ஆதினி எனும் சதுரமும்  – நாகா எனும் வட்டமும் : சிவசங்கர். எஸ்.ஜே

பகுதி-1

மூன்றாம் ஜாமம்.

ஏதோவொரு நொடியில்தான் அந்தக் கனவிலிருந்து விழித்தேன்.

[பெரிய கருப்பு சூனியம். சுற்றிலும் எரிந்துகொண்டிருக்கும் கோடுபோன்ற மெல்லிய நெருப்பு வளையம். அதைச் சுற்றிப் பறந்துகொண்டேயிருக்கையில் அந்தக் கருஞ்சூனியம் என்னை உள்ளே இழுத்தது. நான் இருப்பது இரவா பகலா தெரியவில்லை. இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட ஒரு ஒளிர்வு. குளிர்மையும் வெப்பமும் கலந்தொரு வெளிச்சம். அந்த வெளி வெளியற்றத் தன்மையோடிருந்தது. ஒழுகும் வெளி. பூமியில் ஒழுகிக் கொண்டிருக்கும் காலத்தைப் போல. ஆனால் பூமியில் தீர்ந்துகொண்டும் நிரம்பிக் கொண்டிருக்கும் காலம் இங்கு நிலையாக நின்றிருந்தது. அங்கு நிலையான வெளி இங்கு தீர்ந்துகொண்டும் நிரம்பிக்கொண்டும் இருந்தது. இடம் காலமாகி காலம் இடமாகி ஒலிக்காலமும் ஒளிக்காலமும் முயங்கி நின்றிருந்தன. அங்கிருந்தபோது நான் கவலைகளற்றிருந்தேன். காலம்தான் கவலை.  கவலைதான் காலம். காலப்பிரக்ஞைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.]

முதன்முதலில் அவனைப் பார்த்த போது  ரோட்டோரத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கென அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையம் வளையமான சிமென்ட் குழாய்கள் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த அவனை எவரோ மாநகராட்சி ஊழியர் ஒருவர் துரத்திக் கொண்டிருந்தார். அந்த வளையத்திற்குள் அவன் எழுந்து உட்கார்ந்தான். வளையத்துக்குள் அவன் உருவம் சட்டமிட்டதுபோல தெரிந்தது. அதனாலேயே அந்தச்  சித்திரம்  மனத்தில் பதிந்துவிட்டது  பிறகு ஒரு நாள் சிக்னலில். பிறகு என் பள்ளிக்கூட வெளிவாசலில். அழுக்கென்று சொல்ல முடியாத உடைகள். ஒருவார தாடி. ஒல்லியான தேகம். ஆனால் பூசினாற்போல வயதைக் கணக்கிடாத முடியாத  வட்ட முகம். சாந்தமான கண்கள். ஒரு ஜோல்னாப்பை. ஜிப்பா போலும் சட்டை போலும் இல்லாத ஒரு மேலுடை. வட இந்திய பாணி தொள தொளப்பான நீள்கால்சட்டை.

அதன் பிறகு நான் அவனைப் பார்த்தது விடுமுறை நாள் ஒன்றில், விடுமுறைகால கணித வகுப்புகள் முடித்து இருசக்கர வாகனத்தை எடுக்க பள்ளி வாகன நிறுத்தகத்திற்கு நான் நடந்து வந்துகொண்டிருக்கும்போது வெளிப்புற கேட் அருகில் சக ஆசிரியை ஒருவரோடு நின்று பேசிக்கொண்டிருந்தான். வினாடிக்கும் குறைவான நேரத்தில் எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன.    

மறுநாள் மதிய உணவு நேரத்தில் சக ஆசிரியை எங்கள் விடுதியில் காலியாக உள்ள  காவலாளிப் பணிக்கு அவனை பரிந்துரைக்க முடியுமா எனக் கேட்டார். அவனது பின்புலங்கள் ஏதும் தெரியாமல் பணிக்குச் சேர்த்துக் கொள்வார்களா தெரியாது என்றேன். ஆசிரியை தான் பொறுப்பேற்பதாகச் சொன்னார். நான் வேறொன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.

பரீட்சைக்கால சனிக்கிழமையொன்றின் மாலை நான் என் விடுதிக்குத் திரும்பியபோது அவன் விடுதியின் வட்ட வடிவக் காவலாளிக் கூண்டினுள் அமர்ந்திருந்தான். மெல்லிய புன்னகை. சிறுநன்றிக்கும் துளிமகிழ்ச்சிக்கும் இடையிலான கனவானின் முகபாவம் அவனது முகத்தில் தோன்றி மறைந்தது.

