/

முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விட, புத்திசாலிகளுக்கு எதிரியாக இருப்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன்: ஜோர்ஜ்.இ.குருஷேவ்

தாயகம் பத்திரிகை ஆசிரியருடனான நேர்காணல், நேர்கண்டவர் அனோஜன் பாலகிருஷ்ணன்

தாங்கள் எழுதுவதை விட, தங்களைப் பற்றி எழுதப்படுவது அதிகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற இலக்கிய மூலவர்கள் அதிகமாக இருக்கும் நம் இலக்கியச் சூழலில், நேர்காணல் என்பது எனக்கு எப்போதும், மேற்குலகில் அர்த்தமில்லாத பேச்சுக்கு செருப்படி கொடுப்பது போல, So, your point is? என்று கேட்கத் தோன்றும் ஒன்றாகத் தான் இருக்கிறது.

பரபரப்பை ஏற்படுத்தி ரேட்டிங்கை எகிற வைக்கும் Tell-all டிவி பேட்டிகள் மாதிரி, தங்களைப் பற்றிய அதீதமான மதிப்பீடுகளுடன் உலாவுகின்ற இலக்கிய மேதகுக்களுக்கு, தங்களுடைய ‘மனம் திறக்கிறார்’ நேர்காணல்களும் உலகை உலுப்புவதாக நினைப்பு இருக்கலாம்.

இதெல்லாம் சமூக வலைத்தளங்களின் புண்ணியத்தில் உருவாக்கப்பட்ட மைக்ரோ உலகங்களின் ‘ஊருக்குள்ள உன்னைப் பற்றித் தான் பேச்சு, மச்சான்!’ தான்!

இதற்குள் என்னையும் ஏதோ முக்கியமான ஆளாகக் கருதி பேட்டி காண முனைந்தவர்களை எப்போதுமே ‘காய் வெட்டிக்’ கொண்டு தான் வந்திருக்கிறேன்.

அப்படி எதையும் பெரிதாக சாதித்ததாக நான் நினைத்ததில்லை.

‘ஏதோ நீண்ட நாளா எழுதுறான், மொத்தக் கழிவில வாங்கிற ஒரு பொன்னாடையை போர்த்தி விட்டா, வாழும் போதே கௌரவித்த புண்ணியம் போகிற வழிக்கு கிடைக்கலாம்’ என்ற நோக்கம் இல்லாமல், உண்மையாகவே என்னைப் பற்றி பேச வேண்டும், தாயகம் புலன் பெயர் இலக்கியத்துக்கும் ஈழ அரசியலுக்கும் வழங்கிய பங்களிப்பு பற்றி பேச வேண்டும் என்று விரும்பிய நண்பர்களும் என்னுடைய ஒத்துழைப்பு கிடைக்காமல் சலித்து ஓய்ந்து விட்டார்கள்.

இந்த பேட்டி (ஓ! நேர்காணல்!) பற்றி நண்பர் தொடர்பு கொண்ட போதும், ‘இதெல்லாம் எனக்கு ஆகாத காரியம்!… ஏற்கனவே எழுதாத எதை நான் சொல்ல இருக்கு? உங்கள் நல்ல எண்ணம் விளங்குகிறது. அனோஜன் இளம் வயதிலேயே இத்தனை ஆர்வத்துடன் இருப்பதை பார்க்கிறேன். நட்சத்திரனோடு ஏற்கனவே பட்ட அல்லலுக்குள் எதற்கு நானும் அனாவசியமாக? நான் எழுதியவைகளை தேடி வாசிக்கட்டும்…. நான் எழுத்துக்காரன். தாடியைச் சொறிந்து கொண்டு சிந்தனையாளன் போஸ் கொடுத்து பதில் சொல்கிற ஆளில்லை தானே!’ என்று தான் சொன்னேன்.

நான் சொல்ல வேண்டும் என்று விரும்பியவைகளை தயக்கமில்லாமல் எழுதி வெளியிட வழிகளை எனக்கு எப்போதுமே உருவாக்கி வைத்திருக்கிறேன். போதாக்குறைக்கு பேஸ்புக் வேறு! எனவே யாருக்கும் மனம் திறக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை! (உள்பெட்டிகள் உட்பட!)

இருந்தாலும், இவர்களின் வயதில் நான் இருந்ததைப் போல, ‘ஊரோடு ஒத்தோடி பிறவிப் பெரும்பயனை அடையாமல், யாழ்ப்பாணக் கிணற்றுக்கும் அப்பால், வித்தியாசமான விடயங்களை தேடி நுகர்கின்றவர்கள்’ என்ற மதிப்பு ஒரு புறம்.

‘ஊருக்கு வா, கவனிக்கிறம்’ என்ற மண்டையில் போடும் நெத்திவெடி வீரர்கள் பற்றிய பயம் இல்லாமல் எழுதிய எனக்கு, இந்த இலக்கிய நாட்டாமைகளின் சண்டித்தனத்துக்கு பயந்து ‘ஆயுதங்களை மெளனிக்கச்’ செய்யாமல், கருத்துச் சுதந்திரம் பற்றிய (அது அவதூறாகத் தன்னும் இருந்தாலும்!) தங்களுடைய கருத்தில் உறுதியாக இருந்தார்கள் என்பதில் வந்த திருப்தி அடுத்தது.

அனோஜன் நேரடியாகத் தொடர்பு கொண்ட போதும், இயல்பாகவே என்னால் மற்றவர்களுக்கு சிக்கல்கள் வரக் கூடாது என்று எழும் எண்ணம் காரணமாக, என்னோடு சகவாசம் வைப்பதால் வரக் கூடிய சிக்கல்களை தெரியப்படுத்தி, It’s your call என்றிருந்தேன்.

இப்போதும், நீங்கள் தான் ஆசிரியர் குழு. உங்களுடைய கருத்துக்களே முடிவானவை. இடையில் ‘உவர் கனக்க கதைக்கிறார்’ என்றோ, ‘திரும்பவும் வாறார், அடி வாங்கத் தாறதுக்கு!’ என்றோ நினைத்தால், பேட்டியை ரத்துச் செய்யலாம்.

No Hard feelings!

கருத்துச் சிதையாமல் வெட்டலாம். காரணம், நான் சொல்ல நினைக்காத கருத்துக்கு விளக்கம் சொல்ல வேண்டி நேரிடும்.

‘விரிவஞ்சி விட்டு விடவும்’ ‘இட நெருக்கடி பற்றிக் கவலை கொள்ளவும்’ இது அச்சு ஊடகம் இல்லையே!?

சரி, நான் சொன்ன கருத்துக்கள் முழுமையாக சொல்லப்படவில்லை என்று நினைத்தாலும், ஸ்ரூடியோக்களின் அழுத்தத்திற்காக படத்தை வெளியிட்டு கால் நூற்றாண்டு கடந்த பின்னால் வெளியிடப்படும் Director’s cut மாதிரி, நானும் எனது Version னை வெளியிடலாம் தானே.

என்னுடைய பதில்கள் குமுதத்து நடிகைக்கான ஆறு கேள்விகள் மாதிரி, ஒற்றை வரிப் பதிலாக இருக்காது.

நாங்கள் டீல் பண்ணுவது எல்லாம் தெரிந்த தமிழர்களாலான இலக்கிய உலகம். அறிவைத் தேடுவதற்கானதாக இல்லாமல், தனக்கு இருப்பதாக நினைத்துக்கு கொண்டிருக்கும் மேதைமையை வெளிக்காட்டுவதற்காகவே கேள்வி கேட்கும் மேதகுக்களை கொண்ட உலகம்.

பிடித்த சமையல்..? சீன மிளகாய் எண்ணெய்! என்று பதில் சொன்னாலேயே கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தக் கூடிய அறிவாளிகள் இங்கே நிறைய!

எனவே எப்போதும் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லாதபடிக்கு, என்னுடைய முடிவுகளை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தி, சாத்தியமான கேள்விகளுக்கு விரிவான பதில்களுடன் தான் என் எழுத்துக்கள் இருக்கும், நீண்டதாக!

தமிழனிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தால் தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்காமல் திருப்பித் தரமாட்டான் என்பதை நான் சொல்லி அறிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லாதபடிக்கு, நீங்கள் எத்தனை இலக்கியக் கூட்டங்களில் பங்கு கொண்டிருப்பீர்கள்?

