காணாமல் போனவர்கள் : ஜீவன் பென்னி

காணாமல் போனவர்கள் : ஜீவன் பென்னி

அவசரநிலை நெருக்கடிக் காலம் முடிவடைந்திருந்தப் பருவம் – புனே – 1977.

நான் – அழகான, முனைகள் கத்தரிக்கப்பட்டிருந்தத் தனியானச் சொற்களைக் கைவிடத் துணிந்திருந்தேன். கனவுகளின் மொழி படர்ந்தவாறு அலங்காரத் தொனியில் நானெழுதியிருந்த – முடித்திடாத – நிறைய்யக் கதைகளை ஒவ்வொன்றாகச் சாலையில் எறிந்தேன். அவை கவனிப்பாரின்றி அங்கேயேக் கிடந்தன. அவற்றில் எந்த பொருளும் இல்லையென்று உணர்ந்திருந்தேன். நான் வாழ்ந்து வரும் திசைகளைக் கூர்ந்து பார்த்தேன் – அதிகாரங்களின் கரும்புகை மடிந்து கிடந்த அப்பாதைகளில், கைவிடப்பட்டவர்களின் வெட்டப்பட்ட எண்ணற்ற வாழ்வுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்வுகளினூடாகவும் ஊடுருவி அதற்குள் பதுங்கிக்கிடக்கும் கதைகளினுள்ளிருக்கும் மனித வாழ்வுகளின் சிக்கல்களையும், போதாமைகளையும், ஒழுங்கின்மைகளின் வடிவங்களையும் அப்படியே கதைகளாக்கும் ஒரு வடிவத்தைத் தேடத்துவங்கியிருந்தேன். உலகில் சொற்களை உருவாக்குபவனுக்குள் இருந்திடும் தனிமையுணர்வும், சிறுபிறழ்வும், பெரும் மகிழ்ச்சிகளேதுமற்றப் பொருண்மையான மனமும் எனக்குள்ளும் அப்போது படர்ந்திருந்தது.

இந்த அவசரநிலை காலத்தின் முடிவிற்குப் பிறகு, மனித முகங்கள் படர்ந்திருக்கும் சுவரொட்டிகள் இந்தக் காலத்தின் நீண்ட இருண்மைகளை உலகிற்குச் சொல்கின்றன. அவற்றைப் பகிர்வதற்கான ஒரு கருவியாகத் தனியான இந்தக் கதைகளை வடிவமைத்திட முயன்று கொண்டிருந்தேன். எனது கைகளுக்குள் அவர்கள் பகிர்ந்தளித்திருந்த அந்தத் துயரங்கள், ஒரு மேகம் போலத் தவழ்ந்து என்னுடனேப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இருப்பு என்னை ஏதோவொரு இனம் புரிந்திடாத அமைதியுடன் ஆழமாகப் பிணைத்திருந்தது. நான் சிறிது சிறிதாக எனது சமநிலையை இழந்து கணக்கற்ற முறைகள் மணலில் சரிந்து விழுந்து கொண்டிருந்தேன். எனது ஒவ்வொரு கதையின் முடிவிலும் இப்பொழுதெல்லாம் இப்படித்தான் நான் கடைசியாக முடிந்தும் போகிறேன்.

காணாமல் போன இருவர் – 1.

சுவரொட்டிகளில் முழித்துக் கொண்டிருந்தவன், ஒரு புதிரைப் போல எனக்குள் தொடர்ச்சியாக அசைந்து கொண்டிருந்தான். எனக்கு அவனைக் கொஞ்சமாகத் தெரியும். நகரில் வாழ்ந்து கொண்டிருந்த எண்ணற்ற உதிரிகளின் ஒருவகைக் கணக்கில், கடைசியானப் பிரிவில் வரக்கூடியவன் தானவன். மனிதர்களின் வருகைகள் திடீரெனத் தோன்றியிருந்தது போலத் தான், நெருக்கடிக்காலச் சிக்கலுக்குப் பிறகு – நகரம் தன்னை மீளாகத் தகவமைத்திருந்தது. நகரின் தெருக்களில் மனித நடமாட்டங்களும், நெருக்கங்களும் சற்று அதிகரித்திருந்தன. அந்த ஒவிய முகத்தின் வடிவத்தை எங்கோ, எப்பொழுதோ நன்றாகப் பார்த்து உணர்ந்திருந்ததானத் தன்மை எனக்குள்ளாகத் தீவிரமாக எழுந்து கொண்டிருந்தது. அவனது பிறந்த தின விவரமும், காணாமல் போன நாளும் மிகவும் தெளிவாக எழுதப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டியில் வேறெந்தத் தகவல்களுமில்லாமலிருந்தது எனக்கு மிகவும் வித்தியாசமாகப் பட்டது. எனது ஞாபகத்தின் அடுக்கைத் திறந்து பரவிக்கிடந்த ஒவ்வொன்றினூடாக நிதானமாக அவசரமற்றுப் பயணித்தேன். ஒரு பிரம்மாண்டமானச் சாலை ஓவியத்தின் நுட்பமான உட்புறத்திலிருந்து பல வண்ணங்களின் கலங்களாக அவனதுருவம் எனது நினைவில் ஊடாடியது. மழை நிரம்பிய அந்த நாளில் அவனது ஓவியம் சாலையில் கரைந்து போய்க்கொண்டிருந்ததை அவன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதே கண்களை – சுவரொட்டியில் அசைவற்றிருந்த அவனது கண்களை – மூன்று நாட்களுக்கு முன்பிருந்து அந்தச் சாலையில் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். அதன் அமைதியும், பழுப்பு நிறமாக மாறிக்கிடந்த உட்புறமும், பற்றற்றத் தன்மையும் அவன் மீதான நெருக்கத்தை மிக இயல்பாக எனக்குள்ளாக உருவாக்கியிருந்தது. இந்த உலகை வெறுமையில் வெறித்திடும் ஆர்வமற்றத் தன்மையை அந்த மழைநாளிலிருந்து தான் நான் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். வாழ்வின் சுவாரசியமான ஒரு புள்ளிக் கரைந்து போகும் கணத்தை வேடிக்கை பார்ப்பது எத்தனை நிலையானது! ஒரு நெருக்கடியற்ற வாழ்வை அவன் எங்கிருந்து துவங்கியிருப்பான்? எனச் சதா யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தொடர்பு விலாசமேதுமற்ற அந்தச் சுவரொட்டியின் ஓவியத்தோடு மிக ரகசியமாக உரையாடலைத் துவங்கியிருந்தேன். எனது கைவசமிருக்கும் தனித்தக் கச்சிதமானச் சொற்களின் கேள்விகளுக்குச் சிலமுறைகள் பதிலற்ற அமைதியிலிருந்த அவன் – தொடர்ச்சியான எனது முயற்சிகளால் என்னை முழுவதுமாக நம்பி நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

