/

நாவலும் சிறுகதையும் – பன்முக சாத்தியங்களின் வழிகள்

கிளாரிஸ் லிஸ்பெக்டர்


(நாவல், சிறுகதை ஆகிய இலக்கிய வடிவங்களுக்கு நடுவிலான உறவையும், வேறுபாட்டையும் அவை ஒன்றையொன்று பாதிக்கும் முறையையும் இக்கட்டுரை பேசுகிறது)

வடிவம் என்பதை நாம் இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம், ஒரு படைப்புக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு அல்லது அதில் மொழி செயல்படும் விதம் அதன் அக-வடிவம் எனலாம். அது நாவலாக, சிறுகதையாக வெளிப்படும் புற-வடிவம் ஒரு கலைப்படைப்பின் பின்விளைவே தவிர, அதன் நோக்கமோ, காரணமோ அல்ல என்பது என் புரிதல். ஒரு எண்ணத்தை எழுதத் தொடங்கும்போது அது நாவலாகவோ சிறுகதையாகவோ வேறெதுவுமாகவோ இருக்கிறதா தெரியவில்லை. கதையாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

க்ளாரிஸ் லிஸ்பெக்டரின் (Clarice Lispector) “நட்சத்திரத்தின் நேரம்” (Hour of the Star) நாவலின் கதைசொல்லி, தன் கதையைத் தொடங்கத் தயங்கிக் கொண்டிருக்கும்போது எழுதுகிறான்: “இந்தக் கதையின் எளிமையை யோசிக்க யோசிக்க நான் துன்பத்தில் உழல்வதை சொல்லவும் வேண்டுமா. நான் சொல்ல விரும்புவது மிகவும் எளிமையானது. எல்லோராலும் அணுக முடிவது. ஆனால் அதை விரிவாக்கிச் சொல்வது கடினம். கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட, என்னால் பார்க்கமுடியாத ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. கைகளால், சேறு காய்ந்த விரல்களால் சேற்றிலேயே கண்ணுக்குத் தெரியாததைத் தடவிக் கண்டுபிடிக்க.

ஒரு நல்ல படைப்பு என்ன செய்ய முயல்கிறது என்பதற்கு இந்தப் பத்தி எனக்கு நல்ல உதாரணமாகப் பட்டது. நாவலுக்கும் இது பொருந்தும். சிறுகதைக்கும் இது பொருந்தும்.

0

நாவல் அல்லது சிறுகதை என்று தனித்தனியே வடிவ அடிப்படையில் உரையாடும்போது, முதலில் பிரச்சினையாக இருப்பது எவை நாவலின் கூறுகள், எவை சிறுகதையின் கூறுகள் என்பதே. பொதுவாக பக்க அளவை ஒரு அளவுகோலாக ஏற்பதில் நம்மிடையே பல தயக்கங்கள் இருக்கின்றன. காரணம் நம்மிடையே பல விதிவிலக்குகள் இருக்கின்றன. சூடாமணியின் இரவுச்சுடர், பஷீரின் மதிலுகள், சமீபத்தில் வந்த விஜய ராவணனின் பச்சை ஆமை என நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம். குறைந்த பக்கங்களில் எழுதப்பட்ட நாவல்கள் இவை.

விதிவிலக்குகளை கடந்து பக்க அளவு பொதுவாக ஒரு நல்ல அளவுகோல் என்றே நினைக்கிறேன். நாவல் பெரியது, சிறுகதை சிறியது – இந்த எளிய பகுப்பு பொதுவாக ஏற்கப்படாவிட்டாலும் அது முழுக்க புறந்தள்ளத்தக்கது அல்ல. பக்க எண்ணிக்கையை ஓரம் வைத்தாலும், நாவல் என்பது வாழ்க்கையை-அதையொத்த விரிவை பேசுவது, சிறுகதை ஒரு நிகழ்வை/தருணத்தை எழுதுவது என்பது நல்ல விளக்கம். இவை இரண்டில் சிறுகதை என்பது ஒரு ‘சிறிய புனைவுப் பனுவல்’ என்ற அளவில் பெரிய குழப்பங்கள் எதுவும் இல்லை. ஒரு பனுவல் சிறுகதையா நாவலா என்ற குழப்பம் ஏற்படுவதே அது நாவலின் சாத்தியங்களை தீண்டிப் பார்க்கும்போதுதான். இவற்றைத் தாண்டி ஒரு வாசகராக நாம் ஒரு பனுவலை வாசிக்கும்போது இது சிறுகதையாக இருக்கிறது, இது நாவலாக இருக்கிறது என்று நமக்கே சொல்லிக்கொள்கிறோம். அந்த தனிப்பட்ட மதிப்பீடு முக்கியமானது என்று கருதுகிறேன். எனவே அந்த தனிப்பட்ட மதிப்பீட்டின் மதிப்பைக் குலைத்துவிடாமல் அதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் விரிவாக முயற்சிக்கலாம்.

