அகழ்வு : கா.சிவா

அகழ்வு : கா.சிவா

உயரமான கோங்கு மரத்தின் உச்சியில் உட்கார ஏதுவான கிளையின் கவட்டையில் அமர்ந்து பெரிய பாதையை பார்த்துக் கொண்டிருந்தான் சந்தீப். சிறியதும் பெரியதுமான புங்கை, மலைப்பூவரசு, உசிலை, வாதாம்    மரங்களின் மேற்புறம் வெவ்வேறு வடிவிலான பச்சைத் திட்டுகளாகத் தெரிந்தது. சில திட்டுகளில் பழுத்த இலைகளினால் மஞ்சள்நிறத் தீற்றலும் தெரிந்தது. ராட்சத மனிதனாக இருந்தால் இந்த பசும் திட்டுகளின் மேலேயே காலை வைத்து நடக்கலாம் எனத் தோன்றியது. மனம் சொல்லிவிட முடியாத உணர்வெழுச்சியில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பு உருவான கணத்தை எண்ணும்போதெல்லாம் மின்னல்போல ஓர் அலை உடலுக்குள் பரவி வெளியேறும்.  குத்திட்டு நிற்கும் மயிர்க்கால்கள் இயல்படைய சில நிமிடங்கள் ஆகும். அந்தப் பரவச அனுபவத்தை ஒருநாளைக்கு ஒருதரம் மட்டும் மீட்டிக்கொண்டான். 

இவன் ஓட்டிவந்த ஆடுகள் ஒன்றோடு ஒன்றாக கோர்த்த மணிமாலைபோல நீண்டும் சுருங்கியும் மரங்களுக்கிடையே மேய்வதை அவ்வப்போது கவனித்துக் கொண்டான். இரண்டு மாதங்களாக யாரோ ஒருவருக்காக காத்துக் கொண்டிருக்கிறான். அவர் எப்படியிருப்பார், எப்போது வருவார் என்பது பற்றி எதுவும் தெளிவில்லை. ஆனால், தன் மனதில் கொந்தளித்து கொண்டிருப்பதை அவருக்கு கையளிக்க வேண்டும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.

ஒவ்வொரு நாளும் தனக்கு ஒதுக்கப்பட்ட நாற்பது ஆடுகளுடன், தரப்பட்ட மூன்று கோதுமை ரொட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்புவான். கோண்டுவுடன் இப்போது சேர்வதில்லை. எவ்விதமான சண்டையோ பிணக்கோ இன்றி இயல்பாக அந்த விலக்கம் ஏற்பட்டுவிட்டதை வியப்போடு எண்ணிக்கொள்வான். ஒருவரின் மனதிலுள்ள எண்ணத்தை உணரமுடியாதவர்களுடன் இணைந்து இருக்கமுடியாது. இருப்பதான பாவனைகள் கூட துறுத்தலாக காட்டிக் கொடுத்துவிடும்.

 சந்தீப்பின் அப்பா அம்மா இருவரும் ஔரங்காபாத்திற்கு அருகேயிருக்கும் கன்டகே கிராமத்தில் விவசாய கூலிகளாக இருக்கிறார்கள். இவன் ஐந்தாவது பிள்ளை. மூத்தவர்களில் மூவர் பெண்கள். இவனை செல்லமாக வளர்க்குமளவிற்கு இட வசதியோ உணவுப் பொருளோ அங்கு இல்லை. எனவே, பல ஊர்களுக்கு சென்று வரும் சாந்தாராமின் ஆலோசனைப்படி எட்டு வயதில் இவனை இந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். 

இவன் வந்தபோது முதலாளிக்கு ஐநூறு ஆடுகள் இருந்தன. இருநூறு ஆடுகளை விற்று அவரின் இரண்டு பெண்களுக்கு பெரிதாக திருமணங்களை முடித்தார். ஒரு பையனை படிப்பதற்கு பம்பாய்க்கு அனுப்பியுள்ளார். எல்லாம் இவனுடன் இருக்கும் கல்யாண்பாபு கூறித்தான் தெரியும். முதலாளியின் பெரிய வீட்டை தூரத்தில் நின்று பார்த்ததுதான். அங்கு நடந்த திருமணங்களுக்குக்கூட சென்றதில்லை. திருமணத்திற்கு மறுநாள், முதல்நாள் விருந்தில் எஞ்சிய இனிப்புகளை இவர்களுக்குத் தரும் ரொட்டியுடன் வைத்துக் கொடுப்பார்கள். அது ஒன்றுதான் பயன்.

இப்போது ஆடு மேய்ப்பதற்கு சந்தீப்போடு சேர்த்து ஆறுபேர் இருக்கிறார்கள். வயல்வெளியை ஒட்டியுள்ள உயரமான முள்வேலியின் அருகே இருக்கும் பரந்த கொல்லையில்தான் இவர்களுக்கும் ஆடுகளுக்குமான தங்குமிடம். ஒருபக்கம் மரக்கம்புகளை ஊன்றி மேலே வைக்கோல் பரப்பிய கொட்டகை உள்ளது. அதுதான் இவர்களுக்கான வசிப்பிடம். கழிப்பதற்கெல்லாம் காட்டுவெளிதான். எப்போதும் திறந்தவெளியிலேயே கிடக்கும் ஆடுகள் மழை பெய்யும்போது மட்டும் கொட்டகைக்குள் நுழைந்து இவர்களின் இடத்தை ஆக்கிரமிக்கும். ஆண்டுக்கு இருபது நாட்கள் இவர்கள் அதைப் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.  ஆடுகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்காத பெரிய மனம் படைத்தவர் முதலாளி. 

