குறிப்பு: கட்டுரையாளர் உளவியல் வல்லுனர் அல்லது அஞர்*(trauma) நிபுணர் அல்ல. இது மருத்துவ கட்டுரையும் அல்ல. மாறாக அஞர் குறித்த நவீன உளவியல் ஆய்வுகள், ஆய்வாளர்கள் பற்றிய அறிமுக கட்டுரை மட்டுமே. மேலும் அதிக புரிதலுக்கு வாசகர்கள், இந்த கட்டுரையில் குறிப்பிட்டப்பட்டிருக்கும் புத்தகங்களை வாசிக்க பரிந்துரைக்கிறார் கட்டுரையாளர். |
1.
நரம்பணுக்களின் வலிமை, எனும் கட்டுரையினை, “ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு நோயின் பிடியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது, கிருமிகளின் காலம் என்று ஒன்று இருந்தது…நாம் தற்போது நரம்பியல் நோய்களின் காலத்தில் வாழ்கிறோம்” என்று தொடங்கியிருப்பார் மெய்யியலாளர் பியுங் சுல் யான்.
உடல் அல்லது நரம்பணு இன்னல்களை நோய் என்று மட்டும் புரிந்து கொள்வது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது என்கிறது, தற்கால ஒருங்கிணைத்த உடல்மன மருத்துவ அறிவியல். உற்பத்தி உறவுகளால் மட்டுமே அனைத்தும் தீர்மானிக்கப்படும் நம் காலத்தில், பெரும்பான்மையான மனித சமூகம் மனநல அல்லது நரம்பணு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுயிருகிறது எனும் பியுங் சுல் யானின் கருத்தாக்கம் இன்றைய மனிதர்களையும் அவர்களின் சிக்கல்களையும் புரிந்துக்கொள்வதற்கு அடிப்படையாக இருக்கிறது.
இன்றைய சமூகத்தில் நரம்பணு இன்னல்கள் இல்லாத மனிதர் எவரேனும் இருப்பார்கள் என்று நம்புவது அபத்தமானது. நரம்பணு இன்னல்களை மரபான மனநல அறிவியல் சொல்லும் மனநோய்கள் என்று மட்டுமான பார்வையாக இல்லாமல் அவற்றை தாண்டி அஞர்(trauma) எனும் மனநிலையை மனித இருப்பின் ஒருங்கிணைந்த ஒன்றாக அனுகுவதே நரம்பணு இன்னல்களை புரிந்து கொள்வதற்கு சரியானதாக இருக்கமுடியும்.
அஞரை ஏன் உளவியல்/நரம்பணு இன்னல் என்பதை அறிய, அதன் ஆங்கில பதமான டிராமா எனும் வார்த்தையை பற்றிய புரிதல் தேவையானதாக இருக்கும். டிராமா எனும் ஆங்கில சொல்லின் மூலம் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. கிரேக்க மொழியில் டிராமாவின் பொருள், இரணம் அல்லது காயம் என்பதாகும்.
பிறந்த நாள் முதல் இயற்கையான மனித தேவைகளை, இயல்புகளை நிராகரித்து, வலுக்கட்டாயமாக ஒரு குழந்தை மீது திணிக்கப்படும் சமூக எதிர்பார்புகள், நிர்பந்தங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுத்தும் வடுக்கள் அஞராக (trauma) அக்குழந்தையின் அகம் மற்றும் அதியகதில் (super ego, id) பதிந்து விடுகிறது. அது உருவாக்கும் அழுத்தம் மற்றும் வன்முறை ஒருவரின் வாழ்க்கை முழுவதும் உடல் மற்றும் மன சிக்கல்களை ஏற்படுத்துகிறது, அதுவே அஞர் எனப்படும் மனக்காயம் என்று குறிப்பிடுகின்றன நவீன ஆய்வுகள்.
அஞரை நமது இன்றைய பொது மொழியில் கவர்ச்சிகரமான சொல்லாடலாக பயன்படுத்தப்படும் வகையில் அணுகுவதும் பொருத்தமானதாக இருக்காது. காரணம் நாம் அஞர் என்று அழைக்கும் பலவும் ஒருவரின் மன அழுத்தம் சார்ந்தவை (stress). எடுத்துகாட்டாக நான் அஞரை உருவாக்கிய ஒரு திரைப்படத்தை கண்டேன் என்று பொது மொழியில் சொல்கிறோம். ஆனால், ஒரு திரைப்படம் அதனளவில் எவர் ஒருவருக்கும் அஞரை உண்டு செய்யும் வலிமை கொண்டது அல்ல, ஆனால் ஒரு திரைப்படம் நினைவைவிட்டு நீங்காமல் பதிந்துவிட்ட காயங்களை கிளறி அதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்தும் வலிமை உடையது. ஒரு திரைப்படத்தால் மனதில் பிரதிபலிக்கும் அந்த உணர்வு மனஅழுத்தமேயன்றி மனக்காயம் அல்ல.
அஞரும் மன அழுத்தமும் ஒன்று போன்றே தோன்றினாலும், ஒருவரின் மனநிலையை பற்றி பேசும் சொற்களாகவே இருந்தாலும் இரண்டுக்குமான இடைவெளியை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மன அழுத்த நிகழ்வுகள் அஞராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அஞர் நிச்சயம் தொடர்ந்து மன அழுத்தம் தருவதாக இருக்கும்.
2.
அகம் பற்றிய உரையாடல் மனித சமூகத்துக்கு புதிய ஒன்றல்ல. பூர்வகுடி சமூகங்களில், இயல்பாக மனிதர்களின் அகம் பற்றிய புரிதல் விரிவாக இருந்தது, குறிப்பாக தொல்குடி அமெரிக்க சமூகங்கள், பூர்வகுடி ஆஸ்திரேலிய சமூகங்களில் தீர்க்கமான புரிதல் இருந்ததை தற்போது கிடைக்கப்பெறும் மானுடவியல் தரவுகள் உறுதி செய்கின்றன. இந்திய பரப்பில், பெளத்த மெய்யியல் மனித அகத்தை மையமாக கொண்டே உருவாகியிருக்கிறது என்பதை, புத்தரின் சொற்பொழிவுகள் மற்றும் நாகார்ஜூனர், திக்நாகர், சந்திரகீர்த்தி போன்றோரின் படைப்புகள வழியே அறிய முடிகிறது. “அனைத்துக்கும் மனமே முன்னோடி” என்ற புத்தரின் வார்த்தைகளையே தம்மபதத்தின் தொடக்கமாக சங்கம் தொகுத்தது.
