/

நித்தியம்: ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

நான் அறையின் உள்ளே நுழைந்த போது ஃபாதர் மார்ட்டின் சாளரத்தின் வழியாக சூரிய அஸ்தமனத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இரவின் முதல் கிரணம் தோன்றிய மாலை வேளையில் மறையும் சூரிய ஒளிக்கீற்றுகள் அவர் முகத்தில் பட்டு, விழிகளில் கசிந்திருந்த ஈரத்தை மின்ன செய்தன. என் வரவை திரும்பாமலே அவர் அறிந்திருந்தார்.

நான் உள்ளே நுழைந்ததும் என்னை நோக்கி ஓடி வந்து கட்டி அணைத்து, “காதல் எத்தனை அபத்தமான சொல் ஃபாதர் ஜோசப்! எத்தனை அபத்தம்…” என்று அலறினார்.

எனக்கு அவர் மனவோட்டம் புரிந்தது. இன்றைய நாளின் நிகழ்வுகளால் அவர் சீண்டப்பட்டிருக்கிறார். அவரது மெய் காவலனாக போன வாரம் பணியில் சேர்ந்த  இயான் பிரிட்டோவின் செயலும் விசித்திரமானது தான்.

ஒடுங்கி நீள்வாகான அந்த அறையில் கட்டிலின் அருகே உள்ள நாற்காலியை நோக்கி நகர்ந்தவாறே அவரிடம், “ஃபாதர் மார்ட்டின், உங்களுக்கு இன்று சிறிது ஓய்வு தேவையென்று நினைக்கிறேன். தேவையென்றால் சிறிதளவு மதுவை அருந்துங்கள். ஆழ்ந்த நீள் துயில் உங்களை சமநிலைக்கு கொண்டு வர உதவும்” என்றேன்.

அவர், ”ஆம்…” என்று தலையசைத்து என்னை நோக்கி திரும்பினார். என் சம்பரதாய மொழிகள் அவரை சாந்தம் செய்யாது என அறிந்திருந்தேன் ஆனால் நான் உடனிருப்பது அவரை சிறிதளவு ஆசுவாசம் கொள்ள செய்யும். அவருடன் தொடர் உரையாடலே அவரை இலகுவாக்குவதற்கான வழி.

அவர் மேலங்கியை கழட்டி, கட்டிலுக்கு பின்னிருந்த கொக்கியில் மாட்டிவிட்டு என் அருகில் வந்தமர்ந்தார். நான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் பேசுவதற்காக காத்திருந்தேன்.

நீண்ட மௌனத்திற்கு பின் அவர் பேசத் தொடங்கினார், “ஃபாதர் ஜோசப், மனித வாழ்க்கை பல எதிர்பாராத தற்செயல்களாலும், திருப்பங்களாலும் நிறைந்தது. இயான் பிரிட்டோவின் செய்கையை அதற்கு முந்தைய கணம் வரை என்னால் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியவில்லை. அவன் அந்த கணத்தில் அவன் கண்கள்” அதனை சொல்லும் போது அவர் நா தழுதழுத்தன.

இயான் பிரிட்டோ, பிரிட்டனில் இருந்து இங்கே ராம்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் கூட கடந்திருக்காது. ராம்நாட் இயேசு சபை கழகத்தின் மெய்காவலனாக பொறுப்பேற்றிருந்தான். ஃபாதர் மார்ட்டினின் அணுக்க காவலனும் கூட. அதற்கான தேவையும் ராம்நாட்டில் ஏற்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ராம்நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. முதலில் வறட்சியில் தொடங்கிய பஞ்சத்தை, கோடை தாண்டி பெய்த சிறு சிறு மழைகள் விவசாயத்தை மீண்டெழ உதவியது. அதன் பின் ஆண்டிறுதியில் ஏற்பட்ட கடும் மழையினால் இவ்வாண்டின் தொடக்கத்திலேயே மேலும் பஞ்சம் தலைவிரித்தாடியது.

இங்கு இயேசு சபைக்கு மத மாற்றத்திற்காக இப்போது வருபவர்கள் நூறில் தொண்ணூற்று ஒன்பது பேர் பஞ்சத்தால் பசியை போக்கிக் கொள்ளும் பொருட்டு வருபவர்களே. அவர்களை இங்குள்ள கிறிஸ்துவ சபை பராமரிப்பாளர்களால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை, குறிப்பாக உணவு பரிமாறப்படும் சமயங்களில் கூட்டம் எல்லை மீறுகிறது. ஆகவே பிரிட்டனில் இருந்து ஒரு பெரும் படை இங்கே வரும் தேவை இருந்தது. அதனை நானே தலையிட்டு ஆட்களை தேர்ந்தெடுத்தேன்.

அந்த இடைவேளை அவரை பேசித் தூண்டின. நானும் அதற்காகவே காத்திருந்தேன், “ஃபாதர் மார்ட்டின், நான் மதுரையில் இருக்கும் போது தான் செய்தி அறிந்தேன். ராம்நாட் மறவர் படை வீரர்கள் உங்களை கைது செய்ய தேடிக் கொண்டிருக்கின்றனர் என அறிந்ததும், உங்கள் உயிருக்கு வரும் ஆபத்தை கருதியே உங்களை இங்கே ஊர் எல்லையில் உள்ள நம் ஆலயத்திற்கு பத்திரமாக அழைத்துவரும்படி என் ஒற்றனிடம் சொன்னேன். மேலும் நானே வந்து உடனிருப்பது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம் என்று எண்ணியே இங்கு கிளம்பி வந்தேன்.” என்றேன்.

அவர் என் பேச்சில் இருந்து தொடர்ந்தார், “ஃபாதர் ஜோசப், உண்மைதான். அப்படி தான் நானும் எண்ணினேன் ஆனால் அப்போது என் உயிர் எனக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.

நீங்கள் அறிந்திருப்பீர்கள், ராம்நாட்டை ஆண்டுக் கொண்டிருந்த கிழவர் சேதுபதியின் உடல் கடந்த சில நாட்களாகவே மிகவும் மோசமாக இருந்தது. அவர் வயதும் எண்பதை கடந்திருக்கக் கூடும். இரண்டு வருடத்திற்கு முன் அவர் மதுரையிலிருந்து சுப்பு லெட்சுமி நாச்சியார் என்னும் சிறு பிராயம் உடைய பெண்ணை தனது நாற்பத்தி ஏழாவது மனைவியாக திருமணம் செய்து வந்திருந்தார். மதுரையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை போக்கியதற்காக மதுரையை ஆளும் விஜயரங்க சொக்கநாதரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பெண் அவள். அவர்கள் திருமணம் வெகு விமர்சையாக மதுரையிலேயே நடந்ததைப் பற்றிய குறிப்புகளை நான் அப்போதே பதிவு செய்திருந்தேன். உங்களுக்கும் ஒன்று அனுப்பிய நினைவு.

அவர் திருமணம் முடிந்த ஓராண்டிலேயே நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகிவிட்டார். நாட்டின் பஞ்சம் அவரை மேலும் தளர்த்தியது. அவர் தனக்கு அடுத்து ராம்நாட்டை ஆளும் சேதுபதியை அறிவிக்கும் படி ஆகியது. மக்களின் விருப்பப்படி விஜய ரகுநாதருக்கு சேதுபதியாக கிழவர் முடிசூட்டி வைத்தார். அதற்கு பின் கிழவர் முழுவதுமாக தளர்ந்துவிட்டார். நீர் ஆகாரங்கள் மட்டுமே மூன்று மாதங்களாக அவருக்கு உணவாக கொடுக்கப்பட்டது.

விஜய ரகுநாதர் சேதுபதியான பின்பு மறவர் படைகளை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். கிழவர் சேதுபதியின் மேல் மிக பெரிய பக்தி கொண்டவர். கிழவரின் ஆற்றலை அருகிருந்து கண்டவர் என்ற வகையில் அவரது செயல் தீரம் விஜய ரகுநாதரை வெகுவாக கவர்ந்தது. தனது ஆட்சி காலத்தில் ராம்நாட்டை தனிப் பெரும் அரசாக கிழவர் நிறுவியதே அதற்கு முதற் காரணம். அவரை ஒவ்வொரு நாளும் சென்று பார்த்து வந்தார். அவரது கடைசி மனைவியாகிய சுப்பு லெட்சுமி வந்த நேரம் தான் அவரை மரணத்திற்கு கொண்டு சென்றது என ரகுநாதா எண்ணத் தலைப்பட்டார். ஊரில் அனைவரும் அப்படியே பேசத் தொடங்கினர். விஜய ரகுநாதர் கிழவரின் மோசமாக உடல் நிலைக்கு அவளது வருகையே காரணமென முழுமையாக நம்பினார்.

