மனித உரிமைகள்: அரசியல் நவீனத்துவத்தின் அனஸ்தீஸியா

மனித உரிமைகள்: அரசியல் நவீனத்துவத்தின் அனஸ்தீஸியா

“இக்கட்டுரை நிஷாந்தின் ‘பின்காலனிய நினைவேக்கம்’ நூலில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான அவருடைய இந்நூல் தேசியவாதம் சார்ந்த பொதுவான கற்பிதங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. அதன் ஒரு பகுதியாக கீழ்வரும் கட்டுரை ‘மனித உரிமைகள்’ எனும் கருத்தாக்கத்தை விமர்சனத்துக்குட்படுத்துகிறது. அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட உலகப் பொதுவான ஒரு மனிதனை (Universal human), தாராளவாத மானுடவாதம் (Liberal Humanism) கனவுக் காண்கிறது. அதன் அடிப்படையிலேயே மனித உரிமைகளையும் வரையறுக்கிறது. அப்படியான வரையறை அரசியல் நீக்கத்துக்கு வழி வகுத்து, நடைமுறையில் நீதிக்கு எதிரானதாக மாறுவதை, ஹன்னா அரெண்ட், ஸ்லாவொ ஜிசெக் உள்ளிட்ட சிந்தனையாளர்களின் கருத்துக்கள் வழியே நிஷாந்த் விவரிக்கிறார். உலகெங்கும் நவமுதலாளித்துவமும் தேசியவாதமும் புத்தெழுச்சி பெற்று நிலைத்துவரும் வேளையில், மானுடவாத லட்சியங்களை பரிசீலணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. இந்த கட்டுரை சமூக அரசியல் தளத்தில் அதற்கு முகங்கொடுப்பதாய் அமைந்திருக்கிறது” – அகழ்

000

‘உரிமைகள்’ என்பது அரசியற் போராட்டங்களின் உரையாடல்களில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்று. பொருளாதார உரிமைகள், பெண் உரிமைகள், அரசியல் உரிமைகள், சுய-நிர்ணய உரிமை போன்று பல்வேறு புலங்களில் உரிமைகள் கோரும் போராட்டங்கள் பல தரப்பினராலும் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுகின்றன. இவையனைத்தும் ‘மனித உரிமைகள்’ எனும் உலகளாவிய உரிமைகளின் வெவ்வேறு பகுதிகளாக பார்க்கப்படுகின்றன. பின்-காலனிய சமூகங்களினுள் தலையெடுக்கும் வன்முறைகளை அடையாளப்படுத்தும் சொல்லாடல்களில்  மனித உரிமைகள் உலகப் பொதுமையாகவும், சர்வதேச அமைப்புகளினதும் சட்டங்களினதும் அடிப்படையாகவும் இரண்டாம் உலகப்போருக்குப்பிறகே உருப்பெற்றது. மனிதநேயத்தை மையமாகக்கொண்ட ‘மனிதநேய நெருக்கடி’, ‘மனிதநேய உதவி’ உள்ளிட்ட கருத்துருக்களும் அதனுடன் தோன்றின.

மனித உரிமைகள் எனும் கருத்தாக்கம் பற்றி எழுதும்போது பங்கஷ் மிஷ்ரா “1950-களிலும் 1960-களிலும் ‘ஐக்கிய நாடுகள் அவை’ பிறப்பித்த உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights) மிகக் குறைவான அளவிலேயே நேரடியாக மேற்கோள் காட்டப்படுகிறதுது. 1970-களில்தான் மனித உரிமை சொல்லாடல்கள் பிரபலமாயின. குறிப்பாக, ஃபிரெஞ்சு அறிவுஜீவிகள், சோஷலிசத்தின் மீதான நம்பிக்கையை இழந்த நிலையிலும், மொத்தத்துவ ஆட்சிமுறைக்கு (totalitarian) எதிரான தாராளவாதக் கருத்துகளை எடுத்தியம்பும் நோக்கிலும் மனித உரிமை சொல்லாடல்களை பயன்படுத்தத் தொடங்கினர். ஜிம்மி கார்டர் போன்ற அரசியல்வாதிகள் அதனை சோவியத் யூனியனுக்கு எதிரான ஆயுதமாகவும் உபயோகப்படுத்தினர்.” என்கிறார்.