ஆறுபேரில் இவனும் கோன்டுவும் மட்டுமே சிறுவர்கள் என்பதால் சேர்ந்தே திரிவார்கள். பெரியவர்களைப் பற்றியும் ஊரிலுள்ள பெண்களைப் பற்றியும் தணிந்த குரலில் பேசிச் சிரிப்பார்கள். இந்தப் பருவத்தில் மட்டுமே பொறுப்பென்ற சுமை இல்லாத மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும் என உணர்ந்துள்ள பெரியவர்கள்  தங்கள் மனதில் தோன்றும் எரிச்சலை வெளிக்காட்டாமல் கடந்து செல்வார்கள்.

 அன்று எப்போதும்போல கோன்டுவும் சந்தீப்பும் ஆடுகளை ஒன்றாகவே ஓட்டிக் கொண்டு சென்றார்கள். காலையிலேயே வெயிலின் வெம்மையால் வழிந்த வியர்வையில் உடல் நசநசத்தது. மதியம் சூரியன் உச்சியிலிருந்து மேற்காக லேசாக இறங்கிய நேரத்தில் துணியில் சுற்றியிருந்த ரொட்டியை எடுத்து வெங்காயத்துடன் சேர்த்து தின்னத் தொடங்கினார்கள். அதை முடிக்கும் முன்பாக ஒரு மாயம்போல மேகங்கள் திரண்டு சூழ்ந்தன. வெளியெங்கும் ஒளியடங்கி மாலைபோல் தோற்றம் கொண்டது. பளிச்பளிச்சென மின்னல் தோன்றி மறைந்ததும் சட்சட்டென இடி இடிக்கத் தொடங்கியது.  ஆடுகள் மிரண்டு அலை பாய்ந்தன. ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு ஒரே இடத்தில் கூட முயன்றன. ஒன்றுக்குள் ஒன்று நுழைந்து ஒரே உடலாக மாற முயற்சித்தன. சற்று தூரத்தில் தனித்து நின்ற கோன்டுவின் ஒரு ஆடு மட்டும் திகைத்து தடுமாறியது. கோன்டு விசிலடித்து அழைத்தபோதும் முன்னே வராமல் நின்றது. அடுத்து எழுந்த பெரும் இடியோசையால் நடுங்கி திரும்பி ஓடத் தொடங்கியது. கோன்டு அவனைவிட வேகமாக ஓடக்கூடிய சந்தீப்பின் முகத்தைப் பாவமாகப் பார்த்தான்.

ஆடு காணாமல் போனால் அதற்கு பொறுப்பானவன், சவுக்கடியால் முதுகுத்தோல் உரிந்து ஏற்படும் ரணத்தினால் ஒரு மாதத்திற்கு வேதனையுடன் உலவ வேண்டியிருக்கும். அங்கிருப்பவற்றை பட்டிக்கு ஓட்டிச் செல்லுமாறு கோண்டு கூறிவிட்டு அந்த ஆடு ஓடிய திசையில் ஓடத் தொடங்கினான் சந்தீப்.

அடுத்தடுத்து மின்னலும் இடியும் தொடர்ந்து வந்து உடலை அதிரச் செய்தபோதும் இவன் ஆட்டைத் தொடர்ந்து சென்றான். கிறுக்குப் பிடித்ததைப்போல அந்த ஆடு ஓடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தூறல் விழ ஆரம்பித்தது. அது மெல்ல மெல்ல வலுத்து பெரும் துளிகளாக மாறியது. இதுவரை சென்றிடாத இடத்திற்கு ஆடு இவனை இழுத்துச் சென்றது. திரும்பிச் செல்ல வழி புலப்படுமா என ஐயம் ஏற்பட்டபோதும் ஆட்டைப்  பிடித்தபிறகு  அதைப் பற்றி எண்ணிக் கொள்ளலாம் என வேகத்தை அதிகரித்தான். நான்கு சிறு குழம்புகளால் தரையை மெல்லத் தொட்டு தாவிச் செல்லும் ஆட்டை, இவனது பெரிய பாதங்களை ஊன்றி ஓடிப் பிடிப்பது இயலாது. போதுமென்று அதுவாக ஓரிடத்தில் நின்றால்தான் இயலும். ஆடு நிற்குமிடத்தை தவறவிடக்கூடாதே என்பதற்காகவே ஓடினான். அது பெரிய சரிவில் இறங்கியது. எதிரே மொட்டைப் பாறையாக ஒரு கருத்தமலை  தெரிந்தது. கீழே தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது. இவன், இந்தப் பக்கம் ஆறு இருப்பதை இதுவரை  அறிந்ததில்லை. ஊரைவிட்டு பலமைல் தூரம் கடந்து இங்கே வரவேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. கல்யாண்பாபு கூட இந்த இடத்தைப்பற்றிக் கூறியதில்லை. அவரும் வந்திருக்கமாட்டார். 

  ஆடு ஆற்றைக் கடக்கும் ஒலி சன்னமாகக்  கேட்டது. சில வினாடிகளுக்குப் பிறகு இவனும் ஆற்றில் இறங்கினான். இடுப்பளவு தண்ணீர் இருந்தது. புது நீரின் குளுமை உடலை உலுக்கியது. பெரிதாக இழுக்காமல் நிதானமாகவே நீர் நகர்ந்தது. எதிர்ப்பக்கமாக மேலே ஏறும் ஆட்டின் மேல் கண் வைத்தபடியே ஆற்றைக் கடந்து அந்த மொட்டைப் பாறைமேல் ஏறினான். 

