/

மகிழ்ச்சிக்கான கட்டிடக்கலை : அலான் டி பாட்டன்

தமிழில் : தென்னவன் சந்துரு

“மகிழ்ச்சிக்கான கட்டிடக்கலை” (The Architecture of Happiness) எனும் நூல், ஸ்விஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர், அலான் டி பாட்டன் (Alain de Botton) என்பவரால் எழுதப்பட்டது.
இந்நூலில் “கட்டிடங்களும் பேசுகின்றன” எனும் தலைப்பு கொண்ட அத்தியாயத்தின் ஒரு பகுதி இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-மொழிபெயர்ப்பாளர்

கட்டிடங்களும் பேசுகின்றன

1.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கட்டிடங்களின், பொருட்களின் மீதான நமது ஆர்வம் அவற்றின் நேரடி பயன்பாடுகளைத்தாண்டி, அவை நமக்கு உணர்த்துவது என்ன என்னும் கோணத்தில் அணுகப்பட்டால், ஒரு சுவாரஸ்யமான விளக்கம் கிடைக்கும். கற்களும், இரும்பும், கான்கிரீட்டும், மரமும், கண்ணாடியும் என அவை தனித்தும், இணைந்தும் உருவாக்கும் வடிவங்கள் யாவும் தனித்த உணர்வுகளை நம்மில் உண்டாக்குவதைக் காணலாம். அவை நம்முடன் பேசுவதையும், இன்னும் அரிதான சில தருணங்களில், நம்முள் ஒரு உணர்வெழுச்சியை தூண்டுவதையும்கூட கவனிக்கலாம்.

2.

இவ்வாறு அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்குள்ளும் உறைந்திருக்கும் அகப்பொருளைக் காண நாம் நீண்ட நேரம் செலவிடும்பட்சத்தில் நாம் நிச்சயமாக ஒரு நடைமுறை இடரை சந்திக்க நேரிடும். ஒரு லைட் ஸ்விட்சிலோ, தண்ணீர் குழாயிலோ பொதிந்திருக்கும் அர்த்தத்தை வாசிப்பதிலேயே நாம் ஆழ்ந்துவிட்டோமானால், இப்பொருட்களின் பொது உபயோக தன்மையையையே கணக்கில் கொள்ளாமல் புறக்கணித்துவிடக்கூடிய அபாயமும் உள்ளது. ஒரு மின்விளக்கு அறையை ஒளியூட்டுவதற்கானது; தண்ணீர் குழாய் பல் துலக்கும்போது பயன்படுவது என்று எண்ணும் நடைமுறை மனிதர்களுக்கு மத்தியில் நாம் ஏளனத்திற்குள்ளாகி பாதுகாப்பற்று உணரக்கூடும். இந்த அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்ளவும் நாம் நம்பிக்கையோடு செயல்படவும், பொது மனநிலைக்கு மாறாக நம்மை மேம்படுத்திக்கொள்ளவும், இப்பொருட்களை இன்னும்கூட நாம் தியானித்து புரிந்துகொள்ளவும், நாம் ஒரு நவீன கலை காட்சியகத்தை நாடுவது பெருமளவு உதவிபுரியும்.

ஒரு காட்சி மையத்தில்(Art gallery), முற்றிலுமான வெள்ளை பின்புலத்தில் வைக்கப்பட்டிருக்கும் இருபதாம் நூற்றாண்டின் எண்ணற்ற அரூப வாத சிற்பங்களின் (abstract sculpture) தொகுப்பை காணும்போது, நமக்கு ஒரு அரிதான பார்வைக்கோணம் சாத்தியப்படும். இப்படியான முப்பரிமான வடிவங்கள் (three-dimensional masses) எப்படி அர்த்தத்தை ஏற்றிக்கொண்டு (assume) அதை நமக்கு தெரிவிக்கவும் செய்கின்றன என்பதை நாம் கண்டுணர வாய்ப்பு கிட்டும். மேலும் இந்த பார்வைக்கோணம் நம் வீட்டையும், அதில் பொருத்தப்பட்டுள்ள இதர வேலைப்பாடுகளையும் (fittings) ஒரு புதிதான கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது.    

