
காதோரமாக முதல் நரை எட்டிப் பார்த்தது. அதை வெளியே எடுத்து நீவும்போதுதான் மேலும் ஒன்றிரண்டு வந்திருப்பதைக் கவனித்தேன். சரியான தூக்கம் இல்லாமல் கண்கள் குழிக்குள் கிடந்தன. இப்படியே போனால் சீக்கிரத்தில் கருவளையம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நியூட்ரோஜுனாவை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்தேன். முப்பதேழு வயதில் முதல் நரை என்பது ஒரு விசயமே இல்லை. என்னுடன் படித்தவள்கள் பலருக்குத் தலையில் பாதி நரைத்துவிட்டது. உடல் பெருத்துவிட்டது. அவள்களையெல்லாம் ஒப்பிட நான் எவ்வளவோ தேவலாம். இதுவுமே எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. தொடர்ச்சியான அலைச்சல். கடந்த பத்து நாட்களாக என் அன்றாடமே குழம்பிப் போயிருந்தது.
நேற்று மாலை மெனக்கெட்டு அவளுக்காக சூப் செய்து எடுத்துப் போயிருந்தேன். பூசணியை அரைத்து வைத்த சூப்பை எடுத்து நீட்டினேன்.
எனக்கு வேணாம்.
ஏன்.. குடிக்க முடியலையா?
இல்ல பிடிக்கல.
ஏதாவது சாப்பிட்டாதான் கொஞ்சம் தெம்பா இருக்கும்.
தெம்பாகி?
அதற்கு மேல் எனக்கும் வற்புறுத்தத் தோன்றவில்லை. விட்டுவிட்டேன். மருத்துவமனையில் கொடுப்பதைச் சாப்பிடட்டும். அதுவும் பிடிக்கவில்லை என்றால் ட்ரிப்ஸ் போட்டுவிடுவார்கள். எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. யாருக்குத்தான் மருத்துவமனையிலிருக்கப் பிடிக்கிறது? இத்தனைக்கும் அறை சுத்தமாக இருந்தது. இப்போதெல்லாம் நாசியைத் துளைக்காத நறுமணம் வீசும் கிருமி நாசினிகள் வந்துவிட்டன. நாள் முழுக்க டெஸ்டுகள் கொடுக்க, அவற்றின் முடிவுகளை வாங்கி வர என்று மருத்துவமனையில் மேலும் கீழுமாக அலைந்து திரிந்தேன். அங்கிருந்த கேன்ட்டினில் கிடைத்ததைச் சாப்பிட்டேன். ஒரு பக்கம் நோயுற்றவர்களின் சோகை படிந்த கண்களையும் மறுபக்கம் அவர்களைத் தாங்கி நிற்கும் கவலை தோய்ந்த தோள்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. அம்மாவுக்குப் பிடித்த மாதிரி சூப்போ கஞ்சியோ திரவமாக உப்பில்லாமல் செய்துகொடுக்கலாம் என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு வீட்டுக்கு வந்து சூப் செய்து எடுத்துவந்தேன்.
நாள் முழுக்க அவளோடு அறையிலிருக்க வேண்டும். அவள் டிவி போடக்கூட அனுமதிக்கவில்லை. எவ்வளவு நேரம் போனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? அந்த அறையின் அமைதி என்னை ரொம்பவும் தொந்தரவு செய்தது. குறிப்பாக அங்கே மாட்டியிருந்த கடிகாரத்திலிருந்து வந்த டிக் டிக் ஒலி.
இன்றைக்கு மருத்துவமனைக்குப் போவதாக இல்லை. அப்பாவை உடனிருக்கச் சொல்லிவிட்டேன். இருவருக்கும் நல்ல காலத்திலேயே ஆவதில்லை. எலியும் பூனையுமாக இருப்பார்கள். எப்படியோ இத்தனை காலத்தைத் தள்ளிவிட்டார்கள். அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டேன். வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்தான். ஆனால், செய்யப் பிடிக்கவில்லை. ஒரு நாள் எனக்கு முழு ஓய்வு வேண்டும். இன்று எதற்காகவும் யாருக்காகவும் ஓட வேண்டியதில்லை. எனக்கே எனக்கென்று ஒரு நாள். இப்போதெல்லாம் ‘ஸ்லோ லிவ்விங்’ என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, அப்படி ஒரு நாளிலிருந்து பார்க்கப் போகிறேன். அந்த வார்த்தை எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது.
