/

கவிதையை இனம் காணுதல் –  இந்த நூற்றாண்டுக்கான கேள்விகள் : இசை

கவிதையை அறுத்து அறுத்து ஆய்வதில் எனக்குப் பெரிய விருப்பமில்லை. கவிதையை புகைமூட்டங்களுக்கு மத்தியில் மிதக்க விடுவதில் ஒரு இன்பம் இருக்கிறது. இதை ஒரு அழகியல் இன்பம் என்று மட்டும் சொல்லிவிட முடிவதில்லை. புகைமூட்டங்களுக்கு மத்தியில் முகம் காட்டுவதைத்தான் கவிதையும் விரும்புகிறது என்று தோன்றுகிறது. உறுதிப்பாட்டுக்கு எதிரான உறுதி ஒன்று கவிதையில் உள்ளது என்று நினைக்கிறேன். உறுதிப்பாட்டில் என்ன சிக்கல் எனில் அது ஒன்றில் மிக உறுதியாக இருக்கிறது. ஆகவே இன்னொன்றைக் காணத் தயங்குகிறது என்பதுதான். கவிதையை புகைமூட்டங்களுக்கு இடையே வைப்பததென்பது அதை ஒளித்து வைப்பதற்காக அல்ல; அதை மேலும் துலக்குவதற்கே என்று நினைக்கிறேன்.

கவிதையை இனம் காணுதலில்  இந்த நூற்றாண்டுக்கான சிக்கல் என்ன என்று பார்ப்பதற்கு முன் என்றென்றைக்குமான சிக்கல்கள் என்ன என்று பார்க்கலாம் . ஒரு வேளை அதிலேயே கூட இந்த நூற்றாண்டிற்கான  சிக்கலுக்கான கேள்விக்கும் விடை கிடைத்துவிடலாம் அல்லவா?

கவிதை என்றால் என்ன? என்கிற கேள்வி அலுப்பூட்டும் கேள்வியாக மாறிவிட்ட பின்னும் இன்னும் இன்னும் பல நூறு பதில்கள் அதற்கு வந்து கொண்டேயிருக்கின்றன.  கவிதை என்பது “ பிறிதொன்றில்லாத புதுமை” என்கிற மேற்கோள் எனக்குப் பிடித்தமான ஒன்று. “ சுவை புதிது,  பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது , சோதி மிக்க நவகவிதை” என்கிற பாரதியின் பிரபலமான வரி கவிதையை நெருங்கிப் பார்த்துவிட்ட ஒன்று. சுவை,பொருள், வளம், சொல் என்று தனித்தனியே சொல்லப்பட்டிருந்தாலும் அவை ஒன்றில் ஒன்று கூடியவை என்றே தோன்றுகிறது. சொல் புதிது இல்லாமல் சுவை புதிதாவதில்லை அல்லவா?

சமீபத்தில் வாசித்த பொருள் புதிதான  இரண்டு  கவிதைகள்… பொருள் புதிதானதால் சுவை கூடி விட்டவை. சுவை கூடியதால் வளம் பெற்று விளங்குபவை. சொல்லிலும்  குறை வைக்காதவை.  எழுதியவர் சதிஷ்குமார் சீனிவாசன்..

தாய்களைக் கொன்ற பிறகு

தாய் நண்டு இறக்க இறக்க
வெளி வருகின்றன குட்டி நண்டுகள்
மரணத்திலிருந்து ஒரு தொடர்ச்சி
நீரில் புகுகிறது
எவ்வளவு நிராதரவான தொடக்கம்
சொல்லப் போனால்
இப்படித் தொடங்குவது
ஒரு விதத்தில் நல்லது
எல்லாத் தாய்களையும்
கொன்ற பிறகு
எல்லாமே வியப்பு
எல்லாமே புதுசு
பின்பற்ற ஏதுமில்லாத
உயிரின் சுதந்திரம்.

