கடல் வாயில்

இது பாக்கியநாதன் என்னும் கூத்துக்கலைஞனின் வாழ்க்கை. அவரைச் சுற்றியிருந்த வாழ்க்கைக் கோலங்களை அவரின் வாய்வழி கேட்டறிந்ததோடு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குறிப்புகளையும் தரவுகளையும் உறுதுணையாகக்கொண்டு ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்க முடிந்தது. இதுவே மிகவும் பிந்திய முயற்சிதான்..

ஒடுக்கியவர்களுக்கு ஒரு வரலாற்றுக் காலம் இருந்தது. ஒடுக்கியவர்களால் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இன்று ஒரு நூற்றாண்டைக் கடந்தேனும் தம் பக்க வரலாற்றைச் சொல்கிறது: ‘’ஒடுக்கப்பட்டோம்; ஆனால் ஒடுங்கிப் போகவில்லை. சுய தொழிலும் மன வீச்சுக்கு உரமான கூத்துக் கலையும் எங்களை உரமேற்றி உய்வித்திருக்கின்றன.’’

1

‘மெலிஞ்சிமுனை’ என்ற பெயரில் எங்கள் முன்னோர் உருவாக்கிய கிராமத்தில் சகல மெலிஞ்சிமுனையாருக்கும் சமத்துவமான உரிமை உண்டு. ஒவ்வொரு மனிதரைப்பற்றியும் எழுதும்போதும் அவரின் சமூகப் பின்னணி வந்தே தீரும். பாக்கியநாதனின் கதையிலும் அவரின் சமூகப் பின்னணியும் உரித்துடைய உறவுகளுடனான அவரின் வாழ்க்கைப் பகிர்வுகளும் இங்கே பதிவாகியிருக்கின்றன.

00

கு. முத்துக் குமாரசுவாமிப் பிள்ளை எழுதிய ‘யாழ்ப்பாணக் குடியேற்றம்’ என்ற நூலில் ‘மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும்’ என்ற பகுதிக்குள் ‘வெள்ளாளர்’ சாதி மக்கள் கேரளத்தில் இருந்து வந்தனர் என்றும் அவர்கள் தமது கேரள நிலத்தின் நினைவோடு ‘கரம்பன்’ என்ற பெயரைத் தாம் வாழ்ந்த இடத்திற்கு வைத்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

முத்துராசா பிலோமினா எழுதிய ‘A CONCIS GENEALOGY OF CATHOLIC FAMILIES OF KARAMPON’ என்ற நூலில் ’‘கரம்பன் என்ற ஊர்ப் பெயர் வரப் பல காரணங்கள் கூறப்படுகின்றன, கரம்பைக் காடு என முன்னர் அழைக்கப்பட்டது என்றும், அது காலப்போக்கில் கரம்பன் என மருவியது என்பர். தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் ‘திருக்கரம்பொனூர் என்கின்ற கிராமம் இருப்பதால் அங்கிருந்து வந்த திருநெல்வேலித் தமிழர் தம் ஊர்ப் பெயரை மறவாது அதை இங்கும் சூட்டினர் என்று சொல்வாருமுளர். இன்னும் இவ்விடத்தை ஆண்ட நிலப்பிரபுவின் ஊனக் கரத்திற்குப் பொன்னால் செய்த கரம் பொருத்தியிருந்ததால் இவ்விடத்திற்கு ‘கரம்பொனூர்’ எனப் பெயர் வழங்கியது என்பர். தொட்டதெல்லாம் பொன்னாகும் ஆற்றல் மிகு கரங்களைக் கொண்ட மக்கள் வாழும் ஊர் என்பதால் ‘கரம்பொன்’ என்ற விளக்கமும் வந்தது’’ என்று குறிப்பிடுகிறார்.

பிலோமினாவின் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களைத் தவிரவும் ‘கரம்பன் புனித செவத்தியார் ஆலயப் பங்கிற்கு தங்கள் உழைப்பை வழங்கிய மக்கள் இருந்தனர். இன்றும் அந்த வரலாற்றின் சாட்சிகளாய் சிலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் பத்திநாதன் என்பவரின் மூத்த மகனார் பாக்கியநாதன்.

பாக்கியநாதனின் பரம்பரைக் கதையை எழுதவேண்டுமென்றால் ‘கரம்பன்’ என்று மருபிய ஊரைக் கடந்து ஆதிக் ‘கரம்பைக் காட்டை, அல்லது இன்றும் கருகம்பன் என்று சொல்லப்படும் குறிச்சியை நோண்டிப் பார்க்க வேண்டும். அந்த நோண்டலில் வரும் வெடுக்கு வாசத்தை வரலாறாய் முன் நிறுத்த வேண்டுமென்றால் ‘யாழ்ப்பாணச் சரித்திரத்தில் சொல்லப்பட்ட ‘ஊருண்டிமுனையில் வேற்றினக் கலப்பில்லாத தனிக் கரையோர மக்கள் வாழ்ந்து வந்தார்கள்’ எனும் இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.

நினைவுகளிலிருந்து உருக்கொள்ளும் ஒரு மனிதக் கூட்டத்தின் கதைக்கு வருவோம்.

நினைவுரு: 1

இரட்சணியத்தை இறஞ்சிய கண்ணீர்

சங்கைக்குரிய கில்லறிச் சுவாமியின் அயராத முயற்சியால் செவத்தியார் ஆலயத்தில் ஒரு ஆளின் உயரம் இருக்கக்கூடிய புனித செவத்தியாரின் சொரூபம் இத்தாலியில் இருந்து கொண்டுவந்து 1932ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ஆம் திகதி புனித செவத்தியார் திருநாளன்று, காலஞ்சென்ற யாழ்ப்பாண ஆயர் கியோமர் ஆண்டகை, திருச்சபையின் சடங்காசாரப்படி ஆசீர்வதித்துப் பழைய கோயிலில் ஸ்தாபித்தார்.

அந்த விழாப் பூசை காண்பதற்காகத் தன் இரண்டு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பறையங்கேணிக் குடிசையிலிருந்து நடையாய்ப் போய்க் கொண்டிருந்தாள் சுவானி மகள் ஆரோக்கியம். அவள் அருகில் மிகுந்த உளப் பூரிப்போடு விறுக்குவிறுக்கென்று நடந்துகொண்டிருந்தான் பத்தர் எனப்பட்ட அருளப்பன் மகன் பத்திநாதன். இருவரும் தங்கள் குழந்தையை மாறிமாறித் தூக்கியபடியும், உச்சிமுகர்ந்தபடியும் நடந்தனர். வீட்டின் மூத்த கிழவி றோசை சொன்னதன் பிரகாரம் பிள்ளையைப் பஞ்சம், பிணி, பொல்லாங்கு நீக்கும் செவத்தியாருக்கு ஒப்புக்கொடுக்க அவர்கள் விரும்பினார்கள்.

00

பத்திநாதனின் தாயார் றோசையின் வீட்டில் வைத்துப் பிள்ளையைப் பரிகரித்தாள். றோசை அக்காலத்தில் கைதேர்ந்த மூலிகை வைத்தியப் பரிகாரி. சுவானியர் மகள் ஆரோக்கியம்மீது மாமி றோசை மிகுந்த நேசம் கொண்டிருந்தார். தன் பரம்பரையில் உருவாகும் புதுத் தலைமுறைக் கொடியை றோசை தன் கையாலேயே பக்குவமாய் எடுத்துப் பூமியை முகரக் கொடுத்தார்.

பிள்ளை 15.05.1932 அதிகாலையில் பிறந்தான். பிறந்த குழந்தையை யார் முதலில் தூக்குவதென்று ஆரோக்கியத்தின் சகோதரர்கள் வயித்தியானும் சூசையும் போட்டி போட்டுக்கொண்டார்கள். மருமகனைத் தூக்கிச்சென்று சூரியனைக் காட்டினார்கள். குழந்தை மாமன்களின் மார்புகளில் அன்பு கனிந்த மென்மையை உணர்ந்தான்.

நாரந்தனையில் இருந்த ஒரேயொரு திமிலர் சமூகத்தின் குடும்பமாய் சுவானியின் குடும்பம் இருந்தது. சுவானியின் இரண்டு பெண் மக்களைக் கரம்பனில் கலியாணம் கட்டிக் கொடுத்திருந்ததால் சுவானியின் மகன்கள் வயித்தியானும் சூசையும் தங்கள் சகோதரிகளின் குடும்பங்களை அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள். சகோதரிகளின் குடும்பங்கள் மீதும், ஏனைய உறவுகளின்மீதும் அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தார்கள் அவர்கள்.

கில்லறிச் சுவாமி குழந்தை பாக்கியநாதனுக்கு ஞானஸ்நானம் வழங்கினார். அவரே அவனுக்கு ‘பாக்கியநாதன்’ என்று பெயரும் வைத்தார்.

00

பத்திநாதனும் ஆரோக்கியமும் கோயிலை அடைந்தபோது வாசலில் நின்ற சுவாமியைக் கண்டனர். அந்த இடத்திலேயே முழந்தாள் படியிட்டு வணங்கி ‘தோத்திரம் சுவாமி’ என்றனர். சுவாமி அவர்களின் அருகில் வந்தார்’ குழந்தை கிடந்த போருக்குத் தன் தலையைச் சரித்துக் குழந்தையின் கன்னத்தில் தட்டினார். அப்போது அவரின் கரங்களைப் போலவே பிள்ளையின் கன்னமும் சிவந்தது. குழந்தையை அவர் ஆசீர்வதித்தார்.

செவத்தியாரின் சொரூபத்தின்மீது மூடப்பட்டிருந்த திரை விலகியபோது கோயில் மணி ஒலிக்கத் தொடங்கியது. தூபப் புகைக்குள் செவத்தியாரே நேரில் வந்து தன் பேரிரக்கக் கண்களால் பார்ப்பதுபோல உணர்ந்தாள் ஆரோக்கியம். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாய் வழிந்த கண்ணீர் பிள்ளை பாக்கியநாதனின் மேலே போர்த்தப்பட்டிருந்த துணியை ஈரமாக்கியது. அந்தக் கண்ணீர் ஒரு மனிதக் கூட்டத்தின் உள்ளே பொசிந்துகொண்டிருந்த பெருந்துயரின் சாட்சியம் என்பதை அக்குழந்தை அப்போது அறிந்திருக்கவில்லை.

நினைவுரு: 2

சின்ன வத்திக்கானென்ற கரம்பனும் சாதி அபிசேகங்களும்.

போர்த்துக்கேயர் காலத்தில் காணிகளின் விபரங்கள் அடங்கிய ஏடுகள் முதன் முதல் கி.பி.1623இல் எழுதப்பட்டபோது, உயர்ந்த உத்தியோகங்களிலிருந்த பாணர், மழவர் முதலியோர் அவற்றில் தங்களை வேளாளர்[S1]  என்று பதிந்துகொண்டனர். அவர்களைப் பின்பற்றி மற்றச் சாதிகளும் தங்கள் சாதிப் பட்டத்தை மறைத்து வேளாளர் என்று பதிந்துகொண்டனர். அரசாங்க ஏடுகளில் வேளாளர் என்று பதியப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

அரசினர் பெருந் தொகையான மக்கள் வேளாளர் என்று பதிய முன்வருவதை உத்தேசித்து வேளாள சாதிப் பட்டப்பெயராகிய ‘முதலி’ பட்டத்தை 18 இறைசாலுக்கு விற்கத் தொடங்கினர். பெருந் தொகையான மக்கள் அப்பட்டத்தை விலைக்கு வாங்கித் தம்மை வேளாளராக்கிக் கொண்டனர். விளைவாக கி.பி.1690இல் 10,170ஆக இருந்த வேளாளர் சனத்தொகை 1796இல் 15,796ஆக உயர்ந்தது. (காண்க: கு. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை எழுதிய ’யாழ்ப்பாணக் குடியேற்றம்’)

மேற்படி முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையின் குறிப்புக் கூறும் கணக்கு, பின்வந்த நூற்று ஐம்பது வருடங்களில் எந்த அளவு பெருகியிருக்கும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் தீவுப் பகுதியிலும்வேளாள சமூகத்தினர் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொண்டே வந்தனர்.