அடுப்படிக்குச் சென்று காபி வைத்தேன். வழக்கத்துக்கு மாறாகப் பாலும் சக்கரையும் கலந்த காபி. வீட்டு பால்கனிக் கதவை திறந்து காற்று வர அனுமதித்தேன். தூரத்து வீடொன்றிலிருந்து ‘மலையன்னை தருகிற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளையருவி’ என்று பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. சென்னை வீடு. நான் பிறந்து வளர்ந்த வீடுதான். எனக்கு எப்படியோ அந்நியப்பட்டுவிட்டது. பெங்களூருவைப் பிடித்துவிடும், சென்னை பிடிக்காமல் போகும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. சென்னையைப் பிடிக்கவில்லை என்றால் உண்மையில் சென்னையையே பிடிக்கவில்லை என்றா அர்த்தம்?
பிரதான பேப்பரை விட்டுவிட்டு வெள்ளிக் கிழமை இணைப்புத் தாளைக் கையிலெடுத்தேன். புதுப்பட விளம்பரங்களில் கண்களை ஓட்டியவாறு காபியை மெதுவாகக் குடித்தேன். ஸ்லோ லிவ்விங்கில் ஒரு நேரத்தில் ஒரு விசயத்தைத்தான் செய்ய வேண்டும். கையிலிருந்த பேப்பரை மடித்து வைத்துவிட்டு காபியை மிடறு மிடறாக அருந்தினேன். ஏதாவது வாய்க்கு ருசியாகச் செய்து சாப்பிட வேண்டும் போலிருந்தது. நேற்று சுட்டு மீதமான இட்லியை உதிர்த்து உப்புமா செய்யலாம். எனக்கு அது பிடிக்கும். கேசரி செய்து சாப்பிட்டால் இன்னும்கூட நன்றாக இருக்கும். வீட்டில் நெய் இல்லை. ஸெப்டோவில் நெய்யும் இன்ன பிற பொருட்களையும் ஆர்டர் போட்டேன். ஆர்டர் போட்ட பிறகுதான் பேசாமல் காலாற வெளியே நடந்துபோய் வாங்கிவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.
நெய் இல்லாமல் அம்மா கேசரி செய்ய மாட்டாள். பிரமாதமாகச் சமைப்பாள். அவளிடமிருந்த கைப்பக்குவத்தில் பாதிகூட கைவரவில்லை. அதற்கே அலுவலகத்தில் ஆஹோ ஓஹாவென்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த பிஜ்ஜு. மலையாளத் தமிழில் அவன் வழிவது ஊருக்கே தெரிகிறது. பைத்தியக்காரன்!
எதைத் தொட்டாலும் அவளின் சாயல் வந்து ஒட்டிக்கொள்கிறது. எப்போது அம்மாவிடமிருந்து விலகி வர ஆரம்பித்தேன்? எப்போதிலிருந்து அவளைத் தோழிபோல பாவிக்க ஆரம்பித்தேனோ அப்போதுதான் எங்களுக்குள் இயங்குவது எதிரெதிர் துருவ காந்த முனைகள் என்பது புரிய ஆரம்பித்தது.
பள்ளிக் காலத்தில் என் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த அந்த கொக்கன் சேதுவைப் பற்றிச் சொன்னபோது அவள் முகத்தில் தென்பட்ட உணர்ச்சியை எப்படி வருணிப்பது என்று தெரியவில்லை. அருவருப்புக்குப் பக்கமாக வைக்கலாம். என்னைக் குறைசொல்லத் தொடங்கினாள். படபடவென ஏதேதோ பேசிக்கொண்டே போனாள். அப்போது அவள் சொன்னது வார்த்தை மாறாமல் இன்னும் நினைவிலிருக்கிறது.
“நாமளும் ரொம்ப மினுக்கிக்கக் கூடாது.”
அழுவதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. அப்பாவிடம் கொண்டுபோய் விசயத்தைப் பெரிதுபடுத்தாதது மட்டுமே அவள் எனக்குச் செய்த ஒரே கைம்மாறு. இவள் படுத்திய படுத்தலில் மறுநாள் டியூசன் மாஸ்டரிடம் விசயத்தைக் கொண்டுபோய், அவர் அந்த கொக்கனை டியூசனைவிட்டு நிறுத்தி என்னை நானே தேவையற்ற குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்திக்கொண்டதுதான் மிச்சம். அப்போதே சுதாரித்துக்கொண்டேன். ஆண்கள் பற்றிய விசயங்களை அவளிடம் கொண்டுபோவதை நிறுத்திக்கொண்டேன். இருந்தும் இரையைத் துரத்தும் கழுகைப் போல் அன்றிலிருந்து அவள் பார்வை என்னைப் பின் தொடரத் தொடங்கியது. ரொம்பவும் நாசூக்காக வந்து கேட்பதாக நினைத்துக்கொண்டு அப்பட்டமாகக் கேட்டு வைப்பாள்.
