
இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம்
காலம் மற்றும் அடுக்குமுறை
வேதங்களும் உபநிடதங்களும் தோராயமாக பொ.மு. 500 முதல் பொ.மு. 2000 வரையிலான வருடங்களில் இயற்றப்பட்டவை. இந்த 1500 வருட கால இடைவெளி என்பது நம் நிகழ்காலத்திற்கும் களப்பிரர்களின் காலத்திற்கும்(பொ.யு. 300) நடுவிலான கால இடைவெளியை ஒத்தது என்பதை நினைவில் கொள்ளவும். ஆகவே, வேதங்களையும் உபநிடதங்களையும் ஒருமித்த குரலில் ஒலிக்கும் ஒற்றை படைப்பாக பார்க்கக்கூடாது. வேதங்களும் ஒரு சில உபநிடதங்களுமே இந்தியாவில் நமக்கு கிடைத்த தொன்மையான படைப்புகள். இவற்றின் தொன்மையை எந்த வரலாற்று ஆய்வாளரும் மறுத்ததில்லை.
வேதம்
வேதம் என்பது அறிவு. மதம் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு, வேதம் தான் முற்றறிவு. மற்ற சிந்தனையாளர்களுக்கும், மதம் சாராத பிறருக்கும், வேதம் மாபெரும் கலைப்படைப்புகளின் தொகுப்பு. தொன்மையான வேதங்கள், எழுத்தறிவு தோன்றுவதற்கு முன்பு, மக்களால் வாய்மொழியாக இயற்றப்பட்ட பாடல்களும் புகழுரைகளுமே. அந்த பாடல்கள் நினைவில் சேமித்துவைக்கப்பட்டு அப்படியே அடுத்த சந்ததியினருக்கு பகிரப்பட்டன. எனவே வேதங்கள் சுருதி(ஸ்ருதி – கேட்கப்படும் ஒலியமைப்பு) எனவும் அழைக்கப்படுகின்றன.
வேதங்கள் நான்கு: ரிக், யஜுர், சாமம், அதர்வம். அதில் மிக முக்கியமானது ரிக் வேதம் என்பது நாமனைவரும் அறிந்தது. ஒவ்வொரு வேதமும் மந்திரங்கள்(Mantras), பிராமணங்கள் (Brahmanas) , உபநிடதங்கள் (Upanishads) எனும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. மந்திரங்கள் அல்லது பாசுரங்களின் தொகுப்பு சம்ஹிதை (Samhitha) எனப்படும். மத சடங்குகளை, ஆசாரங்களை உள்ளடக்கிய அறிவுக்களஞ்சிய தொகுப்பு பிராமணங்கள் எனப்படும். பிராமணங்களின் இறுதி பகுதிகளான உபநிடதங்களும் (Upanishads) மற்றும் ஆரண்யகங்களும்(Aaranyakaas) தத்துவ சிக்கல்களை உசாவுகின்றன. இவை காலத்தில் மிகப் பின்னர் தோன்றியவை என பல வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சம்ஹிதைகளுக்கு பல்வேறு திருத்தப்பட்ட வடிவங்கள் இருந்துள்ளன. அவற்றில் சில மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. நமக்கு கிடைத்துள்ள ரிக் வேத வடிவத்தில் 1028 பாடல்களும் 10500 செய்யுள் பத்திகளும் உள்ளன. மரபு இந்த பாடல்களை வெவ்வேறு கவிகளுக்கு உரித்தாக்குகிறது. எனினும், தேவிபிரசாத் சட்டோபாத்யாய சொல்வது போல், இவை பழமையான நாட்டுப்புற பாடல்களின் இயல்புடையவை என்பதால், இவற்றை நாம் தனிப்பட்ட கவிகளின் கலைப்படைப்புகளாக எடுத்துக் கொள்வது தவறாகும். இவையனைத்தையும் ரிக் வேதத்தின் கீழ் தொகுக்க, நிச்சயமாக நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கும். இந்த அறிமுகத்துடன், இவற்றின் உலகுக்குள் நுழையலாம்.
இந்த உலகையும், உலகத்தின் மீது கவிந்துள்ள இந்த வானத்தையும் பற்றிய ஆதி மனிதர்களின் எண்ணம் என்னவாக இருந்திருக்கும்? வேத மந்திரங்கள் பிரபஞ்சத்தை மூன்றாக பிரிக்கின்றன. காட்சிப்புலமான வானம்; கீழே பூமி(ப்ரித்வி); இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி அந்தரீக்ஷம். தேவ(Devah) என்பதன் நேரடி பொருள் ஒளிர்தல் அல்லது சுடர்தல். இச்சொல் பெரும்பாலும் கடவுளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. கடவுள்கள் சிலநேரம் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில், ‘அசுர’ என்பது ‘பெரும் ஆற்றல் வாய்ந்தது’ என்பதை குறித்தது. பிற்காலத்தில் இந்த சொல், எதிர்மறையான அர்த்தத்தில், அரக்கர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தும் சொல்லாக ஆகிவிட்டது.
வானம், பூமி மற்றும் இடைப்பட்ட பகுதி ஆகியவற்றுடன் தொடர்புடையதாக 33 தெய்வங்களை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் அதன் மூலவடிவில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்களின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகம். சில தெய்வங்கள் , மற்ற தெய்வங்களைவிட அதிகமான இடங்களில் குறிப்பிடப்பட்டாலும், அதில் ஒரு மாறா வரிசையோ அல்லது பலதெய்வ கூட்டமோ(Pantheon) இல்லை. குறிப்பிட்ட பாடலில் தொழுது, வேண்டிக்கொள்ளப்படும் எந்தவொரு குறிப்பிட்ட தெய்வமும், நிகரற்ற கடவுளாக பேசப்படுகிறது. மாக்ஸ் முல்லர் (Max Muller) இதை ஓரிறை கோட்பாடு(Henotheism) அல்லது கதேனோதேயிசம் என விளக்குகிறார்
கதேனோதேயிசம் (Kathenotheism) இன்று நாம் தெய்வங்களை எப்படி வழிபடுகிறோமோ அந்த முறைமை. ஒவ்வொரு தெய்வத்தையும் வேதமுதல்வன் -வேதங்களில் உள்ள கடவுள்களில் முதன்மையானவன் – என உருவகித்து வழிபடுவது. பிற கடவுள்களின் இருப்பை மறுக்காமல் ஒரு நேரத்தில் ஒரு கடவுளை உயர்ந்ததாக வணங்குவது மற்றும் வெவ்வேறு கடவுள்களை ஒன்றன் பின் ஒன்றாக உயர்ந்ததாக வைத்து வழிபடுவது. நமது சங்க இலக்கியங்களும் அவ்வாறுதான் வேத முதல்வனை முன்வைக்கின்றன. “அற விளங்கிய திகிரியோனே” என்கிறது நற்றிணை. இன்றுகூட நாம் விநாயகரை வழிபடும்போது “ விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்” என்றே வழிபடுகிறோம்.
