
அவ்வேளையில் எனது கைகள் இரண்டும் வெந்நீர்ப் பாத்திரத்திற்குள் இருந்தன. இன்று மட்டும் இதுவரையில் நான் ஃபேஷியல்களையும், ஐந்து க்ளீனப்களையும், ஏழெட்டு ஐப்ரோ த்ரெட்டிங்குகளையும் செய்திருந்தேன். அத்துடன் முன்பே ஏற்றுக் கொண்டிருந்த ஒரு க்ளீனப்பையும் இன்னும் சற்று நேரத்தில் ஆள் வந்தவுடன் செய்ய வேண்டியிருந்தது. எல்லா வேலைகளையும் இரண்டு கைகளினாலுமே செய்ய வேண்டியிருப்பதால் அந்தியாகும்போது விரல் மூட்டுக்களில் வலியெடுக்கத் தொடங்கும். அப்போது பனிக்கட்டியிட்டுக் குளிர்ந்த தண்ணீரிலும், இளஞ்சூடான தண்ணீரிலும் கைகளை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டால் வலி குறையும் என்பதை நான் மேனு அக்காவிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். என்னதான் செய்தாலும், இரவில் உறங்கப் போகும்போது மீண்டும் விரல்களில் வலியெடுக்கத் தொடங்கும்.
அந்த முகத்தைக் கண்டதுமே நான் அதிர்ந்து போனேன். கறுப்பி திலகா. இல்லை. இவள் திலகா இல்லை. இவள் திலகாவை விடவும் சற்றுக் குள்ளமாகத் தெரிந்தாள். ஆனால், அதே நிறம், அதே முகம். இன்றைக்கு எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன்பிருந்த திலகா இந்த அழகு நிலையத்தின் வாசலில் இன்று நின்று கொண்டிருந்தாள். நிலு வாசலுக்குப் போக முற்பட்டபோது நான் நிலுவின் கையைப் பிடித்துத் தடுத்தேன்.
“இவள் எனக்கு.”
“உனக்குத்தான் ஆறரை மணிக்கு ஒரு க்ளீனப் இருக்கே?”
“இல்லை. அதை நீ செய், நிலு. இதை நான் பார்த்துக்குறேன்..”
நிலு கண்களைக் குறுக்கி என்னைக் கூர்ந்து பார்த்தாள். நான் அவளது அந்தப் பார்வையைத் தவிர்த்தேன். இன்றைக்கு வந்திருக்கும் இந்த திலகாவோ தனது தோல் நிறத்துக்கு கொஞ்சமும் பொருத்தமேயில்லாத விதத்தில், கடுமையான கத்தரிப் பூ நிறத்திலான, சற்றுத் தளர்வான ஒரு கவுணை அணிந்திருந்தாள். அவளது முகத்தில் வழி தவறி இங்கு வந்து விட்டது போன்றதான ஒரு பார்வையே படிந்திருந்தது. அவளது இரு கருவிழிகளும் ஓரிடத்தில் நிலைத்திருக்காமல் சுற்றி வர அலைபாய்ந்து கொண்டிருந்தன. எங்களுக்கு இந்த மாதிரியான முகங்கள் மிகவும் பரிச்சயமானவை.
“உட்காருங்க மேடம்…”
என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். அன்றைக்கு அந்தத் திலகாவின் விழிகளின் பார்வையை நான் மறக்கவேயில்லை. இதோ.. இந்த விழிகளிலும் அதே பார்வை, அது போல இல்லாத போதும், மெலிதாகப் படிந்திருந்தது.
“என்ன மேடம் செய்யணும்? ஃபேஷியல், க்ளீனப், ஹெயார் கட், மெனிக்யூ, பெடிக்யூ? இந்த மாசம் ஹர்பல் ஃபேஷியலுக்குன்னு ஒரு ஸ்பெஷல் டிஸ்கவுண்டும் இருக்கு.”
புதிய திலகா பதில் பேசவில்லை. அவளது விழிகள் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஜெஸ்ஸிகா அல்பாவினதும், ஐஸ்வர்யா ராயினதும் புகைப்படங்களில் நிலைத்திருந்தன. அவளுக்கு நான் பேசியது கேட்கவில்லையோ? தொடர்ந்து அவளது பார்வை அவளுக்கு முன்னாலிருந்த கண்ணாடியில் நிலைத்தது. அதில் அவளும், நானுமென இருவருமே தெரிந்தோம்.
எங்களுடைய பார்வைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. உண்மையைச் சொன்னால் அதில் நான் எரிந்தேன். ஒரு நாளும் பழைய திலகாவின் விழிகளை ஏறிட்டுப் பார்க்க வேண்டிய தேவையோ, நேரமோ எனக்கிருக்கவில்லை. அந்தத் தேவை எனக்குள் தோன்றிய வேளையில் நான் அவளிடமிருந்து விலகி வெகுதொலைவுக்கு வந்து விட்டிருந்தேன்.
“ஃபேஷியலா, க்ளீனப்பா மேடம்?”
நான் அவளது கையைப் பிடித்து இருக்கையில் அமரச் செய்ததும், அந்த முகத்தில் ஒரு மெலிதான புன்னகை பூத்தது. அவளது கூந்தலுக்குள் விரல்கள் நுழைத்து மிருதுவாகத் தடவிக் கொடுத்தேன். என்னதான் வேலையில் மும்மரமாய் இருந்தாலும் மேனு அக்காவினதும், நிலுவினதும் கண்களும், கவனமும் என்மீதுதான் இருக்கும் என்பதை நான் உணராமல் இல்லை. இந்தக் கூந்தல் வரண்டு போயிருந்தது. ஒருபோதும் நான் திலகாவின் கூந்தலைத் தடவிக் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. என்றாலும், திலகாவோ எண்ணற்ற தடவைகள் எனது கூந்தலில் சிக்கை அகற்றி நேர்த்தியாகச் சீவி விட்டிருக்கிறாள்.
“ஃபேஷியலுக்கு ரொம்ப செலவாகுமா?” என்று கேட்டாள் இவள். சந்தேகத்துக்கிடமின்றி இது அவளது முதலாவது ஃபேஷியல் என்பது புரிந்தது.
