/

மூன்று நேரடி வாசிப்புகள்- மேத்யு ஸேப்ருடர்

தமிழில்: நவீன் சங்கு

வால்ட் விட்மனின் கவிதைகள் நேரடியானவை, உரைநடைத்தன்மை கொண்டவை. இவரது மொழியை  மரியேன் மூர் “பூனைகளும் நாய்களும் படிக்கக்கூடிய எளிய அமெரிக்க மொழி” என வர்ணிக்கிறார்.  விட்மனின்  புல்லின் தளிர் என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள “என்னைப் பற்றிய பாடல்”  கவிதையை பள்ளிப்பாடத்தில்  வாசித்தது  உங்களுக்கு நினைவிருக்கலாம். அக்கவிதையின் தொடக்க வரிகள்:

நான் என்னை கொண்டாடுகிறேன் , என்னைப்  பாடுகிறேன் ,  

நான் ஊகிப்பதை நீயும் யூகிப்பாயாக,

இங்குள்ள ஒவ்வொரு அணுவிலும் உள்ள  நல்லவை  எனக்கானது, 

அவை உனக்கும் சொந்தமானது.

இச்சொற்கள்  ஒரு நாய்க்கோ,  பூனைக்கோ  புரியுமா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் பெரும்பாலான மக்களுக்கு புரியும். கவிதையின் ஆரம்ப பத்திகளில், கவிஞன் தன்னைப் பற்றியும், தான் பார்த்த, அனுபவித்த, சிந்தித்த விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கிறான், அவைதான் அவனில் கவியாளுமையை உருவாக்கின. அவன் புலன்வழி  அனுபவங்களில்,  எண்ணங்களில்  திளைத்திருக்கிறான். கதவுக்கு  வெளியே உட்கார்ந்து, மனதளவில் லயித்து, பெருமிதவுணர்வுடன் வெறுமனே இருக்கிறான்.

அவன் மனம் அலைகிறது, கூடவே கவிதையும் சேர்ந்து அலைகிறது.  சாதாரணமான, ஆனால் முழுவிழிப்புள்ள இந்த எண்ண ஓட்டம் கவிதையின் ஆறாவது  பத்தியில்  திடீரென குறுக்கிடப்படுகிறது.

ஒரு குழந்தை, கை நிறைய புற்களை காண்பித்து

புல் என்றால் என்ன ?’ என்று கேட்டது.

குழந்தைக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

அக்குழந்தையை விட மேலாக அது என்னவென்று எனக்கு தெரியாது

ஒரு குழந்தையுடன் நேரம் செலவிடும்  எவரும் இதுபோன்ற தருணங்கள் அளிக்கும் இன்பத்தை அறிவார்கள். இம்மாதிரியான  தருணங்கள்  சில சமயம் வேடிக்கையாகவும், சில சந்தர்ப்பங்களில்  அயர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும்.   

குழந்தை பெரியவர்களிடம் வந்து ஒரு கேள்வி கேட்கிறது. அக்கேள்வி ஒரே நேரத்தில் மிக சாதாரணமாகவும் — புல் என்று அழைக்கப்படும் இந்த பச்சை பொருள் என்ன, இது எங்கிருந்து வருகிறது, இது என்ன செய்கிறது — மீபொருண்மையானதாகவும்  இருக்கிறது: இந்த பொருள் எதற்காக?  இது ஏன் இங்கே இருக்கிறது?

கவிதையைப்பற்றி சிந்திக்க நாம் எவ்வாறு கற்பிக்கப்பட்டிருக்கிறோம் என்பதன் அடிப்படையில் நம்மிடம் சில பழக்கங்கள் உருவாகிவிட்டிருக்கிறது. இந்த கவிதையை வாசித்தவுடன்  உடனடியாக குழந்தை எதைப் பற்றியோ சொல்ல வருகிறது  (இளமை பற்றிய கருத்து? இறப்பு? அப்பாவித்தனம்?) , புல்லும் கூட (இயற்கை? வளர்ச்சி?) எதையோ குறிக்கிறது என யோசிக்க ஆரம்பிக்கிறோம். இந்த மாதிரியான அர்த்தம் தேடும் வாசிப்பு  நம்மை எளிதில் திசை திருப்பி, கவிதையில் விவரிக்கப்படும் காட்சியின் உண்மைத்தன்மையிலிருந்து  நம்மை விலக்கிவிடுகிறது. 

இந்த கவிதையில் புல் என்பது புல்லைத்தான் குறிக்கிறது. இங்கு ஒரு குழந்தை கை நிறைய புற்களுடன் ஒரு குறிப்பிட்ட கேள்வியை ஒரு குறிப்பிட்ட நபரிடம் கேட்கிறது.  இதில் சொல்லப்படும் புல் நாம் எங்கும் காணக்கூடிய வழக்கமான பச்சை நிற பொருள்தான், ஆனால் கவிதையின் மர்மம் என்னவெனில்,  இந்த சாதாரண பார்வை புல்லை எந்த விதத்திலும் குறைக்காமல் மேலும் கவித்துமான அர்த்தத்துடன் எதிரொலிக்கச்செய்கிறது. குழந்தைக்கு தோன்றியது போலவே கவிஞனுக்கும் வாசகனுக்கும் புல் மர்மமான ஒன்றாக புலப்பட ஆரம்பிக்கிறது.

குழந்தைக்கு எப்படி பதில் சொல்வது என்று கவிஞனுக்கு தெரியவில்லை. இருந்தாலும் நேரமும் ஆற்றலும் நல்ல நம்பிக்கையும் கொண்ட  பெரியவர்கள் செய்வதுபோல அவனும்  பதில்சொல்ல முயற்சி செய்கிறான்.