ஒரு குறிப்பிட்ட கடவுள் (அவன் அல்லது அவள்) மீது புகழ்மொழிகளை பொழிந்து, அதுவே முழுமுதற் கடவுள் என்று வழிபடுகிறோம். மேலும், அந்த கடவுளிடமே “ நீதான் முழுமுதல் தெய்வம்” என்று சொல்கிறோம். சக்தி, விஷ்ணு, சிவன், கந்தன் என இப்பட்டியல் நீள்கிறது. இது தான் வேதத்தின் மரபு என்பது தெளிவாகிறது. ரிக் வேதத்தில் கடவுள்களைத் தவிர, கந்தர்வர்கள், அப்சரஸ்கள், தீய எண்ணம் கொண்டவர்களான ராட்சசர்கள், சூனியக்காரர்களான, யதுகானர்கள் (Yatuganas) மற்றும் பிசாசுகள்(Paisasas) ஆகியோரை பற்றியும் குறிப்பிடுப்பட்டுள்ளது. இப்புகழுரைகளில் பிரபஞ்சம் உருவானது எப்படி என்பது பற்றிய பல்வேறு கருத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இக்கடவுள்களின் செயல்கள் மற்றும் பெரும் பிரபஞ்ச போரின்(Cosmic battle) விளைவாக இம்மண்ணுலகும் விண்ணுலகும் பிரிந்தது என இவை சொல்கின்றன.
வேதங்களில் தத்துவம்
இவையெல்லாம் சரி, இவற்றில் தத்துவம் எங்கே எப்போது உள்ளே வருகிறது?, தேவிபிரசாத் சட்டோபத்யாயவின் தரப்பு இதுதான்: தத்துவச் சிந்தனை என்பது எந்த வகையிலும் ரிக் வேதத்தின் நேரடியான பண்பு அல்ல. சில பிற்காலத்திய ரிக்வேத மந்திரங்கள் அவற்றின் கவித்துவ உச்சங்களில் பிரபஞ்ச இயங்கியல் பற்றிய ஊகங்களை முன்வைக்கின்றன. அவற்றிலிருந்து சில நவீன அறிஞர்கள், அவர்கள் தத்துவம் என நினைக்கும் சில அரிய ரத்தினங்களை கண்டுபிடிக்க முனைகின்றனர் என்கிறார். இன்னொருபக்கம் ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறுகிறார்: “வேதங்கள் இவ்வுலகின் புதிர்களை மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வெளிப்பாடுகள் மூலம் விளக்க முற்படுவதில்லை. மாறாக அவை வேறெதையும் சாராத தூய பகுத்தறிவின் வாயிலாக பிரபஞ்சத்தின் புதிர்களை ஓரளவிற்கு விளக்க முயற்சிக்கின்றன”.
தேவிபிரசாத் சடோபத்யாய(இடது), சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன்(வலது)
வேத மந்திரங்களில் வெளிப்படும் கவி மனங்களை எந்த ஒரு குறிப்பிட்ட வகைமையிலும் பொருத்தமுடியாது. அவை விண்ணின் அழகையும் பூவுலகின் அதிசயங்களையும் எளிமையாக சிந்தித்த கவி ஆன்மாக்கள்; வேத மந்திரங்களை இயற்ற கடமைகொண்ட பூத உடல்கள்.
ஒரு குறிப்பிட்ட வேத மந்திரத்தை ஓதினால் குறிப்பிட்ட நற்பலன் கிடைக்கும்; எதிரிகளை வெல்லலாம் என்பது வேத நம்பிக்கை. பெரும்பாலான சம்ஹிதைகள் தொன்மையானவை, மாயத்தன்மை கொண்டவை என தேவிபிரசாத் சடோபத்யாய சொல்வது ஓரளவிற்கு உண்மையெனினும், முழு ரிக் வேதமும் தத்துவ ரீதியாக வறண்டது என ஒதுக்குவதும் கடினம். உதாரணமாக, ரிக் வேதம் ‘ரித’(Rta/Rita) பற்றி பேசுகிறது. இந்த ரிக் வேத ‘ரித’ என்பது, தொல் ஈரானிய கருத்தான ‘ஆஷ’(Asha) என்பதை ஒத்தது. பிரபஞ்சத்தின் ஒழுங்கு, யாக அவியின் ஒழுங்கு, மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய அற ஒழுங்கு ஆகியவற்றை ரித/ஆஷ குறிக்கிறது.
சில பாடல்கள் வருணன் மற்றும் மித்ரன் ஆகியோரை ரித-த்தின் காவலர்களாக குறிக்கின்றன. பத்தாவது நூலில்(Rig Veda [10.10]), யமனுக்கும் யமிக்கும் இடையேயான உரையாடல் வடிவில் உள்ள பாடலில் இக்குறிப்பு உள்ளது. யமன் சூரியனின் முதல் மகன். முதல் மனித உடல்கொண்டவன். இறந்தோரின் அரசன். யமி, யமனின் சகோதரி. யமி தன் சகோதரன் யமனை தன்னுடன் கூடி மகப்பேறு பெற வேண்டி முறையிடுகிறாள். அவ்வாறு செய்வது ரித-த்திற்கு முரணானது என்றும், வருணன் மற்றும் மித்ரன் கட்டளைக்கு மீறியது என்றும் கூறும் யமன், தனது சகோதரியின் அணுகுமுறையை நிராகரிக்கிறான். விண்ணுலகும் மண்ணுலகும் அவை என்னவாக உள்ளனவோ அவற்றின் காரணம் ‘ரித’.
