இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், ஓட்டமாவடி எனும் கிராமத்தில் பிறந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம்பெற்று சட்டத்தரணியாக பணியாற்றிய எழுத்தாளர் மாஜிதா தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறார். மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் ஈடுபாடுடைய மாஜிதாவை இங்கிலாந்தில் நிகழும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் காணலாம். தனது சத்தான குரலால் விடாப்படியாக ஆதிக்கத்திற்கு எதிரான குரலை பகிர்ந்து வருகிறார். தன்சார்ந்த சமூகத்துக்குள் நிகழும் ஒடுக்குமுறைகளை துணிச்சலுடன் எழுதியும் பேசியும் வருவதால் பல்வேறு வசைகளையும் சமகாலத்தில் எதிர்கொண்டவர். சிறுகதைகள், விமர்சனங்கள் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கிவந்தவரின் முதலாவது நாவல் பர்தா. இந்நாவல் வெளிவந்தபின்னர் காரசாரமான பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இணையம் வழியாக அவருடன் நிகழ்த்தப்பட்ட நேர்காணல் இது.
வாசிப்பின் மீதான ஆர்வம் எப்போது ஏற்பட்டது, அந்த நினைவுகளை இப்பொழுது நினைவுகூற முடிகிறதா?
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி எனும் கிராமத்தில் நான் பிறந்தேன். கடல் , வயல் என இயற்கையின் பசுமையால் சூழப்பட்ட எனது ஊரின் பெயரில் வரலாற்றுத் தகவல்கள் பல பொதிந்திருக்கின்றன . ஓட்டமாவடி கூட்டுறவுச் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலையின் முதலாவது தொகுதி மாணவர்களில் நானும் ஒருத்தி. ஆயிஷா டீச்சரும் வாழைச்சேனை மாலா டீச்சரும் எங்களது ஆசிரியைகளாக இருந்தார்கள். பாட்டுக்கள், கதைகள், நடனம் என மகிழ்ச்சியான நிகழ்வுகளுடன் எனது பாடசாலைப் பருவம் ஆரம்பமானது.. முதலாம் வகுப்பு தொடக்கம் மூன்றாம் வகுப்பு வரை ஓட்டமாவடி வித்தியாலயத்தில் பயின்றேன். பின்னர் ஐந்தாம் வகுப்பு வரை பொலநறுவை மத்திய கல்லூரியிற்குச் சென்றேன். மீண்டும் ஓட்டமாவடி பின்னர் கண்டி, கல்முனை என பல நிறக் கலவையிலான மிட்டாய்களைச் சுவைக்கும் உன்னத தருணங்களைப் போன்று எனது பாடசாலைக் கல்வி மாறிக் கொண்டேயிருந்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்திலும் பின்னர் சட்டக்கல்லூரியில் பயின்று ஓட்டமாவடியின் முதலாவது பெண் சட்டத்தரணியாக வெளியேறினேன். அந்தக் காலப்பகுதியில் பாடசாலைகளுக் கென்று தனியாக நூலகம் என்பது இல்லாத பொழுதிலும்
ஆரம்ப பாடசாலைகளில் படிப்பித்த ஆசிரியர்கள் மூலம் தான் எனக்கு முதலில் வாசிப்பின் மீதான ஆர்வம் ஏற்பட்டது, நான்காம் வகுப்பில் தமிழ் பாடம் கற்பித்த பரீதா ரீச்சர் எனது வாசிப்பின் ஆர்வத்தினை தூண்டியவர் , வகுப்பில் ஏதாவது வாசிப்பு என்று வரும்போது என்னைத்தான் எழுப்பி விடுவார். அந்நாட்களில் பத்திரிகையில் வருகின்ற செய்திகளில் எதையாவது ஒன்றினை ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தினை எங்களுக்கு உணர்த்திக் கொண்டேயிருப்பார், தமிழ் பாடம் படிப்பித்த இஸ்மாயில் சேர் ஆங்கிலப் பாடம் படிப்பித்த செல்வராஜா சேர் அனைவருமே வாசிப்பினை ஊக்குவித்தவர்கள் தான்.
உங்கள் தந்தையார் எழுத்தாளர்; எனவே அவர் வழியாக ஏராளமான புத்தக அறிமுகங்கள் நிகழ்ந்து இருக்குமே?
வாப்பா மிருக வைத்திய உத்தியோகத்தர். அவருடைய உத்தியோகத்தினையும் தாண்டி மிருகங்களுடன் அவருக்கு ஒரு பிணைப்பு இருந்தது. எங்களுடைய வீட்டில் எப்பொழுதும் ஒரு மாடு செல்லக் குழந்தையாக எங்களைச் சுற்றிக்கொண்டேயிருக்கும். நான் பின்னேரங்களில் நானாவுடன் சென்று வைக்கோல் , இலை குலை என்று மாட்டிற்குத் தேவையான உணவுகளை எடுத்து வருவேன். ஒரு நாள் நானா பாடசாலையிலிருந்து வரும்போது மாட்டுக்கு ஊசி போடுற எஸ். எல். எம் அனீபா காக்காட மகன் என்று யாரோ தன்னை விளித்துக் கூப்பிட்டதாக அழுது கொண்டு வந்தான். மாட்டுக்கிட்ட இருக்கும் நல்ல குணங்கள் மனிசனிடம் இல்ல மக்களே என்று வாப்பா எங்களை ஆற்றுப்படுத்தினார். வாப்பா அறுவது எழுபதுகளில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தீவிர ஆதரவாளர். பின்னர் யு. என். பி ஆட்சிக்கு வந்த பொழுது அவரை திருக்கினாமோடு, வெலிக்கந்தை போன்ற பல கிராமங்களுக்கு பதவி மாற்றம் செய்ததாகவும் வாப்பாவுடன் உம்மா, நானா அனைவரும் சென்று அங்கே வசித்ததாகவும் உம்மா கதை சொல்வார். வாப்பாவை யானை துரத்தியமை, மான் வேட்டையாடியது, நானாவை பாம்பு கடித்தது போன்ற திகில் நிறைந்த சம்பவங்கள் அவரது கதையில் கறைந்திருக்கும். மூன்றாவது பெண் குழந்தை பிறந்தால் மூலையெல்லாம் பொன் என்ற எங்களது ஊர் பேச்சை நான் பிறந்த போது எங்களது வீட்டில் மனதார நம்பினார்கள். அன்று தொடக்கம் எங்களது குடும்பத்தில் ஊன்றியிருந்த வறுமை மெது மெதுவாக கரைந்து சென்றதாக வாப்பாவிடமும் உம்மாவிடமும் ஒரு புரிதல் உண்டு. நான் மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் பொழுதே வாப்பாவின் சைக்கிளைக் கண்டால் பாய்ந்து கையை நீட்டியதாக எனது மாமிமார்கள் கூறியிருக்கின்றார்கள். அவ்வளவு அணுக்கமாக வாப்பாவும் அவரது சைக்கிளும் என்னுடைய குழந்தைப்பருவம் முதல் இருந்து வந்தார்கள்.
வாப்பா பொலநறுவையிற்கு இடமாற்றம் பெற்ற பொழுது எனக்கு எட்டு வயது. உம்மா அதிகாலையில் எழுந்து மாட்டில் பால் கறந்து இரண்டு போத்தல்களில் என்னிடம் தருவார். நான் காமினி மாமா வீட்டிற்கும் லெப்பை மாமா வீட்டுற்கும் கொடுத்து விட்டு வரும் வழியில் காலைப் பனி படர்ந்த நிலத்தில் விழுந்து கிடக்கும் விளாம்பழங்களை நான் அணிந்திருக்கும் சட்டையை விரித்து அதில் பொறுக்கி கட்டிக் கொண்டு வீட்டிற்கு எடுத்து வருவேன். பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தை வீட்டில் இருந்த ஊண்டியலில் போட்டு விட்டு பாடசாலைக்குச் செல்வேன். பொலநறுவை மத்திய கல்லூரியில் படிப்பித்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர்களான குணசீலன், , ராஜரட்ணம், போன்றோர் பின்னேரங்களில் எங்களது வீட்டிற்கு வருவார்கள். வாப்பாவுடன் மிருக வைத்தியக் கந்தோரில் வேலை செய்த சில சிங்கள நண்பர்களும் இணைந்து கொள்வார்கள். சில வேளைகளில் இரவுச் சாப்பாடு முடிந்த பிறகும் அவர்கள் அனைவரும் கதைத்துக் கொண்டேயிருப்பார்கள். உம்மா இரவுச் சாப்பாட்டிற்காக பின்னேரங்களில் கறியை சமைத்து விட்டு சற்று தாமதமாகித்தான் சோற்றை சமைப்பார். ஏனென்றால் அந் நாட்களில் மாலை ஐந்து மணியிற்குப் பிறகு மட்டக்களப்பினை நோக்கிச் செல்லும் வாகனம் எதுவும் இல்லை. ஆகவே கொழும்பு, கண்டி என வெளியூரிற்குச் சென்று வரும் ஓட்டமாவடி, ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் தமது ஊரிற்கு போக முடியாத சந்தர்ப்பங்களில் எங்களது வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வார்கள். அன்றைய இரவுகளில் எங்களது வீடு முழுக்க கதைகளும் சிரிப்பும் நிறைந்த குதூகலம் பூத்திருக்கும். இவ்வாறு இயற்கையையும் மனிதர்களையும் ஒன்றாக இணைத்த ஒரு அன்னத்தை எனது பெற்றோர்கள் எங்களுக்கு ஊட்டினார்கள்.