“எங்கக்கிட்ட நிறைய பேக்கேஜஸ் இருக்கு மேடம். இந்தியன் ப்ரடக்ட்ஸ்ல செய்றதுன்னா ஆயிரம் ரூபாய், நம்ம ஸ்பெஷல் இந்தியன் ஹேர்பல்ல செய்றதுன்னா ஆயிரத்து ஐந்நூறு, யூகே ப்ரடக்ட்ஸ்லன்னா ரெண்டாயிரம் ரூபாய். அதுதான் ரொம்ப நல்ல ஃபேஷியல். எங்களோட நிறைய கஸ்டமர்ஸ் அதைத்தான் செஞ்சுப்பாங்க. கல்யாணம் மாதிரி ஏதாவது விஷேசம்னா கோல்ட் ஃபேஷியல் இருக்கு. அதுன்னா கொஞ்சம் விலை கூட. மூவாயிரத்து ஐநூறு வரும். ஆனா முகம் நல்லா பளிச்சுன்னு ஆகிடும். கல்யாணம்னா அதைப் பண்ணிக்கிறதுதான் நல்லது” என்று எங்கள் எல்லோருக்குமே மனப்பாடமாகிப் போன வசனங்களை ஒப்புவித்தேன். அவளது விழிகள் விரிந்தன.
“ஆனா அறுநூறு ரூபாய்ல இருந்து க்ளீனப் இருக்கு மேடம்” என்றேன்.
அவளது விழிகள் மீண்டும் எனது விழிகளோடு கண்ணாடியில் மோதின. அப்படியே திலகாவின் கண்கள்தான். மெலிந்து, நீண்டு, கறுத்த முகத்தில் பளபளப்பான சிறிய விழிகள். தெருவில் குட்டி போட்ட நாய்களின் கண்களில் காணப்படும் பார்வையைப் போன்ற ஒன்றுதான் அந்த விழிகளில் எப்போதும் தென்படும். நிராதரவானவை என்றாலும் கடுமையானவை. எதையும் நம்பாதவை.
“உங்களுக்கு இருப்பது வரண்ட தோல் மேடம். அதுக்கேத்த இந்தியன் ப்ரடக்ட்ஸ் எங்கக்கிட்ட இருக்கு… செய்வோமா? முகத்துல இருக்குற பொலிவில்லாத தன்மையெல்லாம் போய் புதுப் பொலிவு வந்துடும். ஆனா மாசத்துக்கொரு தடவையாவது செஞ்சுக்க வேண்டியிருக்கும். இந்தியன் ப்ரடக்ட்ஸ்ல செய்வோமா மேடம்? ஆயிரம் ரூபாய்தான் செலவாகும்.”
“சரி.”
இருக்கையைத் தாழ்த்திய போதிலும் இந்தத் திலகா அதில் சாய்ந்து கொள்ளவில்லை. அந்த விழிகள் எனது விழிகளுடனே மோதிக் கொண்டேயிருந்தன. மேனு அக்கா ட்ரையரைக் கையில் வைத்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கண்ணடித்துப் புன்னகைத்தாள்.
நான் இவளது தோள்களைப் பிடித்து இருக்கையில் சாய வைத்தேன். நிலு உரிய போத்தல்களையும், உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்து தரும் வரைக்கும் கூந்தலைத் தடவிக் கொடுத்தேன். எந்தவொரு பராமரிப்பும் மேற்கொள்ளப்படாத கூந்தலாக அது இருந்தது. நுனி வெடித்து, சற்றேனும் ஈரலிப்பில்லாத கூந்தல். பொடுகு வேறு தோன்றியிருந்தது. எனக்கு இந்தத் திலகாவுடன் நிறையக் கதைக்க வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் மேனு அக்காவின் முன்னால் அதையெல்லாம் செய்ய முடியாது.
‘கஸ்டமர்ஸ் புலம்புறதையெல்லாம் கேட்டுட்டிருக்கலாம். ஆனா நாங்க ட்ரீட்மென்ட்ஸ் பற்றி மட்டும்தான் கதைக்கணும். அவங்க சொல்றதுக்கு வேணும்னா ‘ம்ம்’ கொட்டலாம். ஆனா அதுக்கு மேல கேள்விகள் எதுவும் அவங்களைக் கேட்கக் கூடாது. அப்படியிருக்காம இந்தத் தொழிலைச் செய்ய முடியாது’ என்றுதான் மேனு அக்கா உத்தரவிட்டிருந்தாள்.
“உங்க கூந்தலை இப்படி பொலிவில்லாம இருக்க விடாதீங்க மேடம். ஒரு நாளைக்கு நாங்க அதையும் பொலிவாக்கிடுவோம், என்ன? இதுக்கு விட்டமின் ஈ ட்ரீட்மென்ட் நல்லது. அழகுங்குறது முகம் மாத்திரம் இல்லையே… எல்லாமே அழகா இருக்கணும்.”
இந்தத் திலகா எதுவும் பேசவில்லை. இவள் மற்றவர்களைப் போல கதைப்பவள் இல்லை. அந்தத் திலகாவைப் போலவேதான் இவளும். கதைக்கவும், அழவும், கவலைகளைச் சொல்லவும்தான் சிலர் இந்த சலூனுக்கே வருகிறார்கள்.
ஷவர் கெப்பைப் போட்டு, முகத்தில் க்ளன்ஸிங் மில்கைத் தடவும்போது திலகா சிலிர்த்தாள். சில்லிட்டதால் இருக்கலாம். வழமையாக பழக்க தோஷத்தில் விரல்கள் ஓடுவது போல அவளது முகத்தில் வேகமாக எனது விரல்கள் நகரவில்லை. நான் அவளது முகத்தின் ஒவ்வொரு உணர்ச்சி ரேகைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருந்தேன்.
அந்தத் திலகா… எனக்கு மீண்டும் ஒருமுறை சந்திக்கக் கிடைக்காத திலகா.. ஒவ்வொரு நாளும் இந்த சலூனுக்கு ஒவ்வொரு ரகத்திலான திலகாக்கள் வருகிறார்கள்தான். ஆனால் அவள் நான் பிறந்த குக்கிராமமான ஹூரிகஸ்வெவையைச் சேர்ந்த கறுப்பி திலகா. கவிதைகள் எழுதிய, மாணவர் சங்கத்தில் பாடல்கள் பாடிய, எனது கூந்தலில் சிக்கு அகற்றிய, என்னைப் பழி வாங்க வந்திருக்கும் கறுப்பி திலகா…
திலகா என்னை விடவும் ஒரு வருடம் மூத்தவள் என்றாலும், அவளுக்கு முன்பு வயதுக்கு வந்தவள் நான்தான். என்னைக் குளிப்பாட்டிய அன்று நான் இளஞ்சிவப்பு நிற ஆர்கண்டித் துணியில் அடுக்கடுக்காகத் தைத்த கவுணொன்றை அணிந்திருந்தேன். அதை எனது அம்மா தம்புத்தேகம நகரத்துக்குப் போய் தைத்துக்கொண்டு வந்திருந்தாள். எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. மதிய நேரம் நான் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் திலகா எனது அருகில் வந்து எனது கவுணை ஆசையோடு தொட்டுப் பார்த்தாள்.
