/

சிங்கள மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் சின்த்தா லக்ஷ்மி: பிரியதர்ஷினி சிவராஜா

ஒரு மொழியில் இருக்கும் இலக்கியப் படைப்பினை பிறிதொரு மொழிக்கு மாற்றம் செய்வது என்பது ஒரு கலையாகும். இரு மொழி அறிவு என்பதற்கு அப்பால் மூலப்பிரதியினை வாசித்து அதனை மனதுக்குள் எடுத்து மாற்றம் செய்யும் மொழியில் அதனைப் பிரதியிட்டும் செப்பனிட்டும் சரியான முறையில் தெளிவாகவும், இலகுவில் விளங்கும் வகையில் ஆனால் மூலத்திற்கு எந்த ஆபத்தும் திரிபும் நேர்ந்துவிடாமல் அந்த செயலை செய்து முடிப்பது என்பது இலகுவானதன்று. உருது, வங்காளம், ஹிந்தி போன்ற பரீட்சயம் இல்லாத மொழிகளாகட்டும் உலகில் உள்ள எந்தவொரு மொழியாகட்டும் அதனைக் கற்றுத் தேர்ந்து அந்த மொழிகளின் இலக்கியப் படைப்புகளை மொழிப்பெயர்ப்பு செய்து தன் தாய்மொழி இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பது என்பது மிகவும் போற்றுதற்குரிய செயலாகும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது சிங்கள  மொழிப்பெயர்ப்பு இலக்கியத்தில் நீங்காத இடம் பிடித்த  பெண் ஆளுமையாக திகழ்ந்த சின்த்தா லக்ஷ்மி சிங்க ஆரச்சி பற்றி குறிப்பிட்டேயாக வேண்டும்.   சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எம்மை விட்டுப் பிரிந்து  சென்று விட்டாலும், அவரது மொழிப்பெயர்ப்புகள் இன்னும் அவரைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சிங்கள வாசகர்களுக்காக  அவர்  மிகவும் அற்புதமான மொழிப்பெயர்ப்புகளை  அளித்திருக்கின்றார். அவரது மொழிப்பெயர்ப்பு படைப்புகள் அனைத்தும் மனித நேயத்தின் ஆழமான வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆண்;- பெண்- உறவுகள், ஆக்கிரமிப்பு காதல், ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் கதி,  மனிதர்களின் உள்ளார்ந்த காதல் என்பன அவரது மொழிப்பெயர்ப்பு தெரிவுகளில் எப்பொழுதும் முன்னணி வகித்துள்ளன. மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதனை விட மிகவும் பெறுமதியானது எதுவுமே உலகில் இல்லை என்பதையே  இலக்கிய வாழ்வின் மூலம் அவர் கற்றுக் கொடுத்திருக்கின்றார்.

வங்காளம், உருது, ஹிந்தி ஆகிய மொழிகளின் அதி சிறந்த இலக்கியப் படைப்புகளை மொழிப்பெயர்த்துள்ள இவர், ஷரச்சந்திர சட்டோபாத்யாய, ரவீந்திரநாத் தாகூர், கலீல் ஜிப்ரான்  போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையும் சிங்கள இலக்கிய உலகுக்கு தனது அயராத உழைப்பின் ஊடாக வழங்கியுள்ளார்.

நவீன இந்திய படைப்பாளிகளில் சிறப்பு வாய்ந்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் பிரேம் சாந்த்தின் ‘கோதானய’ என்ற நாவலையும் ஹிந்தி மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்த்துள்ள சின்த்தா லக்ஷ்மியின் மொழிப்பெயர்ப்பானது   சிறப்பான ஓர்  மொழிப்பெயர்ப்பு படைப்பு என்று அவரின் மனம்கவர்ந்த வாசகர்கள் குறிப்பிடுகின்றனர்.  இவரின் மற்றுமொரு மொழிப்பெயர்ப்பான விபு+த்தி பு+ஷண பந்தோபத்யாயவின் ‘வனத்தின் மீதான காதல்’ (அரணகட்ட பெம்பெந்தி) என்ற நாவலும் வங்காள மொழியிலிருந்து சிங்களத்திற்கு மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள மற்றுமொரு நாவலாகும். மிகவும் அற்புதமான அந்த நாவலில் இந்திய விவசாயிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்களின் வாழ்க்கைப் போராட்டமும், இயற்கையுடன் இணைந்து செல்லும் வாழ்வியல் அம்சங்களையும்ம் சிங்கள மொழியில் சின்த்தா லக்ஷ்மி எமது கண் முன் கொண்டு வருகின்றார்.

