/

இந்தியாவில் மறுமலர்ச்சி (பகுதி 3) – ஸ்ரீ அரவிந்தர்

தமிழில் : சியாம்

[ இது ஸ்ரீ அரவிந்தர் 15/10/1918 அன்று அவர் நடத்திய ஆரிய மாத இதழில் வெளியான ஆங்கில கட்டுரை. ‘Renaissance in India’ என்ற கட்டுரைத் தொடரில் அவர் எழுதிய மூன்றாவது கட்டுரை. ]

பகுதி-1
பகுதி-2

தற்கால போக்குகளின் ஆரம்பநிலை முயற்சிகளின் உறுதியற்ற குழப்பத்தை ஊடுறுவி, புத்தாக்கம் எடுக்கவுள்ள வடிவங்களை முன்னறிய முற்படுவது  நிச்சயம் பலன் அளிக்காத ஒரு செயல். ஒருவர், ஒரு வாத்தியத்தை சுருதி சேர்ப்பதைக் கொண்டு வரப்போகும் இசையை முன்னறிய முயலலாம். சில திசைகளில் நாம் உறுதியான குறிப்புகளை காண வாய்ப்புள்ளது. ஆனால் இவை ஆரம்பகட்ட குறிப்புகள் என்பதையும் இவற்றுக்கு அப்பால் இன்னும் பல குறிப்புகள் உள்ளன என்பதையும் உறுதியாக எண்ண வேண்டும். அவை, தாம் உணர்த்துபவற்றை கடந்தும் நெடுந்தூரம் செல்லக்கூடியவை. மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அல்லது சிந்தனைக்கும் அறிவியலுக்கும்,  கவிதைக்கும் கலைக்கும் அல்லது சமூகத்திற்கும் அரசியலுக்கும் இது பொருந்தும். எல்லா இடங்களிலும் தற்போது இருப்பது, தொடக்கங்களின் தொடக்கமே. 

என்னவானாலும் ஒரு விஷயம் உறுதியாக தெரிகிறது. இந்தியாவின் கடந்த காலத்தில் அதன் உண்மையான படைப்பாற்றலாகவும் முதன்மையான விசையாகவும் ஆன்மீக உத்வேகம்(motive) இருந்ததுபோலவே எதிர்காலத்திலும் இருக்கப் போகிறது. ஆன்மீகம் என்பதன் மூலம் மீபொருண்மை மனதையும், செயலாற்றாமல் கனவு காணும் போக்கையும் உத்தேசிக்கவில்லை. அவளது உயிர்ப்பான நாட்களில் மகத்தான பழைய இந்தியா அவ்வாறு இருக்கவில்லை – (இதைப்பற்றி எதிர்மறையாக) சில ஐரோப்பிய விமர்சகர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதே போல எதிர்கால இந்தியாவும் அவ்வாறு இருக்கமாட்டாள்.

அவளது மனநிலையில் சந்தேகமின்றி ஒரு வலுவான கூறாக மீபொருண்மை எப்பொழுதும் இருக்கும். அதில் அவளது மகத்தான, தனியுரிமை (sovereign) ஆற்றலை இழக்கமாட்டாள் என்பதை நம்பவேண்டும். மீபொருண்மை அதன் பிரதான அலகுகளில் எப்பொழுதும், ஆன்மீக மெய்யுணர்தலை நோக்கிய ஒரு அறிவுத்திறன்சார் (intellectual) அணுகுமுறையாகவே இருந்துள்ளது. ஆனால் பிற்காலத்தில் அது வாழ்க்கையிலிருந்து நெடுந்தூரம் விலக்கி இட்டுச்சென்றது. ஆனால் அதன் பண்பு இதுவல்ல. மீபொருண்மையின் ஆரம்பகட்ட வேதாந்த உள்ளுணர்வு சார்த வடிவங்களில் அதன் உண்மையான பண்பாக இது இல்லை. அறிவுசார் அசல்தன்மையும் படைப்பூக்கமும் வலுவாக இருந்த காலகட்டத்தை சேர்ந்த கீதையிலும் இல்லை.