ஒரு குழந்தை, கை நிறைய புற்களை காண்பித்து,

புல் என்றால் என்ன ? என்று கேட்டது;

குழந்தைக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

அக்குழந்தையை விட மேலாக அது என்னவென்று எனக்கு தெரியாது.

நம்பிக்கையூட்டும் பச்சை பொருளால் நெய்யப்பட்ட அது

என் மனநிலையின் கொடியாக இருக்கலாம் என யூகிக்கிறேன்.

அல்லது அது இறைவனின் கைகுட்டையாக இருக்கலாம்,

ஒரு நறுமணப் பரிசாக ஒரு நினைவூட்டலாக 

இங்கு விட்டுச்செல்லப்பட்டிருக்கிறது,

எங்கோ மூலையில்  அதன் உரிமையாளரின் பெயரை தாங்கி நிற்கிறது,

நாம் கவனித்து பார்த்தால், அது யாருடையது  என்று சொல்லமுடியும்?

குழந்தையின் கேள்விக்கு  நேர்மையாக  பதில் சொல்ல வேண்டுமென்றால்  தனக்கு  உண்மையாகவே  பதில் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும், இருந்தாலும்  அவன்  அந்த கேள்வியிலிருந்து அவதானிக்க  ஆரம்பிக்கிறான். அவன் கற்பனையில் ’புல்’  பல்வேறு விதங்களில் வெளிப்பட தொடங்குகிறது. முதலில் புல் “என் மனநிலையின் கொடி” என கவிஞனின் கற்பனையில் வெளிப்படுகிறது. இங்கு கவிஞனின் மனநிலை அவனின் கவியாளுமையை சுட்டுகிறது. கூடவே  நேரடி அர்த்ததில் அவன்  புல்மேல் எப்படி அமர்ந்திருக்கிறான் என்பதையும் குறிப்பதாக இருக்கிறது. அந்த மனநிலை  ஒருவகையான பெருமிதத்துடன் வெற்றிமுழக்கம் போல கவிதையின் தொடக்கத்தில் விவரிக்கப்படுகிறது. அவன் புல்லில் வெறுமனே, கற்பனை செய்வதற்கான திறந்த மனதோடு அமர்ந்திருப்பதாக.…

கவிஞன்  புல்வெளியை “என் மனநிலையின்  கொடி” என்று சொல்லும்போது   ஒரு கணம் வேடிக்கையாக தனது அமைப்பை (உடலமைப்பையும்,  மன அமைப்பையும்)  ஒரு நாடு அல்லது ஒரு கப்பல் அல்லது கொடியைக் கொண்டிருக்கும் வேறு ஏதாவது ஒன்று  என்று கற்பனை செய்கிறான். இது ஒரு வகையான மிகைப்படுத்தல், இந்த வகையான கற்பனை ஒருவர் யதார்த்தவுணர்வால், உண்மையால், ஒழுங்கால் கட்டுப்படுத்தப்படாத போதுதான்  நிகழும். கவிஞனின் எண்ணங்களை பின்தொடர்ந்தால் அதில்  ஒருவகையான விசித்திரமும்,  இனிமையும், விடுதலையும் கொண்ட  கற்பனை தருணங்கள் இருப்பதை உணர முடிகிறது. இந்த மனநிலை குழந்தைக்கு பதிலளிக்க முயலும்போதுதான் கவிஞனுக்கு சாத்தியமாகிறது.

இந்த கவிதையில் முதலில் புல்வெளி என்பது ஒரு கொடி என்று சொல்லப்படுகிறது. பிறகு அது உலகில் உள்ள அனைவருக்குமான  கடவுளின்  சொந்த  கைகுட்டையாக இருக்கலாம் என்று  விவரிக்கப்படுகிறது. இப்போது புல்வெளி எதிர்பாராத இணைப்பில், கடவுள் “திட்டமிட்டே  விட்டுச்சென்ற” கைக்குட்டையாக மாறுகிறது. இந்த ஒப்பீடு எதிர்பாராதது போல் தோன்றலாம், ஆனால் நீங்கள் இதைப்பற்றி எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறீர்களோ, புல்லுக்கும்  நறுமணமான கைக்குட்டைக்குமான ஒற்றுமையை உணர்ந்தால், அந்த ஒப்பீடு  அவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும். புதிய புல்லின் மணத்தை  உணர்ந்த எவரும், அதை  “நறுமணம் நிறைந்த  பரிசு” என்று கற்பனை செய்ய முடியும்.

ஒரு கைக்குட்டை போல  புல்வெளி , வேண்டுமென்றே இங்கே விடப்பட்டுள்ளது: தற்செயலாக அல்ல, இறைவனால் “திட்டமிட்டு  விட்டுச்செல்லப்பட்டுள்ளது”.  இங்கு புல்வெளி  காதல் நாவல்களில்  வருவது போல, தன் காதலனான  மாவீரன் கண்டுபிடிப்பதற்காக காதலியால் விடப்பட்ட அடையாளம் போல ஆகிவிடுகிறது. இந்த உவமையில்  இனிமையான ஏதோ ஒன்று இருக்கிறது, ஒரு கணம் வால்ட்-விட்மேன் தனக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள விளையாட்டுத்தனமான காதல் உறவை கற்பனை செய்வது போல.  கைக்குட்டையின்  எங்கோ ஒரு மூலையில் அதன் உரிமையாளனின் பெயர் நுணுக்கமான சித்திர எழுத்தால் பொறிக்கப்பட்டிருப்பது போல “இதன் நுனியிலும் எங்கோ அதன் உரிமையாளரின் பெயர் உள்ளது”.  ஆனால் நாம் அந்த எழுத்துக்களை படிக்க முடியாது. இந்த வரியை நான் வாசிக்கும்போதெல்லாம், எல்லா படைப்புகளுக்கும் திறவுகோலாகவும் கையெழுத்தாகவும்  ஒவ்வொரு அணுவிலும்  மறைந்திருக்கும் டிஎன்ஏ நினைவுக்கு வருகிறது . ஆனால், நிச்சயமாக, விட்மேனுக்கு டிஎன்ஏ பற்றி எதுவும் தெரியாது. விட்மேனைப் பொறுத்தவரை, புல் என்பது இறைவனால் வேண்டுமென்றே விட்டுச் செல்லப்பட்ட ஒன்று, இது யாருடையது என்ற கேள்வியை நாம் கேட்போம், அதன் வழியாக  அனைத்திற்கும் அடிப்படையான  தெய்வீகமான உறைவிடத்தை ஒரு கணம் உணர்ந்து கொள்வோம். 

