/

தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளைக் கூடக் கொடுப்பதற்கு சிங்கள தரப்பில் ஒருமித்த கருத்து இல்லை: ஜோர்ஜ்.இ.குருஷேவ்

தாயகம் பத்திரிகை ஆசிரியருடனான நேர்காணல் (பகுதி 2), நேர்கண்டவர் அனோஜன் பாலகிருஷ்ணன்

தாயகத்தின் வளர்ச்சிக்கு உங்களுக்கு உதவியவர்கள் பற்றி?

தாயகம் ஒரு தனிமனித முயற்சியாக இருந்தாலும், அதன் வெற்றிக்கான பங்களிப்பு பலருக்கு உண்டு. தேடகம் நண்பர்கள், என் தம்பி, மைத்துனன், நண்பர்கள் என்று அதை வினியோகிக்க உதவியவர்கள், கண்ணாடி உடைப்பு, பத்திரிகைத் தடை, தொலைபேசி மிரட்டல்கள் என்பவற்றையும் மீறி அதை விற்பனை செய்த கடைக்காரர்கள், விளம்பரதாரர்கள் என்று பலர் தாயகம் வாசகர்கள் கைகளில் செல்வதற்கான வழிகளில் உதவி செய்தார்கள்.

ரொறன்ரோவை மையப்படுத்திய விற்பனை பின்னர் மொன்றியலுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இங்கிருந்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு பிரதிகளை அனுப்பி, தாயகம் பற்றி பலருக்கும் தெரிய ஆரம்பிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்த மாற்றுக் கருத்து நண்பர்கள் தாங்களாகவே பத்திரிகையைப் பெற்று வினியோகித்தார்கள். கனடாவை விட, புலிகளின் வன்முறை கொலை வரைக்கும் சென்ற ஐரோப்பாவில் அதை வினியோகிப்பது என்பது உயிர்ப்பிரச்சனையாகத் தான் இருந்தது. அந்த நெருக்கடிகளுக்குள்ளும் தாயகத்தை அவர்கள் கொண்டு போய் சேர்த்தார்கள்.

இப்படி ஐந்து கண்டங்களில் இருந்தும் தாயகத்திற்கு சந்தா கட்டி பத்திரிகையைப் பலரும் பெற்று வாசித்தார்கள்.

என்னை யார் என்றே தெரியாமல், எந்த இயக்க தொடர்புகளும் இல்லாத என்னுடைய எழுத்துக்களை மட்டுமே வாசித்து, என் உறுதியான நிலைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு, அவ்வாறான சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடக்கூடிய ஒரு பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்து கொண்டே, அவர்கள் தாயகத்தின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

ஒரு பத்திரிகையை சுதந்திரமாக விற்க முடியாதபடிக்கு, ஒரு கொலை வெறிக்கூட்டம் தலைமை தாங்கிய ஒரு போராட்டத்தை ஆதரித்த சமூகம், கருத்துச் சுதந்திரம் பற்றிக் கொண்டிருந்த கருத்தியல் இவ்வாறாகத்தான் இருந்தது என்பது இன்றைக்கும் பலரும் நம்ப விரும்பாத உண்மையாகத் தான் இருக்கிறது.

தாயகத்தை ஒரு செய்திப் பத்திரிகையாகத் தான் ஆரம்பித்தேன். என்னுடைய ஏடு இட்டோர் இயல் மட்டுமே எழுதப்பட்ட ஆக்கமாக இருந்தது.

என்னுடைய ஏடு இட்டோர் இயல் தொடர்ச்சியாக சமூகம் பேச மறுக்கும், பயப்படும் விடயங்களைப் பற்றியதாகவும் இருந்ததால், அவ்வாறான கருத்துக்களின் அவசியத்தை உணர்ந்தவர்கள் பலர் தாங்களாகவே எழுத ஆரம்பித்தார்கள். தங்களுக்குத் தெரிந்தவர்களையும் ஊக்குவித்தார்கள்.

தனியே அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் மட்டுமன்றி, கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், நாடகங்கள், விமர்சனம், உலக திரைப்படங்கள் என கலை, இலக்கியம், விஞ்ஞானம்;, தொழில்நுட்பம் என்று நான் திட்டமிடாத வகையில் தாயகத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றதில் இவர்கள் அனைவருக்கும் பங்குண்டு.

ஒரு வெறும் செய்திப் பத்திரிகையாக இல்லாமல், தமிழ் சமூகத்தில் நியாயத்திற்கான குரலாக, கொலைப் பயமுறுத்தல்களுக்கும் மத்தியில் துணிச்சலாக, தாயகம்காரர் என்ற முத்திரை குத்தலையும் கடந்து, புலன் பெயர் இலக்கியத்தில் அறியப்பட்ட பலரும் எழுதுகின்ற ஒரு பத்திரிகையாக தாயகம் வளர்ச்சி அடைந்தது.

பல புதிய எழுத்தாளர்களுக்கும் தாயகம் களம் அமைத்துக் கொடுத்தது.

தாயகத்திற்கு பொதுமக்கள் இடையே எவ்வாறான வரவேற்பு கிட்டியது?

கொண்டு சென்று கைகளில் திணித்து யாசகம் செய்யும் காலாண்டு இலக்கிய சஞ்சிகைகள் மாதிரி இல்லாமல், கடைகளில் காத்திருந்து வாங்கும் அளவுக்கு தாயகம் இருந்தது. தாயகம் வாங்குவதற்கு என்றே வியாழக்கிழமை மாலைகளில் கடைகளில் தவம் இருந்து வராததால் திட்டிச் சென்றவர்கள் உண்டு. ஒரு தடவை நான் வினியோகிக்க சென்ற போது, கடைக்குள் போகும் முன்னர் தங்களுக்கு பிரதி வேண்டும் என்றவர்களிடம் கடையில் வாங்கும்படி சொன்ன போது, நான் வைத்து விட்டு வந்த பின்னால், வாங்கிக் கொண்டு, என்னை நண்பர்களிடம் காட்டி, ‘அவன் தாறான் இல்லையடா!’ என்று ஒருவர் திட்டிச் சென்றார்.

வாங்கிய பிரதிகளை நீண்ட காலமாக சேர்த்து தொகுத்து வைத்திருந்தவர்கள் இன்றும் உண்டு.

தாயகத்தில் வெளிவந்த பல ஆக்கங்கள் மாற்று இலக்கிய, அரசியல் வெளியீடுகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. பலர் அதை பெருமையோடு செய்தார்கள்.

‘புலன் பெயர்’ இலக்கிய வரலாற்றில் தாயகம் என்ற பத்திரிகையின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லாமல், வரலாறு எழுதுகின்ற வல்லுனர்களும், இலக்கிய சந்திப்புகளும் நிறைய உண்டு. அதில் தாயகத்தில் எழுதியவர்களும் அடக்கம் என்பது தான் ஒரு முரண்நகை.

தாயகத்தில் வந்த அரசியல் கட்டுரை ஒன்றிற்கு எழுதிய பதிலில், குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் காட்டிக் கொடுக்கப்பட்டதன் சூத்திரதாரி பிரபாகரன் தான் என்று சூசகமாக எழுதிய சபாலிங்கம் புலிகளால் பாரிஸில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது படுகொலை பற்றி ஐலண்ட் பத்திரிகையில் தராக்கி என்ற பெயரில் எழுதிய சிவராம் தாயகம் பற்றி எழுதுகையில்… But before we proceed any further a word about Thayagam, it is by far the most consistently fierce anti LTTE publication that has ever come out during the course of the two Eelam wars. (The army’s psyops pundits[?] would look worse than kindergarten kids if any one were to judge their work by standards set by “Thayagam’ in its verbal blitzkriegs on the LTTE). It was published as a tabloid in Toronto for a couple of years and was forced to become a magazine in 1992 when the Tigers threatened many Tamil shops which were selling it and successfully crippled its circulation in favour of the rival Tamil tabloid Senthamari. Thayagam is edited by a young Tamil writer from Jaffna now settled in Toronto called George Kruschev (his own name).

What has actually perplexed many is why has someone taken all this trouble and utter risk to kill poor Sabalingam when so many like Kruschev have taken it upon themselves to lambast the LTTE in every possible way and have remained hale and hearty unto this day? The reason I think which was of utmost concern to those who terminated him was that these things were being uttered by Sabalingam who was not just another enthusiastic critic of the LTTE’s past but was one of the few surviving progenitors of the armed Eelam movement within which the young boy called Prabhaharan was moulded into a guerrilla.

என்று எழுதியிருந்தார். பின்னர் அதே சிவராம் புலிகளின் spin doctor ஆகி, மாமனிதரானது இன்னொரு கதை.

மாத்தயா கைது செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது, முஸ்லிம்கள் வெளியேற்றம் என்று எல்லாருக்குமே தெரிந்து, பகிரங்கமாக பேசப் பயப்பட்ட விடயங்களை தாயகத்தில் வெளிக் கொணர்ந்திருந்தோம். புலிகள் பற்றி சர்வதேச சஞ்சிகைகள், நூல்களில் வந்தவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தோம்.

தாயகம் புலி எதிர்ப்பு பத்திரிகை என்று புலிகள் முத்திரை குத்தினாலும், அதை ஆர்வமாக வாசிப்பதில் அவர்களே முன்னணியில் நின்றார்கள். இதை காலம் சென்ற நண்பர் ஒருவர் ‘பயத்தில் புலிகள் மலசல கூடத்தில் வைத்து வாசிக்கிறார்கள்’ என்று சொன்னார். பின்னர் கியூறியஸ் தொடரில், பலான பத்திரிகைகள் மாதிரி, தாயகமும் அவர்கள் மறைத்து வைத்து வாசிக்க வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றது பற்றி கிண்டல் பண்ணியிருந்தேன். நான் எழுதிய கியூறியஸ் தொடரின் வாசகர்களாக அவர்களில் பலர் இருந்தார்கள். இந்த பலான ஆபாச இலக்கியங்கள் பற்றி எழுதுவதற்காக, நானும் ஒரு தொகை வாங்கி வாசித்து கியூறியஸில் எழுதியும் இருந்தேன்!

தாயகத்தை ஒழுங்காக இங்குள்ள வால்கள் வன்னிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது தெரியும். ஓமந்தை எல்லைச் சோதனையில் கண்டதாக சிலர் சொன்னார்கள். பறித்து வைக்கப்பட்டிருக்கலாம்.

உண்மை பொய் தெரியாது. தலைவரும் என் எழுத்தின் ரசிகர் என்று ஒரு ஊடக நண்பர் சொன்னார். அவரும் மற்றவர்கள் பார்க்காதபடிக்கு, அதை மலசலகூடத்தில் தான் வைத்து வாசித்தாரோ என்பதெல்லாம் தெரியாது.

ஆனால், ‘இதையெல்லாம் வாசிச்சிட்டு, தலைவர் உவனுக்கு மண்டையில் போடாமல் இருக்கிறாரே!’ என்று மனம் வருந்தியவர்கள் இருந்தார்கள். 

இதற்குள் எனது காதலி என்னுடனான காதலை முறித்துக் கொண்டார். அப்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்த மொனிக்கா தாயகத்திற்கு கவிதைகள், சிறுகதைகள் என ஆக்கங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். அவர் தனது தொலைபேசி இலக்கத்தையும் அனுப்பி வைத்திருந்தார். இருந்தாலும், நான் ஒரு போதும் அவருடன் பேசியதில்லை. காதல் முறிந்த பின்னால், எனக்கான ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்ற நினைப்பு வந்தபோது, இனிமேல் காதல் பண்ண எனக்கு நேரம் கிடைக்காது, அதற்கு தகுந்த ஆட்களும் ரொறன்ரோவில் இல்லை, வீட்டாரிடம் சொன்னாலும், தங்களுக்கு பிடித்தமான பெண்ணைத் தான் அனுப்பி வைப்பார்களே தவிர, எனக்கு பிடித்த பெண்ணாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, ஏதோ ஒரு எண்ணத்தில் அவருக்கு போன் அடித்தேன். அவரும், சிங்கப்பூர் பத்திரிகை ஆசிரியர்கள் மாதிரி, நானும் ஒரு வயதானவன் என்ற நினைப்பில்;, ‘வணக்கம், ஐயா!’ என்றார்.

இப்படித் தான், நமது காதல் தொடங்கியது. பின்னர் அவரும் வந்து சேர்ந்து, ஐந்து நாட்களில் தமிழ் தட்டச்சுப் பழகி என்னோடு பத்திரிகை விடயங்களில் உதவி புரிந்தார்.

நீங்கள் நிறைய எழுதி இருக்கிறீர்கள். பல புனை பெயர்களிளும் எழுதியுள்ளீர்கள்.  பத்திரிகை வேலைகள் செய்துகொண்டு சமாந்தரமாக அதையும் எவ்வாறு செய்தீர்கள்?

முன்பின் பெரிதாக எந்த எழுத்து அனுபவமோ, ஆர்வமோ இல்லாத நான் வெறுமனே ஏடு இட்டோர் இயல் மட்டுமன்றி, பல்வேறு விடயங்கள் பற்றி நிறைய எழுத வேண்டி வந்தது. கியூறியஸ் ஜி என்ற புனைபெயரில் எழுதிய நகைச்சுவைத் தொடர், உலகசினிமா, சிறுகதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறேன். கவிதை கூட! ஆமா, அந்தப் பாவத்தையும் செய்திருக்கிறேன்.

சொல்லப்பட வேண்டும் என்று நினைத்த விடயங்கள் மட்டுமன்றி, பத்திரிகை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, Deadline க்கு பத்திரிகையை முடிக்க வேண்டி வரும் போது, எதையாவது எழுதி நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தங்களால் பலதையும் எழுத வேண்டி நேர்ந்தது.

இவ்வாறு நிறைய எழுத முடிந்ததற்கு இரண்டு காரணங்களை நிச்சயம் சொல்ல வேண்டும். இவை இல்லாவிட்டால் என்னால் இவ்வளவுக்கு எழுதியிருக்க முடியாது.

என்னுடைய கையெழுத்து மோசமான கிறுக்கலானது. என்னுடைய சிந்தனை வேகத்திற்கு எழுத நேரிட்டால், திரும்பி வாசிக்கும் போது எனக்கே என்னுடைய எழுத்துக்களை வாசிக்க முடியாதிருக்கும். கையால் எழுதுவதாக இருந்தால் நான் எதையுமே எழுதியிருக்க மாட்டேன்.

என்னுடைய மக்கின்ரோஷ் கணனியில் Microsoft Word  மென்பொருள் தான் இவ்வளவு எழுதுவதை சாத்தியப்பட வைத்தது. அதில் வெட்டி ஒட்டவும், முக்கியமான விடயங்களை பின்னால் இருந்து எழுத தொடங்குவதற்கும் வசதியாக இருந்தது.

மற்றது, என்னுடைய வேலை. நான் வேறு இடங்களில் வேலை செய்திருந்தால், என்னுடைய வேலை தவிர்ந்த நேரங்களில் தான் எழுதியிருக்க முடியும்.

செய்த வேலை மூளையை பாவிக்கத் தேவையில்லாத வேலை. நான்காயிரம் அடி திரைப்படச் சுருள்களை இருட்டறையிலிருந்து இரசாயன திரவங்களுக்குள்ளால் அனுப்ப வேண்டும். வெளியே வந்து சேரும் இரண்டாயிரம் அடி சுருள்களை வெட்ட வேண்டும்.

இருட்டறையில் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை புதிய சுருள்களை தொடுத்து விட வேண்டும்.

இருட்டறை. தனிமை.

அங்கு வேலை செய்தவர்களுக்கு அது விருப்பமில்லாத சூழ்நிலை. தொடுத்த பின்னால் வெளியே வந்து விடுவார்கள். பின்னர் சரியான நேரத்தில் உள்ளே போய் திரும்பவும் தொடுப்பார்கள்.

கேட்டால், ‘உள்ளேயிருந்தால் சிந்திக்க வேண்டி வரும்’ என்று சொல்வார்கள்.

சிந்திப்பதற்கு அவர்களுக்கு பயம்.

எனக்கோ அது சிந்திப்பதற்கான சரியான சூழ்நிலை.

சில நேரங்களில் வேலை இருக்காது. எல்லோரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் விளக்கை அணைத்து விட்டு இருளில் மூழ்கி விடுவேன்.

எப்போதுமே கையில் ஒரு பேப்பர் இருக்கும். என்னுடைய ஏடு இட்டோர் இயல்கள் முதல் பெரும்பாலான எழுத்துக்கள் அந்த இருட்டறைகளுக்குள் உருவானவை தான். சிந்தனையில் வரும் கருத்துக்களை குறிப்பெடுப்பதற்குத் தான் நான் வெளியே வருவேன்.

நான் கம்பியூட்டர் புரோகிராமிங் படித்த போது பாஸ்கால் மொழி படித்தேன். அந்த பெயருக்குரியவர், பெருங்கணித நிபுணர், சொன்னார்.

All of humanity’s problems stem from man’s inability to sit quietly in a room alone.

தனிமை என் சிந்தனைக்கு வழி வகுப்பதால் எனக்கு தனிமையில் இருப்பதில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை.

வேலைக்கு என் மூளையைப் பயன்படுத்தக் கூடிய தேவை இருந்திருந்தால் இவ்வளவுக்கு நான் எழுதியிருக்க முடியாது.

ஈழத்தில் நடந்த மானுட அழிவுக்கு புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் சம பங்கு இருப்பதாக நினைக்கிறீர்களா? புலிகளை விமர்சிக்கும் அளவுக்கு, சிங்கள அரசையோ, மற்ற புலிகளின் எதிரிகளையோ ஏன் விமர்சிப்பதில்லை?

எண்பதுகளில் ரைம் சஞ்சிகையில் ராஜாங்க விருந்து ஒன்றில், றீகன் சொன்ன குளிர் யுத்த கால ஜோக் ஜோக் ஒன்று வந்திருந்தது.

ஒரு அமெரிக்கரும் ரஷ்யரும் சந்தித்துக் கொண்டார்கள்.

அமெரிக்கர் சொன்னார்… நான் எனது ஜனாதிபதியின் மாளிகையின் முன்னால் போய் எந்த பயமும் இல்லாமல், ‘அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று சொல்ல முடியும்’,

ரஷ்யர் சொன்னார்…’உது என்ன பெரிய விஷயம்? நானும் எனது நாட்டு ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் போய் நின்று, யாருக்கும் பயப்படாமல்…அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று சொல்ல முடியும்’.

றீகன் சொன்ன ஜோக். சிரிக்க வேண்டும் என்பது diplomatic protocol.

ஆனால் இதை நான் றீகனுக்கு முதலேயே, எழுபதுகளின் பிற்பாதியிலேயே றீடர்ஸ் டைஜஸ்டில் வாசித்திருக்கிறேன். குளிர் யுத்த காலத்தில் ரஷ்ய எதிர்ப்பு விடயங்களை வளர்முக நாடுகளின் தங்கள் பதிப்புகளில் றீடர்ஸ் டைஜஸ்ட் வெளியிட்டு வந்தது. மிக் விமானம் ஒன்றை ரஷ்ய விமானி ஒருவர் கடத்திக் கொண்டு போய் கொரியாவில் இறங்கிய கதை எல்லாம் அதில் வாசித்திருக்கிறேன். தாயகத்தின் முதல் ஏடு இட்டோர் இயலில், ஒரு செய்தியை எப்படி திரிக்கலாம் என்பது பற்றி இவ்வாறான ஒரு அமெரிக்க ரஷ்ய குளிர் யுத்த ஜோக் ஒன்றை எழுதியிருந்தேன்.

இப்படியாகத் தான் சிங்கள அரசு பற்றிய தங்கள் எதிர்ப்பை இந்த பேஸ்புக் மாவீரர்கள், ஊளையிடலாளர்கள், நாய் வாலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பற்றிய வழமையான கதை கட்டலில் வழமையாக இவர்கள் செய்வது இதைத் தான். நான் புலிகளை மட்டுமே எதிர்க்கிறேன் என்றும், என்னை ஏதோ சிங்கள அரசு முதல் சிஐஏ வரையான சம்பளப்பட்டியலில் இருப்பது மாதிரி கதை விடுவதுதான் இவர்களின் வேலை.

றோ, சிஐஏ, கேஜிபி என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாமல், ’42 நாடுகள் சதி’  நாய்வாலர்கள் சொன்னதை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்புவிக்கிற கூட்டத்தின் ஒப்பாரி  இது.

இந்தப் பட்டியல்களில் யார் யார் இருந்திருக்கக் கூடியவர்கள் என்பது பற்றி என்னால் சொல்ல முடியும். அவர்களுடைய எந்த நடவடிக்கைகள் அந்தந்த சக்திகளுக்கு ஆதரவாக இருந்தன என்பதை விபரிக்க முடியும்.

வேண்டுமானால், பெரும் பணத்தோடு வந்திறங்கி, தாங்கள் சொல்கிறபடியே போராட்டம் நடத்த வேண்டும் என்று நிபந்தனை போட்ட அமெரிக்க டாக்டர்களில் இருந்தோ…

கம்யூனிஸ்டாக இருந்து ஏகாதிபத்திய பிரிட்டிஷ் தூதுவரகத்தில் வேலை செய்து, அதன் உதவியுடன் பிரிட்டனுக்குப் போய், ஆலோசனை சொல்ல வந்த மது உரைஞரில் இருந்தோ தொடங்கலாம்.  அல்லது, ‘புலன் பெயர்ந்த’ தமிழர் ரொறன்ரோவுக்கு அழைத்து மோதிரம் போட்டு கௌரவித்த அனிதா பிரதாப். மற்ற நான்கு இயக்கங்களிலும் படித்தவர்கள் இருந்து கம்யூனிசம் பேச, எட்டாம் வகுப்பு மட்டும் படித்து, அமெரிக்க கப்பல் மார்க்கோஸ் மாதிரி தன்னை மீட்க வருகிறது என்று நம்பியவரை… சாவிம்பி, பாஸ்டோரா ரேஞ்சில்… அமெரிக்கா ஈராக்கை அழிக்க வந்த போது,  ஏகே47 ஓடு நின்ற கொஞ்சப் பேரை Kuwaiti Resistance Fighters என்று CNN ன்னில் படம் காட்டிய மாதிரி, விடுதலைத் தலைவன் என்று படம் காட்டியது ஏன் என்பதில் இருந்தும் தொடங்கலாம்!

அமெரிக்க புலமைப்பரிசிலில் யாழ்ப்பாணம் வந்து, யாழ்ப்பாண சாதிவேறுபாடுகள் பற்றி துல்லியமாக ஆய்வு செய்த அமெரிக்க பேராசிரியர் ஒருவரின் கட்டுரையை தாயகத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தோம். அதன் அடிப்படை நோக்கங்கள் அந்த நேரத்தில் எதுவாக இருந்தது என்பதையெல்லாம் விளங்கப்படுத்தி…!

உங்கள் வசதி எதுவோ!?

யாழ்ப்பாணக் கிணற்றுக்குள்ளும், வன்னிக் கிடங்குக்குள்ளும் கிடந்து கொண்டு, பூகோள அரசியல் பேசினால், பிரபாகரன் மண்டேலாவாகவும், தமிழ்ச்செல்வன் ஹென்றி கிசிங்கர் மாதிரியும் தானே இருக்க முடியும்!?

தமிழ்த் தேசிய முகமூடியுடன் இந்த அன்னிய சக்திகளின் நலன்களுக்காக யார் யார் வேலை செய்தார்கள் என்பது தெரியாமல் இந்த தமிழ் தேசிய உணர்வாளர்களையும் மாமனிதர்களையும் தான் இந்த முட்டாள் கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது.

ஊரில் உள்ள ஊளையிடலாளர்கள் எப்படி ‘மோட்டு’ச் சிங்கள அரசினால் கையாளப்படுகிறார்கள் என்பது பற்றி தனியாக எழுத வேண்டும்.

என்னுடைய முப்பது வருட எழுத்துக் காலத்தில் சிங்கள அரசாங்கத்தையோ, இந்திய இராணுவத்தையோ, அவர்கள் செய்த மனித உரிமை மீறல்களையோ, மானிட விரோத செயல்களையோ ஆதரித்தோ நியாயப்படுத்தியோ எழுதியதாக நீங்கள் எங்கேயும் காட்ட முடியாது.

புலிகள் தவிர்ந்த மற்ற இயக்கங்களை நான் ஆதரித்து எழுதியது கூட இல்லை.

சிங்கள அரசையும் இராணுவத்தையும் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக ஆத்திரமூட்டி, மக்களின் பாதுகாப்பு பற்றி எந்த கவலையும் இல்லாமல், ஹீரோ விளையாட்டுக் காட்டி, மக்கள் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுத்த புலிகளின் தந்திரம் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், இராணுவத்தையோ, அரசையோ நியாயப்படுத்தியதில்லை.

எல்லோரும் குத்தி முறிந்து அழும் செஞ்சோலைத் தாக்குதலில் புலிகள் பிள்ளைகளை பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போய் பயிற்சி கொடுத்ததை எழுதியிருக்கிறேன். அதை மறைக்க புலிகள் செய்த பொய் பிரசாரம் பற்றி, குண்டு வீசப்பட்டதை அறிந்து தங்கள் குழந்தைகளைத் தேடி ஓடிப் போன குடும்பத்தினருக்கு புலிகள் செய்ததைப் பற்றி எழுதியிருக்கிறேன். இராணுவம் குண்டு போட்டு அந்த குழந்தைகளை கொன்றதை ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை.

இந்திய அரசையும் இராணுவத்தையும் அதன் அரசியல் தவறுகளையோ, இராணுவம் செய்த பாரிய மானிட விரோத செயல்களையோ நியாயப்படுத்தி எழுதியதில்லை. இந்திய இராணுவத்தின் வரவால், தங்கள் பிடி தளர்ந்து விடும் என்பதற்காக மாகாண சபையைக் குழப்பியடித்தது முதல் திலீபனை பலி கொடுத்தது வரை, தங்கள் கையில் அதிகாரம் வராமல் போய் விடும் என்று செய்த கூத்துகளையும், போர் புரிந்த பிரேமதாசாவின் காலடியில் போய் விழுந்ததை ராஜதந்திர நகர்வு என்று கதை விட்டதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

இந்திய ஆட்சி மாற்றமும், இலங்கையில் ஜேஆரின் பதவி மாற்றமும் வந்ததால் வெளியேறிய இந்திய இராணுவத்தை, நான்காவது பெரிய இராணுவத்தை அடித்து விரட்டினோம் என்று பீலா விட்டதைப் பற்றி எழுதியிருக்கிறேன். போதாக்குறைக்கு, நான்காவது பெரிய இராணுவத்தை விரட்டிய மாவீரர்கள், தம்மாத்துண்டு இலங்கை இராணுவத்திடம் இருந்து தங்களை இந்தியா காப்பாற்றவில்லை என்று இன்றைக்கும் புலம்புவதைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்.

மோசமாக உட்கட்சிப்படுகொலைகள் செய்த மற்ற இயக்கங்கள் பற்றியோ, இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய அமைப்புகள் பற்றியோ ஒரு போதும் ஆதரித்து எழுதியதில்லை. ஆனால், பிரேமதாசவின் காலடியில் போய் விழுந்ததை ராஜதந்திர நகர்வு என்று கதை விட்ட புலிகள், மற்ற இயக்கங்களை வளர்ப்பு பிராணிகள், துரோகிகள் என்ற போது, புலிகளால் உயிர்வேட்டையில் துரத்தப்பட்ட நிலையில் அவர்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற இலங்கை அரசிடம் தஞ்சம் புகுவதில் உள்ள நியாயம் பற்றி எழுதியிருக்கிறேன்.

மற்ற இயக்கங்கள் பற்றி மட்டுமல்ல, புலிவால்கள் பிரதித்தலைவர் என்று புழுகித் திரிந்த மாத்தயாவின் விசுவாசிகள் ஆழ ஊடுருவும் படையணிக்கு உதவியது பற்றியும், கேணல் என்று கொண்டாடிய கருணா ராஜபக்சவிடம் தஞ்சம் புகுந்ததும் பற்றியும், சர்வதேச செயலாளர் என்று தூக்கிக் கொண்டாடி விட்டு, தானே போய் சரணடைந்தார் என்ற கட்டுக்கதைகளை இன்றைக்கும் நம்பும் கே.பியின் நிலை பற்றி எல்லாம் எழுதியிருக்கிறேன்.

சர்வதேசத்தை தலையிட வைக்க வேண்டும் என்றே கிளி பாதருக்கு தாங்களே குண்டு வைத்து கொன்றது பற்றியும், இன்றைக்கும் அவருக்கு எந்த நினைவு தினமும் கொண்டாடாத ஈனப் புத்தி வரைக்கும் எழுதியிருக்கிறேன்.