என்னைப் பற்றி நானே சொல்ல வேண்டியிருக்கும். அது வழமையான யாழ்ப்பாணி மரபுப்படி ‘உவர் சும்மா தன்னைப் பற்றி புழுகிறார்’ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கலாம். இவர்கள் எல்லாம் போற்றிப் பாட வேண்டும் என்று இந்த மண்ணாங்கட்டி ஒரு போதும் நினைத்ததில்லை.

I don’t mince words. For sure, it will offend a few.

There will be broken hearts and hurt feelings.

Never give a damn when your intention is just that.

There will be pre-emptive strikes with precision guided munitions.

யாரைச் சொல்கிறேன் என்பது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்.

இலக்கிய மேதகுக்கள் எவரினதும் பெயரை நான் குறிப்பிடப் போவதில்லை. மேற்குலகில் சொல்வது போல I am not going to name names!

இதில் எவர் மீதான பயமும் இல்லை. இதனால் ஆசிரியர் குழுவினருக்கு என்னால் அனாவசிய தலையிடிகள் வராமல் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் அது தாங்கள் இல்லை என்று தப்பித்துக் கொள்வதற்கான escape clauseக்காகவும்.

அதே போல, எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் பெயரையும் சொல்லப் போவதில்லை. அது என்னைப் பாதுகாத்துக் கொள்ள! நான் அன்போடு மதிக்கின்ற இவர்களில் யாருடையவாவது பெயர்களை விட்டு விடுவேன் என்ற எண்ணத்தினால்.

தமிழ் அரசியலில் துவக்கு எடுத்த தலைவர்கள் மாதிரி, இலக்கியமும் தடி எடுத்த தண்டல்கார ஆண்டைகளின் சேஷ்டைகள் நிறைந்த இடம்.

இதில் நான் சம்பந்தப்பட்டவுடன் dynamics முழுமையாக மாறும் என்பது இன்னும் சுவாரஷ்யமானது.

தேசியத் தலைவர் மாதிரி, நானும் ஒரு தீர்க்கதரிசி தான். அவரை விட, நான் கொஞ்சம் மேல்!  அவருக்கு என்ன நடக்கும் என்பதைக் கூட முன்கூட்டியே சொல்லும் அளவுக்கு!

எனவே, இந்த பேட்டிக்கான எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே யார் யார் என்ன செய்வார்கள் என்பதை எழுதி ஒரு உறையில் ஒட்டித் தரமுடியும்.

‘ஊருக்கு வா, கவனிக்கிறம்’ கூட்டம் இந்த இலக்கியம் எல்லாம் வாசிப்பதில்லை. அதன் உலகம் வேறு.

இங்கே பகிரங்கமான எதிர்வினைகள் வராது. ஆசிரியர் குழுவுக்கு உட்பெட்டி அழுத்தங்கள் வரும்.

உவனுக்கு பதில் சொல்ல உவன் பெரிய ஆளோ? என்பது முதல் ‘பதில் சொல்லி உவனைப் பெரிய ஆளாக்கக் கூடாது’ என்ற நல்லெண்ணம் வரை கொண்டவர்கள் யார்…

‘உங்களைப் பற்றியும் சொல்லியிருக்குங்கோ… வாசிச்சனீங்களோ? என்று முதல் வேலையாக ஒவ்வொருவராக போன் அடிச்சு யார் சொல்லுவார்…

தனியே கருத்துச் சொல்ல பயந்து கூட்டறிக்கைக்கு கையெழுத்து வைக்க யார் ஆள் தேடித் தேடித் திரிவார்கள்…

உந்த இலக்கியவாதிகள் எல்லாம் அற்ப பயல்கள் என்று சொன்னால்… ஏன் பெண்கள் இலக்கியவாதிகள் இல்லையோ என்று என்னை பெண்ணியத்திற்கு எதிரானவன் என்று யார் போர்க் கொடி தூக்குவார்கள்…

என்று இப்போதே சொல்லக் கூடியளவுக்கு இவர்களை எல்லாம் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறேன்.

எனவே..

In an unlikely event of retaliation, I am well prepared for a protracted war.

I am a battle-hardened veteran.

Just point your fingers at me and run for cover.

I will take care of the rest.

Consider yourself warned!

Fasten your seat belts and enjoy the ride!

I promise, this would be like no other!

ஊரில் ஆங்கிலம் கற்பித்து திரிந்த நபர், கனடாவுக்கு புலம்பெயர்ந்து பல்வேறு இடர்களைக் கடந்து திடீரென்று பத்திரிகை ஆசிரியர் ஆகிறார். வாராந்திர பத்திரிகை… அரசியல் பத்திரிகை, மாற்றுக் குரலுக்கான களமாக திகழ்ந்த பத்திரிகையான ‘தாயகம்’. இந்தப் பயணத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருகிறது…

புலன் பெயர் தமிழ் ஆண்களில் பாதிப் பேர் முன்னாள் பத்திரிகை ஆசிரியர்கள். மீதிப் பேர் பத்திரிகை தொடங்கும் கனவில் இருப்பவர்கள்.

யாழ்ப்பாணத்தில் சனத்தொகைக் கணக்கெடுப்பு எடுத்தால், அதிகப் பெரும்பான்மை அரசியல் ஆய்வாளர்கள், அடுத்து கவிஞர்களுக்குப் பிறகு பத்திரிகை ஆசிரியர்கள் தான்.  இப்போது செல்போன் வைத்திருக்கிறவர்கள் எல்லாம் ஊடகவியலாளர் என்றான பின்னால்… இணையத் தள ஊடகங்களையும் சேர்த்தால்… மொத்த சனத்தொகையே ஊடகவியலாளர்களாகத் தான் இருக்கும். இதற்குள் நானும் போய் ‘நானும் முந்தி பேப்பர் விட்டனான்!’ என்று சொல்வது, சுயம்வரத்தில் புலிகேசியும் இளவரசியின் மாலைக்கு தவம் கிடந்த மாதிரித் தான்.

உவர்கள் எல்லாருமே ஏதோ தங்களுக்கு மாலையிடக் காத்திருந்த மங்கையை நான் திருடிச் செல்ல வந்த மாதிரி…

என்னையும் ‘டேய், கள்ளா!’ என்பதில் தான் முடியும்.

யார் எதைச் செய்தாலும் ‘உவரை விட நான் மணியாய் செய்வன்’ என்ற யாழ்ப்பாணியின் தன்னம்பிக்கை தான் உலகெங்கும் தமிழ் மகன் நிர்வாகக் கொத்துரொட்டிக் கடைகளை ஒரே சந்தியின் நான்கு மூலைகளில் நிறைய வைத்திருக்கிறது. தரத்தை அதிகரிப்பது  என்பதை விட, விலையைக் குறைத்தால் போதும் என்ற நம்பிக்கையில் விளைந்தவை தானே இவை.

‘குறைக்க மாட்டியளோ?’ என்பதே தேசிய தாரக மந்திரமாய் அமைந்த பூமி!

இதில் பத்திரிகைகள் எந்த வகையில் உயர்ந்திருந்தன?

பணத்திற்கு பத்திரிகை வாங்க வைத்த தாயகத்தின் பின்னால், விளம்பரங்களை நம்பிய இலவசப் பத்திரிகைகள் தானே இவை எல்லாம். இன்றைக்கும் விலை கொடுத்த வாங்க வைக்க முடியாத தரத்தில் தானே இவை எல்லாம் உள்ளன.

பத்திரிகைத் துறையின் Barrier to entry என்பதே கம்பியூட்டர் தமிழ் எழுத்தை வைத்திருப்பது என்றான பின்,  பத்திரிகை என்பது வீட்டுக்கொரு மரம் நடுவோம் மாதிரி தான்.

எல்லாரும் பத்திரிகையில் வந்ததை இணையத்தில் பகிரும் போது, இணையத்தில் வந்ததை பத்திரிகையில் பகிர்வது தமிழன் தானே!

கடவுளைக் கூட கொத்துரொட்டி மாதிரி விற்கலாம் என்ற அளவுக்கு புலன் பெயர்ந்த நாடுகளில் கோயில் கட்டி வைத்திருக்கிறான் தமிழன்.

பத்திரிகை கூட, இது மாதிரியான ஒரு வியாபார முயற்சியே அன்றி, பத்திரிகையியலின் மக்களுக்கு inform பண்ணும் நோக்கம் எப்போது இருந்தது?

வட்டிக்கு கொடுப்பதையே சமூக சேவை என்று நினைக்கும் யாழ்ப்பாணிக்கு, ஊடகமும் ஒரு சமூக சேவை தான்!

