கவிதையின் கடமைகள்- கல்பற்றா நாராயணன்

கவிதையின் கடமைகள்- கல்பற்றா நாராயணன்

தமிழில்- அழகிய மணவாளன்

கவிதையின் கடமையும் கவிஞனின் கடமையும் ஒன்றல்ல. கவிஞன் சாமானியனாகவோ, அசாதாரணமானவனாகவோ இருக்கலாம். ஆனால் கவிதை அசாதாரணமானதாகத்தான் இருக்கவேண்டும். தன் கவிதைகளைவிட உயிர்ப்பு கொண்ட கவிஞன் நம்மை கவர்வதில்லை. கவிஞனை, அவன் ஆளுமையைவிட உயிர்துடிப்புகொண்ட கவிதைகள்தான் நம்மை பிரமிக்கச்செய்கின்றன. கவிஞனின் உடலில் காய்த்த  இன்னொரு உடல்தான் கவிதை என்றாலும் அவனை சாராத தனிஇருப்பு அதற்கு உண்டு. கவிஞன் அல்லாமல் அது தன் வடிவை அடைவதில்லை என்றாலும் அது அவன் அல்லாமலேயே  நிலைநிற்கக்கூடியது. அது கவிஞன் உத்தேசித்ததையும் மீறிச்செல்லும். ” வைரம் துளைத்த அருமணிகளின் ஊடே நான் கடந்துசெல்கிறேன், என் அதிர்ஷ்டம், நான் வெறும் நூல்தான்” இது அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் கவிதைவரி. இப்படி தன்னடக்கம் கொள்ள கவிஞனால் இயலும். அருமணிகளால் அப்படி உணரமுடியாது இல்லையா?

ஆனாலும் கவிஞனின் இருப்பும் கவிதையின் இருப்பும் முழுக்கமுழுக்க வெவ்வேறானவை என்றும் சொல்லமுடியாது. சந்தான கோபாலம்1 என்ற மலையாள காவியத்தை எழுதிய பூந்தானம் நம்பூதிரி(1547-1640) பற்றி நவீன கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன் இப்படி எழுதுகிறார்: ” குழந்தை இல்லாமையின் அசல் துயரை அவ்வளவு உணர்ந்தவனால்தான் வடிவப்பிசிறுகள் இல்லாத இந்த காவியத்தை எழுதமுடியும்.” குசேலவிருத்தம் என்ற காவியத்தை எழுதிய ராமபுரத்து வாரியர்2 (1703-1753)  குசேலனின் கதையை பாட தனக்கு இருக்கும் அதிகபட்ச தகுதியைப்பற்றி இப்படி எழுதுகிறார்:

வரியவனில் வரியவன் என்பதால்,

தாழ்ந்தவனில் தாழ்ந்தவன் என்பதால்

ஞானமும் இல்லாததால்,

எனக்கு இறைவன் தானே வந்து துணைநிற்கிறான்

அதனால் நான் இந்த பாடலை பாடுகிறேன்

நான் இல்லாமல் இது முழுமையுறாது என்பது உறுதி.

ஆனாலும் பூந்தானம் நம்பூதிரி எழுதிய காவியத்தில் விவரிக்கும் பிராமண கதாப்பாத்திரம் அவர் அல்ல. ராமபுரத்து வாரியரின் சுயசரிதை அல்ல குசேல விருத்தம். பலாச்சுளை பலாமரம் அல்ல, பலாமரத்திற்கு இல்லாத சுவையோ மணமோ பலாப்பழத்திற்கு உண்டு. பூ என்பது அது பூத்த செடி அல்ல, செடிக்கு இல்லாத நிறமோ, மணமோ பூவில் உள்ளது. குறிப்பிட்ட ஒரு பலாமரத்தின் பலாப்பழத்திற்கோ, குறிப்பிட்ட ஒரு செடியில் பூக்கும் பூவிற்கோ உள்ள தனித்தன்மைக்கு அந்த பலாமரமோ, செடியோ காரணமாக இருக்கலாம். பாகவதத்தில் இப்படி ஒரு வரி உண்டு “ஒரு மரத்தின் வேர்முதல் இலைநுனிவரை அதன் சாறு சுவையாக இல்லாவிட்டாலும் அது பழமாக ஆகும்போது எல்லோருக்கும் பிடித்தமானதாக ஆகிவிடுகிறது “