காலைகளும் மாலைகளும் அவனைக் கடந்துதான் நகர்ந்தன. முதல் மாதம் புன்னகைகளோடு முடித்துக் கொண்டோம். அவனும் நேரில் பேச முயற்சிக்கவில்லை. பரிட்சைக்காலம் என்பதால் நானும் அவசரமாகவே போய் திரும்பி கொண்டிருந்தேன். கோடை விடுமுறை காலத்தில்தான் சாவகாசமாய் பேசும் வாய்ப்பு அமைந்தது.

‘’வீட்டுக்கு போகலியா’’ என்ற கேள்விக்கு நான் மௌனமாய் சிரித்தது அவனை ஏதோ செய்திருக்க வேண்டும்.

அவன் என்னை மேடம் என்றோ அம்மாவென்றோ பாப்பா என்றோ அழைக்காமல் ஆதினி என அழைத்தது பிடித்திருந்தது. மிக நேரடியான பேச்சு. மிக நேரடியான பார்வை. போலியான பணிவோ, நோண்டும் கேள்விகளோ , நோட்டமிடும் கண்களோ அவனிடமில்லை.

நானும் நாகா என்று அவனது பெயர் சொல்லியே அழைக்கத் தொடங்கினேன். தினமும் காலை வணக்கத்தில் தொடங்கியது நட்பு. அவனுக்கென சில அன்றாடங்கள் இருந்தன. அதிகாலைகளில் எழுந்ததும் ஒருசில உடற்பயிற்சிகள். அவனது கால்கள் காம்பஸின் இருமுனைகளைப் போலக் கருதி ஒரு வட்டம், அந்த வட்டத்தைத் தாண்டாமல் சில தேகப்பயிற்சிகள். விடுதியைச் சுற்றி வலமிருந்து இடமாக இடமிருந்து வலமாக வட்டமாய் ஒரு நடை. மேலே நீர்த்தொட்டிக்கு நீரேற்றல். தோட்டத்தைப் பராமாரித்தல். செடிகளுக்கு நீர் வார்த்தல். எல்லாம் துல்லியமான நேரத்தில். வட்டப்பீங்கான் கிண்ணத்தில் ஏற்கனவே அதிகாலையில் பிளாஸ்கில் வாங்கிவைத்திருக்கும் தேநீரை அருந்தத்தொடங்கும் போது சரியாக சூரியன் அவனது கூண்டின் மேல் கடக்கும். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் முகப்புச்சாலை அருகில் இருக்கும் உணவுக்கடையில் பொட்டலம் வாங்கிவந்து கூண்டின் மத்தியில் அமர்ந்து சாப்பிடுவான். ஏனோ விடுதி சிற்றுண்டி, மதிய உணவு எதையும் அவன் சாப்பிடுவதில்லை. மாலை தேநீர் மட்டும் எடுத்துக் கொள்வான். மாலை மீண்டும் செடிகள் ,தோட்டம். விடுதி சுற்றி ஒரு நடை. இதைத்தவிர எங்கும் அவனைப் பார்த்ததில்லை. எங்கள் பள்ளியின் அருகிலுள்ள மருத்துவமனையில்தான் முன்பு பணி செய்திருக்கிறான். நகரத்துக்குள் நான் சென்று திரும்பும் நாட்களில் ஒருமுறைகூட முன்பும் வெளியேக் கண்டதில்லை. அவன் தனக்கான மைய இடம் அமைந்துவிட்டால் வேறெங்கும் செல்வதில்லை. அதைச் சுற்றியே அவனது நடமாட்டம் இருக்கும் .

விடுதிக்கு வெளியே சுற்றுவட்டார இளைஞர்களோடு சிரித்துப் பேசியபடியும்  முதியவர்களிடம், ஒருவித கனிவோடு அவர்கள் பேசுவதை கேட்டபடியும் அவன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒருவகையில் உடனிருப்பவரின் மனநிலைகளைப் பிரதிபலிப்பவனாக அவன் இருந்தான்.

பெரும்பாலும் வேலைகளை முடித்துக்கொண்டு மாலை நேரங்களில் விடுதி கட்டடத்திலிருந்து வெளியே பிரதான சாலைக்குச் செல்லும் வழியில் வலப்புறம் நீர் தேங்கி நிற்கும் மனையில் நிற்கும் கருவேல மரங்களையும் அதில் கூடடையும் பறவைகளையும் பார்த்தபடி எதிரில் வட்டமான சிமென்ட் அஸ்திவாரத்தோடு கூடிய பஞ்சாயத் கிணற்றங்கரையில் அமர்ந்திருப்பான். சில வேளைகளில் அதிகாலை நேரங்களிலும். எப்படியிருந்தாலும் நான் கவனித்தவரை அவன் தங்கியிருக்கும் இடத்திலிருந்து சுற்றிலும் சம அளவு தொலைவு மட்டுமே சென்று திரும்புவான். அதிக பட்சம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு.

