பிங்க் போய் விட்டான் : மாஜிதா

அவளுக்கு ஒரு சில நிமிடங்களில் புரிந்து விட்டது. அந்த உரையாடலுக்குள் நுழைவதற்காகச் சிரத்தை எடுப்பது தேவையற்றது என்பது. அவன் தயங்கிய குரலுடன்  மொழிபெயர்ப்பாளரை நோக்கி பேசத் தொடங்கினான். கண்களில் எச்சரிக்கையுணர்வு பதிந்திருந்தது. தனது மேற்சட்டையின் இடது பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளஞ்சிவப்பு நிற துப்பட்டாவை அடிக்கடி சரி செய்து கொண்டான்.

மொழிபெயர்ப்பாளர்  அவனைப் பின் தொடராதவர்போல் தனது கைகளில் இருந்த ஆவணங்களைப் புரட்டத்தொடங்கினார். பின்னர் அவனது பேச்சு நின்றதும், அவளை நோக்கி வசனங்களை அள்ளி உதிர்த்தார். அவரின் சொற்கள் அவளுக்குள் வேர்களற்று ஒலித்தன. அவர் கூறிய எதுவும் அவள் மனதில் அர்த்தமாகவில்லை. இதற்கிடையில் மொழிபெயர்ப்பாளரின் கூற்றில் உடன்படாதவன்போல் அவனது  முகம் பொங்கியெழுந்தது. தலையை வேகமாக அசைத்து கைகள் இரண்டையும் விரித்து மொழிபெயர்ப்பாளரை  நோக்கித் திமிறினான்.  கண்களில் விர்ரென்று நீர் திரண்டு புரண்டோடியது. நோ பெட்டா …நோ  பெட்டா … பொறுமையிழந்து  கைகளை நீட்டி சத்தமாகக்  கத்தினான்,  இடையில் அவரும் முகத்தைச் சுழித்து ஏதோ பதிலுக்கு உறுமினார். இறுதியில் அவன் நிலைகுலைந்து  வலிப்பு வந்தவன் போல் நடுங்கிக்கொண்டிருந்தான். அந்த இரைச்சலால் உரையாடல் சிதறுண்டது. அவள், அவன் கண்களை ஆழமாக நோட்டமிட்டாள்.  விழிகளையும் மீறி கண்ணீர் சுரந்து மீசையினை நனைத்திருந்தது.  அழுகை கேவல் ஒலியுடன் அங்குமிங்குமாய் அலைபாய்ந்தது.  உடனே அவள் மொழிபெயர்ப்பாளரிடம்  மென்மையான  குரலில்   தொடர வேண்டாம்,  நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.

இல்ல மேடம் இவர்  மாறி மாறி சொல்கிறார், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதுதான்…. மொழிபெயர்ப்பாளரின் குரல்  நீண்டது.  அவள் மீண்டும் தனது கருத்தினை  வலியுறுத்துவதுபோல் நிறுத்தும் படி கைகளால் சாடை செய்ய அவர் கதிரையைச் சற்று வேகமாகத் தள்ளிகொண்டு எழுந்து அறையிலிருந்து வெளியே சென்றார்.

மொழிபெயர்ப்பாளர் சென்ற பிறகும் அவன் வெற்றுப் பார்வையுடன்  அப்படியேதானிருந்தான். பரபரப்பும் தவிப்பும் அவனை ஆட்கொண்டிருந்தன. அவள் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு தண்ணி குடிக்கிறீங்களா?  அவனது மனதை நிறைக்கும் முயற்சியில் பக்கத்திலிருந்த தண்ணீர் போத்தலைக் காட்டி தணிந்த குரலில் கேட்டாள்.  நீரைப் பருகிய பின்னர் மீண்டும் அவள் முன் வந்தமர்ந்தான். இப்பொழுது அவன் முகம் வாடியிருந்தாலும் உடலில் தெம்பு வந்திருந்தது. 

நீங்க இப்ப ஓகேயா? அவளது கேள்விக்கு அவன் குரல் எழவில்லை.  தலை மட்டும் சிறிதாக அசைந்தது. உங்களுக்கு நான் பேசும் ஆங்கிலம் புரிகிறது தானே? சிறியதொரு புன்னகையுடன்  மீண்டும் தலை ஆடியது. சரி, உங்களுக்கு இந்த மொழிபெயர்ப்பாளர் பிடிக்கவில்லையென்றால்  வேறொருவரை ஏற்பாடு செய்கின்றேன். சரியா?  அவன் முகம் இறுகியது. அவள் குழம்பியவளாய் நான் அமர்த்தும் மொழிபெயர்ப்பாளர் விருப்பமில்லையென்றால் உங்களுக்குத் தெரிந்த யாராவது இருக்காங்களா?  இல்ல ..  ப்ச் அப்போ  எப்படி உங்களது பிரச்சனையை நான் தெரிந்து  கொள்வது? அவள் சோர்வுடன் கேட்டாள். உடனே அவன்  மேசையில் இருந்த அவனது ஜோல்னா  பையை  வேகமாக எடுத்துத்  திறந்தான். உள்ளேயிருந்து ஒரு மங்கிப்போன பிங்க் நிறத் துப்பட்டா, பழைய காகிதத் துண்டுகள் என சிலவற்றினை எடுத்து அவள் முன்னால் அவசரமாக பரப்பி வைத்தான். அவள் சற்று யோசித்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. இவையெல்லாம் என்ன?  மெல்லியதொரு எரிச்சலுடன் கேட்டாள். பேகம்! இந்தப் பொருட்களை கொஞ்சம்   பாருங்கள், ஆங்கிலச் சொற்கள்  ஒன்று சேர்ந்து  கோர்வையாக அவனிடமிருந்து எழுந்தன. பேகம்? என்னுடைய பெயர் பேகம் இல்லை … அவள் கூறி முடிப்பதற்குள், இல்லை  எங்களது வழக்கப்படி படித்த மேல்குடிப் பெண்களை பேகம் என்று அழைப்போம் .. தலையைத் தாழ்த்திக் கூறினான். அவள் ஒட்டுதலற்ற சிரிப்புடன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கண்களைச் சுருக்கி பரப்பி வைக்கப்பட்டிருந்த துப்பட்டாவைத் தயங்கிய படி மேய்ந்து பார்த்தாள். கைத்தறியால் நெய்யப்பட்டிருந்த அந்தத் துப்பட்டா சற்று பழமையானது, பல நூறு தடவைகள் கைகளால் புரட்டியும் பார்த்தும் நிறம் மங்கி  முதுமையடைந்திருந்தது. யாரோவொரு பெண்ணின் குரல் உள்ளே ஒளிந்திருப்பதுபோல் இருந்தது. பின்னர் அந்தப் பழைய காகிதங்களைப் புரட்டிப் பார்த்தாள். அதில் ஒன்றில்  1975ல் பங்களாதேஷிலிருந்து லண்டனிற்கு வந்த விமானத்தில் வந்த பயணிகள் பற்றிய தகவல்கள். அத்துடன் சேர்த்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பற்றிய குறிப்புகள்.  இந்தத் துப்பட்டா யாருடையது? காகிதத்தில் இருக்கும் தகவல்கள் என்ன?

