அகழ் : நூல் அறிமுகங்கள்

கமலதேவியின் ‘அகமும் புறமும்’

எழுத்தாளர் கமலதேவியின் “அகமும் புறமும்” கட்டுரைத் தொகுப்பு சமீபத்தில் வாசித்த நூல்களில் சுவாஸ்ரமான வாசிப்பனுபவம் தந்த ஒன்று. கவிஞர்களுக்கு எப்போதுமே சங்கக்கவிதைகள் மீது ஈர்ப்பு உண்டு. கவிஞராக எனக்குள் பித்தேறி கிடக்கும் கவிதைகளில் சங்கக்கவிதைகளுக்கு தனியிடமுண்டு. எனது இலக்கியத் தேடல் சங்கக் கவிதைகளிலிருந்து தொடங்கியது என்பதை பல இடங்களில் பதிவிட்டிருக்கிறேன். கமலதேவி கவிதைகளும் எழுதியிருக்கிறார். அதனால் அவருக்கும் இயல்பாகவே சங்கக்கால கவிதைகள் மீது ஆழ்ந்த ஆர்வமிருப்பதில் எந்த வியப்புமில்லை. மேலும் அவருடன் தொலைபேசியில் உரையாடிய ஒருமுறை அவர் அப்பா சேமித்து வைத்திருந்த நூல்களில் பல சங்க இலக்கிய நூல்கள் என்பதையும் சொல்லியிருந்தார். அந்த விதத்தில் அவர் படைப்புகளில் இந்த நூல் முக்கியமான ஒன்று. பெரும்பாலான கவிஞர்களுக்கும் உரையாளர்களுக்கும் அ-புனைவு கொஞ்சம் சாத்தியபடாத ஒன்று என்று யோசிக்கும் என் போன்ற சிலருக்கு ஆச்சரியமூட்டும் தொகுப்பு.

அகம் புறம் என்பதை எப்படி பகுப்பது? மேலோட்டமாக சொல்லும் போது அகம் என்பது இல்லம் என்ற பொருளில் வரும். வீட்டைத் தாண்டிய வெளியுலகம் புறம். அகத்தில் எல்லை எங்கே முடிந்து புறம் எங்கே தொடங்குகிறது என்பது ஒவ்வொருவரின் அக புற புழக்கம் பொருத்தது. இன்னொரு விதத்தில் அகம் என்பது கண்புலனாக மனத்தையும் அதில் உற்றெடுக்கும் உணர்வுகளையும் குறிப்பதாக கொள்ளலாம் புறம் என்பது அதனை வெளிபடுத்தும் கருவியாகப் பார்க்கலாம். அந்த விதத்தில் அகமும் புறமும் ஒன்றான மனிதநேய உணர்வுகளின் தொகுப்பு நூல் இது என்பது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அகமும் புறமும் புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தொன்பது சங்கப்பாடல்களும் அந்தப் பாடல்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருந்தும் சுய அனுபவ பதிவுகள் அடங்கிய நூல். பொதுவாக புனைவாளர்களின் பயணக்குறிப்புகள் மற்றும் சுய அனுபவக் குறிப்புகள் சுவாரஸ்மானவை மேலும் அந்த கட்டுரைகளில் அவர்களே பதிவாகியிருப்பதால் இயல்பாக நம்பத்தன்மையுள்ள ஒரு எழுத்தாக அது மாறிவிடுகிறது. கமலதேவி தனது குறிப்பொன்றில் தி.ஜாவின் பயணக் கட்டுரை நூலொன்று வாசிக்கும் போது திஜாவின் சொந்த வாழ்க்கையின் ஒரு துண்டை வாசித்துப்பது போன்ற மனதுக்கு நெருக்கமான அனுபவ தருணம் கிடைப்பது வித்தியாசமானது என்ற பொருள்படும் வாக்கியமொன்றை பதிவு செய்திருந்தார். அதே போல இந்த கட்டுரைகளை வாசிக்கும் போது கமலதேவியின் நிஜவாழ்க்கையின் சில பகுதிகளை அதில் அவரோடு இருந்த இருக்கும் சிலரை பற்றி வாசிக்கும் அனுபவம் நம் மனது நெகிழச் செய்யும் ஒன்றாக மாறிவிடுகிறது.

