/

மன்னிக்கவும்! எல்லோருடனும் உரையாடுவதற்காக, எழுத என்னால் இயலாது: இஸுரு

உரையாடியவர் துனுளு – தமிழில், பிரியதர்ஷினி சிவராஜா

களனி ஆற்றின் நீரோட்டத்தில் அமைதியாக மிதந்து சென்ற கிளர்ச்சிக்கார தலைமுறையின் துயர் மிகுந்த நினைவுகளுடன் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகள் நிறைவடைந்தன. இஸுரு சாமர சோமவீரவின் தலைமுறையின் சிறுபராயக் காலத்தினை சூழ்ந்திருந்த அந்த கொடூரமான பயங்கரக் காலப்பகுதியானது அவரின் வாசிப்புக்கும், வளர்ச்சிக்கும் இடையில் தோன்றி மறையும் பிரிவினைக் கோட்டினை அடையாளப்படுத்துகின்றது. அதற்கு பின் சுமார் இரண்டு தசாப்தங்கள் கழித்து பிரசுரமான அவரின் முதலாவது சிறுகதை தொகுதியில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு எழுதுகின்றார்: ‘அன்று  ஆற்றில் சடலங்கள் மிதக்கும் காலப்பகுதியில்… சடலம் ஒன்று  கரையொதுங்கியிருந்தது. அதனை இரண்டு மூன்று பெரிய உடும்புகள் சூழ நின்று கடித்துக் குதறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.  அந்த உடும்புகளைப் பார்த்துக் கொண்டிருக்க தோன்றியதே தவிர அச்சமோ துயரோ எனக்குள் ஏற்படவில்லை. சிறு சிறு விடயங்களுக்கு துயருற்றேனே ஒழிய பெரிய விடயங்களுக்கு அல்ல. சீனியாஸ் செடியை நத்தைகள் சாப்பிட்டால் எனக்கு அழுகை வரும்’. (மகோ மாலுவா (எனது மீன்): மலக் கத்தா கரய்- 2013).

அந்தச் சிறுபராயத்தில் அவருக்கு எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.  ‘எழுத்து என்னைக் காப்பாற்றியது என்று நினைக்கின்றேன்’ என்று அவர் இப்பொழுது கூறுகின்றார். ‘அது ஒரு வகையான உளவியல் சிகிச்சை முறை என்று நான் பல காலத்தின் பின்னரேயே அறிந்துகொண்டேன்’.

2005ல் தனது முதலாவது கவிதைத் தொகுதியான ‘சுத’ வை அச்சுப் பிரதியாக வெளியிட்ட இசுறு, 2011ல் தனது இரண்டாவது கவிதைத் தொகுதியை ‘தாண்டவ’ என்ற பெயரில் வெளியிட்டார். எழுதும் பழக்கம் மற்றும் படைப்பினூடான வெளிப்படைத்தன்மை குறித்து பேசுவதற்கு அவர் துனுளு உடன் இணைந்து கொண்டார்.

பதிவு செய்தவர்:  மஞ்சுள வெடிவர்தன

சந்தைப் பொருளாதாரத்திற்கு நாடு திறக்கப்பட்ட காலப்பகுதியில் பிறந்த தலைமுறையை நீங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள்.  ஜயவர்தனவின் தலைமையில் உருவாக்கப்பட்ட சமூக முறையில்தான் நீங்கள் சுவாசிக்கவே ஆரம்பித்தீர்கள். இந்த சமூக முறை பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களைக் கூறிக்கொண்டே இந்த கலந்துரையாடலை ஆரம்பிப்போம்.

இஸுரு: நீங்கள் குறிப்பிடும் இந்த சமூக முறை ஆரம்பமான போதுதான் நான்  பிறந்தேன். அதாவது மிகத் தெளிவாக இரண்டு காலப்பகுதிகள் பிரியும் இடைநடுக்கோட்டில் என்று சொல்லலாம்.  சகல விடயங்களும் மிக விரைவாக மாறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். அந்த மாற்றங்களுடன்  வளர்ந்த தலைமுறையினர். தமிழ் சிங்கள யுத்தத்தின் குண்டுகள், ஆற்றில் மிதந்து சென்ற சடலங்கள், எரிக்கப்பட்ட டயர்கள், வலிந்து காணாமலாக்கப்படல், டுபாய்க்கும், காமன்ட்டுக்கும் செல்லும் பெண்கள், புட்சிட்டி (Food city), இன்ட்டசிட்டி (Inter city), இன்டர்நெற், பேஸ்புக், ஷொப்பிங் மோல் ஆகியவற்றுடன்தான் நாங்கள் வளர்ந்தோம். ஆனால் எனக்கு உரித்தான இந்த காலப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த காலப்பகுதிக்கு முன்னர் இருந்த காலப்பகுதி தொடர்பான  அனுபவங்கள் எனக்கு இல்லை. ஆயினும்,  எனக்கு முன்பு வாழ்ந்த தலைமுறையினர், அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருந்த சிற்சில ஆணாதிக்க சிந்தனைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்கெனவே மேற்கொண்ட மற்றும் மேற்கொள்கின்ற முயற்சிகள், அவற்றின் தோல்விகள், பின்னடைவு, பொறுத்திருத்தல், தாங்கிக் கொண்டிருத்தல் என்பனவற்றை நாங்கள் அவதானித்துக் கொண்டிருந்தோம். எமக்குள்ளும் ஏதோ ஒரு அப்பாவித் தனம் எஞ்சியிருக்கின்றது. எமக்கு நறுமணமும், துர்நாற்றமும் விளங்குகின்றது. துர்நாற்றம் வீசுகின்றது என்று கூறுவதை விட்டுவிட்டு,   அந்த குப்பைகளை முன்னோக்கி நகர்த்தும் பைத்தியக்காரத்தனத்தினை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் இவ்வேளை போராடிக் கொண்டும், பதிவு செய்து கொண்டும் இருக்கின்றோம். உள்ளதை உள்ளவாறு பதிவு செய்ய முயற்சி செய்யும் ஒருவராகவே நான் என்னைப் பார்க்கின்றேன். அந்த பதிவுகளினூடாக நாங்கள் மறுசீரமைப்புகளை முன்வைக்கின்றோம். இந்த நேரத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகளினூடாகவே நாம் அதனை மேற்கொள்கின்றோம்.

