
அவள் கருவுற்றிருந்தாள். பேருந்துகள் எதுவும் நிற்காத அந்த நிறுத்தத்தில் மதியத்தின் மீது தனித்து நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே அன்னாசி பழத்தின் மேல் பகுதியை தலையாகவும் கீழே மூக்கு, உதடு என கழுத்துவரை சாதாரண மனித உடலால் ஆன ஆணின் தலை பெரிதாக அச்சிடப்பட்ட விளம்பர பலகை இருந்தது. அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. அதை பார்த்துத் தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள். அவள் சிரிப்பதை யாராவது பார்க்கிறார்களா? என சுற்றும்முற்றும் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை, எந்தப் பேருந்தும் வரவில்லை அவ்வப்போது ஏதாவது கார்கள் மட்டும் அந்தச் சாலையில் கடந்துக்கொண்டிருந்தன. தனக்குள்ளே சலித்துக்கொண்டாள். அவள் இன்று இங்கு வந்திருக்கவே கூடாது வந்த வேலையும் தாறுமாறாகிவிட்டது. அந்த ஆடிட்டர் கொஞ்சம்கூட அசையவில்லை முதலில் செலுத்திய கோப்புகளைத்தான் எடுத்துக்கொள்ள முடியும் மாற்றமுடியாது என கூறிவிட்டார். அது அவள் தவறில்லை அவளது மேலதிகாரியின் மறதியால் நிகழ்ந்தது. ஆனால் அதையெல்லாம் அவளது மேலதிகாரி ஏற்கவில்லை “எப்படியாவது நீதான் சரி செய்ய வேண்டும்” என இவளது தலையில் சுமத்திவிட்டார்.
இவளும் விடுமுறையைகூட பொருட்படுத்தாமல் இங்கே வந்துவிட்டாள். மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் பேருந்து குறைவு என்பதால் எந்த பேருந்தும் வரவில்லை. மீண்டும் தனது கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்தபோது பேருந்து நிலையம் வந்து நாற்பது நிமிடம் ஆனதை உணர்ந்ததும் அவளுக்கு மேலும் சலிப்போடு கோபம் உண்டானது. இப்போது மீண்டும் ஒருமுறை அதே விளம்பர பலகையைப் பார்த்தாள் அதே அன்னாசி தலைகொண்ட ஆணின் பாதி முகம் இப்போது அவளுக்கு வேடிக்கையாக இல்லை சிரிப்பும் வரவில்லை அது அவளுக்கு எரிச்சலையூட்டியது கருணை காட்டி இறைவன் ஒரே ஒரு பேருந்தை அனுப்பினால் நல்லாருக்கும் என அவளுக்குள் தோன்றியது. இங்கிருந்து அவள் சில மைல்கள் தூரம் போக வேண்டும்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தின் இருக்கைகளைத் திரும்பி பார்த்தாள், சுத்தமற்று இருந்தன. அதற்கு மேல் தன்னால் நிற்க முடியாது என உணர்ந்தாள். வேறு வழியில்லை வருகிற ஏதாவது கார் ஒன்றை நிறுத்தி உதவி கேட்கலாம் அதுதான் சரியான வழிமுறை இங்கிருந்து கிளம்புவதற்கு என முடிவெடுத்தாள். மெல்ல பேருந்து நிறுத்தத்தின் அந்தச் சின்ன தளத்திலிருந்து கீழிறங்கி சாலைக்கு வந்தாள். அவளது நேரம்.. அவ்வளவு நேரம் சென்றுகொண்டிருந்த கார்களில் ஒன்றுகூட இப்போது வரவில்லை. திரும்பி சாலையின் இரண்டு பக்கமும் பார்த்தாள். சாலை மொத்தமாக வெறிச்சோடிக் கிடந்தது இப்போது அந்த மத்தியானத்தில் அவளைத் தவிர அந்தப் பகுதியில் யாருமே இல்லை என்பதை அவள் உணர்ந்ததும் அவளுக்குக் கிடுக்கென இருந்தது. மெல்ல தனது வீங்கிய வயிற்றைத் தடவினாள். அப்போது சாலையில் வண்டி வரும் சப்தம் கேட்டது இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தன. கையை நீட்டி வண்டியை நிறுத்துவதற்கான சைகையைச் செய்தாள். முதல் வண்டி கண்ணாடியில் ஒரு மொத்த குடும்பமே அடங்கியிருப்பது தெரிந்தது. அவர்கள் நிறுத்த வாய்ப்பில்லை என அவள் நினைத்ததை போலவே அந்தக் கார் நிற்கவில்லை, பின்னே சற்று இடைவெளிவிட்டு வந்த மற்றொரு கார் முழுக்க கறுப்புநிறக் கண்ணாடிக்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என யூகிக்ககூட முடியாத அளவுக்கு மொத்தக் கருமையும் பூசிக்கொண்டு அவளை விலகி நிற்கும்படி எச்சரிக்கை ஒலிப்பானை தொடர்ச்சியாகக் கொடுத்தபடியே வேகமாகக் கடந்தது. அவளுக்கு அது ஏமாற்றமும் கொஞ்சம் அவமானமுமாக இருந்தது. குனிந்த தலையோடு அந்த நிறுத்தத்தின் சிறுதளத்தில் மீண்டும் ஏறி நின்றாள். அண்ணாந்தாள், மீண்டும் அதே விளம்பரப்பலகை கண்ணில்பட்டது. அந்த அச்சிடப்பட்ட ஆணின் உதடுகள் அவளை ஏளனமாக சிரிப்பதுபோல் இருக்க தன்னையறியாமலே ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டுவதுபோல் எச்சரித்தாள்.
