/

நீர்வை பொன்னையன் கதையுலகு: ஜிஃப்ரி ஹாஸன்

முற்போக்கின் ஏற்றமும் இறக்கமும்

நீர்வை பொன்னையன், 1960களில் எழுத வந்த ஈழப் படைப்பாளிகளுள் ஒருவர். இடதுசாரிச் சித்தாந்தத்தின் கலை வடிவமாகத் தங்கள் புனைவுகளை ஈழப்படைப்பாளிகள் முன்வைத்துக்கொண்டிருந்த முற்போக்குக் காலகட்டத்தில் அதனைத் தீவிரமாகச் சித்தாந்தரீதியாகவும், படைப்புரீதியாகவும் அங்கீகரித்துக்கொண்டு எழுதவந்தவர்களில் முதன்மையானவர் நீர்வை பொன்னையன். தனது படைப்புலகின் மையமாக முதலாளி x தொழிலாளி வர்க்க முரண்களின்மீது கட்டமைக்கப்பட்ட சமூகப் பொருளாதார, சாதிய அடுக்குமுறையில் கீழ்நிலையிலிருக்கும் எளிய மனிதர்களின் வர்க்கப் போராட்ட வாழ்க்கையை முன்வைக்கும் கருவியாகப் படைப்புகளை நீர்வை முன்னிறுத்தினார்.

இலக்கியச் செயற்பாடுகளைத் தாண்டி இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தார். இலங்கையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்று செயற்பட்டிருக்கிறார். இந்தியா- கல்கத்தாவில் உயர் கல்வி கற்றவர்; ஆங்கில மொழி அறிவும் கொண்டவர். ஆழமான வாசிப்புடையவர் என்பது அவரது புனைவுகள், அபுனைவுகள் வழியே புரிந்துகொள்ள முடிகிறது.

முற்போக்குக் காலகட்டத்தில் நல்ல புனைவுத் திறனோடு கதைகளை எழுதிய வெகுசில ஈழப்படைப்பாளிகளுள் ஒருவர். ஈழத்தின் மிக முக்கிய படைப்பாளியாக முற்போக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்ட நீர்வை பொன்னையன் படைப்புகளின் இலக்கியத் தரம், அழகியல், கதையுலகு ஆகியவற்றைப் பற்றிய மதிப்பீட்டைப் பகிர்ந்துகொள்கிறது.

நீர்வையின் படைப்புகளை வாசிக்கும்போது, ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற திக்கில் படைப்பாளிகளாக அங்கீகாரம் பெற்று நிலைபெற்றுவிட்ட ’பல்வேறு படைப்பாளிகளுள்’ ஒருவர்தானா நீர்வை? ஈழ இலக்கியத்தில் அவரது இடம் என்பது அவரது பெரும்பாலான படைப்புகள் கொண்டிருந்த முற்போக்கு அரசியல் கருத்தியல் அடிப்படையில் மட்டுமே நிறுவப்பட்ட ஒன்றா? அல்லது அவரது படைப்பாற்றல், இலக்கிய அழகியலின் அடிப்படையில் நிறுவப்பட்ட இடமா ஆகிய கேள்விகளிலிருந்தே அவரது படைப்புலகை அணுக வேண்டியுள்ளது.

நீர்வை பொன்னையனின் படைப்புலகு மேடும் பள்ளமும், உதயம், பாதை, காலவெள்ளம், நிமிர்வு, பாஞ்சான், வேட்கை, ஜென்மம் போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலானது. புனைவுகள் தவிர சில கவனிக்கத்தக்க அபுனைவுகளும் எழுதி இருக்கிறார். மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார்.

இடதுசாரிய அரசியல் செயற்பாட்டாளரான நீர்வை அடிப்படையில் கொள்கைரீதியாக கம்யூனிஷ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர். எனது இலக்கியத்தை அரசியலே வழிநடாத்துகிறது என வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்ட அவர் தனது படைப்புகளை முற்போக்கு அரசியலின் பிரச்சாரக் கருவியாகவே பயன்படுத்தினார். பொதுவாக, இவருடைய கதைகள் சாமான்ய மனிதர்களின் வாழ்க்கையை வெளிப்படையாக முன்வைப்பவை. தொழிலாளர்கள், சாதியப் படிநிலையின் விளிம்பில் இருப்பவர்கள், பெண்கள், குழந்தைகள் என இவரது படைப்புலகின் மனிதர்கள் ஒடுக்குமுறையின் அழுத்தங்களுக்குள்ளானவர்கள். அதேநேரம், சாதாரண பொது வாழ்க்கையில் கரைந்துவிடாத இலட்சிய வேட்கை கொண்டவர்கள். சமூக சமத்துவத்துக்கான போராளிகள்.

