குறிப்பு: தமிழ் இலக்கிய விமர்சகர்களில் முன்னோடியான க. நா. சுப்ரமண்யம் மரபிலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்பு கொண்டவர். குறிப்பாக, இளங்கோவடிகள் இயற்றிய பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் அவர் மிகவும் போற்றிய படைப்பு. தமிழில் பல கட்டுரைகளில் சிலப்பதிகாரம் பற்றிய தன் உயர்வான மதிப்பீட்டை வெளியிட்டிருக்கும் க.நா.சு., இக்காப்பியம் பற்றி தனிக் கட்டுரை ஏதும் தமிழில் எழுதியதாகத் தெரியவில்லை. இருப்பினும் ஆங்கிலத்தில் சிலப்பதிகாரம் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். உரைநடை வடிவில் சிலப்பதிகாரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வெளியிட்டுள்ளார். ‘The Anklet Story’ (1977) என்ற தலைப்பில் அந்த நூல் வெளியானது. அந்நூலுக்கு க.நா.சு. எழுதியிருக்கும் முன்னுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு முன்னுரைகளின் தொகுப்பாக அண்மையில் வெளியாகியுள்ள ‘சிரமமான காரியம்’ (2024) என்ற நூலில் இந்த மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. மூலத்தையும் அதே நூலில் காணலாம். இதுபோக விலங்குப் பண்ணை, 1984, மதகுரு, அன்பு வழி உள்ளிட்ட க. நா. சு. வின் மொழிபெயர்ப்பில் வெளியான பல்வேறு நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளும் ஒட்டுமொத்தமாக அவரது மொழிபெயர்ப்பு செயல்பாடுகளை அறிமுகப்படுத்தும் கையேடாகவும் அமைந்துள்ளது இந்நூல். நூலை யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளது
பதிப்பாசிரியர் ஶ்ரீநிவாச கோபாலன்.
——————–
சிலப்பதிகாரம், சிலம்பின் கதை, பண்டைய தமிழ் நூல்களில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதன்மைப் படைப்பாகும். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டாவதாக வரும் மணிமேகலை, முதலாவதான சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி கொண்டதே. சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களில் சொல்லப்பட்டாலும் இப்பட்டியல் காலவரிசைப்படி போடப்பட்டதல்ல. இவற்றுள் முதல் மூன்று மட்டுமே முழுமையான வடிவில் நமக்குக் கிடைக்கின்றன. பிற இரண்டும் பின்னால் வந்த உரையாசிரியர்களின் குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் வழியாக மட்டுமே கிடைத்துள்ளன. ஐந்து காப்பியங்களுமே இந்தியாவின் மரபான நான்கு பிரிவுகளில் மூன்றாவதான வைசிய குலத்தைப் பற்றியே பாடுகின்றன.
இலக்கியரீதியாக மிகுந்த முக்கியத்துவம் கொண்ட காப்பியம் ‘சிலப்பதிகாரம்’. ஒரு பெண்ணை முழுநீள மையப் பாத்திரமாகக் கொண்ட விதத்தில் அது பிற காப்பியங்களிலிருந்து வேறுபடுகிறது. இதன் மொழி அழகும் நுட்பமும் அதிக கச்சிதத்தன்மை கொண்டது என்பதைக் காணமுடியும். வரலாற்றுபூர்வமாகவும், மதம்சார்ந்தும், நிலம்சார்ந்தும், நாட்டார் கதைகள் சார்ந்தும், தொன்மங்கள் சார்ந்தும் பல்வேறு சரடுகள் இதனுள் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே ஒரு மானுட ஆவணம் என்ற அளவிலும் இதுவொரு முக்கியமான படைப்பு. கதையோட்டத்தைப் பொறுத்தமட்டில், என்ன நடந்தது என்பதாக அல்லாமல், சம்பவங்கள் நடைபெறும்போதே அவை எவ்வாறு, ஏன் நடந்தன என்று விவரிக்கும் சவாலையும் ஆசிரியர் எடுத்துக்கொண்டுள்ளார். மகிழ்ச்சியும் துக்கமும் தனிப்பட்ட நபரின் செயல்விளைவுகளே; அச்செயல்கள் தற்காலத்திலோ முற்பிறவியிலோ நடந்திருக்கலாம். எனவே, சிலப்பதிகாரம் மனிதர்களின் மறுபிறப்பு சார்ந்த நம்பிக்கைகளையும் ஓர் எல்லைவரை இவற்றை நிகழ்த்தும் தெய்வங்கள், பேய்கள், வித்யாதரர்கள் போன்றவற்றின் இருப்பையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. தற்போது நாம் இவற்றை மூடநம்பிக்கைகள் என்று சொல்ல முற்பட்டாலும், இவையெல்லாம் பொதுவாக இந்திய மரபு சார்ந்து பெரும்பான்மை இந்திய மக்களால் நம்பப்படுபவையே.