இந்த உதாரணங்கள் வழியாகக்கூட கவிஞனுக்கும் கவிதைக்கும் இடையே உள்ள முரணியக்க உறவை  முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது. உதாரணங்கள் வரைபடங்களை(Map) போல. எந்த நிலப்பரப்பின் வரைபடமும் அதை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்திவிடமுடியாது. போர்ஹே தன் சிறுகதையில் இதை சுட்டிக்காட்டுகிறார். அந்த சிறுகதையில் ஊர்மக்கள் தங்கள் ஊரின் எல்லா தனித்தன்மைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வரைபடத்தை உருவாக்குகிறார்கள். அந்த ஊரின் புறவடிவத்தின் அதே அளவுகொண்ட, எதையுமே தவறவிடாத நிழல்போன்ற வரைபடம். ஊரை முழுக்க மூடிவிடக்கூடிய வரைபடம். அவ்வளவு பெரிய வரைபடத்தை பயன்படுத்தமுடியாது என்பதால் இயல்பாகவே அந்த வரைபடம் புறக்கணிக்கப்படுகிறது. அந்த ஊரில் உள்ள பல இடங்களில் பயனின்றி புறக்கணிக்கப்பட்ட அந்த வரைபடத்தின் எச்சங்களை காணலாம். இந்த சிறுகதை வழியாக முழுமுற்றாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற உந்துதலையும் , அது சார்ந்த  வீண்முயற்சிகளையும் பகடிசெய்கிறார் போர்ஹே. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை அந்த அசலான இடத்தைவிட அதிகமாக வெளிப்படுத்தும்  வரைபடம்தான் கவிதை.  ஒரு குறிப்பிட்ட ஊரின் நிலவரைபடத்தில் வேறொரு ஊரின் நிலத்தின் இயல்புகளையும் சேர்த்து வெளிப்படுத்தும் விசித்திரமான வரைபடம். ’அதற்கப்பால்’ தான் கவிதையின் முக்கியமான கடமை.

தாய் மகனை அல்ல, மகன்தான் அம்மாவை பெற்றெடுக்கிறான் என்று ஒவ்வொரு தாய்க்கும் தெரியும். கண்ணே, உன்னை நானல்ல, என்னை நீ அல்லவா வரையறுக்கிறாய்? உனக்கு தேவையான வகையில் என்னை உருவகித்துக்கொண்டதும் நீதானே? அதேபோல கவிஞனும் கவிதையை உருவாக்குவதில்லை, கவிதைதான் கவிஞனை பெற்றெடுக்கிறது. கவிதைக்கு வடிவம் அளிக்க அளிக்க கவிஞன் உருக்கொள்கிறான் ( சிற்பியை சிற்பம்தான் வடிவமைக்கிறது. கிரேக்க தொன்மத்தில் வரும் பிக்மாலியன்(Pygmalion) தன் படைப்பை அவ்வளவு காதலிப்பது அதனால்தான்). படைத்தல் வழியாகத்தான் படைப்பாளி என்ற இருப்பு அர்த்தமுள்ளதாக ஆகிறது. பழைய கவிஞர்களை ஆராய்ந்தால் இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக உணரமுடியும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு  புறவயமான வாழ்க்கை வரலாறு இல்லை. எஞ்சியிருப்பது அவர்கள் எழுதிய கவிதைகளிலிருந்து வாசகமனம் உருவாக்கிக்கொண்ட வாழ்க்கைக்கதைகள் அல்லது தொன்மங்கள். ஹோமரோ, வால்மீகியோ காளிதாசனோ, எழுத்தச்சனோ, உண்ணாயி வாரியரோ யாரும் தாய் பெற்ற குழந்தைகள் இல்லை. கவிதை பெற்றெடுத்த தந்தையர்கள் அவர்கள். இல்லாததை காணமுடிந்ததால்தான்  ஹோமர் தொன்மங்களில் குருடனாக ஆனார். சாமானிய தளத்தில் பார்வையாளனால் எந்த வகையிலும்  காணமுடியாதை மிகமிக நுண்மையுடன் ஹோமரால் காணமுடிந்தது. ராமாயணம் உணர்த்தக்கூடிய அசாதாரணமான தனிமையின் ஊற்றுமுகம் எது ? இந்த கேள்விக்கான பதிலை கண்டடைய நாம் பிற்காலத்தில் வால்மீகியின் சொந்த வாழ்க்கைக்கதையை உருவாக்கிக்கொண்டோம். திருடன் ரத்னாகரன்தான் பின்னர் வால்மீகியாக ஆகிறான் என்ற கதை. ரத்னாகரனின் குற்றத்தை பங்கிட அவன் குடும்பத்தில் யாருமே முன்வரவில்லை. அவனின் தாளமுடியாத குற்றவுணர்வும் தனிமையும்தான் ராமாயணத்தில் வெளிப்படும் மகத்தான தனிமைக்கான உறைவிடம் என்று நாம் புரிந்துகொண்டோம். காளிதாசனின் மேக-சந்தேசத்தில்  குபேரனால் சாபமிடப்பட்டு தன் சக்திகளை இழந்து நாடுகடத்தப்படும் யக்‌ஷனையும், தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையையே வெட்டும்4 முட்டாள் கவிஞனையும் தந்தைமகன் என்றல்லாமல் வேறென்ன சொல்லமுடியும்?

