/

The Moon in the Water, அமீனா ஹூஸெய்ன் நாவல்: ஜிஃப்ரி ஹாசன்

காதில் விழாத குரல்களின் கதை

இலங்கையின் ஆங்கில இலக்கியவெளியில் அதிகமும் பெண் படைப்பாளிகளே தீவிரமாக இயங்கி வருகின்றனர். இதனால் பெரும்பாலான இலங்கை ஆங்கிலப் படைப்புகளின் மையமாக பெண்களும், அவர்களது சந்தோசங்களும், துக்கமும் நிறைந்த வாழ்வுமே உள்ளது. ஒரு பெண் தனக்குள்ளேயே எதிர்கொள்ளும் தனிப்பட்ட உளவியல் சிக்கல்களிலிருந்து பரந்த சமூகவெளியில் அவள் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல் வரைக்கும் இலங்கை ஆங்கிலப் படைப்புலகின் கவனம் வியாபித்து உரையாடலுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இலங்கை ஆங்கிலப் பெண் படைப்பாளிகளின் நீண்ட பட்டியலில் கவனம் பெறத்தக்க ஒருவர் அமீனா ஹூஸெய்ன். இஸ்லாமிய சமூக அமைப்பிலிருந்து வந்தவர் என்றபோதிலும் தன் மத அடையாளமாக பொதுவெளியில் அவர் இஸ்லாத்தை முன்வைப்பதில்லை. அது அவரது தனிப்பட்ட தெரிவுசார்ந்த சுதந்திரமாகும். அவரது நாவல்களும், கதைகளும் பெரும்பாலும் இஸ்லாமிய சமூக சூழலில் நிகழ்பவை. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் வாழ்வியல்-பண்பாட்டு-அகநெருக்கடிகளை தொடுபவை அவரது படைப்புகள். அதிகமும் கொழும்பு மைய முஸ்லிம் உயர்குடிகளின் உலகத்துக்குள்ளேயே சுழல்பவர் என்றவகையில் அதுவே அவரது கதைவெளியாகவும் ஆகிறது. இலங்கை ஆங்கில இலக்கியத்தில் அத்தகைய பெண்களின் உலகத்தை விரிவாக எழுதுபவர்களில் யாஸ்மின் அஸாத், அமீனா ஹூஸெய்ன் ஆகிய இருவரும் கவனத்துக்குரியவர்கள். இவர்களில் யாஸ்மின் அஸாத் அமீனாவோடு ஒப்பிடும்போது குறைவாக எழுதியவர். ஆனால் அவரது Stay Daughter அமீனாவின் எந்தப்படைப்பையும் விடச் சிறந்த கதையமைப்பும் மொழியும் கொண்டது. பெரும்பாலும் அமீனா புனைவு, அபுனைவு எனும் இருதளங்களிலும் இயங்குபவர். இதனால் அவரது புனைவுகளில் சிவவேளைகளில் அபுனைவு எழுத்தோட்டம் ஊடறுத்துவிடுகிறது. ஆனால் The Moon in the Water கவனத்தைக் கோரும் ஒரு படைப்பு. இதற்குள்ளிருக்கும் பெரிதும் நம் பார்வைக்கு வெளிவராத கொழும்பு நகர முஸ்லிம் பெண்களின் கதையும், பண்பாடு சார்ந்த இறுக்கங்கள் மீதான சில மீறல்களும் நாவல் மீதான ஒரு விசேட கவனத்தைக் கோருகின்றன. அந்த மீறல்களை ஒரு புனைவாக முன்வைப்பதிலும் அமீனா இந்நாவலில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் முன்னே தெரிகிறார். (அவரது சிறுகதைத் தொகுப்பான இலங்கை அரசின் சாஹித்ய விருதை வென்ற Zillij என்கிற தொகுப்பு கதை, மொழி எல்லாவற்றிலும் தோல்வி கண்ட படைப்பு என்பதே என் எண்ணம்).

