உறங்கும் அழகிகளின் இல்லம் : யசுனாரி கவபட்டா (1899-1972)
“அனைத்து வகையான மீறல்களும் உலகின் இருளில் புதைக்கப்பட்டுள்ளன.” நாவலில் இருக்கும் இந்த ஒரே வரியில் நாவலின் முழுவிமர்சனமும் பொதிந்துள்ளது.
யசுனாரி கவபட்டாவின் “மரண வீட்டு சடங்காளன்” வாசித்திருக்கிறேன்.(ஜப்பானிய சிறுகதைகள் – கனலி). இது மரணம் குறித்தான அகத்தாய்வுகளை வேகப்படுத்தும் நுட்பமான சிறுகதை. மரணம் மனிதனின் அகத்திற்குள் நிகழ்த்தும் மாற்றம் அசாத்தியமானது.
ஒருவர் வளர்ந்து ஆளாகும்போது அவருடைய செயல் பண்புகளாக எதிரொளிப்பவைகள் எல்லாம் சிறுவயதில் சந்திக்கும் மரண நிகழ்வுகள் குறித்தான சிந்தனைகளின் பகுமானங்கள் என்பதை இக்கதை அழகாக வெளிப்படுத்தும். கதையில் மரண சடங்காளனின் (மரணத்திற்கு உரித்தான) துயரின் வாசனைக்கு அன்னியமாகும் நடத்தைக்கான காரணம் கதையாக விரிவடையும்.
மரணத்தின் மீதான மோகம் காத்திருப்பதற்கான பொறுமையை வழங்குவதில்லை. யசுநாரி கவபட்டா 1968இல் நோபல் பரிசு பெற்று, நான்கு ஆண்டுகள் கழித்து தற்கொலை செய்து கொண்டவர்.
ஆச்சரியம் + அதிர்ச்சியான கேள்வி என்னவென்றால் நெருக்கமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவரின் பிரதியாக மாறத்துடிக்கும் வேட்கையின் உந்துதலும் கவர்ச்சியும்
மரணத்தை அணைத்துக்கொள்வதிலும் வந்து விடுமா?!
யசுநாரியின் நண்பரும் சக எழுத்தாளுருமான யுகியோ மிஷிமா 1970 இல் தற்கொலையால் இறந்த அதிர்ச்சிதான் இவரையும் துயரத்தின் விளிம்பிற்கு நகர்த்தி தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது என்கிறார்கள்.
ஜப்பானில் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம். முரகாமியின் இளைஞர்கள் பெண்களை மட்டுமில்லாமல் மரணத்தையும் வேகமாக முத்தமிட கூடியவர்கள்.
கவபட்டாவின் உறங்கும் அழகிகளின் இல்லம் இதை முதியவர்கள் வழியாக வந்த சிந்தனையின் நீட்சி என்கிறது.
போரின் வெற்றி தோல்விகளுக்கு பின்னால் அது தனிமனிதர்களின் அகத்தில் தோற்றுவிக்கும் தடயங்களே எதிர்கால சமூகத்தைக் கட்டமைக்கிறது. வாழ்வின் மகிழ்ச்சி பெண்ணோடு உறவு கொள்ளும் நேரத்தில் மட்டுமே மலர்வதாகக் கருதுபவர்கள், குறிப்பாக குறுகிய காலத்தில் போரை சந்தித்த நாடுகளில் அதிகம். இந்தவொரு இன்பம் கண நேரத்தில் தீர்ந்து போக கூடியதாக இருந்தாலும் அமைதிக்கான தேடல் உடல் எழுச்சியோடு பிணைந்திருப்பாகவே நினைக்கறார்கள். துரதிருஷ்டமாக துடிப்பான உடலின் அஸ்தமனம் விரைவில் நிகழ்ந்துவிடும்.
தூங்கும் அழகிகளின் இல்லம்
மூச்சு திணற வைக்கும் மரணநிழலின் அடர்த்தியிலிருந்து விலகி / மறந்து புணரமைத்துக் கொள்ளுவதற்கான மாயை, கூடவே உளவியல் ரீதியான சில வாய்ப்புகளையும் வழங்குகிறது. மேலும் இது கடும் ஆட்சேபனைக்கும் கண்டனத்திற்கும் உரிய ஆண் மனதின் சிந்தனை. “பெண்களைப் பெண்களாக பயன்படுத்த முடியாத முதியவர்கள் அடிக்கடி வரும் வீடு .” என்கிறார் கவட்டா.