இலக்கியம் என்பது வாழ்க்கையின் நீட்சி அல்லது இலக்கியத்தில் வாசித்தது வாழ்பனுபவமாக மாறும் போது அது தரும் அலாதியான இன்பம் வார்த்தைக்குள் அடக்க இயலாதது. எனது இலக்கிய வட்டத்தில் தோழமை ஒருவர் தனது காதல் மனைவியுடனான இலக்கிய உரையாடலகளை சிலேகித்து சொல்லும் போது இதல்லவா ஆதர்சமான வாழ்க்கை என்று தோன்றும். அவரும் மனைவியும் வெவ்வேறு இடத்தில் இருக்க நேரிடும் போது கொன்னூர் துஞ்சுதும் யாம் துஞ்சலமே என்று குறுந்தகவல் பரிமாறிக் கொண்டாகச் செல்வார். அமைதியான கடலைக் கண்டால் “யார் அணுக்குற்றனை கடலே” என்று விசாரிப்பார்கள் என்றும் பகிர்ந்ததுண்டு. அப்படி சங்கம் தொடங்கி இன்று வரை உணர்வுகள் ஒரே மாதிரி தானே நிகழ்கின்றன. அவை காலத்தின் வண்ணம் பூசி வெளிப்படும் சூழல் மட்டுமே மாறிவிடுகின்றன. அவ்வாறே கமலதேவி பதிவிட்டிருக்கும் கட்டுரைகளில் ஆழமான காதலில் அக அலைவுறும் மனம், அது தரும் இன்பம் துயரம், துயலின்மை, பசலை, காதல் பொருட்டு தாபத நிலையை மேற்கொள்ளும் பெண் மற்றும் ஆண், காதலியை பழி வாங்கும் மடலேற்றம், புலம் பெயர்ந்து வரும் போது கிடைக்கும் பெருவலி, தனிமை, பசி, நட்பு என்ற பல்வேறு உணர்வு கொந்தளிப்புகள் வெளிப்படுகின்றன. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் சங்கப்பாடல்கள் அந்த உணர்வின் மையத்தோடு ஒட்டியும் சிறிது விலகியும் வாசகர்கள் தங்களுக்கான பார்வையை அதிலிருந்து இன்னொரு படி எட்டிச் செல்லவும் வழி வகுக்கின்றன. இத்தனை உணர்வுகளை கொட்டிச் செல்லும் வாழ்பனுபவங்களை தொட்டு மீளும் இந்த சங்கக்கவிதைகள் அவர் வார்த்தைகளிலேயே கேட்க வேண்டுமென்றால் “சங்கப்பாடல்கள் எப்படி பழையதாகும்?”

கமலதேவி இந்த கட்டுரைகளில் தன் காட்டும் சங்கக்கவிதைகளை புதிய அடிநாதத்தைக் கண்டெடுக்கிறார். ‘நாயுடை முதுநீர்க் கலித்த தாமரை’ என்ற வரியில் பரத்தையிடம் சென்ற கணவனைப் பற்றி தலைவி சொல்லும் போது தன்னை பழைய நீர்த்தேக்கமென்று சொல்லுமிடத்தில் தன் மொத்த உணர்வையும் சொல்லி விடுகிறார் என்று சொல்லுமிடத்திலும், ‘சங்கக்கவிதைகளில் தலைவி கூற்று பாடல்கள் பேசப்பட்ட அளவு தலைவன் கூற்றுப்பாடல்கள் பேசப்படவில்லை என்று நினைக்கிறேன்’ என்று சொல்லுமிடத்திலும், “‘காதல் நன் மரம்’ என்று ஒரு கவிஞன் போர்க்காலத்தில் நொச்சியைப் பாடி அம்மலரை காலத்திற்கும் மலர வைத்திருக்கிறான்’ என்று பதிவிட்டிருக்கும் இடத்திலும், ‘ “குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும்…” – இந்த வரி பாடலின் ஆன்மா. சின்னஞ்சிறிய குறிஞ்சி பூக்களின் தேனெடுத்து தேனீக்கள் அவ்வளவு பெரிய தேனடைகளை கட்டியிருக்குமானால் எவ்வளவு பூத்திருக்க வேண்டும் என்ற வியப்பே இப்பாடல் தரும் ஆழமான உணர்வுநிலை.’ என்று குறிப்பிட்டு எழுதியிருக்கும் இடத்திலும் கமலதேவி சங்ககவிதைகளை எவ்வளவு ஆழமாக உள்வாங்கி இந்த கட்டுரைகளில் வெளிபடுகிறார் என்பது தெளிவாக தெரியும்.