“தொடாதே.. அழுக்காகிடும்..” என்று கூறி நான் அவளைத் துரத்தி விட்டேன்.
அன்று அவள் அப்போதே திரும்பிப் போனாளா, அல்லது அந்தி சாயும் வரைக்கும் அங்கே இருந்தாளா என்பது எனக்கு நினைவில்லை. அதை விடவும் ஞாபகத்தில் நிலைத்திருக்கக் கூடிய விடயங்கள்தான் அன்று எத்தனை நிகழ்ந்தன?! சிறிய வகுப்புகளில் திலகா என்பவள் எப்படியும் ஞாபகத்தில் நிலைத்திருக்கக் கூடிய ஒருத்தியாக இருக்கவில்லை. வெறும் கற்சிலை போல அமைதியாக எங்களையே பார்த்துக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் கெட்ட பிள்ளை அவள். விமலா, சுரங்கி, மல்லிகா, பத்மினி என ஒன்றாகப் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்த சிறுமிகளான நாங்கள் அனைவருமே பூங்கொத்தில் பூக்கள் பூப்பது போல ஒவ்வொருவராக வயதுக்கு வந்து கொண்டிருந்த போது எம்மை விடவும் மூத்தவளான கறுப்பி திலகா மரக்கட்டை போல அப்படியே இருந்தாள்.
அந்தக் காலத்தில் தோழிகளான எங்களுக்குத்தான் கதைத்துக் கொள்ள எத்தனை விடயங்கள் இருந்தன?! நாங்கள் மார்புகளை அருகருகே வைத்து பெரிய மார்புகள் யாருடையவை என்று பார்த்தோம். எம்மில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வித அழகு இருந்தது. பத்மினியின் பற்களில் கறை படிந்திருந்த போதிலும், அவளது மார்புகள் பெரியவை. சுரங்கியும், நானும் ஏனையவர்களை விடவும் நல்ல நிறமுடையவர்களாக இருந்தோம். மல்லிகா கொழுத்தவள் என்றாலும் அவள் சிரிக்கும்போது கன்னத்தில் அழகான குழி விழுந்தது. விமலாவுக்கோ பூனைக் கண்கள். நாங்கள் இவற்றையெல்லாம் அவதானித்துக் கூடிக் கதைத்த போதெல்லாம் கறுப்பி திலகா எங்கேயிருந்தாள் என்பதை என்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை.
அடடா! அந்தக் காலத்தில் நாங்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து என்னவெல்லாம் செய்திருக்கிறோம். எனது அப்பாவுடன் சேர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சும் மஹதுங் அண்ணா ஆற்றங்கரை மருத மரத்தடியில் மறைந்திருந்து நாங்கள் குளிப்பதை ஒளிந்து பார்க்கிறார் என்பதை நன்றாக அறிந்து கொண்ட பிறகும் அவர் இருக்கும் பக்கமாகவே திரும்பி உடுத்தாடைக்குள் கை விட்டு சவர்க்காரம் பூசியதெல்லாம் பிறகு தோழிகளுடன் கூடிக் கதைத்துச் சிரிக்கலாம் என்பதற்காக மாத்திரமா..? இல்லை. அதில் வேறேதோ மெல்லிய சுவையிருந்தது. அழகானதொரு சிவப்பு நிறம் உதடுகளுக்கு வருவதால், பாடசாலைக்குப் போகும்போது தேக்கு இலைத் தளிரைக் கசக்கி உதடுகளில் தேய்த்துக் கொண்டோம். தீர்ந்து போன தேங்காய் எண்ணெய்ப் போத்தலின் அடி வரை வழித்து எடுத்து கூந்தலில் தடவி ஒற்றைப் பின்னலாகப் பின்னி, புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்தவாறு நாங்கள் பாடசாலைக்குப் போனது படிக்க மாத்திரமல்ல. எங்கள் எல்லோரிடமுமே சிறிய கண்ணாடித் துண்டுகளும், சீப்புகளும் எப்போதும் இருந்தன. ஆற்றுக்குக் குளிக்கப் போனாலும் விரைவில் வீட்டுக்குத் திரும்ப மாட்டோம். பாதங்களை, பாறைகளில் உராய்ந்து, உராய்ந்து உள்ளங்கால்கள் சிவக்கும்வரை தேய்த்ததெல்லாம் வெறுமனேயல்ல. இரவில் கூந்தலை நிறையச் சின்னச் சின்னப் பின்னல்களாகப் பின்னிக் கொண்டு படுத்தால் காலையில் அவிழ்க்கும்போது கூந்தல் அடர்த்தியாகத் தெரியும்; கீழ்ப்படியும். அப்போதுதான் ஒற்றைப் பின்னல் பின்னும்போது மிக அடர்த்தியானதாகவும், அழகானதாகவும் தெரியும். இவற்றையெல்லாம் நாங்கள் அனைவருமே மிகுந்த ஆசையோடு செய்து வந்தோம். அவை அனைத்திலுமே ஏதோவோர் அர்த்தம் இருப்பதை நாங்களே உணர்ந்திருந்தோம். பெரிய வகுப்புப் பையன்கள் நாங்கள் வரும்வரை தெருவில் காத்திருந்து எம்மையே சுற்றி வரும்போதும், சைக்கிளால் மோதுவது போல கிட்ட வரும்போதும் நாங்கள் அவர்களை முறைத்துப் பார்த்துத் தலையைத் திருப்பிக் கொண்டோம்தான். ஆயினும் நாங்கள் அவற்றை உள்ளுக்குள் ரசித்தோம்; விரும்பினோம்.
எம்மை விடவும் இரண்டு வகுப்புகள் மேலேயிருந்த நிஹால் அண்ணன்தான் எனக்கு முதன்முதலாக ஒரு காதல் கடிதத்தைத் தந்தான். அந்தக் கடிதத்தில் சிவப்புப் பேனையால் ஒரு பெரிய அரச இலையும் அதனுள்ளே ஒரு ஜோடிப் புறாக்களும் வரையப்பட்டிருந்தன. இடைவேளை நேரத்தில் நான் கிணற்றடிக்குத் தண்ணீர் அருந்தப் போயிருந்த வேளையில்தான் அந்தக் கடிதத்தை அவன் எனக்குத் தந்தான். அடடா…. அந்தக் கடிதத்தை நான் நூற்றுக்கணக்கான தடவைகள் எடுத்து வாசித்திருப்பேன். என்றாலும் அவனைத் தொலைவில் கண்டால் புன்னகைப்பதல்லாமல், சம்மதம் என்று அவனிடம் ஒருநாளும் கூறவேயில்லை.
