சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்

புகைப்படம்

எண்ண முடியாத அளவு தென்னை மரங்களும் பழ மரங்களும் உடமையாகக் கொண்டிருந்த மாணிக்கவாசகம் பிள்ளை, எல்லாவற்றையும் இழந்து நார்க்கட்டிலில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் படுத்து இருமிக்கொண்டிருக்கிறார். ஒரு சிறு வாளியில் மண்ணை நிரப்பிக் கட்டிலின் கீழ் வைத்திருக்கிறார்கள். இருமினால் வரும் சளியை அதில் துப்புவார். காலையில் வரும் வெள்ளையம்மாள் வீட்டைப் பெருக்கி, பாத்திரங்களைத் துலக்கி வேறு வேலைகளும் செய்யும்போது இந்த வாளியைக் குப்பையில் கொட்டிப் புது மண்ணை நிரப்பி வைப்பாள். நெஞ்சில் இருக்கும் சளி ஒவ்வொரு முறை இருமும்போதும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவுதான் சளி இருக்குமோ. சளி காலியாகவில்லை.

“அங்கம்மா” என்று அழைத்தார். பல தடவை அழைத்தால்தான் மனைவி அங்கம்மாள் வந்து “என்ன” என்று முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டே கேட்பாள். மாணிக்கவாசகம் நயந்துகொண்டே “காப்பித்தண்ணி” என்பார். மாட்டுக்குத் தீவனம் வைக்கும் கந்தன், அங்கம்மாள் தரும் காப்பித்தண்ணியைக் கொண்டுவந்து கொடுப்பான்.

மாணிக்கவாசகம் அங்கம்மாளைப் பெண் பார்த்தபோது அவளது அழகில் அவர் மயங்கிப்போனார். குனிந்த தலையுடன் வந்த அவள் குனிந்த தலை நிமிராமல் கண்களையும் புருவங்களையும் உயர்த்தி அவரைப் பார்த்தாள். நெஞ்சில் காமத்தின் ஈட்டி இறங்கியது போல் உணர்ந்தார். அவளைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அவள் நினைவாகவே இருந்தார். அங்கம்மாள் குடும்பம் சற்று வசதிக்குறைவானது என்பதால் சிறு தடங்கல் ஏற்பட்டு விலகியது. அங்கம்மாளை மாணிக்கவாசகம் கல்யாணம் செய்துகொண்டார். அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே செல்லும்போது கம்பீரமாக உணர்வார். இத்தகைய அழகியைக் கணவனாகக் கொண்டவன் என்ற பெருமையில் இருப்பார். கோயிலுக்குச் சென்றால் பட்டரும் அவளை நிதானித்துப் பார்ப்பதை அவர் கவனித்திருக்கிறார்.

அது ஒரு காலம். அந்தக் காலத்திலேயே கூட படுக்கையைத் தவிர பிற இடங்களில் நெருங்க விடமாட்டாள். கல் மாதிரி இருப்பாள். கூச்சம்தான் காரணமா. அவருக்குக் கண்டறிய முடியவில்லை. பல சமயம் படுக்கையிலும் கல் மாதிரிதான் கிடக்கிறாள். காலம் ஆக ஆக அவளைத் தொடுவதுகூட அரிதாகிவிட்டது. தட்டிவிடுவாள். பிள்ளைகள் பெரியவர்களாகி திருமணமும் செய்து கொடுத்தாகிவிட்டது. இப்படித்தான் அவள் இருப்பாள் என்ற நிலைக்கு மாணிக்கவாசகம் வந்துவிட்டார். தவிர வயதானால் பெண்களுக்கு உடலும் வளைந்து கொடுக்காது. ‘இடுப்பு கடுக்கிறது’ என்பார்கள்.

மாணிக்கவாசகம் இருமினார். வந்த சளியை வாளியில் இருந்த மண்ணில் காறித் துப்பினார். “அங்கம்மா” என்று அழைத்தார். அவள் எங்கிருக்கிறாளோ. வெளியே சென்றாலும் சொல்லிக்கொண்டா செல்கிறாள். அங்கம்மாள் வரவில்லை. வேலையாள் கந்தன் நேரங்கழித்து வந்தான். அங்கம்மாளைப் பற்றிக் கேட்டார். பக்கத்து ஊருக்குக் கல்யாணத்துக்குப் போயிருப்பதாகச் சொன்னான்.

“முண்டை. சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே. நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்.”

“சாப்பாடு எடுத்து வைச்சிருக்காங்க. நான் நேரத்துக்கு வந்து எடுத்துக் கொண்டு வாரேன். இப்ப என்ன வேணும்.”

“காப்பித்தண்ணி” என்றார்.

“கடையிலே வாங்கி வரவா.”

“நல்லா இருக்காது. வேற வழி இல்லை. சூடா வாங்கிட்டு வா. அப்பத்தான் நீ வர்றதுக்குள்ளே ஆறாம இருக்கும். காசு வேணுமா.”