இது சமணர்கள் சொல்ல விரும்பிய அறநெறிக் கதை. இக்காப்பியம் எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழ் நிலத்தில் வேதச் செயல்பாடுகளும் இந்துமத கொள்கைகளும் மேலோங்கி வந்துகொண்டிருந்தன. ஆனால், சமணர்கள் தங்கள் காப்பியத்தில் அவை குறித்து கேள்விகள் எழுப்பவில்லை; அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கமும் தென்படவில்லை. ஆனாலும் அவற்றையெல்லாம் தங்கள் காப்பியத்தில் உள்ளிழுத்துக் கொண்டு, அவற்றிற்கு சமணமுறைப்படி விளக்கமளித்தனர், சமணத்தின் தனித்தன்மையை தக்கவைத்தபடியே இணைந்து வாழ விரும்பினர்.
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், மதரீதியாகவும் தன் தேடல்கள் சார்ந்தும் ஒரு சமணர் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. நூலிலேயே பல இடங்களில் சமண சிந்தனைகள் விரிவாக வலியுறுத்தப்பட்டுள்ளன. இக்காப்பியத்தை எழுதியவர் யாராக இருந்தாலும், அவர் ஒரு சிரத்தையுள்ள சமணர் என்றும் அதேசமயம் தன் காலகட்டத்தின் பிற மதங்கள் மீது காழ்ப்பில்லாதவர் என்றும் சொல்ல வேண்டும். அவர் ஓர் அறநூலை இயற்றும் நோக்கில் இக்கதையைத் தேர்ந்தெடுத்திருப்பதும் வெளிப்படையானதே. ஏனெனில் நூலின் இறுதியாக, முப்பதாவது காண்டத்தில், ஆசிரியர் தன் சொந்தக் குரலில் பேசுகிறார். அதில் வாழ்க்கை நடத்தை சார்ந்த சமண விதிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.
இளங்கோவடிகள் தன் காலகட்டத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவந்த, பெரும்பாலான வாசகர்கள் முன்னரே அறிந்த பாடுபொருளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. கதைவரிசைப்படி சிலம்பின் கதைக்கு தொடர்ச்சியாக அமையும் மணிமேகலையின் கதை காலத்தால் முன்னரே எழுதப்பட்ட காவியம் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும், அது தமிழ் நிலத்தில் இருந்த பெளத்த மதத்தின் நிலையை விவரிக்கும் காப்பியம். சமணம், பெளத்தம் இரண்டுமே இந்து மதத்திற்கு வெளியே தனித்து இயங்கிவந்த காலத்தில், பௌத்த காப்பியத்தை நிகர்செய்யும் பொருட்டு சமண ஆசிரியர் தன் வாழ்நாளுக்கு உள்ளாகவே, ஒரு சமண காப்பியத்தை இயற்றிட வேண்டும் என்றும் அது பரவலாக வேண்டும் என்றும் விரும்பியிருக்கலாம். எனவே மணிமேகலையின் பெற்றோருக்கு சமண பின்புலம் அளிக்கப்பட்டு கதை உருவகிக்கப்பட்டுள்ளது.