வாழ்க்கையின் மதிப்பு மீது சந்தேகப் பார்வையை கொண்டிருந்த தத்துவமாகிய பௌத்தம் கூட தனது அறிதிவுத்திறன் சார்ந்த போக்கிலேயே அதை செய்தது. அதன் அறவியல் மூலமும் ஆன்மீக முறை மூலமும் அது புதிய ஒழுங்கங்களையும் தீவிரத்தையும் மனித வாழ்விற்கு மிதமான இலட்சியவாதத்தையும் அளித்தது. இதன் மூலம் அது கலைகளிலும் சமூகத்திலும் அரசியலிலும் படைப்பூக்கம் மிக்கதாக இருந்தது. ஆன்மாவின் உண்மையை அணுக்கமாக உணர்வது மற்றும் அதைக் கொண்டு வாழ்வை மறுவார்ப்பு செய்வது என்பதும் இந்திய மனதின் பிறப்பியல்பு ஆகும்.

இந்தியாவில் எல்லா மகத்தான இயக்கங்களும் புதிய ஆன்மீக சிந்தனையிலிருந்தும் புதிய மத செயல்பாடுகளிலிருந்துமே தொடங்கி இருக்கின்றன. ஐரோப்பா, அதன் கருத்தியற் கோட்பாடுகளை பெரும்பாலும் சாதாரணமான, சமய தொடர்பற்ற பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிந்தனையிலிருந்து எடுத்துக்கொண்டது. அது   அறிவுத்திறன் சார்ந்த, பகுத்தறிவு சார்ந்த, மத எதிர்ப்புத் தன்மை கொண்டது. அவ்வாறான ஒரு தாக்கம் இந்தியாவில் முதலில் சமய சீர்திருத்தத்திற்கான முயற்சியை ஏற்படுத்தியது.மேலும் அது புதிய சமயங்களின் தோற்றத்துக்கு இட்டுச்சென்றது. இதை விட குறிப்பிடத்தக்க தனிசிறப்புடைய உண்மையாக வேறென்ன இருக்கமுடியும்?

கருத்தியல் மற்றும் சமூக மீள்கட்டமைப்புக்கான முயற்சி எடுக்கப்படுமாயின் அது ஆன்மீக தளத்தில் இருந்தே தொடங்கப்படவேண்டும். மேலும் தொடக்கத்திலிருந்தே சமய உத்வேகமும் வடிவங்களும் கொண்டிருக்க வேண்டும்; இதுவே இந்திய மனதின் பண்பியல்பு. பிரம்ம சமாஜம்(Brahmo Samaj) அதன் தொடக்கத்தில் பன்னாட்டு(cosmopolitan) கருத்தியல் கொண்டதாகவும், அதன் உருவாக்கத்தின்போது பல தரப்பட்ட கருத்துக்களிலிருந்து தேர்தெடுத்துக் கொள்வதாகவும் இருந்தது. அது வேதாந்த தூண்டுதலை இணைத்துக்கொண்டது; புறவயமாக ஆங்கிலேய தனியொருமை (Unitarianism) ஒத்ததாகவும், சிறிதளவு கிறித்துவ தாக்கம் கொண்டதாகவும் இருந்தது; அதிக அளவு சமய பகுத்தறிவுவாதமும் அறிவுத்திறனும் கொண்டதாகவும் இருந்தது. பிரம்ம சமாஜம் வேதாந்தத்தை மீள் வரையறை செய்யும் முயற்சியுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆனால் ஒரு சீர்திருத்த இயக்கம்(protestant movement) என்று சொல்லத்தக்க ஒரு இயக்கம்கூட (பிரம்ம சமாஜம்) தேசிய மரபையும் மனநிலையையும் தொடர்வது என்பது ஆர்வமூட்டிக்கூடிய ஒரு விஷயம்.