வேதங்களில், ‘மாறாத மெய்மை’ எனும் மாயத்தன்மை(Mystical) கொண்ட கருத்துருவின் மீதான சாய்வு இங்கிருந்து புலப்பட ஆரம்பிக்கிறது. மெய்மை என்பது ஒரு மாறா நெறி. இக்கணம் என்பது ஒரு நிலையற்ற காட்சி; குறைவுபட்ட நகல். ரித என்பது உண்மை. சீக்கிரமே இந்த பிரபஞ்ச ஒழுங்கு தெய்வங்களின், நேர்மையின், அறத்தின் நுண்ணிய வெளிப்பாடாக வளர்ச்சியடைகிறது. கடவுள்களாலும் இதை மீற இயலாது. ‘ரித’ எனும் கருதுகோள் பொருண்மையிலிருந்து தெய்வீகத்தன்மை நோக்கி வளர்ச்சியடைந்ததை நம்மால் பார்க்கமுடியும். ஆரம்பத்தில் இயற்கையில் உள்ள அனைத்திற்குமான (பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், இரவு பகல், காலை மாலை) அடிப்படையாக இருந்த ’ரித’, பின்பு மனிதன் கடைபிடிக்கவேண்டிய நெறியாக, சரி தவறுகளை நிர்ணயிக்கும் விதியாக, கடவுளாலும் பின்பற்ற வேண்டிய ஒன்றாக வளர்ச்சியடைகிறது.
ரிக் வேதத்தில் சோமதேவனை வழிபடும் அழகிய பிரார்த்தனைப்பாடலைகளை (Rig Veda – Book 9 – Hymn 113) பார்ப்போம். அந்த பாடல்களுக்கு மாக்ஸ் முல்லரின் (Max Müller) ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்:
“எங்கு நிலையான ஒளி இருக்கிறதோ, எங்கு சூரியன் நிலைத்துள்ளதோ, அந்த மாறாத, அழிவற்ற உலகில் என்னை பிறப்பிப்பாயாக, ஓ சோமா!
எங்கு வைவஸ்வதன்(Vaivasvata) ஆள்கிறாரோ, எங்கு மறைக்கப்பட்டுள்ள விண்ணுலகம் இருக்கிறதோ, எங்கு மிகையான நீர்நிலைகள் விரவி இருக்கிறதோ, அங்கு என்னை அமரனாக்குவாயாக!
எங்கு வாழ்வு சுதந்திரமாக இருக்கிறதோ, எங்கு மூன்றாம் விண்ணுலகத்தின் விண்ணுலகம் இருக்கிறதோ, எங்கு உலகங்கள் பிரகாசமாக ஒளிருகிறதோ, அங்கு என்னை அமரனாக்குவாயாக!
எங்கு ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறுகின்றனவோ, பிரகாசமான சூரியன் எங்குள்ளதோ, எங்கு விடுதலையும் மகிழ்ச்சியும் இருக்கிறதோ, அங்கு என்னை அமரனாக்குவாயாக!
எங்கு மகிழ்ச்சி, ஆனந்தம் நிரம்பி இருக்கிறதோ, எங்கு சந்தோஷமும் இன்பமும் வசிக்கிறதோ, எங்கு எங்கள் மன விருப்பங்கள் பூர்த்தியாகிறதோ, அங்கு என்னை அமரனாக்குவாயாக!”
இதன் சாராம்சம்: இவ்வுலகில், இருளும் பசியும் ஈடேறாத விருப்பங்களும் ஆசைகளும், பெருந்துயரங்களும் உள்ளன. தன் வாழ்வு நிலையற்றது என அறிந்தவன் மனிதன். எனினும் அவன் சாவற்ற வாழ்வுக் கொண்டதும், ஒளிமிக்கதும், உவகையும் களிப்பும் அளிக்கக்கூடியதும், தனது எல்லா ஆசைகளை ஈடேற்றக்கூடியதுமான ஒரு மாற்றுலகை கனவு காண்கிறான். அநேகமாக, ‘சோமரச’ மது களிப்பின் உச்சத்தில், அவன் சோமனை புகழ்ந்து, தன்னை அவ்வுலகிற்கு அழைத்து செல்ல வேண்டுகிறான்.
ஆக, ஒவ்வொரு கடவுளும் படைப்பவராக(விஸ்வகர்மா போல), உயிர்களின் தலைவராக, மேன்மை குணங்கள் பொருந்தியவராக பார்க்கப்படும் இம்மரபில், தனித்தன்மைகளை தவிர்த்துவிட்டு பொதுவான செயல்களை செய்யக்கூடிய ஒரு கடவுளை உருவாக்குவது எளிது. கடவுள் எனும் கருத்துருவின் இந்த சீரான மேன்மைப்படுத்துதல், வருணன் வழிபாட்டில் வெளிப்படுகிறது. ஆக, உபநிடதங்களில், பல தெய்வங்கள் படிப்படியாக ஒரு உச்ச உண்மையாக உருப்பெறுகின்றன.
வேத கால தத்துவவாதிகள், பாவம் அல்லது தீமையை எவ்வாறு அணுகினர்? முதல் சில செய்யுள் வரிசைகள், எல்லா வகையான வன்முறைக்கும், தீங்கு, வலி, நோய்ப்பீடிகைக்கும் ஒரு வெளிக் காரணத்தை சுட்டுகின்றன. தீமை வெளியில் இருந்து வருவது; நமக்கு அப்பால் உள்ளது. அத்துமீறி நம்மை ஆக்கிரமித்து, நம் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் முடக்குகிறது.
வேறு சில செய்யுள்கள் தீமைக்கான மூலம் உள்ளிருந்து வருவதென குறிக்கின்றன. உளைச்சல், குறுகிய மனப்பான்மை, மன விரிவில்லாமை, கட்டுண்ட இயல்பு ஆகியவை ஒருவரின் உள்ளிருந்து வருபவை. இங்கு தீமைக்கான காரணம் உள்ளிருந்து வருவது எனவும் ஒருவரின் இயல்பில் உள்ளார்ந்தது எனவும் கூறப்படுகிறது. நம்மை தவிர்த்து வேறு யாரையும் நம்மால் குறை கூறமுடியாது.
மூன்றாவதாக சில செய்யுள்களில், தீமை என்பது குறையில்லாத ஒரு அமைப்பின் இசைவின்மை மற்றும் தவறுகளால் உருவாவதாக கூறுகின்றன. அந்த மாற்றம் தான் ‘ரித’ என்பதன் சிதைவு.