அவனுக்கான சில நடைமுறைகள், சில வழக்கங்கள், எதையும் அவன் மீறுவதில்லை.

அறையில் அன்று ஒரு பாம்பு நுழைந்துவிட்டது. எதேச்சையாக எதையோ எடுக்க கட்டிலுக்கடியில் குனிந்தபோது அதன் சீற்றம். என் கூச்சலைக் கேட்டு பக்கத்துக்கு அறைவாசிகள் அவனை அழைத்து வந்தார்கள். நாங்கள் பயந்து கீழ்த்தளத்துக்கு வந்திருந்தோம். நாகா சற்று நேரத்தில் குழந்தையொன்றைத் தூக்கிச் செல்லும் லாவகத்தோடு முகத்தில் புன்னகை மின்ன ஒரு சாக்குப்பையில் பாம்பைப் பிடித்துக் கொண்டுபோனான். அன்றைய நாளுக்குப் பிறகு விடுதியில் என்னிடம் சற்றுக் கூடுதலாக புன்னகைத்தான். தினமும் காலை மாலை வணக்கங்கள் தொடர்ந்தன.

***

‘’அந்த சுழியின் உள்ளே சென்ற அடுத்த நொடியிலிருந்து கால ஓர்மை அற்றுப் போனது. நான் அந்த முடிவற்ற வெளியில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். அந்த வட்டத்துக்குள் வெறுமையும் ஏதுமின்மையும் பெருகிக் கொண்டேயிருந்தன. முடிவில்லா பேரறிவின் துகள்கள் அலைந்துகொண்டேயிருந்தன. முக்காலங்களும் ஒன்றாகி. காலம் இன்மைக்குள் சுழன்றது. ‘’

பெரும்பாலும் கடைகளில் நோட்டுகளைச் செலவிட்டு சில்லறை காசுகளை ஒரு பரவசத்தோடு சேகரித்துக் கொள்ளும் விநோதப் பழக்கம் அவனுக்கு இருந்ததை ஒருநாள் கண்டுபிடித்தேன். அவனது வட்டக் கூண்டில் இருக்கும் உண்டியல் நாணயங்களால் நிரம்பிருந்தது.

இசைதான். அதுதான் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. ஒருநாள் எதிர்பாராத ஒரு மரணத்தின் பொருட்டு பள்ளியிலிருந்து பின்மதிய நேரத்தில் விடுதிக்குத் திரும்ப வேண்டியிருந்தபோதுதான்  அவனது வட்டவடிவ கூண்டிலிருந்து  அந்த இசை ஒழுகி வந்தது. ஹரிபிரசாத் சௌராசியாவின் குழல். நான் வருடக்கணக்கில் இரவுகளில் கேட்கும் அதே பண்டிட்டின் இசை. ஆனால் இது வேறு.  நான் கேட்டிராத ஆல்பம். நான் கண்கள் சொருகி அயர்ந்து வண்டியை கூண்டின் ஓரமாய் நிறுத்தினேன்.

துளைகளில் இருந்து பெருகும் இசை. ஆறும் ஒன்றுமாய் ஏழு துளைகள். வாயும் ஒரு துளைதானே? எட்டு துளைகள். உள்ளே ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து எழும் இசை. துளையிசை.

நான் எப்போதும் கேட்கும் ராஜாவின் அந்தக் கோர்வைக்கு ‘ஏதுமில்லை, காற்றைத் தவிர’ என சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார். ‘காற்றைத்தவிர ஏதுமில்லை’ என்பதைவிட ‘ஏதுமில்லை-காற்றைத்தவிர’ என்பதுதான் பொருத்தமாக இருக்கிறது. வெறும் காற்றை அடைத்தும், விடுவித்தும் இந்த விரல்களும் வாயும் எப்படி இசையாக மாற்றிவிடுகின்றன.

கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதிகாலையின் அமைதியைப் போலவே பின்மதிய அமைதியில் இசை கரைந்து நின்றது. அவன் கூண்டிலிருந்து வெளியே வந்ததும் நான் நிற்பதைப் பார்த்துவிட்டு கண்களால் என்னவென்று வினவினான். நான் காதுகளை இரு கைகளாலும் போர்த்திக்கொண்டு சொக்கி விழுந்ததுபோல சைகை காட்டினேன். அவன் சிரித்துக்கொண்டே உள்ளிருந்து ஐம்பூதங்கள் இசைத்தொடரின் காற்று குறுந்தகடை அவனது இசைப்பானிலிருந்து உருவி என் கையில் எடுத்துத் தந்தான். அன்றிரவு நான் பூமியிலிருந்தும் பத்தடி உயரத்தில் மிதந்து கொண்டே தூங்கினேன். அடுத்தநாள் குறுந்தகடை திருப்பித் தரப் போன நான் அவனை புதிதாய்ப் பார்த்தேன். அவன் எதுவும் பேசாமல் குறுந்தகடை என்னிடமேத் திருப்பித் தந்தான். இருவர் கைகளும் உரசிக்கொண்டன. மின்னல் கீற்றுப் போல எழுமந்த ஒரு நொடி உணர்வு என்னையும் தாக்கியது. நான் அந்த சிலிர்ப்புக்குள் மீண்டுமொருமுறை விழுந்தேன். குழல் அதிர்ந்ததடங்கியது.