அப்படி நம்பவும் பரப்பவும் அவருக்கு தனிப்பட்ட காரணங்களும் இருந்தது என என் ஒற்றன் மூலம் அறிந்தேன். சுப்பு லெட்சுமியை தனியறையில் சிறை வைத்தார். அவள் அங்கிருந்து எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டார்.”

அங்கு அரண்மனையில் நடப்பது பற்றிய கடிதங்கள் ஃபாதர் மார்ட்டின் எனக்கு முன்னரே பலமுறை எழுதியிருந்தார். சுப்பு லெட்சுமியை பற்றி அவர் எழுதிய குறிப்புகளும் என் நினைவில் இருந்தன.

நான், “அவளை ஒரு முறை நீங்கள் சந்தித்து உரையாடிய கடிதம் ஒன்று வாசித்த ஞாபகம் இருக்கிறது” என்றேன்.

”ஆமா ஃபாதர் ஜோசப், ஒரு முறை நான் அரண்மனைக்கு சென்ற போது அந்த பெண்ணை சந்தித்தேன். அவள் சிறைப்பட்டிருந்தது எதுவும் அவளை தொந்தரவு செய்யவில்லை. விஜய ரகுநாதரின் செயலும் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவள் அரண்மனை வந்த நாளில் இருந்து தன் தனியறையிலேயே வாழப் பழகினாள். அரண்மனையின் தன் தனியறைக்குள்ளேயே தன் உலகை முழுமையாக நிரப்பிக் கொண்டவள். பாக்கியசாலி.” என்றார் ஃபாதர் மார்ட்டின்.

அவர் தொடர்ந்தார், “இன்று காலை கிழவன் சேதுபதி இறந்த செய்தி வந்தது. இயற்கையான மரணம் தான். இரவு கம்பு தானியத்தால் செய்யப்பட்ட ஒரு வகை கூழை அருந்தியிருக்கிறார். வெகுநேரம் வரை விஜய ரகுநாத சேதுபதியிடம் அளவளாவி விட்டு உறக்கம் கொண்டவர், காலையில் கண் விழிக்கவேயில்லை. அவரது இறப்பு நாடு முழுவதும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. எனக்கான தனி செய்தியை அரசவையிலிருந்து ஓலை மூலம் அனுப்பிவைத்திருந்தனர்.

நம் கோவிலில் இன்று அவருக்கான சிறப்பு பூஜையை உச்சி பொழுதுக்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன். அதற்கான பணிகள் அனைத்தையும் இயான் பிரிட்டோ தான் ஏற்று செய்தான். பிரார்த்தனைக்கான ஒருக்கங்களை ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கினான். அப்போது தான் அரசவையில் இருந்து எனக்கு மேலும் ஒரு கடிதம் வந்தது. கிழவரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளும் படி என்னை அழைத்திருந்தனர்.

ஃபாதர், எனக்கு இந்துக்களின் சடங்குகளில் பங்கு கொள்ள மனம் ஒப்புவதில்லை ஆனால் சமீப காலங்களாக இங்குள்ள அனைத்து அரசவை சடங்குகளிலும் நம் சபையிலிருந்து ஒரு உறுப்பினர் சென்று வருவது ஒரு சடங்காகவே நிகழ்ந்து வருகிறது. அதனால் இதனையும் நம்மால் தவிர்க்க இயல்வதல்ல. மேலும் இந்த சடங்கிற்கு மற்றவர்களை அனுப்புவதை விட நான் செல்வதே முறை எனத் தோன்றியது. அதனால் நான் வருவதாக வந்த காவலாளியிடம் வாக்குக் கொடுத்தேன். ’காலை சூரியன் உச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே இறுதி சடங்குகள்’ என அந்த ஓலையில் குறிப்பு இருந்தது.