தொல்பழங்காலத்தில் மனிதன் எதிர்கொண்ட வாழ்க்கைப்புதிர்களை புரிந்துகொள்வதற்காகத்தான் பிற்காலத்தில் தொன்மங்களும், நம்பிக்கைகளும் உருவாக்கப்பட்டன. பழைய ஹீப்ரு மொழி பேசும் மக்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யும் நாட்களாகவும், ஒரு நாளை ஒய்வுக்கான விடுமுறை நாளாகவும் ஒரு வாரத்தை முறைமைப்படுத்தினர். அதற்கு எவ்வளவோ காலத்திற்கு பிறகுதான் கடவுள் ஆறு நாட்களில் பிரபஞ்சத்தை உருவாக்கி, ஒருநாள் ஓய்வெடுத்தார் என்று கடவுளின் வரலாற்றாசிரியரான ரெஸா அஸ்லான் சொல்கிறார். (God- A Human History by Reza Aslan). எல்லா மதங்களின் கடவுள்களுக்கும் ’மனிதத்தன்மை’ என்ற எல்லை உருவானதற்கு காரணம் மனிதன் கடவுளை படைத்ததால் உருவாகியிருக்கலாம். சூழியல் அழிவுகளுக்கு ஒருவகையில் கடவுளும் பொறுப்பானவர். கடவுள் சிறுத்தையின், பல்லி, பூராணின், மரத்தின் கடவுள் அல்ல, அவற்றை பாதுகாப்பவரும் அல்ல. நதியின், காட்டின், மலையின் மனிதப்பயன்பாட்டு சார்ந்த அர்த்தத்தைத்தான் கடவுளால் கிரகித்துக்கொள்ள முடியும். உன் புனித மேசை மீது மனிதனின் அகராதிதான் இருக்கிறது!

கவிதையின் கச்சாப்பொருள் மொழி. கதை, நாடகம் போன்ற மற்ற இலக்கிய வடிவங்களின் ஊடகமும் மொழிதான் என்றாலும் அவற்றை மொழியிலிருந்து பிரிக்கவே முடியாது என்று சொல்லமுடியாது. இரண்டாக பிளந்தால் ஜராசந்தனைப்போல கவிதை செத்துப்போய்விடும். (இன்று மலையாளத்தில் சாதாரணமாக வாசிக்கக்கிடைக்கும் மொழிபெயர்ப்பு கவிதைகள் மொழியின் மிக மோசமான வெளிப்பாடுகளாக இருக்கின்றன என்றாலும் அதற்கான காரணம் கவிதை என்ற வடிவத்தின் மொழி சார்ந்த தனித்தன்மைதான்). ஒவ்வொரு கவிதையும் அதை எழுதிய கவிஞனுடையது மட்டுமல்ல, அது எழுதப்பட்ட மொழியின் படைப்பும்கூட. The Armenian Language is the Home of Armenian- Moushegh Ishkhan. துஞ்சத்து எழுத்தச்சன் எழுதும்போது சிறகு முளைப்பது மொழிக்குதான். காலப்போக்கில் தொடர்புறுத்தும்தன்மையை இழந்த, ராமாயணத்தில் வரும் சம்பாதியைப்போல சிறகு கரிந்து நிலத்தில் விழுந்த பயன்பாட்டுமொழியின் உயிர்தெழுல் கவிதைவழியாகத்தான் நிகழ்கிறது. மொழி அளவுக்குதான் மனிதன் என்றார் விட்கென்ஸ்டைன்(wittgenstein). அவர் பார்வையில் முதலில் பட்டது கவிதைகள்தான். மொழியை உயர்த்தினால் மனிதனை உயர்த்தலாம் என்று அவர் அறிந்ததும் கவிதை வழியாகத்தான். நான் உங்களுக்காக உயிர்த்தெழுகிறேன் என்று கிருஸ்துவைப்போல கவிதையாலும் சொல்லமுடியும்.