நான் பத்திரிகை ஆசிரியர் ஆனது என்பது ஏதோ நான் நடத்திய இலக்கிய யாகத்தில் தோன்றிய தேவதை எனக்கு ஞானப்பால் ஊட்டியதால் கிடைத்த வரம் இல்லை. சமூகத்தை இருளில் இருந்து ஒளிக்கு நடத்திச் செல்வதோ, எல்லா சஞ்சிகை ஆசிரியர்களுக்கு இருப்பது போல புரட்சி செய்து சமூகத்தை மாற்றியமைப்பதோ எனது நோக்கமாகவும் இருந்ததில்லை.

எனக்கு இருப்பதாக பலரும் சொல்லிக் கொள்ளும் புலி எதிர்ப்பும் ஏதோ புலிகளிடம் பச்சை மட்டை அடி வாங்கியதற்கான பழி தீர்ப்பும் இல்லை.

இதற்கான பின்னணியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமாயின், என்னுடைய பிறப்பு வளர்ப்பின் பின்னணியை அறிந்து கொள்வதன் மூலமாகவே அறிய முடியும்.

ஒரு பத்திரிகையை ஏன் தொடங்கினேன் என்பதை விட, நான் எடுத்த நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன என்பது முக்கியமானது என நினைக்கிறேன். அது என்னுடைய ஆளுமையிலிருந்து தான் வருகிறது.

அதிலும் எவரைப் பற்றிச் சொன்னாலும், ‘ஊரில எவடம்?’ என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வரைக்கும் யாழ்ப்பாணிக்கு நித்திரை வராது. அவர்களுக்கும் ஆயிரம் சோலி.

வெற்றி அல்லது வீரமரணம் மாதிரி… உண்ணாவிரதம் அல்லது கொத்துரொட்டி தானே தற்போதைய போராட்ட வடிவங்கள்.

அதை முன்னரேயே சொல்லி விட்டால், ‘ஓ, அது தானே பாத்தம்! இவர் அவையே!? அது தானே உப்பிடி!’ என்று முத்திரையைக் குத்தி விட்டு தன் வேலையைப் பார்க்கப் போக வசதியாக இருக்கும்.

உங்களுடைய ஆளுமையாக நீங்கள் மதிப்பிடுவது எவற்றை?

என்னுடைய ஆளுமை என்பதற்கான பின்னணிகள் மூன்று விடயங்களில் இருந்து வருகின்றது என நினைக்கிறேன். ஒன்று எனது சமூகமும் நான் வளர்ந்த ஊரும். அடுத்தது நான் சார்ந்த மதமும் அது சார்ந்து எனக்குக் கிடைத்த கல்வியும். கடைசியாக என்னை வளர்த்த என் குடும்பத்தினர். இந்த மூன்றும் தான் இன்று வரைக்கும் என் ஆளுமையை வரையறை செய்து கொண்டிருக்கின்றன.

நான் பிறந்தது புலி காலத்தில் மறைக்கப்பட்டு தற்போது ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நினைப்பில் யாழ்ப்பாணிகளால் resurrect பண்ணி மறுபிறவி எடுக்க வைக்கப்பட்டிருக்கும், ‘விடுதலைக்கான முதல் தற்கொ’டை’ போராளியான சிவகுமாரன் பிறந்த அதே ஊரில் தான். சிறுவனாக கற்பகப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் இருந்த குருநாதி கடைக்கு அப்பா அனுப்பி, தினசரி வீரகேசரி, ஈழநாடு வாங்க போன நாள் ஒன்றில் அவரை ஒரு சைக்கிளோடு கண்ட ஞாபகம் இன்றைக்கும் மனதில் உண்டு. அவர் யார் என்று தெரியாது.

பின்னர் பாஸ்போட்டில் தலை மாற்றி உலகம் சுற்றும் யாழ்ப்பாணிகளுக்கு முன்னோடியாக, பல்வேறு உருவங்களுக்கு அவரின் தலையை மாற்றி யாழ்ப்பாண கலைஞானி ஸ்டுடியோக்காரர் விற்றுத் தள்ளிய படம் ஒன்றில், முகத்தைக் கண்டபின் வந்த ஞாபகம் அது.

(அதில் ஒன்று என்னிடம் அகப்பட்டு என் எட்டாம் வகுப்பு புத்தகம் ஒன்றினுள் நீண்ட காலம் கிடந்தது. எனக்கும் விடுதலை உணர்வு இருக்காது என்று யார் சொன்னது?)

அவர் கூட எங்கள் வீட்டுக்கு மூன்றாம் வீடான குஞ்சப்பு ஒருவரின் வீட்டில் மேல் கூரைக்குள் மறைந்திருந்ததாக ஊருக்குள் கதைகள் வந்தன. உண்மை பொய்யை நான் குஞ்சாச்சியிடம் கேட்டதில்லை.

சைவத்தமிழ் வித்தியாசாலையில் நடந்த கூட்டத்திற்கு வந்த உதவி அமைச்சரோ, (சந்திரசேகர என்ற பெயர் ஞாபகம்!) அவருக்கு உதவிக்கு வந்த உதவிப் பொலிஸ் அதிபரோ, யாரோ வந்த கார் ஒன்றுக்கு அவர் கைக்குண்டு வீசிய அன்றைய கூட்டத்திற்கு அப்பா என்னைக் கூட்டிச் சென்றிருந்தார்.

பிறகு சிவகுமாரன் சிலை ஊர்ச் சந்தியில் திறக்கப்பட்ட கூட்டம், சிலை இருந்த இடத்தில் நடந்த இரத்த திலக தேர்தல் கூட்டங்கள் என தமிழ் தேசிய உணர்வு கிளப்பும் பேச்சுக்களுக்கு எல்லாம் என் அப்பா என்னைக் கூட்டிச் சென்ற போது, தமிழ் தேசியத்தின் தந்தை, அவர் சொன்னதை காதுக்குள் கேட்டு ‘ஐயா, சொல்லுறார்!’ தளபதிகள், கொ.ப.செ, சொல்லின் செல்வர் பிரசார பீரங்கிகள், ஆஸ்தான கவிஞர்கள், சிரிக்க வைக்க என்றே வரும் விதூஷகர்கள் போன்ற அந்தக் காலத்து பொங்குதமிழர் மட்டுமன்றி, கையை பிளேட்டால் கீறி பொட்டு வைப்போர், மாலை றிசைக்கிள் பண்ணுவோர் என வினோதமான எல்லாரையும் விடுப்பு பார்த்திருக்கிறேன். 

அவர் இறந்த போது, பைந்தமிழில் அழும் ஓசை கேட்க, (எனக்கு ஞாபகமாக இருப்பது அந்த நேரம் எங்கோ கேட்ட வாணி ஜெயராமின் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ தான்!) ‘அவர் பாடையில் படுத்தூரைச் சுற்றி வந்த போது, எங்கள் கோயில் போட்டிக்கோவிலும் அவரைக் கிடத்தி, (‘சைவக்காரர், தற்கொலை செய்தவர்’), வேப்பிலையால் ஆசீநீர் தெளித்ததை எல்லாம் கிட்ட நின்று வாய் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்.

தெளித்த கத்தோலிக்க குருமார் எல்லாம் அப்போது தமிழ் தேசியத்தை நம்பி, கூட்டணி மேடைகளில் முழங்கியவர்களும், பின்னாளில் போராளிகள் வங்கிகளைக் கொள்ளையடித்த பணத்தை மறைத்து வைத்திருந்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும்.

அதில் ஒருவர் பின்நாளில் பிரபாகரனுடனான சாதி சார்ந்த நெருக்கத்தினால் புலிகள் கபளீகரம் செய்து தேசியமயமாக்கிய பெரும் முதலீட்டு ஊடகம் ஒன்றை தன் சகோதரன் பெயருக்கு எழுதுவித்து, கோடீஸ்வர ஊடகப் போராளியாக்கி போயிருக்கிறார்.

வாசிப்புக்கும் எழுத்துக்கும் சம்பந்தமில்லாத அந்த சகோதரன் கனடாவில் என்னோடு ஒரே அறையில் இருந்து ஒரே இடத்தில் வேலை செய்தவர்.

எங்கள் சென்.மைக்கேல் கோயில் முற்றத்து மர வேப்பிலையின் கைங்கர்யம் அது!