இலக்கியப் படைப்புகளை விழுங்கவா முடியும் என்று கூறிக் கொண்டே மிகப் பெரியதொரு நூலகம் ஒன்றைப் பராமரித்து வந்த முதலாளித்துவ தலைவர் ஒருவர், படைப்பாற்றல் மிக்க அனைத்தையும் நன்கு திட்டமிட்டு கல்வியிலிருந்து அகற்றிய காலப்பகுதியில் வளர்ந்த ஒருவராக கலை தொடர்பில் நீங்கள் கூறும் கருத்து என்னநீங்கள் கருதும் வகையில், உங்கள் மதிப்பீட்டின்படி இலங்கையின் கலை உலகம் எந்த இடத்தில் உள்ளது?

இஸுரு: நான் உங்கள் கேள்வியின் ஒரு பகுதியினைக் கைவிடுகின்றேன். ஏனெனில் கைவிடப்பட்ட பகுதிக்குரிய கேள்விக்கான பதில் முதல் கேள்வியில் உள்ளது. கலை தொடர்பில் எனது கருத்து என்ற இடத்திலிருந்து நான் தொடங்குகின்றேன். ‘நான் யார்?’ என்பது உலகில் உள்ள சிக்கலான கேள்விகளில் ஒன்று என்றே கருதுகின்றேன். பகிர்ந்து கொண்டு,  தன்னை வேறு ஒரு வெளியில் மீள உருவாக்கிக் கொள்ளும் ஓர் முறையாகவே  தனிப்பட்ட ரீதியில் நான் அதனைக் காண்கின்றேன். தன்னை மீள உருவாக்கிக் கொள்ளல் என்பதனை மிகவும் எளிமையான அர்த்தத்தில் விளங்கிக் கொள்ள வேண்டாம். தாம் பேசும் விடயம், தாம் பார்க்கும் விடயம், விபரிக்கும் முறை ஆகிய அனைத்தும் இதில் அடங்கும். இலங்கையின் படைப்பிலக்கியம் வகிக்கும் இடம் குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு என்பது உண்மை.  இலங்கையின் முன்னோடிகள் என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் இலக்கிய அமைப்புகளினால் தரப்படும், பயிற்றுவிக்கப்படும் விடயங்கள் அச்சுப் பிரதிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை. அச்சுக்கு பொருந்தாவிடின் அது கலைப் படைப்பு அல்ல என்ற கருத்து பலர் மத்தியில் உள்ளது. இங்கு கலைப் படைப்புகளை அளக்கும் அளவையானது மிகவும் ஆரம்ப மட்டத்திலேயே உள்ளது. மாற்றுப் படைப்புகளுக்கு உள்ள வெளி மிகவும் வரையறுக்கப்பட்டதாக உள்ளது. இதற்கு எமது கல்வி முறையும் பெருமளவுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்பது உண்மையாகும். இந்த காலப்பகுதியில் இலக்கியம் மிகவும் பின்தங்கியுள்ளது. இனி என்றுமே நிலவ முடியாத ‘கிராமத்தின்’ வனப்பினை மீள மீள விபரித்துக் கொண்டிருக்கின்றது. படைப்பாளிகள் பலருக்கு இந்த காலகட்டம் தவறிப் போய்விட்டது. அல்லது வேண்டும் என்றே அவர்களினால் தவற விடப்பட்டுள்ளது. இது மிகவும் துயரமானது. கலையில் தேடல்களும், வெளிப்பாடுகளும் நிகழ்த்தப்படுகின்றதா  என்ற விடயத்தினை மீள நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  முன்பு படைக்கப்பட்ட பிரதிகளை மீள உருவாக்குதல் என்ற விடயத்திற்கு  அப்பாலான செயற்பாடுகளையே இக்காலப்பகுதி கேட்கின்றது.

ஓரளவு வசதியான குடும்பங்களில் முன்பு இளம் பெண்கள் தத்தமது கலாசாரச் செழிப்பினை வெளிப்படுத்தவும், வசதியான  குடும்பம் ஒன்றிலிருந்து ஒருவரை தேடிக் கொள்ளவும் பியானோ கற்றுக் கொண்டதைப் போன்று,  ஆகக் குறைந்தது ஒரு கவிதைப் புத்தகத்தையாவது வெளியிடுவது  இப்பொழுது பெஷன் ஆகி விட்டது.

உங்களின் விபரிப்புகளுக்குள்  உள்ளடங்கும்  வாழ்க்கை முறையைக் கொண்ட கலைஞர்கள்  இலங்கையில் இருக்கின்றார்கள் என்று உங்களால் கூற முடியுமா?

இஸுரு: கலைஞர்கள் என்று கூறக் கூடிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்..? வெளிப்படுத்தக் கூடிய விடயங்கள் இருக்கின்ற அதேவேளை, அந்த வெளிப்பாடுகளுடன் கூடிய நேர்மையான நபர்கள் இங்கு உள்ளனர்.  ஆனாலும் சிறியளவில். இங்கு பல பேரிடம் ‘விஷயமே’ இல்லை என்பதனை, வாசிக்கும் போதும் கேட்கும் போதும் பார்க்கும் போதும் தான்  உணரக் கூடியதாக உள்ளது. நிலைத்திருப்பதற்கு எதையாவது பொருத்தித் தருகின்றார்கள். தனது பிரதிவிம்பத்தைப் பராமரிப்பதே பெருமளவான நேரங்களில் நடைபெறுகின்றது. அப்படி இல்லையெனின் நிதி நிகழ்ச்சித் திட்டங்கள் அல்லது விருது நிகழ்ச்சித் திட்டங்கள்.  ஓரளவு வசதியான குடும்பங்களில் முன்பு இளம் பெண்கள் தத்தமது கலாசாரச் செழிப்பினை வெளிப்படுத்தவும், வசதியான  குடும்பம் ஒன்றிலிருந்து ஒருவரை தேடிக் கொள்ளவும் பியானோ கற்றுக் கொண்டதைப் போன்று,  ஆகக் குறைந்தது ஒரு கவிதைப் புத்தகத்தையாவது வெளியிடுவது  இப்பொழுது பெஷன் ஆகி விட்டது. அவ்வாறு ஏதாவது செய்யாவிட்டால்  கலாசார  ரீதியில் வறியவர்கள் என்று கருதி விடுவார்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள் போலும். நான் இங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினரைப் பற்றியே பேசுகின்றேன். ‘விஷயம்’ எதுவுமே இன்றி ஏதாவது ஒன்றைப் பொருத்துவது என்பது தனக்கும், தனது வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இழைக்கும் பெரும் அநீதியாகும். ஆனாலும் ஒருவகையில் அரசர்களின் கதைகளைத் தழுவி திரைப்படங்களை எடுத்து பலாத்காரமாக பாடசாலை சிறுவர்களுக்கு காட்டி பணம் உழைப்பதனை விட இது ஓரளவுக்கு மனிதாபிமானது.

அத்துடன், கலைஞர்கள் என்போர் குர்தாவும், பாட்டா செருப்பும் அணிந்துகொண்டு அசுத்தமாக இருக்கும், வறுமையில் வாடும் மனிதர்கள் என்று சிலர்   கருதுகின்றனர். இது பற்றி என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இங்கு கலைஞர்கள் இருக்கும் அளவுக்கு கலைப்படைப்புகள் இல்லை. ஒரு கலைஞர் பல படைப்புகளை தர வேண்டும் என்று நான் இங்கு கூற வரவில்லை. நிலைத்து நிற்கும் படைப்புகளின் தேவை பற்றியே இங்கு சொல்கின்றேன். பெரும்பாலும் கலைஞரின் பெயர் நிலைப்பெறும் அளவுக்கு படைப்புகள் நிலைப்பெறுவதில்லை. இங்கு நபரே  எழுச்சியடைகின்றார். ஜீ.பீ.சேனாநாயக்க சில கவிதைகளையே எழுதியிருந்தார். ஆனாலும் அவை நிலைத்து நிற்கின்றன. அவர் அந்த படைப்புகளுக்கு  நேர்மையாக நடந்துகொண்டார். அவற்றில் ‘விஷயம்’ இருந்தது. விஷயம் இருக்கவேண்டுமாயின் நீங்கள் உயிர்ப்புடன் வாழ வேண்டும். விடயங்களை அனுபவித்து, பார்த்து, கேட்டு, கடந்துசெல்ல வேண்டும். இன்று பலரைப் பார்க்கும் போது அவர்கள் உயிர் வாழ்கின்றனரா என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது. இவை அனைத்தும் எமது கூட்டுச் சிந்தனையின் பார்வைக்கோணங்கள். இலங்கையில் தற்போது மனிதர்கள் வாழும் விதம் என்றும் கூறலாம். 

நான் முழுநேர எழுத்தாளரோ, தொழில்ரீதியிலான எழுத்தாளரோ அல்ல. ஒருவர் எப்படி முழுநேர எழுத்தாளராக இருக்க முடியும் என்று எனக்கு புரியவில்லை.  ஏனெனில், காலத்திற்கு காலம் நான் வற்றிவிடுகின்றேன். சூனியமாகி விடுகின்றேன். நினைத்தால் தான் எழுதுகின்றேன். ஆனால் நான் எனக்காக எழுதியவை மட்டுமே வெளியில் வருவதில்லை. பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற விடயத்தினை எழுதினால் நான் அதனை பகிர்ந்துகொள்வேன். 