விட்கென்ஸ்டைன்

மனிதன் மொழியால் ஆன விலங்கு( language Animal). மற்ற உயிரினங்களுக்கும் அவை உயிர்வாழ்வதற்கு அவசியமான தொடர்புறுத்தும் முறைமைகள் உண்டு என்றாலும் அவற்றிடம் மொழி இல்லை. தொடர்புறுத்தலுக்கான மென்பொருள் அவற்றின் கையில் இல்லை, அது இயற்கையிடம் இருக்கிறது. மொழியை உருவாக்கவோ, புதுமையாக்கவோ, சிதைக்கவோ(deconstruction) அவற்றால் முடியாது. மனிதன் உயிர்வாழ உடனடியாக உணர்வுகளை சுட்டும் இடைச்சொற்கள் (உதாரணம்: ஓ!, ஐயோ!, ஆ!) மட்டும் போதுமானதாக இல்லை. சொற்பொருள் ஆய்வு (semantics), குறியியல் (semiotics) போன்ற அறிவுத்துறைகள் உருவாகும் அளவுக்கு நம் மொழி உட்சிக்கலும், அடர்த்தியும் கொண்டதாக ஆகியது. சொல்லக்கூடியதும், சொல்லாமல் உணர்த்தக்கூடிய குறியீடுகளும், படிமங்களும் நிறைந்த மொழி. மொழி உருவான காலகட்டத்தில் அது கவிதையைப்போலவே சொல்லமுடியாதவற்றை சுட்டும் மொழியாக இருந்தது.  ”ஆதியில் சொல் இருந்தது” என்ற பைபிள் வரியில் அதற்குப்பின்பு உருவானவையெல்லாம் மொழியிலிருந்து உருவானவை என்ற கண்டடைதல் இருக்கிறது. மொழி உருவாக்குவதற்கு தேவையான கச்சாபொருளை மனிதன் தன் இயல்பான மேதமையால் உருவாக்கினான்.  அதன்பின் வெவ்வேறான மொழிகளை உருவாக்குவதற்கான மென்பொருளை ஒவ்வொரு சமூகமும் தனித்தனியாக உருவாக்கிக்கொண்டன. வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தான் ஆனதுபோல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக ஆனான். அதன்பின் அவனது சஞ்சாரம் மொழிவழியாக மட்டுமே நிகழ்ந்தது. அவனது சாத்தியங்கள் மொழியின் சாத்தியங்களாக மட்டுமே ஆனது. விளக்கமுடியாமைகளும், பெயரிடமுடியாதவைகளும் இருப்பற்றவைகளாக ஆகிவிட்டன. ” இங்கு எண்ணுவதை செய்யமுடியாது, செய்ய அனுமதி கிடைத்தாலும் எண்ணங்கள் இல்லாமல் ஆவதில்லை” குமாரன் ஆசானின் இந்த வரி ஒருவகையில் இந்த மொழி உருவாக்கிய உலகின் உள்ளார்ந்த அலைக்கழிப்பு.