கோயிலுக்கு உள்ளே சிறுவயது முதல் கும்பிட்டு, பூசைப் பணியாளாக இருந்த நான் பத்திரிகை நடத்தி முழுநேர வேலை செய்து உழைத்த பணத்தை விரயமாக்கும் அளவுக்கு தான் அருள் கிடைத்தது!

நம்ம ராசி அப்படி!

பின்நாளில் அதைக் கடந்து யாழ்ப்பாணம் போன போதுகளில், சிவகுமாரன் படையினரின் வாகனத்தால் இழுத்து முறிக்கப்பட்டு, நீண்ட காலமாக தலைகீழாக நின்று கொண்டிருந்தார்.

துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை என்று முழங்கிய அந்த மேடைக்கு முன்னால் தான் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்ததால், கைக்குண்டு வீசிக் கொல்லப்பட்ட பெட்ரோல் செட் நடராசாவின் பெட்ரோல் நிலையம் இருந்தது. அந்த குண்டுச் சத்தம் ஒரு மைல் அப்பாலிருக்கும் என் வீட்டுக்கும் கேட்டது.

சுற்றி வர இந்துக் கோயில்களாலும், இன்னொரு அங்கிளிக்கன் தேவலாயத்தாலும், பக்கத்தில் காட்டு வைரவராலும், சூழப்பட்டிருந்த ஒரு கத்தோலிக்க தேவாலயத்தை சூழ வாழ்ந்தவர்கள் என் தந்தை வழியின் எங்கள் முன்னைய நான்காம் தலைமுறை.

யாழ்ப்பாண வர்ணாசிரமப் படிகளுக்குள் கீழுள்ள பஞ்சமர்களில் ஒரு கூட்டம். வேதக்கோவிலடி என்று சொன்னாலே சாதி தெரியும். காலில் உள்ள செம்பாட்டு மண்ணைப் பார்த்தால் ஊரே தெரியும். சொந்தமான சிறுகாணிகளில் தோட்டங்களும் செய்து, சுற்றிவர இருந்த மற்ற சாதியினரின் தோட்டங்களில் கூலி செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

இவர்கள் வறுமையாலோ என்னவோ, மலிவு விலையில் கிடைத்த வெறும் சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த நிலங்களை கொத்திக் கிளறித் தான் பெரும்பாலான தோட்டங்களை உருவாக்கினார்கள். இதை என் மாமா ஒருவர் இவர்கள் தான் உண்மையான ‘கிளறிக்கல் சேர்வண்டுகள்!’ (Clerical Servants) என்று சொல்வார்.

அந்தக் காலத்தில் காலனி ஆட்சிக்காரர்களுடன் ஒட்டிக் கொண்டும், பின்னர் அரச அதிகாரத்தை கையில் வைத்தும் கொண்டவர்களால் முடிக்குரிய காணிகள் முதுசக் காணிகளாக்கப்பட்டதனால், அந்த இடத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்திற்கு  என்னுடைய அப்பு செய்த தோட்டக்காணி சொந்தமாக இருந்தது. நம்ம ஊர் எல்லைக்காவலன் வவுனியாவில் வைத்திருந்த காணிகளும் முடிக்குரியவையாக இருந்திருக்கக் கூடும்.

ஏதாவது கொண்டாட்டங்களுக்கும், கோயிலுக்கு வருவதற்கும் மட்டும் சேட்டுப் போட்ட அப்பு தோட்டத்தில் வைத்த புடலம் பந்தலுக்கு நாலு கவடு தள்ளி, என்னோடு பள்ளிநாள் சக பஸ் பயணியாக இருந்த தியாகி திலீபனின் தந்தையார் பின்நாளில் வரம்பில் நின்றபடி வெள்ளை நஷனல், வெள்ளை வேட்டி வேளாண்மை செய்து கொண்டிருந்தார்.

மிகவும் சிறுவயதில், இப்படி தன்னுடைய நிலபுலன்களை ஆண்டனுபவிக்கவும், ஏதோ குத்தகை விசயமாக ஐயாவுடன் கதைக்கவும், தேசிய உடையில் வந்த சுந்தரலிங்கத்தை தூர நின்று பார்த்திருக்கிறேன். முகம் தெரியவில்லை!

உயர்சாதி இந்துவாக இருந்து கத்தோலிக்கராக மாறி, நிறையப் பேரை மதம் மாற்றிய பேரறிஞர் ஞானப்பிரகாசம் சுவாமி, அலைந்து திரிந்து மதம் மாற்றிய காலத்தில், ஒருநாள் காற்றுப் போன அவரது சைக்கிளுக்கு காய்ந்த வாழைத் தண்டு சருகுகளைச் சுற்றி ஓட வைத்ததில் இருந்து, அவரை வழியில் கண்டு பழக்கமாகிய என் முன்னோர், தங்கள் மீதான அடக்குமுறையில் இருந்து மீள்வதற்காக, மதம் மாறினார்கள்.

கந்தன், பூதன், கணபதி எல்லாம், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டு முக்குளித்து யேசுவைக் காண வேண்டிய தேவை இல்லாமல், கத்தோலிக்கப் பெயர்களுடன் தலையில் தெளிக்கப்பட்ட வெறும் நீரால் மட்டும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

அப்போதும், ‘சுவாமி, நாங்கள் பேய்களுக்கு பலி குடுத்து களைச்சுப் போனம்’ என்று சொன்னதற்காக, ‘உங்களுக்கு பேய் கலைக்கிற ஆளைத் தாறன்!’ என்று சொல்லித் தான், பைபிளின்படி பேய்களை அடக்கிய சென்.மைக்கேல் அங்கு கோயில் கொண்டார்.

சோத்துக்கும் சாராயத்துக்கும் மதம் மாறினார்கள் என்று குற்றம் சாட்டும் அளவுக்கு நாங்கள் கெட்டவங்கள் தான், கேவலமானவர்கள் இல்லை!

எங்கள் ஊர் சொந்தமாக கசிப்பு காய்ச்சுவதற்கு பெயர் போனது.  சீனிக் கரைசலுக்குள் மதுவம் விட்டு நொதிக்க வைத்த பரல்களை வாழைத்தோட்டங்களுக்குள் கண்டிருக்கிறேன். பொலிஸ் ஊருக்குள் வரும்போதே சீக்காய் அடித்து சிக்னல் கொடுப்போர்கள் இருந்தார்கள். எனது கனடிய தோட்டத்தில் உள்ள மழைநீர் கொள்கலங்களிலிருந்து காற்றமுக்கத்தை வைத்து நீரை வெளியே எடுக்கும் கலையை நான் சிறுவயதில் யாரோ ஒரு குஞ்சப்பு ஒரு போத்தலில் இருந்த இன்னொரு போத்தலுக்கு சாராயத்தை அனுப்பியதை பார்த்து கற்றுக் கொண்டது தான்.

எனவே, ஊத்திக் கொடுத்து தான் மதம் மாற்றினார்கள் என்று சும்மா வாய்க்கு வந்தபடி சொல்லக்கூடாது!

ஊரில் இன்னொரு பக்கத்தில், சோத்துக்காக மதம் மாறாமல், திருமணச் சடங்கு முடிக்க மதம் மாறிய என் அம்மா, மாமாவின் சகோதரிகள் உட்பட்ட உறவினர்கள் சைவர்களாகவே இருந்தார்கள். தினசரி மீன் சாப்பிட்டு,  கத்தோலிக்க திருவிழாக்களில் மட்டும் இறைச்சி சாப்பிடுவோர் மத்தியில், தீபாவளி, கிடாவெட்டு நாட்களிலும் இறைச்சிக்கறி சாப்பிட எனக்கு இந்து மதம் வசதி செய்திருந்தது.

திணிக்கப்பட்ட சமூக வேறுபாடுகளில் இருந்து தங்களை விடுவிப்பதற்கான வழியாகவும், தங்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தொடர்வதற்கான வழியாகவும் தான் மதம் அவர்களுக்குப்பட்டது.

மதத்தின் வழியாக சிறுபாடசாலை வந்தது. பத்தாம் வகுப்பு வரைக்கும் பிள்ளைகள் கற்கக் கூடியதாக இருந்தது. அதில் எங்கள் சமூக இந்துக்களும் கல்வி கற்றார்கள்.