இந்த செய்யுள்கள் எல்லாம், மனிதனின் எந்த ஒரு பண்பிலும் ஒரு இருமையை முன்வைக்கின்றன. அது எதிர்மறையாக, தீமைசெய்யும் விழைவாகவோ அல்லது நேர்மறையாக, நன்மையாகவோ மாறலாம். இங்கு தீமை என்பது நிகழ்வுகளும், விழுமியங்களும் தேறும் திசையை சார்ந்தது. இந்த கருத்துருவின் விதை ரிக் வேதத்தில் உள்ளது. இதற்கு குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனன் அடையும் மனத்தடுமாற்றத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம். ஒருவரை கொல்லுதல் பாவமா இல்லையா? அதில் பாவம் இல்லை என்பதை கிருஷ்ணன், இந்த நிகழ்வுகள் மற்றும் விழுமியங்களின் திசைத்தேர்வை வைத்து தெளிவாக கீதோபதேசமாக உரைக்கிறார்.
வேத மனதின் வியப்புணர்வையும், ஆராயும் தன்மையையும் விளக்க நான் ஒரு பாடலை மேற்கோளாக அளிக்கிறேன். இந்த பாடல், பின்னர் வந்த இந்திய சிந்தனைகளுக்கு அடிப்படையானதாக விளங்குகின்றது என இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
சிருஷ்டிகீதம்(நாஸதீய சூக்தம்)
ரிக்வேதத்தின் 10-வது மண்டலத்தில் உள்ள 129-வது பாடல் (10:129):
அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை
ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை
இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது
அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!
ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன
ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?
அதன் மூலகாரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!
பிராமணங்கள் பலிச்சடங்குகளை, யாகவேள்விகளை ஆசார முறைகளை வலியுறுத்தும் வேளையில், உபநிஷதங்கள் தத்துவக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. பகவத்கீதையின் இறையியல் என்பது வருண வழிபாடு மட்டுமே. இதில் கர்மா எனும் சிக்கலான கோட்பாடு ‘ரித’ என்ற கருத்துருபோலவே தொடக்க நிலையிலியேயே இருக்கிறது. சாங்கியத்தின் இருமைத் தத்துவம்(dualistic philosophy ) நீரின் மேல் மிதக்கும் ’ஹிரண்யகர்பம்’ என்ற உருவகமாக தர்க்கபூர்வமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவி சடங்குகள் அல்லது மந்திரங்கள் ஓதுவதால் ஏற்படும் உன்னத நிலைகள் அல்லது சோம ரசத்தின் தாக்கங்கள் பற்றிய, விண்ணுலகின் மேன்மைகள் பற்றிய விவரணைகள், நமக்கு யோக நிலையில் கிடைக்கும் புலன்மயக்கங்களுடன் கூடிய தெய்வீக பேரின்பத்தை நினைவுபடுத்துகின்றன. சொற்களை விரயமாக்காமல் சுருக்கமாக சொல்வதானால், ஒருபக்கம் வேதங்களுக்கும் இன்னொருபக்கம் உபநிடதங்கள் மற்றும் பிற்கால படைப்புகளுக்கும் தெளிவான தொடர்ச்சி உள்ளது.
புருஷ சூக்தம்
உபநிடதங்கள் பற்றி மேலும் பார்க்கும் முன், புகழ்பெற்ற, சர்ச்சைக்குரிய புருஷ சூக்தம் பற்றி சுருக்கமாக காண்போம். ரிக் வேதம் நான்கு வர்க்கங்களை குறிக்கிறது. புருஷ எனும் சொல்லை மையமாக வைத்து பிரபஞ்ச பரிணாம கோட்பாட்டை ஒரு விதமாக விளக்குகிறது. ‘புருஷ்’ என்ற சொல்லின் அர்த்தம் தான்(சுயம்) அல்லது வெறும் மனிதன் என்பதாக இருக்கலாம். ஆனால் ரிக்வேதம், இதுவரை இருந்த அனைத்தும், இனி வரப்போகும் அனைத்தும் ஆன ஒன்றாக ‘புருஷ’னை வர்ணிக்கிறது. அவ்வாறாக தனி ஒரு உயிரையும் முழு பிரபஞ்சத்தையும் ஒப்பிடுகிறது. மீள மீள வரும் இக்கருத்து மிக முக்கியமானது.
பூசாரி எவ்வாறு பலி விலங்கை வெட்டி பங்கிடுவாரோ அதேபோல கடவுளுக்கு பலியிடுவதற்காக ’புருஷ’ பங்கிடப்படுகிறது. புருஷ-வில் இருந்து ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட வெவ்வேறு விலங்கினங்களும், நால்வகை மனிதர்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன. புருஷ சூக்தத்தின் படி புருஷ-வின் வாய் பிராமணன் என, இரு கரங்கள் சத்ரியர் என, இரு தொடைகள் வைசியர்கள் என, இரு பாதங்கள் சூத்திரர் எனவும் வர்ணிக்கப்படுகிறது. மேலும் புருஷ-வின் மனதில் இருந்து நிலவும், கண்களில் இருந்து சூரியனும், வாயில் இருந்து இந்திரனும் அக்னியும், மூச்சில் இருந்து காற்றும் பிறக்கின்றன. தொப்புளில் இருந்து வானம், தலையில் இருந்து விண்ணுலகு, பாதத்தில் இருந்து மண்ணுலகு, காதில் இருந்து விண்வெளி ஆகியவையும் பிறக்கின்றன. நால்வர்ணங்களில் சூத்திரனை போல, உலகமும் ’புருஷ’வின் பாதத்தில் இருந்து உருவாகின என்பதை கவனிக்கவும்.
புருஷ சுக்தம், பிறந்தவற்றிக்கும் பிறக்காதவற்றுக்கும், கண்ணுக்கு புலப்படுகிற புலப்படாத எல்லா பிறப்புகளுக்கும், பிற அனைத்துக்குமான ஒரு தெளிவான ஒற்றை மூலத்தை முன்வைக்கிறது. இந்த கருத்து பிற்காலத்திய வேத மரபை அடிப்படையாகக்கொண்ட தரப்புகளில், குறிப்பாக உபநிடதங்களில் மேலும் விரிவாக்கப்பட்டு, ஆராயப்பட்டுள்ளது.
