
ஒளியிழந்த வெண்கல உருளியில் நிறைந்திருந்த நீர், களிமண் கரைந்து கலங்கியிருக்க, அதனருகில் அமர்ந்திருந்த தனம் தன் சிறு கைவிட்டு அதனில் துழாவினாள். அதில், தேன் மெழுகால் செய்யப்பட்டு, அடர் பழுப்பு நிறத்திற்கு நிறம்மாறி, முத்திரை காட்டியபடி இருந்த கைகளும், சலங்கை அணிந்திருக்கும் அழகிய கால்களும், கண்திறக்காத மென்சிரிப்பில் உறைந்திருந்த முகங்களும், கோரைப்பற்கள் கொண்ட யாளியுமாக மெழுகில் செய்த மாதிரிகள் அமிழ்ந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றையும் அதிலிருந்து எடுக்கும்தோறும் அதில் உறைந்திருந்த பாவனையை தனம் முன்னும் பின்னும் திருப்பி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் ஆள்காட்டி விரலை விடச் சற்றே பெரியதாக, தடிமனாக இருந்த ஒரு சிறு கை மட்டும் தான் தனத்துக்குப் பிடித்திருந்தது. முழங்கை வரை மட்டுமே நீண்டிருந்த அக்கையின் மணிக்கட்டில் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடிய வளையம் ஒன்றை அணிந்திருந்தது. கைக்குள் வைத்து அடக்கும் அளவிலிருந்ததால் கூட அவளுக்கு அதனைப் பிடித்திருக்கலாம். அதன் முழங்கையின் அடிப்பகுதியை தன் விரல்களால் பிடித்து ஒருமுறை சுழற்றி பார்த்தாள். சுட்டுவிரல் குனிந்து விலகி நிற்கும் பெருவிரலைத் தொட்டு வளையம் போல இருக்க, மற்ற விரல்கள் மேல்நோக்கி அமைந்து முத்திரை ஒன்றினை காட்டிக்கொண்டிருந்தது. மெத்தென்ற வழவழப்பான அதன் உள்ளங்கையை தனம் தொட்டுப்பார்த்தாள். பின்பு, அதன் விரல்களின் அமைப்பைப் போலவே அவள் விரல்களையும் ஒன்று கூட்டிவைத்துப் பார்த்து அதன் நளினம் வராமல் போக, மற்றொரு கையால் அவளின் சிறுவிரல்களை மடக்க முயன்று, ஓரளவு வந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றிய கணம், அவள் முகத்தில் புன்னகை ஒன்று எழுந்து வந்தது.
“அப்பா, இங்க பாரு” என்று விரல்களை அசைக்காமல், கவனமாக, முத்திரையுடன் கூடிய தன் கையை உயர்த்தி காண்பித்தாள்.
அவளிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் அமர்ந்திருந்த சம்பந்தம் படுகையிலிருந்து எடுத்து வந்த வண்டல் மண்ணை பிசைந்துகொண்டிருந்தான். கொல்லைப்புற வாசலையொட்டி அமைத்திருந்த கீற்றுக் கொட்டகையில்தான் சம்பந்தம் சிலை செய்வதற்கான பட்டறை இருந்தது. அதன் முடிவில் மெலிந்த ஒரு அடி பம்பும், சரிந்த துணி துவைக்கும் கல்லும் இருக்க, அதனைத் தாண்டி நாக்குகளை நீட்டிப் பூத்திருந்த டிசம்பர் பூக்களின் செடிகளும், மரங்களுமாக அவ்வீட்டின் கொல்லைப்புறம், தொலைவில், குளம் ஒன்றில் இறங்கியிருந்தது. மந்தமான காலை வெயிலில், அவன் தலைக்கு மேல் படர்ந்திருந்த பூவரசு மரம் சட்டையில்லா அவன் வெற்று உடம்பில் ஒளிப்பூச்சிகளை உதறியிருந்தது. அவன் விரல்கள் அக்களிமண்ணுடன் நைச்சியமான ஒரு உரையாடலில் ஈடுபட்டு அதனை இலகுவாக்கிக்கொண்டிருந்தன.
தனம், “அப்பா, இங்க பாரு” என்று சத்தமாக அழைத்தாள்.
“ம்..” என்று சொல்லிவிட்டு வண்டல் மண்ணில் சிறிதளவு தண்ணீர் தெளித்துவிட்டுத் திரும்பி, தனத்தின் கைகளை உற்றுப் பார்த்தான். பின், அவள் இடது கையில் வைத்திருந்ததைக் கவனித்துவிட்டு, “ம்..நல்லாருக்கு” என்று சொல்லிவிட்டு மீண்டும் மண்ணைப்பிசைய ஆரம்பித்தான்.
தனம் அவள் கையில் வைத்திருந்ததைப் பார்த்துக்கொண்டே, “அப்பா, இத பாப்பா வச்சிக்கிட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே, அவளே அதற்குச் சரி என்பது போலவும் தலையாட்டிக்கொண்டாள்.
“ம்..பத்திரமா வச்சுக்கோ. தொலைச்சிடாத”, என்றான்.
தனம் அவள் அணிந்திருந்த ஆடையை முன்னும் பின்னும் பார்த்தாள். பின்பு, அவளின் முட்டிவரையேயிருந்த பாவாடையின் நுனிப்பகுதியை ஒரு பக்கம் தூக்கி, அதில் அந்த மெழுகுக்கையை வைத்துச் சுருட்டி, அதைப் பிடித்துக்கொண்டாள்.
சம்பந்தம் மண்ணைப் பிசைந்துகொண்டே அவளிடம், “அம்மாகிட்ட குடிக்க தண்ணி கொண்டு வர சொல்லு. அப்படியே உன் தலைமுடியை கட்ட சொல்லு. மொகத்தில வந்து விழுது” என்று சொல்லிக்கொண்டே, வண்டல் மண்ணை ஒரு உருண்டையாக உருட்டி வேறு ஒரு பாத்திரத்தில் வைத்தான். அது வெளிறிய பச்சைநிறத்தில் பிடி இளகாமலிருந்தது. அவன் கைவிரல்கள், உள்ளங்கைகளின் கோடுகள் என அனைத்தும் அந்த களிமண்ணில் பதிந்து, தோலுரித்த சிறு விலங்கெனக் கிடந்தது.
தனம் ஏதோ யோசனையுடன் கொல்லைப்புறத்திலிருந்து ஒரு கையால் பாவாடையைப் பிடித்துக்கொண்டே வீட்டுக்குள் சிறு ஓட்டத்துடன் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து, மோகனா தண்ணீர் எடுத்துக்கொண்டு பட்டறைக்கு வந்தாள். சம்பந்தம் அவள் வருவதைக் கவனிக்காமல், மெழுகை உருக வைக்கக் கரி அடுப்பைத் தயார் செய்துகொண்டிருந்தான். அவளையொட்டியே வந்த தனம், பூவரசு மரத்தின் பூ ஒன்று நோகாமல் கீழே விழ, ஓடிச்சென்று அதனை எடுத்தாள். அதன் இதழ்கள் ஒன்றோடு ஒன்று முறுக்கேறிச் சிறு குடுவையென இருந்தது. தனம் அப்பூவினை வாயில் கவிழ்த்து “ஸ்ஸ்ஸ்” என்று ஒலியெழுப்பிச் சப்பு கொட்டிக்கொண்டாள்.
“ஏய்! அதுல எதாவது எறும்பு இருக்க போகுதுடி”, என்று சொல்லிக்கொண்டே, சதுர சதுரமாக வெட்டப்பட்ட மெழுகு துண்டுகள் அங்கிருந்த பலகையிலிருந்து கீழே விழுந்து கிடக்க, அதனைப் பொறுக்கி மரப்பலகையின் மீது வைத்தாள்.
சம்பந்தம் மோகனாவை கண்டதும், எழுந்து, வாயில் வைத்திருந்த வெற்றிலையை வேலியோரம் சென்று துப்பிவிட்டு, அவளிடமிருந்து நீரை வாங்கிப் பருகினான்.
“தியாகராஜன் அண்ணன் வந்துட்டு போனாரு. போன மாசம் வீட்டுவாடகையும் தரல இந்த மாசமும் இதுவரைக்கும் ஒன்னும் வரலன்னு கேட்டாரு”, என்றாள்.
சம்பந்தம் வாயில் வைத்திருந்த நீரை முழுங்கிவிட்டு, “என்ன சொன்ன?”
“என்ன சொல்றது, அவருக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லாம போய்டுச்சு, அடுத்த மாசம் சேர்த்து கொடுத்துறேன்னு சொன்னேன்.”
சம்பந்தம் நீரைக் குடித்துவிட்டு, குவளையை அவளிடம் நீட்டினான். அவனிடமிருந்து குவளையை வாங்கிக்கொண்டே, “எப்ப கேட்டாலும் எதாவது ஒரு காரணத்தை சொல்றிங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாரு” என்றாள்.
“போன மாசம் திருவாச்சி செய்ய வந்துருக்க வேண்டிய ஒரு ஆர்டரும் மூர்த்திக்கிட்ட போயிடுச்சி, அது மட்டும் வந்துருந்தா கொஞ்சமாவது காசு நின்னுருக்கும் அதுவும் இல்லாம போயிடுச்சி”, என்றான்.
மோகனா சம்பந்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன், அவள் தோளில் அறுபட்டுக் கிடந்த அவளுடைய ஒரு நீண்டமுடியை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் வாங்கி சுருட்டிக் கொண்டே “தனத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு இந்த மாசம் பணம் கட்டணும். நாளைக்கு தான் கடைசிநாள்” என்றாள்.
சம்பந்தம் தனத்தைப் பார்த்தான். அவள் கையிலிருந்த பூவினை அவள் காது மடல்களுக்கிடையே வைத்து நிறுத்த முயன்றுகொண்டிருந்தாள்.
“சரி பார்ப்போம். பெரியவர் பட்டறையில் நாளைக்கு வார்ப்பு இருக்கும். முடிஞ்ச பிறகு அத தீர்மானம் பண்றதுக்கு எங்கிட்ட தரேன்னு குரு அண்ணன் சொல்லியிருக்கு. அதிலிருந்து கொஞ்ச பணம் வரும். அத கொடுத்துறலாம்.”, என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த அடுப்புக்கரி நிறைந்த சாக்கு மூட்டையை எடுத்துக்கொண்டு அடுப்பை நோக்கிச் சென்றான்.
