/

மெலிஞ்சி முத்தனின் காந்தப் புலம்

ஜசிந்தா கதைக்குறிச்சி

கொத்தண்ணர் வீட்டுக்கு உரையாட வரும் தகப்பனோடு கிறிஸ்தோத்திரத்தாரின் மகள் ஜசிந்தாவும் வந்து போனாள். ஏனெனில் கொத்தண்ணரின் மகள் ரேவதி யசிந்தாவின் தோழியாக இருந்தாள். ஆண்களின் உரையாடல் ஒரு புறம் நடக்க, பெண்களின் உரையாடல் வீட்டு அறைகளுக்குள் வேறு விதமாக நடந்துகொண்டிருக்கும். ஆண்களின் உரையாடல் அடிக்கடி பெரிய சத்தமான விவாதமாக வெளிப்படும்போது மட்டும் பெண்கள் வெளியே எட்டிப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். சில வேளைகளில் வெளியே வந்து நின்று அவதானிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

இவ்வாறான நாளொன்றில் உரையாடலை முடித்துக்கொண்டு போகும்போது ஜசிந்தாவிடம் ‘நல்லா சமைக்கிறீங்க ஆனாலும் அப்பாவ மிஞ்சயில்ல’ என்று சொல்லிப் போனார் மரிசலின். அதற்கு அவளும் வாயைத் திறக்காத ஒரு சிரிப்பையே பதிலாகக் கொடுத்தாள். அவ்வாறு அவள் சிரித்தபோது அவளிடம் தாராளமான கன்னங்கள் இருந்ததை மரிசலின் கண்டார். அதுதான் அவர்கள் முதன் முதலில் பேசிக்கொண்ட தருணம்.

பின்னாட்களில் கொத்தண்ணர் வீட்டில் சந்திக்கும் பொழுதெல்லாம் மரிசலின் அப்பெண்களோடு சின்னச், சின்ன வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வார்,அப்பெண்கள் ‘பாதர்’ என்று அழைக்கும்போதெல்லாம் ‘நானிப்ப பாதர் இல்ல’ என்று சொல்வார். அந்தப் பெண்களுக்கோ இவரை எப்படி அழைப்பதென்று தெரியாமலேயே இருந்தது. பாதராய் இருந்த ஒருவரை அண்ணனென்றோ, பெயர்சொல்லியோ அழைக்க அவர்களுக்கு கூச்சமாக இருந்தது. இந்தக் கூச்சம் ஊர் முழுவதுமே பரவியிருந்தது. கூச்சமும், வெட்கமும் சமூகப் பழக்கமாய் எல்லாப் பாலினரிடையேயும் அவற்றின் காரணத் துலக்கமின்றியே பரவியிருந்தது.

00

ஜசிந்தா. மிக நேர்த்தியான உடல்வாகும் பக்குவமான அறிவும் கொண்டவராக  இருந்தார். மரிசலின் சுவாமியின் அறைவீட்டிலிருந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் வாயாராமல் சுவாமிபற்றியே சொல்லிக்கொண்டிருந்த கிறிஸ்தோத்திரத்தார் மூலமே மரிசலின் சுவாமி பற்றி அதிகமாய் அறிந்துவைத்திருந்தார். கொத்தண்ணர் வீட்டுச் சந்திப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களுக்குள் நெருக்கத்தை உண்டாக்கியிருந்தது. ஆனாலும் மரிசலினை எவ்வாறு அழைப்பதென்பதில் மன இடைஞ்சல்கள் தொடர்ந்தபடிதான் இருந்தன.

அந்த மன இடைஞ்சலை ஒரு நாள் மரிசலின்தான் உடைக்க முயன்றார். மதியம் சாப்பாடு கொண்டு சென்ற கிறிஸ்தோத்திரத்தாரிடம்

‘ இப்படியே ரெண்டும் கெட்ட நிலையில் இல்லாமல் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து ஒரு நல்ல சமூகப் பணியாளனாக இயங்க விரும்புறன். கலியாணம் கட்டி எனக்கானதொரு குடும்பத்த உருவாக்கிறதுதான் சரியெண்டு தோணுது, என்னப் புரிஞ்சு கொண்ட, அறிவும்,ஆற்றலும் நிறைஞ்ச பெண்ணாயிருந்தால் நல்லம். நான் ஜசிந்தாவ அப்படியான ஒரு பெண்ணாகக் காணுறன். அவ மீது எனக்கு மரியாதையும் இருக்கு. நான் அவவ கலியாணம் செய்ய விரும்புறன், எனக்கு நீங்க அவவ கட்டித் தருவீங்களா?

தயவு செய்து என்ன தவறாக நினைச்சிராதீங்க, நான் இத்தனை நாளும் இப்படியான உள் நோக்கத்தோட பழகவில்ல, இப்பதான் யோசிக்கிறன், உங்களுக்கு விருப்பமில்லையென்றால் இந்தக் கதையை இப்படியே விட்டிருங்க, இது நடக்கவில்லையென்றாலும் உங்கட நட்ப நான் இழக்க விரும்பவில்ல. ஜசிந்தாவிடமும் கேட்டு வடிவா யோசித்து முடிவு சொல்லுங்க.’

என்று மரிசலின் கிறிஸ்தோத்திரத்திடம் சொல்ல என்ன பதில் சொல்வதென்று ஆயத்தமில்லாத கிறிஸ்தோத்திரம் கம்மிய குரலில் உதடுகளை நெரித்துக்கொண்டு ‘யோசிப்பம்’ எனும் ஒற்றை வாக்கியத்தோடு புறப்பட்டு வீடு சென்றார்.

மறுநாள் சாப்பாடு கொண்டுவந்தபோதும் கிறிஸ்தோத்திரத்தின் வாயை ஆவலோடு பார்க்கவேண்டியிருந்தது மரிசலினுக்கு. சாப்பாடு கொண்டு வந்த கிறிஸ்தோத்திரம் முன்னரெப்போதும் இல்லாதவாறு ஓரிரண்டு வார்த்தைகளை விழுங்கி விழுங்கிப் பேசிவிட்டு தப்பி ஓடுவதுபோல அங்கிருந்து அகன்றார். கிறிஸ்தோத்திரத்தார் ஆளுமை மிக்க மனிதர்தான், ஆனாலும் மரிசலினில் மிகுந்த மரியாதை வைத்துப் பழகிவிட்டார். ஒரு குருவானவருக்குக் கொடுக்கும் மரியாதைக்கும், மருமகனுக்குக் கொடுக்கும் மரியாதைக்கும் எவ்வாறான வித்தியாசங்கள் இருக்குமென்று பிரித்து, அளந்து கொடுக்கும் நிலைக்கு அவரால் உடனடியாக வர முடியாமலிருந்தது.

பின்னேரங்களில் கொத்தண்ணர் வீட்டில் நடக்கும் உரையாடலிற்கும் தகப்பனும், மகளும் வராதது மரிசலினுக்கு ஏமாற்றமும், கவலையாகவும் இருந்தது. தான் கிறிஸ்தோத்திரத்தாரிடம் கேட்ட விடயத்தை கொத்தண்ணரும் அறிந்திருப்பாரா? கொத்தண்ணர் என்னைப்பற்றி என்ன நினைப்பார்? அவரின் குடும்பத்தினர் என்ன நினைக்கின்றனர் என்று பேச்சோடு, பேச்சாய் அவர்களின் முகங்களை உற்று நோக்கினார் மரிசலின், எந்த முகத்திலும் அவரால் எவற்றையும் அறிய முடியவில்லை. உரையாடலை பாதியிலேயே முடித்துக்கொண்டு வீடு வந்து படுத்தார். துயரம் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்தது.