பெயரைத் தவிர வேறு விபரங்கள் எதுவும் அதிகம் தெரியாத பெரும்பாலான இந்திய கவியாசிரியர்களின் காலகட்டத்தில், இளங்கோவடிகள் விதிவிலக்காக இருக்கிறார். நூலின் இறுதிப் பகுதியில் அவர் தன் கதையைச் சொல்லியிருக்கிறார். அதில் அவர் சேர மன்னனுக்கு இளையமகனாகப் பிறந்தது பற்றியும், ஆட்சிக்கு உரியவரான மூத்தவர் உயிருடன் இருக்கும்போதே இளையவர் மணிமுடியைக் கைப்பற்றுவார் என்று ஒரு ஜோதிடர் கணித்ததால், அவ்வாறு நடக்காமலிருக்கும் பொருட்டு இளவரசரான அவர் உலகியல் வாழ்வைத் துறந்து துறவியாகி மடாலயத்தில் இணைந்தது பற்றியும் விவரித்திருக்கிறார்.
இவையெல்லாம் கவியாசிரியர் தன் சொந்தச் சொற்களில் உரைத்திருப்பவை. ஆனால் அவர் சேர மன்னன் செங்குட்டுவனின் தம்பி என்றும், அவர் தற்கால சம்பவங்களை ஒட்டி, அதை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களைக் கொண்டும், புலவர்கள் மற்றும் காவிய நாயகியுடன் தொடர்புடையவர்கள் போன்றோரின் கூற்றின் அடிப்படையிலும் காவியத்தை எழுதினார் என்றும் சில கதைகள் உள்ளன. மறைந்த அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை தனது ‘தமிழ் இலக்கிய வரலாறு’, ‘காவிய காலம்’ ஆகிய நூல்களில் இந்தக் கதைகள் குறித்து கேள்வி எழுப்பி, அதற்கு எதிரான ஆதாரங்களுடன் வாதிட்டுள்ளார். கதை சமகால நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டால், காப்பியம் எழுதப்பட்ட காலத்தை நாம் பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கொள்ள வேண்டியிருக்கும். மொழியியல் ரீதியான ஆய்வு நோக்கில் பார்த்தால் ‘பங்களர்’ மற்றும் அதுபோன்ற பிற சொற்களின் பயன்பாடு மிகவும் பிந்தைய காலத்தைச் சேர்ந்தது; எனவே வையாபுரிப் பிள்ளை இக்காப்பியத்தின் காலகட்டமாக பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியை முன்வைக்கிறார். இதுவே நாம் பெரிதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் உள்ளது. ஏனெனில் கண்ணகி என்ற மனித உருவிலிருந்து பத்தினி தெய்வமாக உருமாற்றம் அடைவதும் அதன் தற்காலப் புகழையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் பிந்தைய தேதியே சரியான விளக்கமாக அமையும். மேலும் காப்பியத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்துள்ள நகர வாழ்வின் விரிவான வர்ணனைகள் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கின்றன; மாறாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியப் பாடல்களில் நாகரிக முதிர்ச்சியின் ஆரம்பநிலை வாழ்வே காணப்படுகிறது. அதேசமயம் இக்காவிய ஆசிரியர் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எழுதிய கவிஞர்களின் மரபான வழிமுறைகளையே பின்பற்ற முனைந்துள்ளார்.