மனிதன் கண்டடைந்த உண்மையின் பிரதிநிதியாக மொழி ஆகவில்லை, மொழி உருவாக்கிய உண்மை அவனின் உண்மையாக மாறியது. மொழி சிருஷ்டித்த இடம் அசலான இடத்தைவிட விசாலமானதாக இல்லை. இன்று நாம் வாழும் எந்த நிலப்பரப்பும் மூச்சுத்திணரவைக்கும் மொழிப்பிராந்தியமும்கூட. மொழி உருவான பிறகு நாம் சொல்லாததை கேட்கமுடியாத, எழுதாததை வாசிக்கமுடியாத எல்லைக்குட்பட்ட உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். ”உணவு அல்லாத எதையும் நம்மால் உட்கொள்ள முடிவதில்லை” என்ற குஞ்ஞுண்ணியின் கவிதைவரி சுட்டுவது மொழி சார்ந்துதான் இன்னும் முக்கியமனாதாக ஆகிறது. நாம் உள்ளுர  உணர்வதை மொழி அனுமதிக்கும் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்புபோல நிறைவின்மைகொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லைமீறலாக கவிதையை நாம் யோசித்து பார்க்கலாம்.

போதாமைகள் கொண்ட மொழியிலிருந்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலகட்டத்தால் சென்றடைந்துவிடமுடியாத மொழியை நோக்கிய சாகசப்பயணம்தான் கவிதையெழுத்து. முன்கூட்டியே அறியமுடியாத வடிவின் வெளிப்பாடுதான் காவியகலை. அதை “ யாரும் உன் வடிவை அறிவதில்லை” என்று குமாரன் ஆசான் சொல்கிறார்.

சாதாரணமாக வெளிப்பட சாத்தியமில்லாததை வெளிப்படுத்துவதுதான் எல்லா கலைவடிவங்களின் இலக்கு. ஆனாலும் கவிதை மட்டும்தான் தன் வெளிப்பாட்டில் மொழியையும் புதுமையாக்கியபடி நிகழவேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்கிறது. அப்படி அல்லாமல் கவிதை சாத்தியமும் அல்ல. பேச்சுமொழி உட்பட பிற எல்லா மொழிவடிவங்களுக்கும் போதுமானது கவிதைக்கு போதுமானது அல்ல.

அடியிலா ஆழத்தின் உண்மையை மொழி அறியும்போது

மனிதர்கள் ஏன் பூசலிட்டுக்கொள்கிறார்கள்?

என்கிறார் இடச்சேரி கோவிந்தன் நாயர் தன் ”பேசாவிலங்குகள்” என்ற கவிதையில். வசைச்சொல்லை விஞ்சும் வசைச்சொல்! மொழி என்பது அடியிலா ஆழத்தை அறிவதற்கான பயணம்தான். அதன் வாகனமாக இருப்பதுதான் கவிதையின் கடமை. சொல்லமுடியாததை சொல்வது என்ற மொழியின் புராதானமான கடமை கவிதையில் ஒவ்வொருமுறையும் நிறைவேற்றப்படுகிறது. மொழி இழந்துவிட்ட கவித்துவ ஆற்றல் கவிதையில் உயிர்த்தெழுகிறது. அதுவரை சாத்தியமல்லாமல் இருந்ததை  நிகழ்த்துகிறது கவிதை. அதைத்தான் அக்கித்தம் நம்பூதிரி தன் கவிதையில் ‘பச்சைமரமாக இருந்தபோது என்னால் அது முடியாமலிருந்தது’ என்கிறார்.

வேறு எந்த வழிமுறையாலும்  வெளிப்படுத்த முடியாத சுயத்தை வெளிப்படுத்த ஒருவன் கவிதையை தேர்ந்தெடுக்கிறான்.

சொல்லி புரியவைக்க முடியாத சிலவை பூமியில் இருந்திருக்கலாம்

அதனால்தான் படைத்தவன் உடலை இப்படி உருவாக்கியிருக்கிறான் போல

என்ற ஐயப்ப பணிக்கரின் கவிதையில் உள்ள படைத்தவனை காவியஆசிரியனாகவும் பார்க்கலாம் அல்லவா. கவிதை என்ற உடல் அவனால் சென்றுசேரமுடியாத இடத்திற்கு அவனை கொண்டுசேர்க்கிறது. அவனுக்கு முன் ‘சொல்’ அதன் அசல் ஆற்றலுடன் தோன்றி, வெளிப்படுத்த முடியாததை வெளிப்படுத்த துணை நிற்கிறது. அடியொழுக்குகள் ஒருங்கமைகின்றன. ஒட்டுமொத்தமான இணைதல். ’உண்மை’ அதன் உயிர்த்தன்மையுடன், ஆற்றலுடன் வெளிப்படுகிறது.