00

ஞா.ம. செல்வராசாவின் ‘வடஈழ மறவர் மான்மியம்’ நூலில் பண்டைக் காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகத்திலிருந்து வடநாடு சென்று வாணிபஞ் செய்த பாரிய மரக்கலங்களில் முதன்மை வாய்ந்த மீகாமராகவும், தண்டல் மாராகவும் பணியாற்றியவர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்கள் தண்டல் மாலுமிகளாகப் பணியாற்றிய மரக்கலங்களின் நாமாவலிகளையும் இவர்களின் பெயர்களுக்கு அருகிலேயே குறிப்பிட்டுள்ளார். அவை பின் வருமாறு:

சுவக்கீன் தானியேல் – மரியயோசேப்பினா, இம்மானுவேல் ஸ்கூனர்

சுவக்கீன் பறுனாந்து – சத்தியாபடகு (இஃது இவர்களின் இனத்தவரான சவிரி சீனிமுத்து பிரபல வைத்தியர் அந்தோனி சந்தியா மனவேல் அந்தோனி என்பவருக்குச் சொந்தமானது.)

அ. கபிரியேல் – கதிரேசன்புரவி, சுப்பிரமணியபுரவி, கித்தானா

அ. சவிரி – வீரலெட்சுமி, மரியயோசப்பினா, கந்தசாமி புரவி[S2] , (இக்கப்பல் தூத்துக்குடி வெள்ளையப் பா பிள்ளைக்குச் சொந்தமானது) (வீரலெட்சுமி என்ற பாய்க்கப்பல் வ. க. ஆ செட்டியாருக்குச் சொந்தமானது. இது 1884இல் புயலில் அகப்பட்டு கோவைக் கரையில் தரைதட்டியது.)

இன்னாசி தானியேல் – மெனிஸ்டர் (இக்கப்பல் யம்போ என்னும் பரங்கியருக்குச் சொந்தமானது.)

இன்னாசி நசரேத் – உடுகேசன்

பிலிப் மரிசலீன் – அறவளத்தம்மன்

வைத்தியான் சீனி – யோசேப்பினா ஸ்கூனர்

இகஸ்தீன் தொம்மன் – சுப்பிரமணியபுரவி

சுவக்கீன் மனவல் – கதிரேசன் ஸ்கூனர் (இக்கப்பல் வ. ச. ஆ. செட்டியாருக்குச் சொந்தமானது.)

சவிரி அந்தோனி – பாட்டியாபோட்

சவிரி வைத்தியான் – வேலாயுத புரவி

அந்தோனி தீயோகு – வீர்ச்மரிய (இக்கப்பல் அ.ச.மு. செட்டியாருக்குச் சொந்தமானது.)

யக்கோ கபிரியேல் – வேலயுத புரவி, வீர்ச்மரிய

வெலிச்சோர் இறெப்பியல் – வீர்ச்மரிய

யாக்கோ சவிரி – வேலாயுத புரவி

கபிரியேல் ஞானம் – வீர்ச்மரிய

வயித்தி கபிரியேல் – வேலாயுத புரவி

யக்கோ மிக்கேல் – வேலாயுத புரவி

பேதுரு குருசு – வீர்ச்மரிய

என்று குறிப்பிட்டிருக்கிறார்.       

மெலிஞ்சிமுனையில் வாழும் வயது முதிர்ந்தவர்களின் நினைவுகளிலிருந்து கரம்பன் தெற்கில் 1860ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்ததாய் அறியக் கிடைக்கின்றது. ஞா.ம. செல்வராசா கூறும் தண்டையல்களும் மாலுமிகளுமே கரம்பன் தெற்கு, நாரந்தனை, சரவணை ஆகிய இடங்களில் வாழ்ந்த திமிலர் சமூகத்தின் பூர்வகுடிகள் என்றும் தெரிய வருகின்றது.

தீயோகு, நீக்கிலார், மோசேஸ், மரியார், யாக்கோப்பர், சுவானி, சுவாம் (பிரகாசத்தின் தந்தை) , வலோரியார், அவுறார், அருளப்பர், கிருத்தோவர், சலமோன், மனவல், பறுனாந்து(மடுத்தீசின் மாமா) போன்றவர்களை உள்ளடக்கிய ஐம்பத்தி இரண்டு குடும்பங்களில் இருபத்து மூன்று குடும்பங்கள் கரம்பன் தெற்கில் வசித்துவந்தனர்.

இவர்களின் அடுத்தடுத்த தலைமுறையில் வாழ்ந்த,

ம.வயித்தியார் கி. இன்னாசி, அ.லுக்கேஸ், அதிரியார், சந்தியாகு, இசிதோர், தீ.பிரகாசம், ‘பவூன்’பாவிலு, சூசைமுத்து, சந்தியாக்குட்டி, சு.வயித்தியார், பிலிப் பேதுறு, சுவக்கீன், அ. வயித்தியார், ம.அந்தோனி, நீ.வ. அந்தோனி அ. பத்திநாதன், மனேச்சர் சூசை, கா. மனுவல், இ. மத்தியாஸ், அ. மடுத்தீஸ், யாக்கோப்பு (பூவானி தந்தை) ராயப்பு, சலமோர் செவத்தியான், யா. சூசை செபமாலை, தொம்மைக்குட்டி, கபிரியேல் இவர்களின் குடும்பங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் விவசாயத்தையும் கடற்தொழிலையும் வருமானம் ஈட்டும் தொழில்களாகக் கொண்டிருந்தனர்.

கரம்பன் செவத்தியார் கோயிலின் மேற்குப்புறமிருந்த பனங்கூடற் காணியில் பெரிய கூத்துக் கொட்டகை அமைத்துக் கூத்துகளை அரங்கேற்றுபவர்களாகவும் இருந்தனர். இக்கூத்துகளை அன்றிருந்த மூத்த அண்ணாவியார்கள் பயிற்றுவித்தார்கள். பெரும்பாலான கூத்துகளுக்கு சுவானி மகன் சூசை நிர்வாகப் பொறுப்பாளராக இருந்ததால் அவருடைய பெயர் ‘மனேச்சர் சூசை’ என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டது.

இக்காலங்களில்தான் புனித செவத்தியார் ஆலயத்தின் திருத்தவேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்கான பணத்தைப் பங்கு மக்களே பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஒவ்வொரு நாளும் தாம் பிடிக்கும் மீனில் பத்தில் ஒன்றை ஆலயத்திற்கு வழங்கினார்கள். வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள வருடம் ஒன்றிற்கு ஏழு ரூபாய்களை மட்டுமே கொடுத்தனர். இவை தவிர திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தம் உடல் உழைப்பையும் வழங்கினார்கள். செவத்தியார் திருநாளில் ‘ஏழாம் நோவினையை’ நடத்துபவர்களாகவும் இருந்தார்கள்.

00

கரம்பன் தெற்கில் விவசாயத்தையும் மீன்பிடியையும் நம்பியிருந்த திமிலர் சமூகத்து மக்களுக்கும் வெள்ளாள சமூகத்தினருக்கும் அடிக்கடி முறுகல்கள் நடந்தன. திமிலர்களின் தோட்டக் காணி வேலிகளில் கள்ளியும் பிரண்டைக்கொடியும் படர்ந்து அறிக்கையாய் இருந்தபோதும் விளைச்சல் காணிகள் அடிக்கடி தீப்பிடித்து எரிந்தன.

திமிலர்களின் முறைப்பாடுகள் பெரும்பாலும் போதிய சாட்சியங்கள் இல்லாதவையாகவும், அல்லது தனிநபர் பிரச்சினைகளாகக் குறுக்கப்பட்டும் சமாளிப்புகளோடு முடிந்தன. ஆரம்பத்தில் வெள்ளாள சாதி மனோபாவங்கள் ஒரு கூட்டு வெளிப்பாடாய் இருக்கவில்லை. பின்வந்த காலத்தில்தான் அச்சாதி வன்மங்கள் நேரடியாகவே வெளிப்படத் தொடங்கின.

திமிலர் சமூகத்து மனிதர் ஒருவர் மேற்சட்டை போட்டாலோ, பாதணிகள் அணிந்தாலோ அவர் தாக்கப்பட்டார். திருப்பலிப் பூசைக்கு உதவும் சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டனர், ஏளன வார்த்தைகளாலும் அவமதிப்புகளாலும் உதாசீனப்படுத்தப்பட்டனர். கரம்பன் பாடசாலைகளில் படிக்க முடியாமல் சிலர் நாவாந்துறையில் தங்கிப் படித்தனர். கொஞ்சம் கிறிஸ்தவப் பாதிரிகளின் சிபாரிசில் வெவ்வேறு இடங்களில் சேர்ந்துபடித்தனர். ஆனாலும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களால் கல்வியைத் தொடரமுடியாமல் இருந்தது.

எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் ஒடுக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாதவர்களாகவே அம்மக்கள் எதிர்வினையாற்றி வந்தனர்.

சமூகத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்களை அவதானித்திருந்த ஏபிரகாம் சுவாமி நாரந்தனையில் இருந்த சுவானி மகன் சூசையை வரவழைத்து என்ன செய்யலாமென்று யோசித்துத் திமிலர் சமூகத்தினர் அதிகம் வாழ்ந்த பறையங்கேணிப் பகுதியில் ‘கிறிஸ்து அரசர் வாலிபர் சங்கம்’எனும் பெயரில் எட்டுத் தூண்கள் கொண்ட ஒரு கொட்டிலை அமைத்துப் பத்திரிகைகள் வாசிப்பதிலும் கூடி யோசிப்பதிலும் ஆர்வம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சியெடுத்தனர். அவர்களின் எண்ணத்தை அன்றைய இளைஞர்களும் நிறைவேற்றிக் காட்டினர்.

இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத வகையில் இரண்டு சமூக மக்களுக்கிடையிலும் முறுகல்கள் உக்கிரமடைந்து ஒரு பெரும் சண்டை கரம்பனில் மூண்டது.

நினைவுரு: 3

முதலாவது இடப்பெயர்வு

புனித செபஸ்தியார் ஆலயத்தின் திருத்தவேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்கான பணத்தைப் பங்கு மக்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

சுவானி மகன் சூசை, நீ.வ. அந்தோனி, கி. செபமாலை, பேளையர்மகன் அந்தோனி என்று பலர் மீன் குத்தகை எடுத்தார்கள்.

00

பாக்கியநாதன் பதின்ம வயதில் இருந்தான். அப்பாச்சி றோசையின் கடையில் நிற்பதும், வாலிபர் சங்கக் கொட்டிலுக்குள் அரட்டையடிப்பதும், செபஸ்தியார் கோயில் வளவுக்குள் சிரமதானங்கள் செய்வதாகவும் அவனுடைய காலம் போய்க்கொண்டிருந்தது.

அவனுக்கு சறோசினி, சைமன் என்று இரண்டு சகோதரங்களும் பிறந்திருந்தார்கள். குழந்தைகள் இருவரையும் அப்பாச்சி மிகுந்த பக்குவமாகக் கவனித்துவந்தார். பத்திநாதன் கடற் தொழிலில் மினக்கெட ஆரோக்கியமும் பாக்கியநாதனும்தான் கடையை நடத்திவந்தார்கள். வியாபாரம் சிறப்பாகவே நடந்துவந்தது.