முன்னைய ஜனாதிபதித் தேர்தலில் ஏன் ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என்று விலாவாரியான தர்க்கரீதியான நியாயங்களை எழுதியிருக்கிறேன். அதில் ராஜபக்ச அரசில் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி எழுதியதில்லை. ஆனால், அது பற்றி குத்தி முறிந்தவர்கள் யார் என்றால்… தமிழர்களுக்கு இந்த நாட்டில் உரிமை கேட்க எந்த தகுதியும் இல்லை என்று சொன்ன சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வர வேண்டும் என்று தலையால் மண் கிண்டியவர்கள் தான்.

இதை எதிரியின் எதிரி எனக்கு நண்பன், ராயேந்திர நகர்வு என்றெல்லாம் புத்திசீவித் தனமான விளக்கம் எல்லாம் கொடுத்து மினக்கெட வேண்டாம்.

தான் டீல் பண்ண பயப்படும் வேலிச் சண்டைக்கு ஊர்ச் சண்டியனுக்கு கள்ளு வாங்கிக் கொடுத்து மிரட்ட வைக்கும் யாழ்ப்பாணிப் பாரம்பரியம் தான் அது.

தாங்கள் மட்டும் மக்களின் உயிர் மீது தீராக் காதல் கொண்டிருப்பதாகவும், என்னைப் போன்றவர்கள் இரக்கமே இல்லாதவர்கள் என்ற மாதிரியும் கதை கட்டும் இவர்கள், எல்லா மக்களும் போராளிகளும் இறந்து, பிரபாகரன் மட்டுமே உயிரோடு தப்பியிருந்தால் எப்படி கதை விட்டிருப்பார்கள் என்பதை ஒவ்வொரு மே 18 இலும் பேஸ்புக்கில் மறுபிரசுரம் செய்யும் என்னுடைய பதிவை நீங்கள் வாசிக்க வேண்டும். தாயகம் இணையத்தளத்தில் அது இருக்கிறது.

பேஸ்புக்கிலோ, இணையத்திலோ, சீலைப் பேன்கள் மாதிரி பல்கிப் பெருகியிருக்கும் ஊடகங்களிலோ தமிழில் சிங்கள அரசை எதிர்த்து எழுத எந்த முட்டாளாலும் முடியும். அதனால் யாழ்ப்பாணிகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு முட்டாளாலும் செய்ய முடிகின்ற விடயத்தை செய்வதற்கு நான் எதற்கு?

கொடி பிடித்து, தேசியத் தலைவருக்கு கும்பலில் கோவிந்தா போட இன்னொரு முட்டாள் எதற்கு?

மற்றவர்களால் செய்ய முடியாததை, செய்ய நினைக்காததை, செய்ய பயப்படுவதை செய்ய வேண்டும், மற்றவர்கள் செய்வதை செய்ய நேர்ந்தாலும் எனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக, தனித்துவமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். பிரசாரங்களை நம்பிக் கொண்டு வித்தியாசமாக சிந்திக்க மறுக்கும் ஒரு கூட்டத்திற்கு மற்றவர்கள் சொல்ல பயப்படுகின்ற, மற்றவர்கள் நினைத்துப் பார்க்காத ஒரு கோணத்தில் நான் பார்க்கும் விடயங்களை எழுத வேண்டும் என்று நினைப்பவன் நான்.

நீங்கள் கணம் வாதம், கணம் பித்தம் மாதிரி, அன்றைய மார்க்கட் நிலவரங்களுக்கு ஏற்ப ஏற்படுத்திக் கொள்ளும் எதிரிகளை எதிர்ப்பதாக குத்தி முறிந்து தமிழர்களுக்கு சீன் காட்டும் போது, அதை நானும் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

கடைசி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்துச் சொல்வதிலேயே கனடிய காற்றலை ஊளையிடலாளர்களுக்கு இடையில் பெரும் போட்டியே நடந்தது.

கனடாவில் இப்படி தங்களிடம் தலைவர் போராட்டத்தை ஒப்படைத்து விட்டு தான் வானகம் சென்றார் என்ற மாதிரி, வானலையில் துள்ளுகின்ற எத்தனை ஊளையிடல் ஏக(ப்பட்ட) பிரதிநிதிகளை நான் கண்டிருக்கிறேன்?

பிபிசி கார்த்திகைப் பூவை நஞ்சுப் பூ என்றதற்காக அந்த செய்தியாளருக்கு திறந்த கடிதம் எழுதிய பிரகிருதியை எங்கோ வாசித்திருக்கிறேன். ஐ.நா செயலாளர் முதல் அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் திறந்த எச்சரிக்கைக் கடிதங்களை (தேவையில்லாமல் எங்கட பிரச்சினையளில தலைப் போடாதியள், கண்டியளோ! மோட்டு சிங்களவனுக்கு எப்பிடி வேலையைக் குடுக்கிறது எண்டு எங்கட தலைவருக்கு தெரியும்!) எழுதிய விண்ணர்களை எல்லாம் நான் கண்டிருக்கிறேன்.

அடே, அதை தமிழில் தானேடா எழுதுகிறீர்கள். அவர்கள் வாசிப்பார்கள் என்றா?

உங்கள் நோக்கமே இந்த யாழ்ப்பாணி மாங்காய் மடையர்கள் வாசித்து உங்களைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும் என்பது தானே. வன்னியில் தமிழ்ச்செல்வன் வாசிக்க வேண்டும் என்பது தானே.

இப்படி எழுதினால் தலைவரின் பேட்டி கிடைக்கும் என்று முக்கிய முயக்கம் வன்னியில் கணக்கெடுக்கப்படாததால், யுத்தம் முடிந்த அடுத்த வாரம் கடையைப் பூட்டியதும், கனடிய பாராளுமன்ற உறுப்பினரின் முதுகில் தொங்கி வன்னிக்கு போன கனடிய ‘ரமில் மீடியா பேர்சனாலிட்டீஸ்’ வாகனத்தில் இருந்து இறங்கவே அனுமதிக்கப்படாமல் வந்து சேர்ந்ததும் தெரிந்த கதைகள்!

கருணாவுக்கு திறந்த கடிதம் எழுதிய சிவராமின் நோக்கம் கருணா அதை வாசிக்க வேண்டும் என்பதா? இல்லையே, தனக்கும் கருணாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரபாகரனுக்கு தெரிய வேண்டும் என்பது தானே. அந்த சிவராமைத் தானே மாமனிதர் ஆக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

(சங்கரியரின் கதை வேறு. அவருடைய ‘தம்பிக்கு!’ கடிதங்கள் எல்லாம், தபாலில் அனுப்பினால், ஓமந்தையில் இராணுமோ, தமிழ்ச்செல்வனோ உடைத்து வாசித்து, தம்பி படித்தால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் கிழிந்து எறிந்து, கடிதம் தம்பி கையில் கிடைக்காது என்ற நினைப்பில் எழுதப்பட்டவை தானே!)

சிங்கள அரசுக்கு நான் நினைப்பது தெரிய வேண்டும் என்றால், அதை நான் சிங்களத்திலோ அல்லது குறைந்த பட்சம் ஆங்கிலத்திலோ தான் எழுத வேண்டும்.

எனக்கு சிங்களம் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதிய ஜாம்பவான்களே நான் பாவித்த வார்த்தைப் பிரயோகங்களை கொப்பி அடிக்கும் அளவுக்கு!

சமீபத்தில் டொக்டர் நோயல் நடேசன் சனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்றை பகிர்ந்திருந்தார்.

சனல் 4 அதை வாசிக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஆனால் அதை ஆங்கிலத்தில் தான் சொல்ல வேண்டும். இந்த யாழ்ப்பாணிகளைக் குஷிப்படுத்த தமிழில் திறந்த கடிதமா எழுத முடியும்?

அதில் எழுதியிருக்கிறேன்.

I have nothing against the intent or content of Killing Fields.

Without question, what happened to those prisoners of war are war crimes.

Not just human rights violations.

Those who were raped, maimed and killed could have been our own sisters, mothers and daughters.

Those who were blindfolded and shot could have been our brothers or sons.

It doesn’t matter even if it is a child of a monster, who dragged children for slaughter.

Perpetrators who committed these crimes against humanity and caused this heart wrenching human tragedy should be brought to justice.

யாழ்ப்பாணிகளுக்கு விளங்காவிட்டால், பிள்ளைகளைக் கேட்டுப் பார்க்கலாம். அவர்கள் வாசித்து தமிழில் சொல்வார்கள். அவர்களுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் யாழ்ப்பாணக் கிணத்துத் தேசிக்காய் அரசியலை விட இன்னொரு உலகம் இருப்பது தெரியவரும்.

வன்னிப் புலிகளைக் குஷிப்படுத்த, ராஜபக்சே ஒழிக என்று கூச்சல் போட்டவர்களை வெள்ளை வான் கடத்தவும் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் இவர்களில் பலர் இன்றைக்கும் இலங்கைக்கு போய் வருகிறார்கள்.

இந்தக் கூட்டத்திற்கு பிடிக்கும், அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் என்பதற்காக அவர்கள் கேட்க விரும்பும் பொய்களைச் சொல்லி பிழைப்பு நடத்தும் ஈனப்புத்தி என்னிடம் இல்லை. கேட்க விரும்பாவிட்டாலும் அவர்களுக்கு நான் உண்மை என்று கருதும் விடயங்களை, என் சமூகத்திற்கு பயன்படும் என்று நான் நம்புகின்ற விடயங்களை பயமில்லாமல் சொல்ல வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

இவர்கள் என்னை நடுநிலையாளன் என்று கருத வேண்டும் என்பதற்காக, தங்களை potential சங்கடங்களில் இருந்து  தப்பித்துக் கொள்ள… அவருடைய எல்லாக் கருத்துக்களுடனும் உடன்பாடு இல்லை என்று கயிறு திரிக்கிற இலக்கியக் கும்பல் மாதிரி, புலிகளின் அராஜகங்களை தோலுரிக்கும்போது, இவர்கள் அந்தந்த நேரங்களில் எதிரிகள் என்று கருதுவோரை எல்லாம் பற்றி விமர்சித்துத் தான் என் கற்பையோ, அறத்தையோ நிருபிக்க வேண்டும் என்று எனக்கு எந்த தேவையும் இல்லை.

இன்றைக்கும் புலிகளை விமர்சித்தால், பாய்ந்தடித்து முட்டாள்தனமான விளக்கம் கொடுத்து அவர்களை நியாயப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள்.

இதைப் பற்றி அடிக்கடி கதை ஒன்று சொல்வேன்.

எங்கள் ஊரில் கணவன், மனைவி சண்டையில் மனைவி கணவனை கத்தியால் வெட்டி விட்டார். மண்டையில் வெட்டி ரத்தம் ஒழுக ஒழுக வந்து என் அக்காவின் கணவரிடம் தன்னை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு கூட்டிக் கொண்டுபோகும்படி கேட்டார். அப்போது அந்த முன்வீட்டு மாமி, ‘என்ன நடந்தது?’ என்று விசாரிக்க, அக்காவின் கணவர் சொன்னார், ‘அவற்றை மனிசி கையில கத்தி வைச்சிருந்தவ, இவர் அதுக்க மேல விழுந்து போனார்!’.

புலிகள் பற்றி எதைச் சொன்னாலும், பாய்ந்தடித்து அவர்களை நியாயப்படுத்துகிற அறிவுக்கொழுந்து முட்டாள்கள் மாதிரி, (தலைவரை உயிரோட பிடிக்க முடியாமல் விஷவாயு அடித்துத் தான் பிடித்தார்கள் என்று எழுதியவர் உண்டு!) நான் ஒரு போதும், சிங்கள அரசையோ, புலிகள் எதிரிகள் என்று கருதுகிறவர்கள் பற்றியோ யாராவது எதையாவது சொல்லும் போது, முண்டியடித்து நியாயப்படுத்தியது இல்லை.

செஞ்சோலையில் பயிற்சிக்காக இழுத்துச் செல்லப்பட்டு பலி கொடுக்கப்பட்ட குழந்தைகளை, ‘முதல் பயிற்சிக்காக தானாய் சேர்ந்து கூட்டம்’ என்று நானும் சொல்ல வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்?

உங்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்றோ, உங்களைக் குஷிப்படுத்தி பிழைப்பு நடத்தவேண்டும் என்றோ, நீங்கள் கேட்க விரும்பும் பொய்களை நானும் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்த்தால், யாழ்ப்பாணி மொழியில் சொல்வதென்றால்… ‘நீங்கள் அதுக்கு வேற ஆளைத்தான் பார்க்க வேண்டும்!’

அதற்கு வேறு ஆட்கள் தாராளமாக இருக்கிறார்கள்.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த இலக்கியப் பிரபலம், இன்றைய மார்க்கட் நிலவரப்படி தமிழ்த்தேசியத் தண்ணியில் மிதக்கும் அவர், இன்றைக்கும் பின்னூட்டங்களில் அங்கே ‘கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறவர்கள்’ பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னால் வெள்ளைவான் பற்றிய பயம் இன்றி, ஊரில் கலியாண வீட்டுக்குப் போய் விருந்துண்டு திரும்பியிருக்கிறார், தான் வாழும் நாட்டின் தூதுவரகம் தனக்கு பாதுகாப்பு தந்தது என்று கதை விட்டபடி.

இன்றைக்கும் சிங்களவனை நம்ப முடியாது என்றும், டக்ளஸ் போன்றோரை துரோகி என்றும் தான் நடத்தும் பத்திரிகையில் எழுதும் ஊளையிடலாளர், ஊருக்குப் போய், காணிப் பிரச்சனை ஒன்றை கடற்படையினரின் உதவியுடன் முடித்து வைத்தார் என்றால் நம்புவீர்களா?

இவர்களைத் தான் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது, எல்லா இயக்கங்களும் அழிக்கப்பட்டு, மிஞ்சி இருந்தவர்கள் புலிகளிடம் இருந்து உயிர் தப்பிப் பிழைத்தலிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் மட்டும் தான் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் எந்த நடவடிக்கைகளும் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்கும், அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்குவதற்கும் வழிவகுத்த நிலையில், அதைத் தானே விமர்சிக்க வேண்டும்!?

இவர்களைப் போல நானும் ‘வளர்ப்புப் பிராணிகள்’ ‘துரோகி அழிக்கப்பட்டான்’ என்று, அவர்கள் கொல்லப்படும் போது, ‘நடுநிலையோடு’ கைதட்டி ஆரவாரம் செய்யவா முடியும்? போராட்டம் என்று தானே அவர்களும் களமிறங்கினார்கள், அவர்களைக் கொல்லும் உரிமையை உனக்கு யார் தந்தது? என்ற நியாயத்தைத் தானே நான் எழுத முடியும்?

புலிகள் இல்லாமல் அந்த இடத்தில் மற்ற இயக்கங்கள் இருந்து இதே முட்டாள்தனத்தைச் செய்தால், அதையும் எதிர்க்கும் அளவில் தானே எனது சமூக உணர்வு இருக்கிறது.

தாங்களே கொண்டாடிய மாத்தயாவையும், கருணாவையும், கே.பியையும் தாங்களே துரோகிகள் என்று வெட்கமில்லாமல் சொல்வது போல நானும் சொல்ல வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்?

அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது, அவர்களும் முன்னர் எங்களைக் கொல்ல முயன்ற புலிகள் தானே என்று ‘உவருக்கு வேணும்’ என்று புழுகத்தில் திரிய வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்?

அடுத்தது, இந்த உணர்வு எல்லாம் என் ஆளுமையிலிருந்து தான் வருகிறது. யாராவது என்னைப் பற்றிய விமர்சனங்களைச் சொன்னால், அதில் உண்மையிருக்கக் கூடுமா? நான் செய்தது தவறாகத் தான் இருக்குமா? என்ற எண்ணம் தான் எனக்கு இருக்கும். அது என்னை திருத்திக் கொள்ளவும், வளர வைக்கவும் உதவும் என்பது என் எண்ணம். யாழ்ப்பாணிகள் மாதிரி, தவறுகளை ஏற்றுக் கொள்ளாமல், ‘நீ என்ன திறமோ?’ என்ற கேள்வி கேட்பதோ,  தங்கள் தவறுகளுக்கு தங்களைத் தவிர உலகத்தில் உள்ள அனைவரையும் குற்றம் சாட்டும் பழக்கமோ எனக்கு இருப்பதில்லை.

இதைப் போல, மற்றவர்களை விமர்சிக்க முன்னால் நான் ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதனால் தான் புலிகளால் கூட என்னை காசடிச்சிட்டார் என்றோ, பொம்பிளைப்பிரச்சனை என்றோ குற்றம் சாட்டவோ, பிளாக்மெயில் பண்ணவோ முடியவில்லை.

இதனால் தான், சிங்களப் பேரினவாதம் முதல் யாழ்ப்பாணிகள் காலாகாலம் தங்கள் எதிரிகள் என்ற சொல்கின்ற எவரையும் குற்றம் சாட்ட முதல், தமிழர்களாகிய நாங்கள் எங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாக எனக்குப் படுகிறது. அதைச் செய்யாமல், மற்றவர்கள் மீதே பழியைப் போடுவது எங்கள் விடுதலைக்கு எந்த வகையிலும் உதவாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.

எனக்கு தெரிந்த வணக்கத்துக்குரியவர் என்னை கனடாவில் சந்தித்த போது, யுத்தம் முடிந்த பின்னால், இராணுவம் பற்றி இங்கே சொல்லப்பட்ட கதைகளைச் சொன்ன போது, சொன்னார். ‘அடே, இவங்கள் செய்யாத என்னத்தையடா அவங்கள் செய்தாங்கள்?’.

இறந்த உடல்களுக்குரிய மதிப்பைக் கொடுக்காமல் கண்காட்சி நடத்திய பின்னால், எதிரியைக் குற்றம் சாட்டக் கூடிய தார்மீக உரிமையை இழந்து விடுகிறோம் என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

தங்களுடைய சேட்டைகள் போராட்ட வீரமாகவும், எதிரியின் நடவடிக்கைகள் இன அழிப்பு என்றும் சொல்வது நடுநிலையாளர்களிடம் எங்களுக்கு ஆதரவைப் பெற்றுத் தராது.

எதிரியும் மதிக்கும் அளவுக்கு ஒழுங்காக இருக்க வேண்டும், என்னுடைய போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்று எதிரியையும் உணர வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தான், என்னுடைய தொழிற்சங்கப் போராட்டத்தின் போது, நிறுவன CEO வின் முன்னால் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு என்னால் பேச முடிந்தது.

வெள்ளைக் கொடி பிடித்துக் கொண்டு போய் காலில் விழ வேண்டிய நிலை வரவில்லை.

இடைக்கிடையில், ‘செத்த பாம்பை அடிக்கிறியள், பழைய தோம்புகளைக் கிளறுறியள்’ என்று ஒரு கூட்டம் புலம்பிக் கொண்டும் இருக்கிறது. ‘அடே, செத்த பாம்பை அடிக்கேலையடா, செத்த பாம்பு படம் எடுத்து ஆடுது எண்டு சொல்லுறவனை அதே கிளுவந்தடியால அடிக்காமல் என்னடா செய்யிறது?’ என்று தான் எழுதியிருக்கிறேன்.

எந்த வித தடயங்களும் இல்லாத அழிக்கப்பட்ட புலிகள், போராட்டத்தை இன்றைக்கு கையளித்து விட்டுச் சென்றிருப்பது, மாமனிதர் பட்டம் கொடுக்கும் மொட்டைக்கடதாசிப் புலிகளிடமும், புலிகளைக் காட்டி பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களிடமும், முந்தி விழுந்து முட்டாள் விளக்கம் சொல்லும் பேஸ்புக் போராளிகளிடமும் தான். புலிகளை வைத்து பிழைத்து நடத்துவோருக்கும், அவர்களை அண்டிப் பிழைப்போருக்கும் ‘புலிகளின் தவறுகள் இன்றைக்கும் இந்த இனத்தை மீளவிடாமல் புதைகுழிக்குள் தள்ளிக் கொண்டு இருக்கிறது’ என்பதை எழுதுவது பிழைப்புக்கு குந்தகமாகத் தானே இருக்கும்.

இத்தனை மக்களையும் மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி, பலி கொடுத்ததுமல்லாமல், ஒரு அயோக்கியர் கும்பலை விட்டுச் சென்று, ஒரு இனத்தின் எதிர்காலத்தை சூனியமாக்கிய ஒருவரை ‘எண்டாலும் அவர் கடைசி மட்டும் ஈழத்தை விடேலைத் தானே!’ என்று பெருமை கொள்கின்ற நீங்கள், இன்று வரைக்கும் இந்த இனத்திற்கு அழிவு வரப் போகிறது என்று தீர்க்கதரிசனம் சொன்ன எனக்கு, குறைந்த பட்சம் சிலுக்குவுக்கும், குஷ்புவுக்கும் செய்த மரியாதையாவது தர வேண்டாமோ?

இதற்குள் யாழ்ப்பாணிகளின் வட்டி யாவாரம் மாதிரி, ‘நீங்களும் தமிழர் எண்டபடியா, உங்களுக்காண்டி குறைச்சிருக்கிறன்’ என்று புலிகளை நூறு வீதமும், மோட்டுச் சிங்கள அரசை பேய்க்காட்டி, அறாவட்டியோடு இருநூறு வீதமும் எதிர்ப்போரைப் பற்றி நான் சொல்ல வேண்டுமாக்கும்!?

தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன ?

எந்த இனக் குழுவும் தன்னுடைய அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஐ.நா அங்கீகரித்திருக்கிறது தானே.

பொதுவான அடையாளங்களும் நலன்களும் கொண்ட எந்தக் குழுவும், அது இனக்குழுவாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை, தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது, உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று கருதினால் தன்னுடைய உரிமைகளை நிலைநாட்ட போராடுவதில் நியாயம் இருக்கிறது.

தங்களுக்குள் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்புக் கொண்ட இனக்குழுக்களை வைத்துக் கொண்டு, தொழிலாளர்களான எங்களுடைய நலன்களை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்களை ஒன்றிணத்து, நான் செய்த தொழிற்சங்கப் போராட்டம் அவ்வாறானது தான். எங்களுடைய வேறுபாடுகள் பலவாக இருந்தாலும், எங்களை ஒருங்கிணைத்தது ‘ஒரு வேலை இடத்தில் தொழிலாளர்கள் என்பதால் பாதிப்புக்குள்ளானவர்கள்’ என்பது மட்டுமே.

அடுத்தது, தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகிறார்கள், தமிழர்களாக இருந்ததால் தான் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில் கொல்லப்பட்டார்கள், அவர்களுடைய கலாசார அடையாளங்கள் அழிக்கப்பட்டன,  அவர்களுக்கு நியாயமான அடிப்படை உரிமைகளைக் கூடக் கொடுப்பதற்கு சிங்கள தரப்பில் ஒருமித்த கருத்து இல்லை என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மைகள்.

So far so good!

மேலோட்டமாக உணர்வுபூர்வமாகப் பார்க்கும் போது!

ஆனால், நடைமுறைச் சிக்கல்கள், யதார்த்த நிலைகள் வேறானவை.

தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் ஐ.நா, தென் சூடான், கொசோவோ, கிழக்கு திமோர், எரித்திரியாவையும் பிரித்துக் கொடுத்து விட்டு, குர்திஷ் மக்களுக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கும் எங்கள் கண் முன்னாலேயே அதை மறுத்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் யாருடைய நலன்களுக்கானவை என்பது எல்லாருக்கும் தெரியும்.

அதே சர்வதேசம் தான் தனக்கு தீர்வு வாங்கித் தரும் என்று இன்றைக்கும் யாழ்ப்பாணிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அநீதிகள் இழைக்கப்படும் போதெல்லாம் கட்டாயம் போராட வேண்டும் என்று நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். தங்களுடைய இயலாமை காரணமாக, மெளனமாக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டு வாழ்கின்றவர்களிடம் போய், போராட முடியாத நீ எல்லாம் கோழை என்று தீர்ப்பளிக்க நான் தயாரில்லை.

தொழிற்சங்கப் போராட்டத்தின் போது, நிர்வாகத்திடம் போய் எங்களைப் பற்றி ‘கோள்’ சொல்லி பந்தம் பிடித்தவர்களை விட, வேலை போய் விடும் என்ற பயத்தில் எங்களோடு அடையாளம் காட்ட தயங்கியவர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. எல்லோரும் என்னைப் போல, வேலை போவது பற்றி கவலைப்படாத, கிறுக்குத் தனமான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?

புலிகளுக்கு வால் பிடித்து பிழைப்பு நடத்தியவர்களை விட, மெளனமாக இருந்தவர்கள் மதிப்புக்குரியவர்கள். வாயைத் திறந்தால் வெடி விழும் என்ற நிலையில், கனடாவில் இருந்து நான் பத்திரிகை நடத்தினேன் என்பதற்காக, யாழ்ப்பாணத்தில் பத்திரிகை நடத்துகின்றவரிடம் புலியை எதிர்க்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?

போராட்டம் தற்கொலையாக முடியும் என்றால் அந்தப் போராட்டம் அவசியமில்லை என்பதே என் கருத்து.

You have to live to fight another day!

நைஜீரியாவின் பயாபரா போராட்டம் சரியான உதாரணம் என்று நினைக்கிறேன்.

வெற்றி அல்லது வீரமரணம் என்பது மன்னர்களை அதிகாரத்தில் வைத்திருக்க, பொற்காசுப் புலவர்களின் புறநானூற்றுக் கட்டுக்கதை. அந்த மண்ணுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், அந்தப் போராட்டத்தின் பாதிப்புகள், அழிவுகள், துயரங்களை யாரோ அனுபவிக்க, அறுவடையை ஆண்டனுபவிக்கும் எண்ணத்துடன், இப்போது கஞ்சி, கொத்துரொட்டி என்று வெளிநாடுகளில் போராட்டம் நடத்தும் புலன் பெயர்ந்த கூட்டம் சொல்கின்ற கதை.

போராட்டம் பலம் தெரிந்து நடத்தப்பட வேண்டிய ஒன்று. பலம் இல்லை என்று தெரியும் நிலையில் ராஜதந்திரம் (Diplomacy) தான் சரியான வழி.

தலைவர்கள் தங்களை நம்பியிருக்கும் மக்களின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, தங்களுடைய அதிகார வேட்கைக்கு பலி கொடுக்க பயன்படும் Cannon Fodder ஆக மக்களை நினைக்க முடியாது. ஆட்சேர்க்கவும், சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்திலும், ‘மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும்’ என்ற நோக்கத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டு தானே இருக்கிறோம்.

முட்டாள்களுக்கு தலைவனாக இருந்தால், ‘அண்ணை, உவங்களை விடக் கூடாது!’ என்று பப்பாசி மரத்தில் ஏற்றி விடும் கூட்டத்தை நம்பி, பலம் காட்ட முட்டி மோதி, மண்டை பிளந்து கிடக்க வேண்டி வரும். அசைய முடியாத உடம்பை வைத்துக் கொண்டு சோபாவில் பியரோடு உட்கார்ந்து கொண்டு விளையாட்டு வீரர்களை திட்டுகிறவர்களை நம்பி, எந்த அணித் தலைவனும் விளையாட்டில் வெல்ல முடியாது. 

புத்திசாலிகளுக்கு எதிரியாக இருக்கும் போது, அந்த புத்திசாலிகளை வெல்வதற்கான வழிமுறைகளை நாங்கள் சிந்திக்க முடியும். அது ராஜதந்திரத்தினால் மட்டுமே முடியும். எப்போது சண்டை பிடிக்க வேண்டும், எப்போது சமாதானம் பேச வேண்டும் என்பதெல்லாம் அந்த சிந்தனைகளுக்கு ஊடாகத் தான் வர முடியும்.

அடுத்து, போராட்டத்திற்கு எப்போதுமே தார்மீக நியாயம் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அடக்கப்படும் சாதிகள் நடத்தும் போராட்டத்திற்கும், அடக்கும் சாதிகள் நடத்தும் போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டும் தங்கள் இனநலன்களைப் பாதுகாப்பதற்காகத்தான். ஒன்றிற்கு இருக்கும் தார்மீக நியாயம் மற்றதற்கு இல்லை.

Perceived threat இருப்பவர்களின் போராட்டங்களுக்கு எல்லாம் நியாயம் இருக்கிறது என்று வாதிட முடியாது. அதிகாரத்தை மறைமுகமாகக் கையில் வைத்துக் கொண்டு தங்களைப் பாதிக்கப்படுகிறவர்களாக சித்தரிக்கும் பிராமணர்கள் மாதிரி!