“என்ன ப்ரீ.. இப்போலாம் அடிக்கடி மஞ்சள் கலர் டிரஸ்தான் போடுற. மஞ்சள்ல அவ்ளோ இருந்தாலும் திரும்பத் திரும்ப அதையே வாங்குற.”
விழாக்கள், விசேஷங்களில் நல்ல உடை உடுத்தி நான்கு பேரிடம் நின்று பேசும் மாதிரியான சூழ்நிலைகளில், அவளுடைய உடல் முழுவதும் கண் முளைத்துவிடும். அத்தனையின் பார்வையும் என்னைச் சுற்றி இருக்கும்.
உண்மையில் அம்மா என்னைவிடப் பேரழகி. அவள் பின்னால் மட்டும் என்ன ஆண்கள் சுற்றாமலா இருந்திருப்பார்கள்? நானே பார்த்திருக்கிறேன். என்னுடைய கல்லூரித் தோழிகளில் பலரும் அவளுக்கு ரசிகைகள். ஹாஸ்டலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அவளிடம் இருப்பதிலேயே சிறப்பான உடைகளை அணிந்து வருவாள். என்னுடைய அறையில் நடுநாயகமாக அமர்ந்துகொள்வாள்.
“கிரீத்தாவுக்கு நல்ல முடியுண்டு. அல்லே?”
“ம்மா.. அவளுக்குத் தமிழ்ல பேசினாலே புரியும்”
“ஞான் மலையாளம் படிக்கன்னு”
அப்போது என்னால் இயன்றதெல்லாம் அந்த இடத்திலிருந்து வெளியேறுவது மட்டும்தான்.
அம்மாவுடைய சொந்த ஊர் ஶ்ரீவி. என்னுடைய பத்தாம் வகுப்பு விடுமுறைக்கு அம்மம்மாவினுடைய வீட்டுக்குச் சென்றிருந்தோம். அது நான் ருதுவாகியிருந்த சமயம். அங்கு அதற்கு முன்பும் நிறைய முறை சென்றிருந்தாலும் அம்மமாவினுடைய படுக்கை அறையில் மாட்டப்பட்டிருந்த பழைய புகைப்படங்களை அப்போதுதான் கவனித்தேன். வயது வாரியாக, வரிசையாக அம்மாவின் புகைப்படங்கள். ரவிவர்மாவின் ஓவியப் பெண்களைப் போல இருந்தாள்.
அந்த முறை நானும் அம்மாவுமாக ஆண்டாள் கோவிலுக்குப் போயிருந்தோம். வார நாள். அதிக கூட்டமில்லை. உள்ளே நுழைந்ததும் யானைக்கு வாழைப்பழங்களைக் கொடுத்தாள். அது தலையை அசைத்து வாங்கிக்கொண்டது. கழுத்தில் கட்டியிருந்த மணி சிணுங்கி ஒலித்தது. நான் பக்கத்தில் போகப் பயந்தேன். சிரித்தாள். கோவிலுக்குள் கண் கலங்க நெக்குருகி ஆண்டாளைக் கும்பிட்டாள். லேசாக உணர்ச்சிவட்டவளாகத் தெரிந்தாள். உள்ளேயிருந்த கிணற்றைக் காட்டி “இதுலதான் ஆண்டாள் அழகு பார்த்துப்பாளாம்” என்றாள். கிணற்றை எட்டிப் பார்த்தோம். சில்லறைக் காசுகளால் நிறைத்திருந்தனர். தூண்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவளுக்காக காத்திருந்தேன். அம்மா அந்தக் கிணற்றிலிருந்து நகர்ந்து வரவில்லை. எதையோ தொலைத்துவிட்டவளைப் போல் அதன் உள்ளே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கிருந்து வெளியே வந்த பின் அம்மா சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.