புத்தம் புதிய தன்மையால் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இது. “அன்னை ஓர் ஆலயம்” என்று வாழ்ந்து வரும் குடி தமிழ்க்குடி. இளையராஜாவே ஒரு அம்மாதான். அதுவும் போதாமல்” ராஜாவின் அம்மா பாடல்கள்” என்று தனி ஆல்பம் சேகரித்து கேட்கும் அளவு அம்மா பிள்ளைகள் நாம். “ ராஜாவின் அம்மா சோகப் பாடல்கள்” என்று இன்னொரு கேட்டகிரி உண்டு. அது மேலும் டெரரான ஒன்று.  ஆகவே நமக்கு இந்தக் கவிதை இனிக்குமா? அவ்வளவு நிராதரவான தொடக்கத்தின் முன் நாம் மனம் கலங்கி நின்று விடுவோம் அல்லவா? 

அம்மா அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உலகைத் திரட்டி , அதை எவ்வளவு பழசாக்க முடியுமோ அவ்வளவு பழசாக்கி , தன் பிள்ளைக்கு ஊட்டுகிறாள்.  குழந்தை அம்மாவின் கண்களால், அம்மாவின் உள்ளத்தால் உலகைப் பார்க்கத் துவங்கி விடுகிறது. அம்மா புனிதம் என்கிறாள், பூச்சாண்டி என்கிறாள்.  குழந்தை  அதையே திருப்பிச் சொல்லத் துவங்குகிறது. இக்கவிதையில் ஒரு புதிய கோணம் உள்ளது. ஆனால் அது வெற்றுக் கற்பனாவாதமாக அல்லாமல் , வலுவான இன்னொரு உண்மையால் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.  கவி எப்போதும் நம்மை முற்றாகக் கைவிட்டு விடுவதில்லை. ஒரு சாதாரண அம்மாவிற்குப் பதில் அவன் நம்முன் நிறுத்துவது ஒரு மகத்தான தாயை. ஆயிரம் தலைமுறைகள் அழிந்து அழிந்து வீழ்ந்த பின்னும்,  அழியாது விரிந்து கிடக்கும் மண்ணை. தெய்வங்கள் வீற்றிருக்கும் ஸ்தலமென்று மானுடம்  கை கூப்பித் தொழுகின்ற விண்ணை. நிலவின் முன் அழாத குழந்தையென்று இப்புவியில் ஒரு குழந்தையுண்டா என்ன?

இன்னொரு அம்மா கவிதை…

அம்மா  என்பவள் ஆணோ , பெண்ணோ அல்ல. அவள்  ஒரு தனிப்பால் போலும்? இந்தக் கவிதையில் அம்மா பெண்ணாக மாறுகிறாள். பிள்ளை என்னவோ ‘சூப்பர் ‘ என்றுதான் சொல்கிறது.  ஆனால் அது உள்ளே நடுங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது…

இல்லாத அம்மா

அம்மா “ டை” அடித்துக் கொண்டிருப்பதை
இன்று காண நேர்ந்தது
பிறந்தது முதலே
அம்மாவை அம்மாவாக மட்டுமே
பார்த்து வந்திருக்கிறேன்
இன்று புதுசாக அம்மா இருந்த இடத்தில்
வேறு யாரோ இருந்தது போல் இருந்தது
டை அடித்தபடி
பாடலொன்றைச் சீட்டி அடிக்கிறார்
அம்மா கொஞ்சம் கொஞ்சமாகப்
பெண்ணாக மாறிக் கொண்டிருந்தார்
தன்னைக் கவனித்துக் கொள்ளும் பெண்ணாக
இருக்கும் போது
இதுவரை இருந்த
அம்மாவை விட சுதந்திரமானவராகத் தோன்றினார்
அம்மாவை விட
மேலானவராகத் தோன்றினார்.

இரண்டு நல்ல கவிதைகளை முன் வைப்பது கவிதையைக் கண்டறியும் எளிய வழிகளில் ஒன்று என்று நினைக்கிறேன். காலங்கள் மாறலாம். கவிஞர்கள் மாறலாம். வடிவங்கள் மாறி மாறி வரலாம். ஆனால் சங்கத்தில் எழுதப்பட்ட கவிதைக்கும்,  21- ம் நூற்றாண்டில் எழுதப்படும் கவிதைக்குமிடையே  நல்ல கவிதையின் ஆதாரமான அம்சங்கள் மாறி விடுமா என்ன? 

