I think politics is like salt: Shyam Selvadurai

நேர்கண்டவர்: Jeff Colvin – தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா

சர்வதேச ரீதியில் அதிகம் கவனிப்பு பெற்ற எழுத்தாளர் சியாம் செல்வத்துரை, டொரன்டோவில் மிகவும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். கற்பித்தலுக்கு மேலதிகமாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல், சொந்த படைப்பாக்கங்களை மேற்கொள்ளல், ‘பான்வ் கலை மற்றும் படைப்பாக்க மையத்தில்’ (Banff Centre for Arts and Creativity) துணை இயக்குனராக சேவையாற்றுதல், நெறியாள்கை செய்தல் போன்ற பணிகளில் இருக்கும் அவரை அவ்வாறு தான் முதலில் நான் சந்தித்தேன்.

சியாம் கொழும்பில் பிறந்தவர். சிங்களரான தாய்க்கும், தமிழரான தந்தைக்கும் பிறந்த அவர்,  தனது 19வது வயதில் 1983ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். அங்கு அரங்கக்கலை இயக்கம் மற்றும் திரையாக்கத்தை  யோர்க் பல்கலைக்கழகத்தில் கற்றார்.  பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படைப்பாக்க எழுத்துத்துறையில் MFA தகுதியை பெற்றார். அவரது முதலாவது நாவலான, Funny Boy(1994) கனடாவில் தேசிய அளவில் அதிக விற்பனையானதுடன் ‘கனடாவின் முதலாவது நாவலுக்கான விருதினையும்’ (Canada First Novel Award) பெற்றது.  கில்லர் பரிசின் குறும்பட்டியலிலும் இடம்பிடித்தது. அமெரிக்காவில், இந்நூல் ‘லம்ப்டா’ இலக்கிய விருதினைப் பெற்றது; அத்துடன் அமெரிக்க நூலக சங்கத்தினால் விசேட கவனத்திற்குரிய  நூலாக பெயரிடப்பட்டது.

அவர் ‘தீப்பா மேத்தாவுடன்’ இணைந்து தன்னுடைய Funny Boy நாவலின் கதையை திரைக்கதையாக எழுதியுள்ளார். அவரின் இதர நாவல்கள்  Cinnamon Gardens (1998)  Trillium Award விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. Swimming in the Monsoon Sea (2006) ,The Hungry Ghosts (2013)  என்பன இதர நூல்களாகும். இவர் தெற்காசிய மற்றும் இலங்கை இலக்கியம் சார்ந்த Story-Wallah!: A Celebration of South Asian Fiction (2004) மற்றும் Many Roads Through Paradise (2014) ஆகிய தொகுப்பு நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவரின் நூல்கள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பிரசுரமாகியுள்ளன. மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சுவீடன், டென்மார்க் துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில்  மொழிப்பெயர்ப்புகள் பிரசுரமாகியுள்ளன. 

உங்களது மிக அண்மைக்கால நாவலான The Hungry Ghosts-ல் இருந்து ஆரம்பிப்போம். தலைப்பானது ஆன்மீக இருப்பு பற்றிய கருத்துகளை முன்வைக்கின்றது. டோனி மொறிசனின் Beloved அல்லது மைக்கேல் ஒந்தாச்சியின் Anhil’s Ghost அல்லது ஷேக்ஸ்பியரின் Hamlet,  ஆகிய புனைவுகளை எடுத்துக்கொள்கிறேன்; அதில் கதை சொல்லிகள் எவ்வாறு ஆவிகளையும் பேய்களையும் முன்னிலைப்படுத்தினர் என்பதனை சிந்தித்துப் பார்க்கின்றேன்.  அவர்கள் சிக்கல்படுத்தி, விரிவுப்படுத்தி தமது கதைகளை இலக்கியத்திற்கு அப்பால் – குறிப்பாக கடந்த கால நிகழ்கால, யதார்த்த மற்றும் கற்பனா சிந்தனையுடன் முன்வைத்தனர். நீங்கள் எவ்வாறு Hungry Ghosts என்று நாவலுக்கான  தலைப்பினை எடுத்துக்கொண்டீர்கள்? பிற தலைப்புகள் தொடர்பில் தீவிரமாக கவனம் செலுத்தவில்லையா?  இந்த தீர்மானத்தில் வரலாறும், கடந்தகால அதிர்ச்சிகளும் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தின?

இந்த இரண்டு நாவல்களைப் பற்றி நீங்கள்  குறிப்பிட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. நான் எனது நாவலை எழுதும் போது அவற்றைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் இதன் ஒற்றுமைகளை எனது படைப்புடன் ஒப்பிடும் போது நீங்கள் எதைக் கூற வருகின்றீர்கள் என்று எனக்கு புரிகிறது. என்னைப் பொறுத்தவரை, எவ்வாறு பௌத்த தத்துவத்தை கதைகளினூடாகவும் hungry ghosts போன்ற மாயக்கதைகளின் அடிப்படையிலும், நவீனகால உள்ளடக்கத்திற்கு  பொருத்திப் போகிறது என பார்க்க முயன்றிருக்கிறேன். பௌத்த தத்துவம் மேற்கில்; கிழக்கு சார்ந்த மாய தத்துவம் என்று கருதப்பட்டாலும் உண்மையில் அது நடைமுறைச்சாத்திய தன்மை வாய்ந்த மனித வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளது.

அத்துடன் பௌத்தம் நகர்மயம் சார்ந்து உருவான மதமாக இருந்தே ஒழிய காட்டின் மதமாக இருக்கவில்லை. நகர்மயத்தின் பிரச்சினைகளை ஒட்டியே குறிப்பாக பொருள் முதல்வாதம் சார்ந்தே பௌத்தம் எழுந்தது. புத்தர் தன்னுடைய தத்துவங்கள் வழியே இந்த பிரச்சினைகளையே அடையாளப்படுத்தினார்.

அவரின் மடாலயங்கள் ஒன்று நகரிலோ அல்லது நகரங்களுக்கு அருகிலோ இருந்தன. ஞானம் பெற்ற பிறகு அவரிடம் முதன்முதல் உபதேசம் பெறச் சென்றவர் ‘பேரரசர் பிம்பிசார’ ஆவார். அவர் அந்த காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதிக்கு இணையான அதிகாரங்களையும் செல்வாக்கினையும் இந்தியாவின் பல பாகங்களில் கொண்டிருந்தவர்.

Hungry ghosts இல் எனக்கு பிடித்தது அதன் வரையறுக்கப்பட்ட தன்மையாகும். இரு உலகங்களுக்கு இடையிலான விளிம்பில் அவர்கள் சஞ்சரிக்கிறார்களே தவிர  இரண்டுக்கும் சொந்தமானவர்கள் அல்ல. இது புலம்பெயர்ந்த அனுபவத்தினை அதிகளவில் ஒத்ததாக உள்ளது. ஆனாலும் நிறம், பால் அடையாளம், பாலியல் நாட்டம் காரணமாக சமத்துவம் பெறாத மனிதர்களின் அனுபவங்களையும் கொண்டுள்ளது. ஒருவரின் ஆசைகளை எப்பொழுதும் திருப்திப்படுத்துவது சாத்தியமற்றது என்ற கருத்தை அவை உள்ளடக்கியதையும் நான் விரும்புகின்றேன். அவற்றின் வாய்ப்பகுதி ஊசியின் கண்ணின் அளவே இருப்பதால் அவற்றின் விசாலமான வயிற்றுக்கு உணவளிக்க முடியாது. அதிர்ச்சிகள் அல்லது மனக்காயங்கள் சந்ததியிலிருந்து சந்ததிக்கு, நாட்டிலிருந்து நாட்டுக்கு கடத்தப்படுகின்றது. உண்மையில் பசியுள்ள பேய்களுடன் பிணைக்கப்படவில்லை. மாறாக,  நான் கர்மாவையும் மறுபிறவியையும் இதனை வெளிப்படுத்த பயன்படுத்தியிருக்கின்றேன். ஒருவரின் கர்மா ஒரு பிறவியிலிருந்து மற்ற பிறவிக்கு கடத்தப்படுவது போன்று புலம்பெயரும் ஒருவர் கடந்த கால மனக்காயங்களை புதிய வாழ்விற்கும் சேர்த்தே காவிச்செல்கின்றார்.

உங்களின் பிரசுரிக்கப்பட்ட முதல் நாவல் இதுவல்ல, எவ்வாறாயினும், அது உங்களின் கடந்தகால  படைப்புகளின் அழுத்தமான உள்ளீடுகளின் நீட்சியாகவே உள்ளது, குறிப்பாக உங்கள் முதலாவது நாவலான Funny Boy நாவலின் பாத்திரங்கள். அவை  பாரிய அரசியல் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு எதிராக அவரவர் வாழ்க்கைச் சூழலில் இருந்து வெளிவரும் கதாப்பாத்திரங்கள். The Hungry Ghosts ஆனது இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களப் பிரிவினருக்கு இடையே உச்சகட்ட மோதல்களின் பின்னணியினை வெளிப்படுத்துகின்றது. இந்த மோதல்களின் பங்களிப்பினை உங்கள் நாவலில் உள்ளடக்குவது தொடர்பான தீர்மானத்தினை எவ்வளவு விரைவாக எடுத்தீர்கள்? இந்த மோதலை முன்வைப்பதில் உங்களை குடும்ப வரலாறு எவ்வாறு உங்களை வடிவமைத்திருந்தது?

உள்நாட்டு போர் எனது சமகால படைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் நினைத்திராத ஒரு காலம் இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனது வரலாற்று நாவலான Cinnamon Gardens லும் கூட 1920களில் இந்த மோதலின் ஆரம்பத்தை காட்டியிருந்தேன். இதற்கான பிரதான காரணம் எனது சொந்தவாழ்வில் எனது குடும்பமும் நண்பர்களும் உள்நாட்டுப் போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இலங்கையை விட்டு வெளியேறி கனடாவுக்கு வரும் கட்டாயப்படுத்திற்குள்ளானதாகும். அந்த வகையில், அரசியலை தனிப்பட்ட வாழ்விலும் உணர்ந்திருக்கிறேன். எனினும் நான் அரசியலை உப்பாகவே கருதுகின்றேன். சரியான அளவான பாவனை சிறந்த சுவையை கதைக்கு தரும், ஆனால் அளவுக்கு அதிகமாகும் போது கதையை கெடுத்துவிடும்.

உள்நாட்டுப் போரின் வரலாற்றை விவரிப்பதற்காக ஒருவர் வாசகரைத் தூண்டவோ அல்லது சூழ்நிலையையோ பாத்திரங்களையோ வலிந்து உருவாக்கவோ கூடாது. உள்நாட்டுப்போர் பாத்திரத்தின் உணர்ச்சிகளின் மேம்பாட்டிற்கும் அவர்களின் தேடல்களுக்கும் உள்ளார்ந்ததாகவே இருக்க வேண்டும்.  

பிரதான கதாப்பத்திரமான, சிவனின் அதிகாரம் கொண்ட  சிக்கல்த் தன்மை மிக்க பாட்டி கதாப்பாத்திரமான ஆச்சோவுடன் நான் காவிச்செல்லப்பட்டேன். நிச்சயமாகவேஅவர் எப்படி ஆடைகளை அணிகின்றார், அவர் பரிமாறும் உணவு, அவர் எப்படி சமூகத்தினால் பார்க்கப்பட விரும்புகின்றார் என்பதுடன்  அவருடைய குடும்ப உறவுகள் சார்ந்த விடயங்களும் சித்திரிக்கப்படுகின்றன. ஆனாலும் அவர் எந்தளவுக்கு நம்பிக்கையுடன் தன் வர்த்தக விவகாரங்களைக் கையாளுகின்றார், வம்சாவளியைப் பாதுகாக்கின்றார் போன்ற விஷயங்களில் நான் பெரிதும் கவரப்பட்டேன். இலங்கையிலும் கனடாவிலும் செல்வாக்கு செலுத்தும் பல பெரிய கலாச்சார சக்திகளை பிரதிபலிக்கும் பலம் வாய்ந்ததொரு கதாப்பாத்திரமாக அப்பாத்திரம் அமைந்துள்ளது. இந்த கதாப்பாத்திரம் உங்களது சொந்த வாழ்வினை தழுவிய கதாப்பாத்திரங்களின் பிரதிபலிப்பா? அவருடைய ஆளுமையின் இனிமையில்லாத அம்சங்களை எழுதுவது கடினமாக இருந்ததா? 

அவர் அந்த தலைமுறையின் பல பெண்களை அடிப்படையாக் கொண்டவர். எனது பாட்டியும் அவ்வாறானவர்களில் ஒருவர். அவரது பாத்திரத்தின் எதிர்மறையான அம்சங்களை எழுதுவதில் நான் எந்தவிதமான கடினத்தன்மையையும் உணரவில்லை. ஏனெனில், ஆரம்பத்திலிருந்தே, அவர் கதைகளின் பக்கங்களில் அணி வகுத்து முழுமையாக பயணித்தார். அவருக்கு நகரவும் வளரவும் இடமளித்தது மட்டுமே நான் செய்ய வேண்டியிருந்தது. மாறாக அவருடைய குறைபாடுகள் இருந்தபோதிலும் அவரைப் பற்றி எழுதுவது மிகவும் திருப்தியாக இருந்தமையை உணர்ந்தேன்,  ஏனெனில் நான் அவரை மிகவும் நேசிக்கின்றேன். 

பல விமர்சகர்களும், மதிப்பாய்வாளர்களும் சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதுடன் பரந்த வாசகர்களைச் சென்றடைவதை முக்கிய தகுதியாப் போற்றுகின்றார்கள். நூலின் இந்த அம்சங்கள் உங்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?

நான் விமர்சகர்களுக்காகவும் மதிப்பாய்வாளர்களுக்காகவும்  எழுதவில்லை. பரந்தளவிலான வாசகர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் முயற்சிக்கவில்லை. (இங்கு இதன் மூலம் பொதுவாக வெள்ளைப் பார்வையாளர்கள் என்று பொருள்). எனது படைப்புகள் எப்பொழுதும் மிகவும் சிறியளவிலான வாசகர்களுக்கானது. இலங்கை வாசகர்கள் ஆங்கிலத்தில் வாசிக்கின்றார்கள். இன்னும் சில வினோதமான ரசவாதத்தினால் நீங்கள் எவ்வளவு தூரம் குறிப்பாக வாசிக்கிறீர்களோ  அந்தளவுக்கு நீங்கள் உலகலாவிய பார்வையை அடைவீர்கள் என்று நான் அறிவேன். எனது விருப்பத்திற்குரிய அனைத்து எழுத்தாளர்களும் குறிப்பாக டால்ஸ்தோய், டோனி மாரிசன் போன்றோரின் படைப்புகள் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் எப்பொழுதும் மிகவும் சிறிய வாசகர் வட்டத்துடனேயே ஊடாடினர். 

டொரான்டோ மற்றும் கொழும்பின் சில பகுதிகளை நீங்கள் மிகவும் தெளிவாக சித்திரித்திருப்பது என்னை பெரிதும் கவர்ந்ததுஇந்த இரண்டுபிரதேசங்களில் ஏதேனும் ஒன்றை சித்தரிப்பதில் கடினமாக உணர்ந்தீர்களா?