3.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் சிற்பக்கலைஞர்கள் எளிதாக வகைப்படுத்தமுடியாத இவ்வடிவங்களை காட்சிப்படுத்தி, அதற்காக பெரும் பாராட்டுகளையும், கடும் விமர்சணங்களையும்(கேலி) ஒருசேர பெற்றனர். பண்டைய கிரேக்க வரலாறுதொட்டு மேற்கத்திய சிற்பக்கலையில் பெரிதும் செல்வாக்கு செலுத்திய தத்ரூப பிரதிபலிப்புகளிருந்து இவை விலகி நின்றன. நம் வீட்டு உபயோகப்பொருட்களின் ஏதோ ஒரு தன்மையை இவை கொண்டிருந்தாலும் இவற்றிற்கு எந்த நேரடி பயன்பாடும் இருக்கவில்லை.

What abstract objects can say : Henry Moore, Two Forms, 1934
Alberto Giacometti, Hour of the Traces, 1930
Jasper Morrison, ATM Table, 2003
Anthony Caro, Whispering, 1969
Diener and Diener, Migros, Lucerne, 2000

இருப்பினும் இந்த எல்லைகளைத்தாண்டி, தங்களது  சிற்பங்கள் உன்னதமான கருப்பொருட்களை கடத்தும் வல்லமைமிக்கவை என்று அரூப வாத கலைஞர்கள் வாதிட்டனர். அவற்றை பல விமர்சகர்களும்கூட ஆமோதித்தனர். ஹென்றி மூர்-இன் (Henry Moore) படைப்புகளைப்பற்றி ஹெர்பர்ட் ரீட் (Herbert Read) குறிப்பிடும்போது – ‘சமீபத்தில் கடவுளால் கைவிடபட்ட ஒரு உலகில் மனிதனின் கனிவையும்,   இரக்கமின்மையையும் எண்ணற்ற சாத்தியங்களோடு நிகழ்த்திக்காட்டும் உன்னத நடனம்’ என்றார். டேவிட் சில்வெஸ்டோ (David Sylvester) வை பொருத்தவரை ஆல்பட்டோ ஜகோமுடீ (Alberto Giacometti) -யின் சிற்பங்கள் பொருள்வய சமூகத்தில் (industrial society) தன் போலியற்ற ஆன்மாவிலிருந்து அந்நியப்பட்டுப்போன மனிதனின் தனிமையையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

சில சமயங்களில் அளவில் பெரிதான காதடைக்கும் கருவியையோ (earplugs), தலைகீழான புல்வெட்டும் இயந்திரத்தையோ ஒத்திருக்கும் இவற்றின்மேல் ஏற்றப்படும் கருத்துக்களை வெறும் ஆடம்பர பொழிப்புரைகளாக கருதி நாம் ஏளனத்தோடு சிரிக்கக்கூடும்.

Ear plug
Lawnmower turned upside down

ஆனால், சிறிய விஷயங்களிலிருந்து மிதமிஞ்சிய கருத்துக்களை  கொணர்வதாக விமர்சகர்களை குற்றம்சாட்டுவதை விடுத்து, நாம் இந்த அரூப சிற்பங்களை, அவை பிரதிபலிக்ககூடிய வகையிலான  சிந்தனைகளையும், உணர்வுகளையும் நமக்கு வெளிப்படுத்த, திறந்த மனதுடன் இருக்கவேண்டும். எந்த ஒன்றையும் பிரதிபலிக்காத அருவமான பொருட்களையும்கூட (non-representational object), இப்படியான உணர்வுகளை கடத்த வாய்ப்பளிக்க வேண்டும்.