ஆயினும் இந்த கட்டுரைகள் எல்லாம் சம்மந்தப்பட்ட பாடல்களையும் அதன் பின்புலத்தை தொட்டுக்காட்டினாலும் இதில் பாடலின் அறிமுகத்தை விட சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை அனுபவம் முதல் இடத்தை பிடித்திருப்பதே இந்த கட்டுரைகளில் பலம். அதையே எதிர்முனையில் நின்று பார்த்தால் இதில் சங்கக்கவிதைகளின் இடம் என்ன என்ற எதிர்வாதத்துக்கு இடம் வைக்கும் களம். இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘சங்கச்சித்திரங்கள்’ என்ற நூலை முன்னோடி நூலாகக் கொள்கிறேன் என்கிறார் கமலதேவி. இந்த கட்டுரைகளை வாசிக்கும் போது சங்கச் சித்திரங்கள் போலவே எழுதப்பட்டிருக்கிறதே என்ற கேள்வியை வாசகர்களுக்கு வராமல் இருக்கும்படி எழுதியிருப்பது பாராட்டத்தகுந்தது என்று சொல்லத் தோன்றுகிறது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு என்று பல நூல்களிலிருந்து கவனமாக இந்த கவிதைகள் தேர்ந்தெடுத்து கோர்த்துக் கொடுத்திருக்கும் மெனக்கெடுகடலில் அது மேலும் தெளிவாகிறது. சங்கக் கவிதைகள் மேல் ஆர்வம் உள்ளவர்களும் அ-புனைவாக்களில் ஆர்வர் கொண்டவர்களும் வாசிக்க வேண்டிய முக்கியமான தொகுப்பு.

லாவண்யா சுந்தர்ராஜன் – எழுத்தாளர்

௦௦௦

நோவிலும் வாழ்வு – கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்

ஈழத்துக் கவிதைகளின் வருங்கால அடைவுகளிற்கான திசைவழியை உண்டாக்கும் புதிய குரல்களின் வருகை கடந்த இரு வருடங்களில் நிகழ்ந்து வருவதை அவதானிப்பது ஒரு கவிதை வாசகனாக என்னை நிறைவளிக்கச் செய்வது. இவ்வருடம் ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக கவிஞர் வசிகரனின் “நோவிலும் வாழ்வு” எனும் தலைப்பிலான முதற் தொகுதி அண்மையில் வெளியாகியிருக்கிறது.

ஈழத்துக் கவிதைகளின் பிரதான செல்நெறிகளைக் கிளைத்து முறித்து அதன் வழிநடைகளை விரிவுபடுத்தும் காலமெனக் கடந்த பத்தாண்டுகளைச் சுட்டிப்பாகச் சொல்லலாம். போர் ஓய்ந்த நிலம் எளிதில் காமத்திற்கும் ஆதார உணர்ச்சிகளின் சுழலுக்குள்ளும் நுழைவதையே பொது இயல்பாக இலக்கிய வரலாற்றை நோக்குபவர்கள் அறிவர். அதுவோர் அவதி. பெருங்குருதி வெளியாகிய நிலத்தில் உறங்க முடியாமல் புரளும் பல்லாயிரம் அட்டைகளென மானுடக் குமைவு எக்கனவைக் கண்டு இதிலிருந்து விழித்துக் கொள்வதென எண்ணும் வரலாற்றுப் புள்ளி. எழுத்தில் நுரைத்துப் பெருகத் தொடங்குவது அந்த ஆழ்கனவுகளுக்கான மந்திரங்களாகவே அமைகிறது. அதை எவருமறியாமல் கூட்டு நனவிலி தொட்டு எடுத்து காற்றில் ஏந்தப்படும் நீர்த்துளிகளென அலைக்கழிக்கும். இதுவோர் சாரம்ச நோக்கெனவே இங்கு கருதுகிறேன். நுண்மையில் நுண்மையாக பிறிதை அளைந்து அவை கண்டெடுத்து விரிவாக உரையாடலும் விவாதங்களும் நிகழும் வெளிக்குள் பிரவேசிக்கும் தொடக்கங்கள்.