பிறகான கண்களின் சந்திப்புகள் மாலைநேர கிணற்றடியில் எப்போதாவது மதிய நேர உணவுக்கடை எனத் தொடர்ந்தன. அவன் கண்கள் என் மார்புகளின் மீது அவ்வப்போது சலனமின்றி நிலைத்து மீண்டன. தொடுகைகள் விகல்பமின்றி இருந்தன. நான் நெருங்கினேன். நானாக நெருங்கினேன். அவன் விலகியும் நெருங்கியும் நடுவில் நின்றான்.

கசப்பான இரவொன்றில் வெளியில் உலவ மனம் ஏங்கியது நான் என் வண்டியை எடுத்தேன். அவனும் உடன் வரக் கேட்டான். வேண்டுமென்றே மறுத்து ஊர் சுற்றித் திரும்பினேன். அவன் மெல்ல என்னிடம் நகர்ந்து வரத்தொடங்கினான்.ஒரு குழலாக

அவன் வாயாக

நான் விரலாக

இசை பெருக்கெடுத்து ஓடியது.

நான் தீமையை முன்னுணர்ந்தேன்.

நன்மை தீமை இரண்டின் எல்லைகளுக்கு இடையில் அவன் அவற்றைத் தவிர்த்து நின்றான்.

நான் முழுதும் என்னை ஒப்படைக்கத் தயாராகினேன். சதுரத்துக்குள் வட்டம் சரியாகப் பொருந்தியது. வட்டம் சுழல் வட்டமாகி சதுரத்தை நிறைத்துப் பெருகியது. வட்டத்துக்குள் சதுரம் பொருந்தியது. வட்டமும் சதுரமும் ஒன்றுக்குள் ஒன்றாகி நிறைந்தது.

***

நான்காம் ஜாமம்.

அன்று இரவு முழுக்க தூரத்தின் அமைதியில் ஒற்றைப் புல்லாங்குழல் சோக இசையை ஒலித்துக் கொண்டேயிருந்தது. என்னெவென அறியாத வெறுமை உள்ளில் தீயாகக் கொதித்தது. கண்கள் பார்க்கும் எதுவும் மூளைக்குள் ஊடுருவவில்லை. காதுகள் கேட்கும் எதுவும் நரம்புகளுக்குள் செல்லவில்லை. நாக்கு ருசி உணரவில்லை. வாசனை நாசிக்குள் துளைக்கவில்லை. புலன்கள் அறுபட்டு மூளைக்குள் ஒரு மௌன ஓசை . ஒலியற்ற மௌனம் போலில்லை. இது ஒற்றைத் தந்தியின் நாதமாக ஹும்மென்ற ஓசை. பாழ்வெளியின் ஓசை.  விடியும் வரை அந்த வெறுமையின் ஓசையைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். எனக்கு அந்த ஓசை எதையோ உணர்த்தியது. விடிகாலை வரை அது புலப்படவேயில்லை. அதிகாலையில் பிடிகிட்டியது அது, அதுநாள் வரை என்னில் நிறைந்திருந்த ஒன்று இல்லாமல் போன வெற்றிடத்தின் ஓசை. நான் திடுக்கிட்டேன். உடனடியாக இரவு உடையோடு கீழ்தளத்துக்கு ஓடினேன். முகம் கழுவ குழாயைத் திறந்தேன். நீருக்கு பதில் அந்த வெற்றோசை வந்தது.

நான் வெளியே வந்து  கூண்டுக்குள் சென்று பார்த்தேன், சில குறுந்தகடுகள் அழகாக பொட்டலம் கட்டப்பட்டு இருந்தன. வேறெந்த தடயங்களும் இல்லை. எனக்கு நிச்சயமாய்த் தெரிந்துபோனது. இனி அவன் இங்கில்லை.

கடைசி நேர பேச்சுக்கள் ஏதுமின்றி அவன் மறைந்துபோனான். சொற்களை எல்லாம் கைவிட்டுவிட்டு சொற்களின் எல்லைகளைத் தாண்டி எங்கேயோ  மறைந்தான். என்றென்றைக்குமாய்.

வெறுமையின் ஓசை மெல்ல மெல்ல நின்றது. இப்போது அவன் மாலை நேரங்களில் அமர்ந்திருக்கும் கிணற்றிலிருந்து குழல் இசை பெருகி ஓடியது. ஒன்றுமற்றதிலிருந்து வெளிவரும் அந்த எல்லாமுமான  துளை இசை.    

