ஐக்மென்னும் நெதன்யாகுவும் : சர்வோத்தமன் சடகோபன்

சிந்தனையாளரும் தத்துவ அறிஞருமான ஹன்னா அரெண்ட் ஜெருசலத்தில் ஐக்மென் (Eichmann in Jerusalem) என்ற புத்தகத்தை 1963யில் எழுதினார்.அந்தப் புத்தகத்தின் உப தலைப்பு – தீமையின்  எளிமை பற்றிய அறிக்கை.(The Report on the Banality of Evil). ஐக்மென் ஹிட்லரின் நாஜி ஆட்சியில் லெப்டினன்ட் கர்னலாக பணிபுரிந்தார். போரின் தோல்விக்கு பிறகு அவர் அர்ஜென்டினா தப்பிச் சென்றார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு 1960யில் அவரை இஸ்ரேலின் மொஸாட் உளவுத்துறையினர் அர்ஜென்டினாவிலிருந்து இஸ்ரேலுக்கு கடத்தி வந்தனர். யூதர்களுக்கு எதிரான செயல்களில் பங்கெடுத்த குற்றத்திற்காக அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கமாக இருந்தது.

நியூரெம்பர்க் விசாராணைகள் போல இதுவும் உலக அளவில் பெரும் கவனத்தை கோரிய வழக்காக இருந்தது. அமெரிக்காவிலிருந்த ‘ஹன்னா அரெண்ட்’ இந்த வழக்கின் பொருட்டு இஸ்ரேலுக்குச் சென்று அங்கு நீதிமன்றத்தின் நிகழ்வுகளை கவனித்து , அவர்களுக்கு (பத்திரிக்கையாளர்களுக்கு) வழங்கப்பட்ட ஆவணங்களையும் படித்து அந்த விசாரணை பற்றிய தன் பார்வையை ஒரு புத்தகமாக வெளியிட்டார். அவர் முதலில் நியூயார்க்கர் இதழுக்காக எழுதியவற்றை பின்னர் விரித்து நூலாக பிரசுரித்தார்.

இந்தப் புத்தகம் உண்மையில் அத்தனை எளிதானதல்ல. இது ஒற்றைப்படையாக எதையும் பேசவில்லை. பல கோணங்களிலிருந்து அவர் தன் தரப்பை முன்வைக்கிறார். இந்தப் புத்தகத்தின் உப தலைப்பு தான் அவரின் பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது. ஐக்மென் யார், அவரின் பின்னணி என்ன, என்ன படித்தார், நாஜியின் எஸ்எஸ் அமைப்பில் சேருவதற்கு முன் எங்கு வேலை செய்தார், அவர் ஏன் ஹிட்லரின் ஆட்சியில் நிகழ்ந்த குற்றங்களில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பங்குப் பெற்றார் என்பதைத் தான் ஹன்னா முதன்மையாக கேள்வி கேட்கிறார்.

ஐக்மென் எளிமையான மனிதர். அவருக்கு மனநிலை பாதிப்போ , யூதர்கள் மீதான வெறுப்போ இல்லை. ஆனால் அறுபது லட்சம் யூதர்களின் படுகொலையில் அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு இருந்தது. அவர் தன் வாழ்நாளில் யாரையும் தன் கையால் கொலை செய்யவில்லை. அவரின் மேலதிகாரிகளால் கொடுக்கப்பட்ட ஆணைகளின் படி அவர் பணியாற்றினார். ஆணைகளை திறம்பட நிறைவேற்ற முயன்றார். அவர் செய்த செயல்கள் எவையும் அன்றைய ஜெர்மன் அரசின் சட்டத்தின் படி குற்றங்கள் அல்ல. அவர் தன் வேலைக்கு நேர்மையாக இருந்தார். முழுமையாக கீழ்படிந்தார்.