கோவிலின் வெளிப் பிரகாரத்துக்குள் இருக்கும் கண்ணாடி மாளிகைக்குக் கூட்டிப் போனாள். அதற்கு முன் அங்கே போயிருந்த நினைவில்லை. சுற்றிலும் பொன்னிறக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டச் சுவர்கள். நாங்கள் இருவர் மட்டும் உள்ளே நுழைந்தோம். வேறு யாருமில்லை. சுற்றிச் சுற்றி எல்லா திசையிலும் எங்கள் பிம்பம். பிம்பத்துக்குள் பிம்பத்துக்குள் பிம்பத்துக்குள் பிம்பம் என்று மாயச் சுழல் போல அப்போது அந்த இடத்தில், மொத்த உலகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். முதலில் என்னைத்தான் அந்தக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தேன். பொதுவாக இது போன்ற விசயங்கள் அம்மாவை குதூகலிக்கச் செய்யும். ஆனால், அன்று அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தேன். அவள் ஆயிரமாயிரம் கண்கள்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது முற்றிலும் வேறொருத்தியாக இருந்தாள். எனக்கு உடல் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. சட்டென்று அந்த அறை முழுவதும் அனல் தகித்தது. வேக வேகமாக அங்கிருந்து வெளியேறினேன். அன்று கோவிலுக்குச் செல்வதைக் காரணமாக்கி அம்மம்மா எனக்கு அம்மாவுடைய பழைய பட்டுப் பாவாடைச் சட்டையை அணிவித்து அனுப்பியிருந்தாள். அது எனக்குப் பொருத்தமாக இல்லை. என்னை யாரோ நெஞ்சோடு சேர்த்து இறுக்கிப் பிடித்ததைப் போலிருந்தது. மூச்சு முட்டியது. வியர்வையில் கசகசத்தது. ஒரே சமயத்தில் எனக்கு எல்லாம் புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது.

மயிரளவு கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்த விரிசல் சுவர்ப் பிளவுபோல தெரிய ஆரம்பித்தது எனக்கு ராகுலைப் பிடித்திருக்கிறது என்று சொன்னபோதுதான். அப்பாதான் கத்துவார், மறுப்பார், மாட்டேன் என அடம்பிடிப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மாறாக, அம்மா அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஒற்றைக் காலில் நின்றாள். அவள் ஜாதி, சம்பளம், ஸ்டேட்டஸ் என்று ஏதாவது ஒரு காரணத்தை யோசித்துக் கட்டமைத்தாவது சொல்லியிருக்கலாம். மாறாக, கல்லூரி முடிந்தவுடன் காதலைப் பற்றிய புரிதல் சரியாக இருக்காது. எனக்குப் பக்குவம் போதாது என்று ஒன்றுக்கும் உதவாத காரணத்தைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தாள். அது என் அகம்பாவத்தைத் தூண்டிவிட்டது. ராகுலைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று விடாப்பிடியாய் நின்றேன்.
என்னுடைய காதல் விசயத்தில்கூட இவள் எதிர்த்த காரணத்தினாலேயே அப்பா சம்மதம் சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது. அவளும் அப்பாவும் எல்லா விசயங்களிலும் நேரெதிர். எப்படியோ எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ளும் இரு அறைவாசிகளைப் போல அவர்கள் இருவரும் இருந்து வந்தனர். எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பதெல்லாம் காந்தங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் போலிருக்கிறது.
இப்போதுகூட அவளுடைய இந்த நிலையிலும், அவருக்கு அவள் மேல் துளி இரக்கமில்லை. அன்பெல்லாம் அவரைப் பொறுத்தமட்டில் துடைத்தெறியப்பட்டுவிட்டது. ஆனால், என் மேல் பாசமாகத்தான் இருந்திருக்கிறார். அவளுக்கும் கடமையாய்ச் செய்ய வேண்டியதையெல்லாம் செய்தார். பாசமோ அன்போ கிடையாது. அவள் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொள்கிறார்.
நேற்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு யாராவது அம்மாவுக்குத் துணைக்கு போங்கள் என்று சொன்னபோது என்னைப் போகச் சொல்லிவிட்டு அவர் போக மறுத்துவிட்டார். அவர் உண்மையில் பயந்து போயிருந்தார். நானும் உள்ளே போக மாட்டேன் என்றபோது அந்த நர்ஸ் பெண் எங்களைப் பார்த்த பார்வையில் தொனித்த கேள்விகளுக்கெல்லாம் விடைகள் ஆயிரம் உண்டென்றாலும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டிருக்க முடியாது.