00

மறு நாள் மருத்துவமனையின் நோயாளர் ’வார்ட்டுக்குப்’ போய்த் திரும்பிய கொத்தண்ணரும், துணைவியாரும் வெளியே போய் பயப்படுவதற்கு ஒன்றுமில்லையாம் என்று மற்றவர்களிடம் சொல்லி மரிசலினை உள்ளே அனுப்பிவைத்தனர். உள்ளே போன மரிசலினின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘ஜசிந்தாவிடமும் கேட்டிற்றன், அவளும் ஓமெண்டிட்டாள் உங்கட விருப்பப் படியே நடக்கட்டும்’ என்று கனிவானதொரு புன்னகையைச் சொரிந்தார் கிறிஸ்தோத்திரம்’ அவ்வாறு தன் கரங்களைப் பிடித்து கனிவாகச் சொன்ன கிறிஸ்தோத்திரத்தின் கண்ணோரக் கசிவில் தந்தைமையை உணர்ந்து ஒரு பிள்ளையாகக் குழைந்தார் மரிசலின். அந்த நிமிடத்தில் அவர்களுக்குள் இருந்த மன இடைஞ்சல்களெல்லாம் கரைந்துபோயிருந்தன.

00

இந்தக் குடும்பக் கதைக்கு வெளியே இருப்பவர்கள் ஜசிந்தாவின் மன நிலைகள் எப்படியிருக்கும்? அவள் எவ்வாறெல்லாம் தனக்குள் அந்தரமான மன நிலைகளைக் கொண்டிருந்தாள் என்றெல்லாம் யோசிக்கக் கூடும் ஆனால் அவளுடைய அந்தரங்கம் மகிழ்ச்சியால் பொங்கியிருந்தது. மரிசலின்  மத குருவாக இருந்த காலங்களிலேயே சில தடவைகள் அவனோடு கலவி கொள்வதுபோலக் கனவு கண்டிருக்கிறாள். அப்போதெல்லாம் ‘என்ன இந்த மனது இப்படிக் கெட்டுப் போச்சே, இதெல்லாம் பாவமல்லவா? வெளியே மிகுந்த மரியாதையுடன் நடக்கிறேன் உள்ளே இப்படியெல்லாம் கனவு வருகிறதேயென்று தன்னைத் தானே கடிந்து கொள்வாள். ஆனால் மரிசலின் ‘நான் ஜசிந்தாவை கலியாணம் செய்ய விரும்புறன்’ என்று சொன்னதிலிருந்து அந்தப் பழய கனவுகளையே தூசு தட்டத் தொடங்கிவிட்டாள்.

கொத்தண்ணர் வீட்டிற்குப் போகாத அந்த இரண்டு நாட்களும் இவளுக்குள்ளும் தவிப்பு இருந்தது. மரிசலினின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவன் இன்றைக்கு என்ன உடுப்புப் போட்டுக்கொண்டு போயிருப்பான் என்றெல்லாம் கற்பனை செய்து பார்த்தாள், கொத்தண்ணரின் மகளிடம் அவன் அந்த இரண்டு நாட்களும் எப்படியெல்லாம் நடந்துகொண்டானென்று கேட்டு அறிந்துகொண்டாள். ‘அவன்’ ம் அவன், இவன் என்றுதான் யோசித்தாள் ஜசிந்தா.

00

பாதிரியார் மணம் முடித்த பின்புதான் தான் வாழ்ந்த சமூகத்தின் வேற்று முகத்தைக் கண்டுகொண்டார். ஏற்கனவே பல ஊர்களுக்கும் அறிமுகமான பாதிரியாராக இருந்தவர், மக்கள் போராட்டங்களால் இன்னமும் அறியப்பட்டவராகியிருந்தார். அவரின் பிரபலமே இப்போது அவருக்கு இடைஞ்சலாக இருந்தது. அவரைக் காணும்போதெல்லாம் மரியாதை செலுத்திய மக்கள் இப்போது நமட்டுச் சிரிப்போடு கடந்து செல்வதைப் பார்த்தார்.

அவருக்குள் முற்றாக அழிந்துவிடாத தேவ பயம் அடிக்கடி அவருக்குள் வந்து கத்தோலிக்கத்தில் ஊறிய அவர் மனதை குற்ற உணர்வால் வருத்தியது. அந்தரப் பட்ட மனதோடு இருந்த இந்த மனிதரை, துணையாய் வந்த ஜசிந்தாவால் எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. தன் துணைவருக்கு ஆறுதல் சொல்ல தான் எடுத்துக்கொண்ட நியாயங்களெல்லாம் ஏற்கனவே சமூகத்தில் நிலவிவந்தவையாக இல்லாமல் புதியனவாயிருந்தன. துணைவியான ஜசிந்தா தன் அறிவாலும், அன்பாலும் அவரைத் தேற்றினார். ஆனாலும் அது நிலைக்கவில்லை. மணம் முடித்துஒரு வருடத்திலேயே  ஒரு மகனைப் பெற்று துணைவரின் கையில் கொடுத்துவிட்டு அப்பெண் இறந்துபோனார்.

அவள் இந்த ஒரு வருடத்தை மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்திருந்தாள், அதேவேளை அளவுக்கு அதிகமான புதிய அனுபவங்களை அவள் பெற்றாள். ஊரே மதிக்கும் நிலையில் ஒரு பெரும் ஆளுமையாய்க் கண்ட மரிசலினின் பெலவீனங்களையும், குழந்தைத் தனத்தையும் அவள் அருகில் இருந்து அவதானித்தாள். தங்கள் வாழ்க்கை சிறிது காலம் போனால் பொது நீரோட்டத்தில் சேர்ந்துவிடும் என்றும் நம்பினாள். ஆனால் அவள் எதிர்பார்க்காத மரணம் அவளுக்கு நேர்ந்தது.

அப்பெண் இறந்தது தேவ சாபத்தாலென்று ஊரார் பேசிக்கொண்டார்கள், மரிசலினோடு நேருக்கு நேர் நின்று பேச முடியாதவர்கள் கதையோடு கதையாக கிறிஸ்தோத்திரத்தாருக்கு வார்த்தை ஊசிகளால் குத்தினார்கள். அவ்வாறு கிறிஸ்தோத்திரத்தாரை நோகடித்து தங்களை ஒழுக்கமும், கிறிஸ்தவ விதிகளைக் காப்பவர்களுமாகக் காட்டிக்கொண்டனர். அவர்களில் சிலர் ‘எழுப்புங்கள் சுவாமியின்’ அறைவீட்டில் நடக்கும் இரவுச் சந்திப்புகளில் இவற்றையெல்லாம் அடிக்கடி பேசிக்கொள்பவர்களாக இருந்தார்கள்.

மகளின் இழப்பும் ஊராரின் இத்தகைய நடவடிக்கைகளும் கிறிஸ்தோத்திரத்தாரை நலியச் செய்தன அவர் பொருமிப் பொருமி அழுதவாறே பெரும்பாலான நேரம் ஆச்சியின் விதை நெல்லு அறையிலேயே  கிடந்தார். அவரை பழய மனிதராய் ஆக்க கொத்தண்ணரின் குடும்பம் பெரிதும் முயன்றும் தோற்றுப் போனது. கொத்தண்ணரின் வீட்டில் நடந்த பேசிப்பறைதல்கள் கூட சோபையிழந்து போயின.

துயரத்தின் ஆழத்தில் மரணத்தின் வேர் சுற்றி ஒரு குப்பி விளக்கின் வெளிச்சத்தில் தன் கண்களை மூடினார் கிறிஸ்தோத்திரம். அவர் மரணித்தபோது  அவர் மடியில் ஒரு சிறங்கை விதை நெல்லு ஆச்சியின் சேலைத்துண்டில் கட்டிய பொட்டலமாய்க் கிடந்தது. 

 துயரம் ஒருபுறம், அவப்பெயர் மறுபுறமாய் சுற்றிக்கொள்ள குழந்தையையும் தூக்கிக்கொண்டு தலைமறைவானார் முன்னாள் பாதிரியாரான மரிசலின். அவர் ஜசிந்தாவிடமிருந்து மிகக் குறுகிய காலத்தில் பெற்றது ஏராளம். அவளோடு இணைவதற்கு முன்னர் தான் வாழ்ந்த வாழ்க்கை என்பது எப்படிப் பார்த்தாலும் ஒற்றைப்படையானதுதான் என்று அவர் உணர்ந்தார். அதுவரை காலமும் தான் திரட்டிய அறிவும், அதன் அடிப்படையில் எடுத்துக்கொண்ட முடிவுகளும் வெறும் கருத்துகளாகவே தனக்குள் இருந்தன என்றும், அந்தக் கருத்துகளுக்கு உவப்பான மிக மேலோட்டமான வேலைகளையே தான் செய்திருப்பதாகவும் அவர் எண்ணினார்.

 தன்னைப் பகிரங்கப்படுத்தி, வெளிப்படையாக வாழுதல் இந்தச் சமூகத்தில் அவ்வளவு இலகுவில்லையென்றும் எண்ணினார், ஒரு அந்தரங்க மறைப்பை கொஞ்சம்,கொஞ்சமாய் அவர் தனக்கு ஏற்படுத்திக்கொண்டார், அந்த அந்தரங்க மறைப்பு தன் சுய சார ஆழ அனுபவத் தேடலுக்கு  இடைஞ்சலாக இல்லையென்றும் அவர் உணர்ந்தார்.

00

மரிசலின் தன் மகனுக்கு ‘கமலன்’ என்று பெயர் வைத்தார். ஊருக்கே தந்தை ஸ்தானத்தில் இருந்த மரிசலினால் தன் குழந்தைக்கு தந்தையாக இருப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. தன்னை மென்மேலும் மென்மையாக்கி குழந்தையை அரவணைக்க அவர் முயன்றார். ‘ஒரு ஆண் மென்மையாகுதல் என்பது பலக் குறைவல்ல அது ஒரு பக்குவம்’ என்பதை அக்காலத்தில் அவர் உணர்ந்தார். குழந்தை ஒவ்வொன்றையும் புதிதாய் தொடங்கிய போதெல்லாம் அவற்றின் நுட்பத்தை அவர் அனுபவித்தார். அவர் எவ்வளவு சிரத்தையெடுத்துக்கொண்டாலும் கமலனிடம் தாயில்லாத ஒரு ஏக்கம் இருந்ததை அவர் அவதானித்துக்கொண்டே இருந்தார். அவன் ஒரு தனிப்பிள்ளையென்பதால் எப்போதும் அவனைச் சுற்றி நண்பர்கள் இருப்பது நல்லமென்று அவர் எண்ணினார். அவனுடைய நண்பர்களையும் ஒரு தந்தைக்குரிய கரிசனையோடே அரவணைத்துக்கொண்டார்.

00

மகனைக் கல்வியாளனாய் வளர்க்க முடியவில்லை. ஆனாலும் அவன் சமூகத்தின்மீது அக்கறை கொண்டவனாக இருந்தான், இளமைத் துடிப்போடு துரு,துருவென சின்னவயதில் தந்தை இருந்ததைப்போலவே இருந்தான்.

அக்காலத்தில் இராணுவ முகாம்களிலிருந்து ஏவப்படும் ‘ஷெல்’ குண்டுகள் நினையாத் தருணங்களில் வந்து அவ்வர்களின் காணிகளில் விழுந்தன. இராணுவ முகாம்களை யாரும் தாக்காத போதிலும் அவர்கள் ஒரு சம்பிரதாயச் செயல்போல ‘ஷெல்களை’ ஏவிக்கொண்டே இருந்தனர். அவ்வாறான ‘ஷெல்’ ஒன்று கமலனின் நண்பனின் முதுகில் விழுந்தது. ஏதேதோ கற்பனைகளோடும், சொந்த வாழ்க்கை பற்றிய திட்டங்களோடும் இளங் கன்றுகளாய் துள்ளித் திரிந்த அவர்களுக்கு பலத்த தாக்கத்தை அது தந்தது. முதுகில் ‘ஷெல்’ விழுந்த நண்பனின் மரணம் கமலனிற்கு பெரும் துன்பத்தைக் கொடுத்தது. அவன் பெரும்பாலான நேரம் வீட்டிற்கு வராமல் வெளியேயே சுற்றித் திரிந்தான். வீடு வரும்போதெல்லாம் தந்தையைப் பார்த்து ‘அப்பா கர்மா என்று ஒன்று இருக்குதா? விதி, தலையெழுத்து என்றெல்லாம் சொல்கிறார்களே அவைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்றெல்லாம் கேள்விகளைக் கேட்பவனாக இருந்தான். மரிசலினும் தான் உணர்ந்தவற்றையும், தன் அறிவுக்கெட்டியவற்றையும் மகனுக்குச் சொல்லி ஆறுதற்படுத்த முனைந்தார்.

 கமலன் யாரும் எண்ணியிராதபடி ஒருநாள் நண்பர்களுடன் சேர்ந்து இயக்கமொன்றிற்குப் போனான், அவன் இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடந்தது. அவன் குழந்தையாய் இருந்த காலத்தில் உடுத்திய, போர்த்திய ஆடைகளையெல்லாம் எடுத்து வீடு முழுதும் பரவி வைத்துக்கொண்டு அவற்றை மணந்து பார்ப்பதும், முத்தமிடுவதுமாய் தந்தைமனம் காலத்தைக் கடந்தது, அந்த ஆடைகளிலிருந்த அவனுடைய வாசமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துகொண்டு வந்தது.

சில ஆண்டுகளின் பின் இடுப்பில் துவக்கு ஒன்றை மாட்டியபடி வீட்டுக்கு வந்து தந்தையைப் பார்த்தான் கமலன். தன் தகப்பனைக் கட்டியணைத்து முத்தமிட்டுக் கண் கலங்கினான். அப்போது அவனில் புது வாசமொன்று கமழ்ந்துகொண்டிருந்தது.

‘இந்த வன்முறையெல்லாம் உனக்குத் தேவைதானா? சாத்வீகத்தையம், அமைதியையும், பல்லுயிர் பேணலையும் விரும்பும் எனது மகன் கையில் ஒரு கொலைக் கருவியை ஏந்தியிருப்பது முறையானதுதானா?’ என்று மரிசலின் கலங்கிய கண்களோடே மகனைப் பார்த்துக் கேட்டார்.

‘நாம எல்லாருமே கொலை செய்யக் கூடியவர்கள்தான், உங்களுக்கு அந்தத் துணிவில்ல, எனக்கு இருக்கு அவ்வளவுதான் விசயம்’ அகிம்சையெல்லாம் இப்ப காலாவதியாச்சு’ என்றான் மகன்.

இதெல்லாம் அறிவால சொல்லுற விளக்கம் மகனே, நான் அறிவாளியல்ல மனசாழி எனக்குப் பொருந்தாது. ஒரு கொலையைச் செய்ய நமக்குள் வரும் பயமே போதும், பயத்தின் நடுங்கிய உச்சத்திலேயே கொலை செய்துவிட முடியும். என்றார் மரிசலின்.

 பின்னர் அவன் தந்தையிடமிருந்து விடைபெற்றுப் போனான். மகன் போனதன் பின்னர் மரிசலின் தனிமையை உணர்ந்து அனுபவிப்பவராக இருந்தார், பூட்டப்பட்ட வீட்டினுள் வரும் ‘கிண்’ என்ற ஒலியை அவருடைய காதுகள் பெரிதும் விரும்பின அது அமைதியின் சத்தம். தனிமையும், அமைதியும் சேர்ந்திருக்கையில் தான் இழந்தவை பற்றிய எண்ணங்கள் அவருக்குள் வந்துபோயின அவர் அந்த எண்ணங்களுக்குப் பதில் சொல்லி விரட்ட முயன்றார், கோயில் பீடத்தில் தான் நிற்கும்போது தன் முன்னே எப்போதும் தெரியும் சனத் திரள் காட்சிகள் அவரின் எண்ணத்தில் வரும், திருப்பலி வேளையில் பாவிக்கப்படும் மணி, சாம்பிராணி மணம், அந்த மணம் கொடுக்கும் மன நிலை, அது கொடுக்கும் ஞானத் திரட்சி நிலை ஆமாம் அதுதான் எனக்குத் தேவை, அதுதான் தேவையென்று தன் நினைவில் நின்ற சாம்பிராணி வாசத்தை தன் தனிமைக்கும், அமைதிக்கும் துணையாய் வைத்துக்கொண்டார். அவருக்கு முன்னால் வெளியுலகம் ஒரு திரைப்படம்போல ஓடிக்கொண்டிருந்தது.

00

பிற்காலத்தில் இயக்கங்களுக்குள் சண்டை வந்தபோது ஒருவிதமாய் அவற்றிலிருந்து தப்பி மீண்டும் வீடு வந்தான் கமலன். தான் தன் தாயின் கிராமத்தில் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகப்பனிடம் சொன்னான். மரிசலின் எந்தப் பதிலுமே சொல்லவில்லை. அவனும் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. தகப்பனுக்குள் முன்னரைவிட அமைதி மிக அடர்த்தியான முகில்போலத் திரண்டிருந்ததை அவன் கண்டான். அவர் வழியில் அவர் போகிறார், என் வழியில் நான் போகிறேன் எனும் எண்ணத்துடன் மீண்டும் தந்தையிடமிருந்து தூரமாகினான். கமலன் போனதன் பின்னர் மறுபடி எப்போதுமே தந்தை மகனைக் காணவில்லை. ஏதோ ஒரு கணத்தில் புத்தியின் அடைப்புத் திறபட்டவர்போல மரிசலின் அறிவுத் துல்லியமடைந்தபோது மகனைத் தேடி அலையத் தொடங்கினார்.

00

மரிசலின் வெவ்வேறு கிராமங்களுக்குச் சென்று தங்கியிருந்தார் அப்போதெல்லாம் அவர் மக்களை அவதானித்தார் தமிழர்கள் ஆலயங்களிலும், கோயில்களிலும்கூடக் கொல்லப்படும்போது கையாலாகாத் தன்மையோடு வேதனைப் பட்டார். அதே நேரம் கும்பல் கும்பலாய் சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டபோது மகிழ்ச்சிக் கொண்டாட்டம் செய்த தமிழர்களை அவதானித்து மெளனமானார். கொஞ்சம், கொஞ்சமாய் அவர் மனிதர்களோடு பேசுவதைக் குறைத்துக்கொண்டார்.

இதுதான் மருசலின் தாத்தாவின் கதை.

.00

மரிசலின் தாத்தாவுடன் சில நாட்கள் கடல்பார்க்கச் சென்றபோதுதான் புரிந்தது தாத்தா ஒட்டுமொத்தக் கடலையும் பார்ப்பதற்காக அல்லாமல் அக்குடாக்கடலிலிருந்த ஒரு சுழியைப் பார்க்கவே செல்கிறார் என்பது.     ஒரு நாள் தாத்தா சுழியின் முன்னே நின்றபடி தாடையை உயர்த்தி, குரல்வளை புடைக்க ஒரு விசித்திரமான பாடலைப் பாடினார். அது ஒருபோதுமே நான் கேட்டிராத குரவைத் தன்மை கொண்ட பாடலாய் இருந்தது. 

பின்னர் தாத்தா சொன்னார் ‘ இந்தச் சுழியைப் பார்த்தாயா இச்சுழி இங்குதான் பல காலமாய்  சுருண்டுகொள்கிறது.  நீரெல்லாம் ஒன்றல்ல என்றபோதும், கடலெல்லாம் ஒன்றல்ல என்றபோதும் சுழியெனும் இயக்கம் கோர்க்கிறது. சுழியின் இயங்குமுறையை நன்றாக உற்று அவதானித்தால்  அது நம்மையும் கோர்க்கும். இந்தக் கடலின்ர மடியில உடம்ப வளத்திப் படுத்துப்பாரு’ என்று.

தாத்தா சொன்னபடியே மணலில் சரிந்தார்,  நானும்  அங்கே சுருண்டேன், மனமெலாம் சுழி, நாசியில் சாதாளை வாசம், சாதாளை வாசமும் மனப்பயணத்தின் உந்து சக்தியாய் இருந்துவிட முடியுமென்று இப்போது யோசிக்கிறேன், அந்த நிலம் அப்போது என் விலாவில் சுட்டுக்கொண்டிருந்தது.

உடல் நிலத்தோடும், மனம் கடலோடும் கிடந்தன.  தாத்தா ஒரு பெரிய சுழிப்பாகவும், நான் ஒரு சிறிய சுழிப்பாகவும் உடல் வளர்த்திக் கிடந்தோம். தாத்தா சுற்றிச் சுற்றி என்னோடு கலந்தார் சில கணங்கள் நாங்கள் சுழியாய் இருந்தோம்.

இது கண்கள் கண்ட சுழலும் காட்சியிலிருந்து மூளையில் ஏற்பட்டதொரு மாறுதல்தான். ஆனால் இது ஒரு அனுபவம். பாசம் மிக்க தாத்தாவோடு நான் ஒன்றாய்க் கலந்த அனுபவம்.  என் மனதிற்கு பயிற்சியாய் அமைந்துவிட்ட அனுபவம். என் மனம் இந்த அனுபவ வடிவத்தை அன்று எடுத்துக்கொண்டது.

சுழி எப்படி விசைகொண்டு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து விடுகிறதோ அது போல பிளவுண்ட இந்த மனிதச் சமூகத்தை இணைக்கும் கருவியாக மனதை உருவாக்கும் பயிற்சியைத்தான் அன்று தாத்தா செய்துகொண்டிருக்கிறார் என்பது புரியாமலேயே நான் அவரைப் பின் பற்றத் தொடங்கினேன். தாத்தா இயற்கையின் இயக்க வடிவத்தை உள் வாங்கி மனதை இயக்கிக்கொண்டே இருந்தார். அவரிடம் ஒரு ‘நேர்மையான ஒழுக்க இலட்சியம்’ அன்று இருந்தது.

00

பின் வந்த நாட்களில் மரிசலின் தாத்தா எங்களோடு கதைப்பதை நிறுத்திக்கொண்டார். அவர் தனக்குள்ளேயே எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். ‘ராகுலன் உனக்கொரு ரகசியம் சொல்லவேணுமடா’ என்பார். அடடா தாத்தா என்னைத்தானே கூப்பிடுகிறார் என்று அருகில் போனால் அவர் தனக்குள் இருக்கும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அவருக்குள் இருக்கும் நான் எப்படி இருக்கிறேன்? அவருக்குப் பதிலாய் எதைச் சொல்கிறேன் என்றெல்லாம் எனக்குள் ஆவல் இருந்தது. ஆனாலும் அவரின் புறத்திலிருந்த என்னுடன் அவர் எதையுமே பறையவில்லை.

தாத்தா மனிதர்களை நேசித்தவர், மனிதர்களுக்கு உதவிகள் செய்ய ஆர்வமாயிருந்தவர், சமூக வாழ்வை விரும்பியவர். தான் விரும்பிய மனிதச் சமூகத்தை தனக்குள் இருத்தி உரையாடிக்கொண்டிருந்தார். அவரின் உரையாடல்களை பிதற்றல் என்றே சமூகம் கண்டது. அவரும் இச்சமூகத்துக்கு எதையுமே வெளிப்படையாய் சொல்லவுமில்லை.

பின் வந்த யுத்தத்தில் இடம்பெயர்ந்தபோது மரிசலின் தாத்தா அந்தச் சுழலில் எந்தப்புள்ளியில் தொலைந்துபோனார் என்பது தெரியாமலேயே போனார்.

மெலிஞ்சி முத்தன்

மெலிஞ்சிமுத்தன் தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். பிரண்டையாறு, அத்தாங்கு, வேருலகு, உடக்கு ஆகிய புனைவு நூல்களின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.