1980 களில் தொடங்கிய ஜேவிபி பிரச்சனையின் பொழுது ஒரு நாள் நானும் வாப்பாவும் அவரது மிருக வைத்தியக் கந்தோரில் இருந்து பொலன்னறுவை நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருக்கையில் கல்லல கிராமத்தின் சந்தியில் நான்கு மனிதத் தலையோடுகள் டயரின் அடியில் நெருப்புடன் போராடிக் கொண்டிருந்தன. வாப்பா எனது கண்களைப் பொத்திக்கொண்டு வீடு வந்த நினைவுகள் இன்றும் சில வேளைகளில் என் மனக் கண்ணில் தீ விட்டு எரிவதுண்டு. அந்த சம்பவத்தின் பின்னர் தான் மனிதர்களுக்கிடையில் சண்டை வந்தால் கொலைகள் நடக்குமா என்று நான் முதன் முறையாக கேள்வி கேட்டதும் உணர்ந்து கொண்டதும். அதே காலப் பகுதியில் நாங்கள் ஊரிற்கு திரும்பிய பொழுது வாப்பா அரசியலில் பிரசன்னமானார். முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் எம். எச் . எம் அஷ்ரப் முதன் முதலாக ஊரிற்கு வந்த பொழுது வாப்பா என்னை மேடையில் ஏறி பாட்டுப் படிக்கச் சொன்னார். அத்தனையாயிரம் மக்கள் திரளின் முன்னால் நான் ஏறி நின்ற பொழுது என்னையும் அறியாமல் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. நடுங்கிய குரலில் நான் பாடி முடிக்கையில் அனைவரும் சேர்ந்து எழுப்பிய கரகோஷத்தில் பயம் , மேடைக் கூச்சமெல்லாம் மறைந்து ஓர்மத்தின் வாசல்கள் திறந்து கொண்டன பின்னாட்களில் வாப்பா சென்ற எந்த அரசியல் மேடைகளையும் நான் விட்டு வைக்கவில்லை. என்னவென்று புரியாத வயதாக இருந்தாலும் எல்லோரின் முன்னாலும் மேடையில் ஏறி நிற்பதால் ஒரு வித துணிச்சல் என்னுள் பற்றியிருந்தது.
வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாப்பா உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட காலப்பகுதியில் எனது உம்மாவின் தம்பி புகாரி மாமா எல். ரீ்.ரி யின் பொறுப்பாளராக கல்குடாத் தொகுதியில் இருந்தார். மாமாவின் கையிலிருந்த துப்பாக்கி ஊரின் பலரது உயிர்களை கொன்று குவித்தது. அவரின் தோட்டாக்களுக்குப் பலியானவர்களின் தாய்மார்கள் மாமா இறக்கும் வரை எங்களது வீடு அமைந்திருக்கும் வீதியின் சந்தியில் நின்று மண்ணை வாரி எங்கள் குடும்பத்திற்கு சாபச் சொற்களை துப்பிச் செல்வார்கள். வாப்பாவிற்கும் மாமாவிற்குமிடையில் முரண்பாடு அதிகரித்துக் கொண்டே சென்றமையால் ஏதாவது உயிராபத்து நடந்து விடுமோ என்ற அச்சத்தில் உம்மா ஒவ்வொரு நாளும் பதட்டத்தின் உச்சியில் உழன்று கொண்டிருந்தார். அந்நாட்களில் வாப்பாவின் உயிரும் பல துப்பாக்கிகளின் வேட்டையிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டேயிருந்தது . அப்பொழுது மாகாண சபையால் வாப்பாவிற்கு வழங்கப்பட்டிருந்த பெஜ்ரோ வாகனத்தை சுவீகரிக்கும் நோக்கில் பொலநறுவை சிங்கள மகாவித்தியாலயத்தில் புலமைப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த என்னை கடத்துவதற்கு மாமா முயற்சித்த நிகழ்வும் இறந்த கால நினைவுகளில் ஒன்று. பின்னாட்களில் எல்.ரீ.ரி யில் இணைந்திருந்த பல முஸ்லீம் இளைஞர்கள் எல்.ரீ.ரி யினரால் கொல்லப்பட்ட பொழுது மாமா உயிர் தப்பி சவூதியிற்குச் சென்றார். 2006ல் அவர் ஊரிற்குத் திரும்பியிருந்த பொழுது அங்கிருந்த எதிர்க் குழு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யுத்தத்தில் சிறுவர்கள் எவ்வாறெல்லாம் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டார்களோ அத்தகையவற்றில் சிலவற்றை நானும் அனுபவித்தேன். அத்தகைய சந்தர்ப்பங்களில் எனது பாடசாலை கண்டி, கல்முனை என்று மாறிக்கொண்டேயிருந்தது . ஒவ்வொரு தடவையும் பழைய நண்பர்களை இழந்து புது நண்பர்களைச் சந்திக்கையில் மனம் சற்று தளம்பினாலும் வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்த மனிதர்களின் தொடர்புகளை நான் பெற்றுக் கொண்டமை வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற பாக்கியங்களாகவே கருதுகின்றேன்.
எல்லாச் சமூகங்களிலும் உள்ள பெற்றோர்களுக்கு பெண் குழந்தை வளர்கையில் ஏற்படுத்தும் பதட்டங்களைப் போல் எனது பெற்றோருக்கும் அத்தகைய எச்சரிக்கை உணர்வுகள் தலை காட்டத் தொடங்கின. இந்தப் பெரிய குமருப் பிள்ளைய சைக்கிளில் ஏத்திக்கிட்டுப் போறாரு என்ற ஒரு கதை உலாவுவதை அறிந்த உம்மா நான் வாப்பாவின் சைக்கிளில் ஏறிக் கொள்வதை விரும்பவில்லை. சைக்கிளில் போவதென்றால் தாவணி, பர்தா என அவ்வப்பொழுது நிபந்தனைகளை என்மேல் விதித்துக்கொண்டேயிருந்தார். பெண் குழந்தை எப்படி வளர வேண்டும் என்ற விதியை உடைக்கும் எனது கேள்விகள் எனது பெற்றோருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஆகவே வாழ்க்கையின் ஒரு இடத்தினை நான் எட்டிப் பிடிக்கும் வரை அவர்களுடைய பிடியில் தான் என்னை நானே நிறுத்திக்கொள்ள முடிந்தது. எனது பெற்றோர் இத்தகைய மாற்றங்களை எனக்குள் ஏற்படுத்த முயன்றாலும் எங்களது ஊரில் ஏனைய பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படாத சில சுதந்திரங்களை எனக்கு அளித்தார்கள். அத்தகையதொரு வெளியில் எதிர் நீச்சலிட்டு கரை சேர்கையில் என்னுடைய வெளியைப் பற்றி நேரடியாக யாருக்கும் கேள்வி எழுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. வாப்பாவின் வாழ்க்கையிலிருந்து எனக்குத் தேவையான விடயங்களை நான் எப்படி எடுத்துக் கொண்டேனோ அப்படியொரு மாற்றத்தினை உம்மாவும் எனக்குள் மறைமுகமாக ஏற்படுத்தியிருக்கின்றார். ஒரு தடவை இலங்கையிலிருந்து அனார் சில புத்தகங்களை நண்பரொருவர் ஒருவர் மூலம் எனக்கு அனுப்புவதற்காக உம்மாவுடம் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் லண்டன் வர இருந்த நண்பரின் பார்சல் எடை கூடிவிட்டது. எனவே எல்லாப் புத்தகங்களையும் உம்மா அனுப்ப முடியாத நிலையில் என்னிடம் இவ்வாறு கூறினார். “அம்பையின் சிறுகதைத் தொகுப்புக்களை மட்டும் இப்பொழுதைக்கு உனக்கு அனுப்பி வைக்கின்றேன். மற்றவர்களை பிறகு ஆறுதலாக வாசி”. வாசிப்பதற்குரிய எந்த அதிர்ஷ்டமும் வாய்க்காது எந்நேரமும் சமையலறையில் தன்னுடைய அதிகளவு நேரத்தினை செலவு செய்து கொண்டு கணவருக்கும் அவருடைய எழுத்தாள நண்பர்களுக்கும் உணவு பரிமாறிய பெண்ணிற்கு அம்பை என்றொரு பெண்ணின் எழுத்துக்கள் அங்கே கூடியிருந்தவர்களின் உரையாடல் மூலம் செவி வழியாக சென்றடைந்த அனுபவச் சிதறல்தான் உம்மாவின் கூற்றாக அமைந்திருந்ததை நான் பல தடவைகள் எனக்குள் அசைபோட்டுக் கொள்வதுண்டு.
ஒரு வகையில் எனது பெற்றோருக்கு உவப்பான மகளாக பல சந்தர்ப்பங்களில் நான் இல்லை என்றாலும் என்னுடைய செயற்பாடுகளை முழுமையாக அவர்கள் நிராகரிக்கவில்லை. நானும் யாருக்காகவும் எனது கொள்கைகளில் சமரசத்திற்குச் செல்வதுமில்லை . சட்டத்தரணியாக நான் வெளியான பொழுது ஒரு தடவை எனது பெற்றோர் பொதுவாக ஏனைய சட்டத்தரணிகளின் வீடுகளில் உள்ளதைப் போன்று எங்களது வீட்டின் முன்னாலும் எனது பெயரையும் உத்தியோகத்தையும் எழுதி ஒரு பலகை அடித்து நாட்ட விரும்பினார்கள். ஆனால் என்னைப் பற்றி நானே புகழ் மாலை சூட்டிகொள்வதை நான் விரும்பவில்லை என்று கூறி மறுத்து விட்டேன். இன்றும் நான் எழுதுகின்ற பல விடயங்கள் விருப்பமில்லையெ ன்றாலும் ஒரு எழுத்தாளராக அறியப்படுவதிலும் உம்மாவிற்கும் வாப்பாவிற்கும் உள்ளூர ஒரு மகிழ்ச்சி ததும்பிக் கொண்டேயிருக்கின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் முற்போக்குத்தம்பி ஒருத்தர் நீங்க லன்டனில் அணியும் டெனிம் ரவுசர் மாதிரி ஊரில் இப்படி போட்டீங்களா என்று என்னிடம் கேட்டார். நான் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றிய கால கட்டத்தில் வாழைச்சேனை பெற்றோல் செட்டின் முன்னால் பஸ்ஸிற்காக காத்து நின்ற பொழுது எத்தனை கண்கள் நான் உடுத்திருந்த சட்டையையும் டெனிம் டவுசரையையும் முறைத்துப் பார்த்து நின்றன என்ற கதைகளை அவனுக்கு கூறி வாயை அடைத்து விட்டேன். ஆகவே ஐரோப்பிய வாழ்க்கையில் சொகுசாக இருந்து கொண்டு பெண்ணியம் பேசுவதாக என்னைப் பற்றி இங்கே தூற்றித் திரிபவர்களைப் பற்றி நான் கவலைப் படுவதுமில்லை. ஏனென்றால் வாழ்க்கையின் சில பக்கங்களை சாகசங்களாகவே நான் பார்க்கின்றேன். ஒவ்வொரு தடவையும் நான் போராடிப் பெற்ற வெற்றிக் கிண்ணங்களை எல்லோருக்கும் நான் பண்டமாக்கி விற்க வேண்டிய அவசியம் இல்லை.
சிறு வயதிலிருந்தே வாப்பா புத்தகங்களை வாசிப்பதையும், அவருடைய புத்தக அலுமாரியினையும் அவதானித்து வந்திருக்கின்றேன், புத்தகங்களை நேசிப்பதற்கு வாப்பாவும் காரண கர்த்தாவாக இருந்தவர்தான், ஒரு தடவை வாப்பா சென்னை சென்று வருகையில் இரத்தின மலை என்றொரு சிறுவர் கதைப்புத்தகம் வாங்கி வந்து தந்தார், அப்புத்தகத்தில் இருந்த சில கதைகள் இன்றை வரைக்கும் எனது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றேன், பின்னர் கல்முனையில் க.பொ.த படிக்கச் சென்ற பொழுது ஒவ்வொரு விடுமுறைக்கும் வாப்பா சந்திக்க வருகையில் புதுமைப்பித்தன் கதைத் தொகுப்புக்களை, தோப்பில் நாவல்களை தந்து விட்டு செல்வார், ஆனால் காலப்போக்கில் வாப்பாவின் புத்தகங்களுக்கும் எனக்குமான உறவின் இடைவெளி நீண்டுவிட்டது, அதற்குரிய காரணம் என்னவென்று இது வரை புரியவில்லை. வாப்பா புத்தகங்களை பாதுகாப்பதில் மிகப் பக்குவமானவர். பலர் இரவல் கேட்டு கொடுத்து திரும்பவில்லை. நானும் அப்படி திரும்ப அவரிடம் ஒப்படைக்க மாட்டேன் என்ற ஐயம் அவருக்கு இருந்திருக்கலாம் .நான் வாப்பா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன், ஒரு தடவை பண்ணாமத்துக் கவிராயர் கவிதைத் தொகுப்பு எனது தலையணையின் அடியில் இருப்பதை கண்டுபிடித்து அடி வாங்கியதன் பிறகு வாப்பாவின் புத்தக அலுமாரியை தொடுவதில்லை.
வாசிப்பை தாண்டி எப்போது எழுத வேண்டும் என்ற உணர்வை அடைந்தீர்கள்?
லண்டன் வந்த பிறகு களத்தில் இருந்த செயற்பாடுகளுக்கிடையிலான நேரடித் தொடர்புகள் குறைந்து விட்டன. ஆரம்பத்தில் பால்நிலை சமத்துவம் சார்ந்த கட்டுரைகளை எழுத்தத் தொடங்கினேன். மறைந்த கவிஞர் ஹெச். ஜீ ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் என்ற நூலுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரையை ஹெச். ஜீ ரசூல் வாசித்து விட்டு தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தினை தந்தார். இடையில் இலக்கிய விமர்சகர் நஸீமா பர்வின் நட்பும் கிடைத்தது. நாங்கள் மூவரும் முஸ்லீம் சமூகம் எதிர்நோக்குகி்ன்ற அக, புற ரீதியான சவால்களை அடிக்கடி பேசிக் கொண்டிருந்தோம். ரசூலின் திடீர் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேநேரம் அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சில விடயங்களை எழுத்து மூலம் முஸ்லீம் சமூகத்துடன் உரையாட நினைத்தேன். எழுத்துலகில் முஸ்லீம் பெண்களின் வகிபாகம் மிக குறைவாக இருப்பதையும் இக்கால கட்டத்தில் நான் உணரத் தொடங்கினேன். லன்டனில் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்களுக்கு அடிக்கடி சென்று வந்தேன் . இவை எல்லாம் சேர்ந்து புனைவுகள் பக்கம் என்னைத் திருப்பியது.
கவிஞர் ஹெச். ஜீ ரசூல் உங்களது எழுத்தில், சிந்தனையில் என்னவகையான தாக்கங்களைச் செலுத்தினார் ? உங்களது இலக்கிய வடிவமாக சிறுகதை தான் முதலில் இருந்ததா ?
லண்டன் வந்த புதிதில் ஹெச். ஜீ ரசூலின் மைலாஞ்சி கவிதைத் தொகுப்பு, இஸ்லாமியப் பெண்ணியம் போன்ற நூல்களை வாசிக்கக் கிடைத்தது. முஸ்லீம் சமூகம் குறித்த சிந்தனையை உய்விக்கும் பல திறப்புக்களை அவருடைய படைப்புக்கள் கொண்டிருந்தன. இத்தனை நபிகளில் ஏன் வாப்பா ஒரு பெண் நபி இல்லை என்ற கவிதை, உயிர்மையில் வெளிவந்த அவரது கட்டுரை போன்ற படைப்புக்களால் ஹெச்.ஜீ ரசூல் மிகவும் விமர்சிக்கப்பட்டு ஊர் விலக்கம் செய்யப்பட்டார் என்பதையும் அறிந்து கொண்டேன். இக் கால கட்டத்தில் பெண்கள் கத்னா, இலங்கை முஸ்லீம் விவாக விவாகரத்துச் சட்டம் போன்ற விவாவதங்களில் முஸ்லீம் பெண்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை எழுதத் தொடங்கினேன், ஹெச்.ஜீ ரசூல் எனது கட்டுரைகளை வாசித்த பின்னர் என்னை முகநூல் வழியாகத் தொடர்பு கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை எழுதுவதற்கு உற்சாகமூட்டினார், இஸ்லாமியப் பெண்ணியம் சார்ந்து ஆமினா வாதூத், பாத்திமா மெர்னிஸி போன்றோரின் நூல்களை அறிமுகம் செய்து வைத்தார், தொடர்ந்து எனது எழுத்துக்களை மேலும் விரிவாக்க இன்னுமொரு இலக்கிய வடிவத்தினை தேர்ந்தெடுக்க முயற்சித்தேன், அப்பொழுதான் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். கவிஞர் போகன் சங்கர், மின்னம்பலத்தில் ஹெச்.ஜீ ரசூலிற்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் ‘மடங்கிப் போகும் ஒரு அலையின் கடைசி முகப்புகளுள் ஒருவர்’ என்ற வரியே ரசூலின் இழப்பினை வரிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
எழுத்தாளரும் உங்கள் வாப்பவுமாகிய எல்.எச்.எம்.ஹனீபா புனைவுலகியத்தில் என்னவகையான தாக்கத்தைச் செலுத்தினார்?
வாப்பா ஒரு சிறந்த கதை சொல்லி, அவருடைய மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுப்பு இலங்கையின் இலக்கியப் பரப்பில் தனித்துவம் பெற்றது. வாப்பா வாய் மொழிக் கதை சொல்வதில் தேர்ச்சி பெற்றவர். அவரிடம் எழுதாத கதைகள் குவிந்து இருக்கின்றன. வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கு விடிய விடியக் கதை சொல்வார். உண்மையில் எத்தனையோ கதைத் தொகுப்புக்களை இலக்கியச் சூழலுக்கு தந்திருக்க வேண்டியவர் ஒரேயொரு தொகுப்புடன் நிறுத்திக் கொண்டமை துர்அதிஷ்டம் தான். எனது சிறுபராயம் வாப்பாவின் கதைகளால் நிரம்பியிருந்தது. ஏற்கனவே கூறியிருப்பது போல் அவருடைய சைக்கிளில் நானும் கதைகளுமாய் பயணித்த அனுபவங்கள் அதிகம். அப்படியொரு சைக்கிள் பயணத்தில் பிறந்த கதைதான் வாப்பா எழுதிய கடுகு கதை. இந்திய ராணுவம் இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் நான் வாப்பாவுடன் கறுவாக்கேணியிலிருந்த எங்களது தோட்டத்திற்கு சென்று கொண்டிருக்கையில் எனக்கும் வாப்பாவிற்குமிடையில் இடம்பெற்ற உரையாடல் தான் கடுகு கதையின் சாரம். கடுகு கதையின் நீட்சியாக நான் எழுதிய தலையாட்டி பொம்மையை எடுத்துக் கொள்ளலாம் . ஆனால் என்னுடைய எழுத்து பேசுகின்ற அரசியலுக்கும் வாப்பாவின் அரசியலுக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு. நானும் அவரும் தனிப்பட்ட விவாதங்களிலும் கூட அத்தகைய முரண்நகையை முன்வைப்பதுண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் அவர் என்னை அடுத்த தஸ்லிமா நஸ்ரின் மாதிரி வரப் போகிறாய், கவனம் என்று எச்சரித்தும் இருக்கின்றார்.
ஆரம்ப காலத்தில் உங்களுக்கு நல்ல கவனத்தை பெற்று தந்த சிறுகதை “தலையாட்டி பொம்மை” இன்று அந்த சிறுகதை சார்ந்து உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்கிறது?
ஆமாம், தலையாட்டி பொம்மை கதை காலச்சுவடில் வெளிவந்தது. அக்கதை வெளிவந்த பிறகு வாசகர்கள் பலரது பாராட்டுக்கள் கிடைத்தன. எனது உம்மாவின் தாய் மாமியும் அவரது மகனும் எல்.ரீ.ரியிற்கு ஆதரவளித்தார்கள் என்ற காரணத்தால் இந்திய ராணுவம் மாமியைக் கைது செய்து பின்னர் மாமி காணாமலாக்கப்பட்டார். மாமியின் மகன் திரும்பி வரவேயில்லை. அவர் எல். ரீ. ரியால் கொல்லப்பட்டார் என்று தகவல் வந்தது. மாமியினதும் அவரது மகனினதும் மறைவால் உம்மாவின் மாமா உட்பட எங்களது மொத்தக் குடும்பமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அந்தக் கால கட்டத்தில் இந்திய இராணுவம் சில பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததால் எங்களது பிரதேசம் மிகவும் அச்சத்திற்குள்ளாகியது. எனக்கு அப்பொழுது கிட்டத்தட்ட ஒன்பது அல்லது பத்து வயது இருக்குமென்று நினைக்கிறேன். அந்த அனுபவத்தை எப்படியாவது இலக்கியத்திற்குள் புனைவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் தலையாட்டி பொம்மையை எழுதினேன்.
உங்களது இலக்கிய ஆதர்சனங்கள் யார்?
வாசிப்புத் தொடங்கிய காலம் முதல் புதுமைப்பித்தனின் கதைகள் என்னை வெகுவாக ஈர்த்தன. அம்பையின் கதைகளை வாசித்ததன் பிற்பாடு பெண் நிலை நோக்கில் சில கதைகளை எழுத வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது . உம்மாவின் திருக்கை வால் மீன் என்ற எனது கதை, அம்பை எழுதிய அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற கதையின் தாக்கத்தால் எழுதியதாக உணர்கின்றேன். சில வாசகர்கள் பர்தா நாவலில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை உணர்வு பற்றி சிலாகித்துக் கூறுகின்ற சந்தர்ப்பங்களில் வைக்கம் பஷீரின் நாவல்களும் கதைகளும் ஏற்படுத்திய பாதிப்புக்களை நினைத்துக் கொள்வேன். எழுதுவதற்கான தூண்டுதல்களை தந்த படைப்பாளர்களில் ‘இஸ்மத் சுக்தாயும் சாதத் ஹசன் மண்டோவும் முக்கியமானவர்கள். அவர்களுடைய கதைகளில் இழையோடியிருக்கும் சமூகத்தின் அவலங்களை வாசித்த பிற்பாடு நானும் எதை எழுத வேண்டும் என்பதை யோசிக்க முற்பட்டேன். நான் சர்ச்சைக்குறிய விடயங்களை மட்டுமே எழுதி வருவதாக சிலர் என்னை நோக்கி விரல் நீட்டுவதுண்டு. “என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்” என்ற மாண்டாவின் கூற்றைத்தான் என்னால் பதிலாகக் கூற முடியும்.
‘பர்தா’ நாவல் சமகாலத்தில் இலங்கை இலக்கியச்சூழலில் அதிகம் உரையாடப்படுகின்றது. இந்த நாவல் எழுதப்படவேண்டும் என்ற அருட்டுணர்வு எங்கிருந்து கிடைத்தது?
