/

கவிதையே அட்சய பாத்திரம். அதுவே பறக்கும் கம்பளம்: ஆழியாள்

நேர்கண்டவர் அனோஜன் பாலகிருஷ்ணன்

ஆழியாள் என்கிற மதுபாஷினி இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர். மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வி கற்றவர். மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமாணியும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுமாணிப்பட்டமும் , தகவல் தொழினுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவும் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக 1992-1997வரை கடமையாற்றியவர். உரத்துப் பேச (2000), துவிதம் (2006), கருநாவு (2013), பூவுலகை கற்றலும் கேட்டதும் (2017), நெடுமரங்களாய் வாழ்தல் (2020) முதலான அவரது கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அவருடனான மின்னஞ்சல் வழி நேர்காணல் இது.

‘மதுபாஷினி’, ஆழியாள் என்ற புனைபெயரில் எழுத நேர்ந்ததற்கு காரணம் 1993 காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழல் என்று ஒரு முறை பதிவு செய்து இருந்தீர்கள். நீங்கள் திருகோணமலையில் (மூதூர்) பிறந்தீர்கள். அன்று உங்கள் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு இருந்தது?

1990களின் ஆரம்பங்களில் தொழில் நிமித்தம் வவுனியா, வந்தாறுமூலை, அனுராதபுரம், பெலிகுல் ஓயா, பொல்கொல்ல, கொழும்பு என்று பல இடங்களுக்கும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போதைய நாட்டு நிலமைகள் பற்றி கனக்கச் சொல்லவேண்டியதில்லை. எல்லோருடைய அசைவுகளும் கண்காணிக்கப்பட்டன. ஒற்றர்களும், தலையாட்டி முகமூடிகளும், இராணுவமும், இயக்கங்களும், ஊர்காவல் படைகளும், எத்தனையோ குழுக்களும் செயற்பட்டார்கள். இவர்கள் தங்களுக்குள்ளேயும்கூட மாறி மாறி உளவு பார்த்தார்கள். ஒரு கோழியைக் கூட நம்பமுடியவில்லை. இவை எதிலும் சாராதவர்கள் நுள்ளான் மாதிரி ஊர்ந்து திரியவேண்டி இருந்தது.

நான் 90களில் எழுத வரும்போது ஏற்கெனவே 20 வருடங்களாக இலங்கை எமர்ஜென்ஸிக்குள் இருக்கிறது. ஜேவிபி கிளர்ச்சியில் தொடங்கி, 1983 இனக்கலவரங்கள், மீண்டும் ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி, இயக்கங்களுக்கிடையே பிளவுகள், அரச பயங்கரவாதம் என நாடு ஏற்கெனவே 20 வருடங்களாக முகங் கொடுத்துக் கொண்டிருந்தது.

அந்தக் காலகட்டம் ரிச்சர்ட் டி சொய்சா கொலை செய்யப்பட்டதன் பிறகான காலம். அவரின் குரல் கோட்டை ரயில் நிலையத்தில் அறிவித்துக் கொண்டிருந்தது. அவரது படுகொலையை அவரது குரல் மூலம் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவதும் அதனூடாக படைப்பாளிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதுமான உளவியல் தந்திரம் பயன்படுத்தப்பட்டது. அது ஒரு உதாரணம். இப்படிச் சுற்றிவரக் கொலைகளும், கடத்தல்களும், சித்திரவதைகளும் செய்திகளாக வந்தடையும் போது சொந்தப்பெயரில் எழுதுவதை அப்போது என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இதைவிட லோக்கலில் சுற்றியிருக்கும் முருங்கைக்காய், கத்தரிக்காயில் தொடங்கி வெங்காயம், கொச்சிக்காய் வரை அதை எழுதாதே, இப்படி எழுதியிருக்கலாமே அல்லது ஏன் எழுதினாய் என்று சொல்லக்கூடிய நிலவரமும் இருந்தது. எவருடைய தலையீடும் இல்லாமல் சுயமாக சில விடயங்களைப் பதியலாம் என்று நினைத்தேன். அவ்வளவுதான்.

நான் திருகோணமலையில் பிறந்தேன். இரண்டாம் வகுப்புவரை புனித சவேரியாரில் படித்தேன். எனது அம்மாவுக்கு ஆசிரிய நியமனம் மூதூரில் கிடைத்ததை அடுத்து நாங்கள் அங்கு போக வேண்டி வந்தது. மூதூர்ப் பிரதேசத்தையும், மக்களையும் பற்றி வ.அ.இராசரத்தினம் எழுத்தில் பதிந்ததில் மிகைப்படுத்தல் இல்லையென்று சொல்லுவேன். தங்கமான மனிதர்கள்!