நாவல் என்பது ஒன்றாகக் கோர்க்கப்பட்ட கதைகளில் அமைந்திருக்கும், கதையாடல் ஒருமுகத்தன்மை ( (narrative unity) என்பது எனக்கு உடனடியாகத் தோன்றிய ஒரு வரையறை. ஒரு நாவலில் வெவ்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும் அவற்றுக்குள் இருக்கும் ஒரே மையச்சரடுதான் அதை நாவல் ஆக்குகிறது எனலாம். அந்தச் சரடு கதாபாத்திரமாக, தத்துவக் கேள்வியாக, நிலப்பரப்பாக எதுவாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு கால்வினோவின் புலப்படாத நகரங்களில் வரும் ஒவ்வொரு நகர வர்ணனையையும் தனி கதையாக வாசித்தும் புரிந்துகொள்ளலாம். அதனை நாவல் ஆக்குவது மார்க்கோ போலோ எல்லா விவரணைகளிலும் வெனீஸையே விவரிக்கிறான் என்ற சரடுதான். இந்த கதையாடல் ஒருங்கமைவும், விரிவும் நாவலை நாவலாக்கும், பிற வடிவங்களில் இருந்து வேறுபடுத்தும் ஒன்றாக இருக்கின்றன.

மிகெயில் பக்தீன்

‘நாவல் என்பது கலாரீதியாக ஒருங்கமைப்பட்ட பலவகையான சமூக பேச்சு வகைகள், சிலசமயம் பலவகைப்பட்ட மொழிகள், பலவகைப்பட்ட தனிநபர்களின் குரல்கள் என்று வரையறுக்கலாம்’ என்கிறார் மிகைல் பக்தின். நாவலின் முக்கியமான கூறுகளில் ஒன்றாக பலகுரல்தன்மையை (Polyphony) பக்தீன் சுட்டிக் காட்டுகிறார். அஞ்ஞாடி நாவல் குறித்த தன் குறிப்புகளில் டி தருமராஜ் எழுதிய ஒன்று: “அஞ்ஞாடியின் பிரதானமான கதைசொல்லும் முறை ‘பேச்சு’ தான்.  பேச்சின் சகல வடிவங்களும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்வது போல், அந்த நாவல் பல்வேறு படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; அப்படலங்கள் பின்பு அத்தியாயங்களாக வகிரப்பட்டுள்ளன.  அத்தியாயங்களின் தலைப்புகள் பேச்சின் தெறிப்புகளாக விளங்குவது தான் அலாதியானது.  ஒரு அத்தியாயத்தின் தலைப்பு – ‘போடி அனந்தி’; இன்னொன்று – ‘அது போதும் அப்புச்சி’;   அப்புறம் ‘அடியே மாடத்தி…’   இப்படியே…. நாவல் முழுக்க யாராவது யாரோடவாது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.