தனது அரசியல் செயலியக்கத்தின் வழியேயும், படைப்புகளின் வழியேயும் தன்னைத் தீவிர முற்போக்காளராக நிறுவிக்கொண்ட நீர்வை சமூக அசமத்துவத்துக்கெதிரான கொந்தளிப்பு மனநிலையுடனேயே இருந்திருக்கிறார். அதுவே அவரது படைப்புலகின் நிலைத்த தன்மையாகவும் வெளிப்படுகிறது. அதுவே ஈழத்து முற்போக்குப் படைப்பாளிகளின் மொத்தப் படைப்புகளினதும் அடித்தளமுமாகும். இத்தகைய மனிதர்களையும் வாழ்க்கையையும் குரலையும்தான் அவர்கள் தங்கள் படைப்புகளில் திரும்பத்திரும்ப ஒலிக்கவிட்டனர்.

தற்கால ஈழ அரசியல் நாவல்கள் ஒரே வாழ்க்கையையும், ஒரே மனிதர்களையும் திரும்பத்திரும்ப ஒரே கோணத்தில் மேலோட்டமாக முன்வைக்கிறனவோ அது போன்றவொரு நிலைமைதான் ஈழத்து முற்போக்கு யுகப் படைப்புகளிலும் வெளிப்பட்டது. மனித வாழ்க்கையின் முழுச் சாரமும் முதலாளி-தொழிலாளி வர்க்க முரண்களின்மீது கட்டமைந்திருந்தது. மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர மாற்று இரசனையுள்ள வாசகர்களுக்கு எந்த விருந்தையும் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் இந்த உண்மையை இன்றுவரை மறுக்கின்ற, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற ஒரு தலைமுறை இன்றும் ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையால் ஈழ முற்போக்குக் கதைகள் மறுவாசிப்புச் செய்யப்பட்டு அவற்றின் இலக்கியத் தரமும் அழகியலும் மதிப்பீடு செய்யப்படும்போது படைப்பு நீர்த்துப்போய்விடும் நீர்த்துப் போய்விடும் என்ற அச்சம்தான் அவர்களைக் கலங்கடிக்கிறது.

நீர்வையின் படைப்புலகில் வரும் எளிய சாமான்ய மனிதர்களில் சிலர் நீர்வைக்கிருந்த கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து நிற்பவர்கள். இதனால் அவர்கள் இயல்பான மனிதர்களாக இல்லை. மாபெரும் கனவுகளையும் தங்களுக்குத் தெரியாத கனவுலகையும் கண்களில் தேக்கி வைத்திருக்கிறார்கள். வர்க்க முரண், தொழிற் சங்கம், தொழிலாளர் ஒற்றுமை, பகிஷ்கரிப்பு போன்ற தங்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு தோற்றப்பாட்டைத் தத்தம் தோள்களில் சுமந்து திரியும் சாமான்ய மனிதர்களை நீர்வையும் அவரது சக எழுத்தாளர்களும் எந்த விசாரணையுமின்றி உருவாக்கிக்கொண்டே இருந்தனர். துரதிஸ்டம் இந்த இலக்கியப் படைப்புகளால் ஒரு புரட்சியாவது ஈழத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. முற்றிலும் இந்த இலக்கிய இயக்கத்துக்கு வெளியேதான் அப்போதைய இடதுசாரி இயக்க அரசியல் தீர்மானங்களால் சில தொழிலாளர் பேரணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

முற்போக்குப் படைப்புகள் குறித்த இந்தப் பார்வை ஈழத்து முற்போக்குப் படைப்பாளிகளை அவமானப்படுத்துவதாகவும் சிறுமைப்படுத்துவதும் நமது நோக்கமல்ல. புனைவில் நாம் அந்தக் காலகட்டத்தில் என்ன சாதித்திருக்கிறோம்? நமது அடைவுகள், அதன் தொடர்ச்சி ஆகியவற்றைப்பற்றிப் புரிந்துகொள்வதற்கு இந்த மறுவாசிப்பும் மதிப்பீடுகளும் தேவையாகவுள்ளன.

ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களின் பெரும்பாலான படைப்புகளில் சித்திரிக்கப்படும் அதே வாழ்வியல்தான் நீர்வையிடமும் வெளிப்படுகிறது. மனித வாழ்வு குறித்த கூர்மையான நோக்குகள், அகவிசாரணைகள், ஆழமான தத்துவார்த்த முன்வைப்புகள் என எதுவுமற்ற தட்டையான மேலோட்டமான விவரணங்களால் ஒரு காலகட்ட மனித வாழ்வை அவர் பேசுகிறார். ஆயினும் அவர் வ.அ. இராசரத்தினம் போன்ற முற்போக்காளர்களிடமிருந்து விலகும் ஒரு புள்ளியாக அவரது கதைமொழியைச் சொல்லலாம். நீர்வை வலுவான புனைவாற்றல் கொண்டவர். இலக்கியத் தரமும் அழகியலும் அவரது சிறுகதைகளை மேம்பட்டதாக்குகிறது.

அவரது மேடும் பள்ளமும் கதை மிகச் சாதாரணமாக மேலே எனது மதிப்பீடுகளை நிரூபிக்கும் கதையாக இருக்கிறது.

இக் கதையின் சாதிய அடக்குமுறை, விளிம்புகளின் துயரம் போன்றன கதையின் மையமாக இருக்கும் அதேவேளை நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் எதிர்க்கும் தொழிலாளர் எழுச்சியையும் முடிவாக முன்வைக்கிறது. மேடும் பள்ளமும் எப்படி சமமற்ற நிலமாகத் தெரிகிறதோ அப்படித்தான் சாதிய அடிப்படையிலும் மேல்சாதி கீழ்சாதி என்ற அடுக்கமைவு, அதுபோலவே வர்க்கப் பிரிவுகள். நிலப்பிரபுக்கள்-கூலியாள் என்ற முரண் அரசியல் என்று நிலம் போல் சமூகமும் அசமத்துவமாக, பிற்போக்கானதாக கிடக்கிறது என்பது கதையின் மையமாகும்.

கதையில் வரும் அருணாசல உடையார் நிலச்சுவாந்தராக இருக்கிறார். அருணாச்சல உடையாரின் எடுபிடியான கணபதி எனும் தொழிலாளி நாங்கள் நயினாருடைய உப்பையல்லவா திண்டு வாழ்றம்என அடிக்கடி சொல்லிக்கொள்பவன். இந்தக் குரலுக்குப் பின்னாலிருப்பது வெறுப்போ கோபமோ இல்லை. ஒருவித நன்றி உணர்ச்சிதான் அந்தக் குரலில் நிறைந்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் கணபதிகள் அந்த வாழ்க்கையைக் குறித்துத் திருப்திகொண்டிருந்தார்களா?

ஆனால் கதையின் நடுவே திடீரென்று அருணாச்சல உடையார் தமிழ்த் திரைப்படப் பாணி வில்லனைப் போன்று வில்லங்கம் செய்யத் தொடங்குகிறார். கணபதி அவரது நிலத்தில் வயல் செய்து நல்ல விளைச்சல் கண்டு அறுவடை நெருங்கும் காலத்தில்தான் வழமையான முற்போக்குப் பாணியில் உடையாரை வில்லங்கமான முதலாளியாக்கி விடுகிறார் நீர்வை. வயல்நிலத்துக்குச் சொந்தக்காரனான அருணாச்சலம் உடையார் கணபதியிடம் சென்று குத்தகைப் பணத்தை உடனடியாகத் தர வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்கிறார். அவன் அறுவடைக்குப் பின்னர்தான் தன்னால் பணம் தர முடியும் என்கிறான். எவ்வளவு கெஞ்சியும் அவர் கேட்கவில்லை. உடனே தர முடியாவிட்டால் அறுவடையை தானே செய்யப் போவதாகச் சொல்கிறார். இந்த உழைப்புச் சுரண்டல் ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் பாலியல் சுரண்டலும் நிகழ்கிறது. கணபதியின் இளம் மனைவியான வௌ்ளச்சியைப் பாலியல் உறவுக்கு உடையார் பல தடவைகள் அழைத்தும் அது நடைபெறாமலே போகிறது. அதற்கான வன்மம் உடையார் மனதில் வெறியாகிறது. அதன் விளைவுதான் இந்தப் பலி.