ஐரோப்பிய மறுமலர்ச்சியே அறிவு யுகத்தின் தொடக்கம் என்று இன்றுவரை நிலவும் அதிகாரமிக்க கட்டுக்கதை, உளவியலிலும் வெளிப்படுவது அதிசயம் அல்ல. ஐரோப்பிய மையவாதம் சிக்மண்ட் ஃப்ராய்டை உளவியலின் தந்தையாக்கியது. கார்ல் ஜூங்கை மற்றும் ழாக் லகானை ஃப்ராய்ட் வழித்தோன்றிய உளவியலின் ஆட்சி பீடங்களாக்கியது. ஜூங்கும் லகானும் ஃப்ராய்ட் வரையறை செய்த உளவியலின் உள்ளிருந்து, அவரின் உளவியல் அடிப்படைகள் பலவற்றையும் நிராகரித்தார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை என்றாலும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை ஃப்ராய்டிய உளவியலை கேள்விக்கு உட்படுத்தும் எந்த ஒரு முழுமையான ஆய்வும், விவாதமும் உருவாகவில்லை. ஃப்ராய்டிய உளவியலுக்கு எதிராக கருத்து சொல்வது என்பதே அறிவிலிதனமாக கருதப்பட்டது – இன்று வரையும் அது தொடர்கிறது என்பதே அறிவியல் நகைமுரண்.
ஃப்ராய்டிய உளவியலை முதன் முதலாக கேள்விக்கு உட்படுத்தி நிராகரிக்க, இரண்டாம் பெரும் யுத்தம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது, அதற்கு வேறு ஒரு ஐரோப்பியர் தேவைப்பட்டார் – ஏற்றுக்கொள் முடியாத கருத்தாகவே இருந்தாலும், அது ஐரோப்பிய கருத்தாக இருக்க வேண்டும் என்பது தானே அறிவொளி. போலந்தில் பிறந்து, போரில் யூத முகாமில் அடைபட்டு, பின்பு அங்கிருந்து தப்பி புலம்பெயர்ந்தவராக சுவிஸ்லாந்து வந்த உளவியல் மற்றும் சமூகவியல் அறிஞரான ஆலிஸ் மில்லர், பிடிவாதமான ஃப்ராய்டிய நம்பிக்கையை நிராகரித்த முதல் அறிவியலாளாளர் என்பதை உறுதியாக சொல்லலாம்.
நரம்பணு சிக்கல்களின் தோற்றத்தை, குறிப்பாக ஸ்கிசோஃப்ரினியா எனப்படும் மனசிதைவு இன்னலின் காரணத்தை தேட முனைந்த ஃப்ராய்ட்டின் சம கால உளவியலாளர்கள் சிலர் – குறிப்பாக ஜூடித் ஹெர்மன், ஃபிரிடா ரீச்மான் போன்றறை சொல்லலாம், மனநோயியல் மற்றும் அஞர் இரண்டுக்குமான தொடர்புகளை நவீன அறிவியலில் முதன் முறையாக முன்வைத்தனர்.
அஞர் குறித்த இந்த கோட்பாட்டு மாதிரியுடன் குழந்தைபருவ வாதைகளை இனைத்து முழுமையான அறிவியல் கொள்கையாக ஆலிஸ் மில்லர் மாற்றினார். அதுவரை காரணங்கள் புரியமால் மருத்துவ அறிவியலின் விளிம்பில் கிடத்தப்பட்டிருந்த மனநல நோயாளிகள் பற்றிய உரையாடல் முதன் முதலாக அவர்கள் வாழ்வின் மையத்தில் நிகழ்ந்தது. முக்கியமாக இந்த உரையாடல்களை அறிவியல் ஆய்வு மேசைகளில் மட்டும் நிகழ்த்தாமல் தனது எழுத்து மற்றும் உரையடல்கள் வழியாக நேரடியாக பொது மக்களிடம் கொண்டு சேர்த்தார் ஆலிஸ். ஃப்ராய்ட் எனும் அதிகார பீடத்துக்கு எதிராக கூக்குரலிட்டு எழுதியும், பேசியுமே இறந்து போன ஆலிஸின் மிக முக்கிய படைப்புகளாக “The Drama of a the gifted child” மற்றும் “The Body Never Lies” எனும் இந்த இரண்டு புத்தகங்களை கருதலாம்.
அவரை தொடர்ந்து வந்த நவீன அறிஞர்களான, பெசல் வென் தே கோல்க், கபோர் மேட், ரெஸ்மா மெனகெம் முதலானோர் அஞர் கோட்பாட்டை வெகு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். பெசல் வென் தே கோல்க் எழுதிய உடல் கணக்கை சேமித்து வைத்திருக்கிறது (the body keeps the score), மற்றும் கபோர் மேட் டேனியல் மேட் இணைந்து எழுதிய சாதாரணம் எனும் கட்டுக் கதை (myth of normal) மற்றும் ரெஸ்மா மெனகெம் எழுதிய என் பாட்டியின் கைகள் (My Grandmother’s Hands) போன்ற புத்தகங்களை குறிப்பிட்டு சொல்லவேண்டி இருக்கிறது.
அஞர் குறித்த இவர்களின் அறிவியல் பார்வை வெறும் மனநல சிக்கல் என்பதாக மட்டும் இல்லாமல், அஞர் எவ்வாறு உடலியல் சிக்கல்களையும் தோற்றுவிக்கிறது என்பதை நீண்ட ஆய்வுகளின் மூலம் விளக்குகின்றனர். அதுமட்டுமல்லாது மனகாயங்களின் ஆற்றுதலையும் (healing) அதன் வழிமுறையையும் விவாதிக்கின்றனர். அவை வெறும் வேதியியல் குளிகைகளாக மட்டுமல்லாது, ஒருங்கினைந்த மருத்துவ அறிவியலாக இருக்கிறது.
ஒருங்கினைந்த மருத்துவ அறிவியல் கலவையில் பூர்வகுடிகளின் அகம் குறித்த கருத்தாக்கங்கள், அவர்களின் ஆற்றுதல் வழிமுறைகள், சமூக இணைப்புகளின் முக்கியத்துவம்,, இயற்கையுடனான மனிதர்களின் இழந்துவிட்ட உறவு, குழந்தைக்கு வளர்ப்பு ஏன் தனிநபர் பணியல்ல சமூக கடமை, நவீன மருத்துவ அறிவியல் என்று பல்வேறு கருத்தாக்கங்கள் அனைத்தும் இனைந்தே இயங்குகிறது.
போலிச் செய்திகள் நிரம்பிய சமூக ஊடக காலத்தில் போகிற போக்கில் போலி அறிவியலை பேசுவதற்கான பல்வேறு திறப்புகளை கையளிப்பதாய் சில இடங்களில் தோன்றினாலும், இவர்கள் முன்வைக்கும் ஆற்றுதல் வழிமுறைகள் ஆழமான அறிவியல் தரவுகளின் பின்புலத்திலே வெளிவருகிறது. அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் இடைய எப்போதும் இயங்கும் மெல்லிய திரை இந்த கோட்பாடுகளிலும் வெளிப்படுவது மறுப்பதற்கில்லை.
இவர்களின் விளக்கங்கள் அனைத்தும் பல நேரங்களில், உளவியல் குறித்து எந்த போதிய அறிவும் இல்லாத எவரும் புரிந்துக்கொள்ள கூடியதாகவும் இருக்கின்றது. அதற்கு காரணம், மிகவும் எளிமையானது கபோர் மேட் சொல்வதை போல் என் உடல் குறித்து எனக்கு மட்டும் அதிகம் தெரிந்து இருக்கும், எனது உடல் சொல்வதை கேட்பதற்கு எனக்கு எந்த அறிவியல் ஞானமும் தேவையில்லை, உடல் சொல்வதை கேட்டால் போதும்.
3.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் இரண்டு அடிப்படை எதிர்பார்ப்புக்கள், உணவு மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுத்தல். சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதை சார்ந்தே ஒரு குழந்தையின் மீது சமூக நிர்பந்தங்களும் வன்முறைகளும் எதிர்பார்ப்புகளும் கட்டமைக்கப்படுகின்றன. சமூகத்தால் தனித்து விடப்பட்ட கூடாது என்பதற்காகவே பிறந்தது முதல் ஒரு குழந்தை சமூகத்தை திருப்திபடுத்துவதை தொடங்கிவிடுகிறது.
குறிப்பாக ஒரு குழந்தையின் முதல் சமூக நபர்களாக இருக்கும் பெற்றோர்களை திருப்தி செய்வதே அக்குழந்தையின் முதல் தேவையாக இருக்கிறது. ஒருவேளை தனது தாயை திருப்தி செய்ய முடியாமல் போனால் தனது இருப்பின் அடிப்படையான உணவு மற்றும் பாதுகாப்பு கிட்டாமல் போய்விடும் எனும் அச்சம் அந்த குழந்தையை தனது தாயின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள பழக்குகிறது
எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தையின் இயற்கையான உரையாடல் மொழி அழுகை ஆனால் இன்றைய கலாச்சாரம் அழும் குழந்தைகளை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட சொல்கிறது. அழுது சோர்ந்து தானாக ஓய்ந்துவிடுகிறார்கள் பல குழந்தைகள். அதுவே குழந்தைகளை நல்வழி படுத்துவதற்கான வழிமுறை என்றும் நம்பப்படுகிறது. இல்லையெனில் குழந்தை பிடிவாதம் கொண்டவர்களாக வளர்வார்கள் என்று நம்பப்படுகிறது.
தன்னிடமிருக்கும் மொழி வாயிலாக தனது தேவையினை வெளிப்படுத்தியும் அது பெற்றோரால் கவனம் செலுத்தப்படாமல் விடப்பட்டதினால் உருவாகும் நிராகரிப்பின் வடு குழந்தையின் ஆள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடுகிறது. பின்னாட்களில் அக்குழந்தை தனது அடிப்படை தேவைகளை தனது பெற்றோரின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறது. இதன் பொருள் அந்த குழந்தை மொத்தமாக அழுகையை நிறுத்திவிடும் என்பது அல்ல மாறாக தனது அழுகை மொழியை தனது பெற்றோருக்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொள்கிறது என்பதே. இதன் நகைமுரண் என்னவெனில் இது அனைத்தும் பெரும்பான்மையான நேரங்களில் ஒரு குழந்தையை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் செய்யும் குழந்தை வளர்ப்பு வழிகளாகவே கருதப்படுவது தான்.
அழுகை எனும் உணர்வு நம் சமூகங்களில் ஒருவரின் பால் அடையாளங்களுடன் பொருத்தி பார்க்கப்படுகிறது. அழுவது கோழைத்தனம் என்று சொல்லி ஆண் என்று அடையாளப்படுத்தப்படும் குழந்தைகளின் அழுகை எனும் உணர்வை மழுங்கடிக்க செய்கிறது. பெண் என்று அடையாளப்படுத்தப்படும் குழந்தைகள் அழுவதுவே பெண்மை என்று அனைத்துக்கும் கண்ணீர் சிந்த சொல்கிறது. இந்த இரண்டு பால் அடையாளங்களை தாண்டி மற்ற பாலீனங்கள் குறித்து எந்த அக்கறையும் நம் சமூகத்துக்கு இல்லை என்பதையும், அதனால் உருவாகும் அஞர் பற்றியும் விவாதிக்க இன்னும் நிறையவே இருக்கிறது.
அஞர் (trauma) எனும் வார்த்தையை நாம் கேட்டவுடன் மனதில் தோன்றும் நிகழ்வுகள் பெரும்பாலும் அதித வன்முறைகளால் நிரம்பியவையாகவே இருக்கும். சாதிய, இன, நிற, பால், பாலீரிப்பு அடக்கு முறைகள், போர்கள், பாலியல் வன்முறைகள், கொலைகள் என்று ஒரு நீண்ட பட்டியலை சொல்ல முடியும். நிச்சயம் ஒருவர் மீது இந்த நிகழ்வுகள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது.
இப்பெரும் நிகழ்வுகளை தாண்டி, நாம் மிகவும் சாதாரன நிகழ்வுகள் என்று கடந்து செல்லும் நாள்தோறும் நடக்கும் சம்பவங்களே மேலே சொன்ன வன்முறைகளை காட்டிலும் ஒருவரின் வாழ்வில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டவை என்கிறார் ஆலிஸ் மில்லர். இவை குறித்து பெரும்பான்மையாக எந்த விவாதங்களும் நடப்பதில்லை. எடுத்துக்காட்டாக, தமிழக கல்விமுறையில் அல்லது குழந்தை வளர்ப்பில் மிக சாதாரணமானதாக கருதப்படும் அடித்து நல்வழி படுத்துதல் அல்லது தண்டனைகள் மூலம் ஒரு மாணவரை படிக்க வைத்தல் எனும் அணுகு முறைகளை சொல்லலாம்.
பெசல் வென் தே கோல்க் (Bessel van der Kolk) உடல் கணக்கை சேமித்து வைத்திருக்கிறது (the body keeps the score) எனும் தனது பிரபலமான நூலை, ஒருவருக்கு அஞர் உருவாக்குவதற்கு அவர் ராணுவத்தில் இருப்பவராகவோ, அல்லது புலம்பெயர்ந்த சிரியராகவோ அல்லது காங்கோவில் பிறந்தவராகவோ இருக்க தேவையில்லை. நாம், நமது நண்பர்கள், நம்மை சுற்றி இருப்பவர்கள் என்று அனைவறிலும் அஞரின் பெருந்தாக்கம் இருக்கிறது என்று தொடங்கி இருப்பார். அஞர் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் குறிப்பாக பதின்பருவம் வரை நிகழும் உடல், மன ரீதியான வன்முறைகளால் உருவாகி நீங்காமல் பதிந்துவிடுகிறது.
உடல், மன ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படாத – குறிப்பாக பெற்றோரின் வன்முறைகளால், குழந்தை இன்றைய உலகில் இருக்கிறதா என்று கேள்வி கேட்பதே முரணானது. ஏனெனில் நாம் அனைவருமே நம் பெற்றோரின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே. நம் பெற்றோரும் அவர்கள் பெற்றோரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆற்றுப்படுத்தபடாத குழந்தைகளே. குழந்தை பருவ வன்முறைகளால் உருவாகும் அஞர், பின்பு அதுவே ஒருவரின் சமூக மற்றும் தனிப்பட்ட இயக்கத்தின் முழுமையான இயங்கு சக்தியாக அடையாளமாக மாறிவிடுகிறது. அதன்பின் ஒருவர் வாழ்வில் நிகழும் பெரும்பான்மையான நிகழ்வுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுகிறது.
ஆனால் அஞர் குறித்த விவாதத்தின் முக்கியமான சிக்கல் பெற்றோர்களை கேள்வி கேட்பதில் இருக்கிறது. நாம் அனைவரும் பெற்றோர் மீது பயபக்தியுடன் இருக்கிறோம், அவர்களின் புனித தன்மைக்கு எதிராக சிந்திப்பது என்பதே கூடாத ஒன்றாக இருக்கிறது. ஆலிஸ் மில்லர் சொல்வதை போல் நாம் யாரும் மோசஸின் நான்காவது கட்டளையை மீறுவதேயில்லை. பெற்றோர் மற்றும் குழந்தை வளர்ப்பு எனும் இரண்டு சமூக புனிதங்களை முதலில் உடைப்பதே அஞர் குறித்த உரையாடலுக்கான தொடக்கமாக இருக்க முடியும். ஒரு தாய் அல்லது தந்தை, யாரோ ஒருவர் உங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு உங்களை வாயை முடி இருக்க சொல்வது புனிதமல்ல. நீங்கள் தேர்வில் தோல்வியுற்றதுக்கு அடித்து தண்டனை கொடுப்பது குழந்தை வளர்ப்பு அல்ல. மாறாக உங்கள் மீது நடந்தேறிய வன்முறையை அல்லது உங்கள் திறனை அவர்கள் ஏற்றுக்கொண்டு உங்களை காது கொடுத்து கொடுப்பதே குழந்தை வளர்ப்பின் அடிப்படை.
நமது சமூக அமைப்புமுறைஇதற்குகெல்லாம் யாருக்கும் நேரம் கொடுக்கவில்லை. யாரும் யாருடனும் பேசுவதற்கான எந்த ஓய்வு நேரமும் இல்லாத வாழ்க்கையை தான் வாழ்கிறோம் என்பது உண்மை என்றாலும் இது எல்லாம் அந்த குழந்தைக்கு தெரியாது. குழந்தைகள் அறிவது எல்லாம் தான் பாதுகாப்பாக இல்லை அல்லது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமே.
இந்த வன்முறைகளை சமூகத்தில் நிகழும் இயல்பான சம்பவங்கள் அல்லது பிள்ளைகளை கண்டிக்காத பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று நாம் சொல்லி கொண்டாலும் அவ்வன்முறையும், கண்டிப்பும் உருவாக்கும் அச்சம் மற்றும் வடு ஒருவரின் மரணம்வரை கூட பயணிக்கிறது. மேலும் அதிகமாக இந்த மனக்காயங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. குழந்தை பருவத்தில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் ஒரு குழந்தை, வளர்ந்தபின் தன் மீது நிகழ்ந்த தாக்குதலை மற்றவர் மீது தொடுப்பவராக மாறிவிடுகிறது. அந்த தாக்குதல் கிட்டாத பெற்றோர் அன்பின் அரவணைப்பின் மீதான ஏக்கமாக வெளிப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, அம்மாவை போன்ற காதலியை, அப்பாவை போன்ற காதலர்களையே பெரும்பான்மையான நாகரிக மனிதர்கள் தேடுகிறோம். அம்மாவிடவும், அப்பாவிடவும் கிட்டாத அன்பை காதலர்களிடம் எதிர்பாக்கிறோம். கிட்டாத அந்த அன்பின் ஏக்கமே பல நேரங்களில் காதலர்கள் மீதான வன்முறையாக வெளிப்படுகிறது.
பிறகு எப்படி குழந்தைகளை வளர்ப்பது? எப்படி நல்வழிப்படுத்துவது எனும் கேள்வி இயல்பாக எழும். நாம் தண்டனைகளின் சமூகத்தில் வாழ்கிறோம், தண்டனைகள் இல்லாமல் இந்த உலகில் எந்த ஒரு அறத்தையும் செயல்படுத்த முடியாது எனும் நம்பிக்கையை, இறுகிப்போன சமூக மனம் நம்முள் உருவாக்கி வைத்திருக்கிறது. அதை புரிந்துக்கொள்ள நீண்ட தொல்லியல், மானிடவியல் விளக்கங்கள் தேவைப்படும்.
சுருக்கமாக சொல்வது என்றால், மனித சமூகமயமாக்கல் கடுமையான தண்டனைகளை கொண்டு அரங்கேறுவது ஒரு சில ஆயிரம் வருடத்தின் கதை ஆனால் நாம் குறைந்தது மூன்று லட்சம் வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். நம் வாழ்வின் பெரும்பான்மை நாம் தண்டனை சட்டங்களால் வழிநடத்தப்படவில்லை மாறாக நாம் நம்மிடம் இயங்கும் இயற்கையான கூட்டு இருப்பு எனும் உணர்வால் வழிநடத்தப்பட்டோம்.
ஒருவரின் அஞருக்கு பெற்றோரே முதன்மை காரனம் என்று சொன்ன ஆலிஸ் மில்லரின் கோட்பாட்டை மேலும் விரிவடைய செய்து, பெற்றோர் உட்பட மனிதர்களின் உளவியலை கட்டமைக்கும் சமூக காரணிகளை பற்றி விரிவாக கபோர் மேட் எழுதுகிறார். குறிப்பாக சமூக பாகுபாடுகள் மற்றும் உற்பத்தி உறவுகளின் சமூக அமைப்பு உருவாக்கிய தனித்துவிடப்பட்ட வாழ்வுமுறை அது உண்டாக்கும் மனக்காயங்கள் எவ்வாறு குழந்தை வளர்ப்பில் பிரதிபளிக்கிறது என்பதையும், அவை நேரடியாக ஒருவர் மீது உண்டாக்கும் தாக்கம் என்ன என்பதையும் பல இடங்களில் தனது போர்க்கால நினைவுகளை கொண்டும், புலம்பெயர் வாழ்வை முன்வைத்தும் விவாதிக்கிறார்.
சமூக அடக்குமுறைகளும், முரண்களும் மனிதர்களில் உருவாக்கும் காயங்களையும், அதன் ஆற்றுப்படுத்தும் முறைகளையும் ரெஸ்மா மெனகெம் எழுதிய என் பாட்டியின் கைகள் மிக விரிவாக பேசி இருக்கிறது. இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களில் என்னவில் மிக முக்கியமானது என் பாட்டியின் கைகள்.
இன்றைய சமூக அமைப்பு மனிதர்களை ஓய்வென்பதே இல்லாமல் துரத்துகிறது. எதை நோக்கி ஓடுகிறோம் என்பதை அறியாமலே கடைசி வரை ஓடி களைத்து இறந்துபோகும் வாழ்க்கையில் நம்மை பற்றி யோசிக்க, அடுத்தவர் குறித்து நினைத்து பார்க்க, சமூகத்துடன், குழந்தைகளுடன் இணைத்து வாழ எந்த வழியும் இல்லாது, இயந்திரங்களுடன் போட்டிபோடும் இயந்திரங்களாய் செயல்படுகிறோம். இந்த வாழ்க்கை முறை உருவாக்கும் பதட்டம், மன அழுத்தம் நம்மை மீள முடியாத சுழலுக்குள் சிறைப்படுத்திவிடுகிறது.
4.
அஞர், மன இன்னல்களை மட்டுமல்லாது, ஏன் அல்லது எவ்வாறு உடலியல் இன்னல்களையும் ஏற்படுத்துகிறது என்பதே நவீன உளவியலாளர்களின் ஆய்வின் முக்கியத்துவம். அஞர் உண்டாக்கும் உளவியல் சிக்கல்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் ஓரளவேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றாலும், அஞருக்கும் உடல் சிக்கல்களுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்புகளை இன்னும் மரபான மருத்துவ அறிவியல் ஏற்க மறுக்கிறது.
இந்த முரன், அறிவியல் எனும் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பில் இயங்குகிறது. ஸ்தூல நிலையில் நிரூபிக்கப்பட்ட ஒன்றையே உண்மை என்று ஏற்கும் அறிவியல், குவாண்டம் இயங்கியல் போன்ற நிலைகளில் அதன் சார்பியல் இயக்கங்களை ஸ்தூலமாக நிரூபிக்க இயலாத சிக்கலிலும் சிக்கிக்கொள்கிறது. இதே அணுகுமுறை தான் மருத்துவ அறிவியலிலும் நிகழ்வதை பார்க்கலாம். மருத்துவ அறிவியலும் ஸ்தூலமான காரணிகளையே தேடுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவரின் கல்லீரல் வேலை செய்யாமல் போக மது பழக்கம் காரணமாக இருக்கிறது. அவர் ஏன் மதுவுக்கு அடிமையானார் எனும் கேள்வியை மரபான மருத்துவ அறிவியல் கேட்க மறுக்கிறது என்பதே நவீன உளவியலாளர்கள் மற்றும் அஞர் நிபுணர்களின் வாதம்.
ஒரு மனிதர் வெறும் உயிரணுக்களால் நிரம்பிய பொருள் அல்ல, மாறாக உயிரணுக்களால் உருவான உடலும், மனமும் ஒருங்கிணைந்த, தன்னை சுற்றிய உலகுடன் சார்பியல் தன்மையில் இயங்கும் உயிர். இந்த ஒட்டு மொத்த செயல்முறையும் ஒன்று சேர்ந்தே ஒருவரை மனிதராக்குகிறது. மரபான மருத்துவ அறிவியல், இயற்கையின் சார்பியல் இயல்புகளை கருத்தில் கொண்டு தன்னை தகவமைத்து கொள்ளவேண்டியதின் தேவை பெரிதும் இருக்கிறது.
அஞருக்கும், உடல் இன்னல்களுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை அறிந்துக்கொள்ள, தன்னுடல் தாக்கு நோய்கள் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய்கள், தசைநார் வலி எனப்படும் ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் போன்ற நோய்களின் மூலம் குறித்து அறிதல் ஏதுவாக இருக்கும். இந்த நோய்களுக்கான மூலக் காரணம் என்ன என்பதை இன்று வரை அறிய முடியவில்லை. குறிப்பாக தன்னுடல் தாக்கு நோய்கள் மற்றும் தசைநார் வலி இரண்டுமே மனித உடல் இயக்கத்தின் விந்தைகளாக வருகின்றன. இவை மட்டுமல்லாது இதுபோன்று பல்வேறு நோய்களுக்கான காரணிகளும் அறியமுடியவில்லை என்பது தான் அறிவியல் உண்மை.