அதன் பின்னால் உயர்கல்வி கற்பதற்காக, றோட்டோரம் இருந்த இந்துக் கல்லூரியில் சேர்ந்த போது, தாங்கள் பின்வரிசையில் உட்கார வைக்கப்பட்டதாக, என் மாமாக்களுடன் ஒன்றாகப் படித்த, பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்று, கனடாவில் வசிக்கும், எங்களைப் போன்ற பஞ்சமர்களில் ஒருவரான ஒரு எழுத்தாளர் எனக்குச் சொன்னார். 

கத்தோலிக்க மதம் வந்த போது, இன்னொரு பஞ்சமர் குடும்பம் அவர்களின் குலத்தொழிலை தொடர, எங்கள் கோயிலுக்கு அருகில் குடியமர்த்தப்பட்டது. அவர்கள் எங்கள் சகோதரர்களாகவே கருதப்பட்டார்கள்.

எங்கள் பட்டினசபையில் மலம் அள்ளும் தொழிலுக்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குடும்பத்தினர் எங்கள் பாடசாலைக்குத் தான் படிக்க வந்தார்கள். அதில் ஒரு சிறுவன் என்னோடு மூன்றாம் வகுப்பில் படித்தான். வழமை போல, சுமை சுமந்து சோர்ந்திருப்போருடன் எனக்கு இருக்கும் ஒட்டுறவு காரணமாக என்னோடு நெருக்கமான, இரக்கத்திற்குரியவனாக இருந்தான்.

அவனின் தந்தை பட்டினசபைக்கான Town Crier ஆக பறை மேளம் ஒன்றை சைக்கிளில் வைத்து தட்டியபடி, ‘சோலைவரி கட்டாவிட்டால் சட்டி பானைகள் பறிமுதல் செய்யப்படும்’  போன்ற உள்ளூராட்சி சட்டவிதிகளை ஊரெங்கும் அறிவித்துக் கொண்டிருந்தார்.

அவனது குடும்பத்திற்குள் இருந்த அழகான பெண் ஒன்றுக்கு முன் வீட்டுக் கடைக்காரரின் மகன் பிள்ளையைக் கொடுத்ததாகவும், பிறகு காசைக் கொடுத்து சமாளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் அந்தக் காலத்தில் பேசிக் கொண்டார்கள்.

மறுபுறத்தில், வேலைக்கார மலையகப் பையன் மகளுடன் காதல் கொண்டதற்காக நஞ்சு வைத்து கொன்ற கதைகளும் ஊரில் உலாவின.

கள்ளத் தொடர்பை கண்டதனால், கணவனுக்கு தெரிந்து விடக் கூடும் என்று வேலைக்காரனுக்கு நஞ்சு வைத்ததாக அறிந்த கதையை அடுத்து, குமுறிக்கொண்டு அந்த வீட்டின் முன்னால் கூடிய நம்மவர் கூட்டத்தில் நானும் நின்றேன்.

இவ்வாறாக அடக்கப்பட்டவர்களோடு தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பாக்கியவான்கள் அங்கே இருந்தார்கள்.

எங்கள் ஊர் மற்ற இடங்களில் இருந்தது போல, அடுத்தடுத்த தலைமுறைகளில் சாதி ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளானதாக இருந்ததில்லை. வன்முறைகள், வெட்டுக்கொத்துகள் என்று சாதி ரீதியான வன்முறைகள் இருந்ததில்லை.

அதற்கு காரணம், நம்மவர்கள் கொத்துவெட்டில் வல்லவர்களாக இருந்தனர்!

தோட்ட ஆயுதங்கள் தற்காப்பு ஆயுதங்களாகவும் பயன்படக் கூடியனவே!

நம் சாதியினர் ஒருவரை வெட்டிக் கொன்றவர் என்றதற்காக, சுட்டுக் கொலை செய்த நம்மவர்கள் இருந்தனர்.

நம்மவர் பெருமை யாழ்ப்பாணம் பஸ் நிலையம் வரை உண்டு! நகர சண்டியர்கள் பயப்படும் அளவுக்கு!

இந்த துணிச்சல் மதம் சார்பாகக் கிடைத்த கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்பனவற்றால் மட்டுமன்றி, மதம் கொடுத்த பாதுகாப்பு என்ற உணர்வினாலும் வந்திருக்கலாம்.

அதே இந்துக்கல்லூரியில் எங்கள் சமூகத்தினர் பின்னர் ஆசிரியர்களாக இருந்தார்கள்.

உயர்சாதியினர் எனப்படுவோர், என்னைப் பொறுத்தவரையில் ‘இருமரபும் துய்ய’ வந்தவர்களாக இல்லாமல், ‘மெள்ள மெள்ள’ வேளாளர் ஆகியவர்கள் மாதிரித் தான் எனக்கு பட்டது. அவர்கள் எங்களைப் போன்றே தோட்டக்காரர்களாகத் தான் அதிகமாக இருந்தார்கள்.

Clerical servant கள் என்ற அரச சேவையில் படித்தவர்களும், On Her Majesty’s Service-இல் மலாயா, சிங்கப்பூர் சென்ற ஜேம்ஸ் பொண்டுகளும் இருந்தார்கள். இலங்கையின் தற்காலிக தேசாதிபதி, உயர்நீதியரசராக இருந்த ஒரு லிங்கம் உட்பட, அடங்காத்தமிழனின் சகோதரர்களான சிலபல லிங்கங்கள் சட்டவல்லுனர்களாக இருந்தார்கள்.

ஆனால் ஊர் என்ற அளவில் பெரும் யாழ்ப்பாணி அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடியவர்களாகவோ, வன்முறை விரும்பிகளாக இருந்தாகவோ தெரியவில்லை.

அடங்காத்தமிழன் மாதிரி!

மாவிட்டபுர முருகன் நம் ஊரில் இருந்திருந்தால், வரலாறு வேறு ஆகவும் இருந்திருக்கலாம்!

தோட்டத்தில் வேலைக்கு ஆள் பிடித்து வேலை செய்யக்கூடிய பண வசதி இருந்தபடியால், அவர்களில் சிலர் வெள்ளை வேட்டி வேளாண்மை தான். கால் மண்ணில் படாது.

மற்றவர்களைப் பார்த்தால் எங்கள் பக்கத்தவர்களை விட வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கும்.

என் வீட்டுக்கு பக்கத்தில் தோட்டம் செய்த வைரவர் கோயில் பூசாரியின் பேரர்கள் என்னோடு மிகவும் அன்பாக இருந்தார்கள். அவர்கள் எனக்கு அண்ணையாகவும், நான் அவர்களுக்கு ராசாவாகவும் இருந்தோம். எங்கள் வீட்டில் இருந்து எல்லாம் கதைப்பார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் தேநீர் குடிக்க மாட்டார்கள் என்ற விசயம் எனக்குத் தெரியாது. விசயம் தெரியாமல் நாங்கள் தேநீர் போடும் போது, பெருமனதுடன் கொடுக்க நான் முன்வரும் போது, அப்பா சொல்வார், அவே குடிக்கிறேலை!

அவர்களின் தோட்டத்தில் புல்லு பிடுங்கிய என் மாமிகளும் குஞ்சாச்சிகளும் சிரட்டைகளுக்குள் தான் தேநீரும் வாழையிலையில் தான் சாப்பாடுமாக இருந்தார்கள்.

கொஞ்சம் படித்திருந்த என் செல்வநாயக குஞ்சப்பு மட்டும் எங்களிடம் இருந்து கிளாசும் பிளேட்டும் வாங்கி கௌரவத்துடன் சாப்பிட்டு, குடிப்பார். அவரும் இளம் வயதில் குடியால் இறந்து போனார்.

ஆலயப்பிரவேசச் சண்டைகள் எங்கள் பகுதியில் பெரும்பாலும் இல்லை. தங்களுக்கான இடத்தை நம்மவர்கள் உணர்ந்து கொண்டதாலும், தங்களுக்கு வேண்டியதைத் தருகின்ற சிறுதெய்வங்களுக்கு கோழியை வெட்டி நன்றி சொல்லி, தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு பெருந்தெய்வங்களை சிரமப்படுத்த விரும்பாமலும் இவர்கள் பெருங் கோயில்களில் திருவிழா தவிர்ந்த சாதாரண நாட்களில் வழிபட்டதை நான் காணவில்லை.

சகல கலாவல்லர்களான நம்மவர்கள் மேசன், தச்சுவேலைகள் செய்ததால் மற்றவர்களின் வீட்டுக் கட்டுமான வேலைகளுக்கு செல்வதுண்டு. கட்டி முடிந்து தீட்டுக் கழித்த பின்னால், வீடுகளுக்குள் செல்லாமல் வெளியிலேயே கொடுக்கல் வாங்கல்களை செய்து கொண்டிருந்தார்கள்.