ராஜனுடைய பட்டறையில் சம்பந்தம் வேலை செய்யும்வரை ஓரளவுக்குப் பணம் அவன் கையில் தேங்கியது. தனியாகப் பட்டறை போடும் நோக்கத்துடன் ஒரு சில ஆர்டர்களை வாங்கி வைத்துக்கொண்டு, ராஜனிடமும் சொல்லிவிட்டுத்தான் வெளியே வந்தான். ஆனால், வந்த ஆர்டர்கள் அனைத்தும் அவன் கைவிட்டு பெரியவர் பட்டறைக்குச் சென்றுவிட, அவன் வீட்டிலேயே முடங்கி விட்டான். சிறிது நேரத்தில் அடுப்பில் தீ எங்கும் பரவி, கரியின் மீது நிற்காமல் எரிந்துகொண்டிருக்க சம்பந்தம் ஒரு விசிறியைக் கொண்டு, அடுப்பின் மீது விசிற ஆரம்பித்தான். ராஜன் பட்டறையில் தன்னுடைய இடமும், தான் இருந்த நிலையையும் நினைத்தபோது, அவனுக்குப் பெரியவரிடம் இப்பொழுது கையேந்தி நிற்பது போலத் தோன்றியது. தனக்குத் திறமையும், நம்பிக்கையும் இருக்கும்போது எதற்காக அவரிடம் கையேந்தவேண்டும்? இனி அவர் பட்டறையிலிருந்து எந்த வேலையும் வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று அவன் நினைத்தபோது, அன்றாடத் தேவைகள் அனைத்தும் அவன் நினைவுக்கு வந்து, மனம் அந்த முடிவைக் கைவிட்டது. வேலையில் மனம் ஒட்டாமல், விசிறிக்கொண்டேயிருந்தான். அடுப்பில் தீ அணைந்து ஒரு சில இடங்களில் சாம்பல் பூத்திருந்த கரிகள், அதன் மேல் காற்றுபடும் தோறும் கனன்றும், பின் அணைந்தும் கொண்டிருந்தன.
“அத்தான்”, என்று குரல் கேட்டுக் கலைந்து, திரும்பிப் பார்த்தான்.
சேகர் தனத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு, கொல்லை நிலைப் படியைத் தாண்டாமல் நின்றுகொண்டிருந்தான். தனத்தின் கையில், அவனின் இருசக்கர வாகனத்தின் சாவியைக் கொடுத்திருந்ததை, அவள் அவன் முகத்துக்கு நேரே வைத்து ஆட்டிக்கொண்டிருந்தாள்.
சம்பந்தம் என்ன என்பது போல அவனைப் பார்க்க, “பரஞ்சோதி அக்கா பொண்ணு வளைக்காப்புக்கு வரிங்களான்னு கேட்கலாம்னு வந்தேன்”, என்று சொல்லிக்கொண்டே சம்பந்தத்தை நோக்கி வந்தான்.
“இல்லடா. போனா எதாவது செய்யணும். அப்புறம் பாத்துக்கலாம்.” சிறிது இடைவெளிவிட்டு “உடம்பு வேற சரியில்ல”
“இன்னும் சரியாகலயா?”
“இல்ல. எவ்வளவு தான் மருந்துக்கு செலவுக்கு பண்றது. இவளுக்கு முடி இறக்க வச்சிருந்த பணமும் செலவடிஞ்சிடுச்சு.”
சேகர் சிரித்துக்கொண்டே, “இதுக்குதான் நம்மகிட்ட ஒரு இன்சூரன்ஸ் போடுங்கன்னு சொன்னேன்”, என்றான்.
“ஏன்டா, மருந்துக்கே காசில்லைங்கறேன். இதுல இன்சூரன்ஸ் வேற”
“சரி சரி. அம்மாகிட்ட நீங்க வளைகாப்புக்கு வரல்லன்னு சொல்லிடுறேன்”, என்று சொல்லிக்கொண்டே, தனத்தைக் கொஞ்சிக்கொண்டே, வீட்டுக்குள் சென்றான்.
மாலையில் குருமூர்த்தியைச் சந்திக்க, சம்பந்தம், பெரியவரின் பட்டறைக்குச் சென்றான். வாசலில் பாவைவிளக்கு ஏந்தியபடி, பெண்ணொருத்தியின் சிலை தூசிகளும், அங்கங்கே சிலந்திகூடுகளும் கொண்டு நின்றுகொண்டிருந்தது. அதன் காலடியில் பலதரப்பட்ட காலணிகள் ஒன்றின்மேல் ஒன்று ஏறிச் சிதறிக்கிடந்தன. அதனைக் கடந்து உள்சென்றபோது வழக்கமாக குருமூர்த்தி அமர்ந்திருக்கும் கண்ணாடி அறையில், மணிகண்டன் வேறு சிலருடன் பேசிக்கொண்டிருந்தான். குருமூர்த்தி அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும், அவ்வப்போது வாயினை ஒரு குடுவை போலச் செய்து, உத்திரத்தில் அமர்ந்திருப்பவரிடம் பதில் சொல்வதுபோல தலை தூக்கி ஏதோ சொல்லிக்கொண்டுமிருந்தான். சம்பந்தம் வெளியே சென்று சிறிது நேரம் கழித்து வரலாமா அல்லது பட்டறைக்குள்ளே செல்லலாமா என்று தடுமாறி நின்றுகொண்டிருக்கும்போது, குருமூர்த்தி அவன் வந்ததைக் கவனித்துவிட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.
சற்று பருத்த உடலும், நெற்றி நிறைய விபூதியும் கொண்டு சம்பந்தம் எதிரில் வந்து நின்று, “வாடா, என்ன விஷயம்?” என்று அவனின் இடதுகையை ஓங்கித் தட்டி அழுத்தினான். அவன் முகத்தில் அணிந்திருந்த தடித்த கண்ணாடியில் தன் முகத்தைக் கண்டு, சம்பந்தம் சற்று தள்ளி நின்று கொண்டு,
“நீ தான் வர சொன்ன”, என்றான்.
“அப்படியா”, என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்று, சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவன், வாயின் ஓரத்தினை கையால் துடைத்துக்கொண்டே, அருகிலிருந்த மற்றொரு கண்ணாடி அறைக்குள் சென்றான். சம்பந்தம் சற்றுத் தயங்கி நின்றுவிட்டு, அவன் பின்னால் அந்த அறைக்குள் சென்றான். பட்டறையில் செய்த சிலைகளுடன் மணிகண்டன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அதற்குக் கிடைத்த விருதுகள் என சுவரிலும், அலமாரியிலும் நிறைந்திருந்தன.
“ஒண்ணுமில்ல, வெக்காளியம்மன் ஒன்னு இருக்கு. தீர்மானம் பண்ணனும். பார்ட்டி அடுத்த வாரம் வேணுங்குது”, என்று சொல்லிக்கொண்டே, குருமூர்த்தி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அது சற்றுச் சுழன்று அவனை வேறுபக்கம் திருப்ப, அதனைச் சரி செய்துகொண்டான்.
சம்பந்தம், “சரி. பண்ணிடலாம். நான் உற்சவமூர்த்தி பண்றத பத்தி கேட்டிருந்தேன் உன்கிட்ட”, என்றான்.
“ஆமாம்டா. ஞாபத்துல இருக்கு. அப்புறம் பார்க்கலாம்”
சம்பந்தம், குருமூர்த்தியையே சற்று நேரம் பார்த்துவிட்டு, “என்ன பிரச்சனை? எனக்கு புரியல? ராஜன்கிட்ட வேலைப்பாத்ததுனால எனக்கு கிடைக்கமாட்டேங்குதா?” என்று கேட்டவுடன், அந்த கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாதோ? என்று சம்பந்தம் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான்.
குருமூர்த்தி அவன் அமர்ந்திருந்த நாற்காலியை, மேசையை விட்டு சற்று பின்னுக்குத் தள்ளி வெளியே வந்து, அவர்களிருந்த கண்ணாடி அறையின் கதவை இழுத்துச் சாத்திவிட்டு,
“என்னடா பேசுற? நீ ராஜன் பட்டறையில் வேலை செய்தது அவங்களுக்கு பிடிக்கலைன்னா உனக்கு சின்னவேலை கூட கொடுத்திருக்க மாட்டாங்க. ராஜனும், பெரியவரும் எதிரெதிரானவங்கதான். ஆனா, பெரியவரோட பசங்களுக்கு அந்த பகையை வளர்க்க விருப்பமில்லை. போனவாரம் கூட நீ செஞ்ச சிவகாமி அம்மன் சிலையை பார்த்ததுக்கப்புறம் மணிகண்டன் உன்னை பத்தி பெருமையாக தான் பேசுனான்”, என்று சொல்லிவிட்டு, பின் சற்றுத் தணிந்த குரலில், “உன் மேலே நல்ல மதிப்பு வச்சிருக்காங்கடா. கொஞ்சம் பொறுமையா இரு.”, என்றான்.
“அவுங்க நல்ல மதிப்பு வச்சிருந்து என்ன ப்ரொஜனம். கடைசில பெரியவர் தான் முடிவு செய்றார். நான் செய்ற வேலையெல்லாம் பெரியவர் பார்த்துருந்தாருன்னா எனக்கும் உற்ச்சவமூர்த்தி ஆர்டர் கொடுத்துருப்பாரு”, என்று சற்று இடைவெளிவிட்டு “எவ்வளவு நாள் தான் பொறுமையா இருக்கிறது. வீட்டுலையும் கஷ்டமா இருக்கு. வாடகை கூட கொடுக்க முடியல.”
“புரியுதுடா. நீ ஒரு வருஷமாத்தான் இங்க வெளி ஆர்டர் எடுத்து பண்ற. பெரியவர்கிட்ட நெருங்குறது அவ்வளவு ஈசி இல்ல. உனக்கு வேணும்னா மணிகண்டன்கிட்ட பேசி கொஞ்சம் முன்பணம் வாங்கி தரேன்.”
“அண்ணே, பணம் மட்டும் பிரச்சனையில்லை. இப்படியே இருந்தா நான் கத்துகிட்ட எல்லாத்தையும் கொஞ்ச நாள்ல மறந்துடுவேன். மனசில இருந்தாதான் கையில வரும். மனசு மாறிடுச்சின்னா இந்த தொழிலை விட்டுவிட வேண்டியதுதான்.”
“ராஜான்கிட்ட பேசுனியா?”
“அவருகிட்ட தான் கோவில் ஆர்டெர்ல்லாம் அவ்வளவா போகாதே. அவரை நம்பி ஏகப்பட்ட பேர் வந்துட்டாங்க. அது சரிப்பட்டு வராது.”