 இலங்கை இஸ்லாமியப் பின்புலத்தில் விரியும் கதையே அவரது The Moon in the Water (தண்ணீரில் நிலவு) நாவல். இலங்கை, ஜெனீவா மற்றும் ஸ்பெயினின் கிரானடா போன்ற முக்கிய ஐரோப்பிய நகரங்களிலும் நிகழும் இக்கதையில் வரும் கதீஜாவின் இருவேறுபட்ட உலகங்களின் அனுபவங்களையும், அவளது உள்ளார்ந்த இயக்கம், இலட்சிய வேட்கைகளையும் நாவல் விரிவாக கதையாடுகிறது.

கதீஜாவின் தாயான ரௌசென்குல்லின் போராட்ட வாழ்க்கையை நாவலின் தொடக்கப்பகுதியை நிறைத்திருப்பதைக் காண்கிறோம். ரௌசென்குல்லின் தலைமுறையில் அவள் எதிர்கொள்ள நேரிட்ட சமூக இடர்களிலிருந்து அவளது மகளான கதீஜா எதிர்கொள்ளும் சமூக இடர்கள் கிட்டத்தட்ட சமமானவைதான். தலைமுறை மாறியும் கூட பெண் குறித்த இலங்கை முஸ்லிம் சமூக உளவியலில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆங்கிலப் புனைவுகளில் எப்போதும் உள்ளோடியிருக்கும் புனைவுநுட்பத்துடனே அமீனாவும் நாவலைத் தொடங்குகிறார். ஒருவித த்ரில் அனுபவத்தை அது நமக்கு ஏற்படுத்துவதை உணர்கிறோம். ஒரு திரைப்படக் காட்சி போல் கட்டிலில் கிடக்கும் ஒரு பெண்ணிடம் கேட்கப்படும் கேள்விகளும் அவளது பதில்களும் நம்மை ஆர்வமூட்டுவதாக இருக்கிறது.

“உனது குடும்பம்?”

“இல்லை”

“நண்பர்கள்?”

”இல்லை”

“குடித்திருக்கிறாயா?”

-மௌனம்…

அவளைப் பேச வைக்க முடியாத திண்டாட்டத்துடன் நாவல் விரியத் துவங்குகிறது.

0

கதீஜாவுக்கு எட்டு வயதாக இருந்தபோது, கொழும்பு வீதிகளிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு காவியுடை தரித்த சோதிடர் ஒருவர் அவள் ஒரு மனிதனை- கறுப்பன்;- சந்திப்பாள் என்று கணித்தார். – ஒரு விட்டில் பூச்சி சுடரால் ஈர்க்கப்படுவதைப் போல, அவன் ஒரு விருந்துபசார நிகழ்வில், அவளால் ஈர்க்கப்படுவான் என்று அவர் இரகசியத் தொனியில் சொன்னார். கறுப்பன் என்பதற்கு அவளது பெற்றோர் கறுப்பு மனம் படைத்தவன் என்று விளக்கம் கொடுத்தனர். விருந்துகளில் அவள் சந்திக்கும் எந்தவொரு மனிதனுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் அவளை எச்சரித்தனர்.

ஆண்கள், பெண்கள் விசயத்தில் ஒரு விசயத்தை மட்டுமே விரும்புவதாக (பெரும்பாலும் அது என்ன என்பது நாம் அறிந்ததே) அவளது பெற்றோர் அவளுக்கு சொற்பொழிவும் செய்து, மூளைச்சலவையும் செய்து கல்வி கற்க வெளிநாட்டுக்கு அனுப்புகின்றனர். பின்னர் ஜெனீவாவில் அவளது உடனடி வேலைவாய்ப்பையும் நிபந்தனைகளுடன் ஒப்புக் கொள்கின்றனர்.