கிணறுகளில் தண்ணீர் அள்ளுவது பிரச்சனையாகத் தான் இருந்தது.

இராணுவ வண்டித் தொடர் ஒன்றுக்கு டெலா குண்டு வைத்த போது, அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அகதிகளாகப் போன இடத்தில், கிணற்றில் தண்ணீர் அள்ள விடாததை அறிந்து நானும் நண்பர்களும் விசாரிக்கப் போன இடத்தில், எங்களை ஏதோ இயக்கம் என்று பயந்து, அந்த வீட்டுக்காரப் பெண்கள், ‘சுகமில்லாத பெம்பிளையள் அள்ளிப் போடுவினம் எண்டு தான் வேண்டாம் எண்டு சொன்னனாங்கள்’ என்று அழாக்குறையாகச் சொன்னார்கள்.

யுத்தத்தின் பின்னர், அயலவர்களுடனான உறவுகள் வேறுபாடுகள் இன்றி நெருக்கமாக இருந்ததாவே அறிந்தேன். எங்கள் வீட்டுக்கு முன்னால் தனது தந்தையின் காணியில் குடியேற வீடு கட்டி, கொழும்பு பகுதியில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருந்ததால், என் அக்காமாருக்கு சிரிப்புக் காட்ட நான் அவவை ‘மாமி’ என்று வர்ணிப்பேன். நான் வெளிநாடு வந்த பின்னால், அக்காமாருக்கு மாமி அன்ரியாகி, அன்ரிக்கு என் ஐயா அண்ணையாகி விட்டிருந்தார். இப்போதும் என் சகோதரிகள் அன்ரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

என் சகோதரிகள் ஊருக்குப் போகும் போதெல்லாம் அந்தப் பக்கமாய் போய் நலம் விசாரிக்கும்போதும், என் ஐயா தங்களுக்கு உதவியாக இருந்ததை இப்போதும் நினைவு கூர்கிறார்கள்.

இயக்கத் தொடர்புகள் காரணமாக, தாயகத்தை தெரிந்த ஊர் நண்பர்களும் என்னை நான் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனாக இல்லாவிடினும், என்னையும் அழைத்து அன்போடும் மதிப்போடும் தான் இருக்கிறார்கள்.

இந்துக் கல்லூரியின் வாச்சராக நீண்ட நாட்கள் இருந்த எங்கள் சுந்தரி அப்பு, மைதானத்தில் உதைபந்தாட்டம் நடக்கும் போது கள்வெறியில் பெரும் பகிடிக் கதைகள் சொல்வார்… கிட்டத்தட்ட யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் வேடிக்கை காட்டுகின்ற வைரமாளிகை மாதிரித் தான்.

உதைபந்தாட்டத்தை விட பெரும் சத்தத்தில் சொல்லும் அவரது கதைகள் சுவாரஷ்யமாக இருக்கும். பெரும் சிரிப்பம் கலகலப்புமாய் இருக்கும். சிறுவயதில் நான் அவரின் அன்புக்குரியவனாக இருந்தேன்.

அவர் சொல்வார்…

அட, அவங்களுக்கு பிறந்ததுகள் கள்ளுச் சீவுதுகள்.

எங்களுக்குப் பிறந்ததுகள் ஒபீசில வேலை செய்யுதுகள்!

இந்த ஊரில் தான் சிறுவனாக வளர்ந்தேன். ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமம் தேவை என்பது உண்மையாயின் அது நான் தான்.

என்னை வளர்த்தவர்கள் அவர்கள் தான். நான் வளர்ந்த அப்பா வீட்டிலிருந்து, என் சகோதரர்கள் வீடு வரைக்கும் நான் போகும் வழிகளில், சுட்டிப் பயலான என்னை தங்கள் பேரன்பால் நிறைத்த அவர்களின் அணைப்பில் தான் வளர்ந்தேன்.

பின்நாளில் ஐந்தாம் வகுப்பு வரை தரம் குறைக்கப்பட்ட கலவன் பாடசாலை, அந்த கோவிலடி, அருகில் புதிய நிர்வாக சபை தெரிவாகும்போது கொஞ்ச நாளைக்கு பேப்பர் வரும் வாசிகசாலை இவை தான் என் உலகமாக இருந்தன.

கோவிலடியில் சினிமா, அரசியல், பெண்கள் என கருத்துப் பரிமாற்றம் செய்யும் பெரிசுகளின் கதைகளை ‘சின்னப் பெடியன் கேக்கக் கூடாது’ என்பதால், நண்பர்களுடன் தூரநின்று விளையாடிக் கொண்டே, கேட்பது தெரியாமல் காதை எறிந்து விட்டு கேட்பது முதல், இரவில் பேய் கதை சொல்லி பயமுறுத்தும் பக்கத்து வீட்டுக் கதை சொல்லிக் கிழவிகளால் சிறுநீர் கழிக்க வெளியே போக பயப்படுவது வரை…

வேலிச்சண்டைகள், சிறுவயதுக் காதல் ஓட்டத் திருமணங்கள், சமூக நாடகங்கள், செய்வினை சூனியங்கள், வைரவ வேள்விகள், காலை துயில் கலைக்கும் சைவக் கோயில் பக்திப் பாடல்கள் என்றெல்லாம் என் மனதில் ஆழமாகப் பதிந்த அந்த வாழ்க்கை முறையும் என்னை வரையறை செய்தவை தான்.

அந்த தார் போடாத, மக்கிப் பாதைகள், பற்றைகளுக்கு நடுவால் செல்லும் நெருஞ்சி, இக்கிரிமுள் நிறைந்த ஒற்றையடிப்பாதைகள், பல்வித பயிர்கள் விளையும் சிறு தோட்டங்கள் என என் மனதில் புகைப்படங்களாக படிந்த அந்த மண்ணும், மாந்தரும், மொழியும் தான் பின்நாளில் என் எழுத்துக்களில் வலம் வந்தன(ர்),

இப்படியாக கத்தோலிக்க மத சூழலிலேயே நான் வளர்ந்தேன்.  நான் வளர்ந்த மதமும் அதனால் கிடைத்த கல்வியும் என்னை வரையறை செய்ததில் முக்கியமானவை.

மதம் உங்கள் ஆளுமையில் தாக்கம் செலுத்தியதில் ஒன்று எனின், அது எவற்றை பிரதானமாக உங்களுக்கு கற்றுத்தந்தன?

உன்னைப் போல உன் அயலானை நேசி என்று கற்றுத் தந்தவர்கள் அதைக் கடைப்பிடித்தார்களோ என்னவோ, அதை நான் கடைப்பிடிப்பதற்கான  இயல்பை அந்த மதம் தான் கற்றுத் தந்தது. மற்றவர்களுக்கு அநியாயம் நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை தந்ததும் அதுவே.

பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தி, சமூகத்தில் அமுல்படுத்திய ஒரு மதப்படி, அன்பே சிவம் என்பதைக் கூட, வெளியில் நின்று தான் சொல்லி வணங்க வேண்டிய நிலை இல்லாமல், கோயில் பீடங்களில் குருவானவருக்கு வைனும் தண்ணீரும் எடுத்துக் கொடுத்து மணி அடிக்கும் பணியாளாகவும், சிறுவயதிலேயே பெரியவர்களை விட அதிகமாக பூசையின் போது பைபிள் வாசகம் வாசிக்கும் அளவுக்கு கெட்டிக்காரனாகவும் இருந்தேன்.

மற்ற இடங்களில் கத்தோலிக்க கோயில்கள் கூட சாதிக்கொன்றாக இருந்த போதிலும், சாதி காரணமாக சண்டைகள் ஏற்பட்டு தலைமைப்பீடம் நீதியான தீர்ப்பு வழங்காமல் கோயிலைப் பூட்டி சமாளித்த நிலையில், எங்கள் இடத்தில் நம்மவருக்கென ஒரே கோயில் தான் இருந்தது. அதில் பக்கத்து ஊரில் வசித்த ஒரு தாயும் பிள்ளைகளுமான சிங்களக் கலப்புக் குடும்பம், பர்மாவிலிருந்து அகதிகளாக வந்த லெப்டினன்ட் குடும்பம் என மற்ற இனம், சாதியினரும் வந்து எங்களோடு சேர்ந்து நற்கருணை உண்டனர். பட்டின சபை மலம் அள்ளும் தொழிலாளரும் கிறிஸ்தவ பெயருடையவர்களாக இருந்து கொஞ்ச நாள் வந்த ஞாபகம்.