“சொல்லிக்கலாம். அம்மா வந்த பிறகு கொடுத்துக்கலாம்.”

கந்தன் காபி வாங்கச் சென்றான். மாணிக்கவாசகம் தலையணைக்குக் கீழே இருந்த டைரியைத் திறந்து அதில் இருந்த அங்கம்மாளும் தானும் இருந்த பழைய புகைப்படத்தை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் டைரியிலேயே வைத்துத் தலையணைக்குக் கீழே வைத்துக்கொண்டார்.

‘முண்டை. ஒரு காலத்திலே எப்படி இருந்தா’ என்று நினைத்துக்கொண்டே படுக்கையில் படுத்தார்.

***

பறவையின் வாசனை

எங்கள் தெரு, பக்கத்துத் தெருக்களில் இருக்கும் பையன்களின் கேப்டனாக நம்பிராஜன் இருந்தான். அவன் எஸ்.எஸ்.எல்.ஸி. படித்துக்கொண்டிருந்தான். நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். பையன்களுக்கிடையே ஏற்படும் சண்டைகளைத் தீர்ப்பவனாகவும் பிற தெருப்பையன்கள் எங்களுடன் மோதலுக்கு வராமல் தடுப்பவனாகவும் நம்பிராஜன் இருந்தான்.

ஒருநாள் பறவை வேட்டைக்குப் போவோம் என்று நம்பிராஜன் நாள் குறித்தான். நாங்கள் ஆறு பேர் சேர்ந்தோம். நிறைய பையன்கள் சேர்ந்தால் பார்ப்பவர்களுக்கு வினோதமாகத் தெரியும்; கேள்வி கேட்பார்கள் என்று அவன் காரணம் சொன்னான்.

கோயிலுக்குப் பக்கத்தில் நரிக்குறவர்கள் பாசி, மணி, காட்டா பெல்ட் விலைக்குப் பரப்பி வைத்திருப்பார்கள். காட்டா பெல்ட் என்பது கவட்டையாக மரத்தை வெட்டி அதில் கருப்பு ரப்பர் பெல்ட்டைக் கட்டியிருப்பார்கள். அதில் கல்லை வைத்து கவட்டையில் பார்வையைச் செலுத்திக் குறி பார்த்து அடிக்க வேண்டும்.

ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு மூன்று காட்டா பெல்ட் வாங்கினோம். நம்பிராஜன் ஒரு துணிப்பை கொண்டுவந்தான். அதை என்னிடம் கொடுத்து அடிபட்டு விழுகும் பறவையை அந்தத் துணிப்பையில் எடுத்துப் போட்டு அதை நான் கொண்டுவர வேண்டும் என்றான்.

நம்பிராஜ் குறி பார்த்து அடிப்பதில் கெட்டிக்காரனாக இருந்தான். மற்ற இரண்டு காட்டா பெல்ட் வைத்திருப்பவர்களுக்குக் குறி தவறாமல் அடிக்கத் தெரியவில்லை. மரங்களினூடே அநேகமாக குருவிகளைப் போலிருக்கும் சிறு பறவைகள் உட்கார்ந்திருப்பதைக் கண்டறிய வேண்டும். நம்பிராஜன் குறி பார்த்து அடிப்பான். சொத்தென்று அந்தச் சிறு பறவை விழுகும். அதன் கழுத்தை ஒடித்து நான் வைத்திருக்கும் பையில் அந்தப் பறவையை நம்பிராஜன் போடுவான். நான் அந்தப் பையைக் கொண்டு வருவேன் என்பது திட்டம்.

நான் அந்தப் பகுதிக்கு இதற்கு முன் வந்ததில்லை. மணல் குன்றுகள், தென்னை மரங்கள் உள்ள பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டும். கடல் நீர் கடலைவிட்டு வெளியே வ்ந்து உள்சென்றதில் ஒரு நீண்ட பகுதியில் சில இடங்களில் கணுக்கால் வரையிலும், சில இடங்களில் முழங்கால் வரையிலும் கடல் நீர் ஓடாது நிற்கும். சுற்றி சவுக்குமரக் காடுகள், வேறு சில பெயர் தெரியாத மரங்கள். பெரும்பாலும் சிறு பறவைகள் திரிந்தன.

நம்பிராஜன் குறி பார்த்து அடித்துக் கீழே விழுந்த பறவையைக் கழுத்தை ஒடித்து என் பையில் போடுவான். இப்படிப் பறவைகள் சேர்ந்துகொண்டே வந்தன. ஒரு கட்டத்தில் எத்தனை பறவைகள் என்று எண்ணச் சொன்னான். எண்ணினேன். பன்னிரெண்டு இருந்தன. ரத்தம் என் கையில் பட்டு பிசுபிசுவென்று இருந்தது. தேங்கியிருந்த கடல் நீரில் கையைக் கழுவினேன்.