சமயம் சார்ந்த இந்திய மனதில் என்றுமுள்ள மூன்று உத்வேகங்கள் என்பவை தியானிக்கக்கூடியதும் (contemplative) தத்துவார்த்தமானதுமான ஞானம், உணர்வெழுச்சி மற்றும் தீவிரமான அன்பும் பணிதலும் கொண்ட பக்தி, செயலூக்கம் மற்றும் நடைமுறை சார்ந்த ஆன்மீக மனநிலை கொண்ட கர்மம். பிரம்ம சமாஜத்தின் மூன்று வளர்ச்சி நிலைகளும் இந்த மூன்று உத்வேகங்களுடன் தொடர்ப்பு கொண்டவையே.

வேத உண்மையின் புதிய விளக்கத்துடனும் பழைய வேத வாழ்வியல் கோட்பாடுகளை நவீன சூழ்நிலைகளுக்கு பொருத்தும் முயற்சியின் மூலமும் பஞ்சாபில் ஆரிய சமாஜம்(Arya Samaj) தன்னை தோற்றுவித்துக்கொண்டது. ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் மகத்தான பெயர்களுடன் தொடர்புகொண்ட இயக்கம் இருந்தது. பழைய துறவையும் மடம் சார்ந்த கொள்கையையும் மீள் உறுதி செய்கிற ஆன்மீக அனுபவத்தையும் பழைய சமய உத்வேகங்களையும் ஒன்றிணைப்பதாக இருந்தது. ஆனால் அது புதிய உயிர்ப்புள்ள இழைகளை தன்னகத்தே கொண்டதாகவும, வலுவான மனிதாபிமானமும் மட விரிவாக்க ஆர்வமும் இணைந்த ஒன்றாகவும் இருந்தது. இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மரபான இந்து மீட்சிக்கான இயக்கமும் தற்போது உள்ளதை விட வலுவாக இருந்தது.

இந்தியாவின் பிற பகுதிகளும் இந்த மகத்தான பிராந்திய சமய இயங்கங்களின் சில அதிர்வுகளை அடைந்தன. அல்லது அப்பகுதிகளிலேயே உண்டான சில சிறிய இயங்கங்களால் பாதிப்படைந்தன. வங்காளத்தில் அதன் சமய மனதின் சமீபத்திய வளர்ச்சியாக நவ வைணவ போக்கு உருவாகியுள்ளது. இது படைப்பூக்க செயல்பாடு இன்னும் தனது பணியை முழுதாக நிறைவு செய்யாததைக் காட்டுகிறது. இந்தியா முழுவதும் பழைய சமயப் பிரிவுகளும் துறைகளும் உயிர்ப்பு பெற்றதாக, செயலூக்கம் கொண்டதாக, மீள் உறுதி செய்வதாக மாறிவருகின்றன. இஸ்லாமியம்(இந்தியாவில்) சமீபத்தில் உண்மையான இஸ்லாமிய கருத்தியல்களுக்கு திரும்புவதற்கு முயற்சி செய்தது. இந்தியாவின் மந்தமான முஸல்மான் திரளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்தது.