அடுத்து கவிதைசொல்லி  குழந்தைக்கு பதிலளிக்கத் தொடங்குகிறார், அவர் புல் என்றால் என்ன என்பதன் தாவரவியல் விளக்கத்தை சொல்லவில்லை. குழந்தை உண்மையில் தெரிந்து கொள்ள விரும்புவது இதுவல்ல என்பதை அவர் உணர்ந்திருக்கலாம், அல்லது கேள்விக்கு வேறு வழியில் பதிலளிக்க முயற்சிப்பது மிகவும் வேடிக்கையாக, சுவாரஸ்யமாக அல்லது சரியாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

கவிதைசொல்லி கொஞ்சம் சுயநலத்துடன், குழந்தைக்கு சுவாரசியமாக இருக்கும் பதிலைவிட, தன்னைச்சார்ந்த பதிலை மட்டுமே யோசித்துக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஒருவேளை அவர் கவிதையில் அதுவரையிலான எண்ணங்களை தொடர்வதில் இன்னும் மூழ்கி இருக்கலாம், மேலும் குழந்தை மொழிக்கு விரைவாக மாற முடியவில்லையோ, அல்லது விருப்பம் இல்லாமலிருந்தாரோ என்று தோன்றுகிறது. அல்லது குழந்தையின் புரிதல் திறனை மிக உயர்வாக எண்ணி இருக்கலாம். எப்படியிருந்தாலும், குழந்தை பின்னர் எந்த அளவிலும் பேசவில்லை—அக்குழந்தை பக்கத்தில் ஏதாவது வேடிக்கையான பெரியவரைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டிருக்கலாம். சிக்கலான பதில் இருந்தபோதிலும், பேச்சாளரின் வசீகரிக்கும் தாளமும் மயக்கும் கவர்ச்சியும் குழந்தையை குறைந்தபட்சம் சிறிது நேரமாவது வைத்திருக்கும் என்று என்னில் ஒரு பகுதி (நம்பிக்கையுள்ள கவிஞர்) நம்பியது.

அல்லது இந்த புல்வெளியே ஒரு குழந்தையாக இருக்கலாம்,
இயற்கை உருவாக்கிய குட்டி மழலை.
அல்லது ஒரே மாதிரியான சித்திர எழுத்துகளாக இருக்கலாம்,
அதாவது, விசாலமான பகுதிகளிலும் குறுகிய பகுதிகளிலும்
ஒரேபோல் முளைத்திடும்,
வெள்ளையர்களிடம் போல கருப்பர்கள் நடுவேயும் வளர்வது,
கனக், டக்கஹோ, காங்கிரஸ்காரர், கஃப் என
அவர்களுக்கெல்லாம் ஒரே மாதிரியானதை கொடுக்கிறேன்,
அவர்களிடமிருந்து ஒரே மாதிரியானதை பெறுகிறேன்.
இப்போது அது கல்லறைகளின் அழகிய திருத்தப்படாத முடி போல் தோன்றுகிறது.

புல்லே ஒரு குழந்தையாக இருக்கக்கூடும் என ஈடுசெய்யும் விதமாக கவிஞன் கற்பனை செய்வது எப்போதும் எனக்கு ஒரே சமயம் துக்கமாகவும் வேடிக்கையாகவும் தோன்றியுள்ளது, குறிப்பாக உண்மையான குழந்தை அங்கு இல்லை என்பதை நான் உணரும் போது. கவிதையின் இப்பகுதியைப் பற்றி நான் எப்போதும் ரசித்த விஷயங்களில் ஒன்று, “நான் யூகிக்கிறேன்” என்று திரும்பத் திரும்பச் சொல்வது. கவிஞர் தனக்கு உண்மையில் தெரியாது என்பதை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல் அதை கொண்டாடவும் செய்கிறான்.

அவன் வசதியாக ஊகங்களில் மகிழ்ச்சி அடைகிறான். இதன் வழியாக புத்தகம் இல்லாமல் கற்பனை மூலம் அடையக்கூடிய அறிவு ஒன்றை கவிதை நிரூபிக்கிறது. புல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு தாவரவியல் சார்ந்து பதில் சொல்ல, நீங்கள் புத்தகம் அல்லது ஆராய்ச்சியை வாசிக்கலாம் அல்லது நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.  அது பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கலாம். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட வகையான அறிவாகவே இருக்கும்.

2

அமெரிக்க கவிஞர்களில் வாலஸ் ஸ்டீவன்ஸ் அவ்வளவாக அறியப்படாதவர் என்றே சொல்லலாம். சட்டக்கல்வி முடித்துவிட்டு உயர்தர காப்பீட்டு நிறுவனமான  ஹார்ட்ஃபோர்ட் விபத்து மற்றும் இழப்பீடு நிறுவனத்தின் துணைத்தலைவராக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே படிப்படியாக அவர் காலத்தின் மிகவும் பிரபலமான கவிஞர் ஆனார்.