உலகப் பொதுநீதி என்று ஒன்று இருக்கிறது. அதற்கு அமையத் தான் தார்மீக நியாயம் வரும்.

யாழ்ப்பாணிகளின் ஈழப் போராட்டத்தின் கதை வேறு.

ஈழப் போராட்டம் ஒரு போதுமே சமூக நீதிக்கான போராட்டமாக இருந்ததில்லை. அது ஆண்டைகளின் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைத்த’ கதை மட்டும் தான்.

யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டங்கள் எல்லாம் சிங்களவர்களுக்கு எதிராகவா நடத்தப்பட்டன?

அறுபதுகளில் நடந்த ஆலயப் பிரவேசம், தேநீர்க்கடைப் போராட்டம் என்று நடத்தப்பட்ட போராட்டங்கள் முதல் எண்பதுகளில் கிராமிய உழைப்பாளர் சங்கம் தோட்டக் கூலிகளின் சம்பள உயர்வுக்காக நடத்திய போராட்டம் வரைக்கும் இந்த ஆண்டைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தானே.

யாழ்ப்பாணித் தமிழ்த் தேசியத் தலைமைகள் இந்த போராட்டங்கள் பற்றி என்ன கருத்தைக் கொண்டிருந்தன என்பது, ‘சங்கானை ஷாங்காயாக மாறும்’ கதையிலிருந்தே  தெளிவாகும். இதெல்லாம் கம்யூனிஸ்ட் புரட்சி என்று யாழ்ப்பாணிய முதலாளித்துவ சிந்தனைக்கு பயத்தை ஊட்டும் முயற்சியாகத் தானே இது இருந்தது.

ஒருவேளை, கேரளா, மேற்கு வங்கம் மாதிரி பலம் பெற்ற கம்யூனிஸ்டுகள் தமிழீழம் கேட்டிருந்தால், இந்த யாழ்ப்பாணிகள் அதை வரவேற்றிருப்பார்களா? இடதுசாரி விடுதலை அமைப்புகளை சாதி சார்ந்து கேலி செய்கின்ற ஒரு சமூகம், புலிகள் மீதான காதல் கொண்டிருந்தது கூட, அதே யாழ்ப்பாணிய நலன்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் தானே.

மாவிட்டபுரம் கோவிலில் பொல்லோடு நின்ற அடங்காத் தமிழனும், ‘இவர்களும் தமிழர்கள் தானே, அவர்களுக்கு சம உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என்று பகிரங்கமாக சொல்ல முடியாத ஈழத்தந்தையும் இந்த தமிழ்த்தேசியத்தின் தலைவர்கள் தானே.

இந்த ஆண்டைச் சிந்தனையைத் தொடர்வதற்கான ஒரு  வழியாகத் தான் ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதே அன்றி, சமூக நீதிக்காக இல்லை.

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த தமிழீழச் சிந்தனை யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு பக்கத்தில் உள்ள ஏதோ ஒரு சாராய பாரில் தான் கருத்தரித்திருக்க வேண்டும்.

உடுப்பிட்டியில் தமிழரசு ஜெயக்கொடியிடம் தோற்ற காங்கிரஸ் சிவசிதம்பரமும், வட்டுக்கோட்டையில் காங்கிரஸ் தியாகராஜாவிடம் தோற்ற தமிழரசு அமிர்தலிங்கமும் பாராளுமன்றம் போகக் கிடைக்காத கவலையில், அந்த சாராய பாரில் தண்ணி அடிச்ச போது தான் இந்த சிந்தனை தோன்றியிருக்கக் கூடும். அதிலும் அமிர்தலிங்கத்தை அவரது திமிருக்காக அவரது கட்சிக்காரர்களே தோற்கடித்ததான கதை உண்டு.

இப்படி பிரிந்திருந்து வாக்குகளைப் பிரித்து வாய்ப்புகளை இழப்பதை விட, கூட்டுச் சேர்ந்து யாழ்ப்பாணியை மொட்டையடிக்க போட்ட திட்டமாகத் தான் இந்த ‘மூன்று மாத தமிழீழ’ ‘தமிழர் விடுதலைக் கூட்டணித்’ திட்டம் இருந்திருக்க வேண்டும்.

தேர்தலுக்கு யாழ்ப்பாணம் வரும் குமார் போல, மலேசியாவிலிருந்த பொன்னம்பலமும் செல்வநாயகமும், மாஸ் திரைப்படங்களில் முன்னணி தமிழ் ஹீரோக்களுடன் நடிக்க வைக்கப்படும் மலையாள கதாநாயகர்கள் மாதிரி, மலையகத் தொண்டாவும் உதயசூரியன் உதிக்கும் போது கோழி கூவக் கொண்டு வரப்பட்டு தொடங்கப்பட்டது தான் கூட்டணி. 

தமிழீழக் கோரிக்கையை என்ன இவர்களா கண்டுபிடித்தார்கள்?

ஆங்கிலத்தில் Federal Party என்று சிங்களவர்களையும் தமிழரசுக் கட்சி என்று, உதயன் பத்திரிகை முன்பக்க தலையங்கம் மாதிரி, யாழ்ப்பாணிகளையும் சுத்திய அம்பி ரெமோ விளையாட்டுத் தானே இவர்களுடையது. ‘உடைந்த சட்டி ஒட்டாது’ என்று சமஷ்டி கேட்ட சுதந்திரன் cartoon எனக்கு இன்றைக்கும் ஞாபகம்.

கேட்ட சமஷ்டி கிடைக்காவிட்டால், அதை விடக் குறைந்ததைத் தானே கேட்க வேண்டும்? கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றை, சமஷ்டிக்கு அதிகமான ஒன்றை எந்த நம்பிக்கையில் கேட்டார்கள்? வெறும் அரசியலுக்காகத் தானே!?

ஈழம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்திய அடங்காத்தமிழனும், சுயாட்சி என்று கழகம் நடத்திய ஊர்காவற்றுறை நவரத்தினமும் இவர்களால் ஏளனப்படுத்தப்பட்டவர்கள் தானே.

இந்த சுயாட்சிக் கழகத்தின் சார்பில் எங்கள் ஊரில் ஆங்கிலம் டியூசன் கொடுத்த கனகசுந்தரம் வாத்தியார் தேர்தலில் போட்டியிட்ட போது, எங்கள் கோப்பாய் தொகுதியில்  உண்மையான தமிழ் இரத்தம் ஓடும், தமிழர் சுயாட்சி வேண்டும் மறத் தமிழர்கள் அறுநூறு பேர் அவருக்கு வாக்களித்திருந்தார்கள்.

எந்த விதமான தீர்க்கதரிசனமோ, முன் யோசனையோ இன்றி, 77 தேர்தலில் தாங்கள் இருவரும் பாராளுமன்றம் செல்வதற்காக இவர்களுடைய வெறும் சிறுபிள்ளை விளையாட்டு முள்ளிவாய்க்காலில் சுண்டெலிகளுக்கு சீவன் போக காரணமாக இருந்திருக்கிறது மட்டுமல்ல, இவர்கள் இருவரின் உயிருக்கு உலை வைக்கவும் காரணமானது என்பது தான் துயரமான நகைச்சுவை.

சுதந்திரக்கட்சி யாழ்ப்பாணி ஆண்டைகளுக்கு எப்போதுமே ஒவ்வாததாகத் தான் இருந்தது. அதற்கான காரணம், யாழ்ப்பாணத்தில் நடந்த சமூக நீதிக்கான போராட்டங்களில் சுதந்திரக் கட்சி இடதுசாரிகளுடன் நடத்திய அரசு அடக்கப்பட்டவர்களின் சார்பாகவே இருந்திருக்கிறது. சாதிப்பாகுபாட்டுக்கு எதிரான பல்வேறு சட்டமூலங்கள் அவர்களால் தான் உருவாக்கப்பட்டது. பனம்பொருள் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் அடக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக வளரக்கூடிய திட்டங்கள் அமுலாக்கப்பட்டிருந்தன. சிறுபான்மைத் தமிழரான எம்.சி.சுப்பிரமணியம் நியமன எம்.பியாக்கப்பட்டிருந்தார்.

அன்றைக்கு ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தமிழரசுக்கட்சியினர்; அந்த அரசில் அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். அல்லது ஒரு வெளியில் சொல்லாத இரகசிய புரிந்துணர்வோடு இருந்திருப்பார்கள்.

அந்த புரிந்துணர்வு தானே ஜே.ஆரின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தீர்வை ஏற்றுக் கொள்ள வைத்தது. அந்த முடிவு தானே இவர்களுடைய வெற்றுப் பேச்சில் நம்பிக்கை இழந்து, இவர்கள் பாராளுமன்றக் கதிரைகளுக்காகத் தான் இந்தக் கதைகள் சொன்னார்கள் என்ற சாயம் வெளுத்து, இவர்களைத் துரோகிகள் ஆக்கி, இவர்களால் வளர்க்கப்பட்ட கடாக்கள் ஆயுதப் பாதையில் முட்டி மோதப் போயின.

கடைசியில், வளர்த்த கடாக்களுக்கே இவர்கள் பலிக்கடாக்கள் ஆனார்கள்.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைத்தது, அடிமை, குடிமைகளை அடக்கி வைப்பதற்காகவே அன்றி, எல்லோரும் சமம் என்ற சமூக நீதியின் அடிப்படையில் இல்லை.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும்,  பாலசிங்கத்தின் புரட்டுகளிலும் ‘சமதர்ம சோஷலிச தமிழீழம்’ என்று சொன்னார்கள் என்றதற்காக, இந்த யாழ்ப்பாணிகள் தமிழீழத்தில் அவ்வாறானதொரு அரசாங்கத்தை நடத்தியிருப்பார்கள் என்று நீங்கள் நம்பலாம்.

நான் நம்பத் தயாரில்லை.

இன்றைக்கும் இந்தப் போராட்டம் பற்றி கனடாவில் பிறந்த  யாழ்ப்பாணிக் குழந்தையைக் கேட்டாலும், கிளிப்பிள்ளை போலத் தொடங்குவது…

தரப்படுத்தல்.

படித்த யாழ்ப்பாணத்தின் மூளைக் காய்களான தமிழ் மாணவர்கள் தங்கள் திறமை அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் அதிகளவில் தேர்வாவதை தடுத்து நிறுத்த சிங்களப் பேரினவாதம் செய்த சதியாகத்தான் இன்று வரைக்கும் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

அது ஒரு சமூக நீதிக்கான தீர்வு முயற்சி என்பதை வெறும் இனவாதக் கண்ணோட்டத்தோடு பொழிப்புரை வழங்கியது யாழ்ப்பாணியமே!

அமெரிக்காவில் Affirmative action என்று அமுலாக்கப்பட்டிருக்கிறது. வரலாற்று ரீதியாக பால், இனம், நிறம், மதம் காரணமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக, வேலைவாய்ப்புகள், கல்வி, கலாசாரம் போன்றவற்றில் அவர்களுக்கு நியாயமான விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் திட்டம் அது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீடும் அவ்வாறான வரலாற்று அநீதிகளையும் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கான நீதியை வழங்குவதற்கானதே.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, திறமை அடிப்படையில் தெரிவுகள் செய்யப்படாமல் குறைந்த திறமை உள்ளவர்கள் மேல் பதவிகளை எட்டி, தரம் குறைந்து விடும் என்ற எண்ணம் வரலாம்.

‘குறைஞ்ச மாக்ஸோட டொக்டரா வந்தா, பிழையான ஊசியைப் போட்டிடுவாங்கள்’ என்று அன்றைக்கு விளக்கம் சொன்ன யாழ்ப்பாணிகள் உண்டு.

ஆனால், அந்த திறமையைப் பெறுவதற்கான வாய்ப்பு எல்லாருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. பலருக்கு திட்டமிட்டு மறுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ‘திறமையே அடிப்படையாக இருக்க வேண்டும்’ என்று சொல்லி தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக மூக்கால் அழுதபடி எதிர்க்கும் பார்ப்பனீயத்திற்கும், தரப்படுத்தல் தன்னுடைய திறமையை மறுக்கிறது என்று போராட்டத்தை தொடங்கிய யாழ்ப்பாணியத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இரண்டும் தங்களுக்கு அநீதியான முறையில் கிடைத்த வசதிகளால் கிடைத்த திறமையால் கிடைக்கும் சலுகைகளை உரிமையாக்க எடுக்கும் முயற்சிகள் தான்.

இன்றைக்கு பல நாடுகளில் தேர்தல்களில் பெண்களுக்கு குறிப்பிட்டளவு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டிருப்பது கூட, இதுவரை காலமும் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை சரி செய்வதற்கானது தானே.

தரப்படுத்தல் என்பதன் நோக்கமே, யாழ்ப்பாணம் போன்ற பெரிய நகரங்களில் உள்ள பெரும் கல்லூரிகள், டியூசன் வசதிகள், தங்கள் பிள்ளைகளை அதற்கெல்லாம் அனுப்பக்கூடிய அளவுக்கான அங்குள்ளவர்களின் வாழ்க்கைத் தரங்கள் போன்றன, பின்தங்கிய இடங்களில் உள்ளவர்களுக்கு கிடைக்காத காரணத்தினால், பல்கலைக்கழக புள்ளி முறையில் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் குறைந்தளவு புள்ளிகளுடன் பல்கலைக்கழகம் போக முடிந்தது தான்.

கல்வித் தரப்படுத்தல் தமிழர்களின் கல்வி வளர்ச்சியை மட்டுப்படுத்த கடும்போக்கு ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறதே?

இது யாழ்ப்பாணிகளுக்கு எதிராக, அதன் அறிவின் மேல் பொறாமை கொண்டு, அதன் கல்வியை அழிக்க பேரினவாதம் திட்டமிட்டு செய்த சதி இல்லை. இது யாழ்ப்பாணிகளுக்கு மட்டுமன்றி, கொழும்பு, கண்டி சிங்கள மேல் மட்டங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணிய ஒன்று தான். சிங்கள கிராமப்புறப் பகுதிகளில் உள்ளோர் இதனால் பெரும் பயன் அடைந்தார்கள்.

அதைப் போல, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் பேசும் மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு இது வாய்ப்பளித்தது. ஆனால், அவர்களும் தமிழர்கள் தானே, அவர்களுக்கும் பயன்படுகிறதே என்று அதை வரவேற்காமல், எதிர்ப்பதற்கு முதல் காரணம் அதைக் கொண்டு வந்தது சுதந்திரக்கட்சி அரசு, மற்றது அதனால் பாதிக்கப்பட்டது யாழ்ப்பாணிகளின் பிள்ளைகளான மாணவர்கள்.

தரப்படுத்தல் என்பது மத்தியதர, மேற்தட்டு யாழ்ப்பாணிகளுக்கு மட்டுமான பாதிப்பு என்பதை, முழுத் தமிழர்களுக்கும் எதிரான சிங்கள பேரினவாத இன அழிப்பு முயற்சியின் ஒரு வடிவம் என்று கதை சொல்லித் தான் போராட்டத்திற்கான நியாயங்கள் உருவாக்கப்பட்டன.

இதே தரப்படுத்தலை எதிர்த்துப் போராடிய அதே தமிழ்த்தேசியம், அதிகளவில் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடிய வளாகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைத்த போது, அது வெறும் ‘கடலைக்கொட்டை’ என்ற மாதிரி, கறுப்புக்கொடி காட்டியது. காரணம், அதே சுதந்திரக்கட்சி அரசு அதை ஆரம்பித்தது தான்.

அன்றைக்கு அதை எதிர்த்த ‘விட்டால் குடுமி, சிரைச்சால் மொட்டை’ தமிழீழத்தில் இன்றைக்கு எத்தனை முழு அளவிலான பல்கலைக்கழங்கள் உள்ளன?

பின்தங்கிய இடங்களில் குறைந்த புள்ளிகளுடன் பல்கலைக்கழகம் நுழையலாம் என்பதற்காக, யாழ்ப்பாணத்தில் படித்து விட்டு, அந்த பின்தங்கிய பிரதேசங்களில் போய் பரீட்சை எழுதிய யாழ்ப்ப்பாணிகள் இருந்தார்கள் தானே?

யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் பாடசாலை மாணவர்கள் துப்பாக்கி முனையில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு யுத்த முனைகளில் பலி கொடுக்கப்பட்டது கூட இவர்களுக்கு குற்ற உணர்வைத் தரவில்லை. காரணம், அவர்கள் வன்னிப் பிள்ளைகள்!

பல்கலைக்கழக அனுமதிக்காகப் போராட்டத்தைத் தொடங்கிய இனம், போராட ஆள் இல்லாமல் ஆரம்பப் பாடசாலை மாணவர்களைப் பலி கொடுப்பதில் வந்து முடிந்தது.

ஒரு இனத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிற தேசியத் தலைவர் ஆவதற்கு எட்டாம் வகுப்பு படித்த தகுதி மட்டுமே போதும் என்று ஒரு சமூகம் கொண்டாட முடியுமாயின், நாங்கள் ஒரு படித்த சமூகம், கல்வி தான் எங்கள் சமூகத்தின் அடையாளம், அதை சிங்களம் வரலாற்று ரீதியாக அழிக்கிறது என்று சொல்கிற அந்த சமூகம் பல்கலைக்கழக நுழைவுக்காகத் தான் நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்று சொல்வது நகைப்புக்குரியதில்லையா?

அண்ணன் அமிர்தலிங்கம் ஐ.நாவில் ஈழம் எடுப்பார் என்று நம்பியவர்கள் தான், அண்ணை அடிச்சுப் பறிப்பார் என்று நம்பினார்கள். முடிவு எப்படியிருக்கும் என்பதை விளங்க முடியாத அளவுக்குத் தான், யாழ்ப்பாணியின் படிப்பின் திறம் இருந்திருக்கிறது.

ஆண்டைகளின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கு பாதிப்பு என்பதற்காக முழு இனத்தையும் பலி கொடுக்க தயாராக போராட்டம் தொடங்கிய தமிழ்தேசியத் தலைமை, யாழ்ப்பாணத்தில் அடக்கப்பட்டோரின் அடிப்படைக் கல்வி வளர்ச்சிக்கு என்ன செய்தது?

எங்கள் ஊர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை இருந்த நிலைமை மாற்றப்பட்டு, ஐந்தாம் வகுப்பு வரைக்குமே அதை தரம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. எங்கள் பகுதியையும் மட்டுமன்றி சுற்ற இருந்த சிற்றூர்களில் இருந்த எங்கள் சாதிசனத்தினரான பிள்ளைகள் கல்வி கற்ற அந்தப் பாடசாலை தரம் குறைக்கப்பட்டது எங்கள் ஊரவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

அப்போது எங்கள் கோப்பாய் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆலாலசுந்தரம் எங்கள் ஊரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அங்கே என் அப்பா உட்பட்ட பலரும் பேசினார்கள். வழமை போல நான் முன் மணலில் உட்கார்ந்து வாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் எல்லோருமே ஆலாலசுந்தரத்திடம் வேண்டிக் கொண்டது பாடசாலையைத் தரம் குறைக்க வேண்டாம் என்பது தான். மேடையிலேயே அது சாத்தியமில்லை என்று ஆலாலசுந்தரம் மறுத்து விட்டார்.

அந்த மாணவர்கள் அருகில் இருந்த இந்துக் கல்லூரியில் கற்கலாம் தானே என்று நீங்கள் சொல்லலாம். எங்கள் பாடசாலையில் பயின்றவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள். மாற்றுடையோ, போட்டிருக்கும் உடையைக் கழுவுவதற்கான சவர்க்காரம் வாங்குவதோ பெரிய பிரச்சனையாக இருக்கக் கூடிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். எல்லாரும் அவ்வாறான சூழ்நிலையில் இருந்ததால், பிள்ளைகள் தங்கள் வறுமை குறித்து அவமானமாக உணரத் தேவையில்லை. இவர்கள் எல்லாரும் கல்லூரிக்கு போக நேரிட்டால், சீருடை வாங்க வேண்டும், அது சார்ந்த செலவினங்கள் அதிகமாகும். அதற்கு அவர்களுக்கு வசதி இருக்காது.

இவர்களுடைய பிரச்சனை பல்கலைக்கழகம் போய் சீதனம் வாங்குவதோ, கொர்ணமேந்து உத்தியோகம் பெறுவதோ இல்லை. எழுத வாசிப்பதும்,  சாதாரண வேலை வாய்ப்புகளைப் பெறுவதும் தான் அவர்களின் நோக்கமாக இருக்கும்.

இப்படி அடக்கப்பட்ட மக்களின் அடிப்படைக் கல்வி பற்றி அக்கறையில்லாத தமிழ்த் தேசியத் தலைமை, தரப்படுத்தலுக்காக போராடுகின்றது என்றால், அது சமூக நீதிக்கான போராட்டமா? இல்லையே?

இது முழுக்க முழுக்க, யாழ்ப்பாணிகள் தங்கள் நலன்களுக்காக ஆரம்பித்த போராட்டம். 

தமிழர்களின் போராட்டம் அதன் சகல பிரஜைகளுக்கும் பொதுவான பிரச்சனையை மையப்படுத்திய போராட்டமாக இருந்ததில்லை என்கிறீர்களா?

கிழக்கில் சிங்களவர்கள், முஸ்லிம்களோடு சம அளவில் வாழ வேண்டிய தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் சிறிய அளவிலான முஸ்லிம்களோடு மட்டுமே வாழ்ந்த தமிழர்களுக்குமான பிரச்சனைகள் வேறு. சிங்களக் குடியேற்றங்கள் அவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ளோருக்கு எந்த அக்கறையும் இருந்ததில்லை.

தரப்படுத்தல் யாழ்ப்பாணிகளுக்கான பிரச்சனை. மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கு அது சாதகமான, பயன் தரும் ஒன்று.

தமிழரின் பூர்வீக நிலங்கள் பறிபோகின்றன, பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என்ற நடைமுறைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பெறும் போராட்டமாக இல்லாமல், யாழ்ப்பாண நலன்களை, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நடத்தப்பட்டது தான் இந்தப் போராட்டம்.

அடுத்தது, தான் சிறுபான்மையினராக அடக்கப்படுவதாகச் சொல்லும் ஒரு இனம், தனக்கு கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றது என்ற கேள்வி. முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது, அவர்களின் சொத்துக்களுக்கு ‘கயிறு கட்டிப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது’ என்று செய்தி வெளியிட்ட ஜாம்பவான்கள் உள்ளார்கள். காரணம், தாயகத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி நாங்கள் எழுதியதால்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் உயிரோடு எரியும் டயர்களில் வீசி எறியப்பட்ட போது, இவர்கள் மெளனமாகக் கண்ணீர் வடிக்கவில்லை. கோலா கொடுத்தார்கள்.

கூட்டணி காலத்திலேயே, உடுப்பிட்டியில் சிறுபான்மைத்தமிழரான ராஜலிங்கம் போட்டியிட வைத்த போது, அதை Quantum leap, paradigm shift  என்றெல்லாம் கதை அளந்தார்கள். அதெல்லாம் வெறும் tokenism என்ற உண்மை  பின்பு தான் தெரிய வந்தது.

சாதியை ஒழித்தோம் என்பதை விட, ‘ஆர் இப்ப சாதி பாக்கினம்?’ என்ற அந்த நேரத்துக் கதை தான் அது.

பின்னர் நூலக திறப்பின் போது புலிகள் செய்த அடாவடிக்கு ‘புலிகள் சாதியை ஒழித்தார்கள்’ என்று இன்றைக்கும் முட்டுக் கொடுக்க பேஸ்புக்கில் ஆள் உண்டு தானே!

கூட்டமைப்பும் சரி, புலிகளும் சரி.

சமூக வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள், சிறுபான்மை முஸ்லிம்கள், அடக்கப்பட்ட சமூகத்தினர், மனித உரிமைகள் என்று வரும் போது, ஒரே விதமான கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள்.

‘முதல்ல எங்களோட சேர்ந்து போராடுங்கோ. ஈழம் கிடைச்சவுடன நாங்கள் எங்கட பிரச்சனையைத் தீர்ப்பம்!’

புலிகள் ‘இப்ப சண்டை நடக்குது. உதுகள் எல்லாம் இப்ப கவனிக்கேலாது. ஈழம் கிடைச்சவுடன..’ என்றார்கள்.

ஆயுதம் இல்லாத சூழலிலேயே ‘துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை’ என்றதைப் பார்த்தோம்.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லாமல், ஆயுதம் இருந்த போது, முஸ்லிம்கள் வெளியேற்றம், கிழக்கு போராளிகள் உயிருடன் எரிப்பு, துணுக்காய், வெருகல் படுகொலை என்றெல்லாம் பார்த்திருக்கிறோம்.

நிர்வாகத் திறமையை மாகாண சபையில் பார்த்தோம்.

கொஞ்சம் அதிகாரம் கிடைத்தால் யாழ்ப்பாணி என்ன செய்வான் என்பதை பல்கலைக்கழகத்தில் பார்க்கிறோம்.

இதற்குள், ‘முதல்ல எங்களோட சேர்ந்து போராடுங்கோ’ என்கிற யாழ்ப்பாணி ஈழம் கிடைச்சவுடன் என்ன செய்வான் என்பது எங்களுக்குத் தெரியும்.

தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டம், ஆயுத போராட்டமாக மாறிய பரிணாமம் திணிக்கப்பட்ட ஒன்றா?

ஆயுதப் போராட்டம் என்பது அகிம்சைப் போராட்டத்தின் இயற்கையான நீட்சியாகவோ, பரிணாம வளர்ச்சியாகவோ இருந்ததில்லை. இது வெறும் Malignant cancerous growth மட்டுமே!

ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவ பிரிவு மாதிரியோ, Sinn Fein ன் இராணுவ பிரிவான ஐ.ஆர்.ஏ மாதிரியோ எங்களுடைய ஆயுதப் போராட்டம் வந்து சேர்ந்ததில்லை. இளைஞர் பேரவை ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், அது இயற்கையான வளர்ச்சியாக இருந்திருக்கும். சில நேரம் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கூட கிடைத்திருக்கலாம்.

ஆனால், ஈழக் கோரிக்கையை ஆரம்பித்தவர்கள் எவரும், ஆயுதப் போராட்டம் என்ற அம்சத்தை கற்பனை கூடப் பண்ணியதில்லை. அகிம்சை மூலமாகப் பெறலாம் என்பது தான் முற்றுமுழுதான கதையாக, நம்பிக்கையாக அல்ல, இருந்தது. தானைத்தளபதி என்றதெல்லாம் வெறும் குஷிப்படுத்தல் மட்டுமே.  ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து தலைமை தாங்கியிருப்பார் என்று அரபாத், சேகுவேரா வடிவத்தில் அந்த நேரத்தில் கூட அமிர்தலிங்கத்தை யாரும் கற்பனை பண்ணியதில்லை.

எங்களுக்கு ஆயுதப் போராட்டம் கூட்டணியின் அரசியலில் நம்பிக்கையிழந்த சுயாதீன உதிரிக் குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்றே. இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்கள், மேடைப்பேச்சு அடலேறுகள் கூட பிரிந்து சென்று இயக்கம் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களில் ஒட்டிக் கொண்டவர்கள் உள்ளனர். இயக்கங்களை ஆரம்பித்தவர்கள் கூட்டணியின் Card carrying உறுப்பினர்களும் இல்லை. பொறுத்த மாவை மட்டும் தற்போது அரசாண்டு அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

யாழ்ப்பாண சமூகம் போராட்ட குணம் கொண்ட சமூகம் இல்லை. பார்ப்பனர்கள் போல, தங்களுடைய நலன்களை பாதுகாப்பதற்காக யாரோடும் சமரசம் செய்ய தயாராக இருந்த சமூகம். போர்த்துக்கேயர் வந்த காலத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் அந்நியர்களுக்கு எதிராக பெரிய போராட்டங்களோ, எதிர்ப்போ நடந்தாக நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி நடந்திருந்தால், அதை இப்போதும் யாழ்ப்பாணிகள் கொண்டாடியிருக்க மாட்டார்களா? சிங்கள பகுதிகளிலோ, தமிழ்நாட்டிலோ அந்நியர்களுக்கு நடந்த எதிர்ப்புகள் மாதிரி இங்கே தனிமனிதர்களாகவோ, குழுக்களாகவோ நடந்ததாக இருந்தால் யாரும் நினைவூட்டலாம். பண்டாரம் வன்னியனாகத் தான் இருந்தார். யாழ்ப்பாணியாக இல்லை.

