/

ஆச்சியின் நுட்பம்: சேனன்

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

எமது ஊரில் ஒரு ஆச்சி இருந்தார்.

யாராவது அவருக்கு விளங்காத மாதிரிக் கதைத்தால் ‘கூடப் படிச்சுக் கூழ்பானைக்குள் விழுந்திட்டினம்’ எனத் திட்டுவா. யாராவது அவவுக்குப் பிடிக்காத காரியம் செய்தால் துலைந்தது அவர்கள் கதை. பரம்பரையையே ஆணிவேரோட புடுங்குறன் என்று புரளி கிளப்புவார் ஆச்சி. ‘ஆதாரபூர்வ’ தகவல்களுடன் அட்டாக் செய்வார்.

ஆச்சி நிற்கும்போதும் ஒரு இடத்தில் நிற்காது ஆடியாடித்தான் கதைப்பார். அவரது கதையும் நேர்கோட்டில் இருக்காது. தவிர அவர் யாரோடு எப்ப சண்டை போடுவார் எனக் கணிப்பது மிகச் சிரமம். யாராவது அவர் ‘அப்சட்’ ஆகிற மாதிரி ஏதாவது சொன்னாலோ செய்தாலோ போதும். உடனடியாக சண்டையைத் தொடங்கித் தனக்கு மேலான தாக்குதல் உலக மகா கொடுமை என்பதை நிறுவாமல் விடமாட்டார்.

‘பழசு சும்மா கிட’ எனச் சில சமயம் சிறுவர்கள் ஏசுவர். ‘ஏனனை சாகிற காலத்தில் சும்மா புறுபுறுத்துக் கொண்டிருகிறாய்’ என்று சில சமயம் வயசானவர்களும் ஏசுவர். ஆனால் ஆச்சி விடமாட்டா. ஆச்சி ஒரு அனாக்கிஸ்ட். கலகக்காரி எனக் கன காலத்துக்கு முதலே பெயர் எடுத்தவர். அவர் இல்லாமல் ஒரு சண்டையும் நடக்க முடியாது. ‘எல்லாத்துக்கும் சாடையா ஒரு விசர் இருக்கு’ என்று வர்ணித்து ‘அவை ஒரு போக்கு’ என வரையறையை முடித்துவைப்பார்.

இது தெரிந்தும் குமரன் ஒரு மாபெரும் அரசியல், சமூக தவறு ஒன்றைச் செய்தான். ஆச்சியோடு கொளுவப் போகிற அளவு முட்டாள் இல்லை அவன். ‘பொல்லுக் குடுத்து அடிவாங்க வேண்டாம்’ எனபதைப் பெற்றோர்கள் ஆசிரியர்கள்  நண்பர்கள் எனப் பெரும் கூட்டமே அவனுக்குப் படிப்பித்திருக்கிறது.

சந்திராவின் செத்தவீடு முடிந்து முப்பத்தோராம் நாள் சாப்பாட்டுக்காக குமரன் வந்திருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆச்சியின் வீடு இருக்கும் முடக்கடியில் வைத்துத்தான் ஒரு கொடிய விசப்பாம்பு சந்திராவைக் கடித்திருந்தது. அவரின் தாய் அழுது புலம்புவது இன்னும் ஓய்ந்த பாடாய் இல்லை. அவரது ஒப்பாரியைக் கேட்டுக்கொண்டு சாப்பிடச் சிரமப்பட்டான் முருகன். அவனுக்குப் பக்கத்தில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆச்சி எந்தச் சலனமும் இன்றி வாழை இலையில் வழித்து உண்டு கொண்டிருந்தார்.

‘‘இஞ்சேரணை…’’ என அழுதுகொண்டிருந்த சந்திராவின் தாயை விழித்த ஆச்சி ‘‘அந்தப் பாபுக்கு என்ன நடந்தது” என வினவினார். நல்ல பால்ச் சொதியோடு பிணைந்த சோறு வாய்க்குள் இருக்கும்போது பேசியதால் கொஞ்சச் சொதி அவரது கடவாய் ஓரம் வழிந்தது. பதில் வராததால் ‘‘என்னடாப்பா நடந்தது’’ எனப் பருப்புச் சட்டியோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவனை வினவினார். ‘‘அது அடிச்சு எப்பவோ செத்துப் போச்சனை – உனக்கென்ன பருப்பு விடவோ’’ என்றபடி வந்தவனின் காதில் விழாத மாதிரிப் புறுபுறுத்தார் ஆச்சி, ‘‘எனக்கொரு பருப்பும் விடவேண்டாம்’’.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு முழுங்கிய குமரன் ஆச்சியை ஏறெடுத்துப் பார்த்தான். பால்ச் சொதி வழிந்த கடவாய்ப் பக்கம் ஒரு சிறு குறும்பும் வருத்தமும் தெரிந்தது. ‘‘ஆச்சி துடையனை’’ என அவரின் வாயை நோக்கித் தன் சோத்துக் கையைக் காட்டிவிட்டுக் கைகழுவச் சென்ற முருகன் அங்கு உதவிக்கு நின்ற சிவத்துடன் பேச்சுக் கொடுத்தான்.