அவசரகால நெருக்கடிகளின் அவல நிலைக்குப் பின்பாக இந்திய நகரங்களின் அநேகச் சுவர்களில், ‘காணாமல் போனவருக்கான’ – ஒரு புதிய இனம் போல - நிறைய்யச் சுவரொட்டிகள் தொடர்ச்சியாக அளவின்றி முளைத்திருந்தன. ஒவ்வொன்றிற்குள்ளும் ஒவ்வொரு கதையிருந்தது. அவை உண்மைகள் தோய்ந்திருந்தக் கதைகள். ஆனால், அரசின் பொய்மைகளின் சாதுர்யங்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தக் கருணையற்ற நிகழ்வுகளால் அவை ஒன்றுடனொன்று இறுக்கமாகப் பிண்ணப்பட்டிருந்தன. அதிகாரத்தின் கோர முனையை நேருக்கு நேராக எதிர் கொண்ட நிறைய்ய மனிதர்கள் ‘காணாமல் போனவருக்கான அறிவிப்புகளால்’ அந்தச் சுவரொட்டிகளுக்குள் தீர்மானமாக வந்திருந்தனர். ஒவ்வொரு முகத்திலும் அரசுக்கெதிரான ஒவ்வொரு கோசங்கள் படிந்திருந்தன. அம்மனிதர்களின் முடிவுகள் எனக்கும், உங்களுக்கும் நன்றாகத் தெரிந்தவை தான். ஆனால் இந்த மனிதன் அந்த வகைமைகளுக்குள் வருபவனல்ல. அவனொரு சாதாரணச் சுதேசி. நகரின் சாலை ஓரங்களிலும், கூட்டமான நடைமேடைத் தரைகளிலும் ஓவியங்கள் வரைந்துத் தீர்த்துக் கொண்டிருந்தவன். அவனது இரைப்பையின் இடைவிடாதக் கனவுகளை மட்டுமே வாழ்வில் பின்பற்றியவன். சேகரமாகும் சில நாணயங்களில், பார்வையாளர்களின் அழுத்தமான ரசிப்புகளில் மிக எளிதாக மகிழ்ச்சியடைந்து, பரவசம் அடைந்து விடக்கூடியவன். புரட்சிகள் குறித்துச் சிந்திக்காமல் இருப்பதற்காகத் தனது சிறிய மூளையை ஒரு காகிதத்தில் பொட்டலம் போலக் கட்டி அந்த நகரின் மிக முக்கியமானச் சாலையில் எறிந்திருந்ததை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மனிதன், உண்மையிலேயே இந்த நகரிலிருந்து காணாமல் போயிருந்த எண்ணற்றவர்களில் ஒருவன் தான். அரசு, அதிகாரம், தேர்தல், கட்சி, தலைவர்கள், வெற்றிகள், தோல்விகள், நீதிமன்றத் தடையாணைகள், ஊரடங்கு உத்தரவுகள், கண்காணிப்புகள், தணிக்கைகள், புரட்சிகர கருத்துக்கள், எதிர் கருத்துக்கள், பதுங்கல்கள், சிறைகள், துப்பாக்கிச் சூடுகள், நிலங்கள், மதங்கள், மொழிகள், சாதிகள் என இவை போன்ற எந்தவொன்றின் மீதும் சிறிதும் ஆர்வம் கொண்டவனல்ல அவன். மேலும் கடைசித் தேர்தலில் அந்த அம்மையாருக்கு எதிராக அவன் வாக்களிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அந்த வாக்குச் சாவடியின் வரிசையில் கூட அவன் நின்றிருக்கவில்லை. அவன் காணாமல் போயிருப்பது குறித்து எனக்கு மிகவும் ஆச்சர்யமாகத் தானிருந்தது. ஏதேனும் பூங்காக்களின் அசுத்தமான ஓரங்களிலோ அல்லது சாலைகளின் அழுக்கடைந்த ஒதுக்குப் புறங்களிலோ அவன், தனது மீதமான வாழ்வின் குடிலைப் பரப்பித் தனதுயிரைக் காப்பாற்றிக்கொண்டிருப்பான் என்பதாகத் தான் எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. அதனால் தான் அவனது வாழ்வின் கடைசித் தருணங்களை, அவனது வாயிலிருந்தேக் கேட்க நான் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தேன்.  