கவிதை பல்வேறு பயில்நிலைகள் கொண்டது. ஈழம் தன் முதன்மை விசையாக போரைக் குவிந்து தன் மொழிப்புயலைச் சுருட்டிக் கொண்டது. அதன் கீற்றுகளென அலைந்த பல்லாயிரம் சொற்களை இன்று காற்றள்ளிப் போய்விட்டது. அதன் புயற்கண்ணென வாழ்வின் தரப்பில் நின்று எண்ணிச் சொன்ன சொற்களும் அக்காலத்தின் முன்னெதிரே தருக்கிச் சொல்லெடுத்து நின்றவர்களுமே இன்று கவிஞர்கள் என மதிப்பிடப்படுகிறார்கள். போரை எங்கிருந்து நோக்குகிறோம் எனும் நோக்குநிலை கலைப் பயில்வுடன் ஆழ்ந்து நோக்க வேண்டியது. அதன் அகம் பிணவறைச் சாலையிலென அமைந்த காலங்கள் அகன்று விவாத வெளிக்குள் நுழையும் பொழுது அதன் கலை மதிப்பு மட்டுமே முன்னிற்பது. மேலான கலை தன் அகத்தறிந்த மெய்மையினால் கலையையும் சுடர்க்கும் பொற்பட்டறை எனத் தன்னை ஆக்கிக் கொள்வது. ஒரு சிலர் அங்கு உருகி மடிந்தார்கள். சிலர் சொல்லழிந்தார்கள். சிலர் அவிந்தார்கள். சிலர் மீட்டுக் கொண்டு திறந்திருந்த காலத்தை நோக்கி எழுந்து வந்தார்கள்.

போரின் தலைமுறையினருக்கு அடுத்து வந்த முதற் தலைமுறை எனது. எங்களுக்கு முன்னர் இக்காலத்தை வகுத்து ஆராய்ந்து தெளிந்து அரசியல் மெய்மையை அறியவேண்டிய காலநிரை நின்றிருந்தது. சார்பும் எதிர்ப்புமென இருபெரும் வலைச்சிக்கல்கள் கொண்டது ஈழத்து இலக்கியம். இரண்டுக்கும் அப்பால். அக்குருதிவெளிக்கும் விடுதலை வேட்கை எனும் பெரும் இலட்சியவாதக் கனவுக்கும் அடுத்து நீறு கலைந்த தணற்கட்டிகளெனச் சொற்கள் அடைகாத்து வெளிவந்தன.

இன்றைய காலம் நுண்மைகளும் பிறிதும் தன் மையவெளிக்கு நுழையும் பருவம். அவை விவாதித்து தமிழ்க் கவிதையின் பேரளவு உரையாடலில் கலை மதிப்பும் வாழ்க்கை நோக்கும் சார்ந்து உண்டாக்கும் வரிகளை கவனிக்க வேண்டியிருக்கிறது. எஞ்சிக் கருகியிருக்கும் பெருமின்னல் எரித்த முதுமரத்தின் புதிய தளிர்முனைகளைத் தொட்டு மகிழ்வதைப் போன்றது அது.

வசிகரனின் முதற் தொகுப்பு நம்பிக்கையளிக்கும் குரலொன்றின் நுழைவு. நோவிலும் வாழ்வு தொகுதியில் ஒரு துறைமுக நகரிலிருந்து ஒலிக்கும் குரல்களின் ஓசைகளும் அதன் தெருக்களும் விளக்குகளும் கடலின் கரையும் பாசிகளின் நீர்மையும் கலைந்து உருக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கவிஞரின் அகம் தன் நிலத்தில் எங்கனமோ ஒருவிரலைத் தொட்டுக் கொண்டே வான் நோக்கி எழுகிறது. இளையவர்களுக்கு அது முதன்மையான அம்சமும் கூட. வசிகரனின் கவிதைகள் எளிமையும் அன்றாடமும் பின்னிக் கொண்டு சொல்லின் சங்கீதத்தையும் கைவிடப்பட்டு உள்ளொடுங்கி ஒலிக்கும் ஆணின் குரலையும் மெல்லிய கேவலென கூவிச் செல்லும் பறவைக் குரல் போல இக்கவிதைகளில் ஒலிக்கிறது. ஒருவகையில் நிர்வாணத்தை நோக்கும் அன்றாடனின் விழிகள் கொண்டவை. சலிக்கும் கரைமணலில் எஞ்சும் வண்ணக் கற்களும் கடலுயிரிகளின் எலும்புகளும் சொல்லால் உயிர்பெற்று எழப்போகுபவையென மயக்குக் கொண்டவை இக்கவியுலகு.

வசிகரனின் சொற்தேர்வுகளும் அகம் சென்று கொந்தளிக்கும் கணங்களும் முழுதிலும் நிகழ்வாழ்வுக்குரியவை. அவை பெருங்கனவுகளை நோக்கி அறைகூவவில்லை. எளியவை குறித்து இரங்கவில்லை. தான் எனத் தருக்கி நிற்கும் ஓர் உயிர் அடையும் வாழ்கணங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிகழ்ந்து மறைகிறது. நினைவில் தங்கும் சாம்பிராணிக் குச்சியொன்றின் வாசனை போல.

ஈழத்துக் கவிதைக்குள் நுழையும் புதியவர்கள் தம்மைத் தாம் எழுதுவதன் ஊடாக ஆயுதங்களின் போர்களுக்கு அடியில் ஓயாது என்றும் நிகழும் மானுட வாழ்கணங்களின் விழைவுகளை நோக்கி திரும்புவது ஒருவகையில் என்றும் நிகழும் பிறிதொரும் போரினை எழுதுவதே. ஆணெனவும் பெண்ணெனவும் நின்றெழும் ஆடலின் முரண்களின் தொகுப்பென இவ்வுடல்கள் எதனால் ஆக்கப்படுகின்றன. எதை விழைகின்றன என. மீன்குஞ்சுகள் தன் வாயை விடப் பருத்த உணவுப் பருக்கையொன்றை சுற்றிச் சுழற்றி மெல்லக் கடித்துத் தனக்கானதாக்கி உண்ணத் தொடங்குவது போல.

நோவிலும் வாழ்வின் கவிதைகளிலிருந்து வசிகரன் தொடர்ந்து செல்லப் போகும் திசைகளின் ஒளித்தொலைவுகளை எண்ணிக் கொள்கிறேன். அவரது கவிதைகளில் கலங்கரையில் ஒளிச் சுழலின் தீற்றல்கள் கடலிலும் கரையில் உறங்கும் நகரிலும் தெறித்து விழுகையில் உண்டாகும் வாழ்க்கை எழுதப்படத் தொடங்கியிருக்கிறது. அவை எழுந்து மிதக்கும் மானுடத் திரளை நோக்கி ஒளித்தண்டுகளால் தொட வேண்டும். கவிதை அடைய எளியது. அமரக் கடினமானது. நீடிக்க வாழ்வளிக்க வேண்டியது. இத்தொகுப்பு அவரின் நீடித்த பயணத்தின் முதல் ஒளிச்சுழல்வுகள்.