எல்லாச் சமூகங்களிலும் பெண்களின் ஆடை என்பது ஆண்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. இங்கேயும் முஸ்லிம் பெண்களின் ஆடை என்று வரும்போது பார்த்தால் முற்று முழுதாக கலாச்சாரக் காவலர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகின்றது. இலங்கைச் சூழலில் எண்பதுகளில் தொடங்கிய இஸ்லாமிய இயக்கங்களின் வருகையில் இலங்கை முஸ்லிம்களிடையே ஏற்பட்ட மாற்றங்களில் பெண்களின் ஆடையிலும் தாக்கம் செலுத்தியது. பர்தாவில் தொடங்கி பின்னர் படிப்படியாக புர்கா வரை எப்படி மாற்றங்கள் நிகழ்ந்தன, மதவாதத்தில் தொடங்கி முஸ்லீம்களின் கலாச்சார பண்பாடுகளில் ஏற்பட்ட விளைவுகளில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்களிப்பு என்ன என்பதை நான் சிறுமியாக இருந்தது முதல் இன்று வரை அவதானித்து வருகின்றேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் இங்கே ஊடுருவிய இயக்கங்கள் என்ன வகையான எதிர்மறைத் தாக்கங்களை முஸ்லீம் சமூகத்திற்குள் ஏற்படுத்தினார்கள்? முஸ்லீம் பெண்களின் ஆடைகளில் எவ்வாறான மாற்றங்களை கொண்டு வந்தார்கள் என்பது இங்கே உள்ள பலருக்கு தெரியாது. அந்த வரலாறு ஒரு வகையில் திட்டவட்டமாக மறைக்கப்பட்டு பர்தா, ஹபாயா போன்ற ஆடைகள் மட்டும் தான் முஸ்லிம் பெண்களின் ஆடை என்றொரு கருத்தை இந்த இஸ்லாமிய இயக்கங்கள் மூலமாக இன்று வரை பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. ஆண்மையச் சிந்தனையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள பெண்களின் ஆடை தொடர்பிலான இத்தகைய கட்டுப்பாடுகள் இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்றவற்றில் கூறப்படாத போதிலும் ஆரம்பத்தில் முஸ்லிம் பெண்கள் மீது எவ்வாறு திணிக்கப்பட்டன , பெண்கள் எவ்வாறு அதனை எதிர்த்தார்கள், எத்தகைய சமரசத்துடன் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் நான் அறிவேன். அதே நேரத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒரு குறிப்பிட்ட ஆடைக் கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்ட பின்னர் அதனை மீண்டும் களைந்தெறியுமாறு வற்புறுத்துவதும் அதற்கு மாற்றாக பிரிதொரு ஆடையை சிபாரிசு செய்வதும் கூட அடிப்படை உரிமை மீறல் தான். அத்தகையதொரு வெளியில் தான் இன்று முஸ்லிம் பெண்களின் ஆடை பேசும் பொருளாக ஆக்கப்பட்டுள்ளதுடன் அதனை வன்முறையைத் தூண்டும் கருவியாக காட்டப்படுகின்றது. இதனால் முஸ்லீம் பெண்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்காக்கப்படுகின்றார்கள். இத்தகைய ஆடைகளால் முஸ்லீம் பெண்கள் காலத்திற்கு காலம் அகச் சூழலிலும் புறச்சூழலிலும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஒரு புனைவாக எழுத வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். இது தொடர்பில் சில வரலாற்றுச் சம்பவங்களை உள்ளடக்கி 2017 ல் நெடுங்கதையொன்றை எழுதி ஒரு இதழுக்கு அனுப்பி வைத்தேன். இதழ் ஆசிரியர் குழு சில வாரங்கள் மெளனமாக இருந்தார்கள். பின்னர் எனது நண்பர்களில் சிலர் கதையை வாசித்து விட்டு நாவலுக்குரிய களம், நாவலாக விரித்து எழுத பரிந்துரை செய்தார்கள். நாவலாக மாற்றுவதை நானும் விரும்பி எழுத ஆரம்பித்தேன்.
பர்தா நாவலை திரும்பிப்பார்க்கும்போது என்ன தோன்றுகின்றது ?
பர்தா நாவல் , பெண்களின் ஆடையை கட்டுப்படுத்தும் கடைந்தெடுந்த ஆண்மூளையின் மீது எறியப்பட்ட முதற் கல். அந்த உடைப்பை எனது எழுத்தினூடாக அடைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். உண்மையில் அதிகம் வாசகர்களின் கைகளை நாவல் சென்றடைந்திருக்கின்றது. அதுவே நாவலுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. வரலாற்றை அறியாத பலருக்கு சில உண்மைகளை நான் நாவலூடாக கூறியிருப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால் நான் பேசியிருக்கின்ற அரசியலினை பேசவே கூடாது என்று அடம்பிடிக்கின்றவர்களுக்கு இந்த நாவல் சற்று திணறச் செய்கின்றது. நான் இஸ்லாமிய மூலாதாரங்களைப் பற்றித் தெரியாமல் அரைகுறையாக எழுதியிருப்பதாக பாடம் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் அது நாவலே இல்லை என்று வியாக்கியானம் கொடுத்து சப்பைகட்டுகிறார்கள். மதவாதச் சிந்தனையில் ஊறிய ஆணாதிக்க மூளைகளுக்கு எழுகின்ற பதட்டங்களுக்கு நான் ஒரு நாவலாசிரியராக பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சினைகளை பேசுவது ஏற்கனவே இஸ்லாமியர்கள் சார்ந்து பொதுவில் இருக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலு சேர்கின்றன என்ற விமர்சனம் உங்கள் மீது வைக்கப்படுகின்றதே ?
இத்தகைய குற்றச்சாட்டுகள் எனக்கு மட்டுமல்ல. என்னைப் போன்று பொது வெளியில் இயங்குகின்ற அனைத்துப் பெண்களையும் நோக்கி எழும் கூக்குரல்கள் தான் இவை. நான் எதனைப் பேச வேண்டும் , எதனைப் பேசக்கூடாது என்பதை இத்தகையவர்கள் தான் தீர்மானிக்க முயற்சிக்கின்றார்கள். எந்தவொரு சமூகமாயிருந்தாலும் அச்சமூகத்திற்குள்ளிருந்து எழுகின்ற மாற்றுக் குரல்களை தங்களது முன்னேற்றத்திற்கான மாற்றங்களாக எடுத்துக் கொள்ளாத சந்தர்ப்பத்தில் இன்னொரு சமூகம் தனது ஆதிக்கத்தினை செலுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டேதான் இருக்கும். இத்தகைய அபாயங்களுக்காக ஒடுக்கப்படுபவர்கள் வாய் மூடி மெளனம் காக்க முடியாது. இன்னொரு ஆதிக்க சக்திகளின் கைகளில் சிக்குண்டு விடாமல் தங்களது சமூகத்தின் நலனை கருத்திற் கொண்டு உள்ளும் புறமும் தொடர்ச்சியாக போராடுவதே என்னைப் போன்றவர்களின் கடமை என்று நினைக்கின்றேன். கடந்த காலங்களில் இத்தகைய செயற்பாடுகளைத் தான் நான் செய்து வந்திருக்கின்றேன்.
ஆனால் இங்கே முஸ்லிம் சமூத்தில் உள்ள சிலரிடம் ஏனைய சமூகத்தில் உள்ளவர்களைப் போல் ஒரு தந்திரம் உண்டு. அதாவது முஸ்லீம் சமூகம் ஆதிக்க சக்திகளின் பாதிப்பிக்குள்ளாக்கப் படுகையில் பெண்களாகிய நாங்கள் அதனை எதிர்த்து குரல் எழுப்புகையில் எங்களுடன் இணைவதும் பின்னர் அதே பெண்களாகிய எங்களது நலன்கள் உரிமைகள் தொடர்பில் சமூகத்திற்குள் உரையாட முற்படுகையில் கள்ள மௌனம் காப்பது அல்லது மேலே கூறியது போல் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு வலு சேர்ப்பதாக குற்றம் சாட்டுவது. இதில் மதவாதிகள், அடிப்படைவாதிகள் மட்டுமல்ல. முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களை எல்லா வழிகளிலும் முற்போக்காளர்களாக காட்டிக் கொள்பவர்களும் அடங்குவார்கள்.
திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை பாடசாலையிலிருந்து விரட்டப்பட்ட விவகாரம் , கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை செய்தமை போன்றவற்றில் முஸ்லீம் பெண்களின் ஆடை உரிமைக்காக பெண்கள் போராடிய பொழுது இங்கேயிருந்த அனைத்து ஆண்களின் குரல்களும் ஒன்று சேர்ந்து ஒலித்தன. இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் ஒரு சிலர் ஹிஜாப் , அணிவது முஸ்லீம் பெண்களின் உரிமை என்பதிலிருந்து மெதுவாக நழுவி ஹிஜாப், ஹபாயா அணிவது முஸ்லீம் பெண்களின் கடமை என்று கோஷமிடத் தொடங்கி விட்டார்கள். அச் சந்தர்ப்பத்தில் என்னைப் போன்ற ஹிஜாப் அணியாத முஸ்லீம் பெண்களின் மனநிலையினை சற்று யோசித்துப்பாருங்கள். நாங்களும் சேர்ந்துதான் அந்தப் பெண்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் கடைசியில் எங்களையே சமூகத்திலிருந்து புறந்தள்ளத் தொடங்கினார்கள். உண்மையில் இத்தகையவர்கள் முஸ்லீம் சமூக அக்கறையில் போராடினார்களா? அல்லது முஸ்லீம் பெண்களின் உரிமை தொடர்பிலான பிரக்ஞையில் போராடினார்களா? இல்லை, முஸ்லீம் பெண்களின் ஆடையின் மேல் தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தினை வலியுறுத்துவதற்கான முழக்கங்கள் தான் அவை. இதனைத் தொடர்ந்து சென்ற வருடம் ஓட்டமாவடி பாத்திமா மகளிர் கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள், ஆசிரியைகளின் ஆடை வடிவத்தில் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது ஆடைச் சுதந்திரத்தினை மட்டுப்படுத்தி பகிரங்கமாக ஒட்டப்பட்ட சுவரொட்டியை நீக்குமாறு கோரி விடுக்கப்பட்ட அறிக்கையில் ஒரு சிலரே கையெழுத்திட்டு ஆதரவு தந்தார்கள். இதே நிலைமை தான் இலங்கை முஸ்லீம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் தொடர்பான முஸ்லீம் பெண்களின் கோரிக்கைகளுக்கும் நடந்து கொண்டிருக்கின்றது. அறுபது வருடப் பழமை வாய்ந்த இச் சட்டத்தினை திருத்துமாறு முப்பது ஆண்டுகளுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தோனேஸியா, மலேஷியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கின்ற முஸ்லீம் தனியார் சட்டங்களிலுள்ள பால்நிலை சார்ந்த நெகிழ்ச்சியான போக்குகளையும் அந்நாடுகளில் தற்காலத்திற்கேற்றவாறு இஸ்லாமிய சட்டங்களை பொருள்கோடல் செய்கின்ற தன்மையையும் இங்கே உள்ளவர்கள் கற்றுக் கொள்வதற்கு தயாரில்லை. மார்க்கத்தில் கை வைக்கக் கூடாது , பெண்களாகிய எல்லோரும் சேர்ந்து பேரினவாத அரச சக்திகளுடன் இணைந்து முஸ்லீம் சமூகத்தின் தனித்துவ அடையாளங்களை அழிக்க முயற்சி செய்கின்றீர்கள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றார்கள்.
அரேபியக் கலாச்சாரத்தின் வருகை முஸ்லிம், காபிர் என்ற பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி வருகின்றது என்று தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். பர்தா நாவலும் ஒற்றைக் காலாச்சாரம் ஏற்படுத்தும் விளைவுகளை பேசுகின்றது. இதேபோல் இந்து, பெளத்த, கிறித்தவ மக்களிடையே ஏற்படும் ஒற்றைக் காலாச்சாரம் இஸ்லாமிய மக்களையும் பாதிக்கவில்லையா?
வஹாபிஸக் கருத்தியலை முதன்மையாகக் கொண்ட அரேபியக் கலாச்சாரத்தின் கூறுகள் இப்பொழுது முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒற்றைப்படைத் தன்மையை வலியுறுத்தும் இத்தகைய கொள்கைகளால் முஸ்லீம் சமூகம் ஆபத்தான நிலையை எதிர் நோக்கியிருக்கின்றது. முஸ்லீம் சமூகம் பிற சமுகங்களிருந்து தனித்துவிடப்பட்டது மட்டுமல்ல. முஸ்லீம் சமூகத்திற்குள்ளேயே பல பிளவுகளை வஹாபிஸம் உருவாக்கியுள்ளது. முஸ்லிம்களின் பண்பாடு , பழக்கவழக்கங்களை பித் அத் என்ற அடிப்படையில் வஹாபிஸம் மறுக்கின்றது. அதாவது முஹம்மது நபி காலத்தில் அல்குர்ஆன், ஹதீஸ் ஆகியவை இஸ்லாமிய சட்டதிட்டங்களை வரையறுத்து விட்டன. எனவே அந்தக் காலகட்டத்தில் அரேபியர்கள் எதைப் பின்பற்றினார்களோ அதைத்தான் இன்றும் நாம் பின்பற்ற வேண்டும். இங்கே முஸ்லிம்களிடேயே நடைமுறையில் இருக்கின்ற சம்பிரதாயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டவை, எனவே அத்தகைய சம்பிரதாயங்களை நாம் பின்பற்றத் தேவையில்லை என்பதுதான் வஹாபிஸக் கருத்தியலை பின்பற்றுபவர்களின் வாதம். இத்தகைய கருத்தியலால் இலங்கை முஸ்லிம்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகள் பல சிதைக்கப்பட்டுள்ளன. நீங்கள் சொல்வது போல் இவற்றில் சிலவற்றினை நான் நாவலில் பேசியிருக்கின்றேன். பேரீச்சை மரம் என்ற எனது சிறுகதை அராபியக் கலாச்சாரத்தின் வருகையால் முஸ்லீம் சமுகத்திற்குள் ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கங்களைப் பற்றி பேசுகின்ற ஒரு புனைவாகும்.
இன்று இஸ்லாமியர்களிடம் மட்டுமல்ல. பௌத்த, கிறிஸ்துவ, இந்து மக்களிடையே மதத்தின் மேல் ஏற்பட்டிருக்கும் வெறித்தனமான நம்பிக்கைகளும் அடிப்படைவாதச் சிந்தனைகளும் முஸ்லிம் மக்களை சிறுபான்மையாகக் கொண்ட நாடுகளில் இஸ்லாமிய வெறுப்பினை விதைத்துள்ளன. இன்று முஸ்லீம் வெறுப்பினை முதன்மையாகக் கொண்டு செயற்படுவதில் கிறிஸ்துவ அடிப்படைவாதச் சிந்தனையின் மையமாக இருக்கின்ற ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இத்தகைய ஒற்றைக் கலாச்சாரச் சிந்தனையில் மூழ்கியிருக்கின்ற கிறிஸ்துவர்கள் ஹிஜாப், ஹபாயா போன்ற ஆடைகளை அணியும் முஸ்லீம் பெண்கள் மீது பிரயோகிக்கின்ற வன்முறைகள் ஏராளம். பர்தா நாவலில் இதற்கு சான்றாக ஒரு உதாரணத்தினை விளக்கியுள்ளேன். இந்தியாவில் பா.ஜ.கா அரசின் கைக் கூலியாக செயற்படும் இந்துத்துவா சக்திகள் , இலங்கையில் நிறுவனமாக செயற்படும் பௌத்த பேரினவாதக் குழுக்கள் அனைத்துமே முஸ்லிம்களை ஒடுக்குவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இந்திய பா.ஜ. கா. அரசின் இந்துத்துவா அரசியலை ஆதரிக்கும் போக்கு இலங்கையின் வடக்கு கிழக்கில் சிலரிடம் ஊடுருவியிருப்பதும் சிறுபான்மை இனமான முஸ்லீம்கள் மீது எதிர்மறைத்தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. திருகோணமலை சண்முகா வித்தியாலய ஹபாயா விவகாரம் கூட ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற ஒற்றைத் தன்மையான மனநிலையின் வெளிப்பாடே. எனவே ஆக மொத்தத்தில் எல்லா மத அடிப்படைவாதங்களும் மனித நேயத்தினை இழந்து ஒன்றுக் கொன்று தீவிரமான பாசிச மனநிலையில் தான் இயங்குகின்றன.
பொதுபலசேனா, ஹெலஉறுமய பெளத்த சிங்கள ஒற்றைப்படையாக்கத்தை முன்னிறுத்துகின்றன அல்லவா?
இலங்கையில் பௌத்த மதத்தினூடாக ஒற்றைப்படையாகத்திற்கான முயற்சிகள் யாப்பினூடாக வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்திலிருந்து தொடங்குகிறது. இலங்கை சிங்கள பௌத்த பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு என்ற ஏகபோக உரிமை கொண்டாடுவதிலிருந்து சிறுபான்மை இனங்களின் நிலையைப் புரிந்து கொள்ளலாம். பொதுபலசேனா, ஹெலஉறுமய போன்ற பேரினவாதக் குழுக்களின் நிகழ்ச்சி நிரல் சிறுபான்மை இனங்களான முஸ்லீம், தமிழ் மக்களை நோக்கி கட்டம் கட்டமாக நிகழ்த்தி வருகின்றன. அவை தங்களை அரசின் கைக்கூலியாக பலம் பொருந்திய அமைப்பாக நிறுவி வன்முறையையும் இனவாதத்தினையும் கைகளில் எடுத்துள்ளார்கள். இலங்கையின் வடகிழக்கில் திட்டமிட்டு நடைபெறும் பெளத்தமயமாக்கல் தன்மை சிறுபான்மை இனத்தின் மீதான அதிகாரத்தினை மேலும் வலுவடையச் செய்து வருகின்றது. எனவே இன்று சிறுபான்மை இனங்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதையும் வன்முறைக்குள்ளாக்கப்படுவதையும் பெரும்பான்மையினரிடம் எடுத்துச் சென்று தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் இழந்து நிற்கின்றார்கள். இதற்கான சாத்தியங்களை எல்லா வழிகளிலும் வழங்கி பாசிச உணர்வுகளைக் கட்டியெழுப்பதில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பெயர் முதன்மையான இடத்தில் நிற்கின்றது என்பதே பட்டவர்த்தனமான உண்மை
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், இஸ்லாமியர்கள் தம்மை தாமே சுயபரிசீலனை செய்துகொள்ளா வேண்டும் என்று எழுதினீர்கள். வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு இன்று நிறைய சாட்சியங்கள் வந்தவண்ணம் உள்ளன அல்லவா? உங்கள் கருத்தை நீங்கள் அதன்பின்னர் சுயபரிசீலனை செய்து கொண்டீர்களா?