ஆனாலும் பாக்கியத்தின் மீது ஆச்சி ஆரோக்கியத்திற்கு ஓர் சந்தேகம் இருந்தது: மகனார் கடையில் நிற்கும்போதெல்லாம் போத்தல்களிலிருந்த இனிப்பு, விசுக்கோத்து போன்றவை அதிகம் குறைகின்றன, பிள்ளை இவ்வளவத்தையும் தின்றுவிடச் சாத்தியமில்லை அப்படியென்றால் எவ்வாறு இவை குறைகின்றன எனும் சந்தேகம்தான் அது.

கிட்டத்தட்ட ஆச்சியிடம் பிடிபடும் தறுவாயில்தான் பாக்கியம் ஆச்சியிடம் சொன்னான் ‘ஆச்சி இந்த அந்தோனியம்மான்ர பெட்ட அடைக்கலமெண என்னெட்ட வந்து இனிப்பு, விசுக்கோத்தெல்லாம் கடனா வாங்குறதெண நல்ல பெட்ட ஆச்சி அது, தந்திரும்’ என்று. ஆச்சி ஒரு சின்னச் சிரிப்போடு ’அதுக்காக நெடுகையும் குடுக்காத மகனே’ என்று சொன்னார்.

‘ஆச்சியாண நெடுகையும் குடுக்க எனக்கென்ன விசராண’ என்று சொன்னவன் அடைக்கலம் கேட்காமலே அவள் மீதான நேசத்தில் ஒரு நாளில் ஒரு இனிப்பையேனும் கொடுப்பதற்குப் பிரியப்பட்டான். அதன் பெயர்தான் காதல் என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

00

1938 ஆம் ஆண்டின் அந்த இரவுப் பொழுது மிகுந்த மனப் பதற்றம் கொண்டதாய் இருந்தது. குஞ்சு குருமானையெல்லாம் தூக்கித் தோளில் போட்டபடி காட்டு வழியில், சூழ்விளக்கு வெளிச்சத்தில் கடலை நோக்கி நடந்துகொண்டிருந்தனர் கரம்பன் தெற்கைச் சேர்ந்த திமிலர் சமூகத்து மனிதர்கள்.

அவர்களில் சிலரது உடல்களில் தீக் காயங்கள் இருந்தன. ஓரிரண்டு பேருக்குக் கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்த துயரம் எல்லோரிடமும் பரவியிருந்தது.

பெண்களின் முகங்களிலிருந்த அச்சத்தையும் துயரத்தையும் சூழ்விளக்குகள் துல்லியமாய் வெளிச்சமிட்டபடி இருந்தன. அவர்கள் ‘செவத்தியாரே எங்களக் கைவிட்டிடாத ராசா’ என்று மன்றாடிக்கொண்டு நடந்தனர். தங்கள் குடிசைகளில் மீதமிருந்தவற்றில் கையில் அகப்பட்டதையெல்லாம் எடுத்து சீலைப் பைகளிலும் உமல்களிலும் போட்டபடி ஆண்கள் முன் நோக்கி நடந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒருகையில் அத்தியாவசியப் பொருட்களும், மறு கையில் வாட்டசாட்டமான விடத்தல் தடிகளும் இருந்தன. பற்றைகளின் நடுவில் இருந்த வெளிகளில் அவர்கள் களைப்பாறியபடி நடந்தனர். கடையிலிருந்து கொண்டுவந்த விசுக்கோத்து வகைகளை தனது ஓலைப் பையிலிருந்து எடுத்து அடைக்கலத்திற்கும், அவனுடைய சினேகிதர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான் பாக்கியம்.

கடற்கரையில் நாவாந்துறையிலிருந்து வந்த உறவினர்கள் எட்டுத் தோணிகளைக் கொண்டுவந்து ஏற்றுவதற்குக் காத்திருப்பதைக் கண்டனர். தோணிகளைக் கொண்டுவந்த நாவாந்துறை உறவினர்கள் தங்கள் தோணிகளிலிருந்து ஒவ்வொருவராக வெளிவந்து இவர்களின் பொருட்களையும், பிள்ளைகளையும் தூக்கி தோணிகளில் ஏற்றினர். அவர்கள் நாவாந்துறையிலும் கரம்பனிலும் வசித்திருந்தாலும் தாய், பிள்ளை, மாமன், மச்சான் என்ற குடும்ப உறவு நிலைகளால் பிணைந்திருந்தனர்.

புளியங்கூடல், சுருவில், கரம்பன், ஐத்தாம்புலமென்று வட்டமாய்ச் சூழ்ந்திருக்கும் வெள்ளாள சமூகத்துக் கிராமங்களைத் தாண்டி அவர்கள் தோணிகளில் போய்க்கொண்டிருந்தனர்.

தோணிகளில் ஏறிப் பயணித்த மக்கள் தமது கரையில் இருந்து தோணிகள் தூரமாகத் தூரமாக மனதில் பாரம் ஏறிக்கொண்டே இருந்ததை உணர்ந்தனர். நினைவறியாக் காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த நிலம் முற்றாக உரிமை மறுக்கப்பட்ட நிலமாகப் போய்விடுமோ என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்தது. ஏனெனில் அவர்கள் வெள்ளாள சமூகத்து மனிதர்களின் மன நிலைகளை நன்கு அறிந்துவைத்திருந்தனர்.

‘எப்படி இந்தப் பிரச்சினை வந்தது’ என்று அறிய நாவாந்துறைச் சொந்தங்கள் விரும்பினார்கள். அவர்களுக்கு கரம்பனார் நடந்தவற்றைக் கூறிக்கொண்டே சென்றனர்.

00

கரம்பன் தெற்கு திமிலர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனுக்குக் கலியாணப் பதிவு வெகு சிறப்பாக நடந்து முடிந்த மறு வாரத்தில் அவனுடைய சிறியதகப்பன் முறையான ஒருவர் ‘ஏன் மகனே எனக்குச் சொல்லியிருக்கலாம்தானே’ என்று கேட்க, கலியாண மாப்பிள்ளையும் ஏதோ தன் பக்க நியாயத்தைச் சொல்லப்போக, இவற்றைக் கேட்டுக்கொண்டு நின்ற வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தீர்ப்புச் சொல்லும் தோரணையில் வந்து இரண்டுபேரையுமே தரக்குறைவாய்ப் பேசி, சாதியை இழுத்து வாலாயமாய்ப் பேச, இவற்றையெல்லாம் அவதானித்த மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் வெள்ளாள சமூகத்தவரின் கன்னத்தில் தன்னுடைய காய்த்துப்போன கையை வைக்க, சிறிய பொறிக்காகப் கிடைக்கும் பார்த்துக்கொண்டிருந்த வெள்ளாள சமூகத்தினர் பெரும் படை திரட்டி வர சண்டையும் பெரிதாகிப் போனது. வெள்ளாள சமூகத்தினர் தாம் வேலை செய்யும் கொழும்புவிலும், ஏனைய பகுதிகளிலிருந்தும் சிங்களச் சண்டியர்களையும் இறக்கித் திமிலர் சமூகத்தினரைத் தாக்கினார்கள்.

இந்தச் சண்டையின் வெவ்வேறு சம்பவங்களை விவரித்தபடியே கரம்பனார் நாவாந்துறை சென்றடைந்தபோது அவர்களின் உறவினர்கள் வந்து தத்தம் வீடுகளுக்கு அழைத்துப்போயினர்.

சுவானியின் பிள்ளைகள் உள்ளடங்கிய எட்டுக் குடும்பங்கள் மட்டும் கரையூரிலிருந்த அவர்களின் உறவினர் மரியாம்பிள்ளை என்பவருடைய வீட்டுக்குச் சென்றனர்.

நினைவுரு: 4

ஆடவென அடியெடுத்த கலைக்கு

தேடி வந்தணைந்த பாத்திரம்

இடம் பெயர்ந்த பத்திநாதன் குடும்பம் கரையூரிலிருந்த மரியாம்பிள்ளை வீட்டில் கூட்டு வாழ்க்கைக்குள் இருந்தது. சிறுவனான பாக்கியநாதனை மாமனார் சூசை சென் ஜேம்ஸ் கல்லூரியில் சேர்த்துவிட்டார். சூசைக்குக் கத்தோலிக்கப் பாதிரியார்களிடையில் செல்வாக்கு இருந்தது.

பாக்கியநாதன் சென் ஜேம்ஸ் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தான். அவன் சேர்ந்தபோது வகுப்பாசிரியராக ‘குறோமான்’ என்கின்ற ஆசிரியர் இருந்தார். குறோமான் ஆசிரியரின் பொறுப்பில் அங்கே ‘ஞானசவுந்தரி’ கூத்து மேடையேறுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மாணவர்களுக்குள் நடந்த குரல் தெரிவில் பாக்கியநாதன் தெரிவானதால் அவனுக்கு ஞானசவுந்தரியின் கணவர் புலேந்திரன் பாத்திரம் கிடைத்தது.

பள்ளிக்கூடம் போய் முதல் வெள்ளிக் கிழமையிலேயே கூத்துப் பிரதியோடு வீடு திரும்பிய மகனாரிடம் புது வகையானதொரு உற்சாகம் வந்திருப்பதை ஆச்சி ஆரோக்கியம் கவனித்தார். புதுப் பள்ளிக்கூடத்திற்கு அரை மனதோடு போய்க் கொண்டிருந்த மகன் இனி ஆர்வத்தோடு போவான், புதிய நட்புகளும் கிடைக்கும் என்று ஆச்சி யோசித்தார்.

அடுப்படியில் இருந்தபடி கூட்டுக் குடும்பத்தின் இரவுச் சாப்பாட்டிற்கான சமையலைச் செய்துகொண்டிருந்த பெண்டுகளுக்குள் சிறுவன் பாடிக்கொண்டிருக்க, அடுப்படிக்கு வெளியே குந்தியிருந்த தகப்பனும் மகனின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். பத்திநாதனுக்கோ மகனின் பாட்டு திருப்தியாய் இல்லை. யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அடுப்படிக்குள் வந்த பத்திநாதன். ‘கொப்பியக் கொண்டுபோய் குடுத்திற்று வாடா, உனக்கார் இந்த வேசம் தந்தான்? மரியாதயோட கொண்டுபோய்க் கொடுத்திற்று ஏதாவது பெண் வேசமிருந்தால் வாங்கீற்று வா’ என்றார்.

அது ஒரு வெள்ளிக் கிழமை இரவு. அங்கிருந்த பெண்கள் ‘இந்த இரவில பயல எங்க போகச் சொல்லுறாய், ஏன் அவன் நல்லாத்தானே பாடுறான், பழகப் பழக எல்லாம் சரியாகீரும்’ என்றனர். ஆனாலும் பத்திநாதனுக்குத் திருப்தியில்லை ‘திங்கட்கிழம கொண்டுபோய் குடுத்திற்று பெண்கூத்து மாத்தி வாங்கீற்று வா’ என்றபடி வெளியேறினார்.

அப்பு வெளியேறியதும் ஆச்சியுடன் சிணுங்கினான் பாக்கியநாதன் ‘இவர் சொல்லுறமாதிரி அங்கபோய் நான் கேக்கேலுமாண ஆச்சி, எல்லாரும் என்னக் கோவிப்பினமே.’

ஆச்சி மகனை ஒருவாறு சமாதானப்படுத்தினார். ஆரோக்கியத்திற்கு பத்திநாதனின் கூத்து அனுபவங்கள் நன்கு தெரிந்திருந்தது. பல மேடைகளில் பெண் வேடத்தில் நடித்துத் தனித்துவமான பெயரைப் பெற்றிருக்கும் தன் கணவர் மகனுக்கானதொரு சரியான அத்திவாரம் போட விரும்புகிறார் என்று ஆரோக்கியம் யோசித்தார்.

ஆனால் பாக்கியநாதனுக்கோ எப்படியாவது தான் அப்புவைத் திருப்தியாக்க வேண்டுமெனும் எண்ணம் இருந்தது. சூசையம்மான் வீட்டின் முன்னால் இருந்த பரிகாரியார் சின்னப்புவின் வீட்டில் போயிருந்து புலேந்திரன் பாத்திரத்தைத் பாடமாக்கி ஆயத்தப்படுத்திக் கொண்டான்.