ஒரு மனிதன் எவ்வாறு தெய்வ நிலையை அடைய முடியும், அல்லது இக்கதையை பொறுத்தவரை, ஒரு பெண் பலரால் வழிபடப்படும் இறைவியாக உருவெடுத்தது எப்படி எனும் கேள்வி எல்லா காலத்திலும் ஆர்வமூட்டக்கூடிய விஷயம்தான். ஒட்டுமொத்த இந்தியச் சமூகமாக நாம் இதுபோன்ற விஷயங்களில் இன்றுவரை கொண்டுள்ள தெய்வீக நம்பிக்கையும் இதை மேலும் பரிசீலிக்கத் தூண்டுகிறது. பொறுமையும் கணவன் மீதான பக்தியும் நிறைந்த மனைவியான கண்ணகி, தன்னைக் கைவிட்டு ஏழ்மையில் இருந்த கணவனை ஏற்றுக்கொண்டு, அவனைப் புகாரிலிருந்து மதுரைவரை பின்தொடர்பவளாக உருவகிக்கப்படுகிறாள். இவ்விதத்தில், பெண்மைக்கும் மனைவிக்கும் கவியாசிரியரின் காலம் முதல் இன்றுவரை அளிக்கப்பட்டு, தொடர்ந்துவரும் மரபான மதிப்பீடுகளை வலியுறுத்தும் விதமாய் அமைந்துள்ளது. நிரபராதியான தன் கணவன் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மதுரையின் பாண்டிய மாமன்னன் மீது கோபத்தில் கிளர்ந்தெழுவதும், அதைத் தொடர்ந்து மன்னனின் வீழ்ச்சியும் மதுரை மாநகரின் அழிவும் நம்பமுடியாத விதத்தில் சொல்லப்படவில்லை. இன்றைய சூழலில் அச்சம்பவங்களை ஓர் அரசியல் நடவடிக்கையாகக் காணும் வாய்ப்புள்ளது. ஆனால் அந்நாளில் சம்பவங்கள் நடைபெற்ற கதியில் அதுவொரு மதரீதியான வெளிப்பாடாகவும் தெய்வாம்சம் பொருந்திய நிகழ்வாகவுமே ஒப்புநோக்கப்பட்டது. அந்நாளில் கண்ணகி சராசரிப் பெண்ணல்ல; அவள் அதுவரை இருந்துவந்த வாழ்வின் தளத்திலிருந்தே பெண்மையின் உச்சம் நோக்கி உயர்ந்தவள். மக்கள் அவளை இறையம்சம் கொண்டவளாகவே காணத் தொடங்கினர்.
இந்தப் பின்னணியிலேயே நூலாசிரியர் தமிழர் வரலாற்றின் மூன்றாவது பேரரசைக் கதைக்குள் கொண்டுவருகிறார். கண்ணகி இறைவடிவமாக அடையாளம் காணப்பட்டதால், அவளுக்கென ஒரு கோயில் கட்டியாக வேண்டும். கோயில் என்பது இந்து வேதமுறைப்படி அமைக்கப்பட்டு, வழிபாடு, சடங்குகள் என அனைத்தும் உள்ளடக்கியது. சேர மன்னனைச் சில அரசர்கள் இழிவாகப் பேசியதால் அதையே காரணம் காட்டி, அவன் வடக்குநோக்கிப் படையெடுத்துச் சென்று அவர்களை வெல்கிறான். இமாலயத்தின் வடகோடி நிலத்திலிருந்து பொருத்தமான கல்லைக் கொண்டுவருகிறான், கங்கையில் புனித நீராட்டப்பட்ட அந்தக் கல் அவனது தலைநகரான வஞ்சிக்கு அருகே கட்டப்பட்ட கோயிலில் நிர்மாணிக்கப்படுகிறது. இவ்வாறாக கவியாசிரியர் தமிழ் நிலத்தின் மூன்று மாமன்னர்கள், பேரரசுகள், தலைநகர்கள் பற்றிப் பேசுகிறார் — புகாரை ஆளும் வரலாற்றுப் பெருமைகொண்ட சோழ வம்சத்தை சேர்ந்த மன்னர்கள்; மதுரையைச் சேர்ந்த பாண்டியர்கள்; வஞ்சியிலிருந்து சேரர்கள். கடல்கொண்ட புகார் இப்போதும் ஒரு கிராமமாக எஞ்சியிருக்கிறது; மதுரையோ இன்றளவும் தொன்மையான சிறப்புகளுடன் நீடிக்கும் நகரம்; வஞ்சியைப் பொறுத்தவரை அதன் இடம் குறித்த சர்ச்சைகள் இன்றுவரை அவ்வாறே தொடர்ந்தாலும், அதன் இருப்பு எப்போதும் சந்தேகிக்கப்பட்டதில்லை. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள செங்குட்டுவன், சோழ மன்னர்களின் பெயர்கள், அதுபோக இலங்கையைச் சேர்ந்த ஒரு மன்னனின் பெயர் யாவும் வரலாற்றுரீதியாக உண்மையானவை.