இப்போது அவளுக்கு அந்த மேலதிகாரியின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது. அவனை அவனது அறையிலே வைத்து கத்தியால் பத்து முறை குத்திப் போடலாம்போல் தோன்றியது ஆனால் ஒரு கர்ப்பிணியாக தான் இவ்வளவு கோபம் கொள்ளக்கூடாது என்று தனக்குள்ளே தன்னைச் சமாதானம் செய்துகொண்டாள். மீண்டும் ஒரு வாகனம் வரும் சப்தம் கேட்க கொஞ்சம் வேகமாகவே அந்த சிறுதளத்தைவிட்டு மீண்டும் கீழிறங்கி கையை நீட்டி சைகை செய்தாள்.
அதுவொரு அடர் சிவப்புநிறக் கார், அதன் முன்பகுதியில் மூன்று வெள்ளைக் கோடுகள் பதிந்திருந்தன அவள் கை நீட்டுவதை அந்தக் காரோட்டி உணர்ந்ததும் மெல்லமாக வேகத்தைக் குறைத்து அவளை நெருங்கி வந்து அவள் முன்னே நிறுத்தினான். அது அவளுக்கு ஒரு பெரிய மிருகம் ஆசுவாசமாக ஓடிவந்து தன்முன்னே நிற்பதுபோல் இருந்தது. அவள் கார் முன் தலையை குனிய கண்ணாடி மெல்ல கீழிறங்கியது, காரோட்டியை பார்த்தாள். பின்னிருக்கையில் யாரும் இல்லை காரோட்டி தனியாக இருந்தான். அவன் மிகவும் சோர்வாக இருந்தான், நீண்ட தூரத்தில் இருந்து பயணித்து வந்தவனைப்போல் இருந்தான். அவன் அலட்சியமாக பார்ப்பது போல பார்த்தான். அவளுக்குத் தயக்கமாக இருந்தாலும் தனது சூழலை உணர்ந்து
“நீங்கள் விசாகப்பட்டினம் வழியா போகிறீர்களா? எனக் கேட்டாள்.
காரோட்டி “ஆம்” என தலையசைத்தான்.
“என்னை அங்கு இறக்கிவிட முடியுமா” என மீண்டும் கேட்டாள்.
காரோட்டி அதற்கும் “சரி”யெனத் தலையசைக்க அவள் காரின் முன்பகுதியில் ஏறினாள். அவளுக்கு ஏறியதும்தான் நினைவு வந்தது சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். அந்த அன்னாசி தலை விளம்பரப் பலகை இப்போது தன்னைப் பார்த்து என்ன சமிக்ஞை செய்கிறதென அவளால் பார்க்க முடியவில்லை அதற்குள் கார் கிளம்பிவிட்டது.
கார் ஒருவிதமான மிதத்தில் இயங்கிக்கொண்டிருக்க அவள் காரோட்டியை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அவனது உடைகள் மிகவும் கசங்கிய நிலையில் அழுக்காக இருந்தன. அழுது தீர்த்தோ அல்லது தூங்கி எழுந்தவனை போல இருந்தான். அவனது பார்வை சாலையைவிட்டு விலகாது நீண்ட நேரத்திற்குப் பிறகு இமையசைக்கும் கவனத்தில் இருப்பதை அவள் பார்த்தாள். அந்தக் கார் அவளுக்கு நல்ல சொளகரியமாக இருந்தது. அதைவிட அந்தக் காரோட்டி எந்தத் தொந்தரவும் இல்லாமல் அவளைப் பத்திரமாக அழைத்துப் போகவே வந்தவனைப் போல இருந்தான். அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை அதை அவன் விரும்பாதது போல வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒரு எஜமானரை அழைத்துப்போகும் ஓட்டுனர்போல் அவ்வளவு மெளனமாக இருந்தான். அவள் அந்தக் காரை சுற்றிப் பார்த்தாள். அது அவ்வளவு சுத்தமாக மல்லிகை நறுமணத்தில் நிறைந்திருந்தது. அவ்வளவு வசீகரமாக இருந்தது. மீண்டும் காரோட்டியை அவள் பார்த்தாள். இது அவனது சொந்தக் காரா இல்லை ஓட்டுனரா? என யோசித்தாள். சிறிது நொடியிலே காரை திருடி வந்திருப்பானோ எனச் சந்தேகம் வந்தது பிறகு அவளே அப்படி இருக்காது எனச் சாந்தப்படுத்திக்கொண்டாள்.
“விசாகப்பட்டினம் துறைமுகம் பக்கத்தில் நிறுத்திடுங்க அங்கதான் என் குடியிருப்பு” என்றாள்.
அவன் இம்முறையும் அதேபோல் “சரியென” தலையை மட்டும் அசைத்தான். எதுவும் பேசவில்லை. அவளாகவே பேச்சைத் தொடர்ந்தாள்.