மேகங்கள் சற்றுப் பிரிந்ததால் மெல்லிய வெளிச்சம் பரவவும் இடம் துலக்கமாக தெரிந்தது. ஆடு சென்ற இடத்தை நோக்கியபோது உள்ளம் திகைத்தது. பிரமாண்டமான தூணுக்கருகில் அது நின்று கொண்டிருந்தது. கீழிருந்து பார்த்தபோது வெறும் கரும் பாறையெனத் தெரிந்தது, இப்போது பெரும் மாளிகையின் முகப்பென தோற்றம் கொண்டது. ஒருகணம் குழம்பினான். கனவா, அல்லது வெளிச்ச மாறுபாட்டால் கண்களுக்கு அப்படித் தெரிகிறதா. கண்களைக் லேசாகக் கசக்கிய பின் திரும்பவும் மெதுவாகத் திறந்து பார்த்தான். உள்ளுக்குள் அச்சமும் தோன்றியிருந்தது. கதைகளில் வருவதுபோது அரக்கர்களின் மாளிகையாக இருக்குமோ. அவர்கள் தங்கள் சக்தியால்தான் ஆட்டை இழுத்திருப்பார்களோ.. கூடவே நானும் வந்து மாட்டிக் கொண்டேனா..

 ஆடு மூச்சு வாங்கியபடி இவனைப் பார்த்தது. அது உள்ளே இழுக்கப்படவில்லை. அப்படி என்றால் இது அரக்கர்களின் மாயமல்ல என சமாதானம் செய்தபடி ஆட்டை நெருங்கி சட்டென பிடித்து தூக்கி இடுப்போடு அணைத்துக் கொண்டான். அது எந்த முரண்டும் பண்ணாமல் அமைதியாக இருந்தது. அதன் உடலின் வெம்மையையும் வேகமான இதயத் துடிப்பையும் இவனால் உணர முடிந்தது. 

மனதில் அச்சம் குறைந்ததால் நிதானமாக அவ்விடத்தைச் சுற்றி பார்வையை ஓட்டினான். மலையின் பாறையிலேயே, அதன் ஒரு பகுதியாக அந்தத் தூண் செதுக்கப்பட்டிருந்தது. சற்று கூர்ந்தபோது அதன்மேல் வடிக்கப்பட்ட மரம் விலங்குகள் போன்ற பலவிதமான வடிவங்களும் துலங்கின. இவன் மனம் ஒருவித சிலிர்ப்படைந்தது. இதுவரை காணாதவற்றைக் காண்பதற்கென்றே இந்த ஆடு அழைத்துக் கொண்டு வந்துள்ளது என தோன்றியபோது ஆட்டை இறுக்கிக் கொண்டான். அதுவும் அதை விரும்பி இயைந்து கொண்டது. பார்வையை விரித்தபோது இன்னொரு பக்கமும் இதே போன்ற தூண் நின்றதை கண்டான். அவற்றிற்கு இடையே  வாசல் இருக்கவேண்டிய இடத்தில் வைக்கோல்போர் போல மண்குவிந்திருந்தது. மொட்டைப் பாறையிலிருந்து பல காலமாக கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்திருக்கிறது. இப்போது மழைநீர்பட்டு அம்மண் குவியல் ஊறி நொதித்ததுபோல இருந்தது. கை வைத்தபோது மிகவும் இளகியிருந்ததை உணர்ந்தான். 

உள்ளெழுந்த ஏதோவொரு உந்துதலில் ஆட்டை இடது கையால் அணைத்தபடியே வலது கையால் மண் குவியலில் இவன் செல்லுமளவிற்கு சிறு குழிவை உண்டாக்கினான். வாயிலிலிருந்து பிரமாண்ட உருவம் ஏதேனும் வரக்கூடுமென்ற அச்சமும் நீடித்துக் கொண்டிருந்தது. இவன் ஏறிச் செல்வதற்கான தோது உருவானதும் மண்குவியலில் கால் பதித்து ஏறினான். கால்கள் சற்று புதைந்தாலும் மீட்டு அடுத்த அடி வைத்து மேலே ஏறி உள்பக்கம் இறங்கினான். வெளிச்சம் குறைவாக இருந்தபோதும் சில வினாடிகளில் கண்கள் பழகி அந்த வாசல் தெரிந்தது. தூண்கள் அளவிற்கே உயரமான வாசக்கால். அதுவும் பலவித செதுக்கல்களுடன் இருந்த பாறைதான். மலையைக் குடைந்து மாளிகையை உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்ட பிரமிப்புடன் வாசக்கால்மேல் கால் வைத்து உள்ளே இறங்கினான். உள்பக்கத் தரையில் ஈரமில்லை. இவனுடைய ஈரமான கால்களில்  பலகாலமாக புழங்காத அந்தத் தரையிலிருந்த தூசுகள் படிந்தபோது கூச்சம் எழுந்தது. எத்தனை காலம் இவன் பாதங்களுக்காக காத்திருந்தனவோ என்று ஏதோவொரு எண்ணம் தோன்றவும் உடல் சிலிர்த்து அடங்கியது.