“சரி, இப்ப என்ன வேணும் ஒனக்கு.”
“எங்கிட்ட திறமை இருக்கு. அதுக்கேத்த மாதிரி வேலை கொடுங்க. பணத்தைவிட அது தான் எனக்கு நிம்மதிய கொடுக்கும்.”
குருமூர்த்தி அவனையே சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, “நீ சொன்னா புரிஞ்சுக்க மாட்ட. சரி, என்னோட வா”, என்று சொல்லிவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியே வந்து, அவ்வீட்டின் கதவைத் திறந்து, முற்றத்துக்கு வந்தான். சம்பந்தம் ஒன்றும் புரியாமல் குருவின் பின்னாலேயே சென்றான்.
முற்றத்தின் நான்கு பக்கத்திலிருந்தும், ஆலங்கட்டி மழை தகரத்தின் மீது விழுவதுபோல “நங் நங் நங்” என்று உலோகத்தின் மீது உளிகள் பட்டு எழும் ஒலிகள், அந்த இடம் முழுவதும் நிறைந்திருந்தன. நெருப்பில் சுடப்பட்டு கருவிலிருந்து வெளிவந்திருந்த, சிறியதும் பெரியதுமான கடவுள் சிலைகள், கறுத்து உருவமற்று கிடந்தது. சாக்கின் மீது அமர்ந்து, ஆடவல்லான் சிலையின் பறந்து கொண்டிருந்த முடிக்கற்றைகளை ராவிக்கொண்டிருந்த குமரேசன், சம்பந்தத்தை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். அவன் கைகளும் கால்களும் மினுங்கியது. பல மடிப்புகளாக மடிக்கப்பட்டு வழியில் கிடந்த பச்சைநிற தென்னை ஓலையை குருமூர்த்தி எடுத்து அருகிலிருந்த மரப்பலகையின் மீது போட்டான். அது மடிப்புகளிலிருந்து நெகிழ்ந்து, விரியத்தொடங்கியதைக் கண்டு சம்பந்தம் மனதில் அனிச்சையாய் சில அளவு பெறுமானங்கள் வந்து போனது.
முற்றத்தைக் கடந்து உள் சென்றதும், குருமூர்த்தி, “வரதா” என ஒருவனை அழைத்தான்.
அவன் கீழே அமர்ந்து காய்ந்திருந்த களிமண் கருவில், கம்பிகளை வைத்து இறுக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தான்.
“டேய் வரதா”, என்று மீண்டும் அழைத்து விட்டு, அவன் தோளைக் குருமூர்த்தி தொட்டவுடன், அவன் நிமிர்ந்து குற்மூர்த்தியயையும், அவன் பின்னால் நின்ற சம்பத்தையும் பார்த்துவிட்டு “சொல்லுங்கண்ணே” என்றவனின் கைகள், கருவின் மீது கம்பிகளைக் கட்டிக்கொண்டேயிருந்தது.
“போன வாரம்..”, மேலும் சற்று குனிந்து “போன வாரம் இவன் செஞ்ச அந்த சிவகாமி சிலை எங்க இருக்கு?”
“அது ஆஸ்திரேலிய பார்ட்டி ஒன்னு வேணும்னு சொல்லியிருக்கு. அதோ, அங்கதான் இருக்கு”, என்று தலையால் திசைகாட்டினான்.
குருமூர்த்தி, முற்றத்தின் மூலையிலிருந்த மேசையிலிருந்து, சிவகாமி சிலையை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்றான்.
அங்கு வெளிநாட்டவர்கள் சிலர் மெழுகில் செய்யப்படும் சிலைகளின் மாதிரிகளைப் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி குருமூர்த்தி வருவதைக் கண்டு புன்னகை செய்தாள். குருமூர்த்தியும் அவளைப் பார்த்து மெதுவாகத் தலையை ஆட்டிவிட்டு, அவர்களைக் கடந்துச் சென்று வலதுபுறமிருந்த அறைக்குள் சென்றான்.
குருமூர்த்தி பெரியவர் இருக்கும் அறை பக்கம் செல்வதைக் கண்டு, சம்பந்தம் ஒன்றும் புரியாமல் தயங்கி, அவன் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தான். சம்பந்தம், பெரியவரை ஒருசிலமுறை மட்டுமே தொலைவிலிருந்து பார்த்திருக்கிறான். ஒரு முறை டெல்லியிலிருந்து யாரோ வந்திருந்தார்கள். வெளியேயிருந்த கூட்டத்துக்குள் புகுந்து, பட்டறைக்குள் வந்தபோது பெரியவர் ஒரு சிலையை குர்தா அணிந்திருந்த ஒருவரிடம் காண்பித்து விளக்கிக்கொண்டிருந்தார். பின் ஒரு முறை, பதினைந்து அடி நடராஜ சிலையின் வார்ப்பு நடந்துகொண்டிருக்கும்போது வெளியே வந்து பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் சம்பந்தத்திற்கு, கோவிலின் சுவரில் வரையப்பட்டிருக்கும் ஓர் நாயன்மாரின் நினைவுதான் வரும்.
“நீ இங்கேயே வெளியே நில்லு. நான் கூப்பிட்டா மட்டும் உள்ள வா”, என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று, கதவை மூடாமல் திறந்திருக்குமாறு வைத்தான். சம்பந்தம், அவன் கைகள் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தான். பெரியவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்த அத்தனையும் அவனுக்குள் வந்து குடிகொண்டு இன்னெதென்று சொல்லமுடியாமல், அவனை ஏதோ செய்தது. மெல்ல, அறைக்குள் எட்டிப் பார்த்தான். அறையின் சுவர் முழுவதும், பெரியவர் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நேத்ர பூசை செய்த சிலைகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், இந்திய அரசின் விருதுகள் என நிறைந்திருந்தது. அறையிலிருந்து வந்த ஏதோ ஒரு ஊதுபத்தியின் வாசனை அவனுக்குக் கடுமையாகவும், ஒரு சங்கடத்தையும் கொடுத்தது. பெரியவர் எதாவது கேட்டால், ராஜனிடம் வேலை பார்த்ததாகச் சொல்வதா? வேண்டாமா? என்று குழப்பமாக வெளியே நின்றுகொண்டிருந்தான்.
குருமூர்த்தி அவ்வறைக்குள் சென்றபோது, பெரியவர் அவர் இருக்கையில் அமர்ந்து, கண் மூடி, உறக்கத்திலிருப்பதுபோல இருந்தது. கையிலிருந்த சாவியைக் கீழே போட்டு, அதனை எடுத்து, அங்கிருந்த கொக்கியில் குருமூர்த்தி மாட்டும் போது அவனுக்குப் பின்னால் பெரியவரின் இருக்கை அசையும் சத்தம் கேட்டது.
குருமூர்த்தி திரும்பி, “குடோன்ல எல்லாம் வந்துடுச்சு. நாளைக்கு கொஞ்சம் வரும். அமுதன்கிட்ட சொல்லி செட்டில் பண்ண சொல்லியிருக்கேன்”, என்று வேறு தகவல்களையும் சொல்லிக்கொண்டிருந்தான். பெரியவர், எதையோ மெல்வதுபோல் அவரின் தாடை அசைந்துகொண்டிருந்தது. குருமூர்த்தி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும், பெரியவரின் கண்கள் அவ்வப்போது அவன் கையில் வைத்திருந்த சிலையைத் தொட்டுச்சென்றது.
குருமூர்த்தி அதனைப் புரிந்துகொண்டதுபோல, “இது ஆஸ்திரேலியா பார்ட்டி ஒன்னு கேட்டுருக்கு, அனுப்பனும்”, என்று சொல்லிக்கொண்டே, அவர் முன் இருந்த கண்ணாடி மேசையின் மீதிருந்த ஒரு சுழலும் மரத்தட்டின் மீது வைத்தான்.
பெரியவர் அத்தட்டை மெல்ல நகர்த்தி முன்னும் பின்னும் உற்று நோக்கிவிட்டு மெல்லத் தலையசைத்துவிட்டு, “யாரு, அவன் பட்டறையிலிருந்து வந்தவனா?”, என்று கேட்டார்.
குருமூர்த்தி, “என்னங்கய்யா..” என்று தடுமாறி, பின் சுதாரித்து, “ஆமா, அந்த தம்பிதான்”, என்றான். சட்டென தன் உடல் சற்று பதறுவதைக் கவனித்தான். பின், “அந்த தம்பி கூட இங்கதான் நிக்கிறான்”, என்று வெளியே தலைநீட்டி, “உள்ள வா”, என்று சம்பந்தத்தை அழைத்தான்.
சம்பந்தம் நகராமல் குருமூர்த்தியை உற்றுப்பார்த்தான்.
“உள்ள வா. கூப்பிடுறாரு”
சம்பந்தம் செருப்பை உதற, இரண்டும் வெவ்வேறு திசையில் சென்று விழுந்தது. உள்ளே சென்று குருமூர்த்தியின் பின்னால் நின்றுகொண்டான்.
சிலையையே சற்று நேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, குருமூர்த்தியின் பின்னால் நின்றுகொண்டிருந்த சம்பந்தத்தின் மீது அவர் பார்வை பட்டு நகர்ந்து, குருமூர்த்தியைப் பார்க்க. அவன் மெல்ல முன் வந்து மேசையின் மீதிருந்த சிலையை எடுத்துக்கொண்டான்.
தொண்டையை செருமிக் கணைத்துகொண்டு, “நல்லாருக்கு”, என்றார்.
குருமூர்த்தியின் உடல் குழைந்து, சற்று தலை தாழ்த்தி, அந்த பாராட்டை வாங்கிக்கொண்டு, அவனுக்கு பின்னால் நின்ற சம்பந்தத்தை மலர்ந்த முகத்துடன் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் எந்த வித சலனமுமில்லாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, கண்ணால் ஏதோ அவனிடம் சொன்னான். பின் பெரியவரைப் பார்த்து, “தம்பி ஒரு வருசத்துக்கு மேல இங்க வேலை செயிது” என்று சொல்லிவிட்டு, சற்று குரலைத் தாழ்த்தி “தம்பி, உற்சவமூர்த்தி கூட செய்வான். மணிகண்டன் கிட்ட சொன்னேன்.”
பெரியவர் ஏதோ யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, “அது இவனுங்களுக்கு வராது”, என்றார். “இவனுங்களுக்கு” என்பதில் யாரெல்லாம் அடைபட்டிருக்கிறார்கள் என்பது சம்பந்தத்திற்கும், குருமூர்த்திக்கும் புரிந்தது.
