
அலான் டி பாட்டன் (1969 -) ஸ்விஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். காண்பியல் கலை சார்ந்து “கலையே உளசிக்கிச்சையாய்” எனும் நூலை எழுதியிருக்கிறார். கலாச்சாரம் மற்றும் மனித உறவுகள் பற்றி எளிமையும் ஆழமும்கூடிய மொழியில் நிறைய எழுதி வருபவர். “காதலின் காலம்” (The Course of Love) என்ற அவர் நூல் நவீன காலத்தில் காதல் மற்றும் திருமணத்தின் சிக்கல்களை பேசுகிறது. இதில், காதல் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு திறமையாக கற்றுக்கொள்ள வேண்டிய கலை எனச் சொல்கிறார். இக்கட்டுரையும் அவ்வரிசையில் வருவதே. – மொழிபெயர்ப்பாளர்
நம் வாழ்க்கையிலும் அது நடந்துவிடுமோ என நாம் நடுங்கும் விஷயங்களில் ஒன்று. அதை தவிர்க்க நாமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனாலும் அது நடந்தேறிவிடும். நமக்கு பொருத்தமற்ற ஒரு நபரையே நாம் திருமணம் செய்வோம். அதன் ஒரு பகுதி காரணம் இது. ஒருவரோடு நெருங்கிப் பழக முயற்சிக்கும்போதே, திகைப்படச் செய்யும் அளவிலான பலவிதமான சிக்கல்களும், எண்ணற்ற குழப்பங்களும் புலப்படத் தொடங்குகின்றன. சொல்லப்போனால் நம்மை முழுமையாக அறியாதவர்களுக்கு மட்டுமே நாம் இயல்பான நபராகத் தோற்றம் அளிக்கிறோம்.
நம்முடையதைவிட அறிவார்ந்த, சுய-விழிப்புணர்வுள்ள ஒரு சமூகத்தில், எந்தவொரு தொடக்கநிலை காதல் சந்திப்புகளிலும் கேட்கப்படும் வழக்கமான கேள்வி இதுவாகவே இருக்கக்கூடும்: உங்களிடமிருக்கும் கிறுக்குத்தனமான விசித்திர குணாதிசயங்கள் என்னென்ன?
ஒருவேளை நாமறியாத சில மனப்போக்குகள் நமக்குள் ஒளிந்திருக்கலாம். நமது கருத்துக்களோடு ஒருவர் உடன்படாதபோது மூர்க்கமடைபவராகவோ அல்லது பணிச்சூழலில் மட்டுமே நிம்மதியடைபவராகவோ நாம் இருக்கக்கூடும்; மோகம் கரைந்தபின் உணர்வுரீதியாக உறவுநெருக்கத்தை பேணுவதில் நமக்கு சிக்கல் இருக்கலாம் அல்லது அவமானப்படுத்தப்படும் போது எதிர்வினையாற்ற முடியாமல் ஸ்தம்பித்தபடி மவுனமடையும் நபராக நாம் இருக்கக்கூடும்.