அங்கு புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் படித்தேன். மூதூர் பின்தங்கிய பிரதேசம் என்று சொல்லுவார்கள். ஆனால் ஒரு நகரப் பாடசாலையில் கிடைக்கக் கூடிய பல வாய்ப்புகளை அங்கே இருந்த ஆசிரியர்கள் உருவாக்கித் தந்தார்கள். கவின்கலைப் பயிற்சிகள், கூத்து, சங்கீதம், தமிழ், ஆங்கில நாடகங்களுக்கான பயிற்சிகள், பாண்ட் வாத்தியங்களுக்கான இசைப் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சிகள் இப்படி பல திறன்களை கண்டடையவும், விருத்தி செய்யவும் பாடசாலைக்கு உள்ளேயும், பாடசாலைக்கு வெளியேயும் பயிற்றுவித்தார்கள். இவற்றையெல்லாம் இலவசமாகத்தான் செய்தார்கள். சமூக அக்கறையோடு எந்தக் கைமாறும் எதிர்பார்க்காத இவ்வாறான மனிதர்கள்தான், இளையோரிடம் எதிர்காலத்துக்கான பல நல்ல விடயங்களை விதைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட பலர் மூதூரில் முன் உதாரணங்களாக இருந்திருக்கிறார்கள்.

‘மதுரை மீனாட்சி கல்லூரியில்’ ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டீர்கள். அந்த அனுபவங்கள் எவ்வாறு இருந்தன?

+1, +2க்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் பல எழுத்தாளர்களை அறிமுகஞ் செய்தார்கள். தாகூர், ருட்யாட் கிப்லிங், ஆர்.கே.நாராயணன், ஜி.கே செஸ்டர்டன் போன்றோரின் எழுத்துகளைப் படித்தோம். அவை மிகுந்த ஈர்ப்பையும், மன ஆறுதலையும் தந்தன. ஆங்கில இலக்கியம் படிக்கும் விருப்பத்தை அவர்களின் படைப்புகள் தூண்டின என்பது உண்மை. ஆனால் குடும்ப நிலமைதான் அந்தத் தெரிவை நோக்கித் தள்ளியது என்று சொல்லலாம். வேறு துறைகளையோ, வேறு கல்லூரிகளையோ மற்றும் அவற்றிற்கான விடுதிக் கட்டணங்களையோ அப்போது என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ்வந்த மீனாட்சி கல்லூரி அப்போது அரசினர் கல்லூரியாக இருந்தது. எனக்கு அதுதான் கட்டுப்படியானதாக இருந்தது. பின்னேரங்களில் சில மார்வாடி வீடுகளில் பெண்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வரும் வருமானத்தில் மட்டுமட்டாக படிப்பு, போக்குவரத்து, விடுதிச் செலவுகளை சமாளிக்க முடிந்தது. வீட்டிலிருந்தும் இடைக்கிடையே இந்தியாவுக்கு வருபவர்களிடம் சிறு பொதி கொடுத்து அனுப்புவார்கள் – அதற்குள் கடிதமும், கொஞ்சம் காசும், ஒரு உடுப்பும் இருக்கும். அப்போது மொபைல் போன்களோ, இமெயில்களோ இருக்கவில்லை. எயார் மெயிலில் கடிதம் வரும். அதுவும் ஆடி, அசைந்து பல மாதங்களுக்குப் பிறகு வந்து சேரும். நாலு மாதங்களுக்குப் பிறகு வந்தவையும் உண்டு. தமிழ்த் திரைப்படங்களில் எல்லாம் முடிய போலிஸ்காரர்கள் கடைசியாக ஓடி வருவார்கள் அல்லவா, அப்படித்தான்!

விடுதிகளில்தான் எனது வாழ்க்கை கழிந்தது. +1, +2 படிக்கும்போது புனித இஞ்ஞாசியார் கொன்வென்ட் பள்ளி விடுதியிலும், பிறகு பட்டப்படிப்பு படிக்கும் போது கல்லூரிக்கு வெளியே இருந்த மாணவர் விடுதிகளிலும், பின்னர் வேலை செய்யும் பெண்களுக்கான விடுதிகளிலுமாய் இருந்தேன். பொதுவாக வெளி விடுதிகளில் – விடுதிக்குள்ளேயே பல தரங்கள் உண்டு. கையில் காசு குறைவாக இருந்தால் பாய் கிடைக்கும், டோமெட்ரி ஸ்டைலில் ஒரு அறைக்கு 10 பேர் இருப்பார்கள். இடைத்தரம் என்றால் ஸ்டீல் கட்டிலில் அறைக்கு 5 பேர், உயர்தரம் என்றால் அறைக்கு 2 பேர், மேசை, கட்டிலோடு அலுமாரியும் தருவார்கள். நான் அதிகமாக 10 பேர் இருக்கும் டோமெட்ரியிலேயே இருப்பேன். சிரிப்புகளுக்கு குறைவிருக்காது. ஆளுக்காள் அனுசரணையாக இருப்போம். இரவில் கனகா அக்கா ரேடியோ போடுவார். செய்திகள், இரவின் மடியில் எல்லாம் கேட்கலாம்.

காமராஜர் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியப் பாடத்திட்டம் மிகவும் விரிவாக இருந்தது. பிரித்தானிய இலக்கியத்தின் பல்வேறு நூற்றாண்டுகளையும் காலப்பகுதிகளையும் மையப்படுத்தி அக்காலத்தில் வந்த படைப்புகளோடு சமூக அரசியல் வரலாற்றையும் அறிமுகப்படுத்தியது. இதைவிட இந்திய, அமெரிக்க இலக்கியங்களையும் படித்தோம். நல்லதொரு அடித்தளத்தை அந்தப் பாடத்திட்டம் தந்தது.