ஒன்றை கவிதை தவிர இன்னொரு வடிவிலும் எழுத முடியுமென்றால் அதைக்  கவிதையாக எழுத வேண்டிய அவசியமில்லை என்று அயல் நாட்டு அறிஞர் ஒருவர் சொல்லி வாசித்திருக்கிறேன். கவிதையை இனம் காண, கவிதையைப்’ போல’  இருப்பதையும் இனம் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. கவிதை மொழியின் உச்சம் என்பதால் பல்வேறு எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தின் உச்சத்தில் இயல்பாக அதை நோக்கிச் செல்வதைக் காண முடிகிறது.  கவித்துவமும் கவிதையும் ஒன்றல்ல என்பது பழைய செய்திதான் என்றாலும் நாம் இன்னொரு முறை அதை நினைவு படுத்திக்கொள்வது நல்லது. நான் கவித்துவம் மிகுந்த நாவலின் வரிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்து ஒரு முறை சோதனை செய்துள்ளேன். அதில் கவிதையைக்  காண முடிந்ததில்லை.  சமயங்களில் சினிமா பாடல்களின் சில வரிகளை  ” இது கவிதையில்லாமல் வேறென்ன?” என்று உணர்ச்சிப் பெருக்கில் நானே கூவியுள்ளேன்.  நான் அப்படி அடிக்கடி கூவும் ஒரு வரி.. “ பட்ட மரத்து மேல எட்டிப் பாக்கும் ஓணாம் போல வாழ வந்தோம் பூமி மேல” என்கிற வரி. இதை ஒரு காகிதத்தில் எழுதிப் பார்க்கையில் இதிலிருந்து கவிதை எழுந்து பறந்து சென்று விடுவதைக் கண்டேன்.

மா.அரங்கநாதன்

கவிதைக்கு ‘காத்திருப்பு’ அவசியம் என்றும்,’ உழைப்பு’ முக்கியம் என்றும் சொல்லப்படுவதுண்டு.  இது  முழு உண்மை போலத் தோன்றவில்லை. இன்று சீராட்டப்படும் என் பல கவிதைகளும் ஐந்து நிமிடத்தில் எழுதி முடித்தவைதான் என்பது நினைவிற்கு வருகிறது. உழைத்துக் கொட்டினால் கவிதை  உருப்பட்டுவிடும் என்று தோன்றவில்லை. கவிதையோடு கட்டிப் புரளும் பல நண்பர்களை எனக்குத் தெரியும். கவிதை அவர்களை கைவிட்டு நடக்கும் காணச் சகியாத காட்சியும் தெரியும்.

கவிதை அருளப்படும் ஒன்று என்று சொன்னால், சிலர் எரிச்சலடைகிறார்கள். எனக்கும் அப்படிச்  சொல்ல விருப்பம் இல்லைதான். ஒரேயடியாக கவிதை அருளப்படுவது என்று சொல்லிவிட்டால் பிறகு கவிதை குறித்து இவ்வளவு விளக்கங்களுக்கு அவசியமில்லை. இந்தக் கட்டுரைக்கும் அவசியமில்லை. கலை அருளப்படுவது குறித்து பாரதி சொல்கிறார்.. “ தெய்வப் பிரஸாதத்தை ஒருவன் பக்திதியாலும், ஜீவதயையாலும், நேர்மையாலும், உண்மையாலும், இடைவிடாத உழைப்பினாலும் ஸம்பாதிக்க முடியும்”. ஆனால் கவிதையில் கவிஞனின் ‘ கை இல்லாத ‘ ஒன்றும் நிகழவே செய்கிறது. அந்தப் புதிரின் முன்தான் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.

நாம்  அருளப்படுவது என்பதற்குப் பதிலாக  “ வந்து அமைவது” என்று சொல்லிப் பார்க்கலாம். இந்த ‘வந்து அமைவதில் ‘ கவிஞனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க  பங்கு உண்டு. அது,  அப்படி வந்தமைவதைக் கண்டு கொள்ளும் விழிப்புடன் இருப்பது.  எல்லா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கவி ,  தன் கவிமனதை பாதுகாத்து வைப்பது ஒரு வேளை இந்த விழிப்புக்கு உதவக்கூடும். ஆனால் கவிமனதை பாதுகாக்கவும் அப்படித் திட்டவட்டமான பாடத்திட்டங்கள் இல்லை. கானுயிர் ஆர்வலராகவோ,  விண்வெளி ஆய்வாளராகவோ ஆகிவிடுவது  கவிஞராவதற்கான குறுக்குவழியல்ல.   அந்தி நாள் தவறாது சுடர்ந்து சுடர்ந்து அணைகிறது. இதோ இந்தத் தருணத்தில் “ நான் எழுதாத அந்திகளே! “ என்று மண்டியிட்டு மன்னிப்புக் கோரத் தோன்றுகிறது.