ஃபாதர் ஜோசப், நான் என் துணைக்கு பிரிட்டோவை அழைத்தேன். இருவருமாக தனி குதிரைகளில் ஏறி சடங்கு நிகழும் இடத்திற்கு சென்றோம். ஒருவகையில் அவனை அந்த இக்கட்டில் மாட்டிவிட்டதற்கு நானும் ஒரு காரணம்” என்றார்.

அவர் சொல்ல வருவதை வைத்து அங்கே நிகழ்ந்தது எனக்கு உத்தேசமாக புரிந்தது. அவர் முழுமையாக பேசி முடிக்கக் காத்திருந்தேன்.

அவர் தொடர்ந்தார், “ஃபாதர் ஜோசப், இங்குள்ள இந்து மதத்தின் விசித்திர சடங்குகள் பற்றி அறிந்திருப்பீர்கள். இன்று காலை இறுதி சடங்கிலும் அப்படி தான் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் பின்பற்றப்பட்டது.

இந்த நகரில் இருந்து சிறிது தொலைவில் நீளமும், ஆழமும் கொண்ட ஒரு பெரிய குழி வெட்டப்பட்டு அதில் அதிக அளவில் விறகுகள் அடுக்கப்பட்டிருந்தன. மிகச் சிறந்த ஆடை அணிகலனுடன் கிழவர் சேதுபதியின் உடல் சிதையின் கீழே அடுக்கிவைக்கப்பட்டிருந்த விறகுகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அவரை சுற்றி எண் திசையிலும் குழுமியிருந்த பிராமணர்கள் மந்திரம் ஓத, அங்கு வெளியே சிறு விறகு கட்டைகளால் தீ மூட்டப்பட்டு அதன் மேல் நெய்யை ஊற்றி வழிப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நிகழ்விற்கு கிழவரின் முப்பத்தி ஆறு மறவர் படைப் பிரிவுகளை சேர்ந்த பத்தாயிரம் முதற் படை வீரர்களின் அணியும் திரண்டிருந்தது.

முதலில் வந்த படை தளபதியாகிய இருதால மருதப்ப தேவர் தனது வலது கையின் பெருவிரலை வாளால் கிழித்து இரத்தத்தை கிழவர் மேலிட்டு, ‘இனி என் உயிர் கிழவர் சேதுபதியின் பொருட்டும் அவரது தன்மானம் காக்கும் பொருட்டுமே என் எஞ்சிய வாழ்நாள் என்றும் இருக்கும்’ என்று சபதமேற்றார்.

அதன் பின் வந்த அவரது படைவீரர்கள் அனைவரும் அதே போல் செய்து, ‘ராம்நாட்டின் அரசையும், அதன் பெருமையையும் காக்கும் பொருட்டு மட்டும் இனி உயிர் வாழ்வோம்’ என உறுதி மொழிக் கூறினர்.

அதன்பின் ஒவ்வொருவராக விலகி சென்று சிதையின் அடியில் வைக்கப்பட்டிருந்த விறகுகட்டைகளில் தீயை மூட்டி, சிதையின் மேல் வரிசையாக விறகு கட்டைகளை அடுக்கி அந்த பெருங் குழி முழுவதையும் விறகால் நிரப்பினர்.

நான் அங்கு நின்ற விஜய ரகுராதரிடம் சென்று என் இரங்கலை தெரிவித்தேன். அவரிடமிருந்து மறுமொழி வரும் முன் அவர் கண்களைப் பார்த்தேன் அது கிழவரின் கடைசி மனைவியாகிய சுப்பு லெட்சுமியின் மீது நிலைத்திருந்தன. அப்போது தான் அவளைக் கவனித்தேன்.

உடல் அதிர அழுத கண்கள் வீங்கி அங்கே நின்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அங்கே என்ன சொல்லப்பட்டிருக்கும் என்பதை யாரும் சொல்லாமலே அறிந்திருந்தேன். அங்குள்ள அனைவரும் அறிந்திருந்தனர். மற்ற மனைவியருக்கு இல்லாத தனிப்பட்ட சலுகை அவளுக்கு அளிக்கப்பட்டிருக்கும். அவளை நான் பார்த்த போது அவள் கண்கள் தன்னை காக்கும் படி கெஞ்சின.

