வலது கண் : சுரேஷ்குமார இந்திரஜித்

வலது கண் : சுரேஷ்குமார இந்திரஜித்

நாதன், ரவீந்திரனைப் பார்க்கச் சென்றான். அலைபேசியில் ரவீந்திரனை அழைத்தபோது, உடல்நிலை சரியில்லை என்றார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாதனுக்கு நேரம் கிடைத்தது. மெயின் ரோட்டிலிருந்து பல உள் தெருக்களைக் கடந்து அவன் குடியிருக்கும் வீட்டுக்குச் செல்ல வேண்டும். சுமாராக நாற்பது நாய்களையும் பதினைந்து மாடுகளையும் தெருக்களில் கடக்க வேண்டியிருந்தது.

வாசலில் ரவீந்திரனின் மகள் நின்றுகொண்டிருந்தாள். “ரவீந்திரன் என்ன செய்யறான்” என்றான்.

“தலைவலிக்குதுன்னு படுத்துருக்கார். உள்ளே வாங்க” என்றாள்.

நாதன் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். ரவீந்திரனின் மனைவி அடுக்களையிலிருந்து கையில் கரண்டியுடன் வந்தாள். தலைக்குக் குளித்திருந்தாள். கூந்தலைத் துண்டினால் சுற்றியிருந்தாள்.

“படுத்துருக்கார். தலைவலிங்கிறார். நித்யா நல்லா இருக்காங்களா” என்றாள்.

நாதன் அவன் அறைக்குள் நுழைந்தான். சுவரில் முதுகை வைத்துக் காலை நீட்டி உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்த்துச் சிரித்தான்.

“வழக்கமா வர்ற தலைவலியா?” என்று நாதன் கேட்டான்.

“வழக்கமா வர்றதுதான்.”

“எப்ப போகும்?”

“நீ வந்துட்டே மனசிலே இருக்கறதைக் கொட்டியிரலாம். தலைவலி போயிரும்.”

எழுந்து, அறையின் ஒரு பகுதியில் இருந்த பீரோவைத் திறந்தான். பச்சை நிற கவர் ஒன்று அவன் கையில் இருந்தது. அறைக் கதவைச் சாத்தினான். இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அவன் கவரைத் திறந்து படுக்கையில் கவிழ்த்தான். கிழிக்கப்பட்ட ஒரு போட்டோவின் பகுதி இருந்தது. அது ஒரு பெண்ணின் வலது கண் உள்ள பகுதி. தனியாக அந்த வலது கண்ணைப் பார்த்தது அச்சுறுத்துவது போல் இருந்தது.

அவன் ரவீந்திரனைப் பார்த்தான்.

“இந்தக் கண்தான் என்னைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. இது ஹேமாவின் கண். அவளுடைய பெரிய கலர் போட்டோ என்னிடம் இருந்தது. அந்தப் போட்டோவை நீ பார்த்திருக்கிறாய். நான் அதை மறைத்து வைத்திருந்தேன். என். மனைவி என்றைக்காவது பார்த்துவிட்டால் பிரச்சினை என்று நினைத்து அந்தப் போட்டோவைக் கிழிக்க முடிவெடுத்தேன். அதைப் பல துண்டுகளாகக் கிழித்தேன். இறந்த வலது கண் உள்ள பகுதி மட்டும் தனியே கீழே விழுந்தது. அதைக் குப்பைத் தொட்டியில் போட எனக்கு மனம் வரவில்லை. அந்தக் கண் உள்ள பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன்” என்றான் ரவீந்திரன்.

“போட்டோவைக் கிழித்துப் போட்டுவிட்டாய். இது தனியே விழுந்தது என்பதால் பயந்துபோய் எடுத்து வைத்திருக்கிறாய். இப்போது இந்தக் கண்ணை மறைப்பது பெரிய வேலையாக இருக்குமே” என்றான் நாதன்.

“உருவம் தெரியாது அல்லவா. கண் மட்டும்தான் தெரியும். ஹேமாவை என் மனைவி பார்த்ததில்லை.”

“இதை ஏன் எடுத்து வைத்திருக்கிறாய்.”

“இந்தப் பகுதியைப் பார். எவ்வளவு அழகாக இருக்கிறது. என்னிடம் இருக்க வேண்டும் என்றுதான் இந்தப் பகுதி கீழே தனித்து விழுந்திருக்கிறது என்று நினைத்தேன். அதனால் எடுத்து வைத்திருக்கிறேன்.”

“விருப்பப்பட்டுத்தானே எடுத்து வைத்தாய். அப்புறம் ஏன் தலைவலி வருகிறது.”

“அவளின் நினைவு என்னை வருத்துகிறது. இந்தக் கண் பகுதி அழகாக இருக்கிறது. தொந்தரவாகவும் இருக்கிறது.”

“இதையும் கிழித்து என்னிடம் கொடு. நான் போகும்போது குப்பைத்தொட்டியில் போட்டுவிடுகிறேன்.”

“வேண்டாம். இது என்னிடமே இருக்கட்டும். ஏன் அந்தப் பகுதி மட்டும் தனித்துக் கீழே விழவேண்டும். ஹேமாவின் அடையாளங்களில் எஞ்சியிருந்தது அந்த போட்டோ மட்டும்தான். அதைக் கிழித்து எறியும்போது அதிலிருந்த இந்த வலது கண் பகுதி மட்டும் என்னிடம் இருக்க வேண்டும் என்று விழுந்திருக்கிறது.”

“சரி அப்படியே இருக்கட்டும். இதை இன்னும் எவ்வளவு காலம் பாதுகாப்பாய்.”

“எனக்குத் தோன்றும்வரை வைத்திருப்பேன். ஒரு கட்டத்தில் இதை நீங்குவதற்கு மனம் தயாராகிவிடும். அப்போது அதைப்பற்றி யோசிப்போம். மேலும் இந்தப் பகுதியை வைத்து ஆளைக் கண்டறிய முடியாது. அவள் நினைவு வரும்போது அந்தக் கண்ணை நான் பார்த்துக்கொள்வேன்” என்றான் ரவீந்திரன்.

2

“ரவீந்தர் என் கண்களை உற்றுப் பார்.”

“என்னால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. மயக்கம் வருவது போல இருக்கிறது.”

“நான் உன் கண்களைப் பார்க்கிறேன்.”

“எல்லாம் ஒன்றுதானே. நீ பார்த்தாலும் நான் பார்த்தாலும் ஒன்றுதானே.”

“நீ என்னைப் பார்ப்பதும் நான் உன்னைப் பார்ப்பதும் எப்படி ஒன்றாகும்.”

“வாதம் பண்ணாதே. கண்ணைப் பார்க்கும் விளையாட்டு வேண்டாம்.”

ஹேமாவின் கண்கள் தூரத்திலிருந்து நெருங்கி வந்தன. கண்கள் குளமாக மாறின. நடுவில் கருவிழி. அஞ்சத்தான் வேண்டியிருக்கிறது. கண்ணுக்குள் விழுந்து மறைந்தான்.

பெரிய புல்வெளி. அதில் ஹேமாவும் ரவீந்திரனும் அருகருகே உட்கார்ந்திருக்கிறார்கள். கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். முத்தமிட்டுக்கொண்டார்கள். சில பாகங்களைத் தொட்டுக்கொண்டார்கள்.

சற்றுநேரத்திற்குப்பின் ஹேமா கூறினாள். “எனக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய்.”

“என்ன சொல்கிறாய். கர்ப்பப்பையை எடுத்துவிட வேண்டியதுதானே.”

“பிரயோசனமில்லை. பரவிவிட்டது.”

“ஏன் இப்படி அஜாக்கிரதையாக இருந்தாய்.”

“எந்த அறிகுறியும் இருக்கவில்லை. ஒரு கட்டத்தில்தான் அறிகுறி ஏற்பட்டது. அப்போது காலம் கடந்துவிட்டது.” அவள் இதை உணர்ச்சிவசப்படாமல் சாதாரண குரலில் சொன்னாள்.

ரவீந்திரனுக்கு  அதிர்ச்சியாக இருந்தது. “கவலையே இல்லாம இருக்கே” என்றான்.

“கவலைப்பட்டு என்னாகப் போகுது. எனக்குன்னு யார் இருக்கா.”

“ஏன் நான் இருக்கேன்.”

அவனை அவள் அணைத்துக்கொண்டாள்.

“ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கமுடியாத வலியை அனுபவிக்க வேண்டியிருக்குமே.”

“அந்தக் காலகட்டத்தில் நானே என் வாழ்வை முடித்துக்கொள்வேன்.”

அவள் வாயை அவன் பொத்தினான்.

ஒருநாள் ரவீந்திரன் அலுவலகத்தில் இருந்தபோது, ஹேமாவின் தோழி புவனா அலைபேசியில் ரவீந்திரனை அழைத்து ஹேமா தங்கியிருந்த விடுதிக்கு அவசரமாகப் போகுமாறு சொன்னாள். அவன் வேலையை நிறுத்திவிட்டு அவள் தங்கியிருந்த விடுதிக்கு விரைந்தான்.

விடுதிக்கு முன் கூட்டம் இருந்தது. போலீஸ்காரர்கள் இருந்தார்கள். ஹேமாவின் அண்ணன் குடும்பத்தினர் வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள்.

ஆம்புலன்சில் ஏற்றி போஸ்ட் மார்ட்டத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். வெள்ளைக் காடாத்துணியால் அவளைப் போர்த்திக் கட்டியிருந்தார்கள். முகத்தையும் மூடியிருந்தார்கள்.