 0

சமீபத்தில் ஒரு இளம் கவிஞனின்  இரண்டு கவிதைகளை அடுத்தடுத்து வாசிக்கும்  போது இரண்டும் இவர் எழுதிய கவிதைகளா என்று யோசிக்கும் அளவு பாரதூர வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்து திகைத்தேன்.   இந்த இடத்தில் அந்த இளம் கவி மட்டுமல்ல,  எல்லாப் பெருங்கவிகளும் சுமாரான கவிதைகளையும் சேர்த்தே எழுதியவர்கள்தான் என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். நல்ல கவி எழுதுவதெல்லாம் நல்ல கவிதை ஆகிவிடுவதில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விசயம்தான்.

கவிதை மொழியால்தான் எழுதப்படுகிறது. ஆனால் மொழி புரிந்தால் கவிதை புரிந்து விடுவதில்லை. கவிதை மொழிக்கு வெளியே உள்ளது என்றே பல கவிகளும் சொல்கிறார்கள்.  “ ஒரு படைப்பில் எதைக் காண்பதால் அதைக்  கவிதை என்று ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த இன்றியமையாத தன்மையைக் “ கவிதை அம்சம்” எனலாம்” என்கிறார் மா. அரங்கநாதன். அந்தக் கவிதை அம்சத்தை தன்னுடைய “ பொருளின் பொருள் கவிதை” என்கிற நூலில் மிகத் தீவிரத்தோடு அணுகிப் பார்க்கத் துணிந்துள்ளார். அதை,   இதற்கு முன் இல்லாதது,  புத்தம் புதியது, பண்டிதரிடம் இல்லாதது,  வெற்று இசையால் அமைக்கப்படாதது, கருத்துக்களால் உருவாக்கப் படாதது, அறிவால் பாதிக்கப்படாதது, இருள் கிழித்து வரும் ஒளி,  சத்தியத்தின் நிழல், மேற்கொண்டு சிந்திக்க ஏதுமற்றது,  ஒரு வித அமைதியை அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் அவரால் எவ்வளவு துரத்த முடியுமோ அவ்வளவு துரத்திச் சென்றுள்ளார். அந்த நூல் வாசகர்களுக்கு ஓரளவு உதவக்கூடும்தான். ஆனால் ஓரளவுதான். நானும்   அந்த நூலின்  எல்லாப் பக்கங்களிலும் அடிக்கோடிட்டுத்தான் வைத்துள்ளேன்.  ஆனால் சில சமயங்களில் ஒரு கடுமையான பாடத்திட்டத்திற்குள் அமர்ந்திருப்பது போல மூச்சு முட்டவும் செய்ததது. சில இடங்களில் அவர் கவிதையை விளக்க எடுத்துக் கொள்ளும் பரிதவிப்பைப் பார்க்க  பாவமாகவும்  இருந்தது.  ஏனென்றால் கவிதை “பொருளின் பொருள்  கவிதை” நூலிற்கு வெளியிலும் உள்ளது என்பதால்தான்.