ஐக்மென் இந்த நடவடிக்கைகளில் எப்படி எந்த நிலைகுலைவும் இல்லாமல் பங்குப் பெற்றார் என்பதற்கான பதிலை ஹன்னா கண்டடைய முயல்கிறார். அது தான் தீமையின் எளிமை அல்லது நாள்தோறும் தீமை என்ற இடத்திற்கு அவரைக் கொண்டுச் செல்கிறது. தீமையின் எடையற்றதன்மை. தீமையின் சாத்தியம். தீய செயலை செய்வதற்கு அரக்கர்கள் தேவையில்லை. எளிய மனிதனால் அதைச் செய்ய முடியும். தீமை காமம் போல அத்தனை அருகில் வாரிச்சுருட்டிக் கொள்ளும் இடத்தில் தான் இருக்கிறது. அறுபது லட்சம் மக்களை கொன்ற அந்தச் செயல் எந்தக் குற்றவுணர்வையும் அறச்சிக்கலையும் ஐக்மென்னுக்கு ஏற்படுத்தவில்லை. அந்தப் பாவச் செயல்கள் உணவு அருந்துவது போல உடை உடுத்துவது போல உறவாடுவது போல ஓர் அனல் மின் நிலையத்திற்கு பணிக்குச் செல்வது போல நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஐக்மென் அதிகம் படிக்காதவர்.தொழில்நுட்ப அறிவும் பெரிதாக இல்லை. ஆனால், அவர் பிற்காலத்தில் தனக்கு நல்ல ஒருங்கிணைப்பு திறன் இருக்கிறது என்பதை எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தப் பின்னர் அறிந்து கொள்கிறார். மேலும் அவர் யூதர்கள் குறித்த புரிதலை அளிக்கக்கூடிய சில புத்தகங்களையும் அப்போது படிக்கிறார். அவருக்கு முதலில் யூதர்களை நாடு கடத்த வேண்டிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. அது வெளியேற்றம் (evacuvation) என்று சொல்லப்பட்டது. அவர்கள் அப்போதைய ஆங்கிலேயர்களின் பாலஸ்தீனத்திற்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் தப்பிச் சென்றனர். ஒரு கட்டத்தில் அப்படி வெளியேற்றுவது சாத்தியமானதாக இல்லை. பிற நாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இனி வெளியேற்றத்திற்கு வழியில்லை என்றான போது யூதர்களை கொலை செய்யலாம் என்ற முடிவை எடுக்கிறது ஜெர்மனிய அரசு. அதுவே இறதித் தீர்வு (Final Solution). கொலை செய்வதற்கு அவர்களை முகாம்களுக்கு அனுப்ப வேண்டும். அத்தகைய வதை முகாம்களுக்கு அனுப்பும் பணி ஐக்மென்னுக்கு தரப்படுகிறது. ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் இந்தப் பணியின் பொருட்டு அவர் செல்கிறார். அவர் இவற்றை செவ்வனே செய்கிறார். அவர் தன் அளவில் சில முறை தன்னிச்சையான சில முடிவுகளையும் எடுத்திருக்கிறார். ஆனால், பெரும்பாலும் அவர் தன் உயர் அதிகாரிகள் என்ன சொன்னார்களோ அதை நிறைவேற்றினார்.அவருக்கு பதவி உயர்வுகள் கிடைத்தன. இறுதியில் லெப்டினனட் கர்னலாக இருந்தார்.

விசாரணையின் போது ஐக்மென் பேசியதை பற்றி ஹன்னா தொடர்ந்து குறிப்பிடுகிறார். அதாவது அந்த வரிகள் அந்தச் சொற்கள் எதிலும் உள்ளீடு இல்லை என்பது தான் அவரின் முக்கியமான அவதானிப்பு.அவர் பொய் சொல்லவில்லை. வார்த்தை ஜாலங்களில் ஈடுபடவில்லை. ஆனால், அவர் பேசுவதில் ஒரு நாடகீயம் வந்துவிடுகிறது. அவர் இறக்கும் போது கூட மக்கள் முன் வீரவசனம் பேசி மரணிக்கும் தியாகி போலவே நடந்து கொள்கிறார்.

அந்தத் திரை அது தான் தீமையின் எளிமை.சினிமாவில் இருப்புக் காட்சிகள் (Stock Shots) என்று சொல்வார்கள்.அது போல ஐக்மென் வெளிப்படுத்தியது கையிருப்புச் சொற்றொடர்கள் , பாவனைகள் என்கிறார் ஹன்னா. அவர் விசாரணையில் நான் இப்போதே கல்லறைக்குச் செல்கிறேன் என்கிறார். செய்த செயல்களுக்காக பொதுவில் தூக்கிக்கிட்டு இறப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்கிறார். அவர் தொடர்ந்து ஒரு நாடகத்தின் பகுதியாக அதில் உள்ள கதாபாத்திரமாக நடந்து கொள்கிறார். ஆம், நான் பிழைகள் செய்தேன், தெரிந்தே செய்தேன், அவை எனக்கு அளிக்கப்பட்ட கட்டளைகள், என் பணியின் பொருட்டு அவற்றை நிறைவேற்றினேன். எனக்கு வேறு வழி இருக்கவில்லை. எனக்கு குற்றவுணர்வு இருக்கிறது என்று அவர் இயல்பாக பேசவில்லை. அவர் தன்னை கையறு நிலையிலிருந்த ஒரு நிரபராதியாக முன்வைக்க விரும்பினார். தன் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதைத் தான் செய்திருப்பார்கள் என்கிறார். அவர் பிறரின் நிலையிலிருந்து சிந்திக்கக் கூடியவராகவோ தன் சிந்தனைகளை கோர்த்து பேசக் கூடியவராகவோ இல்லை என்கிறார் ஹன்னா.