மருந்துகளின் மூலம் தூங்க வைக்கப்படும் இளம் அழகிகளின் அருகில் படுத்து, அவர்களைப் போல் ஆடையின்றி உறங்கும் முதியவர்கள் தங்களுடைய நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில் தங்கள் அந்திமத்தின் சுருதி மெல்ல மெல்ல அதிகமாவதையும் கவனிக்கிறார்கள். முதியவர்கள் எல்லோரையும் வளமும் வலிமையும் இழந்த மரங்களாகக் கருத முடியாது. விதிகளை மீறுவதற்கு காரணங்கள் தேவையில்லை.
The House of Sleeping Beauties எதிர் வெளியீடு மூலம் உறங்கும் அழகிகளின் இல்லமாக எழுத்தாளர் அரிசங்கர் மொழிபெயர்த்திருக்கிறார். இது அவருடைய முதல் மொழிபெயர்ப்பு முயற்சி. நூலில் நிறைய தவறுகள் இருந்தாலும் ஒரு எழுத்தாளர் / தீவிரவாசகர் மொழிபெயர்ப்பாளராக அவதரிக்கையில் உருவாகும் சிக்கல் / தடங்கல்களில் இருந்து மீண்டெழுந்து மொழியின் நுட்பமான உச்சத்தை வெளிப்படுத்த முடியும்.
நேரேடி மொழிபெயர்ப்பிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்கிறபோது ஆதார சுருதி தப்பி விடுகிறது. பிறமொழி சாத்திரங்கள் தமிழுக்கு கொண்டு வருவதில் இன்னும் எத்தனைக் காலத்திற்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க போகிறது? உலக மொழிகளில் பிரெஞ்சு தவிர்த்து, இந்திய மொழிகளில் கன்னடம், மலையாளம் தவிர்த்து நிலவும் பெரும் வெற்றிடம் எப்போது நிறைவடையும்?
ஒருமுறை பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகரிடம் இதுப்பற்றி விவாதித்தபோது “பிற மொழி கற்றவர்களுக்கு பஞ்சமொன்றுமில்லை, இருக்கும் ஒரேயொரு தடை அவர்களுக்கு போதிய வாசிப்பு பழக்கமும் இலக்கிய ஆர்வமும் இல்லாததுதான்.” என்றார்.
ஒருவகையில் “உறங்கும் அழகிகள் இல்லம் ” சிறப்பாக இருப்பதற்கு காரணம் மொழிபெயர்ப்பாளரின் தீவிர வாசிப்பும் கட்டுக்கடங்காத இலக்கிய ஆர்வமும் காரணமாக இருக்கலாம். இலக்கிய களத்தில் தொடர்ந்து இயங்கி வரும் அரிசங்கர் இலக்கிய உலகின் மாறுபட்ட களத்தில் மாறுபட்ட சிந்தனையோடு எழுதப்பட்ட யசுனாரி கவபட்டாவின் The House of Sleeping Beauties நாவலை தமிழ் வாசகர்களுக்கு வழங்கியமைக்கு வாழ்த்துகள். புத்தகத்தின் முகப்பட்டை மற்றும் வடிவமைப்பு சிறப்பாக வந்திருக்கிறது.
ஜப்பானிய நாவல், தமிழில்; அரிசங்கர், The House of Sleeping Beauties ,Yasunari kawabata
எதிர் வெளியீடு, இணையத்தில் வாங்க
- மஞ்சுநாத் – எழுத்தாளர்
௦௦௦
இரவாடிய திருமேனி : வேல்முருகன் இளங்கோ
வேல்முருகன் இளங்கோவின் மூன்றாவது நாவல் – இரவாடிய திருமேனி. இதற்கு முன்னர் ஊடறுப்பு, மன்னார் பொழுதுகள் ஆகிய இரு நாவல்களை எழுதியிருக்கிறார்.
இரவாடிய திருமேனி – தலைப்பும் அதற்கு நியாயம் சேர்க்கும் அழகிய அட்டைப்படமும் கெட்டி அட்டையுடன் கூடிய புத்தக ஆக்கமும் உடனே வாசிக்கத் தூண்டின. குறுநாவல்கள், குறுங்கதைகள் என்று ஒரு பக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே கிட்டத்தட்ட ஐந்நூறு பக்கங்களில் ஒரு நாவல் எழுதப்பட்டு வெளிவருவதே மனத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெருநாவல்களின் ரசிகன் நான். வாசிக்கத் தொடங்கி முடியும் காலம் வரை முற்றிலும் வேறொரு புனைவுலகுக்குப் போய்ப் போய் மீள்வது, ஒரு நாவலை எழுதுவதைப் போலவே அற்புதமான அனுபவம். எழுதும்போது இனம்புரியாத ஒரு வாதையும் வந்து சேர்ந்துகொள்ளும். எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பும் வரை வேறெதிலும் மனம் செல்லாது. வாசிப்பில் அந்தத் தொல்லை இல்லை.
எந்தவித முன் முடிவுகளுக்கும் இடமளிக்காமல் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். முதல் சில பக்கங்களிலேயே நாவல் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஒரு சிறுகதை முதல் பத்தியிலேயே தொடங்கிவிட வேண்டும், அதே போல நாவலுக்கு ஒன்றிரண்டு அத்தியாயங்கள். அவ்வளவுதான். ஒரு வரலாற்றுப் புனைவு நாவலை வாசிக்கும்போது அவ்வுலகம் வாசிப்பவனுக்குள் விரிய வேண்டும். ஒவ்வொருமுறை புத்தகத்தைத் திறக்கும்போதும் மூடும்போதும் இடமும் காலமும் திரிந்து குழம்ப வேண்டும். இவ்விரண்டும் நிகழுமாயின் அந்நாவல் முதல் வெற்றியைப் பெற்றுவிட்டது எனலாம். அதை இரவாடிய திருமேனி மிகச் சுலபமாக அதைச் சாத்தியப்படுத்திவிட்டது.
நாவலில் மலைக்காடு, நகர்வெளி என இருபெரும் திணைகள் மாறி மாறி வருகின்றன. ஒவ்வொன்றும் அவற்றுக்கான அத்தனை லட்சணங்களையும் தாங்கி வந்திருக்கின்றன. கதிரவனொளி இறங்கா காடு நம்மை அதன் புதிர்ப் பாதைகளுக்குள் புதைத்துக்கொள்கிறது. பாலை நிலத்துக்கு உரிமையுடையவனான கள்வன் சாம்பன் காட்டின் ரகசிய மலரைக் கொய்ய வந்து இறுதியில் காட்டின் வசியத்துக்கு வசப்பட்டுக்கொள்கிறான். சாம்பனோடு சேர்த்து நாமும் வனத்தின் மாயப் பிடிக்குள் சிக்கிக்கொள்கிறோம்.
மறுபக்கம் நாயக்கர் கால சிற்றரசு, அதன் படை பரிபாலனங்கள், அவற்றை நெறிப்படுத்தும் ஞானசபை என்று கதை நிகழ்கிறது. இவ்விரு திணைகளையும் இணைக்கும் கண்ணியாய்த் திகழ்கிறது தீக்கடம்பை மலர். இம்மலரைச் சுற்றி கள்வன் சாம்பன், நாவிதப் பண்டிதர்களான பெரியசாமி, பரிதி, கோதை ஆகியோரின் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது. இறுதியில் இரு பெரும் திணைகளையும் அவற்றைக் கட்டும் அம்மலரையும் எனச் சகலத்தையும் கட்டிக் காப்பவளாக இருக்கிறாள் இரவாடிய திருமேனியுடையவள்.