சின்த்தா லக்ஷ்மி

ஆரவாரமற்று எந்தவிதமான பிரபலத்தையும் எதிர்பாராமல் அமைதியாக ஒரு தவம் போன்று தன் பணியை நிறைவேற்றிய  ஓர் இலக்கியப் படைப்பாளியாக சின்த்தா லக்ஷ்மி வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனாலும் அவரின் திறமையையும், அர்ப்பணிப்பு மனோபாவத்தையும், சிங்கள இலக்கியத்திற்கு அவர் ஆற்றுகின்ற பணியின் சிறப்பு குறித்தும் அவர் வாழ்ந்த போது இதர சிங்கள இலக்கியப் படைப்பாளிகள் கவனத்திற்கொள்ளவில்லை.  

‘கோதானய’ நாவலின் படைப்பாளியான பிரேம் சந்த் அந்நாவலை எழுதி முடித்து முற்றுப்புள்ளி இட்ட அந்த கணத்திலேயே அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டார் என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.   அதே போன்று சின்த்தா லக்ஷ்மியின் இறுதி மொழிப்பெயர்ப்பு நாவலாக ‘கோதானய’ வும் அமைந்துவிட்டது வியப்புக்குரிய விடயமாகும். இந்த நாவலை அவர் மொழிப்பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  வேளையில் பிரேம் சந்த்தின் மரணம் பற்றிய தகவலை  தனது கணவருடன் பகிர்ந்து கொண்ட அவர், தனது மொழிப்பெயர்ப்புக்கு அறிமுகம் ஒன்றை எழுதும் ஆவலுடன் இருந்த போதிலும் துரதிருஷ்டவசமாக   அதனை நிறைவேற்ற முன்னரேயே அவர் இயற்கை எய்தி விட்டார். அதன் அச்சுப் பிரதியையும் அவருக்கு பார்க்கும் அதிர்ஷ்டம் கிட்டியிருக்கவில்லை.

இலக்கியப் படைப்பாளிகள் உலகை விட்டு நீத்தாலும் என்றுமே எம்மத்தியில் வெவ்வேறு வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருப்பர். அந்த வகையில் சிங்கள மொழிப்பெயர்ப்பு இலக்கியத்தில் மிகவும் முக்கியமான ஒரு இடத்தினை வகிக்கும் சின்த்தா லக்ஷ்மி பற்றி பொதுவாக அவர் சிறந்த படைப்பாளி என்ற பெயர் இருந்தாலும், உண்மையில் ஒரு பெண்ணாக அவர் இந்த சமூகத்தின் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகி பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வாழ்ந்திருக்கின்றார் என்றே தெரிய வருகின்றது.

அவரின் பெயரும் அவரது படைப்புகளும் சிங்கள இலக்கிய உலகில் நிலைப்பெற்றிருந்தாலும், அதற்காக அவர் செய்த தியாகங்களும், எதிர்நோக்கிய அல்லல்களையும் சிங்கள இலக்கிய உலகின் முன்னோடி படைப்பாளிகளுள் ஒருவரான  பேராசிரியர் சரத் விஜேசூரிய மிகவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். ‘கோதானய’ நாவல் அச்சேறுவதற்கு முன்பே உலகை விட்டுப் பிரிந்த சின்த்தா லக்ஷ்மியின் இலக்கிய வாழ்க்கையின் வேதனை மிகுந்த தருணங்களை அவருக்கு சமர்ப்பணமாக அவரது ‘கோதானய’ நாவலில் முன்னுரையாக எழுதியுள்ளார். ‘இலக்கிய உலகின் அனைத்து அநியாயங்களையும் பொறுத்துக் கொண்டு அவர் விடைப்பெற்று சென்று விட்டார்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரத் விஜேசூரிய எழுதியிருந்த அந்த முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