குருமூர்த்தியின் முகம் அதை வெளிக்காட்டியதை மறைக்கும் முகமாகச் செயற்கையான ஒரு சிரிப்புடன் சரி என்பதுபோல தலையாட்டிவிட்டு, நகர முற்பட, சம்பந்தம் பெரியவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
குருமூர்த்தி சம்பந்தத்தை வெளியே போ என்பது போலத் தலையாட்டி அவனைத் தள்ள முயற்சி செய்ய,
சம்பந்தம், “ஏன் முடியாதுன்னு நினைக்கிறீங்க”, எனப் பெரியவரைப் பார்த்துக் கேட்டான்.
குருமூர்த்தி அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் திரும்பி ஒரு முறை பெரியவரைப் பார்த்துவிட்டு, சம்பந்தத்திடம் “வெளியே வா நான் சொல்றேன்” என்பதுபோல ஏதோ சொல்லி அவனை அங்கிருந்து அழைத்துச்செல்ல முற்பட்டான். ஆனாலும் சம்பந்தம் நகராமல் பெரியவரைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
பெரியவர், “ஏன்னா நீ கத்துகிட்ட இடம் அப்படி. அந்த அம்மன் சிலை அழகா இருக்கு. சினிமாக்காரிங்க சாமி வேஷம் போட்ட மாதிரி. நல்ல விலைக்கு போகும். ஏதாவது பணக்காரங்க வீட்டு சோகேஸ்ல வேணும்னா வைக்கலாம். அழகாயிருக்குன்னு கோவில்ல வைக்க முடியாது.” என்றார்.
சம்பந்தம் சட்டென அங்கிருந்து வெளியே சென்றுவிடவேண்டும் என்று தோன்றினாலும் எதோ ஒன்று அவனைத் தடுத்தது. “சிலையில லட்சணத்தை விட வேறு என எதிர்ப்பாக்குறிங்க” என பெரியவரைப் பார்த்துக் கேட்டான்.
குருமூர்த்தி ஒன்றும் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். அவன் கைகள் சம்பந்தத்தின் கைகளை அழுத்திக்கொண்டிருந்தது.
பெரியவரின் முகத்தில் ஒரு புன்னகை வந்தது. “அதைத்தான் அவன் உனக்குக் கத்து கொடுக்கலை. அவனால் அதை கத்துக்கொடுக்கவும் முடியாது. கடவுளே இல்லன்னு இருக்குறவனுக்கு அது எப்படி தெரியும். கோவில்ல உற்சவமூர்த்தியா வைக்கிறதுக்கு அழகுமட்டும் பத்தாது. அது நம்மள மாதிரி வெறும் மனுஷஜென்மமா? முக்காலத்தையும் அறிஞ்சவன்ல அவன். அவன் முகத்துல இருக்கிறது தெய்வீகக் களை”, என்று சொல்லிவிட்டுக் கையெடுத்து வணங்கினர்.
“சிற்ப சாஸ்த்திர இலக்கணப்படி எந்த வித குறையும் இல்லாம பண்ணும்போது அந்த தெய்வீகக் களையும் தானே வந்துடுமே. தெய்வீகக் களைக்குன்னு எங்கையும் சாஸ்த்திரத்துல இலக்கணமில்லை” என்றான்.
“ஆமாம். நீ கத்துக்கிட்டது அந்த சாஸ்த்திர இலக்கணங்களைத்தான். அந்த சௌந்தர்ய சாரமான வடுவூர் ஸ்ரீராமரின் சிலையை பார்த்தா உனக்கு இதை எப்படி பண்ணலாம்னு மனசுல கணக்கு ஓடும். எனக்கு அப்படியெல்லாம் தோணாது. ஏன்னா அந்த சுந்தரவடிவ முகத்தில இருக்கிற தெய்வீக கலைய என்னால எத்தனை ஜென்மம் எடுத்தாலும் செய்யமுடியாது. மனுசனா பிறந்து பாவமல்ல பண்ணிருக்கோம். அதுனாலதான் ஸ்ரீபெருமான் கோதண்டராமன் அவனையே சிலையா செஞ்சி நம்மகிட்ட கொடுத்துட்டு போய்ட்டாரு. வெறும் மூழக்கோல வச்சிக்கிட்டு அளந்து பண்றதுல அது. இப்படி பக்தியா உருகி அவன் காலடியில சரணடஞ்சி விழுந்து கிடக்கிறது எதுக்காக? அவன் கொடுக்கிற அந்த துளி தெய்வத்தன்மையை மனசுக்குள்ள வச்சிக்கிறதுக்காகத்தான். மனசுல இருக்கிற அந்த துளி தான் நான் பண்ற உற்சவமூர்த்தில வருது”, என்று சொல்லிவிட்டு சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.
சற்று நேரம் அவ்வறை அமைதியாக இருந்தது.
குருமூர்த்தி, “இல்ல, தம்பி படிச்சவரு, கடவுள் நம்பிக்கையெல்லாம் உண்டு. அவரு மாதிரியல்ல.” சொற்கள் தடுமாறி வந்து விழுந்தது. சம்பந்தத்திற்கு குருமூர்த்தி அப்படிச் சொன்னது பிடிக்கவில்லை.
“வெளியில இருக்கக்கூடாது. வேஷம் போட்டமாதிரி. உள்ளுக்குள்ள இருக்கணும்”, என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
சம்பந்தத்துக்கு மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து எழும் அந்த ஏளனமான சிரிப்பை நோக்கிக் கேள்வியெழுப்புவது போலவே இருந்தது.
“நீங்க சொல்றது எனக்கு புரியல. நான் சாஸ்த்திரப்படி தான் எதையும் செய்றேன். கத்துகிட்ட கலை மேல உண்மையா இருக்குறேன். அந்த உண்மைத்தன்மைக்கு நீங்க தெய்வீகம்ன்னு சொல்றிங்க” என்றான்.
பெரியவர் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் கழித்து, “உற்சவமூர்த்தி ஆர்டர் எதாவது இருக்கு?” என்று குருமூர்த்தியிடம் கேட்டார்.
“லட்சுமி நரசிம்மர் மூணு அடிக்கு ஆர்டர் இருக்கு”
“அதை அவன்கிட்ட கொடு”
குருமூர்த்தியும் சம்பந்தமும் ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள். பின் குருமூர்த்தி, “அதுவந்து..” என்று இழுத்தான்.
“கொடு. நான் சொல்றது அவனுக்கு புரியல. அவனுக்கு தெரிஞ்ச அந்த சிற்ப சாஸ்த்திரத்தை வச்சி செஞ்சு எடுத்துக்கிட்டு வரட்டும். அவன்கிட்ட என்ன கத்துக்கிட்டான்னு நான் காட்டுறேன். அப்பதான் இவனுங்களுக்கு புரியும்.”, என்றார்.
குருமூர்த்தி சரி என்பதுபோல தலையாட்டிவிட்டு, சம்பந்தத்தை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
காற்றடிக்காமல் வெயிலின் வெக்கை கடுமையாக இருந்தது. காயவைக்கப்பட்ட வடகங்கள் என பட்டறையினுள் வெயில் சிதறிக்கிடந்தன. சாப்பிட்டுவிட்டு மதிய வெயிலின் களைப்பில் ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எங்கிருந்தோ “நங்..நங்” என ஒலி விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது. பெரியவர் பட்டறையிலிருந்து நரசிம்மர் சிலை செய்வதற்கு எடுத்து வந்திருந்தவற்றை, சம்பந்தம் பட்டறைக்குள் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான். குருமூர்த்தி அவனிடம், பெரியவரிடம் அவ்வாறு பேசியதற்காக வெளியே வந்தவுடன் சத்தம் போட்டான். உடனே பெரியவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்துவிடச் சொல்லித் தள்ளினான். சம்பந்தம் பதிலேதும் சொல்லாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் மெழுகையும் உலோகத்தையும் எடுத்து வந்திருந்தான். மோகனாதான் சற்று நிலைகுலைந்துவிட்டாள். அவளுக்கு சம்பந்தத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், தின வரும்படிக்கு வேலை இல்லாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள். மோகனா அப்படி நினைப்பது சம்பந்தத்திற்கு நியாயமாகத்தான் பட்டது. இருந்தாலும் ஒரு மாதம் சமாளித்துக்கொண்டால், எப்படியும் இதனைச் செய்துமுடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டான். சம்பந்தத்திற்கு, பெரியவர் சொல்லும் தெய்வீகக் களை சிலைகளில் இருப்பதை நம்பவில்லையென்றாலும், பெரியவர் செய்யும் சிலைகளை அவன் ராஜனின் பட்டறையிலிருக்கும்போதே கவனித்திருக்கிறான். சாஸ்திரங்களில் எந்த வித மாற்றமுமில்லை. ஏதோ ஒன்று, இன்னதென்று திண்ணமாக அவனால் சொல்லமுடியாத ஏதோ ஒன்று அவர் அச்சிலைகளில் செய்திருப்பார் என்று நினைத்துக்கொண்டான். அந்த ஒன்று மனதை நிறைக்குமாறு செய்திருக்கும். ராஜனிடம் இதனைப் பற்றி சம்பந்தம் கேட்டபோதெல்லாம், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று தட்டிக்கழிப்பார். அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று சம்பந்தம் நினைத்தபோது, ராஜனைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
சிலைக்குத் தேவையான சில வேலைகள் செய்துவிட்டு ராஜனின் பட்டறைக்குச் செல்லும் போது சற்று இருட்டியிருந்தது. பட்டறை, சாலையை விட்டு விலகி சற்றுத் தொலைவில், ஒரு வனத்தின் நடுவில் இருப்பது போல இரு மருங்கிலும் புளியமரங்கள் வழிநெடுக இருந்தன. புளியமரங்களைத் தாண்டி இருபுறமும் தேக்கு மரங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. தெரு விளக்குகளின் வெளிச்சம் ஒன்றையொன்று தொடமுடியாமல் வெகு தொலைவிலிருந்தன. அவ்விருட்டிலும் சம்பந்தத்தின் உள்ளுணர்வு மிகத்துல்லியமாக புளியமரத்தின் வேர்களையும், குழிகளையும் கண்டுகொண்டு சொல்ல, அவைகளைத் தவிர்த்து சைக்கிளை ஓட்டிச்சென்றான். சிறிய வளைவையொட்டி தெரிந்த பட்டறையின் வாயிலிருந்த கனமான தள்ளும் கதவுகள் மூடப்பட்டிருக்க, கதவின் இருபக்க தூணிலுமிருந்த மின்விளக்குகள், மஞ்சள் ஒளியை இரு சொட்டுகளெனச் சிந்தியிருந்தன. அவன் சைக்கிளை நிறுத்திவிட்டு நாதாங்கியினை திறந்து, கதவைச் சற்று தள்ளி உள்ளே நுழைந்து, அசையாமல் நின்றுகொண்டு, காத்திருந்தான். “உர்” ஒரு உறுமலுக்குப் பின் “ங்கே” என்ற ஒலியுடன் ஓடிவந்த இரு நாய்கள் அவன் மேல் பாய்ந்தன.