அங்கு அமைதியின் நகரத்தில், மனித உரிமைகள் மாநாட்டு மண்டபத்தின் வரவேற்பறையில், கதீஜா மாலாவியைச் சேர்ந்த ஆஃப்ரிக்கனான அப்துல்லாவைச் சந்திக்கிறாள். அவனது அழகான கருப்புத் தோலும் குரலும் மென்மையான வெண்ணெய் அமைப்பு போல் கதீஜாவைக் கவர்கிறது. அது காதலாக மாறி அவர்கள் சேர்ந்து வாழ்வது வரை அவர்களைக் கொண்டு செல்கிறது. இலங்கை முஸ்லிம் கதைக்களத்துக்கு இது முற்றிலும் புதுமையான திறப்பாக அமைகிறது. 

இலங்கை முஸ்லிம் பெண்ணான கதீஜாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக, இலங்கை முஸ்லிம் பண்பாட்டின் மீதான மிகப்பெரும் மீறலாக அந்த சந்திப்பின் பின்னரான அவளது வாழ்வு மாறிவிடுகிறது. இந்தப் புள்ளியிலிருந்து அவளது கடந்த காலத்தை நோக்கிச் செல்லும் கதை இலங்கை முஸ்லிம் பண்பாட்டுச் சூழலில் பெண்களின் பாத்திரத்தை அவளதும், அவளது தாய் ரௌசன்குல்லின் அனுபவங்களோடும் விரிவாக கதையாடுகிறது.

கதீஜா ஜெனீவாவில் அப்துல்லாவைச் சந்திக்கும் போது இங்கு இலங்கையில் அவளது ஊரிலுள்ள அவளது குடும்பத்துக்கு நன்கு பரிச்சயமான ஒரு இளைஞனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தாள். “அவன் மிக நல்லவன். நீ அதிர்ஸ்டசாலி..” என கதீஜாவை எல்லோரும் வாழ்த்தும் போது அவளுக்குள்ளிருக்கும் கனவும், தெரிவுச் சுதந்திரமும் அவளது சிந்தனையை, சந்தேகங்களைக் கிளறுகிறது. அவள் வாழும் சமூகத்தில் அறிவுலகச் செயற்பாட்டில் ஒரு பெண் ஈடுபடுவதற்கான சுதந்திரம் மிக வன்மையாக மறுக்கப்பட்டிருக்கும் சமூக சூழல் ஓர் அச்சுறுத்தலாக அவள் எண்ணங்களை நிறைக்கிறது. இலங்கை முஸ்லிம் சூழலில் ஓரளவு அறிவுலகச்செயற்பாடுகளோடு ஈடுபாடு கொண்டு உருவாகி வந்த முஸ்லிம் பெண்கள் தங்கள் திருமணத்தோடு காணாமல் போயுள்ளனர். அவர்களது சிந்தனை, எழுத்துச் செயற்பாடுகளை முஸ்லிம் ஆண்களால் சகித்துக்கொள்ள முடியாத ஆணிய மற்றும் சமூகப் பண்பாட்டு ஆதிக்கக் கருத்தியலால் இலங்கை முஸ்லிம் சமூக சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. இந்த சூழலில் திருமண நிச்சயதார்த்தத்தின் போது இலக்கிய முனைப்புடனும், அறிவுத் தேடலுடனும் எழுச்சிகொள்ள முனையும் ஒரு பெண்ணை அலைக்கழிக்கும் கேள்விகளும், இயல்பான பதட்டமும் இந்த நாவலில் கதீஜாவையும் நிலைகுலைக்கிறது. கொஞ்சம் சுயாதீனமானவள் என்பதால் பெற்றோரிடம் வெளிப்படையாகவே கேட்டுவிடுகிறாள்.