75ம் ஆண்டு புனித மடுமாதா சிலையை ஊரூராக கொண்டு சென்று, எங்கள் ஊருக்கும் வந்தபோது, எல்லா சாதி, மதத்தினரும் வந்து கும்பிட்ட போது, எங்கள் வீட்டுக்கு முன் ஒழுங்கையில் இருந்த பொலிசின் மனிசி எனப்பட்ட மற்ற சாதி இந்துப் பெண், மடுமாதாவிடம் ‘அம்மாளாச்சி, அவன் திருந்த வேணும்’ என்று அழுது கும்பிட்ட போது, மாதாவுக்கு நான் பூசைப்பணியாளாக மெழுகுதிரி பிடித்துக் கொண்டிருந்தேன்.

மடுமாதா வந்திருந்த போது அங்கே பங்குத் தந்தையாக இருந்த இராயப்பு யோசேப்பு அடிகளார், ஆண்டகையாகி, என்ன நம்பிக்கையிலேயோ புலிகளோடு ஒட்டுறவாகி, புலிவால்களின் போற்றுதல்களுக்குரியவராகி, புலிகள் மாவிலாறைப் பூட்டியதற்கு பதிலடி கொடுக்க, மன்னாரில் புறப்பட்ட இராணுவத்தை, கிளிநொச்சியில் உள்ளுக்க வரவிட்டு அடிப்பதற்காக புலிகள் வெற்றிகரமாக பின்வாங்கிய போது, கொண்டு வந்த மடுமாதாவை திரும்பி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்று விட்டார் என்பதற்காக, வழமை போல புலன் பெயர் யாழ்ப்பாணிகள் மின் கம்பச் சிலுவையில் அறையப்பட வேண்டிய துரோகி ஆக்கப்பட்டார்.

இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்னேரங்களில் நடக்கும் சிறுவர்களுக்கான ஞான உபதேசம், பூசைக்கு உதவும் பணியாட்களின் சங்கத்தில் நடக்கும் பேச்சுகளில் எல்லாம் நான் கலந்து கொண்டிருக்கிறேன். மன்னார் ஆயரான அருட்தந்தை இராயப்பு ஜோசப், எல்லோரையும் விடச் சிறுவயதில் எனக்கு முதல் நன்மை தந்த திருமறைக் கலாமன்றத்தின் சவிரிமுத்து அடிகளார் எல்லாம் சிறுவனாக நான் தெரிந்தவர்கள். துருதுரு பையனான என் மீது அவர்கள் எல்லாம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

மிகவும் நல்ல குணமுள்ள பையனாக இருந்ததால், நான் குருவானவராக வரக்கூடும் என்று வீட்டில் தேவ அழைத்தலுக்கான வேண்டுதல் செபங்கள் எல்லாம் சொன்னார்கள். கழுவின மீனில் நழுவின மீன் மாதிரி நான் நழுவிக் கொள்ள, அதுவரை காலமும் அவ்வாறான சிந்தனை இல்லாதிருந்த என் அண்ணன் ஸ்டாலின் திடீரென்று ஒருநாள் ‘நான் சுவாமியாகப் போறேன்’ என்று சொன்ன போது, தங்கள் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்த்து ஏதோ விதத்தில் தேவ அழைத்தல் கிடைத்தது பற்றி வீட்டார் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மதம் கற்பித்த விடயங்கள் என் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தி, என் சிந்தனையில் ஊடுருவியது மட்டுமன்றி, என் எழுத்துக்களில் பைபிள் வாசகங்கள் மேற்கோள்கள் ஆவதற்கும், சம்பந்தம் இல்லாத இடங்களில் மேற்கோள் குறிகளுக்குள் வருவதற்கும் காரணமாயின.

இளம்பராய கல்வி அனுபவங்கள் எவ்வாறு இருந்தன?

உள்ளூர் கலவன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை நான் வகுப்பில் முதல் மாணவனாக கெட்டிக்காரனாகவே இருந்தேன். என்னைப் போலவே என் அண்ணன் றொபின்சனும் கெட்டிக்காரனாக இருந்ததால், எங்களை வழமை போல இந்துக்கல்லூரிக்கு அனுப்பாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்று தங்கள் வறுமைக்குள்ளும் தீர்மானித்து எங்களை நுழைவுப் பரீட்சைக்கு அப்பா அழைத்துச் சென்றார்;. அதற்கும் வழமை போல, அப்பா சின்னக்கடையில் கழிவு வாய்க்கால், ஆமை இறைச்சி மணம் இரண்டும் கலந்த வாடை வீச்சுக்கு அருகில் உள்ள கடையொன்றில் இடியப்பம் வாங்கித் தந்து தான் அழைத்துச் சென்றார்.

பரீட்சையில் சித்தியடைந்தோர் பட்டியலில் எங்கள் பெயர் உள்ளதா என, எங்கள் அதே தர வகுப்புகளில் ஏற்கனவே அங்கே படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊர் வாத்தியார் ஒருவரின் பிள்ளைகளிடம் பார்த்து வர அப்பா சொன்ன போது, நாங்களும் தங்களைப் போல படிப்பதை விரும்பாததாலோ என்னவோ, அவர்கள் ‘எங்கள் பெயர் லிஸ்டில் இல்லை’ என்று சொன்னதை நம்பாத அப்பா, காந்தன் என்று அழைக்கப்பட்ட எங்கள் மற்ற அண்ணன் ஸ்டாலினை அனுப்பி நாங்களும் தெரிவு செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

ஆச்சியின் காப்புகள் இரண்டை அப்பா அடைவு வைத்து, அண்ணைக்கு எண்பது ரூபாவும், எனக்கு அறுபது :ரூபாவும் பிரவேசக் கட்டணமாகச் செலுத்தி கல்லூரியில் சேர்க்கப்பட்டோம்.

எங்கள் திறமைகளில் நம்பிக்கை கொண்டு எங்களைப் பற்றிய பல கனவுகளில் வீட்டார் இருந்தனர். அங்கேயே அரிவரி தொடங்கி கற்றவர்கள் முதல் மன்னார் வரையான தூர இடங்களில் இருந்து வந்தவர்கள் வரை சிறந்த மாணவர்கள் கற்ற போதும், அவர்களுக்குள்ளும் நான் முதல் மூன்று மாணவர்களுக்குள் வரக்கூடியவனாக இருந்தேன்.

எங்கள் மத்திய பிரிவுக்கு பொறுப்பாக அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் எனப்படும், பின்நாளில் புலிகளின் பிரதேசத்தில் புலிகளோடு நெருக்கமாக இருந்து காணாமல் போன மைக்கேல் ஜோசப் அடிகளார் இருந்தார். நான் அவரின் பிரியத்துக்குரியவனாகவும் இருந்தேன். அதற்கு அவருக்கு கிறிஸ்மஸ் கார்ட் அனுப்பிய ஒரே மாணவன் என்பதும் ஒரு கொசுறுக் காரணமாக இருக்கலாம். அதை பெருமையாக வேறு வகுப்பில் வந்து சொல்லியிருந்தார். அதை விட, என் மாமா திருமணம் செய்த மாமியின் ஒன்று விட்ட சகோதரனும் அவர். தன்னைப் போலவே, சாதி ரீதியாக பாதிக்கப்பட்ட நானும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கக் கூடும்.

கல்வியில் சிறந்திருந்தாலும், எனக்கு தாழ்வு மனப்பான்மையையும், மற்றவர்களுக்கு முன்னால் நிற்க விரும்பாத வெட்கம், கூச்சத்தையும் ஏற்படுத்தி தன்னம்பிக்கை குறைந்தவனாக்கக் கூடிய விடயங்கள் இரண்டு இருந்தன.

அப்படி உங்களை துவண்டுபோகச் செய்த காரணிகள் எவை?

ஒன்று வறுமை.

