிடப்படுவது எனச் சொல்லியிருப்பார். அதுவே நம் காலத்திற்கானதுமான ஆதாரமான கேள்வி. தமிழ்த்தேசியம் எதிர் தமிழ்த்தேசிய மறுப்பு என்பதே கத்தரிக்கோல் போன்று இலக்கியத்தை வெட்டிக் கொண்டிருந்த மதிப்பிடு கருவி. இலக்கியம் நூலும் ஊசியும் போல. இழைப்பதே அதன் பணி. எந்தவொரு ஆக்கம் வாழ்வைப் பின்னல்களென இணைத்து அரசியலை முன்வைக்கிறதோ அதன் அரசியலும் கலை மதிப்பும் வருங்காலங்களாலேயே மைய உரையாடாலாகும். இத் தொடரியக்கத்தின் இன்றைய கண்ணிகளையும் நுண்மை கொண்ட எழுத்துகளையும் கவனப்படுத்தி உரையாடலை உண்டாக்குவதன் தேவையும் அதுவே.
ஈழத்து இலக்கியப் பரப்பில் மக்கள் . ஒடுக்கப்பட்டவர்கள். ஏதிலிகள். பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பெருங்குரல்களின் முழக்கங்கள் அகலத் தொடங்கி விட்டன. வரலாற்றின் வானம் அங்கனமே தன்னை ஒவ்வொரு காலத்திலும் துடைத்துத் துலக்கி வெறும் வெளிச்சத்தை மட்டும் கொடுத்து ஒரு பெருநீல ஓவியச் சட்டகத்தைக் கையளிக்கிறது. மீண்டும் கடந்த காலத்திலிருந்து சில தூரிகைகளையும் வண்ணங்களையும் தொட்டு புதிய ஓவியங்களை மேகக்குவைகளில் வரைய வேண்டியிருக்கிறது.
ஈழத்துச் சூழலில் எழுத வரும் புதியவர் ஒருவர் அரசியல் சரிநிலைகளுக்கும் சார்பு நிலைகளுக்கும் எந்த நிலையிலும் கட்டுண்டிருக்க வேண்டியதில்லை. அவை அந்தந்தக் கால கட்டத்திற்கானவை. முப்பது வருடங்களாக அனைத்தையும் கொடுத்து உண்டாக்கிய அறங்களும் அரசியல் சரிநிலைகளும் அவை. அவற்றை விவாதிக்க உரையாட அவற்றின் மீது சிந்தனையைச் செலுத்தி விரிவாக்க அனைத்து உரிமையும் பொறுப்பும் எடுத்துக் கொள்ளலாம். அன்னை மடியில் குழந்தையென.
அதுவல்லாமல் நேரடி அரசியல். போர். அதன் தத்துவார்த்த சார்புகளுக்கு அப்பால் வாழ்வை வேறு மலைகளிலிருந்தும் நோக்கலாம். ஆற்றின் தீரங்களில். பனிப்பொழிவுகளை நோக்கியபடி கண்ணாடி ஜன்னல்களுக்கு உள்ளிருந்து. அன்றாடத்தின் எளிய பணிகளுக்குள்ளிருந்து என்று எங்குமிருந்தும் வாழ்வைத் தன் உள்ளங்கைகளால் அள்ளிக் கொள்ளலாம். அவையும் மைய உரையாடலில் கவனம் கொள்ளப்பட வேண்டும். அதுவே ஒரு மொழிச்சூழலை முழுதும் விளங்கிக் கொள்ள நாம் செய்யக் கூடியது.
இன்னமும் ஈழத்தின் கவிதை மரபு குறித்து ரசனை சார்ந்தோ அழகியல் நோக்கிலோ முழுமையான தேர்ந்த வாசிப்புகள் எவையும் எழுத்தில் விரிந்தளவில் தொகுத்து முன்வைக்கப்படவில்லை. ஆகவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நுனியைப் பற்றியிருக்கும் நீண்ட துணியென அது எவராலும் முழுதளக்கப்படாமல் சுருங்கியிருக்கிறது. இந்த விமர்சனம் தொடர்ச்சியாக இருப்பதென்றாலும் ஒரு பண்பாட்டின் முக்கிய பணி எனும் அடிப்படையில் அதை நினைவுறுத்திக் கொண்டேயே நாம் ஈழத்துக் கவிதைச் சூழலின் இன்றைய முகங்களை நோக்க வேண்டும்.