உபநிடதம்
உபநிடதம்(உபநிஷத்=உப+நிஷத்) என்பதன் நேரடி பொருள் ஒருவரின் அருகமர்தல். ஒருவகையான மிக அந்தரங்கமான தொடர்புறுத்தல் என்பதாக இச்சொல் பொருள்படுகிறது. உபநிடங்களில் பொதிந்துள்ள ஞானத்தை உணர ஒருவர் நீண்ட தூரங்கள் பயணிக்கவும், பெரும் செல்வத்தை செலவழிக்கவும் வேண்டும் என பெரும்பாலான உபநிடதங்கள் வெளிப்படையாக சொல்கின்றன. இந்திய தத்துவத்தின் இரு புகழ்பெற்ற சொற்களான பிரம்மம்(Bramha) மற்றும் ஆத்மா(Atman) என்பவை உபநிடதங்களிலேயே முதலில் ஒலிக்கின்றன. மேலும், உபநிடதங்கள் நீண்ட காலவெளியில் எழுதி, பின்னர் தொகுக்கப்பட்ட காரணத்தினால், அவற்றில் ஒருமையை காணலாம். ஒற்றை அமைப்பை மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளை கற்பிப்பதை வைத்து, உபநிடதங்களும் , ரிக் வேதங்கள் மற்றும் சம்ஹிதைகள் போல தொகுப்புகளே என்று மன்தார்கர்(Mandarkar) கூறுகிறார். ‘பிரக்ஞானம் பிரம்மம்’, ‘தத்வமஸி’, ‘அகம் பிரம்மாஸ்மி’, ‘அயம் ஆத்மா பிரம்மா’ போன்ற மகாவாக்கியங்கள் அல்லது ஆப்தவாக்கியங்களை அத்வைதத்தில் விரிவாக பார்க்கலாம்.
பிரகதாரன்ய(அடர்கானகம்) உபநிடதம்:
உபநிடதங்கள் இருத்தலியல் மற்றும் மெய்யியல் போன்றவற்றை எப்படி அணுகுகின்றன? புருஷ சூக்தம் புருஷ-வை வைத்து விவரிப்பது போலவே, பிரகதாரன்ய(அடர்கானகம்) உபநிடதம் பிரபஞ்சவியலை ஒரு பலியிடப்படும் குதிரையை வைத்து விவரிக்கிறது. குதிரையின் உறுப்புகளான தலை விடியும்பொழுதையும், காது ஆத்மாவையும், முதுகு வானத்தையும், கால்கள் பகலிரவையும், எலும்புகள் விண்மீன்களையும், தசைகள் மேகங்களையும் குறிக்கின்றன. குதிரையின் கொட்டாவி மின்னல்கள்; அதன் உலுக்கல் இடி; சிறுநீர் மழை; கனைத்தல் பேச்சு என முடிகிறது. உபநிடதங்கள் நமக்கு இம்மாதிரி குதிரை மற்றும் மனிதரின் பாகங்களை, திறன்களை புரியவைத்து, பிண்டம் முதல் அண்டம் வரையும், நுண்ணுயிர் முதல் பெரும் பிரபஞ்சம் வரையும் விரிந்து பயணிக்க உதவுகிறது. ஒருவேளை விலங்குகளின், மனிதர்களின் கட்டமைப்பை பயில்வது தான் எல்லாவற்றிலும் மறைந்துள்ள அடிப்படை வடிவை கண்டடைவதற்கான ஒரே வழியாக இருக்கலாம். நாம் ஒரு பெரும் முழுமையின் அங்கம், அந்த முழுமை நம்முள்ளும் உறைகிறது எனவும் அது சொல்கிறது.
ஜனகன் அவையில் யக்னவால்கியர் மற்றும் கார்கி விவாதம் – ஓவியம்
தத்துவ பிரச்சினைகள் வழியாக நம்மை சுற்றியுள்ள உலகத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை உபநிடதங்களில் உரையாடல்களின் மூலம் விளக்கப்படுகின்றன. ஜனக(Janaka) மன்னனின் அவையில், யக்னவல்கியருக்கும்(Yajnavalkya) கார்கிக்கும்(Gargi Vachanakavi) இடையேயான உரையாடலை பாருங்கள். தன் அவையில் யார் அதிகம் கற்றவர் என ஜனகன் அறிய விழைகிறான். யக்னவல்கியர் தன்னை நிறுவ முன் வருகிறார். மற்ற போட்டியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டு, அனைவரையும் அமைதியாக்குகிறார். அந்த போட்டியாளர்களில் ஒருவர் கார்கி. அவர் முழு விவாதத்திலும் பங்கேற்று இருமுறை யக்னவல்கியரிடம் கேள்விகளை தொடுக்கிறார்.
அறிவியங்கியலில் ( Epistemology) எந்த பொருட்படுத்தக்கூடிய ஆராயும் மனநிலையும் இல்லாமல், பதில்களில் இருந்து மீண்டும் கேள்விகளை உருவாக்கியபடியே விவாதத்தை வீணாக நீட்டிக்கும் செயலை தத்துவ விவாதங்களில் “பின்னகரும் விவாதமுறை” (regression argument) என்பார்கள். உதாரணமாக, ஒருவர் உலகம் நீராலானது என்றால், நீரின் மூலம் எது என வினவுவது, காற்று என்றால், காற்றிற்கு மூலம் எது என வினவி நீட்டிச் செல்வது. இந்த உத்தியை பயன்படுத்தி கார்கி யக்னவல்கியருடன் விவாதித்தார். இரு முறையும் கார்கி பின்னகரும் விவாதமுறையை(regression argument) பயன்படுத்திய போதும், முதல்முறை கார்கியை நிறுத்திய யக்னவல்கியர், இரண்டாவது முறை முழுமையாக தன் பதில் வாதத்தை வெளிப்படுத்தினார். எல்லா பொருட்களும் பரவெளியில் இணைத்து நெய்யப்பட்டுள்ளது என கார்கிக்கு திருப்திகரமான பதிலளித்தார். பரவெளியை தாங்கும் பரவெளியும், அதற்கும் மேலாகவும் அழிவற்ற பிரம்மம்(Brahma) இருக்கிறது. எல்லா பொருட்களையும் பிணைந்திருப்பது, அவற்றை தாங்கக்கூடியது பிரம்மம்தான்.
பிரகதாரன்ய உபநிடதம், உபநிடதங்களிலேயே பழமையானது. அறியாதவற்றையும் தெரியாதவற்றையும் புரிந்துகொள்ள, அதன் பிற்கால உபநிடதங்களுக்கு ஒரு வரைவை அல்லது வார்ப்பை பிரகதாரன்ய உபநிடதம் அமைத்து கொடுத்தது. அதாவது, அறியாதவற்றையும் தெரியாதவற்றையும் விளக்க, நமக்கு தெரிந்தவற்றில் இருந்து உவமைகளை மேற்கோள்களாக பயன்படுத்தும் உத்தி.
சாந்தோக்கிய(Chandogya) உபநிடதம் மற்றும் கேன உபநிடதம் (Kenopaniṣad)
மற்றுமொரு பழமையான உபநிடதமான சாந்தோக்கிய(Chandogya) உபநிடதம், முன்பு கேட்டிராததை கேட்க வைத்த, முன்பு சிந்தித்திராத பொருளை சிந்திக்க வைத்த, முன்பு உணரப்படாததை உணரவைத்த, மாற்று விதியை பற்றியும் நீங்கள் நிச்சயமாக உசாவியிருக்க வேண்டும் என கூறுகிறது. உடல் உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும், மிக அடிப்படை கூறுகள் முதல் பிரம்மாண்டமான விண்மீன் குழுக்களுடன் இணைக்கும் உள்ளார்ந்த ஒத்திசைவை இம்மாற்று விதிகளின் ஊடாக நாம் உணர வேண்டும். இந்த ஒத்திசைவுக்கு மூலாதாரம் பிரம்மன். இது ஒரு ஒருங்கிணைக்கும், பிரபஞ்ச கோட்பாடு. இதை பற்றி கென உபநிடதம் விவரிக்கிறது. கேன – ‘யாரால்’ அல்லது ‘எதனால்’ என கேள்வியுடன் தொடங்கும் உரையாடல்.
யாரால் தூண்டப்பட்டது? வலுயுறுத்தியது யார் ? மனம் இவ்வளவு உயர்ந்துவிட்டதா?
யாரால் அறிவுறுத்தப்பட்டு மூச்சு முதலில் முன்னேறுகிறது?
இந்த மக்கள் பேசும் பேச்சை தூண்டியது யார்?
கூடவே பார்வையையும் கேட்கும்திறனையும் இணைத்த அந்த கடவுள் யார்?
கேட்டலுக்கு பின்னுள்ள கேட்டல், சிந்தனைக்கு பின்னுள்ள சிந்தனை, பேச்சின் பின்னுள்ள பேச்சு, பார்வைக்கு பின்னுள்ள பார்வை, மூச்சிற்கு பின்னுள்ள மூச்சு, இவையனைத்துமே அது.
இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர் அமரராக முக்தியடைகிறார். எது ஒருவனின் கண்களால் நேரடியாக பார்க்க முடியாததோ, எது பார்வைக்கே காரணமானதோ, அதுதான் பிரம்மன் என்பதை அறிகிறான் என்று கேன உபநிடதம் சொல்கிறது. மூச்சு, பேச்சு, கேட்டல், பார்வை மற்றும் சிந்தனை போன்றவை இடம்பெற்ற இந்த எல்லா பத்திகளும் ஒரே அடுக்குமுறை கொண்டுள்ளதை கவனித்திருப்பீர்கள். இந்த ஒத்திசைவு வலைப்பின்னலில், பிரம்மன் என்பது ஒரு கூறு என்பதை விட மிக மேலானது; அடிப்படையானது என்பதையும் கவனித்திருப்பீர்கள்.
சாந்தோக்கிய உபநிடதத்தில், உத்தாலகன் தன் மகனிடம் ஆலம்பழத்தை கொண்டுவர சொல்கிறான். பழத்தை பிரித்து விதையை கண்டுபிடித்து அதை திறக்க சொல்கிறான். மகன் ஸ்வேதகேது திறந்த விதைக்குள் ஒன்றுமில்லாததை காண்கிறான். இவ்விதைக்குள் நுண்ணிய சாரம்(Essence) உள்ளது என்றும், அதன் கணக்கிலேயே இந்த ஆலமரம் வளர்ந்துள்ளது என்று உத்தாலகன் கூறுகிறான். மேலும், அந்த சாரமே இந்த முழு உலகின் ஆத்மாவை உண்டாக்குகிறது என்கிறான் உத்தாலகன். அதுவே உண்மை, அதுவே ஆத்மா. இந்த சாரம்; சாரத்தினுள் உள்ள சாரம்தான் அனைத்தையும் ஒன்றுபடுத்துகிறது, முழுமைப்படுத்துகிறது. அது அருவமானது.
ஆத்மா என்பது என்ன? சாந்தோக்கிய(Chandokiya) உபநிடதத்தில் இந்திரனும் அவன் நண்பனும் ஆத்மாவை புரிந்து கொள்ளும் தேடலில், எல்லாவற்றையும் பிறப்பிக்கும் பிரஜாபதியிடம் செல்கிறார்கள். பிரஜாபதி அவர்களிடம் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை காட்டினார். அதில் அவர்களின் நீர்பிம்பத்தை பார்க்க சொல்லி ” உங்களில் நீங்கள் பார்த்து உணரமுடியாத ஏதேனும் இருந்தால் அதை சொல்லுங்கள்” என்கிறார். அவர்கள் “ எங்கள் முழு உடலையும் அதன் சிறு நுட்பங்களையும் காண்கிறோம்” என்று பதில் சொன்னார்கள். ”அதுவே ஆத்மா” என்றார் பிராஜபதி. ஓவ்வொரு சிறு அங்கமும் பாகங்களும் தெரியும் துல்லியம். தொடர்ந்து பிரஜாபதி அவர்களிடம் நன்கு அலங்கரித்துக்கொள்ள, நல்ல உடைகள் அணிய, சொல்லிவிட்டு மறுபடியும் நீர்பிம்பத்தை பார்க்க சொல்கிறார். அவ்வாறே செய்த இந்திரனும் அவர் நண்பரும், இப்போதும் அவர்களின் அதேபோன்ற மெருகூட்டப்பட்ட பிம்பத்தை காண்பதாக சொன்னார்கள். அதுவே ஆத்மா, மாறாதது அழிவற்றது, அச்சங்களுக்கு அப்பாற்பட்டது, அதுவே பிரம்மன் என்றார் பிரஜாபதி.