வழக்கறிஞராக பணியாற்றிய கவிஞர்  ஸ்டீவன்ஸின் முரண்பட்ட வாழ்க்கை , என் சொந்த தந்தையின் வாழ்க்கையைப்போலவே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.  என் தந்தை வருமான வரித்துறையின் வழக்கறிஞராக  பணியாற்றியவர். அந்த வாழ்க்கையில்  அடிப்படையான மர்மம்  இருக்கிறது: என் தந்தை கித்தார் வாசிக்கக்கூடியவர்,  பாடவும் செய்வார். அவர் ஒரு தொழில்முறை இசை கலைஞன் அல்ல ஆனாலும்  கித்தார் வாசிப்பிலும், பாட்டிலும் எப்போதும்  தன்னை நிறைத்துக்கொள்பவர்.  ஒரேசமயம் ஆழமான நுண்ணுணர்வு கொண்ட கருணையுள்ள  நபராகவும், தன் வழக்கறிஞர் பணியில் இரக்கமற்றவராகவும் இருந்தார்; கோட் அணிந்த நாட்டுப்புற பாடகர் அல்லது கித்தார் இசைக்கும் தொழிலதிபர் என அவரை குறிப்பிடலாம். 

ஸ்டீவன்ஸின் கவிதைகள் அருவமானவை. தனித்துவமானவை என்றாலும் , முதல்வாசிப்பில் அவர் எதைப்பற்றி எழுதுகிறார் என்பது நமக்கு  தெளிவாக புரிவதில்லை. சில சமயம் அவர் கவிதையில் பேசுபொருளே இருப்பதில்லை. அவருக்கு அன்றாட வாழ்க்கையின் மீது  அக்கறையோ, விருப்பமோ  இருப்பதாக தெரியவில்லை. அவர் கவிதைகள்  இந்த பூமியை சார்ந்தவை அல்ல. எங்கோ கனவு வெளியில்,  பிறிதொரு வெளியில்  நிகழ்பவை.  

வாலஸ் ஸ்டீவன்ஸ்

ஸ்டீவன்ஸின் முதல் கவிதைத்தொகுப்பான  ‘ஹார்மோனியம்’ 1923 ல் வெளியிடப்பட்டது. அப்போது  அவருக்கு நாற்பத்தி மூன்று வயது, இன்று  எழுதத்தொடங்கும்  கவிஞனுக்கு நாற்பது வயதிற்கு மேல் முதல்தொகுப்பு என்பது  மிகப்பழைய வழிமுறை  என்று  தோன்றும்.

ஹூன் மாளிகையில் தேநீர் 

எந்த குறையுணர்வும் இல்லை, 

ஏனெனில் நான் ஊதாவில் கரைந்துவிட்டேன்

அந்தியில், நீ குறிப்பிடும்  தனித்த  காற்றுவெளியில். 

என்னில் நான் நிறைந்திருந்தேன்.                                                           

என் தாடியில் தெளிக்கப்பட்ட அந்த புனிதமான நீர் எது?
என் காதோரங்களில் ரீங்கரிக்கும்   கீதம் ?
எந்த  பெருங்கடலின் அலைகள் என்னை அடித்துச்சென்றன? 

என் மனதிலிருந்து புனிதநீர் பொன்னென  பொழிந்தது,                                                 அவர்கள் கேட்ட கீதங்களை என் காதுகளே உருவாக்கின.
நானே அப்பெருங்கடலின் திசைமாணியாக இருந்தேன்:

நான் நடந்த , பார்த்த உலகம் நானே என கண்டுகொண்டேன்
அல்லது கேட்டதும், உணர்ந்ததும் என்னிலிருந்து உருவாகியவைதான்;
அங்கு நான் என்னை இன்னும் உண்மையாக, இன்னும் விசித்திரமாக உணர்ந்தேன்

இங்கே நாம் கனவுத்தன்மை மிகுந்த ஒரு நிலத்தில் இருப்பதை உணர முடிகிறது. தலைப்பு நேரடியாக உள்ளது, அதாவது  குறிப்பிட்ட இடத்தின் (ஹூனில் உள்ள மாளிகையில்) ஒரு நிகழ்வை (தேநீர்) குறிக்கிறது. ஆனாலும் சொற்களை தனித்தனியாக ஆராய்ந்தால், ஹூன் என்ற இடம் உலக வரைபடத்தில் எங்கும் இல்லை. கவிதையில் கவிதைசொல்லிக்கு பெயர் இல்லை, மேலும் நீ என கவிதைசொல்லி அழைக்கும் முன்னிலையில் இருப்பவருக்கும் பெயர் இல்லை. அந்த ’நீ’ யை “மிகத்தனிமையான காற்றுவெளி”  என்றும் சொல்கிறார். 

இந்த கவிதையில்  கவிதைசொல்லி தன்னை  மறைமுகமாக அஸ்தமனமாகும் சூரியனுடன் ஒப்பிடுவதுபோல தெரிகிறது. இக்கவிதையை  வாசிக்கும்போதெல்லாம்  நான்  ஒரு அந்நியனாக அந்நிய நிலப்பரப்பில் இறங்குவது போலவும், உருமாறுவதுபோலவும் உணர்ந்திருக்கிறேன். வாசகன் இதில் விவரிக்கப்பட்டிருப்பது உண்மையான  பௌதீகமான நிகழ்வு என்பதுபோல  உணரமுடியும். 

“என் தாடியில் தெளிக்கப்பட்ட தைலம் எது?”

“என் காதருகில் ஒலித்த கீர்த்தனங்கள் என்ன?”