நீங்க எங்க போறீங்க ?
அவன் எதுவும் பேசவில்லை அது அவளுக்குச் சங்கடமாக இருந்தது. அமைதியாக சாலையை பார்க்கத் தொடங்கினாள். மரங்களும் சாலையும் ஓடிக்கொண்டிருந்தன. சில மின்சார கம்பங்கள் சாலையின் குறுக்கே விழுவதுபோல் நடித்து நேராகிக்கொண்டிருந்தன. அதை வேடிக்கை பார்த்தபடியே இருந்தவள் தன்னையறியாமல் தனது வயிற்றைத் தடவினாள். அது அவளுக்குத் துணைபோல இருந்தது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு சாலையோட்ட மாய விளையாட்டுகளை தனது தடவுதலின் மூலம் உணர்த்திக்கொண்டிருந்தாள்.
“ எத்தனை மாதம்” என ஒரு குரல் கேட்டது.
திடுக்கென திரும்பி காரோட்டியைப் பார்த்தாள். அவ்வளவு வேகமாகப் பேசிவிட்டு காரோட்டி அமைதியாகியிருந்தான். அந்தக் குரல் அவளுக்கு நன்றாகவே கேட்டது ஆனாலும் அவள் திணறுவது போலத் தொடங்கி “எட்டு மாதம்” என்றாள்.
காரோட்டி மெல்லமாக சிரித்தான். அவனது சிரிப்பு அவளுக்குப் பாதுகாப்பாக இருந்தது. அவனது சோர்வான உடலின் கசங்கிய உடையலங்கரத்திற்கு அந்தக் குரல் சற்றும் பொருத்தமற்றது. அவ்வளவு கடினமாக இருந்தது. பதிலுக்கு அவளும் சிரித்தாள்.
நீங்களும் விசாகப்பட்டினமா? எனக் கேட்டாள்.
அவன் “இல்லையென” தலையாட்டினான்.
அவளுக்கு அதற்கு மேல் என்ன பேச வேண்டும் எனத் தெரியவில்லை முன்பின் அறியாத ஒருவரிடம் அதிகமாக அவரை பற்றிக் கேட்டு என்னவாகப் போகிறது என அவளுக்குத் தோன்றியதும் அவள் அப்படியே அமைதியாகிவிட்டாள். சிறிது நேரம் கழித்து
“உங்க கணவர் வரலையா” எனக் காரோட்டிக் கேட்டான்.
அவள் பதிலுக்கு “ அவர் இல்லை” எனக் கூறினாள், சிறிது இடைவெளிவிட்டு “அவர் இறந்துட்டார்” எனக் கூறினாள்.
காரோட்டி ஒருமுறை திரும்பி அவளது முகத்தை நன்றாகப் பார்த்தான். சொல்லப் போனால் அவள் வண்டியில் ஏறியதில் இருந்து இப்போதுதான் அவளை அவன் நன்றாகப் பார்க்கிறான். காரோட்டி தன்னை பார்ப்பதை உணர்ந்ததும் அவள் தலை குனிந்துகொண்டாள். அதற்கு மேல் இருவரும் சிறிதுநேரம் பேசவில்லை. கார் இன்னும் சீராக அவர்களைத் தாங்கி கடந்துகொண்டிருந்தது.
அவளுக்கு அந்த மேலதிகாரியின் நினைவு மீண்டும் வந்தது. ஆடிட்டர் கொஞ்சம் அனுசரித்திருக்கலாம், இவ்வளவு தூரம் கடந்து வந்ததற்காகவாவது கொஞ்சம் இறங்கி வந்திருக்கலாம் எனத் தோன்றியது. இறுதியாக அலுவலகத்தில் மேலதிகாரி தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதை நினைத்தால் அவளுக்கு அந்தக் காருக்குள் தன்னையும் மீறி கண்ணீர் வந்தது. மீண்டும் தனது கனத்த வயிற்றைத் தடவினாள். இன்னும் இறுக்கமாக தனது தலையைத் குனிந்தபடியே கண்ணீர் உகுத்தாள். அழுதபடியே காரோட்டி தன்னை கவனிக்கிறானா? எனப் பார்த்தாள். காரோட்டியிடம் எந்த அசைவும் இல்லை, அவன் காரை இயக்குவதில் படுகவனமாக இருந்தான். ஒரு பெண் அழும்போது அருகில் இருக்கிற ஓர் ஆண் அதை எப்படிக் கவனிக்காமல் இருக்கலாம் என அவளுக்குத் தோன்றியது. சுதந்திரமாகத் தான் அழுதுவிட்டுப் போகட்டும் என எந்தத் தொந்தரவும் செய்யாமல் இருக்கிறானோ? என அவளுக்குக் கேள்வி தோன்றியது.
முன்பின் அறியாத ஆணாக இருந்தாலும் ஒரு பெண் அழும்போது சிறிதும் தடுமாற்றம் இல்லாத ஓர் ஆண் எந்தவொரு பெண்ணுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அந்தக் காரோட்டியும் அந்த அதிர்ச்சியை அவளுக்குக் கொடுத்தபடி இருந்தான். அவள் அந்த அதிர்ச்சியை உணர்ந்ததுமே சாந்தமாகிவிட்டாள். அந்தக் கார் இன்னும் அமைதியானது.