ஈழத்தின் நிலமும் அகமும் உண்டாக்கிய இணைப்பு இன்றைய காலச்சூழலில் கலைஞர்களும் எழுத்தாளர்களும் பங்கருக்குள்ளிருந்து எழுந்து வந்து அருகிருந்த கப்பலில் ஏறி நாடோடிக் கடற்பயணிகள் ஆகியதைப் போல உலகின் பிறநிலங்களின் கவிதைகளின் புனைவுகளின் கலைகளின் நோக்குகளைத் தொட்டறிந்து கொண்டு விவாதிப்பதற்கு எடுத்துக் கொண்டு தன் தலைமுறைக்கான மரபை உண்டாக்குமிடத்தில் மீண்டும் கூடியிருக்கிறது. இனி அதன் கதைகளும் கவிதைகளும் கலைகளும் போரை மட்டுமின்றி பிறவற்றாலும் தன்னை நிகரெடையென உலக இலக்கியத்தின் அல்லது கலை மதிப்பிடும் தராசில் தன்னை வைத்துக் கொள்ளக் கூடியது. பாதிக்கப்பட்டதனால் அல்ல. எங்கனம் எழுந்து நின்றோம். எதன் பொருட்டுக் கலையை ஆக்கினோம் என்ற தருக்கினால் உரையாடலுக்குள் செல்ல வேண்டியவர்கள். அதன் வழி தொகுப்புத்தன்மையை உண்டாக்கியாக வேண்டும். அதன் முன்னிலேயே இன்றும் இனியும் எழுத்தாளர்கள் மதிப்பிடப்பட முடியும்.
ஆதிபார்த்திபன் 2012 களின் பின்னர் தீவிரமாக கலை இலக்கிய சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியவர். போரின் அனல் அணையாத காலம். அதுவரையான மரபின் தொடர்ச்சியென போராட்டம் என்றால் அதன் முதற் களப்பலியெனத் தன்னை முன்வைத்து ஒலிக்க வேண்டியது கவிஞரின் பணியென எண்ணிக் கொண்டிருந்த காலம். நானும் அங்கனம் எண்ணிக் கொண்டவனே. போரின் உக்கிரமான குருதியோலமும் எண்ணுக்கணக்கற்ற போரின் பின்னரான ஆக்கங்களும் வெடித்துப் பரவிய காலம். பல்லாயிரம் கவிதை வரிகள் எழுதப்பட்டன. கலைகள் ஆக்கப்பட்டன. விமர்சனங்களும் ஓலங்களும் குருதியாட்டும் நம்பிக்கைகளும் வெளியாகின. மாபெரும் மரணவீட்டின் துயர்க்காலமென அதைக் கருதலாம். அக்காலத்திலேயே ஆதி பார்த்திபன் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
காதலும் காமமும் ஊடலும் பிரிவும் நட்பும் வாழ்வின் நுண்கணங்களுமே அவரைக் கொந்தளிக்கச் செய்வனவாய் அமைந்தன. அவர் தன் இலக்கிய முன்னோடிகளென ஈழத்தில் கருதுபவர்களுடன் இணைந்தே உலக இலக்கியப் பரப்பினதும் தமிழ் இலக்கிய முன்னோடிகளினதும் எழுத்துகளை இணைத்து வாசித்தார். அக்காலகட்டங்களில் நாங்கள் அவற்றைக் குறித்து விவாதித்தோம். உரையாடினோம். எது கவிதை எது கவிதையில்லை. எது அரசியல். எது நிலைப்பாடு என்பவை குறித்து சொல்லும் செயலுமென விரிவான களங்களை நோக்கிச் சென்றோம்.
ஒரு எளிமையான உதாரணத்தை சொல்வதன் மூலம் ஆதி பார்த்திபன் எனும் எழுத்தாளன் அரசியல் பேசும் இடத்தை விளக்கலாம். விதை குழுமம் என்ற சிந்தனைக் குழாத்தை நானும் ஆதியும் யதார்த்தனும் இணைந்து ஆரம்பத்தில் உரையாடி உண்டாக்கிக் கொண்டோம். அதில் இலக்கியம் எங்கள் முதன்மையான பண்பாட்டுக் கருவியாக அமைந்தது. சுன்னாகம் எனும் ஊரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் நிலத்தடி நீரில் அருகிருந்த மின்சார உற்பத்தி நிறுவனமொன்றால் ஒயில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவை நிலத்தடி நீரில் கலந்து எண்ணைப்படையாக ஆகின்றன என்பது குறித்த பிரச்சினை அப்பொழுது முக்கியமான கவனத்தைக் கொண்டிருந்தது. அக்காலத்தில் நாங்கள் ஒரு சாகும் வரையான நீரும் அருந்தாத உண்ணாவிரப் போராட்டத்தை சில அம்சங்கள் கொண்ட கோரிக்கையுடன் நல்லூர் கோயிலின் முன்றலில் நிகழ்த்தினோம். அதற்கான முன்னாயத்தங்களுக்கென பல ஊர்களிலும் தனியார் வகுப்புகள் பாடசாலைகள் கல்வி நிறுவனங்களென அலைந்தலைந்து அழைப்பை விடுத்தோம். மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் பேசினோம்.
ஆதியின் பேச்சு நேரடியானது. கோர்வையற்றது. ஆனால் உணர்ச்சிகரமானது. நான் யாழ்ப்பாணத்திலிருந்த உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் வகுப்பறை ஒன்றில் ஆதி பார்த்திபன் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். முதலில் எளிமையாகத் தோன்றியது. ஆனால் அங்கிருந்தவர்கள் விழிகளில் ஒளிமினுங்க ஒரு ஒப்புமையைப் போல அவர் பேசியது அவர்கள் நெஞ்சைத் தொட்டுலுக்கியது. குளோரின் கலந்த நீரில் விடப்படும் மீன்குஞ்சின் கதையென அதை அவர் ஆக்கியிருந்தார். அரசியலில் எழுத்தாளரின் இடம் அதுவாக மட்டுமே அவரிடம் இருந்தது. அதை ஒரு முதன்மையான பண்பெனச் சொல்வேன். எந்தவொரு சமூகப் பிரச்சினையினதும் ஆன்மாவிலிருந்து எழுந்து அதன் ஆன்மாவை நோக்கியே திரும்பச் செல்வதாக ஒன்றை மாற்றிவிடுவதே கலையின் பணி.
ஆதியின் கவிதைகள் நேரடியானவை அல்ல. அவை சொல்லிணைவுகளின் பித்தை தனது பாத்திரமென வகுத்துக் கொண்டவை. அதன் இசைத் தன்மையும் அந்தளவில் முன்னோடிகளின் தாக்கமும் ஓசையும் கொண்டவை. தனித்து ஓரலகிலேயே ஒவ்வொருவரும் கடந்த காலத்திலிருந்து விலகுகிறோம். ஆதி பார்த்திபனின் கவிதைகளின் இரண்டாவது தொகுதியான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
அன்பும் காதலும் கருணையும் கண்ணீரும் அவருலகின் வாசலும் ஜன்னல்களுமெனத் திறந்திருப்பவை. அங்கு அரசியல் என்பது எப்பொழுதும் மானுட ஆதார உணர்வுகளுக்கும் உறவுகளுக்குமிடையில் முடிவிலாது தொடரும் சிக்கல்களே. அதைத் தொட்டு அதை மையங் கொண்டு தனதுலகை உருவாக்கிக் கொண்டிருப்பது இலக்கியம் எனும் விரிவான காட்சிப்புலத்தின் ஒருபகுதியுடன் தன்னை இணைத்துக் கொள்வதாகும். அவருடைய கவிதைகள் விவாதிக்கப்பட்டு அவற்றின் மீதான விமர்சனங்கள் உருவாக வேண்டும்.
இன்றுள்ள ஈழத்துச் சூழலின் தொடர் சிக்கல் இதுவே. முதலில் ஒரு இளம் எழுத்தாளர் சூழலுக்கு அறிமுகமாக வேண்டும். அவரை அவரது முதன்மையான அம்சங்களால் அணைத்துக் கொள்ளவும் கூரிய மதிப்பீடுகளால் விசாலிக்கவும் உதவும் மரபு உருவாக வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளினால் இயங்கும் வெளியல்ல இலக்கியம் என்பதை அமைதியாகவும் நிதானமாகவும் உறுதியாகவும் சொல்லியாக வேண்டும்.
ஆதியின் கவிதைகள் வாழ்விற்கும் வாழ்வின் ஆன்மீகத்துக்குமான ஒரு உரையாடலின் தலைவாயில் என மதிப்பிடுகிறேன். அதில் இன்னும் விரிவாக எழப்போகும் ஆலயமொன்றின் தோரணவாயிலென ஒற்றைக்கோடையைச் சொல்லலாம். அவரது கவிதைகளில் உள்ள களியினதும் உக்கிரத்தினதும் பாவனைகள் ஒருவகை ஆன்மீகம். காதலும் அன்பும் மானுடருக்கு ஆன்மீகமான அகப்பயணத்தை உண்டாக்கும் வழிகளைக் கொண்டிருக்கிறதா என எண்ணிக் கொள்ளச் செய்பவை. ஒருவர் குடும்பத்தை அமைத்துக் கொண்டு தன் கனவையும் சூடிக் கொண்டு உலகியலில் வென்றமையும் இடத்தின் அளவு கொண்ட ஆன்மீகம் கொண்டவை. இங்கிருந்து விரியும் பலதிசைகளும் விந்தைகளும் அவரது எழுத்தில் உருவாகி வரவேண்டும்.
கலை தன் நுண்மையினால் மதிப்பினால் என்றுமுள தன்மையினால் பிறிதொரு சொல்லின்றி தன்னை முன்னிறுத்தி அமைய வேண்டியது. ஆதி பார்த்திபனின் கவிதைகள் தமிழ்ச்சூழலில் கவனிக்கப்பட வேண்டிய குரல் என்பதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம். இங்கிருந்து அவரை வாசித்தவர்கள் தங்களது பார்வைகளைத் தொகுத்து வைப்பதன் வழி நீண்டதொரு பண்பாட்டுச் செயல்பாட்டின் இன்றைய கருவியெனத் தன்னை ஆக்கிக் கொள்ள முடியும். ஒரு எழுத்தாளருக்குச் சமூகம் அளிக்க வேண்டிய முதன்மையான மதிப்பென்பது அவரின் சொற்களைக் கவனித்தல். அதை விவாதித்தல். அங்கிருந்து வருங்காலம் நோக்கிய கனவின் பெருந்தொலைவு வரை நீண்டிருத்தல்.
000
தொகுப்பில் இருந்து சில கவிதைகள்
பிரியமற்ற வெளி
பிரார்தனைகளோ கருணையின் கடைசியிருப்புகளோவற்ற
கூட்டைவிட்டு எடுத்தாகிவிட்டது ஒரு முட்டையை -கோதுகழன்று பிரமாண்டமாய் வளரும்
சிறகற்ற தனிப்பறவை வெறுப்பு
அதுவதன் நம்பிக்கையின்மையை துரோகத்தை ஏமாற்றுதலைக் கொண்டு பறக்கும்
எனது பறவைகளே கூடு திரும்புங்கள்
ஒளியற்றது உறவுகளற்ற பூமி – இருந்தும்
அழியாது இவ்வுலகு
பறவைகளே! அன்பின் சிறகிருந்தும் அனாதையானது காலம்
வானம் தனிப்பது மழை
ஆறு கடல் ஆழி பிரியமற்றவெளி
கண்ணீர் பொதுத்திரவம் -வாழ்தல் என்பதோ வலிகளின் ஞானம்
நேசமற்றது என் பறவை -ஆயினும்
அன்பின் இறுதித் தானியத்தையும் எனது
வளர்ப்புப் பறவைகளுக்கே எறிகின்றேன்
கருணையின் கடைசித்தானியமுமற்றது பசி
பறவைகளே கண்ணீரே ஞானம்.
பச்சையவிரல் தொடுகை
கடந்த முத்தங்களின் ஒவ்வொரு திசுக்களிலும் கழன்று போகின்றது
பிரபஞ்சநிழல் – பின்வரையின் மஞ்சள்நிறவொளியிலிருந்து
எச்சில் பிசுக்கை மெல்ல நகர்த்தியிறங்கும்
புழுவைப்போல மெல்ல எனது
அந்தரத்தனிமையில் இறங்குகிறது
உன் ஞாபகப்புடகம்
உன் பச்சையவிரல் தொடுகையின் பின் களைத்துப்போயிருக்கின்றது
திசுக்களின் புத்துயிர்ப்பு
உச்சந்தலையின் ஞானத்துவாரம் வழி – அல்லது
பெருவிரல்களின் நகக்கணுக்கள் வழி
ஏறிக்கொண்டிருக்கிறது
உன்னைப்பற்றிய புரை
தாடிநரையில் அல்லது அந்திமகால நோய்ச்சளியில் காய்ந்துபோயிருக்கிறது
உன் பால்யகாலத்தின் நினைவுப்பாசி…
கிரிசாந்
யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் "வாழ்க்கைக்கு திரும்புதல்" என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மயான காண்டம்" என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.