இங்கு யாருமே பரிபூரணமானவர்கள் இல்லை. பிரச்சனை என்னவென்றால் திருமணத்திற்கு முன்பாக நம் அகச்சிக்கல்கள் அவ்வளவு உன்னிப்பாக ஆராயப்படுவதில்லை. நாமும் அந்த வலிமிகுந்த சுயபரிசோதனைக்கு தயாராக இருப்பதில்லை. எனவே அப்போதைய ஒரு முதிரா உறவில், ஒருவேளை நமது குறைகள் சுட்டிக்காட்டப்படும் அபாயம் ஏற்பட்டால்கூட நாம் நம் காதலரின்மேல் பழி சுமத்திவிட்டு அன்றோடு உறவு முறிவை அறிவித்துவிட்டிருப்போம். நம் நண்பர்களைப் பொருத்தவரை நமக்கு அறிவுறுத்தி மெருகேற்றும் கடினமான வேலையில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
நாம் நம்முடன் தனித்திருக்கும் இக்காலங்களில் நமக்கேற்படும் அதீத தன்னம்பிக்கைகளில் ஒன்று, நாம் எவருடனும் மிக எளிதாக சேர்ந்து வாழக்கூடிய நபர் என்னும் திடமான மனவுணர்வை அடைவது. இந்த விஷயத்தில் நம் வாழ்க்கைத்துணையும்கூட அவ்வளவு சுய புரிதலோடு இருப்பதில்லை. திருமணமான புதிதில் வழக்கம்போல நாமும் சில சம்பிரதாயமான புரிதல் முயற்சிகளை மேற்கொள்வோம். நம் இணையரது வீட்டிற்கு சென்று பழைய அலமாரியிடம் புகைப்படக் கதைகளையெல்லாம் கேட்டறிவோம். அவரது உறவினர்களையும் கல்லூரி நண்பர்களை சந்திப்போம். இவையெல்லாம் அவர்களை அறிந்துகொள்வதற்கு போதுமான உழைப்பை நாம் செய்துவிட்டதான ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடும். ஆனால் உண்மையில் நாம் எதையும் அறிந்துவிடவில்லை.
திருமணம் என்பது தங்களது சுயத்தைப்பற்றியோ மற்றவரது மனப்போக்கைப்பற்றியோ முழுமையாக அறிந்திராத அல்லது அறிவதை லாவகமாக புறந்தள்ளிவிட்ட இரு அன்னியர்கள் ஆடுகிற சூதாட்டம். அவர்களால் அத்தருணத்தில் கணிக்கவியலாத எதிர்கால சாத்தியங்களாலானது அது. எனினும் அது நம்பிக்கையும், அனுசரனையும், எல்லையற்ற கருணையும் கொண்ட ஒரு பணயச் செயலாக முடியலாம்.
வரலாற்றை திருப்பிப் பார்க்கும் போது, நீண்ட காலமாக பெரும்பாலான திருமணங்கள் நடைமுறைக் காரணத்துக்காக நடைபெற்றதாகவே தெரிகிறது. ஒருவரது நிலம் மற்றவருடைய சொத்திற்கு ஒட்டினாற்போல் இருந்ததற்காகவும், ஒருவரது குடும்பம் செழிப்பானதொரு தொழிலில் ஈடுபட்டுவந்ததாலும், ஒருவரது தந்தை அந்நகரின் நீதிமான் என்பதற்காகவும், ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையும் அரண்மனையையும் பொறுப்பான ஒரு நபரின் கையில் ஒப்படைப்பதற்காகவும் அல்லது இருவரது பெற்றோரும் ஒத்த சடங்குமுறைசார்ந்த மத மற்றும் கலாச்சார அடிப்படைகளை பின்பற்றியதாலும் திருமணங்கள் நடந்திருக்கிறன. பல்வேறு நடைமுறை ஒப்பந்தங்களாலேயே தம்பதிகள் இணைக்கப்பட்டனர்.
உணர்வுகளை புறந்தள்ளிய இப்படியான காரணம் சார் திருமணங்களில் தொடர்ச்சியாக தனிமையும், விசுவாசமின்மையும், வன்கொடுமைகளும், அனுதாபமின்மையும், துஷ்பிரயோகமும் கூச்சல்களும் மேலோங்கி அவை குழந்தைகளின் சிறுஉலகையும் வந்தறைந்தன. அப்போதைய நடைமுறை தேவையை மட்டுமே கருத்தில்கொண்டு முடிவான இவ்வகை காரணம் சார் திருமணங்கள்(marriage of reason) பற்றி, காலங்கள் கடந்து யோசிக்கும்போது யாருக்குமே அவை நியாயமானவையாக படவில்லை. சொல்லப்போனால் அவை பெரும்பாலும் அந்த நேரத்து பயன் நோக்கு சார்ந்தவையாகவும், நேர்மையற்ற சமயோசிதமாகவும், குறுகிய மனப்பான்மையாகவுமே தோன்றின. போலி பகட்டாகவும் சுரண்டலாகவும் தோன்றின .