இதன் தொடர்ச்சியாக மரபான மருத்துவ அறிவியலின் ஆன்மாவாக இருக்கும் வேதியியல் குளிகைகளின் உருவாக்கம் குறித்த சுவாரசியமான தகவலையும் நினைவில் கொள்ளவேண்டி இருக்கிறது. மருத்துவரும், மரபணு ஆய்வாளருமான சித்தார்த்தா முக்கர்ஜி தனது புலிட்சர் பரிசு பெட்ரா அறிவியல் படைப்பான, அனைத்து நோய்களின் பேரரசர் (The Emperor of All Maladies) எனும் நூலில், “இங்கிலாந்தில் துணிகளுக்கான சாயத்தை உருவாக்க தொடங்கப்பட்ட வேதியியல் ஆய்வு மேடைகள் எவ்வாறு வேதியியல் சாயத்தையும், வேதியியல் மருந்துகளையும் கண்டடைந்தன” என்று எழுதியிருப்பார். வேதியியல் குளிகைகள் பற்றிய இந்த உண்மை எப்படி மருந்தியல் இயல்பாக முதலாளித்துவ வேட்கையுடன் இணைத்துக்கொண்டது என்பதை அறிய ஏதுவானதாக இருக்கும்.
வேதியியல் மருத்துவத்தின் தொடக்கம், அதனுடன் இனைந்த முதலாளித்துவ வேட்கை மற்றும் காலனியம் உடல்நல அறிவியலில் உலகளாவிய மாற்றங்களை ஏற்படுத்தியது. வேதியியல் மருந்துகளே அனைத்துக்கும் தீர்வு எனும் புது உண்மை நிறுவப்பட்டது. அதன் தாக்கம் உளவியலிலும் பிரதிபலிக்கிறது. அனைத்து விதமான உளவியல் சிக்கல்களையும் வெறும் நோய்கள் என்று அணுகுவதும் அனைத்து மன சிக்கல்களுக்கும் தீர்வுகளாக வேதியியல் மருந்துகளை மட்டும் முன்வைப்பதும் வழமையானதாக இருக்கிறது.
வேதியியல் மருந்துகள் பல்வேறு சமயங்களில் உதவிகரமானதாக, அவசரகால உதவிகளாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவை மட்டுமே அனைத்துக்கும் தீர்வு என்று முன்வைப்பதும், பல்வேறு மனித சமூகங்களில் இருந்த உடல் மன புரிதல்களை நிராகரிப்பதும் அலோபதி மருத்துவ முறையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவத்தின் சிக்கல். அறிவியலுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ‘ஒற்றை கோட்பாடு’ அனைத்துக்கும் தீர்வு என்ற அணுகுமுறை நவீன உடல்நல அறிவியலின் விந்தை மட்டுமல்லாது மற்ற அனைத்தையும் காட்டுமிராண்டித்தனம் என்று நிராகரித்த/க்கும் மேற்கு மனநிலையின் நீட்சி என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
மருத்துவ முதலாளித்துவம் மரணம் மீதான மனிதர்களின் அச்சத்தை மூலதனமாக கொண்டே இயங்குகிறது. நவீன மருத்துவ அறிவியலின் போதாமையை பேசுவது என்பது அதை முழுமையாக நிராகரிப்பதாக ஆகிவிடாது என்றாலும், நவீன சமூகங்கங்கள் முழுமையாக முதலாளித்துவ உற்பத்தி உறவுகளால் மட்டுமே இயங்குவதும், தனிமனித உறவுகள் உட்பட அனைத்தும் வெற்றி தோல்வி, லாப நஷ்ட கணக்குகளாக மட்டுமே பார்க்கும் அணுகுமுறையும், மனிதர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தனிமை மற்றும் இருப்பின் மீதான வெறுமை சமூக அமைப்பு முறைக்கு எதிரான உரையாடலாக உருவாகாமல், நவீன மருத்துவ அறிவியலுக்கு எதிரான வாதத்துக்கு ஆதரவான போலிச் செய்திகள் மற்றும் போலி அறிவியலின் உற்பத்திக்கு ஆதாரமாக மாற்றிவிடுகிறது.
தன்னுடல் தாக்கு நோய்கள் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய்கள் ஏன் 80% பெண்களை மட்டுமே தாக்குகிறது எனும் கேள்விக்கு மரபான உடல்நல அறிவியலிடம் பதில் இல்லை. காரணம் மிக எளிமையானது: மரபான உடல்நல அறிவியல் தீர்வுகளை மட்டுமே தேடுகிறது, பெரும்பான்மையான ஆய்வுகள் நோய்க் காரணிகளை மனிதரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தேடாமல் வெறும் பொருளியல் காரணிகளை நோக்கிய தேடலாகவே இருக்கிறது. அதை கொண்டு பல நோய்களுக்கான மூலத்தை அறிய முடியாது என்று சொல்லும் கபோர் மேட், தன்னுடல் தாக்கு நோய்களுக்கு காரணங்கள் ஒருவரின் சமூகம் மற்றும் வாழ்வில் இருக்கிறது என்கிறார். குறிப்பாக இந்த நோய் வெளிப்படும் மனிதர்கள் ஒரே மாதிரியான சமூக பண்புகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
- அவர்கள் தங்கள் தேவைகளை, உணர்வுகளை புறம்தள்ளி அடுத்தவரின் தேவைகளை முதன்மையானதாக கருதுவார்கள்.
- தங்கள் மீது திணிக்கப்பட்ட கடமைகளை, சமூக பாத்திரங்களை தங்கள் அடையமாக கருதுவார்கள்.
- அடுத்தவரிடம் நல்ல பண்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக பெரும்பான்மையான தங்களின் ஆரோக்கியமான கோபங்களை கூட மறைத்துக் கொள்வார்கள்.
- அடுத்தவரின் உணர்வுகளுக்கு தங்களை பொறுப்பாக கருதுவார்கள்.
இந்த பண்புகளிலிருந்தே ஏன் இந்த நோய்கள் 80% பெண்களுக்கு வருகிறது என்பதை அறிய முடியம். ஏனெனில் இந்த பண்புகள் அனைத்தும் பெண்களின் கடமைகளாக , பண்புகளாக சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்று எழுதுகிறார் கபோர் மேட். இன்றைய நவீன மருத்துவ அறிவியலில் தன்னுடல் தாக்கு நோய்கள் எவற்றுக்கும் தீர்வுகள் இல்லை, மாறாக இந்த நோய்கள் உண்டாகும் வழிகளை, அறிகுறிகளை மட்டுப்படுத்தி வைப்பதற்கான வழிமுறைகள் மட்டுமே இருக்கின்றன. இதுவே தசைநார் வலி எனப்படும் ஃபைப்ரோமியால்ஜியாவுக்கும் பொருந்தும்.