500 வருடங்களாக இந்த ஆண்ட பரம்பரைக்கு போராடும் புரட்சிச் சிந்தனை இருந்ததில்லை. வந்த அந்நியர்களுடன் சமரசம் செய்து தங்களுடைய நலன்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தங்களுடைய நிலபுலன்களை ஆண்டனுபவிக்கவும், அடிமை, குடிமைகளை வைத்து சேவகம் செய்விக்கவும் அந்நியர்கள் இடையூறு செய்யாதவரைக்கும் இவர்களுக்கு புரட்சியோ, போராட்டமோ அவசியமாகப்படவில்லை. சங்கிலியனை இவர்களே காட்டிக் கொடுத்தும் இருக்கலாம்.

அந்நியர்களுக்கு சமூக நீதி தேவையில்லாத ஒன்று. அவர்கள் வந்த நோக்கமே வேறு. மொழி தெரியாத அந்நியர்களுக்கு கங்காணி வேலை பார்க்கும் தொழிலை இந்த ஆண்ட பரம்பரை தானே செய்திருக்கும். அந்த நிர்வாக சேவைக்கான கல்வி வாய்ப்புகளை லண்டன் வரைக்கும் சென்று பெறக்கூடிய வசதிகள் அவர்களுக்குத் தானே இருந்தன.

சர்வசன வாக்குரிமைக்கு எதிராக, காணி உரிமை இல்லாதவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று, மேன்மை தங்கிய மகாராணிக்கு மகஜர் அனுப்பியது இந்த ஆண்ட பரம்பரை தானே.

பேர்சிவல் பாதிரியாருக்கு உதவியாளராக இருக்கும் அளவுக்கு இருந்த ஆறுமுகநாவலர் பைபிளை தமிழில் மொழி பெயர்க்க உதவி செய்து விட்டு, அந்நியர்களின் அனுசரணையுடன், சைவ மத சாதிப் பாகுபாட்டை வளர்க்க, ‘எளிய சாதியாரிடத்தில் போசனம் பண்ணுதல் ஆகாது’ என்று தான் சொன்னாரே ஒழிய, வெள்ளையரை வெளியேற்ற சாதி வேறுபாடு மறந்து போராடுவோம் என்று சொன்னதில்லையே!?

அந்நியர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதை விட, தங்களுடைய சாதிவேறுபாடுகளைத் தொடர்வது இவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேர்சிவல் பாதிரியாருடனான சமபந்தி போசனம் பெருமைக்குரியதாகக் கூட இருந்திருக்கலாம்.

தமிழரசு செய்த போராட்டங்களிலும், அரசு வன்முறையில் ஈடுபட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின்னால், எழுபதுகளில் நடந்த போராட்டங்கள் எல்லாம், காலை உணவோடு வந்து உட்கார்ந்து, ஆறு மணிக்கு ‘பழரசம் கொடுத்து’ இனிதே நிறைவேறும் உண்ணாவிரதங்களும், வீட்டில் படுத்திருந்து நடத்தும் ஹர்த்தால் பகிஷ்கரிப்புமாகத் தான் இருந்தன. வேலைநிறுத்தப் போராட்டம் என்ற ஒன்று கூட நடப்பதில்லை. அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருப்பதால், எப்படியாவது வேலைக்கு போய் கையெழுத்து வைத்து சம்பளத்தை வாங்கிக் கொள்ளும் குள்ளநரிப் புத்தி இருந்தது. வியாபார நிறுவன தனியார்களும், அதில் வேலை செய்யும், சேவை பெறும் சாதாரண மக்களும் பாதிப்புற, மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு போகாதிருப்பதால் குஷிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

முற்றவெளி கூட்டங்களுக்கு ‘மக்கள் வெள்ளம் திரண்டு’ வந்து, ‘ஒற்றுமையைக் காட்டும்’ பேரணிகள் தான் எங்கள் அதிக பட்ச போராட்டம்.

எண்பதுகளில் இயக்கங்கள் வந்த பின்னால் நடந்த போராட்டங்கள் எல்லாம், அவை இயக்கங்களுக்கு எதிரானவையாக இருந்த நேரங்களிலும், மற்ற ஆயுத இயக்கங்களின் பின்னணியில் நடைபெற்றவை தான். யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அரிசி அனுப்புமாறு கோரி மாத்தயா காலத்தில் நடந்த போராட்டம், திலீபனின் உண்ணாவிரதம், இந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் எல்லாம் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் என்பது எங்களை நாங்களே குஷிப்படுத்த சொல்லிக் கொள்ளும் கதைகள்.

இன்றைக்கு பல்கலைக்கழகத்தில் நடக்கும் போராட்டங்கள் கூட, புலிகளின் வழிகாட்டலில் நடந்த பொங்குதமிழ் தமாசாக்களின் தொடர்ச்சி தான். இந்த மாணவ மணிகள் எல்லாம், ‘உங்களுக்கு முன்னால் ஒரு தலைமுறை உயிர்களைத் தியாகம் செய்து போராடியது. வெற்றி அல்லது வீரமரணம், வாருங்கள் போராடுவோம்’ என்றால் ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று ஓடக் கூடியவர்கள் தான். மாவீரர் தின விளக்கேற்றல், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் என்பதெல்லாம் தற்போது வெள்ளைவான்கள் நடமாட்டம் இல்லாத துணிச்சலிலும், அதைக் காட்டி வெளிநாடு போகலாம் என்ற சிந்தனையிலும் வந்தவை  போலத் தான் தெரிகின்றன.

உண்மையான போராட்ட சிந்தனையுள்ளவர்கள் கண் முன்னால் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடுவார்கள். இவர்கள் பல்கலைக்கழக பாலியல் தொல்லைகளுக்கோ, பகிடிவதைகளுக்கோ எதிராக தொடர்ச்சியாக எந்தப் போராட்டமும் நடத்தியதில்லை. எதிர்காலத்தில் அவ்வாறான தொல்லைகளை தாங்கள் செய்யும் ஆசை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

புலன் பெயர்ந்த நாடுகளில் நடக்கும் புலிக்கொடிப் பேரணிகள், வீதிமறிப்புகள் முதல் இன்றைக்கு பேஸ்புக்கில் சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடத்தி வெற்றிப் பேரிகை முழங்கும் போராட்டங்களோடு, உண்ணாவிரதம், கஞ்சி, கொத்துரொட்டி என்று நடக்கும் கேலிக்கூத்துகள் எல்லாம் தங்கள் மாவீரத்தை மற்ற யாழ்ப்பாணிகளுக்கு காட்டும் வெற்றுப் பேரிகைப் போராட்டங்களே ஒழிய, தீர்வு தேடிய போராட்டங்கள் இல்லை.

நூற்றாண்டுகளுக்கு முன்னால் நல்லூர் கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கிறிஸ்தவ கோயில் கட்டப்பட்ட போது, யாழ்ப்பாணிகள் புரட்சி செய்த வரலாறு எதுவுமில்லை. இன்றைக்கும் பேஸ்புக்கில் பொங்கும், முப்பது வருடங்களுக்கு முந்திய நூலக எரிப்பின் போது, அப்போதிருந்த கூட்டணியினர் அதனைக் கண்டித்து பேரணி, போராட்டம் எதையும் நடத்தியதாக எனக்கு நினைவில்லை.

மாதா கோயில் மீது தாக்குதல் நடந்ததால் பதில் தாக்குதல் நடத்தி நாகவிகாரையை எரித்த கரையூர் மக்கள் போல, யாழ்ப்பாணிகள் ஒரு போதும் பொங்கி எழுந்ததில்லை.

பொங்குதமிழ் தான் ஒழிய, பொங்கு தமிழர்கள் இல்லை.

தமிழர்கள் பொங்க மாட்டார்கள்!

இப்படிக்கொத்த போராட்ட பாரம்பரியம் கொண்ட யாழ்ப்பாணிகள் ‘நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடினோம்’ என்பதை எதற்குள் சேர்ப்பது? அதற்குள் தற்போதைக்கு ஆயுதத்தை மெளனித்து வேறு இருக்கிறார்களாம்!

சர்வதேசம் கலங்கிப் போய், இவர்கள் திரும்பவும் ஆயுதத்தை தூக்கினால் நம்ம கதி என்னாவது என்று கண்ணில் எண்ணெய் விட்டு, தேர்தல் நேரங்களில் ‘உற்றுநோக்கிக் கொண்டிருப்பது’ அந்தப் பயத்தில் தானாக இருக்க வேண்டும்.

ஆயுதப் போராட்ட சிந்தனை ஆரம்பித்த காலங்களில் இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்கள் லெபனான் போய் பலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சிகள் எடுத்தார்கள்.

பயிற்சிகளின் பின்னால், ஆயுதங்கள் எங்கே கிடைக்கும்? பின்தளம் எதுவாக இருக்க வேண்டும்? என்ற கேள்விகள் வரும் போது தவிர்க்கமுடியாதபடிக்கு தொப்புள்கொடியைச் சாட்டி இந்தியா வந்து தானாக வேண்டும்.

இந்தியாவின் சோவியத் சார்புக் கொள்கைக்கு பெட்டியடிக்க, ஜே.ஆரின் அமெரிக்க சார்பு அரசைப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் சர்வதேச பொலிஸ்காரன் அமெரிக்காவுக்கு வருகிறது. வொய்ஸ் ஒப் அமெரிக்க மீள் ஒலிபரப்பு நிலையம் உளவு வேலைகளுக்கு பயன்படலாம், அதைப் பாதுகாப்பது என்ற பெயரில் அமெரிக்க இராணுவம் திருகோணமலையில் நிலை கொள்ளலாம் என்ற அச்சம் இந்து சமுத்திரப் பொலிஸ்காரன் இந்தியாவுக்கு வருகிறது.

ஜே.ஆருக்கு பாடம் படிப்பிக்க, இந்தியா அனுரதபுரத் தாக்குதலை நடத்துமாறு இயக்கங்களைக் கேட்டதாகவும், மற்ற இயக்கங்கள் மறுத்த நிலையில் புலிகள் தான் அதைச் செய்ததாகவும் முன்னாள் இயக்கத்தினர் கூறுகிறார்கள்.

வெறும் கூலிப்படை மாதிரி, எதிரியின் கோரங்களுக்கு சற்றும் குறையாமல் நடத்தப்பட்டது அந்த தாக்குதல்.

இந்தியாவிடம் பயிற்சியும் ஆயுதமும் பெற்ற புலிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி அளித்ததன் பின்னணி என்ன, அதற்கான தரகர்கள் யார் என்று இதுவரை எந்த யாழ்ப்பாணியாவது, நாய்வாலராவது கேட்டிருக்கிறார்களா?

இந்தியாவின் ஸ்திரத் தன்மையை தகர்க்கும் விதத்தில் நடத்தப்பட்ட ராஜீவ் கொலை கூட யாருடைய நன்மைக்காக நிகழ்த்தப்பட்டது? தனிநாடு என்ற ஒன்று கிடைக்கும் போது அதை அங்கீகரிக்க வேண்டிய முதலாவது நாடாக இந்தியா இருக்கக் கூடிய நிலை அத்தோடு முடிவுக்கு வந்து விட்டது. 

இந்தியா ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லித் தான் ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்திருக்கிறது. நாடு பிரிய அனுமதிக்க மாட்டோம் என்று!

இந்தியாவின் நோக்கத்தைத் தெரிந்து கொண்டு தவிர்க்க முயன்ற புளொட் இயக்கமும் அழிந்து கொண்டது. மாலைதீவுப் புரட்சி பற்றிய தகவலை இந்தியாவுக்கு வழங்கியது மாமனிதர் தானே!?

இந்தியாவிடம் ஆயுதங்கள் வாங்கி போராட்டம் நடத்தியவர்கள் எந்த நம்பிக்கையில் போராட்டத்தை தொடர்ந்தார்கள்? 

ஆயுதங்களை எங்களுக்குத் தந்தவர்கள் எங்களுடைய நலன்களுக்காக தரவில்லை என்பது எங்களுக்கு புரியவில்லை. அது எங்கள் மக்களை அழிக்கும் என்பதையும் விளங்கிக் கொள்ளவில்லை.

போராடும் இயல்பு இல்லாத ஒரு சமூகத்திற்கு ஆயுதம் திணிக்கப்பட்டதே ஒழிய, அது தானாகவே விரும்பி ஆயுதம் தூக்கி போராடியிருக்குமா?

யாழ்ப்பாணிகளைப் பொறுத்தவரைக்கும், ஆயுத இயக்கங்கள் ஈழத்திற்காக போராடினாலும், ஈழம் கிடைத்தால் கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ‘தம்பி பிரபாகரன் தமிழ் ஈழத்தைப் பிடித்து அண்ணன் அமிர்தலிங்கத்தின் காலடியில் ஒப்படைப்பார்’ என்று தான் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நம்பிக்கை புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்குமா? தேர்தல் என்று வந்ததும், சங்கரியரோடு உதயசூரியன் சின்னத்திற்கு முட்டி மோதியதும், வீடு சின்னத்தை தேர்ந்தெடுத்ததும் அதன் அடிப்படையில் தான். மக்கள் தங்கள் பின்னால் தான் என்று புழுகிய புலிகள் எதற்காக இந்த சின்னங்களுக்காக அலைந்தார்கள்? தமிழ்நாட்டு வாக்காளர்கள் மாதிரி, யாழ்ப்பாணிகளின் அறிவின் திறமையை மெச்சி, சின்னங்களுக்கு வாக்களித்து பழகியவர்கள் என்ற நினைப்பிலா? இல்லையே?

தேர்தல் அரசியல் என்று வரும் போது, யாழ்ப்பாணிகள் தங்கள் காலை வாருவார்கள் என்பது புலிகளுக்கு தெரியும்.

இந்தப் போராட்டத்திற்கு Steroid கொடுக்கப் போய்,  புற்றுநோய் வளர்ச்சியைத் தூண்டிய நிகழ்வு தான், திருநெல்வேலி இராணுவ வண்டித் தொடர் தாக்குதல். இதற்கான பதிலடியாக இனக்கலவரம் நடக்கிறது. மக்கள் உயிரிழப்பும், சொத்து அழிப்பும், வந்து சேர்ந்த அகதிகளின் அவலமும் பெரும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து, இயக்கங்களுக்கு இளைஞர்கள் படையெடுக்கிறார்கள்.

ஆயுதங்களோ, சரியான சித்தாந்தங்களோ இல்லாமல் போராட்டத்திற்கு போகும் வழியில் இவற்றைத் தேடிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான் தலைதூக்கி நின்றதாக  எனக்குப் பட்டது.

இந்த மனநிலை ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான போராட்டமாக இல்லாமல், சாதிக் கலவரத்தில் வீடு எரிக்க கும்பலாக போகும் நிலைமையாகத் தான், உவங்களை சும்மா விடக் கூடாது என்ற உணர்ச்சிக் கொதிப்பில் செல்வது போலத் தான், எனக்கு தெரிந்தது.

உலகத்தில் உள்ள சித்தாத்தங்களை விட, அதிகமான அளவு இயக்கங்கள் தோன்றின. ஹொலிவூட் படப் பாணியில் ‘அடிச்சுப் பறிக்கலாம்’ என்ற நினைப்போடு, ‘உவரை விட நான் மணியாய் செய்வன்’ என்ற தங்களை புத்திசாலிகளாகவும், மற்றவர்களை முட்டாள்களாகவும் நினைக்கும் யாழ்ப்பாணிச் சிந்தனையின் அடிப்படையில், ஆயுதங்கள் இல்லாமல் தோன்றிய சுவரொட்டி இயக்கங்கள் தானே இவற்றில் பெரும்பாலானவை.

கிடைத்த ஆயுதங்களும் துரோகி ஒழிப்பு, சமூக விரோதி ஒழிப்பு என்று மண்டையில் போடும் மின்கம்பத் தண்டனைக் கலாசாரம் உருவெடுக்கிறது…

போராட்டம் தொடங்கும் வரை பொழுது போக்க!

இரத்த திலகம் வைத்து மேனி சிலிர்த்த இனம், ஆயுதங்களின் திடீர் வருகையும் அந்த ஆயுதங்கள் இந்த இயக்கங்களுக்கு வழங்கிய தேவைக்கும் தகுதிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் மீறிய அதிகாரமும் பற்றி கேள்வி எழுப்பவி;ல்லை.

அன்றைக்கு ‘மண்டையில் போடும் அதிகாரத்தை உனக்கு யார் தந்தது?’ என்ற கேள்வியை இந்த யாழ்ப்பாணிகள் கேட்டிருந்தால், இன்றைக்கு போராட்டம் வேறு பாதையில் திரும்பியிருக்கக் கூடும்.

இதை எல்லாம் விளங்கிக் கொள்வதற்கு முன்னாலேயே, எதிரிக்கு எதிராக நீள வேண்டிய துப்பாக்கிகள், தான் வாயைத் திறந்தால், தன் நெற்றி, பிடரி, காது எல்லாம் நோக்கி நீளும் என்ற உண்மை யாழ்ப்பாணிக்கு உறைக்கிறது.

அந்தப் பயம் தான் ஆதரவு என்ற பெயரில் உருமாற்றம் அடைகிறது.

என்னுடைய கருத்துப்படி, ஆயுதங்கள் இருந்தாலும், யாழ்ப்பாணியின் தெரிவு படிச்ச பொடியள் என்று ஈரோஸ் மீதோ, எங்கட ஆக்கள் என்ற சாதி சார்ந்த நினைப்பில் புளொட் மீதோ தான் இருந்திருக்க வேண்டியது.

புலிகளின் மீது, பிரபாகரனின் சாதி சார்ந்தும், அதன் கொலை வெறி சார்ந்தும், யாழ்ப்பாணிகளுக்கு ஒவ்வாமை இருந்திருக்கும்.

வீங்கிப் பருக்க முடியாத ஈரோஸ் தத்துவார்த்தங்களில் மினக்கெட, அனாவசியமாகக் கொழுத்த புளொட் உட்கட்சிப் படுகொலைகளால் சீரழிந்து போகிறது.

இந்திய இராணுவத்துடனான நெருக்கம் காரணமாக, அதன் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் மீது விழுகிறது.

எதிரியை நம்பலாம், துரோகிகளை நம்ப முடியாது என்ற புலித் தத்துவத்தில் மற்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டு உயிரோடு நெருப்பில் வீசப்பட்டு வேட்டையாடப்பட்ட போது, யாழ்ப்பாணிக்கு வேறு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

பகுத்தறிவு இல்லா மிருக சாதி மண்டையில போட்டுவிடும் என்று ஆதரிப்பதாக நடிப்பதைத் தவிர!

தத்துவார்த்த சிந்தனைகளில் நேரத்தை வீணாக்காமல் ஹீரோ விளையாட்டுகள் சினிமா மாயைக்கு உள்ளாக்க, Sitting ducks என்ற பதம் போல, இராணுவமுகாம்கள் தாக்குதல்களில் இலகுவாகத் தகர்க்கப்பட ஈழம் சாத்தியம் என்ற நம்பிக்கை வருகிறது.

தொடர்ந்த யுத்தம் யாழ்ப்பாணிகள் புலன் பெயர்ந்து அகதிக்கோரிக்கை பெற வசதியாகிறது.

வடமராட்சி தாக்குதல், இந்திய இராணுவ தாக்குதல்கள், பின்னர் சந்திரிகா காலத்தில் நடந்த தாக்குதல்களில் எல்லாம் இராணுவம் அழிவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மூர்க்கமாக முன்னேறிய போது எல்லாம், புலிகள் வெற்றிகரமாகப் பின்வாங்கிய போது, யாழ்ப்பாணிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும், Conventional யுத்தம், கெரில்லா யுத்தங்களுக்கான வித்தியாசம்.

அதே வேகத்தில்  இராணுவம் சர்வதேச எதிர்ப்புகள் பற்றிய கவலை இல்லாமல் முன்னேறிய இறுதி யுத்தத்தில், காட்டுப் பகுதிக்குள் உள்ளுக்க விட்டு அடிக்கப் போறாங்கள் என்ற எதிர்பார்ப்பில் மண் போட்டு வெற்றிகரமாக முள்ளிவாய்க்காலுக்கு பின்வாங்கினார்கள்.

முகாமைத் தகர்ப்பதும், முன்னேறி வரும் இராணுவத்தை எதிர்கொள்வதும் வேறு வேறு விடயங்கள். Sitting ducks வேறு, மதங் கொண்டு மூர்க்கமாக வரும் யானை வேறு!

அடிச்சுப் பறிப்பது என்பது வெறும் கனவு தான் என்ற உண்மையை யாழ்ப்பாணிகள் புரிந்துகொள்ளவில்லை. வெறும் கோட்டை கொடியேற்றமும், ஆனையிறவு முகாம் தகர்ப்பும் ஈழக் கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை என்று நாய் வாலர்கள் யாழ்ப்பாணிகளின் மூளையைக் கழுவத் தொடங்கினார்கள்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது வேடிக்கை பார்த்த அதே யாழ்ப்பாணிகள், சந்திரிகா நடத்திய யுத்தத்தின் போது புலிகளால் கட்டாயமான இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

அதே யாழ்ப்பாணிகள் புலிகளை விட்டு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் திரும்பவும் வந்தார்கள் தானே. இந்த யாழ்ப்பாணிகளைப் பற்றி அப்போது புலிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

வன்னியில் புலிகள் என்பது, இராணுவத்திற்கு உள்ளேயிருந்தும், புலிகளுக்கு வெளியே இருந்தும் ஆதரவு வழங்க யாழ்ப்பாணிகளுக்கு வசதியாகி விடுகிறது. யுத்தம் இனிமேல் வன்னியில் நடக்கும், பாதிப்புகள் வன்னியில் மட்டும் தான் நடக்கும், கட்டாய ஆட்சேர்ப்புகள் வன்னியில் நடக்கும், யாழ்ப்பாணத்தில் இராணுவப் பாதுகாப்பில், புலிகளின் கெடுபிடி இல்லாத உள்ளூர சந்தோசத்தோடு, பத்திரமாக இருந்து கொண்டு போரை ஆதரிக்கலாம். புலிகளை புகழ்ந்தேத்தலாம்.

ஒரு அசௌகரியம் கொழும்புக்கு போகும் போது, புலிகளின் பகுதியில் கடுமையான சோதனைக்கு ஆளாக வேண்டியிருக்கும், அவ்வளவு தான்.

கட்டாய இடப் பெயர்வில் புலிகளுக்கு தண்ணி காட்டி யாழ்ப்பாணம் வந்த அதே யாழ்ப்பாணிகள், சமாதான காலத்தில் அரசியல் வேலைக்கு வந்த போது, ஓடிப் போய் தோளில் சுமந்து வந்தார்கள் இல்லையா? அது தான் உண்மையான யாழ்ப்பாணி!

அரசியல் வேலைக்கு வந்த புலிகள் வட்டி, குட்டி எல்லாம் சேர்த்து கறந்தார்கள். சமாதான காலத்தில் அரசியல் வேலைக்கு வந்த புலிகள் செய்தது கப்பம் வாங்கியதும், துரோகிகள் என்று மாற்றியக்கங்களைச் சேர்ந்தவர்களை படுகொலை செய்ததும் தானே. யாழ்ப்பாணியிடம் அப்படி என்ன அரசியல் வேலை வேண்டிக் கிடந்தது?

இப்படித் தான் தங்களுக்கு ஈழம் பெறுவதற்கான அடியாளாகப் பயன்படக் கூடியவர் என்று நம்பிய யாழ்ப்பாணிகளுக்கு பிரபாகரன் தேசியத் தலைவராகி, சூரிய தேவன் ஆகினார்.

ஒரு போராட்டத்தில் அரசியல் தலைமை என்பது எல்லாத் தகுதிகளும் பார்த்து தேர்வு நடத்தி தெரிவு செய்யப்படுவது இல்லை. எல்லா அறிவையும் பெற்ற பின்னால் தான் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் இல்லை. ஆனால், அந்த வெற்றிடங்களை நிரப்பும் தலைவர்களுக்கு கொஞ்சமாவது உலக அரசியல் பற்றிய அறிவு வேண்டும். உலகம் இயங்குவது அது தனக்கான விதிகளுடன். அது நீதி, நேர்மை, நியாயங்களுடன் இல்லாவிட்டாலும், அந்த விதிகளுக்குள்ளால் தங்களுடைய நலன்களை முன்னெடுப்பது தான் பலம் குறைந்த நிலையில் தலைவர்கள் செய்ய வேண்டியது.

வெற்றி அல்லது வீரமரணம் தான் முடிவு என்றால், வெற்றி கிடைக்காவிட்டால் வீரமரணம் தான் பெருமை.

வாங்கிக் கட்டிய பின்னால், ‘ஐயோ, அடிச்சுப் போட்டான். இந்த அநியாயத்தை கேட்பார் யாருமே இல்லையா?’ என்று புலம்பக் கூடாது.

ஆங்கிலத்தில் சந்தர்ப்பங்களை சாதுரியமாகக் கைப்பற்றிக் கொள்வதை, seizing the opportuinities என்பார்கள்.

தங்களை நூற்றாண்டுகளாக அடக்கிய வெள்ளையர்களோடு மண்டேலா தேசிய அரசாங்கம் அமைத்தார், நாட்டின் நலனைக் கருதி.

Sinn Fein பெரிய வெள்ளி ஒப்பந்தம் செய்து கொண்டது.

எரித்திரியா ஐ.நா மூலம் சர்வசன வாக்கெடுப்புக்கான வழிகளைத் தேடிக் கொண்டது.

தன்னலமில்லாத, பதவி ஆசை இல்லாத, மக்கள் நலனை மனதில் கொண்ட இரண்டு தலைவர்களை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், வைத்து அமெரிக்காவிற்கு நெருக்கமான இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு தீமோரியர்கள் சுதந்திரம் பெற்றார்கள்.

போராட்டங்களில் எதிர்பார்த்த விளைவைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் பயன்களை வைத்து முன்னேறுவது முக்கியம்.

புலிகள் விட்டால் குடுமி, சிரைச்சால் மொட்டை என்பது போல, ஈழத்திற்கு குறைந்த எதையும் ஏற்க மாட்டோம் என்று விடாப்பிடியாக நின்றதன் பயனை இன்று முழுத் தமிழினமும் அனுபவிக்கிறது.

நட்டுக்கழண்ட அரசாங்கம் மூலமாக மோசடியான வாக்கெடுப்பை நடத்தி 99 வீதம் ஈழத்திற்கு ஆதரவு என்று மற்றவர்களை முட்டாள்கள் என்ற நினைப்பில் நடத்திய கூத்துத் தான் எங்களுடையது.

புலிகள் சமாந்தரமான அரசை நடத்துகிறார்கள் என்று புழுகினார்கள்.

சமாந்தரமான அரசுக்கு, சிங்கள அரசுதான் உணவு, மருந்து, எரிபொருள் அனுப்ப வேண்டும், அரச வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் பீலாவுக்கு குறைவு இருந்ததில்லை.

அவ்வாறான அரசு இருந்ததாக சொன்ன காலத்தில், புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்ற எண்ணம் பரவலாக இருந்த காலத்தில் கூட, புலிகள் தங்களுக்கு சர்வதேச ரீதியாக அரசியல் அங்கீகாரத்தை தேடியதில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தப்படி கிடைத்த வடக்கு கிழக்கு மாகாண சபையைக் கூட, தங்களது ஏகபிரதிதித்துவ வெறியினால் அழித்தார்கள்.

சந்திரிகா கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து கட்டியெழுப்புவதிலும் புலிகள் அக்கறை கொள்ளவில்லை. குழப்பியடித்தார்கள்.

காரணம், எந்த அரசியல் தீர்வு என்றாலும், அது புலிகள் மட்டுமன்றி, மற்ற இயக்கங்கள், கட்சிகளும் தேர்தலைச் சந்திப்பதில் தான் முடியும். ஒரு தேர்தலைச் சந்திப்பதற்கான தன்னம்பிக்கை புலிகளுக்கு இருந்ததில்லை.

நோர்வே பேச்சுவார்த்தையை தொடரும்படி கெஞ்சியபோது, முறித்துக் கொண்டது புலிகள்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஒரு விடயத்தை நான் நம்புகிறேன். கிடைத்த சந்தர்ப்பங்கள் எதிலும் பிரபாகரன், ‘தற்போதைய சூழ்நிலையில் இதை ஏற்போம். எங்களுடைய மூலோபாயம் ஈழம் தான், தந்திரோபாயமாக இதை ஏற்றுக் கொள்வோம்’ என்றிருந்தால், சுதுமலைக் கூட்டத்தில் ‘இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்’ என்ற போது கை தட்டியது மாதிரி, யாழ்ப்பாணிகள் கைதட்டி வரவேற்றிருப்பார்கள்.