0  

சதீஷ்குமார் சீனிவாசன்

இந்த நூற்றாண்டை இணையத்தின் ஆண்டு , கணினியின் ஆண்டு, ஆண்ட்ராய்டுகளின் ஆண்டு என்றெல்லாம் சொல்லிச் செல்லலாம்.  இணையம் புழக்கத்துக்கு வந்த போது நம்மில் சிலர் கடும் நெருக்கடிக்கு ஆளானோம். படிக்க , எனக்குப் புத்தக வாசம் வேண்டும் என்று அடம் பிடித்தோம். அப்படி அடம்பிடித்தவர்களில் ஒருவரான  இந்தக்  கட்டுரையின் ஆசிரியர்,  இதை தன் மொபைல் போனில்தான் டைப் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு இப்போது புத்தகத்தைப் போலவே  இணையமும் பழகி விட்டதென்று சொல்லலாம்.  நள்ளிரவில் திடீரென ஏதாவது எண்ணம் தோன்றினால்,  விளக்கைப் போட்டு அதை எழுதி வைக்கும் சுதந்திரம் உள்ளவனாக எழுத்தாளன் இருக்க வேண்டும். அப்படி விளக்கைப் போடுகையில் எரிந்து விழாத  மனைவி அவனுக்கு அமைவது  முக்கியம் என்பது போல கி.ரா ஒரு நேர்காணலில் சொன்னார். விஞ்ஞானிகளுக்கும் மனைவியரைத் தெரியும் என்பதால் , அவர்கள் இப்போது ‘ குடும்ப விளக்கை’  துன்புறுத்தாத சின்ன விளக்கை  படிப்புக் கருவிக்குள்  பொருத்தித் தந்துவிட்டார்கள்.

கவிதைகள் முன்பு புத்தகத்தில் இருந்தன. பின்பு இணைய இதழ்களில் தென்பட்டன. இப்போது கவிதை எங்கு இருக்கிறதென்று கண்டறிவதே கொஞ்சம் சிக்கலாக உள்ளது.  சில ஆண்டுகள் முன்பு நண்பன்  இனியவன் என் கவிதைகள் குறித்து “ Spotify podcast” ல் பேசியிருப்பதாக மிகவும் ஆர்வத்தோடு வந்து சொன்னான். “Pod cast” என்றால் என்னவென்றே எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. புத்தகம் போட்டாலே எவனும் படிக்க மாட்டீங்கிறான் , pod cast போன்ற நவீன ஊடகத்தில் எவன் கவிதையைக் கேட்கப் போகிறன் என்கிற சலிப்பையே அவனுக்குப் பதிலாகத் தந்தேன். அவன் திரும்பத் திரும்ப வற்புறுத்தவே அங்கு சென்று பார்த்தேன். அங்கு கவிதைகள் குறித்த நல்ல உரையாடல்கள் நடந்தன என்றே சொல்ல வேண்டும். ஈராயிரத்துக் குழவிகளும் மனிதர்கள் தானே?   என்றென்றைக்கும் மனிதனை பாதிக்கும்  அழகியல், அறவியல் சிக்கல்கள் அவர்களிலும் தொடரத்தானே செய்யும் ? இதன் வழியே  கவிதை அவர்களையும் சென்று தொடத்தானே செய்யும்?

கவிஞர் சதீஷ்குமார், வீரபத்திரன் , உமர் பாருக், கவிஞர் விஜயகுமார், செந்தில்குமார் நடராஜன் போன்றவர்கள் சமூக ஊடங்கங்களுக்கு கவிதையைக் கொண்டு செல்லும் போது அதன் தீவிரம் குறையாமலேயே கொண்டு சென்றார்கள்.  காகிதக் காதலன், புத்தகப் பயணம், நெய்தல் டாக்ஸ், குபிட்ஸ்  கவிதைகள் போன்ற கவிதைக்கான இன்ஸ்டா பக்கங்கள் கவிதையை நவயுக இளைஞர்களிடம் கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றவே செய்கின்றன. கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூலக ஆணைக்குழுத் தலைவராகவும், தனிப்பட்ட முறையிலும்  கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களை “ 2 k  Readers”  என்கிற பக்கத்தில் கவிதை வாசிக்க வைக்கிறார். தஸ்ரிமா நஸ்ரின் கவிதையிலிருந்து சபரிநாதன் கவிதை வரை இதில் காணக் கிடைக்கின்றன

இந்த நூற்றாண்டிற்கு’ ஜாலி’ முக்கியம் என்று சொல்லப்படுகிறது. எனக்கென்னவோ மனிதர்களுக்கு எப்பவுமே ஜாலி முக்கியமாகத்தான் இருந்துள்ளது என்று தோன்றுகிறது. நான் முன்பு சொன்ன “ pod cast’  கூட ஜாலி முக்கியம் வகையறாதான். தீவிரம் என்பதன் தொனி 2 k கிட்ஸிடம் குறைந்துள்ளதா அல்லது வேறுபட்டுள்ளதா என்றும் நாம் யோசிக்கலாம்.

