இலங்கை முஸ்லிம்களும் அரபிகளிடமிருந்து இரவல் பெறாத தங்களுக்கென தனித்துவமான அடையாளங்கள், மரபுசார்ந்த பண்பாடுகள், வழக்காறுகள், இனத்துவ அடையாளங்கள் என பல்வேறு அம்சங்களைக் கொண்ட மக்கள் குழுமமாவர். அதேநேரம் இந்த அம்சங்கள் பன்மையானதாகக் காணப்படுகின்றன. காரணம், இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு இனங்களின் கூட்டாவர். இலங்கை முஸ்லிம்கள்- சோனகர், மலாயர்கள், ஜாவாக்கள், ஆப்கனியர்கள், போராக்கள், மேமன்கள், கோஜாக்கள் மற்றும் பெங்காலியர்கள் என பல்வேறு இனக் குழுக்களின் கூட்டுத் தொகுதியாவர். அவரவர் பண்பாடுகளிலிருந்தும், மரபுகளிலிருந்தும் பெற்றுக்கொண்ட பன்மையான சுய இனத்துவ அடையாளங்களை அவர்கள் கொண்டுள்ளனர்.
இன்றைய உலகு பல மதங்கள், பண்பாடுகள், மொழிகள், இனங்கள் என பிரிந்திருக்கும் பன்மை நிலமாகும். இன்று ஒவ்வொரு தனிமனிதனும் ஏதேனுமொரு இனத்தின், மதத்தின், சமூகத்தின், பண்பாட்டின், மொழியின், தேசத்தின் உறுப்பினனாகவே இருக்கிறான். பழங்குடிகள் கூட ஒரு சமூகமாகவே இன்று வாழ்ந்து வருகின்றனர். மனித சமூகங்களின் பௌதீக வாழ்விலும், சிந்தனை முறையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த யுகத்திலும் இது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் அவரவர் மதமும், பண்பாடும், மொழியும் முதன்மையானதாகவும், வழிபாட்டுக்குரியதாகவும், அவர்களின் குருதியில் கெட்டியாகக் கலந்து விட்டதாகவுமே இருக்கிறது. இந்த எல்லைகளைக் கடந்து நிற்பவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு குறித்த விகிதத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேநேரம் இந்த பண்பாடுகள், மொழிகள், மதங்கள், நாகரீகங்கள், தேசங்கள் அனைத்தும் ஒரே நாளில் ஒரே இடத்தில் அல்லது ஒரே காலப் பகுதியிலோ தோன்றியவை அல்ல என்பதை நாம் அறிவோம்.
ஆயினும் சில மதங்களுக்கிடையில் அவை தோன்றிய நிலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு தொடர்புகள் இருப்பதைக் காணலாம். உதாரணமாக மத்திய கிழக்கு நிலப்பகுதியில் தோன்றிய யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன. பொதுவாக இம்மூன்று பெருமதங்களும் பல்லிறை (Multitheism) வழிபாட்டுச் சமூகங்களிலிருந்து பல்லிறைவாதத்தை எதிர்த்துத் தோன்றிய மதங்களாகும். அதனால் இந்த மும்மதங்களினதும் மய்யக் கொள்கையாக ஓரிறைவாதம் (Monotheism) விளங்குகிறது.
அரேபியத் தீபகற்பத்தில் தோன்றிய இம்மூன்று மதங்களினதும் கடவுள்கொள்கை, வேதம் கூறும் செய்திகள் போன்றவற்றில் ஒத்த தன்மை இருப்பதையும் காணலாம். அதேபோன்று, இந்திய மண்ணில் தோன்றிய சமணம், பௌத்தம் போன்றவற்றுக்கிடையிலும் இந்த நெருக்கம் உள்ளது. அதேபோன்று ரஸ்யா, பாரசீகம், சிரியா, கிரேக்கம் மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் தோன்றிய மதங்கள் மற்றும் தத்துவங்களும் கூட ஒன்றுக்கொன்று ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. இது ஒன்றின் மீது மற்றொன்று ஏற்படுத்தும் தாக்கம் தான். முன்னையதிலிருந்து (அல்லது சமகாலத்தில் நிலைபெறும் மற்றையதிலிருந்து) பின்னையது தாக்கம் பெறாமல் முழுமையாகத் தனித்துவமானதாக எந்த மதமும் இல்லை என்பதை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.
ஒரு மண்ணில் தோன்றும் மதமோ, தத்துவமோ முதன்மையாக அந்த மண்ணுக்குத்தான் அசலானதாக இருக்கும். ஏனெனில் அந்த மதம் அந்த சமூகத்தின் பாரம்பரியமான மொழி, பண்பாடு, மரபுகள், கலைகள், சமூக உளவியல், மானுடவியல் கூறுகள், சமூகத் தன்மைகள் போன்றவற்றையே பெருமளவில் பிரதிபலிக்கும். கடவுள் கொள்கையில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, மிகச்சிறு அளவில் வணக்கமுறைகளில் புதுமையை அறிமுகப்படுத்தும்.
ஒரு மதம் அது தோன்றிய மண்ணிலிருந்து, தேசத்திலிருந்து, கலாசாரத்திலிருந்து, நாகரீகத்திலிருந்து, சமூகத்திலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் வேறு சமூகங்களுக்கு, பண்பாடுகளுக்கு, இடங்களுக்கு பரவிச்செல்லும் போது அந்த அந்த சுதேச சமூகங்களுக்கு அப்புதிய மதம் செயற்கையானதாக, அந்நியமானதாகவே (exotic) தோன்றும். காரணம், ஒரு மதம் புதிதாக ஒரு சமூகத்தில் அறிமுகமாகும் போது அந்த மக்கள் ஏற்கனவே ஒரு மதத்தின், சமூகத்தின், மொழியின், பண்பாட்டின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். அவர்களில் எல்லோருமே தங்களது பழைய நம்பிக்கையை, மதத்தைத் துறந்து புதிய மதத்தை ஏற்றுக்கொண்டு அது உருவாக்கும் சமூகத்தினதோ, இனத்தினதோ, பண்பாட்டினதோ உறுப்பினராக ஆகிவிடுவதில்லை. மாறாக, தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, பண்பாட்டு நடைமுறைகள், வழக்காறுகள், இனத் தனித்துவங்கள், மொழிப் பாவனைகள் போன்றவற்றை அப்படியே பேணிக்கொண்டு கடவுள் கொள்கையாக புதிய மதத்தைத் தழுவிக்கொள்கின்றனர். ஆயினும் இந்த மாற்றம் இலகுவில் நடந்து முடிவதுமல்ல.