கல்லூரியில் முதல் நாள் வகுப்புக்கு தமிழ்ச்செல்வி என்ற பெயருடைய விரிவுரையாளர் வந்தார். தமிழ்ச்செல்வி ஆங்கில இலக்கியம் படிப்பிப்பது என்பது அந்த வயதில் முரண்நகையாக இருந்தது. இதைவிட குண்டுமல்லிகை, மருக்கொழுந்து, கடலைமா, மஞ்சள் வாசனைகளுக்கிடையே, நீண்ட கடற் பயணங்களையும், புரட்சிகளையும், நூற்றுக்கணக்கான பெண்-ஆண் மாதிரிகளையும், மனிதரை மேய்க்கும் குதிரைகளையும் சந்திக்கக் கிடைத்தது. இந்தச் சந்திப்புகள் புதிய வெளிகளை நோக்கிச் சுட்டுகிற கைகாட்டி மரங்களாய் அமைந்தன.

பாடத்திட்டத்தில் இருப்பவற்றை விட வெளியிலிருந்தும் வாசிக்கப் பல புத்தகங்களை விரிவுரையாளர்கள் சிபாரிசு செய்வார்கள். மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியிருக்கிற பழைய புத்தகக் கடைகளில் அவற்றைத் தேடி எடுக்கலாம். மதுரையில் சிம்மக்கல் அருகே இருக்கும் பொது வாசிகசாலையும் பெரிதும் உதவியாக இருந்தது. அங்குதான் முதன்முதலில் Comparative literature பற்றி அறிந்தேன். ஆய்வாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் கம்பனும், மில்டனும் என்ற புத்தகம் பெரிய திறப்பாக இருந்தது. வெவ்வேறு மரபிலும், கலாச்சாரங்களிலும் இருந்து வரும் படைப்புகளை ஒப்பு நோக்கி எழுத எவ்வளவு பரந்த வாசிப்பும் உழைப்பும் தேவை என்று பிரமிப்பாக இருந்தது.

நவீன இலக்கியத்தில் நுழைய அடிப்படை தூண்டுதல் எங்கிருந்து கிடைத்தது? கவிதை பிரதான வெளிப்பாட்டு வடிவமாக தேர்வு செய்தது ஏன்? முதல் படைப்பு எங்கு பிரசுரமாகியது?

அப்படி நவீன இலக்கியம் என்றெல்லாம் நினைக்கவில்லை.

வவுனியாவில் என்னைச் சுற்றியிருந்த சமூகச் சூழலும், நாட்டு நிலமைகளும்தான் எழுத உந்தித் தள்ளின. விஷயங்களுக்கு பல்வேறு கோணங்களும், பார்வைகளும் இருக்கின்றன. இதைவிட எல்லாவற்றிற்கும் விடைகள் கிடைப்பதில்லை அவற்றை நோக்கிய தேடலில் நாங்கள் ஈடுபடலாம். அதைத்தான் செய்ய முயற்சித்தேன். உதாரணமாக ஒரு செயலோ, கருத்தோ ஒரு நேரத்துக்குச் சரியாக, உயர்வாக இருப்பது இன்னோர் நேரத்தில், உண்மையில் அவை சரிதானா என்ற கேள்விகளை நமக்குள் எழுப்பிவிடும். அப்போது சரிநிகர் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் வந்த பல கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும், கவிதைகளும் என் கவனத்தை ஈர்த்தன. இவ்வாறு வேறு பார்வைகளை, கோணங்களை பதிய வேண்டுமென்றுதான் விரும்பினேன்.

இலக்கியம் என்ற வெளிப்பாட்டு முறைமையோடு ஏற்கெனவே பரிச்சயமும், பயிற்சியும் இருந்ததால் அதையே தெரிவு செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். முதலில் மொழிபெயர்ப்பினூடாகத்தான் அதைச் செய்ய முயன்றேன். எனது துறைசார்ந்து, அக்காலப் பகுதியில் வெளிவந்த இலங்கையின் ஆங்கிலப் படைப்புகளோடு பரிச்சயம் இருந்தது. அதனால் கமலா விஜேரத்னவின் ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து அனுப்பியபோது மூன்றாவது மனிதன், சரிநிகரில் அவற்றை வெளியிட்டார்கள். அதே நேரத்தில் கணையாழியில் வெப்பியாரம் என்ற தலைப்பில் என் சிறுகதையொன்றும் வெளிவந்தது.

கவிதைதான் இயல்பாக எழுத வந்தது. இன்றுவரை அப்படித்தான். ஒரு கவிதையை பத்து நிமிடத்திலும் வாசிக்கலாம், அதே கவிதையை மணிக்கணக்காக ஆழ்ந்தும் வாசிக்கலாம் என்ற விந்தையை கண்ட பிறகு கவிதைதான் எனக்குப் பிடித்த எழுத்து வடிவமாக இருந்தது. அது அட்சய பாத்திரமாகவும், பறக்கும் கம்பளமாகவும் தொழிற்படக்கூடியது. அதன் சொற்களிலும் அச் சொற்கள் வீழ்த்தும் வெளிச்சத்திலும், நிழலிலும், அறுசுவையிலும் தொங்கிக் கொண்டே திரியலாம். ஜன்னல்கள், சந்துகள், கோட்டைக் கதவுகள் என திறப்பவைகளையும், மறிப்பவைகளையும் கண்டுகொண்டு அல்லது காணாமலே பல தளங்களில் பயணம் செய்யலாம் என்றாலும் ஒரு சுயகட்டுப்பாடு தேவையாகத்தான் இருக்கிறது.