ஆனால் இவற்றில் எதுவும் அல்லது இவையெல்லாம் சேர்ந்து கூட முழுமையானதாக இருக்க முடியாது. தனது கடந்தகாலத்தை மீட்டெடுத்து எதிர்காலம் நோக்கித் திரும்பும் இந்திய ஆன்மீக ஆன்மாவின் கண்டடைதலுக்கான தயாரிப்பாகவே இவை இருக்க முடியும். இந்தியா பல மதங்கள் சந்திக்கும் இடம். அவற்றுள் இந்து மதம் தன்னளவில் விரிவான பல பகுதிகள் கொண்ட ஒன்று. அதை ஒரு மதம் என்பதைவிட மகத்தான பல்வேறுபட்ட ஆன்மீக சிந்தனைகள், உணர்தல்கள், நோக்கங்கள் ஆகியவற்றின் நுட்பமான ஒன்றிணைவு என்றே சொல்லலாம். பழைய வடிவங்களின் ஆற்றல் பெரிதும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாம் ஒன்றை கவனிக்கலாம்; வேதாந்தம், வேதம், புராணம், யோகம் மேலும் சமீபத்தில் தாந்திரீகம் ஆகியவற்றுள் ஒவ்வொன்றும் புரிதலுக்கு, பயிற்சிக்கு, சிந்தனையில் வாழ்வில் பயனளித்தலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பண்டைய கருத்துக்களிலிருந்தும் புதிய அனுபவங்களிலிருந்தும்  உண்மைகளும் புதுமையான வடிவங்களும் வெளிவரும் வளர்ச்சி ஒன்று இருந்துள்ளது. முக்கியமாக, எல்லா இடத்திலும் ஆன்மா வாழ்க்கையின் மீது திரும்பும் போக்கை காண்கிறோம். தேசத்தின் புதிய வாழ்விற்கான அடித்தளமாக ஆன்மீக வாழ்வை மறு உறுதி செய்வது என்பது அடையாளம் காணக்கூடிய தாக்கம்.

துறவும் மடம் சார்ந்த வாழ்வும் கூட வெறும் தியானம் சார்ந்ததாக, தன்மையம் அல்லது சமூகத்திலிருந்து விலக்கம் சார்ந்ததாக இல்லாமல் சேவை(missionary) கல்வி சார்ந்ததாக மனிதாபிமானம் நோக்கியதாக இருக்கிறது. மேலும் சமீப காலத்தில் வாழ்க்கை மீதான சிந்தனையாளர்களின் கூற்றுகளும் குறிப்பிடத்தக்கதாக, சுயப்பிரக்ஞை கொண்டதாக நேர்மறையாக இருந்து வருகிறது. இது தற்போதைக்கு எதிர்காலத்தைப் பற்றி குறிப்பிடக் கூடிய மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அநேகமாக, இங்கு தான் இந்திய மறுமலர்ச்சியின் திறவுகோல் உள்ளது. 

மதங்கள், நம்பிக்கைகள், வடிவங்கள் இவை எல்லாம் ஆன்மீகத் தூண்டுதலின்(impulsion) புறவயமான அறிகுறி. மதம் என்பதே அந்த ஆன்மீகத் தூண்டுதல் தன் அகவய விசையை தேடுவதின் தீவிரமான செயல்பாடு தான். இந்தியாவில் ஆன்மீக ஞானம் மற்றும் அனுபவத்தின் அறிவுத்திறன் சார்ந்த வழிகாட்டியாக தத்துவம் இருந்திருக்கிறது. ஆனால் தத்துவார்த்த அறிவுத்திறன் இன்னும் தீர்மானத்துடன் புத்தாக்கத்திற்கான பணியை தொடங்கவில்லை. அதன் சிந்தனையின் நோக்கத்தின் எல்லைகளை வெளிப்படையாவும் துரிதமாகவும் விரியச்செய்யும் புதிய வரையறையை(new statement) உருவாக்குவதைவிட, பழையவற்றை மறு வரையறை செய்வதில் மும்முரமாக இருக்கிறது. ஐரோப்பிய தத்துவத்துடனான தொடர்பு படைப்பூக்க எதிர்வினைக்கு எந்தவிதத்திலும் பயனுள்ளதாக இல்லை. இந்த திசையில்(புத்தாக்கம்) பயனளிக்கும் விதத்தில் பழைய ஐரோப்பிய தத்துவத்தில் சிறிதளவே இருக்கிறது. நீட்ஷே(Nietzsche), பெர்க்சன்(Henri Bergson) மற்றும் ஜேம்ஸ்(James) ஆகியோரின் சிந்தனைகள் ஆங்காங்கு சிலரிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவற்றின் இயல்பு அதிகமாக புறவயமாக நடைமுறை சார்ந்தும் வைடலிசம்(Vitalism) சார்ந்தும் இருப்பதால் அவற்றை இந்திய ஆன்மாவால் உண்மைதன்மையுடன் தன்வயப்படுத்த இயலவில்லை.