என் அம்மா… அவன் பதில் கேவலுடன் உருக்கமாக ஒலித்தது. அவள் கொஞ்சம் இளகி அவனைப் பார்த்தாள். அவளது இறுக்கத்தினை மேலும் கலைப்பதுபோல்  அவன் எழுந்து  இந்தத் துப்பட்டா எனது அம்மா நெய்தது. அவங்களுக்கு பிங்க் நிறம் மிகப் பிடிக்கும். அதுவும் கைத்தறி நெய்வதில் ஆர்வம் அதிகம். இது நான் மலர்ந்த படி கூறினான்.         

ஓஹ்! நல்லது, புன்னகையுடன்  மீண்டும் அந்தத் துப்பட்டாவை  ஊடுருவினாள். நல்ல உறுதியான நூற் பந்துகளால் பின்னப்பட்டது போல் இருந்தது. அதன் முடிச்சுக்கள் சீராக இலை வடிவத்தில் கட்டப்படிருந்தன.  அந்தத் துப்பட்டாவை  துழாவிக் கொண்டிருக்கும் வரையிலும்  அவனிடமிருந்து ஒரு சொல்லும் எழவில்லை.

மன்னிக்கவும்,  இந்தத் துப்பட்டாவை  வைத்துக் கொண்டு என்ன செய்வது? எனக்கு உங்களது பிரச்சனை என்னவென்று தெளிவாக விளங்க வேண்டுமே?  உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேச முடியாதல்லவா? உங்களது  தேவை என்னவென்று  தெரியாமல் நான் எப்படி உதவ முடியும். எப்படியாவது ஒருத்தர் நம்மிருவருக்கிடையில் அமர வேண்டும். அவள் கூறி முடிக்கும் முன்னரே அவன் இடைமறித்து  இவற்றினைப் பற்றிக் கூற  என்னால்  முடியும், எனக்கு ஆங்கிலமும் கொஞ்சம் பேசத் தெரியும்,  தான் பேசுவதற்கான தகுதியைப் பெறுவதற்காகக் கைகளைத் துப்பட்டாவின் முன்னால் உந்திச் செலுத்தி  சில ஆங்கிலச்  சொற்களையும்  சேர்த்துக் கூறினான்.  

அவன் என்ன சொல்ல வருகின்றான் என்று அவளுக்குத்  தெரியவில்லை. அவனால் எல்லாவற்றினையும் முழுமையாகக் கூற முடியுமா? அவளுடைய அனுபவ ரேகையிலிருந்து  எந்தவொரு சித்திரமும் வெளிவரவில்லை.  சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு பலவீனமாக சரி என்றாள்.  ஆனால் அவளது முகம் முழுமையாக நிராகரிப்பது போல்  இருந்தது. 

அவன் முழுக்கவனத்துடன் தனது குரலை சரியாக்கிக் கொண்டு பேகம்!  சிலேய்ட். வங்காள நாட்டின் வட பகுதியில் உள்ளது. அவசரமாக பக்கத்திலிருந்த கடுதாசியொன்றில்  வங்காள நாட்டினை மேலோட்டமாக வரைந்து அந்த இடத்தினை அடிக்கோடிட்டு காட்டினான். அப்படியென்றால் இந்தியாவின் எல்லையில் அமைந்துள்ளதா? ஆமாம், அஸாம் மாநிலத்தின் அருகில். என்னுடைய கிராமத்தின் பெயர் சிண்டா பஸார். சிலேய்ட் விமான நிலையம் அருகில் உள்ளது , அவனது வலது கை குரலுடன் சேர்ந்து விமானமாக பறந்தது. எனது கிராமத்தினைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள், காலையில் எழுந்ததும்  தேயிலைச் செடியின் இலைகளை அள்ளி கசக்கி நுகர்ந்தால் புதுவித உற்சாகம் கிளம்பிவிடும். கூறும் பொழுது  அவனது மூக்கின் நுனியில் தேயிலைக் கொழுந்துகளை வைத்திருப்பது  போல்  கண்களை மூடி உள்ளேயிழுத்து உடம்பை முறித்துக் கொண்டான்.  எங்களைக்  கடும் குளிரோ வெயிலோ  தாக்குவதில்லை. பனியுடன் ஒன்றரக் கலந்த வெளிச்சத்தின்  மௌனம்  தேயிலைத் தோட்டங்களை மூடியிருக்கும். அவனது முகபாவத்தில் சூரிய ஒளியின் மிருதுவான வெம்மை பளிச்சென்றிருந்தது.  

வாவ்! அற்புதம் நாடியில் கைகளை நிறுத்தி உச்சுக் கொட்டினாள். அவளது மனதில் இணக்கம் திரண்டு முகத்தில் ஆர்வம் கிளம்பி வந்தது. துப்பட்டா  அவனது கைகளுக்கு வந்து சேர்ந்ததும் வித்தைக்காரனின் கையிலிருக்கும் தொப்பியைப் போல உணர்வுக் கிடங்கைக் கிளர ஆரம்பித்தான். அவனது கண்களின் நர்த்தனத்தில் காலம் ஒழுகிக் காட்சியாக விரிந்தது. அவன் காட்சிகளுக்குள் இறங்கிச் சென்றான்.  சொற்கள் சுருங்கி அவனது உடலின் மொழி மட்டும் கலவையாக மாற ஒளி பெருகி ஓடியது. அவள் பரீட்சயமான நிழலைப் போல் அவனைப் பின்தொடர்ந்தாள்.