பழைய மதத் தலைவர்களினதும், அபிமானிகளினதும் பலத்த எதிர்ப்புகள் (அதன் உச்ச எல்லையாக யுத்தம் வரை அந்த எதிர்ப்பு இருக்கும்) அனைத்தையும் தாண்டித்தான் ஒரு மதத்தால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. உலக வரலாற்றில், பெரும் மதங்களுடன் மோதி இதில் தோல்வியடைந்த பல மதங்கள் அப்படியே எச்ச சொச்சம் இல்லாமல் அழிக்கப்பட்டுமுள்ளன.
உள்நாட்டு சமூக மரபுகளை மறு ஆக்கம் செய்யும் வெளிநாட்டு மதங்கள்
புதிதாக ஒரு மதம் அந்த மண்ணிலிருந்தே உருவாகி வரும் போது அல்லது வேறு மண்ணலிருந்து வந்து அறிமுகமாகும் போது அம்மண்ணில் வாழும் சுதேச மக்கள் அப்புதிய மதத்தைத் தழுவிக்கொண்டாலும், அதன் பண்பாடு மற்றும் மரபுகளையும் சேர்த்து பின்பற்றுவதில்லை. காலப்போக்கில், அது திட்டமிட்டவகையில் அந்த மக்களின் பழைய நம்பிக்கைகள், வழக்காறுகள் போன்றன முற்றாக புதிய மதத்தால் களையப்பட்டு மறு ஆக்கம் செய்யப்படும். அப்புதிய மதத்தைப் பின்பற்றும் சுதேச மக்களின் மூன்றாம் நான்காம் தலைமுறையினரை அவர்களது முன்னோரின் பழைய நம்பிக்கைகள், வழக்காறுகள், கலாச்சார எச்சங்கள் போன்றவை தம்முடையவை அல்ல, அவை அழிக்கப்பட வேண்டியவை அல்லது வழிகேடானவை என புதிய மதத்தின் தூய்மைவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு புதிய மதத்தின் தூய்மை வாத பக்தர்களாக மாற்றப்படுகின்றனர். இப்படித்தான் தூய்மைவாதம் உருவாகிறது.
கி.பி. 6ம் நூற்றாண்டில் மக்காவில் இஸ்லாத்தை முதன் முதலில் முகம்மது நபிகளார் முன்வைத்தது பல்லிறைவாத வழிபாட்டிலிருந்த, இஸ்லாத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மத நம்பிக்கை கொண்ட, கலாசாரத்தைக் கொண்ட அரபிகளிடம்தான். அப்போது அந்த அரபிகளின் பிரதான மதமாக அவர்களின் மூதாதையரின் மதமான பல்லிறை வழிபாடு (multitheism) விளங்கியது. அதேநேரம் அவர்களை மிக அண்டிய பகுதிகளில் கிறிஸ்வதம், யூதம் போன்ற மதங்களும் காணப்பட்டன. முகம்மது நபிகள் அரபிகளின் பாரம்பரிய மதமான பல்லிறைவாத மதத்திலிருந்தே தோன்றினார்.
ஏற்கனவே, அரபுத் தீபகற்பத்தில் ஒரு நாகரீகத்தை, வரலாற்றைத் தோற்றுவித்த அரபிகள் அரபு மொழியையும் உருவாக்கி இருந்தனர். அரபுத் தீபகற்பத்தில் பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள், மரபுகள் உருவாகி வந்த போதிலும் வலுவானதும், உறுதியானதுமான மொழியாக அரபும், அரபுப் பண்பாடும் விளங்கியது. இதனால் தான் அந்த மக்களும், தேசமும், அரபுக்கள் என்றும் அரேபியா எனவும் அழைக்கப்படுகிறது. எனினும் இதன் மூலம் இஸ்லாம் வருவதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த மக்களிடமிருந்து வந்த வழக்காறுகள், மரபுகள், மொழி கலாசாரம் போன்றன இந்த புதிய மதத்தின் வருகையினால் முற்றாக அழித்தொழிக்கப்படவில்லை. கடவுள் வழிபாட்டிலும், மத நம்பிக்கையிலும்தான் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இஸ்லாத்தின் வருகையின் பின்னரும் அரபு மொழி மாற்றியமைக்கப்படவில்லை என்பதையும், அரபிகளின் பாரம்பரியமான ஆடை, உணவு, கலை போன்ற பண்பாட்டுக் கூறுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னரும் இஸ்லாத்துக்கு முன்னர் இருந்த அதே மொழியும், பண்பாடும், மரபுகளும், பாரம்பரியங்களும் தான் இஸ்லாத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. இதிலிருந்து இஸ்லாத்திற்காக ஒரு சமூகம் தங்கள் மொழியை, மரபுகளை, பண்பாட்டை, பாரம்பரியங்களைக் கைவிட வேண்டிய எந்த அவசியமுமில்லை என்பது புலனாகிறது.