டி. தர்மராஜ்

பேச்சு என்ற மிகப் பழைய இந்த மொழிக் கூறு நாவலின் முக்கியமான ஒரு பங்காகியுள்ளது. அது ஒருவருக்கொருவர் பேசுவதைத் தாண்டி நாவலாசிரியர் வாசகரோடு பேசுவது, தன்னோடு பேசிக்கொள்வது என்றும் சொல்லலாம். நாவல், பேச்சு இரண்டுமே மிக நேராக ஒரே குறிக்கோளை நோக்கி செயல்படுவன அல்ல. தன்னைத் தானே மறுதலித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. மனவோட்டத்தை பதிவுசெய்யும் ஜேம்ஸ் ஜாய்ஸின், விர்ஜீனியா வுல்ஃபின் படைப்புகளுக்கு நாவல் என்ற வடிவமே இடவமைத்துத் தொடங்கிவைத்தது என்று சொல்லலாம். மனிதர்களின் மனவோட்டத்தை மிக நெருக்கமாக நெருங்க எத்தனித்த எழுத்துப் படைப்பு அவ்வகையில் நாவல்தான். அதேநேரம் சிறுகதை நாம் ‘கவித்துவம்’ என்றழைக்கும் ஒரு கட்டுப்பாடுடைய தன்மைக்கு அருகிலிருக்கிறது என்று சொல்லலாம்.

0

நாவல், சிறுகதை இரண்டில் எது உண்மையில் பன்முகத்தன்மையுடையது?

நாவல் அடிப்படையிலேயே பலகுரல் தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதை ஏற்கனவே பேசினோம். இது வெறுமனே பல கதாபாத்திரங்கள் பேசுவதால் மட்டும் உருவாவதல்ல. மீண்டும் க்ளாரிஸ் லிஸ்பெக்டரை துணைக்கு அழைத்தால், அவருடைய நாவலில் ஒரு குரலுக்கப்பால் வேறு குரல்களே கிட்டத்தட்ட இல்லை. ஒரேயொரு கதைசொல்லி மட்டுமே பேசிக்கொண்டே இருக்கிறாள். ஆனாலும் அந்நாவலின் விரிவில் அந்த ஒற்றைக் குரல் பன்முகத்தன்மை கொண்டதாகிறது. சொல்லப்போனால் அதன் வடிவம் வழமையான சிறுகதை வடிவத்துக்கு நெருக்கமானது. ஒருத்தி எதிர்பாராத ஒன்றை எதிர்கொண்டு சற்றே அதிர்ச்சியாகிறாள். அவளது மனவோட்டம் மெல்ல தீவிரமடைந்து இன்னும் அதிர்ச்சிகரமான ஒரு முடிவை நோக்கி அவள் மெல்லச் செல்கிறாள். அந்த அதிர்ச்சிகரமான முடிவுக்குப் பின்னரும் அந்த மனவோட்டம் தொடர்கிறது. கிட்டத்தட்ட ஒரு வெளிப்பாடுதான் (revelation) அந்த நாவலின் அடிப்படை. ஒற்றைக் குரலையே பன்முகப்படுத்தும் திறன் நாவலில் வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட ஒருவகையான செயற்கை மனப்பிறழ்வை நிகழ்த்திக் காட்டுதல்.

இந்த பலகுரல்தன்மை நாவலின் அடிப்படைக் கூறு என்பதை விட, நாவலின் மிகச்சிறந்த சாத்தியப்பாடுகளில் ஒன்று என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரே குரல் மட்டுமே கொண்ட நாவலாக இருந்தாலும் கூட பெரும்பாலும் விரிவு அதற்கு பலகுரல் தன்மையை அளிக்கிறது. நாவல் தரக்கூடிய அனுபவங்களில் அற்புதமான ஒன்று ஒரு தனிநபரை, அவரது வாழ்க்கையை, கேள்விகளை விரிவான பின்புலத்தில் பொருத்திக் காட்டுவது. குர்அதுல்ஐன் ஹைதரின் “அக்னி நதி”யில் காலத்தில் மிகப் பின்னோக்கி ஒரு சம்பவத்தில் தொடங்கி, அதனோடு தொடர்புடைய இன்னொன்று இன்னொன்று என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்ந்து தான் சொல்லவந்த கதைக்கு வந்து சேர்கிறார்.