 திங்கட் கிழமை வந்தபோது கூத்துப் பழகும் நேரமும் வந்தது. மிகுந்த மன நெருக்கடியோடு கூத்துப் பிரதியைக் கொண்டு நசிந்துநசிந்து போனான் பாக்கியம். அப்போது ஞானசவுந்தரி பாத்திரத்தைப் பாடச் சொன்னார் ஆசிரியர். ஞானசவுந்தரி பாத்திரத்தை நடித்த மாணவன்மீது ஆசிரியருக்குத் திருப்தி இருக்கவில்லை. பாதியிலேயே அதை நிறுத்திப் பிரதியை வாங்கி பாக்கியநாதனிடம் ‘நீ ஒருக்கால் பாடு பாப்பம்’ என்றார். பாக்கியநாதன் எதிர்பார்க்காத மகிழ்ச்சியோடே ஞானசவுந்தரி பாடலைப் பாடி நடித்தும் காட்டினான். குறோமான் ஆசிரியருக்கும், அங்கிருந்த மற்றவர்களுக்கும் மிகுந்த உற்சாகம். பாக்கியநாதனை வாயாரப் பாராட்டிக் கைதட்டல்களால் மகிழ்வித்தனர். அதுதான் கலைக்காக அவன் முதன்முதலில் வாங்கிய கரகோசமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாநகர சபையில் மேடையேறிய ‘சஞ்சுவான்’ கூத்தில் ஏரோதியாளின் மகள் சலோமையாகவும், அதிலிருந்து தொடர்ச்சியாகப் பெண் வேடங்களைத் தெரிவு செய்து நடிக்கும் கலைஞனாகவும் பாக்கியநாதனின் வாழ்க்கை தொடர்ந்தது. தகப்பனார் பத்திநாதன் ஆனந்தசீலன், ஊர்சோன்பாலந்தை கூத்துகளில் பெண்வேடமிட்டு நடித்ததைக் குழந்தையாக இருக்கும்போது பார்த்திருந்த பாக்கியநாதன் அவரிடமிருந்து பெற்றவற்றோடு புதுமையான உடல் மொழிகளைப் பரீட்சித்துப் பார்ப்பவனாகவும் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

00

பத்திநாதனின் குடும்பம் கரையூரில் இருக்க, அவனது பெற்றோர், சகோதரர்கள் எல்லோரும் நாவாந்துறையில் இருந்தார்கள். அக்காலத்தில் பத்திநாதனின் தங்கை அனந்தாசியின் குடிசையில் இருந்த தகப்பனார் அருளப்பர் நோயுற்றிருந்ததால் பத்திநாதன் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வதுண்டு. தான் வராத நாட்களில் மகன் பாக்கியநாதனையும் அனுப்பிவைத்தார் பத்திநாதன்.

அப்பய்யா அருளப்பரைப் பார்க்கவரும் பாக்கியநாதன் ராயப்பு அண்ணன், சவிரிமுத்தண்ணன், காணிக்கை, ஆசீர்வாதம் ஆகிய தன் உறவுக்கார வாலிபர்களுடன் சேர்ந்து எங்கே கூத்து நடக்கிறதென்று தேடிச்சென்று பார்ப்பவனாக இருந்தான்.

கூத்து முடிந்து வீடு திரும்பும்போது ஆளுக்கொரு பாத்திரத்தை நடித்துப் பாடியபடியே இவர்கள் வருவது வழக்கம்.. மேடைக் கூத்தை நடைக்கூத்தாக மாற்றிப் பாடிக்கொண்டே நடப்பார்கள். ராயப்பு அண்ணன் நுட்பமான பாடகன், சவிரிமுத்தண்ணனைச் சொல்லவே தேவையில்லை; அண்ணாவியாரின் வாரிசல்லவா! ஆசீர்வாதம் கனிவான குரல்காரன், காணிக்கை எதைச் செய்தாலும் கலாதியாகச் செய்வான். இவர்களோடு இருக்கும் நேரத்தை பாக்கியநாதன் பெரிதும் விரும்பினான். இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க தான் மட்டும் மரியாம்பிள்ளையம்மான் வீட்டில் படிப்புப் படிப்பென்றிருக்கக் கசப்பாக இருந்தது. பெரும்பாலான இரவுகள் கூத்துப் பார்க்கப் போய்ப் பகல் பள்ளிக் கூடத்திற்குச் செல்லமுடியாதவனாக இருந்தான் பாக்கியம். இவ்வாறே பாக்கியநாதனின் படிப்பும் குழம்பியது. காலப் போக்கில் நாவாந்துறையில் நண்பர்களோடு ‘குத்தட்டைக்குப்’ போகும் தொழிலாளியாக மாறிப்போனான் பாக்கியநாதன்.

பத்திநாதன், ஆரோக்கியம் குடும்பம் கரையூரில் இருந்த காலத்தில் ‘சின்னச்சறோ’என்ற ஒரு மகள் பிறந்தாள், பின்னர் 1947இல் சில்வெஸ்டர் என்ற பெயரில் ஒரு மகனும் பிறந்தான். அக்காலத்தில்தான் நோயுற்றிருந்த அருளப்பரும் கண்ணை மூடிக்கொண்டார்.

நினைவுரு: 5

ஒரு சிரட்டை அகப்பையானது

அருளப்பரின் மரணத்தோடு அவரின் பிள்ளைகளுக்கு மீண்டும் ஊருக்குச் செல்ல வேண்டும், காணிகளையும் கடல்தோம்புகளையும் பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட முடியாது எனும் எண்ணம் தோன்றியது. ஏனெனில் அருளப்பரும் தன்னுடைய ஊரின் நினைவுகளுடனேயே கண் மூடினார்.

மேற்படி எண்ணம் அவர்களின் ஊரார் எல்லோரிடமுமே வலுவாகிக் கொண்டிருந்தது. செவத்தியார் கோயில் பங்குக் குருவும் அவர்களை ஆர்வப்படுத்தவே அவர்கள் மீண்டும் கரம்பனுக்குச் சென்றார்கள். தங்கள் காணிகளைத் துப்புரவாக்கினார்கள், அவர்களுக்காகக் காத்திருந்த கடல் அவர்களுக்குத் தாராளமான செல்வங்களை வழங்கி மகிழ்வித்தது. அவர்கள் கடலில் பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்தார்கள். செவத்தியார் கோயில் கட்டிட வேலைகளிலும் தம்மை இணைத்துக்கொண்டார்கள்.

அக்காலத்தில் கரம்பன் தெற்கைச் சேர்ந்த திமிலர் சமூகத்தினர் மீண்டும் குத்தகைகளை எடுத்தார்கள். அவ்வாறு குத்தகை எடுத்தவர்களில் இறுதிக் குத்தகையை எடுத்தவனாக பாக்கியநாதன் வளர்ந்திருந்தான்.

00

அந்த மத்தியான நேரத்தில் அந்தோனியர் பொஞ்சாதி வந்து ‘மச்சாள்.. மாராயம் தாண… என்ர மூத்தவள் விருத்தறிஞ்சிற்றாள்’ என்று சொன்னபோது ஆரோக்கியத்துக்குள் எழுந்த மகிழ்ச்சி அப்படியே முகத்தில் பொலிந்துவிட்டது. அவள் மகிழ்ச்சியில் என்ன பேசுவதென்று தெரியாமல் ‘என்னடி நேற்றுத்தானே கண்டன் பெட்டைய?’ என்றாள்.

‘இரு வாறன்’என்று சொன்னபடியே சேலையொன்றைச் சொருகிக்கொண்டு குசினிக்குள் போய்ப் பனையோலையால் வேய்ந்த அரிசிப் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த காசை எடுத்துச் சேலையில் முடியும்போது கடுவன் பூனைபோலக் குசினிக்குள் இருந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் மகனார் பாக்கியத்தை ஒரு கூர்மையான பார்வை பார்த்துச் சிரித்தாள். பின்னர் ‘இதில அந்தோனியம்மான் வீட்டடிக்குப் போய்ற்றுவாறன் அப்பு வந்தால் சொல்லு’ என்றபடி வீட்டிலிருந்து வெளியேறினாள்.

 முற்றத்தில் பக்கத்து வீட்டுப் பெட்டையளோடு மகள் பெரியசறோ, எட்டுக்கோடு விளையாடிக்கொண்டு நின்றாள், தங்கை சின்னச்சறோவையும், தம்பி சில்வெஸ்ரரையும் பார்க்கும்படி அவளைக் கூப்பிட்டுச் சொல்லியபடி ஆரோக்கியம் புறப்பட்டாள்.

பெரியசறோவுக்குப் பதின்மூன்று, பதின்நான்கு வயதுகளிலேயே தம்பி, தங்கைமாரைக் கவனிக்கும் பொறுப்பு வந்துவிட்டது. ஆச்சி கடையையும், வீட்டு அலுவல்களையும் கவனிக்க, அப்பாச்சி றோசையோடு சேர்ந்து தம்பி தங்கையரைக் கவனிப்பதில் அக்கறைகொண்டாள் பெரியசறோ. அந்தப் பொழுதுகளில் அப்பாச்சியிடமிருந்து கொஞ்சம்கொஞ்சமாக மூலிகை வைத்தியத்தையும் கேட்டு அறிந்துகொண்டாள்.

 கரையூரில் இருந்து திரும்பிக் கரம்பனுக்கு வரும்போது சைமன் சூசை அம்மான் வீட்டிலேயே படிப்பதற்காகத் தங்கிவிட்டான். அவன் சின்னம்மான் வீட்டில் தங்கி கொழும்புத்துறை சென் ஜோசப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். சின்னச்சறோ எப்போதும் அக்காவைச் சுற்றியே வருவாள், இவன் சில்வேஸ்ரர்தான் சுள்ளான், கண்ணில விளக்கெண்ண ஊற்றிக்கொண்டு இருக்க வேணும். நிக்கிற மாதிரி நிண்டிற்று எங்கையாவது ஓடிவிடுவான், கிணறுகள் நிறைந்துகிடப்பதால் பிள்ளையைக் கவனமாகப் பார்க்க வேண்டுமென்னும் எண்ணத்தில் பெரியசறோ அவனுடனேயே அதிக நேரத்தைப் போக்கினாள்.

00

ஆரோக்கியத்துக்கு தன் மூத்த மகனை நினைக்க நினைக்கச் சிரிப்புத்தான் வந்தது. அந்தோனியர் மகள் அடைக்கலம் நல்ல வடிவான பெட்ட, சோலியில்லாதவள். ‘மாமி’ என்று அவள் கூப்பிடும்போதே ஒரு வாஞ்சை இருக்கும். இந்தக் கள்ளனுக்கும் அவளில விருப்பம் இருக்கும் போலத்தான் கிடக்கு. இல்லாமலா கடைக்குச் சாமான் வாங்க வாற பெட்டைக்கு இனிப்பு, விசுக்கோத்து எண்டு காசு வாங்காமலே கொடுக்கிறான், மடுவுக்குப் போய்ற்று வரும்போது சத்தியெடுத்த பெட்டைக்கு அவ்வளவுபேர் இருக்கக்கூடியதாக எலுமிச்சம் பழம் கொடுத்தானே. ஒரு முறைக்குச் சகோதரங்கள்தான் ஆனாலும் இவையள் ரெண்டுபேருமே அந்த முறையைப் பயன்படுத்தி மச்சான், மச்சாளாத்தான் புளங்குகினம்போல. அட அந்தப் பொடிச்சிகூட ‘அண்ணனுக்குக் கொண்டுபோய்க் குடு என்று இவன் ராசுவெட்ட பனங்காப் பணியாரம், கச்சான் எண்டெல்லாம் குடுத்து விடுகிறாளாமே. எதுக்கும் இவன் ராசு வர ‘இரு மகனே’ எண்டு இருத்திவச்சு நாலு கத கேக்கத்தான் வேணும் என்று யோசித்தபடியே அந்தோனியர் வீடடைந்தாள்.