நவீன மருத்துவ அறிவியலின் இன்னொரு சிக்கல், அது நோய்களை தாக்குதல் என்று பார்க்கிறது. பல்வேறு நோய்கள் பொதுவாக ஒருவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பதை விட நம் உடல் நம்முடன் உரையாடுவதற்கான வழியாக நோய்களை கையாளுகிறது என்கிறது தற்கால ஒருங்கிணைத்த உடல்மன அறிவியல். உங்கள் உடல் சொல்வதை கூர்ந்து கேட்பது நோயினை ஆற்றுவதற்கான முதல் படி. அதை விடுத்து நாம் நோய்களை மட்டுப்படுத்தி வைப்பதற்கான வேலைகளை மட்டுமே செய்கிறோம்.
ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அடுத்து எந்த யோசனையுமின்றி பாராசிட்டமாலை அருந்துவதே பலரின் முதன்மை மருத்துவமாக இருக்கிறது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறி மட்டுமே அதுவே நோய் அல்ல. ஆற்றுதலோ அல்லது தீர்வோ நோய்க்கு தான் இருக்க வேண்டுமேயன்றி அறிகுறிக்கு அல்ல. இதன் பொருள் பாராசிட்டமாலை எப்போதும் அருந்தக் கூடாது என்பதல்ல, 105 டிகிரி காய்ச்சலுக்கு பாராசிட்டமாலே உயிரை காப்பாற்றும் அவசரகால தீர்வாக இருக்கிறது.
கபோர் சொல்வதை போல் நோய்கள் ஒருவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அல்ல மாறாக நம் உடல் நாம் மறந்துபோன அல்லது மறைத்துவிட்ட பல வலிகளை நமக்கு நினைவு கூறுவதின் வழி. நம் உடலை காது கொடுத்து கேட்பதே நமக்கு நாம் செய்யும் முதன்மையான நன்மையாக இருக்க முடியும்.
5.
போதை அடிமைத்தனம் நவீன சமூக சிக்கல்களில் ஒன்று. சமூகமாக போதை அடிமைத்தனம் குறித்து நமக்கு மிக தெளிவான புரிதல் இருப்பதாக நாம் அனைவரும் நம்புகிறோம். போதை அடிமைத்தனதுக்கு காரணம் போதை பொருட்களும், அவற்றை தேடி செல்லும் அடிமைகளும் என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம். ஆனால் ஏன் ஒரு சிலர் மட்டும் அதை தேடி சென்று அந்த புதைகுழிக்குள் விழுகிறார்கள் என்ற கேள்வியை நாம் கேட்பதில்லை. இருந்தும் போதைக்கு எதிரான போர்களை தொடுக்கிறோம். ஆனால் போதைக்கு எதிரான உலகளாவிய ‘போர்கள்’ எதுவும் வெற்றி பெற்றது இல்லை. ஏனெனில் போதை அடிமைத்தனதுக்கான மூலம் போதை பொருட்களிலோ அல்லது அவற்றை தேர்ந்தெடுப்பதிலோ இல்லை என்கின்றனர் ஆலிஸ் மில்லரும், கபோர் மேட்டும். போதையை நாடி செல்லும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் போதை அடிமைத்தனத்தின் காரணம் இருக்கிறது என்கின்றனர்.
கபோர் மேட் எழுதிய ‘In the realm of hungry ghosts’ போதை பழக்கம் குறித்து எழுதப்பட்ட மிக முக்கியமான ஆய்வு நூல். கபோர் மேட் தனது மருத்துவ வாழ்வு முழுவதையும் கனடாவின் வான்கூவர் நகரத்தின் போதை அடிமைகள் வாழும் தெருக்களில் மருத்துவபணி செய்தே கழித்தவர். அவர் எழுதுகிறார், “எந்த ஒரு போதை அடிமையும் தான் போதைக்கு அடிமையாக வேண்டும் என்று அந்த கொடூரமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதில்லை மாறாக வாழ்க்கையில் குறிப்பாக குழந்தை பருவத்தில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் வலியை மறைப்பதற்கான மருந்தாகவே போதை மருந்துகளை உட்கொள்கின்றனர்.”
குழந்தைப்பருவ வன்முறைகள் உண்டாக்கும் தீராத வலியை மறைத்து வாழ்வதற்கான ஒரே வழியாக போதை பொருட்களே இருக்கின்றன என்பது தான் போதை அடிமைத்தனத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் மருந்தாக மற்றும் கிடைக்காத அன்பின் மாற்றாகயிருக்கும் போதை பொருட்கள் நாளடைவில் தீர்க்கவே முடியாத சிக்கல்களாக மரணம் வரை உடன் வருகின்றன.
பேசாமல் சோகத்துடன் பள்ளியில் இருந்தோ அல்லது உறவினர் வீட்டில் இருந்தோ வரும் ஒரு குழந்தையிடம் எந்த முன் முடிவும் இல்லாமல், அந்த குழந்தையை முழு மனிதராக மதித்து,” உனக்கு என்ன ஆகிவிட்டது, ஏன் இப்படி இருக்கிறாய் என்று ஒற்றை கேள்வி” ஒரு போதை அடிமை உருவாகாமல் போவதற்கு போதுமானதாக இருக்கும். ஆனால் ஆலிஸ் மில்லர் சொல்வதை போல், மனித சமூகத்தில் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் குழந்தைகளே. அவர்களின் உணர்வுகள், கருத்துக்கள் என்று எதற்கும் மதிப்பளிக்காமல் அவர்களை ஒரு சதை பிண்டங்களாக மட்டுமே கருதுகிறோம். நவீன மனித சமூகங்களில் குழந்தைகள் மனிதர்களுக்கு சில படிகள் கீழானவர்களே, அவர்கள் தங்கள் முன் இருக்கும் படிகளை ஏறிக் கடந்து மனிதர்களாக வன்முறை தேவையானதாக இருக்கிறது.