ஹேமாவுடன் ரவீந்திரன் நெருக்கமாக இருந்தவன். இப்போது அவள் தற்கொலை செய்து இறந்துவிட்டாள். தற்கொலைக்கான அறிகுறி ஏதும் சமீப காலங்களில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவளிடமிருந்து வரவில்லை. இப்போது அவள் முகத்தைப் பார்க்கக்கூட முடியவில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஆன்புலன்சில் அவள் உடலை ஏற்றினார்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் வாகனத்திலும் உறவினர்கள் ஒரு வேனிலும் ஏறினார்கள். புவனாவைக் காணவில்லை. பார்த்துவிட்டுப் போய்விட்டாள் என்று நினைத்தான்.

மார்ச்சுவரியில் வைத்திருப்பார்கள். போஸ்ட் மார்ட்டம் செய்ய நேரம் எடுத்துக்கொள்வார்கள். பிறகு அங்கிருந்து அப்படியே சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

ஆம்புலன்சும் வேனும் போலீஸ் வாகனமும் கிளம்பிய பின் ரவீந்திரன் நின்று விடுதியையும் வாசலில் நின்றுகொண்டிருந்தவர்களையும் பார்த்தான். பிறகு இருசக்கர வாகனத்தில் வீட்டை நோக்கிச் சென்றான்.

3

“இந்தப் பகுதியை வைத்துக்கொள்ளலாம். ஹேமா நினைவு வரும்போது எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம். இதையும் இழந்துவிட்டால் நினைவு மங்கிவிடும்” என்றான் நாதன்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த வலது கண் பகுதியை அருகில் வைத்திருந்த புத்தகத்தில் வைத்து, நாற்காலியிலிருந்து எழுந்து அந்தப் புத்தகத்தை நாற்காலியில் வைத்து அதன் மேல் உட்கார்ந்தான். நாதனைக் கதவைத் திறக்கச் சொன்னான். ரவீந்திரனின் மனைவி நின்றிருந்தாள். “காபி கொண்டு வரவா” என்று ரவீந்திரனைப் பார்த்துக் கேட்டாள். ரவீந்திரனின் மனைவி வீட்டு மனைவியாக இருந்தாள். வேலைக்குச் செல்லவில்லை. சற்று நேரத்தில் ரவீந்திரனின் மனைவி காபி கொண்டு வந்து வைத்துச் சென்றாள். அவள் அழகான வடிவமும் நல்ல நிறமும் உயரமும் உடையவள். அவளை ‘அழகி’ என்று நாதன் நினைத்தான்.

“என் வொய்ப் அழகு” என்றான் ரவீந்திரன். நாற்காலியில் இருந்து எழுந்து புத்தகத்தின் உள்ளே இருந்த போட்டோவின் மீந்த வலது கண் பகுதியை எடுத்தான். அதைப் பல துண்டுகளாகக் கிழித்தான். நாதனிடம் கொடுத்தான். “வீட்டை விட்டுச் செல்லும்போது வழியில் ஏதாவது ஓரிடத்தில் இவற்றைப் போட்டுவிடு” என்றான் ரவீந்திரன்.

திடீரென்று இப்படிச் செய்வான் என்று நாதன் எதிர்பார்க்கவில்லை. அந்தத் துண்டுகளை வாங்கி ஒரு பேப்பரில் மடித்து வைத்துக்கொண்டான்.

வீட்டைவிட்டு வெளியேறி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் மடித்து வைத்திருந்த பேப்பரை நாதன் போட்டுவிட்டுச் சென்றான்.

***

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

1 Comment

  1. சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதை ‘வலது கண்’ குறித்து எனது கண்ணோட்டம் :

    நம் மனதிற்கு விருப்பமான நம் வாழ்வில் வந்து போன ஒரு பெண்ணை நாம் இழந்திருப்போம். அவளின் நினைவு நம்மை வருத்தும். அவளை நினைவுபடுத்தும் ஒரு போட்டோ நம்மிடம் இருந்து அது நம் நினைவை மீட்டும். மன உளைச்சலுக்கு ஆளாக்கும். நினைவு தரும் பொருளை அகற்றினால் நாம் விடுபடுவோம்.

    ‘ஒரு கட்டத்தில்’ அதை அகற்ற மனம் தயாராகிவிடும். அந்த ஒரு கட்டம் எப்போது வரும் என்று தெரியாது.
    அந்தவொரு கட்டம் வரும்போது, நாம் அதை அகற்றுவோம்.

    அந்த கட்டம் எப்படி வந்தது என்று நமக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களால் உணர முடியாது, புரியாது. விளக்கவும் முடியாது. அந்த ஒரு கட்டம் தான் இக்கதையில் நிகழ்கிறது. அதை எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படையாக சொல்லவில்லை. சொல்ல மாட்டார். அந்த ஒரு கட்டத்தை நாம் கண்டறிவது தான் இந்தக்கதையில் நமக்குள்ள விளையாட்டு.

    – கருணாகரன் A.

உரையாடலுக்கு

Your email address will not be published.