/

க. கைலாசபதி முன்வைத்த விமர்சன அணுகுமுறை பற்றிச் சில குறிப்புகள்: சேனன்

ஓவியம்: T சௌந்தர், நன்றி: இணையம்

ஒரு எழுத்தாளர் – அல்லது விமர்சகர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது எனப் பேசி – அதை நிறுவ முயல்வது உலகெங்கும் நடக்கும் ஒன்றுதான். ஒருவர் இடதுசாரியாக இருந்தால் –அதுவும் இடதுசாரிக் கட்சி உறுப்பினராக இருந்தால் அவரைப் ‘பாரபட்சம்’ கொண்டவராகக் கருதுவது – அல்லது அவர் பிரச்சாரம்தான் எழுதுவார் எனக் கருதுவது நிகழ்கிறது. ஒருவர் மோசமான மோடி ஆதரவாளராக – அல்லது வலதுசாரிக் கட்சி உறுப்பினாராக இருந்தால் அது பிரச்சினையாவதில்லை. ஏனெனில் அது ஆளும் கட்சி விவகாரம். இலங்கையில் த. தே.கூ க்கோ தமிழ்நாட்டில் தி.மு.க வுக்கோ ஆதரவு (உறுப்புரிமை) கொடுப்போருக்கு வரும் சலுகை வேறு – சிறு இடதுசாரிக் கட்சியில் இருந்தால் வரும் லாபமின்மை வேறு. இந்தப் போக்கு உண்மையில் ஒரு ‘சலுகை’சார் பிரச்சினையாக இருப்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். இடது சாரிக் கட்சியும் பெரிய கட்சியாக இருப்பின் அணுகுமுறை வேறாக இருப்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

க. கைலாசபதி ஒரு பேராசிரியராக இல்லாது இருந்திருந்தால் அவர் கருத்துக்கள் எடு பட்டிருக்குமா என்ற கேள்வி உண்டு. சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தின்போது அனோஜன் பின்வருமாறு ஒரு கருத்தை எழுதி இருந்தார்.

கைலாசபதி, சிவத்தம்பி தங்களது கலாநிதி ஆய்வை பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், ஜார்ஜ் டெர்வென்ட் தாம்ஸனின் மேற்பார்வையின் கீழே வெவ்வேறு காலப்பகுதியில் செய்தவர்கள். டெர்வென்ட் தாம்ஸன், பண்டைய கிரேக்க இலக்கியங்களை, நாடகங்களை மார்க்சிய அணுகுமுறையில் மீள்வாசிப்புச் செய்தவர். அவர் பண்பாடு, தொன்மம் சார்ந்த வரலாற்று அணுகுமுறையும், மார்க்கியப் பார்வையும் கொண்டவர். அச்சிந்திக்கும் முறைமையைக் கற்றுக்கொண்டு, அதைத்தான் கைலாசபதி, சிவத்தம்பி இருவருமாக ஈழத்து இலக்கிய விமர்சனங்களில் முன்வைத்தார்கள். இந்த அணுகுமுறை, கலாச்சாரத்தில் உள்ள மரபு, தொன்மம் போன்ற விடயங்களை மறுக்கும் கலக சிந்தனை முறைக்கு ஓரளவுக்கு எதிரானது.

மார்க்சிய அணுகுமுறை மரபு தொன்மம் போன்ற விடயங்களை மறுக்கும் கலகச் சிந்தனை முறைக்கு எதிரானது என்ற தொனியில் எழுதியிருப்பது கேள்விக்குரியது. இது மட்டுமின்றி கைலாசபதியின் விமர்சன அணுகுமுறை ‘போதாமை’ பற்றிப் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன (முன்பும் இத்தகைய விவாதம் நடந்துள்ளது). கைலாசபதியின் அணுகுமுறையைவிட ஆழமாகச் செல்ல வேண்டும் என்பதில் உடன்பாடு உண்டு. ஆனால் தற்போது முன்வைக்கப்படும் ‘போதாமை’ பற்றிய கருத்துக்களில் உடன்பாடு இல்லை.