  வாசலுக்கு உள்ளே குறைந்த வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான். இருபக்கமும் வரிசையாக தூண்கள் அமைந்த மிகப்பெரிய கூடமாக இருந்தது. இவர்களின் வசிப்பிடத்தைவிட இரண்டு மடங்கிருக்கும். ஐநூறு ஆடுகளை அடைக்கலாம் என எண்ணமெழுந்தது. திடீரென உள்ளே ஒளி தோன்றி மறைந்தது.  இவன் உள்ளம் துடிக்க புரியாமல் விழித்தான். பல பேர் உள்ளே இருப்பதாக பிரமை எழுந்தது. அவ்வொளி எங்கிருந்து வந்தது என குழம்பித் தவித்தபோது இடியோசை கேட்டது. மின்னலின் ஒலிதான் பிரதிபலித்துள்ளது என்று ஆசுவாசம் அடைந்தபோது பல்வேறு உருவங்களை கண்டோமே என்ற திடுக்கிடல் எஞ்சியது. அவர்களை எங்கே கண்டோம் என நிதானமாக மனதிற்குள் எண்ணிப் பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை. மின்னல் வெளிச்சத்தில் குழம்பியபோது பயத்தில் கற்பனை செய்திருப்பேனோ.. தெளிவாக உணரமுடியவில்லை... இங்கே எதுவும் சரியில்லை உடனே கிளம்பவேண்டும் என தீர்மானித்த கணம் மீண்டும் மின்னல் வெட்டியது. இப்போது அச்சம் ஏற்படவில்லை. கண்கள் திறந்தேயிருந்தன. ஆனாலும் திடுக்கிடல் எழுந்தது. 

பல நூறு மனிதர்கள் சுவரிலிருந்து இவனை நோக்கினார்கள். மின்னல் இருமுறை இணைந்து ஒளிர்ந்து மறைந்தது. அக்கணத்தில் தெரிந்ததை மனதில் ஓட்டிப் பார்த்தான். வெவ்வேறு விதமான மனிதர்கள். விதவிதமான அணிகலன்களும் புதுவிதமான உடைகளும் அணிந்து தனித்தனி உணர்வுகளுடன் சமைந்திருந்தார்கள். பேசியும், வியந்தும், களித்தும், வருந்தியும் அவர்கள் தனியுலகில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்த கரும்மொட்டை மலையினுள் அமைக்கப்பட்ட மாளிகையினுள் இவன் இதுவரை கண்டோ கேட்டோ இராத பெருவாழ்வு வாழ்கிறார்கள். எப்போதும் அழிவில்லாத வாழ்வு என்ற எண்ணம் எழுந்தபோது பெரும் பரவசத்தில் உள்ளம் பொங்கியது. இதை இப்போது நான் காண்கிறேன். இது கனவல்ல. உயிரோடு உணர்வோடு இருக்கும் நான் இன்னொரு விதமான எப்போதும் நீடிக்கும் வாழ்வைக் காண்கிறேன். கண்களில் நீர் சுரந்து சில சொட்டுகள் சிந்தின.