இப்படி அறுவடைக்காலத்தில் முதலாளிகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைத்தான் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் நெடுகிலும் கண்டுவருகிறோம். எனவேதான் முற்போக்குப் படைப்புகள் ஒரேவகையான வாசிப்பனுபவத்தையே வாசகருக்கு ஏற்படுத்துவதாகச் சொல்லத் தோன்றுகிறது. மிகச் சொற்பமாகவே வேறு தளங்களிலான அனுபவங்கள் கிடைக்கின்றன. நீர்வையின் மொத்தக் கதைகளிலும் மிகச் சொற்ப அளவான கதைகளே முதலாளி x தொழிலாளி முரணிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றன. எனினும் இத்தகைய கதைகள் நமக்குச் சொல்ல வரும் பொது உண்மை என்பது இந்த நிலப்பிரபுத்துவ மனப்பாங்குதான். எல்லா நிலச்சுவாந்தர்களுக்குள்ளும் இருந்தது, தொழிலாளர்களின் கனவுகளுக்கும் உணர்வுகளுக்கும் அவர்கள் ஒருபோதும் இடமளித்ததே இல்லை என்ற சமூக யதார்த்தம்தான்.

நீர்வை கதையை அழகாக நகர்த்திச் சென்று, முற்போக்காக முடிக்க வேண்டிய கட்டாயத்தால், சிறார் கதை போன்ற முடிவுக்குச் சென்று விடுகிறார். இத்தகைய முடிவுகள் பல கதைகளின் ஆன்மாவையே அழித்துவிட்டிருக்கின்றன. இந்த அவலம் மொத்த ஈழ முற்போக்குப் படைப்புகளினதும் பொதுச் சித்திரம். கொஞ்சம் வித்தியாசமாகக்கூட சொல்லமாட்டார்களா என்ற நம் எதிர்பார்ப்பு தொடர்ந்தும் தகர்ந்துகொண்டே போகிறது. வ.அ. இராசரத்தினத்தின் அப்துல்லாவுக்கும் நீர்வையின் கணபதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களின் கனவுகளும் ஏமாற்றங்களும் ஒன்றுதான். வயல் பொய்த்துப் போவதால் சிதைவுறும் கனவுகள் அவர்களுடையவை. அல்லது முதலாளித்துவச் சுரண்டல்களால் சூறையபடப்படுபவை என ஒரு குறித்த வட்டத்துக்குள் மட்டுமே நின்றுகொண்டிருக்கின்றன.

கதையின் முடிவு ஒரு புரட்சிக்கான அறைகூவலாக இருக்கிறது. தொழிலாளர்கள் ஒன்றுபடுவதன் மூலம் நிலப்பிரபுத்துவத்துக்கு முடிவு கட்டிச் சமூகசமத்துவத்துக்கான நிலையை எட்ட முடியும் என்ற எளிய அரசியல் சூத்திரமே கதைக்கரு.இந்தப் பிரச்சார அரசியலுக்குள் எளிய மனிதர்களின் அகங்களும் முகங்களும் இரத்தமும், சதையுமாக வெளிப்படாமை பெருத்த ஏமாற்றமாகும்.

பனஞ்சோலை கதை இலக்கிய அழகியலும் புனைவுத்தன்மையும் கொண்ட கதை. நீர்வை ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் என்பதற்கு ஆதாரமான கதைகளுள் அதுவும் ஒன்று. ஒரு பெண்ணின் காதலை, மனவுணர்வுகளை, பரிதவிப்பை, தன் சொந்த கிராமத்தை விட்டும் காதலை விட்டும் விலத்திக் கொண்டுசெல்லப்படும் அவளின் உணர்வுகளை அழகிய மொழிப்பாவனையால் காட்சிப்படுத்தும் கதை.

பெண் மீதான கருணை வெளிப்படும் அதே இடத்திலிருந்து அதற்கு எதிர்முகத்தையும் காட்டிவிடுவார். சோறு கதையில் இப்படி ஒரு விவரணத்தை எழுதுகிறார் –

 “வானம் பார்த்த பூமி. தனது மலட்டுத் தனத்தை எண்ணிப் பெருமூச்சுவிடும் பெண்ணைப்போல என்று எழுதுகிறார். அவரது முற்போக்குக்குள் மலட்டுப் பெண் என்ற இளக்காரமான பிற்போக்குப் பார்வை ஒன்றும் மறைந்திருக்கிறது.