ஒருவர் தன் குழந்தைக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது என்று சொல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் கூறுபவர் “ஐயோ கடவுளே” என்று உரைக்கிறார் என்று கொள்வோம். இதில் அவர் சொல்லும் ஐயோ கடவுளே என்றச் சொற்கள் உண்மையில் உள்ளார்ந்து புரிந்துணர்வுடன் சொல்லப்பட்டதா என்பதை அவர் சொல்லும் தொனி, உடல்மொழி கொண்டு அறியலாம். அதை அந்த நேரத்திற்கான ஒரு கையிருப்பு பாவனையாகயும் பயன்படுத்தியிருக்கலாம். நாம் அனைவரும் பல நேரங்களில் பொது இடங்களில் ஒரு விஷயத்திற்கு எப்படி வினைப்புரிவது என்று புரியாத போது பொதுவாக எந்தக் குந்தகத்தையும் விளைவிக்காத “ஓ அப்படியா” என்கிற வகையிலான வெளிப்பாட்டைக் கொண்டு தான் அந்தத் தருணத்தை கடக்கிறோம்.அதைத் தான் ஐக்மென்னும் செய்கிறார்.

அவர் எதுனுள்ளும் இல்லை.இன்று இந்த இடத்திலிருந்து பத்தாயிரம் யூதர்களை வதைமுகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு எத்தனை மணிக்கு ரெயில் வர வேண்டும் , புதிதாக வருபவர்களுக்கு வதைமுகாமில் இடம் இருக்கிறதா , ஏற்கனவே இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அந்த இடம் காலியாகிவிட்டதா, பிற துறைகளில் இருப்பவர்களிடம் அனுமதி பெறப்பட்டதா என்ற எண்ணவோட்டம் தான் அவரிடம் இருந்தது.இவைகளைத்தான் பிசிறுகள் அற்று ஐக்மென் செய்தார். அவர் அந்தப் பத்தாயிரம் என்பது தன்னைப் போன்ற மனித உயிர்கள் என்ற ஓர்மையை ஒரு போதும் அடையவில்லை. அது அவரை அசைக்கவே இல்லை.

இது தான் இந்த நூலில் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லப்படும் பார்வை.முற்றிலும் புறவயமாக ஒரு கோழிக்கடையில் மாமிசங்களை வெட்டி எடை போட்டு விற்கும் ஒரு மனநிலையில் தான் ஐக்மென் தன் வேலையைச் செய்தார். இந்த மனநிலையை எப்படி புரிந்து கொள்வது , இது மிகவும் எளிமையானதாக இருக்கிறது, இந்த எளிமைதான் அபாயகரமானதாக இருக்கிறது என்கிறார் ஹன்னா.

ஐக்மென்னிடம் பிரித்தெடுக்கும் தன்மை இயல்பாக இருந்திருக்கிறது.அதாவது அவர் தனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றிய போதும் காவலர்களிடம் அர்ஜென்டினாவில் அளித்த வாக்குமூலத்தின் போதும் பின்னர் நீதிமன்றத்தின் விசாரணையின் போதும் தன் தனித்த இருப்பிலிருந்து மற்றவற்றை பிரித்தெடுத்து தனியாக வைத்திருந்தார். அவர் பல முக்கியமான சந்திப்புகளை மறந்துவிடுகிறார்.அவர்கள் மிக முக்கியமான மனிதர்களாக இருந்திருக்கலாம் , வரலாற்று முக்கியத்துவம் நிரம்பிய தருணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவரால் அதை நினைவு கூர முடியாமல் நீதிமன்றத்தில் தடுமாறுகிறார்.

அதே நேரத்தில் தன் பதவி உயர்வு அல்லது பணியின் போது தனக்கு முன்னேற்றத்தை கெளரவத்தை அளித்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருந்ததை ஹன்னா குறிப்பிடுகிறார்.அவருக்கு தன்னைத் தாண்டிய எதன் மேலும் ஒரு திரை இருந்திருக்கிறது. எவை எல்லாம் தனக்கானவையோ அதில் பதற்றமும் நினைவும் இருக்கிறது.எவை எல்லாம் புறத்தில் இருப்பவையோ அவற்றில் மறதியும் நாடகீயமும் வந்துவிடுகிறது.

மற்றபடி ஐக்மென் தனிப்பட்ட வாழ்வில் யாரையும் அடித்தது கூட இல்லை.ஒரு முறை யூதர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததற்கு மன்னிப்பு கேட்கிறார். அதே நேரத்தில் ஐக்மென் ஒரு பெரிய இயந்திரத்தின் ஒரு பகுதி தான்.அவருக்கு அந்தப் பணியில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லை தான்.அவர் பெரிதாக எதையும் தன்னிச்சையாக செய்யவில்லை என்பதும் உண்மையே.

அப்படியென்றால் அவரை எப்படித் தண்டிப்பது.இதற்கான சில விடைகள் அதற்கு முன்னரே நியூரெம்பர்க் விசாரணையில் பேசப்பட்டன. பொதுவாக கிரிமினல் வழக்குகளில் பின்னுயிர்ப்பு (Retroactive) முறை பின்பற்றப்படுவதில்லை. இந்தியாவில் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தான் பாரதிய நியாய சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஜூன் மாதம் முப்பதாம் தேதி அன்று நடந்த கொலையை ஐபிசி 302ம் பிரிவில் தான் பதிவு செய்ய முடியும். பாரதிய நியாய சட்டத்தில் பதிவு செய்ய முடியாது.அது தான் பின்னுயிர்ப்பின் சாத்தியமின்மை.