ஒரே சுவரில் மட்டும் பார்வையை பதித்திருந்தவன் அடுத்த மின்னல் வெட்டில் திரும்பிப் பார்த்தான். இதயம் ஒருகணம் நின்றுவிட்டதைப் போலிருந்தது. பெரும் அரற்றல் எழுந்தது. எல்லாச் சுவர்களிலும் மனிதர்கள் விலங்குகளும் பறவைகளும் மலர்களும் சூழ நிறைந்திருந்தார்கள். அவர்களின் விழிகள் ஒளிர்ந்தன. ஆடையும் கிரீடமும் பிரகாசித்தன. யானையும் எருமையும் தாக்கின தயங்கின. கொடிகளும் இலைகளும் சூழ மலர்கள் விதவிதமாய் வடிவம் கொண்டு மொட்டாய் மலராய் மிளிர்ந்தன. பார்க்கப் பார்க்க மனம் பொங்கிப் பொங்கி ஒரு கட்டத்தில் வெடித்துவிடும் அளவிற்கு விரிந்தது. அதன் பிரமாண்ட அழகையும் அவை தக்க வைத்திருக்கும் உயிர்மையும் தாள முடியாததாகியது. இன்னொரு உலகில் வாழ்கிறார்கள் என்ற உணர்வு ஏதோவொரு கணத்தில் அடைபட்டிருக்கிறார்கள் என மாறியது.
பெரும் துயரம் மனதை அறைய நெஞ்சு துடிக்க, கால்கள் துவள அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். ஐயோ ஐயோ என்று பெரும் கேவல் எழுந்தது. ஓர் தனியுலகத்தில் யாருக்கும் தெரியாமல் சிறைபட்டிருக்கிறார்கள். இப்போது அத்தனை பேரும் பெரும் துயருடன் இறைஞ்சுவதாகத் தோன்றியது. என்ன செய்வது… என்ன செய்வது… தன்னால் ஆவதென்ன என்று எண்ணியபோதே கடுங்காட்டில் தான் கைவிடப்பட்டு தனியனாய் இருப்பதை உணர்ந்தான். யாருடைய தோளிலாவது முகம் சாய்த்து அழவேண்டுமென பேரேக்கம் ஒரு தாகமென எழுந்தது. கையிலிருந்த ஆட்டை இறுக்கி அணைத்துக் கொண்டு அதன் முதுகில் முகம் புதைத்து விம்மினான். எத்தனை காலமாக இப்படி நிர்கதியாக இருக்கிறார்களோ தெரியவில்லையே.. எதுவும் இயலாத என்னை எதற்காக விதி இங்கே வரவழைத்தது என்று எண்ணமோடியது. சற்று தூரத்தில் பெரிய மனித உருவம் தென்பட்டதைக் கண்டதும் மீண்டுமொருமுறை திடுக்கிட்டான். அம்மனிதர் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.
தான் மட்டும் தனியனாக இல்லை என்று சிறிது ஆசுவாசம் ஏற்பட்டது. ஆட்டை அணைத்தபடியே வேகமாக எழுந்து ஓடி அவரருகில் சென்றான். மனிதர் அல்ல. சிலைதான். ஏமாற்றமடைந்தபோதும் மனம் துயரத்திலிருந்து சற்று வெளிவந்துவிட்டது. இவரை வணங்கும் மக்களோடு இவரும் சிறைபட்டிருக்கிறார். இவர் ஒரு மேய்ப்பர் போலும். இவரது ஆடுகள்தான் சுவரில் நிலை கொண்டிருக்கிறார்கள். சிலையின் அருகில் சென்றான். அப்போது நுழைந்த ஒளியில் முகத்தின் பிரகாசத்தை மிக அருகில் கண்டான். மின்னல் வெட்டுவது நின்று வெளிச்சமே இல்லாமலாகியது. அப்போதும் அவர் முகத்திலிருந்து ஒளி கசிந்து கொண்டிருந்தது. அது மனிதர்கள் மீதான, உலகத்தின் மீதான அன்பு அல்லது கருணை என்பதாக உணர்ந்தான். இத்தனை ஒளி கொண்டவரின்முன் மக்கள் தங்களையே அர்ப்பணிக்கத்தானே செய்வார்கள். இவர்களை மீட்க வேண்டும். மீட்டாக வேண்டும். என்ன செய்தாகினும் இவர்களை விடுவிப்பேன் என மனதில் உறுதி கொண்டான். அவர் தன் சம்மணமிட்ட கால்களின் வைத்திருந்த கைகளின் மேல் தனது வலது கையை வைத்தான். அவரது கைகள் தாமரை மலர் போன்ற குளுமையுடன் இருந்தது. விடுவிப்பேன். விடுவித்தே தீருவேன் என தன் செவிக்கு கேட்குமளவிற்கு கூறினான். அவர் முகத்தில் கசிந்த ஒளியின் பிரகாசம் சற்று அதிகரித்ததாகத் தோன்றியது.
****
ஜான் ஸ்மித் சுற்றிலும் கூர்ந்து பார்த்தபடியே குதிரையின் லகானைப் பிடித்திருந்தார். பின்னால் குதிரைகளில் பத்து வீரர்கள் வர, இரண்டு வண்டிகளும் வந்து கொண்டிருந்தன. பயணத்திற்கு தேவையான பொருட்களும் உணவும் நீரும் வண்டிகளில் இருந்தன. இவர் பயணித்த, முடிகள் குறைந்த சாம்பல்நிறக் குதிரைக்கு டேவிட் என இவர்தான் பெயரிட்டார். ஐந்து ஆண்டுகளாக இவரின் இணை பிரியாத் தோழனாக உடனிருக்கிறது. குதிரையின் மேலமர்ந்து செல்லும் போது, இந்தியர்கள் இந்து கடவுளர்களில் ஒருவராகவே தன்னையும் காண்பதாக எண்ணினார். அவர்களது பணிவும் மரியாதையும் குதிரையில் வருவதால்தான் என்றும் தோன்றிவிட்டது. மேலும், வண்டிகளில் செல்பவர்களைக் காணும்போது சற்று வயதானவர்களாகவோ நோயுற்றவர்களாகவோ தோற்றம் கொண்டுவிடுகிறார்கள் என்பது இவரது எண்ணம். எனவே, எவ்வளவு தூரமானாலும் இவருக்கு டேவிட்தான் துணை.

ஆண்டிற்கு இரண்டு மாதங்கள் மற்ற மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்வதென்ற கணக்கில் புலி வேட்டையாடுவதற்கு புறப்பட்டுவிடுவார். மற்ற வேளைகளில் இவரின் பணித்திறத்தினை கருத்தில் கொண்டு மதறாஸ் கவர்னராக இருக்கும் ஹக் எலியட் இவரது பயணத்திற்கு தடை போடுவதில்லை. பணிகளை ஊக்கத்துடன் செய்ய சிறிதளவு ஓய்வெடுப்பது அவசியம் என்பது அவரது நம்பிக்கை. எனவே, தேவையான வீரர்களை அழைத்துச் செல்லவும் ஸ்மித்திற்கு அனுமதியளித்திருந்தார். ஆனால் இந்தமுறை கேட்டபோது அனுமதி அளிக்கவில்லை. “வேட்டைக்குச் செல்வதற்கு நிர்வாகம் செலவளிக்க முடியாது” எனக் கூறினார். அடுத்த நிலையில் பணியாற்றும் வில்லியம்சனின் வேலையாகத்தான் இருக்கவேண்டும் எனப் புரிந்தது. இவ்விடுமுறையில் வில்லியம்சனை இவரது பதவிக்கு உயர்த்தக் கூடிய வாய்ப்பும் இருந்தது. வில்லியம்சனின் திறனின்மை பற்றி அறிந்துள்ளதால் அதைப் பற்றி இவர் பெரிதாக யோசிக்கவில்லை. ஒரு முடிவு செய்துவிட்டால் பின்னடி வைக்காத இவரது இயல்பினால் மட்டுமல்ல உள்ளுக்குள் தோன்றிய ஏதோவொரு தூண்டுதலும்தான் என் சொந்தப் பணத்தை செலவளித்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு கிளம்ப வைத்தது.