சிறுகதையில் பெரும்பாலும் இந்த பலகுரல்தன்மை சாத்தியப்படுவதில்லை. பல்வேறு பாத்திரங்களைக் கொண்ட கதைகளாக இருந்தாலும், மிகச்சிறந்த கதைகளாக இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆசிரியரின் குரலே ஏதோவொன்றைச் சொல்வதாக அமையும். சில நாவல்களிலும் இது நிகழ்வதுண்டு. உதாரணத்துக்கு இமையத்தின் “உப்புவண்டிக்காரன்” நாவலை எடுத்துக் கொள்ளலாம். கவர்னர் என்ற ஒற்றைக் கதாபாத்திரத்தையே பின் தொடர்ந்தாலும், வேறு கதாபாத்திரங்களும் நாவலில் வருகிறார்கள். ஆனால் எங்கும் அவர்களது மனவோட்டம் நேரடியாக வருவதில்லை. கவர்னரின் மனவோட்டமும் பெரிதாக மாறுபடுவதில்லை. ஆரம்பத்தில் நிகழும் குழப்பத்தால் கவர்னருக்கு தோன்றும் கேள்விகளில் இருந்து பெரிதாக எங்கும் விரிவடைதில்லை. ஒருவகையில் இது கொரோனா காலகட்ட தனிநபர் மனநிலையின் நல்ல காட்சிப்படுத்தல் எனலாம்.

நாவலிடமிருந்து இந்த பலகுரல்தன்மையை சிறுகதையால் பெறமுடியும் என்றால், அது நாவல் கூறுகள் சிறுகதையைப் பன்முகப்படுத்தும் ஒரு வழியாக அமையும். இதற்கு சாத்தியம் இருக்கிறதா என்று சொல்ல இயலவில்லை. அதேநேரம் உப்புவண்டிக்காரன் போன்ற உதாரணங்களில் சிறுகதைக் கூறு நாவலின் பலகுரல்தன்மையைக் கட்டுப்படுத்தி வேறோர் அனுபவத்தை அளிக்கிறதா என்று யோசிக்கலாம்.

இமையம்

ஆனால் வெறுமனே விரிவு பன்முகப்படுத்தலைத் தரும் என்று சொல்வதற்கில்லை. ஒப்பீட்டுக்காக தமிழ்மகனின் அறிவியல் புனைவுகளை எடுத்துக் கொண்டால் அவரது சில சிறுகதைகளில் வரும் கவித்துவ தருணங்களின் சாத்தியப்பாடுகள், நாவலில் நிகழ்வதில்லை. அத்தகைய விரிவு நமக்கு இதே அனுபவத்தை அளிப்பதில்லை.

0

நாவல் சிறுகதை என்ற இந்த ஒப்பிடலில் கவிதைக்கு ஒரு சிறிய இடம் இருக்கிறது. நவீன கவிதை அடிக்கடி கதைசொல்வது, ஒரு தருணத்தை சொல்வது போன்ற காரியங்களைச் செய்கிறது. அதுமட்டுமே கவிதையாக இருப்பதில்லை என்றாலும் இந்த செயல்பாடு கவிதையில் நன்றாகவே நிகழ்கிறது. எனவே இயல்பாகவே சிறுகதை இந்த ‘தருணத்தைச் சொல்லும்’ பணியில் பின்வாங்கி இருக்கிறது. விரிவான கேள்விகளை நாவலும், சிறிய தருணங்களை கவிதையும் எடுத்துக் கொண்டால் பின் சிறுகதைக்கு மட்டும் என மிச்சம் என்னதான் இருக்கிறது?

தொன்னூறுகளில் நவீன தமிழ் இலக்கியத்தின் முகமே ஒரு வகையில் மாறியது. கோட்பாடுகள் அறிமுகமாயின. கதை என்பதிலிருந்து விவாதம் அல்லது உரையாடல் எனும் இடத்துக்கு நாவல் வகைமை சென்றது. கவிதை தன் புனித பீடத்திலிருந்து இறக்கப்பட்டு சந்தைக்கு அழைத்து வரப்பட்டது. தன்னால் அங்கும் தரிக்க முடியும் என்று நிரூபித்தது. இந்த மாற்றத்தின் அலையில் சிறுகதைக்கு என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பேசப்படவில்லை. சிறுகதைக்கு புதிய தேவைகள் முளைத்தன. வெறுமனே வாழ்க்கை சித்தரிப்பு என்பதைத் தாண்டி நாவலின் தத்துவ விசாரனை அம்சத்துக்கு சிறுகதை முகம் கொடுக்க வேண்டியிருந்தது. மேலும் கொஞ்ச காலத்திலேயே, முரண், கதாபாத்திர அமைப்பு போன்ற சிறுகதை அம்சங்களை குறுஞ்சித்தரிப்பு எனும் வகைமையில் கவிதை சுவீகரித்துக் கொண்டது. ஆக, குடும்பத்தில் நடுக்குழந்தைப் போலானது சிறுகதை. அண்ணனின் சட்டையை போட்டுக் கொண்டு தனக்கு வர வேண்டிய புது துணியை தம்பியிடம் இழந்து.” என்கிறார் விஷால் ராஜா.

4

ஏன் எல்லா கதை எழுதுபவர்களிடமும் “எப்போ நாவல் எழுதப் போறீங்க?” என்று கேட்கப் படுகிறது. ஏன் நாவலின் உழைப்பு மதிப்பு ஒப்பீட்டளவில் அதே பக்க எண்ணிக்கை கொண்ட சிறுகதை அல்லது சிறுகதைத் தொகுப்பின் உழைப்பு மதிப்பை விட அதிகமென கருதப் படுகிறது.

நாவல் என்பது எப்படியோ நம்மிடையே ஒரு ஆதர்ச வடிவம் ஆகியிருக்கிறது. உலகளாவிய வாசிப்புச் சந்தையில் சிறுகதையை விட நாவல் பிரபல வடிவமாக இருப்பது ஏன்?  புத்தகம் என்ற ஒரு சந்தைப் பொருளுக்கு நாவல் மிகப் பொருத்தமான வடிவமாக உருத்திரண்டிருக்கிறது. மதிப்பிடக் கூடிய, விற்கக்கூடிய, அடையாளங்களை எளிதாக சுமக்கக்கூடிய ஒரு சந்தைப் பொருள். இதில் மேல்குறிப்பிட்ட கதையாடல் ஒருங்கமைவு நிச்சயம் மதிப்பு கூட்டுகிறது. எனவே இந்த சந்தை மதிப்பைக் கடந்து முன்னகர்த்திச் செல்ல, இங்கே பன்முகப்படுத்துதல் என்பது நாவலை கதையாடல் ஒருங்கமைவைக் குலைத்தல் எனும் செயல்பாடாக இருக்கமுடியுமா என்று கேட்கலாம். ஆனால் ஒருங்கமைவை குலைக்க வேண்டுமா என்ன?

இந்த ஒருங்கமைவின் நேர்மறை, எதிர்மறை அம்சங்களைப் பார்க்க, ஒரு பிரபலமான புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம். பைபிள் ஒரு நாவலா, சிறுகதைத் தொகுப்பா? பைபிளை ஒரு (சிறுகதை) தொகுப்பாக, அல்லது அதையொட்டிய ஒரு வடிவமாகப் பார்ப்பதே நவீன ஆய்வியல் கருத்து. அதேநேரம் பழமைவாத பார்வை பைபிளை ஒரு நாவலாகவே கருதும். இங்கே காரணம் மிக எளிது- நாவல் என்ற பார்வையிலேயே, பைபிள் கடவுள் என்ற ஒற்றைக் குரலால் எழுதப்பட்டது என்ற கருத்தை நிறுவமுடியும். தனித்தனிக் கதைகள் சொல்லும் விசயங்கள் அளவே, அல்லது அதைவிட அதிகமாகவே அவற்றுக்கிடையில் இருக்கும் ஒருங்கமைவு முக்கியமானதாகிறது. ஒருவகையில் இந்த ஒருங்கமைவே அதிகாரம் என்றாகிறது. கதைகளில் இருக்கும் தூலமான கூறுகளை விட இந்த தெளிவற்ற ஒருங்கமைவு நம் இஷ்டத்துக்கு வரங்களை அருளக்கூடியது.

இதை மனதில் வைத்துக்கொண்டு பைபிள் போன்ற ஒரு பிரதியை சிறுகதையாகவும் நாவலாகவும் வாசிக்கும்போது சிறுகதையே வெகுமக்கள் அரசியலுக்கு ஏற்ற வடிவம் என்று லேசாக சந்தேகம் எழுகிறது. அல்லது சிறுகதையே அறிவியல் வயப்பட்ட நவீனத்தின் வடிவமாக இருக்கமுடியும் என்று. மதங்கள் எல்லாவற்றுக்கும் இடையே தொடர்பை வலிந்து உருவாக்க முயலும்போது, பல விசயங்களை நாம் தனித்தனியாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதுதானே நல்ல அரசியல் நிலைப்பாடு?

0

நாவல் என்ற வடிவத்தின் அரசியல் மதிப்பு குறித்தும் இந்த இடத்தில் யோசிக்கலாம். நாவல் சிறுகதை இந்த வடிவங்களின் அரசியல் மதிப்பு என்ன என்று யோசிக்கும்போது முதலில் தோன்றுவது, நாவல் எளிதாக வெகுமக்கள் வடிவமாக மாறும் சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. வாசிக்க எளிதென தோன்றக்கூடிய வடிவமாக இருந்தாலும் சிறுகதையில் அத்தகைய சாத்தியப்பாடு குறைவே. காரணம் சிறுகதையால் நாவல் போன்று தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. வெகுமக்கள் தளத்தோடு உரையாட முடியாத எந்தப் படைப்புக்கும் ஒப்பீட்டளவில் அரசியல் மதிப்பு மிகக் குறைவே. அதேநேரம் நாவல் மிக எளிதாக அதிகாரத்தின் செயல்திட்டங்களுக்கு வளைந்துகொடுக்கிற வடிவமாகவும் இருக்கிறதா என்று கேட்கலாம்?

ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவல் குறித்து நான் எழுதிய சிறுகுறிப்பிலிருந்து இரு பத்திகளை இங்கே சேர்க்கிறேன்.

கதைகள் பயனற்றவை மட்டுமல்ல. அவை அர்த்தமுள்ள அரசியல் நடவடிக்கைகளுக்கு மாற்றாக நம்மை மரக்கச் செய்யும் மயக்கமருந்துகளாகப் பயன்படுகின்றன என்கிறார் யாஸ்மின் நாயர். அவர் சொல்வது ஒவ்வொரு பிரச்சினை நடக்கும்போதும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைக் கதைகளை மனமுருகச் சொல்லும் பத்திரிகைத் துறை குறித்து. இலக்கியம் அதிலிருந்து மாறுபட்டது என்றே நாம் கருதி வந்திருக்கிறோம். இலக்கியமே நம்மிலிருந்து வேறுபட்ட வாழ்க்கைகளை நிலங்களை நம்மைப் புரிந்துகொள்ளவைக்கிறது. இலக்கியமும் அதன் கதைகளும் இல்லாவிட்டால் நாம் சக மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வோம்? ஆனால் முதலில் வெறுமனே சொன்ன வரியை விட, இரண்டாவதாக கேள்வியாக கேட்கும்போது நமக்கே நம் மானுடம் மேல் ஒரு சிறிய சலிப்பு ஏற்படுகிறது. பிற மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் மைத்ரியோடிருக்க நமக்கு அவற்றின் கதைகள் தேவைதானா? அப்படித் தேவையென்றால் அது நம்மைக் குறித்து என்ன சொல்கிறது?