ஒரு மரநிழலில் உட்கார்ந்தோம். ஒருவன் சுள்ளிகளை ஒடித்துக்கொண்டு வந்தான். நம்பிராஜன் பறவைகளின் கழுத்தை வெட்டி எறிந்தான். இறகுகளை நீக்கிச் சுத்தப்படுத்தினான். கற்களை வைத்து அடுப்பு உருவாக்கிச் சுள்ளிகளை வைத்து தீ பற்ற வைத்தான். இரண்டு தடிமனான குச்சியினால் பற்றி உரித்த பறவைகளை ஒவ்வொன்றாக நெருப்பில் வாட்டினான். நன்றாக வெந்ததும் கொண்டுவந்திருந்த பாத்திரத்தில் வைத்தான். சூடு தணிந்ததும் ஒவ்வொருவருக்கும் இரண்டு பறவைகள் எனக் கணக்கிட்டான்.

எனக்கு அதன் சதையைப் பிய்த்துத் தின்னத் தெரியவில்லை. நம்பிராஜன் சொல்லிக் கொடுத்தான். மசாலா, எண்ணெய் எதுவும் சேர்க்காமல் சுட்டது என்பதால் எனக்குச் சாப்பிடச் சிரமமாக இருந்தது. எப்படியோ ஒன்றைச் சாப்பிட்டுவிட்டேன். இன்னொன்றை கூட வந்த ஒருவனிடம் கொடுத்துவிட்டேன்.

பை ரத்தக்கறை படிந்திருந்தது. அதைக் கடல் நீரில் அலசினேன். காய வேண்டும் என்பதால் இலைகள் விழுந்திருந்த இடத்தில் பையைக் காய வைத்தேன். கடற்கரைக் காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது. நாங்கள் ஓய்வெடுத்தோம்.

இருட்டுவதற்குள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்று நம்பிராஜனிடம் சொன்னேன். பறவைகளில் இரண்டு பெரிய பறவைகள் அவனுடைய பங்கு. மிதப்பில் இருந்தான். நான் நினைத்த நேரத்திற்குச் சற்று நேரம் தள்ளி அனைவரும் வந்த வழி திரும்பினோம்.

திரும்பும்போதே அடிபட்டு சத்தம் எழுப்பிக் கீழே விழுந்து துடித்து, கழுத்து ஒடிபட்டு இறக்கும் பறவைகள் நினைவில் தோன்றின. வீட்டுக்கு வந்ததும் வாந்தி எடுத்தேன். “என்னத்தைத் தின்னே” என்று அம்மா பிடரியில் அடித்தாள்.

“நம்பிராஜன் பரோட்டா வாங்கிக் கொடுத்தான். சாப்பிட்டேன்” என்றேன்.

“பெரிய பையன்களோடு சேராதேன்னு எத்தனை தடவை சொல்றது.” பிடரியில் மீண்டும் அடி விழுந்தது. அன்று இரவு தூங்கும்போது ஒரு பெரிய பறவை என்னைத் தூக்கிப் பறந்து சென்று வானவெளியிலிருந்து கடலில் போட்ட கனவைக் கண்டு எழுந்தேன்.

அடுத்த முறை என்னைப் பறவை வேட்டைக்கு அழைத்தபோது பொய் சொல்லிச் செல்லாமல் இருந்துவிட்டேன். கோழிக்கறியை வீட்டில் செய்தாலும் என்னால் சாப்பிட முடியவில்லை. தீயில் வெந்த பறவைச்சதையின் வாசனை அடித்தது. என் அம்மா வற்புறுத்தியும், அடித்தும் என்னால் சாப்பிட முடியவில்லை. பிறகு கோழிக்கறி உட்பட எந்தப் பறவைக்கறியையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

***

மறக்க முடியாதது

மகேஸ்வரிக்குப் பேச்சு வரவில்லை. நினைவுகள் இருந்தன. படுக்கையில் கிடந்தாள். சிறுநீர் செல்வதற்குப் பை இணைக்கப்பட்டிருந்தது. மலம் எடுப்பதற்கும் குளிப்பாட்டுவதற்கும் திடமான ஒரு வேலைக்காரப் பெண்ணை நியமித்திருந்தார்கள். வீடு பெரிய வீடு. தனி அறையில் மகேஸ்வரியை வைத்திருந்தார்கள். திருமணமான மகளும் மகனும் அதே வீட்டில் வசித்தார்கள்.

மகேஸ்வரிக்கு நினைவுகள் புரண்டுகொண்டிருந்தன. கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என்ன அதிசயமோ அவள் நினைவில் கணவர் வருவதில்லை. திருமணமாகி அன்றைய இரவு அறையில் தனித்திருந்த காட்சி மட்டும் நினைவில் வருகிறது. அந்தக் காலத்தில் அவள் தண்டபாணியைக் காதலித்தாள். இருவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள். தனியே சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். தண்டபாணியின் நினைவு மறையாது. அவளின் ஆழ்மனதில் அவன் நினைவு இருக்கிறது. திருமணமான அன்றைய இரவில் கண்களை மூடினால் அவன் தோற்றமே நினைவுக்கு வந்தது. பலவிதமான காரணங்களால் அவர்களின் திருமணம் நடக்கவில்லை. இரு வீட்டாருக்கும் அவர்கள் காதல் விவகாரம் தெரியும். தெருவில் உள்ளவர்களும் லேசாக அறிந்திருந்தார்கள். திருமணம் அவசரகதியில் நடந்தது.