பயணம் தொடங்கி பதினைந்து நாட்களாகிவிட்டன. ஆந்திரா வழியாக நாக்பூரை அடைந்து அங்கிருந்து ரத்தன்பூர் செல்வது திட்டம். ஆங்காங்கே பரந்திருக்கும் காட்டில் அதிகளவில் மான்களையும் ஒருசில புலிகளையும் வேட்டையாடிவிட்டு புலிகள் அதிகளவில் இருக்கும் ரத்தன்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

 இவரது எட்டு வயதில், புலிகள்  தலைகளாகவே இவருக்கு முதலில் அறிமுகமாயின. இவரது தந்தை உதவியாளராக பணியாற்றிய பெரிய மாளிகையின் சுவரில் யானைகளின் தலைகளோடு புலிகளின் தலைகளும் இருந்தன. புலியின் உறுத்துப் பார்க்கும் விழிகளும் கூரிய பற்களும் கொண்ட தலையைப் பார்த்தபோது  சுவருக்கு பின்புறம் அவை உயிரோடு நிற்பதாகவே எண்ணி அஞ்சியிருக்கிறார்.  இவரது தந்தைதான் அச்சத்தைப் போக்கி இந்தியாவிற்குச் சென்றால் இவற்றை வேட்டையாடலாம், மாளிகைகளும் கட்டலாம் என இவருக்குள் ஆசையை விதைத்தார். அப்பா அவ்வாறு கூறியபோது இம்மாளிகையையே நான் வாங்குவேன் என அவரிடம் கூறி கையிலிருந்த சிறு கத்தியால் மாளிகைச் சுவரில் தன் பெயரை எழுதி கீழே தேதியையும் எழுதினான். பள்ளியில் குறிப்பேடுகளில் ஆசிரியர் கையொப்பமிடுவதைப் பார்த்து தானும் அதேபோல் கையொப்பமிட ஏற்பட்டிருந்த ஆவலை இப்படி நிறைவேற்றிக் கொண்டான். பிற்பாடு, மாளிகையை வாங்கிய பிறகு கையெழுத்திட்டிருந்த இடத்தில் மட்டும் தனி வண்ணமடித்திருந்தார் அப்பா.
    யானையின் மீது நாட்டம் கொள்ளாமல் புலியின் பக்கம் ஆர்வம் வந்தது ஏன் என ஸ்மித் பலமுறை யோசித்திருக்கிறார். சில முறை சுடப்பட்ட தங்கம் போல கனற்றும் அதன் மஞ்சள் நிறம் எனத் தோன்றும். பல சமயங்களில்,  செம்மஞ்சள் நிறத்தில் மிளிரும் அதன் விழிகள்தான் என்ற பதிலை சென்றடைவார். அந்தக் கேள்வி இதுவரை பதிலையடையாமலேயே உள்ளது. மீண்டும் மீண்டும் புலி வேட்டைக்குச் செல்வது அந்தக் கேள்விக்கான பதிலை அடைவதற்குத்தானோ.. ஒரு கேள்விக்கான விடையை வாழ்க்கை முழுக்கத் தேடித்தான் கண்டடைய வேண்டுமோ... இந்தியத் துறவிகளைப் பற்றி கேள்விப்பட்டபோது தோன்றிய ஏளனத்தை எண்ணிக் கொண்டார். இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.  இக்கேள்வியால் யாருக்கேனும் எந்தப் பயனாவது உள்ளதா.. அல்லது எனக்காவது உள்ளதா. அவசியமில்லாத ஒரு கேள்விக்கான விடை தேடி வாழ்க்கை முழுக்க இப்படி காட்டில் அலைய வேண்டுமா... அல்லது மனம் நானறியாத வேறெதையோ தேடிக்கொண்டிருக்கிறதா... என் கல்லறை வாசகம் என்னவாயிருக்கும்.. மதறாஸ் மாகாணப் படைத் தலைவர்களில் ஒருவன் என்றா... அல்லது புலியைத் தேடித் திரிந்தவன் என்றா.. அல்லது தன் அப்பா வேலை பார்த்த மாளிகையை வாங்கியவன் என்றா...

இதில் எந்த வாசகமுமே நிறைவைத் தரவில்லை. வேறு ஏதாவது இருந்தால் நன்றாகயிருக்கும். அதை உருவாக்க வேண்டுமா.. அல்லது தற்செயலாக நிகழுமா.. தற்செயல்கள் மேல் ஸ்மித்திற்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. எதுவுமே நடப்பதற்கு ஒருவரின் திட்டமிடல்தான் காரணம். அவரின் அந்தத் திட்டம் பிறருக்கு தெரியாமல் இருக்கிறது என்பதற்காக அதை தற்செயல் என்று கூறிவிடமுடியாது என்று உறுதியாகக் கூறுவார்.

  இருபுறமும் பெரிய மரங்கள் நிறைந்த பாதையில் தூசியை எழுப்பியபடி டேவிட் மிதமாக ஓடிக் கொண்டிருந்தான். இவரது மனதினை எப்படி அவன் உணர்கிறான் என்ற வியப்பு எப்போதுமே இவருக்கு இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும்போது துள்ளியபடியும், வருத்தத்தில் இருக்கும்போது மிக மெதுவாகவும், ஏதாவது யோசனையில் இருக்கும்போது அதற்கு இடையூறு செய்யாவண்ணம் நிதானமாகவும் செல்வதற்கு யார் இவனுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று யோசித்தபோது இடையில் சிறு கோவணம் மட்டும் கட்டிய கரிய சிறுவன், கையில் ஆடு மேய்க்கும் கம்புடன் இவரை நோக்கி கைகளை ஆட்டுவதைக் கண்டார். 