அப்போது காரின் திசைமாற்றியில் ஒரு ஈ வந்து அமர்ந்தது. காரோட்டி சாலையையும் அந்த ஈயையும் மாற்றி மாற்றி பார்த்தபடியே மெதுவாக ஜன்னலைத் திறந்துவிட்டான். அது வெளியே பறந்துவிடும் என நினைத்து அவன் செய்தான், ஆனால் அந்த ஈ போகவில்லை மாறாக சற்று நகர்ந்து அவன் கையருகில் வந்தமர்ந்தது. அவள் எதையும் கவனிக்காது கார் கதவில் சாய்ந்தபடி வெளியைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். காரோட்டியின் கைக்கு அருகில் வந்த ஈ சற்று பறந்து அவன் விரலில் அமர்ந்தது. பதறிப்போன காரோட்டி பளாரென ஈயை அடித்தான். ஈ பறந்தது. சப்தம் கேட்டு திரும்பியவள் காரோட்டியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள், அவன் முகம் அவ்வளவு கொடூரமாகயிருந்தது. காரை இயக்கியபடியே பறந்த ஈயை வெளியே விரட்ட மேலும் முயன்றான். கார் சிறு தடுமாற்றமும் இல்லாமல் சரியாகச் சென்றாலும் இப்போது காரோட்டி சாலையைவிட ஈயின் மீது அதிகக் கவனத்தை செலுத்தத் தொடங்கினான். அவளுக்கு நிலவரம் புரிந்தது. அந்தக் காரோட்டியை பார்த்தபடியே இருந்தாள். ஒருவழியாக ஈ வெளியே சென்றது, வேகவேகமாக எல்லா ஜன்னல்களையும் காரோட்டி அடைத்துவிடு ஆசுவாசமாக பெருமூச்சுவிட்டான். அவனது அந்தச் செய்கை கிட்டத்தட்ட அதிக தூரம் ஓடிவந்த ஓட்டப்பந்தய வீரனின் ஆசுவாசத்தைப்போல் இருந்தது. திரும்பி அவளைப் பார்த்தான். இப்போது அவளும் அவனைப் பார்த்தபடியே இருந்தாள்.
“மன்னிச்சுடுங்க ஈயைப் பார்த்தா ஒரு மாதிரி ஆகிடுவேன்” எனக் கூறினான்.
அவள் எதுவும் கூறவில்லை .
“என்னொட இந்தச் செயல் உங்களுக்கு ஏதாவது தொந்தரவைக் கொடுத்திருச்சா” ? என மீண்டும் கேட்டான்“.
“என் கணவருக்கு மர்மேக்போபியா இருந்தது “ அதனால் உங்கள் செய்கை என்னைப் பெரிதாக தொந்தரவு செய்யவில்லை” எனக் கூறினாள்.
காரோட்டி அவளிடம் இந்தப் பதிலை எதிர்ப்பார்க்கவில்லை; அவனுக்கு ஆர்வமாகிவிட்டது.
“ அப்படியென்றால் நாம இதபத்திப் பேசலாமா?” எனக் கேட்டான் .
அவள் எதை என்பதைப் போல காரோட்டியைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“ இந்த ஒவ்வாமைப் பற்றி நாம் பேசலாம் என்று நினைக்கிறேன்” காரோட்டி கூறினான் .
பதிலுக்கு அவள் “பேசலாம், ஆனால் என்னுடைய கணவருக்கு இந்த ஒவ்வாமை இடையில் வந்தது உங்களுக்கு எப்படி?” எனக் கேட்டாள்.
“என் அப்பா என்னை அப்படி வளர்த்துட்டார்“ என்றான் காரோட்டி. “ சின்னவயசுல நான் சாப்பாடு சாப்பிட ரெம்ப நேரமாகும் அதுக்காக என் அப்பா சாப்பாட்டுல உட்காருற ஈக்களை பற்றி மோசமான கதைகளைக் கூறி என்னைச் சாப்பிட வைப்பார் அதனால உண்டானது இந்த ஒவ்வாமை “ என்றான் காரோட்டி.
தொடர்ச்சியாகப் பேச விரும்புகிற மனநிலையில் காரோட்டி உள்ளான் என்பதை அவள் உணர்ந்தாள். அதை தனது வயிற்றைத் தடவியபடியே கவனமாகக் கேட்கவும் தொடங்கினாள்.
“என் அப்பா ரொம்பவும் சுத்தத்தை எதிர்பார்க்குற ஆளு, சின்ன தூசி இருந்தாலும் உட்கார மாட்டார். ஒருமுறை என்னோட சின்னவயசுல நாங்கள் எல்லோரும் டெல்லிக்கு ரயில்ல புக் செய்து போனோம், அப்ப ரயில் பெட்டி சுத்தமாயில்லைனு புகார் செய்தார். ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செஞ்சு கொடுத்தும் முப்பது மணிநேரம் உட்காராமல் நின்னுகிட்டே வந்தார்” எனக் காரோட்டி கூற அவனை அவள் மீண்டும் மேலும் கீழும் பார்த்தாள்.