இது ஒரு தனித்துவமான விழிப்புநிலை, பிறிதொரு உடலில் விழித்தெழுதல் போல. “தனித்த  காற்றுவெளி” என்ற சொல்லாட்சியின்  முழுமையான அர்த்த சாத்தியத்தை  சிதைக்காமல்  அதை தொகுத்துக்கொள்வதோ அல்லது அதை வேறொருவகையில் விளக்கம் அளிக்கவோ முடியாது  என்றே நினைக்கிறேன். இந்த சொல்லாட்சியில்  காற்றுவெளி  தனிமையானது மட்டுமல்ல, அது வசீகரமானது.  ஒருவகையில் அதன் இருப்பு அழகானதும்கூட. இந்த காற்றுவெளி, கவிதைசொல்லியிடம்  யாரோ  சொன்னது போல, பிறவெளிகளில் இருந்தெல்லாம் “தனித்தது”.  காற்று, இயற்கையிலேயே  ஏதோவொரு வகையில் உள்ளுறைந்த  தனிமை கொண்டது என்பதை அந்த சொல்லாட்சி சுட்டுவதாக இருக்கலாம்.  நான் ஒரு கணம் இதைப்பற்றி யோசிக்கிறேன், சிலவை  தனிமையானவை, சில மிகமிகத்  தனிமையானவை. 

இந்தக் கவிதையை  வாசிக்கும்போது  அதன் விவரணையிலிருந்து அந்த சூழலை கற்பனை செய்ய  முடியும்:  ஒரு கனவில் வருவது போல கொஞ்சம்  பரிச்சயமானதாகவும், அதே சமயம் பரிச்சயமற்றது  என்றும் உணரச்செய்யும்  சூழல். கவிதை குறிப்பிடும் ஹூனில் உள்ள மாளிகையில்  பரவசமும், தொந்தரவும்  தரக்கூடிய நமக்கு முன்பு அறிமுகமில்லாத அனுபவங்களை, உணர்வுநிலைகளை அடையமுடியும். கவிதைசொல்லி  “அங்கே” தன்னை காண்கிறார், அவர் என்ன நடக்கிறது என்பதை அனுபவிப்பவர் மட்டுமல்ல, அந்த பெரிய அதிசயத்தின் உறைவிடமாகவும்  மாறுகிறார்: அவர் மனதில்  பொன் தைல மழை பொழிகிறது , அவர் காதுகள் அவர்கள் கேட்ட கீதங்களை பாடுகின்றன.

3

ஒரு பெரிய இழப்பிற்குப்பிறகு நாம் அடையும்  உணர்வை  பெயரிட வேண்டும் என்பதால், அதை “துக்கம்” என்று அழைக்கிறோம். ஆனால் அதை அனுபவித்த எவருக்கும்  எந்தவகையிலும்  வரையறுத்துவிடமுடியாத  அச்சமூட்டும், நிலையற்ற, சிக்கலான  உணர்வுநிலையை  சுட்ட முயலும் வெறும்  சொல்தான் “துக்கம்”  என்பது  தெரியும். ஒரு சிக்கலான  உணர்வுநிலையை  சுட்டும்   பொதுதளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லை  விலக்கிவிட்டு, மொழி வழியாக, அதன் நேரடித்தன்மை வழியாக, அந்த உணர்வுநிலையை  மறுவரையறை செய்ய  முயல்வது: இது ஒரு சாகசமான  செயல்.

பிரெண்டா ஹில்மேனின் (Brenda Hillman) கவிதைத் தொகுப்பான “டெத் டிராக்டடெஸ்(Death Tractates) 1992 ல் வெளியானது. அந்த தொகுப்பின் முன்னுரையில் அவரது வழிகாட்டி  இளம் வயதிலேயே திடீரென இறந்ததை ஒட்டி அக்கவிதைகளை எழுதியதாக சொல்கிறார்.

அந்த கவிதைகள் உற்றவரின்  திடீர் மரணம் உருவாக்கும் அதிர்ச்சியை, நிலைகுலைவை, அதன் வழியாக  சென்றுசேரும் தீவிரமான உணர்வுநிலைகளை  நேரடியாக பிரதிபலிக்கின்றன.  அதே சமயம் அவை  விசித்திரமான முறையில்  தர்க்கபூர்வமானவையாக, நுண் விவரணைகளும், ஆழமான வாழ்க்கை அவதானிப்புகளும் கொண்ட   அறிவார்த்தமானவையாகவும்  இருக்கின்றன.

டிராக்டேட்(Tractate)  என்றால்  ஒரு விஷயத்தை முறையாக ஆராய்வதாகும். இந்த சொல் தொடர் முயற்சியின் மூலம் எதையாவது முழுமையாக புரிந்து கொள்வதற்கான முயற்சியை  குறிக்கிறது. என்னைப்பொறுத்தவரை ‘tractate’ என்ற சொல்  விட்ஜென்ஸ்டைனின் ஆரம்பகால தத்துவ நூலான டிராக்டேடஸ் லாஜிகோ-பிலாசோபிகஸை (Tractus logico-philosophicus) நினைவுபடுத்துகிறது.  இந்த நூலுக்கான குறிப்புகளை அவர் முதல் உலகப் போரில் சிப்பாயாக இருந்தபோது எழுதினார். நாம் வாசிக்கும் அதன்  இறுதி வடிவம்  மொழி, யதார்த்தம் , அறிவு  பற்றிய  சுருக்கமான, மிக பூடகமான வரையறைகளாக இருக்கிறது. 

விட்ஜென்ஸ்டைனின் டிராக்டேடஸ் லாஜிகோ-பிலாசோபிகஸை போலவே, ஹில்மேனின் டெத் டிராக்டேட்டும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு தர்க்கரீதியாக பதிலளிக்கும் முயற்சி. ஆனால் ஹில்மேனின் டிராக்டேட்டுகள் தர்க்கரீதியான முன்மொழிவுகள் என்பதைவிட  ஒரு தனிமனித மனம் ஒரு பேரழிவை சமாளிப்பதற்கு அதன் அனைத்து சாத்தியங்களையும்  ஒருங்கிணைக்கும் ஆவணம் என்று சொல்லலாம். ஹில்மேனின் கவிதை தொகுப்பு ’துக்கம்’ என்று நாம் அழைக்கும் உணர்வை மறுவரையறை செய்வதற்கான  முயற்சி.