உலகளாவிய மனித உரிமைகள் என்பது உலக மக்கள் அனைவரும் அவர்களிடையே நிலவும் வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றாக இணைவதன் புள்ளியாகக் கூறப்படுகிறது. ஆனால், மனித உரிமைகளும் தேசிய குடியுரிமையும் ஒன்றோடொன்று இடைக் கலந்துள்ளன. தேசிய-அரசினுள் ஓர் உறுப்பாக அங்கம் வகிப்பதன் ஊடாகவே மனித உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன என்பதை ஹன்னா அரெண்ட் சுட்டிக்காட்டுகிறார். உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் மனித உரிமைகளுக்கு உரித்தானவர்களாக மனித உரிமைப் பிரகடனங்கள் கூறின. ஆனால், தேசிய-அரசினுள் அரச இறையாண்மையின் சொந்தக்காரர்களாக விளங்கும் தேசியத்தின் குடியாக இருக்கும்பட்சத்தில்தான் அந்த உரிமைகள் உறுதிசெய்யப்படும்படியாக இருந்தன.

தேசிய-அரசுகளின் உருவாக்கமானது ‘அயலார்’ என்று கருதப்பட்ட மக்கட்தொகையினரை தேசிய நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றின. தேசிய அடையாளத்திற்கு அந்நியர்களென கருதப்பட்டோரை தேசியத்திலிருந்து விலக்குவதனூடாகவே ‘தேசிய-பூர்விகர்’களின் தனிமனித உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன.

மனித உரிமைகளுக்கும் தேசிய-அரசுகளுக்குமுள்ள பிணைப்பை அறுப்பதற்கான நடவடிக்கையாகவே பனிப்போருக்குப்பிறகு தேசிய குடியுரிமைக்கு மாற்றாக சர்வதேச சட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்னரே அரச இறையாண்மையை மீறி உலக நடப்புகளை மேற்பார்வையிடும் அலகாக ‘சட்டம்’ முன்னிறுத்தப்பட்டது. அதன் விளைவாக தாராளவாத சர்வதேசியத்தின் ஊடாக மனித உரிமைகளுக்கும் தேசிய குடியுரிமைக்குமான பிணைப்பு அறுபடும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், தேசிய-அரசுகளினுள் ‘உரிமைகளுக்கான உரிமை’ (The Right to Have Rights) என்பது அரசியல் பங்கேற்பிலிருந்து பிரிக்க இயலாதபடிக்கு இடை கலந்துள்ளது. தனிமனித உரிமைகளை உறுதி செய்யும் அரசியற் சமூகத்தை உருவாக்குவதற்கு தேசிய எல்லைகளை வரையறுப்பது முன்நிபந்தனையாகிறது. மனித உரிமைகளை தேசிய-அரசுகள்தான் உறுதியளிக்கின்றன. அதோடு, அதனை மீறுவதற்குமான அதிகாரத்தையும் பெற்றுள்ளன.

நவதாராளவாதக் கருத்தியலானது மனித உரிமை சொல்லாடல்களைப் பயன்படுத்தி சந்தைப்பொருளாதாரத்தின் சமத்துவமற்ற போட்டிமுறைகளை மனிதத்தன்மையானதாகப் பாவிக்கிறது. லேமாண்மை வாய்ந்த கருத்தியலாக நவதாராளவாதம் உருவெடுத்த அதே காலகட்டத்தில் மனித உரிமை சொல்லாடல்களும் மேலாண்மை வாய்ந்தவைவாக மாறியது யதேச்சையாக நிகழவில்லை. தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதோடு அவை சந்தைப் பொருளாதாரத்தை தக்கவைக்கவும் உதவுகின்றன என்று நவதாராளவாதக் கருத்தியலை வளர்த்தெடுத்த ‘மாண்ட் பெலரின் சொசைட்டியினர்’ (Mont Pelerin Society)

கருதினர். முதலாளித்துவர்களையும், தனிச்சொத்தையும் பாதுகாப்பதற்கான கேடயமாக மனித உரிமைச் சொல்லாடல்களை நவதாராளவாதிகள் பயன்படுத்திக்கொண்டனர். நவதாராளவாத சிந்தனையாளர்கள் ‘உரிமைகள்’ குறித்து முன்வைத்த கருத்துகளை அடிப்படையாகக்கொண்டே மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) போன்ற அமைப்புகள் வளர்ந்தன என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும். மறுபுறம், அறத்தன்னிலையாக (moral subject) பிரகடனப்படுத்திக்கொண்டு, உலக அரங்கில் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதன் பெயரில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு ஏகாதிப்பத்திய நலன்களை விரிவுபடுத்தவும் ஆக்கிரப்புகளை நியாயப்படுத்தவும் அமெரிக்க அரசாங்கம் மனித உரிமைகளைப் பயன்படுத்திக்கொண்டது.