பகுதி-2

‘’நான் அந்த இருண்ட பந்துக்குள் இருந்தேன். நான் அங்கு எதற்குள்ளோ மிதந்துகொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் திரவம் போன்றும் வாயு போன்றும் ஒரு கலவை. இருட்டுக்குள் என்னால் கண்களைத் திறக்காமல் எல்லாவற்றையும்  துல்லியமாகப் பார்க்க முடிந்தது. என் மையத்தில் இருந்து கொடிபோன்ற ஒன்று வெளிப்பட்டு எதனோடோ பிணைக்கப்பட்டிருந்தது. பிணையும் இடத்தில் இருந்த ஒளியும் துடிப்பும் என் உடலெங்கும் பரவி அதிர்வூட்டியது. இன்னதென புரிந்துகொள்ள முடியாத ஆற்றல். எங்கும்  சூழ்ந்திருக்கும் துடிப்பு. ‘’

நாங்கள் கோபியர்கள் போல ஆடிக்கொண்டிருந்தோம். எங்கள் வகுப்புத் தோழி நடுவே கிருஷ்ணனாக நின்றிருந்தாள். நாங்கள் பள்ளிக்குழந்தைகள். வெளியே மைதானத்தில் வட்டமாய்ச் சுற்றி சுற்றி வந்தோம் கைகளைக் கோர்த்தபடி. பிறகு தனித்தனியே. மீண்டும் கோர்த்தபடி.  அது பள்ளி விழாக்காலம். நான் ராதையாக மாறியிருந்தேன் . கோபியர்கள் என்னோடு சுற்றி ஆடினார். கோபாலா கோபாலா நான் சுழன்று சுழன்று தேடினேன்.  கண்ணன் மாயன் அவனைக் காணவில்லை. மயக்காதே கண்ணா. நான் அவனைத் தேடிச் சோர்ந்தேன். கண்ணன் மெல்ல ஒளித்து வந்தான். அவன் கண்கள் என்னை மயக்கின. வேணு கானம் என் உயிரைத தூர்ந்தெடுத்தது. ஒரு சூறைக்காற்று போல அவன் இப்போது சுழன்றாடினான். கோபியர்கள் அவனைத் துரத்தினர். அவன் அவர்களுக்கு போக்கு காட்டி மறைந்து மறைந்து ஆடினான். நான் கண்ணனை நெருங்கினேன். அவன் என்னை நெருங்கினான். நான் அவனில் கலந்தேன். கரைந்தேன். நானும் அவனும் ஒன்றாகி. எல்லாம் நாதமாகி இருவர் ஒருவரானோம். எல்லாம் ஒன்று, நாதம் சொன்னது. எல்லாம் ஒன்று. பின்பு  நான் கணிதங்களின் பின்னலுக்குள் விழுந்தேன். வேணு கானம் எங்கோ ஒலித்தது.

‘’அன்று உடலில் ஏதோவொரு மாற்றம். என் வயிற்றில் நட்டநடுவே உள்ளே ஆழத்தில் இரண்டு வளைவுகளில் ஒன்றிலிருந்து ஒரு சிறு பிறை  உருண்டு திரண்டு மையத்திற்கு வந்தது. நிலவினைப் போல ஒரு அரைமாத வளர்நிலை. நடு நாளின் முடிவில் அந்த பிறை  கோள வடிவம் கொண்டது. அடுத்த மூன்று நாட்கள் கோளம் பெரிதாகி. முழு நிலவாகியது. கோளம் எதற்கோ காத்திருந்துவிட்டு கரையத்தொடங்கியது. அடுத்த அரைமாதத்தில் கரைந்து கரைந்து முன் போல சிறு பிறையாகி மீண்டும் அதே சுழற்சி.’’

அதே பள்ளியில் நான் ஆசிரியை ஆனேன். குழந்தைகள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குலை குலையா முந்திரிக்கா நரியே நரியே சுற்றி வா. ஒருவர் மாற்றி ஒருவர் சுற்றி கொண்டிருந்தார்கள். எல்லோர் குரலும் ஒற்றைக் குரலாக ஒலித்தது. எங்கோ மீண்டும் அந்த நாதம் கேட்கிறது. நாதப் பிரம்மம். எல்லாம் அதுவாக நித்தியமாக. எங்கும் நிறைந்த பிரம்மம். நான் கணித வாய்ப்பாடுகளின் சுழலுக்குள் செல்கிறேன். குழந்தைகள் எல்லோரும் ஒரே குரலில் கணித சூத்திரங்களை உரக்கச் சொல்கிறார்கள்.