என் அருகே வந்து, ’என்னை இங்கிருந்து காப்பாற்ற தங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தயவுகூர்ந்து எனக்கு உதவுங்கள்’ என்றாள். அவள் வந்த போது அவளைச் சுற்றிய பாதுகாப்பு படையின் அரண் அவளைச் சுற்றி நின்றது. என் மேல் தன் கெஞ்சும் பார்வையை செலுத்தினாள்.

ஃபாதர் ஜோசப், என் கையறு நிலைக்காக அப்போது அந்த கணம் என்னை நானே தூற்றினேன். அதனை தடுக்க என்னால் முடிந்தவற்றை செய்ய மனம் வழித் தேடியது. அவள் மீது பச்சாதாபம் தோன்றினாலும் எனக்கான எல்லைகளை நான் அறிந்திருந்தேன். நான் எந்த எல்லை வரை அங்கே சுதந்திரம் பெற்றிருந்தேன் என்பது எனக்கு தெரியும் அதனை மீறும் போது ஏற்படும் விளைவுகளையும் நான் அறிந்திருந்தேன்.”

ஃபாதர் மார்ட்டினுக்கு மூச்சு வாங்கியது நான் சிறிது போர்த்துகீஸிய மதுவை ஒரு கோப்பையில் எடுத்து அவரிடம் நீட்டினேன். முதலில் வேண்டாம் என்றவர் பின் அதனை ஒரே மிடறில் குடித்து முடித்தார்.

அவர் தொடர்ந்தார், “ஃபாதர், அவள், அந்த பெண், சுப்பு லெட்சுமி அவளிடமிருந்து என் பார்வையை விலக்க விரும்பினேன். அவள் உடல் தரையில் படுத்து அழுதுக் கொண்டிருந்தன. அங்கிருந்து நான் கிளம்பியிருப்பதே நான் செய்திருக்க வேண்டியது ஆனால் இறந்தவர், இறப்பவருக்கான ஜெப பூஜையை நான் செய்வதாக ஒப்புக் கொண்டது மிச்சமிருந்தது. நான் சென்று பிரிட்டோவின் அருகில் நின்றுக் கொண்டேன், அவன் ஜெபித்துக் கொண்டிருந்தான். அந்த கணத்தில் அது ஒன்றே அவனால் செய்ய முடியுமென அப்போது எண்ணினேன். விஜய ரகுநாத சேதுபதி தன் வாளை கையில் ஏந்திக் கொண்டு அங்கே சிதைக்குழியின் அருகில் நின்றிருந்தான். அவர் விழிகள் சுப்பு லெட்சுமியையே வெறித்திருந்தன.

முதலில் கிழவரின் பட்டத்தரசியாகிய பெரிய துரைச்சி தன் கணவரின் வாளை ஏந்தி வந்து புதிய அரசராகிய விஜய ரகுநாத சேதுபதியிடம் நாட்டைக் காக்கும் பொருட்டு வாக்குப் பெற்றுக் கொண்டு வாளை வழங்கினார். அதன்பின் அங்கிருந்தவர்களை நோக்காதவளாக தலையை குனிந்துக் கொண்டு ஒரு சொல் எழாது தீ மூட்டப்பட்ட சிதையின் மேல் விழுந்தாள். அக்கணத்திலும் அவளிடமிருந்து ஒரு சொல்லோ, சிறு முனங்கலோ எழவில்லை. அதன்பின் சேதுபதியின் இரண்டாவது மனைவியாகிய கள்ளர் இனத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் சகோதரி சிவஞான நாச்சியார் உடன் வந்திருந்த தன் தமையனிடம் தன் அணிகலன்கள் அனைத்தையும் தந்துவிட்டு, அவர்களின் கடவுளின் பெயரைக் கூறிக் கொண்டு துணிவுடன் அரசரின் உடல் வைக்கப்பட்டிருந்த ஈம விறகு அடுக்கின் மீது பாய்ந்து உடன் கட்டையேறினாள். பின் ஒவ்வொருவராக வந்து ஒரு சொல்லும் சொல்லாது சிதையின் மேல் விழுந்தனர்.