ஆம். டொரான்டோ மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் அது எழுதுவதற்கும் புதிய விடயமாக இருந்தது. சமகால இலங்கையைப் பற்றி Funny Boyஇல் எழுதிய அனுபவம் எனக்கு ஏற்கெனவே இருந்தது. அதனால் அந்த பகுதிகள் எனக்கு நன்றாகத் தெரியும். தற்போது புலம்பெயர்ந்தோர் சென்றடையும் உள்வளைய புறநகர்ப்பகுதிகளை பற்றி எவ்வாறு எழுதுவது என்பது தொடர்பாக எனக்குள் நீண்ட கால போராட்டமான மனநிலை காணப்பட்டது. அவை உண்மையில் மனிதர்களுக்கான பகுதிகள் அல்ல. ஆனால் இன்றும் மக்கள் அங்கு வேரூன்றி வாழ்க்கையை  நடத்திக் கொண்டிருக்கின்றனர்; பிரதான பாதைகள் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியவில்லை. வணிக வளாகங்கள் தான் பிரதான வீதிகள் என்று நான் தெளிவாக உணரும் வரை  எனக்கும் அது தெரியவில்லை. மேலும், இந்த புலம்பெயர்ந்தோர் புதிய முன்னோடிகள் என்ற விடயத்தை நான் கண்டறிந்துகொண்டதுடன், நான் எழுதும் புறநகர்ப் பகுதியின் உருவப்படங்களை முன்னோடி நாவல்களின் படங்களுடன் பொருத்திக்கொள்ள முடிந்தது என்று கருதுகின்றேன். உதாரணமாக உயர்ந்த கோபுரங்கள் சிவனுக்கு காட்டுப்பகுதிகளை நினைவூட்டுகின்றன. பனிப்புயல்களின் கடுமையை உணர்த்துகின்றன. 

ஒரு ஊடகவியலாளர் Funny Boy நாவலில் இருந்து எழுந்த திரைப்படத்தைப் பற்றி எழுதிய போது, “இலங்கையில் ஓர் இனப்போரிலிருந்து தமிழ்ர்கள் தப்பித்து, புலம்பெயர்ந்த புதிய நாடுகளில் அந்நியப்பட்டுவிட்டதாக உணரும் தமிழ் மக்களுக்கு, செல்வதுரையின் நாவலே பரந்துபட்ட கலாசார உலகில் அவர்களுக்கான  பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். பரந்துபட்டளவிலான கலாசாரத்திற்கு இலங்கை கலாசாரத்தின் சில பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்கின்றீர்களா? அவ்வாறாயின், கலாசாரத்தின் எந்த அம்சங்களை  உங்கள் பணிகளில் நீங்கள் முக்கியமானதாக கருதுகின்றீர்கள்?

நான் முதலில் குறிப்பிட்டது போன்று, நான் பரந்தளவிலான வெள்ளை பார்வையாளர்களுக்காக பேசவில்லை. அதேநேரம் அவர்கள் எனது நாவலை வாசிக்கும் போது அது தான் அவர்கள் காவிச்செல்லும் இலங்கையின் பிரதிவிம்பம் என்று என்னால் அப்பாவித்தனமாக நடிக்கவும் முடியாது.  நிறம், பால் அடையாளம், பாலியல் நாட்டம் காரணமாக சமத்துவம் பெறாத மக்களின் வாழ்வில் அவர்களுக்கு அவ்வளவு அதிகாரம் இல்லை என்றால் இது ஒரு விடயமே இல்லை. ஆனால் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் கருத்துக்கள்  சக்தி வாய்ந்ததாக உள்ளன.

ஆனால் நான் உண்மையில் புத்தகத்தை எழுதும் போது இந்த கருத்தை அனுமதிப்பது ஆபத்தானது. நான் எனது புத்தகத்தை ஒரு கூட்டுக்குள் இருந்து எழுதுகின்றேன். அதன் வரவேற்பை என்ன செய்யலாம் என்று சிந்திக்கின்றேன். சமூகத்தின் பேச்சாளராக நான் என்னை முன்னிறுத்திக்கொள்வதனை நான் ஒருபோதும் செய்வதில்லை. நாவல்கள் மிகவும் நெருக்கமானவை. இவை இலங்கையின் மிகச்சிறியளவிலான கொழும்பு வாழ் மேல்நடுத்தர வர்க்கம் மற்றும் நகரமயமான துணைக்குழுவுக்காக அமைக்கப்பட்டுள்ளன. விவேகமுள்ள வாசகர்கள் இதனை நன்கு அறிவர் என்று நான் நம்புகின்றேன். நான் அனைத்து இலங்கையர்களுக்காகவும் பேசுகின்றேன் என்று அவர்கள் கற்பனை செய்து கொள்ள மாட்டார்கள்

இனவாதம், அரசியல், பாலியல் பாகுபாடுகள் ஒரு நாட்டையும் மனித இதயங்களையும் எவ்வாறு பிளவுப்படுத்துகின்றது என்பதனை Hungry Ghosts நாவல் விவரிக்கின்றது. நீங்கள் இந்த அம்சங்களை உங்களது  பிரதான கதாப்பாத்திரமும் ஓரினச்சேர்க்கையாளனுமான சிவன் ராசையாவினூடாக வெளிப்படுத்துகின்றீர்கள். அவர்  எழுதுவதற்கு இலகுவானவராகவா அல்லது கடினமானவராகவா இருந்தாரா? எதிர்கால படைப்புகளில் இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக எழுதுவீர்களா?

அவரும் மிகவும் எளிதாக வந்திருந்தார். ஒரு தடவை நான் அவரது கதையின்  குரலைக் கேட்டவுடன் அவர், எனது பக்கங்களில் தானாகவே உயிர்ப்பித்துக்கொண்டார். Funny Boy இல் எனது கதாநாயகன் அர்ஜியின் கதையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் கருப்பொருள் இருந்தது. ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இலங்கையின் அனுபவத்தை புலம்பெயர்ந்த அனுபவமாக எடுத்துக்கொள்ள விரும்பினேன். நான் எழுதும் நாவலுக்கு பொருத்தமான வகையில் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதைப் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போது தான் எனது நாவல்களில் அவர்கள் பற்றிய விடயங்களை சேர்க்கின்றேன்.

உங்கள் எழுத்து அடிப்படையில் இலங்கை மற்றும் கனடாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரதேசங்களும் காலனித்துவ சாம்ராஜ்யங்களின் வரலாறுகள் ஊடாக வடிவமைக்கப்பட்டன. வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உங்கள் எழுத்துவழியாக காலனித்துவ சாம்ராஜ்ய வரலாற்று உண்மைகளுடன் எவ்வாறு தொடர்புறுகின்றீர்கள்?

Cinnamon Gardens இல் நான் சாம்ராஜ்யத்துடன் நேரடியாகவே தொடர்புறுகின்றேன். ஏனெனில் ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை பிரிந்துசெல்லத் தொடங்கிய தருணத்தில் கதைக்களம் அமைந்தது.  எனது மற்றைய படைப்புகளில் சாம்ராஜ்யங்கள் பற்றிய விவரிப்புகள் பெரியளவில் இல்லை. கதாப்பாத்திரங்கள் ஆங்கிலம் பேசுவது மற்றும் மேற்கத்தேய நாவல்களைப் படிப்பது, மேற்கத்தேய திரைப்படங்களை பார்ப்பது போன்றன மட்டுமே உள்ளன. இது ஓரளவுக்கு எனது வாழ்க்கையிலும் உண்மையாக இருந்தது என்று நினைக்கின்றேன். என் தந்தை மற்றும் தாத்தாவின் தலைமுறையைப் போன்றல்லாமல், எனக்கு பள்ளியில் வெள்ளை ஆசிரியர்களோ அல்லது வெள்ளை அதிபரோ இல்லை. என் தந்தைக்கு வெள்ளை முதலாளியோ, எங்கள் தேவாலயத்தில் வெள்ளை பாதிரியாரோ இல்லை. எனவே காலனித்துவமும் சாம்ராஜ்யமும் தொலைதூர விடயங்களாவே என்னால் உணரப்பட்டன. நிச்சயமாக நான் படித்த பாடசாலையும், அர்ஜித் மற்றும் சிவன் படிக்கும் பாடசாலையும், ஆங்கில பொதுப் பாடசாலைகளின் கொள்கைகள் மற்றும் மரபுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டவையாகும். அவற்றில் அதிகளவிலான மேற்கத்தேயமயமாக்கலை காண முடியும். இவற்றில் சிலவற்றை நான் முரண்பாடாகவும் சித்திரித்து இருக்கின்றேன்.  நான் பாடசாலையில் படிக்கும் போதோ அல்லது மேற்கத்தேய நாவல்களை வாசிக்கும் போதோ, மேற்கத்தேய திரைப்படங்களைப் பார்க்கும் போதோ “ஓ இது எனது ஆளுமையின் அல்லது போதனையின் அடையாளம்’ என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.”. இதனை என் வாழ்வின் ஓர் இயல்பான பகுதியாகவும், மரபுகள் எமக்குரியது என்றும் எனது பாடசாலையை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் தான் நான் உணர்ந்தேன். உதாரணமாக நாம் அப்பொழுது வாசித்துக்கொண்டிருந்த Tale of Two Cities கதாப்பாத்திரத்தின் பெயரால் எங்கள் ஆங்கில ஆசிரியை Madame Defarge என்று செல்லபெயர் சூட்டி அழைத்தோம். பின்பு அது அவரின் புனைப்பெயராக மாறியது, மேலும் Madame Defarge குறிப்பிட்டவுடனும், அவர் பெயரை சொல்வதைக் கேட்க  நேரும் போதும் எம்மால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிப்பினால் நாம் செத்துவிடுவோம் போன்றிருக்கும். நாங்கள் குறும்பு செய்யும் பாடசாலை சிறுவர்களாக இருந்தோமே ஒழிய “நாங்கள் காலனித்துவ பாடம் படிக்கின்றோம்” என்று ஒரு போதும் கருதியதில்லை. அதன்படி நாங்கள் எங்களுடையதாகவே எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டோம்.

எனது சமகால நாவல்களில் சாம்ராஜ்யங்களைக் குறிப்பிடாததன் மூலம், நான் மற்றொரு பிரச்சினையை தவிர்க்க விரும்பினேன். அரசியல்வாதிகள் நாட்டிற்கு இழைத்த கொடூர செயல்களை திசை திருப்புவதற்காக இன்றுவரை காலனித்துவ ஆட்சியாளர்கள் மீது பழி சுமத்தி வருகின்றனர். அதனால் நான் அதனை பூரணப்படுத்த முயலவில்லை. நான் அதன் ஒரு பகுதியாகவும் இருக்க விரும்பவில்லை. நாம் அனைவருமே நம் நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று தான் நான் கருதுகின்றேன். இந்த நேரத்தில் ஆங்கிலேயர்களைக் குறை கூறாமல் நாமும் இந்த நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டும். 

நீங்கள் தற்போது முன்னெடுத்துவரும் பணிகள் பற்றி கூற முடியுமா?

நிச்சயம். Mansions of the Moon என்ற ஒரு நாவலின் திருத்தங்களை நிறைவு செய்துகொண்டிருக்கின்றேன். இது புத்தரின் மனைவி யசோதரா பற்றிய வரலாற்று நாவல். 2021 வசந்த காலத்தில் வெளிவரவுள்ளது. ஒரு வகையில் இது எனக்கு ஒரு புறப்பாடு. ஆனால் நான் The Hungry Ghosts இல் ஆரம்பித்த விடயம் இங்கு நீட்சியடைகின்றது. பௌத்த சிந்தனைகள் மீதான பார்வை கதை வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. அத்துடன் பழமையான பௌத்த கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் உள்ளடங்கியதாக மேற்கத்தேய யதார்த்தவாத நாவலுடன் இணைக்கப்பட்டு ஓர் கலப்பு வடிவமாக இது அமைந்திருக்கும்.  

உரையாடலுக்கு

Your email address will not be published.