இலங்கையிலும் இஸ்லாம் அரபு வணிகர்கள் மூலம் பரவியது. அப்போது இலங்கை முஸ்லிம்கள் இலங்கைச் சுதேச மதத்தின், பண்பாட்டின், இனத்தின் மொழியின் உறுப்பினர்களாகவே இருந்திருப்பார்கள். இஸ்லாம் இங்கு அறிமுகமானதன் பின்னர் இலங்கைச் சுதேசிகளாக இருந்த சிலர் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாம் என்ற புதிய மதத்தின் அங்கத்தவர்களாயினர். ஆனால் அவர்களின் பூர்வீக மதம் இஸ்லாமல்ல. மொழி அரபு அல்ல. அவர்களின் பண்பாடும் மரபும் கூட அரபுப் பண்பாடோ, மரபோ அல்ல. அநேகமாக அவர்களும் பல்லிறைவாத நம்பிக்கையுடைய இலங்கைக் குடிகள்தான். இவ்வாறு புதிதாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்ட இலங்கைச் சுதேசிகள் மத்தியில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மாற்றம் நிகழ்ந்து வந்திருக்கும். அது மெல்ல மெல்ல நிகழ்ந்து நான்காம் ஐந்தாம் தலைமுறையாகும் போது மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபட்ட ஒரு இனக்குழுமமாக உணரத் தலைப்பட்டிருப்பர். மற்ற சமூகங்களின் புதிய தலைமுறையினரும் அவர்களை ஒரு வேறு இனக்குழுமமாகவே பார்த்திருப்பார்கள். ஏனெனில் அவர்களது 4ம் 5ம் தலைமுறைக்கும் இவர்களின் கடந்த கால மதமாற்ற விசயங்கள் தெரிந்திருக்காது. அவர்களும் தங்களிலிருந்து சென்றவர்கள்தான் என்ற உண்மையை அவர்களால் உணரமுடியாது. காரணம், அவர்கள் சிறுபிள்ளைகளாக சமூகத்திலிருந்து உருவாகி, சமூகமயமாகி வரும் போது முஸ்லிம்களைப் புதிய இனமாக, வேறு மதமாகத் தங்களிலிருந்து வேறுபட்டவர்களாக பார்த்தே பழகி வந்திருப்பார்கள்.
இலங்கை முஸ்லிம்கள் இலங்கை எங்கிலும் பரந்து வாழ்ந்தாலும் அவர்களின் தாய் மொழி தமிழ். வரலாற்றுரீதியாகப் பார்த்தால், மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் இனம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சிங்களவர்கள் பௌத்தம்-கிறிஸ்தவம் ஆகிய மதங்களைப் பின்தொடர்பவர்கள். ஆனால் இனம் சார்ந்து அவர்கள் சிங்களவர்கள். இங்கு அவர்களின் மொழி, சமூக உளவியல், கூட்டுறவு, கலை, கலாசாரத் தளம் ஆகியவை இனப் பண்பாட்டினாலேயே இன்றளவும் தீர்மானிக்கப்படுகின்றன. சிங்களவர்கள் பவுத்த-கிறிஸ்தவ வித்தியாசங்களின்றி தங்களை சிங்கள இனமாகவே உணர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சிங்களவர்களில் ஒரு சொற்ப அளவினர் இடைநடுவில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டவர்கள் அவ்வளவுதான். தமிழர்களிலும் இந்துக்கள்-கிறிஸ்தவர்கள் மத வேறுபாடு இருந்தாலும் மொழியினடிப்படையில் தமிழர்களே. அவர்களது பௌதீகத் தோற்றம், சமூக உளவியல், அறிவுத் திறம் போன்றவையும் ஒரேமாதிரியானதுதான்.
அதேபோன்றுதான் அரபிகள், பாரசீகர், ஆங்கிலேயர், ஜேர்மனியர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், இத்தாலியர் என்போர் இஸ்லாம், கிறிஸ்தவம், கத்தோலிக்க மதத்தவராக இருந்தாலும் அவர்களது இனம் மொழி அடிப்படையில் அமைந்ததுதான். ஏனெனில் மதத்துக்கு முன்னரே மொழியும், இனமும் உருவாகி இருக்கிறது. அதுவே இயற்கையான அளவீடாகும். தொன்றுதொட்டு ஒரு சமூகம் என்ன அடையாளத்துடன் இருந்ததோ அதுவே அதன் உண்மையான அடையாளமாகும். அவர்கள் புதிய மதத்தைத் தழுவிக்கொண்டாலும் உடல் தோற்றம், மொழி, பண்பாடு, வழக்காறு, மரபுகள், சமூக உளவியல் என்பன அதன் உண்மையான அந்த ஆதி இனக்குழுமத்தினதுடையதைப் போன்றே இருக்கும். அவர்களது உடல் தோற்றத்திலோ, நடத்தைககளிலோ, உளவியலிலோ எந்த மாற்றமும் நிகழாது. வேண்டுமானால் புதிய மதத்தை தழுவும் போது இனக் கலப்பு ஏதும் ஏற்பட்டிருந்தால் அவர்களின் ஆதி இனக்கூறிலிருந்து சிறிது வித்தியாசம் வெளிப்படலாம். காரணம் மதத்தால் மட்டுமே ஒரு இனம் மாறுவதில்லை. இயற்கையில் அது எந்த இனமாக இருந்ததோ அந்த இனத்தின் பண்புகளையும், உளவியலையும், உடற்கூறுகளையும் தான் அது வெளிப்படுத்தும்.
இலங்கை முஸ்லிம்களும் அரபிகளிடமிருந்து இரவல் பெறாத தங்களளுக்கென தனித்துவமான அடையாளங்கள், மரபுசார்ந்த பண்பாடுகள், வழக்காறுகள், இனத்துவ அடையாளங்கள் என பல்வேறு அம்சங்களைக் கொண்ட மக்கள் குழுமமாவர். அதேநேரம் இந்த அம்சங்கள் பன்மையானதாகக் காணப்படுகின்றன. காரணம், இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு இனங்களின் கூட்டாவர். இலங்கை முஸ்லிம்கள்- சோனகர், மலாயர்கள், ஜாவாக்கள், ஆப்கனியர்கள், போராக்கள், மேமன்கள், கோஜாக்கள் மற்றும் பெங்காலியர்கள் என பல்வேறு இனக் குழுக்களின் கூட்டுத் தொகுதியாவர். அவரவர் பண்பாடுகளிலிருந்தும், மரபுகளிலிருந்தும் பெற்றுக்கொண்ட பன்மையான சுய இனத்துவ அடையாளங்களை அவர்கள் கொண்டுள்ளனர். இலங்கை முஸ்லிம்கள் என அறியப்படும் இந்தச் சமூகங்களின் தனித்துவங்கள், மரபுகள், பண்பாடுகள் ஏன் அரபுப்பண்பாட்டுக்குள் அரைத்துக்கரைக்கப்பட வேண்டும்? அப்படியென்றால் “அரபிகள்தான் இஸ்லாம். இஸ்லாம்தான் அரபிகளா?” அங்கிருந்து இஸ்லாம் தோன்றியது என்பதால் அதன் ஏகபோக உரிமையாளிகள் அவர்களே என்றாகிவிட்டதா? இஸ்லாம் இறைவனின் மதமா? அரபிகளின் மதமா?
காலனித்துவப் பாணியில் அரபுப் பண்பாட்டுமயமாக்கம்
மேற்கு, காலனித்துவத்தின் மூலம் கீழைத்தேய சமூக அமைப்பை மேற்கு மாதிரியில் மாற்றியமைத்ததை நாம் அறிவோம். அது கீழைத்தேய நாடுகளை ஆக்கிரமித்து கிறிஸ்தவ மதம், ஐரோப்பிய அரசியல் முறை, கலாசார முறை (ஆடை, உணவு), கல்வி முறை போன்றவற்றை மூன்றாம் உலகின் மீது பலாத்காரமாகத் திணித்தது. அதனையே நாம் காலனித்துவம் என்கிறோம். இப்போது மேற்கு நாடுகள் மறைமுகமாக தங்களது அரசியல் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மறைமுகமாக கீழை மற்றும் வளர்முக நாடுகள் மீது செல்வாக்கைச் செலுத்தி மேலும் தங்களது கொள்கைகளைத் திணித்து வருகிறது. மேற்கு வடிவமைத்த கல்வித் திட்டம் அரசியல் முறை, பொருளாதார முறை போன்றவற்றையே எல்லா நாடுகளையும் பின்பற்ற வைப்பதன் மூலம் ஓர் உலகு தழுவிய முறைமை ஒன்று நிறுவப்பட முயற்சிக்கப்படுகிறது. அதற்கான கடனுதவிகள் சலுகைகள், போன்றவை வழங்கப்படுகின்றன. அல்லது எதிர் நடவடிக்கையாக பொருளாதாரத் தடைகள் போன்ற செயற்பாடுகள் மூலம் வளர்முகநாடுகள் ஒருவழிக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இதே பாணியில் இன்று உலகெங்கிலுமுள்ள அரபுக்கள் மற்றும் அரபு அல்லாத முஸ்லிம் என அனைவரும் அரபு மய்ய தூய்மைவாத இஸ்லாமியர்களாகவே மாற வேண்டும் என்று சவுதியைத் தளமாகக் கொண்ட அரபு மய்ய தௌஹீத் இயக்கங்கள் விரும்புகின்றன. தன்னிடமுள்ள பணபலத்தைப் பயன்படுத்தி தௌஹீத் இயக்கங்கள் மூலம் இச்செயல்பாட்டை மிகத்தீவிரமாக சவுதி முன்னெடுத்து வருகிறது. ஒருவகையில் பார்த்தால், இது அப்பட்டமான தூய்மைவாத அரபு மதக் காலனித்துவமாகும். இச்செயல்பாடு மூலம், அரபு மரபுகள், பண்பாடுகள், நம்பிக்கை, சிந்தனை முறை மற்றும் வாழ்வியல் முறை என்பவற்றை இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது.
உள்ளூர் முஸ்லிம் பண்பாடுகளை, மரபுகளை, வழக்காறுகளை மதச்சாயம் பூசி அவற்றை “வழிகேடு” என்ற வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் இல்லாதொழிப்பதற்கான திட்டங்கள் மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதற்காக குர்ஆன், ஹதீஸ்களுக்கு ஒருதலைப்பட்சமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. உனது மரபை சொந்தப் பண்பாட்டை விட்டு நீ வெளியேறு. அரபுப் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையுமே நீ பின்பற்ற வேண்டும். உனக்கென்று ஒரு சுயமான வாழ்க்கை முறை, வழக்காறு, சிந்தனை முறை, பண்பாடு, கலைமரபு என எதுவும் இருக்கத் தேவையில்லை. தூய அரபிகள் போன்று உன் ஆடைகளை, உன் உணவுப் பழக்கத்தை, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிக்கொள் என்று அறிவிப்பதாகத்தான் இலங்கையில் செயற்படும் அரபுமய்ய இஸ்லாமிய மதக் காலனித்துவ இயக்கங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
இந்த மதக் காலனித்துவ செயல்பாடானது இலங்கை போன்ற நாடுகளில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. இஸ்லாமியத் தூய்மைவாத இயக்கங்களின் வருகைக்கு முன்னர் வேறு நாகரீகங்களின், பண்பாடுகளின் தேசங்களின் மக்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்ட போது அதனை ஒரு மதமாக மட்டுமே தழுவிக்கொண்டார்கள். தங்களுக்கு எந்த விதத்திலும் பொருந்தாத அரபுத்தேச மரபுகளை, பண்பாட்டை, வழக்காறுகளை எல்லாம் இஸ்லாமாக வரித்துக்கொண்டு பின்பற்றவில்லை. அவர்கள் என்றென்றும் தங்களது பண்பாட்டு மரபுகளிலேயே அப்படியே தொடர்ந்திருந்தனர். உண்மையில், இஸ்லாம் வேறு அரேபியப் பண்பாடு வேறு என்பதை அவர்கள் நன்கு புரிந்துகொண்டனர். அரபுப் பண்பாடு, அரபிகளின் வழக்காறுகள், மரபுகள் கலைகள் எல்லாம் சேர்ந்துதான் இஸ்லாம் என்ற தவறான புரிதல் அவர்களிடம் இருக்கவில்லை.
ஈரான், சிரியா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலைமயை சிறப்பாகக் காண முடியும். அவர்கள் தங்கள் மொழியை, நாகரீகத்தை, மரபுகளை, கலைகளை அழித்துவிட்டு அரபுப் பண்பாட்டையும் மரபுகளையும் கண்மூடித்தனமாக தழுவிக்கொள்ளவில்லை. இஸ்லாத்தை மதமாக, தங்களின் கடவுள் கொள்கையாக, வழிபாட்டுமுறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதாவது அந்த மாற்றம் பல்லிறைவாதத்திலிருந்து ஓரிறைக் கொள்கையை நோக்கிய புலப்பெயர்வாக இடம்பெற்றுள்ளது.
அதேபோல், ஆபிரிக்க சமூகங்களிலும் இஸ்லாம் பரவிய போது பெரும்பாலான சமூகங்கள் இஸ்லாத்தை மதநெறியாக தழுவிக் கொண்டனவே ஒழிய அரபுகளின் பண்பாட்டையும் சேர்த்து தங்களது நூற்றாண்டுகால மரபுகளை, பண்பாடுகளை அப்படியே கைவிட்டு விட்டு கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. ஆன்மீகம்தான் ஒரு மதத்தின் ஆன்மாவாகும். அதுவே பின்பற்றப்படவேண்டியது. மாறாக அதற்கு வெளியேயான அந்த மதம் தோன்றிய சமூகத்தின் மொழியையும், ஆடைகளையும், சாப்பாட்டையும் சேர்த்தே பின்பற்ற வேண்டும் என வாதிப்பது அடிமுட்டாள்த்தனமானது.
பண்பாடு என்பது ஒரு சமூகம் நூற்றாண்டு காலமாக தாம் உருவாக்கிப் பேணி வரும் ஒரு சமூகவிசையாகும். மதத்துக்காக தன் சொந்தப் பண்பாட்டை ஏன் கைவிட வேண்டும்? எல்லா சமூகங்களிலும் மதம் பண்பாட்டின் ஒரு கூறாகவே இருந்து வருகிறது. மதத்தின் ஒரு கூறாக பண்பாடு இருப்பதில்லை.
உண்மையில், அரபு நாடுகளுக்கு வெளியில் வாழும் சுதேச சமூகங்கள் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்ட போது அந்ததந்த சமூகங்களின் மத நம்பிக்கையிலும், வழிபாட்டு முறையிலும் தான் மாற்றம் ஏற்பட்டதே ஒழிய அதைவிடுத்து மதம் சாராத பண்பாட்டு பகுதியில் மாற்றம் நிகழவில்லை. ஆனால் இலங்கை போன்ற தமிழ் இஸ்லாமியச் சூழலில் தூய்மைவாத இஸ்லாமிய இயக்கங்கள் அரபுப் பண்பாட்டையும், மரபுகளையும் கூட இஸ்லாமாக முன்நிறுத்துகிறது. இலங்கை முஸ்லிம்களின் சுய மரபுகள், பாரம்பரியங்கள், வழக்காறுகளை முற்றாக அழித்தொழித்து இலங்கைக்கு எந்த விதத்திலும் பொருந்தாத அரபு மைய இஸ்லாத்தை திணிக்க முற்படுகின்றன. இலங்கையின் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கு இந்தத் தூய்மைவாத இஸ்லாம் எந்த விதத்திலும் உகந்ததல்ல என்பதை இலங்கையின் அண்மைக்கால அரசியல் போக்குகளும், சிறுபான்மை இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகளும் இதற்கு தக்க சான்றாகவுள்ளன.
இஸ்லாத்தின் பல சட்டதிட்டங்கள் தூய்மைவாதக் கருத்துகள் என்பன இஸ்லாம் ஒரு ஆதிக்க சக்தியாக உருவான பின்பு கொண்டு வரப்பட்டவை. முஸ்லிம் பெரும்பான்மை, இராணுவப் பலம், யுத்த வெற்றிகள், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை உருவான பின்புதான் தூய்மைவாதக் கருத்தியல் பேசப்பட்டது. காரணம், அப்போது முஸ்லிம்கள்தான் பெரும்பான்மை. உலகின் ஆதிக்கத்தரப்பு. ஆட்சியினர். எனவே மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் இருப்பதால் அங்கு முஸ்லிம்கள் தனிமைப்படப் போவதில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் தான் முஸ்லிம்களோடு ஒத்துழைத்துப் போகாவிட்டால் தனிமைப்படல் மற்றும் வேறு விதமான பாதிப்புகளுக்கும் உள்ளாக வேண்டி ஏற்படும். இதனால் வேறு வழியின்றி அவர்கள் இஸ்லாத்துக்கு வரவேண்டி இருக்கும். இந்த சூழல் இப்போது உலகத்திலும் இல்லை. இலங்கையிலுமில்லை.
ஆனால் தூய்மைவாத இஸ்லாமிய இயக்கங்கள் இன்னும் அதேநிலையில்தான் தாங்கள் இருப்பதான கற்பனையில் மிதப்பது போலலுள்ளன அவர்களது எதிர்பார்ப்புகளும், செயல்பாடுகளும்.
பாரம்பரிய இஸ்லாம் என்றால் என்ன?
தொன்று தொட்டுப் பாரம்பரியமாக இருந்து வரும் தங்களது மரபுகள், பண்பாடுகள், கலைகள், வழக்காறுகளைத் துறக்காது அவற்றோடு இணைந்த வகையில் இஸ்லாத்தை தங்களின் மதமாக ஏற்றுக்கொண்டு வாழ்வதே பாரம்பரிய இஸ்லாம் என்பதன் மூலம் நான் கருதுகிறேன். இஸ்லாத்தை மதமாக ஏற்றுக்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் தங்களது சொந்த மரபுகளை, வழக்காறுகளை பேணி பிற சமூகங்களோடு நல்லிணக்கமாக வாழ்ந்து வரும் பாரம்பரியத்திலிருந்தே இந்த சிந்தனை வடிவங் கொள்கிறது.
இலங்கை முஸ்லிம்களின் சிந்தனாபூர்வமான, ஜனநாயகபூர்வமான இந்த அமைதியான வாழ்க்கை முறைக்கு மிகப்பெரும் சவால் இந்த அரபு மய்ய தூய்மைவாத இஸ்லாம்தான்.
ஒரு சமூகம் என்றால் அதற்கு வேர்கள், வரலாறு, பண்பாடு, அடையாளங்கள், மரபுகள் போன்றன இருக்க வேண்டும். அதுவும் ஒரு சமூகம் அந்நாட்டின் சிறுபான்மையாக இருக்குமாயின் இவை மிக மிக அத்தியவசியமானதாகும். அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அந்த சமூகத்தின் மிக முக்கிய கடமையுமாகும். இலங்கை முஸ்லிம்களின் வேர் இந்த மண்ணில் உள்ளது என்றவகையில் அவர்களின் மரபும், பண்பாடும், வாழ்க்கை முறையும் இந்த மண்ணுக்குரியதாகவே இருக்க வேண்டும். மாறாக முஸ்லிம்கள் தங்களது வேர்களை சவுதியிலோ, ஈரானிலோ, எகிப்திலோ, பாக்கிஸ்தானிலோ தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களை, மரபுகளை அழித்துவிட்டு வேறுநாடுகளின் மாதிரிகளைப் பின்பற்ற முற்படும் போது இங்கு வேறு பிரச்சினைகளுக்கு முஸ்லிம் மக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. பொதுபலசேன போன்ற பவுத்த அடிப்படைவாத அமைப்புகள் முஸ்லிம்களின் நாடாக சவுதியைக் கருதுவது தூய்மைவாத இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம்களின் வேரை இலங்கையில் தேடாது சவுதியில் தேடுவதால்தான்.
உண்மையில், இஸ்லாம் வேறு அரேபியப் பண்பாடு வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரபுப் பண்பாடு, அரபிகளின் வழக்காறுகள், மரபுகள் கலைகள் எல்லாம் சேர்ந்துதான் இஸ்லாம் என்பது தவறான புரிதலாகும்.
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய பண்பாட்டு நடைமுறைகள்
இலங்கை முஸ்லிம்கள் பாரம்பரிய பண்பாட்டு நடைமுறைகளோடு நெடுங்காலமாகவே இணைந்திருக்கின்றனர். இத்தகைய சில பண்பாட்டு நடைமுறைகளாக கத்தம், பராஅத் ரொட்டி பகிர்தல், ஒடுக்கத்துப் புதன், மீலாத் நபி விழா, நோன்பு கால ஸலவாத், மௌலூது, புகாரி ஓததலும் நார்சாவும், பிற மத சடங்குகளை மதித்தல் என இந்தப் பண்பாட்டுப்பட்டியல் நீளமானது. இப்படியான பாரம்பரிய மரபுகளை அழித்துவிடுவதன் மூலம் அரபு மய்ய இ்லாமிய இயக்கங்கள் உருவாக்க விரும்புவது எந்தவித கலாசார மரபுகளுமற்ற, வேர்களற்ற ஓர் வரண்ட, மேலோட்டமான சமூகத்தையே. மத அனுஷ்டானங்களை மட்டும் கொண்ட மக்கள் குழுமம் வெறும் பக்தர்கள் மட்டுமே. அவர்கள் சமூகமாக ஆக முடியாது என்பதை இத்தகைய இஸ்லாமிய இயக்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் இந்தக் கலாச்சார செயற்பாடுகள் கூட வேறு கலாசாரங்களிலிருந்து வந்திருந்தாலும் கூட அது அவர்களின் கெட்டியான கலாசார அடையாளங்களாக நூற்றாண்டுகளாகவே இங்கு நிலைபெற்றுவிட்டன. எனவே, அவை இன்று சுதேச முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளங்களாக நிறுவப்பட்டுள்ளன.
தூய்மைவாத தௌஹீத் இயக்கங்கள் இந்த கலாசார மரபுகள் முஸ்லிம்களின் ஈமானைச் (இஸ்லாத்தின் அடிப்படையான மதநம்பிக்கை) பலவீனப்படுத்துவதாக கூறுகின்றனர். இது கலாசாரத்தையும், மதத்தையும் அவர்கள் ஒன்றாக குழப்பிக்கொண்டதன் விளைவுதான். ஒரு சமூகத்தில் மதம் மட்டுமே அதன் ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் தீர்மானிப்பதில்லை. ஒரு சமூகத்தின் மரபுகளும், பண்பாடும் மதத்தால் கட்டமைக்கப்பட்டவை அல்ல. இன்று அரபிகளிடம் காணப்படும் ஆடை, உணவு கலாசார முறைகள் இஸ்லாம் அறிமுகப்படுத்தியது அல்ல. இஸ்லாத்துக்கு முன்பிருந்தே அரபிகளின் மரபாக அவை இருந்து வருகின்றன. அத்தகைய அரபிகளின் மரபுகளையே இலங்கை முஸ்லிம்களும் ஏன் தழுவிக்கொள்ள வேண்டும்?
முஸ்லிம்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய மரபுகள் எதற்காக அழிக்கப்பட வேண்டும்? இந்த மரபுகளைப் பொறுத்தவரை நேரடியான தடைகள் இஸ்லாத்தின் அடிப்படைப் பிரதிகளான குர்ஆனில், ஹதீஸில் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். (ஆனால் சில ஹதீஸ்களையும் நம்ப முடியாது. பொய்). குறித்த ஒரு மரபு நேரடியாக இவற்றில் பெயர் குறித்து தடைசெய்யப்படாவிட்டால் அடுத்ததாக இஸ்லாத்தின் அடிப்படைகளை அது பாதிக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால் அதைச் செய்வதால் மனிதகுலத்துக்கோ, வேறு எவற்றுக்குமோ தீங்கு ஏற்படுகிறதா எனப் பார்க்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால் அந்த மரபை நாம் பின்பற்ற முடியும். அதனைப் பேணிக்கொள்வதன் மூலம் கலாசார சமூகமாக இருக்க முடியும். வேர்கள், வரலாறு, மரபுகளற்ற வரண்ட சமூகமாக குறுகி ஓர் சாதாரண அரசியல் அலையிலேயே அள்ளுண்டு போக வேண்டிய அவல நிலைக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.
அத்தோடு இந்த கலாசார மரபுகளில் ஆன்மீக நன்மையும் பொதிந்துள்ளது. உதாரணமாக, இலங்கை முஸ்லிம்கள் தங்களின் உறவினர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்காக அல்குர்ஆனிலிருந்து சில அத்தியாயங்களை ஓதி, சிலருக்கு உணவளிப்பார்கள். அதனைக் கத்தம் என அழைப்பார்கள்.