“அவர் வாசிப்பவரா?” என்பதுதான் தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவன் குறித்த அவளது முதல்கேள்வியாக எழுகிறது. “அவன் TIME, NEWS WEEK போன்ற அமெரிக்க சஞ்சிகை எல்லாம் தொடர்ந்து வாசிக்கிறான்” என தந்தை அவளை சமாதானம் செய்கிறார். “வேலைசெய்ய அனுமதிப்பாரா?” என்று மற்றுமொரு கேள்வி. இந்தக் கேள்வி கதீஜாவினது மட்டுமல்ல, இலங்கையின் படித்த ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களினதும் கேள்வியாக எழுகிறது. இலங்கையில் படித்த பல முஸ்லிம் பெண்களிடம் இந்த அச்சம் இருக்கிறது. சில முஸ்லிம் ஆண்கள் பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. அதனால் அவர்கள் கேள்விபாரின்றி திருமணம் செய்வதில் ஓர் அச்சத்தை உணருகின்றனர். அந்த அச்சத்தின் எதிரொலியாக எழுந்தவைதான் கதீஜாவின் கேள்விகள். 

கதீஜாவுக்கு முன் அவளது தாய் ரௌசன்குல் எதிர்கொள்ள நேரிட்ட துயரங்கள்கூட ஒவ்வொரு தலைமுறைக்கும் சமமானவையாக இருப்பது போல் தோன்றுகின்றது. அவள் தன்னைவிட 15 வயது மூத்த ஒருவரைத் திருமணம் செய்தவள். தன் இளவயதில் கணவனை குண்டுவெடிப்பில் பறிகொடுத்தவள். கணவனை இழந்த பெண்ணின் இத்தா கடமை பற்றிய விவாதத்துக்குள் இந்த அத்தியாயம் நம்மை இட்டுச் செல்கிறது. ஒரு அறைக்குள் இத்தாக் கடமைக்காக ரௌசன்குல் தனித்திருக்க வேண்டி இருக்கிறது. அந்த நாட்களில் அவளது நீண்ட கால சிங்கள நண்பியான நெலும் அவளைப் பார்க்க அவளது அறைக்குள் நுழைந்தது அங்கிருந்த ரௌசன்குல்லின் உறவினர்கள் சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது. முஸ்லிம் அல்லாத பெண்கள் கூட இத்தா இருப்பவளைப் பார்க்க முடியாது என்ற புறக்கணிப்பு நண்பியான நெலுமை நெருடலுக்குள்ளாக்குகிறது. இது போன்ற முஸ்லிம் பண்பாட்டில் ஊறிப்போயுள்ள அபத்தங்களையும், அறியாமைகளையும் சாடும் தொனி நாவலில் பல்வேறு இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

0

நாவலின் மையக் கதாபாத்திரமான கதீஜாவின் தந்தை இறந்துவிட்டதை அறிவிப்புச் செய்வது போல் நாவல் தொடங்குகிறது. அவரது மரணம் ஒரு இறப்பல்ல, கொலை. குண்டுவெடிப்பால் நிகழ்த்தப்பட்ட கொலை என கதைசொல்லியான கதீஜா துக்கிக்கிறாள். இப்போதெல்லாம் இங்கே மரணம் மலிந்தது என்கிறாள். ஈழத்து போர் நாவல்களை இந்த அத்தியாயம் நினைவூட்டுகிறது.

தந்தையின் மரணத்தை நினைவுகூறும் மகளின் மனச்சித்திரத்தை தொடக்கத்திலேயே வரைந்து காட்டுகிறார் அமீனா. தந்தையின் மரணம் நோய்ப்படுக்கையில் நிகழவில்லை. மாரடைப்பால் நிகழ்ந்ததல்ல. ஒரு நாள்பட்ட நோயின் விளைவால் சம்பவித்ததல்ல. அது ஒரு கொலை. குண்டுவெடிப்பால் நிகழ்ந்த ஒரு துர்மரணம் என கதீஜாவின் தந்தையின் மரணத்தை கவித்துவமாக அமீனா வெளிப்படுத்தும் தருணம் அது. கதீஜாவின் மனதை தந்தையின் மரணம் மிகக் கடுமையாகத் துன்புறுத்துகிறது. இந்த அவலக் காட்சியில் அவள் துக்கித்து உதிர்க்கும் சொற்கள் ஒரு தத்துவஞானியின் சொற்களைப் போல் பாரமானதாகத் தோன்றுகின்றன. ஈழப்போரால் மனிதர்கள் கொல்லப்படுகையில் சலிப்புற்று அவள் சொல்கிறாள்- “One day the world will know of death only through killing” (உலகம் ஒருநாள் கொலைகள் மூலம் மட்டுமே மரணத்தை அறியும்).