அவனது சோர்வான முகம், கசங்கிய அழுக்கான உடை என எதுவும் அவன் கூறும் தந்தையின் சுத்தத்தைப் பற்றியோ அவரது மகன் என்பதற்கோ சற்றும் நம்புவதாகத் தோன்றவில்லை. இப்போது அவளுக்கு அவன் புதிராகத் தெரியத் தொடங்கினான்.
காரோட்டி தனது காரின் திசைமாற்றியை வேகமாக ஒரு வளைவுப்பாதையில் வளைத்தபடியே
“ எப்பவுமே என் அப்பா எதையாவது சுத்தபடுத்தீட்டே இருப்பார் ஒவ்வொரு பொருளையும் எடுத்த இடத்திலே வைக்கணும் இல்லனா அவருக்குக் கோபம் வந்துடும் என்னோட இருபது வயசுவரை அதுக்காக நான் நிறைய அடி வாங்கியிருக்கிறேன்” எனக் கூறி காரோட்டிச் சிரித்தான்.
அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள். சிறிதுநேரம் முன்புவரை அமைதியாய் இருந்த காரோட்டியா இது என்பது போலிருந்தது. மிக முக்கியமாக அவன் தந்தையிடம் அடி வாங்கியதை சொல்லும்போது இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. அந்தளவு மகிழ்ச்சியான மனிதனாகக் காரோட்டி இருந்தான்.
“ நீங்கள் உங்க அப்பாகிட்ட அடி வாங்குறதை விரும்புறீங்களா”? எனக் கேட்டாள்.
காரோட்டி அமைதியானான்; சிறு இடைவெளி விட்டாள். அந்த இடைவெளியில், வானம் முழுக்க விண்கற்கள் தீப்பற்றி எரிவதை அவளால் உணர முடிந்தது. காரோட்டி காரின் மேற்கூரையை ஒருமுறை பார்த்து யோசித்தபடிச் சொன்னாள்
“ என்னோட சின்ன வயசுல அப்பா அடிக்குறது ரொம்பக் கஷ்டமா இருந்தது அதனால நான் ரொம்ப கஷ்டப்பட்டுருக்கேன். அதனால அந்த வயசுலை அதை விரும்பலை ஆனா அவர் இறந்த பிறகு இப்ப விரும்புறேன் இப்ப அவர் என்னை அடிக்க மாட்டாரானு ஆசையாருக்கு” எனக் காரோட்டி கூறினான்.
அவளுக்கு அவனது பதில் ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு மனிதனா என்பதுபோல் காரோட்டி தெரிந்தான். அவள் மிக மெளனமாக போவதே நல்லது என அமைதி காத்தாள், ஆனால் காரோட்டி விடவில்லை.
“ என் அப்பா ஒரு தொல்துறை ஆய்வாளர் அவர் நிறைய ஊருக்குப் போவார் நிறைய இடங்களை தோண்டுவார் நிறைய எலும்புக்கூடுகள் பழைய பொருட்கள்னு எல்லாத்திலும் கை வைப்பார், ஆனால் அங்கெல்லாம் இல்லாத சுத்தம் வீட்டுல எங்களிடம் காண்பிக்குறதுதான் ரொம்ப ஆச்சரியமா இருக்கும்” எனக் காரோட்டி கூற அவள் காரோட்டியை இன்னும் வியப்பாக பார்த்தாள்.
“அப்பா இறந்த பின்னாடி அவர் மேல ரொம்ப ஈ உட்கார்ந்து பறந்து போச்சு அதைப் பார்த்த போது நெனச்சேன், அவரால அடிக்க , விரட்ட முடியாத ஈக்கள் அவரைச் சுத்தியிருக்கரதை. அவர் உணர்வில்லாமல் படுத்திருக்கும்போது எனக்கு தோணுச்சு, ஈக்கள் மோசமானவைனு அப்பா சின்ன வயசுல சொன்னது, சீக்கிரம் சாப்டு ஈ உட்கார்ந்துடும்னு சொல்லும்போது புரியாதது அப்பா இறந்த பிறகு அவர் மேல ஈ உட்காரும்போது அவரை நான் சரியா புரிஞ்சுக்கலைனு தோணுச்சு நான் அவரை இறந்த பிறகுதான் புரியத் தொடங்கியிருக்கேன் அதாவது ஈ உட்கார்ந்த பின்னாடி“ எனக் கூறியபடியே காரோட்டி வேகமாக ஒலிஎழுப்பானை அழுத்தியபடி ஒரு காரை வேகமாக முந்திச் செல்ல அவள் அவனை ஒரு சிலையைப் போலப் பார்த்தபடி இருந்தாள்.
அதற்கு மேல் அந்தக் காரோட்டி எதுவும் பேசவில்லை, மிக அமைதியாக இருந்தான். அவளால் அந்த மெளனத்தின் துயரை உணர முடிந்தது. அவள் அதை உணரும்போதே காரோட்டி சொன்னான்.
“ரொம்ப சுத்தமான மனுஷனா இருந்த அப்பா சாகுற காலத்தில் சுத்தமில்லாதவரா இருந்தார், மாற்றிவைக்கப்பட்ட எந்தப் பொருளையும் சரி செய்ய அவர் போராடலை, அவருக்கு புரிஞ்சுடுச்சு போல இந்த மொத்த பூமியே மாற்றி மாற்றி அடுக்கப்பட்ட வீடுதான்னு“ எனக் காரோட்டி கூற அவள் இன்னும் அமைதியானாள். காரோட்டி ஒரு கணம் ஞானியைப் போல அவளுக்குக் காட்சியளித்தான்.
அவள் தனது பெரிய வயிற்றைத் தடவியபடியே இருந்தாள் அப்படி தடவும்போது அவள் அணிந்திருந்த மேலுடையின் தையல் பின்னல்கள் அதன் சின்ன சின்ன வளைவின் நூல்தடங்கள் உடையின் நரம்புகளைப் போல அவளுக்குத் தோன்ற தனது கண்களைத் திறந்து திறந்து மூடியபடி காரோட்டியைப் பார்த்தாள்.
“நீங்கள் உங்க அப்பாவை நல்லா புரிந்து வச்சுருக்கீங்க“
காரோட்டி அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“ஆனா என் கணவரை என்னால் இன்னும் புரிஞ்சுக்க முடியலை”
இப்போது காரோட்டி அவள் பேசத் தயாராவதை உணர்ந்ததும் அமைதியாகக் கவனிக்கத் தொடங்கினான்.
“ரொம்ப காலம் நம்ம கூடவே இருந்த ஒருத்தர் இறந்த பிறகு அவரைப் புரிஞ்சுக்கப் போராடுற வாழ்க்கை ஒரு சுகம் மாதிரி இருக்கு எனக்கு இப்பல்லாம்” என அவள் கூற காரோட்டியின் மனம் வெகு கனிவானது, அவன் ஆமாமென்று தலையசைத்தான். இப்போது அந்தத் தலையசைத்தலில் அவ்வளவு அன்பிருந்தது.
விசாகப்பட்டினம் துறைமுகத்திலதான் என் கணவர் வேலை பார்த்தார். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்குள் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை ரொம்ப சந்தோஷமான வாழ்க்கைதான். ஒருமுறை கப்பல் நிறுத்துறதுக்காக ஆழமா கடலைத் தோண்டும்போது 13ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட கல்நங்கூரம் ஒன்று கிடைத்தது.
“கல்நங்கூரமா“ எனக் காரோட்டி கேட்டான்.
“ஆமாம், பண்டைய காலத்தில் கடல் வணிகர்கள் கப்பலை நிறுத்த பயன்படுத்திய நங்கூரம். ஐந்தடி நீளமும் ஒன்றரை அடி அங்குலமுமிருந்தது, கிட்டத்தட்ட முன்னூறு கிலோக்கு மேல் எடை இருந்தது” என அவள் கூறினாள்.
பதிலுக்குக் காரோட்டி “என் அப்பா தொல்லியல் ஆய்வாளரா இருந்ததால் நிறையமுறை இதுமாதிரியான கதைகளைச் சொல்வார். ஆனால் நான் பெரிசா அதை எடுத்துக்க மாட்டேன், அதில் ஆர்வமில்லாத ஆளாதான் வளர்ந்தேன், ஆனா இப்ப நீங்க சொல்லும்போது ஆச்சரியமா இருக்கு” எனக் கூறினான்.
அவள் அவனது ஆர்வத்தை அதிசயமாகப் பார்த்தாள். பதிலுக்கு அவன் இனி இடையூறு இருக்காது நீங்கள் தொடர்ச்சியாகப் பேசலாம் என்பதுபோல் தலையசைத்தான். அவள் தொடர்ந்தாள்.
“கிட்டத்தட்ட பெரும்பாலான எல்லா கல்நங்கூரங்களும் ஒரே பாறையில் செய்யப்பட்டிருக்கும். அப்படித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அன்னைக்குக் கிடைச்ச நங்கூரம் நாலு கல்லால் செய்யப்பட்டிருந்ததா என் கணவர் சொன்னார். நான் அதை பெருசா எடுத்துக்கலை ஆனால் அங்கிருந்துதான் அவரது சிக்கல்கள் தொடர்ந்து வளரத் தொடங்கிச்சு” என அவள் கூறியதும் காரோட்டி மேலும் ஆர்வமடையத் தொடங்கினான்.
அவர் எப்போதும் அந்தக் கல்நங்கூரத்தை பற்றியே அதிகம் யோசிச்சார். எனக்கும் அவருக்கும் அதனால் சிறுசிறு சண்டைகள் வரத் தொடங்கிச்சு.
“உங்களுக்குள் என்னதான் பிரச்சனை “
“என்னால் அந்தக் கல்நங்கூரத்தை மறக்க முடியலை”
“அதான் ஏன்“
“தெரியலை ஆனா அதுக்குள்ள ஏதோ இருக்கு அதுக்குள்ள ஒரு வடிவம் இருக்கு அது என்ன வடிவம்னு தெரியாமல் என்னால் தூங்க முடியலை, வேலை பார்க்க முடியலை என அவர் கத்தினார்.
எனக்கு அந்தப் பிரச்சனையை முடித்து வைக்கத் தோன்றியது.
நான் வேணும்னா உங்களுக்கு உதவுறேன், அங்க என்னைக் கூப்டு போங்க எனக் கூறினேன்”.