கதைமாந்தர்கள் கடந்து செல்லும் பாதையில் இடம்பெறும் நாட்டுப்புறப் பகுதிகளை கவியாசிரியர் யதார்த்தச் சித்தரிப்புகளாக அளித்திருக்கிறார்; அச்சித்தரிப்புகளின் துல்லியத்தன்மை ஆர்வமூட்டக்கூடியது. பாண்டி நிலத்து மறவர்கள் குறித்தும் சேர நிலத்துக் குறவர்கள் குறித்தும் அளித்துள்ள நுண்விவரங்கள் இன்றளவும்கூட காணக்கிடைப்பவை. மதுரை அருகே இருக்கும் சிறுமலையின் மலை வாழைப்பழங்கள் உள்ளிட்ட சிறிய தகவல்கூட சரியாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை வர்ணனைகளின் துல்லியத்தன்மைக்குச் சான்றாகக் கூறலாம்; சிறுமலையின் பழங்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளன. கவி இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களின் மீது ஈர்ப்பு கொண்டிருந்தாலும், தான் பதிவுசெய்யும் புறவயத் தகவல்கள் குறித்தும் அதிக சிரத்தையுடன் இருந்திருப்பது இதிலிருந்தே நிரூபணமாகிறது. இக்காப்பியம் மனித வாழ்வின் யதார்த்த அம்சங்களையும், மதரீதியான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் ஒரே தளத்தில் இணைக்கிறது. இன்றைய நோக்கில் நமக்கு இது அசௌகரியமாகத் தோன்றலாம், ஆனால் அவர் மேற்கொண்ட முறை பிரக்ஞைபூர்வமானது. ஒருவேளை இது தாந்தே தனது காவியமான Divine Comedy வர்ணனைகளில் செய்ததைப் போன்ற, நிலமும் நிலத்துக்கு அப்பாற்பட்ட வெளியும் இணைந்து செயல்படும் புள்ளி என்றுதான் சொல்ல வேண்டும்.
சிலப்பதிகாரம் என்ற காவியத்தை, அதன் அழகியல் நோக்கில், உலகின் மிகச்சிறந்த காவியங்களுடன் ஒப்பிடலாம் – குறிப்பாக, ஹோமர் மற்றும் தாந்தேயின் காவியங்களுடன். வீரயுக காலகட்டத்தில் அல்லாமல், மதம்சார்ந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டது என்ற விதத்தில் இளங்கோ தாந்தேவுக்கு நெருக்கமானவர். சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் அறிவார்ந்த துல்லியத்தன்மையும் கற்பனையும் அவரை உலகக் கவிஞர்களின் வரிசையில் ஒரு மகாகவியாக தாந்தேவின் அருகில் நிறுத்துகிறது. ஆனால் அத்தகைய விமர்சன ஆய்வு நடப்பதற்கு சிலப்பதிகாரத்தின் கதை உலக வாசகர்களிடம் பரவலாகச் சென்றடைய வேண்டும். ஆங்கிலத்தில் வெளிவருவதன் வழியே நாளடைவில் அத்தகைய பரிச்சயம் ஏற்படும் என்றும், அது இளங்கோவடிகளை விமர்சனபூர்வமாக அணுகி, உலகக் கவி மரபின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராக அவரை அடையாளம் காண வழிவகுக்கும் என்றும் நம்பலாம்.
டி.ஏ. பாரி
டி.ஏ.பாரிஇலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். ஈரோட்டில் வசிக்கிறார். ஆங்கில சிறுகதைகளை, பிரதானமாக ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஒரே வரியில் சிறப்பு என கூறிவிடலாம். கா .நா.சுவின் மொழிநடையில் எழுதுவதென்பது எவ்வளவு அவரது எழுத்தை வாசித்திருந்தால் இது சாத்தியம்? நிச்சயமாக அவரை உள்வாங்கி அவரது நடையில் எழுதியது இலக்கியத்திற்கு மாபெரும் பங்களிப்பு தொடரட்டும் தங்கள் பணி நன்றி.
Thank you for the wonderful article. Kudos to the effort in bringing out the background of the book ‘Silapathigaram’ more lucidly apart from the background of the story that we all know. Certainly K N S is a visionary and the Tamil translation by T A P is equally laudable!
பெரும் முயற்சியில் மிளிர்ந்திருக்கிறார். கா. நா. சு🌷🌷🌷