ஆனாலும் சோறு என்ற கதை இந்த விவரணத்தோடு சுருக்கிவிடக்கூடியதல்ல. அதற்கு அப்பால் பசி கொண்ட மனிதர்களை, ஒரு நல்ல சாப்பாட்டுக்காக ஏங்கும் முகங்களை நம்முன் கொண்டுநிறுத்தும் கதை. கட்டையன் மாலை குடித்த கூழுடன் மறுநாள் வரை வாழ்பவன். பசியால் வெறுங்குடலில் வலியை உணர்பவன். கதையின் பிற்பகுதி முற்போக்கு அரசியலால் பிணைக்கப்படுகிறது. பசியிலிருந்து அவர்கள் மீள்வதற்கான ஒரே வழி புரட்சிதான் என்ற அரசியல் பாடம் வலியுறுத்தப்படுகிறது. அதனால் அந்த வாழ்வு புதுமையற்றதாக, திருப்பங்களற்றதாக, சோர்வானதாக, உத்வேமற்றதாக வாசகர் முன்னால் விரிகிறது. கட்டையனின் பசியை உயிர்ப்பான கலை வடிவமாக்கக்கூடிய படைப்புத் திறன் நீர்வையிடம் இருந்தும் ஒரு புரட்சி அலையில் ஒரு துளியாக கட்டையன் அள்ளுண்டு போகும் காட்சிதான் எஞ்சுகிறது.

முற்போக்கு எழுத்தாளர்களின் ஒரு பொதுவான சறுக்கல், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை வைத்துக் கதையை நகர்த்துவதில்லை. எடுத்துக்காட்டாக சாதி, வர்க்கம், சுரண்டல், பால் வேறுபாடு என அத்தனை விளிம்புநிலைக் கருத்துகளையும் ஒரு கதைக்குள்ளேயே பேசிவிடும் முனைப்பு கதையை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது. எல்லாக் கதைகளிலும் முற்போக்கு எழுத்தாளர்களின் பலவீனமே சாமான்யர்களின் அவலத்தைச் சொல்லி ஒப்பாரி வைப்பதுதான் என்ற ஒரு புரிதலுக்குள் கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றன. கதை அற்ற கதைகளாக அவை சுருங்கி நிற்கின்றன. ஆனால் நீர்வை போன்றவர்களால் இந்தப் பலவீனத்தை அவர்களது இலக்கிய அழகியலாலும் புனைவுத் திறனாலும் சில கதைகளில் மறைக்க முடிந்திருக்கிறது.

தவிப்பு கதை குழந்தைகளற்ற ஒரு பெண்ணின் மனத்துயரத்தையும் ஏக்கத்தையும் அழகிய புனைவாக்குகிறது. நீர்வையின் இலக்கியத் தரத்துக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டான கதை. மெஜிக்கல் ரியலிசத் தன்மை இழையோடியிருக்கும் விவரணங்களாலான கதை. ஒரு முற்போக்குப் படைப்பாளி பரீட்சித்துப் பார்க்க விரும்பாத எல்லைவரை கதை சென்று திரும்புகிறது. இந்த வகையில் பார்த்தால் நீர்வையின் படைப்பு மனம் எப்போதும் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் மட்டும் சுருங்கிக்கொள்ளாமல் அவ்வப்போது வெளியிலும் தலைநீட்டி இருக்கிறது என அறிந்துகொள்ள முடிகிறது.

குழந்தைக்காக ஏங்கும் கோகிலா தன் அருகில் அம்மா என்றழைக்கும் மழலை மொழி கேட்டுப் புளங்காகிதம் அடைகிறாள். அந்தப் புளகாங்கிதம் போல் நிஜ உலகில் வெளித்தெரியாத மாய உலகில் சஞ்சரிக்கும் ஏராளம் குழந்தைகளையும் மழலை அழைப்புகளையும் அவள் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அவளால் புரிந்துகொள்ள முடியாத கனவுலகிலிருந்து கடவுளின் தரிசனமாகக் குழந்தைகள் வருகின்றனர். அது நிஜத்துக்கு அப்பால்பட்ட வெறும் உணர்தல்தான் என அவள் பின்பு அறியும்போது மீண்டும் அந்த வெறுமை அவளைச் சூழ்ந்துகொள்கிறது. ஆனால் கதையின் மொழியும் கதைப்பின்னலும் நுண்ணிய சித்திரிப்புகளும் நீர்வையின் கலைத்துவமான சிருஷ்டித் திறனை வெளிக்காட்டுகின்றன.

சிருஷ்டி எனும் குறுங்கதை விளிம்புநிலைப் பெண்ணான பாலியல் தொழில் புரிந்து இறந்துபோன சாவித்திரி எனும் பெண்ணுக்கும் கடவுள்களுக்குமிடையில் பரலோகத்தில் நடக்கும் உரையாடலால் நகர்த்தப்படும் கதை. கதை அளவில் சிறியதுதான். ஆனால் 1960களில் எழுதப்பட்ட கதை. அக்காலப்பகுதியில் அது கிளர்த்தும் கேள்வியும் சலனங்களும் மிக முக்கியமானவை. பிற்போக்குத்தனமான சமூக அமைப்பில் அது ஒரு மிகப்பெரிய முழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். சாவித்திரி என்ற பெயரில் விபச்சாரம் செய்தாளாம் இவள். கற்புக்கரசியின் பெயருக்கே களங்கம் என்கிறார் உருத்திரன்.