நான் பிரிட்டோவை நோக்கினேன், முதல் அரசி விழுந்து எரியத் தொடங்கிய போதே அவன் உடல் சிறு நடுக்கத்துடன் ஜெபம் செய்ய தொடங்கியிருந்தது. அவன் அங்கிருந்தவனாகவே தெரியவில்லை. கண்கள் இரண்டையும் மூடி வேதத்தின் வசனங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனை அங்கே உடனழைத்துவந்திருக்கக் கூடாதோ என அப்போது தோன்றியது.

ஃபாதர் ஜோசப், எளிய மனம் கொண்டவர்கள் முன்னரே தங்கள் எல்லைகளை வகுத்துக் கொண்டவர்கள். அதனைத் தாண்டிச் செல்ல அவர்கள் மனம் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்களது வாழ்வில் அந்த எல்லை உடையும் தருணமும் அமையும். அதனை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை பொறுத்தே அவர்களது எஞ்சிய வாழ்க்கை.

கிழவரின் நாற்பத்தி ஆறு மனைவியரும் அந்த சிதையின் மேல் விழுந்து எறிந்தனர். சுப்பு லெட்சுமி அங்கிருந்த படைவீரர்கள் ஒவ்வொருவரின் காலையும் பிடித்து தன் உயிரைக் காக்கும் படி கெஞ்சினாள். ஒவ்வொருவரின் காலில் விழும் போதும் அவள் கண்கள் என்னை நோக்கி இறைஞ்சிக் கொண்டிருந்தன. உயிரின் வதையென்ன என அவள் அறியும் வயதை கடக்கும் முன்பே அந்த வதையை கண் முன் கண்டுவிட்டாள். அதனை தானும் அனுபவிக்கும் நிபந்தனைக்கும் ஆளாக்கப்பட்டாள். நான் அவள் விழிகளைத் தவிர்த்தேன்.

விஜய ரகுநாதரின் குரல் எழுந்தது. தன் படை வீரன் ஒருவனைக் கோபமாக அறைந்து, ’இழுத்து வா அவளை’ என்றார். அவர் குரலில் அவள் மீதான அத்தனை வன்மமும் தெரிந்தது.

ஒரு கணம் சுப்பு லெட்சுமியின் விழிகள் விஜய ரகுநாதரின் விழிகளை சந்தித்து மீள்வதைக் கண்டேன். அதன் பின் அவள் காரி உமிழ்ந்துக் கொண்டேயிருந்தாள். அவள் அருகே சென்றவர்கள் மீது உமிழ்ந்தாள். அவள் விழி நீரும், உமிழ் நீரும் கலந்து வடிந்துக் கொண்டிருந்தன. அவளிடமிருந்து கேவல் ஒலி மட்டுமே எழுந்தது. ஈரம் படிந்த மண்ணை அறைந்து அழுது, அங்குள்ள ஒவ்வொருவரையாக பார்த்து கேவிக் கொண்டிருந்தாள்.

ஃபாதர் ஜோசப் அங்கே என் கால்கள் நடுங்கத் தொடங்கின, இப்போதும் நடுங்கிக் கொண்டிருக்கிறது.” என்று ஆடிக் கொண்டிருக்கும் அவர் கால் சட்டையை உயர்த்தி கால்களை என்னிடம் காட்டினார் ஃபாதர் மார்ட்டின்.

அவருக்கு இன்னொரு மது கோப்பை தேவை என்பதை உணர்ந்தேன். நடுங்கிய கைகளோடு அதனைப் பெற்றுக் கொண்டார். அவர் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் தெரிந்தது.

”ஃபாதர் ஜோசப், நான் இப்போது சொன்னால் உங்களால் நம்புவதற்கு சிரமமாக கூட இருக்கும். ஒரு கணம் தான் ஒரே ஒரு கணம் தான் எனக்கு அதனை இப்போது தெளிவாகக் கூடச் சொல்லத் தெரியவில்லை. அந்த ஒரு கணத்தில் என்ன நிகழ்ந்ததென்று. அவள் அழும் சத்தம் கேட்டு என் அருகே நின்ற பிரிட்டோ கண்களைத் திறந்தான். அவன் திறந்தது தான் தாமதம் அங்கே அந்த மண்ணில் புரண்டுக் கொண்டிருந்தவள் எழுந்து அனைத்து படை வீரர்களையும் தள்ளிவிட்டு எங்களை நோக்கி ஓடி வந்தாள். ஒரு வினாடி அதிர்ந்து நின்ற விஜய ரகுநாதரின் மறவர் படையும் அவள் பின்னால் ஓடி வந்தது.