‘‘கிழவிக்குப் பாம்பைப் பற்றித்தான் கவலை”. சிவம் அந்தரப்பட்டுச் சிரிக்க, தனது கதை ரசிக்க ஒரு ஆள் கிடைச்ச சந்தோசத்தில் முருகன் தொடர்ந்து பேசினான். ‘‘கிழவி தின்னிற தின்னைப் பார்த்தா இன்னும் கொஞ்ச பாம்ப பிடிச்சுக் கொண்டுவந்து ஊருக்குள்ள விடும் போல கிடக்கு”. இதற்கும் சிவம் முன்பு போலவே அந்தரப்பட்டுச் சிரிப்பதைப் பார்த்த பிறகுதான் சிவம் தன் கதைக்குச் சிரிக்கவில்லை என்பது முருகனுக்கு விளங்கியது. திகிலுடன் படு வேகமாக நூற்றியெண்பது பாகையில் திரும்பினான். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை கோபத்துடன் அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தார் ஆச்சி. தனக்குப் பின்னால் ஆச்சியும் கை கழுவ வருவார் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆச்சி எதுவும் பேசவில்லை. அவன் சென்ற பிறகு ‘‘உவன் சரியா முகத்தார் மாதிரி… ஒரு சத்தத்துக்கும் உதவான்” என்று சிவத்துக்குச் சொன்ன ஆச்சி ‘‘இவன்ட பூட்டன் காலத்தில் இருந்து அவையைத் தெரியும். எல்லாத்துக்கும் சாடையா ஒரு விசர் இருக்கு” என்றார். அப்பவே சிவத்துக்குத் தெரியும் இது இப்போதைக்கு முடியிற சண்டை இல்லை என்று.

உடனடியாகவே தன் வேலையைத் தொடங்கினார் ஆச்சி. கை கழுவிய கையோடு மணி வீட்டுக்குச் சென்ற ஆச்சி ‘‘இப்பதான் சந்திராவிண்ட செத்தவீட்டுக்கு போயிட்டு வாறன்” எனக் கதையைத் தொடங்கிக் கதையோடு கதையாகக் கேட்டார்: ‘‘இந்த பொட்டை ஏன் அந்த முடக்கில நிண்டது எனத் தெரியுமே உங்களுக்கு?”

அதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை ஆச்சி. அவர் எடுத்த எடுப்புக்குச் சிறிது நேரத்தில் வீடே கூடிவிட்டது. அதன் பிறகு முருகனுக்கும் சந்திராவுக்குமான முடிச்சை அவர் அவிழ்த்தார். மணி வீட்டார் நம்பாமலும் நம்பியும் ‘சீ’ ‘சூ’ என்று போட்ட சவுண்டுகளுக்கு மினக்கெட ஆச்சிக்கு நேரம் இருக்கவில்லை. வந்த வேலை முடிந்து விட்டது என்ற கையோடு மணி வீட்டின் பின்பக்க வேலியின் நடுவில் போட்டிருந்த கடப்பைக் கஷ்டப்பட்டுத் தாண்டி நவமணி வீட்டில் நுழைந்தார்.

‘‘இந்த முருகன்…”

அன்று ஆச்சி வீடு போய்ச்சேருவதற்குள் நன்றாக இருண்டுவிட்டது. ஆனால் அதற்குள் ஊரின் பல வீடுகளுக்கு முருகனின் முழுக் கதையும் தெரிந்துவிட்டது. முப்பத்தொண்டில் சாப்பிட்ட கையோடு பஸ்ஸைப் பிடித்து யாழ்ப்பாணம் சென்ற முருகன் தனது கடை வேலைகளை முடித்து இரவு வீடு திருப்பியபோது பல தகவல்கள் காத்திருந்தன. தனது உண்மையான வாழ்க்கை அன்றுதான் அவனுக்குத் தெரியவந்தது.

அந்தக் கதை வருமாறு:

முகத்தாரின் பேரனும் முருகேசுவின் மகனுமாகிய முருகன் என்று அறியப்படும் முருகநாதன் என்பவன்தான் பாம்புகளின் வருக்கைக்குக் காரணம். அவன்தான் பக்கத்து ஊரில் இருந்த பற்றைகளையும் பாம்புகள் உலாவி வந்த நொச்சிகளையும் ‘ஊரைச் சுத்தம் செய்தல்’ என்ற பெயரில் வெட்டியவன். பாம்புகளை ஊருக்குள் உலாவ விடுவதே அவன் நோக்கம். அதற்கு ஒரு காரணம் இருந்தது. முகத்தார் குடும்பம்  ‘ஒரு மாதிரி’ என ஊரில் பலர் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. மிகுதி சிலர் ‘அவர்கள் குறைந்தவர்கள்’ என வீட்டுக்குள் எடுப்பதில்லை. இதனால் அந்தக் குடும்பத்துக்கு ஊரில் ஒரு வெறுப்பு உண்டு. ஊரில் இருப்பவர்களைப் பழிவாங்கிவிட்டு ஒட்டுமொத்தக் குடும்பமுமே கொழும்பு செல்லத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள். சில மாதங்கள் முன்புதான் முருகன் நீர்கொழும்பில் வீடு வாங்கியிருக்கிறான். அவன் யாழ்ப்பாணப் பெரிய கடையில் வைத்திருக்கும் ‘பாஷன்’ கடையை மூடிவிட்டுக் கொழுப்பில் ஒரு கடை திறக்க ஏற்பாடுகள் செய்துவிட்டான். இதற்காக சந்திராவின் ‘தூரத்து’ மாமன் முறை மகேசன் வாத்தியிடன் கடன் வாங்கி இருக்கிறான். அந்தக் கடனைத் திரும்பக் கொடுக்கும் நோக்கம் முருகனுக்கு இல்லை. சந்திரா குடும்பத்தின் காசைப் புடுங்கலாம் என்ற நோக்கில் அவளை ‘மடக்கிய’ முருகன் அவள் வீட்டில் இருக்கும் நகைகளைக் களவாடித் தரும்படி வற்புறுத்தி இருக்கிறான். சந்திராவைப் பாம்பு கடித்த முடக்கடியில்தான் அவளை முருகன் சந்திப்பதுண்டு. அவள் அதை செய்ய மறுத்ததும் அவளை ஏமாற்றிவிட்டு இன்னுமொரு யாழ்ப்பாணப் பொட்டையோடு கதைக்கத் தொடங்கி இருக்கிறான். அந்த முடக்கடியில் சந்திராவோடு போட்ட கடைசிச் சண்டைக்குப் பிறகு அந்தப் பக்கம் இருந்த நொச்சியை வெட்டித் துப்புரவு செய்ததும் முருகன்தான். இதை ஆச்சியே நேரில் கண்டு இருக்கிறா.

அந்த யாழ்ப்பாணப் பொட்டை டாக்குத்தர் பிலிப்பின் மகள். பிலிப்பர்தான் கொழும்பில் தமிழருக்கு எதிரான கலவரத்தைச் செய்த பியரத்தினவின் நண்பர். இது எல்லோருக்கும் தெரியவர பிலிப்பர் ஓடித்தப்பி இப்ப லண்டனில் வசித்து வருகிறார். பியரத்தினதான் பண்டாரநாயக்காவைக் கொன்ற சோமராமை தலதாமாளிகையில் ஒளித்துவைத்திருந்தவர் என்பதையும் நாம் மறக்க முடியாது. ஊரில் நடமாத் தொடங்கியிருக்கும் ‘பொடியள்’ பற்றிய விபரம் எல்லாம் கொழும்புக்குப் போவது முருகன் மூலம்தான். முகத்தார் குடும்பம் இருக்கும் காணி சண்முகத்தின் பரம்பரைச் சொத்து. சண்முகத்தின் மூத்த பொடியன் புளட் என்ற இயக்கத்தில் சேர்ந்து பாலஸ்தினத்தில் ஆயுதப் பயிற்சி எடுத்து இப்பதான் ஊருக்குள் நுழைந்திருக்கிறான். முகத்தார் குடும்பம் இருக்கும் வீட்டை புளட் முகாம் ஆக்குவது என அவன் பேசியிருக்கிறான். அந்தக் குடும்பத்தை வேரோட அழித்துத் தாம் இருக்கும் காணியைப் பிடிப்பதும் முருகனின் நோக்கம்.

பெரும் கதையின் சுருக்கம் இது.

இதன் பிறகு நடந்தவைகள் வருமாறு:

தனது மகள் சந்திராவை ஏமாற்றியது – சாவுக்கு காரணமானது என முகத்தார் குடும்பத்துடன் பெரும் மோதலை சந்திரா குடும்பம் தொடங்கிவைத்தது.

அந்தப் பிரச்ச்சினையைத் தீர்த்துவைக்கப் போகிறேன் எனச் சென்ற சண்முகத்தின் மகன் பச்சை மட்டையால் முருகனின் தகப்பனுக்குச் செல்லமாக நாலு அடி போட்டுத் திருத்த முயன்றான். அதுக்குப் பதிலாக அரச அதிகாரிகள் சிலரைக் கூட்டிவந்து மிரட்டினான் முருகன். ‘‘இவ்வளவு தூரம் போய்விட்டினம்… இனியும் இவை எனது காணியில் இருக்கக் கூடாது” என அவர்களைக் காணியில் இருந்து எழும்பச் சொல்லிவிட்டார் சண்முகம். அவர்கள் மறுத்துவிட்டனர். அந்த மறுப்பின் உச்சக்கட்டமாக அந்தக் காணியைச் சுற்றித் தன்னம்தனியாக ஒரு வேலியைக் கட்டத் தொடங்கிவிட்டான் முருகன். அதை இரவோடு இரவாக உடைத்த இரண்டாம் நாள் முருகனின் தந்தையின் உடல் துரோகிப் பட்டத்துடன் மின் கம்பத்தில் தொங்கியது. இதன் பிறகு அந்தக் குடும்பம் இரவோடு இரவாகக் காணாமல் போய்விட்டது. அவர்கள் இருந்த வீடு புளொட் காம்ப் ஆகியது.

மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருந்த எதைப்பற்றியும் முருகனால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. எங்கிருந்து எதிர்ப்பு முளைக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியாத அளவு மூலை முடுக்கு எல்லாம் இருந்தும் எதிர்ப்புகள் மின்னல் வேகமாகக் கிளம்பி வந்தன. தன்னையும் சந்திராவையும் சேர்ந்து பார்த்ததாக ஆச்சி நேரடிச் சாட்சி சொன்னதாகப் பலர் பேசிக்கொண்டிருந்த ஒரு விசயம் மட்டும் அவனுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. இந்தப் பேச்சு அடிபடத் தொடங்கிய நாட்களில் இதுபற்றி ஆச்சியிடம் நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என அவர் வீடு தேடிச் சென்றிருந்தான் முருகன்.

என்ன செய்வது எனத் தெரியாது தயக்கத்தோடு படலையைப் பிடித்துக்கொண்டு நின்றவனை ‘‘வா மோனை… உள்ள வா” என வரவேற்று இருத்தி,  ‘‘இஞ்ச பார்… இந்த வயசான காலத்தில தனியக் கிடந்தது சாகிறான்” எனக் கழிவிரக்கத்துடன் சொல்லிக்கொண்டார் ஆச்சி. தன்மேல் இரக்கம் வரவைப்பதில் ஆச்சி கில்லாடி. தன்னைக் குறித்து அவர் பேசுவது கேட்பவர்களுக்கு ‘ஐயோ பாவம்’ எனச் சொல்லத் தூண்டும். சிலர் ‘‘கிழவி நல்ல கெட்டிக்காரி எனச் சிலாகிப்பர். ‘‘இந்த வயசிலையும் ஆளப்பார்” எனப் புகழுவர். அந்தச் சொற்களைக் கேட்க ஆச்சிக்கு உச்சி குளிரும். அதற்காகவே அவர் பல்வேறு கதைகளை இயற்றிப் பேசுவார். இதனால்தான் அவரது முழு வரலாறும் ஒருவருக்கும் சரியாகத் தெரியாது. அவரது மகன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் அவ்வப்போது வந்துபோவான். அவன் தங்கி நிற்கும் சில நாட்களில் ஒருதடவை கூட வெளியில் வந்து யாரோடும் பேசியதில்லை. கிணற்றடியில் நின்றபடி ஒரு நாளைக்கு நூறுதடவை அவன் கைகளைக் கடுமையாகத் தேய்த்துத் தேய்த்துக் கழுவுவதைப் பலர் பார்த்திருக்கின்றனர். அவன் மட்டக்களப்பில் வேலை செய்வதாகச் சிலர் சொல்வர்.

ஆச்சியின் வீடு மிகச் சிறியது. இரண்டு அறைகள். குசினி தனியாக ஒரு கொட்டிலாகச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. சிவம்தான் அதை அவ்வப்போது திருத்திக் கொடுப்பான். வீட்டை மிகச் சுத்தமாக வைத்திருப்பார் ஆச்சி. இந்தக் கிழவி தன்னம்தனிய இப்படி இருக்கு என எல்லோருக்கும் இரக்கமும் ஆச்சரியமும் வரும். ஆச்சிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற ஊக்கம் பிறக்கும்.

குசினியில் கழுவியும் கழுவாமலும் கிடந்த பாத்திரங்களைக் கழுவியும் ஒழுங்குபடுத்தியும் வைக்க அவன் உதவினான். தனக்குக் கூட மாடயா இருக்க ஒருவரும் இல்லை எனச் சீலை முனையால் மூக்கை துடைத்துக்கொண்டார் ஆச்சி. ‘‘உன்னைப்போல ஒரு பேரன்…” என உணர்ச்சிவசப்பட்டு நிறுத்திக்கொண்டார்.

தான் வந்த விசயத்தைக் கேட்க முருகன் மிகச் சிரமப்பட்டான். அவன் ஏன் வந்தான் என ஆச்சி கேட்டால் கதையைத் தொடங்கலாம் என எதிர்பார்த்தவனுக்கு அது வாய்க்கவில்லை. அப்படிக் கேட்கும் எந்த நோக்கமும் இன்றி ஆச்சி தன் பிரச்சினைக்குள் அவனை இழுத்துக்கொண்டிருந்தார். வேறு வழியின்றி ஆச்சியின் கதையை முறித்து அவனே பேச வேண்டியிருந்தது.

‘‘டேய் அறுவானே உனக்காரடா இந்தக் கதையைச் சொன்னது” எனப் பாய்ந்தார் ஆச்சி. ‘‘நான் எதுக்குச் சொல்லப்போறன்?” என்றார். மீண்டும் பாய்ந்த ஆச்சி, ‘‘முதல் எவன் சொன்னது என சொல்லு நான் பிறகு சொல்லுறன்” என விடாப்பிடியாக நின்றார். அதைச் சொல்ல விரும்பவில்லை என அவன் திருப்பித்திருப்பிச் சொன்னதை அவர் செவி மடுக்கவில்லை. எவன் சொன்னது என ஒற்றைக் காலில் நின்றார். வேறு வழியின்றி ‘‘உவன் சண்முகத்தின் மகனும்தான் கதைச்சுக்கொண்டு திரியிறான்” எனச் சொன்னான் முருகன்.