மிகத்திறமையான சிற்பக்கலைஞர்களிடமுள்ள பெருங்கொடை யாதெனின், அவர்கள் சாதாரன மரத்துண்டுகளையும், கயிற்றையும் கொண்டோ அல்லது  சிமென்டையும் உலோக கலவைகளையும் வைத்தோ வாழ்வின் சாரமான கருப்பொருட்களான அன்பு, புத்திகூர்மை, இளமை, அமைதி போன்றவற்றை நமக்குள் எளிதில் கடத்திவிடுவதுதான். எப்படி மனிதரையோ, விலங்கையோ ஒத்த உருவ பிரதிபலிப்பைகொண்டோ அல்லது மொழியைக்கொண்டோ இவற்றை உணர்த்திவிடமுடிகிறதோ – அதே அளவிற்கான தாக்கத்தை இதிலும் அக்கலைஞர்கள் நிகழ்த்திவிடுகிறார்கள்.

மாபெரும் அரூப வடிவ சிற்பங்கள் யாவும் அவற்றிற்கே உரித்தானதொரு தொடர்பற்ற மொழியில் வாழ்வின் முக்கியமான கருப்பொருட்களைப்பற்றி நம்முடன் உரையாடுகின்றன. அதைத்தொடர்ந்து இச்சிற்பங்கள் நமக்கு மேலும் ஒரு நல்வாய்ப்பையும் அளிக்கின்றன. நாம் இதுவரை பழகியிருக்காததொரு புதிய உந்துதலோடு அனைத்து பொருட்களையும், கட்டிடங்களையும், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள இதர வேலைப்பாடுகளையும் (furnishings) அவற்றின் உணர்வுகளைக்கடத்தும் ஆற்றலையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம்.

முன்பு ஒரு சூப் கிண்ணத்தை (soup bowl) சாதாரன உணவுக்கிண்ணமாக மட்டுமே அறிந்திருந்த நாம் ஒரு அருங்காட்சியகத்திற்கு சென்றுவந்த பிறகு அதன் பாதிப்பால் உண்மையில் அந்த சூப் கிண்ணம் வெளியே பறைசாற்றிக்கொள்ளாத அர்த்தமுள்ள தொடர்புகளை கொண்டுள்ளதை காணலாம். அது முழுமையையும், பெண்மையையும், எல்லையற்ற தன்மையையும் குறிப்புணர்த்துவதை உணரலாம். மேலும் முன்பு நமக்கிருந்த கற்பனாரசமற்ற நிலையை நினைத்து நம்மையே நாம் சாடிக்கொள்ளவும் நேரலாம்.

நடைமுறை உதாரணங்களான மேஜையையோ, தூனையோ அல்லது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தையோகூட  எடுத்துக்கொள்ளலாம். அருவ தொடர்புறுத்தலின் வழி வாழ்வின் சாரத்தை வெளிப்படுத்தும் மாயத்தை அவற்றிலும்கூட நாம் கண்டுணரலாம்.

4.

ஒரு பிரகாசமான காலை வேளையில் இங்கிலாந்து கார்ன்வாலின் செண்ட் ஐவ்ஸ் நகரிலுள்ள டேட் காட்சிக்கூடத்திற்கு (Tate Gallery, St Ives, Cornwall)  செல்வதாக கொள்வோம். அங்கு பளிங்குக்கல்லாலான சிற்பமொன்று ஒரு பீடத்தின்மேல் அமர்ந்திருப்பதைக் காணலாம். அது முதன்முதலில் 1936-ஆம் ஆண்டு பாபரா ஹெப்வத் (Barbara Hepworth)-ஆல் காட்சிப்படுத்தப்பட்ட சிற்பம். அதிலுள்ள மூன்று கற்களும் எதை குறிக்கின்றன என்பதை நாம் தெளிவாக அறியமுடியாமல் போகலாம். “இரண்டு பகுதிகளும் ஒரு கோளமும்” (Two Segments and a Sphere) எனும் அதன் தலைப்பிலும் கூட ஏதோ பூடகமான ரகசியம் வெளிப்படுவதை நாம் உணர்வோம். இருந்தும் அது நம் கவனத்தைக் சிறைபிடிக்கத் தவறுவதில்லை.