எங்களை நோக்கி வந்தவள் ஒரே எட்டாக பாய்ந்து பிரிட்டோவின் மேல் அணைத்து அவனை இறுகக் கட்டிக் கொண்டு, ‘என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்’ என வேண்டினாள்.

அந்த ஒரு கணம் தான் பிரிட்டோவின் விழிகள், சுப்பு லெட்சுமியின் விழியை சந்தித்தன. அவன் அங்கிருந்த யாரையும் நோக்கவில்லை, அவள் கைகளைப் பற்றிக் கொண்டு குதிரையில் ஏறி விரைந்தான்.” என்றார் ஃபாதர் மார்ட்டின்.

அதன்பின், “எத்தனை மடத்தனம் ஃபாதர், எத்தனை அபத்தம். அவனை இவர்கள் கொன்று விடுவர். வாழ வேண்டியவன். அவனை கொன்று விடுவர்” என அரற்றிக் கொண்டிருந்தார். அருந்திய மது வேலை செய்யத் தொடங்கியிருந்தது. சிறிது நேரத்தில் தூங்கிவிடுவார் என்பது தெரிந்தது. நான் அவரை நேராக படுக்கவைத்து கணத்த ஒரு போர்வையை அவருக்கு இட்டு அந்த அறையை சாத்திவிட்டு வெளியேறும் போது இரவு மணி பத்தை கடந்திருந்தது.

அவர் அறை வாசலிலேயே என் ஒற்றன் காத்திருந்தான். அவன் நற்செய்தியுடன் தான் வந்திருக்கிறான் என அவன் முகமே காட்டியது.

“நற்செய்தி தான் ஃபாதர் ஜோசப். இருவரும் இங்கிருந்து கிளம்பி தஞ்சையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர். நான் அவர்களை இறுதியாக தேவக்கோட்டை அருகில் உள்ள நம் கன்னி மாதா கோவிலில் சந்தித்தேன். அங்கே தேவனின் முன்னால் அவர்கள் இருவரும் கணவன், மனைவியாகினர். சுப்பு லெட்சுமியின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.” என்றான்.

படுத்திருந்த ஃபாதர் மார்ட்டின் எழுந்து, “தப்பித்துவிட்டார்களா. நான் எண்ணினேன். அவன் சாமர்த்தியசாலி. தப்பித்துவிட்டார்களா. இல்லை அவன் தலையை விஜய ரகுநாதர் கொய்துவிடுவார். தப்பித்துவிட்டார்கள். அவன் தலை, தப்பித்துவிட்டார்கள்… அவன் தலை.” என்று அரற்றிக் கொண்டு உறங்கத் தொடங்கினார். நான் அவர் அறையை சாத்திவிட்டு வெளியேறினேன்.

நானும் அவர்கள் தஞ்சையை நோக்கி செல்வார்கள் என ஊகித்திருந்தேன். மதுரை அவர்கள் உயிருக்கு ஆபத்தான இடம். சவக்குழியில் தானே சென்று மாட்டிக் கொள்வது. முன்னரே தஞ்சை நாயக்கருக்கும், கிழவன் சேதுபதிக்கும் தீராப் பகையிருந்தது நாடறிந்தது. இவர்கள் இருவருக்குமான பாதுகாப்பான இடம் தஞ்சையே அதை நோக்கி அவர்கள் சென்றுக் கொண்டிருந்தது எனக்கு சிறிது ஆசுவாசத்தை தந்தது. அந்த நல்ல செய்தியோடு படுக்கச் சென்றேன்.