தூங்கி எழுந்தவர்களிடம் நாம் சாதாரணமாக கேட்கும் ” எழுந்தாச்சா?” என்ற கேள்வியை நாம் நோயாளியிடம் கேட்டால் அந்த கேள்வியில் கொஞ்சம் கவித்துவமான இனிமை கலந்துவிடுகிறது. ” அந்த ஒளி அணைந்துவிட்டது” என்று நேரு சொன்னது அப்படியல்லாமல் விளக்கமுடியாத ஒரு இன்மையை விவரிக்க. இருட்டில் நிற்பவன் ‘வெளிச்சம்’ என்று கேட்கும்போது அவன் உரைநடை மொழியை சார்ந்திருக்கிறான், ஆனால் ஒளியில் இருப்பவன் ‘வெளிச்சம், வெளிச்சம்’ என்று கேட்கும்போது மொழியின் கவித்துவத்தை சார்ந்திருக்கிறான். உரைநடையில் குறிப்பான் (signifier), குறிக்கப்படுவது (signified) இரண்டுமே திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது. கவிதையில் அவை வரையறுக்கப்படுவதில்லை. “என்னை  திறந்துவிடுங்கள், நான் கொஞ்சம் வானில் பறக்கிறேன் “ என்பது கூட்டிலுள்ள பறவையின் அலைக்கழிப்பு மட்டுமல்ல. அதற்கு நிகரான அலைக்கழிப்பை அடைந்தவர்கள் அனைவருக்குமான மொழி அது. பல்வேறு வகையில் சிறைப்படுத்தப்பட்டவர்களை இந்த வரியால் விவரிக்கமுடியும். நுட்பமாக பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் என்பதால் நம் அனைவரின் அந்தரங்க உணர்வாக அந்த வரியை சொல்லலாம். கெ.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதை கேட்பதுபோல ” நம்மை வெளியேறச்செய்த வீட்டுத்திண்ணையை விட்டு நாம் எவ்வளவு தூரம் விலகிச்சென்றிருக்கிறோம்? ”. அக்கித்தம் நம்பூதிரியின் கவிதையில் உள்ள ” எனக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் இருந்தன” என்ற வரியை தனிமனிதன் சமூகத்தின் பகுதியாக ஆகிவிட்ட, அதில் கரைந்துவிட்ட காலகட்டத்தில் அவன் தன் பழைய காலத்தை எண்ணுவதாக வாசிக்கலாம். சமூகத்தில் கரைந்ததும் அவன் முக்கியமில்லாமல் ஆகிவிடுகிறான், அவன் சமூகங்கள் உருவாவதற்கு முன்பிருந்த ’தன்னை’ நினைவேக்கத்துடனும், இழப்புணர்வுடன் எண்ணிக்கொள்வதை அந்த வரி சுட்டுகிறது. நளன் தமயந்தி கதையில் ஒரு உதாரணம். தமயந்தியிடம் தன் காதலையும், அது தன்னை எப்படி வதைக்கிறது என்பதையும் எப்படி தெரியப்படுத்துவது என்று பலவாறாக யோசித்தும் ஒருவழிமுறையையும் கண்டடைய முடியாமல் அலைக்கழிகிறான் நளன். அரண்மனையில் இருக்க பிடிக்காமல் மலர்வனத்திற்கு செல்கிறான். அங்குள்ள தடாகத்தில் அன்னப்பறவைகள் இருப்பதை பார்க்கிறான். அன்னப்பறவை ஒன்றை அவளுக்கு தூது அனுப்பினால் என்ன என்று  யோசிக்கிறான். அங்குள்ள அன்னப்பறவைகளில் இருப்பதிலேயே அழகான, பிற அன்னப்பறவைகளுக்கு இல்லாத பொன்நிறமும், அழகும், மேன்மையும் கொண்ட அன்னப்பறவையை நளன் தேர்ந்தெடுத்து அதை கையால் பிடிக்கிறான். என்ன காரணத்திற்காக தன்னை பிடித்தான் என்பது அதற்கு தெரியவில்லை. எத்தனையோ அன்னப்பறவைகள் இருந்தும் நளன் ஏன் தன்னை தேர்ந்தெடுத்தான் என்று குழம்புகிறது அந்த பறவை.  தன்னை அவன் கொல்லப்போகிறான் என்று நினைக்க ஆரம்பிக்கிறது. மரணமுனையில் அந்த அன்னப்பறவை ”என் மேன்மை எவ்வளவுபெரிய தீங்காக ஆகிவிட்டது” என்று  எண்ணுவதாக நளசரிதம் ஆட்டக்கதையை எழுதிய உண்ணாயி வாரியார் விவரித்திருக்கிறார். அன்னப்பறவையின் இந்த வரி  டெல்லியை சேர்ந்த நிர்பயா என்ற பெண்ணுக்கும் பொருந்தும். மட்டுமல்ல, அறமின்மைக்கு முன் தங்கள் கண்டனங்களை நேரடியாக வெளிப்படுத்தியதால் வேட்டையாடப்பட்ட நீதிமான்களுக்கும் பொருந்தக்கூடியது.

சொல்லின், சொல்லாட்சிகளின், காவியத்தின் படிமத்தன்மையை பயன்படுத்திதான் நவீன கவிதையும் செயல்படுகிறது. தன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கும் மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான அபயம் தேடி ஓடிக்கொண்டிருக்கும் மார்க்கண்டேயனில் ’மர்த்யன்4  எல்லா இயல்புகளும் முழுமையாக வெளிப்படுகிறது இல்லையா?

அங்கே சென்றுசேர துடிக்கிறான் மர்த்யன்

அழிவின்மை என்ற கற்பிதத்தின் தளராத சிறகுகளுடன்.

(*மர்த்யன் என்ற இந்திய சொல்லைப்பற்றிய அறிதல் இருந்திருந்தால் ஹைடெகர் தன் தத்துவ அமைப்பில் அதை முக்கியமான இடத்தில் வைத்திருந்திருப்பார்). அந்த ஒற்றைச்சொல்லில் உள்ள சாராம்சத்தை அகமழிந்து கொண்டாடுகிறது இடச்சேரி கோவிந்தன் நாயரின் ‘மார்க்கண்டேயன்’ என்ற கவிதை.

கடைசியாக ஒரு கேள்வி. கவிதை வாசகனின் பங்கு என்ன? வாசக பங்கேற்பு வழியாகத்தான் கவிதையின் பணி நிறைவேறுகிறது. சிறந்த கவிதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதுவழியாக தங்களுடைய சொந்த கவிதையைத்தான் எழுதுகிறார்கள். நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா “எனக்கு பின்தொடர்பவர்கள்(followers) வேண்டாம், இணைப்படைப்பாளிகள்(Co-creators) போதும்” என்கிறான். கவிதை சொல்வதும் இதைத்தான். அதுவாக இருப்பது என்பதைவிட அதுவழியாக பிறிதொன்றாக ஆவதை, அதைவிட மேலானதாக ஆவதை.

கவிதையின் பொறுப்பு என்ற இந்த உரையில் அதன் சமூகக்கடமையையோ, அரசியல்நிலையையோ தவிர்க்கப்பட்டுவிட்டது என்று எண்ண வேண்டாம்.  முன்பு குறிப்பிட்டதுபோல கவிதை ஒரு அதிகுறியீடு (Excessive signifier). ஒரு கவிதையால் அது கவிதையாக இருந்துகொண்டிருப்பதை தவிர வேறெந்த கடமையையும் நிறைவேற்றமுடியாது.

அந்த வடிவில் அல்லாமல் வேறெப்படியும் வெளிப்படுத்தமுடியாததை சிருஷ்டிப்பதுதான் கவிதையின் கடமை. நாம் அலைக்கழிப்பில் ‘ ஒரு வடிவமும் கிடைக்கவில்லை (இது மலையாள பழமொழியின் மொழிபெயர்ப்பு)’ என்று சொல்கிறோம். நீண்ட நெருக்கடிக்கும் யோசனைகளுக்கும் இடையே தன்னிச்சையாக நாம் தீர்வை கண்டடைந்ததும் ‘இப்போதுதான் வடிவம் கிடைத்தது’ என்று ஆசுவாசமடைகிறோம். அந்த ‘வடிவம்’ போல ஒருவகையான ஆசுவாசமும் தீர்வும்தான் கவிதை வடிவமும். கவிதையின் ஒரே கடமையான வடிவமுழுமை என்ற அம்சத்துடன் கூடுமானவரை இணைந்திருப்பதுதான் கவிஞனின் முக்கிய கடமையும் என்பதை இந்த உரை நினைவுபடுத்தட்டும்.