இந்த விடையில் மனநிறைவு பெற்று இந்திரனும் அவர் நண்பரும் போவதை பார்த்துக்கொண்டே பிரஜாபதி சொன்னார், ‘ஆத்மாவை பற்றி பயிலாமலும், கண்டறியாமலும் போகிறார்கள் பார்’. ஆனால் இந்திரன் எளிதில் ஏமாறுபவன் அல்ல. வெறும் பிரதிபலிக்கும் பிம்பம் அல்ல தான் தேடும் ஆத்மா என்பதை அவன் உடனே உணர்கிறான். என்ன அலங்கரித்தாலும், இந்த உடல் நோயுறும், சிதைவுறும். எனவே மேலும் ஆராய்ந்து தெரிந்து கொள்ளத் திரும்பி வருகிறான். மீண்டும் வந்த இந்திரனிடம் பிரஜாபதி முதிர்வற்ற, ஆழமற்ற விடைகளையே பகட்டான வார்த்தைகளில் சொல்லி திருப்பி அனுப்பினார். பல வருடங்களாக இந்திரன் எண்ணற்ற முயற்சிகள் செய்தபிறகு பிரஜாபதி அவனுக்கு விடையை அளித்தார்.
எவன் விழிப்புடன் இருக்கிறானோ, அவனில் “இதோ நான் நுகர்கிறேன்”
அதுதான் ஆத்மா. அவனில் உள்ள நுகரும்தன்மை தான் அவனை நுகர வைக்கிறது.
எவன் விழிப்புடன் இருக்கிறானோ, அவனில் “ இதோ நான் பேசுகிறேன்”
அதுதான் ஆத்மா. அவனில் உள்ள பேசும்தன்மைதான் அவனை பேச வைக்கிறது.
எவன் விழிப்புடன் இருக்கிறானோ, அவனில் ”இதோ நான் கேட்கிறேன்”
அதுதான்ஆத்மா அவனில் உள்ள செவிகூரும்தன்மைதான் அவனை கேட்க வைக்கிறது
எவன் விழிப்புடன் இருக்கிறானோ, அவனில் ”இதோ நான் இதை சிந்திக்கிறேன்”
அதுதான் ஆத்மா; அவன் ஆத்மாவின் தெய்வீகத்தன்மைகொண்ட அம்சம் மனம்தான்.
பிரஜாபதி சிந்தனை, பேச்சு, புலனுணர்வு என அனைத்திற்கும் அடியொழுக்காக ஆத்மாவை உருவகிக்கிறார். அவர் ஆத்மா என்ற சொல்லை தெளிவாகவே வரையறுக்கிறார். மற்ற சில உபநிடங்களில் தேர் உவமை கையாளப்படுகிறது. அறிவுடையவர் தேரோட்டி, மனம் கடிவாளம், தேர் என்பது உடல், புலன்கள் தேரை இழுக்கும் குதிரைகள்.
கட உபநிடதம்
உடல் எனும் தேரில் ஆத்மா அமர்ந்துள்ளது
கடிவாளம் மனம், புத்தி அதை செலுத்துகிறது.
புலன்கள் குதிரைகள்
உலகத்தை அவை ஆள்கின்றன
ஆத்மா உலகாள்கிறது என்று தோற்றமளிக்கிறது.
பிரஜாபதி அளிக்கும் விளக்கத்தைவிட கட உபநிடதம் அளிக்கும் சித்திரம் மேலானது. கச்சிதமாக சொல்வதென்றால், செயலுக்கோ விருப்புறுதிக்கோ ஆத்மா மூலமல்ல. அசைவற்று தன்னையே நோக்கும்போது அது தன்னை கவனிக்கவும் செய்கிறது. அது செவிகூரும்போதும், சிந்தித்துக்கும்போதும்கூட தன்னையே கவனிக்கிறது. ஆத்மாவை வெறுமே ’பார்ப்பவன்’ என்று வரையறுக்க முடியாது. அதை ’ பார்க்க விழைவது’ என்றும் சொல்லமுடியாது. அது தான் பார்ப்பதை, தான் பார்க்கப்படுவதை உணர்வது மட்டுமே. ஆம், அது எதுவுமல்ல. தனது சொந்த விருப்பங்களில் இருந்தும், செயல்களில் இருந்தும் விலகிய, உணர்ச்சிகளற்ற, சுய ஈடுபாடற்ற ஆத்மா, அவற்றை பின்தொடரும் போது கூட அதுவே தன்னை அறிந்திருக்கும்.
ஆத்மா பற்றிய பல்வேறு விளக்கங்களில், யக்னவால்கியர் சொல்வது தனித்துவமானது. உப்புநிறைக்கு தனித்துவமான மையமோ, உட்பொருளோ இல்லை. ஆனாலும் அந்த முழுநிறையும் ஒரே சுவை . அது போல ஆத்மாவும் தனித்துவமான மையம் மற்றும் உட்பொருள் இல்லாதது. அதன் முழுமை என்பது நிறை( கணம் (Ghana)). அதுதான் பிரக்ஞா (Pragyana). எப்போதும் நம்முடனே இருப்பதால், ஆத்மாவை தனித்து துல்லியமாக காண இயலாது. நம் அனுபவத்தின் அறியக்கூடிய பண்புகளை மட்டும்தான் நம்மால் கண்டுகொள்ளமுடியும். உலகியல் நெருக்கடிகளில் நம்மில் எழும் தவறான விழைவுகளுக்கு பின்னால் ஆத்மா ஒளிந்திருக்கும். நம்மையே நாம் விலகி நின்று பார்ப்பது மிகக்கடினம். உதாரணமாக, நீங்கள் ஓர் கோவிலுக்கு உள்ளே இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். கோவிலின் உள்ளிருந்து உங்களால் கோவிலை காண இயலாது. அடுத்து கோவிலுக்கு வெளியே வாருங்கள். கோவிலின் உள்ளிருப்பதை இப்போதும் உங்களால் காண இயலாது. உங்களை கோவிலாக உருவகியுங்கள். நீங்கள் உள்ளிருக்கும்போது உங்களையே காண இயலாது. நீங்கள் வெளியே இருந்தாலும் உங்கள் உள்ளிருப்பதை காண இயலாது. உங்களால் கோவிலின் வெளிப்புறத்தையும் அமைப்பையும் மட்டுமே காணமுடியும்.