இவையெல்லாம் நடந்த போது திலகா எங்கேயிருந்தாள் என்பது எனக்கு நினைவில்லை. அவள் எந்தக் காலத்தில் வயதுக்கு வந்தாள் என்பதுவும் எனக்கு ஞாபகமில்லை. கள்ளச் சாராயக் கொள்கலன்கள் பிடிபட்டு அவ்வப்போது அப்பாவை போலிஸ் பிடித்துக் கொண்டு போய் ரிமாண்டில் வைக்கும் ஒவ்வொரு தடவையும் திலகாவின் அம்மாதான் எமக்குத் துணையாக, காவலாக, படுத்துக் கொள்ள எங்கள் வீட்டுக்கு வந்தாள். என்றாலும் ஒரு நாளாவது அவளோடு திலகா வந்ததாக எனக்கு ஞாபகமில்லை. திலகாவின் அம்மாவும் திலகாவைப் போலவே ஒரு கறுப்பு நாட்டுக் கட்டை. திலகாவின் அப்பா பலகை கிழிக்கும் வேலை செய்ததுவும், அந்தியாகும் போது கள்ளச் சாராயம் குடிக்க எமது வீட்டுக்கு வந்து போனதுவும் எனக்கு நினைவிருக்கிறது.
அந்தி வேளைகளில் வீட்டில் கள்ளச் சாராயம் விற்கும் இடமிருக்கும் பக்கமாக, போகக் கூட அம்மா என்னை அனுமதித்ததில்லை. ‘என்னோட வாழ்க்கை சீரழிஞ்ச இடம் அது. நீயும் கெட்டுப் போயிடாதே’ என்று மந்திரம் போல எப்போதும் என்னிடம் முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். எமது கிராமத்திலிருந்த பெரும்பாலான அம்மாக்கள் தமது மகள்களிடம் அந்த மந்திரத்தைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அது ஒருவருக்கோ, இருவருக்கோ நிகழ்ந்த தவறுகள் அல்லவே. இருந்தாலும், அந்திகளில் கள்ளச் சாராயத்துக்குத் தொட்டுக் கொள்ள கருவாடு பொரிக்கும்போதோ, மரவள்ளி அவிக்கும்போதோ அம்மா என்னையும் அந்த வேலைகளில் கூட்டு சேர்த்துக் கொண்டாள். பலகை ஆலையில் வேலை பார்க்கும் பையன்கள் குடிக்க வரும்போது சமையலறை ஜன்னலால் என்னை எட்டிப் பார்ப்பதைக் காணும்போதெல்லாம் அம்மா என்னைத்தான் முறைத்துப் பார்ப்பாள்.
‘யாராவது பசங்களோட நீ ஏதாவது கதைக்கிறதைக் கண்டால் உன்னோட தோலை உரிப்பேன்’ என்று எனது அண்ணா என்னை மிரட்டி எச்சரித்திருந்தான். ஆனால் அவனோ எனது வகுப்பிலிருந்த விமலாவோடு அனுராதபுரத்துக்குத் திரைப்படம் பார்க்கப் போனான். அந்தி நேரங்களில் விமலாவை சைக்கிளில் அமர்த்திக் கொண்டு அங்குமிங்கும் திரிந்தான். அண்ணன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த கைக்குட்டைகள், வூல் வளையங்கள், செருப்புகள் எல்லாவற்றையும் விமலா எனக்குக் காண்பித்திருக்கிறாள். ஒரு நாள் விமலா பாடசாலைக்குப் போட்டுக் கொண்டு வந்த கறுப்புச் செருப்பைக் கண்ட நான் பொறுமையிழந்தேன். அது ஒரு விலைமதிப்பு மிக்க, நல்ல தோல் செருப்பு. அதையும் எனது அண்ணன்தான் அவளுக்கு வாங்கிக் கொடுத்திருந்தான். நான் அதை அம்மாவிடம் சொன்ன போதிலும், அதைக் குறித்து அண்ணனிடம் விசாரிக்க அவளுடைய நாவில் தெம்பிருக்கவில்லை.
“அவன் வேண்டியதைச் செய்யட்டும். அவங்க ஆம்பளைங்க. நாங்க பொம்பளைங்க” என்றாள் அம்மா.
அண்ணனுடன் திரைப்படம் பார்க்கச் சென்று விட்டு, அதன் டிக்கட் துண்டுகளைப் புத்தகங்களிடையே வைத்து எடுத்துக் கொண்டு வந்து விமலா எம்மிடம் காண்பிக்கும்போது ஏனைய மாணவிகள் சத்தமாகச் சிரிப்பதைப் போல என்னால் சிரிக்க இயலாமலிருந்தது.
அந்தக் காலகட்டத்தில்தான் திலகா எனக்குத் தென்படத் தொடங்கினாள். உண்மையில் தென்படுவதை விடவும் அடிக்கடி காதில் விழத் தொடங்கினாள். ஒரு நாள் அவள் மாணவர் சங்கத்தில் ஒரு பாடலைப் பாடினாள். பாடக் கஷ்டமான ஒரு சிங்களப் பாடல் அது. அவளுக்கு மிக அருமையான குரல்வளம். கறுத்து, ஒல்லியாகவிருந்த அவள் ஒரு கையால் தாளம் தட்டியவாறு, நெஞ்சுக் கூட்டை விரித்தும் சுருக்கியும் எம்மைப் பார்க்காமல், எம்மையும் தாண்டி தொலைவில் எங்கோ பார்த்தவாறு அருமையாகப் பாடிக் கொண்டிருந்தாள். பாடசாலை மாணவர்கள் அனைவருமே இடையூறு எதுவும் செய்யாமல் மிக அமைதியாக அவள் பாடுவதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவளது குரல் நெஞ்சைத் துளைத்துச் செல்லும் துயர் மிகுந்த ஒரு குரல். அது வெறுமனே ஒரு பாடல் மாத்திரம் அல்ல. இனம்புரியாத ஏதோவொரு வேகம் அதில் இருந்தது. அன்றைக்குப் பிறகு தொடர்ச்சியாக அவள் மாணவர் சங்கக் கூட்டத்தில் பாடல்களைப் பாடினாள்.
நம் அனைவருக்குமே திலகா நன்றாகத் தென்படத் தொடங்கினாள். ஆனால் அவள் வேறெங்கோ ஓரிடத்தில்தான் இருந்தாள். அவள் கண்ணுக்குத் தென்படும் ஒருத்தியல்ல, காதில் விழும் ஒருத்தி. பத்மினியுடன் வேடிக்கைக் கதைகள் கதைத்துச் சிரிப்பது போல அவளுடன் சிரிக்க முடியாத ஓர் உணர்வு எனக்குள் இருந்தது. அவளுடையதோ அசிங்கமான, துயர் மிகுந்த ஒரு முகம்.
“உங்க முகத்துல இருக்குற அழுக்குகளைப் பாருங்க மேடம்… இதெல்லாம் தோல்ல இருக்குற சின்னச் சின்னத் துவாரங்களை அடைச்சிட்டிருந்த அழுக்குத் தூசுகள். அதனாலதான் உங்க முகம் பொலிவில்லாம இருந்திருக்கு…”
இந்தத் திலகா தனக்கு அருகிலிருந்த தண்ணீர்ப் பாத்திரத்தை எட்டிப் பார்த்து விட்டு எனது முகத்தை ஏறிட்டுப் பார்த்து புன்னகைத்தாள். அந்த முகத்தில் முன்பிருந்த பயந்த சுபாவம் நீங்கி அதற்குப் பதிலாக வேறேதோ பொலிவு வந்திருந்தது. உண்மையில் அழுக்கு, தூசுகளால் மாத்திரம்தான் கறுப்பாகுவார்களா? அந்த நாட்களில் நானும், திலகாவும்தான் எவ்வளவு வேறுபட்டவர்களாக இருந்தோம்?!
“லேசா முகத்தைக் கீறுவது போல இருக்கும். கண்ணைத் திறக்காதீங்க. எரியுற மாதிரி இருந்தா சொல்லுங்க” என்ற நான் ஸ்கிரப்பை எனது விரல்களில் தடவி இந்தத் திலகாவின் முகத்தில் அவளுக்கு வலிக்காமல் தேய்த்தேன். அவளது ஒரு கண்ணில் பீழை கசிந்தது.
இப்போது இவள் கண்களை மூடிக் கொண்டு என்னதான் யோசித்துக் கொண்டிருப்பாள்? சிலர் இங்கு வருவது அழகாகுவதற்காக மாத்திரமல்ல. அவர்களுக்கு எதையாவது பேச வேண்டும். இல்லாவிட்டால் கண்களை மூடிக் கொண்டு மனதை எங்கேயாவது தொலைவில் சஞ்சரிக்க விட வேண்டும். அப்படி வருபவர்களை கூடியளவு நெற்றியின் இருபுறமும் மஸாஜ் செய்து விட வேண்டும் என்றுதான் மேனு அக்கா சொல்லித் தந்திருக்கிறாள். இந்தத் திலகாவின் மனது எந்தெந்த இடங்களுக்கு மிதந்து சென்று சஞ்சரித்துக் கொண்டிருக்கிறதோ?
ஒரு நாள் தண்ணீர் அருந்தப் போன வேளையில் நான் பாடல்களைப் பாடும் திலகாவுடன் புன்னகைத்தேன். விமலா, மல்லிகாக்களைப் போல அல்ல. சாப்பிட எதையாவது கொடுத்தால் வாலையாட்டிக் கொண்டு வரும் நாய்க்குட்டி போல திலகா என்னுடன் விரைவில் நட்பானாள். அவளுக்கு வேறு தோழிகள் யாரும் இருக்கவில்லை. காலையிலேயே எனது வீட்டுக்கு வந்து என்னுடைய கூந்தலைப் பின்னி விடுவாள். நாங்கள் ஒன்றாகப் பாடசாலைக்குப் போய் வந்தோம். மாலையில் எங்களுடனே அவளும் குளிக்க வந்தாள். என்னுடைய ஏனைய தோழிகளுக்கு திலகாவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவள் அசிங்கமானவள். இன்னும் வேறு வார்த்தைகளில் விபரிக்கத் தேவையில்லைதானே. அவள் அசிங்கமானவள். அவ்வளவுதான்.
திலகாவிடம் நான் விமலாவின் குறைகளைக் கூறி புறம்பேசினேன். திலகா என்னிடம் அவள் எழுதிய கவிதைகளைக் காண்பித்தாள். அவளது கவிதைகள் சிலுமின என்ற பிரபல சிங்களப் பத்திரிகையில் கூட பிரசுரமாகியிருந்தன. ஹூரிகஸ்வெவ திலகா சந்திரகாந்தி. அதுவரையில் அவளைத் தவிர நான் அறிந்திருந்த எவருடைய பெயரும் அப்படிப் பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமாகியிருக்கவில்லை. அவள் கலா ஓயா ஆற்றைப் பற்றி, விடிகாலையைப் பற்றி, காதலைப் பற்றியெல்லாம் கவிதைகளை எழுதியிருந்தாள். அந்தக் கவிதைகள் எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. காதலைக் குறித்து அவள் கவிதைகளை எழுதியிருந்தாலும் கூட, எவரும் அவளிடம் காதலைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றும், குறைந்தபட்சம் எவரும் அவளது கையைக் கூடத் தொட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றும்தான் எனக்குத் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் என்னுடைய கையை மாத்திரமல்ல, மஹதுங் அண்ணா ஏழெட்டுத் தடவைகள் எனது பின்புறத்தைக் கூட பிடித்துக் கசக்கியிருந்தார். மல்லிகாவோ செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்திருந்தாள். எங்களுக்கு திலகாவைப் போல கவிதைகளை எழுதிக் கொண்டிருக்க நேரமே இருக்கவில்லை. எமக்கு நினைத்து ரசிக்க வேறு நிறைய விடயங்கள் இருந்தன. செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன.
ஸ்க்ரப்பை அகற்றி விட்டு, நான் ஸ்டீமரைப் பொருத்த முயற்சிக்கும்போது இந்தத் திலகா கண்ணாடி வழியே எனது கண்களைப் பற்றிப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கண்களின் மீது ஈரப் பஞ்சுத் துண்டுகளை வைத்து நான் மூடி விட்டேன்.
“நீராவியோட சூடு அதிகம்னா சொல்லுங்க..” என்றேன்.