            ******

    தோளில் துப்பாக்கியுடன் குதிரையில் அமர்ந்து அங்குமிங்கும் பார்வையை அலையவிட்டபடி வந்தவரைக் கண்டதுமே இவர்தான் என சந்தீப்பின் உள்ளுணர்வு கூவியது. இந்த இரண்டு மாதங்களில் பலரைக் கண்டிருக்கிறான். வண்டியில் தோரனையாக அமர்ந்து நேராக தீர்க்கமாக பார்த்து சென்றவர்கள்,  குதிரையிலும் நடந்தும் பல சுமைகளை சுமந்து சென்றவர்கள், நீண்ட வாள்களையும் வலுவான தடிகளையும் ஏந்தியவர்கள் என பல வித மனிதர்கள். அவர்களைக் கண்டபோதெல்லாம் இவரில்லை இவர்களில்லை என்றே நிராகரித்த மனம் இவரைக் கண்டதும் இவர்தான் என தேர்ந்த காரணத்தை இவனால் உணரமுடியாதபோதும் மரத்திலிருந்து வேகமாக கீழே இறங்கினான். கையிலிருந்த கோலை வேகமாக ஆட்டியபடி அந்தப்படைக்கு முன் சென்றான். 

  துப்பாக்கியுடன் வேட்டைக்கு செல்பவரிடம் கூறுவதால் ஏதேனும் பயனிருக்குமா என ஐயம் எழுந்தபோதும் உள்ளுணர்வின் உந்துதலால் "அங்கே மலைக்குக் கீழே ஒரு மாளிகை உள்ளது.." என அந்த திசையை நோக்கி கையை காட்டிக் கூறினான். ஸ்மித்திற்கு இவன் பேசிய மொழி புரியாததால் உடன் வந்த துபாஷி அதை ஆங்கிலத்தில் கூறினான். 


    ஓர் ஆடு மேய்ப்பவன் பயமின்றி வெள்ளயரான தன்னிடம் பேச வந்ததே ஸ்மித்திற்கு வியப்பளித்தது. அதோடு அவன் கூறிய விசயம். ஏதேனும் பொறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

ஆனால் அவன் ஏதோவொரு பித்தால் ஆட்கொள்ளப்பட்டதைப் போல திரும்பத் திரும்பக் கூறினான். இவர் எதுவும் கூறாமல் தாமதிப்பதைக் கண்டதும் தான் கூறுவதை நம்பாமல் சென்றுவிடுவார்களோ என்ற பதட்டத்துடன் மேலும் வேகமாகக் கூறத் தொடங்கினான். யாரும் அறியாத ஒன்றை கண்டுவிட்டதையும் பிறரிடம் அதை தெரிவிக்க அவன் துடிப்பதையும் ஸ்மித் உணர்ந்தார். இத்தனை பேர் துப்பாக்கியோடு இருக்கும்போது பயமில்லாமல் வந்து கூறுகிறானென்றால் அது உண்மையாகவே இருக்கவேண்டும் எனத் தோன்றவும் சென்று பார்ப்பதென முடிவு செய்தார்.

இரண்டு வீரர்களை வண்டிகளுக்கு பாதுகாப்பாகவும் ஒரு வீரனை ஆடுகளை பார்த்துக்கொள்ளவும் நியமித்தார். சந்தீப்பை அவனது மொழி தெரிந்த வீரரின் குதிரையிலேயே ஏற்றிக்கொள்ளச் சொன்னார். இதுவரை குதிரையில் ஏறியிராத சந்தீப் தயங்கினான். கரிய நிறத்திலிருந்த அவ்வீரனும் அழைத்தபின்தான் லேசாக தைரியம் வந்தது. சந்தீப்பின் சிறிய கைகளைப் பிடித்து தூக்கிய அவ்வீரன், மேலேற்றி தனக்கு முன்பாக இருத்திக் கொண்டான். ஸ்மித் சைகை காட்டியதும் சந்தீப் கைகாட்டிய திசையில் செல்ல ஆரம்பித்தனர்.

  ஸ்மித்துதான் முன்னால் சென்றார். குதிரையின் துள்ளல் ஓட்டத்தில் அந்த வீரரின்மேல் அமர்ந்திருப்பது சந்தீப்பிற்கு சிரமமாக இருந்தது. அதுவும் ஏற்ற இறக்கங்களில் விழுந்துவிடுவோமோ என மிகவும் பயமாகயிருந்தது. அந்நிலையிலும் ஸ்மித்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மரங்களடர்ந்த காட்டைக் கடந்து ஆற்றின் அருகில் நின்று மலையைப் பார்த்தபோதே அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டான். சற்று தூரமென்பதால் தெளிவில்லாமல் தெரிந்த தூண்களை அவர் கண்டுவிட்டார் என்பதை உணர்ந்தான். இவனுக்கு நம்பிக்கை தோன்றியது. 

 சந்தீப்பின் இதயம் வேகமாக துடிக்க சரிவில் இறங்கி ஆற்றைக் கடந்து மேலேறினார்கள். சந்தீப் இருந்த குதிரை மேலேறுவதற்கு முன்பே சென்று நின்ற ஸ்மித் அத்தூண்களைக் கண்டு திகைப்படைந்திருந்தார். இந்தியாவில் பழமையான அறிவென ஒன்றுமில்லை. இந்தியர்களுக்கு வெள்ளையர்கள் வந்துதான் சிறிது சிறிதாக அறிவு புகட்டுகிறார்கள் என்பதே ஸ்மித்தின் எண்ணமாக இருந்தது. அந்த எண்ணம் எத்தனை தவறானது என்பதை உணர்ந்ததுதான் அவரது திகைப்பிற்கு முதன்மையான காரணம். 