சாம்பன், பரிதி, சுருளி, பெரியசாமி, கோதை, ராணி நாகம்மை, கிருஷ்ணப்ப நாயக்கர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான குணாதிசியங்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்குமான அகக் கொந்தளிப்புகளைத் துல்லியமாக காட்சிப்படுத்தியதின் வழியே வெளியே நிகழும் கதைக்கு ஊடாக அக வழியாகவும் ஒரு கதை நகர்கிறது. அதிலும் ராணி நாகம்மையின் கதாப்பாத்திரம் இதுவரை தமிழ்ப் புனைவுலகில் எழுதப்படாத ஒன்று. அவளின் மன விகாரங்களுக்குப் பின்னிருப்பது அரண்மனையின் இருளைத் தவிர வேறொன்றுமில்லை. மினுமினுக்கும் ராஜ வாழ்வுக்குப் பின்னிருக்கும் சிதிலமடைந்த சுவரின் சிறு கீறலே அவளின் அகம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது அவள் மேல் பரிதாபமே எழுகிறது.
நாவலில் குறிப்பிட்ட சில இடங்களில் முதலில் ஒரு சம்பவம் காட்டப்படும். சில அத்தியாயங்களுக்குப் பின்னர் அதே சம்பவத்தின் மற்றொரு கோணம் வெளிப்படும். நேரடியாகச் சொல்வதைவிட இந்த உத்தி பின் வரும் காட்சியின் தீவிரத்தை உணர்த்தச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெரியசாமியின் மந்திரத்துக்கு கட்டுண்ட யானையை விடுவிக்கச் செந்நாய்களைக் கட்டவிழ்த்ததே வனப் பேச்சிதான் என்று அந்தக் காட்டுப் பெண் சொல்லும் காட்சியில் அதுவரை கொடூரமாகக் காட்டப்பட்ட செந்நாய்களே காட்டைக் காக்கும் காவலர்களாக மாறி நிற்கும் இடம், நாவலின் உச்ச தருணங்களில் ஒன்று. சுருளியும் சங்கனும் இறக்கும் தருணங்கள், கோதையைக் காந்தர்வன் புணரும் இடம், இறப்பு வீட்டில் குழந்தையை மாற வர்மன் கை நடுங்க வாங்கும் இடம், சாம்பன் இரவாடிய திருமேனியைத் திரும்பக் காணும் இடம் என்று நெகிழ்வுச்சமிக்க தருணங்கள் நாவலெங்கும் வருகின்றன.
இரவாடிய திருமேனி, சாம்பனைத் தொடரும் ஒற்றைக் காகம், மாபெரும் சங்கு, அச்சு முறியும் தேர் என்று நாவல் நெடுக கட்டமைக்கப்பட்டுள்ள படிமங்களும் நாவலுக்கு இடையிடையே வரும் கிளைக் கதைகளும் நாவலின் அடர்த்தியைக் கூட்டி அதன் இறுக்கமான கட்டமைப்புக்கு வழிகோலுகின்றன. நாவலில் காந்தர்வன் தன் காவியமான இரவாடிய திருமேனியை அரங்கேற்றும் காட்சிகள், ஞான சபை விவாதங்கள், அந்த மாபெரும் சங்கு என்று இந்த நாவல் எழுந்து நிற்கும் வடிவம் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை நினைவுபடுத்துகின்றது.
இது போன்ற காவிய நாவலில் மொழிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நாவல் நடைபெறும் காலத்துக்குப் பொருத்தமாகவும் அதே நேரத்தில் புத்துணர்வோடும் இருக்க வேண்டும். இதில் அப்படியான மொழி பயின்றுவந்திருக்கிறது. மிகச் சிறந்த வாசிப்பனுபவம் கொடுத்த நாவல். தமிழின் முக்கியமான நாவல்கள் வரிசையில் நிச்சயம் இடம் பெறும். வேல்முருகன் இளங்கோவின் பெயர் சொல்லும் நாவலாக இருக்கும்.
எதிர் வெளியீடு, இணையத்தில் வாங்க
- கார்த்திக் பாலசுப்பிரமணியன் – எழுத்தாளர்
௦௦௦
கொடை மடம் : சாம்ராஜ்
சாம்ராஜின் புதினம் ‘கொடை மடம்’ அறுநூறு பங்கங்களில் பெருநாவலாக விரிந்துள்ளது. மதுரையின் வண்ணங்கள் படிந்த நிலத்தின் கதை; எனினும் இதுவரை நாம் கண்டிராத, அதிகம் கவனம் குவிக்காத மனிதர்களின் கதைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பரவியுள்ளன. ஜென்னி X முகுந்தன் என்ற இரண்டு கதை மாந்தர்களின் காதல் கதை ஓர் உணர்வுத் தளத்தில், தத்துவ முரண்களின் இடைவெளிகளை, நடைமுறை சிக்கல்களை ஊடுருவி விரிக்கிறது. முகுந்தனை பற்றியிழுக்கும் ஜென்னி மீதான காமம், கடும் தீயாக அவனைச் சுற்றி எரிக்கிறது. அவளது அத்தனை கோணல்கள் சிறுமைகள் மத்தியிலும், துன்புறுத்தல்கள் ஊடுருவி சிதைத்த போதும், அவளை விட்டு நீங்கிச் செல்ல இயலவில்லை; இருவரும் ஒருவரையொருவர் காலபோக்கில் மாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். இருந்தும் அது தங்களுக்கு தாங்கள் சொல்லிக்கொள்ளும் போலிச் சமாளிப்பு என்று தங்களுக்குள் அறிந்திருப்பார்கள். இந்த நுண்மையான உள் நாடகங்கள், இவர்களுக்கு இடையிலான உறவை இலக்கியம் ஆக்குகிறது.
இக்கதை வெறுமே காதல் கதையல்ல. ஒரு நூற்றாண்டின் பென்னம்பெரிய மானுடக்கனவு அடுத்த நூற்றாண்டில் சிதறி உடைந்து போனப்பினர், எஞ்சிய நம்பிக்கையில் வாழ்க்கை முழுவதையும் பாட்டாளி மக்களின் விடுதலைக்காக ஒப்படைத்து, தமது அத்தனை சௌகரியங்களையும் துறந்தவர்களின் கதை. இன்னும் கூர்மையாகச் சொல்லப்போனால் அமைப்புக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் இருக்கும் முரண்களின் தொகுப்பு என்று சொல்லலாம். இங்கே அமைப்பு அரசு, அரச எந்திரங்கள் மட்டுமல்ல, கதை மாந்தர்கள் சார்ந்து இயங்கும் மார்க்சிய அமைப்புகளையும் சேர்த்தே என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
இந்த நாவலை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்கவைக்க நாவல் முழுவதும் நிறைந்திருக்கும் அங்கத நடை உதவினாலும், அந்த அங்கதத்திற்கு அடியில் கசப்பான மெல்லிய சோகம் பரவியிருக்கிறது. நாம் காவியப்படுத்திய தியாகங்கள் ஒருவகை என்றால், அதற்கு அப்பால் மறையுண்டு இருக்கும் தியாகங்கள் ஏராளம். இந்த நாவலில் மறைபிரதியாக நிறைந்து இருப்பது அவ்வாறான தியாகங்களே. சாம்ராஜின் அங்கதச் சித்தரிப்பு, மனிதர்களின் அப்பாவித்தனம் (innocent) தூய்மையாக வெளிப்பட நீக்கமற உதவுகிறது.
ஜென்னி பாத்திரம் மீதான உறுதியான சித்தரிப்பு, பொருள்முதல்வாதம் கொடுக்கும் இடைவெளிகளை தன் கண்ணோட்டத்தில் இலக்கியங்கள் ஊடக நிரப்பி வாழும் முகுந்ததின் பார்த்திரச் சித்தரிப்போடு மிக அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. மிகுதி மாந்தர்கள் அமைப்பில் இருந்து உதிர்ந்து விழும் ஒரு பழுத்த இலையாக, தங்கள் தனித்தனி குணாதிசயங்களுடன் பதிவாகியிருக்கிறார்கள். மதுரையில், காலங்களுடன் முன்னும் பின்னும் சென்று கரைந்து சஞ்சரிக்க வைத்த சாம்ஜார்ஜுக்கு வாழ்த்துகள்.
பிசகு வெளியீடு, இணையத்தில் வாங்க
- அனோஜன் பாலகிருஷ்ணன் – எழுத்தாளர்