ஈழக்கோரிக்கையை நான் கைவிட்டால் எனக்கு மரண தண்டனை தரலாம் என்று அவர் சொன்னார் என்பதற்காக எந்த யாழ்ப்பாணியும் அவருக்கு மண்டையில் போட துணிந்திருக்க மாட்டார்.

பிரபாகரனைப் பொறுத்தவரைக்கும், ஒரு தன்னம்பிக்கையில்லாத மனிதன். தன்னை ஒரு சர்வாதிகாரியாகத் தான் அவரால் பார்க்க முடிந்ததே தவிர, அரசியல் தலைவராக, ஒரு தேர்தலை எதிர்கொள்ளக் கூடிய தலைவராக தன்னை கணிக்க முடியவில்லை.

ஈழத்தை அடிச்சுப்பறிச்சால், தான் வாழ்நாள் பூராவும் சர்வாதிகாரியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இத்தனை சந்தர்ப்பங்களையும் சீரழித்தார்.

இறுதியில் கூட, மக்களை தப்ப விட்டு, காட்டுக்குள் மறைந்திருந்தால், யுத்தத்தை நீடித்திருக்க முடியும். அவர் திரும்பவும் காட்டுக்குள் போக தயாராக இருக்கவில்லை.

‘மக்களே எங்கள் மலைகள்!’ என்ற மாவோ மாதிரி, மக்களை மனிதக் கேடயங்களாக்கிக் கொண்டு, மார்க்கோஸ் மாதிரி, விசுவாசம் மிக்க அடியாளாக இருந்ததால், தன்னையும் அமெரிக்கா கூட்டிச் சென்று வெள்ளைமாளிகையில் வரவேற்புக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் இருந்தார்.

அவரையும் குறை சொல்ல முடியாது. அவர் என்ன வைச்சுக் கொண்டா வஞ்சகம் பண்ணினார்? சட்டிக்குள் இருப்பது தானே அகப்பைக்குள் வரும்.

அவரைச் சூழ இருந்தவர்கள் சூரியதேவன் என்றதை அவர் உண்மையாகவே நம்பத் தொடங்கி விட்டார்.

வந்த ஆயுதக் கப்பல்கள் எல்லாம் தொடர்ச்சியாக மூழ்கடிக்கப்படுகின்றன.

கருணாவின் பிளவைக் கூட, மாத்தயாவைப் போட்ட மாதிரி முடிக்கலாம் என்றளவில் தான் அவருடைய புத்திக்கூர்மை இருந்தது.

சர்வதேச ரீதியில் முழு இராணுவங்களையும், ஐ.நாவில் அங்கத்துவத்தையும் கொண்டிருந்த நாடுகளின் சதாம், கடாபி போன்றவர்கள் அகற்றப்படுகிறார்கள். இவை இரண்டுமே அமெரிக்காவின் எதிரிகளாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் நண்பர்களாக இருந்தவர்கள். அவர்கள் கூட ஈன இரக்கமின்றி அழிக்கப்படுகிறார்கள்.

திரும்பவும் யாழ்ப்பாணத்தைப் பிடிக்க, சாவகச்சேரி வரைக்கும் வந்த போது, இந்திய இராணுவம் எச்சரிக்கிறது.

தான் முற்றுமுழுதாக பெட்டியடிக்கப்பட்டிருக்கும் உண்மையை, சர்வதேச நிலைகளில் நடந்த மாற்றங்களை உணர முடியாத அளவில் தான் அவரின் அறிவுப்பெருக்கு இருந்தது.

சூரியதேவனாகவே தன்னை அவர் நம்பத் தொடங்கி விட்டார்.

அவரை எப்படி குறை சொல்ல முடியும்?

றெப்டீலியன்களின் மூளை வளர்ச்சி மாதிரி, கோபமும் பயமும் தவிர்ந்து அவர் வளர்ச்சி அடைந்ததில்லை.

அவர் அடிச்சுப் பறிப்பார் என்று, ‘சர்வதேசம் அவருடைய புத்திக்கூர்மையைக் கண்டு திணறுகிறது’ என்று கதை சொன்ன யாழ்ப்பாணிகளைத் தான் கேட்க வேண்டும்.

எல்லா முட்டைகளையும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது என்பார்கள். பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனை பயத்தில் ஆதரிக்கத் தொடங்கி, தன் நலன்களுக்காக அதைத் தொடர்ந்து, கடைசியில் ஒரு முழு இனத்தில் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி, இந்த அறப்படிச்ச யாழ்ப்பாணிகள் கூழ்ப்பானைக்குள் விழுந்தார்கள்.

படிச்ச யாழ்ப்பாணிகள் அவரை நம்பி பப்பாசி மரத்தில் ஏத்தியதற்கு, அவரை எப்படிக் குறை சொல்ல முடியும்?

எழுபதுகளின் தரப்படுத்தல் இரண்டாயிரங்களில் பிரச்சனையாகவே இருந்ததில்லை. அப்போது உலக அரங்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை வளர்ந்து விட்டது. தாங்கள் உருவாக்கிய பயங்கரவாத இயக்கங்கள் தங்கள் கட்டுப்பாட்டை மீறும் போது அவற்றை அழிப்பதற்கு வல்லரசுகள் தயங்குவதில்லை.

புலிகளுடைய அரசியல் படுகொலை அரசியல் மட்டும் தான். தன்னை அடக்கப்பட்டதாகக் கருதும் ஒரு சமூகத்தின் போராட்டத்தை வெறும் பயங்கரவாதம் ஆக்கியது புலிகள் தான்.

முகாம்களைத் தகர்ப்பதும், அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்வதும், அவ்வப்போது நினைக்கும் துரோகிகளைப் போட்டுத் தள்ளுவதும் தவிர்ந்து புலிகளுக்கு அரசியல் என்று எதுவும் இருந்ததில்லை.

சமாதான காலத்தில் அரசியல் வேலை செய்ய வந்து செய்தது கூட படுகொலைகள் தான்.

பாலசிங்கம் சொன்னது முட்டாளின் செயல்களுக்கான புத்திசாலித்தனமான விளக்கமே.

பின்னர் நாய்வாலர்கள், பேஸ்புக் அனாமதேயங்கள் என்று அதே முட்டாள்தனமான செயல்களுக்கு வடி கட்டிய அடிமுட்டாள்தனமான விளக்கங்கள் மலிந்து வி;ட்டன.

சர்வதேச அரங்கில் பயங்கரவாதம் என்பது கூட, காலத்துக்கு காலம், நாட்டுக்கு நாடு வேறுபடும்.

வெள்ளையர்களின் தலை கொய்யும் இயக்கம் நடத்திய ஜோமோ கென்யாட்டா, பின்னாளில் இஸ்ரேலின் பிரதமர்களாக இருந்த பலர், ஏன் மண்டேலா கூட, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் தான்.

சரியான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உலகமே வியக்கும் அளவுக்கு Statesmen அளவுக்கு உயர்ந்தார்கள்.

அவர்களைப் போல தேர்தல்களை நடத்தாவிட்டாலும், புரட்சி நடத்திய காஸ்ட்ரோவும், சர்வாதிகாரியாக இருக்கும் எரித்திரியாவின் இசையாஸ் அபேவேர்க்கியும் தவிர்க்க முடியாமல் சர்வதேசம் அங்கீகரிக்கும் தலைவர்கள்.

இசையாஸ் அபேவேர்க்கி மாதிரி, ஐ.நா மூலமாக சர்வசன வாக்கெடுப்பை நடத்திய ஆட்சியைக் கைப்பற்றி, தேர்தல் நடத்தாமல் இழுத்தடித்துக் கூட, பிரபாகரன் தன் தலைமையைக் கைக்குள் வைத்திருந்திருக்கலாம்.

ஒரு நாட்டை உருவாக்குவது என்பது அதற்கான நேசசக்திகளை சம்பாதிப்பது முதல், அதற்கு அங்கீகாரம் தரக்கூடிய பலம் வாய்ந்த தரப்புகளை கைக்குள் போடுவதிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கான அறிவும் திறமையும் பிரபாகரனுக்கு இருந்ததில்லை.

சர்வதேசத்தின் கவனத்தை திருப்ப, கத்தோலிக்க சுவாமியாரான தங்கள் ஆதரவாளர் கிளி பாதரை குண்டு வைத்துக் கொன்று, அதை சிங்கள அரசின் தலையில் போட்டால், கிறிஸ்தவ நாடுகள் தலையிடும் என்ற அளவில் தான் அவருடைய அறிவு இருந்தது.

அவர் நெடுமாறனையும் வைகோவையும் தான் நம்பினார். தற்போதைய யாழ்ப்பாணிகள் சீமானையும் விக்னேஸ்வரனையும் நம்புகிறார்கள்.

இறுதி யுத்தம் யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தாலோ, சரணடைந்து பிடிக்கப்பட்ட பிரபாகரன், விஜேவீர போல தொலைக்காட்சியில் எழுதிக் கொடுத்து வாசிக்க வைக்கப்பட்டிருந்தாலோ, இதே பிரபாகரனை துரோகி என்று இந்த யாழ்ப்பாணிகள் அவர் சாதியைச் சொல்லி திட்டியிருப்பார்கள்.

முன்பு எழுதியிருந்தேன்.யாழ்ப்பாணிகள் எப்படி காலத்திற்கு காலம் தான் தலைவர்களாகக் கொண்டாடியவர்களை துரோகி என்றது என்பது பற்றி.

பொன்னம்பலத்துக்கு ராமநாதன் துரோகி, அமிர்தலிங்கத்திற்கு பொன்னம்பலம் துரோகி, மாத்தயாவுக்கு அமிர்தலிங்கம் துரோகி, கருணாவிற்கு மாத்தயா துரோகி, பிரபாகரனுக்கு கருணா துரோகி!

இந்த நேரம், பிரபாகரனுக்கு பின்னால் யாரையும் பிரபாகரன் விட்டு வைக்காததால், பின்னால் ஓடிப் போக, இந்த மந்தைகளுக்கு எந்த மேய்ப்பனும் மிச்சம் இருக்கவில்லை.

இன்றைக்கு புலிகளை ஆதரிப்பதாக பாசாங்கு காட்டிக் கொண்டிருப்பவர்கள் எல்லாருமே புலிகளை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள் தான். இலங்கையிலும் சரி, கனடாவிலும் சரி, அரசியல் செய்வோர்கள் புலி ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதன் மூலம் அரசியல் ரீதியாகவும் பணரீதியாகவும் லாபம் அடையலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

புலிகளின் தோல்விக்கான காரணத்தை இன்னமும் இவர்கள் ஆராய முற்படவில்லை. புலிகளை ஆதரித்த தங்கள் முட்டாள்தனம் வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில் மரண பரியந்தம் தங்களை புலி ஆதரவாளர்களாகவே காட்டிக் கொண்டிருப்பார்கள்.

புலிக் கொடி பிடிப்பது முதல் மாவீரர் விளக்கு ஏற்றுவது வரைக்கும், கஞ்சி குடிச்சாறு ஈறாக, இவர்களின் கூத்து நடந்து கொண்டே இருக்கும்.

பிரபாகரன் இறந்ததைத் தெரிந்து கொண்டும், அவருக்கு அஞ்சலி செலுத்தாத பொய்மையை விட வேறு என்ன பொய்மை உண்டு!?

பொய்மையை வாழ்வாகக் கொண்ட சமூகம் எந்த விதத்திலும் மீட்சியோ, விடுதலையோ பெற முடியாது!

முப்பது வருடங்களுக்கு முன்பாக தாயகத்தில் யாழ்ப்பாணத்து பிராங்கன்ஸ்டைன் என்ற ஏடு இட்டோர் இயல் எழுதியிருந்தேன்.

யாழ்ப்பாணிகள் புலிகளில் ஒரு பிராங்கன்ஸ்டைனை உருவாக்குகிறார்கள். அது கடைசியில் அவர்களையும் அழித்து தன்னையும் அழித்துக் கொள்ளும். வழமை போல், யாழ்ப்பாணியம் தனது நலன்களைக் காக்க, புலிகளை மறந்து விட்டு, புதியவர்கள் பின்னால் போகும் என்று எழுதியிருந்தேன்.

அனந்தி முதல் விக்னேஸ்வரன் என்று எத்தனையோ மேய்ப்பர்களை இந்த மந்தைக் கூட்டம் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை என் கண்ணால் காணும் அளவுக்கு எனது தீர்க்கதரிசனம் என் வாழ்நாளிலேயே நிறைவேறித் தான் இருக்கிறது.

ஈழத்தில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்று சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா…உங்கள் எண்ணம் என்ன?

யாழ்ப்பாணிகளுக்கு ஒரு வியாதி இருக்கிறது.

கூசாமல் பொய் சொல்வார்கள்.

வியாதியின் அடுத்த கட்டத்தில், தாங்கள் சொன்ன பொய்யை தாங்களே நம்புவார்கள்.

சரி, சுயமோகம் பிடித்த மனநோய்க் கூட்டம் என்று கவனிக்காமல் விட்டாலும், நோயின் உச்சக் கட்டத்தில், மற்றவர்களும் அதை நம்ப வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.

நீங்கள் மறுத்தால், பிறகென்ன, துரோகி தான்.

படிச்ச யாழ்ப்பாணம் என்பார்கள். அதை வேறு யாரும் சொல்வதில்லை.

இவர்களே தான் சொல்லிக் கொள்வார்கள்.

தலைவரை மண்டேலா, சே என்றெல்லாம் சொல்வார்கள். தென்னாபிரிக்கர்களோ, தென்னமெரிக்கர்களோ அதைச் சொல்வதில்லை.

நான்காவது பெரிய இராணுவத்தை விரட்டினோம் என்பார்கள்.

அடே, இந்த தம்மாத்துண்டு இலங்கை இராணுவத்திடம் அடி வாங்கிய போது, இந்தியா காப்பாற்றவில்லை என்று ஏண்டா புலம்புறீங்கன்னு கேட்டா…!?

தலைவரைக் கண்டு சர்வதேசம் கதறுகிறது, தேர்தலை சர்வதேசம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பார்கள்.

அப்படி எந்தக் காலத்திலும் சர்வதேசம் வந்து சொன்னதுமில்லை.

சர்வதேசம் சதி செய்யாவிட்டால், அண்ணை அடிச்சுப் பறிச்சிருப்பார் என்பார்கள்.

அப்போ, பிறகேன் சர்வதேசம் தீர்வு வாங்கித் தரும் என்று ஜெனிவாவுக்கு காவடி எடுக்கிறீர்கள் என்று கேட்டால்…!?

உலகமே பயங்கரவாதிகள் என்று புலிகளை தடை செய்யும். ஆனால் இவர்கள் ‘இல்லை, அவர்கள் புனிதப் போராட்டம் நடத்தும் விடுதலைப் போராளிகள்’ என்று முரண்டு பிடிப்பார்கள்.

புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்த கனடாவில், நாலு பேர் புலிக் கொடியைப் பிடித்துக் கொண்டு நடந்து போய், தங்களை கனடியப் பிரதமர் பாராளுமன்ற படிக்கட்டில் வந்து சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஒரு சமூகத்தை வேறெங்கு நீங்கள் காண்பீர்கள்? அதை ஒரு வரலாற்று நிகழ்வாக, அந்த எதிர்பார்ப்பை இந்த சமூகத்திற்கு தீத்துகிற நாய்வாலர்கள், ஊளையிடலாளர்களை இந்த சமூகத்தில் மட்டும் தானே இருக்கிறார்கள்.

இவர்களுடைய அரசியலை இவர்கள் எங்கே கற்கிறார்கள்? இதே தமிழ் தேசிய ஊடகங்களில் தானே!? இவர்கள் வாசிக்கிற தமிழ் பேப்பர்கள், ரேடியோக்கள், தொலைக்காட்சிகள், யூரியூப், பேஸ்புக்கிற்கும் அப்பால் இவர்களின் அரசியல் தேடல் என்ன? இவர்களின் வாய்களில் உதிர்கின்ற அரசியல் சொல்லாடல்கள் எல்லாமே இவர்களுக்கு இந்த நாய்வாலர்களால் திணித்து தீத்தப்பட்டவை தானே!

கொஞ்ச நாளாக, காக்கை வன்னியன், எட்டப்பன் வரிசையில் கருணா என்று கொண்டு திரிந்தார்கள். யாரோ வானொலி நாய்வாலரின் உபயம் அது.

சர்வதேசம் சதி செய்யாவிட்டால் தலைவர் ஈழத்தை அடிச்சுப் பறிச்சிருப்பார் என்று நம்புகிற இவர்கள், அந்த சதி செய்த சர்வதேசத்தை 42, 37, 22 நாடுகள் என்றெல்லாம் சொல்வதைக் கண்டிருக்கிறேன்.

அந்த நாடுகள் எவை என்று கேட்டால் பேந்தப் பேந்த முழிப்பார்கள்.

இப்படியாக இவர்களின் வாயில் திணிக்கப்பட்ட வார்த்தை தான்,

இன அழிப்பு.

புலிகள் கோலோச்சிய காலத்தில் நடந்த றுவாண்டா, பொஸ்னியா இன அழிப்பு பற்றி இவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதைப் பற்றி தமிழ்தேசிய ஊடகங்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அங்கே நடப்பது தான் இங்கே நடக்கும் என்றோ, நடக்கிறது என்றோ கூட இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பியதாகக் கூட இல்லை. ஆங்காங்கே ஒரு சில நாய்வாலர்கள் தங்களுக்கும் உலக அரசியல் தெரியுமாம் என்று காட்ட எழுதிக் கொண்டவை தவிர!

தலைவர் அடிச்சுப் பறிப்பார் என்ற நம்பிக்கையில் கலரியில் இருந்து வாய் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இதெல்லாம் சம்பந்தமோ, சாத்தியமோ இல்லாதவையாகத் தான் இருந்தன.

அவ்வாறான இன அழிப்புகளுக்கு தங்களுடைய தார்மீக எதிர்ப்பைக் கூட புலிகளோ, பிரபாகரனோ தெரிவித்ததில்லை.

அழிக்கப்பட்ட இனங்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டு, அவர்களின் துயரங்களின் பங்கு கொள்வதாகக் கூட ஒரு அறிக்கை விட்டதில்லை.

நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த ஆர்மீனியப் படுகொலையை இன அழிப்பாக அங்கீகரித்து, நேட்டோவில் இருக்கும் துருக்கியை பகைக்க வேண்டுமே என்ற அச்சம் கூட இல்லாமல், கனடிய பாராளுமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தீர்மானம் எழுப்பப்பட்டதோ, தற்போதைய அமெரிக்க அரசு அதை இன அழிப்பாக அங்கீகரித்தது பற்றியோ, தமிழ் பொதுவெளியில் உரையாடப்பட்டதில்லை.

வழமை போல, யாராவது நாய் வால் மேதாவி சொல்லியிருந்தால் தவிர! 

நமீபியாவில் ஜேர்மானியர்கள் நடத்தியதும், கொங்கோவில் பெல்ஜியர்கள் நடத்தியதுமான இனப்படுகொலைகள் பற்றி இவர்கள் அறிந்திருப்பதாகவும் தெரியவில்லை.

இனப்படுகொலைகள் எனப்படக் கூடிய, காலனித்துவ நாடுகளில் நடத்தப்பட்ட அடக்குமுறைகளோ, பூர்வகுடிகள் மீது நடத்தப்பட்ட அநீதிகளோ, கத்தோலிக்க திருச்சபை தென்னமெரிக்கா, கனடிய ஆதிக்குடிகள் மீது நடத்திய குற்றங்களோ இவர்களுக்கு அன்னியமானவை. இவை  லங்காசிறியில் வந்தால் தான் தெரிந்திருக்கும்.

ஆர்மீனியப் படுகொலையை அங்கீகரிப்பது வெறும் symbolic நிகழ்வு தான். ஆர்மீனியர்களும் அதே அளவு அழிப்புகளில் ஈடுபட்டார்கள் என்று துருக்கி இன்றும் நியாயப்படுத்தினாலும், அது இன அழிப்பாக ஏற்கப்படுகிறது.

நமீபியா தனது நாட்டில் நடந்த அழிப்புகளுக்கான நட்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்து, ஜேர்மனி அதற்கான நட்ட ஈடுகளை வழங்க முடிவு செய்திருக்கிறது.

இதில் தமிழர்களுக்கு இதெல்லாம் symbolic க்காக இருப்பது பற்றியோ, அதற்கான நட்ட ஈடு கோரப்படுவது பற்றியோ பிரச்சனை இல்லை.

இவர்களுடைய பிரச்சனை, மகிந்த ராஜபக்ஷவை மனோகரா மாதிரி கட்டி இழுத்து வந்து கழுவில் ஏற்ற வேண்டும் என்பதே.

றுவாண்டா, பொஸ்னியா இன அழிப்புகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரி!

இல்லாத பட்சத்தில், ‘எமது மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றதற்கான தண்டனை’ என்று பேஸ்புக்கில் போட்டு கொண்டாடுவதற்கு, மகிந்தவுக்கு கொடிய நோயாவது பிடிக்க வேண்டும் என்பது தான் இவர்களின் வேண்டுதல்!

அதிலும், இவர்கள் தான் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வேண்டும் என்று தலையால் மண் கிண்டியவர்கள் என்பது சம்பந்தமுள்ள கொசுறு! 

இவர்களுடைய இன அழிப்புக் கோரிக்கை, பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனை நம்பிய தங்கள் முட்டாள்தனத்தை மறைக்க, வாங்கிய அடி பலமான நிலையில், அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள, இன்னொரு சண்டியனை சர்வதேச சமூகத்தில் தேடுகின்ற செயற்பாடு தான்.

இதற்கும் அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெறுவதற்கோ, ஏன் அந்த அழிவுக்கான நீதியைப் பெறுவதற்கோ எந்த சம்பந்தம் இல்லை.

கவனமாகப் பார்த்தால், இந்தக்கோரிக்கையை தூக்கிக் கொண்டு திரிபவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் மட்டும் தான். குறிப்பாக கனடாவில் அரசியல் கனவுகளோடு இருப்பவர்களும், ஏதோ நினைவு தினங்களுக்கு பெரிய நோட்டீஸ் அடித்து மண்டபங்களை நிறைத்து கொடியும் கொத்துரொட்டியும் விற்று பையை உருவும் யாவாரிகளும்!

அங்கே வாழ்கிறவர்களில், ஜெனிவாவில் தீர்வு வாங்கித் தருவதாகச் சொல்லி, பாராளுமன்றம் போய் அரசியல் செய்கிறவர்கள் தவிர்ந்து வேறு யாரும் யுத்தம் முடிந்த இத்தனை நாட்களின் பின்னாலும் இன அழிப்பு என்று கூச்சல் போட்டதில்லை.

அவர்களின் பிரச்சனை காணாமல் போன தங்கள் பிள்ளைகள் பற்றியதாகவும், தங்கள் அன்றாட வாழ்வைக் கொண்டு செல்வது பற்றியதுமானதே தவிர, இனப்பிரச்சனை என்பது தீர்வு வாங்கித் தரப் போவதாக கயிறு திரிக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதே!

அவர்களும் இன அழிப்பு என்று மகிந்தவைக் கழுவில் ஏற்ற வேண்டும் என்று பகிரங்கமாக சவால் விடத் துணிச்சல் வர முடியாத அளவுக்கு மடியில் கனங்களுடனும், சுயலாப நரிப்புத்திகளுடனும் உள்ளவர்கள்.

கனடா ஒரு பல்கலாசார நாடு. இங்கே சகல இனத்தவர்களுக்கும் தங்கள் கலாசார, பண்பாட்டு அம்சங்களை பேணவும், வளர்க்கவும் இடம் அளிக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கலாசாரத்தைக் கொண்டாடுவதற்காக, Heritage மாதம் என்று பிரகடனப்படுத்தி, அதைக் கொண்டாட வழிவிடுகிறார்கள். அதற்கு நகரசபை மட்டத்தில் தொடங்கி, மத்திய அரசு வரைக்கும் நிதி உதவி வேறு அளிக்கிறார்கள்.

இதற்குள், கனடிய அரசியல்வாதிகளுக்கு இந்த இனங்களின் வாக்குகள் தேவை. அவர்களோடு ஒட்டிக் கொண்டு தாங்களும் அரசியல்வாதிகளாகும் எண்ணத்தில் இந்த இனங்களின் ‘சமூகத் தலைவர்கள்’ உள்ளார்கள். இவர்கள் அவர்களிடம் ‘இப்படி உசுப்பேத்தினால், இந்த இனம் வாக்களிக்கும்’ என்றவுடன் அவர்களும் அதற்கென்ன? என்று இலகுவாகவே வழி விட்டு விடுகிறார்கள்.

மறுபுறத்தில் தொகையான புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. அவற்றுக்கு வீதிகள் தேவை. அவற்றுக்கு பெயர்கள் தேவை. அதையும் இந்த ஒட்டுண்ணிகள் பயன்படுத்தி, ஊர் பெயர்களை வீதிகளுக்கு சூட்டுகிறார்கள். இங்கே காந்தி, ஜின்னா முதல் சகல சர்வதேச ஊர்கள், மனிதர்கள் பெயர்களில் உண்டு என்ற விபரம் எல்லாம் கனடாவில் வாழ்ந்தாலும் யாழ்ப்பாணக் கிணற்றுக்குள் வாழ்கின்ற யாழ்ப்பாணிகளுக்கு தெரியாது.

இந்த பாரம்பரிய மாதத்தை தானே வாங்கித் தந்ததாக ஒருவரும் மற்றவர்களும் மோதிக் கொண்டு போட்டிக்கு நடத்துகின்ற கூத்து தமிழர்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.

தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது மேசைக்கு பின்னால் தான் வாங்கிக் கொடுத்த வன்னி வீதியின் பெயர்ப் பலகை வருமாறு இன்னொரு அரசியல்வாதி கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்.

இவர்கள் எல்லாருமே ஏதோ ஈழத்தை அடிச்சுப் பறித்த மாதிரி, இந்த சாதனைகளை தாங்களே தனித்து நின்று நிலைநாட்டியதாக இந்த யாழ்ப்பாணிக் கிணற்றுத் தவளைகளுக்கு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்பாக, கனடாவில் உங்கள் நாய்க்கும் முத்திரை வெளியிடக்கூடிய நிலையைப் பயன்படுத்தி, முத்திரை வெளியிட்டு, கனடா அரசு முத்திரை வெளியிட்டதாக இந்த யாழ்ப்பாணிகளை சில அயோக்கியர்கள் சுத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாகத் தானே, தனது அரசியல் கனவுகளுக்காக, புலிகளுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த ஒருவர் தேர்தலில் இறங்குகிறார். வழமை போல, யாழ்ப்பாணிகளும் ஈழத்தை கனடிய பாராளுமன்றங்களில் அடிச்சுப் பறிக்கலாம் என்று, தமிழன் தமிழனுக்கு தான் வோட்டு போட வேணும் என்று, அவருக்கு முண்டு கொடுக்கிறார்கள்.

தேர்தல் சமயமாகப் பார்த்து, இவரது புலி ஆதரவு மாகாண அரசியல்கட்சிக்கு பிரச்சனையாகி விட, இவர் ‘புலிகளை நான் அறியேனே!’ என்று மறுதலித்து அறிக்கை விட்டார்.

பிறகென்ன? தற்கொலைப் போராளிகளுக்கு விளக்கு கொளுத்தி, கொத்து ரொட்டி சாப்பிடும் யாழ்ப்பாணிகளுக்கு  ஒரே இரவில் அவர் துரோகியாகி விட்டார்.

அதாவது, இனத்தை விற்று துரோகம் செய்து விட்டார்! அவர் ‘இல்லை, நான் புலி ஆதரவாளன் தான்’ என்று தற்கொடை செய்திருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு.

துரோகி மாவீரன் ஆக தன் பாவங்களைக் கழுவ வேண்டும். அதற்கு ஒன்ராறியோ மாகாண அரசிடம் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்ல, அவர்களுக்கும் என்ன? மறுத்தால், அதை வைத்து எதிர்க்கட்சிகள் லாபம் அடைந்து விடுமே!?

கொஞ்ச நாளைக்கு முன்னால், ஆப்கானிஸ்தானில் கனடிய இராணுவவீரர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் பெருந்தெருவை Highway of Heroes என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று யாரோ புறப்பட்டார்கள். அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் தேசியவாதம்.

அதெல்லாம் எதற்கு என்று தங்கள் பதவிகளை இழக்க அரசியல்வாதிகள் தயாராக இருக்கவில்லை. ஏகமனதாக எல்லாருமே பெயர் மாற்றினார்கள்.