அமீனா ஹூஸைய்னிடம் உள்ளூறி இருக்கும் கொழும்பு முஸ்லிம் மேட்டுக்குடிப் பெருமிதம் நாவலின் சில அத்தியாயங்களில் வெளிப்படுகிறது. அமீனாவின் மூத்த தலைமுறையிலிருந்து அவருக்கு அது கடத்தப்படுகிறது. தென்னிலங்கை முஸ்லிம்களின் இந்த உள்ளக ஏற்றத் தாழ்வுகள், உளவியல் இடைவெளிகள் பற்றிய சித்தரிப்புகள் நாவலின் சமூகவியல்தன்மையை ஆழப்படுத்துவதாக நம்புகிறேன். இலங்கை முஸ்லிம்கள் குறித்த ஒரு பரந்த அகவயமானதும் புறவயமானதுமான பார்வைக்கு இந்த சித்தரிப்புகள் அவசியமாகின்றன.

 நாவலின் மையக் கதாபாத்திரமான கதீஜாவிடம் அவளது தாய் ஒரு முறை ‘We are modern, broad-minded Muslims’ எனச் சொல்கிறாள். இந்த இடம் இலங்கை முஸ்லிம் என்கிற ஒரே சமூகப் புலத்துக்குள்ளேயே பூடகமாக உள்ளோடி இருக்கும் மேட்டுக்குடி x சாமான்யர்கள் என்கிற பிரிகோட்டை தெளிவாக்குகிறது. ஆனால் இந்த மேட்டுக்குடிப் பார்வைக்கெதிரான அமீனாவின் கலகக் குரல் நாவலில் கடைசி வரைக்கும் கேட்பதே இல்லை. எனவே அவர் அதன் பிரதிநிதியாகவே தன்னைத் தகவமைத்திருக்கிறார் என்றே நான் பார்க்கிறேன்.    

நாவலில் பேருவளை முஸ்லிம்களின் பொருளாதார செல்வநிலையை கொழும்பு முஸ்லிம்கள் அப்போது எப்படி நோக்கினார்கள் என்ற ஒரு வரலாற்றுச் சித்திரத்தை அமீனா வரைகிறார்.

‘In Beruwala, a southern coastal town in Sri Lanka, there lives a large community of richy-rich Muslims. They struck gems some years ago and their expression of wealth was unlimited. They drove big cars, wore gaudy, brightly coloured clothes and built tasteless swirly whirly houses. We Colombo Muslims looked down on them’

“இலங்கையின் தென் கரையோர நகரமான பேருவளையில், பணக்கார முஸ்லிம்களின் பெரும் சமூகம் வாழ்கிறது. அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இரத்தினங்களைச் செதுக்கினர். செல்வத்தின் மீதான அவர்களின் வெளிப்பாடு வரம்பற்றதாக இருந்தது. அவர்கள் பெரிய கார்களை ஓட்டினார்கள், பளபளப்பான, பிரகாசமான நிற ஆடைகளை அணிந்தனர் பார்க்க கவர்ச்சியற்ற தொடர் வீடுகளைக் கட்டினார்கள். கொழும்பு முஸ்லிம்களாகிய நாங்கள் அவர்களைத் தாழ்வாகவே பார்த்தோம்”