திருமணம் முடிந்தபின் கணவர் வேலை பார்க்கும் திருநெல்வேலிக்கு அவருடன் மகேஸ்வரி வந்துவிட்டாள். ஒரு வாரம் கடந்தது. மகேஸ்வரிக்கும் ஊர் பழகியது. சந்தைக்குக் காய்கறிகள், பலசரக்கு வாங்க மகேஸ்வரி வந்தபோது, திடீரென அவள் முன் தண்டபாணி வந்து நின்றான். அவளுக்கு உடல் நடுக்கமெடுத்தது.

“எப்படியிருக்க” என்று தண்டபாணி கேட்டான்.

அவள் தலையசைத்தாள். அவனை அவள் எதிர்பார்க்கவில்லை. திகைப்பிலிருந்தாள்.

“எனக்கு உன்னை மறக்கமுடியலை. நமக்கு சங்கல்பம் இல்லை. திருமணம் நடக்கலை. உன்னை மறக்க முடியாம தினமும் சித்திரவதை அனுபவிக்கிறேன்” என்றான் தண்டபாணி.

தனக்கும் அப்படித்தான் இருக்கிறது என்று சொல்ல அவள் மனம் விரும்பியது. ஆனால் சொல்லவில்லை.

“இங்கேயெல்லாம் வராதீங்க. யாராவது பாத்தா என் வாழ்க்கை கெட்டுப் போயிரும். நீங்க போயிருங்க. இனிமே வராதீங்க. என் தலையெழுத்துன்னு நெனைச்சுக்கறேன். நீங்க போயிருங்க” என்றாள்.

“எனக்கு ஒரு யோசனை தோணுது. நாம ரெண்டு பேரும் எங்காவது ஊர்க்காரங்க கண்படாத இடத்துக்குப் போயி சேந்து வாழலாம்னு நெனைக்கிறேன். நீ சம்மதிச்சா இது நடக்கும். அதுக்கான ஏற்பாட்டைப் பண்ணலாம்” என்றான் தண்டபாணி.

ஒருகணம் மகேஸ்வரிக்கு சரி சொல்லிவிடலாமா என்று தோன்றியது. காய்கறிகள் இருந்த பையை இறுகப் பிடித்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். பலசரக்குக் கடைக்காரர் கடையிலிருந்தபடியே இவர்களைப் பார்ப்பதைக் கவனித்தாள். மனதை ஒருநிலைப்படுத்தினாள்.

“இது போலப் பேசாதீங்க. எனக்கு அந்த நெனைப்பு இல்லை. உங்களுக்கு அப்படித் தோணலாம். இதோட பின்விளைவுகள் நல்லா இருக்காது. இந்த எண்ணத்தைக் கைவிட்ருங்க. நீங்க இந்த இடத்தை விட்டுப் போங்க. இனிமே என்னைத் தேடி வராதீங்க. இதுதான் கடைசி தடவையா இருக்கட்டும்… ம்… போங்க…”

அவள் போங்க என்ற வார்த்தையைக் கட்டளையிடுவது போல் சொன்னாள். அவன் திரும்பி நடந்தான். சற்றுத் தொலைவு சென்று திரும்பி அவளைப் பார்த்தான். பிறகு சென்றுவிட்டான். மீண்டும் வரவில்லை.

தண்டபாணியுடன் பழகியது அவள் நினைவில் வந்துகொண்டிருந்தது. பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மனதில் அவன் நிறைந்திருக்கிறான். மகேஸ்வரியைக் குளிப்பாட்டும் நேரம். வேலைக்காரப் பெண் அவள் ஆடைகளைக் களைந்து, பாத்ரூமிற்குள் தூக்கிச் சென்று பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்துக் குளிப்பாட்டுவாள். அதற்கு முன் சிறுநீர்ப்பையைக் காலி செய்து மீண்டும் மாட்டுவாள்.

அவள் மகேஸ்வரியைத் தூக்கிச்சென்று குளிப்பாட்டும்போது மகேஸ்வரியின் வாய் திறந்து ‘தண்டபாணி’ என்று உச்சரித்தது. வேலைக்காரப் பெண்ணுக்கு மகேஸ்வரியின் வாயிலிருந்து வார்த்தை வருவது ஆச்சரியமாக இருந்தது. குளிப்பாட்டி, துடைத்து, படுக்கையில் கிடத்தினாள்.