இரவு இரண்டு நாழிகை நேரம் தான் தூங்கியிருப்பேன். என் ஒற்றனின் செய்தி என் அறையை அடைந்தது. தப்பி சென்ற இருவரும் காரைக்குடி அருகே சேதுபதியின் மறவர் படையால் சிறைவைக்கப் பட்டனர். அந்த இடத்திலேயே இயான் பிரிட்டோவின் தலை துண்டிக்கப்பட்டது. அவனது உடலை அங்கேயே எரித்துவிட்டனர். சுப்பு லெட்சுமி நாச்சியார் மட்டும் ராம்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறாள். உடன்கட்டைக்கான ஏற்பாடு மீண்டும் தொடங்கப்பட்டதாக செய்தி வந்தது.

செய்தி எனக்கு வரும் முன்னரே ஃபாதர் மார்ட்டினுக்கு சென்றிருந்தது. அவர் அரை தெளிவில் என் அறைக்குள் வந்து என்னை கட்டி அழத் தொடங்கினார். அவரை சமாதானம் செய்தேன். அவர், “நாம் உடனே கிளம்ப வேண்டும். நான் சென்று சுப்பு லெட்சுமியின் இறுதி சடங்கைப் பார்க்க வேண்டும்” என்றார். அவரின் செய்கை விசித்திரமாக இருந்தது. அந்த கணத்தில் சிறு குழந்தை போல் மாறியிருந்தார்.

நான் அவரை அழைத்து இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கே அவள் முகத்தைப் பார்த்தேன், அது எந்த சலனமும் இல்லாமல் நிலைத்திருந்தன. உடலில் எந்த நடுக்கமோ, தயக்கமோ ஏற்படவில்லை. அவள் அந்த சிதையில் விழுந்து எரியும் வரை ஃபாதர் மார்ட்டின் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பெரிய பள்ளத்தில் ஏற்படுத்தியிருந்த விறகு நெருப்பு அவளை உண்டுக் கொண்டிருந்தன. அவர் அவளது இறுதி ஒலி அடங்கும் வரை அவளையே நோக்கிக் கொண்டிருந்தார். அவள் இடது கையும் காலும் மட்டும் மேலெழுந்து நின்றுக் கொண்டிருந்தன. அந்த இறுதி கணம் வரை அவர் விழிகள் அவளைக் கண்டு நிலைத்து நின்றிருந்தன.

காலை உதயமாகத் தொடங்கியிருந்தது. நான் அவரிடம் ஒன்றும் பேசாது அருகில் நின்றேன். எல்லாம் முடிந்த பின்னர் அவர் “செல்வோம்” என செய்கைக் காட்டினார். இருவரும் குதிரையில் ஏறி சபைக்கு திரும்பினோம்.

ஃபாதர் மார்ட்டின், “ஜோசப், உனக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன். எலேனா ரேச்சல், நான் நேற்று சுப்பு லெட்சுமி ஓடி வந்து பிரிட்டோவை அணைத்த போது அவளைக் கண்டேன். அவள் விழிகளில் எனக்கு தெரிந்தது, நாம் ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் நகருக்கு கப்பலில் செல்லும் போது பின்னால் ஓடி வந்த எலேனா ரேச்சல் அப்ரகாமின் அதே விழிகள். காதல் அத்தனை அபத்தமானது ஜோசப். அத்தனை அபத்தமானது” என்றார்.

காலை சூரியனின் ஒளிகதிர்கள் அவர் முகத்தில் பட்டு கன்னத்தில் படர்ந்த நீர் அதில் மின்னிக் கொண்டிருந்தன.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் சிறுகதைகள், விமர்சனங்கள், நேர்காணல் செய்வதில் சமகாலத்தில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் பெங்களூரில் வேலை பார்க்கிறார்.

1 Comment

  1. உயிர்சேவைகளான உணவு, இறைப் போதனை ஆகியவற்றைத் தாண்டிய காதல் என்னும் உணர்வை பாதர் மார்டின் அஞ்சுகிறார். அதனைத் தனக்கான எல்லையாகக் கொண்டிருக்கிறார். எளியவனான இயான் பிரிட்டோ கண்களை மூடி ஜெபம் வாசிக்கும் போதே தனக்கான எல்லைகளைக் கண்டடைந்து கடந்து செல்கிறான். தான் வகுத்துக் கொண்ட எல்லையை வந்து ஊடறுத்துச் செல்லும் காதல் என்னும் நித்திய உணர்வைக் காட்டுகிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.