ஸ்பெயினில் Trujillo நகரத்தில் நடக்கும்போது அப்துல்லாஹ்வும், கதீஜாவும் உரையாடிக்கொண்டு செல்கின்றனர். அங்கே Horchate குடிபானம் குடிக்க அப்துல்லா கதீஜாவை அழைக்கும்போது அதுவும் பேருவளை சர்பத் போலத்தான் இருப்பதாக பகடியாக அதைக் கடக்கிறாள். அங்குள்ள வீடுகளின் அமைப்பையும் பேருவளை வீடுகள் போலத்தான் என கிண்டலடிக்கிறாள். இதற்கு அப்பால்- அப்துல்லாவுடன் கதீஜா இணைந்து வாழ்கிறாள் (Living together). ஆனால் அது முஸ்லிம் பண்பாட்டு அமைப்புக்கு முற்றிலும் எதிரானது. அதுவும் இலங்கை முஸ்லிம் சமூக சூழலில் அது கற்பனையும் செய்து பார்க்க முடியாத ஒன்று. இலங்கைக்கு அவள் வந்தபோது அது குறித்து இங்குள்ளவர்களால் கடுமையாக கேள்விகேட்கப்படுகிறாள். கதீஜாவின் பக்கம் நின்று நியாயம் சொல்லும் போது அமீனாவுக்குள் இருக்கும் மேட்டுக்குடி மனோபாவம் ஒரு தொந்தரவான குரல் போல ஒலிக்கிறது.

அமீனா எழுதுகிறார், “அது பற்றி (Living together) இவர்கள் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதையும் கதீஜா அறிவாள். ஏனெனில் அவள் வாழ்வது வேறு நிலம், வேறுபட்ட கலாசாரம், வேறு காலம், வேறு பெறுமானங்கள். அவளது உலகத்தில் இணைந்து வாழ்தல் என்பது பாவமானது அல்ல. நிலையான வசை அல்ல. அவளது உலகத்தில் அனைத்தும் சாத்தியமானவை. இவர்களது உலகத்தில் எதுவும் சாத்தியமானது அல்ல”

ஒரு வகையில் பார்த்தால் இந்த இருவேறுபட்ட உலகங்களில் வாழ நேர்ந்த ஒரு பெண்ணுக்கும், புறச் சூழலுக்குமிடையிலான முரணும், விலகலுமே இந்த நாவலின் மையக் குரலாக நீட்சி பெறுகிறது. அவளது பெற்றோரின் யதார்த்த உலக நோக்குக்கும், அவளது தேர்ந்தெடுப்புக்குமிடையே மிகப்பெரிய இடைவெளி தெரிகிறது. அவளது நோக்கு மிகைப்படுத்தப்பட்டதாக, இலங்கை முஸ்லிம் பண்பாட்டுச் சூழலுக்கு மிக மிக ஒவ்வாமை கொண்டதாகத் தெரிகிறது. இந்த இடைவெளியை கடிதத்துக்கும்-மின்னஞ்சலுக்குமிடையிலான தூரம் என அமீனா பரிகசிக்கிறார். ஆனாலும் சேர்ந்து வாழ்தல் (living together) என்பது ஒரு தனித்த பண்பாட்டுக்குள் மட்டும் சவாலுக்குள்ளாவதாக அமீனா காட்ட முனையும் போது அது அவரது பலவீனமான பார்வையாக எனக்குத் தோன்றுகிறது. இந்திய- இலங்கைச் சூழலில் சேர்ந்து வாழ்தல் என்பது கிட்டத்தட்ட எல்லாச் சமூகங்களிலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்திருப்பதன் சாட்சிகளாக நாம் இருக்கிறோம். இது ஒரு தனித்த பண்பாட்டுக்கான சிக்கலன்றி ஒரு பொதுச் சமூக பிரச்சினைக்கான பரிமாணத்தை கொண்டிருக்கிறது என்பதை உரத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது.