ஆனால் ஜெர்மனியில் இருந்த ஹிட்லரின் அரசு யூதர்களுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறைகள் பற்றிய நியூரெம்பர்க் விசாரணைகள் பின்னுயிர்ப்பு அடிப்படையிலேயே அளிக்கப்பட்டன.அவை பெருங் குற்றங்களாக கருதப்பட்டு அமைதிக்கு எதிரான குற்றங்கள் (Crime against peace) , மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against humanity) , இனப்படுகொலை (Genocide)  என்று வகைப்படுத்தப்பட்டு அதன் பெயரிலேயே தண்டனைகள் வழங்கப்பட்டன. ஏனேனில் அப்போது (அந்தச் செயல்களை செய்த போது) இருந்த ஜெர்மனியின் சட்டங்கள் படி அவர்கள் செய்தவை குற்றங்கள் அல்ல.

இஸ்ரேல் மாவட்ட நீதிமன்றம் நியூரெம்பர்க் கொடுத்த தீர்ப்பை போலவே பின்னுயிர்ப்பு சாத்தியத்தைக் கொண்டு பெரும் குற்றங்களின் அடிப்படையிலேயே தன் தீர்ப்பை வழங்கியது. அவற்றில் முதன்மையாக சொல்லப்பட்டவை யூதர்களுக்கு எதிரான குற்றங்கள்.ஐக்மென்னுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் வழக்கின் மேல் முறையீட்டிலும் அதே தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஹன்னா இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்திருக்கலாம் என்று புத்தகத்தின் முடிவுரையில் சொல்கிறார். ஐக்மென் தான் ஒரு இயந்திரத்தின் பகுதிதான் என்கிறார்.அப்படியே இருக்கட்டும். தன்னிடத்தில் வேறு யாராவது இருந்திருந்தாலும் அதையே தான் செய்திருப்பார்கள் என்றும் சொல்கிறார்.அதுவும் சரிதான்.அப்படி என்றால் அவர் அனைத்து ஜெர்மனியர்களையும் குற்றவாளிகள் என்றுச் சொல்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார் ஹன்னா.

மேலும் யாராக இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார்கள் என்பது சாத்தியமானதாக இருக்கலாம்.ஐக்மென் யூதர்களுக்கு எதிரான இறுதித் தீர்வில் பாத்திரம் வகித்தது துர்விதியாக இருக்கலாம். வேறு யாரும் இதையே செய்திருப்பார்கள் என்று சொல்வது அனைவரும் குற்றவாளிகள் என்கிற பொருளை உருவாக்குகிறது அல்லது எவருமே குற்றமற்றவர்கள் என்கிற அர்த்தத்தை தருகிறது. சட்டத்தின் முன் குற்றவுணர்வும் அறியாமையும் புறவயமாகத்தான் பார்க்கப்படுகின்றன. எட்டு கோடி ஜெர்மனி மக்களும் இந்தக் குற்றத்தை செய்தார்கள் என்று சொன்னாலும் அதைக் காரணமாக கொண்டு உங்களை விடுவிக்க முடியாது.

நிகழ்த்தப்பட்ட ஒரு செயலுக்கும் நிகழ சாத்தியமான ஒரு வினைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.நீங்கள் என்ன செய்திருக்கிறீர்களோ அதற்குத் தான் இங்கு வழக்கு நடந்த கொண்டிருக்கிறது.உங்கள் அக உலகம் , தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் பிறழ்வற்றவர் என்பது உண்மையாகவே இருக்கட்டும், உங்களுக்குச் சில நல் வாய்ப்புகளும் சூழல்களும் அமைந்திருந்தால் நீங்கள் எங்கள் முன் இப்படிக் குற்றவாளியாக நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்பதும் மெய்யாகவே இருக்கலாம். ஒரு பேச்சுக்காக நீங்கள் இங்கு இருப்பதற்குக் காரணம் தீயூழ் என்றே கொண்டாலும் அந்தச் செயல்களை நீங்கள் தான் செய்தீர்கள் என்பதை மறுக்க முடியாது. பெரிய எண்ணிக்கையிலான கொலைகளில் பங்கு எடுத்திருக்கிறீர்கள். அரசியல் (அரசியல் அதிகாரம்) என்பது பாலர் பள்ளி அல்ல.அரசியலில் கீழ்படிதல் என்பது ஆதரவு அளிப்பதாகத்தான் பொருள் கொள்ளப்படும்.இனப் படுகொலைக்கு ஆதரவு அளித்தது குற்றம். ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் இந்தப் புவியில் இருக்கவே கூடாது என்கிற எண்ணத்தோடு செயல்பட்ட ஓர் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் உங்களைத் தூக்கில் ஈடுகிறோம் என்றத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும் என்கிறார்.