இக்காரணங்களினாலேயே, பழைய சம்பிரதாய திருமணத்துக்கு மாற்றாக உருக்கொண்ட – உணர்வுசார் திருமணம் (marriage of feeling) – எந்த விளக்கமும் தேவைப்படாததாக தன்னை கருதியது. எந்த தர்க்கப்பூர்வமான கேள்விக்கும் அது “உணர்வை” எதிர்நிறுத்தி ஜனநாயகப்பூர்வமான சாதாரண பேச்சுவார்த்தைகளுக்குக்கூட இடங்கொடுக்க மறுத்துவிட்டது. இவ்வகை உணர்வுசார் திருமணங்களின் பிரதான சூத்திரம் என்பது, அதீத மனவெழுச்சிகளால் ஈர்க்கப்பட்ட இரண்டு நபர்களுடைய உள்ளுணர்வு அவர்கள் இதயத்தில், இவரே தனக்கானவர் என்று மற்றவரை ஆழ முத்திரையிடுவதை சாட்சிப்படுத்துவது மட்டுமே – எந்த ஐயமுமின்றி அவர்களது திருமணங்கள் உடனடியாக சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
எவ்வளவுதூரம் ஆபத்து மிக்கதாகவும் நடைமுறை இடர்களுடையதாகவும் ஒரு திருமணம் இருக்கிறதோ அவ்வளவுதூரம் அது உண்மையானதென்றும் பாதுகாப்பானதென்று ஒரு நம்பிக்கை வந்துவிடுகிறது (ஒருவேளை அவர்கள் சந்தித்து ஆறுமாதங்கள்கூட இன்னும் முடிவடையாமல் இருக்கலாம்; ஒருவர் வேலையில்லாதவராக இருக்கலாம் அல்லது இருவருமே இன்னும் தங்களது பதின்ம பருவத்திலிருந்தே வெளிவராதவர்களாகக்கூட இருக்கலாம்). காரணம் சார் திருமணங்கள் வினையூக்கிய எல்லா துயரங்களுக்கும் துலாபாரத்தின் எதிர்த்தட்டில் வைக்கப்பட்டதென்னவோ உன்னதமாக்கப்பட்ட பொறுப்பின்மைதான். தர்க்கம் என்பது ஒரு கணக்காளரின் வறட்டு கோட்பாடு போல உணர்வுகளுக்கு எதிரானதாக ஒன்றாக கருதப்பட்டு வீசியெறியப்பட்டது. உள்ளுணர்வு ஒன்றே போதும் என்ற திடத்துடன் அது முன்னேறிக் கொண்டே சென்றது. உள்ளுணர்வுக்கு கிடைத்திருக்கும் அந்தஸ்து என்பது பல நூற்றாண்டுகளாக நிலவிய காரணமற்ற காரணத்துக்கு எதிரான ஒரு வலிமிகு எதிர்வினை மட்டுமே.
திருமணம் என்பது மகிழ்ச்சியை தேடியடையும் முயற்சி என நாம் நம்பினாலும். அது அவ்வளவு எளிமையானதல்ல. உண்மையில் நாம் தேடுவது பரிச்சயத்தினையே. அதன் சிக்கல் என்னவென்றால் மகிழ்ச்சிக்கான நம் எல்லாத் திட்டங்களையும் அது குழப்பிவிடும். பால்யத்தில் நம்முள் ஆழ பதிந்திட்ட உணர்வுகளையே,வயதுவந்த பின்னான காதல் உறவுகளிலும் உருவாக்க முற்படுகிறோம்.
சிறுவயதில் நம்முள் அன்பின் இலக்கணமாக அழுத்தமாக எழுதப்பட்ட அடிப்படைகளை, அவை அழிவைத் தரும் மோசமான பண்புக்கூறுகள் என்றறியாமல் நாம் குழப்பிக்கொள்வது சாதாரணமாக நடக்கிறது. உணர்ச்சிபொங்க அரற்றிக்கொண்டிருந்த அன்னையை அமைதிப்படுத்த உதவியதை, தான் வழங்கிய அன்பாக ஒருவர் சிறுவயதில் வகுத்துக் கொண்டால், அந்த குழந்தைப் பருவப் புரிதல் அவர் இணையரை ஆற்றுப்படுத்துவதற்கான சமயத்தை எதிர்நோக்கியபடி இருக்கும். அதை அன்பை வெளிக்காட்டும் தருணமாக எண்ணி ஏங்கும். யாருக்கும் உதவிசெய்ய அவசியமற்ற இடத்தில் இவர்களது காதல் குழம்பிப்போகும்.இதற்கு நேர்மாறாக பெற்றோர்களின் அரவணைப்பு அதிகம் கிடைத்திராத ஒருவர் இப்போது இன்னொருவரின் அண்மையையும் அவரது உதவியையும் நாடுபவராக இருக்கக்கூடும். அந்த நாட்டத்தை பூர்த்திசெய்வதே அன்பு என்றும் குழப்பிக்கொள்ளக்கூடும். இப்படி ஏக்கத்தை வெளிப்படுத்துபவர்கள் இணையரின் கோபத்தைக்கண்டு அஞ்சுபவராக இருக்கலாம். அவற்றை இயல்பென கருதி அதை தணியவைக்க போராடவும் செய்யலாம். ஒருவர் தன் சுய விருப்பு வெறுப்புகளை பகிர்வதைக்கூட தவிர்க்கும் மனநிலையில் இருக்கலாம். அல்லது கையாளும் திறனற்றவராக இருக்கலாம்.
சமநிலையோடிருக்கும், முதிர்ச்சியான ஒரு நபரை நாம் நிராகரிக்கக் காரணம் அவர் தவறானவர் என்பதல்ல; அவர் நமக்கு மிகை ஒழுக்கம் கொண்டவராக தோன்றுவதே. சொல்லப்போனால் புரிந்துகொள்ளக்கூடியவராகவும் நம்பகத்தன்மையோடும் இருக்கும் ஒரு நபர் நமக்கு மிகவும் அன்னியமாகத் தோற்றமளிக்கக்கூடும். நாம் தவறான நபரை திருமணம் செய்வதற்கான காரணம், காதலிக்கப்படுவதை மகிழ்ச்சியுடன் நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியாமல் இருப்பதே. நாமும் நிச்சயம் தவறுகள் செய்வோம்; ஏனென்றால் நாம் அவ்வளவு தனிமையில் இருந்திருக்கிறோம். தனிமையிலேயே வாழ்வதை தாங்கிக் கொள்ளமுடியாமல் ஆன தருணத்தில் ஒரு துணையை தேடுபவருக்கு முழுமையான தெளிவுடன் முடிவெடுக்கும் மனநிலை வாய்த்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு சரியான தேர்வை மேற்கொள்வதற்கு, நீண்ட காலத் தனிமையிலும் நாம் நிறைவான மகிழ்சியும் நிம்மதியும் உடையவராக இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், நாம் தனிமையில் இல்லை என்ற எண்ணத்தை விரும்ப ஆரம்பித்துவிடுவோம். அந்த விதியிலிருந்து நம்மை மீட்டவரை நேசிப்பதைக் காட்டிலும்.
கடைசியாக, நம்மை மெய்சிலிர்க்கச்செய்த தருணங்களில் நமக்கேற்பட்ட ஒரு நல்ல உணர்வை நிரந்தரமாக்கிக்கொள்ளவே திருமணம் செய்கிறோம். முதன்முதலில் ஒருவரை வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்வதைப் பற்றி எண்ணிய தருணத்தில் நாம் உணர்ந்திட்ட அகக்களிப்பை விஸ்தீரணம் ஆக்கிக்கொள்ள திருமணம் வழிகோலும் என நாம் எண்ணுவோம். ஒருவேலை அச்சமயத்தில் நாம் வெனிஸ் நகர காயல் ஒன்றில் இயந்திரப்படகில் சென்றுக் கொண்டிருக்கக்கூடும். மாலை சூரியனின் பொன்னிறக் கதிர்கள் கடல் முழுக்க மினுமினுப்பதை ரசித்தபடி அமர்ந்திருந்திருக்கக்கூடும். அடுத்தபடியாக சுவையான இரவு விருந்திற்கு செல்லும் சாத்தியத்தை விவாதித்திருக்கக்கூடும். இருவரது ஆன்மாவும் பிணைந்துருகும் அலாதியான, இதற்குமுன் எவருக்கும் அமைந்துவிட்டிருக்காத இசைவு தமக்கு அருளப்பட்டுவிட்டதை எண்ணி வியப்பு மேலிட்டிருக்கும். இவ்வகையான உணர்வெழுச்சிகளை நிரந்தரமாக்கிக்கொள்ளவே நாம் திருமணம் செய்துகொண்டோம். ஆனால் இவ்வுணர்வுகளுக்கும் திருமணம் என்னும் நிறுவனத்திற்கும் இடையில் எந்தவொரு உறுதியான பிணைப்பும் இல்லாதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.

உண்மையில், திருமணம் நம்மை வேறொரு தளத்தை நோக்கியே தள்ளிவிடுகிறது. ரொம்பவும் வித்தியாசமான மிகுந்த நிர்வாகரீதியானதான ஒரு தளம் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது. போக்குவரத்துக்கு நேரமெடுக்கிற நீண்ட தூரத்தில் உள்ள ஒரு புறநகர் வீடு, நம் பொறுமையை சோதனைக்குட்படுத்தும் குழந்தைகள் போன்றவை நமக்கு காத்திருக்கலாம். பெரும் அகக்களிப்பின் விளைவாக தோன்றிய அக்குழந்தைகள் நம்மை ஒருபோதும் களிப்படைய விடாமல் பார்த்துக்கொள்ளக்கூடும். இதில் மாறாமல் இருக்கும் ஒரேயொரு அம்சம் நம் இணையர் மட்டுமே. ஆனால் அது ஒரு தவறான தேர்வாக இருக்கலாம். ஜாடிக்கு பொருந்தாத மூடிப் போல.
நற்செய்தி என்னவென்றால் நாம் ஒரு பொருத்தமற்ற தவறான நபரை திருமணம் செய்திருப்பதை கண்டறிந்தாலும் அது பொருட்படுத்தத்தக்க விஷயம் இல்லை. ஏனென்றால் கடந்த 250 ஆண்டுகளாக நம் அன்பின் வாசல்களை ஆக்கிரமித்தபடி நிற்கும் கற்பனாவாத(romanticism) கோட்பாடுகளே இவற்றுக்கான அடித்தளம். நம் எல்லா தேவைகளையும், ஏக்கங்களையும் பூர்த்திசெய்துவிடக்கூடிய முழுமுற்றான அந்த பூரணமான நபர் எங்கோ நிச்சயம் இருக்கிறார் என்னும் திருமணம் பற்றிய மேற்கத்திய புரிதலை கற்பனாவாதமே உண்டுபண்ணிற்று.
நாம் இப்போது அணிந்திருக்கும் இந்த கற்பனாவாதக் கண்ணாடியை தூற எரிந்துவிட்டு துன்பியல் (tragic) (சிலவேளைகளில் நகைச்சுவைப்) புரிதலை பிரதிபலிக்கும் ஆடியை தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனென்றால் எல்லா மனிதர்களும் பொறுமையற்றவர்கள்; கோபமும், எரிச்சலுணர்வும், கிறுக்குத்தனமும் நிறைந்தவர்களே என்னும் புரிதலை அவையே நமக்கு வழங்கமுடியும். நாமும் அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதில் சளைத்தவர்கள் அல்ல. சொல்லப்போனால் நம் வெறுமையுணர்வும் நிறைவின்மையும் எந்நிலையிலும் முடிவுபெற வாய்ப்பில்லை. அவை வழக்கத்திற்கு மாறானவை அல்ல என்பதனாலே, அவை விவாகரத்து கோருவதற்கான காரணமும் அல்ல.