வறட்டு மார்க்சிய மரபும், வளமான மார்க்சிய மரபும் எனப் பிரித்துப் பார்க்கும் அதே தருணம் மார்க்சிய மரபு என்பது தட்டையாக ‘சமூகத்துக்கு அவசியமானது’ மட்டுமே எனப் புரிந்துகொள்வதும் நிகழ்கிறது. மார்க்சிய வரலாற்றுப் பார்வை என்பது – கலாச்சார, தொன்ம மற்றும் வேறு நுணுக்கங்களை புறக்கணித்த ஒன்று அல்ல. மாறாக மேலதிக வெளிச்சத்தை இந்த நுணுக்கங்களின் மேலும் பரப்புவதே அந்த வரலாற்றுப் பார்வை.

‘வாசகனை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிற எந்த எழுத்துக்கும் காலத்தை மீறி நிற்கும் சக்தி இல்லை’ என்ற க.நா. சு நிலைப்பாட்டை கைலாசபதி கட்டுடைத்த விதத்தை இங்கு உதாரணாக எடுத்துக்கொள்வோம்.

இதற்காக க.நா.சு வின் ஒட்டுமொத்தச் சுயசரிதைக்குள் உள்நுழைந்து வெளிவருவார் கைலாசபதி. க.நா.சுவின் இந்த நிலைப்பாடு எவ்வாறு உருவாகிறது என்பதை விளக்க அவர் அதைச் செய்து இருப்பார். குறிப்பாக கநாசு எவ்வாறு தனிமனித ஆளுமைகளைப் புரிந்துகொள்கிறார் என்பதை விளக்கியிருப்பார். கலை செய்வாரைச் சமூகத்துக்கு மேலே தூக்குவது- ‘சமூகத்தில் ஓன்று சேராதவராகப்’ பார்ப்பது க.நா.சு வுக்குத் தேவைப்பட்டது. இலக்கியம் என்பதைச் சாதாரணத்திற்கு அப்பாற்பட்டதாகப் பார்த்த கநாசு அத்தகைய மகத்தான இலக்கியம் படைக்க இலக்கிய ஆசிரியரும் அவ்வாறு சமூகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் எனக் கருதினார். இந்த நிலைப்பாடு எங்கு இருந்து வருகிறது என்பதை முதன் முதலாக தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியவர் கைலாசபதி.

சமுதாயம், கருத்து, சூல்நிலை, பண்பாடு எல்லாத்தையும் மீறியதாக ஆன்மீகத்தை கநாசு கருதியதை இங்கே இணைத்துக் காட்டி இருப்பார் கைலாசபதி. கட்டுப்பாடற்ற கலைத் தொழில் ஒருவகை ஆன்மீக நடை முறை என க.நா.சு கருதினார். அக்காலத்தில் இருந்த எழுத்தாளர்கள் – அதன் பிறகு வந்தவர்களின் பல்வேறு கூற்றுகளை இதனோடு இணைக்க முடியும். தான் லகரியில் இருந்துதான் எழுத்து செய்கிறேன் என சு. ரா சொல்லி இருப்பதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும்.

கட்டற்ற சுதந்திர எழுத்து என்பதை மார்க்சியப் பார்வையில் விவரிக்காதது கைலாசபதியின் குறைபாடு. புதிய இலக்கிய கோட்பாட்டுக் கருத்துக்களை உருவாக்குவது நோக்கி கைலாசபதி நகரவில்லை. அதன் அவசியம் அவரது எழுத்துக்களில் முண்டி அடித்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடியும். கநாசு செய்த வேலையை கைலாசபதி செய்யவில்லை என்று சொல்லலாம். ஆனால் அது குறைபாடுதான். இந்தக் குறைபாடு சில கறாரான பார்வைகளை நோக்கி அவரை நகர்த்தி இருக்கிறது. எஸ்ரா பவுண்ட் ஒரு பாசிச எழுத்தாளர். ஆக அதை ரசித்து அவரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டவர் எவ்வாறு புரட்சிகர இலக்கியம் பேச முடியும் எனச் சுருக்கிக் கேள்வி கேட்பது கைலாசபதியைச் சிறைப்படுத்தி விடுகிறது. அது சரியான அரசியற் கேள்வி. ஆனால் ஒரு இலக்கிய ஆசிரியரின் பங்களிப்பை அவ்வாறு மட்டும் அளவிடுவதோ – அல்லது சேர்ப்பதோ புறக்கணிப்பதோ சாத்தியமில்லை. அப்படியாயின் உலக இலக்கியத்தின் பெரும்பான்மையைக் குப்பையில் போட வேண்டியதுதான்.

சமூகத்தைச் சரியாக அப்படியே சொல்பவரைச் சோஷலிச அரசு மட்டுமே கௌரவிக்கும் – அவனால் இலக்கிய மரபு வளராது என கநாசு எழுதியது பற்றி கைலாசபதிக்குக் கோபம் வருவது சரியே. அவ்வளவு மட்டரகமாகச் சமூகம்சார் பிரதிகளைத் தட்டி எறிந்து செல்வது மிகத் தவறு. இந்தப் போக்கின் பின் இருக்கும் அரசியலையும் சாதியத்தையும் கைலாசபதி லாவகமாகக் கட்டுடைக்கிறார். இருப்பினும் இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ‘செயல் வீரர்’ என்றும் அவர்கள்தான் சமூகத்தைச் சரியான முறையில் பார்ப்பர் எனவும் கைலாசபதி கருதியது தவறு. இங்குதான் கைலாசபதியின் பலவீனம் வெளிப்படுகிறது எனக் கருதுகிறேன். நமது சமகாலச் சமூகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வது சாத்தியமில்லை எனக் கருதியவர் கைலாசபதி. ஆக தனி மனிதச் சுதந்திரம் சோசலிசத்தில் மட்டுமே சாத்தியம் என அவர் கருதினார். இந்த நிலைப்பாடு பற்றி அவர் முழுமையாக விளக்கியதாகத் தெரியவில்லை (அப்படி இருந்தால் சுட்டிக்காட்டவும்). மனிதர் என்ற பகுதிகள் இணைத்த ‘மொத்த’ மாகச் சமூகத்தை அவர் பார்த்தார் என்றே நினைக்கிறேன். இது சரியான மார்க்சிய நிலைப்பாடு இல்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் உருவான சோஷலிச யதார்த்தவாதத்தின் தாக்கத்தை கைலாசபதியில் பார்க்க முடியும். சோஷலிச யதார்த்தவாத விமர்சன முறை மிகப் பலவீனமான விமர்சன முறை. உண்மையில் அது இலக்கியவாதிகளைக் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி ‘கட்டுப்படுத்தும்’ நோக்கிலேயே தோன்றியது – அதிகாரத்தால் வளர்க்கப்பட்டது. இதைச் சொல்வதால் கநாசுவின் கருத்தில் உண்மை இருக்கலாம் என்று புரிந்துகொள்ளக் கூடாது. அது வேறு.

இதே சமயம் ‘புற நிலையில்’ வைத்து விமர்சனத்தை அணுகுவதன் முக்கியத்தை வலியுறுத்தியவர் கைலாசபதி. ‘அலையும் மனதில் அகஸ்மாத்தாய் தோன்றும் எண்ணங்களை எடுத்து வீசுவதை’ விமர்சனம் எனப் புலம்புவதை அவர் கடுமையாக எதிர்த்தது சரியே. இன்றும் இது பிரச்சினையாக இருக்கிறது. அவரவர் தமது மனதில் எழுந்தமானமாகத் தோன்றுவதை எழுதுவதை விமர்சனமாகக் கருதுகிறார்கள். அதன் எழுந்தமானத் தன்மை எவ்வளவு பலவீனமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

கலை கலைக்காக என்பதை மறுத்துக் கலைக்கு ஒரு சமூகப் பயன்பாடு இருக்கிறது எனக் கருதியவர் கைலாசபதி. இது வெறுமனே அவசியத்துக்காக உற்பத்தி செய்வது என்ற பார்வை அல்ல – மாறாக அதன் சமூக இயக்கம் பற்றியது என்பதை அனோஜன் கவனிக்க வேண்டும். இதைக் கவனித்துக்கொண்டுதான் அவர் யாரைத் தூக்கி நிறுத்தினார் யாரைப் புறம் தள்ள முயன்றார் எனப் பார்க்க வேண்டும். இதைக் கைலாசபதி வெளிப்படையாகச் சொல்லிச் செய்திருக்க வேண்டும். அவர் வலிந்து நியாயப்படுத்த முயன்றது தவறுதான். அதனால்தான் அவர் தூக்கிய இலக்கியக்காரார் பற்றிச் சொல்லி அவரை விமர்சிக்கக் கூடியதாக இருக்கிறது. போகிற போக்கில் பட்டியல் போடுவது, விளங்காமையை ‘பாமரத்தனம்’ என அடிப்பது, போன்றவற்றை மறுத்த கைலாசபதி தான் எந்த அடிப்படையில் இதே வேலைகளைச் செய்தார் என்பதை விளக்கியதாகத் தெரியவில்லை. அவர் இதை எதிர்க் கலைச் செயற்பாடு எனப் பார்த்தார் என்றே புரிந்துகொள்கிறேன். அதை ஏற்றுக்கொள்பவர்கள் இந்த விசயத்தில் தமிழில் கைலாசபதி ஒரு முன்னோடி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கும் இந்த வகைப் பாகுபாட்டில் உடன்பாடே. அவர்கள் திணிக்கும் சர்வாதிகாரத் தன்மைக்கு எதிராக நீச்சல் போடாவிட்டால் விளிம்புநிலைக் கலை எழுத்து நிற்கவே முடியாது. செம்மை, தரம், அழகியல் என்பன எல்லாம் ‘சார்பு’ நிலை கொண்டவை. ஒற்றைப் பார்வையில் அவற்றைத் திணிக்க முயல்வதை அதிகாரமாக கைலாசபதி பார்த்தது சரியே.