இப்போது ஆப்கானிஸ்தானில் கனடிய துருப்புகளும் இல்லை. அந்த பெருந்தெருவை அந்தப் பெயரோடு யாரும் அழைப்பதுமில்லை.

இப்படித்தான் ஒன்ராறியோ அரசும் இந்த இன அழிப்பு தீர்மானத்தை அங்கீகரித்தது. 

இது மத்திய அரசின் முடிவு இல்லை என்பதோ, மாகாண அரசின் தீர்மானம் வெறும் symbolic ஆனதோ என்பதெல்லாம் இவர்களுக்கு பிரச்சனை இல்லை.

இதே மாகாண அரசிடம் போய், பாலஸ்தீனர்களின் இன அழிப்பு பற்றி தீர்மானம் போடுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். இதுவரை அவர்களுக்காக பேசிய தேசிய ஜனநாயகக் கட்சி கூட இழுத்தடிக்கும். தங்கள் அரசியல் எதிர்காலத்தை பலி கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.

ஆனால் இது நோகாமல் நொங்கு குடிக்கிற விசயம். தாங்களே அதைச் செய்தோம் என இந்த யாழ்ப்பாணிகளைச் சுத்தலாம்.

பிறகென்ன? இன அழிப்பு தீர்மானத்தைப் பெற்றுத் தந்த பெருமையுடன் இந்த பிரதமர், முதல்வர்கள் எல்லாம் தெருவிழாவில் கொத்துரொட்டி அடிக்க, இந்த யாழ்ப்பாணிகள் ஈழம் கிடைச்ச மகிழ்ச்சியில் புல்லரிப்பார்கள்.

பேஸ்புக்கில் படம் போட்டு, ‘நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்’ தான்!

ஈழத்தை அடிச்சுப் பறிச்ச மாதிரி, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வைத்ததன் மூலம் துரோகி தன் பாவங்கள் கழுவப்பட்டு, தற்போதைய மார்க்கட் நிலவரப்படி மாவீரன் ஆக்கப்பட்டிருக்கிறார்.

இந்த அரசியல்வாதிகளின் விளம்பரங்களுக்காக எச்சில் ஒழுக அலையும் ஊளையிடலாளர்கள், அவர்களை அண்டிப் பிழைப்பு நடத்தும் நாய் வாலர்கள், கனடிய அரசியல் கனவுகளோடு அலையும் ஆட்டிறைச்சி மண கோட் சூட் தமிழர்கள் எல்லாரும் இதை கோட்டையில் கொடியேற்றிய மாதிரி கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், அங்குள்ள மக்களுக்கு எந்தப் பயனாவது கிட்டுமா?

இல்லை!

ஆனால், இங்குள்ள யாழ்ப்பாணிகளுக்கு பெரிய பயன்.

இந்த நினைவு கூரல்களை செய்வதற்கு அரச உதவிப் பணம் நகர சபை முதல் மத்திய அரசு வரைக்கும் கிடைக்கும்.

அரச உதவிப் பணம்.

தமிழர்கள்!

பிறகென்ன? கொண்டாட்டம் தான்.

சங்கம் வைத்திருக்கும் தமிழர்கள் எல்லாம், தாங்கள் இந்த பாரம்பரிய மாதத்தைக் கொண்டாடுவதாக பணம் வாங்கி, மாமன், சித்தப்பன், குஞ்சப்பு, மருமகள் எல்லாம் சங்கப் பதவி வைத்துக் கொண்டு பங்கு போடுவதில் தான் முடிகிறது.

ஒரு இனத்தின் அழிவில் பிழைப்பு நடத்த யாழ்ப்பாணியை விட வேறு யாராலும் இந்த அளவுக்கு முடியாது.

அதைச் சொல்லும் நாங்கள் வழமை போல, ஆயுட்கால துரோகிகள் தான்!

இறுதி யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதை இன அழிப்பு என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியுமா?

கொல்லப்பட்டவர்கள் எல்லாரும் தமிழர்கள் தான். ஆனால் தமிழர்கள் எல்லாரும் கொல்லப்படவில்லை.

இது இனத்தை அழிப்பதற்கான யுத்தம் இல்லை என்று அரசாங்கம் வாதிடக் கூடிய நிலையைத் தான் புலிகள் விட்டுச் சென்றார்கள்.

இரண்டு தடவைகள் ஜே.வி.பி புரட்சிகளின் போது, முழுக்க முழுக்க சிங்களவர்களே கோரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

அதை இன அழிப்பு என்று வரையறுக்க முடியுமா?

இது அரச அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கானது. அதை எந்த அரசு இருந்தாலும் செய்யும். அது இன வேறுபாடு பார்க்காது. சர்வதேசமும் அதில் குற்றம் காணாது.

போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கி, அதற்கான நியாயங்களை அரசுக்கு வழங்கி விட்டு, அரசை மட்டும் குற்றம் சாட்ட முடியாது.

தப்பி வந்தவர்களை வெளியேறாதபடிக்கு புலிகள் சுட்டார்கள். வந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை, நாசிகளின் படுகொலை முகாம்களாக வர்ணித்து, அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அங்கு விபசாரம் நடக்கிறது என்று பிரசாரம் செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டார்கள்.

இடம் பெயர்ந்து முகாமில் இருந்த மக்கள் திரும்பவும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

இதை சில ‘புலன் பெயர்ந்தவர்கள்’ இன அழிப்பு என்கிறார்கள் என்பதற்காக சர்வதேச சமூகத்தையும் அதை இன அழிப்பாக அங்கீகரிக்கும்படி வாதிட முடியாது.

ஆனால், யுத்தக் குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற அடிப்படையில் சர்வதேசத்தை நடவடிக்கை எடுக்கும்படி அணுகியிருக்கலாம்.

இவர்களுடைய நோக்கம் தீர்வு பெறுவதில்லை, தாங்கள் பிழைப்பு நடத்துவதே!

சாத்தியமான விடயங்களாயின், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒன்றை வைத்து, எதுவுமே செய்யத் தேவை இல்லாமல், வாழ்நாள் பூராவும் கூச்சல் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

அது தான் இவர்களுக்கு வேண்டும்.

கேணல் தீபன் உட்பட்டோர் கொல்லப்பட்ட சண்டையில் அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்ட விதத்தில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சாத்தியங்கள் இருந்தன.

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட போராளிகளின் படங்கள் வெட்டி சித்திரவதை செய்தபடி இருந்த நிலையில் வெளியாகியிருந்தன.

இசைப்பிரியாவின் ‘அவல ஓலம்’ வீடியோவாக வந்திருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் சரணடைந்ததற்கான ஆதாரங்களும் சாட்சிகளும் இருந்தன.

புலிகள் தாக்குதல் நடத்தியதற்கான பதில் தாக்குதலாக இருந்தாலும், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இழுத்துச் செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தாலும், செஞ்சோலை மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு சிறார்கள் கொல்லப்பட்டார்கள்.

இவை பற்றிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சரியான ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா?

இதுவரையில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது கூட, தமிழர் தரப்பால் ஆவணப்படுத்தப்பட்டதில்லை.

சனல் 4க்கு வீடியோக்களைக் கொடுப்பதும், கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள் என்று பேஸ்புக்கில் கணக்கு விடுவதும் சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லை.

கிளி பாதரைக் கொலை செய்து அரசின் மேல் பழி போட்டால், சர்வதேசம் தலையிடும் என்ற புலிகளின் சிந்தனை மாதிரி…

வீதியில் நின்று புலிக்கொடி பிடித்தால், சர்வதேசம் வந்து விசாரணை செய்யும் என்று இந்த யாழ்ப்பாணிகளைத் தவிர வேறு யார் நம்புவார்கள்?

சர்வதேச விசாரணை என்பது இரு பக்கம் கூரான வாள். எங்களையும் வெட்டும்.

சர்வதேச விசாரணையின் போது, அரசின் நடவடிக்கைகள் மட்டும் அல்ல,

புலிகளின் நடவடிக்கைகளும் வெளிவரும்.

அதற்கு இவர்கள் தயாராக இல்லை.

ஆனால், இன அழிப்பு என்று கூச்சல் போட்டால் சர்வதேசம் ஓடி வந்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு.

அங்கே அரசியல் தற்போது பாராளுமன்றக் கதிரை அரசியலாகி விட்டது. அது தீர்வுக்கான அரசியல் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிராம சபைத் தேர்தல் நேரங்களில் கூட அவ்வாறான மாயை தான் உருவாக்கப்படுகிறது.

அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அரசியல் கைதிகள் விடுதலையோ, காணாமல் போனவர்களுக்கான உத்தியோகபூர்வமான அத்தாட்சிகளைப் பெற்றுக் கொடுப்பதோ அவசியமானதாக இல்லை. உசுப்பேத்தினால் இந்த முட்டாள் கூட்டம் எடுபடும் என்பது தெரியும். புலன் பெயர்ந்த கூட்டம் வெளிநாட்டில் இருந்தபடி தாங்கள் நினைத்த மாதிரி அரசியல் செய்ய வேண்டும் என்ற நினைப்பில் காசை அள்ளி வீசும் என்பதும் தெரியும்.

தீபாவளி தீர்வு, ஜெனிவாவில் பொதி என்று இந்த யாழ்ப்பாணிகளை எந்தக் காலத்திற்கும் ஏமாற்றலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

கனடாவில் அரசியல் கனவுகளில் திளைப்போர்கள் இந்த ‘புலன் பெயர்ந்த’ கூட்டம் கேட்க விரும்பும் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இனத்தில் அழிவில் முழு இனமுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ‘இனச் சுத்திகரிப்பு’ என்று சொல்ல விரும்பாத யாழ்ப்பாணிகள், இன அழிப்பு என்று சர்வதேசத்திற்கு முன்னால் கூச்சல் போடுவது, ஓநாய்க் கூச்சல் போட்ட இடையன் கதை தான்.

இந்த இன அழிப்பு கூச்சல் போடுகிறவர்கள் எல்லாம், மாவிலாறில் தொடங்கி, மன்னார், மடு என்றெல்லாம் இராணுவம் வந்த போது, மக்கள் இறந்தது பற்றி எந்த அக்கறையும் கொண்டிருந்ததில்லை.

கிளிநொச்சி வந்த போதும், ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறாங்கள்’ என்று தாங்கள் சொன்ன பொய்யை தாங்களே நம்பிக் கொண்டிருந்தார்கள்.

புலன் பெயர்ந்த நாடுகளில் கொடி பிடித்தவர்கள் மக்களைக் காக்குமாறு கோரினார்களா?

புலிகளை அங்கீகரிக்குமாறும் பிரபாகரனே எங்கள் தலைவன் என்றும் தானே கூச்சல் போட்டார்கள்.

அந்த நேரங்களில் எல்லாம் தாயகம் இணையத் தளத்தில், மக்களின் அழிவை முதன்மைப்படுத்துங்கள், அதுதான் சர்வதேசத்தின் கவனத்தை பெற வைக்கும் என்று எழுதினேன்.

கேணல் தீபன் போன்றோர் கொல்லப்பட்ட கல்மடுக் குளம்  வந்த பின்னால் தான் இவர்கள் மக்களின் உயிர் பற்றி அக்கறை கொண்டார்கள்.

அப்போது கூட, மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளை இவர்கள் கேட்டதில்லை.

தலைமையைக் காப்பாற்ற, மனிதக் கேடயங்களாக மக்களைப் பலி கொடுப்பது தான் இவர்களின் நோக்கமே.

முழு இனமும் அழிந்து, ஒற்றைப் பிரபாகரன் தப்பியிருந்தால், ‘ஏலுமா? ஏலாது! ஏலுமெண்டா பண்ணிப் பார்!’ என்று தெருவில் நடனமாடியிருப்பார்களே ஒழிய, மக்கள் அழிந்தது பற்றி எந்த கவலையும் கொண்டிருக்க மாட்டார்கள்.

இனத்தை அழிக்க எதிரிக்கு வழி செய்து கொடுத்த மானிடத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள் இவர்கள்.

எனது பார்வையில் அரசின் இன அழிப்பு ஆட்களைக் கொல்வதில் இல்லை. இவர்களுடைய வெளிநாட்டுக் கனவுகளுக்கு வழி வகுப்பதில் தான் இருக்கிறது.

இந்த யுத்தத்தைச் சாட்டி நாட்டை விட்டு வெளியேற விட்டது, மிகத் தந்திரமான இன அழிப்பு.

ஒரு புறம் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதேசங்களின் உறுப்பினர் எண்ணிக்கை, சனத்தொகைக் கணிப்பீட்டின்படி குறைக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம், அரசுக்கு அன்னிய செலாவணியைத் தரும் பெரும் cash cow.

இன்றைக்கும் கனடா கதவைத் திறந்தால், முழு யாழ்ப்பாணிகளும், கனடாவின் சிறிய மாகாணமான பிரின்ஸ் எட்வேட் தீவில் குடியேறி ஈழம் கேட்பார்கள்.

பிறகு என்ன? இந்த சீரிய சிந்தனையை வழங்கிய மூத்த எழுத்தாளரைப் பார்த்து சர்வதேசம் திணறிக் கொண்டிருந்திருக்கும்.

நாலு பேர் அரச உதவிப் பணத்தில் கொடுக்கும் இலக்கிய விருதும்  ஒரு நாட்டின், ஈழத்து விருதாக உயர்வடைந்திருக்கும்.

தமிழர்களை கொன்றது இன அழிப்பு என்றால்…

ஒரு இனத்தில் அரசியல் தலைமைகளை அழித்து, அதன் ஒரு தலைமுறையைப் பலி கொடுத்து, அடுத்த பல தலைமுறைகளுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாதபடிக்கு ஒரு அயோக்கிய அரசியல்வாதிக் கூட்டத்தையும், அந்த அழிவில் கூசாமல் பிழைப்பு நடத்தும் புலன் பெயர்ந்த  திருட்டுக் கூட்டத்தையும் விட்டுச் சென்றதை விட, மோசமான இன அழிப்பு என்னவாக இருக்கும்?

ஐநாவின் இன அழிப்பிற்கான சாசனம், complicity in genocide shall be punishable என்கிறது.

இந்த இன அழிப்பிற்கு உடந்தையாக, மக்களைப் பலி கொடுத்து புலிகளை காப்பாற்ற முயன்ற இவர்கள் எல்லோருமே இன அழிப்பு குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

பிரபாகரனை தனிப்பட்ட ரீதியில் கிண்டல் செய்வது பற்றி…

தாயகம் வெளிவந்த காலங்களில் பிரபாகரன் வெறும் தலைவர் தான். பிரதித் தலைவர் என்ற மாத்தயா தான் எல்லாமாகவே இருந்தார். தாயகத்தை தடை செய்யும்படி வந்த மேலிடத்துக் கட்டளை கூட மாத்தயாவிடம் இருந்து வந்ததாகத் தான் சொன்னார்கள்.

அப்போதெல்லாம் பிரபாகரன் ஒரு பொருட்டாகவே யாருக்கும் இருந்ததில்லை. பிறகு மாத்தயாவும் துரோகியாகி, தாயகம் நின்று போய் நானும் தொழிற்சங்க வேலைகளில் மூழ்கி, திடீரென்று பார்த்தால், பிரபாகரன் தேசியத் தலைவராகி விட்டிருந்தார்.

இதென்னடா, நாங்கள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலே, ஊருலகத்தில் இத்தனை அநியாயங்கள் நடக்குதே என்று பார்த்தால், ஒரு பாசிஸ்ட் தேசியத் தலைவரானதன் பின்னணி புரிந்தது. நீண்ட காலமாக அவரைத் தேசிக்காய் தலையராக்கிய சூத்திரதாரிகள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இன்னமும் முடியவில்லை.

தேசியம் என்பதன் கருத்து யாழ்ப்பாணிகளுக்கோ, ஏன் பிரபாகரனுக்கோ விளங்கியிருக்க நியாயமில்லை. பாலசிங்கம் தன் பாட்டில் சொல்லிக் கொண்டிருந்ததை மற்றவர்கள் வாசிக்க வேண்டும் என்றே அன்றி, தாங்கள் வாசிக்க வேண்டும் என்று, எல்லாம் தெரிந்த யாழ்ப்பாணிகள் நினைத்ததில்லை.

பொற்காசுப் புகழேந்திகளின் புண்ணியத்தில், தேசியத் தலைவன் சூரியதேவன் ஆகி பிறகு முருகனின் அவதாரமாகவே ஆக்கப்பட்டார்.

சூரியதேவன் என்று வர்ணிக்கப்பட்ட, தற்கொலைப் போராளிகளை உருவாக்கிய ஜப்பானிய சக்கரவர்த்தி பற்றியோ, அவருக்கு என்ன நடந்தது என்பதையோ யாழ்ப்பாணிகள் அறிந்திருக்க நியாயமில்லைத் தான். வரலாற்றில் இப்படி எத்தனையோ Sun Godகள் உதித்து மறைந்திருக்கிறார்கள்.

சிந்தனையை யாழ்ப்பாணக் கிணற்றுக்குள் வைத்துக் கொண்டு, பிரஞ்சமே தன்னைச் சுற்றி சுழல்கிறது என நினைக்கும் யாழ்ப்பாணிக்கு பிரபாகரன் சூரியதேவன் ஆனதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

ஜனநாயக அரசியலில் நுழையப் பயந்த தன்னுடைய தன்னம்பிக்கையீனம், கல்வி கற்காததால் வரும் தாழ்வு மனப்பான்மை, துப்பாக்கியை இறுகப் பிடித்த பயம் நிறைந்த கோழைத் தனங்களுக்கும் அப்பால், பிரபாகரன் பற்றிய பிம்பங்கள் அவரை வைத்து பிழைப்பு நடத்த முயன்ற யாழ்ப்பாணிகளின் பில்டப் மட்டும் தான்.

அவரும் தன்னை பப்பாசி மரத்தில் ஏற்றிய யாழ்ப்பாணிகள் பற்றி தெரிந்து கொள்ளாமல், இதையெல்லாம் உண்மை என்றே நம்பத் தொடங்கி விட்டிருந்தார். தன்னையே அறிந்து கொள்ளல் தான் அறிவின் உச்சம் என்றால், தன்னைப் பற்றிய பொய்களை நம்புதலை என்ன என்பது?

என்னைப் பொறுத்தவரை பிரபாகரன் மூன்று ஆளுமைகளின் கலவை.

முதலாவது அவர் ஒரு யுத்தப் பிரபு என தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட Warlord.

பாகிஸ்தானில் நிலை கொண்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க, ஆப்கானிஸ்தானை குளிர்யுத்த கால ரஷ்யா ஆக்கிரமித்து தனது சார்பு அரசுகளை நிறுவிய போது, அமெரிக்கர்களால் மானிட நேச விடுதலைப் போராளிகளாக சித்தரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள் முஜாகிதீன்கள் எனப்படும் Holy warriors.

யாழ்ப்பாணிகளின் புனிதப் போராளிகள் மாதிரி!

ரஷ்யா வெளியேறிய பின்னால், காபூலைக் கைப்பற்ற முயன்ற இந்தக் குழுக்கள் எல்லாமே ஒவ்வொரு வோர்லோட்களின் கட்டுப்பாட்டில் இருந்தவைதான். தாஜிக் இன Massoud, உஸ்பெக் இன Doustum, ஈரான் தொடர்புள்ள ஹேமக்தியார் என்று ஆப்கானின் பல்வேறு இனப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அங்கிருந்து வந்து, காபூலைச்  முற்றுகையிட்டு, அதைக் கைப்பற்ற போட்டிக்கு ஷெல் அடித்து மரணங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

லெபனானில் உள்நாட்டு யுத்தம் நடந்த காலத்தில், கிறிஸ்தவ, முஸ்லிம் குழுக்கள் தங்கள் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

சோமாலியாவில் இராணுவ சர்வாதிகாரி சியட் பாரின் ஆட்சியைக் கவிழ்த்த பின்னர் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் பல்வேறு கிளான்களின் முக்கியஸ்தர்களான பாரா அய்டீட், அலி மாஹ்டி என்றெல்லாம் மொகாடிசுவில் தங்கள் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தங்களுக்குள் மோதி அழிவுகளை ஏற்படுத்தினார்கள்.

இவர்கள் எல்லாம் மக்களின் விடுதலைக்கானவர்களோ, ஜனநாயக வாதிகளோ இல்லை. அதிகார வெற்றிடங்களை நிரப்ப, ஆயுதக்குழுக்களாக, பல்வேறு சக்திகளின் அடியாட்களாகவோ, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டவர்களாகவோ இருந்தவர்கள். தங்கள் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, அரச படைகளை உள்ளே வரவிடாமலோ, மற்றக் குழுக்களோடு பெரும் சண்டையிட்டுக் கொண்டோ இருந்தார்கள்.

நாய் வாலர்கள் நீட்டி முழக்கிய மாதிரி, சமாந்தர அரசாங்க கதைகள் தான்.

இவர்கள் எல்லாம் யுத்தப் பிரபுகள் தான். ஆனால் இவர்களில் பலர், பல்வேறு அழுத்தங்களுடன் அமைக்கப்பட்ட ஆட்சிகளில் பதவிகளை வகித்தவர்கள். எல்லாருமே தலைமைப்பதவிக்காக அடிபட்டுக்கொள்ளாமல், வெவ்வேறு பதவிகளை வகித்தவர்கள். தாங்கள் எதிர்த்து சண்டையிட்டவர்களோடு எல்லாம் சேர்ந்து அமைந்த அரசில் பங்கேற்றிருக்கிறார்கள். அவ்வப்போது தேர்தல்களைச் சந்தித்தவர்கள்.

லெபனானின் மிசேல் அவூன் இப்போது ஜனாதிபதியாக இருக்கிறார். தான் எதிர்த்துச் சண்டையிட்ட இஸ்லாமியக் குழுக்களுடனும், சிரியாவுடனும் தற்போது நட்புறவைப் பேணிக் கொண்டிருக்கிறார்.

ஆப்கான் warlord கள் பலர் அரசுகளில் அமைச்சர்களாக இருந்தார்கள்.

பாரா அய்டீட் ஐ.நா படைகளுக்கு எதிராகவும் சண்டையிட்டு, ஹெலிகொப்டரில் வந்த அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டு பகிரங்கமாக இழுத்துச் செல்லப்பட்ட தாக்குதல்களின்போது பொறுப்பானவராக இருந்து, காயப்பட்டு பின்னர் இறந்தவர்.

சோமாலியர்கள் போன்றே நம்மவர்களும் கொல்லப்பட்ட இராணுவத்தினரை வைத்து சீன் காட்டியவர்களே.

பிரபாகரனும் இவர்களைப் போன்று ஒரு பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, சண்டையிட்டுக் கொண்டிருந்தவர். அந்தப் பிரதேசங்களில் மனித உரிமைகள் பற்றி அக்கறை இல்லாமல், ஜனநாயக வழிகளுக்கு திரும்பும் நோக்கம் இல்லாமல், தன்னுடைய நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவைகள் இல்லாமல் (accountability), கொலை அரசியல் நடத்தியவர்.

இவர்களைப் போல, எதிரிகளுடனான கூட்டு அரசாங்கத்தில் பதவியேற்கவோ, தேர்தல்களை எதிர்கொள்ளவோ அவருக்கு துணிச்சல் இருந்ததில்லை. மாகாண சபையைக் குழப்பியடித்ததே மற்றவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது, தான் ஏகபிரதிநிதியாக வேண்டும் என்பதற்காகவே!

இன்றைக்கு யாழ்ப்பாணிகள் அதே 13ம் திருத்தத்திற்காக இந்தியாவிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது இவர் ஒரு மாபியா Don போன்றவர்.

சட்டவிரோதமான செயல்களைச் செய்து கொண்டு, சட்டத்தை நிலைநாட்ட முயலும் பொலிசார், சட்டத்தரணிகள், நீதியரசர்கள் வரைக்கும் கொன்றவர்கள் இத்தாலிய மாபியாக்கள். அவர்களுடைய Code of conduct முழுமையான விசுவாசத்தை நிர்ப்பந்திப்பது. Code of silence எனப்படும் பிடிபடும் போது எதையும் சொல்லக் கூடாது என்ற விதி புலிகளிடம் சயனைட் கடிக்கும் அளவுக்கு வளர்க்கப்பட்டிருந்தது.

தங்களுடன் இருந்து முரண்படுவோரை துரோகிகளாக்கி, கொடுரமான முறையில் கொல்வது, போட்டிக் குழுத் தலைவர்களைக் கொல்வது, கப்பம் வாங்குவது, சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை முதலீடு செய்து வர்த்தகங்களை கையில் எடுப்பது, அதிகாரத்தை லஞ்சம், பெண்கள் என்றெல்லாம் கொடுத்து கைக்குள் வைத்துக் கொள்வது என்ற மாபியாவுக்கான சகல இயல்புகளும் புலிகளுக்கு இருந்தன.

போராட்டத்திற்கு பணம் என்ற பெயரில் இருபது வீத கமிஷன் அடிப்படையில் கப்பம் வாங்கியதும், பணம் தர மறுத்தவர்களுக்கு பிரபாகரனுக்கு கடிதம் எழுதித் தரும்படி மிரட்டியதும், பலரும் வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்ததும், பிரான்சில் கடத்திப் பணம் பறித்ததும் யாழ்ப்பாணிகள் வேலி கட்டி, நடக்காதது போல நடித்து, மறைக்க விரும்பும் உண்மைகள்.

இதையெல்லாம் புலிகள் வெளிநாட்டாரிடமாக செய்தார்கள்? இதே யாழ்ப்பாணிகளிடம் தானே?

இன்றைக்கும் இவ்வாறு தங்களிடம் பணம் பறித்தவர்களை யாரென்று பகிரங்கமாக எதிர்கொள்ள வக்கில்லாமல், தேசியச் சொத்துக்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மொட்டையாக அவ்வப்போது புலம்பிக் கொண்டே, இந்த யாழ்ப்பாணிகள், தலைவர் வரும் போது ஒப்படைப்போம் என்று கதை விடுகிற அதே திருடர்களை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்று கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரனின் பாரம்பரியம் கள்ளக்கடத்தல் பின்னணி தான் என்பதால் அந்த நடவடிக்கைகளுடனும் கொள்கைகளுடனும் அவர் பரிச்சயமாக இருந்ததில் ஆச்சரியமில்லை. இயக்கத்தில் சேர்க்கப்படுவோர் கொள்கைக்கு விசுவாசமாக இல்லாமல், பிரபாகரனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கோரும் அங்கத்துவ விண்ணப்பப் பத்திரம் ஒன்றை எங்கள் ஊருக்கு புலிக்கு ஆட்சேர்க்க வந்தவர்கள் என் நண்பர்களுக்கு கொடுத்து நான் வாசித்திருந்தேன். இதெல்லாம் மாபியா தலைவனின் மோதிரத்தை முத்தமிடும் மரண முத்தம் தான்.

இந்த இயல்பினால் தான் யாழ்ப்பாணிகளுக்கு புலிகள் We have an offer you can’t refuse என்று முடித்திருந்தார்கள்.

புலி செய்த எதையும் நிராகரிக்க முடியாமல், நியாயப்படுத்தும் அளவுக்கு!

அடுத்தது, Cult leader.

எழுபதுகளில் மித்திரன் வாரமலர் வாசித்தவர்கள் ஜி.நேசனின் கதைகளையும், டாக்டர் லலிதா பதில்களையும் தாண்டி வாசித்திருந்தால், ஜிம் ஜோன்ஸ் பற்றி வாசித்திருக்கக் கூடும். அமெரிக்காவில் மதக் குழு ஒன்றை உருவாக்கி, கயானாவில் காட்டுக்குள் ஆச்சிரமம் அமைத்திருந்த இவரையும் இவரைப் பின்பற்றியவர்களையும் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்க சென்ற அமெரிக்க மக்களவை உறுப்பினரை கொலை செய்வித்த பின்னால், தன்னைப் பின்பற்றுபவர்களில் 300க்கு மேற்பட்ட சிறுவர்கள் உட்பட தொளாயிரம் பேரை தற்கொலை செய்ய வைத்தவர். தான் தலையில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சுவிட்சலாந்தில் சூரியக் கோவில் என்ற மத அமைப்பும் இவ்வாறு தற்கொலைகளை 90 களில் செய்திருந்தது.

பிரபாகரனும் இவ்வாறாக ராஜ்னீஷ் முதல் நித்தியானந்தா வரையிலான, தன்னை முழுமையாக நம்பி உயிரைக் கொடுக்க வைக்கும் அளவுக்கு உசுப்பேத்துகின்ற ஒரு cult தலைவர் தான். இது அவருடைய திறமை என்பதை விட, அவரைப் பின்பற்றுகிறவர்களின் அறிவுப் பெருக்கைத் தான் வெளிக்காட்டும்.