மனித சமூகத்தில் போதை அடிமைத்தனத்தின் முரண் என்னவெனில், சமூகம் ஏற்றுக்கொண்ட போதை, சமூகம் மறுக்கும் போதை என்று இரண்டு இருக்கிறது. பணம், பொருள், நிலம், ஆட்சி, அதிகாரம், புகழ், கடவுள்,மதம் போன்ற போதைகள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளபட்டவை. இந்த போதைகளால் பாதிக்கப்பட்ட எவரையும் நாம் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைப்பதில்லை அல்லது போதை ஆசாமி என்று சொல்லி தெருவில் ஒதுக்கி வீசுவதில்லை மாறாக அவர்களை வெற்றியாளர்கள் என்று கொண்டாடுகிறோம்.
அதுவே மது, புகையிலை, கஞ்சா, வேதியியல் போதை பொருட்களை பயன்படுத்துவோரை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். தமிழகம் போன்ற மது வெறுப்பு சமூகங்களில் குறைந்தபட்சம் மதுக்கடைகளையும் மதுவிடுதிகளையும் அடிப்படை சுத்தத்துடன் கூட வைப்பதில்லை. மாறாக அவை மனிதர்கள் புழங்குவதற்கே தகுதியற்ற இடங்களாக இருக்கின்றன. இப்படி மது குடிப்பவர்களை மனித நிலைக்கு கீழ் பார்ப்பதன் மூலம் அவர்களை திருத்திவிட முடியும் என்று தமிழ் சமூக மனம் நம்புகிறது.
போதை பொருட்களின் இருப்பை, விற்பனையை கட்டுப்படுத்துவது என்பது போதை அடிமைத்தனத்தை ஆற்றுப்படுத்தும் வேலையின் ஒரு சதவிதம் மட்டுமே என்கிறார் கபோர் மேட். தமிழகத்திலும் கூட மதுகடைகள் மற்றும் மது விற்பனையின் எண்ணிக்கையை குறைப்பது என்பது, மதுவக்கு எதிரான ‘போரின்’ ஒரு சதமே தவிர அதுவே முழு தீர்வல்ல. போதை பொருட்களுக்கு எதிரான தடைகள் அமலில் இருக்கும் பல இடங்களில் போதை பழக்கம் அதிக அளவில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, நாகாலாந்து மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்ட மாநிலம். ஆனால் அங்கு மது மிக எளிதாக கிடைக்கும் என்பதும், நாகாலாந்தின் மதுப்பழக்கம் தேசிய சராசரியை (22.4%) விட அதிகமாக இருக்கிறது (31%) என்பது தான் நிதர்சனம்.
போதை அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான வழி, வெறும் மதுக்கடைகளை மூடுவதும், போதை பொருட்களுக்கு எதிரான தடையை கொண்டு வருவதும் மட்டுமல்ல மாறாக போதை அடிமைத்தனத்துக்கு எதிரான போர் என்பது நாம் குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்பதில் இருக்கிறது.
6.
சமூகமாக நாம் நம் வாழ்க்கையை, குழந்தை வளர்ப்பை, சமூக கட்டமைப்பை மறுஆய்வுக்கு உட்படுத்தி, புதிய விடயங்கள் பலவற்றை கற்க வேண்டி இருக்கிறது, கற்ற பலத்தை மறந்து அழிக்கவும் வேண்டி இருக்கிறது. அது ஒரு நீண்ட பயணம், அந்த பயணத்தில் இரண்டு அடிப்படைகள் முதன்மையாக இருக்கின்றன ஒன்று தனி மனித ஆற்றுதல் மற்றும் சமூக ஆற்றுதல். இவை இரண்டு குறித்தும் இன்றைய உளவியல் மற்றும் அஞர் ஆய்வுகள் நிறைய விவாதிக்கின்றன. ஒருங்கிணைத்த மருத்துவ வழிமுறைகளை, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இயற்கையுடன் ஒருங்கிணைத்த வாழ்வு என்று பலவற்றை ஆய்வு தரவுகளாக முன்வைக்கின்றன. இவை அனைத்தும் எப்படி சாத்தியப்படும், மனித சமூகம் தனது பயணத்தில் அடுத்தகட்டத்தை என்னவாக தேர்ந்தெடுக்கும் எனும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. நான் நம்பிக்கையற்ற மனிதன், என் கண் முன் காலநிலை மாற்றமும் தான் எனும் மனித அகங்கந்தைகளும் அவை உண்டாக்கும் அழிவுகளும் மட்டுமே புலப்படுகின்றன.
ஆனால் ஆலிஸ்,பெசல்,கபோர் என்று அனைவரும் நம்பிக்கை மிக்கவர்கள். அவர்கள் எழுத்துக்களில் அஞருக்கான ஆற்றுதல்களை முன்வைக்கின்றனர், அவை நவீன அறிவியலின் உண்மைகளாகவும் இருக்கின்றன. எனவே இவர்களை வாசிப்பது, அவர்களின் உரையாடல்களை கவனிப்பது நமது தேவையாக இருக்கின்றது.
நூல் ஆதாரம்:
Alice Miller:
- The Drama of the Gifted Child, 1979
- Thou Shalt Not Be Aware: Society’s Betrayal of the Child, 1981
- For Your Own Good: Hidden Cruelty in Child-Rearing and the Roots of Violence, 1980
- The Body Never Lies, 2004
- The Truth will set you free: Overcoming Emotional Blindness and Finding Your True Adult Self, 2002
Bessel van der Kolk:
- The Body Keeps the Score: Brain, Mind, and Body in the Healing of Trauma, 2014
Gabor Maté
- Scattered Minds: The Origins and Healing of Attention Deficit Disorder,1999
- In the Realm of Hungry Ghosts, 2008
- When the Body Says No: The Cost of Hidden Stress,2019
- The Myth of Normal: Trauma, Illness, and Healing in a Toxic Culture, 2022
Internet:
* மனக்காயம் அல்லது மனவருத்தம் என்று பொருள் தரும் அஞர் எனும் தமிழ் வார்த்தை பொதுவில் புழக்கத்தில் இல்லை. கவிஞர் சேரன் தனது கவிதை தொகுப்பு (2018) ஒன்றுக்கு, ‘அஞர்’ என்று தலைப்பிட்டிருக்கிறார். அந்த கவிதை தொகுப்பே இந்த வார்த்தையை மீளுருவாக்கம் செய்து பயன்படுத்த உந்துதலாக இருந்தது.

இளவேனில்
இளவேனில் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். கடந்த எட்டு ஆண்டுகளாக புதினங்கள், கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘உரையாடல்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது.