
1
கண்ணாடிகள் போலத்தான்
விற்றுத் தீர்ந்திருக்கிறது
காலத்தில் எல்லாம்
சில தருணங்களில்
நானே கண்ணாடி
நானே வியாபாரி
எத்தனை எத்தனை
பிம்பங்கள்
அலைந்து திரிந்த
வீதிகள் தோறும் ?!
என் இயல்பு விந்தையானது
விற்றுத் தீர்ந்த
வியாபாரியாக
அபகரித்துக் கொண்ட
கண்ணாடிகளாக
வீடு திரும்பும் போதெல்லாம் ஆகிறேன்
புரிதலற்ற
பிம்பங்கள் பல பெருகிச் சூழ
2
கண் முன்
ஒரு நடனம்
சோறுண்ணும்
காகம்
கன் முன்
ஒரு நளினம்
காக்கையின்
அலகிலிருந்து
சிதறும்
பருக்கைகள்
காகம் பறந்து விட
பருக்கைகள் தீர்ந்து விட
அதிசயக் கண்கள்
நடனத்தில்
நளினத்தில்
3
அந்தக்
காட்டுக் கோயிலில்
கடைசி பக்தன்
ஏற்றிய விளக்கு
காற்றில் தளர்ந்தது
புறம் நான்கிலும்
பெரும் இருள்
இன்னும் எரிந்து
இன்னும் தளர்ந்து
இன்னும் சுடர்ந்து
இயலா வாழ்வொன்றின்
கண்ணீர் வேண்டுதலென
தன் துடிப்பில்
கண்ணாயிருந்தது
இரக்கம்
கண்டதுபோல்
காற்றில் தணிவு
நோவு கண்ட சுடர்தானே
ஆடலின் முடிவில்
சட்டென்று
தெறித்தடங்கியது
புறமெங்கிலும்
பூரண இருள்
4
பந்தலிடப்பட்டது
கூட்டம் திரண்டது
பறை முழங்கியது
ஒப்பாரியினூடாய்
பிண மார்பிலிருந்து
மாலைகள் கசிந்து பெருகின
ஊர்வலம் புறப்பட்டது
கிழக்கு இருண்டது
கிழவர் மேய்ச்சல் காட்டில்
உறைந்தார்
வீடு சிறுகச் சிறுக அரவமிழக்க
திண்ணை
வெறித்துக் கிடந்தது
யாவும் பொருட்டின்றி
இன்னமும்
மாட்டுக்கொட்டகைக்குள்
கன்றுகளைக் கூட்டித்
துள்ளாட்டம்
போட்டுக் கொண்டிருந்தது
பொருப்பற்ற
இந்த நாள்
5
வீட்டில் பெண் பார்க்கும்
வைபவம்
வீட்டில் தான் பெயர்ந்து வரும் திசை கிழக்கென
இன்றைக்குத்தான்
அறிந்தாள்
துள்ளலிட்டு ஒலியெழுப்பாத
கொலுசுகள்
வியப்பைத் தந்தன
தாழப் பழகியிராத கண்களுக்குத்
தரையில் துடிதுடிப்பு
ஒவ்வாது விரவிய பெரு மணம்
சூடிய பூக்களில்
பிடித்த பாடல் முணுமுணுப்பை மறக்க
குரல்வளைக்குள் கரைந்தன
வரிகள்
ஏந்தி நின்ற தம்ளர்களின் நீரில்
யாரோ ஒருத்தியின் முகம்
கண்டாள்
வீடு கலைந்து வெறுமையான
பின்னர்
கடிந்தபடி
அந்த யாரோ ஒருத்தியைத்
துரத்தலானாள்
கலகலத்தது அவளின் அறைக் கண்ணாடி

சுஜய் ரகு
கவிதைகள், கவிதை மதிப்பீடுகள் தொடர்ச்சியாக இணைய இதழ்களில் எழுதிவருகிறார். "நிலவு சிதறாத வெளி" என்கிற கவிதைத்தொகுப்பு வெளியாகியுள்ளது.
அருமை,,,