வேலைக்காரப் பெண் மகேஸ்வரியின் மகளிடம் சென்று, “உங்க அம்மா இன்னைக்கு வாய்திறந்து ஒரு வார்த்தை ‘தண்டபாணி’ன்னு சொன்னாங்க” என்றாள்.

மகளுக்கு அந்தப் பெயரைக் கேட்டதும் திடுக்கென்று இருந்தது. “வேற ஏதாவது சொன்னாங்களா” என்றாள்.

“இல்லைம்மா அந்த ஒரு வார்த்தைதான் சொன்னாங்க.”

“சரி நீங்க மத்த வேலையைப் பாருங்க” என்றாள் மகள்.

பிறகு மகேஸ்வரி இருக்கும் அறைக் கதவைத் திறந்து மகள் அவளைப் பார்த்தாள். மகேஸ்வரி கண்மூடிப் படுத்திருந்தாள். ‘எப்படி மறக்க முடியும்’ என்று மகள் நினைத்துக்கொண்டாள்.

***

நினைக்கவில்லை

மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்திருந்தாள் ஜானகி. மேலே நிலா குளிர்ச்சியான காற்று. செல்வாக்குடனும் மகிழ்ச்சியுடனும் இருந்த வாழ்வு கணவரின் மறைவிற்குப் பின் மாறிவிட்டதை உணர்ந்து வருத்தப்பட்டாள். ஜானகி ஏழ்மையான குடும்பப் பின்னணி உடையவளாக இருந்தாள்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக பொதுப்பணித்துறை பொறியாளருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். முதல் மனைவி துரதிருஷ்டவசமாக விபத்தில் இறந்துவிட்டாள். ஐந்து வயதில் பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையை ஜானகி தன் குழந்தை போல் வளர்த்தாள். குழந்தையும் பாசத்துடன் வளர்ந்தது. அக்குழந்தை பருவ வயதடைந்து படிப்பை முடித்தபின் நல்ல வசதியான இடத்தில் சீர் செய்து திருமணம் முடித்தார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள் இல்லை. மகள் வந்தனாவின் மனத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

கணவர், ஜானகியிடம் அன்பாகவும் நட்புடனும் இருந்தார். மாமிசம் விரும்பிச் சாப்பிடுவார். ஜானகி மாமிசம் சாப்பிடுவதைக் குறைக்கச் சொல்லிப் பார்த்தாள். ஒருநாள் மாரடைப்பில் இறந்துவிட்டார். அவர் இறந்து காரியம் முடிந்தபின் தான் தனியாக நிற்பதாக உணர்ந்தாள் சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது.

அவர்கள் குடியிருந்த வீடு கணவரின் சுய சம்பாத்தியத்தில் கட்டியது. அதில் கணவரின் மரணத்திற்குப்பின் ஜானகி வசிக்கிறாள். வங்கிக் கணக்குகளுக்கு நாமினியாக ஜானகியை நியமித்திருந்தார். குடும்பப் பென்ஷன் ஜானகிக்கு வர ஆரம்பித்தது. இந்த சூழ்நிலைக்கு ஜானகி பழகினாள். கூட வேலை பார்த்த சிலர் உதவி செய்தார்கள்.

சாதனா, வீட்டில் ஒரு வாரம் இருந்து செல்வதற்காக வந்தாள். அப்போது ஜானகியுடன் அவளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

“இந்த வீடு எனக்கு வேணும். வேற சொத்து இல்லை. அதனாலே எனக்குத்தான் கொடுக்கணும்.”

“நான் உயிரோடு இருக்கும்வரை இருந்துக்கறேன். அதற்குப் பிறகு உனக்குத்தானே சேரும்.”

“அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியாது. என் வீட்டுக்காரர் முரடரு. உங்களை வெளியேத்தியிருவாரு.”

“என்னை ஏன் வெளியேத்தணும். நான் வரும்போது உனக்கு அஞ்சு வயசு. உனக்கு நான்தானே எல்லாம் பண்ணினேன். எனக்குக் குழந்தை பிறந்து உனக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்றதுன்னு அவரு, என்னைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லிட்டாரு. நானும் உன்னை என் பிள்ளையா நெனைச்சு குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டேன். உனக்கும் பின்னாடி இது தெரியும். உனக்கு நான் ஒரு குறையும் வைக்கலை. ஏன் இப்படி மாறிப் போயிட்டே.”

“நீங்க என்னைப் பெத்த அம்மாவா. இடையிலேதானே வந்தீங்க” என்றாள் சாதனா.

ஜானகிக்கு நெஞ்சடைப்பது போல் இருந்தது. கண்களில் நீர் வழிந்தது. “சரி நீயே வச்சுக்க. நான் என் கூடப்பிறந்தவங்க இருக்கற ஊருக்குப் போயிர்றேன். பதினைஞ்சு நாள் டைம் எடுத்துக்கறேன்.”

