/

பெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா

வெண்முரசு எனும் தொடர் நாவல் வரிசையில் முதற்கனலாக மூண்டெழுந்து அமைந்திருப்பதே “முதற்கனல்” எனும் நாவல். எப்பொழுதும் ஜெயமோகனின் நாவலின் தலைப்புகள் ஒட்டுமொத்த நாவலையே தன்னுள் வைத்துக் கொண்டுறங்கும் வித்தைப் போலத் தோற்றமளிப்பவை. அவ்வாறே இருபத்தியாறு நாவல்களைக் கொண்டிலங்கக் கூடிய வெண்முரசின் முதற்கனலாக, மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அழிவுக்கான முதற்கனலாக இந்த நாவல் அமையப் பெறுகிறது.

அஸ்தினாபுரி மீது விழுந்த முதற்கனல் என்பது அம்பையின் காதலின் கனலோ என்று வாசிக்கும் ஒவ்வொருவரும் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால், இங்கு ஆசிரியர் சொல்வது சுனந்தையின் காமத்தின் கனலை. பெண்ணின் காதலை விட காமமே கனல் மூண்டெழக்கூடியது என்பதை உணர்த்தும் ஒரு தருணம் நாவலில் வருகிறது. சிபி நாட்டு இளவரசியான சுனந்தை அஸ்தினாபுரத்தின் பிரதீபரை தன் அறுபது வயதில் மணந்து தேவாபியையும், சாந்தனுவையும் பால்ஹிகரையும் பெற்றெடுத்து மாண்டு விடுகிறாள். மஞ்சப் படுக்கையில் விசித்ரவீரியன் அம்பிகையிடம் தன் உடல் குறைக்குக் காரணம் சுனந்தை தன் அறுபது வயது வரையில் சுமந்திருந்த காமத்தின் கனலே என்றுரைக்கிறான். இந்த செய்தியானது ஒரே ஒரு வரியில் நாவலில் எடுத்தியம்பப்பட்டிருக்கும். ஆனால் அம்பையின் கனலோ மிகத் தீவிரமாக நாவல் முழுமைக்கும் விரவியிருக்கும். இங்ஙனம் சுனந்தை மற்றும் அம்பை என்ற இரு பெண்களின் நெஞ்சில் மூண்ட கனலே முதற்கனலாக எழுகிறது.

அம்பையே முதற்கனலின் நாயகி என்று கூறுமளவு அவள் பூத்துக் குலுங்கி கனிந்து தெய்வமாக மாறும் தருணம் நாவலில் காணக்கிடக்கிறது. முதன் முதலில் அஸ்தினாபுரியின் அரசி சத்தியவதி வாயிலாகவே அம்பை என்னும் பெயர் நம்மை வந்தடைகிறது. காசி நாட்டு இளவரசிகளில் மூத்தவளும் அழகிலும் வீரத்திலும் சிறந்தவளுமான அம்பை உட்பட மற்ற இரு இளவரசிகளையும் விசித்ரவீரியனுக்கு பெண் கேட்டும், காசி அரசர் மறுத்ததால் பீஷ்மரின் துணையோடு அவர்களை கந்தர்வ மணம் புரிந்துவைக்க சத்தியவதி விழைகிறாள். முதன் முதலில் அம்பையை பீஷ்மரின் கண்கள் வழி தான் ஒவ்வொரு வாசகனும் முதலில் சந்தித்திருக்க முடியும். பீஷ்மரின் ஒரு கணத்துக்கும் குறைவான அந்த காதல் பார்வையை அறியுமளவு நுணுக்கமானவளாக, மணப்பந்தளில் இளவரசிகளைக் கடத்திச் செல்ல முற்பட்டு சண்டையிட்ட பீஷ்மரை தன் வாளால் எதிர்கொண்ட வீரமங்கையாகவும், கவர்ந்து படகில் சென்று கொண்டிருக்கும் வழியில் தன் காதல் சால்வ மன்னன் மேல் என்று எடுத்துக் கூறி பீஷ்மரிடம் வாதிட்டு சால்வ மன்னனின் கோட்டையை அடையும் தைரியமானவளாக, சுய நலமே கண்ணாயிருந்த சால்வன் அவளின் காதலை மறுத்தபோது பேதையாய் கண்ணீர் மல்குபவளாகவும், தன்னை அவன் அந்தபுரத்து இளவரசியாய் இருக்கச் சொன்ன போது வெகுண்டெழுந்து அதை ஏற்க மறுத்து வெளியேறிய கண்ணியமானவளாகவும், யாருமற்றவளாய் நிர்கதியாய் காசி நாட்டுக்குச் சென்று தன்னை மகளாய் ஏற்றுக் கொள்ளச் சொல்லி அழுதாற்றும் குழந்தையாகவும் அம்பை கதறும்போதே நம்மை அறியாமல் அவள் நம் மனதில் நின்றுவிடுகிறாள்.