புலிகள் இயக்கமும் ஒரு கல்ட் அமைப்பிற்கான இயல்புகளையும் கொண்டிருந்தது. கழுத்தில் சயனைட் வைத்திருப்பதும், கரும்புலியாக தற்கொலை செய்வதும், தாக்குதல்களுக்கு முதல் தலைவருடன் உணவு அருந்துவதை பெருமையாக கருதுவதும் தனிமனித வழிபாடுகளின் வெளிப்பாடுகள் தான்.

இதன் உச்சமாகத் தான் முருகப் பெருமானின் அவதாரம் என்ற கூத்துக்கள் இருந்தன.

இந்த மூன்று ஆளுமைகளின் கலவை தான் பிரபாகரன்.

யாழ்ப்பாணி நாய்வாலர்கள் அவரை தேசியத் தலைவர் என்றோ, உலகிற்கே கொரில்லா தாக்குதலைக் கற்பித்த வீரன் என்றோ வர்ணிக்கிறார்கள், உலகமே அவரைக் கண்டு கதறுகிறது என்கிறார்கள் என்பதற்காக சர்வதேசம் அவ்வாறு கருதிக் கொண்டதில்லை. சர்வதேச ஊடகங்கள் பிரபாகரனை ruthless leader என்று தான் வர்ணித்திருந்தன. இரக்கமோ, கருணையோ காட்டாதவர். படுகொலை என்பதையே அரசியல் என்று நினைத்திருந்தவர்.

அனிதா பிரதாப்பிற்கு அவர் விடுதலை வீரன் என்றாலும், சர்வதேச அரசியலில் அவர் பயங்கரவாதி தான்.

ஈரைப் பேனாக்கி, பேயைப் பெருமாளாக்கியது யாழ்ப்பாணிகள் தான்.

கடையொன்றில் சந்தித்த ஒருவர் சொன்ன விடயம் தான் தேசிக்காய் தலையர் என்பது. ரேடியோவில் தேசியத் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டு, உண்மையாகச் சொன்னாரா, கிண்டலாக சொன்னாரா என்று தெரியாமல் பயன்படுத்திய வார்த்தை இது. இது பிரபாகரன் இருந்த காலத்திலேயே பயன்படுத்துகிற வார்த்தை.

ஆனால் அவரைத் தேசிக்காய் தலையர் என்றதும் புலி ஆதரவாளர்களுக்கு மனம் புண்படுகிறதாம்.

பிரபாகரன் போட்டுத் தள்ளிய இத்தனை ஆயிரம் பேருடைய குடும்பத்தினருக்கும், இவர்கள் துரோகி என்பதால், மனம் புண்படக் கூடாது. ஆனால் வெறும் தேசிக்காய் தலைவர் என்பதால் மனம் புண்படுகிறது.

எட்டாம் வகுப்பு படித்த பிரபாகரன் பேராசிரியர் ஒருவரை நடுத்தெருவில் வைத்து கொலை செய்விக்கிறார். அதுவும் பெண்!

கல்லூரி அதிபர்களைக் கொல்கிறார்.

யாழ்ப்பாணிகளுக்கு துரோகி ஒழிப்பு என்பது இடியப்பமும் ஆட்டிறைச்சியும் மாதிரி. என்றைக்கும் சலிக்காது!

அதே எட்டாம் வகுப்பு அறிவோடு ஒரு பேராசிரியருக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கிறார்.

உலகின் புகழ் பெற்ற பல்லைக்கழகங்களில் கல்வி கற்று, கற்பித்து, உலகப் புகழ் பெற்ற பேராசிரியரை பிரபாகரன் அழிந்த பின்னாலும், அவர் வழங்கிய மாமனிதர் பட்டத்தின் மூலமாகத் தான் அவரை இந்த யாழ்ப்பாணிச் சமூகம் ஒரு பெரிய மனிதர் ஆக்குகிறது. இவர் பட்டம் கொடுத்ததால் தான் அவருக்கு பெருமை வந்தது என்பது மாதிரி!

யாழ்ப்பாணிகளின் அளவுகோலின்படி நான் படித்தவன் இல்லை. பல்கலைக்கழக பட்ட சான்றிதழ்கள் இல்லாதவன்.

என்னுடைய பெற்றோர் படித்தவர்களும் இல்லை.

ஆனால், மனிதர்களைப் பற்றிய என்னுடைய மதிப்பீடு அவர்களின் படிப்பை வைத்து ஒரு போதும் இருந்ததில்லை.

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்ததால், படித்த முட்டாள்களை நிறையவே பார்த்திருக்கிறேன். கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் உட்பட! இன்றைக்கும் பார்க்கிறேன்.

படிக்காமலே தலைவர்களான காமராஜர், கக்கன், ஏன் எம்.ஜி.ஆர் என்று, அரசியலை சரியான வழியில், சரியான ஆட்களை வைத்து கையாண்டவர்கள் இருக்கிறார்கள்.

என்னுடைய பிரச்சனை பிரபாகரனின் படிப்பு பற்றியதில்லை. பாவம், அவர் ஒரு சூழ்நிலையின் கைதி!

முக்கியமாக, படிக்க முடியாமல் போனவர்கள் மீது எனக்கு நிறைய அனுதாபம் இருக்கும். என்னுடன் மூன்றாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் வகுப்பில் மூன்றாம் பிள்ளையாக வரும் அளவுக்கு கெட்டிக்காரன். அழகான எழுத்துக்கள் அவனுடையவை. அவனுடைய பேரன் தன்னுடைய பிள்ளைகளைப் படிப்பித்திருந்தார். ஆனால், அந்தப் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்கவில்லை. அவன் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு மேசன் கூலியாக வேலைக்குப் போனான். நான் படித்த காலங்களில்.

அவனைக் காணும் போதெல்லாம் எனக்கு கவலையாக இருக்கும்.

என்னுடைய பிரச்சனை அவரை பப்பாசி மரத்தில் புகழ்ந்தேத்திய இந்த யாழ்ப்பாணிச் சமூகம் பற்றியது தான்.

தன்னைப் படித்த யாழ்ப்பாணம் என்று சொல்லிப் பெருமிதப்படுகிற ஒரு சமூகம்…

தன்னுடைய கல்விப் பெருமையில் பொறாமை கொண்டு தான் சிங்களவர்கள் நூலகத்தை எரித்தார்கள், இன அழிப்பு செய்தார்கள் என்று சொல்கிறது ஒரு சமூகம்…

பல்கலைக்கழ அனுமதியில் அநீதி இழைக்கப்பட்டதால் தான் இந்த இனத்தைப் பணயம் வைத்து போராட்டம் நடத்தினோம் என்று சொல்கிற ஒரு சமூகம்…

விசயம் தெரிந்தவன் எதையாவது சொன்னாலே, ‘உனக்கு கனக்க தெரியுமோ? நீ என்ன பெரிய படிச்ச ஆளோ?’ என்று கேட்கிற சமூகம்…

துப்பாக்கி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக, ஒரு எட்டாம் வகுப்பு படித்தவரை தேசியத் தலைவர், உலகத்தையே கதற வைத்தார் என்று சொல்வதை கேட்டு எப்படி மெளனமாக கடக்க முடியும்?

ஒரு இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற ஒருவருக்கு எட்டாம் வகுப்பு படிப்பே போதும் என்று நினைத்தால், பல்கலைக்கழகத்திற்கு எல்லாம் எதற்காக போக வேண்டும்? எதற்காக அதன் அனுமதிக்காக இனத்தைப் பலி கொடுக்க வேண்டும்?

யாழ்ப்பாணிகளின் விசுவாசம் பிரபாகரனுக்கானது இல்லை. அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கானது.

அந்த துப்பாக்கியை எவர் வைத்திருந்தாலும், அவர்களுக்கானது.

ஒவ்வொரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த கிட்டுவோ, மாத்தயாவோ அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தால், யாழ்ப்பாணிகளுக்கு அவர்கள் தான் இன்றைக்கு சூரியதேவர்கள். அவர்களும் பிரபாகரனை துரோகி என்று போட்டுத் தள்ளியிருந்தால், பிரபாகரன் வெறும் எட்டாம் வகுப்புக்காரராகவே முடிந்திருப்பார்.

கிட்டுவின் கையில் துப்பாக்கி இருந்த போது, உயிரோடு எரியும் நெருப்பில் தூக்கி எறிந்த போது, கோலா கொடுத்தார்கள்.

மாத்தயாவின் கையில் துப்பாக்கி இருந்த போது, வதைமுகாம்களில் சித்திரவதை செய்த போது, கொடுத்த மண்முடிப்புகளை பெருமையோடு பெற்றுக் கொண்டார்கள்.

பிரபாகரன் கையில் துப்பாக்கி வந்த போது, கிட்டு ஓரங்கட்டப்பட்ட போதும், மாத்தயா சாரத்தோடு இழுத்துச் செல்லப்பட்ட போதும், யாழ்ப்பாணிகள் வாயே திறக்கவில்லை.

நான் அடிக்கடி கேட்பது போல, துப்பாக்கி இல்லாத பிரபாகரனால் தேசியத் தலைவராக வந்திருக்க முடியுமா? அதற்கான ஆளுமை அவருக்கு இருந்ததா?

இதே யாழ்ப்பாணிகள் அவரை இராணுவத்திடம் காட்டிக் கொடுத்திருக்க மாட்டார்களா?

நான் சொன்னது போல, இறுதி யுத்தம் யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தாலோ, வெள்ளைக்கொடியோடு கைது செய்யப்பட்ட பிரபாகரன் விஜேவீர போல, தொலைக்காட்சியில் எழுதிக் கொடுத்ததை வாசிக்க வைக்கப்பட்டிருந்தாலோ,

அவரது படிப்பை மட்டுமன்றி, அவரது சாதியையும் சேர்த்து திட்டக் கூடியவர்கள் தான் இந்த யாழ்ப்பாணிகள்.

சூரியதேவன், முருகப் பெருமான் என்று வாழும் போதே கௌரவித்த யாழ்ப்பாணிகள் இன்றைக்கு ஒரு விளக்கு கொளுத்தாமல், நடித்துக் கொண்டிருக்கிறார்களே!

இது தான் யாழ்ப்பாணியின் உண்மையான முகம். தன்னுடைய சுயநலன்களுக்காக, உண்மையை மறைத்து பொய்யைச் சொல்லி அந்த பொய்யை நம்பும் இயல்பு.

அந்த மனிதனின் மரணத்தை  ஏற்றுக் கொள்வது தனது சுயநலத்திற்கு பாதிப்பு என்ற காரணத்திற்காக, அதையே மறுத்து, தன்னுடைய மதநம்பிக்கைகளின் படியான சடங்குகளைக் கூட செய்யாமல், பொய்மையை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அதை வைத்துப் பிழைப்பு நடத்தலாம், அரசியல் நடத்தலாம், திருடிய சொத்துக்களை தொடர்ந்தும் அனுபவிக்கலாம் என்று மரணத்தை மறுதலித்துக் கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு தலைவரை நம்பி இனமாக அழிந்ததை ஏற்றுக் கொண்டால், தங்களுடைய தவறுகளை ஏற்றுக் கொண்டதாகி விடும் என்பதற்காக!

எட்டாம் வகுப்பு படித்த ஒருவரைத் தேசியத் தலைவர் என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்பினால், முள்ளிவாய்க்காலில் தான் முடியும் என்பதை, தன்னைப் படித்த சமூகம் என்று பீற்றிக் கொள்ளும் இந்த சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

மறுபுறத்தில், அவரைப் புனிதராக்கிக் கொண்டிருக்கிறது. அவரைப் புனிதராக்குவதன் மூலம், அவர் நடத்திய போராட்டத்தை புனிதப் போராட்டம் என்பதன் மூலம், தாங்கள் புனிதர்கள் என்றே இவர்கள் மற்றவர்களுக்கு காட்ட முனைகிறார்கள்.

யாழ்ப்பாணிகளின் புண்ணியத்தில் பிரபாகரன் குவாண்டம் நிலைக்கு வந்து விட்டார். அவர் ஷ்ரோடிங்கரின் பூனை மாதிரி, He is being dead and alive, at the same time!

‘யாழ்ப்பாணி’ என்ற பதத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள்; அதனை எவ்வாறு அர்த்தப்படுத்துகிறீர்கள். அது ஏன்?

தொழிற்சங்கப் போராட்டத்தின் போது என்னுடைய தளபதிகளில் ஒருவன் எலியாஸ். என்னுடன் வேலை செய்த கிறிஸ்தவ எதியோப்பிய நண்பர்களுக்குள் ஒரேயொரு இஸ்லாமியன். அவனது தந்தை சோமாலியர். தாய், சகோதரர்களுடன் எதியோப்பியாவில் பிறந்து வளர்ந்தவன். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மாதிரி, அவனது தந்தைக்கு சென்ற இடமெல்லாம் மனைவிகள் போலும். அவனது தந்தைக்கு பிறந்த இன்னொரு சகோதரன் ஜிபுத்தி நாட்டவனும் எங்களோடு வேலை செய்தான். ஒரு தடவை, தனது தந்தையுடன் எவ்வளவோ காலத்தின் பின் தொலைபேசியில் பேசியதை மகிழ்ச்சியோடு என்னோடு பகிர்ந்து கொண்டான். சிறுவயதில் கண்ட தந்தையை அவன் பின்னர் கண்டதேயில்லை.

அவன் தன்னை எதியோப்பியனாகவே கருதி வந்தான். அவனுக்கு சோமாலியர்களைப் பிடிப்பதில்லை.

தமிழர்களுக்கு சாதி போன்று, சோமாலியர்களுக்கு clans என்று இனக் குழுக்கள் உண்டு.

அவர்கள் தன்னைச் சந்திக்கும் போது, தன்னையும் ஒரு சோமாலியன் என்று தெரிந்தால், ‘உனக்கு அவனைத் தெரியுமா?’ என்று தொடங்குவார்களாம்.

‘அப்போ, இவனுக்கு நீ சொந்தமா?’, ‘உன்னுடைய பெற்றோர் எந்த இடம்?’ என்றெல்லாம் விசாரித்து…

தங்களுடையவன் அல்ல என்று தெரிந்தால்…

அதன் பின்னர் பேசவே மாட்டார்களாம்.

நான் ஜேர்மனியில் இருந்த காலத்தில் தொலைதூரங்களுக்கு செல்லும்போது, கண்ணில் தட்டுப்படும் தமிழர்கள் ஓடி வந்து கதைப்பார்கள்.

அவர்களிடம் நான்கு கேள்விகள் தான் இருக்கும்.

அண்ணை, தமிழோ!? (வயது குறைந்தவர்களை அண்ணை என்பதன் மூலம் தங்களை நித்திய இளையோர்களாக்கும் யாழ்ப்பாணிய உத்தி!)

ஊரில எவடம்?

எந்த நகரத்தில் இருக்கிறீர்கள்?

அங்க வேலை எடுக்கலாமோ?

உலகத்தில் எந்த மூலையில் சந்தித்தாலும், பரஸ்பர உரையாடல்களில் தமிழன் என்று தெரிந்ததும், முதல் கேள்வியாக ‘ஊரில எவடம்?’ என்று தானே உரையாடல் தொடங்குகிறது.

ஊரைக் கேட்பதில் பெரிய பிரச்சனைகள் இல்லை. நான் ஒருபோதும் கேட்பதில்லை ஆயினும், நகரத்துக் கல்லூரியில் படித்ததால், குடாநாட்டின் சகல பகுதிகளில் இருந்து வந்து படித்தவர்கள் இருந்ததால், யாராவது ஊரைச் சொன்னால், இன்னாரைத் தெரியுமா? அவன் என்னோட படித்தவன் என்று தான் என் கேள்வி இருக்கும்.

ஒரு தடவை மரண வீடொன்றில் முன் அறிமுகம் எதுவும் இல்லாத வயதான ஒருவர் பக்கத்தில் இருந்த என்னை ஊரில எவடம்? என்று தொடங்க..

‘யாழ்ப்பாணம்’

‘யாழ்ப்பாணம் எண்டா?’

‘யாழ்ப்பாணம் தான்’.

‘யாழ்ப்பாணத்தில எவடம்?’

‘யாழ்ப்பாணம் தான்’.

ஒரு குடாநாட்டையே ஒரு நகரத்திற்குள் அடக்கிய பாரம்பரியம் அது.

நாங்கள் தமிழர், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும் எண்டு கொடி பிடிக்க அள்ளுப்படுகிற யாழ்ப்பாணிக்கு, ‘ஊரில எவடம்?’ என்பதை அறியாவிட்டால் நித்திரை வராது.

இப்ப ஆர் சாதி பாக்கினம்?

‘ஊர் தான் பாக்கினம்!’ என்பதாக இருக்கக் கூடும்.

கறுவல், சப்பட்டை, அடையான், வடக்கன், மோடன், தொப்பி பிரட்டி என்று உலகத்தில் உள்ள சகல இனங்களுக்கும் ஒவ்வொரு இழிவான பட்டப் பெயர் வைத்து, அதை ஒரு பெரிய பகிடியாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டே, ‘உந்த வெள்ளையள் சரியான துவசம் பிடிச்சதுகள்’ என்று பொருமுகின்ற இனம் யாராக இருக்கும்?

அது இனங்களாகவோ, ஊருக்குள் சாதியாகவோ இருக்க வேண்டும் என்பதுமில்லை.

‘சாதியம்’ தவிர்த்து வேறு என்ன விடயங்களில் கீழ்மை நிறைந்தவர்களாகச் சொல்லலாம்?

பிறந்த பிரதேசங்கள் மட்டுமன்றி, இயற்கையான தோற்றங்களையும், (கட்டையர், மொட்டையர்) உடல் குறைபாடுகளைக் கூட கேலிக்குரிய பட்டப் பெயர்களாக வைப்பதில் இவர்களுக்கு எந்த கூச்சத்தையும் நான் கண்டதில்லை.

அதிலும் தாங்கள் அவ்வாறான குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களை அதுவல்லாத வேறு குறைபாடுகளை வைத்து பெயர் சூட்டுவதிலும் வல்லவர்கள்.

ஒருவரைப் பற்றிய பொய்யான அவதூறுகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் அள்ளி விடுகிற இயல்பை நான் வேறு எந்த இனங்களிலும் இந்தளவுக்கு கண்டதில்லை. பொதுவெளிக்கு வந்த பெண்களைப் பற்றி கேவலமாக அவதூறுகள் செய்ததை நாங்கள் சென்ற தேர்தலில் கண்டதில்லையா? தாங்களே தலையில் வைத்துக் கொண்டாடிய இயக்க முக்கியஸ்தர்கள் பற்றி இவர்கள் சொல்லாத பொய் அவதூறுகளா?

பாயோடு ஒட்ட வைக்கிறவர்கள், சாப்பிட்ட கோப்பையில் மலம் கழிப்பவர்கள் என்று சமூகமாகவே இன்னொரு சமூகத்தை சொல்கிற சமூகம் தானே இது.

கூட்டணியில் அங்கம் வகித்த ‘தொண்டமான்’ விலகி அரசில் சேர்ந்து அமைச்சரான போது, தமிழ் தேசியரான எனது பௌதிக ஆசிரியர் சொன்னார், “வயித்து வலியை நம்பினாலும், வடக்கத்தையானை நம்பக் கூடாது.”

சீதனம் வேண்டாம் என்று ஒருவன் சொன்னால், ‘அவரில ஏதோ குறை இருக்கு!’ என்றும், சமூகத்திற்கு நன்மை செய்ய எவனாவது வந்தால், ‘உவர் தனக்கு லாபம் இல்லாமல் செய்யிறாரோ?’ என்றும், தன்னுடைய கருத்துக்கு எதிராகச் சொன்னால், சிங்களவனிட்ட காசு வாங்கிறான் என்றோ, ஏன் சிங்களவனுக்குப் பிறந்தவன் என்றோ எந்த தயக்கமும் இல்லாமல் பேசுகின்றவர்களை நீங்கள் கண்டதில்லையா?

எந்த சமூகத்திற்கும் பொதுவான இயல்புகள் இருக்கும். அந்த இனத்தில் நூறு வீதமானவர்களும் அதே இயல்புகளைக் கொண்டிருப்பதில்லை. அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் புத்திசாலிகளும் முட்டாள்களும் இருப்பார்கள்.

இதெல்லாம் புள்ளிவிபரக் கணக்கெடுத்து, விஞ்ஞான அடிப்படையில் முடிவுக்கு வரும் விடயம் இல்லை.

ஆனால், மெளனப் பெரும்பான்மை (Silent majority) பேசாமல் இருந்தால், குரல் எழுப்பும் சிறுபான்மையே (Vocal minority) அந்த சமூகத்தின் கருத்தாக மாறும்.

இப்படியாக அந்த சமூகத்தில் தலைமை வகிப்போர், அதன் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துவோரின் இயல்புகள் தானே அந்த இனங்களை வரையறை செய்யும்.

சரி, இந்த இயல்புகளில் பல, உலகில் பல இனங்களில் இருந்தாலும், உலகத்தில் எல்லாரையும் விட கூர்ப்பில் முந்தியதாக தன்னை நினைத்துக் கொள்ளும் இனத்திற்கு கொஞ்சமாவது பண்பாடு இருக்கக் கூடாதா?

தமிழ் வெளியில் அரசியல், ஊடகங்கள் எல்லாம் யார் கையில் பெரும்பான்மையாக இருக்கிறது? பொதுவெளியில் தமிழர் சார்பில் கருத்து வெளியிடுவோர் யார்? இவர்களின் கருத்துக்கள் யாருடைய நலன்களை முதன்மைப்படுத்துகின்றன?

நண்பர் ஒருவர் கேட்டார், இந்த இயல்புகள் மற்ற சாதியினருக்கு இல்லையா?

இருக்கலாம். ஆனால் அந்த இயல்புகள் அவர்கள் அதிகாரத்தில் இல்லாத காரணத்தால் முழு இனத்தின் கருத்தியியலிலோ, அதன் தலைவிதியை நிர்ணயம் செய்வதிலோ ஆதிக்கம் செலுத்த முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள மேல், இடைநிலைச் சாதிகள், சாதிக்கு சங்கமும் கட்சியும் வைத்து, பகிரங்கமாகவே தங்கள் சாதிகளைச் சொல்லி, ‘…டா!’ என்று அதை ஒரு பெருமைப்படக் கூடிய விடயமாக சொல்லிக் கொள்வார்கள். திருடுவதை குலத் தொழிலாக கொண்டு, கள்ளர் என்றே பெயர் கொண்டவர்களும் தங்களை ‘தேவன்டா!’ என்று அரிவாளோடு மீசையை முறுக்கும் நகைச்சுவை எல்லாம் அங்குண்டு.  கீழ்சாதிப் பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு, தங்கள் சாதி இரத்தத்தில் மற்றச் சாதி இரத்தங்கள் கலந்து விடக் கூடாது என்று, மண்ணையும் பெண்ணையும் காக்கும்  நாடகக் காதல் வர்ணனைகள் கூட உண்டு.

அவர்கள் பகிரங்கமாகச் செய்வதை, சங்கம் எதுவும் வைக்காமலேயே ‘இப்ப ஆர் சாதி பாக்கினம்? நாங்கள்  பாக்கிறேலை தானே!’ என்று, தங்களுடைய பெருந்தன்மையாக ‘மேன்மக்கள் மேன்மக்களே!’ என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளும் பாரம்பரியம் தான் யாழ்ப்பாணத்தினது.

புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் சாதியம் எவ்வாறு தொழில்படுகிறது?

இத்தனை மைல்கள் கடந்து வந்தும், திருமணம் என்றாலேயே சாதி என்ன என்பதிலேயே தொடங்கும் இந்தச் சமூகத்தில், கீழ்ச் சாதிக்காரர்களை ‘அவே தங்களுக்குள்ள தான் கலியாணம் செய்வினம்’ என்று கேலியாக சொன்ன ‘முற்போக்காளர்’ ஒருவரைக் கண்டிருக்கிறேன்.

வீட்டில் மனைவி மகனுக்கு, நீ ஒரு நல்ல தமிழ் பெண்ணாக தேடிக் கொள் என்று சொல்லும் போதெல்லாம், ‘நீ ஒரு யாழ்ப்பாணப் பெண்ணை திருமணம் செய்யாதிருந்தால், மகிழ்ச்சியடைவேன்’ என்பேன். சிரித்துக் கொண்டே ஏன் என்று கேட்பான். ‘தங்கள் மகளுக்கு நீ ஒரு நல்ல கணவனாக இருப்பாயா?’ என்ற கேள்வியை விட, அம்மாவும் நானும் என்ன சாதி என்பதை அறிந்து கொள்வதில் தான் அவளுடைய பெற்றோரின் சிந்தனை இருக்கும் என்பேன்.

வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்து, வாழும் குழந்தைகளுக்கே சாதியைப் பெருமையாக ஊட்டி வளர்க்கும் சமூகம் இது. தான் கீழாக நினைக்கிற மற்ற இனங்களின் ரத்தம் சுத்த யாழ்ப்பாண ரத்தத்தில் கலந்து விடக் கூடாது என்பதற்காகவே, நாடகக் காதல் ரேஞ்சில் கதைகளும் மேற்குறித்த பட்டங்களும் சொல்லி!

யாழ்ப்பாணிக்கு சாமத்தியச் சடங்கு, கொத்துரொட்டி, சால்வார் உடை மாதிரி, சாதியும் கடல் கடந்தும் காக்கப்படும் பண்பாட்டுப் பாரம்பரியம்.

வெளிநாட்டு உள்ளூராட்சி விதிகள் கிடுகு வேலியை அனுமதிப்பதில்லை. இங்குள்ள காலநிலையும் கிடுகுகளுக்கு சாதகமானவை இல்லை. இல்லையேல், அசல் யாழ்ப்பாண புலி பிராண்ட் கிடுகுகளை வாங்க நாட வேண்டிய ஒரே இடங்கள் மூலைக்கு நான்கு இருந்திருக்கும்.

யாழ்ப்பாண மேட்டுக்குடி, மேல்மட்டம், மையவாதம், வேளாளியம் என்றெல்லாம் இந்த யாழ்ப்பாண சிந்தனை அழைக்கப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணி என்பது இடம் சார்ந்த ஒன்று இல்லை. சாதீய மனநிலை சார்ந்தது.

அது வேளாளர்களுக்கு மட்டுமானதில்லை. வேளாளர்கள் எல்லாருக்குமானதுமில்லை.

‘வேளார்களின்’ ஆதிக்க வரலாற்று கதையாடல்கள் பற்றி?

‘வேளாளர்’ என்பதே வேளாண்மையுடன் சம்பந்தமில்லாத ஒன்றாகத் தான் யாழ்ப்பாணத்தில் எனக்குத் தெரிந்தது. தமிழ்நாட்டு பண்ணையார் மாதிரியோ, வன்னி மாதிரியோ எல்லை தெரியாத ஏக்கர் கணக்கு பெருந்தோட்ட நிலங்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. பரப்பளவுக் காணிகளே அங்கு அதிகம்.  ‘நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைக்கும்’ விவசாயிகளாக இல்லாமல், கூலிக்கு ஆள் வைத்து, வரம்பில் நின்ற வெள்ளை வேட்டி வேளாண்மை தான் அதிகம்.

வேளாண்மையோடு சம்பந்தமில்லாமல், தாங்கள் ‘ஆளுகின்ற வேள்’ வேந்தர்கள் என்ற கதையும் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி மன்னர் பரம்பரையாகவும் அவர்கள் கதை சொன்னதில்லை.

ஆரியர் மாதிரி, வெள்ளை நிறம் என்றதால் வெள்ளை ஆள் தான் வெள்ளாளர் ஆயினர் என்ற கதை கூடக் கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள பிள்ளை, முதலி, கவுண்டர் என்ற இன்னோரன்ன வேளாளர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இருந்ததாகவும் தெரியவில்லை. இவர்களை விட, மெள்ள மெள்ள வேளாளர்களான கள்ளர் (மேற்படி தேவர்), மறவர், அகம்படியர்களோடு, வேளாண்மைக்குச் சம்பந்தமில்லாத தங்கள் தொழில்களோடு தங்களையும் உயர்சாதியினராகக் காட்டுவதற்காக சாதியின் பின்னால் வேளாளர் என்று பெயரைச் சேர்த்துக் கொள்ளும் இடைநிலைச் சாதிகளின் தொல்லை வேறு.