“நீ கடைசியாக எங்கிருந்தாய்..?”
“நான் எனது வயிற்றின் தீவிரமானக் கனவிற்காக, அந்தச் சாலையின் ஓரங்களில் ஒரு ரொட்டித் துண்டைத் தேடிக்கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டம் அது விரைவில் கிடைக்கவில்லை.”
“உன்னிடம் அரசுக்கெதிரான ஏதேனும் பொருட்களோ, சமிக்கைகளோ அல்லது சொற்களோ இருந்தனவா…?”
“இல்லை, நிச்சயமாகயில்லை, என்னிடம் காய்ந்திருந்தக் கலர் சுண்ணாம்புக் கட்டிகள் சிலவும், நிரந்தரமானப் பசியும் மட்டுமே இருந்தன. ஒரு வேளை அவசரநிலை காலத்தின் தீவிரக் கண்காணிப்பு வரையறைக்குள் அவையும் சேர்க்கப்பட்டிருந்தனவா..? எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை எனது கலைந்த இந்த இருப்பு – அதிகாரத்திற்கு எதிரானதாக அரசுக்குத் தோன்றியிருக்கலாம்!?.”
“பசி பெரும் கொடுமையானதல்லவா…?”
“அதிகாரம், பசியை மிக நுட்பமாக அவ்வப்போது எல்லோருக்கும் நினைவு படுத்துகிறது. ஏனெனில் எளிய மக்களை அடிமையாக்குவதற்கு அதிகாரத்திடமிருக்கும் மோசமான கருவி பசி தான். எனது சிறிய வாழ்வில் நானதை உணர்ந்திருக்கிறேன். எனது மகிழ்ச்சிகள் சில ரொட்டித் துண்டுகளில் உருவாகிக்கொள்கின்றன. எப்படி இந்தத் தேசத்தின் தலைவருக்கு இந்த அவசரநிலைப் பிரகடணம் மனநிறைவையும், ஒருவித பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறதோ அதைப் போல.” – ஒரு எள்ளல் தொனியில் சிறிய சிரிப்பை வெளிக்காட்டினான்.
“நீங்கள் அரசின் இந்த அதிகாரத் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிடாதவர் என்று நினைத்திருந்தேன்.! மிக எளிமையாக ஆனால் கச்சிதமாக இந்த விசயத்தை எனக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்.”
“நான் வரைந்து கொண்டிருந்தச் சாலை ஒவியங்களின் தொடர்ச்சி தான் இந்த சொற்கள், எனக்கு நறுக்கப்பட்டச் சொற்களைத் தேடியெடுத்து உங்களைப் போலக் கதைகளெதுவும் சொல்லத் தெரியாது”.
“என்னை உங்களுக்குத் தெரியுமா..?”
“நன்றாகத் தெரியும், அழகியச் சொற்களை உருவாக்கி நிகழ்வுகளைக் கதைகளாக மாற்றிக் கொண்டிருப்பவன் நீ.. ஒரு பருவத்தில் எனது கைகளுக்குள் வழங்கப்பட்ட உணவுப் பொட்டலத்தின் காகிதத்தில் உனது கதையின் ஒரு பாதியைப் படித்து விட்டு, அந்த மோகத்தில் அதன் மீதிக் கதையைத் தேடி நிறைய்ய நாட்கள் அலைந்து திரிந்திருக்கிறேன். ஆனால் ஒரு இடைவெளிக்குள்ளாகவே, அந்த மீதமானக் கதை தான் எனக்கான இந்த வாழ்வாகியிருக்கிறதோ என்றுணர்ந்து ஆச்சர்யப்பட்டு மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறேன்.”
“நிச்சயமாக, கதைகள் ஒரு போதும் ஒரு புள்ளியில் தொடங்குவதுமில்லை – ஒரு பருவத்தில் முடிவதுமில்லை. நாமதன் வெவ்வேறு வகையான இணைப்புகளில், சந்திப்புகளில், வெவ்வேறு முனைகளிலிருந்தும், சாத்தியங்களிலிருந்தும் அதன் ஏதேனுமொரு திசையில் கலந்து, பிறகு ஒரு திசையில் இயல்பாக வெளியேறிக் கொள்கிறோம்.”
“தேர்ந்தச் சொற்களைக் கொண்டு நீங்கள் எழுதும் கச்சிதமான வரிகளைப் போலானது மட்டுமல்ல வாழ்க்கை, அது ஒழுங்கின்மையின் தீவிரத் தன்மை கொண்டது, நிறைய்ய அறுக்கப்பட்டத் தருணங்களையும், கோரமான முகங்களையும் உள்ளடக்கியது. நல்லது, எனக்குத் தனியாக எந்தக் கதையுமில்லை, உங்கள் தத்துவப்படி – இந்த நிலத்தில் கடைசிநிலை மக்களின் ஒன்று சேர்ந்தக் கதைப்பரப்பிற்குள்ளாக நான் வருகிறேன். அந்தக் கதையிலிருந்து ஒரு நாள் காணாமலும் போயிருக்கிறேன். அவ்வளவு தான்.” சற்று உணர்ச்சிகள் மேலெழுந்தவாறு அவனது பதில் அமைந்திருந்தது. நான் அவனைச் சாந்தப்படுத்த கேள்விகளின் திசையை மாற்றினேன்.
“உங்கள் கண்களில் பழுப்பு எப்போது தோன்றியது.”
“உலகை வெறிப்பதை ஒரு தவம் போலச் செய்யத்துவங்கிய போதுதான், நானெனது கண்களை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத்துவங்கியிருந்தேன். இந்த நகரின் இரக்கமற்றத் தன்மை எனது கண்களை பழுப்பு நிறத்தில் மாற்றி விட்டன.”
“இப்போது வரைவதற்கு முடிகின்றதா..?”
“எனக்கு ஒரு பாதி உலகம் மட்டும் தான் தெரிகிறது. மீதியில் இருள் படர்ந்திருக்கிறது. கடைசியாக நான் வரைந்திருந்தச் சில ஓவியங்களில் தெளிவின்மை அதிகரித்து இருந்ததாக எனது நண்பர் சொல்லியிருந்தார். உன்னை அறிந்து கொண்டதைப் போலத் தான் அவரது ஓவியத்தையும் ஒரு பிரபலப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். எனது பெயர் கொண்ட அவரும் ஓவியர் தான், அரசுக்கெதிரானப் புரட்சி ஓவியங்களைத் தீட்டுவதில் அவர் வல்லவர். எப்போதும் சிந்தனைகள் பெருகிக் கிடக்கும், சலனமற்றச் சற்றே இறுகிய அவரது முகத்தில் சிறிய சிரிப்பொன்றைச் சேர்த்து நான் தீட்டிக் கொடுத்த ஒவியத்தை ஆச்சர்யத்துடன் அவர் வாங்கிச் சென்றார். அதற்குப் பிறகு நீண்ட நாட்களாக அவரை பார்க்க முடியவில்லை. கடைசியாக நான் அவரைப் பார்த்த போது எனக்கு முன்பாக ஓவியங்களின் சுருள்களுடன் அவசரகதியில் ஓடிக்கொண்டிருந்தார்.”
“உன்னைத் தேடிக் கொண்டிருப்பவர்களை நீ அறிவாயா..? “
“உறுதியாகத் தெரியும், ஒடிசலான மனைவியும், நான்கு வயது நிரம்பியிருந்த மகளுமானது எனது சிறு குடும்பம். அவர்கள் என் மீது அளவற்ற அன்பைப் பொழிந்து கொண்டிருந்தார்கள். எனது இயலாமைகள் குறித்து அவர்களுக்குத் தெரியும், என்னை அதனுடனே அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அரசுக்கு அது குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது, அதன் அதிகாரத்தின் தடித்த முள்விரிப்பை எங்களுக்கு மேலாக விரித்து வைத்திருந்ததால் எங்களின் ஒரு துண்டு வாழ்வைப் பற்றியும், அதன் இனிமைகள் குறித்தும் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. நாங்கள் அதிகாரத்தைத் தாங்கி நிற்கும் பல்வேறு அடுக்குகளில் மிகக் கீழாகயிருந்தோம். அதாவது, உயிருடனிருக்கும் போதே கொஞ்சம் பூமிக்கடியிலுமாக..”
“நீ இப்போது அவர்களிடம் திரும்பலாம் தானே…!”
“எனக்கு வழிகளும், உறவுகளும் மறந்துவிடவில்லை. மிகச் சரியாக நானென் குடிசையை அடையாளம் கண்டுபிடித்துச் சென்ற போது அது முழுவதுமாகக் கருகிக் கிடந்தது. நெருப்பின் கருகலில் இங்கு எல்லோரின் உறவுகளுக்கும் ஒரே நிறம் தான். நான் அந்தக் கருப்பு நிறக் கட்டை மனிதர்களை தொட்டுணர்ந்து பார்த்தேன், கடைசியான ஒரு கதறலின் தீர்ந்திடாத விம்மல்கள் என்னைத் தீவிரமாகத் துரத்தத் துவங்கின. அதற்குப் பிறகு தான், முழுவதுமாக நான் காணாமல் போனேன். எனது பாதி பார்வைகளுடன் என்னை வரைவதற்கு எனக்குத் தெரியும். எனது கலைந்தச் சித்திரத்தை நான் தான் சுவரொட்டிகளில் வரைந்து ஒட்டினேன். ‘இந்த நகரை விட்டுக் காணாமல் போனவனாக’ என்னை நானே அறிவித்துக் கொண்டேன். அதிகாரத்தை எதிர்ப்பதற்கு என்னிடமிருந்த கடைசி வழி இது தான். எனது ஓவியக் கண்களில் தழும்பும் பழுப்பை நீ கவனித்திருக்கிறாய், அது உண்மையை விட மிகவும் தத்ரூபமாக வந்திருக்கிறது தானே…”