பெண்ணின் பருவங்களாக பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என தமிழிலக்கியம் எடுத்துக் கூறியிருக்கிறது. ஆனால், இங்கு ஆசிரியர்,  ஆதரவற்று கங்கையில் தன்னை மாய்த்துக் கொள்ள விளையும் அம்பைக்கு மூன்று தேவதைகள் வந்து அவளையே விளங்க வைப்பதாய் சித்தரிக்கும் புனைவுத் தருணம் ஒன்றுள்ளது. இங்கு ஆசிரியர் எடுத்துரைக்கும் பேதைப் பருவம், கன்னிப் பருவம் மற்றும் காதல் பருவம் யாவும் ஒவ்வொரு பெண்ணும் தன் இளமையில் கடக்கக் கூடியதே. ஆனால், இத்துனை நுணுக்கமாக ஒவ்வொரு பருவமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் தருணத்தை விளக்கும் போது அங்கு நின்று ஒவ்வொரு வாசகரும் தன் பருவ மாற்றத்தை நினைத்துப் பார்க்க ஏதுவாக இது அமைந்துள்ளது. மயிற்பீலியை பேதைப் பருவத்தில் குட்டி போடுமா என்று பேதையாய் விளையாடும் காலம் ஒன்றுள்ளது. ஆனால் அம்பை அந்த நிலையைக் கடந்து அதை ஒரு குழந்தைக்கு அலங்கரித்த அந்தப்பருவத்தில் அவளை விட்டு பேதைப் பருவத்திற்கான சுவர்ணை நீங்குகிறாள். அதன் பின் அவளை கன்னிப் பருவத்திற்கான சோபையிடம் அவளைக் கையளிக்கிறாள். மாயையும், அகங்காரமும் கொண்ட கன்னிப் பருவத்திலிருந்து அவள் படகினின்று திரும்பிச் செல்லும் போது பீஷ்மரை அண்ணார்ந்து பார்த்த அந்த கணத்தில் சோபை அவளிடமிருந்து விலகி, விருஷ்டிக்கு அவளைக் கையளிக்கிறாள். அதன்பின் அம்பையின் உண்மைக் காதல் பீஷ்மரே என்று விருஷ்டி விளங்க வைத்து யாவற்றையும்விட பெண்ணின் கருப்பையே உயர்வானதென்று கூறுகிறாள். அந்தத் தருணம் அம்பைக்கு மட்டும் திறப்பானதல்ல, நாவலைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் பருவ மாறுதல்களை அசைபோட ஏதுவான புனைவுத் தருணம்.

கன்னிப் பருவத்தின் காதல் மாயமானது. எந்தவித முன் யூகமுமின்றி மாயத்திற்குள் சிக்கிக் கொள்ள ஏதுவாக தன்னிச்சையோடு காத்துக் கொண்டிருக்கும். அங்கு தான் சால்வ மன்னனைப் போல கணக்கு போட்டு காதலிக்கும் ஆண்களின் வலையில் அவர்கள் எளிதாக சிக்கிக் கொள்வார்கள். அம்பையும் இதற்கு விதி விலக்கல்ல. ஆசிரியர் இந்தப் பருவங்களை எந்த வயதிற்குள்ளும் அடைக்கவில்லை. அது ஒரு தருணம் அல்லது ஒரு முதிர்ச்சி அவ்வளவே. அது ஒவ்வொரு பெண்ணுக்கு மாறுபடும் தன்மை கொண்டது. நாவலைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் அசை போட்டு அறிந்து கொள்ள ஏதுவான புள்ளி இது. ஆண் வாசர்களுக்கோ பெண்களின் இந்த மாறுதல்களை தெளிவுற அறிந்து கொள்ளும் தருணம்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் அம்பை பீஷ்மரின் காதலை உணர்ந்து அவரை நாடிச் சென்று தன் காதலை உரைக்கிறாள். ஆனால் தன் தந்தைக்கு செய்த கொடுத்த வாக்கின் நிமித்தம் பீஷ்மர் அவளுடைய காதலை ஏற்க மறுக்கிறார். ஏற்பும் மறுப்பும் நிறைந்த வாதம் அவர்களுக்கிடையே நடக்கிறது. பீஷ்மர் என்னும் இலட்சிய ஆணுக்கு நிகரே வைக்கக் கூடிய ஒரு பெண் இங்கு அம்பையாக மட்டுமே இருக்க முடியும் என்பதை இந்த வாதமும் அதிலிருக்கும் தீவிரத்தன்மையும் காட்டுகிறது.

பீஷ்மரின் காமத்தின் கனல் என ஏதும் இந்த நாவலின் தருணத்தால் எடுத்தியம்பப்படவில்லை. ஒரு வேளை இருந்தால் அதை சுனந்தையின் முதற்கனலுக்கு நிகராகவே வைக்க முடியும். அது அஸ்தினாபுரியை மட்டுமல்ல பாரதவர்ஷ்த்தையே முழுதழிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். ஆனால், ஆசிரியர் பீஷ்மர் தன் காதலை உணரும் தருணங்களாகச் சொல்லும் மிகச் சிலவற்றில் ஒன்று அம்பையோ அல்லது அம்பையின் மறுபிறவி மட்டுமே உள்ளது. நிறைவேறாத முதற்காதலே, என்றும் நினைவில் நிற்கக்கூடியது போல பீஷ்மர்-அம்பையின் காதல் ஒவ்வொரு வாசகரையும் அவர்கள் இருவரும் நிற்கக் கூடிய எதிரெதிர் முனைகளுக்கு நடுவே நின்று வருந்தச் செய்யக் கூடியது. தன் தந்தைக்கு செய்து கொடுத்த வாக்கிற்கிணங்க திருமணத்தைத் தழுவாது இருப்பதும், பாரதவர்ஷ்த்தையே தன் காலடியில் பணியவைக்கும் வல்லமை கொண்ட திண் தோள் இருந்தும் நாடாள மாட்டேன் என சூளுரைத்து தியாகத்தின் உச்சியில் நிற்கும் பீஷ்ம பிதாமகரை ஒவ்வொரு வாசகனும் வெறுக்கும் தருணம் ஒன்று உள்ளதானால் அது அம்பை தன் காதலைக் கதறி உரைத்து, தனியனான அவரை பிள்ளையாய் அணைத்துக் கொள்ளத் துடித்தபோது தன் அறிவார்ந்த தர்க்கத்தால் அதை மறுத்த கணத்தில் தான். அவள் கதறி அழும் அந்தத் தருணத்தில் ஒரு கணம் அவளை அணைத்துக் கொள்ளவே அவர் நினைத்தாலும் தன்னை அடக்கிக் கொண்டுவிடுகிறார். இறுதியில் அவள் மேல் வீசிய ஒரு ஏளனச் சுழிப்பால் அவள் மிகவும் சினங்கொண்டு இனி செய்வதற்கு ஏதுமற்றவளாய் காடுகளில் அலைந்து திரிந்து கொற்றவையாகிறாள். பின்னர் சூதரின் பாடல்களே வராகிணியின் மேல் அமர்ந்திருக்கும் அம்பாதேவியாய் அவளை முதற்கனலில் நிறைவு செய்கிறது. தன்னை கையாள முடியாத ஒரு கனல் மூண்டெழுந்து பராக்கிரமனான பீஷ்மருக்கான ஆயுதத்தை நிறுவிவிட்டு முதற்கனலில் மூழ்கிவிடுகிறது. பீஷ்மருக்கான ஆயுதம் முதற்கனலிலேயே முடிவு செய்யப்படுகிறது இந்த கணத்தில் தான். “ஆண்களின் தனிமையைப்போல பெண்களை கனிவுகொள்ளச்செய்வது ஏதுமில்லை. கனிவுபோல பெண்களை காதல்நோக்கி கொண்டுசெல்வதும் பிறிதில்லை.” என்ற வரிகளே அம்பைக்கு பிஷ்மரின் மேலான காதலை எடுத்துரைக்கக் கூடியது.