மலையை வெறுமனே குடைவது சாதாரணமானதுதான். ஆனால் இத்தனை கலைநயத்துடன் செதுக்குவதற்கு எத்தனை நுண்ணிய அறிவும் கணிதத்திறனும் இருந்திருக்க வேண்டும். ஸ்மித்தின் இல்லத்தின் வரவேற்பறையில் வெண் பளிங்கினால் ஆன தேவதைகளின் சிலைகள் உள்ளன. இவருக்கு முன்னால் அவ்வில்லத்தில் இருந்தவர்களில் யாரோ வாங்கி வைத்தது. எப்போதாவது மனதில் குழப்பமோ கவலையோ தோன்றும்போது அச்சிலைகளையே பார்த்துக் கொண்டிருப்பார். மென்மை குளுமை நேர்த்தி எல்லாம் ஒத்திசைந்த பேரழகு. சிறிது நேரத்திலேயே மனம் லேசாகிவிடும். மிகச் சிறிய சிலையே மனநிலையை மாற்றுவதை வியப்புடன் எண்ணிக் கொள்வார். இங்கே இத்தனை பிரமாண்டமாக இத்தூண்களை வடித்திருக்கிறார்களே என்று பிரமிப்பு தோன்றியது. அப்போதுதான் சந்தீப் மாளிகை எனக் கூறியது நினைவிற்கு வந்து திரும்பிப் பார்த்தார்.

அவர் திரும்புவதை எதிர்பார்த்திருந்த சந்தீப் உள்புறத்தை சுட்டினான். அப்போதுதான் இன்னொரு தூணையும் இடையிலிருந்த மணல் திட்டையும் கவனித்தார். உடனே காலை லேசாகத் தட்ட டேவிட் சட்டென ஒரே எட்டில் மணல் திட்டின் மேலேறி அடுத்த தாவில் வாசற்படிக்கருகில் இறங்கியது. உள்ளே வெளிச்சம் குறைவாக இருப்பதைக் கண்டு ஒரு கணம் தயங்கியது. ஸ்மித் ஊக்கவும் வாசற்படியைத் தாண்டி உள்ளே சென்றது. இடது புற இடுப்பில் தொங்கவிட்டிருந்த டார்ச் விளக்கை எடுத்த ஸ்மித் அதனை உயிர்ப்பித்து சுவரின் மீது ஒளியை பாய்ச்சினார்.

பின்னாலேயே வந்த குதிரையிலிருந்த சந்தீப் சுவரைப் பார்க்காமல் ஸ்மித் முகத்தையே கவனித்தான். ஒவ்வொரு சுவராக பார்க்கப் பார்க்க பரவசம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுவதையும் உடல் சிலிர்ப்பில் உலுக்கிக் கொள்வதையும் உள்ளுக்குள் ஒரு கொந்தளிப்பு உருவாவதையும் கண்டான். அதே சமயம் இவனிடம் இருந்த கொந்தளிப்பு மெதுவாக குறைவதாகவும் தோன்றியது. ஒளியையும் குதிரையையும் நகர்த்தி நகர்த்தி ஓவியங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஓரிடத்திலிருந்து ஒட்டிக் கொண்ட பார்வையை பிரயத்தனம் செய்து விலக்கி அடுத்த இடத்துக் கொண்டு சென்றார். இங்கேயே காலமெல்லாம் இருக்க விழைவதான தவிப்பு மிகுந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு   "இது செதஞ்சிறாம எல்லோரும் பாக்குற மாதிரி செய்யனும்..." என சந்தீப் சொன்னான். அவர் கவனிக்காததால் திரும்பவும் கூறினான்.  திரும்பியவர் புரியாமல் பார்த்தபோது மீண்டுமொரு முறை இறைஞ்சலாகக் கேட்டான்.  மொழிபெயர்க்க முயன்றவரை தடுத்த ஸ்மித், 

“கண்டிப்பா செய்யறேன்..” என்றார். ஒருகணம் யோசித்து, தன் இடது பக்க இடுப்பில் செருகியிருந்த குறுவாளை எடுத்து அருகிலிருந்த தூணில் தன் பெயரையும் வருடத்தையும் பொறித்து “சத்தியமா செய்வேன்” என்றார்.

அதன்பிறகுதான் சந்தீப் சுவரில் இருந்த மனிதர்களின் பக்கம் பார்வையைத் திருப்பினான். அவர்களின் முகங்களில்  நம்பிக்கையின் சுவடைக் கண்டதும் உள்ளிருந்த கொந்தளிப்பு முழுவதுமாக நீங்கியது.

000 
      
கா. சிவா

விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ்விக்கியில்

1 Comment

  1. அகழ்வு படித்தேன் ,மனதை பித்து பிடிக்க வைக்கும் அபரமான கதை..
    அந்த சிறுவன் குகைக்குள் நுழையும் போது ,அவனுடன் சேர்ந்து ஒரு கனவுலகுக்குள் நுழைவது போன்ற பிரமை ஏற்பட்டது,அங்கு அவன் காணும் காட்சிகளால் ,அவனுக்கு ஏற்படும் பித்து நிலையை எழுதியிருந்த விதம் அபாரம் ,நானும் கொஞ்சநேரம் அந்த பித்தில் திளைத்தேன்..
    அற்புதமான கதை

உரையாடலுக்கு

Your email address will not be published.