என்னிடம் உடனடியாகப் பதிலுக்கானச் சொற்கள் ஏதுமில்லை. நான் அவனது பழுப்பு நிறைந்த அரைவாசிக் கண்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன், தன் அழுகையின் முதல் துளியை மிகவும் கடினமானத் தொனியில் சிந்தினான். அது, அவன் வரைந்து கொண்டிருந்த ஓவியத்தின் ஒரு துண்டு நீல வண்ணத்தில் விழுந்து சிதறியது.

‘பிரபஞ்சத்தவிப்பின் ஆழமான ஒரு துளியாக அது உருக்கொள்ளும்’ என மனதில் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

மேலுமாக அவனிடம் கேள்விகள் கேட்பதற்கு எனக்குத் தோன்றவில்லை. அவனை அணைத்துக் கொள்வதற்கு முயன்ற போது – இரைப்பையில் ஏற்பட்டிருந்த ஆழமானத் துளைகளைத் துணிகளால் நிரப்பி அதன் வலிகளை மறைத்துக் கொண்டு, சிரித்தபடி சுவரொட்டியின் ஓவியத்திலிருந்துக் கைகளை விரித்து என்னை இறுக்கமாகத் தழுவிக் கொண்டான். நான் அந்த அணைப்பிலிருந்து விடுபடுவதற்கு நீண்ட நாட்களாகின. நகரில் புதியதாகத் தோன்யிருந்த ஒரு ஊமையைப் போல நான் மீண்டும் மீண்டுமாக அந்தச் சுவரொட்டியின் ஓவியத்தைப் பார்த்து விம்மிக்கொண்டிருந்தேன். அந்த இரவின் நிலவு நகர்ந்து, ஒரு வெறுமையானக் கீற்றின் இருளுக்குள் என்னை நிறுத்தியிருந்தது.

0
இரு மகன்களும், தந்தையின் தற்கொலையும் :

நான் அவரைத் தேடிச் சென்ற போது அவரது கல்லறை முழுவதுமாகப் பூசி முடிக்கப்பட்டிருந்தது. நீளச் சுவரின் முனைகள் கூர்மையாகக் காய்ந்து போயிருந்தன. அதன் நீள ஓரங்களின் சாய்வு வளைவுகளைக் கடைசியாக ஒருவன் நுட்பமாகச் சீர்படுத்திக் கொண்டிருந்தான். கால் முனைப் பகுதியின் கீழாக நடுவில் விளக்கு வைப்பதற்கான இடத்தை மற்றொருவன் கச்சித்தன்மையில் மெருகேற்றிக் கொண்டிருந்தான். தலைப் பகுதியிலிருந்தச் சிறிய கல்லறைப் பலகைக்கான வேலைகள் முடிவடைந்திருந்தன. ஆனால் அப்போது அதில் பெயரும், மற்றத் தகவல்களெதுவும் எழுதியிருக்கவில்லை. அது தூய்மையாக இருந்தது. அந்த வனாந்தரம் மதிய வெய்யிலில் ஒரு அமைதியின் தவிப்பில் மூழ்கிக் கொண்டிருந்தது. ‘அவரிறந்து சரியாக பதினைந்து நாளாகிவிட்டதென’ அவர்களில் ஒருவன் என்னிடம் சொன்னான். நானெனது மனதிற்குள்ளாக நாட்களைக் கணக்கெடுத்துச் சரிபார்த்துக் கொண்டேன். நீளும் அமைதியை உடைத்து,
“அவர் எப்படி இறந்தார்..?” என்றேன்.
“எலி மருந்தைக் கரைசலாக்கிக் குடித்திருந்தார்” – விளக்கிற்கானச் சிறிய சிமெண்ட் திட்டின் முனையைச் சரி செய்தவாறு முகத்தைத் திருப்பாமல் சொன்னான். ஒரு அகால மரணத்தைச் சொல்லும் தனிமையான உணர்வு அவனது குரலில்லை. நான் அவனதுப் பதிலால் சிறிது துணுக்குற்று,
“ஏன் அவ்வாறு செய்தார், ஏதேனும் காரணமிருக்குமில்லையா..?” எனக் கேட்டேன்.
அவன் உடனடியாகப் பதில் சொல்லாமல், சிமெண்ட் திட்டின் மேற்புறமான வளைவு முனைகளை ஒரு அரைக்கூம்பு வளையத்துடன் சேர்த்திடும் கடைசி இணைப்பில் கவனமாகயிருந்தான்.
“சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது இரு மகன்களும் நெடும் நாட்களுக்குப் பிறகும் காவல் நிலையத்திலிருந்து திரும்பிடவேயில்லை. அவரும் என்னவெல்லாமோ செய்து பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் தனது நெடிய அலைச்சலுக்குப் பிறகு, காவல் நிலைய நுழைவாயிலினருகில் எலிமருந்தைக் குடித்து விழுந்து கிடந்தார்.”
நீளச் சுவரின் ஓரங்களில் சாய்வு வளைவுகளைத் திருத்திக் கொண்டிருந்தவன் முகத்தைத் திருப்பாமல் சிறிது இரக்கம் தோய்ந்தத் தொனியில் பதில் சொன்னான்.

அவர்களது வேலைப்பாடுகளை நான் ஆராய்ந்து கொண்டிருந்தேன். அவர்களது மெனக்கிடல்கள், இறப்பிற்கு பிறகான ஒரு மனிதனை நேர்த்தியாக அலங்கரிப்பதைப் போலவே எனக்குத் தோன்றியது. அவர்களின் வேலையில் குறுக்கீடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அமைதியில் உறைந்து நின்றிருந்தேன். அவர்கள் முழுவதுமாகத் தங்களது வேலையை முடித்துக் கொண்டுச் சீக்கிரமாகக் கிளம்பியிருந்தனர்.

நான் பார்க்க நேர்ந்தச் சுவரொட்டியின் மீதுப் படர்ந்திருந்த அந்த முகம் இந்த கல்லறைக்குள் முழுவதுமாக உறங்கிக்கிடக்கிறது. அந்தச் சிறிய கல்லறையின் தலைப்பகுதியினருகில் நான் உட்கார்ந்து கொண்டேன். அதன் முனைகளைத் தடவிப்பார்த்தேன். குளிர்ந்த தனிமையுணர்வு எனது கைகளுக்குள் நுழைந்து உடல் முழுவதுமாகப் பரவிக்கொண்டது. ஒரு கடைசி அழுகையின் கண்ணீர்த் துளிகள் நிரம்பிய விம்மல்கள் எனது உள்ளங்கையை ஈரமாக்கின. கல்லறைச் சுவரில் நீருறிஞ்சிய மெலிதான கீறல்களிலிருந்து அவரது சொற்கள் வெளிவந்தன.

“இறந்ததற்குப் பிறகும் எனது அழுகை ஓயவில்லை, எனது இறப்பிற்கும் எனது மகன்கள் வரவில்லை. அவர்கள் இரட்டையர்கள், திருமணம் முடித்து நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு எங்களுக்குப் பிறந்திருந்தார்கள். ஒருவன் பெயர் முரீஸ் சமர் மற்றொருவன் கிரீஸ் சமர். ஒருவனின் வலியை மற்றொருவனும், ஒருவனது சிக்கல்களை மற்றொருவனும் அனுபவித்து உணர்ந்து கொண்டிருந்ததைச் சிறிது காலத்திற்குப் பிறகு நாங்கள் தெரிந்து கொண்டோம். இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்வின் எல்லாவித இன்பந்துன்பங்களையும் தங்களுக்குள்ளாகப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.”
“கடைசியாக அவர்களை எப்போது பார்த்தீர்கள்.”
“நீண்ட காலத் தேடலுக்குப் பிறகு, அவசரநிலை காலத்தின் பிற்பகுதியில் மேற்கு புனே நகரத்தின் ஒரு காவல் நிலையத்திற்குள்ளாக அவர்களைப் பார்த்தேன். காணமல் போயிருந்தவர்களுக்கான அந்தச் சிறப்பு அடையாள அணிவகுப்பில் – உடல் மெலிந்து, கண்கள் இருண்டு உடல் முழுவதுமான இரத்தக் காயங்களுடன் அவர்களைப் பார்த்தேன். சிறிய உள்ளாடைகள் மட்டுமே அணிந்திருந்த அவர்களின் உடல் பகுதிகளில் நிறைய்ய இரத்தக்காயங்கள் இருந்தன. நான் அவர்களை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அழுதேன். என்னை யாரென்றே அடையாளம் தெரியாதவர் போல நடந்து கொண்டனர். நான் மேலும் மேலுமாக எனது பெயரையும், எனது குடும்பத்தின் ஆதாரப் பெயர்களையும் சொல்லி அவர்களை எனது பிள்ளைகள் தான் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். காவலர்கள் என் மீது சிறிதும் நம்பிக்கையற்று என்னை வெளியில் நிற்க வைத்தனர். அவர்கள் என்னை முற்றிலுமாக யாரெனத் தெரியாது என்று சொல்லி விரைவாக சிறைக்குள் நகர்ந்து விட்டார்கள். நான் முழுவதுமாகச் சரிந்து போய் அந்தக் காவல் நிலையத்தின் வெளியே அமர்ந்து கொண்டேன்.”
“மிகவும் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்..! ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்..? உங்களுக்கு ஏதேனும் புரிந்ததா..?”

“கடைசியாக காவல் அதிகாரியிடம் இரக்கம் தோய்ந்து வேண்டிக்கொண்டுச் சிறையில் தனிமையிலிருந்த அவர்களைக் கம்பிகளுக்குள் இருந்தவாறு சந்தித்தேன். அப்போதும் அவர்கள் எனது முன்பாக வருவதற்குத் தயங்கினார்கள். அவர்களின் கண்களையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை ஏதோவொரு குறிப்பைத் தவிப்புடன் சொல்ல முற்பட்டுக் கொண்டிருந்தன. நான் அப்போது தான் எனது தீவிரமான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டுச் சிறிதாக எனது நிலையைச் சரிசெய்து இயல்பின் மனநிலைக்குள் வந்திருந்தேன். முரீஸ் என்னருகில் வந்து ‘அப்பா நீங்கள் இங்கு இருக்க வேண்டாம், இங்கிருக்கும் ஒவ்வொருவரின் உறவுகளையும் பிடித்துச் சிறையில் அடைப்பதற்கான ஒரு இரகசிய வேலையிது, நீங்கள் சென்று அம்மாவுடன் இருங்கள். நாங்கள் கண்டிப்பாகத் திரும்பி வருகிறோம்.’ என்று மெல்லிய குரலில் சொன்னான். உடனடியாக நகர்ந்து அந்தச் சிறையின் மூலைக்குச் சென்றுவிட்டான். அவனது குரலில் எந்த நடுக்கமுமில்லை. நான் முழுவதுமாக நிலைமையைப் புரிந்து கொண்டேன். அப்போது காவல் நிலையம் முழுவதுமாகக் கேட்குமாறுக் கத்திச் சொன்னேன், ‘அந்த இருவரின் தந்தை நான் தானென..’, காவலர்கள் என்னை நம்பிடாமல், என்னைத் தூக்கி வெளியே போட்டார்கள். பிறகு வந்த நாட்களில் அந்த காவல் நிலையம் முன்பாகவே எனது நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல எனது மனைவியின் மனநிலை வெகுவாகப் பாதிப்படைந்து கொண்டிருந்தது. எனது மகன்களையும், இன்னும் சில கைதிகளையும் சேர்த்து வேறு வேறு காவல் நிலையத்திற்கு அந்த நாட்களில் மாற்றிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களின் பின்பாக அழுகையுடன் சதா ஓடிக்கொண்டிருந்தேன். இந்தத் துயரத்திலும், அவசரத்திலும் எனது மனைவியைக் கவனிக்க மறந்து போயிருந்தேன். வீட்டிற்கும் திரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதிய முயற்சிகளை செய்து பார்த்துத் தோல்வியில் அமர்ந்திருந்தேன். கடைசியில் அவர்களிருவரையும் இருவேறு காவல் நிலையத்திற்கு மாற்றிக் கொண்டுச் சென்றனர். அவர்கள் பிரிந்து இருந்து அனுபவிக்கப்போகும் துன்பத்தை நான் பரிதவித்து உணர்ந்து கொண்டேன். என்னால் முடிந்த எல்லாவித முயற்சிகளையும் செய்து பார்த்தேன். பிறகு, கடைசிவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. “
“ஏன் உங்களது மகன்களை சிறையில் அடைத்தார்கள்.. ஏதாவது காரணங்களை நீங்கள் அறிந்து கொண்டீர்களா..?”
“எனது மகன்கள் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிக்குள் நுழைந்திருந்தனர். மாணவச் சங்கங்களின் வழியே கிடைத்திருந்தத் தொடர்புகளால் போராட்டங்களில் அனுபவம் நிறைந்தச் சிலரோடு அவர்களுக்கு அறிமுகங்கள் கிடைத்திருந்தன. அதில் ஒன்று தான் ஓவியர் சாஹின் என்பரோடு ஏற்பட்டிருந்தப் பழக்கம். அவரது துணிச்சலான ஓவியங்கள் மீது மாணவர்களுக்குத் தனியானப் பிரியங்களும், மரியாதையும் இருந்தது. அவரது ஓவியத்தில் பெரும் ஆர்வங்கொண்டு, அவர் நடத்தும் – வார இறுதிகளில் – ஓவியப் பயிற்சிகளில் சேர்ந்திருந்தச் சில மாணவர்களின் குழுக்களில் எனது மகன்களும் அடங்கியிருந்தனர். சிறிது காலத்திற்குள்ளாகவே அவரது நெருக்கமானத் தொடர்பிலிருக்கும் வகைமைக்குள் அவர்கள் நகர்ந்திருந்தனர்.”
“அந்த ஓவியரின் தொடர்பிலிருந்ததால் உங்களது மகன்களை கைது செய்தார்களா..?”
“அவரது இருப்பிடத்தைக் கேட்டு, விசாரணைக்கென அவர்களைக் கூட்டிச் சென்றவர்கள், பிறகு ஒருபோதும் வெளியில் விடவில்லை. நான் கடைசியாக அந்தக் காவல் நிலைய முற்றத்தில், அவர்கள் எனது பிள்ளைகள் தான் என்று நிரூபிக்க வேண்டித் தற்கொலை செய்து கொண்டேன். கடைசியாகக் கண்களை மூடும் தருவாயில் எனது மனைவியின் அப்பழுக்கற்ற முகம் நினைவில் வந்தது. அதற்குப் பிறகும் காவலர்கள் எனது மகன்களை விடுவிக்கவும் இல்லை.”