00

1952இல் ஆரோக்கியம், பத்திநாதனின் மூத்த மகள் பெரியசறோ என்று அழைக்கப்பட்ட யோசேப்பினாவுக்கும், அவர்களின் உறவினர் சூசையின் மகன் ஆசீர்வாதத்திற்கும் மிகச்சிறப்பாகத் திருமணம் நடந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே ஆரோக்கியத்திற்கும் பத்திநாதனுக்கும் ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு கார்மேல் மாதாவின் நினைவாய் ‘கார்மேலம்மா என்று பெயர் வைத்தார் பத்திநாதன். அண்ணன் பத்திநாதனைத் தொடர்ந்து தம்பி மடுத்தீசுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ‘பெனடிற்’என்று பெயர் வைத்தார் மடுத்தீஸ்.

அண்ணன் பத்திநாதன் பெண்கூத்துகளைத் தெரிவுசெய்து நடித்தால், தம்பி மடுத்தீசோ வித்தியாசமான பாத்திரங்களில் திறமையை வெளிப்படுத்துபவராக இருந்தார். சிறந்த விளையாட்டு வீரனாகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இருந்த மடுத்தீஸ், அண்ணனின் மகன் பாக்கியத்தின்மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார்.

ஒருநாள் பின்னேரப் பொழுதில் அண்ணன் வீட்டுக்கு அகப்பை செய்வதற்கானதொரு சிரட்டையைச் சீவியபடியே வந்த மடுத்தீஸ் அண்ணி ஆரோக்கியத்திடம் ‘மகன் பெனடிற்றுக்கு பாய்க்கம் தலை தொட்டால் என்னண்ணி’ என்று கேட்டார். ஆரோக்கியமும் ‘நல்ல விசயம்தானே, உறவ வலுப்படுத்தும்தானே என்றபடி, ‘மடுத்தீசு நான் ஒண்டு சொன்னால் செய்வியோ?’ என்று கேட்டார். மடுத்தீசும் பூடகமில்லாமல் ’என்னண்ணி சொல்லனெண’ என்றார்.

‘இவன் பாக்கியத்தையும், அந்தோனியற்ற மகள் இருக்கிறாளெல்லா இவள் பெட்ட அடைக்கலத்தையும் தல தொட வச்சால் என்ன?’ என்று கேட்டார் ஆரோக்கியம்.

மடுத்தீஸ் ‘புர்ர்ர்ர்ர்’ என்று சிரித்தார். பிறகு ‘இஞ்ச விடு நானெல்லோ செய்யிறன்’ என்று சொல்லியபடியே தமயனை நோக்கிப் போனார். அண்ணியார் சொன்னார் ‘ஆத்தே மகனே நான் சொன்னதெண்டு சொல்லாமல் நீயே உங்கண்ணனெட்டச் சொல்லிக் கேட்டிரு’ என்று. மடுத்தீஸ் ‘நீ நிண்டு பாரன் அண்ணருக்கு நான் விடுகிற வண்டில என்றபடி தமயனை நோக்கிப் போனார்.

வலை பொத்திக்கொண்டிருந்த பத்தினாதனுக்கும் மருசலினுக்கும் பக்கத்தில் போய் ஒரு பகிடிக் கதையோடு குந்தினார் மடுத்தீஸ். அண்ணன் தம்பிமாருக்குள் ஒரே சிரிப்பாக இருந்ததை தூரத்தில் இருந்தபடி ஆரோக்கியம் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிரிப்பும் கதையுமாய் இருந்த சகோதரர்களை விட்டு மடுத்தீஸ் எழும்பும்போது அவருடைய கையிலிருந்த சிரட்டை அகப்பையாக மாறியிருந்தது. சிரட்டை சீவிய வில்லுக்கத்தியை இடுப்பில் சுருட்டிக்கொண்டு அண்ணியாரைக் கடந்து போன மடுத்தீசை இரகசியமாக ‘என்னவாமடா’என்று கேட்டார் ஆரோக்கியம்.

‘ஆ… சுவாமியெட்டப் போறன் ஞானஸ்தானத்துக்குக் கதைக்க’ என்றபடி சிரித்துக்கொண்டே விறுக்குவிறுக்கென்று போனார். ஆரோக்கியம் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த நாளைக் கடந்தார்.

00

ஞானஸ்தானம் முடிவானபோது தலை தொடுவதற்கான ஞானப் பெற்றோர்கள் திருமணம் செய்யாதவர்களாய் இருந்தது பங்குச் சுவாமியாருக்குப் பிரச்சினையாக இருந்தது. வேறு யாரையாவது கூட்டி வரும்படி மடுத்தீஸிடம் சுவாமியார் கூறினார். மடுத்தீஸ் வெளியே வந்து யோசித்துவிட்டு சுவாமியாரிடம் போய் ‘சுவாமி உங்களுக்குக் கலியாணம் செய்தால் சரிதானே, இப்ப இவயள் தல தொடட்டும், நாங்க பிறகு கலியாணம் செய்துவைக்கிறம்’என்றார். சுவாமியாரும் விடுவதாய் இல்லை. அப்படியென்றால் ஒரு கடிதம் எழுதிக் கையொப்பம் இட்டுவிட்டுப் போகும்படி கூறினார். மடுத்தீசும் அவ்வாறே செய்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தார்.

அண்ணனின் மகனின் கலியாணத்திற்குத் தானே கையொப்பமிட்டு விட்டுப்போன மடுத்தீஸ் அண்ணன் வீட்டில் தனது செயலுக்கு அவமரியாதை கிடைக்காது என்று நம்பினார். அவர் கையொப்பமிட்டபடியே 1953இல் பாக்கியநாதன், அடைக்கலத்தின் திருமணம் செவத்தியார் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நிறைவேறியது.

நினைவுரு: 6

ஒற்றுமையின் சின்னமாய் நின்ற எட்டுத் தூண்கள்.

செவத்தியார் கோயிலுக்கு அருகில் ஒரு பாடசாலை இருந்தது. அப்பாடசாலையின் அருகில் ஒரு சுவர் கட்டப்படாமல் பாதியில் இருந்தது. அந்த அரைச்சுவரில் பின்னேர நேரங்களில் பலரும் வந்து குந்தியிருந்து ஊர் நிலைப்பாடுகளையும் புதினங்களையும் பேசிப்பறைவது வழக்கம். அவ்விடத்தில் ராயப்பு, பாக்கியநாதன், அண்ணன் செவத்தியான், சவரிமுத்தண்ணன், காணிக்கை, ஆசீர்வாதம் போன்ற நண்பர்களும் போய் குந்தியிருந்து பேசுவது வெள்ளாள சமூகத்துப் பெடியளுக்குப் பிடிக்கவில்லை. அதிலிருந்து அடுத்த முறுகல் தொடங்கியது.

தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டுவதற்கு எதுவிதத் தனிப்பட்ட முயற்சிகளும் இல்லாமலேயே இலகுவாகக் கிடைக்கும் ‘உயர்சாதி’என்ற அந்தஸ்தைக் கரம்பன் வெள்ளாள சமூகத்தினர் ரசித்து ருசித்து வாழ்பவர்களாக மாறியிருந்தனர். போகிற போக்கில் ஒரே கிராமத்திற்குள் வாழும் சக மனிதரைக் கிண்டல்களாலும் கேலியாலும் நச்சரித்துத் துயரப்படுத்துவதில் ஆனந்தம் காண்பவர்களாக இருந்தார்கள். இந்த மனநிலை ஒரு சமூகக் கூட்டு மனநிலையாக அவர்களின் எல்லா வகையான சமூகத் துறைகளுக்குள்ளும் வியாபித்திருந்தது.

முன்னர் நடந்த கலவரத்தின்போது இருந்த குருவானவர் ஏபிரகாம் அடிகள் திமிலர் சமூகத்தின் துயர நிலைகண்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று அழுதாராம். மீண்டும் கரம்பனுக்குத் திரும்பி நிம்மதியாக வாழலாமென்று வந்த மக்களுக்கு நடக்கும் நெருக்கடிகளை அவதானிப்பவராக அப்போதிருந்த நல்லையாச் சுவாமியும் இருந்தார்.

நல்லையாச் சுவாமி கரம்பன் வெள்ளாள சமூகத்தில் பிறந்தவராக இருந்தபோதும், திமிலர் சமூகத்து மக்கள்மீது கரிசனை கொண்டவராக இருந்தார். அவர் அப்போதுதான் நாவாந்துறையிலிருந்து மாற்றலாகிக் கரம்பனுக்கு வந்திருந்தார். நாவாந்துறையில் அவர் இருந்த காலத்தில் முக்குவ சமூகத்தினருக்கும், திமிலர் சமூகத்தினருக்கும் இடையில் நடந்த சாதிப் பிரச்சினைகளையும், திமிலர் சமூகத்தினர் சென். நீக்கிலார் கோயிற் பங்கிலிருந்து பிரிந்துசென்று ‘பரலோக மாதாவின்’ பெயரில் தமக்கான பங்கினை அமைத்துக்கொண்டபின் பிரச்சினையின் வீரியம் கொஞ்சம் தணிந்திருந்ததையும் அவதானித்திருந்தார்.

இலங்கை வடபகுதியின் சாதிப்பிரச்சினைகளை முக்கியமான சமூகப் பிரச்சினையாக முன் நிறுத்தி அதைத் தீர்த்து வைக்கும் வல்லமை கத்தோலிக்க மேற்றாசனத்திற்கு இல்லை என்பதாலும், அதைச் சமாளிப்பதற்கான உத்தியாக சாதிக்கொரு ஆலயத்தை அமைப்பதே சாத்தியம் என்று மேற்றாசனம் உணர்ந்ததாலுமே இத்தகைய பிரிந்து செல்லுதல்களுக்கான ஆதரவாக கத்தோலிக்க மேற்றாசனம் இருந்தது என்றும் இன்று ஊகிக்க முடிகிறது.

அதன் வெளிப்பாடாய் நல்லையாச் சுவாமியின் ஆதரவோடு கரம்பன் தெற்கில் திமிலர் சமூகத்தினர் பராமரித்துவந்த ‘கிறிஸ்து அரசர் வாலிபர் சங்கத்தின்’ எட்டுத்தூண் கொட்டிலைப் பிரித்துக்கொண்டு மெலிஞ்சிமுனையை நோக்கி நடந்தார்கள் திமிலர் சமூகத்து மனிதர்கள். அவர்கள் தூக்கிய எட்டுத் தூண்களுமே எட்டுக் குடி மூதாதேயர்களின் குறியீடாகவே இன்று தெரிகிறது. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சிலுவையாகக் கனக்க அவர்கள் நடந்தார்கள், கல்லும, முள்ளும் கால்களைப் பதம் பார்த்தன. அவர்களின் கண்களில் ஒரு அழகிய கிராமம் வெளித்துக்கொண்டிருந்தது, ‘எங்கள் தலைமுறை நிமிரும், எங்கள் தலைமுறை நிமிரும்’ என்று அவர்கள் பொருமினார்கள், எட்டுத் தூண்களையும் ஓரிடத்தில் ஆழமாய்க் கிண்டி நிமிர்த்தி நட்டார்கள். எங்கள் ‘மெலிஞ்சிமுனை’ பிறந்தது.

நினைவுரு: 7

விலைபோன கடைசிக் காணி.

கலியாணம் கட்டியதோடு பேளையர் மகன் அந்தோனி தற்போதைய வேளாங்கன்னி மாதா கோயிலின் பின்புறமிருந்த தோட்டக் காணியை பாக்கியநாதனுக்கும் அடைக்கலத்திற்கும் கொடுத்திருந்தார். ஏற்கெனவே சிறந்த தொழிலாளியாக இருந்த பாக்கியநாதன் அக்காணியையும் வளப்படுத்திக் கொண்டான். அக்காணியில் எட்டு மூலைகள் வைத்த நன்நீர்க் கிணறு ஒன்று இருந்தது,அக்காணிக்கான சிறப்பாக இருந்தது. அக்காணியில் மிளகாய் பயிர் நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது.