‘மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த சின்த்தா லக்ஷ்மியின் இழப்புடன் தொடர்புடைய ஒரு சில விடயங்கள் எமது கலாசார வாழ்வின் மிகவும் துயர்மிகுந்த வீழ்ச்சியை அடையாளப்படுத்தியுள்ளது என்றே எனக்கு தோன்றுகின்றது. அவர் இறந்து விட்டார் என்பதனை அவரது வாசகர்களுக்கு அறியப்படுத்தும் அளவுக்கு கூட எமது தொடர்பு+டகங்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தலைநகருக்கு வெளியே கிராமியப் பெண்ணாக வாழ்ந்தமை மற்றும் அவரது கணவர் சாரமும் சேட்டும் அணியும் சாதாரண ஒரு நபராக இருந்தமையினால் அவரைச் சூழ பெருஞ்சுவர்கள் எதுவும். எழவில்லை. எவ்வாறாயினும், எம் இனத்தின் அளவற்ற நன்றிகளுக்கு உரித்தாக வேண்டிய அதேவேளை,  சுய அடையாளத்தினையும், ஆளுமையையும் கொண்டிருந்த ஒரு பெண்ணாக அவருக்கு மரியாதை செலுத்துவது அவசியம் என்பதனால் தாமதித்தாலும் இந்த கட்டுரையை எழுத தலைப்படுகின்றேன்.

சின்த்தா லக்ஷ்மி ஒரு கணித ஆசிரியை. அவரிடம் கணித பாடம் கற்றுக்கொண்ட  மாணவ மாணவியரே பெருமளவில் அவரது இறுதிச் சடங்குக்கு வந்திருந்தனர். பிரபல பாடசாலையில் கற்பிப்பதனை புறக்கணித்துவிட்டு பின்தங்கிய கிராமம் ஒன்றில் சிறிய  பாடசாலையில் அவர் ஆசிரியை பணியில் அமர்ந்தமை அனைவருக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். சின்த்தா லக்ஷ்மி வானொலி நிகழ்ச்சியில் ஒருமுறையே கலந்து கொண்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் ஒருமுறையே கலந்துகொண்டுள்ளார். அவர் ஊடகங்களில் தனக்கென ஒரு பிம்பத்தை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. பல சிரமங்களுக்கு மத்தியிலும், ஒடுக்குமுறைகளுக்கும் மத்தியிலும் அவர் இலக்கியத் துறைக்குள் பிரவேசித்தார். ஹிந்து, உருது, வங்காளம் ஆகிய மொழிகளை அவர் தனிப்பட்ட முயற்சியினூடாகவே கற்றுக்கொண்டார். இந்தியாவுக்கு சென்று இந்த மொழிகளை செம்மையாகக் கற்றுக்கொள்ள பல முயற்சிகளை அவர் எடுத்த போதிலும் அதற்கான உதவிகளை நாடிச் சென்ற ஒவ்வொரு தருணத்திலும் அவர் ஒரு விசர்ப் பெண்ணாகவே பார்க்கப்பட்டார். இலக்கியப் படைப்பாளிகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் காலாசார அமைச்சின் திட்டத்தில் அவரது மொழியாற்றலுக்கு மதிப்பளிக்கும்  முகமாக அவரை உள்வாங்கி அங்கு அவரை அனுப்பி வைக்கவும் அந்த அமைச்சு என்றுமே சிந்தித்ததில்லை.