நானந்த வனாந்தரத்தின் வெய்யிலில் தவித்தபடி தனிமையில் நின்று கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டுமாக அந்தக் கல்லறைச் சுவரின் சிறிய விரிசல்களிலிருந்து சன்னமான அழுகுரல் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.

காணமல் போன இருவர் – 2

சிரிப்புடன் கலந்திருந்தச் சிறிதும் சலனமற்ற அந்த முகத்தை நான் தொடர்ச்சியாகத் தேடிக்கொண்டிருந்தேன். நகரின் ஒவ்வொரு மூலையிலும் கடைசி மூன்று நாட்களுக்கு முன்பாக அந்தச் சுவரொட்டிகள் புதிதாகத் தோன்றியிருந்தன. அந்தச் சுவரொட்டியிலிருந்து, அவன் நகரைப் பார்த்துக் கொண்டிருப்பதில் ஒரு ஒழுங்கின் தன்மை இருந்தது. கவனிப்பின் ஒரு கூர்மை அப்பட்டமாகத் தெரிந்தது. அந்தச் சாலை ஓவியனின் அதே பெயர் கொண்டவன்!, ஒரு வேளை எனது கண்களுக்கு மட்டும் தான் இவை தெரிகின்றனவா..? நெருக்கடிநிலை காலத்திற்குப் பிறகான இந்த நாட்களில், நகரில் மக்கள் நிமிர்ந்து பார்ப்பதற்கு இன்னும் பழகிடவில்லையோ? என்பதைப் போலவே எனக்குத் தோன்றியது. அதே பிறந்த நாள், மாதம் ஆனால் வருடம் மட்டுமே மாறிக் கிடந்தது. முகபாவனைகள் சற்றேறக்குறைய்ய ஒரே மாதிரியாகத் தானிருந்தன. இவனது முகத்தில் அந்தச் சிரிப்பு மட்டும் தான் ஒரே வித்தியாசமாகப் பட்டது. நான் அந்தச் சுவரொட்டியிலிருந்தச் சிறிய விலாசத்தின் கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். நண்பர்கள் சேர்ந்துத் தங்கியிருக்கும் ஒரு சிறிய அறை. நிறைய்யப் புத்தகங்களும், எழுத்துக்கள் நிரம்பியக் காகிதங்களும், ஓவியங்கள் நிறைந்த வண்ணச்சுருள்களுக்கிடையில் இரண்டு நண்பர்களோடு சேர்ந்துப் பேச ஆரம்பித்தேன். 

“திருவாளர். சையது சாஹின் எப்போது காணாமல் போனார்..?”
“நெருக்கடிநிலை காலத்தின் மத்திய பகுதியில், அவரது ரகசியமான ஓவிய அறையின் பின்பக்க வாசல் வழியாகத் தப்பித்துச் சென்றதாகக் காவல் நிலையத்தின், முதல் தகவல் அறிக்கைக் குறிப்பில் கீழ் கோடிட்ட வரிகளில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன” – என்ற அவரது நண்பன் பரின் முசான் அத்துடன் நிறுத்தாமல்,
“ஆனால் அது உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகளில்லை” என்று முடித்தான்.
“முன்பே அவரைக் காவலர்கள் தேடிக் கொண்டிருந்தார்களா…?”
“அப்படியொன்றுமில்லை, அரசுக்கு எதிராகச் சில ஓவியப்படங்களை இரகசியமாக அவர் வரைந்திருந்தார். அவற்றில் சில மிகவும் நுட்பமாக அரசின் அதிகாரத்தை விமர்சித்திருந்தன. கூர்மையானக் கேள்விகளை முன்வைத்தன. நிகழ்காலத்தின் அரசியல் சதிகளை அவை வெளிப்படையாகப் பேசின. அது குறித்துச் சில புகார்கள் அவர்களின் கைவசமிருந்தன. இந்த ஓவியரை நீங்கள் அறிந்திருக்கவில்லையா..?”
“நன்றாகத் தெரியும் ஆனால் அவரது இயற்பெயர் சையது சாஹின் என்பதும், அந்தப் பிரபல ஓவியர் தான் இவரென்பதும் சமீபத்தில் தான் தெரிந்தது. இதற்கு முன்பாக அவரது நிழற்படமோ, முக ஓவியங்களோ பத்திரிகைகள் எதிலும் வெளிவந்திருக்கவில்லை தானே”
“ஆமாம், அவர் புனைப்பெயரில் தான் வரைந்து வந்தார். நிறைய்ய மாணக்கர்களோடு ஓவியம், அரசியல் சார்ந்த தீவிரமான உரையாடல்களை நிகழ்த்திய வண்ணம், இங்கு அருகில் தான் இருந்து வந்தார். மேலும் அவரிடமிருந்த ஒரே நிழற்படம், அவரது ஓவிய நண்பன் வரைந்து கொடுத்தது தான். நாங்கள் அதை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறோம். அவரது மீதியான எல்லா உடைமைகளையும் காவலர்கள் அப்போதேக் கைப்பற்றிக் கொண்டுச் சென்று விட்டார்கள். கடைசியாக மிச்சமிருப்பது அது மட்டும் தான். இப்போது அதைத் தான் நகலெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறோம். அவர் குறித்த மேலுமானத் தகவல்கள் ஏதேனும் கிடைக்கக் கூடுமென்பதற்காகத் தான் அந்தச் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறோம்”
“நம் காலத்தின் மகத்தான ஓவியரவர், அவரது கலை – அரசின் அதிகாரத்திற்கு எதிரானது, ஒரு வகையில் எளிய மக்களை நோக்கியது, மேலும் அவர்களை ஒன்றிணைக்கும் கருவியாகவும் அது இருந்தது.”
“நமது அரசு விமர்சனங்களை ஒரு போதும் விரும்புவதில்லை. அதன் அதிகாரத்தின் படைகளும், பிரம்மாண்டமானப் பற்சக்கரங்களும் அவரை நசுக்கியிருக்கலாம். அவர் திரும்பாதது குறித்து எங்களுக்கு வருத்தங்களில்லை. இந்த நாடு அவரைப் போலானவர்களை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கும்.