பாக்கியநாதனுக்கும் அடைக்கலத்திற்கும் மூத்த மகன் ‘சிறில் அகுஸ்தீன்’ பிறந்த காலத்தில் செல்வச் செழிப்புமிக்க குடும்பமாய் பாக்கியநாதனின் குடும்பம் இருந்தது. அக்காலத்தில்தான் ‘திருநாவுக்கரசு’என்பவரிடம் பாக்கியநாதன் ‘கார்’ ஓட்டுநர் பயிற்சியை பெற்றதோடு பார ஊர்தி ஓட்டுவதற்கான அனுமதிப் பத்திரத்தையும் வாங்கியிருந்தான். தன்னுடைய வருமானத்தை அதிகரிக்க வைக்கவும், எதிர்காலத்தில் கொழும்புக்கு வாகனம் ஓட்ட வேண்டிய தேவை வரலாம் என்றும் பாக்கியநாதன் எண்ணியிருந்தான். அக்காலத்தில்தான் பாக்கியநாதன் கள்ளுக் குடிக்கவும் கற்றுக்கொண்டான்.

கலியாணம் கட்டியபின் மகன் பாக்கியநாதன் எப்படி வாழ்கிறான் என்பதை அவனுடைய பெற்றோர் நோட்டமிடுபவர்களாகவே இருந்தார்கள். பொருளாதாரத்தில் சிறப்பான நிலைக்கு வந்திருக்கும் மகன் குடிபோதைக்கு ஆட்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் வருத்தம் கொண்டனர். பாக்கியநாதன் தொழிலுக்குச் சென்று வீடு வருவதற்குள் பக்கத்துக் காணிகளில் வரும் சீவற் தொழிலாளிகளிடம் ஒரு போத்தல் கள்ளை வாங்கி முந்தானையால் மறைத்துக்கொண்டுபோகும் மருமகள் அடைக்கலத்தை ஆரோக்கியம் பல தடவைகள் கண்டிருக்கிறார். அப்போதெல்லாம் தன்னைக் கண்டும் காணாததுபோல் பறந்தடிச்சு ஓடும் மருமகளைப் பார்த்துச் சிரித்துமிருக்கிறார்.

அடைக்கலம் ஒரு விசித்திரமான சமையற்காரி என்பதும் ஆரோக்கியத்திற்குத் தெரியும். மூன்றாம் அவியலிட்டு எடுத்த கடல் அட்டையைக் காயவைத்து எடுத்தபின் தண்ணீரில் ஊறவைத்து, அதை வட்டம், வட்டமாய் வெட்டி மீண்டும் அவித்துக் கறி காய்ச்சுவாள் அடைக்கலம். வெங்காயப் பாகு என்றும், ஊதுவாலென்றும், குறிஞ்சாக் கஞ்சியென்றும் வித்தியாசம் வித்தியாசமாய்ச் சமையல் செய்வது மட்டுமல்லாமல் மகனுக்கு ஊட்டிவிடுவதையும் கண்ட ஆரோக்கியத்திற்கு மருமகள் மீதும் மிகுந்த அன்புதான் பெருகியது.

எப்படியோ கணவன் மனைவி இருவருமே மிகுந்த அன்னியோன்யமாக இருப்பது மகிழ்ச்சிதானே என்று ஆரோக்கியம் நினைத்தார்.

00

ஒரு நாள் இரவு தங்கள் காணிக்குள் யாரோ களவாய் வந்து மிளகாய் பிடுங்குவதை அவதானித்துப் பதுங்கிப்பதுங்கிச் சென்று பிடிக்க முற்பட்டபோது களவெடுக்க வந்தவர் யாரென்று பாக்கியநாதன் கண்டுகொண்டார். ஆனாலும் அந்த நபர் யாரென்று பாக்கியநாதன் யாருக்குமே சொல்லவில்லை. ஒரு நாள் பின்பகலில் மிளகாய்க்கு காவல் கொட்டிலின் பின்புறம் புகைந்துகொண்டிருந்ததைக் கண்டு மிகுந்த பதற்றத்தோடு கொட்டிலை நோக்கி ஓடியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கொட்டிலின் பின்னால் கட்டியிருந்த பறணில் குந்தியிருந்து காலாட்டியபடி சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தாள் அடைக்கலம். அடைக்கலம் இருந்த தோரணையை ஆச்சரியத்தோடும் சிரிப்போடும் பார்த்த பாக்கியநாதனை நோக்கி அடைக்கலம் நசிந்து நசிந்து சொன்னாள், ‘இல்லையெண நெடுகிலும் இனிப்பு ரொவி திண்டு பல்லெல்லாம் சூத்தையாப் போச்சுதெண்டு அறுணாசலம் பரியாரியெட்டச் சொல்ல, அந்த மனிசன்தான் சொல்லீற்று சுருட்டுப் பத்தினால் பூச்சி சாகுமெண்டு’என்று சொல்லி நிலத்தில் கால்களால் கோலம் போட்டாள் அடைக்கலம். பாக்கியநாதனும் பெரிய சத்தமாகச் சிரித்தான். சிரித்தபோது அவனுடைய பற்களின்மீதும் பூச்சிகள் குந்தியிருக்கக் கண்டாள் அடைக்கலம். அப்போது அடைக்கலம் என்ற ஏவாள் ஒரு புகையிலைத் துண்டை எடுத்துப் பக்குவமாய்ச் சுற்றித் தன் கணவனின் வாயில் வைத்தாள். கோடான் போடாத இரண்டு சுருட்டுக்களும் அவர்களின் வாயிலிருந்து புகைந்தன. கிளி துரத்தும் பறணில் இருந்தபடி பற் பூச்சிகளைத் துரத்தினர். அவர்களின் ஏதேன் தோட்டத்தில் ‘செல்வரெட்ணம்’ என்ற ஒரு மகன் புகைக்குள்ளேயே பிறந்தான்.

செல்வரெட்ணம் பிறந்த காலத்தில் மாமனார் அந்தோனியருக்கும், மருமகன் பாக்கியநாதனுக்கும் ஒத்துவரவில்லை. சிறுசிறு முரண்பாடுகளும் பெரிதாகி பாக்கியநாதன் குடும்பம் அந்தக் காணியை விட்டே வெளியேற வேண்டியிருந்தது. பிற்காலத்தில் அந்தக் காணியை வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டு இறந்துபோனார் அந்தோனியர்.

நினைவுரு: 8

ஒற்றுமையின் வரலாறு

பத்திநாதன், லுக்கேசு, பேளையர் மகன் வைத்தியார், அதிரியார், இன்னாசி, ச. சூசை, தீ. பிரகாசம், வ. கிருத்தோ ஆகிய தலையாரிகளின் தலைமையில் மெலிஞ்சியார்முனை எனப்பட்ட மெலிஞ்சிமுனை நோக்கி வந்து காணிகளைப் பிடித்துத் துப்புரவாக்கினார்கள். அவர்கள் தங்கள் புதிய கிராமத்தில் குடியிருப்பதற்கான வீடுகளுக்காக அரசாங்கத்திடம் மனுக் கொடுத்தார்கள். இதற்கிடையில் தமக்கான ஆலயத்தையும்பிள்ளைகளுக்கான பாடசாலையையும் கட்டியெழுப்பத் தீர்மானித்தனர்.

சுவக்கீன், மடுத்தீஸ், பிரகாசம், தானியேல், இ. மத்தியாஸ், யா. கிருத்தோ செபமாலை,செபமாலை, கலுத்து. தொம்மைக்குட்டி செபஸ்தியான், மரியான் யோசை, சலமோர் காணிக்கை பாக்கிய நாதன், சீமான், சீரணி, காணிக்கை, செல்லர் இ. தொம்மை போன்ற இளைஞர்கள் கிராமத்தின் வளர்ச்சிக்காகத் கடுமையான உழைப்பினைக் கொடுத்தார்கள்.

கரம்பனிலிருந்து காவிவந்த தூண்களை மெலிஞ்சிமுனைக் கிராமத்தின் மத்திய பகுதியிலுள்ள காணியில் நட்டு ஆலயம் அமைக்க விரும்பினார்கள். அக்காணியை ஏற்கெனவே வேறொருவர் பிடித்திருந்ததால் அவருக்கு வேறு காணியொன்றைக் கொடுத்துக் குறிப்பிட்ட காணியை ஆலயத்திற்கு எடுத்தனர். அமைத்த சிறிய ஆலயம் தற்காலிகமாக இருந்த காலத்தில் பல திருமணங்களும், ஏனைய சமயச் சடங்குகளும் நடந்தன. அவ்வாலயமே அவர்களின் கூட்டத்தறையாகவும் இயங்கலாயிற்று.

எட்டுத் தலையாரிகளும் அன்று ஒற்றுமையான சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள், ஒன்றுக்குள் ஒன்றாய்க் கலந்த உறவினர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பாகுபாடுகளோ பிரிவினைகளோ இருக்கவில்லை. எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல வழிகாட்டிகளாக இருக்க அவர்கள் விரும்பினார்கள்.

அவர்கள் கட்ட ஆசைப்பட்ட ஆலயம் வெறும் மத வழிபாட்டுத் தலமல்ல. ஆதிக்க சாதிச் சமூகத்தின் ஒடுக்குமுறை முட்களை மழுங்கடிக்கும் வல்லமைகொண்ட ஒரு உரத்த சமூகத்தின் எதிர்வினையாக இருந்தது. அவர்கள் அதிகம் படித்தவர்கள் அல்லர், செல்வந்தர்கள் அல்லர், ஆனால் அவர்களுக்கு இலட்சியம் இருந்தது. அன்பு கனிந்த நெஞ்சில் ஓர்மமும் இருந்தது. மெலிஞ்சிமுனையின் ஒவ்வொரு தலைமுறையும் மரியாதை செலுத்தவேண்டிய வரலாற்று நாயகர்களாக அந்த இரண்டு தலைமுறையினரும் அக்காலத்தில் தம்மை உருக்கி ஆலயம் கட்டும் வேலையைத் தொடங்கினார்கள்.

எட்டுப்பேருமே ஆளுக்கு இரண்டு கூலியாட்களை ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லையென்றால் ஒரு நாள் கூலியாளுக்கான செலவைக் கொடுக்க வேண்டும், அத்தோடு எல்லோருமே கோயில் கட்டுவதற்குத் தாராளமாகத் தம் உழைப்பின் ஒரு பகுதியை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் எனும் முடிவோடு ‘அப்பையா’என்ற மேசனின் தலைமையில் வேலை தொடங்கியது.

அக்காலத்தில் நாரந்தனை, சரவணை, கருகம்பன், செட்டிபுலம் போன்ற இடங்களிலிருந்து ஏனைய உறவுகளும் மெலிஞ்சிமுனைக்குள் வந்துசேர்ந்து ஐம்பத்து இரண்டு குடும்பங்களாய்ப் பெருகினர். அவர்களில் அந்தோனி சவிரிமுத்துவின் துண்டில் அவர் மாமனார் சுவானி வயித்தியானும், பத்திநாதனின் துண்டில் மடுத்தீஸும் , லுக்கேஸுவின் துண்டில் தானியேலும், அதிரியாரின் துண்டில் சுவக்கீனும் சேர்ந்துகொண்டனர். இவர்களைப்போலவே எல்லாக் குடும்பங்களிலும் பலம் சேர்க்கும் வகையில் உறவுகள் சேர்ந்தனர். அவர்கள் எல்லோருமே ஆலயக் கட்டுமானப் பணிகளில் தம்மையும் மும்முரமாக இணைத்து ஒற்றுமையை வலுப்படுத்தினர். எல்லோரின் சமத்துவமான உழைப்பும் அங்கு இருந்தது.

நாவாந்துறையில் இருந்து மாற்றலாகி வந்திருந்த நல்லையாச் சுவாமிதான் சொன்னார் ‘உங்கிட ஆக்கள் நாவாந்துறையில பரலோக மாதாவுக்குக் கோயில் கட்டியிருக்கிறாங்க, நீங்க உங்கட கோயில பரலோக ராசாவுக்குக் கட்டுங்கடா’ என்று. அது மெலிஞ்சிமுனையாருக்கும் நாவாந்துறையாருக்கும் இடையில் இருக்கும் உறவின் அர்த்தம் மிக்க வெளிப்பாடாய் இருந்ததால் எல்லோருமே ‘பரலோகராசா ஆலயத்தை’ மிகப் பிரம்மாண்டமாகவே கட்டிமுடித்தார்கள்.

தாங்கள் கட்டிமுடித்த ஆலயத்தின் முகப்பைக் கடலில் தொழில் செய்யும்போதெல்லாம் ஒரு கலங்கரை விளக்காகக் கண்டனர் மெலிஞ்சிமுனையார். மகிழ்ச்சியைக் கூத்தாடிக் கொண்டாடினர். அவர்கள் ஆடிய கூத்து வல்லமை மிக்கதாக இருந்தது. நீ.வ. அந்தோனி என்ற கூத்து ஆழுமையின் பேரெழுச்சிமிக்க மனது அன்று போட்ட கலைக்கான அத்திவாரமாகவும் அது இருந்தது.

நினைவுரு: 9

நான்கு தலைமுறையின் முதுகு.

சமூக விடுதலைக்கான போராட்டங்கள் இலகுவாக இருந்துவிடுவதில்லை. பூரண விடுதலைபெற்ற சமூகமாக எங்கேனும் ஒன்றும் இருப்பதாகவும் தெரியவில்லை. அதிகாரங்களின் முகங்கள் மாறு வேடங்களில் வரும்போதெல்லாம் விடுதலைப் போராளிகள் தங்கள் தொடர் இயங்குமுறையால் முறியடிக்கவேண்டிய தேவைகள் இருக்கின்றன.

மெலிஞ்சிமுனை மக்கள் தங்கள் ஓர்மம் மிக்க உழைப்பால் தங்களுக்கான கிராமத்தை அமைத்துக்கொண்டாலும், தீராத பிரச்சினைகள் அவர்களிடம் இருந்தன.

ஆரம்பகாலத்தில் காடுகளை அழித்துத் தமக்கான காணிகளை உருவாக்கிக் கொண்டாலும் அடிக்கடி கொடிய விசப்பாம்புகளால் தீண்டப்பட்டுப் பலர் இறந்தனர். மாரி காலத்தில் மழை வெள்ளத்தோடு கடலும் உடைத்துக்கொண்டு ஊர்மனையை முற்றுகையிட்டது. பல தொற்றுக் காய்ச்சல்கள் அடிக்கடி மக்களைப் பீடித்தன. ஊரில் நோய்வாய்ப் படுபவர்களையும், கர்ப்பிணிகளையும் ஏமம் சாமம் பாராமல் ஊர்காவற்றுறைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது கடினமாக இருந்தது.

அவ்வாறானவர்களைக் கொண்டுசெல்வதற்குச் சீலை ஒன்றை எடுத்து உலக்கையில்அல்லது மரக்கோலில் ஏணைபோலக் கட்டி அதனுள் வளர்த்திக்கல்லும் முள்ளும் நிறைந்த வீதிகளில் கால்கள் பிய்ந்து போகுமளவுக்கு ஓட வேண்டியிருக்கும். அவ்வாறு கொண்டுசென்றாலும் போகும் வழியிலேயே மரணங்கள் நேர்ந்து விடுவதுமுண்டு. மெலிஞ்சிமுனையிலிருந்து கரம்பன் சங்கக் கடைக்குப் போய் வரிசையில் நின்ற பெண்கள் அவமதிக்கப் பட்டார்கள், காக்க வைக்கப்பட்டார்கள், மாரிகாலங்களில் கால்கடுக்கச் சங்கக்கடைகளில் காத்துநின்று வாங்கிவரும் பொருட்களை வெள்ளத்தினுள் விழுந்து கொட்டிவிட்டுக் கண்ணீரும் வெறும் கையுமாய் வீடு வந்த கதைகளும் நடந்தன.

 மெலிஞ்சிமுனையிலிருந்து ஊர்காவற்றுறைக்கு மீன் கொண்ட செல்வதற்கு முன்னரே பரித்தியடைப்பிலிருந்தும், தம்பாட்டியிலிருந்தும் மீன்கள் சந்தைக்கு விரைவாய் வரக்கூடிய நிலை இருந்ததால் மெலிஞ்சிமுனை மீனவர்களின் வருமானம் மந்தமாகிக்கொண்டிருந்தது. அவர்கள் ஊர்காவற்றுறைக்குப் போகும் வழியில் இருக்கும் கரம்பன் வெள்ளாள சமூகத்தினருக்கே மீன் விற்கக்கூடிய நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது.

கரம்பனில் இருந்து மெலிஞ்சிமுனையில் குடியேறிய மக்கள் மிகவும் குறைந்த விலைக்கே தமது காணிகளை வெள்ளாள சமூகத்தினருக்கு விற்றுச் சென்றார்கள். எப்படியாவது இந்த ஒடுக்கு முறைக்குள் இருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணமே அப்போது அவர்களிடம் இருந்தது. ஆனால் மெலிஞ்சிமுனையில் குடியேறிய பின்னர் தண்ணீர்ப் பஞ்சம் அவர்களின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மின் விளக்குகள் இல்லாத அவர்களின் இரவுகள் அபாயம் மிக்கவையாகக் கனத்தன.

00

1951இல் மெலிஞ்சிமுனையின் பங்குக்குருவாக இருந்த அருட்தந்தை சிங்கராயரின் முன்முயற்சியில் எட்டுத் தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆலயம் பள்ளிக்கூடமாக உரு மாறியது. 12 பிள்ளைகளோடு தொடங்கிய இந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக திருச்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கரையூர் ‘அம்பேத்கர்’ சிலைக்கு அருகாமையில் வசித்துவந்த தலைமை ஆசிரியர் ஒவ்வொரு நாளும் தன் இல்லம் சென்று திரும்ப முடியாது என்பதால் மெலிஞ்சிமுனையிலேயே தங்கியிருந்து கல்வி புகட்டினார்.

சிறுவயதில் கரையூரில் இருந்த காலத்திலேயே பாக்கியநாதனின் நண்பராக இருந்த திருச்செல்வம் ஆசிரியர் பிற்காலத்தில் பாக்கியநாதனின் மூத்த மகன் சிறில் அகுஸ்தீனுக்கு ஞானத்தந்தை ஆனதன் மூலம் பாக்கியநாதனின் கும்பாவாகவும் ஆகினார். திருச்செல்வம் ஆசிரியர் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் காலத்தில் சிறுவர்களின் கலை முயற்சிகளுக்கு வழி காட்டக்கூடியவராக பாக்கியநாதனும் இயங்கினார்.

பிற்காலத்தில் பிள்ளைகளின் கல்வியை முன்னேற்ற ஐந்தாம் வகுப்புவரை இயங்கககூடிய பள்ளிக்கூடமொன்றைக் கட்டினாலும், உயர் வகுப்புகளில் கல்வி கற்கவேண்டி கரம்பனுக்கும், ஊர்காவற்றுறைக்குமே பிள்ளைகள் போக வேண்டியிருந்தது. அவ்வாறு படிக்கச்செல்லும் மாணவர்களும் கரம்பன் மாணவர்களால் அவமானப்படுத்தப்பட்டார்கள்.

மேற்சொன்ன எல்லாவிதமான சவால்களுமே பின்வந்த மூன்று தலைமுறைகளின் முதுகுகளிலும் பாரமாய் இறங்கின.

நினைவுரு: 10

மதம், கலை, கலாச்சாரம்.

மெலிஞ்சிமுனை பரலோக ராசா தேவாலயத்தில் தமிழில் திருப்பலிப்பூசை நடந்துகொண்டிருக்க இளைஞர்கள் நின்ற பகுதியில் ஒரே சிரிப்பும் சலசலப்புமாக இருந்தது.

முன்னரெல்லாம் லத்தீன் மொழியில் திருப்பலிப் பூசை கண்டவர்கள் மெலிஞ்சிமுனையிற் குடியேற முன்னரே தமிழ்ப்பூசைகளில் அவர்கள் பங்கெடுத்திருந்தாலும் இப்போ தங்களின் கோயிலில் இவர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் தமிழ்ப் பூசையையும் நகைச்சுவையாகப் பார்க்கவைத்தது.

 ‘ஆண்டவர் உம்மோடு இருப்பாராக’ என்று குருவானவர் சொல்ல அவருக்குப் பதிலாக ‘உம்மோடும் இருப்பாராக’ என்று சொல்வதும் ‘இதயங்களை மேலே எழுப்புங்கள்’ என்று சொல்ல எழுந்து நிற்பதும் அவர்களுக்கு நகைச்சுவையாக இருந்தது. அது தமிழ்ச் சமூக மனத்திற்கு ஒரு புதுவித உணர்வைக் கொடுத்தது.

கடவுளை அப்பத்திற்குள் வைத்து எல்லோரின் நாக்கிலும் வைத்தபோது கடவுளை பற்களால் கடித்துவிடக் கூடாதென்று அவர்கள் அச்சப்பட்டார்கள், கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று மறைக்கல்வி போதிக்கப்பட்டபோது அவர்களின் கற்பனைகள் புதுவித நகைச்சுவைகளை உருவாக்கிக்கொண்டிருந்தது. இவ்வாறான நகைச்சுவை உணர்வோடும், எளிய நம்பிக்கைகளோடுமே மெலிஞ்சிமுனை என்ற புதிய கிராமம் மதத்தை உள்வாங்கிக்கொண்டது.

‘குறோசுமை’ காலத்தில் ஆலயத்தில் ‘பசாம்’ வாசிப்பார்கள், நோன்பு காலத்தில் பாவிக்காத முட்டைகளை எடுத்து மச்சான், மச்சாளின் தலைகளில் அடித்து அதனைக் கொண்டாட்டமாக மாற்றினார்கள். குறோசுமை காலத்தில் ஆலயத்தின் மணிகளை அடிக்காமல் பலகையால் செய்யப்பட்ட ‘கிறிச்சான்’ எனும் கருவியால் ஒலியெழுப்பிச் சனங்களைக் கூட்டினார்கள். ‘கிறிச்சான்’ சுற்றுவதற்கும், ஆலயத்தில் ‘துருவில்’ புகை போடுவதற்கும் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தார்கள்.

‘குறோசுமை’ காலத்தின் முன்னர் வரும் ‘அல்லேலூயாப் பேய்த் திருநாளில்’ இளைஞர்கள் பேய்களைப்போல வேடமிட்டு ஊர் முழுதும் சுற்றி ஆடிப் பொதுப் பணிகளுக்குப் பணம் சேர்ப்பார்கள். சிலரால் சில தருணங்களில் இந்தக் கொண்டாட்டம் அவசியமற்றதென்று விமர்சிக்கப்பட்டாலும் சிறுவர்கள் வேடம் தரித்து நடிப்புக் கலைக்குள் செல்வதற்கும் கூட்டுறவையும் பொதுப்பணியையும் வலியுறுத்தும் ஒரு சடங்காகவே இது மெலிஞ்சிமுனையில் தொடர்ந்து வந்திருக்கிறது. மதமும் நிலமும் அவர்களிடத்தில் புதிய வாழ்க்கை முறையையும் சடங்கு சம்பிரதாயங்களையும் அறிமுகப்படுத்தின.