என்னுடைய கருத்தினை நான் மீண்டும் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நான் கூறியதில் எந்தத் தவறுமில்லை. அன்றைய அரசாங்கம் தங்களது அதிகாரத்தினை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பெரும்பான்மை இனங்களிடையே முஸ்லிம் வெறுப்பினை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை தான் ஈஸ்டர் தாக்குதல். இத் தாக்குதல் அரச அதிகார சக்திகளின் ஒத்துழைப்புடன் தான் நடந்தது என்பதற்கான சாட்சிகளின் பட்டியல் இன்று வரை நீண்டுகொண்டேயிருக்கின்றன. ஆனால் முஸ்லீம்கள் வெறுமனே அரசாங்கத்தினை மட்டும் நோக்கி கை நீட்டி பழிபோட முடியாது. ஈஸ்டர் தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லீம் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே வஹாபிஸக் கருத்தியலை அடித்தளமாகக் கொண்ட அடிப்படைவாதம் ஆங்காங்கே முளைவிட்டு வளரத்தொடங்கியிருந்தபொழுது அதனால் முஸ்லீம் சமூகமும் ஏனைய சமூகங்களும் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துக்களைப் பற்றி எச்சரித்து அச்சமூகத்திற்குள்ளிருந்தே குரல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இங்கேயிருந்த யாருமே அத்தகைய முன்னறிவுப்புக்களை செவிமடுத்துக் கேட்கவில்லை. இத்தகைய அடிப்படைவாத சக்திகளின் ஒத்துழைப்பும் ஒன்று சேர்ந்துதான் தீவிரவாதத்திற்கு தீனி போட்டன. ஆனால் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் பொறுப்பு விடுக்கும் முறையைத் தான் கையாண்டார்கள். அப்படியென்றால் முஸ்லீம்கள் தமது சமூகத்தின் நலன்களை எடுத்துச் செல்வதற்கு தேவையான திட்டமிடல் வழிவகைகளை அமைத்துக் கொள்வதற்குரிய உள்ளார்ந்த சுயாதீனம் இல்லை என்றே அர்த்தப்படும். எனவே ஈஸ்டர் தாக்குதலில் இருந்து முஸ்லிம் சமூகம் கற்றுக்கொள்வதற்கான படிப்பினைகள் நிறையவே உண்டு.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் இலங்கை முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கறைபடிந்த ஒரு வரலாற்றினை ஒட்டுமொத்த சமூகமும் சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பேரினவாத அரசு திட்டமிட்டபடி முஸ்லீம் சமூகத்தின் மீதான தனது அஜெண்டாக்கள் ஒவ்வொன்றையும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துகின்றது. முஸ்லீம் சமூகத்தினைச் சேர்ந்த இன்றைய தலைமுறையினர் பல்கலைக்கழகம் தொடக்கம் வேலைவாய்ப்பு வரை நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றார்கள். பேரினவாத சக்திகளால் முஸ்லீம் மக்களைக் குறி வைத்து நடக்கின்ற தாக்குதல்கள் மேலும் மேலும் விரிவடைவதற்கான சாத்தியக் கூ றுகளே அதிகம் தென்படுகின்றன.
கடந்த தேர்தல்களில் இஸ்லாமிய விரோதக் கருத்துகளே அதிகம் பிரசாரங்களில் பயன்படுத்தப்பட்டன, இன்று கிழங்கிலங்கையில் தமிழ் இஸ்லாமிய உறவு கவலைகொள்ளும் வகையில் பிளவு அடைந்திப்பதை போல இலங்கைத்தீவில் இஸ்லாமிய சிங்கள உறவு எப்படி உள்ளது?
வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் 1905 ல் ஏற்பட்ட கண்டி கலவரத்திலிருந்தே சிங்கள முஸ்லீம் உறவு நிலைகுலையத் தொடங்கியது. இந்த இரண்டு இனங்களுக்கிடையிலான அச்சமும் அமைதியின்மையும் அப்பொழுதிருந்தே ஆரம்பமானது.
எனவே ஒப்பீட்டுப் பார்க்கையில் தமிழ் முஸ்லீம் உறவில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு முந்தியது சிங்கள முஸ்லீம் உறவில் இருந்த சிக்கல் என்று கூறலாம். முஸ்லீம் தமிழ் உறவில் இருந்த பிணைப்பு உடைவதற்கு புலிகளும் தமிழ்த் தேசியவாதிகளும் விட்ட தவறுகளும் காரணமாக இருக்கின்றன.1990 களில் புலிகளால் வடக்கு முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு போது தான் முஸ்லீம்கள் தங்களுக்கான அரசியல் அடையாளத்தினை நிறுத்திக்கொள்வதற்கான தேவையும் எழுந்தது. அதனைத் தொடர்ந்து முஸ்லீம் சமூகத்திற்குள் தோன்றிய அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் பலத்தினையும் வாக்குகளையும் தக்க வைத்துக் கொள்வதற்காக முஸ்லீம் தமிழ் உறவினைப் பற்றி எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இலங்கையில் இன்றைய தமிழ் முஸ்லீம் உறவில் இருக்கின்ற விரிசல் நிலை என்பது அரசியல், அடிப்படைவாதம் சார்ந்த வெளியில் மட்டும் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். சாதாரண எளிய மக்களிடம் எப்பொழுதும் போல் ஒரு உறவுப் பாலம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. உதாரணமாக வாழைச்சேனை பிரதான சந்தையில் எண்பது வீதமான கடைகள் முஸ்லீம்களுடையது. நுகர்வோர்களில் பெரும்பான்மையினராக தமிழர்கள் இருக்கின்றார்கள். ஏறாவூர் கரையோ மீனவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள். அவர்களிடமிருந்து விற்பனைக்காக கொள்வனவு செய்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். ஏற்கனவே கூறியது போல் முஸ்லீம்களுக்கெதிராக திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பௌத்த பேரினவாதத்தின் பிரச்சாரங்கள் முஸ்லீம் சிங்கள உறவில் மேலும் விரிசல்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால் தமிழ் முஸ்லிம் உறவுகளில் இருக்கின்ற நெகிழ்ச்சியான போக்குகளைப் போல் முஸ்லிம் சிங்கள உறவிலும் ஒரு பிணைப்பினைக் காணலாம். உதாரணமாக ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதல்ளை நடாத்தியவர்கள் அவர்களுடைய அயல் கிராமங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் இல்லை. அத்தகையத் தாக்குதல்கள் திட்டமிட்ட ஆயுதக் குழுக்களால் அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல்கள். அண்மையில் முஸ்லீம் கலாச்சாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத நல்லிணக்கத்தினை முன்னெடுக்கும் நோக்கில் முஸ்லீம் பெண்கள் விகாரை கட்டுமான உதவிகளில் பங்கேற்கும் ஒரு காணொளியைப் பார்க்க கிடைத்தது. முஸ்லீம் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு அனுமதியில்லாத நிலையில் இவ்வாறு போலித்தனமாக மத நல்லிணக்கம் என்ற பெயரில் விகாரை கட்டுமானங்களில் உதவி செய்வதற்காக முன்னிறுத்தப்படுவது நகைப்புக்குரிய விடயம். எனவே இலங்கையில் உறவுப்பாலத்தை இணைப்பதற்கான வலுவான ஒரு சிவில் அமைப்பு மூன்று இனங்களுக்கிடையேயும் வரவேண்டும் என்பது தான் எங்கள் எல்லோரினதும் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
பர்தா நாவல் எழுதியபின்னர், அதிகமான எதிர்ப்புகளும் உங்களுக்கு எழுந்திருக்கின்றன. உங்கள் கருந்துச் சுதந்திர வெளி மட்டுத்தப்பட்டுள்ளதா? என்னவகையான மிரட்டல்களை எதிர்நோக்குகின்றீர்கள்?