இன்றைய காலம் வேடிக்கையில் திளைத்து ஜாலியாகவே இருக்க விரும்பினாலும் வாழ்வு அப்படி ஜாலியாகவே இருக்க அனுமதித்து  விடாது என்பதால் அவர்கள் தீவிரத்திற்கு முகம் கொடுத்துத்தான்  ஆக வேண்டும்.

 சமீபத்தில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். அந்தச் சந்திப்பில் என்னோடு பேசிய சிலர்  இன்ஸ்டாகிராம் வழியாகத்தான் என் கவிதைகளை அறிந்திருந்தார்கள். என்னுடைய சில கவிதைகள் அச்சில் வாசிக்கபட்டதை விட இன்ஸ்டா வழியே வாசிக்கப்பட்டதே  அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.  இதில் வருந்த ஏதுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நாம் கவனம் கொள்ள வேண்டியது அந்த வாசிப்பு தீவிரமாக நிகழ்கிறதா என்பது குறித்துத்தான். 

என் கவிதையின் பகுதியொன்று வேடிக்கை  காணொளியாக  ஒரு கெட்ட வார்த்தையின் பீப் ஒலியும் சேர்க்கப்பட்டு சுற்றில் இருக்கிறது. . பலரும் அந்த வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அந்த வீடியோ பரவலாக பார்க்கப்பட்டதற்கான காரணம் கவிதையல்ல  அதன் வேடிக்கைத் தன்மைதான் தெளிவு. ஆனால் இதை எல்லாக் கவிதைகளுக்கும் பொருத்தி பார்க்க முடியவில்லை. என்னுடைய இன்னொரு கவிதையை  இன்ஸ்டாவில் கண்ட போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.  ஏனெனில் அது இன்ஸ்டாவுக்கான கவிதை இல்லை. இன்ஸ்டாவிற்கென்று சில கவிதைகள் உள்ளதா என்றால் , உள்ளது என்றுதான் அந்தப் பக்கங்களை நடத்துபவர்கள் சொல்கிறார்கள். அந்தக் கவிதை…

வலுத்தது
கடைசியில்
நான் என்பது என் தரித்திரம்

ஆணவப் படுகொலை குறித்த என்னுடைய காத்திரமான கவிதை ஒன்றும்  இன்ஸ்டாவில் மிகப் பிரபலம்.  அந்தக் கவிதை எண்ணற்ற வடிவங்களில் சுற்றி வருகிறது.

இந்தக் காலம் படிப்பதிலிருந்து பார்ப்பதற்கும் , கேட்பதற்குமான காலமாக மாறிவருகிறது ஆடியோ புக்ஸ்கள் பெருகி வருகின்றன. கவிதை ஆழமான வாசிப்பைக் கோரும் ஒன்று. ஆனால் இந்தக் காலத்தில் ஆழத்திற்கு எதிரான அவசரம் ஒன்றைக் காண முடிகிறதுதான். முப்பது நிமிட  “ you tube” வீடியோவிலிருந்து இரண்டு நிமிட ரீல்ஸ்களுக்கு வேகமாக நகர்ந்து விட்டது காலம். வித விதமாக,  புதிது புதிதாக , உடனடியாக மாறிக் கொண்டே செல்லும் காட்சிகள் எங்கும் ஓடிக் கொண்டே இருக்கின்றன.  இந்தப் பொறுமையின்மையும் கவனச்சிதறலும் கவிதைக்கு எதிரான ஒன்றே. கவிதைக்கு மட்டுமல்ல மொத்த வாழ்வின் அழகுக்குமே எதிரானது. கவிதை மட்டுமல்ல இப்போது கர்நாடாக சங்கீதமும்தான்  துண்டு துண்டாகக் கிடைக்கிறது.  ஞானமும்,  அறிவியலும் கூட  துண்டு துண்டாகக் கிடைக்கின்றன. மகத்தானவை துண்டாக்கப்படும் போது , அந்தத் துண்டு நாம்  மகத்தானவற்றை நோக்கி நகர  வழி செய்கிறதா?  அல்லது அந்தத் துண்டிலேயே மகத்தானவற்றை அறிந்து கொண்டதைப் போலான  ஒரு போலி நிறைவை  அளிக்கிறதா?