இறுதியில் அவர் தனது ஆசிரியர் தொழிலிருந்து ஓய்வுப் பெற்று அதில் கிடைத்த பணத்தில் இந்தியாவுக்கு சென்றார். அங்கு சென்று பல்கலைக்கழகங்களில் இணைந்து கொண்டு மொழிப்பெயர்ப்புக்கு தேவையான மொழி ஆற்றலை பொறுப்புடன் அர்ப்பணிப்புடன் தன் கையகப்படுத்திக் கொண்டார்.

அவரது முதலாவது மொழிப்பெயர்ப்பான விபு+த்தி பு+ஷண பந்தோபத்யாயவின் சிறப்பு வாய்ந்த வங்க நாவல் ஒன்றின் முதலாவது தொகுதியினை அச்சிலேற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகளின் போது எதிர்கொண்ட சிரமங்கள் பற்றி தனி ஒரு புத்தகமே எழுதி விடலாம். அந்த நூலுக்கு அறிமுகம் எழுதி தர சிரேஷ்ட எழுத்தாளர் ஒருவர் 5 ஆயிரம் ரூபா லஞ்சம் கேட்டிருந்தார். நூலை அச்சடிக்க  வெளியீட்டாளர் ஒருவரை தேடித் தருவதாகக் கூறி அவரை இரையாக்கிக் கொள்ள மற்றுமொரு சிரேஷ்ட இலக்கியவாதி ஒருவர் முயற்சி செய்தார். மிகவும் வயது முதிர்ந்த ஒரு எழுத்தாளர் ஒருவர் இந்த நாவலை வெளியிட்டு தருவதாகக் கூறி கையெழுத்துப் பிரதிகளை பொறுப்பெடுத்து விட்டு தொலைத்து விட்டார். இவ்வாறு எமது இலக்கியத்துறைக்கு உரிமைக் கொண்டாடிக் கொண்டிருந்த பலர் இவருக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான இழிவு செயல்களை செய்த காலப்பகுதியாக  சுமார் 10 ஆண்டுகளைக் குறிப்பிட முடியும். இலக்கிய உலகை சேர்ந்த சிரேஷ்ட நபர்கள் அவருக்கு எதிராக கடும் விரோத மனப்பான்மையுடன் நடந்துகொண்டனர். ஆனால் அவருக்காக பேச எந்த பெண்கள் அமைப்புகளும் முன்வரவில்லை. அவர் தனது பலத்தின் மீது முழு நம்பிக்கையை வைத்து அனைத்து தடைகளையும் தயங்காமல் எதிர்கொண்டு மற்றுமொரு நூலான வீதியின் பாடலை (மாவத்தே கீத்தய) மொழிப்பெயர்த்து தேசிய நூலக ஆவணமாக்கல் சபையில் சமர்ப்பித்து அதற்கான அச்சு அனுசரணையையும் பெற்றுக்கொண்டார்.

எனினும் அவரது நூல்களை பிரசுரித்த அச்சு நிறுவனங்கள் அவரின் மொழிப்பெயர்ப்பு பணிகளை இடைநிறுத்திக் கொள்ளும் அளவுக்கு சகிக்க முடியாத வகையில் செயற்பட்டமையினால் அவர் மீண்டும் சிறிது காலம் அமைதியாக இருந்தார்.

சின்த்தா லக்ஷ்மியின் மொழிப்பெயர்ப்பு பணியின் மைல்கல்லாக ‘அரணகட்ட பெம்பெந்த’ நாவலைக் குறிப்பிட முடியும் என நினைக்கின்றேன். அவரின் வாழ்க்கையின் முடிவானது அவர் சிறந்த ஒரு மொழிப்பெயர்ப்பாளராக உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் நிகழ்ந்துவிட்டது. ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை அவர் மொழிப்பெயர்ப்பு செய்ய ஆரம்பித்திருந்தார். அதில் பொதிந்திருந்த சமூக அரசியல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் இருந்தமையே அதற்கான காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ‘கோரா’ மொழிப்பெயர்ப்பு பணிகளுக்கு இடையில் அவர் சுகவீனமடைந்தார். சத்திரசிகிச்சையின் பின்பு குணமடைந்து வீடு திரும்பி அந்த பணியினை நிறைவு செய்தார். ஆனால் இரண்டாவது தடவையாக பிரேம் சந்தின் ‘கோதானய’ நாவலின் மொழிப்பெயர்ப்பினை பூர்த்தி செய்தவுடன் சுகவீனமுற்றார்.  அதன் அச்சுப் பிரதியை காண அவரால் முடியாமற்போய்விட்டது.