திலகா மிக ஆழமாக எனது ஞாபகத்தில் பதிந்து போன நாளொன்று உள்ளது. அந்த நாளை ஒருபோதும் என்னால் மறக்கவே முடியாது. அந்தப் பருவ காலத்தில் சிறிசேன மாமா வயலில் நெல் விதைக்கவில்லை. அதற்குப் பதிலாக பெரிய வெங்காயத்தை நட்டிருந்தார். வெங்காய அறுவடைக் காலங்களில் நாங்களும் வெங்காயம் வெட்டப் போய்க் கொண்டிருந்தோம். வெங்காயத்தின் சேறை அகற்றி, மேலேயிருக்கும் இலைகளையும், வேர்களையும் வெட்டியகற்றுவதையே நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. ஒரு கிலோவுக்கு இவ்வளவு என்றுதான் ஊதியம் வழங்கப்பட்டது. என்னுடன் வெங்காயம் வெட்ட திலகாவும் வந்து போய்க் கொண்டிருந்தாள்.
ஒரு நாள், அந்தி நேரம், ஆர்மியிலிருக்கும் நிஸ்ஸங்க அண்ணன் ஒரு ட்ரேல் பைக்கில் நாங்கள் வெங்காயம் வெட்டிக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்தான். ஆர்மி நிஸ்ஸங்க அண்ணன் அழகன். கைகளில் சதைகள் பொங்கி, திடகாத்திரமானவனாக, கட்டுமஸ்தாக இருப்பான். அவனது விழிகளிலும் கூட பெண்களின் மனதை அசைத்து விடும் ஏதோவொரு பார்வையிருந்தது. விடுமுறைக்கு அவன் ஊருக்கு வரும் சமயங்களில் கையில் காசு நன்றாகப் புழங்குவதைக் காணலாம். அந்தக் காலத்தில் ஊரிலிருந்த இளைஞர்களில் எத்தனை பேரிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது?! நான் நிஸ்ஸங்க அண்ணனின் விழிகளை தற்செயலாகப் பார்த்தேன். எனது கவுண் சுருண்டு, நெகிழ்ந்து ஆங்காங்கு தேகம் தெரிந்த இடங்களில் அவனது கண்கள் நிலைத்திருந்தன. நான் கவுணை சரி செய்யவில்லை. பதிலாக அவனுடன் புன்னகைத்தேன். அருகில் திலகா மாத்திரம் இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தோன்றியது. அவள் பலகைக் கட்டையொன்றின் மீது வெங்காயப் பற்றைகளை வைத்து மிக வேகமாக கீரையை வெட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு அவளது கால்கள் தென்பட்டன. அவை வரண்டு வெடித்த, மெலிந்த கால்கள்.
நிஸ்ஸங்க அண்ணனின் பார்வையை ஒரு பெண்ணால் தாங்கிக் கொள்வது சிரமமானது. அவன் எமக்கு முன்னால் குந்தியிருந்து துத்திரிப் புல்லால் பற்களைக் குடையத் தொடங்கினான். அவனது விழிகளோ ஆடை நெகிழ்ந்து தெரிந்த எனது கால்களில் நிலைத்திருந்தது. என்ன சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. அங்கிருந்து திலகாவைத் துரத்தி விட வேண்டும் என்பதுதான் அப்போது எனக்குத் தேவையாக இருந்தது.
சடுதியாக திலகா தனது கவுணைச் சரி செய்தாள். நிஸ்ஸங்க அண்ணன் பயந்தது போல எழுந்து நின்றான். என்ன நடக்கிறது என்று எனக்குப் புரிவதற்கு முன்பே திலகா அரிவாளை ஓங்கியவாறு சுடுகாட்டுக் காளி போல திடீரென்று எழுந்து நின்றாள்.
“கேடு கெட்ட கழிசறைப் பொறுக்கி நாயே..” என்று அவள் கத்திய கத்தலுக்கு நிஸ்ஸங்க அண்ணன் தானாகவே பின்னால் தள்ளப்பட்டு பின்வாங்கினான். தொலைவில் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த காந்தி அக்காவும், ஏனைய பெண்களும் கூட திடுக்கிட்டுப் போய் எம்மைப் பார்ப்பது தெரிந்தது. நிஸ்ஸங்க அண்ணன் தனது மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்த போதிலும், அது உடனடியாக இயங்கவில்லை.
“ராத்திரிகள்ல வேலியோரங்கள்ல பிசாசா அலையுற பொட்டை நாயே, உனக்கிருக்குடி ஒரு நாள்…” என்று கத்தியவாறே புழுதியைக் கிளப்பிக்கொண்டு நிஸ்ஸங்க அண்ணன் போனான். திலகாவோ அரிவாளை வீசி விட்டு வரம்பு வழியே அசைந்தசைந்து தொலைவுக்கு நடந்து போனாள். என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் காந்தி அக்காவுக்கு என்ன பதில் சொல்வது என்றுதான் அப்போது நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
மறுநாள் எனது கூந்தலின் சிக்கு அகற்ற திலகா வீட்டுக்கு வரவில்லை. பாடசாலை இடைவேளை நேரத்தில் கிணற்றடியில் அவளைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. “வேசி” என்று மாத்திரம் என்னைப் பார்த்துச் சொன்னாள். பிறகு ஒருபோதும் அவள் என்னுடன் கதைக்கவோ, எனக்கு முகம் கொடுக்கவோ இல்லை. மீண்டும் அவள் மாணவர் சங்கத்தில் பாடல் பாடியதாகவும் எனக்கு ஞாபகம் இல்லை. சிலுமின பத்திரிகைக்கு கவிதைகள் எழுதினாளோ தெரியாது.
இந்தத் திலகாவின் முகத்தில் விந்தையான விதத்தில் ப்ளக் ஹெட்ஸ் நிறைந்திருந்தன. நான் லூப் ஒன்றினால் அழுத்தி அழுத்தி அவற்றை பஞ்சுத் துண்டொன்றுக்கு எடுத்த வேளையில் அந்த விழிகளில் வியப்பு மேலிட்டிருப்பதைக் கண்டேன்.
“கொஞ்சம் வலிக்குதுதானே? கண்டுக்காதீங்க.. லேசா அழகாகிட முடியாதுதானே” என்றதும் இவள் மெலிதாகப் புன்னகைத்தாள்.
என்னுடைய வாழ்வில் எல்லாமுமே அவசரமாக நடந்தேறின. அறுவடைக் காலத்தில் அடைமழை பொழிவது போன்றது அது. தொடர்ச்சியாக, ஒன்றன் பின் ஒன்றாக, ஒவ்வொன்றும் நடைபெறத் தொடங்கின. ஹூரிகஸ்வெவ கிராமத்தின் சித்திரைப் புத்தாண்டு விழாவில் அழகுராணிப் போட்டியில் பத்மினியும் கலந்து கொண்டதால்தான் நானும் மேடையேறினேன். எனது அண்ணன் அது வேண்டாமென்று உறுதியாகவும், கண்டிப்பாகவும் எனக்குத் தடை போட்டுக் கொண்டிருந்தான். பத்மினி, விமலாவைத் தூதனுப்பி அண்ணனுக்கு எடுத்துச் சொல்ல வைத்து எப்படியோ அவனைச் சம்மதிக்க வைத்திருந்தாள். சுற்றி வர இருக்கும் ஏழேழு கிராமங்களிலும் என்னைப் போல ஓர் அழகி இல்லை என்று எனது அப்பா, சாராயம் குடிக்க வரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் கூட மேடையேற மிகுந்த ஆசையிருந்தது. அது தெருவில் நடந்து போகும்போது பையன்கள் விசிலடித்தால் தோன்றும் பெருமிதத்தை இன்னும் பெரிதாக அனுபவிக்கும் ஓர் ஆசை. பாடசாலை ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு அந்தளவு விருப்பமிருக்கவில்லை. ‘பெயரைக் கெடுத்துக் கொண்டு, அவதூறுகளுக்கு ஆளாகாதே பிள்ளையே’ என்றுதான் குணவதி டீச்சர் எனக்கு அறிவுறுத்தினார். இருந்தாலும் எனக்குள் அந்த ஆசை இருந்தது. அது யாராலும் தடுத்து நிறுத்தக் கூடிய ஒன்றல்ல.
நான் இளஞ்சிவப்பு நிற ரவிக்கையை அணிந்து, இளஞ்சிவப்பு நிறத்திலும், பச்சை நிறத்திலும் பூக்கள் அலங்காரங்களைக் கொண்ட கருப்பு நிற சீத்தைத் துணியை இடுப்பில் கட்டியிருந்தேன். அவிழ்த்து விட்ட நீண்ட கூந்தலில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் ரோஜாப் பூவையும் சூடியிருந்தேன். நான் மேடையில் ஏறியதுமே கள்ளச் சாராயம் குடிக்க வரும் பையன்கள் அனைவருமே எனக்குத்தான் அதிகமாக விசிலடித்தார்கள். நான் அந்த வருடத்தின் கிராமத்து அழகுராணியானேன். ஒரு வெந்நீர்க் குடுவையொன்றும், அழகான இரண்டு சேலைகளும் எனக்குப் பரிசாகக் கிடைத்தன. அப்போது எனக்கு பதினாறு வயது.
மீண்டும் நான் பாடசாலைக்குப் போகவேயில்லை. அழகுராணியொருத்தி பாடசாலைக்குப் போக முடியாதென்றே எனக்குத் தோன்றியது. யாரும் என்னைப் போகச் சொல்லி வற்புறுத்தவுமில்லை. அழகுராணியொருத்தி பாடசாலைக்குப் போக முடியாதென்பதை அனைவருமே அறிந்திருக்கக் கூடும். அதன் பிறகு நான் முன்பிருந்த பெண்ணாக இருக்கவுமில்லை. மல்லிகா, சுரங்கி போன்ற எனது தோழிகளும் கூட என்னை விட்டுச் சற்றுத் தள்ளியே இருந்தார்கள்.
ஆகவே அதன் பிறகான பயணத்தை நான் தனியேதான் போக வேண்டியிருந்தது. அடுத்த வருடத்தில் நான் தம்புத்தேகம நகரத்தின் சித்திரைப் புத்தாண்டு வைபவத்தின் போது மீண்டும் மேடையேறினேன். அது ஹூரிகஸ்வெவ கிராமத்தின் சித்திரைப் புத்தாண்டு வைபவத்தைப் போல பத்து மடங்கு இருக்கும். அதிலும் நான்தான் அழகுராணியாக முடிசூடினேன். அந்தப் போட்டியில் வென்ற எனக்கு சிங்கர் தையல் இயந்திரமொன்றும், இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் பரிசாகக் கிடைத்தன. பணத்தை அப்பா வாங்கிக் கொண்டார். நான் பேரழகி. அதை நான் அன்றுதான் உணர்ந்தேன்.
நான் ஃபேஸ்பேக்கைத் தடவும்போது சிரமப்பட்டு கண்களைத் திறந்து கண்ணாடியில் முகத்தைப் பார்க்க முயற்சித்தாள்.
“அசையாதீங்கம்மா.. இது முடிஞ்சதுக்கப்புறம் நீங்க வேண்டிய மட்டும் அழகு பார்க்கலாமே. இது கண்கள்ல பட்டுச்சுன்னா எரிச்சலெடுக்கும். ஒரு நாள்ல யாராலும் அழகாகிட முடியாதுன்னாலும் இது முடிஞ்சதுமே பாருங்களேன்… ஒரு நாள்ல எப்படியான மாற்றம் தெரியுதுன்னு” என்றதும் இந்தத் திலகாவுக்கு சிரிப்பு வந்தது. இவள் அந்தத் திலகா அளவுக்கு மனம் நொந்து காயப்பட்டிருக்க மாட்டாள் என்று எனக்குத் தோன்றியது. இருந்தாலும் இவளும் திலகாவொருத்தி. நானும் திலகாவொருத்தி. எங்கும் திலகாக்கள். திலகாக்கள். திலகாக்கள்.
மேடையிலிருந்து இறங்கியதன் பிறகு தம்புத்தேகம நகரத்தின் பெரிய வர்த்தகருடைய மகனின் கட்டிலுக்குத்தான் நான் அடுத்ததாக ஏற வேண்டியிருந்தது. அந்த சாலிய ஐயா என்னைப் பலவந்தமாகக் கட்டிலில் ஏற்றவில்லையென்றாலும், நான் செல்ல வேண்டிய பயணத்தைக் குறித்து நன்றாகவே அறிந்திருந்தேன். நாங்கள் ஒன்றாக அனுராதபுர நகரத்துக்குப் போய் விஜேந்திரா சினிமா தியேட்டரில் படங்கள் பார்த்தோம். ஆலங்குளத்தில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டோம். அப்போதெல்லாம் எனக்குள் பயமே இருக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எனது நெஞ்சு முழுக்க கனவுகள் நிரம்பியிருந்தன. ஸாலிய ஐயாவுடன் நுவரெலியவுக்குப் போய்விட்டு வீடு திரும்பியதும்தான் உயிரச்சமென்றால் என்னவென்று தெரிந்தது.
எனது அண்ணன் வாளை ஓங்கிக் கொண்டு என்னை வெட்டிக் கொல்லத் துரத்தினான். குளத்து மீன்களை வெட்டும் அவனது வாளால் என்னையும் வெட்டிக் கொல்லலாம் என்று அன்று வரைக்கும் எனக்குத் தோன்றவேயில்லை. “நீ இங்க இருந்து இப்படிச் செத்துப் போகாம எங்கேயாவது போய் பொழச்சுக்கோ மகளே” என்று கூறிய அம்மா அந்த இரவில் சோற்றை விழுங்க முடியாமல் விக்கி விக்கி அழுதாள். சாலிய ஐயாவிடம் கூறியதும் ஆயிரம் ரூபாய்த் தாளில் ஐந்தை என்னிடம் நீட்டினார். வேறு எதுவும் கூறவில்லை. நான் எனது சில துணிமணிகளையும், வெந்நீர்க் குடுவையையும் ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வந்தேன். சிங்கர் தையல் இயந்திரத்தைக் கொண்டு வரவில்லை.
அதன் பிறகு எத்தனை எத்தனை கட்டில்களை, பாய்களைக் கடந்து வந்திருப்பேன்? இரண்டு தடவைகள் வயிற்றைக் கழுவிக் கொண்ட பிறகுதான் கரு தரிக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படியென்று கற்றுக் கொண்டேன்.
மேனு அக்காவிடம் வந்து சேரும்போது மகள் பிறந்திருந்தாள். மொஹமட் வைத்திருந்த போதை மருந்து சிக்கி அவன் சிறைக்குச் சென்றிருந்தான். ஆனால் அவன் மூலமாக மகளுக்கு பிறப்புச் சான்றிதழும், எனக்கு ஒரு திருமணச் சான்றிதழும் கிடைத்திருந்தது. இங்கு நான் அனைத்தையும் வேகமாகக் கற்றுக் கொண்டேன். இங்கு வந்த பிறகுதான் எனது புருவங்களின் அடர்த்தி அதிகம் என்பதையும், எனது கைகளிலும், கால்களிலும் அளவுக்கதிகமான மயிர்கள் அடர்ந்திருப்பதையும், எனது தலையில் பொடுகு இருப்பதையும், நான் பருமனானவள் என்பதையும், கொழும்பின் அழகும், ஹூரிகஸ்வெவ அழகும் வெவ்வேறானவை என்பதையும், சுருக்கமாகச் சொல்வதானால், வெள்ளவத்தையின் அழகும், பம்பலப்பிட்டியவின் அழகும் வெவ்வேறானவை என்பதையும் நான் கண்டேன். அழகு என்பது, அழகு மாத்திரமேயல்ல என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் ப்யூட்டி சலூனைக் கூட்டிப் பெருக்கும் வேலையைத்தான் மேனு அக்கா எனக்குத் தந்தாள். மேனு அக்கா நாடியை உயர்த்திப் பிடித்து கொஞ்சம் கூட கைகள் நடுங்காமல் ஒரே தடவையில் புருவத்தை பென்சிலால் வரையும் விதத்தை, மஸ்காரா பூசும் விதத்தை, லிப் லைனை வரைந்து சற்றும் வெளியே வராமல் அதனுள்ளே லிப்ஸ்டிக்கைப் பூசும் விதத்தை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். போகப் போக அவளுக்காக நான் அழகுசாதன உபகரணங்களைக் கைகளில் ஏந்தியிருக்கத் தொடங்கினேன். அதற்கும் பிறகுதான் மேனு அக்கா எனக்கு இந்த சாஸ்திரத்தைக் கற்றுக் கொடுத்தாள். முதன்முதலாக கைகள் நடுங்காமல் புருவங்களை வரைந்து, லிப்ஸ்டிக் பூசி, சற்று நாடியை உயர்த்தி கண்ணாடியில் என்னைப் பார்த்த நாளில் செல்லம் கொஞ்சும் தொனியில் என்னை நானே ‘வேசி’ என்று கூறிக் கொண்டேன். அது திலகாவின் வார்த்தை.
ஃபேஸ்பேக்கை, தண்ணீரில் நனைத்த ஸ்பாஞ்சால் அகற்றும்போது இந்தத் திலகாவின் முகம் வெளிறிப் போயிருந்தது. இந்த முகம் நான் நினைத்திருந்த அளவுக்குக் கூட பொலிவாக மாறியிருக்கவில்லை. முகத்தில் டோனர் தடவி விட்டு, லோஷனைப் பூசி விடும் போது எனது விரல்கள் வலிப்பதை நான் மீண்டும் உணர்ந்தேன்.
நான் எதுவும் பேசாமல் அவளது புருவங்களை த்ரெடிங் செய்யத் தொடங்கினேன். மேனு அக்கா என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நான் காணாமலில்லை. இந்தத் திலகா கண்களைச் சிறிதாக்கினாள். வலிக்கிறது போலும். அவளது இமைகளுக்கு மஸ்காரா தடவி, உதடுகளில் கடும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கைத் தடவினேன். அப்போதுதான் ஃபேஷியல் செய்திருந்ததால் ஃபவுண்டேஷன் க்றீமை அவளுக்குப் பூசவில்லை. கூந்தலைப் பின்புறமாக வாரி விட்டேன். இப்போது இந்தத் திலகாவுக்கு சற்று வித்தியாமான தோற்றம் வந்திருந்தது.
“மேடம் நீங்க திரும்பவும் வரணும், இப்படியே ரெண்டு, மூணு மாசம் தொடர்ந்து செய்றப்ப பெரிய மாற்றமொண்ணு வரும். இன்னுமொண்ணு சொல்லணும். இந்தளவு தளர்வான உடுப்புகள் உங்களுக்குப் பொருத்தமாயில்ல” என்றதும் திலகா சிரித்தாள். அந்தச் சிரிப்பில் இன்னுமோர் அழகு இருந்தது.
“ஃபேஷியலுக்கு ஆயிரம் ரூபாய். மேக்கப் என்னோட செலவுல” என்றேன்.
திலகா எதுவும் பேசவில்லை. அவளது விழிகள், கண்ணாடி வழியே எனது விழிகளுடன் புன்னகைத்தன.
“திரும்ப வருவீங்களா?” என்று கேட்டேன்.
“ஆமா… அடுத்த மாசம்…”
அவள் போய் விட்டாள். இருந்தாலும், அவள் மீண்டும் வருவாள்.
“மேக்கப்போட செலவை என்னோட சம்பளத்துல பிடிச்சுக்குங்க” என்று மேனு அக்காவிடம் கூறினேன்.
நான் அதைக் கூறாவிட்டாலும் அவள் அதைத் தவறாமல் செய்வாள்.
000

இஸுரு சாமர சோமவீர
சிங்கள இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர். 2 சிறுகதைத் தொகுதிகளும், 3 கவிதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன. சுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார். இவருடைய பத்துச் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘திருமதி பெரேரா’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