மக்கள் சார் அரசியல் பேசும் எழுத்தை ‘கொச்சை’ ‘பிரச்சாரம்’ ‘தரமின்மை’ என்று எழும் குரல்கள் அதிகாரத்தின் பின் நின்று வரும் குரல் என்பதைக் கைலாசபதி கட்டுடைத்து விட்டுச் சென்றுவிட்டார். நமது மக்களிற் பலர் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. தூய இலக்கியம் என்று பேசுவது இலக்கியச் சர்வாதிகாரம். அந்த நிலைப்பாடு மேற்சொன்ன கநாசு வின் இலக்கியக் கொள்கையோடுதான் – அதாவது சமூகத்துக்கு அப்பாற்பட்ட –ஒத்துப் போகும். சமூகச் சிக்கலில் சுழலும் ஒருவருக்கு இலக்கிய நடவடிக்கை சாத்தியம் இல்லை என்பதோடு உடன்படுகிறது அந்த நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு எவ்வாறு சமூக விரோத நிலைப்பாடாக மாறுகிறது என்பதையும் கைலாசபதி விளக்கியிருப்பார். மணிக்கொடி குழுவினரின் ‘குடும்பச் சண்டைகளும் கூக்குரல்களும்’ எவ்வாறு மார்க்சியத்தையும் மக்கள் இயக்கங்களையும் குறி வைத்துத் தாக்கியது என்பதை அவர் குறிப்பிட்டிருப்பார். (அக்கால ஆதிக்க அதிகாரம் சார் இலக்கியக்காரர் – ஆளுக்கு ஆள் முதுகு சொறிந்து கொள்வதை ‘பஜனை’ செய்வது என கைலாசபதி வர்ணித்து இருப்பது ரசிக்கத் தக்கது.)

இதனாலும்தான் ‘ரசனை முறை’ போக்கில் இருந்து புற நிலை – ‘பகுப்பு முறை’ போக்கிற்கு ஆதரவுதருவது நோக்கி நகரத் தலைப்பட்டார் கைலாசபதி. ஒரு இலக்கியப் படைப்பின் தரத்தை எது தீர்மானிகிறது என்பதைக் கேள்வி கேட்டிருப்பார் கைலாசபதி. பகுப்பாய்வு, உலக இலக்கியங்களோடு ஒப்பீடு என்பவற்றை அவர் முன்னிறுத்துகிறார். வெறும் ரசனை சார்ந்து தரம் பற்றிப் பேசுவதன் போதாமை பற்றி நாம் அவதானிக்க வேண்டும். யார் ரசிகர் – யார் ரசிகர் இல்லை என்பது அந்த நிலைப்பாட்டைக் கட்டுடைக்க உதவலாம். ஆனால் அதற்கும் மேல் ரசனை என்பதை எவ்வாறு அதிகார மட்டங்கள் தீர்மானிக்கின்றன என்பதை அவதானிக்க வேண்டும். மார்க்சியத்தின் உதவியின்றி இந்த நுணுக்கமான அவதானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. வர்க்க அரசியல் பார்வையின்றி இந்த எதிர்நிலைத் துருவ நிலைப்பாட்டை எவ்வாறு விளங்கிக்கொள்வது? ரசனையை வைத்துத் தரத்தை முன் நிறுத்துவது அவ்வாறு நிறுத்துபவரின் தகுதி பற்றிய கேள்வியாகிறது என்பதை அவதானித்த கைலாசபதி அங்கு ‘அகநிலைப்பட்ட அளவுகோளே திறனாய்வின் மூலமாகிறது’ என்கிறார்.