நான் அந்த நண்பர்களிடம் அவரது அசலான அந்த ஓவியப் படத்தைக் கேட்டேன். மிகுந்த பாதுகாப்பாக வைத்திருந்த அந்த ஓவியப்படத்தை என்னிடம் எடுத்துக் கொடுத்தார்கள். நான் அந்த ஓவியத்தின் கண்களைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு துளி மாசில்லாமல் நிரந்தரத்தன்மையின் ஆகிருதியோடு அது இருந்தது. இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு சிறு மாறுதலுமற்று அது இருப்பதை ஆச்சர்யமாகச் சொன்னேன். அந்த ஓவியத்தில் படர்ந்திருந்தத் தனிமையானச் சிறு சிரிப்பை நான் உணர்ந்து கொண்டேன். அது அந்த ஓவியனின் ஆகச்சிறந்த கலை நேர்த்தியின் ஒரு வனப்பில் முழுவதுமாக அவரது முகத்தில் தவழ்ந்திருந்தது. அந்த ஒவியத்தின் மெல்லிய நரம்புகள் உயிர்கொண்டு என்னைப் பார்த்தன, அசைந்திடாத உதடுகளால் எனக்கு மட்டுமேயானச் சிறிய ஒலியில் அவை பேசத் துவங்கின.

“அரசியின் அதிகாரச் சிரிப்பைக் கோரப்பற்களுடன் சேர்த்து நான் வரைந்து கொண்டிருந்த ஓவியத்தை முடிக்கும் தருவாயில், காவலர்கள் என்னைச் சுற்றி வளைத்தனர். நான் எனது முக்கியமானச் சில ஒவியங்கள் மற்றும் முடிந்திடாதச் சில ஓவியங்களின் சுருள்கள் மற்றும் சில குறிப்புகளடங்கிய எனது சிறிய டயரி ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டுப் பரபரத்துப் பின்வாசல் வழியாக தப்பித்து ஓடினேன். காவலர்களின் துரத்தல்கள் எங்கும் நிற்கவில்லை. சில பதுங்கல்களுக்குப் பிறகுச் சாலையின் ஓரத்தில் நான் ஓடிக்கொண்டிருந்த போது எனது ஓவிய நண்பனைப் பார்த்தேன், அந்த இருளில் – குப்பையில் எதையோ மும்பரமாகத் தேடிக் கொண்டிருந்தான். தப்பிக்கும் அவசரத்தில் அவனுடன் பேசமுடியவில்லை, எனது முழுமையடைந்திடாதச் சில ஓவியச் சுருள்களை அவனுக்கருகில் போட்டு விட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன். துப்பாக்கியின் முதல் ரவை எனது இடது காலின் முட்டிக்குக் கீழானச் சதையில் நுழைந்து வெளியேறிப் போனது. எனது ஓவிய நண்பன், துப்பாக்கியின் வெடிச் சத்தத்தில் மிரண்டு போய் அசைவின்றி நின்று கொண்டிருந்தான். அவனது கைகளில் எனது ஓவியம் விரிந்திருந்தது. நான் தொடர்ந்து ஓட முடியாமல் நிலைகுலைந்து கீழே விழுந்தேன். என்னைச் சுற்றி வளைத்த காவலர்கள் எனது கடைசி ஓவியத்திலிருந்த அரசியின் கோரைப்பற்களைப் பார்த்ததும் மிகுந்த கோபங்கொண்டு அதிகாரத்தின் ஒரு கூரான முனையை எனக்குள் ஆழமாகச் சொருகினார்கள். நான் பெருங்குரலில் அலறினேன். ஓவியங்கள் தீட்டிய எனது கைகளை உடைத்தனர். நான் வலி பொறுக்க முடியாமல் சுயநினைவின் கடைசிப் புள்ளியில் சரியத் துவங்கினேன். எனது கண்களில் மிச்சமிருந்தச் சிறிய பார்வைக்குள் என்னை நோக்கி ஓடி வந்த அந்த ஓவிய நண்பனை நான் அப்போதும் பார்த்தேன். எனது அருகிலிருந்தக் காவலர், தனது துப்பாக்கியின் முனையைச் சரிசெய்து அவனை நோக்கிச் சுட்டார். அடுத்தடுத்து இரண்டு முறை, அவனது அடிவயிற்றிலிருந்து வெளியேறிப் பெருகியக் குருதிகளுடன், எனது சில ஓவியச்சுருள்களுடன் அவன் சரிந்து விழுந்ததன் மங்கலானக் காட்சி கடைசியாக என்னுள் நிலைத்திருந்தது. பிறகு, எனது கண்கள் தானாக இறுக்கமாக மூடிக்கொண்டன. அந்த நொடியில், அவன் எனக்கு வரைந்து கொடுத்த ஓவியத்திலிருந்த எனது சிறியச் சிரிப்பை நினைத்துக் கொண்டேன்”

“எங்களுக்குள் அமைதி சூழ்ந்திருந்தது. காவலர்கள் அந்தத் திட்டமிட்டத் துப்பாக்கிச்சூட்டைத் தங்களுக்கான தற்காப்பு வடிவ விபத்தைப் போல மாற்றுவதற்கானத் துரித நடவடிக்கைகளில் மூழ்கியிருந்தனர். தேவையானச் சூட்சம ஆதாரங்களைச் சில நொடிகளில் உருவாக்கி, எங்களைத் தேசத்தின் பிரதான எதிரியாக மாற்றிவிட்டனர். எனது ஓவிய நண்பனை இழுத்து வந்து எனது உடலுக்கருகில் சேர்த்தனர். சுண்ணாம்புக் கட்டிகளால் எங்களது உடலைச் சுற்றிலும் வெள்ளை நிறத்தில் பட்டைக்கோடுகள் வரைந்து, தேசத்தில் எங்களுக்கானச் சுதந்திர எல்லையை மிகச்சுருக்கமாகக் காண்பித்தனர். பிறகு இருள் சூழ்ந்த அந்தப் பகுதியிலிருந்து நாங்கள் காணாமல் போனோம்.”