நீங்கள் மிகவும் சிறுவனாக இருக்கும் உங்கள் தந்தையார் மிகவும் கொடூரமான அரசியல் சூழ்நிலையில் காணாமற்போய்விடுகின்றார். நீங்கள் உங்கள் தாயாருடன் இணைந்து அவரைத் தேடி முகாம்கள் எங்கும் அலைந்து திரிந்த வரலாறு துயர் மிகுந்தது என்பது உண்மை. ஆனால் தந்தையார் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வந்து இணைந்து விடுகின்றார் என்பதும் உண்மை. எனினும் உங்களின் மொத்த படைப்புகளுக்கான  ஊற்று, நீங்கள் எதிர்கொண்ட இந்த இழப்பு என்ற மனநிலையிலிருந்து  வந்தது என்று  கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

இஸுரு: எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. நீங்கள் எப்படித்தான் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டீர்களோ தெரியாது. எனது சிறு பராயம் என்பது  அழகானதும் குளிர்ச்சி மிகுந்ததாகவும் இருக்கவில்லை. சிறுவயதில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருந்த  சம்பவங்களை  நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்வதற்குப் பல விடயங்கள் எனக்குள் இருந்தன. கேட்க பல கேள்விகள் இருந்தன. எனது சிறுபராயம் பெரும்பாலும் எனது தாயாரின் பெற்றோர்களின் வீட்டிலேயே கழிந்தது. எனது உறவுக்கார சகோதரர்களில் பலர் மிகவும் வாட்டசாட்டமானவர்கள். நான் கறுத்தவன். அவர்கள் சுது புத்தா ஆகும் போது நான் வெறுமனே புத்தா என்று அழைக்கப்பட்டேன். இல்லாவிடின் சின்னவன் ஆனேன். மேலும், எனது தாயாருக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தன. அப்பாவைத் தேடிக் கொண்டு பல முகாம்களுக்கு சென்று கொண்டிருந்தோம். அது 89, 90 காலப்பகுதியாகும். எனது வகுப்பில் இருந்தவர்களை விடவும், என்னைச் சூழ இருந்த நண்பர்களை விடவும் எனது வாழ்க்கை வேறுப்பட்டதாக இருந்தது. இவையெல்லாம் பற்றிப் பேசுவதற்கு  யாரும் இருக்கவில்லை. எழுதுவதே எனது தெரிவாக இருந்தது. எழுத்து என்னைக் காப்பாற்றியது என்றே கருதுகின்றேன். ஆனால் அவ்வாறு எழுதிய பலவற்றை  அடுப்பில் தீக்கு இரையாக்கி விட்டேன். ஏனெனில் அவற்றை யாரும் வாசிப்பதனை நான் விரும்பவில்லை. எனினும், அவ்வாறு எழுதுவதனூடாக பெரும் நிம்மதி ஏற்பட்டது. எனது தாயாரின் பெற்றோர்களின் வீட்டில் தாத்தாவின் மேசையின் கீழ் பெரிய சூட்கேஸ்கள் சில இருந்தன. கருணாசேன ஜயலத், சரச்சந்திர, விக்கிரமசிங்க, லெட்டீஷியா பொத்தேஜு, டப்ள்யூ.ஏ.சில்வா ஆகியோர் அந்த சூட்கேஸ்களில் இருந்தனர். மேலும், ஸ்ரீ சஞ்சிகைகள், அரலிய பத்திரிகை, தருணி பத்திரிகை, சோவியத் தேச சஞ்சிகைகள், துப்பறியும் ஆங்கில நூல்கள் மட்டுமன்றி புத்சரண, குத்திலே, சத்தர்மரத்தனாவலியவும் அந்த சூட்கேஸ்களில் இருந்தன. நான் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக அவற்றை வாசித்தேன். ஸ்ரீ சஞ்சிகைகளும், கருணாசேன ஜயலத்தின் படைப்புகளும் என்னை மிகவும் வசீகரித்தன. நான் தொடர்ச்சியாக எழுதினேன். பாடசாலையில் கட்டுரை எழுதும்போது அதிகம் சோடனைகள் உள்ளதாக கண்டிக்கப்பட்டேன். இப்பொழுதும் குழம்பிப் போயிருக்கும்போது எழுதுகின்றேன். இவ்வாறு எழுதுவது ஓர் உளவியல் சிகிச்சை முறை என்று வெகு காலத்திற்கு பின்னரேயே அறிந்துகொண்டேன். நான் சிறுவயதில் அறியாமல் அந்த சிகிச்சை முறையை பின்பற்றியிருக்கின்றேன். நான் முழுநேர எழுத்தாளரோ, தொழில்ரீதியிலான எழுத்தாளரோ அல்ல. ஒருவர் எப்படி முழுநேர எழுத்தாளராக இருக்க முடியும் என்று எனக்கு புரியவில்லை.  ஏனெனில், காலத்திற்கு காலம் நான் வற்றிவிடுகின்றேன். சூனியமாகி விடுகின்றேன். நினைத்தால் தான் எழுதுகின்றேன். ஆனால் நான் எனக்காக எழுதியவை மட்டுமே வெளியில் வருவதில்லை. பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற விடயத்தினை எழுதினால் நான் அதனை பகிர்ந்துகொள்வேன். 

கலையும், கலாசாரமும் மனிதர்களிடம் ஒழுக்கப்பண்புகளை வளர்ப்பதாகவும், உங்களது படைப்புகள் இதற்கு முரணாக உள்ளது என்றும் ஒரு  கலந்துரையாடலில் உங்களிடம் வினவப்பட்டதாக  அறிந்தேன்.  என்னைப் பொறுத்தவரை இந்த கேள்வியே விசர்த்தனமானது. பிறரின் உயிரற்ற உடல்கள் மீது இருந்துகொண்டு பாற்சோறு சாப்பிடுவதுதான் இன்று கலாசாரமாக உள்ளது. மற்றவர்களின் சுதந்திரத்தினை இழக்கச் செய்வதனூடாக மகிழ்ச்சியுறுவது தான் இன்று உடன்பாடாக உள்ளது. இவ்வாறான கலாசாரத்திற்கும், உடன்பாட்டிற்கும் எதிராக முரண்படுவது தான் என்னைப் பொறுத்தவரை படைப்பாளியின் அடிப்படையாகும். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

இஸுரு: கலாசாரம், உடன்பாடு என்பன தனிநபர் இணைப்பு மற்றும் காலவோட்டம் சார்ந்து ஒப்பீட்டுதன்மை மிக்கது. ஒரு கட்டத்தில் கலாசாரமற்றதாக இருக்கும் விடயம் மற்றொரு காலப்பகுதியில் கலாசாரமாகி விடுகின்றது. ஒரு காலத்தில் கறுப்பின மக்கள் அமெரிக்காவில் கலாசாரமற்றவர்கள். இன்று அவர்கள் நாட்டின் முதற் பிரஜைகள் என்று மாறுகின்ற அளவுக்கு கலாசாரம் மிக்கவர்கள். விதிகளை மீறி இல்லறத்தினைத் துறந்த சித்தார்த்தர் அதுவரை இல்லாத புதியதொரு கலாசாரத்தைக் கட்டியெழுப்பினார்.  சரியான முறையில் கேள்வியெழுப்பும் வரையிலும்,  சவால் விடும் வரையிலும்  மட்டுமே உடன்பாடுகள் நிலைத்திருக்கும்.  உலகின் ஒவ்வொரு நாடுகளினதும் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு நாடும் தனது வரலாற்றினை மிகப் பெருமையாக எடுத்துரைக்கின்றன. ஆனால் உண்மையில் அவ் வரலாறுகளில் நாற்றமெடுத்த, அவலட்சணமான பகுதிகள் இல்லையா? இருக்கின்றன. பெரும்பாலும் அவற்றை நாட்டினதோ அல்லது இனத்தினதோ புனிதம் என்ற கூறி அதனை  கலாசாரமாக்கி நியாயப்படுத்தி விடுகின்றனர். இது தான் இங்கு அவலட்சணமான விடயம். 

மேலும், கலை மனிதர்களிடம் ஒழுக்கத்தினை வளர்க்கின்றது என்ற விடயம் எனக்கு உண்மையில் புரியவில்லை. நான் அறிந்த, நான் நம்புகின்ற கலை அவ்வாறனதல்ல. கலை என்பது புரிதல். விளங்கிக்கொள்ளல். கலை அறிவை வளர்க்கும் விடயம். அதற்காக கலை பலவிதமான வடிவங்களை தன்வசப்படுத்திக்கொள்கின்றது. ஆனால், கலை என்று அறிமுகப்படுத்தும் விடயத்தினை நகர விடாமல் தமக்கு தேவையான இடத்தில் வைத்திருக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். நாம் கடந்த காலங்களில் அவ்வாறான விடயங்களை அனுபவித்துள்ளோம்.

நீங்கள் பல தரப்பட்ட சிறுபான்மை மக்களினூடாக  வாழ்க்கையை விரட்டிப் பிடித்துச் செல்ல முயற்சிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. இலங்கை என்ற தீவின் எல்லா மூலை முடுக்குகளெல்லாம் சுற்றி வருகின்றீர்கள். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு அடிபணிகின்ற அதேவேளை எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை என்று கருதப்படும் மக்கள் தொடர்பில் உங்கள் அனுபவம் யாது?

இஸுரு: யுத்தம் முடிவடைந்தபோது செட்டிக்குளம் அகதி முகாமுக்கு சென்ற வேளை  சிறுபான்மையினராக இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதனை நான் கண்டறிந்தேன். பல ஆண்டுகளுக்கு பின்பும் கன்னத்தில் விழுந்து தெறிப்படும் அடியைப் போன்று அந்த நினைவுகள் உள்ளன. அந்த கண்களையும், அந்த முகங்களையும் இன்றும் என் நினைவுகளிலிருந்து அகற்ற முடியவில்லை. பெரும்பான்மை மத்தியில் சிறுபான்மையினராவது உண்மையில்  வேதனை மிக்கது. மிக மிக வேதனையானது. இனம், மதம், பாலியல் அடையாளம் அல்லது வேறு காரணங்களுக்காக சிறுபான்மையாகும் சமூக தரப்புகளைச் சேர்ந்த  அனைவருக்கும் அவரவருக்குரிய   பிரச்சினைகள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் பெரும்பான்மையினர் அந்த விடயங்களைக் கையாளும் போது பார்வை அற்றவர்கள் போன்றும், பேச இயலாதவர்கள் போன்றும், காது கேட்காதவர்கள் போன்றும் நடந்து கொள்கின்றனர். எதனையும் செவிமடுக்காமல்தான் அவர்கள் மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு சிறுபான்மை குழுக்கள் தொடர்பில் முன்னரேயே தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்தியல்களை சிறுபான்மையினர் மீது வலிந்து திணிக்கின்றனர். அவற்றைப் பொறுத்துக் கொண்டும் தாங்கிக் கொண்டும் இருக்க நேர்வது மிகவும் வேதனையானது. இவ்விடயம் தொடர்பிலான எனது முதல் நினைவாக நான் வளர்ந்த பெரும் குடும்பத்தின் உறவுக்கார சகோதரர்கள் மத்தியில் நான் இருண்ட சருமத்தினைக் கொண்ட பிள்ளையாக இருப்பதனைக் குறிப்பிட முடியும். எனது ஆச்சி அவர்களை சுது புத்தா என்று அழைக்கும் போது நான் வெறும் புத்தா ஆனேன்.  அவர்களுக்கு தந்தையர்கள் இருக்கும் போது  என் தந்தையார் அந்த காலப்பகுதியில் இருக்கவில்லை. அவர்கள் சிறப்பானவர்களாக இருக்கும் போது நான் சிறப்புத் தன்மையைப் பெறவில்லை. கண்ணாடி முன் நின்று நான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது. பெண்களாதல், சமப்பாலுறவாளர்களாக இருத்தல் ஆகிய காரணங்களினால் பலர் துன்புறுத்தல்களுக்குள்ளாகின்றனர். பிறரை துன்புறுத்துகின்றோம் என்ற விடயத்தினை துன்புறுத்துபவர் பெரும்பாலும் அறியாமல் இருக்கின்றார். முன்னைய தலைமுறை செய்த விடயங்களை  பார்த்து அவர் அதனைப் பின்பற்றுகின்றார். பெரும்பாலும் சிறுபான்மை மக்களும் தம்மீது திணிக்கப்படும் அழுத்தத்தினை  ஏதோ ஒருவகையில் தாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதனை எதிர்க்கும் சக்தி அவர்களிடம் இருக்கும் நிலையிலும் கேள்வியெழுப்ப அவர்கள் அஞ்சுகின்றனர்.

ஒரு தடவை நான் நன்கு அறிந்த தோழர் ஒருவர், பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட அடிப்படைவாத குழுவொன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் பங்குபற்றியிருந்தார். அவர் ஒரு சமப்பாலுறவாளர். பின்பு தலையில் காயத்துடன்  மீண்டும் அவர் திரும்பி வந்திருந்தார். மதத்திற்காக இரத்தம் சிந்தினேன் என்று அவர் அந்த காயம் குறித்து பெருமை கொண்டிருந்தார். அவரின் பங்குபற்றுதலை நான் விமரிசித்த போதும் அதனை அவர் விளங்கிக் கொள்ளவில்லை. அவர்களுக்கு நடந்தது உனக்கும் நடைபெறலாம் என்று தெளிவுப்படுத்த முயன்று  தோல்வியடைந்திருந்தேன். ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தரப்பொன்றை சேர்ந்த  உறுப்பினரான அவர், இனத்துவ ரீதியில் தாம் உரித்தாகும் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து மற்றுமொரு சிறுபான்மை குழுவை அடக்குமுறைக்குட்படுத்த முன்வந்தார். இந்த காலக்கட்டத்தில் காணப்படும் எமது பொதுஜன அறிவின் பேரம் பேசலுக்கான உதாரணம் இது. மற்றவர்களை புரிந்து கொள்ளவதில் எமது சமூகம் இந்த அளவுக்கு ஏன் தோற்றுப்போயுள்ளது என்ற கேள்வி எனக்கும் உள்ளது.

இஸுரு, நீங்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகக் கருத்துக்களைக் கூறுபவர். இந்த போலியற்ற தன்மை உங்களது படைப்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றது. உங்களிடமிருந்து வெளிப்படும் இந்த வெளிப்படைத்தன்மை மிக மிக முக்கியமானது. இலங்கையின் பாலியல் வரலாறு, விக்டோரிய போதனைகள் மற்றும் நவீனத்துவம் என்பனவற்றை  பாலியல் என்ற விடயத்தினூடாக உங்கள் பதிலில் எவ்வாறு தொகுப்பீர்கள்?

இஸுரு: இலங்கையின் பாலியல் வரலாறு தொடர்பில் கருத்துக்களைக் கூறும் அளவுக்கு அது தொடர்பிலான அறிவு உண்மையில் என்னிடம் இல்லை. ஆனால் நான் அறிந்துகொண்ட விதத்தில் உங்கள் கேள்வியை அணுகுகின்றேன். பாலியல் தேவை என்பது அடிப்படை மனித தேவை என்பதுடன் மனித உரிமையுமாகும். வயது வந்த சுதந்திரமான மனிதர்கள் அவரவர்களுக்கிடையில்  விருப்பம் மற்றும் புரிதலுக்கு இணங்க மேற்கொள்ளும் பாலியல் செயல்களானது என்னைப் பொறுத்தவரை மிகவும் இயற்கையானதாகும். பௌத்த மற்றும் இந்து கற்றல்களில் இல்லறத்தினருக்கு பாலியல் தொழிலும், பாலியல் தொழில் செய்யும் ஆண்கள் பெண்களுடனான பழக்கத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதே ஒழிய வேறு எந்தவிதமான பாலியல் செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. பாராஜிக்க பாலிய மற்றும் ஜாதகக் கதைப் புத்தகங்களை வாசிக்கும் போது புத்தர் காலத்திலும் அதற்கு பின்னரான சமூகத்திலும் இருந்த பாலியல் சுதந்திரம் மற்றும் பன்மைத்துவத்திற்கு மதிப்பளித்தல் தொடர்பில் எவ்வளவோ சான்றுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். பாலியல் அடையாளம், பாலியல் பன்முகத்தன்மை என்பன மிகவும் சிக்கலான தலைப்புகள். எதிர்ப்பாலுறவினர், இரட்டைப்பாலுறவினர் (bisexual), சமப்பாலுறவினர், பால் மாற்றம் செய்தவர்கள் (transgender) மற்றும் asexual (இவர்கள் பாலியல் ரீதியில்  தூண்டல் அற்றவர்கள்) என்று நாம் கற்பதற்கு இலகு வழிமுறையாக   இவ்வாறு பாகுப்படுத்தியிருந்தாலும் அதன் பிரிவுகள் மேலும் அதிகளவில் இருக்கும் என்று விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவின் கின்ஸி அறிக்கையைக் குறிப்பிட முடியும். எனினும் துரதிருஷ்டவசமாக பிரித்தானியர்கள் எமக்கு அறிமுகம் செய்து வைத்த குற்றவியல் கோவையில் சமப்பாலுறவு தண்டனைக்குரிய குற்றமாகும். 365 மற்றும் 365 ஏ ஆகிய பிரிவுகள் எமது குற்றவியல் கோவையில் இன்றும் உள்ளது. இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், எமக்கு அந்த சட்டத்தினை வழங்கிய பிரித்தானியர்கள் அந்த பிரிவுகளை தமது சட்டப் புத்தகங்களிலிருந்து  அகற்றி வெகு காலமாகி விட்டது. ஆனால்  இலங்கை எங்கு இருக்கின்றது? நவீனம் என்று கூறிக்கொள்ளும் இக்காலப்பகுதியிலும் திருமணத்தில் கன்னித்தன்மை சோதிக்கப்படுகின்றது. மிலேச்சத்தனமாக இன்றும் வெள்ளைத் துணி விரிக்கப்படுகின்றது. இது தான் எமது நவீனத்துவத்தின் அளவு.

இன்றும் நாம்  காலனித்துவ மனநிலையிலேயே இருக்கின்றோம். பாலியல் தொடர்பில் சுதந்திரமான பேச்சுகள் இல்லை. பெண்களுக்கு தமது உடல் குறித்து தீர்மானிக்கும் சுதந்திரம் இல்லை. சீர்தூக்கிப் பார்க்கும் விதத்திலான கற்றலோ, விடயங்களை ஆராய்ந்து பார்க்கவோ எம்மை பழக்கப்படுத்தவில்லை. வழங்கப்பட்டுள்ள கருத்தியல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்திக்கொண்டு செல்லவுமே எம்மை பழக்கப்படுத்தியிருக்கின்றனர். எல்லா சமூகத்திலும் பலவகையான பாலியல் அடையாளம் கொண்ட நபர்கள் கூடிக் குறைந்தளவில் இருக்கின்றனர். எனினும்  எதிர்ப்பாலுறவினர் மட்டும் இருக்கும் சமூகம் என்று நாம் போலியாக மறைத்துக் கொண்டிருக்கின்றோம்.  இந்த போலியான  திரையினுள் சுற்றி சுழலும் பிரச்சினைகள் அளப்பரியன. மனித உரிமைகள் சாசனத்தில் நாம் பெருமையுடன் கையொப்பம் இட்டிருந்தாலும் அவை எந்தளவுக்கு பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதனை மீள சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நாம் பிறரையும் செவிமடுக்க வேண்டும்.

சுதபோன்று தாண்டவவும் உங்கள் இருப்பினை அடையாளப்படுத்திய காவியப் படைப்புகள். உங்களது வார்த்தைகள் தெளிப்பும்தீர்க்கமான அவதானிப்பும் இந்த கவிதைகளில் வெவ்வேறாகவும் மொத்தமாகவும் உங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை, உங்களது கவிதைகள் புனைவுகள் அற்றது. உங்கள் மொழிப் பாவனையானது அந்தந்த கவிதைகள் இறைஞ்சுகின்ற ரசவாதத்தினூடாக சமூகப் பரப்பிற்கு வெளியே கையகப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான மொழி உருவாக்கத்தின் தொழினுட்பம் என்னவென்று கூறுங்கள்?