ஹன்னா அரெண்ட் பிற அனைத்து தத்துவ சட்ட கேள்விகளிலுமிருந்து ஐக்மென் செய்தவற்றை பிரித்து ஒரு தனிமனிதனாக அவர் செய்தவை பிழைதான் என்று சொல்லி அதற்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்கிறார்.

ஹன்னா ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டுகிறார்.ஜெர்மன் ராணுவத்தின் மருத்துவராக இருந்த பீட்டர் பாம் (Peter Bamm) நடமாடும் வாயு வண்டிகளில் யூதர்கள் ஏற்றப்பட்டதையும் சிறிது நேரத்தில் கொலை செய்யப்பட்டதையும் பின்னர் புறநகரில் சகதித்தொட்டியில் கொட்டப்பட்டதையும் நாங்கள் அறிந்தே இருந்தோம் என்று தன்னுடைய நினைவுக்குறிப்புகளில் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அதற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை.அப்படி எதாவது செய்திருந்தால் அவர்கள் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் எங்களை கைது செய்திருப்பார்கள்.பின்னர் நாங்கள் காணாமல் போயிருப்போம்.இந்தக் கொடுங்கோல் அரசு செய்வதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்பதற்கு பதிலாக கிளர்ச்சி செய்து இறந்து போவது மேலானது தான்.அது விழுமியங்களின் படி அர்த்தமுள்ள உயர்ந்த செயல் தான். ஆனால், நடைமுறையில் அதனால் எந்தப் பயனும் இல்லை.நீதிநெறியின் படி உயர்ந்திருந்தாலும் யதார்த்தத்தில் எந்த விளைவையும் தராத மரணத்தை ஏற்க நாங்கள் தயாராக இல்லை.அதற்கான மன உறுதியை நாங்கள் கொண்டிருக்கவில்லை.அதனால் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்.

இந்தக் கூற்றை ஹன்னா முழுமையாகவே மறுக்கிறார்.இத்தகைய பேரரசுகள் கிளர்ச்சியாளர்களை காணாமல் செய்துவிடும் என்பது உண்மைதான்.சர்வாதிகார அரசுகள் அனைத்தையும் மறதிக்குள் எடுத்துச் செல்ல முயன்று கொண்டே இருக்கும்.அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்கள் , புரட்சியாளர்கள் இன்மைக்கு போவது மறதிக்குகள் செல்வது ஆகாது.அப்படி ஓர் அரசு செய்ய முனைவது தோல்வியில் தான் முடியும்.மனிதன் உருவாக்கும் எதுவும் முழுமையானது அல்ல. இத்தகைய கொடுங்கோன்மை நிரம்பிய அரசுகள் எத்தனை மனிதர்களை பாழ்வெளியில் தள்ளுவார்கள். எத்தனை மனிதர்களை வெளியேற்றினாலும் இவை எல்லாம் முடிந்தப் பின்னர் நடந்தவற்றை கதையாகச் சொல்வதற்கு ஒரு மனிதன் இருப்பான்.அதனால் இத்தகைய செயல்பாடுகள் நடைமுறையில் பயன் அற்றவை என்று சொல்வது அபத்தமானது.ஒரு வேளை மூன்றாம் பேரரசுக்கு எதிராக பலர் எதிர்குரலை எழுப்பியிருந்தால் ஜெர்மனி இன்று உலக அரங்கில் உள் உடைந்து கெளரவமற்று நிற்க வேண்டிய தேவையிருந்திருக்காது என்கிறார்.

ஹன்னா நமது செயல்கள் முக்கியமானவை என்கிறார்.வெறுமன அருவமாக பேசுவது , அனைத்தையும் பொதுமைப்படுத்துவது ,கூட்டுப் பாவம், அனைத்தையும் உளவியல் கொண்டு விளக்க முயல்வது என்பனவற்றை புறம் தள்ளுகிறார்.இவ்வாறான விளக்கங்கள் கொண்டு நாம் எந்தக் குற்றத்தையும் விளக்கிவிட முடியும்.எதையும் ஒரு நெகிழ்ச்சியான நிலைக்கு எடுத்துச் சொல்ல முடியும். ஒருவனின் பால்ய காலத்தில் நிகழ்ந்த பிறழ்வால்தான் இன்று பல படுகொலைகளைச் செய்கிறான் என்று பிராய்டிய விளக்கம் அளிக்க முடியும்.இன்று உலகமயமாக்கலில் மனிதன் தன் சுயத்தை இழந்து வருகிறான் என்று சூழல் சார்ந்த விளக்கங்களை பிராங்க்பர்ட் பள்ளியின் ஆய்வுகள் கொண்டு தர இயலும்.ஆனால் இவை எதுவும் ஒரு செயலை அர்த்தப் படுத்தாது.அந்தச் செயலை அந்தச் செயலாகவே பார்க்க வேண்டும் என்கிறார்.நரியை நரியாகவே பார்க்கலாம். அதைத் தந்திரத்தோடு இணைக்க வேண்டியதில்லை.

அவர் ஐக்மென் பற்றிச் சொல்லும் போது அவரது வாக்கியங்களில் உள்ள நெகிழ்வை பற்றி அடிக்கடி பேசுகிறார். இதை நாம் உயர்வு நவிற்சி, மிகை உணர்ச்சிகள் என்று பொருள் கொள்ளலாம்.இவை எவ்வித உள்ளார்ந்த பொருளும் இல்லாமல் எடுத்தாளப்படலாம். சொல்பவர்கள் அதை உண்மையாகவே நம்பிக் கொண்டிருக்கலாம்.அல்லது அப்படி பேசிப் பேசியே அவர்கள் அதற்கு பழகியிருக்கலாம். உதாரணத்திற்கு இன்று ஒருவர் ஏதோ ஒரு தொலைக்காட்சி மேடையில் தோன்றுகிறார் என்று கொள்வோம். அவருக்கு வயது அறுபது அறுபத்தியைந்து என்று இருக்கட்டும்.அவரது மகன் நன்கு படித்து இந்திய ஆட்சிப் பணியில் தேர்வாகியிருக்கிறார்.மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்ததற்காக அவரது குடும்பத்தை சிறப்பிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழா.

குடும்பத்தலைவர் பேசுகிறார்.நான் மிகவும் கோபக்காரன். நான் என் மனைவியை நிறைய அடித்திருக்கிறேன். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்திருக்கிறேன்.சாலையில் விழுந்து இரவு முழுதும் அப்படியே கிடந்திருக்கிறேன். பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்ற அக்கறையே இல்லாமல் இருந்திருக்கிறேன். என் தொழில் முடங்கியப் பின்னர் நான் மீளவே இல்லை. என் மனைவி ஏதேதோ சின்னச்சின்ன வேலைகள் செய்து என் மக்களைப் படிக்க வைத்தார். என்னால் யாருக்கும் எந்தத் பயனும் இல்லை.நான் எதற்கும் லாய்க்கு இல்லாதாவன். நான் என் குழந்தைகளுக்கும் இல்லாளுக்கும் பெரிய இடராக இருந்திருக்கிறேன்.இன்று என் மகனும் மகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதற்கு என் வீட்டம்மாதான் காரணம். அவர் என் குழந்தைகளுக்கு மட்டும் தாய் அல்ல எனக்கும் அன்னை தான்.அவர் தான் எங்கள் குடும்பத்தை காத்த குலதெய்வம் என்று சொல்கிறார்.

உண்மையில் இந்தப் பேச்சின் சாராம்சம் என்ன.அங்கு எல்லோரும் சிறிது நேரம் கண்ணீர் விட்டு நிற்கப் போகிறார்கள்.கட்டியணைத்துக் கொள்வார்கள். அதன் பின் வீட்டுக்குச் செல்வார்கள். அவர் மறுபடியும் அடுத்த நாள் குடித்துவிட்டு விழுந்து கிடப்பார்.இத்தகைய உள்ளீடு அற்ற நெகிழ்ச்சியை முதன்மைப்படுத்தும் சொல் அலங்காரங்கள் அருவெருக்கத் தக்கவை.அதைத் தான் ஐக்மென் தன் வாழ்நாள் முழுவதும் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். நாம் எல்லோரும் இதை பல நேரங்களில் நம் நெருங்கிய உறவுகளிடமும் கிடைத்தால் மேடைகளிலும் நிகழ்த்துகிறோம். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திரைப்படத் துறையினரும் இதை ஒரு கலையாக கற்றுத் தேர்கின்றனர்.

ஐக்மென் தூக்கிலிடப்படுவதற்கு முன் கனவான்களே , நாம் சிறிது காலம் கழித்து மறுபடியும் சந்திப்போம். அனைவரின் விதியும் அதுவே. ஜெர்மனி, அர்ஜென்டினா, ஆஸ்த்ரியா நெடு நாள் வாழ்க. நான் இந்த நாடுகளை மறக்க மாட்டேன் என்கிறார். மரணத் தருவாயில் கூட அவர் மிகை உணர்ச்சிகளும் அணிகளும் கொண்ட வாக்கியங்களை பேசிக்கொண்டிருக்கிறார். இந்தப் பாவனைகள் பொருள் அற்றவை.

இன்று நாம் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் போரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அன்று யூதர்களின் இருந்த இடத்தில் இன்று காஸா மக்கள் இருக்கிறார்கள். ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனிய அரசு இருந்த இடத்தில் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு இருக்கிறது.யூதர்களை ஜெர்மனியிலிருந்து வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் மூன்றாம் பேரரசின் (Third Reich) முதல் நோக்கமாக இருந்தது. ஐக்மென் போலந்து நாட்டின் ஒரு பகுதியை இதற்காகத் திட்டமிட்டார்.ஆனால் அதற்கு போலந்து நாட்டின் ஆட்சியாளராக இருந்த ஹான்ஸ் ப்ராங்க் தடை விதித்தார்.

பின்னர் யூதர்களை மடகாஸ்கருக்கு அனுப்பலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டது.அது சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கு விரைவிலேயே புரிந்தது. அவர்கள் பாலஸ்தீனத்திற்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றார்கள். ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த வெளியேற்றம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. அவர்களை எங்கே அனுப்புவுது என்ற கேள்வி எழுகிறது. ஏனேனில் பிற நாடுகள் அவர்களை ஏற்கத் தயாராக இல்லை. அப்படியென்றால் அவர்களை கொலை செய்யலாம் என்ற முடிவை நாஜி ஜெர்மனி அரசு எடுக்கிறது. அது தான் இறுதித் தீர்வு(Final Solution) என்று சொல்லப்பட்டது.

இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன மக்களை காஸாவிலிருந்தும் மேற்கு கரையிலிருந்தும் வெளியேற்றி எகிப்தில் தங்கள் செலவில் வீடுகளை கட்டிக்கொடுத்து குடி அமர்த்தப் பார்க்கிறது.எப்படி மூன்றாம் பேரரசு யூதர்கள் அற்ற ஐரோப்பா என்ற திட்டத்தை (Judenrein) அமுல் படுத்தப் முனைந்ததோ அதே போல இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன மக்கள் அற்ற ஒரு இஸ்ரேலிய பிரதேசத்தை விரும்புகிறது. அந்த முழுப் பகுதியையும் அவர்களுடையதாக மாற்ற முனைகிறது.அதற்கு ஒரு வழி வெளியேற்றம் மற்றது மானுடத்திற்கு எதிரான படுகொலைகள். ஹமாஸ் அக்டோபர் ஏழாம் தேதி நிகழ்த்திய தாக்குதல் இஸ்ரேல் நிகழ்த்த விரும்பிய செயல்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. இன்று அவர்கள் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றிருக்கிறார்கள். வீடுகள் , மருத்துவமனைகள் , பள்ளிகள் , மசூதிகள் என்று அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சிதைக்கப்பட்டிருக்கின்றன.மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவை முதலுதவியை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்.கொலை செய்யப்பட்டவர்களில் ஏழுபது சதவிகதத்தினருக்கும் அதிகமானவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்கிறது புள்ளிவிபரம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவிற்கும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவவ் காலண்ட்டுக்கும் எதிராக பிடியாணைகளைப் பிறப்பித்திருக்கிறது. ரோம் சட்டத்தில் கையெழுத்திட்ட நூற்றி இருபத்தி நான்கு நாடுகளில் நெதன்யாகு எங்குச் சென்றாலும் அவர் கைது செய்யப்படலாம்.ஒவ்வொரு முறை அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போதும் மிகை உணர்ச்சிகளை கொண்ட ஒரே சட்டகத்திற்குள் இருக்கும் வாசகங்களையே பேசிக்கொண்டு இருக்கிறார்.அவைகளுக்கு உண்மையில் எந்தப் பொருளும் இல்லை என்பதை அவரும் அறிவார் உலகமும் அறியும். அமெரிக்காவும் அத்தகைய வாசகங்களை ஐநாவிலும் பொதுவிலும் பேசிக்கொண்டிருக்கிறது. திரும்பத் திரும்ப ஐநா சபையின் செயல்பாடுகளை சிவில் சமூகத்தின் கண்டனங்களை யூத எதிர்ப்பு (Anti Semetic) என்ற வரைவுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். மறுபுறம் ஆவேசமாக இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்கிறார்கள்.இதற்கு அப்பால் உண்மையில் அவர்களால் இதுவரை என்னதான் சொல்ல முடிந்தது.

அவர்களுக்கு உள்ளார்ந்து ஒரு நோக்கம் இருக்கிறது. அது பாலஸ்தீனர்களை வெளியேற்றுவது. அதற்கு அவர்கள் தங்களால் முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்களுக்கு எதிரான கதையாடலும் வலுவாகிக் கொண்டு தான் இருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் நிகழ்ந்த ஹிட்லர் ஆட்சிக்கு பின்னர் ஜெர்மனியர்களை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி இந்த பன்னிரெண்டு ஆண்டுகள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது தான். நாளை இஸ்ரேலிய மக்களை நோக்கி உலக மக்களை நோக்கி இந்தக் கேள்விகள் கேட்கப்படும். அப்போது யாரிடமும் எந்தப் பதிலும் இருக்காது. முதலில் அந்த வினாவை புரிந்து கொள்ளும் பிரக்ஞையை கூட இன்றைய மக்கள் கொண்டிருக்கவில்லை என்பது தான் தீமையின் எளிமை.