அவர்கள் தமது கடலைப் புரிந்துகொண்டு அக்கடலிற்கேற்ற தொழில்முறைகளை உருவாக்கினார்கள். கடலைச் சுற்றிக் காவல் தெய்வங்களுக்குக் கோயில் கட்டினார்கள். கடற்கரையில் சூசையப்பருக்கும், பெரியபார், நரையான்பிட்டி ஆகிய இடங்களில் அந்தோனியாருக்கும் கோயில்களைக் கட்டினார்கள். கடலில் தோம்புகளையும் கல்லுகளையும் பிரித்துக்கொண்டார்கள். கடற் தொழிலில் சில சம்பிரதாயச் செயற்பாடுகளைக்கூட உருவாக்கிக்கொண்டார்கள்.

00

1952ஆம் ஆண்டில் மெலிஞ்சிமுனை குடியேற்றத் திட்டம் அமைந்தது. அரசாங்க உதவியாக ஒவ்வொரு வீட்டுக்கும் 7500 ரூபாய்கள் வழங்கப்பட்டன. இந்த வீட்டுத் திட்டம் உருவாக அ. லுக்கேஸின் தலைமையிலான கிராம அபிவிருத்திச் சங்கத்தோடு, சூ. சிலுவைராசா, பாராளுமன்ற உறுப்பின எ.எல். தம்பியய்யா, ச. சிவஞானம் ஆகியோரின் தொடர்முயற்சியால் வீடமைப்புத் திட்டத்திற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியது. 45 வீடுகளுக்குப் போதுமான மட்டுப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கம் வழங்கியிருந்தாலும் மெலிஞ்சிமுனை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் மேலான ஆளுமையாலும் மக்களின் கூட்டுறவாலும் 53 வீடுகளைக் கட்டி முடித்தார்கள்.

1956ஆம் ஆண்டில் அருட்பணி ச.ஜெ. வேதநாயகம் பங்குக்குருவாக இருந்த காலத்தில் பள்ளிக்கூடமும் பதிவு செய்யப்பட்டது. 1957ஆம் ஆண்டில் சிறிய அளவில் உருவாகியிருந்த தேவாலயத்தில் ஆனி மாதம் 22ஆம் திகதி முதற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பின்னர் பெருப்பித்தல் வேலைகள் தொடர்ந்தன.

 அடுத்துவந்த சில ஆண்டுகளில் கோயிற் காணியின் உள்ளேயே கூத்து மேடை ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

00

ஒவ்வொரு திருநாட் காலத்திலும் ஒவ்வொரு கூத்தினை மெலிஞ்சிமுனையார் மேடையேற்றினார்கள். 1960இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கலை, கலாச்சார விழாவில் ‘பழங்காலக் கப்பல் வணிகம்’ என்ற தலைப்பில் நீ.வ. அந்தோனி அண்ணாவியார் யாத்த கவிதையொன்று விழாக்குழுவின் சிறப்பான பாராட்டைப் பெற்றுக்கொண்டது.

அந்தோனி அண்ணாவியாரின் கூத்துகள் அடுத்த தலைமுறைக்குக் கை மாறியபோது முன்னணி மாணவர்களாக இருந்த ராயப்பு, அலைக்சாண்டர், சவிரிமுத்து ஆகியோரோடு பாக்கியநாதனும் ஒருவராகத் தன்னை இணைத்துக்கொண்டார்.

யாழ்ப்பாணத்திலும் கரம்பனிலும் நடந்த கூத்துப் போட்டிகளில் மெலிஞ்சிமுனையார் முதலிடங்களைப் பெற்றார்கள். யாழ்ப்பாணம், மன்னார், கிளினநொச்சி என்று ஈழத்தின் பல்வேறு இடங்களுக்கும் அந்தோனி அண்ணாவியும் அவருடைய மாணவர்களும் சென்று கூத்துகளைப் பயிற்றுவித்தனர்.

அந்தோனி அண்ணாவியின் காலத்திற்குப் பின்னர் மாதகல், மயிலிட்டி, எழுவைதீவு, பருத்தீவு போன்ற இடங்களுக்கு ராயப்பு, பாக்கியநாதன், சவிரிமுத்து ஆகியோர் சென்று தங்கள் ஒத்துழைப்புகளை வழங்கி வந்தனர். அவர்கள் ஊர்காவற்றுறைக்குக் கால்நடையாகச் சென்று காரைதீவில் பஸ் ஏறிப் பல இடங்களுக்கும் செல்வதுண்டு. போகவரச் செலவுக்குப் பணம் தருவார்கள், வடிவாகக் கவனிப்பார்கள். 2,3 நாட்கள் நின்று கூத்துக்கள் ஒப்பேற உதவிகள் செய்துவிட்டுத் திரும்புவார்கள்.

அந்தோனி அண்ணாவியாரின் மரணத்தின் பின் அவரின் மகனார் சவிரிமுத்து, ம. அலைக்சாண்டர் ஆகியோர் அண்ணாவியார் ஆனார்கள். அவர்களும் கூத்தினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றனர்.

நினைவுரு: 11

கடைசிப் பக்கங்கள்

வ. மரியநாயகம், ப. சைமன் இ. நோவா, இ. ஆரோக்கியநாதன், சூ. சிலுவைராசா, அ. சீமான்பிள்ளை, சூ. ஆசீர்வாதம், பே. செபமாலை ஆகியோர் கட்டளைக்காரராக இருந்த காலத்தில் மெலிஞ்சிமுனைக்கான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றும், பாலர் பள்ளியும் முதலுதவிக்கான சுகாதாரநிலையமும், குடிநீர்த்தொட்டியும் அமைக்கப்பட்டன.

அத்தோடு ப. சில்வேஸ்டர், ச. சவிரியான், அ. சேவியர், லு. சிறில் பி. யோண்பிள்ளை, நீ. சந்தியாப்பிள்ளை, தொ.பாவிலு, இ.நோவா. ஆகியோரின் காலத்தில் கோயில் காணியில் குழாய்க்கிணறு உருவாக்கும் முயற்சியும், கரம்பன் செல்லத்துரை என்பவரின் கிணற்றினை விலைக்கு வாங்கி நன்நீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியும் நடந்தது.

பின்வந்த காலத்தில் கிராமத்து உள்வீதிகள் அமைத்தல், மின்சார இணைப்புகளைக் கொண்டுவருதல், கடற்கரை, கண்ணா ஓடைப் பாலங்களைக் கட்டுதல் எனும் முயற்சிகளும் நடந்தேறின.

ஆரம்ப காலங்களில் பிரகாசம், மடுத்தீஸ் போன்றவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறையில் இருதயராஜா விளையாட்டுக் கழகமும் யாழ் தீவகத்தின் முன்னணி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

00

 நாரந்தனையில் இருக்கும் காலத்திலேயே கரம்பன் திமிலர் சமூகத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த சுவானிமகன் சூசையின் குடும்பம் குருநகரிற்கு வாழச் சென்றதன் பின்னரும் மெலிஞ்சிமுனைக் கிராமத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்புகளில் தம்மையும் இணைத்து வந்திருக்கிறது.

மெலிஞ்சிமுனையில் குடியேறிய பின்னர் வந்த சாதிக் கலவரத்தின்போதும் மூன்று நாட்கள் கிராமத்திலிருந்து வெளியேற முடியாதிருந்த மக்களுக்கான அரசாங்கப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கத்தோலிக்கப் பாதிரியார்களின் அனுசரணையோடும், பாடசாலை அதிபர்களின் பங்களிப்போடும் சமாதானச் சூழலை ஏற்படுத்தவும் சூசையின் குடும்பம் தம்மாலான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது. அவர்களின் முன்முயற்சியிலேயே மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த இளைஞர்கள் ‘நோர்வே’நாட்டிற்குச் செல்லக்கூடிய வளர்ச்சி நிலையும் உருவானது.

00

மேற்படி கூறப்பட்ட வரலாறு என்பதிலிருந்து மெலிஞ்சிமுனை மக்களின் ஒற்றுமையையும் அவர்களின் வளர்ச்சிப் படி நிலைகளையும் வருங்காலத் தலைமுறையினர் அறிந்து கிராமத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் புதிய சக்தி வளங்களாக முன்னேற இந்த நினைவுருக்கள் ஊக்கமளிக்குமென நம்புகின்றோம்.

00

பாக்கியநாதனுக்கும், அடைக்கலத்திற்கும் – சிறில் அகுஸ்தீன், செல்வரெட்ணம், யூட்ஸ்மெசியா, ஜெயசீலன், தங்கராணி, மைக்கல்ராஜ், யோகராணி எனும் பிள்ளைகள் பிறந்தனர். பாக்கியநாதனும் அடைக்கலமும் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளென்று சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ்ந்தனர். கடைசிக்காலத்தில் துணையை இழந்தபோதும் தன் நினைவில் அடைக்கலத்தோடு வாழ்ந்துகொண்டு தன் காதற்காலங்களை நினைவில் அசைபோட்டுக்கொண்டு வாழ்ந்துவரும் பாக்கியநாதன் தன் பதிநாறாவது வயதுமுதல் இன்றுவரை கூத்துக் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துச் சிறந்த கலைஞனாகவும் வெற்றிபெற்றுள்ளார்.

தன் கலைப் பயணத்தில் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்று வந்திருக்கக் கூடிய ‘பத்திநாதன் பாக்கியநாதன்’ அவரது கலை ஆசான் பெற்ற ‘கலைக்குருசில்’ என்ற விருதையும் பெறுகிறார். அவருடைய கலை வாழ்க்கையில் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும்இந்த விருதைத் தன் சமூக வாழ்வின் பெறுபேறாகவே காண்கிறார். அவரை வாழ்த்துவதோடு இந்த நினைவுரு நிறைவுறுகிறது.

***

குறிப்புகள்:

துண்டு – எட்டுத் தலையாரிகளும் பொறுப்பாயிருக்கும் குடும்ப வரிசை.

பாக்கியநாதன் அவர்களின் கலைக்குருசில் விருது விழாவையொட்டிய ‘களரித் தாணையம்’ என்ற சிறப்பேட்டிற்காக எழுதப்பட்ட நினைவுரு இது. அதன் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம் இது.

மெலிஞ்சி முத்தன்

மெலிஞ்சிமுத்தன் தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். பிரண்டையாறு, அத்தாங்கு, வேருலகு, உடக்கு ஆகிய புனைவு நூல்களின் ஆசிரியர்.

2 Comments

  1. எனது மாமாவின் துணிச்சலுக்கு வாழ்த்த முடியாது வணங்குகின்றேன்.

  2. நீ.வ.அந்தோனி அண்ணாவியர் மறைவுக்குப் பின் கலைக்குரிசிலின் சகோதரவிரோதி,மந்திரிகுமாரன்,மதிவீரன்,தாவீது கொலியாத் ஆகிய கூத்துப் பிரதிகளை பருத்தித்தீவு, மாதகல்,பருத்தித்துறை ஆகிய பகுதிகளுக்கு அவரின் மகன் சவிரிமுத்து அண்ணாவியார் அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்டு பயிற்றுவித்தார்.(கூத்துக் கொப்பி பார்பதற்காக அவருடன் கூடவே நான் சென்றுள்ளோன்.)
    கூத்துப் பயிற்சியின் போதும்,மேடை ஏற்றத்தின் போதும் பிற்பாட்டு,(கைத்தாளம்)
    பாடுவதற்காக மடுத்தீஸ் அப்பா,பாக்கியம் தொட்டய்யா ,ராயப்பு சின்னையா,சைமன் அண்ணன் ஆகியோர் இணைந்து பங்களித்தார்கள். இதில்
    எங்கள் “கலை நாதச்சுடர் “மிருதங்க வித்தகர் கி. சவிரிமுத்து மாமாவின்
    பங்களிப்பு முக்கியமானது

உரையாடலுக்கு

Your email address will not be published.