“போறப்ப போன பண்ணினா எங்க வீட்டுக்காரரு நேர்லே வந்து சாவியை வாங்கிக்குவாரு.”

பேச்சு முடிந்தது. சாதனா ஊருக்குக் கிளம்பினாள். ஜானகி கதவைச் சாத்திக்கொண்டு அழுதாள். தன் மகளாக வளர்த்தவள் இப்படி எடுத்தெறிந்து பேசிச் செல்வதை அவளால் தாங்க முடியவில்லை. கணவர் இருந்தவரை எல்லாம் பிரச்சினையில்லாமல் இருந்தது. அவர் பெரிய அரணாக இருந்திருக்கிறார். இப்போது ஜானகி தனி ஆள். உடன் பிறந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் சாமான்ய நிலையில் இருப்பவர்கள். இவள்தான் அவர்களுக்கு உதவி செய்யவேண்டிய நிலை.

சொன்னபடியே சாவியை சாதனாவின் கணவரை வரச்சொல்லிக் கொடுத்துவிட்டாள். அவர் வீட்டைச் சுற்றிப் பார்த்தார். எதுவும் கேட்கவில்லை. தேவையான பொருட்களை ஏற்கெனவே பேக்கர் மூலமாக ஊருக்கு அனுப்பியிருந்தாள். ஜானகி பார்த்து வைத்திருந்த வாடகை வீட்டில் பொருட்களை இறக்க ஏற்பாடு செய்திருந்தாள்.

தன் ஊரில் பிடித்திருந்த வாடகை வீட்டின் மொட்டை மாடியில் படுத்துத்தான் ஜானகி தன் வாழ்க்கையைப் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறாள். சாதனா, சிறுபிள்ளையாக இருக்கும்போது அவளுக்குச் சடை பின்னி, யூனிபார்ம் உடுத்தி பள்ளிக்கு அனுப்பும் காட்சி, சடங்கு நடந்த காட்சி, கல்லூரி செல்லும் காட்சி, திருமண ஏற்பாடுகள் நடந்த காட்சிகள், திருமணக் காட்சிகள்… எனப் பல காட்சிகள் அவள் மனதில் தோன்றின. சாதனாவின் மேல் கோபம் வந்தது. ஜானகியின் மனம் மாறியது. சாதனாவைத் தன் மகளாக ஜானகி இப்போது நினைக்கவில்லை.

***

தழும்பு

டேப் ரிக்கார்டர் உபயோகத்தில் உள்ள காலம். நான் மலேசியாவிலிருந்து வந்த பயணியிடம் ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கினேன். நல்ல துல்லியமான சப்தத் தெளிவுடன் கேசட்டிலிருந்து பாட்டு ஒலித்தது. ரேடியோவும் கேட்கலாம்.

கேசட்டில் பாடல்கள் பதிவுசெய்து கொடுப்பதற்கென்றே கடைகள் இருந்தன. கையால் எழுதப்பட்ட பாடல் முகப்பு வரிகள் கொண்ட பேப்பர்களை ஒரு பைல் போல தயார் செய்து வைத்திருப்பார்கள். நாம் தேவையான பாடல்களைக் குறித்துக் கொடுத்தால் தங்களிடமுள்ள கேசட்டில் அப்பாடல்களைப் பதிவுசெய்து கொடுப்பார்கள். பாடல்கள் பதிவுசெய்யப்பட்ட கேசட்களை டேப் ரிக்கார்டரில் போட்டுக் கேட்கும் அனுபவம் ஆனந்தமானது.

நான் வசிக்கும் தெருவில் சில வீடுகள் தள்ளி என் நண்பரின் வீடு இருந்தது. இரவு ஒன்பது மணி வாக்கில்தான் அவர் வேலை முடிந்து, மதுக்கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வருவார். என் வீட்டில் பாட்டு ஒலிப்பதைக் கேட்டுக்கொண்டே செல்வார். அடுத்த நாள் சந்தித்தால் கேட்ட பாடல்களைச் சொல்வார்.

திடீரென்று டேப் ரிக்கார்டரில் பிரச்சினை. சரியாகக் கேட்கவில்லை. டேப் உள்ளேயே சமயங்களில் சிக்கிக்கொண்டது. சிக்கெடுக்கும்போது டேப் பிய்ந்துவிடுகிறது. ஏதாவது டேப் ரிக்கார்டர் ரிப்பேர் கடை இருக்கிறதா என்று வெளியே சென்றுவரும்போது பார்ப்பேன். அண்ணா நகரில் ஒரு கடை ‘பிரபா எலெக்ட்ரானிக்ஸ்’ என்ற பெயரில் இருந்தது. ‘டேப் ரிக்கார்டர், ரேடியோ ரிப்பேர் பார்க்கப்படும்’ என்று போர்டில் எழுதியிருந்தது.

நான் டேப் ரிக்கார்டரை எடுத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்றேன். டேப் ரிக்கார்டரில் கேசட் போட்டு சரிபார்த்தான். அவன் மூக்கில் தையல் போட்ட தழும்பு இருந்தது.

“ஸார் டேப் ரிக்கார்டரைக் கழட்டித்தான் பாக்கணும். ஒருநாள் ஆகும். கொடுத்துட்டுப் போங்க.”

நான் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருந்தேன். பேச்சுக் கொடுப்பது என் வழக்கம்.

“தம்பி எந்த ஊரு.”

“நான் இலங்கை அகதி. ஆனையூர் முகாம்லே தங்கியிருக்கேன். இங்கே வந்து பதினைஞ்சு வருஷமாயிருச்சு. பதிமூணு வயசுலே வந்தேன். எனக்குச் சொந்த ஊரு வல்வெட்டித்துறை. தலைவர் பிறந்த ஊரு. போர் உக்கிரமா நடந்த நேரம். வீட்டுக்கு ஒருத்தர் நாட்டுக்கு வேணும்னு சொன்னாங்க. என் அண்ணனை சேத்துக்கிட்டாங்க. என்ன ஆனான்னு தெரியலை. செத்துப் போயிட்டான்னு பேசிக்கிட்டாங்க. போருக்கு ஆள் பத்தலை. என் அப்பாவும் அம்மாவும் பயந்துபோனாங்க. எனக்குப் பதிமூணு வயசு. என்னை எப்படியோ பக்கத்து வீட்டுக்காரப் பையன்களோட கள்ளத்தோணியிலே ஏத்திவிட்டாங்க. முதல்லே மண்டபம் முகாம்லே ரிஜிஸ்டர் பண்ணி அங்கு இருந்தேன். பிறகு இப்ப ஆனையூர் முகாம்லே இருக்கேன். எப்படியோ வாழ்ந்தேன். தொழில் கத்துக்கிட்டேன். தங்க இடமும் அரசாங்க உதவியும் இருக்கு.”

“நீங்க அங்கேயே இருந்தா என்ன ஆகியிருக்கும்.”

“போருக்குப் போயி செத்துப்போயிருப்பேன். போராளிகளுக்குத் தேவை பொடியன்கள்.”

“அப்பா, அம்மா என்ன ஆனாங்க.”

“அப்பா, அம்மா குண்டுவீச்சில் இறந்துபோயிட்டாங்க. பூர்வீக வீடு பாழடைஞ்சு கிடக்கு. இனி அங்கே போயி என்ன செய்றது. இங்கேயே இன்னொரு அகதிப் பெண்ணைப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குழந்தையும் இருக்கு. எங்களுக்குக் குடியுரிமையும் கொடுக்கலை. அதனாலே பல இடைஞ்சல். சொத்து வாங்க முடியாது. டூ வீலர் லைசென்ஸ் வாங்குறதுக்கு அலைக்கழிய வேண்டியிருக்கு. என் கதை பெரிய கதை. அந்தக் கதையைக் கேட்டா இன்னும் நீளமாப் போகும். நாளைக்கி வாங்க ஸார். சாயந்தரமா வாங்க.” என்றான்.

“பேரென்ன” என்று கேட்டேன்.

“சாந்தரூபன் மயில்வாகனன்” என்றான்.

நான் அடுத்தநாள் சென்றேன். தயாராக வைத்திருந்தான். அவன் கேட்ட தொகையைக் கொடுத்து டேப் ரிக்கார்டரை வாங்கி வந்தேன். சில காலத்தில் நான் படிப்பு முடித்து அமெரிக்கா சென்று, அங்கேயேயே வேலை பார்த்தேன். என் குடும்பமும் தஞ்சாவூருக்கு மாறிவிட்டது. 2009ல் இலங்கைப் போர் முடிவடைந்துவிட்டது. நான் சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு மதுரை வந்தபோது அண்ணா நகரில் அந்தக் கடை இருந்த பகுதிக்கு வந்தேன். எல்லாமே மாறியிருந்தது. அந்தக் கடை இருந்த இடத்தையும் அருகிலுள்ள இடங்களையும் சேர்த்து ஒரே இடமாக்கி, அங்கு ஜவுளிக்கடை இருந்தது. இந்த இடத்திற்கு எதிர்த்தாற்போல் ரோட்டில் இருந்த சிறு பிள்ளையார் கோயிலின் மூலம் இந்த இடத்தை நான் அடையாளம் கண்டேன்.

பக்கத்துக் கடைக்காரரிடம் ‘பிரபா எலெக்ட்ரானிக்ஸ்’ கடை பற்றி விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. அந்த இளைஞன் எப்படியோ இலங்கை சென்றிருப்பான் என்று நினைத்துக்கொண்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து என் பிறந்தநாள் வந்தது. அரசாங்க மனநல விடுதிக்குச் சென்று சில உதவிகள் செய்ய ஏற்பாடு செய்தேன். அந்த மனநல விடுதியில் மூக்கில் தையல் போட்ட தழும்பு உடைய ஒரு மனிதனைப் பார்த்தேன்.

***

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

1 Comment

  1. வணக்கம் சார்,

    முகநூலில் சுரேஷ்குமார இந்திரஜித் சார் கடந்த ஒரு மாதமாக எந்த பதிவும் இடவில்லை. குறுங்கதை தொகுப்பு கொண்டு வருவதற்காக தீவிரமாக எழுதி கொண்டிருக்கிறார், என்று கருதினேன். அது சரி தான், என்று அவரது இன்றைய பதிவு உணர வைத்தது.

    அவரது இன்றைய பதிவில் அகழ் இணைய இதழில் 5 குறுங்கதைகள் வெளியான தகவல் இருந்தது. இத்துடன் 40 குறுங்கதைகள் சேர்ந்துவிட்டதாகவும், பதிப்பகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், விரைவில் புத்தகமாக வரும் என்று தெரிவித்திருந்தார்.

    புத்தகமாக வருவதற்கு முன்பு அவ்வப்போது இணைய இலக்கிய இதழ்களில் வெளியான அவரது கதைகளை சுடச்சுட படிக்க கிடைப்பது பேரானந்தம்.

    இன்று வெளியான 5 குறுங்கதைகளில், மனித வாழ்வின் அவலங்கள் முற்றுப்பெறாமல் தொடர்கிறது. அவற்றை படிக்கிற நமக்கே தாங்கி கொள்ள முடிவதில்லை. இது போல் பல்லாயிரம் அவலங்களை கண்ட, கொண்டுள்ள சுரேஷ்குமார இந்திரஜித் சாரின் மனசு கனத்து கொண்டிருக்கும். அவற்றை குறுங்கதைகளாக, புத்தகமாக அவர் இறக்கி வைத்து, ஆசுவாசமடைய வேண்டும். படிக்கிற நாங்கள் பாரம் மாற்றி கொள்கிறோம். பாரம் ஏற்றி கொள்கிறோம்.

    அகழ் இணைய இதழில் வெளியான இந்த 5 குறுங்கதைகளில் …

    ‘பறவையின் வாசனை’ எனும் குறுங்கதையில் வரும் சிறுவன், தன் பால்யத்தில் சந்தித்த குரூரத்தை மறக்கவில்லை. தின்றாலும் போகாது பறவையைக் கொன்ற பாவம்.

    ‘புகைப்படம்’ எனும் குறுங்கதையில் வரும் முதியவருக்கு, தான் படுத்த படுக்கையாக இருக்கையில், தன் மனைவியின் அலட்சியத்திற்கிடையில், தான் மனைவியை சந்தித்த இளமைக்காலத்தை நினைத்து பார்க்கிறார். வீட்டுக்கு வீடு கிடக்கும் பெருசுகள் நிலை இது.

    ‘மறக்க முடியாதது’ எனும் குறுங்கதையில் வரும், கணவனை இழந்த முதியவள் தான் கோமா நிலையில் இருந்தாலும், தன் காதலனை மறக்கவில்லை. காதலியை நினைத்து கொண்டிருக்கும் பலரது கதைகளுக்கிடையில், காதலனை நினைத்த சுரேஷ்குமார இந்திரஜித் சாரின் பதிவுக்கதை இது.

    ‘நினைக்கவில்லை’ எனும் குறுங்கதையில், வரும் வளர்ப்புத்தாய், தான் மகளாக வளர்த்து, ஆளாக்கியவளின் புறக்கணிப்பை, மறக்க முடியாமல் தவித்தவள், இதற்கு தீர்வாக, அவளை மகளாக நினைக்காமல், தன் நினைவிலிருந்து நீக்குகிறாள். இது வாழும் கலையன்றி வேறென்ன?

    ‘தழும்பு’ எனும் குறுங்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரம், தான் சந்தித்த, மூக்கில் தையல் போட்ட தழும்பு உடைய இலங்கை அகதியை, பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்திக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் தற்செயலாக மன நல விடுதி ஒன்றில் நோயாளியாக அந்த அகதியை, அவரின் தழும்பை கொண்டு அடையாளம் காண்கிறார். மறக்க முடியாத தழும்பு. நாம் அவர்களது முதுகில் குத்திய தழும்புகளையும் நினைவூட்டுகிறது.

    இந்தக்கதைகள் மறக்காததும், மறக்க வேண்டியதுமான அவலங்களை கொண்டுள்ளது. மாயாவாதமோ, மந்திரவாதமோ இல்லாமல் யதார்த்தவாதத்தில் எழுதப்பட்ட நெத்தியடி கதைகள். அதில் ஆங்காங்கே பொறி பறக்கிறது.

    எப்பொழுதும் போல் என்னை இன்புற்றிருக்க வைத்த கதைகள். சுரேஷ்குமார இந்திரஜித் சார், அகழ் இணைய இதழ், ஓவியர் ஆகியோருக்கு நன்றி!.

உரையாடலுக்கு

Your email address will not be published.