ஆச்சிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. தான் சொல்லவில்லை என அடித்துச் சொன்ன ஆச்சி, ‘‘நீ இந்த முடக்கடியால போயிருப்பாய் எனச் சொல்லி இருப்பன்”. நீ இந்த முடக்கடியால் போனனியா இல்லையா எனக் கேட்டார். ‘‘ஆச்சி நான் முடக்கடியால் போனதா பிரச்சினை. நானும் சந்திராவும் முடக்கடியில் நின்று அடிபட்டதாக நீங்க சொன்னதாக சொல்லுகினம்” என மீண்டும் கேட்டான். ‘‘நீ இதால போனனியா இல்லையா” அதுதான் பிரச்சினை என்றதுபோல் திருப்பித்திருப்பிக் கேட்டார் ஆச்சி. சந்திரா இந்த முடக்கடியால் நடந்து போறவள்தானே எனவும் கேட்டார். அவர் அடம்பிடித்துக் கேட்டது அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. வேறு வழியின்றி ‘‘ஓம் இதால போறனாந்தான். சந்திராவும் இதால போய் இருப்பாள்” என ஏற்றுக்கொண்டான். ‘‘நீயே ஒத்துக்கொண்ட பிறகு, பிறகென்ன- போய் அவனுக்கு சொல்- அவன்ட கதைய எடுத்துக்கொண்டு என்னிட்ட வாற” எனத் திட்டினார் ஆச்சி. ‘‘ஆச்சி அது பிரச்சினை இல்லை” என அவன் சொல்லவந்த எதையும் ஆச்சி செவிமடுக்கவில்லை. அந்த நாய் இப்பதான் ஊருக்கு வந்தது எனத் தொடங்கி சண்முகத்தின் மகனுக்கும் சில திட்டுகள் விழுந்தது.

அதைக் கேட்ட முருகன் சற்று உற்சாகத்தோடு பேசினான். தமிழ்த் தேசியம் என்ற பெயரில் அவன் செய்யிற விசயம் சரி இல்லை. அரசியல் பற்றி ஒரு விளக்கமும் இல்லாமல் சும்மா அலட்டிக்கொண்டு திரியிறான். ஒரு துவக்க பிடிச்சோன்ன தனக்கு எல்லாம் தெரியும் என்ட நினைப்பு எனத் தொடங்கி ஒரு அரசியல் விரிவுரையை நிகழ்த்தத் தொடங்கினான் முருகன். ஆச்சி அவன் அவ்வாறு பேசி ஒருபோதும் கேட்டதில்லை. பிளந்த வாயை மூடிக் கொண்டு அவர் சொன்னார். ‘‘சரி சரி இதெல்லாம் எனக்குத் தெரியாதா? அவன் பாட்டன் காலத்தில் இருந்து அவைகளைத் தெரியும். எல்லா விசயமும் எனக்குத் தெரியும் தம்பி”.

சண்முகம் குடும்பம் மட்டுமில்லை மேலும் பலரும்தான் பேசிக் கொள்கிறார்கள். நீங்கள் சாட்சி இல்லை எனச் சொல்லக் கூடாதா என அவன் தனது பிரச்சினைக்கு மீண்டும் வந்தான். உனக்கு எத்தினை தரம் சொல்வது எனத் தனக்கு முன் இருந்த செம்பைக் காலால் ஒரு தட்டுத் தட்டினார் ஆச்சி. அந்தரப்பட்ட முருகன், ‘‘நீங்கள் சொல்லவில்லை எனச் சொல்வதில் என்ன பிரச்சினை ?”எனச் சற்று உரக்கவே கேட்டான். அவ்வளவுதான் ஆச்சியின் அணுகுமுறை சடாரென மாறியது. அவனை மொக்கன்,  மடையன், ஒரு விளக்கமும் அற்றவன் எனத் திட்டினார். ‘‘நீ வெளிய போ… உன்னை மாதிரி விளக்கமற்ற ஆட்களுடன் எனக்குப் பேச்சில்லை” எனக் கத்தினார். அவரது கத்தும் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டு மனோன்மணி வேலியால் எட்டிப் பார்த்தார். தனக்குள் சுருங்கிப்போய் வெளியே சென்றுவிட்டான் முருகன். ‘‘படலையை வடிவா சாத்திப் போட்டு போடா” என அவனுக்குப் பின்னால் கத்தினார் ஆச்சி. என்னாவாம் என்ற கேள்விக் குறியுடன் நின்ற மனோன்மணிக்குச் சொன்னார் ‘‘செய்யிறத செய்துபோட்டு.. என்னிட்ட வாறான்… தனக்காக பொய் சொல்லட்டாம்.. நான் என்ர வாழ்க்கையில் செய்யாத வேலை”