“டேய் பள்ளு எப்படிடா இருக்க என்று அங்கேயே அமர்ந்துகொண்டு அதன் தாடையைச் சொரிந்தான். “ராணி.. கண்டுபிடிச்சிட்டியா” என்று அதனைக் கட்டி தழுவிக்கொண்டான். இருட்டில் அவையிரண்டும் மூழ்கி அதன் பழுப்பு நிற கோலி கண்கள் மட்டும் தனியாக இருளில் மிதந்தன. சற்று நேரம் அவைகளுடன் விளையாடி ஆசுவாசப்படுத்திவிட்டு உள்ளே சென்றான். அவனுக்கு முன்னால் சென்ற அவைகள் குரைத்துக்கொண்டும், திரும்பி ஓடி வந்து அவனை முகர்ந்துவிட்டும், ஓடின.
“சரி, சரி தெரியுது யாரு வராங்கன்னு” என்று நாய்களிடம் சொல்லிக்கொண்டே ராமலிங்கம் அங்கிருந்த சிறிய குடிலிலிருந்து வெளியே வந்தான்.
“என்ன ராமலிங்கம் இளைச்சி போயிட்ட. வெறும் பரோட்டாதான் கொடுக்குறாங்களா?”, என்று சம்பந்தம் கேட்டான்.
அவன் சிரித்துக்கொண்டே, பரோட்டா எல்லாம் நீ இருந்தப்ப. இப்பெல்லாம் வார்ப்பு முடிஞ்சப்புறம் ஒரே பிரியாணிதான். எவ்வளவு தான் வாயிலை வச்சி அடைக்கிறது. அலுத்துப்போச்சி. இந்த பயலுங்க பிரியாணியோட பொறந்துருப்பானுங்க போல. எப்ப பார்த்தாலும் அத தான் திங்கிறானுங்க”, என்று சொல்லிக்கொண்டே “ரெண்டு வெத்தலை இருந்தா கொடு”, என்று சம்பந்தத்திடம் கேட்டார்.
சம்பந்தம், கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, “உள்ளத்தானே இருக்காரு?”
கரை படிந்த பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டே, “ஆமா, உள்ளதான் இருக்காரு”
அந்த நேரத்திலும் யாரோ பட்டறையில் இருப்பது போலிருக்க, அவன் வீட்டுக்குள் நுழைவதற்கு முன் பட்டறையில் நுழைந்தான். பெரிய கல்யாண சத்திரம் போல இருந்த கூடத்தின் ஒரு மூலையில் யாரோ ஒருவர் நகாசு வேலை செய்துகொண்டிருந்தார். சம்பந்தத்துக்கு ராஜன் பட்டறையின் கெடுபிடிகள் ஒன்றும் பெரிய மாற்றமில்லாமல் இருந்ததாக நினைத்துக்கொண்டான். ஆறு மணிக்கு மேல் தேவையில்லாமல் யாரும் அங்கு வேலை செய்யமாட்டார்கள். வேலைகள் அப்படியே வைத்துவிட்டு பெரும்பாலானோர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். வார்ப்பு அன்று மட்டும் சிலையின் அளவுக்கு ஏற்றார் போல ஆட்கள் தாங்கிக்கொள்ளலாம். அதற்குரிய கூலி கொடுக்கப்பட்டுவிடும். சொன்ன தேதிக்கு கஸ்டமருக்கு டெலிவரி செய்வதில் ராஜன் கறாராக இருப்பார். கையால் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தும் உயர்தர உபகரணங்கள் கொண்டு வேலை செய்யப்பட்டு, துரிதமாக வேலைகளை முடித்தார்கள். அனைத்தும் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, ஒரு தொழிற்சாலையைப்போல இயங்கக்கூடியதாக மாற்றியிருந்தார் ராஜன். தூரத்தில் அடுப்பிலிருந்து மெல்லிய புகை வந்துகொண்டிருந்தது. சம்பந்தம் சற்று நேரம் அங்கே நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்குள் சென்றான்.
நாய்கள் இரண்டும் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. கருப்பு நிற முண்டா பனியனும், வெள்ளை நிற வேஷ்டியில் நேர்வகிடெடுத்து, தடிமனான மூக்குக் கண்ணாடி சற்று இறங்கியிருக்க, எண்ணை வழிந்து முகம் சற்று பளபளக்கப் புத்தகம் ஒன்றினை மடியில் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தார் ராஜன். அவன் அறைக்குள் வருவதைக் கண் மட்டும் மேல் தூக்கிப் பார்த்துவிட்டு, கண்ணாடியைக் கழட்டி அதன் ஒரு முனையை உதட்டில் வைத்துக்கொண்டு,
“வாடா”, என்றார் ராஜன்.
அவன் பின்னாலேயே அந்த இரு நாய்களும் வந்தன.
“நல்ல பெருசா ஆய்டுச்சிங்க.” என்று நாய்களைப் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றான் சம்பந்தம்.
“ஆமா, வேலை வேலைக்கு தின்னுட்டு சோம்பேறியா இருந்தா இப்படித்தான். நீ இருந்தப்ப வெளியில ஓடவிடுவ. நல்லா கவனிச்சுக்கிட்ட. சட்டுனு விட்டுட்டு போயிட்ட. இப்ப யாருமில்லை.” என்று சொல்லிவிட்டு அவனையே உற்றுப் பார்த்தார்.
சம்பந்தம் பதிலேதும் சொல்லாமல் அவர் கண்களைத் தவிர்த்து அமைதியாக நின்றான்.
“உட்காரு”
சம்பந்தம் அவருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்துகொள்ள, அதுவரை அவனுடன் சுற்றிக்கொண்டிருந்த அவ்விரு நாய்களும் ராஜன் அருகில் சென்று பக்கத்திற்கு ஒன்றாக அமர்ந்துகொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தன.
“என்னடா உடம்பு இளைச்சிட்ட. சாப்புடுறீயா, இல்லையா?”
சம்பந்தம் அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “ஆங், அதுக்கென்ன”, என்று சொல்லித் தவிர்த்தான்.
“என்ன, தெய்வீகக் களைய கண்டுபிடிச்சிட்டியா?”, என்று சொல்லிச் சிரித்தார்.
சம்பந்தம் மெல்லிய சிரிப்புடன் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.
“உனக்கு எதுக்கு இதெல்லாம். அந்த மனுசன ஜெயிக்க முடியாது.”
“அவரை ஜெயிக்க முடியாதுதான். ஆனா, அது என்ன அப்படி நமக்கு தெரியாத ஒண்ணுங்கிற ஆர்வம்தான்.”
“இல்லாத ஒண்ண நீ கண்டுபிடிக்க பார்க்குற.”
“எனக்கு அப்படி தெரியல” என்று சொல்லி சிறிது இடைவெளிவிட்டு, “உங்ககிட்டயே நான் பல முறை கேட்டிருக்கேன். அவர் வடிக்கிற சிலையில் எதோ ஒன்னு அந்த முகத்துல பொலிவை எடுத்து காட்டுது அது என்ன?”, என்று கேட்டான்.
ராஜன் அமைதியாக எதோ யோசித்துக்கொண்டிருந்தார். பின் சிறிது நேரம் கழித்து, “ஆமா, நானும் கவனிச்சிருக்கேன்” என்றதும் சம்பந்தம் ஆச்சரியமாக அவரை பார்த்தான். ராஜன் தொடர்ந்து, “அத பத்தி யோசிச்சிருக்கேன். பெரிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்னும் பண்ணதில்லை. தேவையுமில்லை. அது எதுவா இருந்தா எனக்கென்ன”, என்றார்.
“அவர் சொல்கிறமாதிரி மனசுல இருக்கிற கடவுள் பக்திதான் காரணமோ என்னவோ?”, என்று சொல்லிவிட்டு அவர் முகத்தைப் பார்த்தான்.
ராஜன், “மண்ணாங்கட்டி” என்று புத்தகத்தை அவர் முன்னால் இருந்த மேஜையின் மீது தூக்கிப் போட்டார். “கடவுள் சிலை பண்றதுக்கு கடவுள் மேல பக்தி வேணும்னா, கத்திரிக்காய் சிலை செய்றதுக்கு கத்திரிக்காய் மேலே பக்திவேணுமா? எனக்கு கடவுள், கத்திரிக்காய் எல்லாம் ஒரு கிலோ மூவாயிரம் ரூபா உறுப்புடிதான். அவ்வளவுதான்”, என்று சத்தமாகப் பேசினார். அவர் காலடியில் படுத்திருந்த நாய்கள் அலட்டிக்கொள்ளாமல் அசைவற்று இருந்தன.
அவர் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து மேசையிலிருந்த சிகரெட்டு ஒன்றினை பற்ற வைத்துக்கொண்டார். உள்ளுக்குள் சென்ற புகை, ஆழத்தினை தொட்டு வருவதுபோல மெல்ல வெளியே வந்தது.
“இதோ பார். எல்லாம் நம்பிக்கைதான். அவருக்கு கடவுள் இருக்குன்னு நம்புறாரு. நான் அதெல்லாம் இல்லைங்கிற நம்பிக்கையில் இருக்கேன். எந்த நம்பிக்கைல அத நீ பார்க்கிறங்கறத பொறுத்துதான் தெய்வீகக் களைய தேடுணுமா, இல்ல வேணாமான்னு முடிவு பண்ணனும்”, என்றார்.
சம்பந்தம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். அவர் சிகரெட்டை முழுவதுமாக குடித்து முடித்துவிட்டு அனைத்து புகையையும் வெளியேற்றிவிட்டு,
“நீ தான் முடிவு பண்ணனும். ஒன்னு, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு இந்த பக்கம் வா. இல்ல, சாமி, பக்தி, தெய்வீகக் களை அப்டின்னு அந்த பக்கம் போய்டு. ரெண்டுக்கும் இடையில எந்த வழியும் இல்ல”, என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்த இருக்கையில் அமர்ந்து, தலைக்குப் பின் பக்கம் இரு கைகளையும் கோர்த்தவாறு வைத்து, தலையை அதில் சாய்ந்துகொண்டு கண் மூடி அமர்ந்தார்.