ஈழ மக்களின் துயரங்களை பேசுவதோடு, ஆண் மையவாததிற்குள் சிக்குப்பட்டுத் தவிக்கும் பெண்ணுடலின் இருப்பையும் அதிகம் கவிதைகளில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கவிதைகளில் இருக்கும் சமூகம் மீதான விமர்சனப்பார்வை, ஓங்கி ஒலிப்பது இல்லை. “ஈரேழு உலகங்கள் அண்டம் ஆகாசம் என்று அறளை பத்தாமல், அடுத்த தடவை தன்னும் உருப்படியாய்ப் படையும் ஒரே ஒரு உலகத்தை” என்பதான கவிதை வரிகளாக கிண்டலாகவே அமைகின்றன. இந்தக் கிண்டல் அடியே கசப்பான துயர் உள்ளது. அவல நகைச்சுவையாக எதிர் கொள்கிறீர்கள். இதைப் பற்றி?

நீங்கள் சொல்வது போல் அதிகமாக இவ் விடயங்களை நோக்கித்தான் கவனங் குவிகிறது – ஏனன்றால் இவைதானே எமக்குள் நெருடல்களையோ, கரடுமுரடான அவஸ்தைக்குட்படும் மனநிலைகளையோ தோற்றுவிக்கின்றன. இவற்றைக் கடப்பதற்கு, இவற்றின் மீதான பரிசீலனைகள் முக்கியம் என்று நம்புகிறேன். அதற்கு எண்ணங்களின் அடைகாத்தல் மட்டுமல்ல, இவற்றின் மீதான எழுத்துகளின் வாசிப்பினூடாகவும், கேள்விகளை எழுப்பி தர்க்கத்தின் வழி செல்லுதலினூடாகவும், கூர்மையான உரையாடல்களூடாகவும்தான் விளங்கிக் கொள்ள முயலவேண்டும்.

நீங்கள் சொன்ன வரிகள் மட்டுமல்ல அக்கவிதையின் முந்திய வரிகளும் சமூகத்தோடான பிணக்கான ஒரு மனோநிலையைத்தான் பிரதிபலிக்கிறது. இங்கு எவை பிணக்காக வெளிப்படுத்தப்படுகின்றனவோ, அவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுவது புரிதல்களுக்கும், புரிதல்களின் வழி சில தீர்வுகளுக்கும் இட்டுச்செல்லுமல்லவா?

உங்கள் கவிதை ஒன்றில் – இராணுவ வண்டி விலத்திப் போகையில், சிறுமியொருத்தி அவர்களுக்கு கை வீசி ஆட்டுகிறாள். அவர்களுக்கும் பதிலுக்கு கையாட்டுகிறார்கள். சிறார்களின் கள்ளமற்ற குழந்தைத்தனம் கிளர்ந்த அச்சத்தை இல்லாமல் செய்து, ஓர் இனிமையை படரச் செய்கிறது. அந்தக் கணம் “என் நாட்டில் போரா, யார் சொன்னது?” என்று கேட்க வைக்கிறது. இந்த இனிமை அம்சம் பின்னாட்களில் உங்களிடம் குறைந்து சென்றதாகத் தோன்றுகிறதே?

இருக்கலாம். அவ்வாறு படரும் இனிமை அந்த சிறுமியால் மட்டும் சாத்தியமாகி விடுகிறதா என்ன, அந்தக் கவிதையில் ‘அவர்களும்’ பதிலுக்குக் கைகாட்டுகிறார்கள். அவர்களில் எவரும் கைகாட்டாமல் முறைத்துக்கொண்டு இறுகியவாறு போயிருந்தால் அந்தச் சிறுமி அதை எவ்வாறு எதிர்கொண்டிருப்பாள். அது குழந்தைத்தனத்தில் எத்தகைய வடுவை, பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒரு மின்னல் வெட்டும் கணத்திற்குள் அவையும் சாத்தியந்தான்.

நீங்கள் கவனித்தது போல் குறைந்திருக்கலாம் ஆனால் இல்லாமலாகி விடவில்லை. பின்னர் வந்த கவிதைகள் சிலவற்றிலும் அந்தத் தெறிப்பின் உதாரணங்களைக் கூறமுடியும்

புலம் பெயர்தல், உங்கள் படைப்பாக்கத்தில் என்ன வகையான மாறுதல்களை உருவாக்கின?

புலம்பெயர்வு என் படைப்பாக்கத்துக்கு பல மாறுதல்களைத் தந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் பருவகால மாற்றங்களையும், வேறுபட்ட நிலக்காட்சிகளையும், இந்த மண்ணுக்குப் பிரத்தியேகமான தாவர, விலங்கு பறவையினங்களையும், வேறான வாழ்வியல் நடைமுறைகளையும் கவனித்திருப்பீர்கள்.

பூர்வீக மக்களினதும், சிறுபான்மையினரதும் மண் மற்றும் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளை ஒரு ‘சிறுபான்மைக் குடியேறியாக’ மேலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருப்பதைச் சொல்லவேண்டும்.

அடுத்ததாக, காலனித்துவவாதிகளுக்கும், பின் காலனித்துவச் சமூகங்களிலிருந்து வந்தவர்களுக்கும் இடையிலான சமூகப் பண்பாட்டுத் தொடர்பாடல்கள், திக்குமுக்காடல்கள் என அதிர்வுகளைக் கொண்டிருக்கும் கட்டுமானங்களிடையே, பல கவிதைகளைப் பின் காலனித்துவப் பார்வையில் அணுகி எழுதக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.

இதை விடவும் மொழி, மத, இனங் கடந்த பன்மைச் சுதந்திர தளத்தில் விடயங்களைப் புடம்போட்டுப் பார்க்கவும், கேள்விகளை எழுப்பவும் முடிகிறது. குறிப்பாக மாறுபடும் அடையாளங்கள் – அடையாளச் சிதைவும், அவற்றின் உருப்பெருக்கமும், புலம்பெயரிகளின் அடுத்தடுத்த தலைமுறையினர் எனப் பலவற்றைச் சொல்லலாம்.

நவ காலனித்துவச் சுரண்டலிலும், போர்களிலும் பல்தேசியக் கம்பெனிகளின் பெரும்பங்கு, விளம்பரங்கள் ஊடான அவற்றின் ஊடுருவல் இப்படி எத்தனையோ விடயங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

உங்களுக்குப் பதில் சொல்லும்போதுதான் என் அகக்காட்சியே மாறிப் போயிருக்கிறதை நான் உணர்கிறேன்.

அவுஸ்ரேலியாவில் அகதிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் எவ்வாறு உள்ளன? இந்தியர்கள் அங்கே தாக்கப்படுவதாகச் சொல்லப்படுவதின் பின்னே இருக்கும் நிலவரத்தை, எழுத்தாளராக எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தியர்கள் என்று நீங்கள் சொல்வது பழுப்பு, கறுப்புத் தோலர்களாகிய எங்களைத்தான் என்று கொள்கிறேன்.

இந்த நாடு உருவானதன் அடிப்படையிலேயே இனவாதக் கூறுகள் இருந்திருக்கின்றன – இன்றுவரையிலும் மூத்த குடிகளைப் பெரும்பாலான வெள்ளையரும், எம்மைப் போன்ற பல்வேறு குடியேறிகளும் கண்டுகொள்வதில்லை.

இது ஒருபுறம், மறுபுறத்தில் வெள்ளையரில் ஒரு பகுதியினர் குறிப்பாக பழைய பிரித்தானிய சாம்ராஜியத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள், ஐரோப்பாவின் பல பாகங்களிலும் இருந்து வந்த மற்றைய வெள்ளையரை வொக்ஸ் என இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். இதைவிட சீனர், வியட்னாமியர், லெபனீயர், சூடானியர், நாங்கள் என்று எல்லா நிறமூர்த்தங்களிலும் மனிதர்கள் இருக்கிறோம். பல கலப்புகளும் நடக்கின்றன. ஒருவருக்கு பல பூர்வீகங்கள் இருக்கக்கூடிய நிலை வந்துவிட்டது.

இப்படிப் பலவகைப்பட்ட பூர்வீகங்களும், மதக்குழுமங்களும், நம்பிக்கைகளும், இனங்களும், மொழிகளும் பின்னிச் சிக்கலாக இருக்கும்போது இனவாதத் தாக்குதல் நிகழ்வது என்பது அவ்வப்போதைய சூடான நிலவரங்களைப் பொறுத்ததுதான். நீங்கள் குரொனலா வன்முறைத் தாக்குதலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது அப்படியான ஒரு நிகழ்வுதான்.

குரொனலா கடற்கரையில் lifeguards என அழைக்கப்படுகிற சில ‘வெள்ளை’ உயிர்காப்பாளர்களுக்கும், சில லெபனீய இளைஞர்களுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அடுத்த ஏழு, எட்டு நாட்களுக்குள் நூற்றுக்கணக்கானோருக்கு இடையிலான வன்முறையாகத் தூண்டப்பட்டது. பழியைத் தூக்கி சமூக ஊடகங்களிலும், மதுபோதையிலும், திமிர்த்தனத்திலும் போட்டாலும் கூட அடிப்படையில் அதுவொரு இன வன்முறைத் தாக்குதல்தான். அந்த இடத்தில் நின்ற ‘கறுத்த தலைமுடி கொண்ட, நீண்ட மூக்குடைய, பொன் நிறத் தோலுடைய’ மத்திய கிழக்குச் சாயல் கொண்ட என எல்லோரும் ‘வெளுத்த நிறக்’ கும்பல்களால் தாக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டவர்களில் பங்களாதேஷை பூர்வீகமாகக் கொண்ட சிலரும் அடங்குவர்.

பின்னர் வந்த நாட்களில், லெபனீய இளைஞர்கள் பதிலடியாக வெளுத்த நிறமுடையோரையும் அவர்களின் சொத்துக்களையும் தாக்கினார்கள். குரொனலா வன்முறையும், பதில் வன்முறையும் மேலும் தலைதூக்கிவிடாமல் இருக்க, சமூகப் பிரதிநிதிகள் பலரும் நிலமைகளைக் கண்காணித்து நிதானமாக நடந்து கொண்டனர். பின்னாளில் இவை பற்றி நடந்த தொலைக்காட்சி விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் இரு தரப்பினரும் இது பல்கலாச்சார நாடு, நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதித்து நடக்கவேண்டும் போன்ற கருத்துகளை முன்வைத்துப் பேசினர். அவை தொலைக்காட்சிக்காக பேசப்பட்ட சீனிப்பாணி ஊற்றிய சொற்களாக இருக்காது என்று நம்புவோம்.

அரசைப் பொறுத்தவரை லிபரல் அரசு, அகதிகளுக்கெதிரான – குறிப்பாக ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான – நிலைப்பாட்டைத்தான் மறைமுகமாக எடுத்து வருகிறது. வெள்ளைப் பெரும்பான்மையினரின் விகிதாசாரம் குறைந்துவிடக் கூடாது என்பதில் லிபரல் அரசு என்றைக்கும் கவனமாகவே இருக்கிறது. சிறு உதாரணத்தை உங்களுக்குச் சொல்லலாம்.

தற்போதைய பிரதமர் ஸ்கொட் மோரீசன், தனது அலுவலக மேசையில் ‘அலையில் மிதக்கும் படகுச்’ சிற்பமொன்றை வைத்திருக்கிறார். அந்த உலோகச் சிற்பத்தில், ‘நான் இவற்றை நிறுத்தினேன்’ என்ற ஒற்றை வரி தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. சிறிது விளக்கமாகச் சொன்னால் – மீன்பிடிப் படகுகளில் பெருங்கடல், சமுத்திரங்களூடாக இந்த நாட்டுக்கு அரைகுறை உயிரோடு தஞ்சம் புக வந்த அகதிகளின் வருகையைத் தடைப்படுத்தியதைக் கொண்டாடுகிற வெற்றிச் சின்னம்தான் இது. அகதிகளுகெதிரான அரசின் இனவாத மனநிலையை இந்த வெற்றிச் சின்னம் தெளிவாகவே காட்டுகிறதல்லவா!

இதையெல்லாவற்றையும் விட இன்றுவரையிலும் இந்த நாட்டின் பூர்வீகர்களான அபோரிஜினல் மக்களை இதே கண்ணோட்டத்தோடு இரண்டாம் இடத்தில்தானே பெரும்பாலான பொது மக்களும் அரசும் வைத்திருக்கின்றன.

“ஒரு கெட்ட குமாரனைப் போல் மீண்டும் உங்கள் வாயில்களை நோக்கி வருவேன் என நீங்கள் நினைத்திருக்கலாம்- அறிக! நானோ அவனில்லை. நான் குமாரத்தி” என்று தந்தை வழி சமூக அமைப்பு பற்றிய விமர்சனங்களை தீவீரமாக கவிதைக்குள் பேசியிருக்கிறீர்கள். குடியேற்ற நாடான அவுஸ்திரேலியா பல்கலாசார நாடாக விளங்குகிறது. அங்கிருக்கும் சமூக சூழல் எப்படியுள்ளது? இன்றைய தலைமுறையில் – குறிப்பாக பெண்களின் தனியுரிமைகள், சுதந்திரங்கள் எப்படியுள்ளன?

ஆமாம். பல்கலாசார, குடியேற்ற நாடாக இருப்பதால் இங்கிலாந்து, இந்தியா சீனா, இத்தாலி, கிரேக்கம், லெபனான், வியட்னாம், சூடான் உட்பட்ட ஆபிரிக்க நாடுகள், இலங்கை, ஜெர்மன் என இன்னும் பல நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது பல வசதிகளையும், வாய்ப்புகளையும் தருகிற முதலாம் உலகநாடுதான் இது.

அதிர்ஷ்டமான நாடு என்றும் அழைக்கப்படுகிறது.

வேறு சமூகங்களிலிருந்து இங்கு வந்து குடியேறிய பெண்களும், ஆண்களும் எங்களைப் போன்றே தந்தை வழிச் சமூகங்களிலிருந்து வந்தவர்கள்தான். நிலமும், சீதோஷ்ண நிலமைகளும் மாறியிருக்கிறதே தவிர அதிக மாற்றங்கள் இல்லை என்றுதான் சொல்வேன். தனிப்பட்ட ரீதியில் சில மீறல்களும், உடைப்புகளும் இருக்கின்றன எனினும் அவற்றைப் பொதுமையாகச் சொல்ல முடியாது.

ஒரு தனிமனிதனுக்கு/ மனுஷிக்கு வரும் நெருக்கடிகளை, குடும்பத்துள் நிகழும் நெருக்கடிகளை, வன்முறைகளை கையாள வலுவுள்ள சமூக கட்டமைப்பும் அது தொடர்பான பல சமூக உதவி நிறுவனங்களும் இங்கு உள்ளன. அவற்றைத் தயக்கமில்லாமல் அணுகலாம். கல்வி, மருத்துவம் என்பன ஆண், பெண் வித்தியாசமின்றிக் கிடைக்கிறது. ஆனால் வேலைப்பளு, குழந்தை வளர்ப்பு, ஓய்வூதியம், பொதுவெளியில் அந்தஸ்து, சட்டத்துறை, அரசியல், விளையாட்டுத்துறை போன்ற பல்வேறு பக்கங்களையும் பார்க்கும்போது இன்னமும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கல்வி, மருத்துவம் என்பன பெண், ஆண் வித்தியாசமின்றிக் கிடைப்பதாக நான் மேலே குறிப்பிட்டிருப்பது, மிகப் பின்தங்கிய கிராமங்களில் வாழும் பூர்வீகக் குடி மக்களுக்குப் பொருந்தாது. அங்கு அவர்களது அத்தியாவசியத் தேவைகள்கூட நிறைவேற்றப்படாமல் இருக்கிறதை நாங்கள் மறக்கக் கூடாது.

இப்படியான சமத்துவமின்மைகளைச் சிலர் கவனத்தில் எடுத்து மாற்றங்களுக்கு வழி சமைக்க முயல்கிறார்கள். ஆனால் அப்படி செய்ய முடியாதவாறு முதலாளித்துவம் பல்தேசிய வியாபாரிகளிடம் மக்களைச் சரணடைய வைத்திருக்கிறது. அத்தியாவசியத் தேவை, இருந்தால் வசதி, இன்னும் கொஞ்சம் சௌகரியம் என்ற படிகளை எல்லாம் கடந்து இந்திரலோகத்தில் வலம் வருகிறவர்களைப் போல் மக்களைக் ‘கனவு வாழ்க்கை’ வாழ்பவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வியாபாரிகள். சமூக முன்னேற்றமென்று பார்த்தீர்களென்றால் அது கனவு வீடு, கனவுக் கார், கனவுத் திருமணம், கனவுச் சுற்றுலா என்று கேவலமாகி விட்டது. நுகர்வுக் கலாச்சாரத்தில் உள்ள அதீத நாட்டத்தில் சிந்தனை வரட்சி மட்டுமல்ல, மூளையே வரண்டு கிடக்கிற பல்கலாச்சார சமூகத்தைப் பார்க்கிறோம். அதனால் பெரும்பாலும் தனிமனிதராகத்தான், மேற்சொன்ன வேறுபாடுகளுக்கு முகங் கொடுக்கவேண்டி வருகிறது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதம மந்திரி ஜுலியா கில்லார்ட்டுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புகளை இங்கு நினைத்துப் பார்க்கிறேன். அவர் இந்த நாட்டை நிர்வகித்த திறன், இந்த மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் உதவும் விதமாக முன்வைத்த திட்டங்களையெல்லாம் ஆராய்வதை விட்டுவிட்டு அவரது தலையிழுப்பு வடிவில்லை, அவரது கோட் இறுக்கமாக இல்லாமல் தொய்வாக இருக்கிறது போன்ற கதைகள் பேசப்பட்டன.

அவரது உழைக்கும் வர்க்கப் பின்னணியை வைத்து மேற் தட்டினரும், தந்தைவழி ஆதிக்க சக்திகளும் பலவகையிலும் தொல்லைப் படுத்தினர்.

அத்துடன் உலக ஊடக ஜாம்பவான் ரூபெர்ட் மெர்டொக்கின் நியூஸ் கோர்ப் மீடியா “சூனியக்காரியை ஒழியுங்கள்” என்ற கோஷத்தை பூதாகரமாகப் பெருப்பித்து கேவலமான பிரச்சாரத்தை நடத்தியது. மேற்குலக வரலாற்றில் சூனியக்காரிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் யார், அவர்களுக்கு எவ்வகையான தண்டனைகள் அக்காலச் சமூகத்தால் வழங்கப்பட்டது என்று அறிந்திருப்பீர்கள். இந்தப் பிரச்சாரம் அப்படியான ஒரு இருண்டகாலத்தை நோக்கி நகர்ந்தது. இதைவிட அக்காலகட்டத்தில் எதிர்க்கட்சியினரான லிபரல் கட்சி அமைச்சர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்ட இரவு விருந்தொன்றில் பரிமாறப்பட்ட உணவுகளின் மெனு அட்டையில் இப்படி ஒரு பதார்த்தம் இருந்தது:

ஜுலியா கில்லார்ட் கென்டக்கி காடைப் பொரியல்

சிறு மார்பு, பெருத்த தொடையுடன்.

புத்திசாலித்தனமும், நிர்வாகத்திறனும், கடும் உழைப்பும் கொண்ட இந்த நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியைக்கூட இப்படியான தறுதலைக் கண்ணோட்டத்தில்தான் அமைச்சர் கனவான்களால் பார்க்கமுடிகிறது.

லேபர் கட்சியில் பல அமைச்சுகளை மிகத் திறம்பட முன்னடத்தியபோது பேசாமல் இருந்தார்கள். இந்த நாட்டின் துணைப்பிரதமராக இருந்தபோது பிரச்சனையில்லை. ஆனால் என்றைக்கு அவர் இந்த நாட்டை அதாவது எல்லோரையும் ஆளுபவராக – பிரதமராக வந்தாரோ அன்றிலிருந்து அவரின் ஆளுமையைச் சகிக்க முடியவில்லை.

அவுஸ்ரேலிய பூர்விக குடிகளின் கவிதைகளை மொழியாக்கம் செய்துள்ளீர்கள். ஆங்கில இலக்கிய சூழலில் இருந்து நீங்கள் வந்ததால் மொழியாக்கம் செய்ய விருப்பம் கொண்டீர்களா – அல்லது பிரத்தியேகமான காரணங்கள் உண்டா?