உண்மையான இந்தியத் தத்துவம் ஆன்மீக அனுபவத்திலிருந்து வளர்ந்து வர வேண்டியது; கடந்த நூற்றாண்டின் மதங்கள் பொதுமைப்படுத்த உதவிய ஆன்மீக தேடுதலின் விளைவாக இருக்க வேண்டியது. அது ஐரோப்பாவை போல அறிவுத்திறன் வழியாக மட்டுமே அல்லது அறிவியல் சிந்தனை மற்றும் ஞானத்தின் விளைவாக மட்டுமே முளைத்து வரக்கூடியது அல்ல. பெரும்பாலான அறிவுஜீவிகள் இலக்கியம் நோக்கி கவனம் செலுத்தினர் அல்லது தன்வயப்படுத்துதலிலும் நவீன கருத்துக்களை இந்தியத் தன்மையுடையதாக மாற்றுவதிலும் மும்முரமாக இருந்தனர். ஆனால் தற்போது ஒரு வலுவான சிந்தனைப் போக்கு தொடங்கினாலும் அது நிச்சயமற்றதாகவோ அல்லது தெளிவற்ற முன்னறிவிப்பாகவோ மட்டுமே உள்ளது.

இதற்கு மாறாக கவிதையில், கலையில் அறிவியலில் நிச்சயமான தொடங்கங்கள் உள்ளன. வங்காளம் இவற்றின் பிரதானமான சோதனைக் களமாக இருக்கிறது. அல்லது அது சக்தியின் முதல் தொழிற் பட்டறையாக இருக்கிறது; அங்கு தான் அவள் புதிய தாக்கங்களின் உயிர்ப்பை வீசவும் தனது ஆரம்பகட்ட வடிவங்களை தூண்டுதல்களை வளர்த்தெடுக்கவும் முடிவெடுத்துள்ளாள். இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளில் ஆங்காங்கு மேதமை மிகுந்த குறிப்பிடத்தக்க திறனுள்ள தனியான கவிஞரை அல்லது உரைநடை ஆசிரியரை காணமுடிகிறது. ஆனால் வங்காளம் ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த இலக்கியத்தை கொண்டிருக்கிறது. அது தனித்துவ ஆன்மாவும் வடிவமும் கொண்டதாக இருக்கிறது.

நடனமிடும் பெண் – தாகூர்

அசலான, நுண்மையான அழகும் நோக்கும் கொண்ட கலைகள் வங்காளத்தில் உள்ளன. அவளிடம் புகழ் வாய்ந்த இரு அறிவியலாளர்கள் மட்டும் இல்லை. அதற்கு மேலும் உலக அறிவியலில் குறிப்பிட்டதக்க இடத்தை பெறப்போகும்  நம்பிக்கையளிக்கும் ஆய்வுக் குழுவும் உள்ளது. இவ்விடத்தில் இந்திய மனதின் போக்கை அது செல்லும் திசையை நாம் பார்க்க முடிகிறது. முக்கியமாக, பங்கிம்மின்(பங்கிம் சந்திர சட்டர்ஜி) உரைநடையைவிடவும் தாகூரின் கவிதையைவிடவும்  வங்காள ஓவியர்களின் கலை தனிச்சிறப்பு வாய்ந்தது. வங்காள கவிதை தனது வழியை உறுதியாக கண்டுகொண்டதாக தெரியவில்லை, அது தனது வழியை உணர வேண்டும். ஆனால் வங்காள கலை தனது முதல் அடியிலேயே திடீர் உள்ளுணர்வு மூலம் தனது வழியைக் கண்டுகொண்டது.