பசியைப் படைத்துவிட்டுக் கற்பைப் பற்றிப் பேச்சு வேறா?” என்கிறாள் சாவித்திரி. இந்தக் குரல் அப்போதைய சமூக அமைப்பில் மிகப்பெரிய வெடிப்பு. மத, சாதிய அடுக்கமைவுகளுக்குள் புதைந்து பிற்போக்குத்தனமாக இருந்த சமூகத்தில் ஒலித்த ஒரு துணிகரமான குரல். கீழ்த்தட்டிலிருக்கும் பெண்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள் குறித்து எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாத சமூகத்திலிருந்து அவளுக்கான ஒழுக்கப் பெறுமானங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படும் சமூகநிலை மீதான ஒரு கூர்மையான விமர்சனம் இந்தக் கதை.

உதயம் கதையும் வேலுப்பிள்ளை என்ற விவசாயியின் அடிமட்ட சாதாரண வாழ்க்கையைப் பேசும் கதை. தன் வயல் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டதாகப் புகாருடன் என்ஜினியர் செல்லப்பாவிடம் வேலுப்பிள்ளை வருகிறான். வேலுப்பிள்ளை போன்ற சாமான்யத் தொழிலாளிகள் வேட்டையாடி இலவசமாக மான், மரை இறைச்சிகளை இந்த உயர் உத்தியோகத்தர்களுக்குக் கொடுப்பதும் கைகளைக் கட்டிக்கொண்டு அடிமைகளைப் போல் வளைந்துகொடுப்பதுமான அபத்தம் நிறைந்த ஒரு சமூகச் சூழலை நீ்ர்வை இக்கதைக்குள் சித்திரிக்கிறார்.

எனினும், இத்தகைய தொழிலாளர்களைக் கொண்டாடும் மனநிலையில்தான் நீர்வை தன் படைப்புத் தளத்தை அமைத்திருக்கிறார். இந்தத் தொழிலாளர்களின் சாமான்யப் பண்புகளை நீர்வை வெளிப்படுத்துவதில்லை. உயர் பெறுமானங்கள் கொண்ட பொதுநலமிக்க தொண்டனாகவே வேலுப்பிள்ளை வருகிறான். என்ஜினியர் நீர் தருவதற்கு மறுக்கும்போது வே.பி. நியாயம் பேசுகிறான். அதனால் வேலுப்பிள்ளையிடம் உன் வயலுக்கு மட்டும் தண்ணீர் தருகிறேன் என்று என்ஜினியர் செல்லப்பா சொல்லும் போது, இல்லை எல்லா வயலுக்கும் தர வேண்டும்என்று கோபமாகச் சொல்கிறான். இது இயல்பான மனிதப் பண்பையும் அந்த வாழ்க்கையையும் நேர்மையாக முன்வைப்பதாகக் கொள்ள முடியாது. சாமான்ய மனிதர்களுக்குள்ளிருக்கும் போட்டி, கசப்பு, சுயநலன் போன்ற மனிதப் பண்புகளை வெளிப்படுத்த கிடைத்த ஒரு அபூர்வ தருணம் அது. ஆனால் அதைப் பொதுநலன் கொண்டு நிரப்பிவிடுகிறார் நீர்வை. ஆனால் டொமினிக் ஜீவா தனது பாதுகை கதையில் வரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியை அவனது அசலான குணத்துடன் காட்டும் ஒரு இடம் உள்ளது.