பேகம்  எனது அம்மாவின் சொந்த ஊர் ஸூர்மா நதியின் அருகில் அமைந்துள்ளது. 

வங்காள நாடு என்றாலே நதி என்று தானே அர்த்தம். 

ஆமாம் எப்பொழுதும் எங்களைச் சுற்றி ஆறுகளும் நதிகளும் ஓடிக்கொண்டிருக்கும்.   அம்மாவின் அப்பா ஒரு மீனவர். ஒரு தடவை அவர் மீன்பிடிக்கச் செல்கையில்  நதியில் படகு புரண்ட பொழுது நீரில் மூழ்கி மரணித்துவிட்டார் . அதன் பின்னர் தான் அம்மாவும் அம்மம்மாவும் சிண்டா பஸாரில் குடியேறினார்கள். அப்பொழுது அம்மாவுக்குப் பத்து வயது. சிண்டா பஸாரிற்கு வந்த பின்னர் வருமானம் எதுவும் இருக்கவில்லை. 

ஆகையால் அவளால் பாடசாலைக் கல்வியைப் பின்தொடர முடியவில்லை. அம்மம்மாவுடன்  தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கச் சென்றாள். தேயிலைத் தோட்டத்தில் யாரும் வெறுமனே வேலையை மட்டும் கவனிப்பதில்லை. பாட்டு குழைந்து வரும்பொழுதுதான்  உற்சாகம் கண் திறக்கும். ஒவ்வொரு கைகளுக்கும் தனித்துவமான ராகமும் பல்லவியும்  உண்டு.   அம்மாவிற்கு அப்பொழுதிலிருந்தே பாட்டும் நடனமும் கைவந்தன. 

அவனால்  பின்னர் அமைதியாக இருக்க முடியவில்லை. 

அதே அதர குஞ்சே  அஸ்வே புஞ்சி கிருஷ்ண காலோ தோரா அதே காலொரு குஞ்சே  அஸ்வே புஞ்சி……….    

தே அதர குஞ்சே  அஸ்வே புஞ்சி கிருஷ்ண காலோ தோரா…..

அவள் அப்பாடலுக்குள் நுழைந்துகொண்டவள் போல் கிருஷ்ணா? என்றாள். ஆமாம் .. கிருஷ்ணா- ராதா காதல் பற்றியது தான். இது சிலேய்ட்டிற்கே உரிய  நாட்டுப்புறப் பாடல். டமாய்லி என்று அழைப்பார்கள். பொதுவாக எங்களது காதல் பற்றிய எல்லாப் பாடல்களிலும் கிருஷ்ண ராதாவிற்கு முதன்மை இடம் உண்டு. எனது ஊர்ப் பெண்களுக்கு ராதா என்றாலே தனிப் பிரியம். தங்களை மறந்து பாடுவார்கள். அம்மாவும் ஒரு காலத்தில்  ராதையாகத்தான் இருந்தாளாம். 

அவள் சிரித்துகொண்டு  ஓ.. அப்படியா? யாரந்த கிருஷ்ணன். 

அம்மா வேலை செய்த தோட்டத்து சொந்தக்காரரின் மகன். அங்கேதான் அவளது காதலும் பிறந்தது. அவளது காதலனின் வீட்டில் யாரும் அம்மாவை விரும்பமாட்டார்கள் தானே?

 ஏன் விரும்பமாட்டார்கள்? 

அம்மா குலாம் இனத்தைச் சேர்ந்தவள். அவளின் காதலன் ஜொமிர்தர். அவர்கள் நிலச் சுவாந்தர்கள். அதனால் திருமணத்திற்கு ஒத்துவரவில்லை. அம்மா கர்ப்பமடைந்தாள். அதனை அறிந்த அவளது காதலனின் பெற்றோர் அவனுக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர்.

பாட்டியும் உறவினர்களும் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கலைக்கும்படியும் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும்படியும்  அம்மாவினை வற்புறுத்தினார்கள். ஆனால் என்மீது கொண்ட பற்றுதலால் அம்மா மறுத்து விட்டாள்.  சில மாதங்களில் நான் பிறந்தேன். கூறுகையில்  அவன் கண்களில் ஈரம் படிந்திருந்தது. 

பின்னர்  என்ன நடந்தது. அவள் கேட்டபொழுது சற்று பம்மி  ஏதோவொரு பாடலை அவன் முணுமுணுப்பது போல் வாய் அசைந்தது. 

அம்மா பின்னர் தேயிலைத் தோட்டத்திற்குச் செல்லவில்லை. என்னை அம்மம்மாவின் பராமரிப்பில் விட்டு டாக்காவிற்கு வேலை தேடி வந்தாள். அதன் பின்னர் தான் அவளது வாழ்க்கை வேறொரு வடிவத்திற்குள் சென்றது. கூறும் பொழுது அவன் முகம் மாறி விட்டது.  சில நிமிடங்கள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தான். 

பின்னர் மேலும் தொடர்ந்தான். அம்மா, பலரது வீடுகளுக்குச் சென்று நடனமாடி மகிழ்வித்தாள். அத்துடன் நெசவுத்தொழிற்சாலைக்குச் சென்று துணி நெய்யத் தொடங்கினாள்.  அவளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. வசதி படைத்த  ஆண்கள் பலர்  அவளைத்தேடி வந்ததாக அம்மாவுடன் நடனமாடிய பல பெண்கள் கூறியிருக்கின்றார்கள். சில வேளைகளில் பாட்டியையும்  என்னையும்  பார்க்க சிலேய்ட்டிற்கு  அம்மா வந்து போவாள். அம்மா என்னிடமிருந்து விலகியிருந்தாலும் அவளது அன்பு மிக அருகாமையில் இருந்தது. அவனது கைகள் மீண்டும் அந்தத் துப்பட்டவினைத் தொட்டு மீண்டன. அம்மா இறந்து விட்டாளோ என அவள் உணர்ந்து கொண்டிருக்கையில் அவனது கைகள் மீண்டும் சிறகுகளாக விரிந்தன. பேகம்  அம்மா லண்டனுக்கு வந்தாள். 