ஏனெனில் புதிய இலக்கியம் அயல் தாக்கத்தின் காலகட்டத்தில் தொடங்கியது; நிச்சயமற்ற தேடுதலால் ஆனது. அதே நேரத்தில் இந்தியாவில் கலை(ஓவியம்) மௌனமாக இருந்தது- தனது திறனின்மையால் அசல்தன்மையற்ற நிலைக்கு தள்ளப்பட்ட அபத்தமான ரவி வர்மாவின் குறிக்கீட்டை மட்டும் விலக்கிவிட்டால். இந்திய கலை(ஓவியம்) சுய மீட்டெடுத்தலின் தருணத்தில் தொடங்கியது. பிளாஸ்டிக் கலை(இலக்கியம், இசை நீங்கலாக ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை போன்றவை-Plastic art) குறுகிய தீவிரமான வடிவங்கள் மற்றும் நோக்கங்கள் மூலம் தன்னளவிலேயே போதாமைகளை கொண்டது.

தற்போது வங்காள கலைஞர்களின் மொத்த ஆற்றலும் ஆன்மாவையும் மறை பொருளையும் வெளிப்படுத்துகிற விஷயங்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள நேரடியான தேர்விலிருந்தே பிறக்கிறது – மேலோட்டமான அர்த்தத்தை வெளிப்படுத்தும் பொருளுக்கோ வடிவத்துக்கோ பதிலாக. அது உள்ளுணர்வு சார்ந்தது. அதன் வடிவங்களே உள்ளுணர்வின் தாளம். அவற்றுக்கும் உற்றுநோக்கும் அறிவுத்திறன்(observing intellect) உருவாக்கிய நியமங்களுக்கும் தொடர்ப்பு ஏதுமில்லை. அது முடிவிலிக்கான, வெளிப்படுத்த முடியாதவைக்கான தனது  மொழிதல்களை கண்டடைய எல்லைக்குட்பட்டதின் மேல் சாய்கிறது. இதுவே இந்திய கலையின் என்றுமுள்ள உத்வேகம்.  கல்கத்தா ஓவியர்கள் அளித்த தனித்துவமான திருப்பமும் உணர்வும் வங்காளத்தின் பண்பிற்கு நெருக்கமானது. ஆனால் இந்தியா தனது பல தரப்பட்ட பிராந்திய மனங்கள் ஒன்றிணைவதால் மகத்தானவள். அது அவளது கலை படைப்பூக்கத்தின் மீட்சியில் பிரதிபலிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.  

வங்காளத்தில் கவிதையும் இலக்கியமும் இரண்டு வெவ்வேறு படிநிலைகளை ஊடாக சென்று உள்ளன. பண்பை முன்னறிய முடியாத மூன்றாவது படிநிலைக்கு செல்வதற்கான அதன் தயாரிப்புகளை காண முடிகிறது. அது பெரும்பாலும் ஆங்கில மற்றும் ஐரோப்பிய தாக்கத்துடன் தொடங்கியது; புதிய கவிதை மற்றும் உரைநடை வடிவங்களை, இலக்கிய கருத்துக்களை, கலை அளவுகோள்களை(canon) எடுத்துக்கொண்டு தொடங்கியது. அது நகலெடுப்பு படைப்பின் காலகட்டம். அது பல கவிஞர்களை உருவாக்கியது. அதில் ஓரிருவர் மேதைகள். பிறர் கவித்துவ திறன் கொண்டவர்கள். அது வெறும் நகலெடுப்பாக இருக்கவில்லை; அயல் தாக்கங்கள் எல்லா இடங்களிலும் தெரிந்தன. ஆனால் அவை கீழ்படியப்படவில்லை திருப்பிச் செய்யப் படவில்லை(ape); அவை தன்வயப்படுத்தப்பட்டன.