‘தேசிய நியாயதிக்கம்’ (national jurisdiction) எனும் சட்டக்கூறை மனித உரிமைகள் பிரகடனத்தில் இணைப்பதில் வெற்றி கண்டது அமெரிக்கா. அதனடிப்படையில் அமெரிக்காவிலுள்ள கறுப்பினத்தவர்களின் மனித உரிமைகளைக் காப்பாற்ற வேண்டுமென்கிற நோக்கில் எந்த நாடும் அமெரிக்காவின் விவகாரங்களில் தலையிட முடியாது. இந்தக் கூற்றின் அடிப்படையில், அமெரிக்க கறுப்பினத்தவர்களின் பிரச்சினை உள்நாட்டு பிரச்சினையாக மட்டுமே கருதப்படுமேயன்றி எவ்வகையான சர்வதேச கூட்டிணைவுகளின் இடையீட்டையும் கோரும் பிரச்சினையாகக் கருதப்படமாட்டாது.

சர்வதேச சட்டங்களின் உள்ளடக்கம், நெறிமுறைகள், எல்லைகள் முதலானவற்றை நிர்ணயிக்கும் மேற்குலக நாடுகள் அச்சட்டங்களிலிருந்து விலகிக்கொள்வது நவீன வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது. ஆகவே, மேற்கத்திய நாடுகளின் மனித உரிமைச் சொல்லாடல்களுக்கும் நடைமுறையில் அரசியல் வன்முறையை அடையாளப்படுத்துவதன் நோக்கில் அது பிரயோகப்படுத்துவதற்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன.

பனிப்போரின் முடிவில் மானுடநேய ஒழுங்கானது (Humanitarian Order) உலக ஒழுங்கினை நெறிப்படுத்தும் விசைகளுள் ஒரு பகுதியாக உருவெடுத்தது. அதைத்தொடர்ந்தே அரசுசாரா அமைப்புகள் (Non-Governmental Organizations) பெருகின. இவ்வொழுங்கானது ‘பாதிக்கப்படக்கூடிய மக்கட்தொகுப்புகளின்’ பாதுகாப்பை உறுப்படுத்துவதாகச் சொல்கிறது. இதற்கு முன்னர், சர்வதேச பாதுகாப்பு ஒழுங்குகள் ‘குடிமக்களை’ (citizens) நோக்கிப்பேசின. ஆனால், இப்புதிய ஒழுங்கு அரூபமான – அரசியல் நீக்கம் செய்யப்பட்ட – ‘மனிதர்களை’ (humans) நோக்கிப் பேசுகிறது. அம்மனிதர்களைப் பாதுகாப்பதன் பொருட்டு அரசுகளின் இறையாண்மையை மீறிச் செயல்படும் அதிகாரமுடையதாகவும் சொல்லப்படுகிறது. உலகளவில், மனித உரிமைகளை உறுதி செய்வதாகச் சொல்லும் சர்வதேசக் குழுக்களும் அமைப்புகளும் இப்புதிய ஒழுங்கின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.

“சில ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமைகள் என்பது பணக்கார வெள்ளையின ஆண் குடிமக்களுக்கு மட்டுமே உரித்தானவைகளாக இருந்தன. ஆனால், இன்றோ மனித உரிமைகளானது பல்வேறு பாலின, வர்க்க, இன அடையாளங்களை உள்ளடக்கியிருக்கின்றன. முடிவாக, இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், வரலாறு முழுக்க மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் நிகழும்போது அதன் எல்லைகளும் பல்வேறு குழுக்களை உள்ளடக்கும் வண்ணம் விரிந்துள்ளது” என்கிறார் ஸ்லாவோ ஜிசெக். அவர், அனைவரையும் உள்ளடக்குவதற்குத் தேவையான அளவு மனித உரிமைகளின் எல்லைகளை விரிவுபடுத்தினால் அது அனைவரது விடுதலைக்கானதாக இருக்குமென்று வாதிடுகிறார். இவ்வாறு மனித உரிமைகள் தவறாகப் பயன்படுத்துப்படுகின்றன அல்லது இவை ‘போலியான’ மனித உரிமைகள் என்று குறிப்பிட்ட மனித உரிமை சொல்லாடல்கள் மீதான விமர்சனங்கள் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் வந்துள்ளன. அதைத்தொடர்ந்து மனித உரிமைகளை ஆக்கப்பூர்வமாக, மனித விடுதலைக்கான பாதையாக பயன்படுத்த முடியும் என்றும் பேசியுள்ளனர். இத்தகைய விமர்சனப்பூர்வ வாதங்களும் மனித உரிமைச்சொல்லாடல்களில் உள்ளுறையாக இருக்கும் சிக்கல்களை பார்க்கத்தவறுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் செயற்பட்ட விடுதலை இயக்கங்களின் மனித உரிமைச் சொல்லாடல்கள் அதிகார நோக்கத்தில் பிரயோகிக்கப்படவில்லை. அரசுக் களன்கள் கட்டவிழ்த்த நேரடியான கோரமான வன்முறைகளை மனித உரிமை இயக்கங்கள் வெளிக்கொணரவே செய்தன. ஆனால், அவை சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் 1980-களிலும் 1990-களிலும் மூன்றாம் உலக நாடுகளின் மீது நிர்பந்தித்த கட்டமைப்புச் சீர்திருத்தக்கொள்கைகள் ஏற்படுத்திய நாசகர விளைவுகள் குறித்து அக்கறைகாட்டவில்லை. ஏனெனில், மனித உரிமை சொல்லாடலின் கருத்துச்சட்டகம் நேரடியான புறவய வன்முறைகளைத்தான் மீறலாகக் பார்க்கிறது. ஒரு தனிநபர் தாக்கப்பட்டால் அவருடைய உரிமை மீறப்படுகிறது என்கிற அளவில்தான் அச்சட்டகத்தைப் பயன்படுத்த முடியும்.

உலகப்போர்களுக்குப் பின்பான உலக ஒழுங்கில் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, யுகோஸ்லாவியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை நிகழ்த்துவதற்குப் பிண்ணனியாக மனித உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதைத்தாண்டி மனித உரிமைகளின் சட்டகமே அரசியல் வன்முறைகளை இடப்படுத்துவதற்கும் அடையாளங்காண்பதற்குமான போதாமைகளை தன்னளவில் கொண்டுள்ளன. அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஒருபுறமிருந்தாலும் அச்சொல்லாடல்கள் தன்னகத்தே கொண்டுள்ள சிக்கல்களை வெளிக்கொணர வேண்டியுள்ளது.   

சமூகத்தில் புழக்கத்திலுள்ள மனித உரிமை சொல்லாடல்களுக்கும் உலகளாவிய மானுடநேய ஒழுங்கின்கீழ் செயலாற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மனித உரிமை சொல்லாடல்கள் அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக அவை முக்கியமான இடையீட்டையும் பங்களிப்பையும் செய்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. எனினும், அரசியல் வன்முறைகளை மனித உரிமைச் சொல்லாடல்களைக்கொண்டு அணுகுவதன் சிக்கல்களையும் அச்சொல்லாடல்களில் உள்ளுறைந்துள்ள முரண்களையும் நாம் அடையாளங்காணும்போதே அந்த சட்டகத்தைத் தாண்டிய அரசியல்/சமூக விடுதலைக்கான பாதைகளை அமைக்க முடியும்.

ஹன்னா அரெண்ட்

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights):     

“இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு கருத்துடைமை, தேசிய அல்லது சமூகத் தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர்” என்று 1948-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ‘உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்’ உறுதியளிக்கிறது. மனிதராகப் பிறந்த அனைவருக்குமே மனித உரிமைகள் உரித்தானது என்கிறது இப்பிரகடனம். எனில், ‘மனித உரிமைகள்’ பிறப்பிலிருந்தே ஒரு மனிதனுக்கு சாராம்சமானதாகவும் மனிதனிலிருந்து பிரிக்கமுடியாததான (inalienable) கூறாகவும் கருதப்படுகிறது. இத்தகைய இடப்படுத்தல் உட்கிடையாகக் கொண்டுள்ள களைய முடியாத முரண்பாடுகளையும் அடிப்படையான சிக்கல்களையும் காண்போம்.

‘உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்’ ஒரு தனிநபரை அனைத்து சமூக, அரசியல் உறவுகளையும் கடந்த உலகப்பொதுவான (universal) தன்னிலையாக இடப்படுத்துகிறது. ஆனால், ஒரு தேசிய-அரசினுள் இறையாண்மை பெற்ற ‘பூர்விகர்களே’ தங்களை உலகளாவிய மனிதர்களாகவும் உலகளாவிய தன்னிலைகளாகவும் முன்வைப்பதற்கான வெளிகள் உள்ளன; உரிமைகளை உறுதிசெய்யக்கூடிய அரசியற் சமூகத்தைக்கொண்ட ஒருவர்தான் உலகளாவிய மனிதராகவும் உலகளாவிய தன்னிலையாகவும் தன்னை முன்வைக்க முடிகிறது.