‘காகிதக் காதலன்’  என்கிற இன்ஸ்டா பக்கம் மிகவும் பிரபலமானது. அதில் திங்கட் கிழமை தபூசங்கர் கவிதையும்  செவ்வாய்க் கிழமை நகுலன்  கவிதையும் அடுத்ததடுத்து வெளியாகின்றன. இந்தத் தேர்வுகள் அந்தத் தளத்த்தை சார்ந்தவரின் சொந்த ரசனை சார்ந்ததா? இதன் மூலம் அவர் தபூ சங்கரையும் , நகுலனையும் அருகருகில் வைக்கிறாரா? அல்லது வெவ்வேறு தளங்களில் உள்ள  பல்வேறு  பார்வையாளர்களையும் சென்றடைவதற்காக  இவ்வாறு  உருவாக்குகிறாரா  என்கிற குழப்பங்கள் எனக்குண்டு.  ஒரு வேளை எல்லாக் கவிஞர்களையும் அன்பு செய்ய விரும்புகிறவராக அவர் இருக்கக் கூடும்

வைரல் இந்தக் காலத்தின் இன்னொரு சிக்கல். ஆகச்சிறந்த ஒன்றும், ஆக ஆபாசமான ஒன்றும் போட்டி போட்டுக் கொண்டு வைரலாகின்றன.  சமயங்களில் ஒன்று எதற்காக வைரல் ஆகிறதென்றே விளங்குவதில்லை. தீவிரமானவர்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருப்பவர்கள் கூட இந்த வைரல் ஓட்டத்தில் கலந்து கொள்வதைக் காண்கிறோம்

இன்று பெரும்பாலான கவிஞர்களும் முகநூலில் கவிதை எழுதுகிறார்கள்.   முகநூலின் லைக்கும் பகிர்வும்  கவிகளையும்  வாசகர்களையும் கூட பாதிக்கத்தான் செய்யும் என்று நினைக்கிறேன்.  500 இதயக்குறிகளும்,  15 பகிர்வுகளும் கொண்ட ஒரு கவிதையின் முன் ஒரு வாசகன் குழம்பி நிற்க வாய்ப்புண்டு.  ஆனால் முகநூலில் வெளியிடப்படும் கவிதைகள் எல்லாம் மோசமானவை என்று சொல்லி விட முடிவதில்லை. 

எனக்கு சில கல்லூரி மாணவர்கள் வாசகர்களாக இருக்கிறார்கள். நான் சில முறை அவர்களுக்கு என் புதிய கவிதையொன்றை அனுப்பி கருத்துக் கேட்பதுண்டு. “ இந்தக் கவிதை உனக்குப் புரிகிறதா?” என்று வினவுவதுமுண்டு. ஆச்சர்யப்படத்தக்க அளவில் அவர்கள் அதைத் துல்லியமாகவே புரிந்து கொண்டிருப்பார்கள்.  இதில் ஆச்சர்யம் என்பதைத் தாண்டி ஒரு வித வருத்தமும் எனக்கு  வரும்.. “இந்த வயசுல உனக்கு இதெல்லாம்  எப்படிப் புரிகிறது?“ என்று கேட்டிருக்கிறேன்.

 எப்போதும் கவிதை கும்பலை  நம்பி வாழ்ந்ததில்லை.   அது ஆங்காங்கே சிதறிக் கிடக்கும்  உதிரிகளாலேயே வாழ்ந்து வந்துள்ளது. இந்தத்  தலைமுறையிலும் கவிதைக்கென்று  சில உயிர்கள் தோன்றியிருக்கவே செய்யும்.

இந்த நூற்றாண்டின் பிரத்யேக சிக்கல்களுக்கும், சலுகைகளுக்கும் மத்தியிலும்  ஒரு நல்ல கவிதை தன் உள்ளார்ந்த  வலிமையால் எழுந்து வந்துவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த நூற்றாண்டிலும்  கவிதை என்பதன் அடிப்படை குணாம்சம்  மாறிவிடவில்லை என்பதால் அதைக் கண்டறியும் வழியும் மாறிவிடாது.  

000

(“புரவி” இலக்கியக் கூடுகை நிகழ்வுக்காக எழுதப்பட்டது)

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

உரையாடலுக்கு

Your email address will not be published.