வங்காள மனநிலையும் அதற்குரித்தான அழகியலும் அவற்றை கைப்பற்றின. மேலும் அதன் ஆன்மாவிற்கு ஏற்றாற்போன்ற வெளிப்பாட்டிற்கு தகவமைத்தன. ஆனால் கரு(substance) அதற்குரியதாக இல்லை, அதனால் அதில் வெறுமையைக் காணலாம். வங்காள கவித்துவ வெளிப்பாடு வடிவத்திலும் வெளிப்பாட்டிலும் தனித்துவ நயத்தையம் அழகையும்  தொடக்கத்திலியே அடைந்துவிட்டது. ஆனால் வெளிப்படுத்திய விஷயம் அவ்வளவு பொருட்படுத்தும்விதமாக இல்லை. ஒருவர் சுதந்திரமாக சிந்திக்காமல் அல்லது படைக்காமல், சிந்தனையையும் வடிவத்தையும் தன்வயப்படுத்தும் போது கவிஞரின் இயல்பான ஆற்றலிலிருக்கும் மகத்துவம் இழக்கப்படுகிறது.

அந்த காலகட்டம் முடிந்துவிட்டது, அதன் படைப்புகள் கடந்த கால இலக்கியத்தில் அதற்கான இடத்தை பிடித்துவிட்டன. அதன் படைப்பாளிகள் இருவர்; ஒருவர்(பங்கிம்) உரைநடையை துவங்கிவைத்தவர், குறையற்ற கலைத் திறன் இணைந்த அசலான மனநிலையால் உயர்ந்தவர். இன்னொருவர்(தாகூர்) வங்காளத்தின் உண்மையான ஆன்மாவை வெளிப்பாட்டுக்கு திறந்து வைத்தவர். பங்கிம் சந்திரர் தற்போது கடந்த காலத்தை சேர்ந்தவர். ஏனெனில் இனி வரப்போகும் எந்தவொரு இலக்கியத் தாக்கமும் வங்காளத்தின் புதிய மனதுள் நுழைய போவதைவிட பங்கிம் சந்திரரின் படைப்புகள் அதிகம் நுழைந்துவிட்டன. ரவீந்திரநாத்தின் படைப்புகள் இன்னமும் நிகழ்காலத்தை கைப்பற்றியுள்ளன. ஆனால் இதையும் கடந்து செல்லும் என்று நம்பிக்கை அளிக்கும்விதமாக எதிர்காலத்தின் பாதைகளைத் திறந்து வைத்துள்ளன.

இருவருமே புதிய வடிவங்களில் இந்திய ஆன்மாவிற்கு திரும்புகிறார்கள். இருவருமே விடியலின் குரல்கள், தாங்கள் கண்டடைந்ததைவிட அதிகம் தேடுகிறவர்கள். ஒரு திசையில், தாகூரின் தாக்கத்திலிருந்து விஸ்தரித்து வளரக்கூடிய ஒரு முன்னெடுப்பை தற்போது பார்க்கமுடிகிறது. மற்றொரு திசையில், அதை மறுத்து கூடுதல் தேசிய தூண்டுதலையும் படைப்பையும் வலியுறுத்தக் கூடிய முன்னெடுப்பை பார்க்கமுடிகிறது. ஆனால் இதிலிருந்து வரக்கூடியது என்னவென்று நமக்கு தெளிவாக தெரியாது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்த இயக்கம் புதிய கலையின் செல்திசையை நோக்கியே இருக்கிறது; ஆனால் நெகிழ்வான மொழிதலுடனும் வேறுபட்ட உத்வேகத்துடனும் இருக்கிறது. இதுவரை, நிச்சயமான திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய மொழிதலை உயர்ந்த மேதமை கேட்கும்படி செய்யவில்லை. ஆனால் ஏற்கனவே உள்ள உறுதியற்ற குரல்களில் மகத்தான கற்பனை சார்ந்த உள்ளுணர்வு சார்ந்த இலக்கியத்திற்கான மங்கலான நம்பிக்கையை காணமுடிகிறது.

மனதின் விஷயங்களை பொருத்தவரை எல்லைக்குட்பட்டதாக இருப்பினும் நம்மிடம் தொடக்கங்கள் உள்ளன. ஆனால் தேசத்தின் புறவய வாழ்வில் நாம் நிச்சயமற்ற குழப்பமான நிலையிலேயே இருக்கிறோம். ஐரோப்பிய அரசியல் கருத்துக்களை செயல்முறைகளை மேலோட்டமாக தன்வயப்படுத்தும் நகலெடுக்கும் காலகட்டம் முடிந்துவிட்டது என்பது உறுதியாக தெரிகிறது.

உத்வேகத்தில் தேசியத்தை கொண்டிருக்கும், தேசாபிமானம் கொண்டிருக்கும், பண்டைய மதத்தின் கருத்துக்களையும் தத்துவத்தையும் அரசியலில் பொருத்தும், தேசத்தை தாய் என்றும் சக்தி என்றும் வெளிப்படுத்தும், ஜனநாயக கருத்தை ஆன்மீக சிந்தனையில் ஊன்ற முயற்சிக்கும் ஒரு இயக்கத்தினால் மக்களிடம் ஒரு அரசியல் ஆன்மா எழுந்து வந்துள்ளது. அது சுய வெளிப்பாட்டில் நிச்சயமற்று இருக்கிறது. கடந்தகால மற்றும் நிகழ்கால சூழ்நிலைகளுக்கு எதிராக புரட்சி செய்வதற்கு தன்னைத் திரட்டிக்கொள்வதாக இருக்கிறது. ஆனால் அதன் முன்னேற்றத்திற்குரிய வழிமுறைகளை முன்னெடுப்பதில் அதனால் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் அது மக்களை மேலெழச் செய்தது. அரசியல் சிந்தனையில் திருப்பத்தை உண்டாக்கியது. தேசம் தனது விருப்புறுதியை(will) முழுவதும் கண்டடைந்த பின்பும் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ஆற்றலை போதிய அளவு பெற்ற பின்புமே இதன் விளைவு தெரியவரும்.  

இந்திய சமூகம் இன்னும் குழப்பமான நிலையிலேயே உள்ளது. பழைய வடிவங்கள் சூழ்நிலையின் அழுத்தத்தால் சிதறுண்டு அகல்கின்றன. அவற்றை விட்டு ஆன்மாவும் யதார்த்தமும் வெளியேறுகின்றன. மெதுவான கண்களுக்கே தெரியாத அளவு உடைவு நடக்கிறது, அசைவின்மை என்பதன் மூலமே மங்கலான பாதுகாத்தல் நிகழ்கிறது. வலுவான மறுகட்டமைப்பிற்கான சாத்தியம் ஏதும் தெரியவில்லை. நம்மிடம் பிரகடனங்கள் இருந்தன, அவை பெரும்பாலும் சீர்திருத்த சமாஜங்களுடையவை. அவை மேற்கத்திய முன்மாதிரிகளை கருத்தியல்களை மட்டுமே கவரக்கூடியதாக உள்ளன. சிலநேரங்களில் மேதைகளை மட்டும் கவரும் வகையில். அவை மக்களை முன்னெடுத்துச் செல்லத் தவறுகின்றன. ஏனெனில் அவர்களது ஆன்மாவை புரிந்து கொள்ளமுடியவில்லை, மேலும் அவற்றின் நேர்மையில் குறைபாடு இருந்தது.

நம்மிடம் கல்வி சார்ந்த மற்றும் உணர்வெழுச்சியுள்ள மரபான பழைமைவாதம் இருந்தது. அவை தூண்டுவிசையில்(impulse) ஆழமானவை அல்ல; அவை சொல்லும் வாழ்வின் மகத்தான உண்மைகளில் விசைகளில் ஆழம் இல்லை. தனது பண்பாட்டின் வெளிப்படுத்தப்படாத எதிர்காலத்தை ஒரு தேசம் வெளிப்படுத்துவதற்கான வடிவங்களையும் சமூக கருத்துக்களையும் கட்டாயமாக புதிப்பிக்கவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம். சுதந்திரமான தேசிய வாழ்வின் தொடக்கத்தின் மூலமே மறுமலர்ச்சியின் ஆற்றல் சமூக மனதை, விழிப்படைந்த மக்களின் செயலை கைப்பற்ற முடியும்.

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.