தனது தந்தை குண்டுவெடிப்பில் இறந்ததும் நாடு திரும்பிய கதீஜாவுக்கு ஏற்படும் அனுபவங்களை முஸ்லிம் தனியார் சட்டத்தின் மீதான பலவீனங்களை எடுத்துக்காட்டும் ஒரு பகுதியாக வளர்த்துச்செல்கிறார் அமீனா. கதீஜாவுக்கு ஒரு சகோதரியும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். அவள்தான் குடும்பத்தில் மூத்தவள். அவள் திரும்பி வரும்போது, ​​அவள் தத்தெடுக்கப்பட்டதையும், முஸ்லிம் தனியார் சட்டத்தின் சில சுருங்கிய அம்சங்களின் காரணமாக உயில் செய்யாமல் இறந்த தன் தந்தையிடமிருந்து அவளால் வாரிசுச் சொத்தாக எதையும் பெற முடியாது என்பதையும் அவள் உணர்கிறாள். பின்னர், தனக்கு ஒரு இரத்த சகோதரன் இருப்பதையும் அவள் அறிகிறாள். அவளிடமிருந்து மிகவும் வேறான சூழலில் வாழும் அந்த சகோதரனைக் கண்டுபிடிக்க அவள் செல்கிறாள். தங்களுக்குள்ளிருக்கும் சகோதர உறவு அவனுக்குத் தெரியாததால் அவன் அவள் மீது காதல் கொள்வது போன்ற தோற்றப்பாடு நமக்கு ஏற்படுகிறது. பின் அவர்கள் இறுக்கமான விதிமுறைகளில் பிரிந்து செல்கிறார்கள், ஆனால் பின்னர் சந்தித்து பேசத் தொடங்குகிறார்கள். இந்தக் கட்டம் நாவலின் கதையை யதார்த்தமான சித்தரிப்புகளிலிருந்தும், சமூகத்தன்மையிலிருந்தும், நடைமுறைசார்ந்த உண்மைகளிலிருந்தும் தூரமாக்கி மிகைக் கற்பனையின் பக்கம் நெருக்கமாக்குகிறது.

முஸ்லிம் பண்பாட்டின் இறுக்கத்தையும் அதனுடன் போராடி மேலேறும் ஒரு பெண்ணையும் அவர் காட்ட முனைவது மகிழ்ச்சியானதுதான். முஸ்லிம் பண்பாட்டின் இறுக்கமான முகத்தின் மீது அமீனா ஓங்கி அடிக்க முற்படுவதும் தவறானது அல்ல. ஆனால் அந்த அடி ஒரு புனைவில் மிகு நேர்த்தியாக விழவில்லை. அவரது உணர்ச்சிகரமான பதட்டங்களால் கை பிசகிவிட்டது என்றே நினைக்கிறேன்.  

நாவலினுள்ளே இருக்கும் நாடகீயத்தன்மையான மிகைக் கற்பனையும், பண்பாட்டின் சிக்கல்கள் மீதான வலிந்த தாக்குதல்களும் மிகைத்து நாவலை அதன் ஆழ்தன்மையை நீர்த்துப் போகச் செய்வதாகவே தோன்றுகிறது. கதை அதன் கச்சிதமான தளத்திலிருந்து மேலெழாது வீண் சுத்திவளைப்புகளால் வாசகரைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரதியாகவே அதை மாற்றிவிடுகிறது. விரும்பப்படாத இந்த அம்சங்களால் அமீனாவின் இந்த நல்ல நாவலின் மொழியும், உள்ளே இருக்கும் ஒரு நல்ல கதைக்கான இழையும் குழப்பப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.

இந்நாவல் 2008ம் ஆண்டுக்கான Man Asian Literary Prize இன் நெடும்பட்டியலிலும், 2011ஆண்டுக்கான Dublin IMPAC Award க்கான நெடும்பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறது என்பது நாவலின் மற்றொரு வெற்றிகரமான பக்கம் என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன்.

ஜிஃப்ரி ஹாஸன்

கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

உரையாடலுக்கு

Your email address will not be published.