அந்த கோலவடிவ பந்திலும் அது வீற்றிருக்கும் அரைக்கோல பகுதியிலும்தான் நம் கவனம் குவிகிறது. அந்த பந்து நிலையற்றதாகவும், ஆற்றலுடனும் தோற்றமளிக்கிறது; அது எவ்வளவு துடிப்புடன் அந்த அரைக்கோலப்பகுதியின் முனையோரத்திலிருந்து உருண்டு பயணிக்க எத்தனித்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் உணரமுடிகிறது. அந்த துடிப்பிற்கு எதிராக அதை தாங்கியுள்ள அரைவட்டப்பகுதி  முதிர்ச்சியையும்,  ஸ்திரத்தன்மையையும் தெரிவிக்கிறது: அதன் பொறுப்பிலுள்ள அசட்டையான ஒன்றை மென்மையோடு கட்டுப்படுத்துவதோடு முழுவதுமாக அரவணைக்கிறது. மென்மையான கனிவையும், சூட்டிகைதனத்தையும் கொண்டுள்ளதொரு உறவை நாம் இந்த படைப்பில் காண்கிறோம். ஆதியிலிருந்து இங்கிருக்கும் பளிங்கு கற்களை மெருகேற்றி அதன் வழியாக இவ்வளவு உணர்வுகளும் கடத்தப்படுவதோடு அது ஒரு பிரம்மாண்டமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.

Barbara Hepworth, Two Segments and a Sphere, 1936

உளவியல் பகுப்பாய்வு விமர்சகர் ஏய்ட்ரியன் ஸ்டோக்ஸ் (psychoanalytic critic Adrian Stokes) ஹெப்வத் பற்றிய கட்டுரையில் இந்த எளிமையான படைப்பு நமக்குள் செலுத்தும் சக்திவாய்ந்த பாதிப்பைப்பற்றி  விளக்குகிறார்; இறுதியில் நாம் உண்மையில் ஒப்புக்கொள்ளும்படியான ஒரு முடிவை குறிப்பிடுகிறார். ஒருவேளை இச்சிற்பம் நம் உளத்தை தொடும் பட்சத்தில், நம் பிரக்ஞைக்குள் அது ஒரு குடும்ப சுயஉருவப்படம் என்று தன்னுணர்வற்று பதிவாவதால்தான் என்று உறுதியுடன் குறிப்பிடுகிறார். கொழுகொழுவென கன்னங்களைக்கொண்ட நெளியத்துடிக்கும் ஒரு குழந்தையைத்தான் அந்த பந்தின் துடிப்பும், கொழுகொழுப்பும் நுட்பமாக சுட்டுகிறது. அது அமர்ந்திருக்கும் பரந்த அடிப்பகுதிகள் ஒரு தாயின் அமைதியையும், கருணையையும் பிரதிபலிக்கின்றன. நம் வாழ்வின் மையப்பொருள் ஒன்றை நாம் மெலிதாகவேணும்  கைப்பற்ற முடிகிறது. தாய்மையின் அன்பைபற்றிய ஒரு உருவகக்கதையை (parable) நாம் ஒரு கல்லிலிருந்து பெறுகிறோம்.