காரோட்டி காரை நிறுத்தினான். “அவர் உங்களைக் கூப்டு போனாரா?” என வேகமாகக் கேட்டான்.
“ஆமாம்” என அவள் கூறினான்.
காரோட்டி மிக ஆர்வமாக இருந்தான். ”அது என்ன வடிவம்? உங்களால புரிஞ்சுக்க முடிஞ்சதா?” எனக் கேட்டான்.
“என்னை அடுத்தநாள் நாகப்பட்டினம் தொல்லியல்துறை கூடத்திற்கு அவர் அழைத்துப் போனார், கூடத்துல அந்தக் கல்நங்கூரம் இருந்த இடத்துக்குப் பக்கத்தில போனதும் அவர் ஒரு குழந்தை மாதிரி என் பின்னாடி ஒழிஞ்சுக்கிட்டார், நான் அந்தக் கல்நங்கூரத்தைப் பார்த்தேன், அதன் முன்பகுதி கூம்பாவும் நடுவில் இருந்த இரண்டு கற்கள் சிறு வளையங்களாகவும் பின் பகுதி மேலும் பெரிதான கூம்பாகவும் இருந்தது. முன்பகுதி நங்கூரத்தில் கயிறு கட்ட பெரிய ஓட்டை இருந்தது. நான் அதைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். அதில் ஏதோ வடிவமிருப்பது எனக்கும் புரிஞ்சது. அதன் முன்பகுதி கூம்பு மற்றும் பின்பகுதி கூம்பிற்கும் இடையே இருந்த சிறு வளையங்களையும் கூர்ந்து பார்த்தபோது எனக்குப் புரிந்தது அதுவோர் எறும்பு வடிவம்னு “
எறும்பா? எனக் காரோட்டி சாதரணமாகக் கேட்டான்.
“ஆமாம் எறும்புதான்” என அவள் கூறினாள்.
காரோட்டி காரை இயக்கத் தொடங்கினான். “நானும் பெருசா ஏதாவது இருக்குமோனு நினைச்சேன்” எனச் கூறியபடியே திசைமாற்றியைச் சுழற்றினான்.
” உங்களுக்கு அது சாதரணமா தெரியலாம் ஆனால் அந்தக் கல்நங்கூரம் எங்கள் வாழ்க்கையை ஒரே இடத்தில் நிறுத்திடுச்சு”
காரோட்டி அவளை விநோதமாகப் பார்த்தான்.
“நான் அந்தக் கல்நங்கூரத்தோட வடிவத்தை அவர்ட சொன்ன பிறகு அவர் எறும்புகளைப் பார்க்குற பார்வை மொத்தமா மாறிடுச்சு. சமையலறையில் ஓர் எறும்பு இருந்தாகூட உள்ள வர பயந்தார். ஒரு நாயை விரட்டுறது மாதிரி எறும்போட கடுமையாக வாக்குவாதம் செஞ்சார், கத்தினார். ஒரு கட்டத்துக்கு மேல் நான் அந்த வடிவத்தை சொல்லியிருக்கக்கூடாதுனு எனக்கே குற்றவுணர்வு வரத் தொடங்கிருச்சு. அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துப் போனேன் அப்பதான் தெரிஞ்சது அவருக்கு “மர்மேக்போபியா” நோய் இருந்தது, ரொம்ப சின்ன வயசுல இருந்தே அவருக்கு எறும்புகள் மேல ஒவ்வாமை இருந்துருக்கு அது இந்தக் கல்நங்கூரத்தின் மூலம் முழுமையா வெளிப்பட்டுருக்கு, நாளாக நாளாக இன்னும் அதோட பாதிப்பு அதிகமானது, நான் தொட்டாகூட வெடுக்கெனக் கையை உதறி எறும்புனு பதறிடுவார். அதனால நான் ரொம்பப் பாதிக்கப்பட்டேன். அப்ப நான் நான்கு மாதம் கர்ப்பம் வேற, குழந்தையோட அசைவுகள் அடிக்கடி என் வயித்துல தெரிய ஆரம்பிச்சது அதை அவர்ட ரொம்ப சந்தோஷமா சொன்னேன். அன்னைக்குக் கொஞ்ச நேரம் என் வயித்துலயே கையை வச்சுட்டு இருந்தவர் குழந்தை அசைய தொடங்கியதும் வெடுக்கெனக் கையை எடுத்துடார், ரொம்பப் பதறினார். என்னாச்சு என்னாச்சுனு கேட்டேன். “எறும்பு”னு சொன்னார்
“எறும்பா”னு கேட்டேன்.
“குழந்தையோட அசைவு எறும்பு உறுற மாதிரி இருக்கு”னு சொல்லி வெடுக்கென எழுந்து போயிட்டார். அதை அவள் கூறும்போதே அழத் தொடங்கினாள்.
காரோட்டி அவளைச் சங்கடமாகப் பார்த்தான். இப்போது அவன் ஒரு பெண்ணின் அழுகைக்கு தடுமாறும் ஆணாக அவள் முன் அமர்ந்திருந்தான். அவளைச் சமாதானம் செய்தபோது அவள் மேலும் அழுதாள். அழுதபடியே சொன்னாள்.