அம்பாதேவி பீஷ்மருக்காக உருவாக்கிய ஆயுதமே சிகண்டி. பித்து நிலையில் கொற்றவையாய் இருந்த அம்பையிடம் இறந்துபோன ஒரு பித்தியின் மகவாய் வந்து சேர்ந்து அவளின் முலைப்பாலை குடித்து வளர்கிறாள் அவள். அதன்பின் பிரிக்கவியலாத ஒரு பந்தம் அன்பினால் அவர்களுக்குள் உருவாகிறது. அம்பாதேவியின் ஆணைக்கிணங்க அவள் இறந்தபின்பு ஓர் யட்சனின் மூலம் தன்னை ஆணாக உருமாற்றிக் கொண்டு இனி வரும் பிறவிகளில் அதனால் அவள் அடையும் தீமைகளையும் பொருட்படுத்தாது தன் இந்தப் பிறவியை ஒப்புக் கொடுக்கும் ஒரு பித்தான அன்பு அவளுடையது. தன் அன்னையின் துயர் நீக்க ஒரு கணமும் யோசிக்காமல் தன்னை முழுதளித்த அன்புள்ளமும், பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளாய் செல்லும் ஒரு இலட்சியவாதியாயும் சிகண்டி நம்மைக் கவர்வாள். உடலளவில் முழுமையாக ஆணாக மாறாத அவனின் அகோரத் தோற்றம் காண்போரை ஏளனப் பார்வை கொள்ளச் செய்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் பாஞ்சாலத்திலும், அக்னிவேசரிடமும் பாடத்தைக் கற்கும் ஒரு ஒற்றை இலக்குத் தன்மை வியக்க வைக்கும் ஒன்று. “ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி.” என்ற ஆசிரியரின் இந்த வரியே சிகண்டியை விளக்கும் வரியாக அமைகிறது. அக்னிவேசரிடம் அவன் கற்றுக் கொண்டது தனுர்வேதத்தை மட்டுமல்ல. தன் இலக்கை அடைவதற்கான தத்துவத்தையும் தான். அக்னிவேசர் கூறும்போது அம்பையின் தீயானது பீஷ்மரிடமிருந்தே தோன்றியதால் அவனுக்கு பீஷ்மர் தான் தந்தை எனவும், அவரின் மேல் இருக்கும் குரோதம் அவனுள் அழிந்தாலொழிய அவனால் அவரை வெல்ல முடியாது எனவும் கூறி அவனுக்கான ஆப்த மந்திரமான “அது நீயே; தத்வமசி” என்ற சொல்லை விதைத்து பீஷ்மரை முழுமையாக அறிந்து கொள்ள அவனின் பயணத்தைத் துவக்குகிறார். அதன்பின் அவன் சோர்வுறாத பயணத்தை மேற்கொண்டு வழிதோறும் சூதர்களின் பாடல் வழி பீஷ்மரைப் பற்றி அறிந்து கொள்கிறான். பீஷ்மரின் ஆடிப்பிம்பமான பால்ஹிகரை அறிகிறான். அந்தப் பயணத்தின் போது ஒரு முறை தான் பேசிக் கொண்டிருப்பது பீஷ்மர் தான் என்றறியாது அவரை அழிப்பதற்காக அவரிடமே கற்றுத் தரச் சொல்லி சிகண்டி பீஷ்மரிடமே கேட்கிறான். ‘அம்பாதேவியின் பொருட்டு’ என்ற ஒற்றை வரிக்காக தான் அறிந்த அனைத்தையும் ஓர் நுண்ணிய மந்திர வடிவில் அவனை மாணவனாக ஏற்று அவனுக்குக் கற்றுத் தருகிறார் பீஷ்மர். அதற்குப் பின் நாவலில் சிகண்டி இல்லை. அவன் ஒற்றை இலக்கு முனையைக் கொண்ட அம்பாக நித்தமும் பீஷ்மரை அழிக்கும் மிகப்பெரும் ஆயுதமாக பயிற்சி செய்து கொண்டே இருக்கும் புனைவை நாமே ஏற்றிக் கொள்ள ஏதுவாக சொல்லப்படாத இடத்தில் சிகண்டி மறைகிறான்.