என்னதான் உலகப்பொதுவான தன்னிலையாக பெரும்பான்மையினர் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டாலும் தேசிய-அரசினுள் அவர்களுடைய சமூக வாழ்க்கை (உரிமைகள்) சாத்தியப்படுவது ஒரு அரசியற் சமூகத்தில் உறுப்பாக அங்கம் வகிப்பதன் வழியாகத்தான். தேசியத்தின் ‘சொந்தக்காரர்கள்’ தங்களை இன, சாதிய, வர்க்க அடையாளம் கடந்தவர்களாக அறிவித்துக்கொள்ள முடியும். தனிப்பட்ட அளவில் அவர்கள் அடையாளமற்றவர்களாகவும் அடையாளங்களைக் கடந்தவர்களாகவும் அறிவித்துக்குக் கொண்டாலும், தேசியத்தினுள் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரச இறையாண்மையானது அவர்களுடைய அரசியல் அடையாளத்தையே சார்ந்துள்ளது.

உலகப்பொதுமையானதாக சொல்லப்படும் ஃபிரெஞ்சு புரட்சி மற்றும் அப்புரட்சியின் விளைவான ‘மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனத்தின்’ (Declaration of the Rights of Man and of the Citizen) அடிப்படையில்கூட ஒருவர் ஒரு தேசியத்தின் குடிமகனாக இருக்கும்பட்சத்தில்தான் அவர் உரிமைகளுக்கு பாத்தியமானவராகக் கருதப்படுகிறார் என்கிறார் ஹன்னா அரெண்ட். ‘ஐக்கிய அமெரிக்க உரிமைகளின் சட்டம்’ (United States Bill of Rights), ஃபிரெஞ்சு புரட்சியின் ‘மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனம்’, ‘உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்’ உள்ளிட்ட ஆகப்பெரிய உரிமை பிரகடனங்களிலும் ஒருவர் உரிமைகளுக்கு பாத்தியமானவராக இருக்க வேண்டுமெனில் அவர் தேசியத்தின் அங்கத்தினராக இருப்பது முன்நிபந்தனையாக உள்ளது. உலகளாவிய உரிமைகள் என்பது இனமயப்பட்ட (தேசியமயப்பட்ட) உரிமைகளாகவே இருந்தன. அவ்வாறே அவை தற்போது தொடருவும் செய்கின்றன. ஆகையால்தான், அரசை தேசியம் வென்று விட்டது என்று கூறும் ஹன்னா அரெண்ட் தேசிய சமூகத்தில் உறுப்பாக இல்லாதோருக்கும் குடியுரிமையற்றவர்களுக்கும் மனித உரிமைகள் பொருளற்றதாகவே உள்ளன என்கிறார்.

முதலாம் உலகப் போரின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கானோர் அரசற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள், ‘உரிமைகளுக்கான உரிமையற்றவர்கள்’ என்பதால் தேசிய சிறுபான்மையினராகக்கூட கருதப்படவில்லை. அதன்விளைவாக, ஒரு தேசிய-அரசில் உறுப்பாண்மை வகிப்பவர்கள் மட்டுமே மனிதாபிமானத்திற்கு உரித்தானவர்கள் என்கிற துயர்மிகு நிலைமை உண்டானது. அதாவது, ஒரு அரசியற் சமூகத்தின் – தேசியத்தின் – அங்கத்தினராக இருக்கப் பெறும்போதுமட்டுமே ஒருவரின் தனிமனித உரிமைகள் உறுதியளிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

“உரிமையற்றவர்களின் ஆகப்பெரிய பிரச்சினையென்பது அவர்களுக்கு சுதந்திரம், சட்டத்தின் முன்பு சமத்துவம், அடிப்படை வாழ்வாதாரம் போன்றவை மறுக்கப்படுகின்றன என்பதல்ல. மாறாக, அவர்கள் எந்த சமூகத்தினதும் அங்கத்தினராய் இல்லை என்பதுதான் ஆகப்பெரிய பிரச்சினை. அவர்கள் சட்டத்தின்முன்பு சமமாகக் கருதப்படுவதில்லையென்பதைவிட  அவர்களுக்கென்று சட்டமே இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைவிடவும் அவர்களை ஒடுக்குவதற்குக்கூட யாரும் விரும்பவில்லை என்று சொல்லலாம்.” என்று ஹன்னா அரெண்ட் எழுதுகிறார். மேலும், ஒரு தேசிய-அரசின் குடிமகனாக இருக்கும் பட்சத்தில்தான் சட்டப்பூர்வமான உரிமைகள் உறுதியளிக்கப்படும்; நடைமுறையில், குடியுரிமைக்கும் மனித உரிமைகளுக்குமான வித்தியாசத்தை நிறுவுவது சிரமம் என்கிறார். எனில், யதார்த்தத்தில் தேசிய-அரசுதான் உரிமைகளை உறுதியளிக்கும் முகமை (agency) என்பதால் ஒரு அரசின் குடிமகனாக/குடிமகளாக இல்லாதபோது குடியுரிமைகள் மட்டும் மறுக்கப்படுவதில்லை, சாராம்சமானதாகவும் மனிதனிலிருந்து பிரிக்கமுடியாததாகவும் கூறப்படும் மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

தேசிய-அரசுகளின் தருக்கப்படி சமூக, அரசியல் உரிமைகளுக்கு பாத்தியமானவராக இருக்க வேண்டுமெனில், ஒருவர் வெறுமனே உயிரியல் ரீதியான மனிதராக இருந்தால் மட்டும் போதாது; அவர், ஒரு அரசியற் சமூகத்தின் (political community) அங்கத்தினராக இருக்க வேண்டியுள்ளது. அதாவது, உரிமைகளுக்கு பாத்தியமான தன்னிலையாக இருப்பதானது ஒரு தேசிய-அரசினுள் ‘பூர்விகர்களாக’ வகைப்படுத்தப்பட்ட தேசியப் பெரும்பான்மையாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையாகவோ இருக்க வேண்டும்.  ஆகையால்தான், மனித உரிமைகளை விட அரசியற் சமூகத்தின் அங்கத்தினராவதற்கான உரிமை அனைவருக்கும் உறுதியளிக்கப்பட வேண்டும் என்றார் அரெண்ட். முதலாம் உலகப்போரின் விளைவாய் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த இலட்சக்கணக்கான சிறுபான்மையினர் மற்றும் ஏதிலிகளின் அன்றாட நிலவரத்தை கருத்திற்கொண்டே அரெண்ட் அவ்வாறு எழுதினார்.

ஸ்லாவொ ஜிசெக்

மனித உரிமை என்பது குடிமக்களின் உரிமையாக மட்டுமே நிலவுகிறதே தவிர, மனித உரிமைகள் பிரகடனம் சொல்வதுபோல அனைத்து மக்களுக்குமான உரிமைகளும் உறுதியளிக்கப்படுவதில்லை. ஆகையால்தான் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல், கருத்தியல் சார்பு, தேசிய அல்லது சமூகத் தோற்றம் ஆகியவற்றை கடந்த அரூபமான (abstract) மனிதனை முன்வைத்துப்பேசும் மனித உரிமைகளைக் காட்டிலும், ஒரு ஒருங்கமைக்கப்பட்ட அரசியற் சமூகத்தில் உறுப்பாண்மை வகிக்கும் உரிமையே அரசியல், சமூக மற்றும் குடியியல் உரிமைகளை உறுதி செய்யும் என்கிறார் ஹன்னா அரெண்ட். அவருடைய இக்கருத்தில் பிரச்சினைகள் இருக்கின்றன. எனினும், அவர் மனித உரிமைப் பிரகடனத்தின் உறுதியளிப்பை விமர்சிக்கும் கோணம் முக்கியமானது.

அரசியற் சமூகத்தில் உறுப்பாண்மை வகித்திடாதவர்கள், வெறுமனே உயிரியல் ரீதியான உடல்களுடைய மனித இனத்தவர்களாக மட்டுமே கருதப்படுவர். தேசிய-அரசு உறுதிசெய்யும் அரசியல் உரிமைகளோ சட்ட உரிமைகளோ இல்லாதவர்கள், சட்டத்தகுதிநிலை நீக்கப்பட்டு (legal status) இறுதியான இயல்நிலையான ‘மனித இனத்தின்’ அங்கத்தினர் என்கிற நிலைக்குத்தள்ளப்படுவர். “மனிதன், ஒரு மனிதனாக மட்டுமே – அதாவது, அவன் அரசியற் சமூகமற்று, குடியுரிமையற்று இருக்கும்போது, பிறர் அவனை சக மனிதனாக நடத்த வழிசெய்யும் கூறுகளை இழந்துவிடுகிறான்”. உதாரணமாக நாஸிக்களால், சட்டரீதியாக குடியுரிமை நீக்கப்பட்ட யூதர்களின் மனித நிலை அதிகரிக்கவில்லை; அவர்கள் மனிதர்களாகக்கூட அங்கீகரிக்கப்படாத நிலையையே அடைந்தனர். 

தேசிய-அரசுகளினுள், குடிமக்கள் (citizens) × மனித இனத்தவர் (human species) என்கிறபோது சந்தேகத்திற்கிடமில்லாமல் குடிமக்கள்தான் அதிக பாதுகாப்பான வாழ்நிலை கொண்டவர்கள். குடிமக்களாக இருக்கும் தேசிய சிறுபான்மையினருங்கூட இரண்டாம் நிலை குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள். அவ்வகையில், அரசற்றவர்களைவிட ஒருபடி மேலான நிலையில் தேசிய சிறுபான்மையினர் இருக்கிறார்களெனினும் மனித உரிமைகளைக்காட்டிலும் சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற ஏற்பாடுகள்தான் அவர்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்கின்றன.