சமீபத்தில் விமர்சனம் செய்ய ‘தகுதி’ வேண்டும் என ஜெயமோகன் எழுதியிருந்தார். இது பழைய போக்கின் தொடர்ச்சிதான். ‘விமர்சனம் செய்ய வந்தவர்களின் இலக்கியத் தகுதி’ பற்றி தொ.பா.சுந்தரம் மற்றும் பிரகாஷ் முதலானவர்கள் சொல்லியது பற்றி அடித்து நொறுக்கி இருப்பார் கைலாசபதி. இந்த ‘பொல்லாத –கேடுபயக்கும்’ போக்கைப் பின்பற்றும் ஒரு பெரும் கூட்டத்தையே பெயர்கள் போட்டுத் தாக்கியவர் கைலாசபதி. இன்றும் அத்தகைய கூட்டங்கள் உலவி வருகின்றன. அதனால் இன்றைக்கும் கைலாசபதி எமக்குத் தேவை. கைலாசபதி சொன்னதுபோல ‘இலக்கிய வம்புப் பேச்சு’ நோக்கி விமர்சனத்தைக் குறுக்கும் அதே கேடுபயக்கும் செயலைச் செய்துவருபவரில்  இன்று ஷோபாசக்தி முதன்மையானவராக இருக்கிறார். எவ்விதப் பகுப்பாய்வுகளையும் இத்தகைய எழுத்துக்களில் பார்க்க முடியாது. கைலாசபதி சுட்டிக்காட்டியது போல் இது அதிகாரம்சார் விசயம் மட்டும் அல்ல வெறும் சோம்பேறித் தனமும்தான்.

இங்கு கைலாசபதி சொன்ன இன்னுமொரு முக்கியப் புள்ளியையும் சுட்டிக்காட்ட வேண்டும். மேற்குலக இலக்கியம் –விமர்சனக் கோட்பாடு எனப் பேசுவோர் அதை வெறுமையாகப் பேசுகின்றனர். மேற்கில் தோன்றிய புதிய இலக்கியம், கோட்பாடு ஆகியவற்றுக்குப் பின் இருக்கும் ‘சமுதாய மாற்றக் கருத்துக்களையும் பல புரட்சிகரமான சிந்தனைகளையும்’ இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதை அவர் பின்வருமாறு ‘ரசிக்கும்படி’ எழுதியிருப்பார்: ‘முன்னுக்கு ஒரு அடி எடுத்துவைத்தவர்கள் அடுத்த கணமே திகில் அடைந்து பின்னுக்கு ஈரடிகள் வைத்தனர். அப்படி பின்னடைந்தபொழுது பிரமஞானம், வேதாந்தம் முதலியவற்றை பற்றுக் கோடாய் கொண்டு சமாதானம் கூறினர். அது மட்டுமன்றி இன்னும் ஒரு அடி பின்னே சென்று தமக்கு முதலிலே தூண்டு சக்தியாக இருந்த ஆங்கிலக் கல்வியையும் அதன் மூலம் பெற்ற ‘முற்போக்கு’ எண்ணங்களையும் நிராகரிக்கவும் செய்தனர்’. ஆங்கில விமர்சனத் துறையை ‘மெல்லவும் முடியாமல் விழுங்கவும் மாட்டாமல்’ திண்டாடும் இவர்கள் ‘உலக இலக்கியம்’ என்றெல்லாம் ‘சவடாலடித்துக்’ கொண்டிருக்கிறார்கள். இது ஒரு முக்கிய புள்ளி என நினைக்கிறேன். அறிதலுக்கு எதிரான போக்குகள் இன்று உலவி வருவதை அறிவோம். கிழக்குத் தத்துவம் என்ற பெயரில் தெற்காசிய அடக்குமுறைப் பாரம்பரியங்களுக்கு நியாயம் கற்பிக்கும் முறை இன்று ‘புத்தி ஜீவிதமாக’ புழக்கத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது. சிலாவிக் சிசெக்கும் இதற்கு விதி விலக்கில்லை. இது காரசாரமாக விமர்சிக்கப்பட வேண்டியதே.

சேனன்

’லண்டன்காரர்’, ’சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல்களின் ஆசிரியர். அரசியல் செயற்பாட்டாளர். லண்டனில் வசித்துவருகிறார்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.