பிரபஞ்சத்தின் தோற்றுவாயை முதன் முதலில் நாவல் எடுத்தியம்பும்போது அது “இச்சை” என்னும் புள்ளியில் துவங்குவதாக சொல்லப்பட்டிருக்கும். இச்சை ஒன்றாலே தான் பல்லாயிரமாகப் பெருக முடியும். அங்ஙனம் குருவம்சத்தின் அழிவு சந்தனு மன்னர் மச்ச குல சத்தியவதியின் மேல் கொண்ட தீராத இச்சையாலே ஆரம்பிக்கிறது என்கிறது நாவல். ஒட்டுமொத்த அஸ்தினாபுரத்தின் அழிவுப் பாதையின் ஆரம்ப காலத்தினின்றே ஓர் ஆணைகளைப் பிறப்பிக்கும் அரசியாக, பீஷ்மர் முதற்கொண்டு யாவரும், யாவும் அவள் சொல்லினாலேயே சுழல்வதான ஓர் ஆளுமையாகவும், அஸ்தினாபுரியின் ஒவ்வொரு அசைவையும் தேர்ந்து முடிவெடுக்கும் ஓர் ராஜ அன்னையாக மிகவும் கம்பீரமான உருக்கொண்டிருப்பவள் சத்தியவதி. “அதிகாரம் இரக்கமின்மையில் இருந்து பிறப்பது; அரண்மனை என்றுமே அறிவாலும் விவேகத்தாலும் ஆளப்படுகிறது” எனும் வரிகள் அவளை விவரிக்கப் போதுமானவை. பாசத்தால் கலக்கமுறாத, தீர்க்கமான முடிவுகளை அஸ்தினாபுரியின் வரலாற்றுப் பாதைக்கு எடுக்கக் கூடியவளாக விளங்குகிறாள். அதே சமயம் விசித்ரவீரியனின் அன்புக்குக் கனியும் அன்னையாக, தன் இளமையில் சித்ராங்கதன் என்னும் கந்தர்வனைக் கண்ட அந்த தருணத்தை நினைத்துப் பார்க்கும் ஒரு சராசரிப் பெண்ணாகவும் அவள் இருக்கிறாள். அவள் எடுக்கும் அரச முடிவுகளாலேயே முதற்கனலின் கதை நகர்த்தப்படுகிறது.

இன்னும் இரு பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்களின் அப்பழுக்கற்ற காதல் மொழிகள் மற்றும் தருணங்களால் நம்மை இனிமை கொள்ளச் செய்பவர்கள் அவர்கள். ஒன்று அம்பிகை மற்றொன்று சிவை. அம்பிகையின் அறிமுகமே “அம்பையை  விளையாட்டுப் பிள்ளையாக வேண்டுமென” காசி நாட்டு அரசி பெற்றுக் கொண்டதாகத் தான் ஆரம்பிக்கிறது. அம்பை எனும் கனலுக்கும், அம்பாலிகை என்னும் பேதைக்கும் நடுவுத் தன்மையில் இருக்கும் ஒருவளாகவே அம்பிகை நமக்குத் தென்படுவாள். விசித்ரவீரியன் போன்ற தோற்றம் மற்றும் உடல் பலவீனம் கொண்ட ஒருவனை தன் முதல் பார்வையால் வெறுத்து தன் முன்பு மண்டியிட்ட அடுத்த கணமே அவனை அணைத்து கண்ணீர் சொறிந்து ஆற்றுப்படுத்துகிறாள். அதன்பின் அவனுக்கும் அவளுக்கும் நடக்கும் அந்த உரையாடல்கள் அனைத்துமே காதலால் நிறைந்து மூழ்கிக் கிடக்கும் தும்பிகளைப் போல ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். விசித்ரவீரியனின் மரணம் நமக்கு அளிக்கக் கூடிய ஒவ்வொரு கனம் நிறைந்த வலியும் அம்பிகை அவனுடன் செலவளித்த காதல் கணங்களால் தான் மேலும் நம்முள் மூள்கிறது. “பெண்ணுடன் சேர்ந்து அழாத ஆணுக்கு சேர்ந்து சிரிப்பதற்கு உரிமை இல்லை; நகைச்சுவையைப் பகிர பெண்ணை பிரம்மனிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும்; பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது; காதல் விழிகளால் உருவாக்கப்படுவது அழகு; ஆண்களுக்கு பெண்கள் பேசுவதெல்லாம் பொருளற்ற சிறுமைகள் என்றுபடும்; பெண்களுக்கும் ஆண்களின் பெரியவை எல்லாம் கூழாங்கற்களாகத் தானே தெரியும்?; ஞானத்தை விட, தவத்தைவிட பிரேமையே மகத்தானது; ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்; ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான்” என்ற வரிகள் யாவும் இவர்களின் காதல் தருணங்களை நினைக்கும் போது நினைவிலெழுந்து நம்மையே மீட்டிப் பார்த்துக் கொள்ளச் செய்யக் கூடியது.