கிரிசாந் – கவிஞர், கட்டுரையாளர்

௦௦௦

பாரிஸ் – அரிசங்கர்

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ புதுச்சேரிக்குச் சென்று வருவதற்கான வாய்ப்பு சமீப காலங்களில் அமைந்து வருகிறது. நான் நேரில் பார்த்த புதுச்சேரிக்கும் திரைப்படங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் வாயிலாக முன்னர் அறிந்து வைத்திருந்த புதுச்சேரிக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகளைப் பார்க்க இயன்றது. யூனியன் பிரதேசமாகப் புதுச்சேரி இருப்பதாலும், அங்கு மதுபானங்களுக்கு வரிச்சலுகை இருப்பதாலும், மதுப் பிரியர்கள் கூடும் ஒரு நகரமாகவே தொடர்ந்தும் புதுச்சேரி நகைச்சுவையாகக் காட்டப்பட்டு வருவதுண்டு. அது புதுச்சேரியின் ஒட்டுமொத்த நிறம் அல்ல; அது அதன் ஒரு பகுதியே. புதுச்சேரி கடற்கரை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து கொள்ளும் ஓர் இடம்; அங்கே இந்தியா முழுவதிலும் இருந்து விடுமுறைக்காக நேரம் செலவிட வரும் பல்வேறு மாநிலத்தவர்களை மட்டுமல்லாது வெளிநாட்டவர்கள் பலரையும் காண இயலும். இந்த நகரத்தின் பின்னணியை வைத்து அதன் கருப்புப் பகுதியை அரிசங்கர் பாரிஸ் நாவலில் சில கதாபாத்திரங்களை வைத்து எழுதியுள்ளார்.

பிரஞ்சு காலனியத்துவத்தில் இருந்து புதுச்சேரி மீண்ட பின்னரும், பிரெஞ்சு கலாச்சார தொடர்ச்சியை மீண்டும் பேணி வருகிறது. அதன் கட்டடக்கலை, இன்றும் பேச்சு வழக்கில் ஒலிக்கும் பிரஞ்சு வார்த்தைகள், அதன் உணவுப் பழக்க வழக்கங்கள் என்று தனித்துவங்கள் கொண்ட மாகாணமாகவே உள்ளது. பிரான்சுக்குச் சென்று வந்த ஒருவரால் நிச்சயம் புதுச்சேரியில் எஞ்சியிருக்கும் அதன் தாக்கங்களைத் தெளிவாக உள்வாங்க இயலும். புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் செல்வதற்கான கனவுகளைக்கொண்ட இளைஞர்கள் அதற்காக செய்யத் துணியும் பதற்றம் கொண்ட முயற்சிகளை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்தான் பாரிஸ். இந்த புலம்பெயர்தலுக்குப் பின்னே இருக்கும் கனவுகளை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் அதற்கான எத்தனங்களைப் புரிந்து கொள்ள இயல்கிறது. எல்லா இளைஞர்களின் அடி மனதிலும் ஐரோப்பிய தேசத்தின் மீதான ஓர் கனவு விரிந்து பரவிக் கிடக்கின்றது. தெற்காசியாவில் இருந்து புலம்பெயரும் ஒரு பெருங்கூட்டத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க பிரதேசங்களில் பார்த்து வரலாம். புதுச்சேரியில் உள்ள இளைஞர்களிடமும் இந்தக் கனவு உள்ளது. ஏனென்றால், அவர்களின் மிக அருகே பிரான்ஸ் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், அவை அத்தனை இலகுவான விடயமாக இப்போது இருப்பதில்லை. பிரெஞ்சு இராணுவத்தில் அவர்களது முன்னோர்கள் வேலை பார்த்திருந்தால் அவர்களது சங்கதிகளுக்குப் பிரெஞ்சு குடியுரிமைகள் கொடுப்பதை அந்நாட்டு அரசாங்கம் ஒரு வழக்கமாக வைத்துள்ளது. அதன் அடிப்படையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பலர் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று பிரான்சில் வசித்து வருகிறார்கள். சிலர் அக்குடி உரிமை பெற்றிருந்தாலும், இந்தியாவில் வசித்து வருகிறார்கள். அப்படிக் குடியுரிமை பெற்றவர்களின் சங்கதியைத் திருமணம் செய்து தாங்களும் குடியுரிமையைப் பெற்று பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று அங்கே வசிப்பதை தேர்வாகக் கொள்கிறார்கள். இதற்குப் பின்னிருக்கும் காரணங்களை அரிசங்கர் அலட்டல் இல்லாமல் சில கதாபாத்திரங்களைக் கொண்டு முன்னும் பின்னும் நிகழும் சம்பவங்களைக் கிளைக் கதைகளாகப் பின்னித் தேர்ந்த யுத்தியுடன் ஒரு சிறிய நாவலாக எழுதியுள்ளார். புதுச்சேரி தன்னுடைய பழமைகளை உதறி ஒரு நவீன நகரமாக மாறிவரும் ஒரு மங்கலான சித்திரமும் இந்நாவலில் அமைந்துள்ளது. புதுச்சேரி பழையதை விடுவித்து புதியதை உள்வாங்கிக் கொள்ளும், பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட புத்துயிர்த் தன்மையை ஒரு மறைமுக எழுத்துப் பிரதியாகத் தனக்குள் வைத்துள்ளது. இந்தச் சிறிய நாவல் முழுக்க புதுவையின் தனித்துவ கலாச்சார அம்சங்களை அதன் சூழலுடன் கச்சிதமாக தன்னியல்பாக எழுத்தில் கொண்டுவந்து விடுகிறார் அரிசங்கர்.

