
1
துருவியைத் துளைத்துக்கொண்டிருப்பதாகக் கருதும் பென்சில் மாதிரி
ஒன்றும் செய்ய முடியாதவர்களை
எதிர்த்துப் பார்க்கிறேன்
முடிந்த மட்டும்
பலம் பொருந்திய கால் பெருவிரல்களின் நகங்களோடு மோதி உடையும்
கைவிரல்களின் சிறிய நகங்களாகிறேன்
மற்றபடி
அந்தஸ்துகள்
இந்த வாழ்வை குனியவைத்து
பச்சை குதிரை ஏறாது பார்த்துக்கொள்ள,
எனக்கு இதுதான் ஒரே இலாகிரி.
●○●○●○
2
எளிய பயங்கரவாதி
எனக்கப்பரம் இல்லாமல் போகப்போகிற இந்த உலகை
அடிக்கடி
சாம்பல் நிற பூனையின் கண்களில்
இமைகளை
மூடித் திறந்து
மூடித் திறந்து பார்ப்பேன்
சுழளும் இந்த கோளம் மாத்திரமறியும்
நானோர் எளிய பயங்கரவாதி.
○●○●○●○
3
ஒரு சின்ன மரியாதை
செவ்வனே அமர்ந்திருக்கிறது
ஒரு பெரிய மரியாதை
வருகிறது
சின்ன மரியாதையை
எழுந்து நிற்க சொல்லி சத்தமிடுகிறது
அப்போது எழுந்து நின்றது
பணிவில் கொஞ்சம் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மரியாதை.
○●○●○●○
5
வாலின் நாய்
எப்போதும் நாய் நினைக்க
அதன் வால் ஆட என்றே வந்த பழக்கம்
ஒரு கொடுங்குளிர் இரவு
வால் நுனியில் ஏதோ சில்லிட
நூற்றாண்டு கால மனித சுபாவத்தில்
தன் உடல் விதிர்விதிர்க்க எந்திரித்தது நாய்
அதை அதனால் ஏற்கவே முடியவில்லை.
○●○●○●○
6
கொஞ்சம் வலித்தால் சரியாகும்
மனிதன் ஒரு நவீன வலிதாங்கி
எப்போதும் வலியோடு இருப்பவன்
அவன் தீர்மானித்துவைத்திருக்கிறான்
லௌகீகம்
பொழுதுபோக்குகள்
கலை, இலக்கியம்
அது
இது விலிருந்து
சற்று சற்று சற்று…
பல நூறு விடுவிப்புத் துண்டுகளை
சமைத்துக்கொண்டால்
வலிகளை சமாளித்துவிடலாமென்று
அவன் நம்பத்தொடங்கிவிடுகிறான்
சில இங்கீதமின்மைகளை ,
கூச்சமின்மைகளை ,
போதங்களை,
பிறழ்வுகளைப் பூசிக்கொண்டால்
வலிகளுக்குக்கிட்டிடும் போதிய நிவாரணி என்று.
பிறகு
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு
காலத்திரையின் சித்திரம் மாற்றப்படுவது மாதிரி
கொடிய வழமையில் மீண்டும் நடிக்கத்துவங்குகிறான்
அதன் மீது முடிந்த மட்டும்
இனியவைகளின் நறுமணத்தைப்
பூசு பூசென்று பூசுகிறான்
அது நீர்த்து நீர்த்துப்போக
காணவேண்டியவர் காணும்படிக்கு சிகரெட் புகைக்கிறான்
அப்போது
தானே…
எதையோ நினைத்துக்கொள்கிறான்
நினைத்துக்கொண்டே இருப்பதுதான் வலிக்குமென்று அவனுக்குத் தெரியும்
அவனுக்கு இதுவும் தெரியும்
கொஞ்சம் வலித்தால்தான் எதுவும் சரியாகுமென்றும்.
○●○●○●○

ச.அர்ஜூன்ராச்
சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. "ராஜ Single " கவிதை தொகுப்பின் ஆசிரியர்.
வலித்ததால் வந்த வலி , கவிதைகள் வாசித்ததில் வந்தது வலி சிறப்பு