அம்மாவுக்குக் கல்லீரல் பழுதாகிவிட்டிருந்தது. வயிற்று வலி என்று சுருண்டு படுத்தவள் துடித்து உருண்டபோது கிட்னியில் கல்லாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தார்களாம். பிரச்சினை கல்லீரலிலிருந்தது. அதுவும் மோசமாக இருந்தது. மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்டது. அவளால் எதையும் சாப்பிட முடியவில்லை. எது உள்ளே போனாலும் வாந்தியாக வெளியே வந்தது. ஒரே வாரத்தில் ஆளே பாதியாக வற்றிவிட்டாள். காய்ந்து சுருண்ட வாழையிலை போலாகியிருந்தவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. ஆனால், ஓடிப் போய் ஒவ்வொன்றாய்ச் செய்யப் பிடிக்கவில்லை. கடமையாகச் செய்ய வேண்டியதை மட்டும் செய்தேன்.
கிட்டத்தட்ட மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு ராகுலை ஏற்றுக்கொண்டாள். அதற்குமேல் தாமதித்தால் நானே வீட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என்று துணிந்திருந்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் ஒன்றைக் கவனித்தேன். ராகுலை விழுந்து விழுந்து கவனித்தாள். அவன் அடிக்கும் மொக்கை ஜோக்குகளுக்குச் சிரித்தாள். அவனிருக்கும் நாட்களில் அவள் செய்யும் உணவுகளில் அதீத அக்கறை தென்படும். எல்லாவற்றுக்கும் மேல் அவனுடைய விருப்பத்தை முதலில் வைத்தாள். இருவரும் நண்பர்கள் போலானார்கள். எந்த ஒரு விவாதத்திலும் அவள் எப்போதும் அவன் பக்கமாகவே நின்று பேசுவாள்.
ஒன்று அவள் ராகுலை வேண்டாம் என்று அவ்வளவு காலம் அடம் பிடித்தது நிஜமாக இருக்க வேண்டும். இல்லை, இப்போது அவனை ஓடியோடி கவனிப்பது நிஜமாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றுதான் நிஜமாக இருக்க முடியும். ஒருவேளை இரண்டுமே பொய்தானா?
அவளைப் புரிந்துகொள்வது எனக்கும் அப்பாவுக்கும் எப்போதும் புதிராகத்தான் இருந்திருக்கிறது. திடீரென்று ஜிம்மில் இணைந்தாள். எப்போதும் உணவில் நல்ல கட்டுப்பாடு கொண்டவள், இன்னும் அதைத் தீவிரப்படுத்தினாள். எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவள் வயதுக்குப் பொருந்தாத பலவும் செய்தாள்.
நான் ராகுலிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கிண்டல் செய்தபோது, அவன் அவளுக்கு ஆதரவாகவே பேசினான். உண்மையில் அவளே என்னைவிட அழகி என்றான். ஆம், முதிர்ந்த அழகி!
எங்களுக்குக் கல்யாணமான புதிதில் விசித்திரமாக நடந்துகொள்வாள். ராகுல் தன் அலுவலகத்தில் நடந்த ஒரு விசயத்தைப் பற்றி எங்கள் அறையில் வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். சிரித்து மாளவில்லை. அறைக் கதவு முழுவதுமாகச் சாத்தப்படவில்லை. அறை வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் அவள் போவதும் வருவதுமாய் இருந்தாள். அங்கு அதற்கான தேவையே இருக்காது என்பது எனக்குத் தெரியும். அவளுடைய நிழலசைவைக்கூட என்னால் கணிக்க முடியும்.
அது போன்ற சமயங்களில் சில நேரம் சட்டென அறைக்குள் நுழைவாள்.
“டீ வேணுமானு கேட்க வந்தேன்.”
“டின்னர் டைம்ல என்னம்மா டீ”
“ராகுலுக்கு வேணுமா?”
“ஓகே ஆன்ட்டி. உங்களுக்குப் போட்டா எனக்கும் அரை கிளாஸ்.”
இதையெல்லாம் ரொம்பவும் சாமர்த்தியமாகச் செய்வதாக அவள் நினைத்துக்கொண்டாள். நான் முறைப்பேன். ராகுல் சிரித்துக்கொள்வான்.
அம்மாவைப் பற்றி, அவளுடைய நடவடிக்கைகள் பற்றி நானும் ராகுலும் நிறையப் பேசுவோம். சமீபத்தில் ஒரு நாள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவன், ” உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப காலமாவே சேர்ந்திருக்கிறது இல்ல போலவே. போத் மெண்ட்டலி அண்ட் பிசிக்கலி” என்றான்.
அதுவரையில் நான் அந்தக் கோணத்தில் யோசித்திருக்கவில்லை. அப்போது எனக்கு அவர்கள் இருவர் எப்படி இருந்தார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் என் கவனம் போகவில்லை. மாறாக இதை இவன் கண்டுபிடிக்கும்படி என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வியே மண்டைக்குள் குடைந்தது. அதை அவனிடம் கேட்டு அவன் முன் அசிங்கப்பட்டு நிற்க ஈகோ இடங்கொடுக்கவில்லை.
ராகுலுக்குச் சென்னைதான் பிடித்திருந்தது. எனக்காக வேலையை மாற்றி பெங்களூருக்கு வந்தான். நாங்கள் பெங்களூருவில் கே.ஆர். புரத்தில் இருவரது அலுவலகத்துக்கும் பக்கமாக இருக்கும்படியாக ஒரு அப்பார்ட்மண்ட் எடுத்திருந்தோம். அங்கு குடியேறிய புதிதில் அம்மாவும் அப்பாவும் அங்கே வந்து நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். அவளுக்கு பெங்களூருவும் நாங்கள் அமைத்திருந்த பால்கனித் தோட்டமும் வீடும் ரொம்பவும் பிடித்திருந்தது என்பதை அவளுடைய உடல்மொழி காட்டிக்கொடுத்தது. வாயாரச் சொல்ல மாட்டாள். மாறாக,
“ஸ்கீரின்ஸ்லாம் சுவருக்குப் பொருத்தமா வேற கலர்ல வாங்கியிருக்கலாம்” என்றாள்.
“ஜஸ்ட் ஸ்கீரின்ஸ்தானே, விடும்மா.”
“இல்ல சும்மா சொன்னேன்.” என்று தோள்களைக் குலுக்கினாள்.
அதோடு நிற்கவில்லை. அன்று மாலையே வெளியே போனவள், எங்கள் வீட்டுச் சுவருக்குப் பொருத்தமாக அடர் பச்சை வண்ணத்தில் திரைச் சீலைகளை வாங்கி வந்தாள். பழையவற்றைக் கழற்றி அவற்றை மாற்றிவிட்டாள். என்னுடைய சமையலறையைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில் டப்பாக்களை இடம் மாற்றி வைத்தாள்.
இப்படி ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டோ சொல்லிக்கொண்டோ இருந்தாள். என்னைப் பற்றிய குறைகளை ராகுலுக்கு முன் கூறுவதில் அவளுக்கு என்னதான் கிடைக்குமோ? நான் உள்ளே பொரிந்துகொண்டிருப்பேன். ராகுல் புன்னகைப்பான். அழுக்குத் துடைக்கும் துணியை எடுத்து ஒன்று மாற்றி ஒன்றென எதையாவது துடைத்துக்கொண்டிருப்பாள். அதன் மூலமாக நான் வீட்டை ஒழுங்காகப் பராமரிப்பதில்லை என்பதை நிரூபிக்க முயல்வாள். எல்லாவற்றுக்கும் மேல் இது என் வீடு. இங்கே அவள் வந்து உரிமை கொண்டாடுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. எரிச்சல் மண்டும். அவள் அங்கிருந்து கிளம்ப இருக்கும் நாட்களை மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருப்பேன்.
அவள் பெங்களூரு வந்து போனதிலிருந்து சென்னை வீட்டில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறாள். எங்கள் வீட்டைப் போலவே சென்னையிலும் பால்கனித் தோட்டம் போட்டாள். அது சென்னை வெயிலுக்குத் தாங்கவில்லை. பழைய டைனிங் டேபிளை மாற்றினாள். அலங்காரப் பொருட்களைச் சேர்த்தாள். பாடிஷாப்பிலிருந்து மாய்ஸரைஸர் வாங்கினாள். நாட்டுச் சர்க்கரைக்கு மாறினாள்.
அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போனது எனக்குத் தெரியாமலில்லை. உண்மையில் நான் அதை என்னுடைய தவறான அனுமானம் என்றே நம்ப விரும்பினேன். ஆனால், அவள் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் என் நம்பிக்கையைப் பொய்யென்றும் அனுமானத்தைச் சரியென்றும் நிரூபித்தாள்.