ஸ்டோக்ஸ்-இன் வாதம் நம்மை இருவகையான கருத்துக்களுக்கு இட்டுச்செல்கிறது. ஒன்று, ஒரு பொருளை மனிதனாகவோ விலங்காகவோ அர்த்தப்படுதிக்கொள்வது நமக்கு ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. கண்களோ, காதுகளோ, கால்களோ அல்லது உயிருள்ளவற்றோடு தொடர்புடைய எந்த ஒரு அம்சமும் இல்லாதபோதிலும், கல்லின் ஒரு சிறுபகுதி, ஒரு தாயின் மடி-யையும் குழந்தையின் கன்னங்களையும் – ஓரளவுக்கு ஒத்த சாடையை கொண்டிருக்கும்போதே நாம் அவற்றின் குணாதிசயத்தை வாசிக்கத் தொடங்கிவிடுகிறோம். நம்முள் இயல்பாய் உறைந்திருக்கும் இந்த பார்வையின் காரணமாகவே, தாய்மையின் கனிவை வெளிப்படுத்தும் ஒரு படத்தைப் பார்த்தால் என்ன உணர்வெழுச்சியை அடைவோமோ அதேயளவு ஹெப்வத்-ன் சிற்பத்தாலும் அடைய முடிகிறது. ஒன்றை பிரதிபலிக்கும் ஒவியமோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அடுக்கப்பட்டுள்ள கற்களோ, அவற்றின்   தொடர்புறுத்தும் திறன் சார்ந்து நம் அகக்கண்களுக்கு எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.

இரண்டாவது, அரூப சிற்பங்களையும் அதன் தொடர்ச்சியாக மேஜைகளையும், தூண்களையும் நாம் விரும்புவதற்கான காரணங்களுக்கும் – ஒன்றை பிரதிபலிக்கும் வகையான படைப்புகளின் (representational     scenes) மீது நமக்கெழும் உணர்வெழுச்சிக்கான காரணங்களுக்கும் இடையே எந்த பெரிய வித்தியாசமும் இருப்பதில்லை. இவ்விரு வகைமைகளிலுமே, அவை விலங்கிலோ /மனிதனிலோ உறைந்திருக்கும், தனிசிறப்புமிக்க பண்பை சுட்டுவதில் வெற்றிபெறும் படைப்பையே நாம் அழகானவை என்று கொண்டாடுகிறோம்.

5.

இப்படியான பார்வையை நாம் அடைந்தவுடன், நம்மை சுற்றியுள்ள அறைகலன்களிலும்,  வீடுகளிலும்கூட உயிர்களின் வடிவத்தை காண்பதில் நமக்கு எந்த தடையும் இருக்காது. நம் தண்ணீர் குடுவைகளில் பென்குயின்கலும், கெட்டில்களில் (kettles) தடிமனான,  சுயமுக்கியத்துவம் நாடுகிற ஆளுமைகளும் தோன்றத் தொடங்கும்; மேசைகளில் வசீகரமான மானும், சாப்பாட்டு அறை மேசைகளில் எருதும் காட்சியளிக்கும்.

1. பென்குயின், 2. சுயமுனைப்பை வெளிப்படுத்தும் ஆளுமை, 3. மான் மற்றும் 4. எருது.

பெர்லினிலுள்ள ஆல்ஃப்ரெட் மெஸ்செல் (Alfred Messel) வடிவமைத்த வெர்த்தைம் டிபார்ட்மென்டல் ஸ்டோர் (Wertheim Department Store in Berlin) ன் கூரையில் அமர்ந்து ஒரு ஜோடி சந்தேகக்கண்கள் நம்மை சோர்வுற்று காணும் அதே வேளையில், தலைகீழான பூச்சிக்கால்கள் பாரிசிலுள்ள பெஹான்ஷி கோட்டையை (Castel Béranger in Paris) பாதுகாத்தபடி நிற்கின்றன. ஒரு ஆக்ரோஷமான வண்டு மலேஷியாவின் பூற்றஜையு-ன் கூடுகை மையத்தில் (Malaysia’s Putrajaya Convention Centre) பதுங்கியபடி இருக்கிறது. சேஜ் கலை மையத்தில் (Sage Arts Centre in Gateshead) முள்ளம்பன்றி இனத்திற்கு நெருக்கமானதொரு உயிரினம் இதமாக காட்சியளிக்கிறது.

Hedgehogs, beetles, eyes and legs:

Alfred Messel, Wertheim
Department Store, Berlin, 1904
Hector Guimard,
Castel Béranger, Paris, 1896
Hijjas Kasturi, Convention Centre, Putrajaya, 2003
Foster and Partners, Sage Arts Centre, Gateshead, 2005

மிகச்சாதாரணமான தட்டச்சு எழுத்துரு வடிவங்களில்கூட நாம் நன்கு பிரசித்திபெற்ற ஆளுமை வகைகளை அடையாளம் காணலாம். எந்த சிரமுமின்றி அவ்வாளுமைகளின் வாழ்க்கையையும் கனவுகளையும் பற்றி நாம் ஒரு சிறுகதையேகூட எழுதலாம். 

நேரான முதுகுத்தண்டுடன் விழிப்புடன் நிமிர்ந்து நிற்கும் ஹெல்வேடிகா(Helvetican(font name)) f நேரம் தவறாத, அப்பழுக்கற்ற, தளரா நம்பிக்கை கொண்ட கதை நாயகனுக்கான குனாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், அதன் உறவுக்காரரான பாலிஃபிலஸ் (Poliphilus) f, தொங்கிய தலையுடனும், மென்மையான அம்சங்களுடனும் தோற்றமளிக்கிறது. தூங்கிவழிவதுபோலும்,  அவமானத்தால் வெட்கி தலைகுனிந்தவாறு எதையோ யோசித்துகொண்டிருப்பது போலும்கூட காட்சியளிக்கிறது – இவரது ‘கதை’ சுபமுடிவை எட்டுவதற்கு வாய்ப்பில்லை.

ஒரு பாத்திரக் கடையில் கண்ணைப்பறிக்கும் பல்வேறு வகையான பொருட்களைக் காணலாம். அடிப்பகுதியில் மெலிதான நீட்டத்துடன் காணப்படும் கண்ணாடி டம்ளர்கள் பொதுவாக பெண்தன்மையோடு இருப்பதாக தோன்றினாலும், அவற்றை தாண்டியும் சில ஆளுமைகளையும் கொண்டிருக்கிறது – கனிவான இதயம் கொண்ட தலைமைசெவிலியையும், இளமை தெறிக்கும் அழகு தேவதையையும், புத்திகூர்மைகொண்ட திடமான பெண்களையும்கூட குறிக்கிறது. அதே நேரத்தில் ஆண்தன்மையோடு இருக்கும் டம்ளர்கள் கண்டிப்பான அரசு ஊழியர்களையும், மரம் வெட்டுபவர்களையும் நினைவுபடுத்துகிறது.

பொருட்களையும், கட்டிடங்களையும் உயிருள்ளவற்றுடன் ஒப்பிடும் மரபு ரோமன் நூலாசிரியர் விட்ருவியஸ் (Roman author ‘Vitruvius’) காலத்திலிருந்தே இருந்துவருகிறது. கட்டிடக்கலையிலுள்ள முக்கியமான மூன்று செவ்வியல் முறைமைகளை அவர் கிரேக்க தொன்மத்திலிருந்த புனித ஆளுமைகளின் மனித குணாதிசயங்களோடு முடிச்சிட்டார்.

டோரிக் வகை தூண்கள் (Doric column) எளிமையான தலைப்பகுதியையும், தடிமனான கீழ்ப்பகுதியையும் கொண்டிருப்பது, வீரசாகசங்கள் புரியும் கட்டுடல்  நாயகனான ஹேர்க்கியூலிஸ் (Hercules)-வுடன் ஒப்பிடப்படுகிறது. அயானிக் தூண்கள் (Ionic column) அதன் சுருள் வடிவ அலங்கரிப்புகளுடன், திடமும் முதிற்சியும்கொண்ட பெண்தெய்வமான ‘ஹெரா’ (Hera) –வுடன் ஒத்துப்போகிறது. இந்த மூன்றில் மிகவும் சிக்கலான வேலைப்பாடுகள் கொண்ட கொறிந்திய தூண்கள் (Corinthian column) அவற்றின் உயரமான, மெல்லிய தோற்றத்துடன் அழகிய இளமங்கையான அப்ருடைடி (Aphrodite) இறைவியை பிரதிபலிக்கிறது

Doric
Ionic
Corinthian

விட்ருவியஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாம் ஒரு செயலை முன்னெடுக்கலாம். பொதுவாக நாம் கார் பயணங்கள் செல்லும்போது எதிர்படும் மேம்பால தூண்களுக்கு இணையான உயிர்வடிவத்தை கற்பனை செய்யலாம். உதாரணமாக, ஒரு மேம்பாலத்தை சாவகாசமாக அமர்ந்தபடி மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஒரு பெண் அதன் தூண்களை தாங்கி நிற்கலாம். மற்றொரு பாலத்திலோ ஒழுக்கம் தவறாத கணவானான ஒரு கணக்கர் தென்படலாம். ஒரு ஒயின் கிளாஸின் விளிம்பு தடிமனில் சில கோணம் மாறினால் அது அடக்கத்திலிருந்து ஆணவத்திற்கு மாறிவிடக்கூடும். ஆக, நாம் பொருட்களின் குணாதிசயங்களை மதிப்பிட அவற்றின் மிக நுண்ணிய அம்சங்களே போதுமானதாக இருக்கிறது. இதற்கு காரணம் முன்பிலிருந்தே இத்திறன் மனிதர்களை அளவிடுவதில் நமக்கு பழகிப்போனதால்தான்.

மிக நுன்னிய தசை சுருக்கங்களையும், சதைப்பற்றையும் வைத்தே ஒருவரது சுபாவத்தை நாம் இயல்பாகவே கணிக்கத்தொடங்கிவிடுவோம். கண் விழிகள் அசையும் விதமேகூட, அது மன்னிப்பை கோருகிறதா அல்லது தான் செய்ததுதான் சரி என்று சுய அகங்காரத்தை வெளிப்படுதுகிறதா என்பதை காட்டிகொடுத்துவிடும். யோசித்துப்பார்த்தால் மிக மெல்லிய சிறு அசைவுதான் அந்த வித்தியாசத்தை உணரச்செய்கிறது என்பது ஆச்சர்யம்தான்.  புருவத்தின் வடிவில் தென்படும் ஒரு நாணய அளவு அகலமே ஒருவர் கவனக்குவிப்போடு இருப்பதையும், அக்கறையோடு கேட்பதையும் வித்தியாசப்படுத்தி காட்டிவிடுகிறது.

கனிவோடு இரக்கம் காண்பிப்பதையோ அல்லது சிடுசிடுப்பு தெறிப்பதையோ வாயின் தோற்றமே சுட்டிவிடுகிறது. இவ்வாறு நுண்ணிய மாறுபாடுகளில் எழும் பொருளை  தொகுப்பதையே தன் வாழ்நாள் வேலையாக செய்தவர் ஸ்விஸ் நாட்டைச்சேர்ந்த சூடோசைன்டிஸ்ட் யோஹான் கேஸ்பார் லாவடோ (Swiss pseudoscientist Johann Kaspar Lavater). நான்கு தொகுதிகளைக்கொண்ட அவரது “முகத்தோற்ற வாசிப்பு பற்றிய கட்டுரைகள்” (Essays on Physiognomy (1783)) -இல் அவர் முக அம்சங்களின் வடிவத்தை வைத்து அதற்குஒத்த சாத்தியமுள்ள குணாதிசயங்களை ஆராய்ந்தார்.  கண்ணங்கள், கண் அமைப்பு (eye sockets), நெற்றி, வாய், மூக்கு என்று தனித்தனியே வரி வரைபடங்களையும், அவற்றிற்கான நிகர் பண்பையும் வழங்கியிருந்தார்.