தனிமனிதர்கள் ஏதேச்சதிகாரத்திற்கு எதிராக தனிமனிதர்களாகவே குரல் எழுப்ப முடியும். அது எத்தனை பெரிய சர்வ அதிகாரங்கள் கொண்ட கொடுங்கோல் அரசாக இருந்தாலும் அதற்கு எதிராக பேச முடியும்.அப்படி பேசுவதால் இழப்புகள் ஏற்பட்டாலும் நீண்ட நாள் நோக்கில் நல் விளைவுகள் சாத்தியமாகும். மனிதன் உருவாக்கும் எந்த அமைப்பும் முழுமையானது இல்லை என்பதால் எல்லாவற்றையும் அந்த அமைப்பால் நசுக்க முடியாது.அதனால் அனைத்து கிளர்ச்சிகளும் எதிர் குரல்களும் ஒரு சமூகத்தில் முக்கியமானவையே, பொருள் உள்ளவையே ,விளைவுகளை உருவாக்கும் திராணி இருப்பவையே என்கிறார் ஹன்னா.

ஐக்மென் போன்றவர்கள் தோன்றுவது மிக எளிமையானது.எப்போதும் சர்வாதிகாரத்திடம் பெரும்பான்மை மக்கள் பணிந்துதான் போவார்கள்.ஆனால் எல்லோரும் அல்ல. இறுதித் தீர்ப்பை ஜெர்மனி கொண்டு வந்த போது எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அதனால் அதை நிறைவேற்ற இயலவில்லை. உதாரணத்திற்கு பல்கேரியா ஜெர்மனி சொன்னதை செய்யவில்லை. அது யூதர்களை காப்பாற்றியது.

நான் மானுட உரிமைகள் பற்றிய பட்டயப் படிப்பு படித்த போது ஆசிரியர் அரவிந்த் நரேன் ஹன்னா அரணெட்டின் இந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்தார். இந்த நூல் மனித உரிமைகள் பற்றி மிக முக்கியமான திறப்புகளை அளிக்கும் என்றார்.

ஹன்னா அரெண்டின் இந்த நூல் பல சர்ச்சைகளை எழுப்பியதாக சொல்லப்படுகிறது.இந்தப் புத்தகம் குற்றவாளிகளை நோக்கி மட்டும் பேசவில்லை. அது யூதர்களை பார்த்தும் கேள்வி கேட்டது. ஒரு வேளை ஆட்டு மந்தைகள் போல அரசு அதிகாரத்தின் , யூத தலைவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடந்திருக்காவிட்டால் இத்தனை இஸ்ரவேலியர்கள் இறந்திருக்க மாட்டர்கள் என்ற பார்வை நூலில் அடிக்கடி வருகிறது. நீதிமன்றத்திலும் இது பேசப்படுகிறது. யூதர்களைக் கொண்டு தான் யூதர்களை அழித்தது நாஜி அரசு. அவர்கள் இத்தனை தூரம் ஒத்துழைத்திருக்காவிட்டால் பணிந்திருக்காவிட்டால் இத்தனை பேரழிவுகள் நிகழ்ந்திருக்கமா என்பது முக்கியமான ஒரு கேள்விதான்.

இன்று நாம் அனைவரும் கோழைகளாக இருக்கிறோம். அரசுக்கு எதிராக அதிகாரத்திறகு எதிராக பக்கத்து வீட்டுக்காரனின் தொல்லைகளுக்கு எதிராக கூட எதுவும் பேசத் தயங்குகிறோம். ஒரு அநீதியை கேள்வி கேட்க அச்சம் கொள்கிறோம்.நமது பணி , நமது குடும்பம் இவை பாதுகாப்பாக இருக்கும் வரை நாம் ஒரு போதும் வீதியில் இறங்கப் போவதில்லை.இன்று காஸாவில் நிகழும் அவலத்திற்கு எதிராக இந்திய குடிமைச் சமூகம் உரக்கப் பேசவில்லை. (சில செயல்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மைய நீரோட்டத்தில் எந்தச் சலனமும் இல்லை). மக்கள் இதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. ஆனால், நாம் ஆக்கபூர்வமாக இவைகளுக்கு எதிராக செய்ய நிறைய இருக்கிறது. அவை எதுவும் பொருள் அற்றுப் போகாது என்கிறார் ஹன்னா அரெண்ட்.

நாம் ஒரு குடிமைச் சமூகமாக தனி மனிதர்களாக கொடுங்கோன்மைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.ஈனஸ்வரத்திலாவது!

000

Eichmann in Jerusalem A Report on the Banality of Evil – Hannah Arendt – Penguin Books.

சர்வோத்தமன் சடகோபன்

சர்வோத்தமன் சடகோபன் பெங்களூரில் தற்சமயம் வசித்துவருகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகச் சாலை என்ற வலைப்பக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். 'முறையிட ஒரு கடவுள்' என்கிற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.