அடுத்த நாள் கலையில் முதல் வேலையாக சண்முகம் வீடு சென்று அவரின் மகனுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டார் ஆச்சி. முருகன் நேற்று தன் வீடு வந்தான் எனவும் அவனை மிகத் தரக் குறைவாக பேசினான் எனவும் சொன்னார். முருகன் சொன்னது எதுவும் தனக்கு விளங்கவில்லை என்பதை ஆச்சி காட்டிக்கொள்ளவில்லை. ‘‘அவன் வேற ஏதோ இயக்கத்தில் இருக்கிறான்போலக் கிடக்கு. கனக்கக் கதைக்கேக்க விளங்கிவிட்டது” எனத் தனது கணிப்பைப் பகிர்ந்துகொண்டார். அந்தச் ‘சவலை’ அமைப்பு எது என்ற கேள்விக்கும் அது பற்றிய மேலதிக கேள்விகளுக்கும் ஆச்சியால் பதில் சொல்ல முடியவில்லை. ‘‘தலைவர் இளனியோ ஏதோ சொன்னவன்” என அவர் இழுக்க அவனுக்கு விளங்கிவிட்டது. லெனினாக இருக்கும் எனச் சொல்லிச் சிரித்தான். ஆச்சி அவசரமாகக் கதையை மாற்றினார். உனது தகுதி என்ன அவன் தகுதி என்ன என வினவினார். ஒண்டும் தெரியாத அந்த மடையன் சந்திரனைப் பார்த்து நாய் குரைக்கிற மாதிரிப் பொறாமையில் கத்திறான் என மேலும் எடுத்துச் சொன்னார். அவன் சாட்சி பற்றிக் கேட்க வந்த விசயம் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை ஆச்சி. அது சண்முகத்தின் மகனுக்குத் தேவையில்லாப் பிரச்சினை என்பது அவர் கணிப்பு. இதன் பிறகுதான் முருகன் வீட்டுப் பிரச்சினையில் மேலதிக உற்சாகத்தோடு தலையிட்டது சண்முகம் வீடு.

முருகனின் தந்தை மின்கம்பம் ஏறி இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னும் ஆச்சி உயிரோடுதான் இருந்தார். அவரை லண்டன் எடுத்து எல்லா இடமும் சுத்திக்காட்ட வேண்டும் என அவரது பேரன் பேசிக்கொண்டு திரியிறான் எனப் பலருக்கும் சொல்லுவார். உண்மையில் அவரது பேரன் எழுத்துத் துறையில் புகழ்பெற்றுக்கொண்டு இருந்தான் என்பது அவருக்குத் தெரியாது.

ஊரை விட்டு வெளியேற முதல்  தான் ஆச்சியோடு பேசிய விசயத்தைப் பலருக்கும் சொல்லிவிட்டுத்தான் சென்றான் முருகன். சண்முகத்தின் மகனை அவர் திட்டியதையும் சொல்லிவிட்டான். ‘‘நான் அப்படிச் சொல்வேனா மகன்” எனச் சமாளித்துத் தப்பிவிட்டார் ஆச்சி. முருகன் தொடர்ந்தும் ஊரில் இல்லாதபடியால் தலையோடு போகவேண்டியது தலைப்பாகையோடு போய்விட்டது. அந்த ஊரில் மின்கம்பத்தில் முதன்முறையாக ஏறியது முருகனின் தகப்பன்தான். அதற்குப் பிறகு பல உடல்களைக் கண்டுவிட்டது அந்த மின் கம்பம். முருகனின் வீட்டு வளாகத்தில் பல உடல்கள் புதைக்கப்பட்டு விட்டன. எதுக்குப் பிரச்சினை என அடக்கி வாசித்துவிட்டார் ஆச்சி.

இரண்டு வருடத்துக்குள் அவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாட் காலையில் அனைத்து முகாம்களிலும் சூட்டுச் சத்தம் கேட்டது. தப்பி ஓடிய சண்முகத்தின் மகனை ஆச்சி வீட்டு முடக்கடியில் வைத்துத்தான் சுட்டார்கள். ஆச்சியின் ஏற்பாடு அது எனச் சிலர் பேசிக்கொண்டார்கள். ஆச்சி புதிய பொடியளோடு சங்கமமாகி விட்டார். ஆச்சியைக் கண்டு ஊரே நடுங்கியது. அவர்தான் பல்வேறு துரோகிகளைப் பிடிக்க உதவி இருக்கிறார் எனப் பேசிக்கொண்டார்கள். பொடியள் தங்கள் வானில் வந்து அவரை முகாமுக்கு கூட்டிக் கொண்டுபோய் சாப்பாடு, தேநீர் கொடுப்பார்கள். நீ கடைசி காலத்தில் கஷ்டப்பட விடமாட்டம் – நாங்கள் இருக்கிறம் என ஆச்சிக்கு அவர்கள் அன்பைப் பொழிவார்கள். தேனீருக்குச் சீனி போடக்கூட ஒரு சதம் இல்லாத இக்கட்டில் ஆச்சி இருந்த காலம் அது. பொடியள் இல்லை எண்டால் பாவம் ஆச்சி சரியாகக் கஷ்டப்பட்டிருப்பார். ஆச்சி அந்த அன்புக்காக அவர்கள் சார்பில் ஊரை மேய்த்தார். ஆச்சியைக் கோபப்படுத்தினால் முடிஞ்சுது கதை என்பது எல்லோருக்கும் தெரியவந்தது. ஆச்சியைக் கோபப்படுத்துவதும் ஒன்றும் சிரமமான காரியமில்லை. ஒரு வார்த்தை அப்படி இப்படிச் சொன்னால் போதும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், எது உண்மை, எது நியாயம் என்பதற்கெல்லாம் இடமில்லாது போய்விட்டது. ஆச்சி சொல்வது செய்வதுதான் உண்மையின் உன்னத வெளிப்பாடு என்றாகிப்போனது. அவரது சொல்லுக்கு மிஞ்சிய சொல் கிடையாது. அவர் மேலான பக்தி சிலருக்கு அதிகரித்தது. சிலர் முருகன் சொன்னது சரியாகத்தான் இருக்கும் என்று இரகசியமாகப் பேசிக்கொண்டனர். இருப்பினும் ஊரில் ஆச்சியை யாராலும் தொட முடியாத அளவு ஆச்சி தேசப்பற்றாளர் ஆனார். பொடியள் எங்காவது வெடி போடும்போது ஆச்சி ஊருக்குள் தன் வெடியைப் போடுவார். தன்னிடம் அறிவுரை கேட்டுத்தான் இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்றைப் பொடியள் தாக்கினர் என்றும், அந்தத் தாக்குதலின் பின் தானும் இருப்பதாகவும்  ஒருமுறை சொல்லியிருந்தார் ஆச்சி. இவ்வாறு கண்ட பாட்டில் யாரும் எதிர்பாராத முறையில் அவர்கள் கால்களுக்குள் குண்டைத் தூக்கிப் போடுவதில் ஆச்சி கெட்டிக்காரி. 