சின்த்தா லக்ஷ்மி தான் வாழ்ந்த 53 வருடங்களில் இருபது ஆண்டுகளை மொழிப்பெயர்ப்பு பணிக்கென அர்ப்பணித்துள்ளார். எனினும் அந்த இருபது ஆண்டுகளில் சுமார் பத்து ஆண்டுகளையும் இலக்கிய உலகின் அதிகாரம் பெற்றவர்கள் களவாடிக் கொண்டனர். அவர் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்;ந்திருந்தால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியாத வங்காள- உருது- ஹிந்தி மொழிகளில் படைக்கப்பட்டிருந்த சிறந்த  உரைநடை கவிதைகளையும் எமது கரங்களில் நிச்சயமாக சேர்த்திருப்பார். அவர் இதுவரை நிறைவேற்றிய பணிகளை தொடர்ந்து நிறைவேற்ற எவரும் இல்லாமை எவ்வளவு துரதிருஷ்டவசமானது? அவரது இழப்பு எமது இனத்தின் பேரிழப்பாகும்.

இந்த சிரேஷ்ட படைப்பாளி தமக்கான பொறுப்பினையும் கடமையையும் அதிகப்பட்சம் நிiவேற்றியிருக்கின்றார். ஆனால் அவரை நாம் மதித்த விதம் எவ்வளவு தூரம் மனிதாபிமானது? இவரது மரணத்திற்காக வெள்ளைக் கொடியை ஏற்றி அனுதாபம் தெரிவிக்கக்  கூட கலாசார அமைச்சு உணர்வுபு+ர்வமாக செயற்படவில்லை. கலாசார அமைச்சு அவரை அவமானப்படுத்தும் செயற்பாடுகளை உச்சபட்சம் நிறைவேற்றியிருந்தது என்றே கூற வேண்டும். கலாசார அமைச்சு அவரது இறப்புக்கு இரங்கலை தாங்கிய தந்தியையேனும் அரசாங்க செலவில் அனுப்பவில்லை என்பதனை மிகவும் கவலையுடன் கூறவேண்டியுள்ளது. கலாசார அமைச்சின் கலைகள் சபை, கலாசார திணைக்களம், இலக்கிய இணை சபை ஆகியன நாட்டின் கலைகளுக்கும் கலாசாரத்திற்கும்   இழுக்கினை தேடித் தரக் கூடிய மிகவும் கீழ்த்தரமான மோசமான நிறுவனங்கள் என்பதனை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.’ இவ்வாறு பேராசிரியர் தனது ஆதங்கத்தினைப் பதிவு செய்திருக்கின்றார்.

ஆணாதிக்கம் நிறைந்த முதலாளித்துவ உலகின் அடக்குமுறைகள், சவால்கள் மற்றும் இடர்கள் மத்தியில் குடும்பம், தொழில் என்ற இரட்டை நிலைச் சுமையை அனுபவித்துக் கொண்டு பெண்கள் தமது ஆற்றல்களையும், திறன்களையும் வெளிப்படுத்தும் போதெல்லாம் சமூக விதிமுறைகளும், சமூகக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு எதிராக கடுமையாக மேலெழுவதனைக் காணக் கூடியதாக உள்ளது. இது மிகவும் பொதுவான விடயமாகும். அதற்கு சின்த்தா லக்ஷ்மியும் விதிவிலக்கல்ல என்பதனையும், இலக்கிய உலகமும் விதிவிலக்கல்ல என்பதனையே  அவரின் வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.