எப்படி? எங்கே வந்தாள்? அவனது வரலாற்றினை மேலும் கிளரத்  தொடங்கினாள். 

பேகம்  1971 ல் பங்களாதேஷ் தனது விடுதலைக்காக மேற்கு பாகிஸ்தானுடன் போரிட்டது தெரியும் தானே. அதன் முடிவில் பங்களாதேஷ் தனி நாடாக மாறினாலும் வறுமை மேலிடத் தொடங்கியது. வேலைவாய்ப்புத் தேடி அதிகமான ஆண்கள்  லண்டன் நோக்கிக் கப்பலில் பயணமானார்கள்.  அதில் பெரும்பாலானோர் சிலேய்ட்டைச் சேர்ந்தவர்கள்.  அவ்வாறுதான்  எனது அம்மா லண்டன் வந்தாள். 1978ல் தனியாக லண்டன் புறப்பட்டாள் என்று தான் எனது பாட்டி கதை சொல்வாள். ஆனால் சிலர், அம்மா டாக்காவினைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு லண்டன் போனதாகக் கூறினார்கள். அவன் இன்னும் ஏதோ சொல்வதற்கு முயன்று பின்னர் மூச்சினை இழுத்து அடக்கிக் கொண்டான். இடையில் நின்ற திரைப்படம் போல் அவனது அமைதி அவளை பொறுமையிழக்கச் செய்தது. அம்மா லண்டன் வந்தாளா?  

ஆமாம், அம்மா லண்டன் வந்தது எனக்குச் சில மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. அதுவரை டாக்காவில் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்று தான் நினைத்திருந்தேன். சடாரென்று அவனுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அம்மா எப்படி என்னை விட்டுப் பிரிந்தாள்? இவ்வளவு காலமும் எந்தவித தொடர்பும் இல்லாமல் எங்கே வாழ்கின்றாள்? நான் அவளைப் பார்த்தே ஆக வேண்டும். அழுகைக் குரலுக்கிடையில் அவன் மனம் மேலும் மேலும் உணர்ந்து தனக்குத்தானே பேசிக் கொள்வது போல் கூறிக் கொண்டேயிருந்தான். சில நிமிடங்களில் அந்த அலைக்கழிப்பை அவனாகவே  விடுவித்துக் கொள்வது போல் கண்ணீரைத்  துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு உற்சாகமானான். 

அம்மாவினைப் பற்றி நினைவுகள் எழுகையில் நான் இடைவிடாது தேடிக்கொண்டே தான் இருந்தேன். சில வேளைகளில் எனக்கு மன உளைச்சலும் ஏற்பட்டது. டாக்காவில் ஒரு தடவை எதேச்சையாக ஒரு உணவகத்தில் அம்மாவின் வயதினை ஒத்த ஒரு பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் அம்மாவைத் தேடிக்கொண்டிருப்பதை நான் கூற அவரே என்னுடைய முக அடையாளத்தினையும்  வைத்து நீ குஞ்ஜாரியின் மகனா என்று கேட்டார். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் 1970 களில் டாக்காவில் இருந்த ஒரு ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கத் தலைவரைச் சந்தித்தேன். அவரிடம் இருந்து தான் இந்த செய்தித்தாள் கிடைத்தது. அதாவது 1975ல் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக லண்டனுக்கு விமானத்தில் வந்த தொழிலாளர் பட்டியல். பேகம் இதோ பாருங்கள். இந்தப் பட்டியலில் எல்லாம் ஆண்கள். அம்மா மட்டும் தான் ஒரேயொரு பெண். குஞ்ஜாரி. அவள் அந்தக் கடுதாசியைப் பிரித்துப் பார்த்தாள். ஆமாம். அவன் கூறிய அந்தப் பெயர் இருந்தது. 

அப்பொழுது அவள் அவனது துப்பட்டாவையும்  எந்தவித சம்பந்தமுமில்லாமல் ஊன்றிக் கவனித்தாள். அது ஒரு கைக்குழந்தையைப் போல அவனது தோளில் தொங்கிக்கொண்டேயிருந்தது. அந்த இளஞ்சிவப்பு துப்பட்டா வங்காள நாட்டிற்கே உரிய நெசவுத் தறியால் நெய்யப்பட்டிருப்பது போல் தோன்றியது.  இந்தத் துப்பட்டா அழகா இருக்கு. காரணமேயின்றி அவள் கூற அவன் நெகிழ்ந்து ஓ இதுவா, எப்பொழுதும் அணிந்து கொள்ளும் பழக்கம் உண்டு.  அதுவும் பிங்க் கலர் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். குரலை வெட்கமாக ஆக்கிக்கொண்டான். 

உங்களுக்கு பிங்க் நிறம் பிடிக்குமா? ஆச்சரியமா இருக்கே?  பரவசத்துடன் கேட்டாள். 

ம், ஏனென்றால் என்னோடு இருக்கும் பெண்கள் எப்பொழுதும் பிங்க் நிற ஆடைகளைத்தான் அணிவார்கள். அவர்களின் உடை, பாவனைகளைப் பார்த்ததும் பிங்க் நிறத்தின் மீது எனக்கும் ஆசை வந்தது. அதனைக் கூறுகையில் அவனுடைய முகத்தில் வெட்கம் சொக்கி நின்றது. பெண்களா? யார் அவர்கள்?  அவன்மீது இருந்த கண்களை எடுக்காமல் கேட்டாள். 