“அன்னைக்குப் பதறி எழுந்து போனவர் துறைமுகத்தில் உயரமான இடத்தில ஏறும்போது கீழே விழுந்துடாருனு செய்தி வந்துச்சு, அவசர அவசரமாக போய்ப் பார்த்தேன். இரத்தம் உறைஞ்சு கிடந்த அவரோட மேனி எந்த உணர்வும் இல்லாமல் சடலமாக இருந்தது. அவரோட சட்டை காலர்ல இருந்து ஓர் எறும்பு வெளியே ஊர்ந்தபடியே இருந்தது. அவர் எறும்புக்குப் பயந்துதான் அவ்வளவு பெரிய உயரத்தில் இருந்து விழுந்துருக்காருனு எனக்கு மட்டும்தான் தெரியும். ”உன்” எனக் கூறியபடியே அவள் மேலும் அழுதபடியிருக்க, காரோட்டி காரை ஓரமாக நிறுத்தினான். அவளைச் சமாதானம் செய்தான்.
“எறும்பு ரொம்பச் சின்னதுதான் சார், ஆனா பார்த்தீங்களா அது எவ்வளவு பெரிய விஷயம் செய்சுருக்கு. இன்னைக்கு நான் எதுவும் இல்லாமல் இருக்கக் காரணம் எறும்புதான்” எனத் தனது வயிற்றைத் தடவினாள். காரோட்டி அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் அவளுக்கு டீ ஒன்று வாங்கிக் கொடுத்தான். அதை அவள் குடித்தாள்.
“வேறு ஏதாவது வேணுமா” எனக் காரோட்டி கேட்டான்.
அவள் டீ கடையைப் பார்த்தாள், இறங்கி அவளே சில இனிப்பு பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டாள். பிறகு வண்டியில் ஏறினாள்.
“அவர் இறந்து மூணு மாதம்தான் ஆகுது, என் குழந்தைக்காக வாழத்தொடங்கிட்டேன், அவர் வேலைல இருக்கும்போதே செத்ததால குழந்தை பெரியாளகுறவரை நாங்க இருந்த வீட்டை எங்களுக்கே கம்பெனி கொடுத்திருச்சு“ என்றாள்.
காரோட்டி இப்போது மிக அமைதியாகிவிட்டான். அவனுக்கு நிறைய சங்கடங்களும், விநோதங்களும் ஒன்றாக கிடைத்ததாக இருந்தன. ஒருமுறை இறந்த அப்பாவை அவன் நினைத்துக்கொண்டான். அவர் சுத்தம் செய்கிற ஒவ்வொரு பொருளையும் ஒரு நாளைக்கு எத்தனை முறை தொடுவார் என அவனுக்குத் தோன்றியது. சிறிதுநேரத்திலே அவள் இறங்கும் இடம் வந்து கார் நின்றது. தனது வீங்கிய வயிறோடு கீழே இறங்கியவள். காரோட்டியைப் பார்த்து சிநேகத்தோடு புன்னகைத்தாள். காரோட்டியும் பதிலுக்குச் சிரித்தான். இருவரும் அவர்களது பெயரைக்கூட பரிமாறிக்கொள்ளவில்லை, விடைபெற்றுக்கொண்டார்கள். அவள் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். அவ்வளவு சுத்தமான வீடு, மேலும் மின்விசிறியை இயக்கினாள். அவளுக்கு அவளது கணவரின் நினைவு வந்தது. நடுவில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தாள். தனது தோள்பையைத் திறந்து டீ கடையில் வாங்கிய இனிப்பு பண்டத்தை பிட்டு வீட்டின் மத்தியில் உதிர்த்துப் பரப்பினாள், பிறகு நாய்க்குட்டியை அழைப்பது போல “உச்சு உச்சு உச்சு“ என சப்தமெழுப்பினாள். இன்னோர் அறையின் கதவுக்குப் பின்னேயிருந்து ஐந்தாறு எறும்புகள் வந்தன, அவள் உதிர்த்துப் போட்ட இனிப்பை உண்ணத் தொடங்கின. அதன் பின்னரே இன்னும் நூறு இருநூறு எறும்புகள் சாரையாக வந்தபடி வந்தன , அந்த வீட்டின் மூலை முடுக்கென அத்தனை இடத்தில் இருந்தும் எறும்புகள் சாரை சாரையாக வந்தபடியே இருந்தன. எந்த எறும்பும் அவளைத் தீண்டவில்லை இனி எந்தக் குற்றத்தையும் அவளுக்கு நாங்கள் செய்யப் போவதில்லை எனச் சத்தியம் செய்ததைப் போல அவள் உதிர்த்து வீசிய இனிப்புகளைத் தேடித் தேடி மேய்ந்தபடியே இருந்தன. அவள் தனது வீங்கிய வயிற்றைத் தடவியபடியே ஒரு கணம் அந்த அன்னாசி விளம்பரப் பலகையை நினைத்துப் பார்த்தாள். அதன் மேல் பகுதி கூம்புகள் அனைத்தும் அந்தக் கல்நங்கூரத்தின் கூம்புகளாகத் தோன்றித் தோன்றி மறைந்தன.
000
நன்றி, பயணி

ச.துரை
ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.