சம்பந்தம் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான். பின், அவன் மெல்ல எழுந்தவுடன், அவ்விரு நாய்களும் படுத்திருந்தவாறே தலையை மட்டும் தூக்கி அவனைப் பார்த்தது.
“சரிண்ணா, நான் கிளம்புறேன். வீட்டுல அது தனியா இருக்கும்”, என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான். அவர் கண்களை மூடிக்கொண்டே சரி என்பதுபோல தலையாட்ட, அவன் அறையிலிருந்து வெளியேறி, பட்டறையைக் கடந்துசென்றான். அந்த இருளில் “நங்..நங்..”என்ற ஒலி அவனை பின் தொடர்ந்து சென்றது.
சம்பந்தம், நரசிம்மர் சிலை செய்வதற்கான வண்டல்மண்ணையும் மெழுகையும் தயார் செய்துகொண்டிருந்தான். பெரியவர் வீட்டிலிருந்து எடுத்துவந்த மெழுகுகள் பச்சைநிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் துண்டு துண்டுகளாக ஒரு குவியலெனக் கிடந்தன. வழக்கமாக சம்பந்தத்துக்கு எந்த சிலை செய்யும்போதும் அதன் அளவும், உருவமும், நுணுக்கமும் துளித்துளியாக மனதில் சேகரமாகி வருவதைத் தொகுத்துக்கொண்டே வந்து, ஒரு முழுமையை அடையும்போது அவன் அதனைச் செய்வதற்கு மெழுகில் கைவைப்பான். நரசிம்மர் சிலையை ஏற்கனவே ஒருமுறை அவன் ராஜன் பட்டறையில் செய்திருந்தாலும், அது உற்சவமூர்த்தியாக இல்லாமல் வெறும் காட்சிப்பொருளுக்காக செய்யப்பட்டது. கருவறையிலிருக்கும் நரசிம்மரின் கற்சிலை அதுவல்ல என்று அவன் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேயிருந்தது. குருமூர்த்தி கொடுத்திருந்த கருவறையிலிருக்கும் நரசிம்மரின் கற்சிலையின் மாதிரியைச் சம்பந்தம் பலமுறை பார்த்தபின்னும் அவனுக்கு மனதில் ஒரு வடிவாக வராமல், தீயினை மறைக்கும் புகையென, முதல் நாள் ராஜனுடன் பேசியபிறகு மனதில் எழும்பிய கேள்விகள் அந்த பிம்பத்தை மறைத்திருந்தது. ராஜன் சொல்வது ஒருவிதத்தில் அவனுக்குச் சரியாகக் கூட தோன்றியது. ஒன்று முழுதாக நம்பவேண்டும் இல்லை நம்பாமல் இருக்க வேண்டும். இப்படி இடையில் நின்றுகொண்டு குழப்பிக்கொண்டிருப்பது சரியில்லை என்று நினைத்துக்கொண்டான். தனக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கை தன் பெற்றோர்கள் கையளித்தது. இதைத் துறந்து எதிர் நிலைக்குச் செல்வதென்பது இந்த இக்கட்டிலிருந்து தன்னை தப்பிச் செல்ல உதவும். ஆனால், தன் உள்மனம் சரியான காரணமில்லாமல் தன்னை அந்த எதிர்நிலையில் நிலையாக வைத்திருக்காது என நினைத்துக்கொண்டான். அதே நேரத்தில் பெரியவர் சொல்லும் அந்த சரணாகதி அடையும் அளவுக்கும் தன் மனதில் பக்தியில்லை. அதற்கான சரியான காரணமும் தனக்குத் தெரியவில்லை. ஒருவேளை பெரியவர் போல தானும், பூசைகளும், சடங்குகளும் செய்திருந்தால் தன்னுள்ளும் அந்த அளவுக்குப் பக்தி இருந்திருக்குமோ? அன்றாட திண்டாட்டத்தில் அவைகளுக்கு ஏது இடம் இங்கே? என்று நினைத்துக்கொண்டான். அன்றாட திண்டாட்டங்களின் நடுவே தான் அந்த பக்தியை வளர்க்கவேண்டுமா? பிரச்சனைகளும் வலிகளையும் உற்று நோக்க, அது மட்டுமே தனக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. அப்படியில்லாமல் பக்தியை வளர்க்கும் தோறும் இந்த பிரச்சனைகளும் வலிகளும் மாயமாய் மறைந்துவிடுமா? நாளையிலிருந்து தானும் இடைவிடாத பூசைகளும் சடங்குகளும் செய்யும் தோறும் அந்த பக்தியை மனதில் நிரப்ப முடியுமா? என அவனுள் எழுந்த கேள்விகளால் அவன் மனம் உச்சத்தையடைந்து நின்றபோது, தன்னால் ஒருபோதும் அந்த பூசைகள் மீதும் சடங்குகளின் மீதும் மனம் லயித்து ஈடுபடவே முடியாது என்று நினைத்துகொண்டன். சிலையின் ஒவ்வொரு அங்கத்தையும் மெழுகில் செய்து, அதற்கு முழுவடிவு கொடுத்து, வார்த்து எடுத்த பின் அதனைப் பூஜையறையில் வைத்து வழிபடச் சொல்லும் தருணம் தன் மனதில் பக்தியற்று அதனை ஒரு சிலையாகத்தானே பார்க்கிறது. ஆனாலும், தன் ஆழ்மனத்துக்குள் இருக்கும் கடவுள் நம்பிக்கையும் இழந்துபோகாமல் அப்படியே இருக்கிறது. இது என்ன? ராஜன் “அதெல்லாம் வெறும் உன் மூட நம்பிக்கை” என்று முழுவதுமாக அழித்துவிடச் சொல்வார். எத்தனையோ முறை அழிக்க முயற்சி செய்தும், அந்த நம்பிக்கை தன்னுள் அழியாமல் கருவறையில் இருக்கும் துளி நெருப்பென எரிந்துகொண்டு தானிருக்கிறது. துளியாக இருப்பதனால் தான் கருவறையில் இருப்பது என்ன என்று தெரியவில்லை போலும். அதனை வேள்வித்தீயாக்க எதனைப் பலிகொடுக்க வேண்டும்? ஏது இருக்கிறது தன்னிடத்தில் பலிகொடுக்க? ராஜன் சொல்வதுபோல இரண்டே கதவுகள்தானா? இடையில் ஏதுமில்லையா? என்று எழுந்த கேள்விகளால் மனம் சோர்ந்து, செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு கீழே விரிக்கப்பட்டிருந்த சாக்கில் படுத்துக்கொண்டான். மாலையில் இருமல் ஒலிகேட்டு மோகனா கொல்லைப்புறம் வந்து சாக்கில் சுருண்டு படுத்திருந்தவனைத் தொட்டுப் பார்த்தபோது, உடம்பு கொதித்தது. அவனை மெல்லத் தூக்கி அமரவைத்து தன் மேல் சாய்த்துக்கொண்டாள். நெற்றியிலும், கழுத்திலும் கை வைத்துப் பார்த்தாள். அவன் வாயிலிருந்து கோழைகள் வழிந்துகொண்டேயிருந்தன.
அவன் கண்விழித்தபோது கனவொன்றின் தொடர்ச்சியாக இருட்டில் தான் அமிழ்ந்துகொண்டிருப்பதுபோல இருந்தது. நிலைக்குத்தின அவன் பார்வையில் மெல்ல அவ்வறையிலிருந்தவை அவனுக்குத் துலங்கி வந்தன. தலைக் கனத்து பாரமாக, எச்சில் விழுங்க முடியாமல் வறட்சியாக இருக்க எழுந்து தண்ணீர் அருந்த வேண்டும்போல் இருந்தது. வழக்கமான மின்விசிறியின் சீரான தாள ஓசையும், காலெண்டரின் இதழ்கள் பறந்து மடிவதின் ஓசையுமற்று அவனுக்கு வேறு யாரோ ஒருவர் வீட்டில் படுத்திருப்பது போல இருந்தது. நேற்று முன்னிரவில் டாக்டரை பார்த்ததும், நெஞ்சுச் சளிக்கு அவர் முன்னர் எழுதிக் கொடுத்த மருந்துகளைச் சரியாகச் சாப்பிடாததற்குத் திட்டியதும், மெல்ல நினைவுக்கு வந்தது. எழுந்து, திறந்திருந்த கதவைப் பிடித்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்றான். அங்கு மோகனாகவும் அவள் அருகில் புடவை விரிப்பில் தனமும் படுத்திருக்க, மின்விசிறி ஒன்று அவர்கள் தலைமாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. அவன் தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் அவன் படுக்கையில் படுத்துக்கொண்டான். வேலை இன்னும் ஆரம்பிக்கவில்லை, உடம்பு சரியாக இன்னும் எவ்வளவு நாள் ஆகப்போகிறதோ என்பன நினைவுக்கு வர, அவனுக்குள் படபடப்பாக இருந்தது. காலையில் குருமூர்த்தியை அழைத்து தன்னால் முடியாது என்று சொல்லிவிடலாமா என்று நினைத்த தருணம், பெரியவர் தன்னை பற்றி என்ன நினைத்துக்கொள்வார் என்று யோசித்தான். பின், அவனே வேண்டாம் அவகாசம் இருக்கிறது என்று சமாதானம் செய்துகொண்டான். தான் இருக்கும் இந்த நிலையில், கடவுளை வேண்டிக்கொள்ளவேண்டுமா? வடுவூர் ஸ்ரீராமர் போல நரசிம்மரும் அவரையே சிலையாகச் செய்துகொடுக்க, தானும் நரசிம்மரை வேண்டிக்கொள்வதா அல்லது வேறு யாரையாவது? பல நூறு தெய்வங்கள். யாரிடம் கோருவது? என்று அவன் நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பாகவும் இருந்தது. இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா. இதிலிருந்து தப்பிக்கவே தன் மனம் ஒரு அதிசயத்தை எதிர்பார்த்து நிற்கிறது. அன்று நடந்தது ஏன் இன்று நடக்காது என்று நம்புகிறோம்? தொன்மக் கதைகளை நம்பும் தன் மனம், ஏன் அதே போன்ற ஒன்றை இன்று நடந்தால் நம்ப மறுக்கிறது? இது தன்னுடைய இறை பக்தியின் குறைபாடா? ஏன் தன் மனம் இப்படி கேள்விகளால் மொய்க்கிறது. பல வருடங்களாக சிலை செய்து வந்தாலும், இன்று எது தன் மனதில் கல்லெறிந்து கூட்டை மொய்க்கும் தேனீக்களாய் ஆக்கியது? எதனை தன் மனம் தேடுகிறது? என்று அவன் அந்த இரவை கேள்விகளால் நிரப்பிக்கொண்டே சென்றான்.
அடுத்த இரண்டு நாளும் அவன் உடல்நிலை மேலும் மோசமாகிப் படுத்த படுக்கையாக இருந்தான். அவன் மனதில் கேள்விகள் நிற்காமல் ஊற்றெடுத்துக் கொப்பளித்துக்கொண்டேயிருந்தது. தியாகராஜனும், குருமூர்த்தியும் வந்து பார்த்துச் சென்றார்கள். குருமூர்த்தியைக் கண்டவுடன் குற்றவுணர்வில் சம்பந்தத்தால் சரியாக அவனிடம் பேசமுடியவில்லை. குருமூர்த்தி முதலில் உடம்பை கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுச் சென்றான். சேகரும், குருமூர்த்தியும் கொடுத்த கொஞ்சம் பணத்தை வைத்து மோகனா சமாளித்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் அவைகள் அவனுக்கு மருந்து வாங்குவதற்கே சரியாக இருந்தது. பெரியசாமி அடகுக்கடையில் இனி எதனையும் வைத்து பணம் வாங்க முடியாத நிலையிலிருந்தாள். இப்போதைக்கு அவள் எண்ணங்கள் எல்லாம் சம்பந்தம் உடல் தேறிவருவதிலேயே இருந்தது. நான்காம்நாள் சம்பந்தத்துக்குக் காய்ச்சல் குறைந்து வியர்த்துவிட்டு, எழுந்து நடமாடக் கூடிய அளவில் அவன் தெளிந்திருந்தான். மோகனா அவனை அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று திருநீறு இட்டு வந்தாள்.
அன்று இரவு தூக்கம் வராமல் எழுந்து கொல்லைப்புறம் சென்று மின் விளக்கைப் போட்டுக்கொண்டு, நிலைப்படியில் அமர்ந்துகொண்டான். குண்டு பல்பு வெளிச்சத்தில் பட்டறையில் கிடக்கும் சாமான்களும், வார்க்காமல் நிற்கும் மெழுகு சிலைகளும், செடிகளும் மரங்களும் அதன் நிழல்களும் பொருளற்ற ஒரு சொல்லெனக் கிடப்பதுபோல தோன்ற, எழுந்து மின்விளக்கை நிறுத்திவிட்டு அமர்ந்துகொண்டான். சட்டென இருட்டு அவனுக்கு முன்னால் மதில் சுவரென எழுந்து நின்றது. உற்றுநோக்கும் தோறும் மரங்களும் பின் இலைகளின் கரிய மினுமினுப்பும் மெல்ல மேலெழுந்து வந்தது. தவளைகளின் பெரும் இரைச்சலில் குளம் வெகு அருகில் இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. அடுப்படியில் படுத்திருந்த தனம் தூக்கத்தில் ஏதோ பேசுவது கேட்க, மாலையில் தனம் கோவிலிலிருந்து கடவுள்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கேட்டுகொண்டேவந்தது நினைவுக்கு வந்தது. எத்தனை கடவுள்கள்? பெரிதும் சிறிதுமாக. யார் இத்தனையும் படைத்தது? சிற்ப சாஸ்திரத்தில் இவை அனைத்தும் குறியீடுகளைத் தாங்கி நிற்கும் ஏதோ ஒன்றின் தூல வடிவமே என்று படித்தது நினைவுக்கு வந்தது. எதன் குறியீடுகள் இவை? எதனின் உருவம் இவை? இத்தனை கேள்விகளுக்கு பிறகும் அவனால் எதையும் முற்றிலும் மறுத்து உதறிச் செல்லவும் முடியாத ஏதோ ஒன்றை தன் உள்மனம் நம்புவதை அவனால் உணரமுடிந்தது. எழும் கேள்விகள் அனைத்தும் அதனை நோக்கியே செல்வதுபோல, அனைத்தும் தன்னால் அறியமுடியாத திசை நோக்கித் திரும்பி நிற்கிறது என்று நினைத்துக்கொண்டான். கண்ணயர்ந்துவந்தாலும் மனம் விழித்துக்கொண்டு அவனை உறங்காமல் செய்தது. சிறிது நேரம் கழித்து, தொலைவில் மரங்களின் இடைவெளியில் ஒரு துளை போல ஒளி தோன்றி, பொழுது விடிய ஆரம்பித்ததைச் சம்பந்தம் கவனித்துக்கொண்டேயிருந்தான். ஒளி, மெல்ல ஒவ்வொன்றாக ஆழ் இருளிலிருந்து மீட்டெடுப்பதுபோல துலக்கி வெளிக்கொணர்ந்தது. தொலைவில் தெரிந்த குளத்தில், தவளைகள் ஏதோ ஒன்றின் நிகழ்வுக்குக் காத்திருப்பது போலச் சட்டென அடங்கியது. மெல்ல மிக மெல்லக் குளத்தின் மீது அவ்வொளி படர்ந்து, செவ்வண்ணமாகி, பின் பொன் நிறமாக மாறி, அதனில் பட்ட சுகந்தமான காற்றில் அலை ஒன்று எழுந்து, அவ்வொளியை விளிம்புக்கு எடுத்துச் சென்றது. பின், அவ்வொளி குளத்தினை ஒட்டிய மூங்கிலின் இலைகள் மீது படர்ந்து அதனைப் பொன்னிறமாக்கியது. தென்னை ஓலைகளில் பட்டுக் கசிந்து அப்பொன்னிறம் ஒழுகியது, வேப்ப மரத்தின் கிளைகளில் கனிந்து ஒரு சொட்டாகத் தேங்கி நின்றது, குடுவையெனப் பூத்திருக்கும் பூவரசம்பூக்களை அப்பொன்னிற ஒளியால் நிறைத்து, பட்டறையின் கூரையை பொன்னொளி வீசும் தகடுகளாக்கி, அங்கிருந்த மெழுகுச் சிலை ஒன்றில் விழுந்த அந்த ஒரு கணத்தில் சம்பந்தம் உடல் சிலிர்த்து, பதறி, செய்வதறியாது எழுந்து நின்றான்.
சம்பந்தம், நரசிம்மர் சிலை செய்வதற்கான வேலையை மீண்டும் தொடங்க முடிவுசெய்து அதற்கான வேலைகளைச் செய்யத்தொடங்கினான். கேள்விகளால் சூழ்ந்திருந்த மனதைக் கருவறையிலிருந்த நரசிம்மரை நோக்கி ஒருமுகப்படுத்தி அதன் அங்கங்களின் நுணுக்கங்களைத் தொகுத்துக்கொள்ள முயன்றான். மழை இல்லாமல் இருந்தால் இன்னும் பதினைந்து நாளில் சிலையைத் தயார் செய்துவிடலாம், இடையில் வேறு வேலை செய்ய அவகாசம் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டான். சிறிது காலம் இந்த வீட்டு வாடகை, பள்ளிக்கூடம், கடன்கள் என அனைத்தையும் எப்படியாவது தாக்குப் பிடிக்க வேண்டுமென்ற கவலையும், இனி உடல் நிலை சரியில்லாமல் போனால் அதற்கு வைத்தியம் பார்க்க முடியாது என்ற பயமும் அவனுக்குள் இருந்தது. அடுப்பில் வைத்திருந்த கரித் துண்டுகள் கனன்றுகொண்டிருக்க அதன் மீது பாத்திரத்தை வைத்துச் சூடேறுவதற்குக் காத்திருந்தான். காலையில் அவன் அடைந்த அந்த அனுபவத்தை இன்னெதென்று அவனால் சொல்லமுடியாமல் இருந்தது. அந்த அனுபவத்தை மனதுக்குள் அவனால் எந்த வகையிலும் நிலை நிறுத்தமுடியாமல், அதனை நினைக்கும் தோறும் விலகி விலகிச் சென்றுகொண்டேயிருந்தது. அளவில் பெரிதும் சிறிதுமாக வெவ்வேறு வடிவத்திலிருந்த மெழுகு துண்டுகள் சூட்டில் அதன் வடிவத்தை இழந்து அனைத்தும் ஒரே நிலைக்கு வந்துகொண்டிருந்ததைச் சம்பந்தம் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
அடுத்த இரண்டு மாதங்களிலும் சம்பந்தத்தின் உடல் நிலையும், மனமும் ஒரே சீராக இல்லாமல் இருந்தது. அதனால் வெளி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பெரும்பாலும் அடைந்து கிடந்தான். குருமூர்த்தி அவனைக் கண்டு விசாரித்துப்போக வந்திருந்தான்.
“என்னடா இப்ப எப்படியிருக்கு?” எனக் கேட்டான் குருமூர்த்தி.
சம்பந்தம், “இப்ப பரவாயில்லை. அப்பப்ப வந்து போகுது.”
“பெரியாஸ்திரிக்கு போய் பாத்துட்டு வாயேன்.”
“ம். போகணும்”
அவ்வப்போது ஒரு தயக்கமான அமைதி அங்கு வந்து வந்து சென்றது.
குருமூர்த்தி, “அப்புறம், என்னடா ஆச்சி நரசிம்மர்? முடிச்சிட்டியா?”, எனக் கேட்டான்.
சம்பந்தம் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகக் கீழே குனிந்து கைவிரல்களில் படிந்திருந்த மெழுகைத் தேய்த்து உரித்துக்கொண்டிருந்தான்.
பின் அவனே, “பெரியவர் ஒன்னும் இதப்பத்தி கேக்கல. அவரு கேட்கறதுக்கு முன்னால நாம போய் சொல்லிடலாம். நீ வேணும்னா இன்னும் ரெண்டு வாரம் எடுத்துக்க”, என்று சொல்லிவிட்டு, “ஒரு விஷயம் சொல்றேன். எனக்கே நேத்துதான் தெரியும். பெரியவரே நரசிம்மருக்கு மெழுகு செஞ்சி குமரன்கிட்ட கொடுத்திருக்காரு. வார்ப்பு, பாலிஷ் போட்டு வந்ததுக்கப்புறம் அவரு பாத்துட்டு ஒன்னும் சொல்லாம போய்ட்டாராம். ஏனோ, திருப்தியில்லை போலருக்கு. இது தான் சரியான சான்சு”, என்று சொல்லி அவனைப் பார்த்துச் சிரித்தான்.
சம்பந்தம் மெதுவாக அவன் சொன்னதற்குத் தலையை மட்டும் ஆட்டினான்.
சிறிது நேரம் கழித்து குருமூர்த்தி, “சரி. வெளிவேலையும் செய்யாம இப்படியே எவ்வளவு நாள் உட்கார்ந்துருப்ப? கணேசன் நாளைக்கு பதினஞ்சு அடி நடராஜர் சிலை வார்ப்பு பன்றான். அவனை போய் பாரேன். அவனுக்கு ஒன்னை மாதிரி ஆளு இந்த நேரத்துல தேவைப்படும்.” என்றான்.
“சரி, போய் பார்க்குறேன்”.
குருமூர்த்தி சென்ற பிறகு சிறிதுநேரம் கழித்து மோகனா தனத்தைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வந்தாள்.
“குருமூர்த்தி அண்ணனா வந்துச்சி?” என சம்பந்ததிடம் மோகனா கேட்டாள்,
“ம்..”
“சிலையைப் பத்தி எதாவது கேட்டுச்சா?”
ஆமாம் என்பது போலத் தலையாட்டினான்.
மோகனா அமைதியாக ஏதோ யோசித்துக் கொண்டு நின்றாள். பின், “இந்தா, ஸ்கூலுக்கு பணம் கட்டுன ரசீது” என்று அவனிடம் கொடுத்தாள். தியாகராஜன் அண்ணன்கிட்ட ரெண்டு மாத வீட்டு வாடகையும் கொடுத்துட்டேன். மெடிக்கல் ஸ்ட்ரோர்ல இருந்த மிச்சத்தையும் கொடுத்துட்டேன்.”, என்று சொல்லிக்கொண்டே அடுப்படிக்குள் தனத்தை அழைத்துக்கொண்டு சென்றாள்.
இந்த மாதம் சரி செய்த அனைத்தும், அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் வந்து சூழ்ந்துகொள்ளும் என்று சம்பந்தம் நினைத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, “நான் போய் கணேசனை பாத்துட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
மறுநாள் இரவு கணேசன் பட்டறையில் பெரும் கூட்டமிருந்தது. சம்பந்தம் மாலையே அங்கு வந்து, ஒவ்வொருவருக்கும் வேலையே பகிர்ந்தளித்துவிட்டு, மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தான். வெளியே பெரிய குழிகள் வெட்டப்பட்டு பெரிய இரும்பு கலன்களில் பஞ்சலோகமும் உருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. கொதித்து நுரைத்த உலோகங்கள் நிறைந்த அந்த இரும்பு கலன்களை அடுப்பிலிருந்து தூக்கி கருவில் ஊற்றுவதற்கு ஏதுவாக மரத்திலான மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பதினைந்து அடிகொண்ட நடராஜர் சிலையின் கரு, களிமண் பூசி உரு தெரியாமல் வேறு ஏதோ ஒரு சிக்கலான அமைப்பிலிருந்தது. கருவின் உள்ளே மெழுகு வடிவிலிருந்த நடராஜர் உருக்கப்பட்டு முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு வார்ப்புக்கு ஏற்றவாறு ஒரு கோணத்தில் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி மண் வைத்து அழுத்திக்கொண்டிருந்தனர். வியர்வையில் நனைந்திருந்த அனைவரின் முகத்திலும் உடம்பிலும் கனன்றுகொண்டிருந்த அடுப்பு பிரதிபலித்து, உக்கிரமான பூதகணங்களாக இருந்தனர். நேரம் நெருங்க நெருங்க அந்த உக்கிரம் மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டேயிருந்தது. அனைத்தும் தயாராகியிருந்ததைக் கண்டுகொண்டு சம்பந்தம் மற்ற இருவருடன் அந்த மேடையில் ஏறி நின்றுகொண்டு கீழேயிருந்த நடராஜரின் கருவினையே பார்த்துக்கொண்டிருந்தான். கருவின் உள்ளே நடராஜர் இருந்தும் இல்லாமல் வெறுமையை உடலாக ஏந்தி, பிரபஞ்ச நடனமாடுகிறார் என்று நினைத்துக்கொண்டான். இரும்பு கலன்களிலிருந்த உலோகம் கொதித்துச் சிறு எரிமலையென வெடித்துக் கொண்டிருக்க, மேலெழும்பும் ஆவியில் அவன் உடலும் மனமும் கொதித்துக்கொண்டிருந்தது. அவனுடனிருந்த மற்ற இருவரும் பெரிய கிடுக்கி போன்ற ஒன்றினை எடுத்து, அங்கிருந்த கலம் ஒன்றினை தூக்கி அந்த கருவிலிருந்த துளையில் ஊற்ற, அது பொங்கி உள்ளே சென்று ஒன்றுமில்லாத அந்த வெறுமையை நிரப்பியது. சம்பந்தம் அதனைக்கண்டவுடன் அவனுக்குச் சட்டென முதல் நாள் காலையில் வானையும், நீரையும், செடிகளையும், மரங்களையும் இலைகளையும், பூக்களையும், மண்ணையும், உடைந்து போன சிலைகளையும் பொன்னிறமாக்கி சென்ற அந்த ஒளி இங்கு முகமாக, உடலாக, கைகளாக, கால்களாக, சடைமுடிக்கற்றைகளாக, இடைக்கச்சையாக, கழுத்து ஆரமாக உருமாறி அவனால் சொல்கொண்டு விளக்கமுடியாத அந்த தூய அனுபவத்தின் உருவமாகிக்கொண்டிருப்பதைக் கண்டான். அனைத்திலும் உறைந்து ஒன்றெனச் சொல்லும் விளக்கவே முடியாத ஒன்றின் உருவம் என நினைத்து, அவன் கண்மூடி நின்றிருந்தபோது, அந்த மேடை சட்டெனச் சரிய மற்ற இருவரும் வேறு பக்கத்தில் குதிக்க, சம்பந்தம் ததும்பி நிற்கும் அந்த ஒளியில் விழ, அவனையும் அது பொன்னிறமாக்கியது.
சம்பந்தத்தின் எஞ்சிய உடல் மருத்துவமனையிலிருந்து பெட்டியில் அடைத்து வீட்டிற்கு வருவதற்கு மறுநாள் ஆகிவிட்டது. செய்தியைக் கேட்டதிலிருந்து மோகனாவின் அழுகுரல் அச்சிறிய வீட்டின் சுவர்களில் பட்டு முடிவில்லாமல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. தனம் அங்கு வந்திருந்த யாரோ ஒரு உறவினர் வீட்டுக் குழந்தையுடன் வெளியே விளையாடிக்கொண்டும், அவ்வப்போது மோகனாவின் மடியில் வந்து அமர்ந்துகொண்டும் இருந்தாள். மதியம் மணிகண்டன் பெரியவரை கை பிடித்து பந்தலுக்குள் அழைத்து வந்து சம்பந்தம் உடலிருந்த பெட்டியின் வலது பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் அமரவைத்தான். பெட்டியின் இடதுபுறத்தில், ராஜனும் வேறு சிலரும் அமர்ந்திருந்தனர்.
ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக எதையோ நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். பெரியவரின் அருகில் அமர்ந்திருந்தவர், “எப்படி நடந்துச்சுன்னு தெரியல. கண்மூடி தொறக்குறதுக்குள்ள கீழே விழுந்துட்டான். உடனே தூக்க முடியல. கஷ்டகாலம்” என்று சொல்லி அவரிடம் வருத்தப்பட்டார். பெரியவர் பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினார்.
மீண்டும் அமைதி.
சிறிது நேரம் கழித்து, அவரே பெரியவரிடம் “ஏதோ, கெட்டதிலையும் ஒரு நல்லது மாதிரி, போன மாசம் தான் அவன் மச்சான் சேகர்க்கிட்ட அஞ்சு லட்சத்துக்கு அவன் பேருல இன்சூரன்ஸ் வாங்கி போட்ருக்கான். அது கிடைச்சிடுமாம். கடவுள் அனுக்கிரஹம் தான் போல”, என்று ஆறுதல் பட்டுக்கொண்டார்.
பெரியவரின் கண்கள் அங்கிருந்த குருமூர்த்தியின் கண்களைத் தொட்டுச் செல்ல, குருமூர்த்தி ஆழ்ந்த யோசனைக்குள் சென்றான்.
சேகர் தனத்தை வெளியே அழைத்துக்கொண்டு பெரியவரிடம் வந்து, “இதுதான் சம்பந்தம் மகள்”, என்றான்.
அவர் அவளின் தலையைத் தடவி “உன் பெரு என்ன?” என்றாள்.
அவள் வெட்கப்பட்டுச் சிரித்து பதில் சொல்லாமல், கையிலிருந்த ஏதோ ஒன்றை அவரிடம் காண்பித்தாள்.
பெரியவர் அவளிடமிருந்து அதனை வாங்கி பார்த்தார். அது மெழுகில் செய்யப்பட்ட ஒரு சிறு கை. முழங்கை வரை மட்டுமே நீண்டிருந்த அக்கையின் சுட்டுவிரல் குனிந்து, விலகி நிற்கும் பெருவிரலைத் தொட்டு வளையம் போல இருக்க, மற்ற விரல்கள் மேல் நோக்கி அமைந்து முத்திரை ஒன்றினை காட்டிக்கொண்டிருந்தது.
ராஜன் அதனைப் பார்த்தவுடன் “சின் முத்திரை” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
தனம் பெரியவரிடம் அதனைப் பிடுங்கிக்கொண்டு “அப்பாவோடது” என்று சொல்லிக்கொண்டே ஓடிச்சென்று சம்பந்தம் உடலிருக்கும் கண்ணாடி பெட்டியின் மீது வைத்தாள்.
அதனைப் பார்த்துக்கொண்டே பெரியவர், “ஞான முத்திரை” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டார்.
சம்பந்தத்தின் உடல் மயானத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டபின், மாலையில், பெரியசாமி அவர் அடகுக் கடையைத் திறந்து உள்ளே சென்றார். சுவரில் பதிக்கப்பட்ட கண்ணாடி அலமாரியில் மாலை வெயிலின் ஒளிபட்டுக் கர்ஜித்துக்கொண்டிருந்த நரசிம்மர் சிலையைக் கண்டு சற்று அதிர்ந்துதான் போனார்.
௦௦௦

சு.வெங்கட்
சு.வெங்கட் தமிழில் இலக்கிய சி