டாக்காவிற்கு  எனது அம்மாவைத் தேடிச் சென்ற பொழுது அம்மா அங்கு இல்லை என்று அறிந்த பொழுது, மீண்டும் சிலேய்ட்டிற்கு திரும்பிச் செல்ல நான் முயற்சிக்கையில் அம்மாவின் தோழி ஒருத்தர் தனது வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்கும் படி வேண்டிக் கொண்டார். அவருடைய வீட்டில் நிறைய பெண்கள் இருந்தார்கள். எல்லோரும் அதிகமாக பிங்க் நிற ஆடைகளை அணிவார்கள். உதட்டுச்சாயம் முகப் பவுடர் எல்லாமே பிங்க் தான். ஆண்களை மகிழ்விப்பது தான் அவர்களது தொழில். சில நாட்களில் அந்தப் பெண்களுடன் நானும் ஒன்றாகிப் போனேன். பின்னர் நான் சிலேயிட்டிற்குத் திரும்பவில்லை. அங்கே ஒரு தரகராகத் தொழில் புரிந்தேன்.  வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அந்தப் பெண்களுடன் வாழ்வது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அப்படித்தான் பிங்க் என்னுள் அலைபாய்ந்தது. பிங்க் அணியும் பொழுது நதியின் முன்னால் நின்று சுவாசிக்கும் காற்றைப்போல் உற்சாகம் கிளம்பி வரும்,  அவன் தளர்ந்தபடி கூறி முடிக்கையில் அவனை மீண்டும் ஒருமுறை புன்னகையுடன் பார்த்தாள். கண்களும் உதடுகளும் தழைந்து பெண்மையின் தோற்றம் அவனில் படிந்திருந்தது. கன்னங்கள் பிங்க் நிறத்தில் பளிச்சிட்டன.    

அது சரி,  இப்பொழுது  உங்களது அம்மாவைத் தேடுவதற்கு என்னிடமிருந்து என்ன வகையான உதவி தேவைப்படுகிறது. பேகம்! உங்களுக்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ் லேன் தெரியுமா? சட்டென்று எழுந்த அவனது கேள்வியில் சில கணங்கள் அவள் உறைந்து நின்றாள். ஆ…. தெரியும். மோனிகா அலியின் நாவலைத் தழுவிய படம், பார்த்திருக்கிறேன். மேலும் தொடர்ந்தாள்.  ஆமாம் லண்டனின் பிரிக்ஸ் லேனில் குடியேறிய வங்காள நாட்டவர் பற்றியது. அவள் மிகுந்த ஆவலுடன் படத்தினைப் பற்றி சொல்ல அவன் தீவிரமாக அவளது கூற்றுக்களைக் கவனிப்பதுபோல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  பின்னர் தன்னை விடுவித்து பேகம் எனது அம்மாவும் பிரிக்ஸ் லேனை அண்டிய பகுதியில் தான் இருக்கின்றாள் என்று நம்புகிறேன். ஏனெனில் சிலேய்ட்டிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலானோர் பிரிக்ஸ் லேனில் இருப்பதாக அறிந்தேன். அப்படியென்றால் அம்மா அங்கேதான் இருக்க வேண்டும். உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் தேடிப்பார்க்க வேண்டும். பேகம்! அவன் மீண்டும் ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான். ம்ம் .. கூறுங்கள், எனக்கு டாக்காவிலும் எனது தொழிலை சரி வர செய்ய முடியவில்லை. அங்கே நிறைய நெருக்கடிகள். நான் செய்யும் தொழில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் போலீஸ் நெருக்கடி, முல்லாக்களின் தாக்குதல் இத்தியாதிகள்.  

எனவே என்னால  டாக்காவில் நிம்மதியாக வாழ முடியவில்லை. நான் ஆறு மாதம் விருந்தினர் வீசாவில் தான் லண்டன் வந்துள்ளேன். இப்பொழுது நான்கு மாதங்கள் முடிந்து விட்டது.  ஏற்கனவே நான் இரண்டு சட்டத்தரணிகளை நாடினேன். அவர்கள் யாரும் என்னுடைய பிரச்சனையைப் புரிந்து கொள்ளவில்லை. எனது கதையை இவ்வளவு நேரம் நீங்கள் பொறுமையாக இருந்து கேட்டது போல் அவர்கள் கேட்கவில்லை. ஏதோ வேற்றுக் கிரகவாசியின் வினோதம்போல் என்னைப் பார்த்தார்கள். தயவுசெய்து எனக்கு உதவுங்கள் பேகம். நீங்களும் கை விட்டால்… எனது உயிர் பிரிந்து விடும்…அவனது குரல் ஓங்கி அடிப்பது போல் தீவிரமாக எழுந்து அழுகையுடன் அடங்கியது.   

அவள் அதிருப்தியுடன் வெறுமனே அவனைப் பார்த்தாள்.  பின்னர் அவனது கண்களை அமைதியாக அணுகி உன்னுடைய அம்மா பிரிக்ஸ் லேனில் இருக்கின்றாள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது. இவ்வளவு பெரிய நாட்டில் அவள் எங்கு வேண்டுமென்றாலும் இருக்க முடியும். அது மட்டுமில்லாமல் அவள் உயிருடன் இருப்பவளாக இருந்தால் இப்பொழுது அவளது வயது எழுவதைத் தாண்டியிருக்கும். அவள் உயிருடன் இருக்கின்றாளா இல்லையா என்பதே தெரியாமல் எங்கே போய் தேடுவது?  அவளது வார்த்தைகள் அவன் காதுக்குள் இரைந்து கொண்டிருந்ததே தவிர மனதால் ஒன்றியிருக்கவில்லை. பிடிவாதமாக அவனது அழுகைக் குரல் போராடத் தொடங்கியது.  

அவள் சற்று நிதானமாக யோசித்து விட்டு சரி, உன்னுடைய அம்மாவைத் தேடுவது உனது பொறுப்பு. நான் வீசாவை மாற்றித்தர முடியுமா எனப் பரிசீலிக்கிறேன். அவளது இணக்கமான குரல் கேட்டு  அவன் தணிந்தான். விருந்தினர் வீசாவை மாற்ற முடியாது. நீ பிறிதொரு வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். வேறொரு வீசாவா? எப்படி பேகம்? உனக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அகதி மனுக்கோரிக்கை அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். பிங்க் துப்பட்டா தோளிலிருந்து சரிவதற்குத் தயாராக, அதனை கெட்டியாகப் பிடித்து மீண்டும் சரி செய்து கொண்டான். 

