சில மொழிபெயர்ப்புக் கவிதைகள்

தமிழில் கு.அ.தமிழ்மொழி

ஒரு பாடல்

பாடல் ஒரு கிழவியைச்
சந்திக்கச் செல்கிறது
மாலையின் தொடக்கத்தில் தனியே
சோகத்துடன் அமர்ந்திருக்கும்
அக்கிழவியின் முகம் அதற்குத்
தெரிந்ததால் போகிறது

பறவைக்கூடுகள் காலியாய் இருக்கின்றன இப்போது
ஆனால் எதிர்காலத்தில்
நிறைய வேலைகள் சிதறுண்டு கிடக்கின்றன
அவளின் பேரன் கால்பந்தாட்ட்த்தில் வென்ற
கோப்பையை அடுக்க,
தூசி படிந்திருக்கும் அவனின் புத்தக அடுக்கு
எல்லாவற்றையும் தூய்மைப்படுத்த வேண்டும்

அவன் ஏற்கனவே அச்சிறிய வீட்டின்
வராண்டா உட்பட இரண்டு அறைகளைத்
தயார் செய்துவிட்டாள்
இப்போது நெருப்படுப்பில், மண்பானையில்
அரிசி முழுவதுமாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது

பாதி கிழிந்த காலணிகளை அணிந்து
அவள் முற்றத்தில் நடக்கிறாள்
மாலைத் தென்றலை உள்ளிழுத்து
பார் அங்கே நிலா எப்படி எழுகிறது
இந்த முழு உலகும் என் பணிக்காக்க்
காத்துக்கொண்டிருக்கிறது
சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்

பாடல் ஒன்றும் சொல்லாமல்
அதன் இடத்திற்குத் திரும்பிவிட்டது

***

ஓடியா : சீதாகாந்த் மகாபத்ரா
ஆங்கிலம் : பிபுபதி மீனாட்சிபதி

000

மறதி

நீங்கள் தனித்து அமர்ந்திருக்கும்போது
கடந்தகால நினைவுகள் வருகின்றன
ஒருவேளை
நீங்கள் தனியே அமரவில்லையெனில்
அங்கே எதுவும் பின் செல்வதில்லை

உங்களுக்கு நேரம் கிடைக்கையில்
நீங்கள் கடந்தகாலத்தைப் பற்றி
எண்ணுகிறீர்கள்
ஒருவேளை உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லையெனில்
நீங்கள் அவற்றைப் பற்றி எண்ணப்போவதில்லை

நீங்கள் முடிந்தவற்றை மறுபடியும் அசை போடும்போது
எந்த நல்லவையும் மனத்திற்குள் வருவதில்லை
மறக்க விரும்பும் நினைவுகளுக்குள்
நிரம்பி வழிகிறீர்கள் நீங்கள் உங்களுக்கு விருப்பமற்ற முகங்கள்
நீங்கள் நினைத்து சங்கடப்பட்ட பொழுதுகள்

நீங்களே சில நற்சிந்தனைகளைப் பெறுங்கள்
அறிவுரைகளைக் கடந்து
நெற்றியில் வருடி

தாய், அன்பிற்குரியவர், மருத்துவர், பாதிரியார்..
பிறகங்கே இந்த வெளிப்பாடு

நினைவென்பது ஒரு நோய்
அது மறப்பதை பாதிக்கும்

***

மலையாள மூலம்: ஶ்ரீஜித் பெரும்தச்சன்
ஆங்கிலம்: லீனா சந்திரன்

000

விளக்குகள்

வீதியைப்பாக்கையில்,
ஒளியின் ஆறு வீதியில்

கண்கள் சொல்கின்றன உங்களிடம்:
ஒருபோதும் எந்த வாளையும் ஒளியினால் உருவாக்காதீர்கள்
அல்லது
வாளே ஒளியாகட்டும்

வெளிச்சத்தில் உங்கள் கண்களை மூடாதீர்கள்
ஓ! மண்ணெண்ணெய் விளக்குக்காக நான் எவ்வளவு ஏங்குகிறேன்
யாரோ முணுமுணுக்கிறார்கள்

எல்லா விளக்குகளும் போதும்
அருள்கூர்ந்து அவற்றை வெளியே எடுங்கள்

விளக்குகள் கண்களின் எதிரியாய் மாறியதிலிருந்து
பாட்டி குறுக்கிடுகிறாள்

பாட்டியை நினைவூட்டுகின்றன
மண்ணெண்ணெய் விளக்குகள்

அவர்களின் இருண்ட கண்கள் அதே மங்கிய ஒளியில் எரிகின்றன என்பதற்காக மட்டுமல்ல

ஆனால் ஒன்று மட்டும் உறுதி
கண் விளக்குகள்
சில இரகசியங்களைக் கொண்டிருக்கின்றன
மண் விளக்குகளிடம் பகிர

***

மலையாள மூலம்: ஶ்ரீஜித் பெரும்தச்சன்
ஆங்கிலம்: லீனா சந்திரன்

000

கு.அ.தமிழ்மொழி

கு.அ.தமிழ்மொழி கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

4 Comments

  1. அதிசிறப்பு கவிதை மொழிபெயர்ப்பு, வாழ்த்துகள் அம்மணி

  2. மொழிபெயர்ப்பு நன்றாக வந்துள்ளது – அதற்காகத் தெரிவு செய்த கவிதைகளும் நன்று.
    குறிப்பாக ‘ஒரு பாடல்’ மொழிபெயர்ப்பு அருமை. மனது உருகிவிட்டது தமிழ்மொழி.

உரையாடலுக்கு

Your email address will not be published.