தொழிலாளியின் ஒற்றுமையும், அவனது மேன்மையும், புரட்சியும் எனும் ஓர் ஒற்றைத் தளத்தில் அமைந்த சாமான்ய மக்களுக்கு அந்நியமான வாழ்வனுபவம்தான். இதுவே நீர்வையின் கதைகளில் திரும்பத்திரும்ப இடம்பெறுகிறது. இது நீர்வையிடம் மட்டுமல்ல மொத்த ஈழ முற்போக்குப் படைப்புகளிலும் இந்தப் பண்பைக் காண முடியும். இது சாமான்யர்களின் உண்மையான வாழ்வனுபவத்தைப் பேசவில்லை. ஒரு செயற்கையான, கற்பிதமான உலகிலிருந்து ஒலிக்கும் குரல்தான் இது. பிளேட்டோவின் உட்டோபியாத் தனம் நிறைந்திருக்கும் ஒரு கற்பனாவாத- இலட்சியவாதக் குரல். யதார்த்த வாழ்க்கையோடு இதன் மிகச்சில பக்கங்களை மட்டுமே பொறுத்த முடியும். மற்ற அனைத்தும் சாமான்ய மக்களின் வாழ்வனுபவத்தின் எல்லையைத் தாண்டி நிற்பவைதான். மேடும் பள்ளமும் கதையில் நிகழும் புரட்சியோ, மாற்றமோ அப்போதைய சொந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்து முகிழ்த்தவையல்ல. அப்படியொரு சமூகச் சூழல் உருவாக வேண்டும் என்ற நீர்வையின் சித்தாந்தக் கனவுக்கான வடிவம் மட்டுமே அது. ஒரு படைப்பாளி தன்னை நிறுவிக்கொள்ளும் இடமாக அது ஒருபோதும் இருக்க முடியாது. வாழ்வனுபவத்தை நேர்மையாகப் பதிவுசெய்து அதைநோக்கி வாசகரை அழைத்துச்செல்லும் திடமான குரலும் நோக்கும் படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்டாக வேண்டும்.

அசை கதை ஒரு சமூக யதார்த்தச் சித்திரமாக வந்திருக்கும் கதை. படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் ஒரு கீழ்தட்டு இளைஞனின் மனக்கொந்தளிப்பு அலையாக எழும் அழகியல் தன்மையான கதை இது. அவனுக்கு வேலைகிடைப்பது, தன் காதலியான கோகிலாவுக்குத் தான் அமைத்துக் கொடுக்கப்போகும் வாழ்க்கை போன்றன சுயநலன் பிடித்த உறவுகளால்-சமூகத்தால் சிதைக்கப்படுவது எனக் கதை நகர்கிறது. ஆனால் கதையின் முடிவில் அவை எல்லாம் கதைசொல்லியின் கனவு என நீர்வை கதையை முடிக்கிறார்.

காதல், சமமற்ற மனித உறவு, விளிம்பின் போராட்டம் எனப் பல தளங்களில் ஒரு தனிமனிதனைச் சுற்றிக் கட்டமையும் இந்தக் கதையில் கதைசொல்லியே கதையை முழுவதுமாகத் தனக்குள் சொல்லிக் கொள்கிறான். கீழ்தட்டிலிருந்து கல்வி மூலம் தங்களை உயர்த்திக்கொள்ளும் ஒரு தலைமுறையின் பிரதிநிதியாகக் கதைசொல்லி வருகிறான். அவனது முயற்சியின் மூலம் அவன் ஓரளவு முன்னேறியதும் அதுவரை அவனைப் போன்றவர்களைக் கண்டுகொள்ளாத சமூக அமைப்பு அவர்களைத் திருமணம் போன்ற தங்களது சுய நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலுகிறது. இந்த போக்கிரித்தனமான சமூகத்தின் மீதான நீர்வையின் புகார்கள்தான் கதைசொல்லியின் வாயிலாக வெளிப்படுகிறது. அப்படியான இளைஞர்கள் தங்களது வாழ்வு, தொழில், வாழ்க்கைத்துணை குறித்து குறைந்தபட்சம் என்ன கனவுகளை வைத்திருந்தார்கள் என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள கொஞ்சமும் முயலாத சுயநல சமூகத்தின் இருப்பை இக்கதையில் நீர்வை சங்கடத்துடன் எதிர்கொள்கிறார். இத்தகைய சமூக அமைப்பின் சுயநல நிகழ்ச்சிநிரலில் வீழும் வறிய, படித்த இளைஞர்களின் கனவும், அத்தகைய இளைஞர்கள்மீது எந்த எதிர்பார்ப்புமில்லாது ஆசைகொண்டிருந்த கோகிலா போன்ற ஏழைப் பெண்கள் தங்கள் காதலையும் வாழ்க்கையையும் இழப்பதற்கான சூழலே அங்கு நிலவுகிறது.

இக்கதை கதைசொல்லிக்கு ஒரு கனவாக நிகழக்கூடியதுதான். ஆனால் உண்மையில் அந்தக் கனவு அன்றைய சமூக நிஜத்தின் பிரதிபலிப்புத்தான்.

இந்த அரசியல் பார்வையைத் தாண்டி ஒரு தொழிலாளியின் சாதாரண உணர்ச்சிச் சிக்கல்கள், மனித உறவுகள் சார்ந்த நெருக்கடிகள் போன்ற நுண்மையான விசயங்கள்மீது நீர்வையின் கவனம் தொடர்ந்தும் விழாமலே போகிறது. ஒரு தொழிலாளிக்குத் தொழிற்சங்கம் தொடங்குவதும் அல்லது இருக்கும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வது அல்லது சேராமல் இருப்பது போன்ற தொழில்சார் உலகத்தின் பிரதிதியாகவே ஒவ்வொரு தொழிலாளியும் நீர்வையின் படைப்புலகில் வந்துபோகின்றனர். அதற்கு அப்பாலான அவனது மனித உணர்ச்சிகள் என்னவாயிற்று? அவனுக்குள்ளிருக்கும் அன்பு, சமூகத்தோடு அவன் கொள்ளும் ஊடாட்டம், கோபம், வெறுமை என எதுவுமற்ற வாய்ப்பாட்டு வாழ்க்கையையே நீர்வையாலும் சலிப்பின்றித் தொடர்ச்சியாக எழுத முடிந்திருக்கிறது.

சங்கமம் கதை ’அவன்’ என்கிற தொழிலாளியைச் சாமான்ய மானுடத் தொழிலாளி ஒருவனின் நிலையில் வைத்துப் பார்க்கவில்லை. அவனது அடிப்படையான உணர்ச்சிகள்கூடப் புரட்சியால் பூசி மெழுகப்படுகிறது. அவனது தொழிற்சாலைக்குள் மட்டுமே அவன் எதிர்கொள்ளக்கூடிய வாழ்க்கைச் சிக்கல்களை மட்டுமே பேசுகிறது சங்கமம்.

தொழிலாளர் பேரணியில் தன் சுய விருப்பின் பேரில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவிலிருக்கும் ஒரு தொழிலாளி தொழிற்சங்கத்தால் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான். பின்னர் தனது ஒத்துழையாமை தவறு என உணர்ந்து, விருப்பத்துடன் பேரணியில் கலந்துகொள்ளும் மனமாற்றம் அவனுக்கு ஏற்படுகிறது. இத்தகைய மிகச்சாதாரணமான “கதையம்சமே“ இல்லாத கதைகளையும் கூட நீர்வை அதிகம் எழுதித் தீர்த்திருக்கிறார்.

ஈழ இலக்கியத்தின் முற்போக்கு முகம் என்பது முழுமையாக இடதுசாரிய அரசியல் சிந்தனையால் வரையப்பட்ட ஒன்றுதான் என்ற புரிதல் அவற்றை வாசித்து முடித்ததும் நமக்கு உருவாகிறது. முற்போக்குக் கருத்தியலை எழுதுவதன் மூலமே பலருக்கும் படைப்பாளி அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைத்தது. இந்தப் பதற்றமும் பல எழுத்தாளர்களை முற்போக்காளர்களாக மாற்றியது. ஆனால் இலக்கியத்துக்கு முன்னரே இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டவர் நீர்வை. தான் அரசியலிலிருந்து இலக்கியத்துக்கு வந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். இலட்சியத்துக்காகவே எழுதவந்தவர் என்ற வகையில் தன் இலட்சியத்தில் கடைசிவரை உறுதியாகவே இருந்திருக்கிறார் அவர், ஆனால் இலக்கியம் எப்போதும் அரசியலுக்கு மட்டுமே சேவகம் செய்து கொண்டிருக்கும் தொண்டன் அல்ல. அது காலத்தால் மாறிவிடக்கூடியது. தன் காலத்துச் சாமான்யர்களின் வாழ்க்கையை ஒரு வாய்ப்பாட்டுச் சூத்திரத்துக்குள்ளிருந்து விலகிநின்று மாற்றுக் கோணத்தில் முழுமையாக பதிவுசெய்வதே ஒரு படைப்பாளியின் பணியாகும். அப்போதுதான் எழுத்தாளர் காலத்தின் பிரதிநிதியாக மாறி வரலாற்றில் வாழத் தொடங்குகிறார். நீர்வையிடமிருந்து பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு மகத்தான படைப்பும் வெளிவரவில்லை. மாஷ்டர் பீஸ் என்று சொல்லிக் கொள்ள அவரிடமிருந்து எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஈழ முற்போக்குப் படைப்பாளிகள் என்ற பட்டாளத்திலிருந்து அவரைத் தெளிவாக வேறுபடுத்தக்கூடிய ஒன்று அவரிடம் இருக்கிறதென்றால் அது அவரது புனைவு மொழிதான்.

ஜிஃப்ரி ஹாஸன்

கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

உரையாடலுக்கு

Your email address will not be published.