அவள் மீண்டும்  மனதிற்குள் எல்லாவற்றினையும் தொகுத்துக் கொண்டு விளக்கிக் கூற முற்பட்டாள். இவை சம்பந்தமாக இன்னொரு நாள் என்னைச் சந்தித்து நீ உரையாட வேண்டும். முதலில் இந்த அகதி விண்ணப்பத்தினை அவசரமாக அனுப்ப வேண்டும்.

ஆனால் பேகம் … எனக்கு நீங்கள் இன்னுமொரு உதவி செய்ய வேண்டும் 

என்ன? சொல்லு? 

பிரிக்ஸ் லேனுக்கு என்னுடன் ஒரு தடவை வர முடியுமா?  அவனது கேள்வியால் அவள் துணுக்குற்று எதற்கு நான் வர வேண்டும்? இல்ல .. சும்மா .. சில இடங்களினைப் பார்க்கையில் அம்மாவையும் தேடிப்பார்க்கலாம் .. அவனுடைய கோரிக்கை அவனுக்கே கொஞ்சம் அபத்தமாக இருப்பது போல் உடலை நெளித்து நின்றான். 

அவள் தன்னைக் கொஞ்சம் அடக்கிக்கொண்டு இங்கப்பாரு நான் ஏற்கனவே உன்னிடம் கூறி விட்டேன். சட்டரீதியாக மட்டும் என்னால் உன்னுடைய வீசா சம்பந்தமாக உதவி செய்ய முடியும். ஏனைய அனைத்தும் உன்னுடைய பொறுப்பு. எனக்கு நிறைய வேலை இருக்கு. வருகின்ற புதன்கிழமை காலை பத்து மணிக்கு என்னை வந்து மீண்டும் பார். அந்த உரையாடலை முடிக்க முற்பட்டாள். அவன் நன்றி கூறி தளர்ந்த நடையுடன் சென்றான். 

காலையில் உன்னுடைய அறையில் ஒரே பாட்டும் கலவரமுமா இருந்துச்சி போல? இரவு உணவிற்கு அமர்கையில் ஜெக்ஸன் சாதரணமாகக் கேட்டான். அவள் சிறு புன்னகையுடன் ஆ .. பிங்க் என்றாள். பிங்க்? புதுப் பெயரா இருக்கே? கையிலிருந்த பியர் கோப்பையை எடுக்காது அவளைப் பார்த்தான். ஆமாம், புதுசா ஒரு வாடிக்கையாளர். பங்களாதேஷ், அம்மாவைத் தேடி விருந்தினர் வீசாவில் வந்திருக்கான். ஆனால் அது சாத்தியமில்ல. வீசாவை மாற்றனும். உணவுத் தட்டினைப் பார்த்த படி கூறி முடித்தாள். ஓஹ் .. ஜெக்ஸன் உரையாடலை நீட்ட முற்பட அவனுக்கு ஆங்கிலம் முழுசா பேசத் தெரியாது. ஆனால் பாட்டு, சைகை என எல்லாவற்றினையும் ஒன்று திரட்டி அவனது கிராமம், பூர்வீகம், அம்மா இத்தியாதிகளை விபரமாக விளக்கினான். தோளில் எப்பொழுதும் ஒரு பிங்க் துப்பட்டா போட்டிருக்கான், பிங்க் கலர் அவனுக்கு விருப்பமாம். நல்லதொரு சுவாரஸ்யமான ஆள் .. 

ஏன் மொழிபெயர்ப்பாளர் வரவில்லையா? ஜெக்ஸன் தொடர்ந்தான். 

ஆ… மொழிபெயர்ப்பாளர் வந்தார். ஆனால் அவனுக்கு பிடிக்கல. பின்னர் நான் அவரை அனுப்பி விட்டேன். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் ஓரளவு தெரியும். அவனுடைய விவரிப்பினை வைத்து நானும் புரிந்து கொண்டேன்.   

ஆனால், முறையான மொழிபெயர்ப்பு இல்லாமல் ஒருத்தரின் பிரச்சனையை எப்படி அடையாளம் கண்டு கொள்ளலாம்? நடனம், பாட்டு இதெல்லாம் வைத்து என்ன செய்வது? ஜெக்ஸன் பாவனை செய்து எழுப்பிய  கேள்வி அவளுக்குள்ளிருந்த எதையோ உசுப்பி  விட்டது போல் இருந்தது.   

இங்கப்பாரு ஜெக்ஸன், எல்லாவற்றினையும் நேர்கோட்டில் வைத்து பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதற்கு மொழிபெயர்ப்பு என்பது வெறுமனே ஒரு செயற்கையான முறை. அதில் பலாபலன் இல்லாமலில்லை. ஆனால் அதன் மூலம் ஒருவரின் உணர்வுகளைக் கடத்த முடியாது. ஒரு சிறிய குறிப்புத்தான் கிடைக்கும். ஆனால் இப்படியொரு ஒரு உரையாடல் மூலம் ஒருத்தரின் முழு வாழ்க்கையையும் வாசித்து விடலாம். பிங்க் மாதிரி ஆட்களோட அக உலகம் நமக்குப் புரியணும் என்றால் நம்முடைய மனம் ஒரு கண்ணாடி மாதிரி இருக்கணும். அப்பொழுதுதான் அவர்கள் சொல்ல வருகின்ற அந்த உலகத்தில் நுழைய முடியும். கணினி மாதிரி மூளை இருப்பவர்களுக்கு இந்த ரசனை வராது. இந்தக் கூற்று எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். அவள் தன்னையும் மறந்து மிகவும்  உருகிப்  பேசினாள். ஜெக்ஸன் அவள் கூற்றினைப் புறக்கணிப்பவன்போல்  உதட்டினை நெளித்து பியரைப் பருகினான். ஜெக்ஸனின் சைகை அவளை மேலும் வெறுப்பேற்றியது. ஆனால் அவள் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை . தனது முகத்தினை இயல்பாக மாற்றி ஜெக்ஸன் உன்னை நான் காதலிக்க விரும்பியதும் உன்னுள்  மறைமுகமாக இருக்கின்ற கலையை வைத்துத்தான். எப்படி என்று யோசிக்கின்றாயா? உனக்கு ஞாபகம் இருக்குதா? நம்முடைய அலுவலகத்தில் நடைபெற்ற வருடாந்த கூட்டத்தில் நீ பாடிய பாட்டினைச் சிலாகித்து  நான் உனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. அதன் பின்னர் தானே நாம் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம்.  மற்றபடி நீ ஒரு சராசரி பிரித்தானியர், பேசும் ஆங்கிலம், உனது அந்தஸ்து இதெல்லாம் என்னை எதுவும் செய்யவில்லை. ஜெக்ஸன் அதிர்ச்சியடைந்தவன் போல்  அவளது கண்களைப் பார்த்தான். அவள் மிக மென்மையாக ஜெக்ஸனை நோக்கிப்  புன்னகைத்தாள். என்னை மன்னித்துக் கொள் என்று கூறி அவளை அணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தான். 