இதற்குள் வேளாளர் என்பது உயர்சாதி முத்திரை என்று ஏற்றுக் கொண்டோ என்னவோ, தமிழ்நாட்டில் தங்களையும் வேளாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியினரை, வழமை போல வேளாள முதலியார்கள் சங்கம் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பாஜகவிற்கு பெட்டிஷன் அடிக்கும் ‘கொமடிகளும்’ நடக்கிறது.

(யாழ்ப்பாணியின் மொட்டைக் கடதாசிப் பண்பாடு கூட சாதி சார்ந்ததாக இருக்குமோ?)

இதற்குள், திருமண விளம்பரங்களிலும், கல்வெட்டுகளிலும் சொல்லப்படும், ‘இருமரபும் துய்ய வந்துதித்த தூய சைவ வேளாளர்களின்’ தூய்மையை எந்த மரபணுப் பரிசோதனையின் மூலம் அறிகிறார்களோ தெரியவில்லை. மரபணுப் பரிசோதனை மூலம் நிருபிக்க விரும்புவோரும், வாச்சர் சுந்தரிக் கிழவன் மாதிரியானோரின் மரபணுக்களும் அதில் கலந்திருக்கக் காணக் கூடும் என்ற பயத்திலோ என்னவோ அந்த முயற்சிகளுக்கு எல்லாம் போவதுமில்லை.

சகல அயல்மொழிகளும் கலந்த தமிழர்களுக்குள் தூய இரத்தம் ஓடும் மறத் தமிழர்களைக் கண்டுபிடித்து சீல் குத்தும், ‘ஆளப் போறாண்டா, செந்தமிழன்!’ சீமானின் ‘நாம் தமிழர்’  மாதிரி, ‘நாம் வெள்ளாளர்’ தான்!

என்னைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர்,  காணி பூமிகளுடன் பொருளாதார ரீதியில் உயர்நிலையில் இருந்த பல்வேறு சாதிகளின் கலவை தான். அதில் கேரளாவில் இருந்த வந்த ஈழவர்களும் அடக்கமாக இருக்கலாம்.

யாருக்குத் தெரியும்? புயலில் கடலில் அடிபட்டு வந்த சோமாலியர்களும் இருக்கக் கூடும்.

இந்த வேளாளர்களும் தூய சைவர்களாக இல்லாதபடிக்கு, ஐரோப்பியர் கொண்டு வந்த சகல வகைக் கிறிஸ்தவ மதங்களிலும் உள்ளார்கள்.

ஆனால், ‘எளிய சாதிகள்’ மதம் மாறும் போது மட்டும் ‘சோத்துக்கும் சாராயத்திற்கு மதம் மாறிய’ பிரச்சனை தூய சைவ வேளாளர்களுக்கு வருகிறது.

இவர்களிடம் அவ்வப்போது வெளிவரும் கிறிஸ்தவ மத எதிர்ப்புணர்வு கூட இப்படி சாதிய அடிப்படையிலானது தான்.

தற்போது ஈழத்தில் தென்பட ஆரம்பிகும் ‘இந்துத்துவ வெளிப்பாடு’, வேள்ளாள சாதியத்தை அடிப்படையாகக் கொண்டதாகச் சொல்லாமா?

தற்போது புதிதாகக் கிளம்பியுள்ள இந்துத்வ கரிசனையும், சாதிய அடிப்படையிலானது தான். இவர்கள் சொல்கின்ற இந்துத்வம் வர்ணாசிரம அடிப்படையிலானது. ஆறுமுகநாவலரின் சைவமும் அதே தான்.

இந்தியாவில் தொகையில் சிறியவர்களாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு இருக்கும் மேலாதிக்கத்தை வெள்ளாளர்கள் தங்கள் கையில் வைத்துக் கொண்டு, சிங்கள இராணுவத்தையும், இயந்திரங்களையும் கொண்டு தேர் இழுக்கவும், முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு கயிறு கட்டி புலிகள் பாதுகாப்பு கொடுத்த கதை மாதிரி, எளிய சாதியினரால் கடவுளர்கள் தீட்டுப்படாதபடிக்கு முள்வேலி போட்டு பாதுகாக்கவும் வசதியானதாகதாகத் தான் இந்துத்வம் இருக்கிறது.

கடவுளின் முன் எல்லாரும் சமன் என்ற சிந்தனையை ‘மறவன்புலத்தார்’ கூட பகிரங்கமாகச் சொன்னதில்லை. இந்துத்துவப் பிராமணிகளுக்கு மறவன்புலத்தாரும், ஏன் வெள்ளாளர்களும், சூத்திரர்கள் தான்.

உயர்கல்வி, உயர்பதவிகள், வேலைவாய்ப்புகள், வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டுக் கல்வி என மதம் மாற்றத்தால் மட்டுமன்றி, சைவ மதத்தில் இருந்து கொண்டே, பொருளாதார ரீதியில் வசதியுள்ளவர்களாக இருந்து அந்நிய ஆட்சிகளில் ஒட்டிக் கொண்டு, முடிக்குரிய காணிகளை கபளீகரம் பண்ணும் அளவுக்கு, அதிகளவு பயன்பெற்றவர்கள் உயர்சாதியினர் தான்.

ஆறுமுகநாவலரும் இராமநாதனும் சாதியையும் மதத்தையும் தொடர்வதற்காக, ஏகாதிபத்தியத்தியற்கு எதிராக போராட்டம் செய்யாமல், அந்நியர்களின் அடிவருடிகளாகவும், ஒட்டுக்குழுக்களாகவும் வளர்ப்புப் பிராணிகளாகவும் இருந்தவர்கள் தான்.

அடிமை, குடிமைகளை வைத்து, நிலபுலன்களுக்கு சொந்தக்காரராக இருந்த இராமநாதன் பரம்பரையினர் எல்லாம் கால் மேல் கால் போட்டு, ‘நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ? ஏற்றம் இறைத்தாயா?’ என்று கட்டப்பொம்மன் வசனமா பேசியிருப்பார்கள்?

காணி வைத்திருப்பவர்களுக்கு தான் ராஜவிசுவாசம் இருக்கும், அதனால் அவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்க வேண்டும் என்று பெட்டிஷன் அடித்தவர்கள் தானே இவர்கள் எல்லாம்?

மேன்மையும் மாட்சிமையும் தங்கிய மன்னர்களுக்கும் மகாராணியார்களுக்கும், ஏன் மேன்மை தங்கிய தேசாதிபதிகளுக்கும்,  your majesty’s humble and obedient servants களாக இருந்தவர்களுக்கு, தங்கள் அடிமை குடிமைகள் மாதிரி, மேதகுவுக்கும் கை கட்டி வாய் பொத்தி நிற்பதில் பிரச்சனை இருக்கவில்லையே?

யாழ்ப்பாணத்தில் சாதி மதத்தில் மட்டும் தங்கியதில்லை. கத்தோலிக்க ஆயர்கள் ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்தவர்களாகவும், சாதி வேறுபாடுகளால் கோயில்கள் பூட்டப்பட்டதுமான கதைகள் எல்லாம் உண்டு.

இந்த சிந்தனை தனியே வெள்ளாளர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், வெள்ளாளர்கள் தங்களை உயர்சாதிகளாக நினைக்கவில்லையே என்று கறுவிக் கொண்டு, தங்களையும் கீழ்ச்சாதிகளுக்கு மேலானவர்களாக நினைக்கும் பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயர்ந்திருக்கும் மற்ற இடைநிலைச் சாதிகளுக்கும் உண்டு.

தாங்களே சிறந்தவர்கள் என்ற சிந்தனை எப்படி உருக்கொள்கிறது?

போராட்ட ஆரம்ப காலங்களில் வல்வெட்டித் துறையில் உள்ள கரையோரத்தினருக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்களுக்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க பேராசிரியர் ஒருவர் வருகிறார். அவரது ஆய்வுக் கட்டுரை ஒன்றை தாயகத்தில் மொழிபெயர்த்து பிரசுரித்திருந்தோம்.

அந்த பேராசிரியர் பற்றி தேடித் தான் பார்க்கிறேன். அவரது ஆய்வுகள் எல்லாமே இவ்வாறான விடயங்களோடு இல்லாமல், சம்பந்தமில்லாத கணனி நூல்களை எழுதியிருக்கிறார். இவ்வாறான ஆய்வுக்காக புலமைப்பரிசில் கொடுத்து அனுப்பப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

அந்த ஆய்வுகளுக்குப் பின்னால், பிரபாகரன் விடுதலை வீரனாக அமெரிக்கா சார்ந்த ஊடகங்களில் படம் காட்டப்பட்டதன் காரணம் என்னவாக  இருக்கலாம் என்பதை யாராவது இதுவரை சிந்தித்திருக்கிறார்களா?

சாதி சார்ந்த சிந்தனை அங்கு வாழ்கின்ற ‘எளிய சாதிகளை விட’ தாங்கள் மேலானவர்கள் என்ற சிந்தனையையும் கடந்து, உலகத்திலேயே நாகரீகத்திலும் அறிவிலும் தாங்கள் தான் மேம்பட்டவர்கள் என்றும் மற்றவர்கள் எல்லாரும் கேலி செய்யப்படக் கூடிய இழிவானவர்களாகவும் கருதுகின்ற மனப்பான்மையைக் கொண்டிருக்கிறது.

இந்தச் சிந்தனையின் உச்சமாகத் தான் தங்களை மட்டும் புத்திசாலிகளாகவும், மற்றவர்களை எல்லாம் முட்டாள்களாவும் கருதுகின்ற சிந்தனை வருகிறது.

மொத்தத்தில் ஆபிரிக்காவில் குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்ற முன்னால், கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குரங்குகள் தான் இந்த யாழ்ப்பாணிகள்.

இதன் அடிப்படையில் தான் சர்வதேசம் தான் மிரட்டும் போது தள்ளி நிற்கவும், கொடி பிடிக்கும் போது தீர்வு வாங்கித் தரவும் கடமைப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு வருகிறது.

சர்வதேசம் சதா தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும், தான் ஒரு வல்லரசாக மாறி விடக்கூடும் என்ற பயத்தில் சர்வதேசம் சதி செய்கிறது என்ற கதையாடலும் இதன் வெளிப்பாடுகள் தான்.

இந்தச் சிந்தனையை பொதுமைப்படுத்துகிறீர்களா?

இந்த சிந்தனை எல்லா வெள்ளாளர்களுக்குமோ, தங்களை உயர்சாதிகளாக நினைக்கிற மற்ற சாதிகளுக்குமோ முழுமையானதல்ல.

இந்த சிந்தனை கொண்ட சமூகத்தில் தானே, எல்லாரும் சமம் என்னும் சமூக நீதிக்காக போராடிய இடதுசாரிகள் வந்தார்கள். என்னோடு பழகும் பல நண்பர்களுக்கு சாதி என்பது ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய, அடக்கப்பட்டவர்கள் அல்லாத பலர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.

நான் மனிதர்களை, அதாவது தனிமனிதர்களை, அவர் பிறப்பால் வந்த எதை வைத்தும் மதிப்பிடுவதில்லை. அவர்களுடைய படிப்பை வைத்தும் மதிப்பிடுவதில்லை. அவர்களுடைய பண்புகளை வைத்துத் தான் மதிப்பிடுகிறேன்.

‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்று சொல்வதே தங்கள் குலம் சிறந்தது என்றும் கீழானவர்கள் தீய குணங்கள் கொண்டவர்கள் என்று சொல்வதற்காகவே!

உயர்சாதியினர், பிறப்பு சார்ந்து குழுக்களாக்கி அவர்களை ஒடுக்கி, அவர்களுக்கு ஒரே சிந்தனை இருக்கும் என்பது போல, உயர்ந்த சாதியினராகப் பிறந்த எல்லாரிடமும் அவர்களின் பிறப்பு காரணமாக அதே ‘வெள்ளாளிய’ சிந்தனை இருக்கும் என்று நான் நினைப்பதில்லை.

இந்த சிந்தனை சமூகத்திற்கானதாக இருக்கும் போது, இழிந்த சமூகம் என்று கடந்து போய் விடலாம். ஆனால் இந்த சிந்தனைதான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் போது, முழு இனத்தின் தலைவிதியே மாறி விட வாய்ப்பாகி விடுகிறது.

தனது நலன்களை முழு இனத்தின் தலையில் சுமத்தி, அந்த நலன்களைப் பாதுகாக்க பேய்களுடன் கூட்டு வைக்கவும், பேய்களை தெய்வங்கள் ஆக்கி, ஆடு என்ன, ஆட்களையே பலி கொடுக்கவும் தயங்காத இந்த யாழ்ப்பாணி சமூகம் இன்றைக்கு இந்த இனத்தை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது?

பட்டுத் துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணத்தோடு கிடந்தாலும், இன்றைக்கும் தனது நலன்களுக்காக தன்னுடைய சொல்படி நடக்க வேண்டும் என்பதற்காக, பேரவை, சிவில் சமூகம் என்று நடக்கும் கூத்துக்கள் எல்லாம் வேறு என்ன காரணங்களுக்காக?

அதே யாழ்ப்பாணிகளின் நலன்களை, அடிச்சுப் பறிக்கப் போய் கௌபீனமும் இழந்த பின்னால், கனடிய பாராளுமன்றத்திலோ, ஜெனிவாவிலோ பெற்றுத் தரக் கூடிய அடியாட்களை தேடுகின்ற முயற்சி தானே?

புலி என்பது ஒரு வெற்றிடத்தில் இருந்து வந்ததில்லை. யாழ்ப்பாணிச் சிந்தனையின் மண்டையில் போடும் உச்ச வடிவம் தான் புலி. யாழ்ப்பாணிச் சமூகத்தில் இருந்து தான் பிரபாகரன்கள் தோன்றவும், தேசியத் தலைவர்களாகவும், சூரிய தேவர்களாகவும் வடிவம் பெற முடியும். இந்த சமூகத்தில் தான் கொலைகாரர்களும், அயோக்கியர்களும், திருடர்களும் தேசியத் தலைவர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களாகவும் வர முடியும்.

ஒரு இனம் முட்டாள் மந்தைக் கூட்டமாக இருந்தால், மேய்ப்பர்களாக வருகிறவர்கள் ஒட்டுமொத்தமாக கசாப்புக்கடைக்கு விற்கிற திருட்டு அயோக்கியர்களாகத் தானே இருக்க முடியும்?

கண் முன்னால் தங்கள் பணத்தைச் சுருட்டி, தலைவர் வரும்போது ஒப்படைப்போம் என்னும் திருடர்களை தமிழ் தேசியச் செயற்பாட்டாளர்கள்’ என்று சொல்கிறவர்களுக்கு, தேசிக்காய் தலையர்கள் ஒரு ரூபாவுக்கு நான்குக்கு மேல் கிடைக்கும். 

அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்க தயாரான போது, ஏற்படப் போகும் அழிவை உணர்ந்து கொண்டு, எத்தனையோ புத்திஜீவிகள் சேர்ந்து சதாமிற்கு பகிரங்க அறிக்கையாக கடிதம் ஒன்றை எழுதினார்கள். யுத்தம் அழிவிற்கு வழி வகுக்கும் என்று!

பலஸ்தீனர்கள் மீதான அடக்குமுறை உச்சமாக இருக்கும் இஸ்ரேலில் கூட, பலஸ்தீனர்களுக்கான தனிநாடு ஒன்று அமைக்க ஆதரவு வழங்கும் இஸ்ரேலியர்களின் வீதம் கணிசமானது. அவர்களை யாரும் துரோகிகள், இனத்தை விற்றுப் பிழைப்போர் என்றோ, பொம்பிளைப் பிரச்சனை, காசு அடிச்சிட்டான் என்றோ சொல்வார்கள் என்ற பயம் இல்லாமல்.

கியுபெக் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்த போது, அதை எதிர்த்த பிரெஞ்சுக்காரர்களான ரூடோவும், கிரெட்சியனும் கியூபெக்கில் துரோகிகளாக்கப்பட்டு மண்டையில் போடப்பட்டு வெற்றிக் கூத்தாடப்பட்டதில்லை. அவர்கள் கனடியப் பிரதமர்களாக வந்தார்கள்.

கன்சர்வேட்டிவ் பிரதமர் மல்றோனியோடு இருந்து பிரிவினைக் கட்சியை ஆரம்பித்த லூசியன் பூசா, கனடியப் பாராளுமன்றத்திற்கு பெருவெற்றி பெற்ற வந்த போதும், அவர் கியூபெக்கை தனிநாடாக்காவில்லை என்று அவரை மண்டையில் போடும் தீவிரவாதிகள் எழுச்சி கொண்டதில்லை. அழிவை உணர்ந்து கொண்ட கியூபெக் அடக்கி வாசிக்கிறது.

எரித்திரியா பிரிந்த போதும், எரித்திரியா சர்வாதிகார ஆட்சிக்குள் விழுந்த போதும், கருத்து வேறுபாடுகள் கடந்து, தங்களுடைய பண்பாட்டை மீறாமல் நட்பைப் பேணிக் கொண்ட எதியோப்பிய, எரித்திரிய நண்பர்களுடன் வேலை செய்திருக்கிறேன்.

பொதுக்கருத்து எதுவாக இருந்தாலும், மாற்றுக் கருத்துக்களுக்கும் வழி விட்டு அந்தக் கருத்துக்களோட சேர்ந்து வாழும் பண்பு கொண்ட சமூகங்கள் தான் இன்று வரை நாகரிகத்தில் மேம்பட்டிருக்கின்றன. வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அவை தங்களை தற்கொடை செய்கிறோம் பேர்வழி என்று அழித்துக் கொண்டதில்லை. எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று தனது மூக்கை அறுத்துக் கொண்டதுமில்லை.

எந்த வகையான தீவிரவாதத்தையும் ஆதரித்த சமூகங்கள் முழுவதும் இழப்புகளையும் அழிவுகளையும் சர்வாதிகார ஆட்சிகளையும் தான் பெற்றிருக்கின்றன. ஈரான் முதல் ஆப்கான் வரை உதாரணங்களைக் காணலாம். 

ஜேர்மனியும் ஜப்பானும் யுத்தத்திற்கு தங்களைக் கொண்டு சென்று பலியிட்டவர்களை உதறித் தள்ளி விட்டு, சிந்தனையை மாற்றிக் கொண்டதால் வளர்ந்திருக்கிறார்கள்.

தங்களை யூதர்கள் போன்றவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் யாழ்ப்பாணிகளும் யூதர்கள் எப்படி வளர்ச்சி பெற்றார்கள் என்று தெரியாமல், இன்றைக்கும் தங்களை இலங்கையில் மட்டுமல்ல, யூதர்களைப் போல கனடாவிலும் அரசாங்கத்தை நிர்ணயிக்கும் கிங் மேக்கர்களாக பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் கல்லூரி அதிபர்களையும் எட்டாம் வகுப்பு படித்த துப்பாக்கி மனிதன் போட்டு தள்ளிய போது, துரோகிகள் ஒழிக்கப்பட்டார்கள் என்று ஆனந்தக் கூத்தாடித் திரிந்த சமூகம் தான் யாழ்ப்பாணியுடையது.

இன்றைக்கும் மனச்சாட்சியுள்ள எந்த படித்த மனிதனும் தன் சமூகம் குறித்து சுதந்திரமான, மந்தைப்புத்திக்கு அப்பாற்பட்ட எந்தக் கருத்தையும் பகிரங்கமாக சொல்ல முடியாது. எந்தப் படிப்பும் இல்லாத எந்த முட்டாளும் அந்த மனிதனை துரோகி என்று கூற முடியும். மீதியுள்ள மந்தைகளும் அவர்களைப் போட்டுத் தள்ளும்படி பேஸ்புக்கில் ஆமோதிக்கும்.

படித்தவர்கள் என்பவர்களும், பல்கலைக்கழங்களில் குடிசைக் கைத்தொழில் உற்பத்திகளாக வெளியே வரும் தமிழ்த்தேசிய பட்டதாரிகளும் இந்த யாழ்ப்பாண முறையில் தயாரிக்கப்பட்ட புலி பிராண்ட் யாழ்ப்பாணக் கிணற்றுத் தமிழ்த் தேசியத்திற்கு அப்பால் எந்த சிந்தனையும் கொண்டிருக்கவில்லை.

சீதனமும் கொர்ணமேந்து வேலையும் தவிர அவர்களின் கல்விக்கு அறிவு வளர்ச்சியோ, சிந்தனை வளர்ச்சியோ நோக்கமாக ஒரு போதும் இருந்ததில்லை.

தங்களைப் போன்றே மற்றவர்களும் மந்தைகளாக இருக்க வேண்டும் என்பதும், அதற்கு முரணானவர்களை கறுப்பு ஆடுகள் என்று துரோகியாக்கி பலி கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த சமூகத்தின் சிந்தனையாகி விட்டது.

இவர்கள் கேட்க விரும்பும் பொய்களைச் சொல்லும் உரிமை மட்டும் தான் இங்கே இருக்கிறது.

யுத்தம் முடிந்து இத்தனை வருடங்களாகி விட்டன. இன்னமும் இந்த தோல்விக்கான காரணங்களை சமூகமாக எதிர்கொள்ள இவர்கள் இன்னமும் முன் வரவில்லை. தங்களில் எந்த பிழையும் இல்லாதமாதிரி, தலாய் லாமா தவிர்ந்த, உலகத்தில் உள்ள சகலரையும் தங்களுக்கு எதிராக சதி செய்தார்கள் என்று புலம்பிக் கொண்டிருப்பதைத் தவிர, இவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை.

தலாய் லாமாவும் இறக்கும் போது இவர்கள் நடத்தும் கொண்டாட்டத்தின் போது தான் தெரியும், ‘எமது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது, மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரா?’ என்பது!

இந்த போராட்டம் ஏன் இனத்தை அழிக்கும் நிலைக்கு சென்றது என்ற அடிப்படைக் கேள்வியை இன்னமும் இந்த சமூகம் கேட்கவில்லை. அதைக் கிளற வெளிக்கிட்டால், இப்படிக்கொத்த ஒரு தனிமனிதனை நம்பிய தன் முட்டாள்தனம் வெளியே வந்து விடும் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

வரலாறே என் வழிகாட்டி என்று தலைவர் மாபெரும் சிந்தனையை அவிழ்த்து விட்டார் என்று பெருமைப்படும் இனம் இன்னமும் கண் முன்னால் நடந்த உண்மைகளில் இருந்தே இன்னமும் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்ற நிலையில், வரலாற்றில் இருந்தா கற்றுக் கொள்ளப் போகிறது?

தங்களை பசும்புற்றரைகளுக்கும் நன்னீர்ச் சுனைகளுக்கும் அழைத்துச் செல்லும் ஒரு மேய்ப்பனைத் தான் இந்த மந்தைகள் தேடிக் கொண்டிருக்கின்றன.

முன்பு நம்பிய மேய்ப்பன் தன்னை கசாப்புக்கடைக்குத்தான் அனுப்பினான் என்பதை உணர்ந்து கொள்ளாமல்!

தாங்களே சொல்லும் பொய்களை தாங்களே நம்புகின்ற இயல்பை மாற்றி, உண்மைகளை இதய சுத்தியுடன் எதிர்கொள்ளாதவரைக்கும் (Confront), இவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

இதையெல்லாம் இந்த யாழ்ப்பாணிகள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்னால் ‘பட்டுத் துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணத்தை இழந்த கதை’யையும், யாழ்ப்பாணத்து பிராங்கன்ஸ்டைன் என்று யாழ்ப்பாணம் வளர்க்கும் புலி தன்னையும் அழித்து யாழ்ப்பாணியையும் அழிக்கும் என்று எழுதினேன்.

யுத்தம் முடிந்த கையோடு, ‘அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்’ என்று இத்தனை அழிவின் பின்னாலும் தன் சிந்தனையை மாற்றிக் கொள்ளாத யாழ்ப்பாணம் பற்றியும் அது என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதினேன்.

இப்போதும் இந்த ‘கொலைகாரச் சிந்தனைக்குள் இருந்து வெளியில் வராதவரைக்கும் இந்த சமூகத்திற்கு மீட்சி இல்லை’ என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் முப்பது வருடங்களில் இந்த போராட்டம், யுத்தங்களில் சம்பந்தப்பட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாம் போய் சேர்ந்து விடுவார்கள். செயல் இழந்து விடுவார்கள்.

அடுத்த தலைமுறையின் பிரச்சனை வேறாக இருக்கும். அந்த தலைமுறை அந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளும் என்பது அதற்கு நாங்கள் கற்பிப்பதில் இருந்து தான் வடிவம் பெறும்.

பிள்ளைகளுக்குக் கற்பிப்பது சாதியமும், கொத்துரொட்டியும் தான் என்றால், அந்த தலைமுறையின் போராட்டமும் படுத்துக் கிடந்த பகிஷ்கரிப்பும், அடையாள ஒரு நாள் உண்ணாவிரதமாகவும் தான் இருக்கும்.

‘ஓம், நான் வெள்ளாடிச்சி தான்!’ என்று பகிரங்கமாக பெருமை காட்டிய ‘முற்போக்காளர்’ ஒருவரைக் கண்டிருக்கிறேன். உலகநீதி விழுமியங்களை விட, கலாசாரம், பண்பாடு என்ற பெயரில் இவர்கள் பிள்ளைகளுக்கு இதைத் தான் கற்றுக் கொடுப்பார்கள் என்றால், முப்பது வருடங்களின் பின்னாலும், தீர்வு தீபாவளிக்குப் பிறகு தான்!

அடுத்த முப்பது வருடங்களில் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் வேறு எதுவோவாக இருக்கும்.

தற்போது என்னைப் பயமுறுத்துவது, இந்த மந்தைகள் புதிதாகத் தொடங்கியிருக்கும் இந்துத்துவம். பிரபாகரனை முருகனின் அவதாரம் என்று நம்பிய யாழ்ப்பாணிக்கு, முருகனைக் கடவுள் என்று நம்பாத இந்துத்துவம் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது.

தன்னுடைய நலன்களைப் பாதுகாக்க எந்த பேயுடனும் கூட்டுச் சேரத் தயாராக இருக்கும் இந்த சமூகம், ‘இந்துத்துவத்தைக் கையில் எடுத்தால், இந்தியா  தனது நலன்களைப் பாதுகாக்க வழி செய்யும்’ என்று கருத தொடங்கினால்…

முப்பத்து முக்கோடித் தேவர்களாலும் இந்த இனத்தைக் காப்பாற்ற முடியாது.

யாழ்ப்பாணத்தில் வந்து சேரப் போகும் சைனாடவுன்களின் தொகை நிறைந்து,  பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு பழி போட்டு ஜமெய்க்காவில் நடந்தது போல, யாழ்ப்பாணிகள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள யாரையாவது உசுப்பேத்தி, கலவரங்களை உண்டு பண்ணக் கூடும்.

முஸ்லிம்களை வெளியேற்றிய மாதிரி சீனர்களை வெளியேற்ற அந்த நேரம் இன்னொரு தேசிக்காய் தலையர் கிடைக்க மாட்டார்.

இந்த இனம் இன்னொரு தடவை ஆயுதம் தூக்கும் என்பதும், இந்த இனத்திற்கு ஆயுதங்கள் சப்ளை பண்ணுவதற்கு நாடுகள் இருக்கும் என நினைப்பதும், ‘ஈழம் கிடைச்சா, அஞ்சு வரியத்தில வல்லரசு தான்’ கதை மாதிரித் தான்!

நினைத்தாலே இனிக்கும்!

விரும்பினால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

முப்பது வருடங்களின் பின்னாலும், நான் இல்லாமல் போனாலும், நீங்கள் வாசிக்கலாம்.

அப்போதும், இந்த போராட்டத்தை வைத்து பிழைப்பவர்கள் தான் முழுமையாக இருப்பார்களே தவிர, தமிழ் மக்கள் நலன் சார்ந்து இந்த யாழ்ப்பாணிகளால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. 

முற்றும்

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

2 Comments

  1. 88ம் ஆண்டு எனது நண்பர் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின் சந்தா கட்டி எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அந்தநேரம் இந்திய இராணுவமும் பின்பும் புலிகளும் யாழ் குடாநாட்டை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

  2. தகவலுக்காக:
    சோமாலியர்கள் மத்தியிலும் சாதிய படிநிலைப் பிரிவுகள் உள்ளன. Clan அமைப்பும் உள்ளது. அது வேறு. கிழக்கிலங்கை தமிழர்கள் மத்தியில் “குடி” என்ற அமைப்பு வடிவம் இருப்பது மாதிரி. ஆனால் சாதிய பிரிவினை வேறு. சோமாலியாவும் அப்படி தான்.

உரையாடலுக்கு

Your email address will not be published.