அரச குடும்பத்திற்குள் சுழலும் கதையில் நாம் பெரும்பாலும் காண்பது அந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களைத் தான். ஆனால் ஒரு சூதர் குலப் பெண்ணான சிவையைப் பற்றிச் சொல்லும் தருணத்தில் அரண்மனையில் உலவிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த சூதப் பெண்களின் வாழ்வுச் சித்திரத்தை முழுமையாகக் காண முடியும். அரண்மனையின் நிகழ்வுகளை அவர்களுக்கே உரிய பகடியில் சொல்லும்போது வாசகர்களின் மனக் குமுறலே எதிரொலிப்பது போல இருக்கிறது. “சூதர்களின் கதைகளில் எல்லா அரசர்களும் தவமிருந்து தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; ஆனால், சூதர்களுக்கு கூழாங்கல்லை விட்டெறிந்தாலே குழந்தை பிறந்துவிடுகிறது” என்ற வரிகளில் அதைக் காணலாம். ஒரு சேடிப் பெண்ணாக பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்துக் கொண்டு திட்டுகளை வாங்கிக் கொண்டிருப்பவளாகவே சிவை நமக்கு அறிமுகமாகிறாள். அவள் முதன் முதலில் வியாசரை அவரின் அறையில் சந்திக்கும் தருணம் சொல்லப்படாத, அல்லது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றல்லாத காதலைப் போல நம்மை பரவசப்படுத்துவது. சத்தியவதியின் ஆணைக் கிணங்கவே வியாசர் அம்பிகையயியும், அம்பாலிகையையும் கருவுறச் செய்கிறார். சிவையும் அப்படியே எனினும் வியாசர் அவளை மனதாரத் தழுவியிருக்கக்கூடும். அறிவுள்ள பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள். வியாசரும் அப்படியே. தான் வைத்திருந்த சுவடிக்கட்டு புராணஹிம்சிதை தான் என்று சிவை சொல்லும்போதே அவள் லோமச முனிவர் குலத்தைச் சேர்ந்தவள் என்று கேட்டறிகிறார். பின்னும் அவர்களுக்குள் நடக்கும் ஒரு அறிவார்ந்த உரையாடலால் வியாசரின் மனதை அவள் ஆற்றுப்படுத்துவது காதலையல்லாது வேறொன்றையும் நினைக்கத் தோன்றவில்லை. “நடக்கும் அனைத்துக்கும் நாமறியாத இலக்குகள் உண்டு என்று தாங்கள் அறியாததா?” என்று அவள் அவரிடம் கேட்கும் போதும், “துளைவிழுந்த மூங்கில் தான் பாடும்” என்று அவரை ஆற்றுப் படுத்தும் போதும் அதற்கு அவரின் பதிலுரைகளுமென அந்த உரையாடல்கள் இரு ஞானம் நிறைந்த காதலர்கள் பேசக் கேட்டு இன்புறுவதை போன்றது. வியாசரின் கருவை விரும்பி ஏற்கும் ஒரே பெண்ணாக, அவர் ஞானமெல்லாம் தாங்கிய கருவைச் சுமந்து விதுரன் என்னும் ஞானக் குழ்ந்தையை பெற்றெடுக்கும் அன்னையாககிறாள் சிவை.

இன்னும் இந்த நாவலில் மற்றும் அதன் உபகதைகளுக்குள் பல பெண்கள் விரவிக் கிடக்கிறார்கள். ஆனால் முதற்கனலின் முதன்மைப் பெண்களாக நாவலையே நகர்த்திச் செல்பவர்களாக இவர்களைக் காணலாம். ஒவ்வொரு வாசகரும் தாமே உணர்ந்து இவர்களில் வேறொன்றைக் காணவும் வாய்ப்புள்ளதாக ஆசிரியர் அமைத்திருக்கிறார். பெண்கள் ஜெயமோகனின் எழுத்துக்களில் நுண்ணிய வடிவத்தைப் பெறுகிறார்கள். அப்படியான நுண்ணிய தருணங்களை வாசகர்கள் கண்டடைய ஏதுவான நாவல்.

இரம்யா

விருதுநகர் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். தமிழிலக்கிய வாசகர்

3 Comments

  1. Mam
    Always thinking about the best of Shiva and Shakthi from Venmurasu.
    No doubt that it has to be the “Thiruvilayadal” between the Son of Her and Daughter of Him.
    I could have expressed myself the commentary of the same and the two others in any better from this Epic.
    With best wishes
    And Regards
    Bhaskaran

உரையாடலுக்கு

Your email address will not be published.