அவள் கூறிய படி அகதி விண்ணப்பத்திற்கான அனைத்து தகவல்களுடன்  அவளைச் சந்திக்கக் காரியாலயத்திற்கு அவன் வந்திருந்தான். அவள் அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவனுடன் உரையாடத் தொடங்கினாள். பாதுகாப்புத் திணைக்கள அலுவலகர் அவனை நேர்காணல் செய்கையில்  எக்காரணம் கொண்டும் அம்மாவைத் தேடித்தான்  வந்திருப்பதைக் கூறக் கூடாது என்பதை அழுத்திச் சொன்னாள். ஆனால் அவன் அவளின் கூற்றுகளைக் கூர்ந்து நோக்கவில்லை. பார்வையை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தான். ஏன்? நான் கூறுவது எதுவும் உனக்கு புரியவில்லையா?  அவள் கேட்க,  பேகம்! நான் அகதி வீசாவை விண்ணப்பிக்கும் முன்னர் ஒரு தடவை சென்று வர வேண்டும். அவள் சற்று கோபமாக அவனைப் பார்த்தாள். இல்ல பேகம், எனது அம்மாவின் நினைவுகளில் ஏதோவொன்று பிரிக்ஸ் லேனில் இருப்பதாக உள்மனம் சொல்லுது. திரும்பவும் அவளுக்கு முகம் இறுகியது. நான் இவ்வளவு கூறியும் நீ ஏன் பிடிவாதமாக இருக்கின்றாய்.  அவன் தனது பிங்க் சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டான். அப்பொழுது அவளுக்குச் சட்டத்தரணி என்ற எண்ணம் கலைந்து இனம் புரியாத பரிதாபம் மெல்லியதொரு போர்வையைப் போல் அவன்மீது சரிந்தது.  சரி, உன்னுடைய விருப்பப்படி பிரிக்ஸ் லேனில் போய்ப் பார்த்து விட்டு அகதி வீசாவை விண்ணப்பிக்கலாம் வரும் சனிக்கிழமை காலை நான் ஓய்வாக இருப்பேன். ஆகவே நீ விரும்பிய படி நானும் வருகிறேன். ஆனால் ஒரு சட்டத்தரணியாக அல்ல, உதவியாளராக. அவள் புன்னகையுடன்  கூறியதும் அவன் மகிழ்ச்சி தாளாமல் மீண்டும் பாடத் தொடங்கினான். 

சனிக்கிழமை காலையில் வைட்ச்சப்பல் இரயில் நிலையத்தில் இருவரும் சந்தித்து பிரிக்ஸ் லேனை நோக்கி நடக்கத்தொடங்கினார்கள். கோகர் வீதியைக் கடந்து பிரிக்ஸ் லேன் என்ற பெயர்ப் பலகையைக் கண்டபொழுது புத்துணர்ச்சியுடன் நின்றிருந்தார்கள். வீதியின் தொடக்கத்தில் ஒரு பெரிய கிரீடம்போல் இரு பக்கத்தினையும் இணைத்து வளைந்த நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நுழைவாயிலின் மேலே பிரிக்ஸ் லேன் என்று ஆங்கிலத்திலும் வங்காள மொழியிலும் கம்பிகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனைத் தாண்டி வலது புறத்தில் இருந்த கட்டடத்தின்  சுவரில் வங்காள தேசத்தினை நினைவுபடுத்தும் வகையில் ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர் ஒருவரின் ஓவியம். பின்னர் துணிக்கடைகள், வண்ண வண்ண ஸ்வீட்கள் அவன் ஒவ்வொன்றாகப் பார்த்து விளக்கிக் கொண்டிருந்தான். அவனது பேச்சுகள் அங்கேயிருந்த வங்காள தேசத்தின் எச்சங்களைப் பொருள் கொள்ள வைப்பதுபோல் இருந்தது. வீதியின் நடுமையத்தினை அவர்கள் அடைந்த பொழுது இரு மருங்கிலும் சுவர்க்கிறுக்கல்கள் விரவியிருந்தன. இருவருக்கும் அங்கேயிருந்த ஓவியங்கள்மேல் கண்கள் அலை பாய்ந்தன. இவ்வளவு ஓவியங்கள் யார் வரைந்திருப்பார்கள்? ஓவியங்களின் இடையில் ஏதோ செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றதே? சுவர்களில் கண்களைப் பதித்தவாறு கேட்டான். ஆமாம், இந்த ஓவியங்கள் வெவ்வேறு நபர்களால் வரையப்பட்டவை. அந்தந்த நேரத்தில் எழும் உணர்ச்சிகளையும் சேர்த்து பல செய்திகளைச் சொல்லியிருப்பார்கள். உன்னுடைய தொழிலுக்குச் சில எதிர்ப்பலைகள் டாக்காவில் உண்டல்லவா? அதனைக் கூட இங்கே கிறுக்கி விட முடியும். இருவரும் நடந்து கொண்டிருக்கையில் வயதான ஒருத்தர்  பாண் சுபரி ….பாண் சுபரி.. என்று கூவிய படி ஏதோ பொட்டலங்களை விற்றுக்கொண்டிருந்தார். அவரின் ஜுப்பாவும் சால்வையும் வங்காள நாட்டைச்சேர்ந்தவர் என்பதை உறுதிப் படுத்தியது. உடனே அவன் தனது பையிலிருந்த அவனது அம்மாவின் போட்டோவினை எடுத்து அவரிடம் காட்டி ஏதோ பேசத் தொடங்கினான். அவரும் இல்லை என்பது போல்  தலையை அசைத்தார். அவன் முகத்தில் சற்று ஒளியடங்கியது. அவள் எதுவும் சொல்லாமல்  மீண்டும் நடக்கத்தொடங்கினாள். இடையில் ஒரு உணவகத்தினுள்ளே  சிலேய்ட் நாட்டுப்புற பாடலொன்று  ஒலித்துகொண்டிருப்பதைக் கேட்டதும் மீண்டும் அவன் உஷாரானான்.   அவனுள் அத்தனை பெருமிதம் குடியேறத் தொடங்கியது.  வா உள்ளே போய் சாப்பிடுவோம் என்று அவனை அழைத்தாள்.       