இஸுரு: இவ்வாறுதான் என்று கூற எனக்குத்  தெரியவில்லை. ஏரிக்கரையில் நாம் எதிர்கொள்ளும் கல் ஒன்று, அது பிரிந்து தகர்ந்து வந்த தாய்ப்பாறையின் நிறத்தினையும், கடினத்தன்மையையும் காவி வருகின்றது. நீரோட்டத்துடன் அது கடந்த வந்த பாதையினால் அதன் வடிவம் மாறுகின்றது.  ஆனால் அந்த வடிவம் மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. சலனமற்று இருக்கும் போது அதன் மீது பாசிகள் படர்ந்து வளர்கின்றன. எனது மொழியிலும் மனிதர்களுடனான சகவாசம் மற்றும் வாசிப்பு செல்வாக்கு செலுத்தியிருக்கலாம். நான் காணும் விடயங்களை பெரியளவு மாற்றங்களை செய்யாமல் எனது மொழியில் சட்டகமிட்டு வரையறுத்து முன்வைக்கின்றேன். மொழியும் தொழினுட்பமும் எழுத்துக்கு மிகவும் அவசியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் நான் அதிகளவு அக்கறையை உள்ளடக்கத்திற்கு வழங்குகின்றேன்.

கிராஞ்சி‘, ‘ஆதரனீய நிமாலிக்கு‘, ‘மலக் கத்தா கரய்போன்ற உரைநடைப் படைப்புகளானது, ஓரளவு இலக்கிய எழுத்தறிவு இருப்பதாக நாம் அனுமானிக்கின்ற விசேட சமூக தளத்தினை (அடுக்கு) நோக்கியே கேள்வி எழுப்புகின்றது. இந்த தளத்திற்கு ஓரளவு இலக்கியம் தொடர்பான உலகப் பார்வை இருப்பதாக நாம் அனுமானித்தாலும் அவர்களிடமிருந்து எழுந்த துலங்கள் பிற்போக்கானதுடன் முன்னேற்றம் அற்றது. அந்த துலங்கள்களுடன் இணைத்துப் பார்க்கும் போது  பொதுஜன சமூகத்துடன் உரையாட  உங்களைப் போன்ற படைப்பாளிக்கு இன்னும் எத்தனைக் காலங்கள் தேவைப்படும்? அத்துடன் இலக்கியவாதிகள் பொதுஜன சமூகத்துடன் உரையாட  வேண்டுமா?

இஸுரு: மன்னிக்கவும்! எல்லோருடனும் உரையாடுவதற்காக எழுத என்னால் இயலாது. அதற்கான தேவையும் எனக்கு இல்லை. அதிகமாக புத்தகங்களை விற்பதற்காகவோ, எனது பிரதிபிம்பத்தைப் பராமரிப்பதற்காகவோ நான் எழுதவில்லை. முதலில் நான் எனக்காகவே எழுதுகின்றேன். அது பொய்மையாக இல்லாததிற்குக் காரணம், அவ்வாறு எழுதப்படும் விடயங்களில் சமூகமயப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகின்ற பகுதியை பகிர்ந்து கொள்வதனாலாகும். அவ்வாறு பகிரப்படும் விடயம் ஒவ்வொரு விதமாக செயலாற்றுகின்றது. அது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும். எனது சில படைப்புகளுக்கு படுமோசமான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோன்று நல்லவிதமான பாராட்டுகளும் கிடைத்தன. இவ்வாறு விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைப்பதற்கு காரணம் எனது எழுத்துக்கள் அவர்களுக்குள் இயங்கியதனாலாகும். உண்மையில் இலக்கிய எழுத்தறிவு என்பது ஓரளவு பயிற்சி மற்றும் கற்றலினூடாக கையகப்படுத்த வேண்டிய விடயமாகும். அது முறையான அல்லது முறையற்ற கற்றலாக இரண்டு வகைப்படலாம்.  எமது அக்கடமிக் இலக்கியக் கற்றல் என்பது பெரும்பாலும் மிகவும் குறுகிய இடங்களில் சிறைப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இவை அறிவைப் பெறுதல் அல்லது ரசித்தல் என்பதற்கு அப்பால் பரீட்சைகளில் சித்திப் பெறுவதற்கு உதவுவதனையே இலக்காகக் கொண்டது. நீங்கள் குறிப்பிடுவது போன்று என்னால் பொதுஜன சமூகத்துடன் உரையாட முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்காக என்னால் ஒன்றும் செய்யவும் முடியாது.   

இஸுரு சாமர சோமவீர

சிங்கள இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர். 2 சிறுகதைத் தொகுதிகளும், 3 கவிதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன. சுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார். இவருடைய பத்துச் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘திருமதி பெரேரா’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

1 Comment

  1. நல்ல உரையாடல் ஒரு படைப்பாளியின் மனதை இதன் வழியே உணரமுடிந்தது.

உரையாடலுக்கு

Your email address will not be published.