ஆமாம், பாராட்டுக்கள் வருவதைப்போல எதிர்ப்புகளும் தோன்றியுள்ளன. ஆனால் இந்த எதிர்ப்புக்களைக் கண்டு நான் கலங்கவில்லை. என்னுடைய எழுத்துத்தான் எதிர்ப்பவர்களை நோக்கி சலனமடைய வைக்கின்றன. நேரடியாக எந்தவித மிரட்டல்களையும் நான் சந்திக்கவில்லை. ஆனால் நாவலை வாசித்து பொதுவெளியில் கருத்துச் சொல்லக் கூடாது என்று சில பெண்களை நோக்கி மிரட்டல் விடுக்கப்பட்டதாக அறிந்தேன். ஆனால் அவ்வாறான மிரட்டல்களையும் தாண்டி சில பெண்கள் நாவல் பற்றிய கருத்துக்களை தைரியமாக முன் வைத்தார்கள். ஆகவே பெண்களை தங்களது உடமைகளாக நினைத்து ஏகபோக அதிகாரத்தினை காட்ட நினைக்கின்ற வித்தைக்கார்ர்கள் ஓடி மறைவதற்கான காலம் நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.
பர்தா நாவல் தொடர்பில் எழுந்துள்ள இன்னுமொரு எதிர்க்கருத்து என்னவென்றால் முஸ்லிமல்லாத ஏனைய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்ற பலர் பர்தா நாவலினைப் பற்றி பேசும் போதும் இங்கே இருக்கின்ற மதவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முஸ்லீமல்லாத சமூகத்தவர்கள் இது பற்றி பேசக்கூடாதென்றும் அவ்வாறு கருத்துக்களை முன்வைப்பதானது இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தின் ஒரு அம்சம் என்றும் வியாக்கியானம் செய்து வருகின்றார்கள். அதே நேரம் பர்தா நாவலின் மூலம் மாஜிதா பெரும்பான்மைச் சமூகத்தினை திருப்திப்படுத்துகிறார் என்றும் விம்முகிறார்கள்.
நாவல் பற்றி பலர் பொதுவில் பேசியிருந்த போதிலும், பல பெண்கள் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் இவ்நாவல் பற்றி பேசியதாக சமூக வலைதளங்களில் எழுதியிருந்தீர்கள், அவர்களின் கருத்துகள் என்ன வகையானவையாக இருந்தன?
ஆமாம், பெண்கள் மட்டுமல்ல . பல முஸ்லீம் ஆண்களும் நாவல் பற்றி எழுதியும் பேசியும் வருகின்றார்கள். நாவல் பேசியிருக்கின்ற அரசியல் கருத்துக்களுடன் அவர்கள் உடன்படுகின்றார்கள் என்பதை அறிகையில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் முஸ்லீம் சமூகத்திற்குள்ளிருந்து எழுகின்ற இவ்வாறான கருத்துக்களை தனியே நாவலை மட்டும் பேசுவதாக நான் குறுக்கிப் பார்க்கவில்லை. ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் விடுதலையில் அவர்களுக்கிருக்கும் தன்னுணர்வையே எடுத்துக் காட்டுகின்றது. சில முஸ்லிம் பெண்கள் இந்த ஆடை தொடர்பிலான துணிச்சலாக தங்களது கருத்தை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பாலின அடிப்படையிலான வன்முறையினை களைவதற்கு ஆண் பெண் இரு பாலாரும் இணைந்தே பணியாற்ற வேண்டியுள்ளது . பெண்கள் மட்டும் தனியாக நின்று குரல் கொடுப்பதால் சமூக மாற்றத்தினை அடைய முடியாது . எனது எழுத்தின் நோக்கமும் இதுதான். பர்தா நாவலை இன்றைய தலைமுறையச் சேர்ந்த முஸ்லிம் ஆண்கள் பெண்கள் அதிகம் வாசிக்க வேண்டும். இங்கே ஆடை தொடர்பில் வரையறுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை உய்த்துணர்ந்து தங்களுக்கான சுயத்தினை பற்றி அவர்கள் சிந்தித்து தங்களது விடுதலையைப் பற்றி அவர்களாக வாய் திறக்காத வரையில் எத்தகைய சமூக மாற்றமும் இங்கே நடைபெறப்போவதில்லை என்பது வரலாற்று உண்மை. அதற்கான அடித்தளத்தினை நாவல் ஏற்படுத்தியிருக்கின்றது என்று நம்புகின்றேன். அதே நேரம் சில பெண்களுக்கு இந் நாவல் தொடர்பில் வெளிப்படையாக பேசுவதற்கு தயக்கம் உண்டு. அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பர்தா , ஹபாயா போன்ற ஆடைகளால் ஏற்பட்ட தாக்கங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். பெண்கள் மட்டுமல்ல, சில முஸ்லீம் ஆண்களும் என்னுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடியுள்ளார்கள். எனவே இங்கே நடைபெறுகின்ற சம்பவங்களையே நான் எத்தகைய பாரபட்சமுமின்றி எழுதியிருக்கின்றேன் என்பது இவர்கள் அனைவரினதும் உரையாடலின் சாராம்சமாக இருந்தது.
உங்கள் அடுத்த எழுத்து முயற்சி என்ன ? நேர்காணலின் நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அடுத்த நாவலுக்குரிய வரைபடத்தில் நிற்கின்றேன். இன்னும் சில சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன். உண்மையில் பெண்களின் எழுத்துக்களை கொண்டாடும் ஒரு பிரிவினர் பெண், ஆண் என இரு பாலாரிலிருந்தும் உருவாகி வருவது நம்பிக்கையையும் சந்தோஷத்தினையும் அளிக்கின்றது. அந்த வகையில் பர்தா நாவலை வாசித்து அவ்வப் போது விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து வாசகர்களுக்கும் அன்பான நன்றிகள். இவர்களின் ஆழமான விமர்சனங்கள் அடுத்த நாவலுக்கு நிச்சயம் வலு சேர்க்கும். அதே நேரம் இங்கே பெண்கள் எழுதும் பொழுது இப்படித்தான் எழுத வேண்டும் என்ற விதிகளை சிலர் வைத்திருக்கின்றார்கள். இத்தகைய வரையரைகளுக்குள் ஒரு பொழுதும் எனது எழுத்துக்களை பொருத்தமுடியாது என்பதை உறுதியாகக் கூற விரும்புகின்றேன். ரஜம் கதையை நான் எழுதிய பொழுது சிலர் என்னை எச்சரிப்பது போல் அறிவுரை கூறியிருக்கின்றார்கள். வாப்பா எனது ஏவல் கதையை வாசித்த பின்னர் முஸ்லீம் சமூகத்தில் இல்லாத ஒன்றை இருப்பது போல் நான் எழுதியதாகவும் இப்படியே எழுதிக் கொண்டு போனால் விரைவில் நான் சமூகத்திலிருந்து வீசி எறியப்படுவேன் என்றும் ஒரு உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். முன்தீர்மானங்களை எடுத்துக் கொண்ட பின்னர் எழுதுவது எழுத்தாளர்களிற்குரிய பண்பும் அல்ல. யாருக்காகவும் என்னை நான் மாற்றிக் கொள்வதுமில்லை. இந்தக் கருத்தியலைத் தான் எனது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வருகின்றேன். பர்தா நாவலை எழுதும் பொழுது இப்படி எழுதுவதால் என்னை எதிர்ப்பார்களா இல்லையா என்றெல்லாம் எனக்குள் நான் கேள்வி எழுப்பி ஆராய்ந்து பார்த்ததேயில்லை. துயரங்கள் நிரம்பிய அவலச்சுவையையும் சமூகத்திற்கு கடத்துவதும் என்னுடைய கடமை என்றே நம்புகின்றேன். எழுத்து என்பது நமக்குப் பிடித்த ஒரு திசையில் சாவதானமாக நடந்து செல்வதைப் போன்றது. ஒரு பேனாவும் கடதாசியும் மட்டும் இருந்தால் போதும். என்னை நானே முறித்துக் கொண்டு ஒரு அருவியாகப் பாய்ந்து எழுவேன்.
அனோஜன் பாலகிருஷ்ணன்
தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.
சிறப்பான விரிவான நேர்காணல் . இஸ்லாமிய சமூக பெண்களின் மனவோட்டத்தையையும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள் நேர்கிற சிக்கல்களையும் தொளிவுபடுத்தியுள்ளார்