கத்தம் ஓதுதல் இலங்கை முஸ்லிம்களின் ஒரு கலாசார மரபாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. தூய்மைவாத அரபு மய்ய இஸ்லாமிஸ்ட்டுகள் இதனை அங்கீகரிப்பதில்லை. இதனை மதக் கடமையாக, மத அனுஷ்டானங்களில் ஒன்றாகக் கருதி, இது இஸ்லாத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற வாதங்கள் மேற்கிளம்புகின்றன. மதத்தோடு இதனை இணைக்காமல் மதத்துக்கு வெளியேயான ஒரு கலாசார வடிவமாக அதனைப் பார்த்தால் பிரச்சினை இல்லை. ஆனால் மதத்தோடு இணைத்துப் பார்த்தாலும் அதைத் தடுத்தேயாக வேண்டும் என்பதற்கான நியாயங்கள் எதுவும் தென்படவுமில்லை. அரபிகளிடம் இல்லாத பண்பாட்டம்சங்கள் எங்களிடமும் இருக்கக்கூடாது என்ற வாதத்தின் அடிப்படையில்தான் தௌஹீத் இயக்கங்கள் இந்த எதிர்ப்பை வெளியிடுகின்றன.
வேண்டுமானால் சீர்திருத்தங்கள் செய்ய முடியும். கத்தம் எனும் இப்பண்பாட்டை மதஅனுஷ்டானமாகவன்றி கலாசார மரபாக பார்த்தால் இதற்கு மேல் அதற்கு எந்த பதிலும் தேவையில்லை.
முதலில் கத்தம் ஓதும் மரபை குர்ஆனிலோ ஹதீஸிலோ அதன் பெயர் குறிப்பிட்டு தடுக்கப்பட்டிருக்கிறதா எனப்பார்த்தால் அப்படி இல்லை. அடுத்ததாக இஸ்லாத்தின் அடிப்படைகளோடு அது முரண்படுகிறதா எனப் பார்த்தால் அப்படியும் இல்லை. அடுத்ததாக மனித குலத்துக்கோ, சூழலுக்கோ அது தீங்கு ஏற்படுத்துகிறதா எனப் பார்த்தால் அப்படியும் இல்லை. இதனால் அந்த மரபை அழிக்காமல் அதனைப் பேணுவதற்கு மதரீதியான தடையோ, விஞ்ஞானரீதியான தடையோ இல்லை என்பது புலனாகிறது.
இதுபோன்று பல்வேறு கலாசார மரபுகளைக் கொண்ட பாரம்பரிய சமூகமாகவும், பிற கலாசாரங்களோடு சிறந்த முறையில் இடைவினையைப் பேணி வாழ்ந்து வந்திருக்கின்றனர். அந்தப் பாரம்பரியம் இன்று தூய்மைவாத இஸ்லாமிஸ்ட்டுகளால் முற்றாக சிதைக்கப்பட்டுவிட்டன. பிற மதங்கள், கலாசாரங்கள், சடங்குகள் குறித்து ஒரு சகிப்புணர்வற்ற வரட்சியான சமூகமாக அவர்கள் உருமாற்றப்பட்டுள்ளனர். முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் இருந்த கலாசார மற்றும் ஆன்மீக சூழல் அரபுப் பண்பாட்டையும், தூய்மைவாதத்தையும் முன்னிருத்தி முற்றாகவே சிதைக்கபட்டுள்ளது. நோன்பு காலங்களில் மாலை வேளையில் சிறுவர்கள் பள்ளிவாசல்களில் சொல்லும் இனிய சலாவாத்துகள் அரபுப் பண்பாட்டில் இல்லை என்பதனால் அது தூய்மைவாத இஸ்லாத்துக்கு எதிரானதாக கற்பிக்கபட்டு அந்த இனிய, இரம்மியமான சூழல் சமூகத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கபட்டிருக்கிறது. இப்படி இலங்கை முஸ்லிம்கள் தூய்மைவாத இஸ்லாமிய இயக்கங்களின் மறுபரிசீலனையற்ற செயற்பாடுகளால் இழந்தவை அதிகமாகிக் கொண்டு செல்கின்றன. கடைசியில், அவர்கள் இலங்கையின் தேசிய அரசியலிலும், சமூக மட்டங்களிலும் கொண்டிருந்த கவுரவம், அந்தஸ்து, நன்மதிப்பு என்பவற்றையும் இழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஜிஃப்ரி ஹாஸன்
கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.
நாஸ்தீகர்களுக்கு ஒப்பான எழுத்தாளர் சமூகம்
இக்கட்டுரைக்கு இவர் உசாத்தூனைகள் மூலம் இதிலுள்ள விட்யங்களை வலுப்படுத்த பயன்படுத்திருக்கலாம். அது போல் இவரது சிந்தனை பழமைவாதம் , பல்லனம் என்ற போர்வையில் இஸ்லாத்தைவிட்டு தூரமானது என்பதனை இவரது எழுத்துக்கள் சான்றுபகர்கின்றன.
வரலாறு தன்னை மீட்டிக்கொள்கிறது என்பதையே இந்தக் கட்டுரையை வாசித்த பின் உணரமுடிகிறது.
ஐரோப்பா இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களைப்பிரிக்க இதே பசப்பு, நச்சு வாதத்தையே முஸ்லிம்களுக்கு மத்தியில் முன்வைத்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டது. முஸ்லிம்கள் தங்களின் கிலாபத்தையே அதற்கான விலையாகக் கொடுத்தார்கள். துருக்கியில் எகிப்திலும் நடந்த சம்பவங்கள் இதற்கு நல்ல சான்று.
ஒருவர் தனக்கு தொடர்பில்லாத துறையில் பேசினால் பல பிரச்சினைகளைத் தோற்றுவிப்பார் என்று சொல்வர். இக்கட்டுரை அதற்கு நல்ல சான்று.
கட்டுரையாலர் அறிவியல் ரீதியிலான ஆய்வு முறைமைகளற்ற விதத்தில் இத்தலைப்பைக் கையாண்டிருப்பது பெரும் குறை.
கவிதை என்பது வேறு, வரலாற்று ஆய்வு என்பது வேறு.
/ கவிதை என்பது வேறு, வரலாற்று ஆய்வு என்பது வேறு/
ஆமா. அதில் என்ன சந்தேகம்? இங்கு கவிதை பற்றி நான் பேசவே இல்லையே.
/ கவிதை என்பது வேறு, வரலாற்று ஆய்வு என்பது வேறு/
ஆமா. அதில் என்ன சந்தேகம்? இங்கு கவிதை பற்றி நான் பேசவே இல்லையே.