கண்ணா நான் மயங்கித் தவிக்கிறேன். என் அரூபனே. தனிப்பெரும் தூய்மையே கண்ணா. மாயக்கண்ணா கழைகள் ஆடும் உன் வேணு கானம் என்னை மயக்கி  நான் ஒரு ஆட்டுக்குட்டியாய் உன் தோளில் என்னைச் சூடிக்கொண்டேனடா கோபாலா. நான் அந்த நாதப் புற்களைச் சுவைக்கிறேனடா கண்ணா.

பேரறிவாய்… பேருருவாய்… பேரன்பாய்  பேருண்மையாய் எனை நிறைத்தான். கண்ணன். 

‘’கோளங்கள் தோன்றுவதும் மறைவதுமாய் நீண்ட காலங்கள். உலகம் இயங்கிக் கொண்டேயிருந்தது. எல்லா உயிர்களுக்கும் அவற்றவற்றிற்கான நிர்ணயிக்கப்பட்ட காலமும் வெளியும். காலம் தப்பிப்போனால் அகாலம். அகாலங்களுக்குப் பிறகு அவன் வந்தான். கோளம் காத்திருந்த ஒன்று கோளத்தை முட்டியது. என் வயிற்றில் ஒரு இனம்தெரியாத உருண்டை. நாளாக நாளாகப் பெரிதாகும் பந்து. நான் ஓர் குட்டி உலக உருண்டையைத் தாங்கிக் கொண்டிருந்தேன். வயிறு பெருத்து என் உடல் மேல் ஒரு அரைவட்டமும் உடலின் உள் ஒரு அரைவட்டமும் தோன்றியது. என் உலகம் பெரிதாகிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் முதலில் கோளத்தைச் சுற்றியிருந்த நீர்கோளம் உடைந்தது. அந்த உருண்டையை வெளியே எடுத்தார்கள். அதன் துடிப்பு என்னிலிருந்து நீங்கவில்லை. நான் என் உள்ளே நீண்ட காலம்  நான் சுமந்த கோளத்துக்குள் பதுங்கி கொண்டேன். அந்தத் துடிப்பு அந்த சுமை என் உலகம் சுருங்கி சிறுத்தது. மாயன் என்னைவிட்டு நீங்கி எங்கோ காணாமல் போனான். ‘’

இரண்டாம் ஜாமம்.

என் முன் மூன்று குடுவைகள்.

பச்சைக் குடுவை

சிவப்புக் குடுவை

நீலக் குடுவை  

நான் நீலக் குடுவைக்குள் கைவிட்டேன். என் கையில் காலத்தின் மணல் துகள்கள். கையை வெளியே எடுத்தேன் அவை எல்லையற்ற பெருவெளிக்குள் என்றென்றைக்குமாய் உதிர்ந்துகொண்டேயிருந்தன. தற்காலமும் இல்லாத நிரந்தரமும் இல்லாத முடிவற்ற காலத்துகள்கள். அவை என் காதில் பிரபஞ்சத்தின் மொழியில் முணுமுணுத்தன.

‘’ஆனால் எல்லோருக்கும் நாங்கள் மூத்தவர்கள். பெருவெடிப்பின் குழந்தைகள். எங்கள் ஆற்றல் உனது உலகை விடப் பெரிது. எங்கள் வெளி எல்லையற்றது. எங்கள் காலம் நிர்ணயிக்கப்படாதது. நாங்கள் பூர்வத்தின் துகள்கள்.’’

நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சட்டென அலைபோல மாறின.

‘’ஆதினி நாங்கள் அலையாய் துகளாய் ஆன ஆதி. நாங்கள் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தின் வடிவமே இப்படித்தான் முடிவற்றது.’’

மந்திரம் போல அந்தக் சிறுகுரல்கள் என் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே விழித்தேன் . அதிகாலை. அன்று பௌர்ணமி.

நான் உண்மையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். வெள்ளெழுத்து மூக்குக் கண்ணாடியின் இரண்டு பிரிவுகளைப் போல தெளிவின்மையும் தெளிவுமாய் அலைக்கழிந்தேன் .

சின்னக் கண்ணன் என் மார்பில் படர்ந்து தூங்குகிறான். நான் இப்போது ராதையில்லை. யசோதை. யசோதையாக வேண்டி ராதையானவள்.