 உணவகத்தில் இருந்த பொறுப்பாளர் தன்னைச் சிலேய்ட்டைச் சேர்ந்தவராக அறிமுகப்படுத்தினார். பொறித்த ஹில்சா மீனும் கொய்லா கீரை ஆணமும் சோற்றுடன் சேர்த்து பரிமாறப்பட்டது. சாப்பிட்டு  முடிந்த பின்னரும் அவன் அந்த துப்பட்டாவையும்  செய்தித்தாளையும்  காட்டி அங்கே வேலை செய்பவர்களுடன் பேசினான். 

ஒரு சில நேரத்தில் அவன் நெஞ்சுக் குழி ஏறி இறங்குவது போல் இருந்தது. அவள் என்ன என்பது போல் அவனைப் பார்த்ததும் இங்கே பஸீர் துணிக்கடை ஒன்று இருக்கிறதா இவங்க சொல்றாங்க, அது 1980ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாம். சில வேளை அம்மா பற்றி ஏதாவதொரு … சரி வா போய்ப் பார்க்கலாம். அவள் கூறினாள்.

பிரிக்ஸ் லேனின் இடது புறச் சந்தியில் Basheer and co. என்று பெயரிடப்பட்ட  பஸீர் துணிக்கடை அமைந்திருந்தது. கடையின் தோற்றமே அதன் வயதைக் காட்டிக் கொடுத்தது. வங்காள நாட்டிற்கேயுரிய சில கலாச்சார ஆடைகள் கடையின் முன்னால் தொங்க விடப்பட்டிருந்தது. அவன் உள்ளே நுழையும் முன்னர் அந்த ஆடைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்தான். திடீரென்று  கைத்தறியால் பின்னப்பட்ட ஒரு பிங்க் நிறத் துப்பட்டா அவனது பார்வையில் வந்து விழுந்தது. அவனது பையில் இருக்கும் வெற்றிலை வடிவிலான குஞ்சம் அதன் நுனியில் தொங்கிக்கொண்டிருந்தது. என்ன பார்க்கிறீங்க? ஏதாவது உதவி வேண்டுமா? கடையின் உள்ளேயிருந்து வந்த நடுவயதை ஒத்த ஒருவர் அவளைப் பார்த்துக் கேட்டார். இந்த ஆடைகள் எப்போ வடிவமைக்கப்பட்டது? ஆரம்ப காலத்தில் இந்தக் கடை ஆரம்பிக்கப்பட்ட பொழுதிலிருந்து வடிவமைக்கப்படும் ஆடைகள் தான் இவை. அதாவது 80 களின் ஆரம்பம் என்று கூறலாம். பங்களாதேஷிலிருந்து ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்தக் கடை. மேலதிக தகவல் ஏதாவது தேவை என்றால் உள்ளே போய்ப் பேசிப் பாருங்கள் என்று கூறினார். அவர் கூறியவை  சிறியதொரு அதிர்வுடன்  அவனது காதில் விழுந்தது. மீண்டும் கண்ணாடியில் தொங்கிக்கொண்டிருக்கும் துப்பட்டாவைப் பார்த்ததும் தலை சுற்றியது. 

  அவன் கடையினுள்ளே போக விரும்பாதவன் போல் பின்னோக்கி நடந்தான். அவள் பல தடவை கூப்பிட்டும் அவன் திரும்பிப் பார்க்கவேயில்லை. 

ஒரு வாரம் கழித்து அவள் மதிய நேரப் பொழுதொன்றில் காரியால வேலையில்  அமிழ்ந்திருக்கையில் ஜெக்ஸன் அவளது அறைக்குள் நுழைந்தான். அவனது முகத்தில் பரபரப்பிருந்தது, என்ன ஜெக்ஸன்? ஏதாவது பிரச்சனையா? என்றாள். ஜெக்ஸன் அவளது தோளில் கை வைத்து மன்னித்துக் கொள், உன்னுடைய பிங்க்கை போலீஸ் பிடித்துப் பாதுகாப்புத் திணைக்களம் மூலம் அவசரமாக பங்களாதேஷிற்கு நாடு கடத்திட்டாங்க, எல்லாத் தகவல்களையும் மின்னஞ்சல் செய்திருக்காங்க. ஜெக்ஸன் கூறிவிட்டுச் சென்றான்.    

ஜெக்ஸன்  கூறிய வார்த்தைகளை உணர்ந்து கொள்ள அவளுக்குச் சில நிமிடங்கள் சென்றது. கதிரையில் அமர்ந்து கண்களை மூடினாள். அன்று பஷீர் துணிக்கடை முன்னால்  அவன் விட்டுச்சென்ற பை ஞாபகம் வந்ததும் உடனே எழுந்து அலுமாரியினைத் திறந்து பையை ஆராய்ந்தாள். அப்பொழுது சில போட்டோக்களுடன் ஒரு பிங்க் நிற சால்வையும் இருந்தது.  

000

மாஜிதா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், ஓட்டமாவடி எனும் கிராமத்தில் பிறந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம்பெற்று சட்டத்தரணியாக பணியாற்றிய  எழுத்தாளர் மாஜிதா தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறார். சிறுகதை எழுத்தாளர், பர்தா நாவலின் ஆசிரியர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop