இருளாசனம் : பாலைவன லாந்தர்

ஏழாம் முறையாக கண்களைக் கசக்கிப் பார்த்தேன். கண்கள் பொய் சொல்லவில்லை என் மனதும் தெளிவாக இருக்கிறது. மூளை தனது கட்டளைக் கடமையை மிகச் சரியாகச் செய்கிறது. என் அறையிலிருந்து இருள் நீண்டு முட்டும் இடத்தில் அல்லது மீச்சிறு வெளிச்சம் கசிந்துத் தொடங்கிய இடத்தில் அந்த நாற்காலி கிடக்கிறது. பலமுறை இருளையும் வெளிச்சத்தையும் வெட்டும் கத்தியாக நாற்காலியைப் பார்த்திருக்கிறேன்.

அதன் நான்கு கால்களுக்குள் நுழைய முடியாமல் விக்கித்து நிற்கும் நாய்க்குட்டியைப் போல் இருள் தடுமாறுவதும் வெளிச்சம் அதைப் பரிகாசிப்பதையும் காணும் போதெல்லாம் சட்டென எழுந்துச் சென்று நடுக்கூடத்தில் உள்ள சிறிய விளக்கை அணைத்து விடலாமா என்று நினைப்பேன். வெளிச்சத்தின் தோல்வியை இருளில் எப்படி காண்பது..? வெளிச்சமும் இருளும் என் பிரச்சனையில்லை அதைக் கடந்து விடுவேன்.

ஓர் அறை அதிலிருந்து வெளியேறினால் ஹால் எனப்படும் நடுக்கூடம் பிறகு ஒரு சமையலறை கூடத்தை ஒட்டினாற்போல் பெரிய பால்கனி எட்டிப்பார்த்தால் கிழக்குக் கடற்கரைச்சாலை வரை தெரியும் வண்ணம் உயரத்தில் வீடு அமைந்துள்ளது. தனிக்கூடு வேண்டுமென்று சொந்தமாக வாங்கி இரண்டு வருடங்களாகின்றன.

என் அறையிலிருந்து கண் எட்டும் தொலைவில் இருக்கும் அந்த நாற்காலியைத் தான் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கடந்த சில நாட்களாக பகல் பொழுதுகளில் எந்த தொந்தரவும் இன்றி தேமே என்றுக் கிடக்கும் நாற்காலி இரவில் வேறொரு பரிணாமம் கொள்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

”அது ஒரு ஆப்ஜக்ட” என்று எனக்கே விளக்கம் கொடுப்பார்கள். உண்மையும் அதுதான். அது ஓர் உயிரற்ற பொருளென்று தெரியாத முட்டாளா நான்?..

ஒருநாள் இருநாள் இல்லை பல நாட்களாக உண்ணிப்பாக கவனித்த பிறகே உறுதி செய்தேன். நடு இரவில் அதாவது மூன்று மணி வாக்கில் நாற்காலி தேர்ந்த போர் வீரனைப் போல் வேகமாக மூச்சு விடுகிறது. குளம்படிகளைத் தவிர்த்து விட்டு வேகமாக ஓடும் குதிரையின் மூச்சை ஒத்த மூச்சு. இதை முதலில் நிச்சயம் செய்துக்கொள்ள நான் மூன்றாம் இரவில் எழுந்து ஆள் நடமாட்டமற்ற தெருவென்று ஊர்ஜிதம் செய்துவிட்டு சன்னல் கதவுகளையும் அடைத்துவிட்டு காத்தாடியையும் நிறுத்திவிட்டுக் கூர்ந்துக் கேட்டேன் தெள்ளத் தெளிவாக மூச்சு நாற்காலியிலிருந்து அறை அதிரக் கேட்டது. மூச்சு ஓயும்போது தூரத்தில் கேட்கும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்புச் சத்தத்திற்கும் நாற்காலியின் மூச்சுக்கும் ஒரே அலைவரிசை.

மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்திற்குப் பிறகு வலது காலில் தகடு வைத்தே ஆகவேண்டுமென மருத்துவர் கூற, வேறு வழியின்றி சம்மதித்து அறுவை சிகிச்சை செய்து ஓரளவு பழைய நிலைமைக்கு திரும்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். வலி முழுமையாக நீங்கி விடவில்லை; மாத்திரையின் வலு குறைந்தவுடன் முட்டிலிருந்து முழங்கால் வரை வெட்டி எடுப்பதைப் போல் வலி பின்னியெடுக்கும். ”ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்குறான்” என்ற சொற்கள் முப்பத்தைந்தாண்டுகள் துரத்திக் கொண்டே வந்தன பாவம் அவைகளுக்கும் மூச்சிரைத்தன போல.

அம்மாவின் மரணத்திற்குப் பிறகு வீட்டில் இருப்பதற்கே எனக்கு பிடிக்காது. பள்ளிப்பருவத்தில் இருந்தே குட்டிச் சுவரையும் தெருமுனையையும் தேடிச் செல்லும் நண்பர்கள் கூட்டத்துடன் தான் இருந்தேன். என் பத்தாம் வயதில் அம்மா இறந்து போனாள். அம்மாவுடன் ஒட்டுண்ணிப் போல இருந்த எனக்கு பேரதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவோ எதிர்கொள்ளவோ தெரியாத வயது.

அப்பாவுடன் சண்டையிட்டுக் கொண்டு இரண்டு நாட்கள் அம்மா சாப்பிடாமல் இருந்திருக்கிறாள். அடிக்கடி அவள் அப்படி தன்னைத்தானே வருத்திக் கொள்வாள். ஆனால் இம்முறை வயிற்றில் அல்சர் அதிகமாகி மருத்துவமனைக்கு அழைத்துப் போன போது அது அல்சர் இல்லை ஒரு கட்டி என தெரிந்தது. மிகவும் நாள்பட்டு போனதால் வயிற்றிலேயே உடைந்து போய்விட, அம்மா உயிருக்குப் போராடி நான்கு நாட்களில் தனது மூச்சையும் நிறுத்திக் கொண்டாள்.

அடுத்த சில நாட்களிலேயே அப்பாவின் மனைவியாக ஒருத்தியை அழைத்து வந்து சித்தி என்றார்கள். பிறகு அவளின் பிள்ளைகளை தம்பிகள் தங்கை என்றார்கள். நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதைக் கூட அப்பா உள்பட யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. கல்லூரி முதலாம் ஆண்டில் அப்பா மாரடைப்பு வந்து இறந்து போனார். அவருக்குப் பிறகு அந்த வீடு எனக்கு முழுவதுமாக அந்நியமாகிப் போனது. கல்லூரியில் படித்துக் கொண்டே மாலையில் வேலைக்குப் போகத் தொடங்கினேன். தனியாக ஓர் அறையை எடுத்துக் கொண்டு அங்கேயே சமைத்து தூங்கி யாருமற்றவனாகவே வாழ்வை அமைத்துக் கொண்டு படித்து முடித்தேன்.

நானே எதிர்பாராத நல்ல வேலை கிடைத்தவுடன் சென்னைக்கு குடிபெயரும் போது சொத்துக்களில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்று எழுதித் தர சித்தி அழைத்திருந்தாள். அப்பாவிற்கு சொந்தமாக வாழ்ந்த வீடும் ஒரு கடையும் இருந்தன. அம்மாவின் நகைகளும் பொருட்களையும் ஏற்கனவே சித்தி தன்னுடையதாக்கி வைத்திருந்தாள். எனக்காக பேச அங்கு யாரும் இல்லை. சித்தியின் உறவினர்கள் சுற்றிலும் நின்று அவளின் மூன்று பிள்ளைகளுக்காக வாதாடினார்கள்.

நான் ரொம்ப யோசிக்காமல் சரியென்று சம்மதித்து கையெழுத்து போட்டது அவர்களுக்கு ஆச்சரியமாகவும் அவமானமாகவும் இருந்தது. சித்தியின் அண்ணன் தலையைத் தொங்க விட்டுக்கொண்டார். எனக்கு சிரிப்பு வந்தது. நான் அவர்களிடம் ”வேறெதுவும் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டதை சித்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ”சாப்பிட்டுட்டுப் போ” என்று அரை குரலில் சொன்னார். எனக்கும் மறுக்க மனமில்லை வயிறும் பசித்தது. டேபிளில் தங்கை என்று சொல்லப்பட்ட சிறுமி சாப்பாட்டை பரிமாறினாள். இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் என்னிடம் நெருங்காமல் வெகு சிரத்தையாக வளர்த்த சித்தி “அண்ணனுக்கு என்ன வேனுன்னு கேட்டுப் பரிமாறுடி” என்று கட்டளையிட்டாள். அவள் என்னை ஏறிட்டுப் பார்க்காமல் “வேறெதும் போடட்டுமாண்ணா கொஞ்சம் கொழம்பு, மோர்” என்றாள்.

அவள் குரலில் உள்ள அந்த அண்ணா என்ற சொல்லுக்கு உயிர் இருந்தது. நான் தலையை நிமிர்த்தி அவளைக் கவனித்தேன். அவள் கண்களில் என்னிடம் பேச வேண்டுமென்றோ பழக வேண்டுமென்றோ என்ற ஆவல் தெரிந்தது. நான் சிறியதாக புன்னகைத்தேன் அவளும் பதிலுக்கு புன்னகைக்க முயன்றாள். தன் தாயின் மீதான அச்சத்தினால் உடைந்து ஒழுகிய புன்னகையை மறைத்துக் கொண்டாள். அவள் தாய் அவளிடம் கண் சாடையில் “பரவாயில்லை பேசிக்கொள்” என்று அனுமதியளித்தாள். அதை நான் கவனித்ததை பார்த்தவுடன் மலைப்பாம்பைப் போன்று முந்தானையால் தன் முகத்தை சுற்றி கதவிடுக்கில் ஒளிந்து என்னையும் அவள் மகளையும் வேவு பார்த்தாள். கள்ளத்தனம் மரணம் வரை மாறாத கண்களை நான் தவிர்த்துக் கொண்டேன்.

நான் சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது ஏற்கனவே மனதிற்குள் ஒத்திகைப் பார்த்த கோரிக்கையைச் சொன்னேன் “எனக்கு இந்த சொத்து கித்தெல்லாம் ஒன்னும் வேண்டாம். எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்கலாம் சந்தோஷமாத்தான் எழுதித் தந்தேன்.. ஆனா அந்த நாற்காலியை மட்டும் நான் எடுத்திட்டுப் போறேன் அது என் அம்மா ஞாபகமா எனக்கு வேனும்” கிட்டத்தட்ட ஒரு மனநிலைப் பிறழந்தவனைப் போல் என்னைப் பார்த்தார்கள். அதை நான் பொருட்படுத்த மாட்டேனென அவர்களுக்கும் தெரியும். ஒரு சிறிய லாரியை வாடகைக்கு அமர்த்தி அந்த் நாற்காலியை சென்னை முகவரிக்கு ஏற்றிவிட்ட பிறகே அங்கிருந்து கிளம்பினேன். என்னை வாசல் வரை வந்து வழியனுப்பிய தங்கை

“அண்ணா உங்க மொபைல் எண் தரிங்களா? நான் வச்சுக்கலாமா? எப்பயாவது பேசனுன்னா அழைக்கலாமா? என்று சரசரவென கேட்டாள்.

“இல்ல பரவால்ல ..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவளின் ஏமாற்றமான கண்களைக் காண எனக்கு விருப்பமில்லை.

எனக்கு விபத்து நடந்த அன்று அலுவலகத்தில் மிக முக்கியமான மீட்டிங் ஒன்று இருந்தது. ஜெர்மனியில் இருந்து மேலதிகாரிகள் வந்திருந்தார்கள். ஆறு மணி நேரம் தொடர் மீட்டிங்.. ஒருவரும் சாப்பிடவோ கழிவறைக்கோ கூட நகர்ந்து போகவில்லை. எங்கள் அனைவரின் அலைபேசிகளும் அந்த அறையில் அனுமதிக்கப் படாமல் அவரவர் இடத்தில் வைத்து விட்டு வந்திருந்தோம். நான் மீட்டிங் முடிந்தவுடன் அலைபேசியை பார்த்தபோது ஒரே எண்ணிலிருந்து முப்பத்தியெட்டு முறை கால் வந்திருந்தது அதுவும் தொடர்ந்து அழைத்திருந்தார்கள். அந்த எண்ணிற்கு மீண்டும் அழைத்தபோது ஒரு ஆணின் தடித்தகுரல் கேட்டது.

“ஹலோ யாரு”

“ நீங்க யாருங்க”

“ஏங்க நீங்கதானே கால் பண்ணியிருக்கிங்க யாருன்னு கேட்டா சொல்ல மாட்டிங்களா”

“ஹலோ என்ன வெளயாடறிங்களா? இந்த நம்பர்லேந்து முப்பத்தெட்டு மிஸ் கால்ஸ் வந்திருக்கு யாருன்னு கேட்டு கால் பண்ணுனா என்னையே திருப்பி கேக்கறிங்க?”

“என்ன தம்பி சொல்லுறிங்க இந்த நம்பர்லேந்தா வந்துச்சு.. ஐயோ ஒங்க பேரு என்னப்பா?”

“ஹலோ மறுபடியும் ஏங்க எங்கிட்டயே கேக்கறிங்க நீங்க யாருன்னு மொதல்ல சொல்லுங்க”

“தம்பி.. தப்பா நெனச்சுக்காதிங்க எம் பேரு சண்முகம்.. இந்தப் போனு எந்தங்கச்சி மக செல்வியோடது.. எம்மருமவ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் செத்துப்போச்சுப்பா அந்த அதிர்ச்சியிலேந்தே நாங்க வெளில வரல.. கவர்மண்ட் ஆஸ்பத்திரி வாசல்ல நிக்கறோம் அவ போனு எங்கிட்ட தாம்பா இருக்கு..

“என்னங்க சொல்றிங்க.. அந்தப்புள்ளைக்கு என்னங்க ஆச்சு.. நல்லாத்தானெ இருந்திச்சு”

“தம்பி நீங்க யாருன்னு..?”

“நாந்தாங்க சரவணன் சென்னைலேந்து பேசறேன் அந்தப்புள்ள எனக்கு ஏங்க அத்தனை போனு பண்ணிச்சுது.. அந்தப்புள்ளைக்கு என்னோட நம்பர் எப்படிங்க தெரியும்.. சாகற அளவுக்கு என்னங்க நடந்துச்சு”

“ஐயோ தம்பி சரவணா நீயாப்பா.. தம்பி ஒந்தங்கச்சி நம்மல விட்டுட்டுப் போயிட்டாப்பா.. பாவிமவ இப்படி பரிதவிக்க விட்டுட்டுப் போயிட்டாவே.. என்ன நடந்துச்சுன்னு தெரியலயே பள்ளிக் கூடத்துக்குப் போனவ பொணமாத்தான் திரும்பி வருவான்னு கனவுலயும் நெனக்கலயே”

“ஏங்க அழுகறத விட்டுட்டு என்னாச்சு ஏதாச்சுன்னு வெபரமா சொல்லுங்க..”

“ஐயோ சாமி.. கொஞ்ச நாளா வவுத்த வலிக்குதுன்னு அழுதுக்கிட்டே கெடந்திச்சு நாங்களும் பாக்காத வயித்தியம் இல்ல எதுவுமே கேக்கலத் தம்பி ஒங்க அம்மைக்கி வந்த அதே வவுத்த வலின்னுக்கூட அக்கம்பக்கத்துல பொரசலா பேசிக்கிட்டாங்க சரி எதும் காத்துக் கறுப்போன்னு மந்திரிச்சும் பாத்தோம்.. அதுவுமே கேக்கல”

“அப்புறம் எப்படிங்க பள்ளிக்கூடம் போச்சு”

“ஐயோ தம்பி பகல்லல்லாம் சும்மாத்தான் இருக்கும் ராத்திரிக்கி ராத்திரிதான் வலியில துடிச்சி மருவும்”

“என்னமோ சொல்லுறிங்க எனக்கு ஒன்னுமே புரியல.. சரி நீங்க போனை வைங்க நான் உடனே ஊருக்கு புறப்பட்டு வரேன்” என்று அலைபேசியை அணைத்து வண்டியை வேகமாக முடுக்கி ஓட்டிய போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.

எதிரில் வந்த லாரி ப்ரேக் பிடிக்காமல் பக்கவாட்டில் வளைந்த போது என்னுடைய இருசக்கர வண்டியில் இடித்து தூக்கி வீசியது நான் என்னுடல் காற்றில் எகிரியதைச் சுதாரிக்கும் முன்னமே மயங்கினேன். கண் விழித்தபோது இரண்டு நாட்கள் கடந்திருந்தன. என்னால் நகரக் கூட முடியாத அளவிற்கு உடல் முழுக்க காயங்களும் வீக்கங்களும் இருந்தன.

அதன்பிறகான நாட்களில் ஊருக்குப் போகவும் யாரிடமும் அலைபேசியில் பேசவும் கூட மனம் இடம் கொடுக்கவில்லை. அந்த சிறுமியின் முகம் மட்டும் எப்போதாவது சட்டென கண்களுக்குள் வந்துப்போகும். மரணிப்பதற்கு முன்பாக அத்தனை முறை அழைத்திருக்கிறாளென்றால் அது நிச்சயமாக ஏதோ ஓர் உதவியை நாடித்தான் என்று எனக்கு புரியாமல் இல்லை. அந்த அலைபேசியை எடுத்துப் பேசியிருந்தால் அவளுக்கு சர்வ நிச்சயமாக உதவியிருப்பேன். ஆனால் அவளே உயிரோடு இல்லை எனும்போது இனி நான் யாருக்காக அதைக் குறித்து தேடவோ தெரிந்து கொள்ளவோ வேண்டும்.

நாற்காலியிலிருந்து வரும் மூச்சு அல்லது சப்தம் என்னை கலவரப்படுத்தாமல் இருந்திருந்தால் இவர்கள் அனைவரையுமே நாளடைவில் மறந்தே போயிருப்பேன். என் அம்மாவுக்கும் எனக்குமான தொப்புள்க்கொடி உறவைப்போல் ஏனிந்த நாற்காலியை மட்டும் எடுத்து வந்தேனென எனக்கே புரியவில்லை. அம்மாவின் முகமும் குரலும் மட்டுமே பல நாட்கள் என்னைத் தொடர்ந்து வந்து இருக்கின்றன அவை என்னை வழி நடத்தியதால் தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. ஆனால் இந்த சப்தம் என்னை வேறு ஒரு பாதைக்கு அழைக்கிறது அதில் நான் தொலைவதும் மீள்வதும் என்கையில் இல்லை என்பது நிதர்சனம்.

சென்னையில் எனக்கென இருக்கும் இரண்டு நண்பர்களை வீட்டிற்கு வரச் சொன்னேன். நாற்காலி பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. விபத்திற்குப் பிறகு அடிக்கடி அவர்கள் தான் வந்து போவார்கள். எனக்கு தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்வேன். ஒரு வயதான அம்மா சமைப்பதற்கும் வீட்டை சுத்தம் செய்வதற்கும் காலையில் வந்துவிட்டு போவார்கள். அன்று மணி, சுந்தர் இருவரையும் என்னுடன் இரவு தங்குமாறு அழைத்திருந்தேன் முதலில் யோசித்தவர்கள் சரக்கு என்ற ”கோட்” வார்த்தையைச் சொன்னவுடன் சம்மதித்தார்கள்.

அன்றிரவு மூன்று மணிவரை அவர்கள் தூங்கிவிடாமல் இருப்பதற்காக நான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். பன்னிரெண்டு மணிக்கு பிறகே பாட்டலைத் திறக்கச் செய்தேன் நிறைய நொறுக்குத் தீனிகளை சாப்பிடச் செய்தேன் புத்தம் புதிய ஆங்கிலப் படத்தை ஹோம் தியேட்டரில் ஒளிபரப்பி ரசித்து பார்க்கச் செய்தேன். அவர்கள் தங்களை எந்த விதத்திலும் நிலைமறந்து போதையாகி விடாமல் இருப்பதற்காக அலுவலகம் குறித்த முக்கிய தகவல்களையும் கேட்டபடி இருந்தேன்.

மூன்று மணியைத் தொட்டபோது என் காதுகளைத் தீட்டினேன். இதற்கு முன்பு இருந்ததை விட அன்று சப்தம் பேரிரைச்சலாக இருந்தது. சட்டென தொலைக்காட்சியை அணைத்தேன் அவர்கள் என்னை விநோதமாக ஏறிட்டார்கள்

“டேய் ஏண்டா ஆஃப் பண்ணுனே செம்ம சீனுடா க்ளைமேக்ஸ்ல போயி ஆஃப் பண்றே”

“இல்லடா கை ரிமோட்ல தெரியாம பட்டுடுச்சு..மறுபடியும் ப்ளே பண்ணுனா போச்சு.. ம்ம் ஒரு டென் மினிட்ஸ்ல போடலாம் ஸ்மோக் பண்ணலாமா?”

“சரிடா அதுக்கும் மூவிக்கும் என்ன சம்பந்தம் அதுபாட்டுக்கு பொகைய போகுது”

“இல்ல.. ஒரே எரைச்சலா இருக்கில்ல அதான் கொஞ்சம் சைலண்டா இருக்கட்டுமேன்னு ஜஸ்ட் டென் மினிட்ஸ்தானடா”

“என்னமோ சொல்றே சரி வா தம் போடலாம் பால்கனி போலாமா?”

“இல்லடா இங்கயே பத்தவை..”

மணி பற்றவைத்து சுந்தருக்கும் எனக்கும் கொடுக்க இதழ்களில் பொருத்தி ஒரே இழுப்பில் முழுவதையும் எரிய விட்டேன்”

“சுந்தர் எதாச்சும் சத்தம் கேட்குதா?.. டேய் மணி ஒனக்கு”

“ஆமாண்டா சாரி பாத்ரூம்ல கொழாய சரியா மூடலப் போலிருக்கு இவ்ளோ நேரம் டிவி சத்தத்துல கேக்கல இரு மூடிட்டு வரேன்”

“அது இல்லடா வேற எதாவது காத்தடிக்குற மாதிரி புஸ்ஸு புஸ்ஸுன்னு”

“டேய் பாவி பாம்பு கீம்பு பூந்துடுச்சா”

“இல்லடா வேற”

“ஐயா சாமி எனக்கு எதுவும் கேக்கல வந்து படத்தப் போடு க்ளைமேக்ஸ் என்னாகுமோன்னு டென்ஷனா இருக்கு மணி ஒனக்கெதாச்சும் கேட்டா இவங்கிட்ட சொல்லிடு”

“சரவணா ஒனக்கு என்ன ஆச்சு எனக்கும் எந்த சத்தமும் கேக்கல படுத்தாம ரிமோட்டக் கொடுக்கறியா.. நான் கெஸ் பண்ணுன மாதிரி அந்தப் பொண்ணுதான் ப்ளான் பண்ணி அவனை வரவழச்சுக் கொன்னுருப்பா என்னோட இன்ங்ஸ்டின் எப்பயுமே தப்பாது வாடா பாக்கலாம்”

“ஆமாண்டா பாத்துட்டு தூங்கலாம் காலைல நீ பாட்டுக்கு இழுத்துப் போத்திட்டு மதியானம் வரைக்கும் தூங்குவே நாங்கள்ள எந்திரிச்சு ஓடனும்”

நான் போட்ட கணக்கும் சரியாகத்தான் இருக்கிறது. அந்த மூச்சு எனக்கு மட்டும் தான் கேட்கிறது. தள்ளாடிய படியே சுந்தர் அந்த நாற்காலிக்கு அருகில் போனவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனை தடுக்க நினைத்தும் என்னதான் ஆகிறது என்று பார்க்க அமைதியாக இருந்தேன். அவன் நான் நினைத்தது போலவே அதில் உட்கார்ந்தான் அடுத்த நொடி அது அவனைக் கீழே தள்ளியது. தரையில் சட்டென விழுந்தவன் “ஸாரிடா கொஞ்சம் அதிகமாயிடுச்சு” என்று சொல்லிக்கொண்டான்.

நாட்கள் நகர்ந்துப் போனாலும் நாற்காலியின் மூச்சு நின்றபாடில்லை. அதை விற்கவும் மனம் இடம் தரவில்லை. அம்மாவின் நினைவைத் தாண்டியும் அதற்கு வலுவான காரணம் இருந்தது.

என் தாத்தா ஆங்கிலேயர்களிடம் எழுத்தாளராக வேலை செய்திருக்கிறார். பிரெஞ்சுக்கார பிரபுவின் மனைவி க்ளாரா லெவிங்க்ஸ்டன் என்பவர் தனது பிரெஞ்சுக் கவிதைகளை மொழிப்பெயர்க்க ஆங்கிலமும் தமிழ்ப் புலமையும் உள்ள எழுத்தாளர் வேண்டுமென கேட்டிருந்ததால் என் தாத்தாவை பிரத்தியேகமாக அதற்காக நியமித்திருக்கிறார்கள்.

தாத்தாவுக்கு இரத்தத்திலேயே ஊறிக் கிடந்த ஆணாதிக்க குணம் ஒரு பெண்ணின் கட்டளைகளைப் பின்பற்றும் பணிக்கு சூழல் தம்மை ஆளாக்கியதில் அதிகமான வெறுப்பும் கோபமும் கொண்டு அதை வீட்டில் உள்ள பெண்களிடத்தில் வெளிக்காட்டி இருக்கிறார், வீட்டுப் பெண்கள் தனது முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே அஞ்சும் போது எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரி தன்னை நொடிக்கொருமுறை “சங்கைய்யா சங்கைய்யா” என்று ஏவி வேலை வாங்கியதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இரவு தாத்தாவின் காலடிச் சத்தம் கேட்டாலே பாட்டி வெலவெலத்துப் போய்விடுவாராம். அம்மாவும் அவர்களின் உடன் பிறந்த சகோதரிகளும் கூட நடுங்கிப்போய் பின்கட்டிலேயே ஒதுங்கி கிடப்பார்களாம். காரணமே இல்லாமல் தாத்தா பாட்டியை அடிப்பதும் மிதிப்பதும் கூட வாடிக்கையாக இருந்திருக்கிறது அதுவும் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட்டைக் கழற்றி வளாசி விடுவாராம். பாட்டி மரணித்தவுடன் இறுதியாக குளிப்பாட்ட வந்த பெண்கள் பாட்டியின் உடலிலுள்ள வடுக்களைக் கண்டு அடிமை வரிக்குதிரையாக வாழ்ந்திருக்கிறாளென்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் தாத்தாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி க்ளாராவிற்காக இனி வேலை செய்யத் தேவையில்லை என்பதாகவே இருந்தது ஆனால் சுதந்திரத்திற்கு முன்னமாகவே க்ளாரா தாத்தாவை பத்து நாட்களுக்கு மேலாக வீட்டிற்கே அனுப்பாமல் மொழிப்பெயர்ப்பு வேலையை முடித்துத் தர கேட்டிருந்தாள். தாத்தாவும் வேறு வழியின்றி அங்கேயே இருந்து விட்டார். அம்மாவும் பெரியம்மாக்களும் சந்தோஷமாக இருந்த நாட்களென அதைக் குறிப்பிடுவார்கள். க்ளாரா தனது தேசத்திற்கு போகும் அவசரத்தில் தாத்தாவை அதிகமாக வேலை வாங்கி கோபமாக நடந்து கொண்டிருக்கவே தாத்தா வேண்டுமென்றே நெருப்பு விபத்தொன்றை நிகழ்த்தி அத்தனை மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட தொகுப்புகளையும் எரித்துப் போட்டிருக்கிறார்.

ஏமாற்றத்துடன் கப்பல் ஏறிய க்ளாராவை ஏளனமாகப் பார்த்த தாத்தா அவள் பயன்படுத்திய பர்மா தேக்கினால் ஆன இந்த நாற்காலியைத் தனக்காக எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அதில் அமரும் போதெல்லாம் அவருக்கு தான் ஓர் ஆதிக்க அரசன் என்ற எண்ணமும் மற்றவர்களெல்லாம் அடிமைகள் என்ற எண்ணமும் வந்து அனைவரையும் வாட்டி எடுத்திருக்கிறார். அதிலும் காலின் மீது காலைப் போட்டு சாய்ந்து இருக்கையில் க்ளாராவை அடிபணிய வைத்ததாகவே எண்ணி ”ஏய் க்ளாரா தண்ணி மொண்டுட்டு வாடி” “ஏய் க்ளாரா என் செருப்பை எடுத்துட்டு வாடி” என்று கத்துவாராம்.

தாத்தா நாற்காலியில் அமர்ந்தபடியே மரணித்திருந்திருக்கிறார். என்னைப் போலவே அம்மாவும் நாற்காலியை விரும்பி கேட்டு தன்னுடன் எடுத்து வந்த வரைக்கும் எனக்குத் தெரியும். அம்மா நாற்காலியில் சாய்ந்து என்னை தன் மார்பில் போட்டபடி பல நாட்கள் உறங்கியும் இருக்கிறாள். அப்போதெல்லாம் நாற்காலி எனக்கு இன்னொரு அம்மாவாகவே பட்டது.

இப்போதெல்லாம் எனக்கு நாற்காலியின் மூச்சு பழகிவிட்டது. கால்களும் முன்பைப் போல் சரியாகி விட்டது. இனி வலுவேற்ற பயிற்சி செய்ய வேண்டும். நார்காலியில் அமர்ந்து ஷூ கயிற்றை கட்டினாலோ அல்லது வேறெந்த வேலைகள் செய்தாலோ எழும் போது யாரோ பின்னாலிருந்து இழுப்பது போன்ற அழுத்ததை தரும். அதையும் பழகிக் கொண்டேன்.

சென்ற வருடம் இதே நாளில்தான் எனக்கு விபத்து நடந்தது. சட்டென செல்வியின் முகம் நினைவுக்கு வந்தது. அவள் “அண்ணா அண்ணா” என்று அழைப்பதுப் போல் கேட்டது. கண்கள் தன்னிச்சையாக நாற்காலியின் பக்கம் சென்றது அதில் அமர்ந்து அதன் வளவளப்பான கைப்பிடியை தடவிப் பார்த்தேன். சாய்ந்து கால்களை குத்திட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். அம்மாவின் வியர்வையில் நனைந்த புடவை வாசனையும் சுருட்டு புகையும் வாசனையும் கலந்து அடித்தது.

திடீரென நாற்காலியிலிருந்து புகை வரவே நான் வெடுக்கென எழுந்து நாற்காலியின் அடியில் எதுவும் எரிகிறதா என்று பார்த்தேன். எதுவும் இல்லை ஆனாலும் வீடு முழுக்க புகைமூட்டமாக ஆனது புகையில் என்னால் மூச்சுவிட முடியவில்லை. வீட்டை பூட்டி வெளியேறினேன் அலுவலகத்திற்கு கால் செய்து விடுப்பு சொல்லிவிட்டு ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.

நான் நினைத்தது போலவே செல்விக்கு காரியம் செய்து கொண்டிருந்தார்கள். செல்வியின் புகைப்படம் நடுக்கூடத்தில் வைக்கப் பட்டிருந்தது. செல்வி இவ்வளவு அழகானவளா என்று ஆச்சரியமாகப் பார்த்தேன். அவள் சிரிக்கும் போது பளீரிடும் தெற்றுப்பல்லில் என் அம்மாவின் சாயல் தெரிந்தது.

செல்வி புகைப்பத்தில் அதே நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளுடைய கைகளை நீட்டி அதன் கைப்பிடியைப் பிடித்தபடி காலின் மீது காலைப் போட்டுக் கொண்டு பட்டுப் பாவாடைச் சட்டையில் ராணியைப் போல் அமர்ந்திருந்தாள். எல்லோரும் என்னைப் பார்த்தவுடன் மீண்டும் வீட்டை மரண வீடாக்கி ஒப்பாரி வைத்தனர். நான் பூஜை முடிந்தவுடன் கிளம்பினேன்.

பின்கட்டிலிருந்து எரிந்து அடங்கிய நெருப்பின் மிச்ச புகையும் வாசனையும் வந்து கொண்டிருந்தது. நான் பின்கட்டுக்குச் சென்ற போது மாமா சாம்பலில் தண்ணீர் தெளித்துக் கொண்டே

“செல்வியோட பொருட்கள் தம்பி.. ஹ்ம்ம்ம் நெறய பொஸ்தகம் முழுக்க கவிதையா எழுதி வச்சிருக்கான்னா பாரேன் அதையெல்லாம் பாக்கும்போது அவ நெனப்பு பாடாப் படுத்துதுப்பா..  அதான் எல்லாத்தையும் காலைலயே போட்டு எரிச்சுட்டோம் என்ன நெருப்புதான் அடங்காம எரிஞ்சுகிட்டே கெடந்திச்சு.. இந்தா இப்ப நீங்க வந்ததும் அடங்கிடுச்சு தண்ணியும் தெளிச்சுட்டேன்..’ என்றார். 

பாலைவன லாந்தர்

பாலைவன லாந்தர்(நலிஜத்) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். அநீதிக்கெதிரான குரலாக இவரது கவிதைகள் உள்ளன.

தமிழ் விக்கியில் 

 

2 Comments

  1. ஆழ்மன இருளில் தாயின் நினைவும் பற்றிக் கொள்ள கொம்பை தேடும் கொடியின் நெருக்கடியை சொல்லியிருக்கிறீர்கள் நன்று.

  2. எளிமையான நடை. சிறப்பான கதை. நாற்காலி படிமம் மற்றும் அதன் கதை மாந்தர்கள் ஆழமாக காலத்தில் பதிந்து விட்டார்கள். வாழ்த்துகள்

உரையாடலுக்கு

Your email address will not be published.