இலக்கியத்தின் பயன்மதிப்புகள் குறித்த விவாதங்களுக்குள் மேலும் செல்லாமல், இந்த மயக்க மருந்துத் தன்மையை ஒரு நாவல் தன்னளவில் எதிர்கொள்ள முடியுமா என்பதை யோசிக்கலாம். ஏனெனில் ஒரு நாவல் என்பது வெறும் கதையல்ல. அது பல கதைகளைக் கொண்டிருக்கலாம். கதைகளுக்கு எதிராகவே செயல்படலாம். அந்தக் கதையை எப்படி நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை உங்களை யோசிக்க வைக்கலாம்? அப்படி யோசிக்கும்போது ஸலாம் அலைக் நிச்சயமாக தனது கதையின் மயக்க மருந்துத் தன்மைக்கு எதிராக செயல்பட முயன்றிருக்கிறது. தனிமனிதனையும், அல்லது தனிமனிதர்களின் பிரதிநிதி ஒருவனையும் நம் உலகின் எண்ணற்ற தேச அமைப்புகளையும் எதிரெதிரே நிறுத்தி எடைபோட்டிருக்கிறது. இரண்டில் ஒரு பக்கம் மட்டும் மனிதத்தன்மை என்று நாம் நம்பக்கூடிய ஒன்று இல்லை என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஷோபா சக்தி

பன்முகப்படுத்தல் என்பதன் முக்கியமான கூறாக இதுவே இருக்கவேண்டுமென நினைக்கிறேன். கதைகளின் மயக்கத் தன்மையை நாவல் என்னும் வடிவத்தால் எதிர்கொள்வது எப்படி? அதற்கு சிறுகதையின் கூறுகள் உதவுமா என்பது சற்றே பயனுள்ள கேள்வியாக எனக்குப் படுகிறது.

0

காலம் எல்லா வகையான கதைப் பிரதிகளிலும் ஒரு முக்கியமான அம்சம். மீண்டும் பைபிளிடமே செல்லலாம். காலம் குறித்த மனிதர்களின் பார்வை நிகழ்காலத்தில் கட்டுண்டது. நினைவுகளாகவோ கற்பனைகளாகவோ இரு திசைகளிலும் விரியலாம் என்றாலும் காலம் குறித்த முழுமையான பார்வை மனிதர்களுக்கு அளிக்கப்படவில்லை. கடவுள் காலத்தை முழுமையாக அறிந்தவர். அவர் பார்வையில் அதில் நிகழ், எதிர், கடந்த என்ற பிரிவுகளுக்கு அத்தனை கனமில்லை. பைபிளை ஒரு நாவலாக வாசிக்கவேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுவது. கடவுள் எதிர்காலத்தை வெளிப்படுத்துவது முதல் பலவும் நிகழ்காலத்துக்கான எதிர்வினை அல்ல, மாறாக அவரது முழுமையான பார்வையில் அர்த்தமாவது.

விஷால் ராஜாவிடம் பேச்சில் “நவீன இலக்கியப் பிரதிகளில் நாவல், சிறுகதை இரண்டையும் காலத்தின் நெடுவழி (passage of time), காலத்தின் துண்டங்கள் (fragments of time) எனும் அடிப்படையில் அணுகலாம்” என்றார். கதைகள் நம் காலத்தில் இயல்பாகவே துண்டங்கள் நோக்கி செல்கிறது என நினைக்கிறேன். நாவல்கள், கதைகள் நவீனம் அடைய அடைய இந்த காலத் துண்டாடல் அதிகரிக்கிறது எனலாம்.

படம் வரைதல்(Drawing)- ஓவியங்கள் (Paintings) இரண்டையும் ஒப்பிடுகிற ஜான் பெர்ஜர், படம் வரைவது ஒரு காட்சியை, கற்பனையை, கருத்தாக்கத்தை கடந்த காலத்தில் வைக்கும் செயல்பாடு. ஓவியம் என்பது எதிர்காலத்தை நோக்கிய செயல்பாடு என்கிறார். இதே ஒப்பீட்டை நாம் படம் வரைதல் – சிறுகதை, ஓவியம் – நாவல் என்று நிகழ்த்திப் பார்க்க முடிகிறதா பார்க்கலாம்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறுகதையான விஷால் ராஜாவின் ‘திருவருட்செல்வி’யை எடுத்துக் கொள்ளலாம். திருவருட்செல்வியில் சொல்லப்படும் சம்பவங்கள் நான்கைந்து மாதங்கள் நடப்பவை. அவ்வப்போது தன் வாழ்க்கையின் கடந்த கால சம்பவங்களையும் செல்வி நினைத்துக் கொள்கிறாள். கதையின் முக்கிய பாத்திரமான வள்ளி பூனை செல்வியால் கண்டெடுக்கப்பட்டு பின் வெளிச்சென்று ஒரு குட்டி ஈன்று திரும்புகிறது. வள்ளியின் கணக்கில் பார்த்தால் குறிப்பிட்டத்தக்க காலம் இக்கதையில் கடக்கிறது. அதேநேரம் இச்சிறுகதையில் நாம் ‘முழுமை’ என்று சொல்லக்கூடிய ஏதோவொரு கூறு இருக்கிறது. அதாவது வள்ளி வெளியேறிச் செல்வதும், வள்ளியின் குட்டி வந்து சேர்வதும், செல்வியின் கடன் அடைவதுமான யாவும் கதையின் முதல் பத்தியில் முன்கூறப்பட்டுவிட்டது போல. கதை நமக்கு ஒன்றை வழங்குகிறது. ஆனால் வழங்கப்படும் அந்த ஒன்றே கதையாக இருக்கிறதே தவிர, நாமோ கதையோ வழியில் எதையும் கண்டெடுப்பதில்லை.