’மஞ்சள் டிராக்டேட்’ என்ற கவிதையின் தொடக்க வரிகள்:

டெஃபோடில் மலர்களுக்கு  எவ்வளவு சாமர்த்தியம் ! 

இரக்கமற்ற  உடைவு நிகழும்வரை அவை காத்திருந்தன

நிகழ்ந்தபிறகு காரிடருக்கு(corridor) வந்தன

அனுதாபம் கொண்ட விளக்குகளைப்போல.

“அனுதாபம் கொண்ட  விளக்குகள்” என்று சொல்லாட்சியை யாரும் இதற்கு முன் சொல்லி நான் கேட்டதில்லை, அல்லது யாரும் டாஃபோடில் மலர்களை விளக்குகளுடன் ஒப்பிடுவதை நான் கேள்விப்பட்டதில்லை, இருப்பினும் ஒரு டாஃபோடில் மலரை பார்க்கும்போது, ​​​​அவை உண்மையில் அப்படித்தான் காட்சியளிக்கிறது என்பதை காணலாம். உலகில் உள்ள விஷயங்கள் மற்ற விஷயங்களாக மாறுவதை கவிஞர் அவதானிக்கிறார், இந்த அவதானிப்பு மொழியில், உருவகமாக நடக்கிறது. 

மலர்கள் அனுதாபத்தின் விளக்குகளாக மாறுகின்றன, மேலும் அனைத்து உருவகங்களாலும், அனைத்து கூறுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய புதிய அர்த்தத்துடன் பிரதிபலிக்கின்றன. மலர்கள் விளக்குகள் ஆகின்றன, விளக்குகளுக்கு அனுதாபம் உண்டு, மலர்களுக்கு அனுதாபம் உண்டு, அனுதாபத்திற்கு மலர்கள் உண்டு.

இந்த பத்தியை நான் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறேனோ அந்த அளவுக்கு அந்த வினோத சொல்லான “corridor” எனக்கு பிடித்திருக்கிறது. பொதுவாக corridor(தாழ்வாரம்) வீட்டுடன் தொடர்புடைய ஒரு உட்புற நடைபாதை என்று நினைக்கிறோம். ஆனால் இதற்கு ஒரு இரண்டாம் அர்த்தமும் உள்ளது, அதாவது அது குறுகலான ஒரு நிலப்பகுதியையும் குறிக்கிறது.  “corridor” என்ற சொல் “ஓடக்கூடிய” என்பதற்கான லத்தீன் சொல்லிலிருந்து வந்தது, ஒருவேளை அந்த சொல் ராணுவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம், படைவீரர்கள் நீண்ட குறுகலான நிலப்பகுதி வழியாக ஆபத்தான சமயங்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகச் செல்ல வேண்டியிருக்கும். இந்த கவிதையில் தாழ்வாரம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆராய்ந்தால், கவிஞர் வெளிப்புறத்தில் நடந்து கொண்டிருக்கிறார் என்பதை கவனிக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, அந்த சொல்லின் முதல் தொடர்பு உட்புற இடத்துடன், அதாவது வீட்டுக்குள்ளே உள்ள நடைபாதை சம்பந்தப்பட்டதாக இருக்கும். இந்த இருமையின் காரணமாகவும் அது வெளிப்படுத்தும் கடுமையான உணர்வுகளாலும் கவிஞர் துல்லியமாக இந்த வார்த்தையால் ஈர்க்கப்பட்டாருக்கிறார் என்று தெரிகிறது.

“corridor” என்ற சொல்லின் இரு அர்த்தங்கள் பற்றி இவ்விளக்கங்கள் கவிஞருக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. கவிதையை எழுதிக்கொண்டிருந்தபோது அவர் அதைப் பற்றிக் கருத்தில் கொண்டிருந்தார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு கவிஞர் எழுதும்போது, ஒரு சொல் சரியாக இருக்கிறதா என்பதைக் குறித்த நுண்ணுணர்வை உணர்கிறார். அவர் அங்கு வேறு சொற்களை எளிதாக எழுதியிருக்க முடியும்: டஃபோடில்ஸ் பூக்கள் புல்வெளி, வயல்வெளி, தோட்டம் என பலவற்றை கற்பனைக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் கவிஞரின் மனம் ‘corridoe’ என்பதை தேர்ந்தெடுத்தது; அது சரியான வார்த்தை என்று அவருக்குத் தெரியும், ஒருவேளை அது ஓர் அர்த்தத்தில் தவறான வார்த்தை, நாம் எதிர்பார்க்காத வார்த்தை. அரிஸ்டாட்டில் ‘தி பொயடிக்ஸ்’ என்ற புத்தகத்தில் எழுதியபடி, கவிஞர்கள் ‘ஒற்றுமைகளை பார்ப்பதற்கான கண்’ கொண்டவர்கள் என்பதன் அர்த்தம் இதுதான்; அதாவது, மற்றவர்கள் காணாத ஒற்றுமைகளையும் இணைப்புகளையும் பார்க்கக் கூடியவர்கள்.

கவிஞர் பெரும்பாலும் ஒரு சொல்லை அது ஒலிக்கும் விதத்தின் அடிப்படையில் தேர்வு செய்கிறார். அந்தத் தருணத்தில், கவிஞர் இதை விரிவாக விளக்க முடியாமல் இருக்கலாம்.  கவிஞருக்கு ஒரு சொல் “சரியாக” ஒலிப்பது என்பது அதன் ஒலியின் அம்சத்தை தாண்டி மேலதிகமான பலவற்றுடன் தொடர்புடையது: அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த வார்த்தை சுமந்து வந்திருக்கும் அனைத்து அர்த்தங்களின் அதிர்வுகளுடன் தொடர்புடையது. கவிஞரின் செவியோ வெறுமனே ஒலியுடன் தொடர்புடைய இசைக்கு மட்டுமே இசைவதல்ல. அது சொற்களில் உள்ள கருத்துகளின் இசை, மறைந்திருக்கும் பிரதிபலிப்புகள், சொற்பிறப்பியல்  (etymology), சொல்லின் கடந்த காலம், நமது தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் நமது கூட்டுத் நினைவுகள் ஆகிய அனைத்தையும் சுட்டிக்காட்டும் இசையை கேட்கும் நுட்பத்துடன் இருக்கிறது.