உரிமைகளுக்கான உரிமையற்றவர்கள்

சிறிய திருட்டொன்றை செய்து சிறை சென்றால்தான் குறைந்தபட்சம் சட்டப் பாதுகாப்பாவது அவர்களுக்கு கிடைக்கும் என்று அரெண்ட் கூறுகிறார். அதாவது, ‘மனித இனம்’ எனும் நிலையிலிருந்து, சட்டத்தகுதிநிலையை உயர்த்துவதற்கு அவர்கள் ஒரு சிறிய திருட்டையாவது செய்யும்போதுதான் வெறும் மனிதநிலையிலிருந்து கொஞ்சமேனும் உயர்நிலையடைகிறார்கள் என்கிற அளவிலான அவலநிலையையே அவர் அவ்வாறு சொல்கிறார். குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பைப் பெறுவதற்கு முதற்படியாக அவர்கள் சட்டத்தை மீற வேண்டியுள்ளது. நாஸி ஆட்சியானது முதல் நடவடிக்கையாக யூதர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக ஆக்கியது. அதன்பின்னரே, அவர்களுடைய குடியுரிமையை இரத்து செய்தததையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். யூதர்களின் மீது வெளிப்படையான வன்முறையை கட்டவிழ்க்க அச்செயற்பாடு முன்நிபந்தனையாக இருந்தது. ஒருவருடைய குடியுரிமை பறிக்கப்படுகிறதெனில் அரசியல் வெளியில் அவருடைய இருப்பு இல்லாமல் ஆக்கப்படுகிறது என்றே அர்த்தம்.

தேசிய-அரசுகளால் ஆன பின்-காலனிய புதிய உலக ஒழுங்கில், மனித உரிமைகளை உறுதியளித்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தேசிய-அரசுகளிடத்தில் உள்ளது. அப்படியெனில், ஒரு தேசிய-அரசின் கீழ் உறுப்பாண்மை (membership) வகிக்காதவர் குறிப்பிட்ட தேசியத்தினுள் மட்டும் தன்னுடைய சமூக, குடியியல் உரிமைகளை (civil rights) இழக்கவில்லை. மாறாக, தன்னிலிருந்து பிரிக்கமுடியாததாக சொல்லப்படும் உலகளாவிய மனித உரிமைகளையும் இழக்கிறார். எனில், மனித உரிமைகள் சாராம்சமானவை அல்ல; அவை குறிப்பிட்ட அரசியற் சூழமைவில் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே – அதாவது, ‘உரிமைகளுக்கான உரிமையுடையவர்களுக்கு’ மட்டுமே – உரிமைகளை உறுதிப்படுத்துகின்றன.

பிறப்பிலிருந்து இயற்கையாகவே அனைத்து மனிதர்களும் பொதுவான சில உரிமைகளை கொண்டிருக்கிறோம் என்கிற கருத்தை மையமாகக்கொண்டுள்ள இப்பிரகடனம், மனித உரிமையை சாராம்சமானதாகவும், உலகளாவிய தன்மை வாய்ந்ததாகவும் நிறுவுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து மனிதர்களின் உலகளாவியதும் சாராம்சமானதுமான உரிமைகளை அரசுகள் உறுதியளிக்கும்படி கோருகிறது இப்பிரகடனம். தேசியத்தினுள் உறுப்பாண்மை இல்லாதபட்சத்தில் சர்வதேச அமைப்புகளாலும் அறிக்கைளாலும் மனித உரிமைகளை உறுதி செய்ய முடியாது என்பதையே வரலாறு நமக்குச் சொல்கிறது.

உலகளவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் சிறுபான்மையினருக்கான உரிமைகளும் இரண்டாம் பட்சமாகவே உள்ளது. ஏனெனில், அது தனிமனிதனைத்தான் மானுடநேயத்தின் அலகாகக் (unit) கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மதச் சுதந்திரக் கருத்துகள் ‘தனிமனிதனை’த்தான் அலகாக கொண்டு வளர்ந்து வந்தன. இக்கருத்தாக்கமே மனித உரிமை கருத்துச்சட்டகங்களுக்கான அடிக்கட்டுமானமாக அமைந்தது. அதுவே பின்னர் அரசியல் உரிமைகளின் கருத்துச்சட்டங்களையும் மாற்றியமைத்தது.தனிமனிதனை முன்னிலைப்படுத்திய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் பெரும்பாலான சிறுபான்மையினர் உரிமைகள் சார்ந்த முன்வைப்புகள் தவிர்க்கப்பட்டன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான புதிய உலக ஒழுங்கில், அமெரிக்கா மேலாதிக்கம் வாய்ந்த நாடாக மாறியதும் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த உரையாடலை அது மழுங்கடித்தது. அமெரிக்காவின் தேசியக் கருத்தியலானது சமூகம், கூட்டுறவு, குழு உரிமைகள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு ‘தனிமனிதனை’ மானுடநேயத்தின் அலகாக காத்திரமாக முன்வைத்தது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் உருவாக்கத்தில் முக்கியப்பங்காற்றிய எலினார் ரூஸ்வெல்ட் அப்பிரகடனம் ‘சிறுபான்மையினர்’ என்பதையே குறிப்பிடக் கூடாதென்று வாதிட்டார். ஐக்கிய நாடுகள் அவையின் முன்பு கருப்பின மக்களுக்கான அமைப்பு உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் இன சமத்துவத்திற்கான கோரிக்கையை முன்வைத்தபோது, ‘அமெரிக்க கண்டத்தில் சிறுபான்மையினர் பிரச்சினைகளே இல்லை.’ என்று பதிலளித்தார் ரூஸ்வெல்ட். உலகளாவிய மனித உரிமைகளுக்கான அடிப்படையாக தனிமனித சமத்துவம்தான் இருக்க வேண்டும் என்று மனித உரிமைப் பிரகடனத்தின் உருவாக்கத்தில் பங்காற்றிய அமெரிக்க பிரதிநிதிகளும் முன்வைத்தனர்.

இச்சூழலில், மனித உரிமைச் சொல்லாடலானது அரசற்றவர்களையும் ஏதிலிகளையும் அரசியல் வெளியில் கருணைக்கு பாத்தியமானவர்கள் என்கிற முகமையற்ற நிலையில் மட்டுமே இடப்படுத்துகிறது. அரசியல் வெளியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்கிற உண்மையை மறைக்கும் விதமாகவே கருணை, பச்சாதாபம் முதலானவற்றைக்கோரும் மனித உரிமைச் சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அருந்ததி ராய்

தேசிய-அரசுகளுக்குள் குறைந்தபட்ச சமூக வாழ்க்கை சாத்தியப்படுவற்கு அடிப்படையானது குடியுரிமையாகும்; மனித உரிமைகள் அல்ல. அரசுதான் உரிமைகளை நிர்மாணித்து அவற்றை செயற்படுத்துகிறது. எனவே, தேசியத்தில் அங்கம் வகிக்காதோருக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை என்கிற பட்சத்தில் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் உறிதியளிப்புகளும் இன்னபிற மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களும் பொருளற்றுப் போகின்றன.

மனித உரிமைகளின் மொழியென்பது, உள்ளார்ந்த இயல்பிலேயே, நிலவும் அசமத்துவமான நிலமைகளை ஏற்றுக்கொண்டு அதனிடமே சமத்துவத்தைக் கோருவதை முன்நிபந்தனையாகக் கொண்டது. இங்கு மனித உரிமைச் சொல்லாடல்கள் குறித்து அருந்ததி ராய் கூறுவது நினைவு கூரத் தக்கது. “மனித உரிமைகள் எனும் கருத்து என்னை சில சமயங்களில் தொந்தரவு செய்கிறது. ஏனெனில், அதனைக் காட்டிலும் உயர்வான கருத்தான நீதியை அது மறக்கடித்துள்ளது. மனித உரிமைகள் என்பது வெறுமனே உயிர்வாழ்வதற்கான உரிமைகள். ஆக, இருப்பதிலேயே குறைவான ஒன்றைக் கோருகிறோம். நம்முடைய அரசியற் தத்துவத்தில் நீதிக்கு வழங்க வேண்டிய இடத்தை மனித உரிமைகளுக்கு அளித்து வருகிறோம். மனித உரிமைகளுக்கு வரலாறு முக்கியமில்லை; ஆகவே நீதியும் அதற்கு முக்கியமில்லை.”

நிஷாந்த்

சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலையில் இரண்டாமாண்டு மாணவராக இருக்கிறார். தொடர்ந்து இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். அரசியல் தத்துவம், மானுடவியல், உளப்பகுப்பாய்வு ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர்.

1 Comment

  1. மனித உரிமைகள் குறித்த சொல்லாடலை எளிய மொழியில் விளக்கியுள்ளது நன்று.

உரையாடலுக்கு

Your email address will not be published.