அன்று எங்கள் வீட்டிலிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தலையை வாரிக்கொண்டிருந்தேன். சீப்பை எடுத்துக்கொண்டு அவளும் என் பின்னால் வந்து நின்றாள். என்னுடைய கழுத்திலிடப்பட்டிருந்த வாசனைத் திரவியத்தில் கிறங்கியதைப் பார்த்தேன். அரை நொடிதான். சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவளும் தலையைச் சீவ ஆரம்பித்தாள். என்னை ஒரு பார்வை பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன். தன் புடவை மடிப்பை சரி செய்தாள். என்னைப் போலவே தலையைத் தூக்கி வாரிச் சீவினாள். இருவரும் கண்களோடு கண்கள் பார்த்துக்கொண்டோம். அவளோ நானோ சிரித்துக்கொள்ளவில்லை.
ரொம்பவும் யோசித்து யோசித்து அதைக் கேட்டாள்.
என்ன பர்ப்யூம்?
என்னோடதா?
வேற யாரு இங்க இருக்கா?
ஹூஹோ போஸ்.
மால்ல கிடைக்கும்ல.
தெரியாது. ராகுல் கிப்ட் பண்ணார்.
அதை நானே போய்தான் வாங்கினேன். வேண்டுமென்றே பொய் சொன்னேன். அப்போதும் அவள் கண்கள் என்னைத்தான் முழுவதுமாய் அளந்துகொண்டிருந்தன. பார்வை என் முகம், கைகள், கழுத்து, மார்பென்று ஊர்ந்து திரிந்தது. உடல் புல்லரிக்க விலகி ஓடி வந்தேன். இத்தனை வருடங்களில் அவள் துளியும் மாறியிருக்கவில்லை.
அவளுடைய படுக்கை அறைக்குச் சென்றேன். அறை முழுவதும் அவள் வாசனை. படுக்கைக்கு மேலே அவள் தனித்து இருக்கும் அழகான பழைய புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. எண்பதுகளின் கதாநாயகிகளைப் போலவே அலங்காரம் செய்திருந்தாள். குறிப்பாக ஒரு பக்கமாகச் சொருகப்பட்டிருந்த ரோஜா. உண்மையில் அவர்களைவிட அழகி இவள்.
பெற்ற அம்மாவினுடைய அறைக்குள்தான் வந்திருக்கிறேன். ஆனால், ஏதோ தவறு செய்பவளைப் போலக் குற்ற உணர்வாக இருந்தது.
அவளுடைய கப்போர்டைத் திறந்தேன். குப்பென்று பரவியது அம்மாவின் வாசனை. தைல எண்ணெய்யும் மஞ்சளும் பிச்சியும் கலந்த மாதிரியான அவளுக்கே உரிய சுகந்தம் அது. விதவிதமாக சேலைகள் வைத்திருந்தாள். ஒவ்வொரு வண்ணத்திலும் பத்து பதினைந்து சேலைகள் இருந்தன. சேலைகளின் தன்மைக்கு ஏற்ப அவற்றை வரிசைப்படுத்தி அடுக்கியிருந்தாள். அந்தப் புகைப்படத்தில் அணிந்திருக்கும் சேலை உள்ளே இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய படம். அந்தச் சேலை இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதன் தர்க்கம் புரிந்தாலும் உள்ளுணர்வு அதைத் தேடச் சொன்னது.
எதையும் கலைத்துவிடாமல் மிகக் கவனமாக மேலிருந்து கீழாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். கண்ணில் பட்டுவிட்டது. அதே சேலை. பருகண்டி நிறத்தில் தங்க நாணயப் புட்டாக்கள் போட்ட சேலை. மெல்லிய பேன்ஸி புடவை. அப்படியே புதுக்கருக்கு மாறாமல் இருந்தது. மெதுவாகக் கையில் வைத்துத் தடவினேன். அவ்வளவு மிருது.
சேலையைப் பிரிக்காமல் அதை அப்படியே என் தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்த முழு நீளக் கண்ணாடியில் பார்த்தேன். சுவரில் மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தேன். சட்டென்று அறையின் சுவர்களிலெல்லாம் பொன்னிறக் கண்ணாடிகள் முளைத்தெழுந்தென. சுற்றிலும் என் பிம்பம். பிம்பத்துக்குள் பிம்பத்துக்குள் பிம்பத்துக்குள் பிம்பம். உள்ளங்காலுக்குள் கருங்கல் தரையின் குளுமை ஏறியது. குழைத்த சந்தனமும் ஜவ்வாதும் பன்னீரும் கலந்த வாசம் என்னைச் கமழ்ந்தது. தூரத்தில் யானையின் கழுத்து மணி ஒலித்தது. ஒரு நிமிடம் இடம் காலம் என அனைத்தும் குழம்பி நின்றேன்.