கவிஞர்கள் சொற்கள் மற்றும் மொழி மீது செய்துள்ள வாசிப்பு மற்றும் சிந்தனையின் காரணமாகவும், மொழியின் மீதான அவர்களின் தீவிர நேசத்தாலும், கவிஞர்கள் தங்கள் உள்ளுணர்வில் சரியாக இருப்பதை “அறிகிறார்கள்”. இது செசான் அவரது வாழ்க்கை முழுவதும் தீவிரமாக வண்ணம் வரைவதில் கொண்டிருந்த நெருங்கிய உறவின் மூலம், தனது Self-Portrait with Palette ஓவியத்தில், அந்த பச்சை புள்ளி தனது வலது கண்ணுக்குப் பின் செல்ல வேண்டும் என்று “அறிந்தது” போலத்தான் அல்லது ஒரு இசையமைப்பாளர், குறிப்பிட்ட நேரத்தில் ஓபோஸ் என்ன செய்கிறதோ அதைச் செய்யத் தொடங்க வேண்டிய அவசியத்தை அறிந்திருப்பது போலத்தான்.

ஹில்மேனின் கவிதைகள் கடினமானவை, அவை வார்த்தைகளின் அர்த்தங்களை உன்னிப்பாகக் கவனிக்கவும், மெதுவாகப் படிக்கவும், சொல்லப்பட்டவற்றின் அதிர்வுகளைப் பற்றி சிந்திக்கவும் கோருகின்றன. மிக முக்கியமாக, விஷயங்களுக்கு இடையே மறைமுகமாக இருக்கும் தொடர்புகளை ஏற்றுக்கொள்ள கேட்கின்றன. கவிஞர் மிகவும் ஆழமானவர். இழப்பின் உண்மைத்தன்மைக்கு நேர்மையாக இருக்க முயல்கிறார். அவருக்கு இது உண்மையாகவே அசாதாரணமாகவும் சிரமமான அனுபவமாகவும் இருக்கிறது. மொழியை தடுக்கும் ஏதோ ஒரு தடுப்புக்கு எதிராக நேர்மையுடன் பேச முயற்சிக்கிறார். 

கவிதை இவ்வாறு தொடங்குகிறது:

முதல் டிராக்டேட்

ஆன்மா தேர்ந்தெடுக்க வேண்டும்.
மற்ற எதுவும் அல்ல
ஆன்மா மட்டுமே
தேர்ந்தெடுக்க வேண்டும்.
அது மிகவும் புத்திசாலித்தனமாக,                                                                                              ஒளியின் உலகத்திலிருந்து ஒளியின் உலகத்துக்குத்                                                           அடி எடுத்து வைக்கிறது

ஒரு வெண்கொக்கு அதன் மங்கிய பிரதிபலிப்புகளில்                                                    மீன் பிடிப்பதைப் போல  –

அது தனது மரணங்களின் வழியே சென்றது  —
ஏனெனில் அது ஒரே வாழ்க்கையில் நம்பிக்கை வைத்தது,
அது என்றென்றும் நீடிக்கும் என்று.

இந்த கவிதை உண்மையில் என்ன சொல்கிறது என்பதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அவ்வளவு ஆபத்தான முறையில் நாம் கவிஞரின் துயரத்தை உணர முடியும். இந்த முதல் இரண்டு பத்திகளில் உள்ள “அது”, ஒரு வெண்கொக்கு போல அடியெடுத்து வைத்து, என்றென்றும் நீடிக்கும் என்று நம்புகிறது. அது இறந்தவரின் ஆன்மாவாகும்.

ஆன்மா, வெண்கொக்கு போல, “தன் கலங்கிய பிரதிபலிப்புகளின் வழியாக மீன் பிடிக்கிறது.” இன்று, நான் வசிக்கும் மெரிட் ஏரியைச் சுற்றி நடந்து சென்றபோது, ​​பனி படர்ந்த வெண்கொக்கு அதே செயலை செய்வதைக் கண்டேன். அது மஞ்சள் பாதங்களைக் கொண்டது, மிகவும் தீவிரமாகவும் மெதுவாகவும் தண்ணீரைப் பார்த்து, பதுங்கிக் கொண்டு வேட்டையாடுகிறது. நம்மால் காண முடியாத ஏதோ ஒன்றை ரகசியமாகத் தேடுகிறது. நிச்சயமாக “வெண்கொக்கு” (egret) என்ற வார்த்தை “வருத்தம்” (regret) என்பதற்கு மிக அருகில் உள்ளது.

அந்த பறவை தன்னுடைய பிரதிபலிப்புகளின் வழியாக மட்டுமல்ல, “தன் மரணங்களின் வழியாகவும்” மீன் பிடிக்கிறது. இங்கே கவிஞர் ஒரு கணம் எண்ணியிருப்பாரோ, எல்லா விதமான மாற்றங்களும் (ஒவ்வொரு கணமும், தண்ணீரில் பிரதிபலிப்பு மாறுகிறது, பின்னர் மீண்டும் மாறுகிறது) ஒரு விதமான மரணம் தான் என. அப்படியானால், உடலின் மரணமும் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும் ஆன்மாவின் இயக்கமும்  இன்னொரு விதமான மாற்றமாகவே இருக்கக்கூடும்.

அவள் இறக்க தொடங்கியதும் நான் அவளை அழைத்தேன்.
பிளம் மரங்கள் உள்நுழைய காத்திருந்தன,
அவற்றின் சுழன்றுசெல்லும் வழிகள்
ஒவ்வொன்றும்   பொழிந்தன
என்ன இது!                                                                                                                                     ஒவ்வொன்றும் நம்பிக்கையால் நிறைந்திருந்தது
திரும்ப திரும்ப அதே  சுழற்சி.                                                                               

அவள் இறந்து  சிலகாலம் கடந்தபிறகு                                                                                  நான் மீண்டும் அழைத்தேன்.                                                                                                     அவள் எப்படியோ மேன்மையானவளாகி விட்டாள் என நினைத்தேன்            ஏனெனில் அவள் கண்ணுக்கு தெரியாதவளாகிவிட்டாள்,
வடிவங்களுக்கிடையே நுணுக்கமாக மாறியிருந்தாள்.

முதலில் அவள் பதில் சொல்லவில்லை; ஆனால் எல்லாவற்றிற்கும் பதில் கிடைத்தது

கவிதை மிகவும் சாதாரணமாகவும், குறிப்பு போன்றும், குறைவான தர்க்கத்துடனும் இருக்கிறது. இது கிட்டத்தட்ட மூன்றாவது பத்தியில் இந்த முதல் வரியை போலவே உள்ளது,  “அவள் இறக்கத் தொடங்கியவுடன் நான் அவளை அழைத்தேன்” என்று கவிதை மீண்டும் தொடங்குகிறது. இது மிகவும் அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது. இது ஒரு வட்டப் பாதை போலவும்  திரும்பத் திரும்ப நிகழும் துக்கத்தின் இயல்புக்கு மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகிறது. முழு புத்தகமும் இந்த இழப்பை மீண்டும் மீண்டும் எழுதும் முயற்சிகளின் தொடராக இருக்கிறது.

ஒரு கணம், பிளம் மரங்கள் (வளைகுடா பகுதியில்  பொதுவாக காணப்படுபவை, அவற்றின் பிரகாசமான ஊதா நிற விதானங்கள்) நிறைந்த இடத்திற்கு செல்வது போல் கற்பனை செய்கிறார். அம்மர கூட்டங்களிடையே தொலைந்து போகலாம் என்றும் அவை எல்லாவற்றையும் மறந்து விடச்  செய்யும் என்றும் கற்பனை செய்கிறாள். ஆனால் அவளுடைய பயங்கரமான குழப்பம் அவளுக்கு ஒரு கணம்கூட ஆறுதல் தருவதில்லை. பிளம் மரங்களுக்குள் நுழைவது கவிஞருக்கு அதே பெரிய கேள்விகளை எழுப்பும்: என் தோழி எங்கே, அவள் எங்கே போனாள், அவள் ஏன் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டாள்.

மிகச்சாதாரண நிகழ்வுகள், மரங்கள், இலைகள், பழங்கள் போன்றவை கூட கவிஞருக்கு பெயரிட முடியாதவை போல தோன்றுகிறது. அந்த நிலையிலிருந்து மீண்டும் மொழிக்கும், அது வழியாக ஒவ்வொன்றையும் பெயரிடுவதற்கு  திரும்பும் போராட்டம் என இந்த கவிதைத்தொகுப்பை சொல்லலாம்.  வாசகர்களாக நாமும்  இடையிடையே மொழிக்குத் திரும்புவோம். நெருக்கடியான  தருணங்களின் போராட்டத்திற்கு பிறகு  அந்த தருணங்களுக்கான கச்சிதமான  பெயரை கண்டுபிடிப்பது.  இந்த கவிதைகளில் உள்ள  மொழிக்கு திரும்பும் போராட்டம் துக்கம் என்ற உணர்வுநிலையின்  பொதுவான  வெளிப்பாடுகளை   பிரதிநிதித்துவப்படுத்துகிறது. துக்கம் நம்மை மௌனமாக்கி விடலாம், ஆனால் வருத்தப்படவேண்டும் என்றால், நாம் பேசித்தான் ஆகவேண்டும். 

கவிதைசொல்லி பிளம் மரங்களை பற்றி விவரிக்கும் அந்த தருணமும் அதை குறிக்க பெரிய எழுத்தில் உள்ள ’என்ன’ என்ற  சொல்லும், எமிலி டிக்கின்சனை நினைவுபடுத்துகிறது. அந்த பெரிய எழுத்தும், டேஷ் (–) பயன்பாடும், ”அழைத்தேன்” என்ற சொல்லும் தான் காரணம். “அழைத்தேன்” என்பது டிக்கின்சன் கல்லறையில் எழுதப்பட்ட இரண்டு சொற்களில் ஒன்று: ” திரும்ப அழைக்கப்பட்டேன் “ (Called Back) கவிதையை முதலில் கற்க தொடங்கிய காலங்களில், மேசாசூசெட்ஸ் மாநிலத்தின் அம்ஹர்ஸ்டில் உள்ள அவரது சமாதிக்கு அடிக்கடி செல்வது வழக்கம். உதவி கேட்கவோ அல்லது அவரது கற்சிலை மேல் ஒரு சிறிய சின்னம் வைக்கவோ. (அவரது ஒரு கவிதையில் அதனை “her granite lip” என்று குறிப்பிடுகிறார்). என்னுடைய மிக மோசமான, மிக வலிமையற்ற தருணங்களில், அவர் பதிலளிப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன். இந்த கவிதையில் மறைந்தவர் பதிலளிப்பதில்லை, மற்றவை எல்லாம் பதிலளிக்கின்றன.

நவீன் சங்கு

சொந்த ஊர் சிவகங்கை. தற்போது கோவையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். இலக்கியம் தவிர தத்துவத்திலும், நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.