இத் தலைப்பு வரலாறு, பண்பாட்டியல், நாகரிகம் சார் ஆய்வு. ஆனால் அவ்வாரான ஆய்வுக்குரிய நியமங்கள், அடிப்படைகள், அதன் எதார்த்தங்கள் எதுவும் இவ்வாய்வில் பின்பற்றப்படவில்லை.
ஒரு மதம், அல்லது நாகரிகம் பரவும் போது அது எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது?. ஒரு சமூகத்தின் கலாச்சாரம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது.? காலம் இட மாற்றங்கள் அதில் தாக்கம் செலுத்துகின்றதா? போன்றவற்றுக்கு தவறான பதில்களே இவ்வாக்கத்தில் தெரிகிறது. ஒரு சாராரை இலக்கு வைத்து தாக்க முனைந்ததின் விளைவே இது.
கற்பனை வளம், மொழிவளம், … போன்ற கவிதைக்குத் தேவையான விடயங்களே இவ்வாக்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன அதையே அவ்வாறு குறிப்பிட்டேன்.
இது சிந்தனைக் கட்டுரை. ஒரு சமூகவியலாளனாக, எழுத்தாளனாக சமூகத்தில் வாழ்ந்து அதன் மதம் மற்றும் சமூகவியல் சார்ந்த போக்குகளை கூர்மையாக அவதானித்து என் தரப்புக் கருத்துகளை பேசும் கட்டுரை இது. நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
உங்கள் மனக்குமுறல்களையும் எதிர்பார்புக்களையும் ஒரு சமூகத்தின் கலாச்சாரமாகத் தினிக்க முயலும் போது அடுத்தவர்கள் மௌவ்னமாக இருப்பது தவறு, ஒருவர் தனது கருத்துக்களை சமூகத்தளத்தில் முன்வைக்கும் போது அது தர நிர்ணய நியதிகளின்படி நோக்கப்படுவது எதார்தமானது.
இதை விமர்சகனின் பதட்டம் என நினைப்பது குறித்த துறை பற்றிய தெளிவு கட்டுரையாளனுக்கு இல்லை என்பதையே மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இஸ்லாம் அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அங்கு வழக்கிலிருந்த சமூக கலாசார பண்பாட்டு அம்சங்கள் குறித்த போதுமான அளவு தங்களுக்கு இல்லை என்பது உங்களுடைய கட்டுரையை வாசிக்கும் பொழுது புரிகிறது..
மேலும் இஸ்லாம் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் ஒருவர் எவ்வாறான இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் என்பது குறித்தும் உங்களுக்கு போதுமான புரிதல் இல்லை.
இஸ்லாத்தில் உடைய ஆன்மீக எதிர்பார்ப்புக்கள் மற்றும் அது ஒரு தனி மனிதனிடத்தில் வேண்டிநிற்கும் மாற்றங்கள் அந்த மாற்றங்களை அடைவதற்கான இஸ்லாத்தின் உடைய ஆன்மீக வழிகாட்டுதல்கள் அது சார்ந்த கோட்பாடுகள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஏனைய மதங்களை போன்று இஸ்லாமும் ஒரு மதம் என்னும் மிகக் குறுகிய புரிதலில் இந்தக் கட்டுரையை எழுதி உள்ளீர்கள்.
இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொண்ட அரபு நாடோடிகளின் வாழ்க்கையில் இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த வாசிப்பு களைச் செய்த பின்னர் மீண்டும் இந்த கட்டுரையை ஒரு சரம் நீங்கள் வாசித்து பாருங்கள்
இஸ்லாம் அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அங்கு வழக்கிலிருந்த சமூக கலாசார பண்பாட்டு அம்சங்கள் குறித்த போதுமான அறிவு தங்களுக்கு இல்லை என்பது உங்களுடைய கட்டுரையை வாசிக்கும் பொழுது புரிகிறது..
மேலும் இஸ்லாம் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் ஒருவர் எவ்வாறான இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் என்பது குறித்தும் உங்களுக்கு போதுமான புரிதல் இல்லை.
இஸ்லாத்தில் உடைய ஆன்மீக எதிர்பார்ப்புக்கள் மற்றும் அது ஒரு தனி மனிதனிடத்தில் வேண்டிநிற்கும் மாற்றங்கள் அந்த மாற்றங்களை அடைவதற்கான இஸ்லாத்தின் உடைய ஆன்மீக வழிகாட்டுதல்கள் அது சார்ந்த கோட்பாடுகள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஏனைய மதங்களை போன்று இஸ்லாமும் ஒரு மதம் என்னும் மிகக் குறுகிய புரிதலில் இந்தக் கட்டுரையை எழுதி உள்ளீர்கள்.
இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொண்ட அரபு நாடோடிகளின் வாழ்க்கையில் இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த வாசிப்பு களைச் செய்த பின்னர் மீண்டும் இந்த கட்டுரையை ஒரு சரம் நீங்கள் வாசித்து பாருங்கள்
//இஸ்லாம் அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அங்கு வழக்கிலிருந்த சமூக கலாசார பண்பாட்டு அம்சங்கள் குறித்த போதுமான அறிவு தங்களுக்கு இல்லை என்பது உங்களுடைய கட்டுரையை வாசிக்கும் பொழுது புரிகிறது// இந்த கட்டுரைக்கு அது பற்றிய அதிக விபரக்குறிப்புகள் தேவை என நான் கருதி இருக்கவில்லை.
கடவுளை மதச் சடங்குகளுக்கூடாக அடையலாமா?மிக இலகுவான வழியாக இருக்கின்றதே!நான் நினைத்தேன் கடவுளை தேடி பயணிக்கலாம்,கடவுளை அடைவது என்பது ஆன்மீகமானது,அவன் தனக்கு உள்ளே கண்டு அடைவது, என்று.மேய்ப்பர்கள், மந்தைகளுக்கு கடவுளை அடையும் வழியை மதங்களுக்கூடாக காட்டுகிறார்களோ?சகல மதங்களிலும் மேய்ப்பர்களையும்,மந்தைகளையும் தான் காண்கிறேன்.கடவுளை காணவில்லை. கடவுளை நான் தான் தேடவேண்டுமோ?