என் அன்னை நான் பிறந்தவுடன் காலமாகி இருந்தாள். தந்தை என்னை எதுவும் சொல்லாமல் மனம்கோணாமல் பார்த்துக்கொண்டார், காத்து,  வளர்த்தார்  அவர் இறந்து அன்றுதான் சின்னக் கண்ணன் பிறந்தான். நான் பெரும் கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டேன். அப்பா இறந்தபோது – இருந்தவொன்று எங்கே போனது? மகன் பிறந்தபோது-இல்லாதவொன்று எங்கிருந்து வந்தது? இந்த மொத்த வடிவமைப்பின் நோக்கங்கள் என்ன?  இதன் காரண காரிய ரகசியங்கள் என்ன? காலம். வெளி இதன் தோற்ற மயக்கங்கள்தான் வாழ்வா? அப்பா போன ஒருவருடத்திற்குள் அதே நாளில்  சின்னக்கண்ணன் உலகைவிட்டு என்னைத் தனியே விட்டுச் சென்றான். நான் அப்படியாக பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகியிருந்தேன்.

வட்டக்கடிகாரம் சுற்றிக்கொண்டேயிருக்கிறது , கடிகாரம் காலத்தைச் சுற்றுகிறதா? காலம் கடிகாரத்தைச் சுற்றுகிறதா?

பகுதி-3

பள்ளிச்சுற்றுலா. ஐந்து நாட்கள் பயணித்து அந்த பனிப்பிரதேசத்தில் வந்திறங்கியபோது இன்னும் இன்னும் உயர்ந்துகொண்டே சென்ற அந்த வெளிக்குள் வினோதமான உணர்வை அடைந்தேன். எல்லோரும் உடன் இருந்தும் யாருமில்லாத் தனிமை. சுற்றி வளைந்து நீண்டு கொண்டே செல்லும் பாதைகள். நான் கற்பனைகளில் அந்த மலை உச்சிகளில்  அலைந்தேன். நெடு காலத்துக்குப் பிறகு மனம் ஏனோ தாவிக் கொண்டேயிருந்தது. தூரங்களில் அங்கங்கே மலைகிராமங்கள் மக்களின் பொழுதுகள் அங்கு மிக மெதுவாய் நகர்ந்துகொண்டிருக்கின்றன. நான் வேறு ஒரு காலமண்டலத்திலிருந்து வந்ததைப் போல உணர்ந்தேன். என் அமைதியின்மைக்கு காரணமும் அதுதான்.

என் ஒவ்வொரு பருவமும் உள்ளுக்குள் பொங்கி நுரைத்தன.

குழுவிடம் குறிப்பிட்ட உணவு விடுதி வாசலில் சந்திப்பதாய்ச் சொல்லிவிட்டு கால் போன போக்கில் அலைந்து திரிந்தேன். ஒரு அழகிய குடில் அதன் முன்னொரு முற்றம். பச்சைப் போர்வையாய் தரை. சிறு பூக்கள் பூத்துக் குலுங்கும் புற்செடிகள். சரிவாக இறங்கி எங்கோ பாதாளத்துக்குச் செல்லும் பின்புற கற்படிக்கட்டுகள். வெள்ளை நிற பெயின்ட் அடித்த பலகைகளான படல். இரு ஓரங்களிலும் வரிசையாய் குட்டையான இளமையான ஊசியிலை பைன் மரங்கள்.  அந்தக் குடிலின் அழகில் வசீகரிக்கப்பட்டு யாரேனும் இருக்கிறார்களா என அழைத்துப் பார்த்தேன். பதிலாய் என் குரல் மலைகளில் எதிரொலித்து அடங்கியது. யாருமற்ற அந்த முற்றத்தில் குளிர் நெஞ்சைத் துளைக்க  நான் ஓங்கி அழுதேன். நெஞ்சின் விம்மல் ஓய்ந்து நுரையீரல் முழுக்கக் காற்றாய் நிரப்பிக்கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினேன்.

பனிபடர்ந்த மலை பின்னணியில்  பௌத்த மடாலயம். எங்கும் சரணம். கச்சாமி.

ஒரு கோப்பை தேநீருக்குப் பிறகந்த செங்குத்துப் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தேன். முதிர்ந்து கண்களில் நிரந்திர சிரிப்பைத் தேக்கியிருந்த பௌத்த பிட்சு ஒரு வெள்ளைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘’ஒற்றைப் பரிமாண உருவங்கள் எல்லாம் வெறும்  தோற்ற மயக்கங்கள். ஒரு காகிதம் , பலகை, சுவர், தரை இவையில்லாமல் நம்மால் கோணங்களை வெட்டவெளியில் உருவாக்க முடியாது. வட்டமும் அப்படித்தானோ நூல், குச்சி, களிமண் இப்படி ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டுதானே வட்டத்தை உருவாக்க முடியும். சதுரம் செவ்வகம் செங்கோணம் அறுகோணம் இவையெல்லாம் உருளையைப் போன்றோ கோளம் போன்றோ சாத்தியமற்ற அரூபங்கள். இரட்டைப் பரிமாண உருவங்கள்.  இவையெல்லாம் உண்மையில்  உருவங்கள் இல்லை வடிவங்கள். சூனியதாக்கள்.

சூனியதாக்களில் தோன்றும் உருவங்கள் திட்டமானவை. சரியானவை. துல்லியமானவை. சூனியம் என்றால் உள்ளே ஒன்றும் இல்லாதது என நெடுநாள் நினைத்திருந்தேன் அப்படியில்லை அவை எல்லாம் நிரம்பியவை.  எல்லாம் அடங்கியவை. அதீத இருப்பின் அதீத  இன்மை. எங்கு சூனியம் இருக்கிறதோ அங்கு எல்லாம் இருக்கிறது.

சூனியம் ஒன்றுமில்லாததல்ல அதற்கு சாய்வு உண்டு. அது வெறுமையல்ல அது சார்பானது. அது நிர்வாணம். அது நோக்கும் போக்குமில்லாதது. அது எல்லாவற்றுக்கும் நடுவிலுள்ளது. அது ஏற்றும் மறுத்தும் இருப்பது.  அதற்கு சாரமுமில்லை சாரமுமுண்டு . அதற்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை.

சூனியம் ஒன்றுமற்றதல்ல வெறுமையானது. ஒன்றுமற்றதில் ஏதுமில்லை. வெறுமையானதில் ஏதேனும் முன்பு இருந்திருக்கலாம் அல்லது ஏதேனும் இனிமேல் நிரம்பலாம். சூனியத்தில் காலம் வெளியோடு பின்னி காலவெளியாக வெளிக்காலமாக ஓர் அதி ஆற்றலாக மாறியிருக்கும். அந்த சூனியத்தில் நாம் கழிக்கும் நொடிகள் கால வெளி மயக்கங்களுக்குள் கழிவதில்லை. எல்லாவற்றையும் ஒன்றேயென கருதும் நிப்பானம் சூனியத்துக்குள் தோன்றிவிடும். அந்த கணம்தான் ஞானத்தின் தொடக்கம். ஞானம் ஒரு பெரும் நகைச்சுவை இந்த உலகம் உள்ளவரைத் தீராத நகைச்சுவை. அதை அறியாதவர் ஆசை எனும் துன்பத்துக்குள் போவார் ’

நடு ஜாமம்

என் கண் முன்னே மூன்று கூடைகள்

முதலாமதில் நிறைவேறாத ஆசைகள்

இரண்டாமதில் ஊசிகுத்தும்   நினைவுகள்

மூன்றாமதில் மூச்சுமுட்டும் பயங்கள்

அந்தப் பள்ளத்தாக்கின் ஆழம் காண முடியா பனி ஆழத்தில் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்தெறிந்தேன்.

வழியில் உணவருந்த இறங்கிய கிராமத்தின் முதுகிழவி குழந்தையின் சிரிப்போடு  என் வயற்றைப் பார்த்துக் கொண்டே தலையைத் தடவினாள். அவள் கண்கள் இரண்டு கோளங்களைப் போல ஒளிர்ந்தது,  அவள் முகம் கோடுகளோடு வட்டமாக  உலக உருண்டை போலிருந்தது.

அந்தக் கிழவியின் வீட்டு கொல்லைப்புறத்தில் பனியாறு ஓடிக்கொண்டிருந்தது. எதிர்க்கரையில் இளந்துறவிகள் சீவராடை அணிந்து வரிசையாகச் சென்று கொண்டிருந்தார்கள். நான் மெல்ல ஆற்றில் அடியெடுத்து வைத்தேன். குளிரில் உடம்பு மொத்தமும் ஒருமுறை சிலிர்த்து உறைந்தது. காலளவு நீரில் இறங்கியதும் நான் என் ஆடைகளைக் களைந்தேன். எதிர்க்கரையில் கடைசியாகப் போய்க்கொண்டிருந்த இளந்துறவி எதோ உள்ளுணர்வில் என்னைத் திரும்பிப் பார்த்தான். நான் அவனுக்கு கையசைத்தேன். பதிலுக்கு மிக அழகாகப் புன்னகைத்தான். நான் மெல்ல என் தொடக்கத்தை நோக்கி செல்லத் தொடங்கினேன். காலடி நீர் ஓடிக்கொண்டேயிருந்தது. புதிய நீர் ஒவ்வொரு கணமும்.  எங்கோ ஒரு குழலிசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ஏதுமில்லா வெற்றிசை.

000

சிவசங்கர். எஸ்.ஜே

சிவசங்கர். எஸ்.ஜே  புனைவெழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியச் செயல்பாட்டாளர். இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். அம்பேத்கர் கடிதங்கள் போன்ற மொழியாக்கங்களைச் செய்தவர். குமரிமாவட்ட பண்பாட்டாய்விலும் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்விக்கியில் 

3 Comments

  1. அநாதி – சூன்யம் – வெளி – வெற்றிசை – புனைவின் நெகிழ்வு – நன்று நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.