இசை கவிதைகள்

ஓவியம் : ஆலாப் – எம்.எப்.ஹீசைன்

ஒருமையை உழுகையில் முதல் போகம் விளைகிறது

மரியாதை
மிகவும் மரியாதையானது

உயர்தரத்து வாசனை திரவியம்
பட்டுச் சரிகையின் டாலடிப்பு
வானளாவிய கட் அவுட்
கீழ்படிதலுள்ள மாணவனின் விண்ணப்பம்

காதலோ
சேற்றுப் பன்றிகளின் கும்மாளம்
ஒருவர் மீது ஒருவர் ஏறிப்படுக்கும்
இட நெருக்கடி

மரியாதையின்
பாதுகாப்பான இடைவெளியிலிருந்து
காதலின் கட்டற்ற களிப்பிற்கு
மெல்ல
அழைத்துச் செல்கிறது
ஒருமை

‘டா’ வும், ‘டி’ யும்
முதன்முறை
மூக்குரசிக் கொள்கையில்
சடசடத்ததெதுவோ
அதைத் தேடித்தான்
படுக்கையைக் கிளறுகின்றன
இரண்டு அம்மண உடல்கள்.

000

பார்த்திருத்தல்

“வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?”

என்று கேட்டான் ஒரு நண்பன்.

அந்தக் கேள்விக்கு
விரிவாக விடையளிக்கும் தோரணையில்

நானும்
அண்ணாந்து பார்த்தேன் வானத்தை

அவன்
பதிலறிவதற்காகக் கேட்கவில்லை.

நானும்
பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை

000

‘ஆலாப்’பில் மிதக்கும் அலுவலகம்

எவனோ ஒருவன்
காற்றில்
ஒரு ‘ஆலாப்’பை ஏற்றி விட்டிருக்கிறான்

அது
ஒரு அரசு அலுவலகத்துள் நுழைகிறது

கோப்புகள் கலைகின்றன
தாள்கள் படபடக்கின்றன

நிலம் குலுங்குகிறது
ஒருவரும் அலறவில்லை

கண்ணாடிகள்
உடைந்து நொறுங்கியதில்
பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

அசையாத உறுதியால்
சபிக்கப்பட்டிருந்த
படிக்கட்டுகள்
எழுந்து பறக்கின்றன

நாற்காலியின்
ஒரு கால் உடைந்து
தலைகுப்புறச் சாயும் ஒருவன்
தெய்வத்தின் மடியில்
சரிகிறான்

அதோ அந்த
இளநிலை நிர்வாக அலுவலர்
இதற்கு முன்பும்
எத்தனையோ முறைகள்
அழுது தீர்த்தவர்தான்

ஆனால்

ஏன் அழுகிறோம்
என்பதே அறியாமல்
அவர்
இப்படி அழுவது
இதுவே முதன்முறை.

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. வானம்- எத்தனை நீலம்! எத்தனை நீளம்!. நிறம், ஒளி, விரிவு ஆழம் என அன்றாடம் மாறிக் கொண்டே இருந்தாலும் மாறாதது வானத்தின் நிரந்தரம். ஏனோ வானம் நமக்கு சலிப்பூட்டுவதே இல்லை.
    பார்த்தது போதுமென தோணி கண்களை மூடிக்கொண்டாலும் கவியும் கருமையும் வானமே. அழகான கவிதை. ❣️

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss