சுட்டும் சுடர் விரல்

நமக்குச் சுட்டுவிரல்தான் பிடித்திருக்கு.
வெளிர்பச்சை வெண்டிக்காயென்றே
ஒரு சுண்டங்காய்ப் பெயர் வச்சாப் போச்சு!
அடுத்தென்ன! விரலாராதனைதான்!
அச்சா விரல்!
நகமென்றால், பிறை பார்!
பக்குவமாய் வாய்க்குள் வச்சால்,
சூப்புவமா? கடிப்பமா?
ஆருக்குத் தேவை எச்சில் ஆராய்ச்சி?
சுட்டுவிரல் வேணும்
சுடவும் காண்!
மெத்தப்படித்தவிரல்
சுட்டுது பார்!
மொத்தத்தகு
அச்சா விரல்!
சூரியன் கிடக்கட்டும்!
பார்த்தால் கூசுது! பட்டால் எரிக்குது!

விரல் தன்னிலை;
வெயிலோன் படர்க்கை.

பொது மூலதனம்

எல்லாத்தத்துவங்களுக்கும்
திருநிலைப்படுத்தலுண்டு.
திருநிலைப்படுத்தலென்றால்
ஆண்டகையாக்கல்.
ஆண்டகையென்றால்,
மூலமூர்த்தி
மூர்த்தி மூலமோ பூராடமோ
பேசவே பேசாது.
மூர்த்திக்கு ஜலம் வார்க்கும்
குருக்கள் பேசலாம்.
குருக்களென்றால்
இடைத்தரகர்
இடையில் தரகர்
பிறகு தலைவர்
மூர்த்தியின் கீர்த்தியே
தலைவர்தம் உரை.
ஆண்டகைப்படுத்தலை அவ்வப்போது
மீளச்செய்வதும் தலைவர்
தலைவரின் முதலென்பதால்
மூர்த்தியே முதல்வர்
பொதுத்தத்துவங்கள்
பொதுவுடமைத்தத்துவமென்றாலும்
திருநிலைப்படுத்தலால்
தனிச்சொத்தாகும்.
புத்தர் பேசவாய்திறவார்
எங்கல்சும் எனக்கேன் சோலி என்றிருப்பார்.
தலைவரே பேசுவார்;
பேசுகிறவரே தலைவர்;
சந்தியவந்தனத்துக்கும்
வைகாசி ஒன்றுக்கும்
கருவறை உள்ளே தனியே
வெளியே காத்திருப்பார் காண
ஜலம் வார்ப்பதால்
தீபம் காட்டுவதால்
தலைவரே
திருநிலைப்பட்டார்க்காய்
பிராதும் பெட்டிசனும்
பெருவழக்கும் தொடுக்க
உரித்துடையார்.
திருநிலைப்பட்டார் நூல்கள்
தேவமுறிகள் கட்டப்பட்டவை;
காவலர் தோட்காவவும்
தலைவர் பாஷ்யம் விரித்துரைக்கவுமே
நுமக்கும் நமக்கும்
விலக்கப்பட்ட புழுக்கனிகள்!

பேச்சறு

இரைச்சலுடன் மோதிக்கொல்லும் சொற்களிடையே
என் கைப்பத்திரத்தை நசுங்காமல் நகர்த்திடக்கூடும்
எந்நாளும் சுகந்தம்.
ஊனற்சவங்களில் எழும் கவிதைகளிலே பூப்பிடுங்காது
நகரும் என் காலம் வசந்தம்.
உக்கும் உடல்கள் உயிர்வாயுவை மட்டுமே கேட்கிறன
கவிதை என்ற பெயராட்டும் உன் எழுத்துச்சரையை
நுனி முறித்துச் சிதையெரி.
பேசாதிருக்கும் பொழுதெல்லாம் நிறையப் பேசினேன்;
கேட்காதார் சபைகூடிச் சத்தமின்றிக் கேட்டார்கள்.
தொடர்பற்ற நெளிசிந்தனைகள்
குடைந்து தொடர்கின்றனவா?
குரைத்துத் துரத்துகின்றனவா?
ஓடிக்கொண்டிருக்கின்றவனுக்கு
உள்ளதெல்லாம்
உயிர்வாழ்வுக்கல்லா
உப்பிலிக்கேள்வி

இரமணிதரன் கந்தையா

ஈழத்தை பூர்விகமாகக்கொண்ட இரமணிதரன் கந்தையா, தற்சமயம் அமரிக்காவில் வசித்துவருகிறார். ‘சித்தார்த்த‌ சே குவேரா’ என்ற புனைபெயரிலும் கவிதைகள் சிறுகதைகள் எழுதிவருபவர். ஓவியம் மற்றும் புகைப்பட துறையிலும் ஆர்வம் கொண்டவர். பல்வேறு இதழ்களில் வெளியாகிய ஆக்கங்கள் இன்னும் தொகுக்கப்படாமல் விரவிக்கிடக்கின்றன.

உரையாடலுக்கு

Your email address will not be published.