(இது கல்பற்றா நாராயணன் கோழிக்கோடு பல்கலைகழகத்தின் மலையாள மொழித்துறையின் பொன்விழாவில் நிகழ்த்திய மலையாள சொற்பொழிவின் தமிழ் மொழிபெயர்ப்பு)

——————————————————————————————————————–

  1. ”சந்தானகோபாலம்” பாகவதத்தில் உள்ள கதை. துவாரகையில் பிராமணன் ஒருவனின் எட்டு குழந்தைகள் பிறந்தவுடனேயே இறந்துவிடுகின்றன. பிராமணனின் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள். துவாரகைக்கு வந்திருந்த அர்ஜுனனிடம் தன் நிலை பிராமணன் சொன்னதும், அர்ஜுனன் அடுத்து பிறக்கப்போகும் குழந்தையை காப்பாற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறான். அர்ஜுனனின் பாதுகாப்பையும் மீறி குழந்தை இறந்துவிடும். அர்ஜுனன் யமலோகத்தில் தேடியும் கிடைக்கவில்லை, நீண்ட அலைக்கழிதல்களுக்கு பிறகு கடைசியாக ஸ்ரீவைகுண்டத்தில் அர்ஜுனன் குழந்தையை கண்டடைந்து அதை மீட்கும் கதை.
  2. பூந்தானம் நம்பூதிரி  நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்ததாகவும், பல வருடங்களுக்கு பிறகு குருவாயூர் கிருஷ்ணனின் அருளால் அவருக்கு குழந்தை பிறந்தாலும் பாகவதத்தில் உள்ள ‘சந்தானகோபாலம்’ கதையில் வருவது போலவே அது பிறந்தவுடனேயே இறந்துவிடுகிறது. அந்த துயரம் தாளமுடியாத அவர் அந்த பாகவத கதையை அடிப்படையாக வைத்து  “சந்தானகோபாலம் பான” என்ற பெயரில் மலையாள காவியம் ஒன்றை எழுதினார் என்ற தொன்மம் உண்டு.
  3. ராமபுரத்து வாரியார் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் அவையில் இருந்தவர். ஒருமுறை அரசனுடன் படகில் செல்லும்போது குசேலனின் கதையை ”குசேலவிருத்தம்” என்ற காவியத்தை பாடுகிறார். பயணம் முடிந்து அரசன் தனி அறைக்கு சென்ற யோசித்தபிறகுதான் ”குசேலவிருத்தம்” காவியத்தில் விவரிக்கப்படும் குசேலனின் வறுமையும், வருத்தமும், பசியும் உண்மையில் ராமபுரத்து வாரியரின் சொந்த துயரமும் ஏழ்மையும்தான் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவருக்கு பொருளாதார உதவி செய்து புது வீடும் கட்டிக்கொடுத்தாக தொன்மம் உண்டு
  4. யோசனையின்றி தன் சொந்த நிலைநிற்பையே இல்லாமலாக்கும் செயல்கள் செய்வது, ஆபத்திற்கான கையிருப்பு தொகையையும் பணயம் வைத்து சூதாடுவது என  ஒரு எல்லையில் சாகபூர்வமான இன்னொரு எல்லையில் முட்டாளத்தனமான செயல்களை சுட்டுவது’ அமர்ந்திருக்கும் மரக்கிளையையே வெட்டுவது’ என்ற பழமொழி.  
  5. எல்லா உயிரினங்களுக்கும் மரணம் உண்டு, அவை அழியக்கூடியவை. மனிதனுக்கும் அதே நிலைதான். அதைக்குறிக்க மலையாளத்தில் மர்த்ய(மரணமுள்ள) என்ற சொல் உண்டு. ஆங்கிலத்தில் mortal என்ற சொல்லுக்கு நிகரான சொல். மனிதன் என்பது பொதுவான சொல். மனிதனை ’மர்த்யன் (மரணமுள்ளவன்)’ என்று அழைத்தால் ’ தற்காலிகமான இருப்பு கொண்டவன் ‘ ’அழியக்கூடியவன்’ என்ற தொனி உருவாகிறது.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.