இப்படி மனித,விலங்கு தோற்றங்களிலிருந்து நாம் சேமித்து வைத்திருக்கூடிய தகவல்கள்தான் பல்வேறு கட்டிடக்கலை வகைமைகள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் தீவிரத்தை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. இரக்கத்தை வெளிப்படுத்தும் வாய் அமைப்பையும், ஈடுபாடற்ற ஒன்றையும் ஒரு மில்லிமீட்டர் வித்தியாசம்தான் வேறுபடுத்துகிறது எனும்போது வெவ்வேறு வடிவங்களாலான ஜன்னல்களும், கூரை அமைப்புகளும் நிச்சயம் பல்வேறு தனிச்சிறப்புகளை கொண்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

மனிதர்களின் முகத்தை வைத்து நாம் எப்படி மதிப்பிடுகிறோமோ அதேவகையில் நம்முடன் வாழும் பொருட்களையும் வேறுபடுத்தி அறிவது இயல்புதான். ஒரு கட்டிடம் நம்மை ஈர்க்கவில்லை என்று உணர்வது கிட்டத்தட்ட ஒரு உயிரனத்தின், மனிதரின் நடத்தை நமக்கு பிடிக்கவில்லை என்று எண்ணுவதை ஒத்த உணர்வுதான். சொல்லப்போனால் இந்த அடையாளம் காணல் அந்த கட்டிடத்தின் வெளித்தோற்றத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சொற்ப தகவல்களைவைத்தே நடந்தேறிவிடுகிறது. அதேபோல் இன்னோரு மாளிகை நமக்கு பிடித்துப்போவது அதில் உறைந்திருக்கும் நற்பண்பை நம்மால் உணரமுடிவதால்தான்; உயிருள்ளவற்றுள் நாம் நட்பு பாராட்ட விரும்பும்  பண்பின் பிரதிபலிப்பை காண்பதால்தான்.

பார்க்கப்போனால் நாம் ஒரு கட்டிடக் கலைசார் படைப்பில் எதைத்தேடுகிறோம் என்பது நாம் ஒரு நண்பரிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அழகாக இருப்பதாக நாம் வர்ணிக்கும் பொருட்கள் யாவும் நாம் விரும்பும் மனிதர்களின் பிரதிபலிப்புதான்.

*

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

1 Comment

  1. இந்தக் கட்டுரை ஒரு காலகட்டத்தினுடைய வரலாற்றையும் தத்துவத்தையும் அடிப்படையாக கொண்டு கலை படைப்பை அணுகும் பார்வையை முன்வைக்கவில்லை. நவீன கலை பொருட்கள் பற்றி பேசும்போது கூட, நவீன கலை நம்மை எப்படி ஒரு புதிய பார்வைக் கோணத்தை அடையத் தூண்டுகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஒரு கவிதையை ஒரு நல்ல வாசகர் பிறருக்கு திறந்துவிடும் பணியையே இந்த கட்டுரை செய்கிறதாக தோன்றுகிறது. உண்மையில் இக்கட்டுரை ஒரு கவிதையை சரியாக வாசிக்க தூண்டுகிறது. படிமங்கள், உருவகங்கள் போன்றவற்றிலிருந்து தன்னை விடுவித்து கொண்ட ஒரு கவிதையில் வரும் கோப்பை ஆண் தன்மையுடையதாகவும் பெண்தன்மை கொண்டதாகவும் இனி வாசிக்கும்போது பொருள்பட வாய்ப்புண்டு. தூண்களை பற்றி சொல்லும்போது மனம் சரியாக அதை கண்டுணர்ந்து கொள்கிறது.

    படங்களுடன் வெளியிட்ட அகழ் குழுவினருக்கு நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.