ஆங்கில இலக்கியச் சூழலில் இருந்து வந்தது மொழியாக்கத்துக்கு உதவியாக இருந்தது. இங்கு 2000இல் முதுநிலை படித்துக்கொண்டிருக்கும் போது பூர்வீக குடிகள் பற்றிய பாடமொன்றையும் எனது கற்கைக்குள் சேர்த்திருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அந்த விரிவுரையாளருடன் பாடநெறி தொடர்பான முரண்பாடுகள் வந்தன. அவர் அதிகார மற்றும் நாயக மனநிலையுடன் கேள்விகளையும் கருத்துகளையும் அணுகியதாக நான் உணர்ந்தேன். அந்த வகுப்பிலிருந்து விலகி வேறொரு விரிவுரையாளரின் கீழ் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத பாடத்தை எடுக்க வேண்டி வந்தது. இந்த நிகழ்வுகளின் பிறகு பூர்வீகக் குடிகள் பற்றி மேலும் வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் சில ஆக்கங்களைத் தமிழுக்கு கொண்டுவரும் ஆசை ஏற்பட்டது. அம்மா இதழிலும், உயிர்மையிலும் இரு அபோரிஜினல் சிறுகதை மொழியாக்கங்களைச் செய்திருந்தேன்.

2002-இல் ஊருக்குப் போயிருந்தபொழுது, ‘ஜாக் டேவிஸுடைய’ இரண்டு கவிதைகளின் தமிழாக்கத்தை மு.பொவிடம் வாசிக்கக் கொடுத்தேன். அவர் வாசித்துவிட்டு, மேலும் இதே முயற்சியைத் தொடருமாறு என்னை உற்சாகப்படுத்தினார். அந்த இரு கவிதைகளும் மூன்றாவது மனிதனில் வெளிவந்தன.

இதைவிட கான்பெராவில் பூர்வீக குடியினர் கலாச்சார விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தினார்கள். அவற்றுக்குத் தொடர்ச்சியாகப் போனது அபோரிஜினல் மக்களின் வரலாற்றை அவர்களின் பார்வையில் அறிந்து கொள்ள உதவியது. ஒரு குடியேறியாக எனக்குப் பூர்வீக குடியினரின் பார்வையும், உணர்வும் முக்கியமாகப்பட்டது. அவற்றின் நீட்சியாகவும் கவிதை மொழியாக்கத்தைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

அவுஸ்ரேலிய பூர்விக குடிகளின் கவிதைகளில் நீங்கள் அவதானித்த விசேட அம்சங்கள் என்ன?

நாங்கள் பல்தேசியக் கம்பனிகள், பங்குச் சந்தை, பிட் கொயின் மற்றும் சைபர் உலகில் மெய்நிகர் எனும் மீட்சியற்ற மாயச் சுழலுள் அகப்பட்டு விட்டோம். அவர்களோ பூவுலகைக் கற்று, கேட்டு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புகிற மனிதர்களாக இருக்கிறார்கள். இந்த அனுபவங்களூடாக அடையும் மன எழுச்சியே அவர்களின் கவிதைகளில் பிரதிபலிக்கிறது.

விசேட அம்சங்களைச் சுருக்கமாகச் சொல்வதென்றால் எளிமையான, அசலான மொழியைச் சொல்லலாம். எளிமையான மொழி என்றதும் வளம் குன்றிய மொழிக் கையாளுகை என்ற பொருளில் சொல்லவில்லை. எளிமையான மொழியில் வெளிப்படைத்தன்மையும், தெளிவும் இருக்கிறது என்பதைத்தான் குறிக்க விரும்புகிறேன். அத்துடன் படிமங்கள் இல்லாமல், நிலக்காட்சிகளூடும், நிகழ்ச்சி விபரிப்புகள் மூலமும், கதை கூறல் மூலமும் வாய்மொழி மரபின் தொடர்ச்சியை அல்லது அதன் பாதிப்பை பல கவிதைகளில் காணலாம். ஆக்கிரமிப்பின் எத்தனை வலிகளை எதிர்கொண்டாலும், பசுமை பேணலும், பல்லுயிர் பேணலும் பூர்வீக மக்களின் வாழ்வியலில் இருந்து பிரிக்க முடியாத விடயங்கள். கவிதைகளில் அவை மிக இயல்பாக மூச்சுக்காற்றுப் போல கலந்திருக்கும். அவற்றின் இன்னொரு முக்கிய பண்பாக இயற்கையோடு பிணைந்த ஆன்மாவின் பிரபஞ்சப் பார்வையையும், அது தருகின்ற உள்மன அமைதியையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

4 Comments

  1. ஆஸ்திரேலிய சமுதாயத்தை விபரிக்கும் நல்ல பேட்டி. பூர்விக குடிகளின் கவிதை மொழியாக்கம் படிக்கவில்லை எங்கு கிடைக்கும்?

  2. நன்றி ஆனந்த். அணங்கு பதிப்பகத்தில் ‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ என்ற தலைப்பில் கிடைக்கும். Please contact – anangufeministpublication@gmail.com
    நன்றி.

  3. அருமையான ஆழமான மிகச்சிறந்த நேர்காணல்

உரையாடலுக்கு

Your email address will not be published.