வீட்டு காலிங் பெல் அடித்தது. சுதாரித்து நினைவுக்கு மீண்டேன். மறுபடியும் காலிங் பெல் அடித்தது. அம்மாவாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தும் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. புடவையை வேக வேகமாக கப்போர்டுக்குள் வைத்துவிட்டு கதவைத் திறந்தேன். ஸெப்டோவில் சர்க்கரை வந்திருந்தது.
பாட்டிலிலிருந்த தண்ணீரை எடுத்து கபகபவென பருகினேன். அடுப்படிக்குப் போய் மிதமானச் சூட்டில் வாணலியை வைத்து நெய்யில் ரவையை பட்டும் படாமல் வறுத்தேன். ரவை மணலாய் நிறம் மாறியது. குழிக் கரண்டியை எடுத்து அதில் உலர்ந்த திராட்சையையும் முந்திரிப் பருப்பையும் நெய்யில் பொரித்து தனியாக எடுத்து வைத்தேன். பிரிட்ஜில் அன்னாசிப் பழம் இருக்கிறதா பார்த்தேன். இல்லை. ரவை அளந்த கப்பில் தண்ணீரை அளந்து ஊற்றி அடுப்பைப் பற்ற வைத்து அதில் ரவையைக் கொதிக்க விட்டேன். தளதளவென பொங்கி வந்ததும் ரவைக்கு இருமடங்காக அளந்து எடுத்து வைத்திருந்த சர்க்கரையைப் போட்டுக் கிளறினேன். எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்த மனத்தை ஒருமுகப்படுத்தி கேசரியில் நிறுத்தினேன். வீடெங்கும் நெய் மணம் கமழ்ந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் கேசரி தயாரானது.
அவதியாக அள்ளிப் போட்டு ஹாலுக்கு எடுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தேன். எங்கு தவறவிட்டேன் என்று தெரியவில்லை. முதல் வாய் வைத்ததுமே தெரிந்துவிட்டது. அது அம்மாவுடையதைப் போல் இல்லை. அப்படியே கீழே வைத்தேன். டைனிங் டேபிளிலிருந்த போன் அடித்தது. எரிச்சலாக வந்தது. அதை அப்படியே அடிக்கவிட்டேன். எழுந்துபோய் யாரென்றுகூடப் பார்க்கத் தோன்றவில்லை. மறுபடியும் அடித்தது. எடுக்கவில்லை. இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் போன் அடித்தது. வீட்டில் நிலவிய அமைதியைக் கலைத்தப்படி போன் அடித்துக்கொண்டிருந்தது.
O

கார்த்திக் பாலசுப்ரமணியன்
சென்னையில் வசித்துவரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், புனைவு பரப்பிலும், விமர்சன பரப்பிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். டொரினா என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘நட்சத்திர வாசிகள்’ என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.
புறத்தோற்றங்களுக்கு உள்ளே பதுங்கித் தத்தளிக்கும் அகத்தருணங்களைச் சீண்டிச் செதுக்கி இருக்கிறார் கார்த்திக்.
அறிவியலும், தத்துவமும் வாழ்வையும் மனிதர்களையும் ஆராய்ச்சி செய்பவை. அறிவியல் புறத்தளத்தில் இருந்தும், தத்துவம் அகத்தளத்தில் இருந்தும் விடாமல் விசாரஞ் செய்து சமூகத்துக்கு திட்டமான வடிவங் கொடுத்துக் கொண்டே இருப்பவை. இலக்கியம் மனிதர்களை வெறுமனே கவனித்து அவர்களை வெளிப்படுத்துகிறது (வெறுமனே என்பதை அழுத்தமாய் வாசிக்கவும்).
இயல்பாய் வெளிப்படாமல் பதுங்(க்)கி இருக்கும் மனிதர்களின் விகசிப்புகள் போன்றவற்றைப் பச்சாதாபமின்றி நம் பார்வைக்குக் கொண்டு வந்து காட்டிவிட்டு நம்மையே பார்க்கிறது இலக்கியம். நாம் இப்படியும் அப்படியுமாய் அல்லாடி அதன் பார்வையிலிருந்து தப்பிக்க முயன்று.. கேசரி கிண்டக் கிளம்பி விடுகிறோம்.