இந்த கண்டெடுத்தல் அனுபவமே சிறுகதைக்கும் நாவலுக்குமான முக்கியமான வித்தியாசமாகவும் எனக்குப் படுகிறது.

0

சிறுகதையின் கூறுகளை நாவலை பாதிக்க, பன்முகப்படுத்த ஒரு சாத்தியப்பாடு இருக்குமானால், அது நாவலில் இருக்கும் காலத்தின் துண்டங்களை(fragments of time) நாம் ஒரு சிறுகதையாகக் கருதினால் என்னவாகும் என்ற கேள்வியின் பதிலில் இருந்தே கிடைக்கக்கூடும். வெவ்வேறு காலத்தில் நடக்கும் சிறுசிறு சம்பவங்களைச் சொல்லிச்செல்லும் நாவலின், அல்லது நாவலின் விரிவில் தானாக ஏற்படும் பலகுரல் தன்மைக்கு இடையில் உண்டாகும் அந்த ஒருங்கமைவை நாம் சிறுகதைக் கூறுகளைக் கொண்டு பலவீனப்படுத்தினால் அது நேர்மறையான விளைவாக அமையுமா, ஒரு நவ பழமைவாத முயற்சியாக அமையுமா?

எழுத்தாளர் கடவுளாகும் ஆசையைக் கைவிடுதல். கடவுளின் அதிகாரத்தை மறுத்தல். இயற்கையில் மனிதனின் இடத்தை பணிந்து ஏற்றல். இப்படி பல விளக்கங்களை இதற்கு முகமூடி போல போட்டு பரிசீலித்து பார்க்கலாம். நமக்கு இதில் சில அர்த்தங்களும் கிடைக்கக்கூடும். எல்லா எழுத்தாளர்களுமே ஒருவகையில் வரலாற்றாரிசியரின் வேலையைப் பார்க்கும்படியான சாபத்துக்கும் ஆளாகிறார்கள். வரலாற்றாசிரியர்களோ எல்லாவற்றுக்கும் தொடர்பேற்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதிலிருந்து இலக்கியத்துக்கு மீட்சி உண்டா? மீண்டும் க்ளாரிஸை நினைவுபடுத்திக் கொண்டால் நாவல் காணாததைக் கண்டறியும் முயற்சி. சமகாலச் சூழலில் நாவலின் மதிப்பு முழுக்கத் தீர்ந்துவிடாததற்கு காரணமும் அதுவே. நாம் அறியாத ஒன்றை, எழுத்தாளரே அறியாத ஒன்றைத் தேடித் தர நாவல் பொருத்தமான வடிவமாக இருக்கிறது. இந்த முயற்சியில் எழுத்தாளர் தன்னை கடவுளாக்கிக் கொள்ளாமல் இருக்கவும், தான் கண்டெடுப்பவை எல்லாவற்றின் இடையில் வலிந்து இணைப்புகளை உருவாக்காமல் தொடரவும் சிறுகதை வழிகாட்டலாம்.

000

(“புரவி” இலக்கியக் கூடுகையை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை)

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.