முருகனைப் பிடித்துவிட்டதாகப் பொடியள் செய்தி கொண்டுவந்தபோது அவனைப் பார்க்கத் தானும் வருகிறேன் எனப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார் ஆச்சி. தமது வானில் ஏற்றி அவனைக் காட்ட ஆச்சியை யாழ்ப்பாணம் கொண்டுபோனார்கள் பொடியள். பொடியளின் வானில் முன்னுக்கு இருந்துகொண்டு ஆச்சி யாழ்ப்பாணம் போனதை ஊர்ச் சனம் பார்த்தது.

தொழிற்சங்க உரிமைக்காகத் துண்டுப் பிரசுரம் கொடுத்தபோது கைது செய்யப்பட்டிருந்த அவன் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தான். கதைக்க முடியாத அளவு வாய் வெடித்துச் சிதறி இருந்தபோதும் –அசைய முடியாமல் உடல் நொறுங்கி இருந்தபோதும், தலையைச் சிரமப்பட்டு உயர்த்தி ஆச்சியின் முகத்தில் துப்பினான் குமரன். எச்சிலைச் சீலையால் துடைத்துக்கொண்ட ஆச்சி கடைவாயில் மென்மையான சிரிப்புடன் குனிந்து அவன் காதில் சொன்னார் ‘‘வேரோட அறுப்பனடா வேசை மகனே”.

அன்று இரவு குமரனை முடித்த கையோடு சுடலை கொண்டுபோய் எரித்துவிட்டார்கள். தேசப்பற்றாளர் ஆச்சிதான் கொள்ளிவைத்தார். ஆச்சி வந்திருக்கிறார் என அன்று ஆடறுத்துக் கறி சமைத்தார்கள் பொடியள்.

இது நடந்து சில வருடங்கள் கழிந்த பின் ஒரு புயல் புகுந்ததுபோல் இலங்கை இராணுவம் ஊரில் புகுந்தது. அப்போது ஆச்சி உயிரோடுதான் இருந்தார். இதற்கு இரண்டு நாட்களின் முன்புதான் அவருக்குக் குசினி வேலை செய்து கொடுத்திருந்தான் சிவம். ஆச்சி சடம் போல் படுத்துவிட்டார். சூட்டுச் சத்தங்கள் ஓய்ந்தபோது சிவம் மட்டுமில்லை, பலர் காணாமற் போய்விட்டனர். ஏற்கெனவே அரைவாசி ஊர்க்காரர் இடம்பெயர்ந்து விட்டனர். இராணுவத்தின் வருகைக்குப் பிறகு மிகுதிப் பேரும் இடம்பெயரத் தொடங்கி விட்டனர். ஆச்சி அசையவில்லை. இராணுவத்தினர் முடக்கடியில் இறங்கி ஆச்சியின் கிணற்றில் தண்ணி குடிப்பதை வழக்கமாக்கியிருந்தனர். திட்டுவதற்கான அழகான சொற்கள் உட்பட பல்வேறு சிங்களச் சொற்களை ஆச்சிக்குப் பழக்கினர் இராணுவத்தினர். ஆச்சி பாவம் என உணவும் கொண்டுவந்து கொடுத்தனர்.

ஆச்சி முன்போல் நடமாடுவதில்லை. தனது முன் அறை வாசலில் முடக்கைப் பார்த்தபடி படுத்திருப்பார். இராணுவ வாகனம் முடக்கால் திரும்பும்போது சில சமயம் எழுந்து கை அசைத்து அவர்களைக் கூப்பிடுவார். அவர்களும் இரக்கத்தோடு இறங்கித் தங்களிடம் உணவு ஏதாவது இருந்தால் கொடுப்பார்கள். அவர்கள் சிங்களத்தில் பேசுவது விளங்காத போதும் விளங்கின மாதிரி தலை ஆட்டிக்கொண்டிருப்பார் ஆச்சி. ஒருமுறை தமிழ் தெரிந்த ஒருவனும் அவர்களோடு வந்திருந்தான். ‘‘நாட்டைக் காப்பாற்றிய சமாதானத்தின் தூதுவர்கள் அவர்கள்” என ஆச்சி அவர்கள் பற்றிக் கணிப்புச் செய்திருப்பதை இராணுவத்தினருக்கு மொழிபெயர்த்துச் சொன்னான் அவன். நான் பலதைக் கண்ட ஒரு ஆள் எனவும் தனது அனுபவத்தின்படி எது சரி எது பிழை எனத் தனக்குத் தெரியும் எனவும் அதன்படி அவர்கள் தற்போது செய்யும் வேலைதான் நாட்டுக்கு உதவும் எனவும் அவர் மொழிபெயர்ப்பாளர் மூலம் விளக்கினார். இவ்வளவு விளக்கமும் தெளிவும் இருக்கும் ஒரு தமிழ் ஆளை இரானுவத்தினர் அதுக்கு முதல் சந்தித்ததில்லை. அவர்களுக்கு வாஞ்சை பெருகியது. முதுமை அறிவை வளர்க்கிறது எனச் சும்மாவா சொல்கிறார்கள் எனச் சிலாகித்துக்கொண்டனர். அதன் பிறகு ஆச்சியை மேலதிக அன்புடன் கவனித்துக் கொண்டனர் இராணுவத்தினர். தேசப்பற்றாளர் ஆச்சி நாட்டுப் பற்றாளர் ஆனார்.

இதன் பிறகு ஒரு பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. நல்ல வயசாகிப் போனபோதும் ஆச்சி அப்போதும் உயிரோடுதான் இருந்தார். காணாமற்போதல், இடப்பெயர்வு என ஊரே காணாமற் போய்விட்டது. வெற்று ஊரை வைத்து மேய்க்க வேறு வேலை இல்லையா என இராணுவத்தினரும் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆச்சியைத் தெரிந்த ஒரு பேய் பிசாசுகூட ஊரில் இல்லாமல் போய்விட்டது. ஈ காக்கை இலையான்கள் கூட இல்லை. பாம்பின் சிலமன்கூட இல்லை. சின்னக்காடு பக்கம் பெரும் புற்றுகளுடன் பாம்புகள் புழுத்துக் கிடக்கு என ஆச்சி முன்பு கேள்விப்பட்டிருந்தார். முன்பு என்றால் ஒரு நடையாகப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவார். இப்போது கிணற்றடிக்குப் போகவே அவரால் முடியவில்லை. பல நாட்கள் குளிக்காமல் சாப்பிடாமல்கூடக் கிடந்தார். ஏன் என்று கேட்க ஒரு சீவன் வரவில்லை. ஆச்சி ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததில்லை. யாராவது பேசக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று மட்டும் விரும்பினார். அவருக்கு இப்போது பசிப்பதுகூட இல்லை. கிழக்குப் பக்கம் இருக்கும் சிவத்தின் சொந்தக்காரன் ஒருவன் அவ்வப்போது உணவுப் பொருட்கள் கொண்டுவந்து கொடுக்கும்போது திட்டுவான். ‘‘அடியேய் கிழவி கொஞ்சமாவது சாப்பிடு. செத்துக் கித்துப் போகப் போற”.

முடக்கைப் பார்த்துக்கொண்டு படுத்துக் கிடந்த ஆச்சி ஒருநாள் திடீரெனத் திகைத்து எழும்பினார். முடக்கால் திரும்பி ஒருவன் அவர் படலை நோக்கி நடந்துவருவது தெரிந்தது. ஒருவிதப் பயம் ஆச்சியின் தொண்டைக்குள் இறங்கியது. யாரடா அது என அதட்டினார். குரல் முழுமையாக வெளியில் வர மறுத்தது. நேரே வந்த அவன் படலையைப் பிடித்துக்கொண்டு நின்றான்.

ஆச்சி உற்றுப் பார்த்தார். ஆச்சியின் கணிப்பு ஒருபோதும் பிழைத்ததில்லை. அது அவனேதான். படலையை பிடித்தபடி ஆச்சியை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்ற முருகன் உள்ளேவருவதற்காகப் படலையைச் சற்றுத் தள்ளினான். ஆச்சியின் தொண்டை இறுகியது. மார் அடைத்தது. ஒரு கணத்தில் உயிர் பிரிந்து மறைந்துவிட்டது.

ஆச்சியோடு அவரது மரபு முடிவுக்கு வந்துவிட்டது என எண்ணவேண்டாம். மரபணுக்களை முறையாகக் கடத்தித் தனது பேரனிடம் கொடுத்திருக்கிறார் ஆச்சி. தற்போது முழுநேர எழுத்தாளர் பிரபலமாகி இருக்கும் அவரது பேரன் அப்படியே ஆச்சியின் மரபைக் காப்பாற்றி அதே நுட்பங்களைச் செய்துவருகிறான். சொல்லப் போனால் ஆச்சியிலும் பல மடங்கு மேலாக அவன் கடமையைச் செய்துவருகிறான். கடைசிக் காலத்தில் அதை ஆச்சிக்குச் சொல்லி ஆற்றுப்படுத்தத்தான் ஆட்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.

அடிக்குறிப்பு

மின்கம்பம் ஏற்றுதல் – துரோகிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட பின்னர் மின்கம்பத்தில் கட்டி தொங்கவிடப்படுவார்கள், இதனை மின்கம்பத்தில் ஏற்றுதல் என்று குறிப்பிடப்படுவது வழமை.

சேனன்

’லண்டன்காரர்’, ’சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல்களின் ஆசிரியர். அரசியல் செயற்பாட்டாளர். லண்டனில் வசித்துவருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.