விலை
எத்தனை வேண்டுமோ
அத்தனை
பருகிக் கொள்
ஆனால்
அவன்
கண்களை
மட்டும்
நேருக்கு நேராய்
பாராதே
தன்
பத்து விரல் நுனிகளாலும்
தொட்டு
அக்கணமே
இந்த
பச்சைத் தண்ணீரை
திராட்சை ரசமாக்குகிறவனின்
தொண்டைக்குள்
பற்றி ஏரிந்து கொண்டிருக்கும்
தாகம்
ஒரு நாளும்
அணைவதில்லை
இருளுக்கு செவிகளும் விழிகளும் முளைத்துவிட்டால் அதன் பெயர் வீடு
நீயாக
எப்படி கேட்டாலும்
ஒரு சொல்லும் பேசாமல்
ஊமை போலத்தான் இருக்கும்
நீ
எதுவுமே கேட்காமல்
நிசப்தமாயிரு
இப்போது
மீன் குஞ்சொன்று
துள்ளுவது போல
உம்
உம்
உம்
மட்டும்
கொட்டு
இதோ
தானே
தன்
கருவாய் திறந்து
ஆயிரத்து ஓராவது கதையை
சொல்லத் தொடங்குகிறது
வீட்டுக்கு வெளியே
கடலாய்
ததும்பிக் கொண்டிருக்கும்
அந்த இருளைப் போல
இல்லை
வீட்டுக்கு உள்ளே
ஊறித் தேங்கி நிற்கும்
இந்த இருள்
அதனால் அந்த பொம்மையின்அருகே நான் செல்ல மாட்டேன்
திருகி
முதுகு பக்கமாய்
திருப்பி வைக்கப்படுகிறது
ஒரு பொம்மையின்
தலை
கூடவே
இதுவரை இல்லாத
இன்னுமொரு உலகம்
திருகி வைக்கப்படுகிறது
அந்த தலைக்கு
ஒரே ஒரு சதக்
நெகு நெகுவென
மினுங்கிக் கொண்டிருக்கும்
எந்த ஒரு சிறு கத்தியின்
தீட்டப் பட்ட
கூர் முனையும்
என்னிடம்
ஒரு சொல்லும் கேளாமல்
அக்கணமே
ஒரு ஆப்பிளாக
ஒரு மாம்பழமாக
ஒரு கொய்யாகவாக
ஒரு தர்பூசணியாக
அல்லது
குறைந்த பட்சம்
ஒரு எலுமிச்சையாக
கனிய வைத்து
நிற்க வைத்துவிடுகிறது
என்னை
கடவுளே
நான்
என்ன செய்வேன்?
எந்த ஒரு கணத்திலும்
அது
நிகழ்ந்துவிடலாம்
பயணம் என்பது தரைக்கு மேலே வாழும் கணங்கள்
யாருமே
தரைமீது வாழ்வதில்லை
வாகனத்தின்
பஞ்சு இருக்கைகளின் மேலே
வாழ்கிறார்கள்
குதிரையோ
கழுதையோ
யானையோ
ஒட்டகமோ
ஜீவராசிகளின்
முதுகின் மேலே
வாழ்கிறார்கள்
சக மனிதர்களின்
தோள்களின் மேலே
வாழ்கிறார்கள்
வேறு வழியே இல்லை
என்றாலும்
அவரவர் பாதங்களின் மேலே
வாழ்கிறார்கள்
ஒரு போதும்
ஒருவரும்
தரை மீது வாழ்வதில்லை
வ.அதியமான்
திருவண்ணாமலை அருகேயுள்ள வந்தவாசியில் வசித்து வருகிறார். குடைக்காவல் எனும் முதல் கவிதை தொகுப்பு சால்ட் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
மனதிற்குள் பதிய வைக்கும் நடையில் கவிதைகள் . மிக அருமையான காட்சிபடிமங்கள் திராட்சை ரசமே சொல்லும்
தற்போது தான் அறிமுகமாகியிருக்கிறோம்
நன்றி அதியமான்.
கலியபெருமாள் தஞ்சை.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நண்பா
அருமையான கவிதை
மிக்க நன்றி நண்பரே
மிகவும் அழகிய கவிதைகள். . வாழ்த்துக்கள் கவிஞருக்கு
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்