சிறிமா ஆட்சிக்காலத்தில் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் சூழ்ந்த காலம் அது. அப்பா, ஆச்சி, நான் கொண்ட குடும்பத்திற்கு கிடைக்கும் அரை இறாத்தல் பாணுக்காக விடிய நான்கு மணிக்கு நூற்றுக்கணக்கானவர்களோடு வரிசையில் நின்று, அந்த அரை இறாத்தலையும் அவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் சாப்பிட்டு முடித்திருக்கிறேன். உணவுத் தட்டுப்பாடுகள் நிறைந்த அந்தக் காலத்தில் பஸ் காசிற்கே பணம் இருக்காது. என்னை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பஸ் காசிற்காக வீட்டில் கோழி இட்ட முட்டையை கொண்டு வந்து தேநீர்க் கடை வைத்திருந்த இலங்கையரிடம் விற்று அந்தப் பணத்தை தான் எனக்கு பஸ்ஸிற்கும் சாப்பாட்டிற்கும் அப்பா தந்திருக்கிறார்.

இந்த நிலையில் உடைகள் என்பது அடுத்த கதை. உடுக்கும் உடை கிழிந்த பின்னர் தான் அடுத்த உடை வாங்கித் தரக்கூடிய நிலை. உயர்வகுப்பில் படிக்கும்போது கூட, வாரம் முழுவதும் போட்ட காற்சட்டையை ஞாயிற்றுக்கிழமை மாலை தோய்த்து காயப் போட்டு, மழை காரணமாக காயாமல் ஈரக் காற்சட்டையுடன் பல தடவைகள் பஸ்ஸில் பாடசாலைக்கு போயிருக்கிறேன். உடம்புச் சூட்டில் காய்ந்து விடும் என்ற ஆறுதல் மொழியோடு!

சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் செக்கியூரிட்டி கார்ட்டாக வேலை செய்த மூத்த அண்ணைக்கு கொடுத்த சீருடையை யாழ்ப்பாண தையல் கடையில் கொடுத்து கழட்டி தைத்த காற்சட்டைகளை போட்டுக் கொண்டிருந்தோம்.

அடுத்தது சாதி…

பல்வேறு சாதியினரும் படித்த பாடசாலை. எல்லோரும் அயலானை அன்பு செய்யும் மதத்தினர். இருந்தும் போய்ச் சேர்ந்த கொஞ்ச நாளில் என் வகுப்பிலேயே அடுத்த பிரிவில் இருந்த ஒருவன் ‘நீ என்ன சாதி?’ என்று நேரடியாகவே கேட்டான். அதுவரைக்கும் எனக்கு நாங்கள் என்ன சாதி என்பதை வீட்டார் சொல்லித் தரவில்லை.

எங்கள் ஊரில் படிப்பித்த ஆசிரியர் ஒருவரின் பிள்ளைகள் என்னோடு படித்ததால், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஊட்டிய அறிவில் என் சாதியும் இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் அதை வகுப்பில் வந்து சொல்லி கேலி செய்யப்படுவேன். அது பொறாமையாகக் கூட இருக்கலாம். பெரும் வெட்கத்தையும் அவமானத்தையும் தந்த விடயம் அது.

அதை விட, யாழ்ப்பாணத்தில் பெரிய சட்டத்தரணிப் பரம்பரையைச் சேர்ந்த ஒருவன் சாதியின் உட்பிரிவுகளைத் தெரிந்து கொள்ளப்படும் அளவுக்கு பெற்றோரினால் அறிவூட்டப்பட்டிருந்தான். அவன் அதில் மோசமானவனாக இருந்தான்.

இப்போது நினைக்கும் போது, அவர்களைப் பற்றி கோபம் கொள்ள முடியவில்லை. பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஊட்டி வளர்த்துக் கற்றுக் கொடுப்பதில் இருந்து தானே இந்த வேறுபாடுகள் பரம்பரைகளாக நீள்கிறது. வயதான எல்லோரையும் பெருமதிப்போடு கூப்பிட்டுப் பழகிய எனக்கு, எங்கள் சாதி பெரியவர்களை நீ நான் என்று கூப்பிடும் மற்ற சாதி சிறுவர்களைக் கண்டிருக்கிறேன்.

இவர்கள் எல்லோரையும் கனடாவில் பழைய மாணவர் சந்திப்புகளில் கண்ட போதும், பழையவற்றைக் கேட்டு சங்கடப்படுத்த மனம் ஒப்பவில்லை. சிறுவர்களாக அறியாமையில் செய்ததாகவே அவற்றை நினைக்கிறேன். ஆனால் அந்தச் சட்டத்தரணி குடும்பத்தினனைக் கண்ட போது உதைக்க வேண்டும் என்று தோன்றினாலும், பகைவர்களை அன்பு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் அடையாளம் காட்டாமல் அப்பாலே நகர்ந்தேன்.

ஆனால் உயர்வகுப்பில் நிலைமை வேறாக இருந்தது. கிடைத்த நண்பர்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளாதவர்களாக, மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். என்னுடைய வாசிப்பு ஆர்வத்திற்கு ஈடாக இருந்து பல்வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள் மூலமாக தமிழ்வாணன் முதல் ஜெயகாந்தன் வரை பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர்கள் அந்த நண்பர்கள் தான். அரசியல், இலக்கியம் என்பவற்றுடன், பெண்கள் வரைக்கும் உரையாடும் நம்ம ஊர் பெரிசுகள் மாதிரி நானும் ஆகி விட்டிருந்தேன்.

ஆனாலும், அவர்கள் என் வீட்டிற்கு வர விரும்பிய போதெல்லாம் அதைத் தவிர்த்தே இருக்கிறேன். ஓலைக் குடிசையில் வாழும் என் ஏழ்மையை அவர்கள் காண்பதை நான் விரும்பியதில்லை.

இந்த நிலையில் ஒரு சபையில் முன் தோன்றி எதையும் செய்யக் கூடிய தன்னம்பிக்கை எப்படி வரும்?

இவற்றையெல்லாம் கடந்து தான் என் கல்வி இருந்தது. எனக்கு கிடைத்த அனுபவங்களும் வளர்ச்சியும் ஊரில் உள்ள இந்துக்கல்லூரியில் கிடைத்திருக்க முடியாது.

இந்தக் காலங்களில் தான் எங்கள் தமிழ்த் தேசியத்தின் ஈழக் கோரிக்கை கருக்கொண்டது. 72 ல் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டமும் தரப்படுத்தலும் தமிழர் தரப்பில் எதிர்ப்புணர்வுகளைக் கொண்டு வந்தது. இது மேலோட்டமாக பார்க்கும் போது, தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். ஆனால் இதன் பின்னால் பெரிய யாழ்ப்பாணி அரசியலே இருக்கிறது. தன்னை வெகுகவனமாகப் பாதுகாத்துக் கொண்டே, தனது நலன்களுக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் பலி கொடுக்கும் யாழ்ப்பாணத்தின் ஒரு பக்கம் தான் அது.

அடுத்த பக்கத்தில் தொடர்கிறது

1 Comment

  1. மிக முக்கியமான பதிவு. தமிழ் மக்கள் தேசிய இன விடுதலைக்கு முதல், தமிழ் மக்களுக்குள் சமத்துவ வாழ்வினை உறுதிப்படுத்தும் போராட்டத்தினை முதல் தொடங்கி இருக்க வேண்டும் எனும் முன் நிபந்தனையை முதலில் செய்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக முன்னிருத்தும் வாக்குமூலம் இது! இந்த நேர்காணலைப் படித்த பின் பல விடயங்களை பேச வேண்டும் என்கிற உந்துதல் வருகிறது! இதுவே ஒரு ஆரோக்கியமான மறுபரிசீலனைக்கான வாய்ப்பை திறந்து விடுவது இங்கு கவனிக்கத்தக்கது! ஆனாலும் இந்த மறுபரிசீலனை நடக்குமா என்பதே கேள்விக்குரியதே.., விரிவாக எழுதப்பட வேண்டிய பல காலகட்டங்கள், மாறும் அரசியல் போக்குகள், மாறா சாதிய ஒடுக்குமுறையும் புறக்கணிப்பும் , தாயக, புகலிட அரசியல் ,சமூகச் சூழல்கள், முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என பல விடயங்கள் உள்ளன.நேர்காணல் சட்டென முடிந்த மாதிரி இருப்பது , “பந்தி முடிந்தது, பசிதான் தீரவில்லை” என்பது போல் இருந்தது.

    ஜோர்ஜ் குருஷோவ் எனப்படும் ஒரு சமூக மனிதனை, “ தாயகம்” பத்திரிகைப் பணிக்கு பின்னால் அறிந்து கொள்ள, சமூக ஆர்வலர்களுக்கு இந்தப் பதிவுகள் முக்கியமானதும், பயனுள்ளதுமாகும்!

உரையாடலுக்கு

Your email address will not be published.