யாருடன் நம் வாழ்க்கையை தொடரலாம் என்று தேர்ந்தெடுப்பது, குறிப்பிட்ட எவ்வகையிலான வேதனைகளுக்கு, தியாகங்களுக்கு நம்மை தயார் செய்யலாம் என்று முடிவெடுப்பது மட்டுமே. இந்த அவநம்பிக்கைவாத தத்துவம் (philosophy of pessimism) திருமண வாழ்வை சூழ்ந்திருக்கும் பல்வேறு துயர நிலைக் குலைவுகளுக்கும், நிம்மதியிழப்புகளுக்குமான தீர்வை முன்வைக்கிறது. இது ஒருவேளை விசித்திரமாகக்கூட தோன்றலாம். ஆனால் அவநம்பிக்கைவாதம் திருமணத்தைச்சுற்றி கற்பனாவாத கலாச்சாரம் உருவாக்கிய மிகைக்கற்பனை சார்ந்த அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. நமது துயரங்களிலிருந்தும், மனச்சோர்விலிருந்தும் நம்மை காப்பாற்றத் தவறிய அந்த குறிப்பிட்ட இணையரின் தோல்வியை அவருக்கெதிரான வாதமாக உருப்பெறச்செய்வது சரியானதல்ல. அதைப்போலவே அது அவ்வுறவு தோற்றுவிட்டதற்கான அறிகுறியோ அல்லது அது சரி நிகரான வேறொரு துணையை தேடுவதற்கான காரணமோ அல்ல.
நமக்கு எல்லாவகையிலும் பொருத்தமான நபர் என்பவர் நிச்சயமாக நம் எல்லா ரசனைகளுடனும் ஒத்துப்போகக்கூடியவர் அல்ல. ஏனென்றால் அப்படி ஒருவர் ஏனோ இவ்வுலகில் உண்மையிலேயே உதிக்கவில்லை. நமது ரசனைகளிலுள்ள வேறுபாடுகளை அறிவாற்றலுடன் இணக்கமான மொழியில் பேச்சுவார்த்தையாக முன்னெடுக்கக்கூடியவரே நமக்கு பொருத்தமானவர் – மாற்றுக்கருத்துக்களை இணக்கமாக முன்வைக்கும் நபர்.
‘தன்னில் சரிபாதி’ என்கிற ஏட்டில் மட்டுமே மிளிரக்கூடிய ஒரு குறுட்டு நம்பிக்கையை விடுத்து வித்தியாசங்களை பரந்த மனத்துடன் தாங்கிக்கொள்ளும் திறன் படைத்தவரே ‘அப்படியொன்றும் நமக்கு பொருத்தமில்லாதவர் அல்ல’ என்னும் விதிக்கு சரியாகப் பொருந்துபவர். இணக்கத்தன்மையும் பொருத்தமும் அன்பினூடாக உதயமாகுபவை; அவை நிச்சயமாக முன்நிபந்தனைகள் அல்ல.
கற்பனாவாதம் நமக்கு கைகொடுக்கவில்லை; சொல்லப்போனால் அது கண்டிப்பு வாய்ந்த ஒரு இரக்கமற்ற தத்துவம். நாம் திருமண வாழ்வில் சந்திக்கும் பல்வேறு இடர்பாடுகளையும் (அவை வாழ்க்கைப்போக்கில் சாத்தியமுள்ள சாதாரண நிகழ்வுகளாகக் கருதிக்கொள்ளவிடாமல்) அது அபூர்வமான விதிவிலக்குகளாக எண்ணி மிரளச்செய்துவிடுகிறது. கடைசியாக குறைபாடுகளோடு இருக்கும் நம் மண உறவு சரியானதல்ல என்று நம்மையே நம்பவைத்துவிடுகிறது. பொருந்தாதத் தன்மைக்கும் நம் மனதில் இடமளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்; நகைச்சுவை நோக்கையும், மன்னிக்கும் மனப்பான்மையையும், கனிவான பார்வைக் கோணத்தையும் வளர்த்தெடுக்க முயற்சிக்க வேண்டும் –நம்மிலும் நம் இணையரிலும்.

தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.