பிரெஞ்சு மக்கள் வசிக்கும் வெள்ளை நகரத்தை அதன் சூழலை தெளிவாக எழுதப்பட்டுள்ளது. புதுவை இளைஞர்களிடம் இருக்கும் பிரான்ஸ் மீதான மயக்கம் பிரஞ்சு படிக்க பிரான்ஸ் அலையன்ஸில் முட்டி மோதும் மோகம் என்பவை கூர்மையாக எழுதப்பட்டுள்ளன. இந்த மோகத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் ஒரு தரப்பையும் இந்த சிறிய நாவலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த நாவலில் கவர்ந்த விடயம் என்னவென்று யோசிக்கும் போது இதனை எழுதிய உத்தியே என்று தோன்றுகிறது. மிகச் சிக்கலான கதை புலத்தை எளிமையாக சொல்ல இந்த வடிவம் அசாத்தியமாக உதவியுள்ளது. ஆயிரம் பக்கங்களில் கூட இதனை எழுதி இருக்க இயலும். ஆனால், ஒரு திரைக்கதை உத்தியுடன் முன்பின்னே நிகழும் சம்பவங்களை ஒன்றாக அடுக்கி சொல்லும் அரிசங்கரின் எழுத்து நடை இந்த நாவலை சுவாரசியப்படுத்துகின்றது. எனினும் இந்த உத்திக்குள் உறைந்திருக்கும் ஓர் திரைப்பட கதை பிரதித் தன்மை, மற்றொரு பக்கம் ஆழமான கதை சொல்லல் முறைக்கு எதிரான ஓர் அம்சத்தையும் தந்து விடுகிறது. மிக விரிந்த தளத்தில் இக்கதையை எழுதிச் சொல்ல அரிசங்கர் முயன்றுள்ளார். புதுவையின் மேலும் உள் உறைந்திருக்கும் சமூகப் பின்னணிகளை மேலும் ஆழமாக வெளிப்படுத்த பல்வேறு கதாபாத்திரங்களையும் சம்பவம் பின்னணிகளையும் சேர்த்திருக்கலாமோ என்று ஓர் விமசாராக யோசிக்கத் தோன்றுகிறது. புதுவையில் நவீன இலக்கியத்தில் தவிர்க்க இயலாத வலுவான ஓர் படைப்பிலக்கியவாதியாக பாரிஸ் நாவல் மூலம் அரிசங்கர் தன்னை நிறுவியுள்ளார்.

அனோஜன் பாலகிருஷ்ணன் – எழுத்தாளர்

௦௦௦

உரையாடலுக்கு

Your email address will not be published.