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் சற்றும் சலனமற்ற அவரின் நிதானமான முகத்தை, எவ்விதமான வார்த்தைகளுமற்றுச் சில விநாடிகள் வியந்து பார்த்தபடியேயிருந்தேன். அவர் பகிர்ந்திருந்த நிகழ்வுகளால் எனது உடலில் தோன்றியிருந்த நடுக்கத்தை நான் அப்போது தீவிரமான உணர்ந்திருந்தேன். நடுங்கிக் கொண்டிருந்த எனது கைகளிலிருந்த அந்த ஓவியத்தைச் சிறிய மேசை மீது வைத்து விட்டு அமைதியாக வெறுமையில் நடக்கத் துவங்கினேன். அந்தக் கடைசி நொடிகள் எனக்குள்ளாக எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டிருந்தன. நான் அந்தச் சாலை ஓவியனின் குழிகள் நிறைந்த வயிற்றுப் பகுதியின் வேதனையை நினைத்து அழத்தொடங்கினேன். நிலவினொளியில் என் நிழல் என் தனிமையினூடேக் கரைந்து போய்க்கொண்டிருந்தது.

முதியோர் இல்லத்தில் வசிப்பவள் –

எனது தேடலின் கடைசிப் பகுதியாக அந்த முதியோர் இல்லத்தில் ஒருவழியாக அவளைக் கண்டுபிடித்திருந்தேன். அவளது பார்வையில் நிறைய்ய குறைகள் ஏற்பட்டிருந்தாலும், மனதில் ஒரு அழுத்தமானச் சிறிய உயிர் ரேகையைப் போலச் சில ஞாபகங்கள் படிந்திருந்தன. நான் அவளிடம் அவற்றைக் கூர்மையாகக் கவனித்தேன். சீரற்ற உடலமைப்பில், மனஅமைப்பின் ஒழுங்குகள் முழுவதுமாகக் கலைந்து போய் அவளிருந்தாள். அவளது உதடுகள், தனது இரு மகன்களின் பெயர்களைச் சதா உச்சரித்தபடியே இருந்தன. தனது கணவனின் உருவத்தை அவளது சோகம் படிந்திருந்தக் கண்கள் இடைவிடாது தேடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும், ஒரு நிதானத்தைத் தவறவிடும் ஒரு நடுக்கத்தினூடாக அறுந்தச் சில சொற்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். ( நான் அவற்றை ஒழுங்குபடுத்தித் தொகுத்து எழுதியிருக்கிறேன் )
“எனது கணவர், எங்களது இரண்டு மகன்களையும் இடைவிடாது தேடிக் கொண்டிருந்தார். நானோ அவரைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த வருடங்கள் நிலையில்லாதத் தேடல்களாலும் துயரங்களாலும் நிறைந்து இருந்தன. கடைசியாக அவரது நீலம் பாவித்த உடலைப் பார்த்த போது எனது மூளை அதன் செயல்பாட்டின் வடிவ நேர்த்தியைத் தவறவிட்டுச் சீரற்றுப் பின் நோக்கிச் சுழல ஆரம்பித்தது. நான் அவரது மூடியக் கண்களையே வெறித்துப் பார்த்தவாறு மயக்கமடையத் துவங்கினேன்.” அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்திருக்கவில்லை.

எனது உள்ளங்கையில், அவளது தோல்கள் உரிந்தச் சொரசொரப்பான விரல்களைத் தேய்த்தவாறு, தனது மகன்களின் உள்ளங்கைகளின் மென்மையை ஒத்திருப்பதாகச் சொன்னாள். மீண்டும் கவனித்தேன், அவள் அழவில்லை. ‘தனக்கு அழுவதற்கு மறந்துவிட்டதாக’ கடைசியாகச் சொல்லி விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள். மனப்பிறழ்வு கொண்டவளின் தெளிவற்ற நடையைப் போலவே அது இல்லை. நான் அவளை உணர்ந்திடும் படியான, இரகசியம் நிறைந்த ஏதோவொன்றை மறைமுகமாக எனக்கு அவள் கொடுத்து விட்டுப் போயிருந்தது போலவே மனதில் தோன்றிக்கொண்டிருந்தது. வெகுநாட்களாக நான் முயன்றும் ஒரு போதும் அதைக் கண்டறிந்திடவே முடியவில்லை. அவள் எனக்குள்ளாக அந்தத் துயரங்களின் வலியைத் தான் கடத்தியிருக்கிறாள் என்று அந்த நாட்களுக்குப் பிறகு நம்புவதற்கு ஆரம்பித்திருந்தேன். அது உண்மையாக எனது உள்ளங்கையில் அழிக்கமுடிந்திடாதத் தடமாகப் பதிந்துமிருந்தது.

000

ஜீவன் பென்னி

ஜீவன் பென்னி, தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். சிற்றிதழ்கள், இணையை இதழ்களில் கவிதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

1 Comment

  1. “தேர்ந்தச் சொற்களைக் கொண்டு நீங்கள் எழுதும் கச்சிதமான வரிகளைப் போலானது மட்டுமல்ல வாழ்க்கை, அது ஒழுங்கின்மையின் தீவிரத் தன்மை கொண்டது, நிறைய்ய அறுக்கப்பட்டத் தருணங்களையும், கோரமான முகங்களையும் உள்ளடக்கியது. நல்லது, எனக்குத் தனியாக எந்தக் கதையுமில்லை, உங்கள் தத்துவப்படி – இந்த நிலத்தில் கடைசிநிலை மக்களின் ஒன்று சேர்ந்தக் கதைப்பரப்பிற்குள்ளாக நான் வருகிறேன். அந்தக் கதையிலிருந்து ஒரு நாள் காணாமலும் போயிருக்கிறேன். அவ்வளவு தான்.” பிரமாதம் ஜீவன்!

உரையாடலுக்கு

Your email address will not be published.