யக்னவால்கியர் உடனான ஒரு உரையாடலில், மனிதன் இறந்த பின் என்ன நிகழ்கிறது என்ற கேள்வி எழுகிறது. பேச்சு நெருப்பில், மூச்சு காற்றில், பார்வை சூரியனில், மனம் சந்திரனில், கேள்திறன் காலவெளியில், பருவுடல் மண்ணில், ஆத்மா விண்ணில், தலைமுடி மரங்களில், உடலில் உள்ள முடிகள் செடிகளில், உதிரமும் விந்துவும் தண்ணீரில் மறைகின்றன என பதிலளிக்கிறார். மேலும் அந்த மனிதனுக்கு என்ன நேர்கிறது என்ற மறுகேள்விக்கு, இதை பொதுவில் பேசக்கூடாது, உள்ளே மறைவாக பேசலாம் என கேள்வி எழுப்பியவரை கூட்டிசெல்கிறார். அவர்கள் பேசியதும் புகழ்ந்ததும் எல்லாம் ஊழ் (கர்மா) பற்றி. மனிதன் நன்மைகள் செய்திருந்தால் நல்லதாகவும், தீமைகள் செய்திருந்தால் தீய ஒன்றாகவும் உருமாறுவான் என யக்னவால்கியர் கூறுகிறார். இது கர்மாவை குறித்தாலும், உபநிடத காலங்களில் மறுபிறப்பு என்பது பொதுவான பேசுபொருளாக இல்லை. இன்னொருபுறம், வீடுபேறு, அழிவின்மை, மரணத்திற்கு பின்னான இருப்பு என்பவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன.
யக்னவால்கியர்
தொன்மையான ஊழ் (கர்மா) கோட்பாட்டின்படி, வீடுபேறு என்பது மறுபிறப்பில் இருந்து விடுதலை. இது கொஞ்சம் முரணான கருத்துபோல தோன்றலாம். உபநிடதங்கள் இறுதி வீடுபேறு, முக்தி அல்லது மோட்சம் பற்றி பல பார்வைக் கோணங்களை முன்வைக்கின்றன. இங்கே திரும்பவும் யக்னவால்கியரின் உதவியை நாடலாம். அவர், ஆத்மா கனவில்லாத உறக்கத்தில் அறியப்படும் என்கிறார். ஆத்மா என்பது ஒருவனின் பிரக்ஞை புறவுலகில் உள்ள பருப்பொருட்களையும், கனவுலகின் அவனே உருவாக்கிக்கொள்ளும் உலகையும் உணரமுடியாத நிலையில், தன்னை மட்டுமே உணர்ந்திருப்பது. மனிதன் தான் மிகவும் விரும்பும் பெண்ணால் கட்டி அணைக்கப்பட்டிருக்கும் போது அகமும் புறமும் மறந்திருப்பான். அதேபோல, அறியும் ஆத்மாவால் அணைக்கப்பட்டிருக்கும் போது அகமும் புறமும் மறந்திருப்பான். எல்லா துயரங்களையும் கடந்த இந்நிலையில், விரும்பிய அனைத்தையும் அடைந்திருப்பான். அவனுக்கு ஆத்மாவை தவிர வேறு விருப்பங்களில்லை.
கனவுகள் இல்லாத உறக்கத்தில் நாம் அனுபவிக்கும் பருப்பொருட்கள் அற்ற உணர்வினால் அடையும் ஒரு உன்னதமான பேருவகை நிலை, அது பிரம்மனின் உலகம் எனப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த உன்னத நிலையை நாம் விழித்தவுடன் மறந்து விடுகிறோம். அல்லது கனவுகள் இல்லாத உறக்கத்தில் இருந்து கனவுகள் கூடிய உறக்கத்திற்கு சென்றதும் மறந்து விடுகிறோம். ஆனால், யக்னவால்கியர் இதே சொற்களை மறுபிறப்பின் சுழலில் இருந்து விடுதலை பெற்ற மனிதரை விவரிக்க பயன்படுத்துகிறார். ஆசைப்படாதவனின், விருப்பங்கள் இல்லாதவனின், விருப்பங்களில் இருந்து விடுபட்டவனின், விருப்பங்களை அடைந்தவனின், தன் விருப்பம் ஆத்மா என கொண்டவனின் மூச்சு விடுபடுவதில்லை. பிரம்மன் ஆன அவன், பிரம்மத்தை அடைகிறான் என்று யக்னவால்கியர் கூறுகிறார்.
பாம்பின் சட்டை எவ்வாறு எறும்பு புற்றின் மேல் கிடக்கின்றதோ, அதேபோல இந்த உடலும் கிடக்கிறது. ஒருவனின் மனதில் தங்கியிருந்த எல்லா விருப்பங்களும் நீங்கிய பின், அழிவின்மையை கொண்டு தன்னுடலில் வாழும் பிரம்மத்தை அடைகிறான். உடலற்ற அழிவற்ற வாழ்வு ஒளிமயமானது. அதுவே பிரம்ம நிலை. வீடுபேறு அடைவதற்கான அறிவை செய்யுள்களின் வழியாக முழுமையாக விளக்கமுடியாது. யக்னவால்கியர் சொல்வது போல ஆத்மா என்ன என்பதை அறிந்தவன், பிரம்மத்தை அறிந்தவன். அவன் அமைதியாக, சிறு பேச்சுக்களை தவிர்த்து, ஞானத்தை மட்டுமே பயிலவேண்டும்.
இந்திய தத்துவத்தின் விதைகள் வேதங்களில் உள்ளன. பின்னர் அவை உபநிடதங்களில் அடையாளம் காணக்கூடிய வடிவங்களில் முளை விடுகின்றன. உபநிடதங்களில் பிரம்மமும் ஆத்மாவும் திரும்பத் திரும்ப விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தேடல் என்ன? உலகம் எப்படி தோன்றியது? எவ்வாறு உயிரினங்கள் உருவாயின? அவற்றின் ஒருமைக்கும் இருப்பிற்கும் காரணமென்ன? படைத்தவர் யார்? எதிலிருந்து உலகம் துளிர்த்தது? அது மறுபடி முந்தைய நிலைக்கே திரும்பிவிடுமா? வேத உபநிடத தத்துவவாதிகள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்விகள் இவை. அவற்றுக்கான விடையாக பிரம்மமும் ஆத்மாவும் வெளிவருகின்றன. அவ்விரண்டிற்கும் இடையேயான உறவை பற்றி முடிவற்ற விவாதங்களும் இடம்பெறுகின்றன. இவ்வுரையாடல்களை, இந்து தத்துவத்தின் ஆறு தரிசனங்கள், இன்னும் லட்சகணக்கான வழிகளில் முன்னெடுக்கின்றன.
000
நன்றி : சிருஷ்டிகீதம் – தமிழ் விக்கி